Saturday, September 30, 2017

நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்


நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை!

பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2


11)? இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா? அல்லது குறைந்து வருகிறதா?

வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு மேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற் வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல், பொழுதுபோக்குக்காகக் கற்கிறார்கள். இதன் காரணமாக, நல்ல படைப்பாளிகள், கவிஞர்கள், தங்களுடைய படைப்புகளைச் சந்தைப்படுத்த இயலாமற் போகிறது. எங்களைப்போன்ற திறனாய்வு அறிஞர்கள் ஊன்றிக் கற்க வேண்டிய நூல்கள் இல்லாமற் போகிறது. இத்தகைய நிலையால் திறனாய்வாளர் என்னும் நிலைக்குட்பட்டோர், புக்கணிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. உலக அரங்கில் திறனாய்வாளர்களுக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் தமிழில் திறனாய்வு செய்பவர்களுக்கு கிடைப்பதில்லை. அதைவிட மோசமாக நிலைமை இன்றைய தமிழகத்தில் உண்டாகிவிட்டது; இன்று பொழுதுபோக்குக்காக பேசுபவர்கள் திறனாய்வாளர்களாகக் காட்டப்படுகிறார்கள், போற்றப் படுகிறார்கள். இது மிகப்பெரிய பிழைமை. இதன் போக்கில், நாளைய சமுதாயம், உண்மையான திறனாய்வு என்பது என்ன என்பதையே உணரவிடாத நிலைக்குத்தள்ளப்படும்.

12) ? ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கியக் கூட்டங்களை மாதம் தோறும் ஒய்,எம்,சி.ஏ, வில் நடத்தி வருகிறீர்கள். இதற்கான வரவேற்பு எப்படியுள்ளது?
நான் பாரதிதாசன் மரபுவழியில் ஆர்வமுள்ள ஆர்வலர்களுக்காக நடத்திக்கொண்டிருக்கிறேன். இக்கூட்டங்களில், ஏறக்குறைய 70 ஆர்வலர்கள் எப்போதும் வருபவர்கள். பேசப்படும் கருத்தையொட்டி வரும் மற்ற ஆர்வலர்கள் ஒரு 20-25 எண்ணிக்கையில் இருக்கலாம். வரையறுக்கப்பட்ட ஒரு வட்டத்துக்குள்தான் இந்த அவையினர் உள்ளனர். இலக்கியக்கூட்டங்களுக்கு வரும் ஆர்வலர்களின் நிலையை 1967-க்கு முன்னர் அதற்குப்பின்னர் என இரு நிலைப்படுத்தலாம். 67-க்கு முன்னர் 23 % கூட கற்றவர்கள் இல்லை என்பது உண்மை நிலையாயினும், இலக்கியக்கூட்டங்களுக்குத் திரளான மக்கள் கூட்டங்களைக் காணலாம். அப்போது நடந்த கவியரங்கங்கள் மிகவும் நேர்த்தியாக அமைந்தன. இன்று தமிழ் நாட்டில் படித்தவர்களின் விழுக்காடு 100 ஐத்தொடும் என்றாலும், இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொள்வோர் மிகவும் குறைந்தவர்களே. இன்றைய நிலையில் பல மன்றங்களில், ஆழமே இல்லாத, எந்த வகையான இலக்கியத் தூண்டுதலையும் ஏற்படுத்தாத பொழிவுகளே முதன்மையாக உள்ளன. கவிதைகளில், இரட்டுற மொழிதல், நகைச்சுவை தவிர்த்து சீரிய, விழுமிய கவிதைகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது.

13) ? நிலைகளை நீங்கள் குறிக்கும்போது 1967 ஆம் ஆண்டை அளவீடாகக்கொள்ளக் காரணம் என்ன?
1967-க்கு முன்னர்க் கட்சி சார்பில்லாத தமிழார்வம் அனைவரிடமும் இருந்தது. தமிழே பொதுமக்களைக் கவர உதவும் பெருஞ்சாதனமாக அக்காலக்கட்டத்தில் விளங்கியது.  1967 –க்குப்பின்னர், தமிழை அறவே மறந்துவிட்டார்கள். 1967-க்கு முன்னர்ப் பிறந்தவர்கள், இவ்வெவ்வேறு காலக்கட்ட நிலைமைகளைத் தெளிவாக உணரவியலும்.
14) ? நீங்கள் அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றிய பணியறிவு உடையவர்கள்.. அந்தப் பணியறிவு மூலம், தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும், ஆய்வுகளின் நோக்கும், தரமும் எவ்வாறு வேறுபடுகிறது என அறிகிறீர்கள்?

அங்கு உயர்கல்வி என்பது கிடைத்தற்கரிய பொருளாகவே இன்றளவிலும் உள்ளது. வாய்ப்புகளையும் பொருளுதவிகளையும் அவரவரே உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்ற நிலை யுள்ளது. கல்விக்கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால், திறமையுள்ள, விருப்பமுள்ளவர்களே உயர்கல்விக்கு வருகிறார்கள். கல்விமேலான அருமை பாராட்டல் அங்கு அதிகமாகவே உள்ளதாக உணர்கிறேன். கல்வியை முழுக்க உள்வாங்கிக்கொள்ளல் வேண்டும் என்ற தேட்டல், தேடல் அங்கு அதிகம். இந்தியாவில், கல்வி என்பது பலவிதமான உதவித்தொகைகள், பலவிதமான உதவிகளுடன் கொடுக்கப்படுகிறது. இங்கு உயர்கல்வி என்பது ஓர் அரிய செயலே அன்று. யாராலும் செய்யக்கூடியது. அதனால் அது மலிவாகிவிட்டதோ என்ற எண்ணமே என்னுள் மேலோங்குகிறது. இங்குள்ள பல ஆய்வு மாணவர்களுக்கு முதிர்ச்சியே இல்லை. இதற்கான காரணம் தொடக்கக்கல்வியை ஊன்றிக்கற்கவில்லை. கிளிப்பிள்ளைபோல் எதையோ சொல்லிச்சேர்த்த கல்வி மட்டுமே அவர்களிடம் உள்ளது. புதிய கருத்துகளைத் தேடும் ஆர்வமும், ஆய்வு மனப்பான்மையும் இல்லாதவர்களாகவே பெரும்பான்மையினர் உள்ளனர். இதை மாணவர்களின் குறை என்று நான் கட்டாயம் கூற மாட்டேன்; குமுகாயம்(சமுதாயம்) அறிவுக்கான மரியாதையைக் கொடுக்க மறந்துவிட்டது. இன்றைய தமிழகத்தில், தனிப்பட்டவர்களின் விளம்பர நிலையே அவர்களைப் பெரிதாக்கிக்காட்டுகிறது. பல இடங்களில் இதுகுறித்து நான் கூறியுள்ளேன்; “In our country, popularity is always mistaken as scholarship“. இத்தகு நிலையால், இன்றைய மாணவர்களும், விளம்பரம் தேடிக்கொள்வதில் தான் ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளில், தமிழகத்தில், உயர்கல்வி மிகவும் பாழடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. ஆராய்ச்சிக்கூடங்கள், நூல்கள், என்று தேவைப்படும் அத்தனைக் கருவிகளும் இருக்கும் நிலையிலும் இத்தகு நிலையைத்தான் நாம் பார்க்கிறோம். உயர்கல்வியில் ஒரு விழுமிய இடத்தைப் பெறல்வேண்டும் என்ற நாட்டம் இல்லை. தொழில் நுட்பத்துறையிலும், மருத்துவத்துறையிலும் வளர்ச்சி அதிகமாகவே உள்ளது. உலகளாவிய நிலையில் தமிழர்கள் இவ்விருதுறைகளிலும் தங்கள் திறமையை நிலைநாட்டி வருகிறார்கள்; அருவினை(சாதனை) படைத்துவருகிறார்கள். இதற்குக் காரணம், இத்துறைகளுக்கான விளம்பரங்களும், வருவாயும் அதிகம். மானுடவியல் துறைகளில் அத்தகைய நிலை இல்லை. சமூக அமைப்பு முறையில் இத்தகைய ஓரவஞ்சனை உள்ளது.

15)? பொதுவாக தமிழகத்தில் மொழிகுறித்த ஆய்வுகள் ஒரு குறுகிய நோக்கத்திலேயே நடக்கின்றன என்னும் கோணம் நிலவுகிறது. இது குறித்த உங்கள் கருத்துகள் ஏதேனும் உண்டா?
தமிழ் மொழி என்றால், எத்தனை நூல்களைக் கற்றாக வேண்டும் என்ற கடப்பாடோ, உழைப்போ, ஆர்வமோ இப்போது குறைந்தே காணப்படுகிறது. பாரதிதாசன் தன்னுடைய பதினாறாவது அகவைக்குள், தமிழின் இலக்கண நூல்கள், காப்பியங்கள் என அத்தனை நூல்களையும் கற்றுத்தேர்ந்துவிட்டார். மறைமலை அடிகள் கல்லூரிக்குப்போகாமலேயே, பதினான்கு வயதுக்குள், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள் என அனைத்தையும் கற்றுத்தேர்ந்தவர். ஆங்கிலமும், சமற்கிருதமும் பயின்றவர். அன்றைக்கு இருந்த அத்தகைய உழைப்பும் முயற்சியும் அரிதாகவே உள்ளது. இன்றைய இணையத்தில் எதைவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளக்கூடிய சூழல் இருந்தாலும், ஆர்வம் குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாகத் தமிழ்த்துறையில் இத்தகைய ஏனோதானோ மனப்பான்மை பெருகியுள்ளது. ஆய்வாளர்களுக்கு வெளியுலகில் பெருத்த வரவேற்பு இல்லை. புதிய இடதுசாரி கண்ணோட்டம் உடையோர்களுக்குச் சற்று ஆதரவு கிடைக்கிறது. விளம்பரமும் கிடைக்கிறது. அவர்கள்தாம் கற்பதில் சற்று ஆர்வம் காட்டுபவர்களாக இன்று உள்ளனர். இத்தகைய நிலையும் ஒரு குறிப்பிட்ட குமுகத்தின் கொள்கைகளுக்குள் தங்களைச் சிறைப்படுத்திக்கொள்ளும் நிலையே. இருந்தாலும் குழுவாகச் செயல்படுவதால், ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளும் தன்மை உள்ளது.
 16) ?சொற்பொழிவாளராகத் தற்போது, பல கல்லூரிகளிலும், கல்வி நிலையங்களிலும் உரையாற்றி வருகிறீர்கள். தமிழ் இலக்கியம், மொழியியல் என்னும் நிலைகளில் இன்றைய இளைஞர்களிடம் எத்தகைய வரவேற்பு உள்ளது?
நான் முப்பதாண்டு காலமாக மாநிலக்கல்லூரியில் பணியாற்றியுள்ளேன். தமிழ் படிக்கும் மாணவர்களில் வெறும் 20 விழுக்காடே சற்று ஆர்வத்துடன் தமிழ் கற்க வருபவர்கள். ஏனையோர் அனைவரும் ஏதாவது ஒரு பட்டம் வாங்க எண்ணி வந்தவர்களே. உண்மையிலேயே தமிழ் கற்க விரும்பி வருபவர்களை, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, குறிஞ்சிப்பூப் பூப்பதைப்போன்றே காணல் இயலும்.
17) ? இந்திய அளவில் தமிழின் பயன்பாடு வருவதற்கு முன்னர்,  அரசியல், இதழியல், கல்வியியல், குமுக(சமுதாயவியல்)  போன்ற பல துறைகளில் தமிழகத்தில் தமிழ் முழுப்பயன்பாட்டில் வரவில்லை. இதற்கான காரணம் என்று நீங்கள் எதைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?
 தமிழர்கள் எப்போதுமே இரட்டை மனநிலை கொண்டவர்கள். 1956 ஆம் ஆண்டு, திசம்பர் 26 ஆம் நாள் சட்டசபையில் தமிழ் ஆட்சி மொழியாக ஆணை நிறைவேற்றப்பட்டது. கட்சி வேறுபாடின்றி அன்று அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேறி இன்று அறுபதாண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் ஒரு துறையில் கூட தமிழ் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அரசின் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு இன்றைய நிலையில் அதிகமாக இருந்தாலும், பயன்பாட்டில் உள்ள படிவங்கள் முழுதும் தமிழில் இருந்தால் எண்ணம் நிறைவேறும். நம்மிடம் உண்மை இல்லை என்பதே உண்மை. சமூக உளவியல்படி, தமிழர்களிடையே ஏதோ குறைபாடு உள்ளது. தனிப்பட்ட எவரையும் குறிப்பிடவில்லை என்றாலும், நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை.

18)? உங்கள் பங்களிப்பில் மற்றுமொரு சிறப்பு, மொழியாக்கம். தமிழ்க்கவிஞர்களின் பல கவிதைகளை நீங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளீர்கள். இத்தகைய செயலில் ஆர்வம் வரக்காரணம் என்ன?
தமிழ்ப்படைப்புகள் பல,  ஆங்கிலத்தில் சரியாக மொழி பெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில் தமிழ்ப்படைப்புகள் குறித்துப் பேசப்படுவதுமில்லை. அதற்குக் காரணம் மொழியாக்கத் திறமையின்மையே. இந்த நோக்கத்தில் நான் சிந்தித்த போது, நாமும் மொழியாக்கம் செய்தல் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒரு நாளில் ஐந்து தமிழ்க்கவிதைகளை மொழியாக்கம் செய்துவந்தேன். “associated content” என்ற  அமெரிக்க வலைத்தளத்தில் என் மொழியாக்கக் கவிதைகளை இட்டுவந்தேன். நான் இட்ட பல கவிதைகளைப் பல அமெரிக்கர்கள் சிலாகித்துப் பாராட்டி எனக்கு மடல்கள் அனுப்பலானார்கள். தாராபாரதியின் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு இளைஞர் ஒருவர், அதைப்படித்ததும், தான் புத்துணர்வு பெற்றதாக எனக்கு மடலனுப்பியுள்ளார். அறுபத்தேழாயிரம் வாசகர்களைக் கொண்ட வட்டத்தில் தமிழ்க்கவிதைகள் போற்றப்படுகின்றன என்பதைக் கண்டு வியந்தேன். அப்போது சென்னையிலிருந்து வெளிவந்த டெக்கான் கிரானிக்கல் என்னும் ஆங்கிலச் செய்தித்தாள், என் கவிதைகளைக் குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. அப்போது என்னுடைய சொந்த ஆங்கிலக்கவிதைகளையும் அந்த வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தேன். பின்னர் அந்த வலைத்தளம் விற்கப்பட்டுவிட்டதால், அனைத்துப் படைப்புகளும் கிடைக்காமற் போயின. அவற்றில் சேர்த்துவைத்த சில கவிதைகள் என்னிடம் உள்ளன. அவை மின்புத்தகமாக வெளிவந்துள்ளன.
19)? உங்களுடைய மொழியாக்கப்படைப்புகள் வரவேற்கப்படுகின்றனவா? உலக அளவில் அவை உரிய அங்கீகாரம் பெறுகின்றனவா?
முன்னர்க் குறிப்பிட்டபடி, வாசகர்களின் ஏற்பு/அங்கீகாரம் எனது மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு இருந்தது. பின்னர் சிங்கப்பூர் தலைமையர்(பிரதமர்) இலீ-குவான்-யூ-வின் 90ஆவது பிறந்த நாளில் 90 வெவ்வேறு தமிழ்க் கவிஞர்களால் பாடப்பெற்ற கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி எனக்குக் கிடைத்தது. ஆயினும் ஒரு மாதத்திற்குள் அத்தனைக் கவிதைகளையும் மொழிபெயர்த்தல் வேண்டும். பகுதி பகுதியாக எனக்கனுப்பப்பட்ட கவிதைகளை மொழிபெயர்த்து உரிய காலத்தில் செய்துமுடித்தேன். இலீ-குவான்-யூ என்னுடைய மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு, அவர் கைப்படக் கையெழுத்திட்டுப் பாராட்டுக் கடிதம் அனுப்பினார். அது எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.
  
20) ? உங்கள் எண்ணத்துள் கருவாக உதித்து, இன்னும் உரிய வடிவம் பெறாமல், நிறைவேற்றப்படாத திட்டங்கள் எவையேனும் உளவா?
சாகித்திய அகாதமி மூலம் எனது தந்தையாரின் வாழ்க்கை வரலாறு சிறு நூலாக வெளிவந்து இரண்டு மூன்று பதிப்புகளைக் கடந்துவிட்டது. ஆயினும் என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வெளியிடும் ஆசை உள்ளது. குறிப்புக்கட்டுரைகள் உள்ளன. பல இதழ்களில் வந்த செய்தி நறுக்குகள் உள்ளன. அவற்றைத் தொகுத்து நூலாக்கும் ஆசை உள்ளது.
21) ? உங்களுடைய தமிழ்ப்பணி மேலும் சிறக்க வேண்டும் என்று என் சார்பிலும், இலக்கியவேல் சார்பிலும் வாழ்த்துகள். மிக்க நன்றி.
மிக்க நன்றி. இலக்கியவேலின் இலக்கை அடைய உங்களுக்கு வாழ்த்துகள்.
திருவிக விருதாளர் பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை
இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன்
இலக்கிய வேல் – ஏப்பிரல்  2017






தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்

Thursday, September 28, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21) – வல்லிக்கண்ணன்


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21)


வீண் சண்டை வேண்டாம் விவேகமில்லா மதம் வேண்டாம்.
எல்லா மதங்களிலும் இருக்கின்ற நற்கருத்தை நல்நோக்கத்தோடு நாமெல்லாம் ஏற்றே மனிதர்கள் ஒற்றுமையால் மன்பதையில் வாழ்வதற்கு இனி ஒருவகை செய்வீர் என்றுதான் கேட்கின்றேன்!
வழிவகை என்னவென்று வகையறிந்து காண்கையிலே
கழிகொள்கை நீக்கிக் காரிருள் ஒளியாக
சமனிதமதம் என்ற ஒரேமதம் உலகில் ஏற்படுத்திப்
புனிதம் அடைவோம் போற்றிப்புகழ் அடைவோம்என
ஆசையாய்க் கூறுகின்றேன் அழைக்கின்றேன் மனத்துணிவாய்

என்று பெருங்கவிக்கோ தன் எண்ணத்தை வெளிப் படுத்துகிறார்.

  எந்த ஒரு மதத்தையும் ஏற்படுத்த எண்ணாமல் சிந்தனையில் மனிதர்களைத் திருத்துதற்கே எண்ணிப் பாகுபாடு பார்க்காமல், ஒர வஞ்சம் எண்ணாமல், சீரான திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் போல், மற்றையோரும் மதத்தை நினைக்காமல், நற்றவக் கொள்கைகளை நவின்று சென்றிட்டால், நம் மனித இன இதயம் திறந்திருக்குமே என்று அவர் ஏக்கம் தெரிவிக்கிறார்.

பெரிய மனத்துடனே பிற்போக்குக் கொள்கைகளை
உடனே எரித்திடுவீர் உண்மை நெறியனைத்தும்.
திடமுடன் ஏற்றுச் சிந்தை மகிழ்ந்திடுவீர்!
காலங்கள் மாறுவதும் கருத்துக்கள் மாறுவதும்
ஞாலத்தில் நாமின்று நம்கண்ணால் காண்கையில்
மதத்தலைவர் கூறிட்ட மட்டாகக் கொள்கையையும்
விதித்தவிதி அதுவென்று வீறாப்புப் பேசிநிதம்
மதத்திமிரை வளர்க்கின்றீர்; மாண்புசால் புதுக்கொள்கை
உதிக்கவில்லை உங்களுடைய ஒளியில்லா இதயத்தில்
பழஞ்சோறு புளித்துவிட்டால் பசியாற்ற எண்ணுவீரா?
பழங்கொள்கை பதமிழந்தால் பள்ளத்தில் தள்ளினால் என்?
எத்தனையோ ஆண்டுகள் முன் ஏற்றிட்ட கொள்கை யெல்லாம்
இத்துணை புதுஉலகுக் கேற்றவையாய், இருந்திடுமோ?
ஏற்றது போக ஏலாத கொள்கை யெலாம்
மாற்றி யமைத்தாலென்? மதியைத் தூண்டினாலென்?”

என்று அவர் கேட்பது நியாயமான கேள்விகளேயாகும். பண்டைத் தமிழகத்தில் மத பேதங்களும், கடவுளர் வணக்கமும் இருந்ததில்லை என்பதையும் பெருங்கவிக்கோ தம் கவிதைகளில் சுட்டிக்காட்டி யுள்ளார்.

நன்னெறியை வள்ர்த்தார் செந்நெறியை மேல் வளர்த்தார்
ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவனென்றும்.
முன்பே உரைத்ததுநம் முதுதமிழ்க் குடியன்றோ
அன்பை அறிவை அறநெறி முழக்கத்தை
பண்பைப் பட்டறிவை பயன்தரு முயற்சிகளை
திண்மை ஊக்கத் தெறிவைத் திறமாக்கி
வாழ்வியல் முறையை வடித்தெடுத்தார் நம்தமிழர்
பாழ்மதங்கள் தந்த பகைமைக் கருத்துகளை
ஏற்றதும் தமிழர் ஏன் மறந்தார் நம் நெறியை?
என்று அவர் வருத்தப்படுகிறார்.

(தொடரும்)
வல்லிக்கண்ணன்: 
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)– இலக்குவனார் திருவள்ளுவன்


 

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)

   ஆய்வுரைப் போர்வையில் தமிழுக்கு எதிராகப் பரப்பும் கருத்துகளுக்கு எதிரான  போர்! கால ஆராய்ச்சி என்ற பெயரில் முந்தைத் தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கு எதிரான போர்! தாய்மொழித் தமிழைப் படிப்பிப்பதால் தமிழாசிரியர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்பதற்கான போர்! என்றும் தமிழ் எங்கும் தமிழ் துலங்க  வேண்டும் என்பதற்கான போர்! அயல் மொழிகளில் மறைக்கப்படும் உயர்தனிச்  செந்தமிழ்ச் சிறப்புகளை வெளிக்கொணருவதற்கான போர்!  தமிழால் வாழ்ந்தும் தமிழையே தாழ்த்துவோருக்கு எதிரான போர்!  சங்கத்தமிழின் மங்காச் சிறப்பை மறைப்போருக்கு எதிரான போர்! இதழ்களில் தமிழ் இலங்க @வண்டும் என்பதற்கான போர்! கலப்பு நடையைக் கலங்க வைப்பதற்கான போர்! தமிழ்ப்பயிற்றுமொழிச்  செயலாக்கத்திற்கான போர்! ஒல்காப் புகழ்த் தொல்காப்பிய இடைச்  செருகல்களுக்கு எதிரானபோர்! குறள்நெறிக் காப்பிற்கான போர்! தமிழர் இனநலங் காக்கப் போர்!  தேமதுரத் தமிழோசையை உலகெங்கும் பரவச் செய்வதற்கு எதிரான தடைகளை எதிர்த்துப் போர்! தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்ற நிலையை மாற்றுவதற்கான போர்! எனத் தம் வாழ்க்கையையே தமிழ்க் காப்புக்கான  போர்க்களமாக ஆக்கிக் கொண்டவர் தமிழ்க்காப்புத்தலைவர்  பேராசிரியர் சி.இலக்குவனார். தமிழ்த் @தசியம்பற்றியும் கூட்டாட்சிபற்றியும் தமிழாட்சி பற்றியும் இன்றைக்குப்  பேசுவனவற்றை அன்றைக்கே தமிழ்க்காப்புத்தலைவர்  பேராசிரியர் சி.இலக்குவனார் எண்ணிச்  செயல்பட்டதுதான் அவருக்குரிய பெருஞ்சிறப்பு.(பன்னாட்டுத் தமிழ் நடுவம் இரண்டாவது தமிழ் மாநாட்டு மலர் 2003:பக்கம் 130)
 நாம் பேராசிரியர்  போல்  போராளியாகத் திகழாவிட்டாலும் உரிமையுள்ள தமிழ் மாந்தராகவாவது வாழ  வேண்டுமல்லவா? அதற்குப் பேராசிரியர் இலக்குவனாரின் பின் வரும் அறிவுரைகளை அவர் நமக்கு இட்ட கட்டளைகளாகக் கொண்டு ஒழுக  வேண்டும்:
மொழியைக் காத்தவர் விழியைக் காத்தவர்!
மொழியைச் சிதைத்தவர் விழியைச் சிதைத்தவர்!
மொழிக்கும் விழிக்கும் வேற்றுமை இல்லை!
மொழியே விழி விழியே மொழி என்று கிளர்ச்சி கொள்ளுங்கள்.
தமிழ் எங்கள் உயிருக்கு  நேர் என்று அறைகூவுங்கள்.
தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!
தமிழ் ஓங்குக! தமிழ் உயர்க!
என்று வாழ்த்துங்கள்
தமிழில் எழுதுக! தமிழில் பேசுக!
தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!
என்று முழங்குங்கள்.
மொழி வாழ்வுக்கு முயற்சி  செய்யுங்கள்.
உங்கள் முயற்சி வாழ்க!
தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்!
தமிழர் வாழ்ந்தால்தமிழ்நாடு வாழும்!
தமிழ் வாழ்வே தமிழர் வாழ்வு!
(தரவு : புலவர்மணி இரா.இளங்குமரன்: பக்கம் 37:
 செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் )
நாம் ஒவ்வொருவருமே  மொழி நலம், இன நலம் காக்கப் பின்வரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் பாடலை அன்புக் கட்டளையாக ஏற்றுப் பின்பற்றுவோமாக!
இன்றமிழ் காமின்!
பொன்னும் பொருளும் புவியும் புகழும்
பன்னுறு  செல்வம் அனைத்தும் பாரில்
பெற்றுள தமிழர்  சற்றும் தமிழினை
எண்ணிப்  போற்றா திருப்பரேல் எல்லாம்
கொன்னே கழிய கூற்றுக் கொருநாள்
நல்லிரை யாகி நடுங்கி மறைவர்.
இன்தமிழ் எம்மொழி என்னும் நினைப்பால்
உள்ளம் மகிழார் உயிருடை யரேனும்
நடைப்பிணமாக நாளைக் கழிப்பரே.
ஆதலின்
நற்றமிழ் மாந்தரே நாடு வணங்கிட
தமிழ்ப் புகழ் பரப்புமின் தந்நலம் அகற்றுமின்
பிறரைக் கெடுக்கும் பேதைமை ஒழிமின்
வளவிய வான்பெருஞ்  செல்வமும் பதவியும்
நில்லா வென்பதை நினைவில் கொண்மின்
அஞ்சி வாழும் அவலம் போக்குமின்
கரந்த வாழ்வு கடவுள் முனின்றென
எல்லாம் அளித்தும் இன்தமிழ் காமின்!
  தமிழ்த்தாயைப் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு இலக்குவனார் படத்தைக் காட்டலாம்.  இலக்குவனாரை மனத்தில் வைத்து வரைந்தால்தான் தமிழ்த்தாய்ப்படம் வரைய முடியும்.  இலக்குவனாரே தமிழ்! தமிழே இலக்குவனார்! என்கிறார் பேரா.கண.சிற்சபேசன்(ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற உரை,  நட்பு இணைய இதழ்). தமிழாய் வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனாரின் எஞ்சிய கனவுகளை நனவாக்கவதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வோம்.
இலக்குவனார் வழி நின்று இன்தமிழ் காப்போம்!
போராளி இலக்குவனாரைப் போற்றி வணங்குவோம்!

(நிறைவு)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Monday, September 25, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்


 

தமிழ்ப்போராளி

பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) 

5. ஞாலப் போராளி

தாழும் தமிழர்களை மீட்பதற்காக வாழும் வரை போராடிய  பேராசிரியரே  ஓர் இயக்கம் என்றும் வலிமை மிக்கப் படை என்றும் இன்றும் நினைவில் போற்றப்படுகிறார். இவ்வாறு, தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் உலகப்  போராளியாக உயர்ந்து நிற்பதை அறிஞர்கள் பலரும் உரைத்துள்ளனர். “பேராசிரியர் இலக்குவனார் தமிழ் காக்கப் பிறந்த பிறவி! அதற்கு ஊறு நேரும் எனின் தம் தலை தந்தும் காக்க முந்தும் போராளி!” என்கிறார் முதுமுனைவர் இரா.இளங்குமரன் (பக்கம் 9:  செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்)  பேராசிரியர்  இலக்குவனார் தம் பெயருக்கேற்ப‌ே வாழ்நாளெல்லாம் வாழ்ந்தார் என்றும் அவர் பின்வருமாறு தெரிவிக்கின்றார்: “குறிக்கோளைப் பெயராகக் கொண்ட பெருமகனார், தம் வாழ்வாகவே அதனைக் கொண்டமைக்கு, அவர் புரிவு தெரிந்த நாள் முதல் பிரிவு நேர்ந்த நாள் முடிய உள்ள வரலாற்றின் எவ்வொரு பகுதியும் சான்றாக விளங்குதல் கண்கூடு.” (பக்கம்1: செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்)
 “வாழ்க்கைப் போர் இல்லாமை, இலக்குவனார் வாழ்வில் ஊடே ஊடே இருந்த காலமும் உண்டு. ஆனால்,மொழிப் போர் இல்லா நாள் அவர் வாழ்வில் இருந்ததே இல்லை!” என்று கூறும் முதுமுனைவர் இரா.இளங்குமரன், “மெய்யான மொழிப் போராளி ஒருவர் எப்படி இருப்பார் என்பதை வரைந்து காட்ட வேண்டும் என்றால்,அவர் இலக்குவனார் வரைவாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. அவரை அறிந்தார் அவரோடு பழகினார் எவரும் இதனை மெய்யாக அறிவர்.” என அறுதியிட்டு உரைக்கின்றார். (பக்கம்1: செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார்).
படிப்பது அறிவு வளர்ச்சிக்காக என்று சிலரும் பணியில் அமருவதற்காக எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால், பேராசிரியர் இலக்குவனாரோ படிப்பின் பயன் உரிமைகாக்கும்  போராளியாகத் திகழ்வது என்று கூறியுள்ளார்.
“தமிழகத்தின் உரிமைக்கும், தமிழ் மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது உறுகடனாம் என்று உறுதி கொள்ளச் செய்தது. தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிராக ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இஃதேயாம்”
என்று பேராசிரியர் இலக்குவனார் தம் வாழ்க்கைப்  போர் நூலில் குறிப்பிடுகின்றார். எனவே,  பேராசிரியர் இலக்குவனாரிடம்  இயல்பாக இருந்த குறை களையும் பண்பும் தீங்கினை எதிர்க்கும் உணர்வும் புலவர் படிப்பால் அவரைப்  போராளியாக்கியது எனலாம்.
பேராசிரியர்  இலக்குவனார் எண்ணம், செயல் யாவும் தமிழர் நலன் சார்ந்ததே. எனவேதான், தாம் எழுதிய ‘கருமவீரர் காமராசர்’ நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறித்துள்ளார்:
“தமிழ் எமது உயிர்; தமிழன் உயர்வே தமிழ்நாட்டின் உயர்வு. தமிழ்நாட்டில் தமிழுக்குத்தான் உயர்வு உண்டு. தமிழ்நாடு ஏனைய நாடுகள்  போல் உரிமையாட்சி பெற்றுத் தமிழர்களால் ஆளப்பட வேண்டும். குலமும் குடியும் ஒன்றே, வழிபடும் கடவுளும் ஒன்றே. யாதும் ஊரே யாவரும் கேளிர். குறள் நெறியோங்கினால் குடியர சோங்கும். என்ற கொள்கைகளே எம் வாழ்வை இயக்குவன. யாம் ஒரு புலவர் எழுத்தாளர் ஆகவே யாம் யாவர்க்கும் பொதுவான நிலையில் உள்ளோம். கட்சி காரணமாக விருப்போ வெறுப்போ கொள்ளவேண்டிய நிலையில் இல்லோம், ஆனால், தமிழ்ப்பகைவர் எமது பகைவராவர். தமிழ் நண்பர் எமது நண்பராவர்.”
  பிற  போராளிகள் வாழ்வில் குறிப்பிட்ட களத்தில் நின்று மக்கள் நலம் காத்தார்கள். ஆனால்,  பேராசிரியர்  இலக்குவனார் சந்தித்த  போர்க்களங்கள் மிகுதி. இவரைப்போல் வேறு யாரும் இத்தனைப்  போர்க்களங்களைச்  சந்தித்ததில்லை எனத் தமிழாய்வாளர்கள் கூறுவது சரிதானே!
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, September 24, 2017

நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 – சந்தர் சுப்பிரமணியன்

அகரமுதல 204,  புரட்டாசி 08,  2048 / செட்டம்பர் 24, 2017
     24 செப்தம்பர் 2017      கருத்திற்காக.

 

நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை!

பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2

.
 பெரும்பேராசிரியர் திரு இலக்குவனார் அவர்களின் புதல்வர் பேராசிரியர் திரு மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு, அண்மையில் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்தது.  பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட காணல்.
1.? அண்மையில் தமிழக அரசால் திரு.வி.க. விருது உங்களுக்கு வழங்கப்பட்டது. என் சார்பிலும் இலக்கியவேல் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகள். அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?
அரசு பல்வேறான விருதுகளை இலக்கியப் பணியாற்றிய அறிஞர்களுக்கு வழங்கிவந்து கொண்டிருக்கிறது. திரு.வி.க. விருது என்பதால் எனக்குள் ஓர் இன்பம். ஏனென்றால் என்னுடைய ஆசிரியர்களான திரு அ.கி.பரந்தாமனார் அவர்களும் திரு இளங்கோவன் அவர்களும் இவ்விருதினைப் பெற்றவர் ஆவர். என் ஆசிரியர்கள் பெற்ற விருதினை நானும் பெற்றதால் மிகவும் மகிழ்வுறுகிறேன்.
2) ? விலங்கியல் துறையில் இளமறிவியல் பட்டம் பெற்ற நீங்கள் முதுலைப்படிப்பிற்குத் தமிழைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
  நான் மருத்துவம் கற்க விரும்பியே விலங்கியல் துறையில் சேர்ந்தேன். கல்லூரியில் சிறப்புத்தமிழ் ஒரு பாடமாக அமைந்திருந்தது. மேலும் முதலாண்டு படிக்கும்போதேஎன் தந்தையார் நடத்திவந்த பத்திரிகையில் மொழிபெயர்ப்புக்கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன். அறிவியல் கட்டுரைகளைப் படைப்பதில் எனக்கு ஆர்வம் பெருகியது. என் தந்தையார் நடத்திவந்த குறள் நெறி பத்திரிகையில் அவருக்கு உதவலானேன். அக்காலக்கட்டத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் என்னைத் தமிழ் படிக்கத் தூண்டியது. ஆதலால்நான் தமிழ் முதுகலைப் பட்டத்தில் சேர்ந்தேன்.
 3) ? உங்களுடைய தந்தையார்,  உடன் பிறந்தவர்கள், என ஒரு பெரிய தமிழ்க்குடும்பத்தில் பிறந்த நீங்கள் அத்தகைய சூழல் எவ்வாறு உங்களை உருவாக்கியது என்று பகிர்ந்து கொள்ள இயலுமா?
எனக்குப் பின்னால் என்னுடைய தம்பி திருவள்ளுவர் தங்கை மதியழகி ஆகியோர் தமிழ்பால் ஈடுபடத்தொடங்கினர். என்றாலும், எனக்குத் தமிழைக் கற்றுவித்தலில் ஆர்வம் அதிகம். அந்நாட்களில், பொதுவாக, மொழியாசிரியர்கள் மாணவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றினர். இத்தகைய சூழல் என்னை தமிழாசிரியராகப் பணியாற்றத் தூண்டின.
4) ? நீங்கள் ஆசிரியர் பணியிலிருந்தவாறே உங்களுடைய தமிழாய்வுப்படிப்பை முடித்தீர்களா?
ஆம். பணியில் இருந்துகொண்டே என்னுடைய ஆய்வுப் படிப்பை முடித்தேன்.
5) ? உங்கள் நூல்களில் பெரும்பான்மையானவை திறனாய்வு வகையைச் சார்ந்தே அமைந்துள்ளன. இதற்கான சிறப்புக் காரணம் ஏதேனும் உள்ளதா அல்லது அது இயல்பாகவே அமைந்ததா?
திறனாய்வு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நான் என் தந்தையாரின் நாளிதழில் பணியாற்றியபோதுவாரம் தோறும் வரும் அவ்விதழில் வெளிவந்த நூல்திறனாய்வுக் கட்டுரைகளை நான் தான் எழுதிவந்தேன். தலைசிறந்த நூல்கள் திறனாய்வுக்காக வரும் என்பதால்பல்வேறான நூல்களைப் படிக்கும் ஆர்வத்தையும் இச்செயல் தூண்டிவிட்டது. இதைத்தவிரசெந்தமிழ்ச்செல்விதென்மொழிபோன்ற பிற இலக்கியஇதழ்கள்நாளிதழ்களிலும் என் திறனாய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
6) ? ‘இலக்கியத் திறனாய்வு – ஓர் அறிமுகம்’ என்னும் நூலையும் எழுதியுள்ளீர்கள். இந்த நூல் இலக்கியத்திறனாய்வு செய்பவர்களுக்கு ஒரு கையேடாக அமையும் விதத்தில் எழுதப்பட்ட நூலா?
ஆம். இலக்கியத்திறனாய்வுக்கு ஐம்பெரும் அணுகுமுறைகள் (Five Great Approaches) உள்ளன என்று வில்பெர்க்கு என்னும் அறிஞர் எழுதியுள்ளார். மூலப்பாடத்திறனாய்வுபுதிய திறனாய்வுஉளவியல் அடிப்படையிலான திறனாய்வுகுமுக(சமூக)வியல் அணுகுமுறைதொன்மவியல் அணுகுமுறை என்ற அவ்வகைகளில் நூல்குறித்த திறனாய்வு அமைதல் வேண்டும் என்பது அவரது கோணம். அத்தகைய பல்துறைசார் அணுகுமுறை குறித்து விவாதிக்கும் நூல்கள் தமிழில் அக்காலத்தில் இல்லை. தமிழில் இதுகுறித்த முதல் நூலே என்னுடைய “இலக்கியத் திறனாய்வு – ஓர் அறிமுகம்” என்னும் நூல். இந்நூல் அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்ட ஒன்று.
 7) ? இந்த நூல் ஏதேனும் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக அமைந்துள்ளதா?
ஆம். மதுரை பல்கலைக்கழகத்தில் பாடமாக ஆக்கப்பட்டது.ஆனாலும்சரியான முறையில் சந்தைப்படுத்தப் படாததால் அவ்வளவாகப் பயன்படுத்தப் பெறவில்லை. சரியாகச் செய்திருந்தால் இது நிலையான இடத்தைப் பிடித்திருக்கலாம். தமிழில் முன்னோடியாகத் தொன்மவியல் அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது நான்தான். இந்த நூலுக்குப்பின்னர்அறிஞர் மணவாளன் ஒரு சிறிய நூலை எழுதியுள்ளார். பின்னர் என் ஆசிரியர் திரு மகாதேவன் எழுதியுள்ளார். என்னுடைய இந்த நூல் இப்போது பதிப்பில் இல்லை. ஆனால் திரு பேராசிரியர் மெய்யப்பன் அவர்களின் மூலம் நான் பின்னர் எழுதிய பல நூல்கள் –  மார்க்கசியமும் திறனாய்வும்உளவியலும் திறனாய்வும்சமூகவியலும் திறனாய்வும் போன்றவை – உள்ளன. இவற்றின் அடுத்த பதிப்பாகவிரைவில் இவை ஒரே தொகுப்பாக வெளிவர உள்ளன. வாசிப்பாளர்(ரீடர்)’ என்று குறிப்பிடுவதுபோல்மூலமும்மூலத்திற்கு எடுத்துக்காட்டுகளைக் காட்டியும் பதிப்பிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட கோட்பாடுகளுடன்அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டுகளுமாக இந்நூல் அமையும்.

8) ?  புதுக்கவிதைகளின் பால் உங்களுக்கு ஆர்வம் அதிகமெனப்படுகிறது. நீங்கள் புத்துக்கவிதை குறித்து மூன்று நூல்களை (புதுக்கவிதையின் தேக்கநிலை, புதுக்கவிதை – முப்பெரும் உத்திகள், சமூகவியல் நோக்கில் புதுக்கவிதை) எழுதியுள்ளீர்கள். இதுகுறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவியலுமா?
இயல்பாகவே எனக்குக் கவிதையின்பால் ஈடுபாடு உண்டு. குறிப்பாகப்பாரதிதாசனின் கவிதைகள் என்னுடைய பொழிவுகளில் வெகுவாரியாக அமைந்திருக்கும். அவர்வழி வந்த முடியரசனும் வாணிதாசனும் மரபுக்கவிதைகளில் தேர்ந்தவர்கள். என்றாலும்அவர்கள் முறையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. அதனால் அவர்களுடைய கவிதைகளை என் பொழிவுகளில் குறிப்பிடுவது வழக்கம். பின்னர்திரு வி.ஆர்.எம். செட்டியார்திரு சிலம்பொலிச்செல்லப்பன்வன் ஆகியோர் மட்டுமே பாரதிதாசன் வழியில் வந்த மற்ற கவிஞர்களின் கவிதைகளை தம்முடைய பொழிவுகளில் பயன்படுத்தினர். இவ்விருவர் தவிர பாரதிதாசன் வழிவந்த முடியரசன்வாணிதாசன் கவிதைகளை யாரும் திறனாய்வு செய்யவில்லை.
   புதுக்கவிதையைக் குறித்தமட்டில்அது ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அதனால் எப்படி ஏற்றுக்கொள்வதுஎப்படித் தவிர்ப்பது என்ற குழப்பமான நிலை உள்ளது. புதுக்கவிதையில் தேக்க நிலை என்னும் என் நூலே தமிழ் உரைநடை வரலாற்றில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பிய நூலாகும். புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து ஆறு திங்கள் இந்த நூல் குறித்த விவாதங்கள் தொடர்ந்தனதாய்என்னும் இதழ்இந்த நூல் குறித்த கருத்துகளைப் பதிப்பிக்க மட்டுமே தொடர்ந்து ஆறு இதழ்களில் பக்கங்களை ஒதுக்கியது. கல்கி போன்ற பத்திரிகைகள் இதுகுறித்த திறனாய்வுகளை வெளியிட்டன. இப்புத்தகம் குறித்துகருத்துப்படங்களும்(கார்ட்டூன்களும்)இடம்பெற்றன. ஆனாலும் யார் மீதும் எனக்குத் தனிப்பட்ட வகையில் விருப்பு வெறுப்பென்று ஏதும் இல்லை. புதுக்கவிதைகளில்குறிப்பிட்ட சொற்றொடர்கள்படிமங்கள் எப்படி திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்துப்பட்டியலிட்டுக் காட்டியிருந்தேன். காதல் எப்படி வணிகமயமாக்கப்படுகிறது என்பது குறித்தும் எழுதியிருந்தேன்.
   புதுக்கவிதை குறித்த என்னுடை அடுத்த நூலில் புதுக்கவிதைப் படிமங்களுக்கும் மரபு வழி உருவகங்களுக்குமான ஒற்றுமை வேற்றுமைகள்அங்கதம்முரண் போன்றவற்றின் பயன்பாடுஉரைவீச்சில் எப்படி இவை மேலும் சாத்தியப்படுத்த எளிதாக அமைகிறது என்று பல கோணங்களில் ஆய்வுசெய்து எழுதியிருந்தேன். புதுக்கவிதைக்கு ஒரு இலக்கண நூல் போலமைந்த நூலது. இந்நூல் ஆய்வாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
9) ? இன்றைய கவிதைகளில் அத்தகைய தேக்கத்தைக் காண்கிறீர்களா? தேக்கம் நீங்க நீங்கள் சொல்லும் வழி யாது?
நெடிய சிந்தித்துப்பார்ப்போமாயின்தேக்கத்தை இரு நிலைகளில் காணலாம்: ஒன்றுகவிஞர்களின் உள்ளம்சமூகப்போக்கிற்கு ஏற்ப இயங்கி அதன்வழியில் படைப்புகளை ஆக்குவது என்பதில் தோன்றும் பிழைமற்றொன்றுசந்தைப்படுத்துதலில் வெளியீட்டாளர்களின் நோக்கத்திற்கு ஏற்பபடைப்பாளிகள் தத்தம் படைப்பின் திறன்களை மாற்றிக்கொள்ளும் நிலை. இத்தகைய தேக்கம் இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை. என்றாலும் இன்றைய இளைஞர்கள்சமுதாயத்தின் சீர்கேடுகளை விவாதிக்கும் வகையில் தத்தம் படைப்புகளை வெகுவாரியாக படைத்துவருகிறர்கள். புதிய உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த நிலையில் தேக்கம் ஏதும் இல்லை.
10) ? உங்களுடைய ஒரு படிநிலை – பரிமாணம், இதழியல். பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் கட்டும் வகையில் அச்சுவழியிலும் மின்பதிப்பாகவும் இதழ்களை நடத்தி  வருகிறீர்கள். இது குறித்து வாசகர்களுக்கு நீங்கள் தெரிவிக்க நினைக்கும் செய்தி ஏதேனும் உண்டா?
இணையம் என்பது ஒரு பெரிய கொடையாகும். படைப்பாளிகள் தங்களுடைய கருத்துகளை உடனுக்குடன் வெளியுலகத்திற்கு கொண்டுவர இயல்கிறது. நான் என்னுடைய சிறுவயதிலேயே மொட்டுகள் என்னும் கையெழுத்து இதழை நடத்திவந்தேன். பின்னர் தந்தையார் நடத்திவந்த குறள் நெறி இதழில் எழுதத் தொடங்கிப் பின்அதன் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினேன். என் தந்தையின் மறைவுக்குப்பிறகுநானே நடத்தியும் வந்தேன். அந்த ஆசை இன்னும் இருப்பதால்தான்இன்று இணையத்தைக் களமாகக் கொண்டுள்ளேன். வாசகர்களும் இணையத்தின் பரப்பைப் பயன்படுத்திக்கொள்ளுதல் அவசியம். இணையம் என்பதுஅருட்கொடைஅறிவியற்கொடை.
(தொடரும்)
திருவிக விருதாளர் பேரா.மறைமலைஇலக்குவனாரின் நேருரை
– இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன்
இலக்கிய வேல் – ஏப்பிரல்  2017