Tuesday, March 28, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்




தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ)

  பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தந்தை (ஈ.வெ.இராமசாமிப்) பெரியார் அவர்களுடனும் இணைந்து சொற்பொழிவுகள் மேற்கொண்டார். தந்தை பெரியார் அவர்கள், பல ஊர்களில் பேராசிரியரைத் தனி ஊர்தியில் ஊர்வலமாக அழைத்து வரச் செய்து சிறப்பித்தார்; எத்தகைய இடர் வந்தாலும் எதிர்கொண்டு தமிழுக்காகப் போராடும் ஒரே தலைவர் எனக் குறிப்பிட்டுப் பேராசிரியர் இலக்குவனாருக்குத் ‘தமிழர் தளபதி’ என்னும் பட்டத்தையும் அளித்தார். தந்தை பெரியார் அவர்களின் வேண்டுதலால் அவர் உறவினர் ஈரோட்டில் நடத்தி வந்த சிக்கையா நாயக்கர் மாசனக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகச் சூலை, 1954 இல் பேராசிரியர் இலக்குவனார் பணியில் சேர்ந்தார்.
  ஆனால், முதல்வரின் காழ்ப்புணர்ச்சியும் தமிழ்ப்பகை உணர்வும் வல்லாண்மையும் அங்கே ஈராண்டுகளுக்கு மேல் பணி தொடர இடம் தரவில்லை. தமிழ்ப் பேராசிரியர் ஆங்கிலப் பேராசிரியர் போல் உடை உடுத்துவதா? ஆங்கிலப் புலமை கொண்டிருப்பதா? பூப்பந்தாட்டம் முதலான விளையாட்டுகளை விளையாடுவதா? பொறிஉருளை (மோட்டார் பைக்)-ஐப் பயன்படுத்துவதா? (தமிழ்ப் பேராசிரியர்களில் முதன் முதலில் பொறி உருளை ஓட்டியதைக்கூடப் புரட்சியாக அக்காலத்தில் கருதினார்கள்) என்றெல்லாம் தன் படிப்பிற்கும் பதவிக்கும் பொருந்தாத எண்ணம் கொண்டிருந்த முதல்வர் பிறரை அடக்கி வைத்ததுபோல் பேராசிரியர் இலக்குவனாரையும் அடக்க முயன்றார். விடுமுறை நாள்களில் சொற்பொழிவு ஆற்றச் செல்லக் கூடாது என்றார். வகுப்புகளில் தமிழின் தொன்மை, நுண்மை, பெருமை, சீர்மை பற்றி யெல்லாம் பேசக்கூடாது; தமிழ்ப்பற்று ஏற்படும் வண்ணம் பாடம் நடத்தக் கூடாது என்றெல்லாம் வலியுறுத்தினார். ஆசிரியர்கள் தனியாகத்தான் போக வேண்டும்; இருவராகச் செல்வதும் தவறு என்றும் கட்டுப்பாடு விதித்தார். தந்தை பெரியார் இவற்றை யெல்லாம் அறிந்து வருந்திக் கண்ணீர் விட்டுக் கல்லூரியின் தொடர்பை நீக்கிக் கொண்டார். பேராசிரியரின் பெருமையை உணர்ந்து ஆட்சிக்குழுவினர் அவருக்குத் துணை முதல்வர் பொறுப்பு கொடுக்க வலியுறுத்திய பொழுது முதல்வர் மறுத்துத், தான் விடுப்பில் செல்லும் பொழுது மட்டும் முதல்வர் பொறுப்பாகச் செயல்படட்டும் என்றார். பேராசிரியர் ஓய்வு நேரத்தில் மாலைப்பொழுதில் தமிழ்ப் பேராசிரியர் அத்தியப்பன், கணக்குப்பேராசிரியர் கருப்பண்ணன் ஆகியோருடன் பூப்பந்து விளையாடியதால்  மூவரும் தனக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி முதல்வர் முதலில் இம்மூவருக்கும் பணிநீக்க ஆணை வழங்கச் செய்தார்.
   நாடு விடுதலை அடைந்ததாகக் கூறுகிறோமே தவிரச் செல்வாக்குள்ள தனி மனிதர் எண்ணினால் யாருடைய அடிப்படை உரிமைகளையும் பறிக்க முடிகின்ற துயரம் இன்றும் இருக்கத்தான் செய்கின்றது. இதனால் அன்று பேராசிரியர் பணியிழந்தார். நாட்டு மொழியை அம்மொழி ஆசிரியர் மொழிமாணாக்கருக்கு அம்மொழி மீது பற்று ஏற்படும் வகையில் கற்பிப்பதும் குற்றம்  என்று சொல்லும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. ஒரு வேளை அவர் பாடம் நடத்தாமல் வாசித்து விட்டு விட்டு அவரவர்களே படித்துப் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தால் பணி இழப்பு இருந்திருக்காது.
 “தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
 துறைதோறும் துறைதோறும்
 துடித்தெ ழுந்தே!
 புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய்
 புத்துணர்வைக் கொணர்வா இங்கே
 அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும்
 துறைதோறும் அழகு காப்பாய்!
 இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும்
 முதற்பணியாம் எழுக நன்றே ”          (பாவேந்தர் பாரதிதாசன்)
 என்னும் உணர்வினை ஊட்டுபவராக மட்டும் அல்லாமல் தாமும் முன் எடுத்துக்காட்டாக விளங்குவதால் பேராசிரியர் இலக்குவனாரால் எப்படி அடங்கிப் போக முடியும்? தமிழ்ப்பணி ஆற்றாமல் அமைதி  காக்க முடியும்? அவரது கல்விப்பணிக்கும் தமிழ்ப்பணிக்கும் கிடைத்த பரிசு மீண்டும் பணிநீக்கம்.
  தமிழ்நாட்டில் பிற மொழியினர் முதன்மையும் செல்வாக்கும் பெற்று உள்ளமையால் தமிழ் உணர்வு தங்களை வீழச் செய்து விடும் என்ற உணர்வால் அவர்கள், தமிழ் உணர்வை மழுங்கச் செய்ய முயன்று வருகின்றனர். எனவே, தாய்மொழியாம் தமிழைத் தாய்நாடாம் தமிழ்நாட்டில் உண்மையான உயர்வை உணர்த்தும் வகையில் கற்பிப்பதும் பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது.  போற்றி வணங்கிப் பாராட்டப்பட வேண்டியவருக்குப் பரிசுகளாகப் பணிநீக்கங்களே தரப்பட்டுள்ளன. உலகில் எங்கும் இல்லாக் கொடுமை இதுவன்றோ? தன்னலம் கருதாப் பேராசிரியரின் துணிவான முயற்சிகளால் அந்த நிலை ஓரளவு நீங்கி உள்ளது. ஆனால், இந்நிலை முழுமையும் நீங்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை இருக்கும் நாள் விரைவில் வர  வேண்டும். அத்தகைய சூழலை நாம் உருவாக்குவதே பேராசிரியர் இலக்குவனாருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.
(தொடரும்)

 – இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, March 25, 2017

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ)

  புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் அமைக்கப்பெற்றது. அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் ‘திருக்குறள் எளிய பொழிப்புரை’, ‘எல்லோரும் இந்நாட்டரசர்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பின்னர், நூல் வெளியீட்டுப்பணி தொடர்ந்து, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, ‘பழந்தமிழ்’, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ முதலான நூல்களும் வெளியிடப்பட்டன.
 திருக்குறள் கழகம் மூலம் பேராசிரியர் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தியதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது. இது குறித்துப் பாராட்டிய தந்தை பெரியார், விடுதலையில் பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தார்.
புதுக்கோட்டைத் திருக்குறள் கழகம்
புதுக்கோட்டை – ஏப்பிரல் 4
  புதுக்கோட்டையில் திருக்குறள் கழகம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாக மக்கட்கு நல்ல முறையில் சிறந்ததோர் பணியாற்றி வருகின்றது. பேராசிரியர் சி. இலக்குவனார் எம்.ஏ., எம்.ஓ.எல்., திருக்குறள் கழகத்தின் செயலாளராக இருந்து பணியாற்றி வருகின்றார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் 8-30 மணிக்குத் தொடங்கி முறையாகக் குறள்வகுப்பு நடைபெற்றுவருகின்றது. நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெரியோர்களும் வந்து கேட்கின்றார்கள், மாலையில் 6-30 மணிக்குத் தொடங்கிச் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கு இருந்து சொற்பொழிவைக் கேட்கின்றனர். குறளிடத்தில் மக்களுக்கு ஆர்வம் உண்டாகி ஞாயிற்றுக்கிழமை வருவதை எதிர்பார்த்திருக்கின்றனர். இதுவரை பத்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
திருக்குறள் நெறி 2. திருக்குறளில் நாடு 3. அரசு
கண்கள் (கல்வி) 5. அமைச்சு 6. நண்பர் 7. பகைவர்
குடிமைப்பயிற்சி 9. காதல் வாழ்வு 10. உண்மைத்தொண்டர்
 இவ்வாறு தொடர்ச்சியாக ஞாயிறு தவறாமல் ஒலிபெருக்கியுடன் சொற்பொழிவுகள் ஆற்றியமை முற்றிலும் புதுமையாகும். இராமாயணம். பாரதம் போன்ற புராண நூல்களைத்தான் இதுவரை தொடர்ச்சியாகக் காலட்சேபம் செதுவந்துள்ளமை அறிவோம். ஒரு நீதிநூலைத் தொடர்ச்சியாகச் சொல்லுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்பதும் என்றால் எங்கும் காணாத புதுமை என்றுதான் கூறுதல் வேண்டும்.
   14,15,16ஆம் நூற்றாண்டுகளில் மேலைநாடுகளில் கலைக்கழகங்கள் அமைத்து மக்களிடையே சொற்பொழிவுகள் ஆற்றிக் கலையறிவைப் பரப்பியதுபோல புதுக்கோட்டையில் கலை, இலக்கிய அறிவு பரப்பப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் குறளின்பால் ஆர்வம் கொண்டு குறள் கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்துவருகின்றனர். இதற்கு ஆதரவு கொடுத்துவருகின்றவர் திருவாளர் பி.ஏ. சுப்பிரமணிய(பிள்ளை) ஆவார். கல்விவளர்ச்சிக் கழகத்தின் வழியாகத் தாழ்த்தப்பட்டோர்க்கும் தொண்டு செய்து வருகின்றார்.
 வள்ளுவர் கழகப் பணிகள்பற்றிய இவ்விதழ்ச்சான்று, பேராசிரியர் இலக்குவனார் தாம் பணியாற்றிய நகரங்களில் எல்லாம் இலக்கியச் சொற்பொழிவுகளும் வகுப்புகளும் சிறப்பாக நடத்தியிருந்தமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இவ்வாறுதான் பேராசிரியர் இலக்குவனார் இலக்கியங்களை எளிய முறையில் விளக்கி அவை மக்கள் இலக்கியங்கள் என்பதை உணர்த்தி இலக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் போராளியின் கடமை அல்லவா?
   பேராசிரியருக்கு உறுதுணையாக இருந்த அண்ணலார் பு.அ.சுப்பிர மணியன் அவர்கள் பேராசிரியர் இலக்குவனார் குறித்துக் கூறுவன (வீ.முத்துச்சாமி : இலக்குவனார் ஆய்வுப்பண்பு):
“பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது.
 தமிழே அவர்மூச்சு ; தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க்காவலர்.
 அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே.
 ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.”
(தொடரும்)
 – இலக்குவனார் திருவள்ளுவன்

Wednesday, March 22, 2017

மறக்க முடியுமா? – பேராசிரியர் மா.இராசமாணிக்கனார் : எழில்.இளங்கோவன்




மறக்க முடியுமா?

பேராசிரியர் மா.இராசமாணிக்கனார்

 

நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் & தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர்.
மாசி 29, 1938 / 1907ஆம் ஆண்டு மார்ச்சு 12ஆம்  நாள் இவர் பிறந்தார்.
இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர் என்பதனால் அடிக்கடி பணி மாறுதல் பெற்றுச் சென்று கொண்டிருந்தார்.
அதனால் இராசமாணிக்கனாரின் தொடக்க நிலைப் படிப்பு தடைபட்டு, தொடர முடியாமல் இருந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இவரின் தந்தை 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதுதான் இராசமாணிக்கனார் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியில் பயின்றார்.
குறுகிய காலத்தில் தந்தை மரணம் அடைந்ததால் மாணிக்கனாரைக் கவனிக்கும் பொறுப்பு, அவரின் அண்ணன் இராமகிருட்டிணனுக்கு ஏற்பட்டது.
குடும்ப வறுமை காரணமாக நன்னிலத்தில் ஒரு தையல் கடையில், சிறுவனாக இருந்த தம்பி இராசமாணிக்கனாரை வேலைக்குச் சேர்த்து விட்டார் அண்ணன்.
ஒரு நாள் தஞ்சை புனித பீட்டர் பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சந்தித்துத் தான் படிக்க விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார் இராசமாணிக்கனார்.
தலைமை ஆசிரியரின் உதவியால் அப்பள்ளியில் பயின்று இறுதித் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார் இராசமாணிக்கனார்.
அப்பள்ளியில் ஆசிரியராக இருந்த கரந்தைக் கவிஞர் இரா.வெங்கடாச்சலம், இராசமாணிக்கனாரின் அறிவாற்றலைக் கண்டு வியந்து, அவரைக் கரந்தை உமாமகேசுவரனார், நா.மு.வேங்கடசாமி நாட்டார், இரா.இராகவையங்கார் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் அனுப்பிப் பயிலச்செய்தார்.
1928ஆம் ஆண்டு சென்னை வந்த இராசமாணிக்கனார், வண்ணாரப்பேட்டையில் இருந்த தியாகராயர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
1935ஆம் ஆண்டு வித்துவான் தேர்வில் தேறினார்.
1939ஆம் ஆண்டு கீழை மொழிகளில் இளங்கலைப்பட்டம்(பி.ஓ.எல்.) பெற்றார்.
1945ஆம் ஆண்டு ‘பெரியபுராண ஆராய்ச்சி’ என்ற ஆய்வுக்கட்டுரைக்காகக் கீழை மொழிகளில்  முதுகலைப்பட்டம்(எம்.ஓ.எல்.) பெற்றார்.
1951 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். இவரின் இளமைக் காலத்தில் சித்தர்களின் பாடல்கள், வடலூர் வள்ளலாரின் திருஅருட்பா போன்றவற்றை ஆழ்ந்து படித்தார்.
அதன் விளைவாக இவரிடம்  தன்மதிப்பு(சுயமரியாதை)ச் சிந்தனைகள் மேலோங்கி நின்றன.
சாதி ஒழிப்பு பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
தமிழர்களின் திருமண இல்லங்களில் சடங்குவழிவழி வழக்கங்களுடன், ஓமம் வளர்த்துச் செய்யும் சடங்குத் திருமணங்களை ஏற்க மறுத்தார்.
அதற்காகவே ‘தமிழர் திருமணம்’ என்ற முற்போக்கு நூலை எழுதித்  தன்மதிப்பு(சுயமரியாதை)த் திருமணத்தை வரவேற்றார்.
1947 தொடங்கி 1953 வரை சென்னை விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார்.
1953ஆம் ஆண்டில் மதுரை தியாகராயர் கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்று தமிழ்த் துறைத் தலைவராகவும் விளங்கினார்.
1959 தொடக்கம் 1967 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
சைவச்சித்தாந்தம் குறித்த அவரின் ஆய்வுகளும், கட்டுரைகளும், நூல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.  அதனால், திருவாவடுதுறை ஆதினம் 1959ஆம் ஆண்டு இவருக்குச் ‘சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
மதுரை திருஞானசம்பந்த ஆதினத்திடமிருந்து 1955ஆம் ஆண்டு ‘ஆராய்ச்சிக் கலைஞர்’ என்ற பட்டம் பெற்றார்.
தருமபுரம் ஆதினம் 1963ஆம் ஆண்டு ‘சைவ இலக்கியப் பேரறிஞர்’ என்று பட்டம் வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தார்.
1930ஆம் ஆண்டு மா.இராசமாணிக்கனார் சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராயர் பள்ளியில் ஆசிரியராக இருந்த காலக் கட்டங்களில்
அருசவர்த்தனன்
முடியுடை மூவேந்தர்கள்
பொற்கால வாசகம்
முசோலினி
 ஆகிய நூல்களை எழுதினார்.
தொடர்ந்து அவர் தமிழ், வரலாறு, இலக்கியம், சைவம்  முதலான துறைகளில் பல ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார்.
பல்லவர் வரலாறு, பல்லவப் பேரரசர், மொகஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்மொழி இலக்கிய வரலாறு, சோழர் வரலாறு, தமிழ் இனம், தமிழக ஆட்சி, தமிழ் அமுதம்,  இலக்கிய அமுதம், தமிழ்நாட்டு வடஎல்லை, தமிழகக் கலைகள், புதிய தமிழகம், சிலப்பதிகாரக் காட்சிகள், சேக்கிழார், சேக்கிழார் ஆராய்ச்சி, சைவ சமயம், சைவ சமய வளர்ச்சி, பெரியபுராண ஆராய்ச்சி, நாற்பெரும் புலவர்கள் என்று பல நூல்கள் எழுதியிருக்கிறார்.
இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன.
இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒரு நூல் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’.
பேராசிரியர் முனைவர் மா.இராசமாணிக்கனார், வைகாசி 12, 1998 / 1967ஆம் ஆண்டு மே 26ஆம் நாள் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பொறுப்பில் இருந்தபோது மாரடைப்பினால்  மரணம் அடைந்தார்.
அவர் மரணம் அடைவதற்கு முன், அவர் எழுதிய ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ கையெழுத்துப் படிகளைப் பல்கலைக் கழகத்திடம் கொடுத்து, நூலாக வெளியிடுமாறு வேண்டியிருக்கிறார்.
ஆனால் பேராசிரியர் இராசமாணிக்கனார் மறைந்த உடன், அவர் எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலின் கையெழுத்துப் படிகளை ஓர் அறையின் மூலையில் போட்டு மூடிவிட்டார்கள் சென்னை பல்கலைக் கழகத்தார்.
பின்னர் அதே பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற நெ.து.சுந்தரவடிவேலு,  தற்செயலாக மூடிக்கிடந்த அறையைத் திறந்து பார்த்தபோது, அறையின் முலையில் பத்துப் பாட்டு ஆராய்ச்சி கையெழுத்துப் படிகள் கிடப்பதைப் பார்த்தார்.
உடனே அவர் அந்தப் படிகளை எடுத்து அதே ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ என்ற தலைப்பில், பல்கலைக்கழக வெளியீடாக 1970ஆம் ஆண்டு வெளியிடச் செய்தார்.
நெ.து.சுந்தரவடிவேலு சொல்கிறார், ‘‘இவர் (இராசமாணிக்கனார்) எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சியை வெளியிட வேண்டித், தான் பணியாற்றிய சென்னைப் பல்கலைக் கழகத்தாரிடம் ஒப்படைத்ததற்கு மாற்றாக அவரே வெளியிட்டு இருந்தால், பணமாவது கிடைத்து இருக்கும். சென்னைப் பல்கலைக் கழகம் பத்துப்பாட்டு நூலை, யாரும் காணாத வண்ணம் பூட்டி வைத்துவிட்டது வேதனை’’.
மறக்கமுடியுமா
இவரை நாம்
மறக்கமுடியுமா!
  • எழில்.இளங்கோவன்
  • கருஞ்சட்டைத்தமிழர்: மார்ச்சு 16-31, 2017