55puthiyapaarvai_ilakkuvanar

சாதி, சமயமற்ற நாட்டை விரும்பிய பேராசிரியர் இலக்குவனார்!

சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரேசமயம், ஒரேமொழி, ஒரே இனம்முதலான ஒற்றையாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார்.
“பரதகண்ட முழுவதும் ஒரேஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ள வைத்துப் பல மொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது.
இந்துமதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக் காக்க எந்த நிலையில் உள்ள பிராமணரும் பின்வாங்கார் என்பதும் என்றும் நினைவில்கொள்ள வேண்டியன.
சமயச்சார்பற்ற அரசில் சமயத் தொடர்பான நாட்களுக்கு விடுமுறை விடுவது எதற்கு? நிலநூல் வானநூல் பெருகியுள்ள இக்காலத்திலும், திங்களில் சென்று உறைவதற்குத் திட்டமிடும் இந்நாளிலும், ஞாயிற்று மறைப்புக்கு (Solar eclipse) விடுமுறை விடுகின்றது எற்றுக்கு? இவையெல்லாம் பிராமணர்களின் செல்வாக்கைத்தானே சுட்டுகின்றன. சமயச் சார்பற்றது என்னும் போர்வையில் பிராமணீயமாம் இந்துமதமே ஆட்சி புரிகின்றது.
சட்டம் செய்தால் மட்டும் போதாது. உள்ளங்களும் திருந்த வேண்டும். சாதிமத வேறுபாடுகள் ஒழிந்த மன்பதையை உருவாக்க உளமார உழைத்தல் நாட்டுநலன் நாடுவார் அனைவரின் கடனாகும். கல்விநிலையங்கள் இத்துறையில் முன்னோடிகளாகத் தக்கவழி காட்ட வேண்டும்.’’
குறள்நெறி (மலர்2 இதழ்22): கார்த்திகை 16, 1997 : 1.12.65
இவ்வாறு சாதி சமயமற்ற மன்பதை உருவாகக் கல்விநிலையங்களே வழிகாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
- புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 46
தரவு : பாபு கண்ணன்