Saturday, July 18, 2009

தமிழுக்கு நெல்லை தந்த கொடை!



அரசுப் பணியில் இருந்தவண்ணம் அருந்தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் பெருமக்களின் வரிசையில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்குச் சிறப்பிடம் உண்டு. இப்போதெல்லாம் தினசரிகளும் சரி, வார சஞ்சிகைகளும் சரி போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு ஆலயங்களைப் பற்றியும், சரித்திரப் பிரசித்தி பெற்ற தலங்களைப் பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் "கலைமணி' தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்தான்.நெல்லை மாவட்டம் தமிழுக்கு அளித்திருக்கும் கொடைகள் ஏராளம் ஏராளம். பல தமிழறிஞர்கள் நெல்லைத் தரணியில் தோன்றி மொழிப் பணியாற்றி இருக்கின்றனர். அந்த வரிசையில் 1904-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி நெல்லையில், தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.இவரது தந்தை வழிப் பாட்டனார் சிதம்பரத் தொண்டைமான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் முறையாகத் தமிழ் பயின்றவர் என்றால், தகப்பனார் முத்தையாவோ தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்ற அறிஞர். இப்படிப்பட்ட மொழி ஆளுமைமிக்க குடும்பத்தில் பிறந்த பாஸ்கரத் தொண்டைமானுக்கு இயற்கையிலேயே தமிழில் நாட்டமும், கலைகளில் ஈடுபாடும் ஏற்பட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?அன்றைய வழக்கப்படி, கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் செய்து கொண்டுவிட்ட பாஸ்கரத் தொண்டமானின் மாணவர் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. கல்லூரி நாள்களில் பாஸ்கரத் தொண்டைமானிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் தொண்டைமான் படித்த இந்துக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர். இன்னொருவர், "சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை.ரா.பி.சேதுப்பிள்ளையின் தூண்டுதலின் பேரில்தான் பாஸ்கரத் தொண்டைமான் தனது கல்லூரி நாள்களிலேயே "ஆனந்தபோதினி' பத்திரிகையில் கம்பராமாயணக் கட்டுரைகளை எழுதினார். கம்பனின் கவிதையில் காதல் வசப்பட்டவர்கள் ரசிகமணியின் ரசனை வட்டத்திற்குள் இழுக்கப்படுவது என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதானே? "ரசிகமணி' டி.கே. சிதம்பரநாத முதலியாரின் பரிச்சயமும், அவருடன் அமர்ந்து கம்பனை வரிவரியாக ரசித்துப் படிக்கும் அனுபவமும் பாஸ்கரத் தொண்டைமானின் தமிழ்ப் பித்துக்கு மெருகும் உரமும் ஊட்டின.திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற கையோடு, அரசு உத்தியோகம் அவரைத் தேடி வந்தது. இன்றைய வனவளத் துறைக்கு அப்போது காட்டிலாகா என்று பெயர். காட்டிலாகாவில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே, பாஸ்கரத் தொண்டைமான் வருவாய்த் துறை ஆய்வாளரானார். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், மாவட்ட உதவி ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்தார் அவர். இவரது சேவையைக் கருதி, அரசு இவரை இந்திய அரசுப் பணி (ஐ.ஏ.எஸ்.) தகுதியை அளித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்தது.1959-ஆம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பாஸ்கரத் தொண்டைமான் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்பிவிட்டார். தமது பாரம்பரியமான வீட்டில் தங்கி தமது இலக்கியப் பணியைக் கடைசிக் காலம்வரை தொடர்ந்தார் என்பது மட்டுமல்ல, அவர் எழுதிக் குவித்ததும் ஏராளம் ஏராளம்.பாஸ்கரத் தொண்டைமான் எங்கெல்லாம் பணியாற்றினாரோ அங்கெல்லாம் அரசுப் பணியுடன் தமிழ்ப் பணியும் ஆற்றினார் என்பதுதான் அவரது தனிச் சிறப்பு. தஞ்சையில் அவர் பணி புரிந்தபோது அங்கே கிடைத்தற்கரிய கலைச் செல்வங்களும், சிற்பப் படிவங்களும், சரித்திரத்தின் அடிச்சுவடுகளும் கேள்வி கேட்பாரற்று வீணாகிப் போவதைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவைகளை எல்லாம் முறையாக சேமித்து, தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்துத் தமிழரின் சரித்திரத்துக்கு வலு சேர்த்த பெருமை தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுடையது!நெல்லை வண்ணாரப்பேட்டையில் அப்போதெல்லாம் தமிழகமெங்கும் உள்ள தேர்ந்தெடுத்த இலக்கிய ஆர்வலர்கள் ஒன்றுகூடுவார்கள். அவர்கள் ஒன்றுகூடும் இடம் "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வீடு. சாரல் பருவம் வந்துவிட்டால், இவர்கள் குற்றாலத்தில் இருக்கும் ரசிகமணியின் வீட்டிற்குச் சென்று விடுவார்கள்.சிதம்பரநாத முதலியாரின் வீட்டில் நடு முற்றமாக வட்டவடிவில் அமைந்த தொட்டிக்கட்டு அமைப்பில்தான் மாலை வேளையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரசிகமணியின் நண்பர் வட்டம் கூடும். அவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவர், சங்க இலக்கியம் என்று இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்தில் டாக்டர் சாமுவேல் ஜான்சன் தனது நண்பர் வட்டத்தைக் கூட்டி இலக்கியக் கழகம் (கண்ற்ங்ழ்ஹழ்ஹ் இப்ன்க்ஷ) என்ற பெயரில் இலக்கிய ஆய்வுகள் நடத்துவாராம். அதேபோல, இலக்கிய ஆய்வு நடத்தும் திருநெல்வேலியிலுள்ள ரசிகமணியின் நண்பர் வட்டம், "வட்டத் தொட்டி' என்று வழங்கலாயிற்று.வட்டத் தொட்டியின் தலைவர் ரசிகமணி டி.கே.சி. என்றால் அதன் தூண்களில் ஒருவராகச் செயல்பட்டவர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான். "கம்பர் அடிப்பொடி' சா.கணேசன், மு.அருணாசலப் பிள்ளை, நீதிபதி மகாராஜன், மீ.ப.சோமு, நாமக்கல் கவிஞர், "கவிமணி' தேசிக விநாயகம் பிள்ளை, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வரும், ஆங்கிலப் பேராசிரியருமான ஆ.சீனிவாச ராகவன், ஏ.சி. பால் நாடார் மற்றும் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் போன்ற பல தமிழறிஞர்கள் "வட்டத் தொட்டி'யில் அடிக்கடி பங்கு பெறும் தமிழார்வலர்கள்.மூதறிஞர் ராஜாஜி மற்றும் எழுத்தாளர் கல்கி ஆகிய இருவரும் சற்று ஓய்வு கிடைத்தாலும் நெல்லையிலுள்ள ரசிகமணியின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து விடுவார்கள். அவர்களும் சேர்ந்து கொண்டால், வட்டத் தொட்டியின் கலகலப்புக்கும், இலக்கிய சர்ச்சைக்கும் கேட்கவே வேண்டாம். இந்த இலக்கிய சர்ச்சைகளில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் பங்களிப்பு மிகவும் அதிகம்.வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரின் எண்பதாவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று நெல்லையிலுள்ள நண்பர்கள் முடிவெடுத்து ஒரு விழா எடுப்பது என்று தீர்மானித்தனர். "வெள்ளைக்காலை வாழ்த்த உத்தமதானபுரத்திற்குத்தான் தகுதியுண்டு' என்பது ரசிகமணியின் கருத்து. அவரே "தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாத அய்யரவர்களுக்குக் கடிதம் எழுதி அவரது இசைவையும் பெற்று விட்டார்.இந்துக் கல்லூரி மாடியில் நடந்த விழாவுக்கு அறிஞர்களும், தமிழன்பர்களும் திரண்டு வந்திருந்தனர். விழாத் தலைவரான மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு முதிர்ந்த பருவம். அவரை அழைத்துக் கொண்டு, வழிநடத்திச் சென்று தலைமைப் பீடத்தில் அமரவைத்த இளைஞர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான். விழாத் தலைவர் உ.வே.சா. பேசும்போது அவர் குறிப்பிட்டதை அப்படியே தருகிறோம்:""என்னைப் பலகாலும் வற்புறுத்தி நீ மேலேற வேண்டும். எனவே, படி, படி என்று தூண்டி உற்சாகப்படுத்தி வந்தவர் எனது ஆசிரியர் பெருமானாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். இப்பொழுது என்னை அப்படி ஊக்குவிப்பார் ஒருவரையும் காணேன். நான் நிரம்பக் கற்றவன் என்று நீங்களெல்லாம் என்னை மதித்து மரியாதை செய்யத் தொடங்கிவிட்டீர்கள்.நெல்லைக்கு வந்தபின் நான் கற்க வேண்டியவை பல உள்ளன என்பதையும், அவற்றை எல்லாம் கற்றுத்தான் மேனிலை எய்த வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். மேலும் படி, படி என்று சொல்ல ஆசிரியப் பெருமானாகிய பிள்ளை அவர்கள் இல்லாத குறையும் இன்று தீர்ந்தது.என்னை அழைத்து வந்தானே ஒரு பிள்ளையாண்டான். அவன் வயதிலும் உருவத்திலும் சிறியவன்தான். ஆனால், அவன்தான் என் ஆசிரியப் பெருமானின் ஸ்தானத்தை இன்று வகித்தவன். ரெயிலடியில் இறங்கியது முதல் இங்கு வந்து அமரும் வரை என் கூடவே வந்து, படி, படி என்று கூறி வழியும் காட்டி, மேலேற வேண்டும் என்று சொன்னதுடன் அமையாது, மேனிலைக்கே கொண்டு வந்து தலைமைப் பீடத்திலும் அமர்த்திச் சென்றுவிட்டான்.பிள்ளையவர்கள் ஸ்தானத்தை வகித்து என்னை ஆண்டான் என்ற பொருள்பட இந்தத் தம்பியைப் பிள்ளையாண்டான் என்று குறிப்பிட்டேன். இந்தத் தம்பி பல்லாண்டு நல்வாழ்வு வாழ்க!''இதைக் கேட்ட வெள்ளக்கால் எண்பதாண்டு விழாக் குழுவில் செயலாளராக இருந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்கு நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சி. "தமிழ்த் தாத்தா' தன்னைத் தம்பி என்று அழைத்ததால் பிற்காலத்தில் "தம்பி' என்ற புனைப்பெயரில் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் தொ.மு.பா. எழுதினார். "தமிழ்த் தாயின் தவப் புதல்வர் திருவாயால் வாழ்த்துப் பெறவும், "தம்பி' என்று அவர் அமுதூர அழைக்கவும் என்ன பாக்கியம் செய்தேன்!' என்று பாஸ்கரத் தொண்டைமான் அடிக்கடி நினைவு கூர்ந்து நெகிழ்வாராம்.அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், நெல்லைக்குத் திரும்பினாலும், தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றில் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் நுணுகி ஆராய்ந்து கட்டுரைகளாக வடித்தார் பாஸ்கரத் தொண்டைமான். இந்தக் கட்டுரைகள் "வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தலைப்பில் "கல்கி' வார இதழில் தொடராக வந்தது."வேங்கடத்துக்கு அப்பால்', பிள்ளைவாள், தமிழறிஞர் முதலியார், ரசிகமணி டி.கே.சி., கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, அமர காதலர், தென்றல் தந்த கவிதை, தமிழர் கோயில்களும் பண்பாடும், கம்பன் கண்ட இராமன், அன்றும் இன்றும் என்று தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிக் குவித்தவை ஏராளம் ஏராளம். இவரது நூல்கள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப் பட்டிருக்கிறது.முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் இவருடைய இளைய சகோதரர். நீதிபதி மகாராஜன் தொகுத்தது போல, பாஸ்கரத் தொண்டைமானுக்கு ரசிகமணி எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. காரைக்குடி கம்பன் விழா என்றால், தவறாமல் ஆஜராகி விடுவார்கள் தொண்டைமான், மகாராஜன், ஆ.சி.ரா. போன்ற வட்டத்தொட்டி நண்பர்கள். இவர்களது உரையைக் கேட்பதற்காகவே இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் காரைக்குடி நோக்கிப் படையெடுக்கும். அது ஒரு காலம்!தமிழும், கலையும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 1965-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். ஆனால், வேங்கடம் முதல் குமரி வரை உள்ள பகுதி வாழும் வரை, இவரது நூலும் வாழும். இவரது புகழும் வாழும்!

Saturday, July 11, 2009

ஒப்பிலக்கியச் செம்மல்!



பேச்சாளராக, எழுத்தாளராக, உரையாசிரியராக, பதிப்பாசிரியராக, விமர்சகராக, வரலாற்று ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, சமயாச்சாரியராக, திறனாய்வாளராக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர் பி.ஸ்ரீ.. என்று இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா.நூற்றியெட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தென்திருப்பேரை என்னும் கிராமத்தில், 1886-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி, திருவாதிரை நட்சத்திர நன்நாளில், பிச்சு ஐயங்கார்-பிச்சு அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு பி.ஸ்ரீநிவாச்சாரி எனப் பெயரிட்டனர். நாளடைவில் அவரது பெயர் சுருங்கி, பி.ஸ்ரீ. என ஆகிவிட்டது.நெல்லையில் உள்ள, தற்போது "மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி' என்று அழைக்கப்படும் இந்துக் கலாசாலையில் கல்வி பயின்றார். புரட்சி கவி பாரதியும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரும், சிறுகதை மன்னன் என்றழைக்கப்படும் புதுமைப்பித்தனும் படித்த சிறப்பு மிக்கது இக்கல்லூரி. பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் நல்ல அறிவும் திறமையும் படைத்த பி.ஸ்ரீ., எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பாராம். அதிகம் விரும்பிப் படித்து, திளைத்து, மயங்குவது கம்பராமாயணம் மற்றும் பாரதியின் பாடல்களில்தான்.பி.ஸ்ரீ.க்கு, நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் வளரக் காரணமாய் இருந்தவர் மகாகவி பாரதியார்தான். பலமுறை பாரதியாரைச் சந்தித்து, பழகி மிகுந்த தோழமை பூண்டு, அவரைப் பாடச் சொல்லி, கேட்டு, மகிழ்ந்து பாராட்டிய பி.ஸ்ரீ., ரவீந்திரநாத் தாகூருக்குக் கிடைத்ததுபோல பாரதியாருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே என தனது ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளார்.பாரதியின் தாக்கத்தால் அந்நாளைய "இன்ட்ர்மீடியட்' வகுப்புக்குப் பிறகு படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றார் பி.ஸ்ரீ. விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்ட அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்து வைத்து அவரது கவனத்தைத் திசைதிருப்ப நினைத்தனர். அதன்படி தங்கம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்வித்தனர். இவருக்கு ஒரு மகனும், இரு மகளும் உண்டு.தமிழ் இலக்கியத்தை அவ்வளவாக அறிந்திராத காலத்தில் ராஜாஜிதான் பி.ஸ்ரீ.யின் கவனத்தை தமிழின் பால் ஈர்த்துக்கொண்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.""தமிழில் படிக்க என்ன இருக்கிறது என்கிறாய், அது தாய்மொழியின் குறையோ குற்றமோ அன்று; உன் ஆசிரியர் கூறியபடி புல்லையும் தவிட்டையும் காளை மாட்டுக்குப் போட்டுவிட்டு, வீட்டுப்பசு பால் கறக்கவில்லை என்றால் அது பசுவின் குற்றமா?'' என்று ராஜாஜி இடித்துரைத்ததைக் கேட்டு, தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் திறனாய்வாகவும் ஆராய்ச்சியாகவும் உருப்பெற்றது. அதனால் தன்னைத் தமிழின் "ஆயுள் மாணாக்கன்' என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொண்டவர் பி.ஸ்ரீ.இவரது ஆங்கில இலக்கியப் படிப்பு இவரது தமிழ்ப்பணிக்கு மெருகூட்டியது. பாமரரும் படித்துப் புரிந்து கொள்ளும் விதமாக பண்டித நடையில் இருந்தவற்றை பழகு தமிழுக்குக் கொண்டுவந்து 20-ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை மறுமலர்ச்சிக்கும் திறனாய்வுத்துறைக்கும் வழிகாட்டியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் இவர்.பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பி.ஸ்ரீ., திருக்கோயில்களிலும் தலபுராணங்களிலும் தம்மையறியாது ஓர் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். செப்பேடுகள், கல்வெட்டுகள், சிற்பக்கலை போன்றவற்றிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார். சரித்திரத்தை விஞ்ஞான மனப்பான்மையுடன் இலக்கியச் சுவை குன்றாது ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பது பி.ஸ்ரீ.யின் விருப்பம். எனவே, "ஆனந்த விகடன்' பத்திரிகையில் "கிளைவ் முதல் இராஜாஜி வரை' என்ற தலைப்பில் கட்டுரை எழுதி பின் அதை நூலாக்கினார்.உ.வே.சா.வைச் சந்தித்துப் பழகும் வாய்ப்புதான் தமிழ் மீது பற்று அதிகரிக்கும் அளவுக்கு பி.ஸ்ரீ.யை உயர்த்தியது. இவரது எழுத்தார்வம் "கிராம பரிபாலனம்' என்கிற வார இதழைத் தொடங்கி வைத்து நஷ்டமடையவும் வைத்தது. விளைவு? வேலையில் சேர்வதுதான். செட்டிநாட்டில் மூன்றரை ஆண்டுகள் தங்கி, "குமரன்' பத்திரிகையின் ஆசிரியராக, எண்ணிலடங்காத கட்டுரைகளையும் கதைகளையும் தொடர்களையும் எழுதிக்குவித்தார்.""ஆனந்தவிகடன் ஓர் இன்பப் படகு; அதை ஆனந்தமாய்ச் செலுத்துவதற்குத் துடுப்பு போடலாம் வாருங்கள்!'' என்று கல்கி அடிக்கடி பி.ஸ்ரீ.யை உற்சாகமூட்டி எழுதத் தூண்டினார். அதனால் ஆனந்தவிகடனில் தொடர்ந்து எழுதிவந்தார் பி.ஸ்ரீ. கம்பனை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்குவதற்கு வழிகாட்டியாகவும் குருவாகவும் இருந்தவர் பி.ஸ்ரீ.யின் கலாசாலை நண்பரான வையாபுரிப்பிள்ளையாவார்.உ.வே.சா., கா.சு.பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, மறைமலையடிகள், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வ.வே.சு ஐயர், ராஜாஜி, கல்கி, சோமசுந்தர பாரதி, ரசிகமணி டி.கே.சி., மற்றும் பல இலக்கிய அன்பர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் பி.ஸ்ரீ.இவர் எழுதிய "ஸ்ரீஇராமானுஜர்' என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1964-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும், பொன் முடிப்பும் வழங்கப்பட்டது.தினமணி, தினமலர், சுடர், சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களுக்கும், கல்கி, ஆனந்தவிகடன் போன்ற வார இதழ்களுக்கும் கலைமகள், அமுதசுரபி போன்ற மாத இதழ்களுக்கும் கட்டுரைகளை எழுதிக் குவித்தார். "தினமணி' நாளிதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியபோது எண்ணற்ற நல்ல நூல்களைத் "தினமணி மலிவு வெளியீடாக' வெளியிட்ட பெருமை பி.ஸ்ரீ.க்கு உண்டு.தமிழ்ப் பத்திரிகை உலகில் பி.ஸ்ரீ.யின் பங்களிப்பு என்பது "தினமணி'யில் வேலை பார்த்தபோது அவர் வெளியிட்ட பல மலிவு விலைப் பதிப்புகள் என்பதுதான். தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும், புத்தக மதிப்புரைகளும் எனலாம். பி.ஸ்ரீ.யின் பத்திரிகைப் பணியில் முழுப் பரிமாணமும் அவர் "தினமணி'யில் இருந்து ஓய்வுபெற்று, ஆனந்தவிகடனில் பகுதிநேர எழுத்தாளராக மாறியபோதுதான் வெளிப்பட்டது.இன்றளவும் பி.ஸ்ரீ.யின் சித்திர ராமாயணத்துக்கு நிகராக ஒரு எளிய படைப்பு வெளிவந்ததில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்து. தமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் இட்ட பெருமையும் பி.ஸ்ரீ.க்கு உண்டு. கம்பனும் - ஷெல்லியும், பாரதியும் - ஷெல்லியும் என்று தொடங்கி, இலக்கிய ஒப்புமைகள் பல பி.ஸ்ரீ.யால் வெளிவந்தன. கம்பன் கவிதையை இலக்கியத் திறனாய்வு செய்து கம்பனின் புகழை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய பெருமைக்குரியவர் பி.ஸ்ரீ. உடல்நிலை குன்றி படுக்கையில் இருந்தபோதும் கூட, "நான் இரசித்த கம்பன்' என்ற இறுதி நூலை எழுதி முடித்தார் என்றால் அவருக்கிருந்த கம்ப தாகம் எப்படிப்பட்டது என்று உணரமுடிகிறது!பி.ஸ்ரீ.யின் கட்டுரைகள் இல்லாமல் எந்தவொரு தீபாவளி மலரும் வெளிவராது என்கிற நிலைமை கடந்த நூற்றாண்டில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இருந்தது.பி.ஸ்ரீ., தமது 96-வது வயதில், 1981-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

Monday, July 06, 2009

சீர்காழி தமிழிசை மூவர் விழா



இசை உலகின் ஆதிமும்மூர்த்திகள் என்றுஅனைவராலும்போற்றப்படும் சீர்காழி தமிழிசை
மூவர்களாகிய அருள்மிகு முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக்கவிராயர் ஆகியோர் காலத்தால் திருவாரூர் மூவர்களுக்கு முற்பட்டவர்களாவர்.
கீர்த்தனை என்ற இசை வடிவத்திற்கு இவர்கள் மூவரும் கொள்ளிட நதிக்கு தென் கரையிலும், வடகரையிலும் சற்றுத் தொலைவில் உள்ள சீர்காழி, சிதம்பரம் ஆகிய எல்லைக்குள் வாழ்ந்து சிறப்பித்தவர்கள். சீர்காழி சட்டைநாதர் திருத்தலத்திலேயே தேவாரப் பாடல்களை அருளினர். இத்தகைய புகழ் பெற்ற சீர்காழி சட்டைநாதர் திருத்தலத்திலேயே தேவார மூவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்து, ஞானப்பாலுண்டு, அரிய பொக்கிஷமான தேவாரப் பாடல்களை அருளினார். இத்தகைய புகழ் பெற்ற சீர்காழி தலத்தில் தமிழிசை மூவர்கள் சிறப்பு வாய்ந்த பல தமிழிசைப் பாடல்களைப் பாடி மக்களிடையே பரவச் செய்தார்கள். இவர்களுடைய இசைப் பாடல்கள் வாயிலாக இசைத் தமிழ் எவ்வகையில் வளம் பெற்றது என்பதை நாம் அறிய முடியும். அருள்மிகு முத்துத்தாண்டவர் (வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 1522-1625): முத்துத்தாண்டவர் சிறு வயதிலேயே மிகுந்த இறை பக்தியுடனும், இசை, நடனம், சிவநாம சங்கீர்த்தனத்தில் ஈடுபாட்டுடனும் வாழ்ந்தார். இவர் இசை வேளாளர் மரபில் பிறந்தவர். ஆதலால், நாகசுர இசையில் இயற்கையாக ஈடுபாடு இருந்தது. இசை ஞானமும் இயல்பாக அமைந்தது. இவருக்கு இளமையிலேயே கொடிய குன்ம வியாதி பிடித்ததால் குலத் தொழிலாகிய நாகசுரம் இசைக்க இயலாமல் போனது. இவருடைய இயற்பெயர் தாண்டவன். இவர் கடவுள் பக்தி அதிகமுடையவர். ஆதலால், சீர்காழியில் வசித்த ஓர் உருத்திர கணிகையின் வீட்டிற்குப் போய் அதிக நேரம் செலவிட்டு ஆடலிலும், பாடலிலும், சிவநாம சங்கீர்த்தனத்திலும் பொழுதைக் கழித்ததால், அவர் வீட்டில் உள்ள அனைவரும் அவரை வெறுத்து ஒதுக்கினர். எனவே, அவர் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து, கோயிலில் உறங்கியபோது குருக்களின் பத்து வயதுப் பெண் உருவில் அம்பிகை வந்து, அவருடைய பசியைப் போக்கியதோடு, சிதம்பரம் நடராஜர் கோயில் சென்று பக்தர்களின் கூட்டத்தில் வரும் முதல் வார்த்தையை வைத்துப் பாடினால் கொடிய குன்ம வியாதி தீரும் என்று தாண்டவனுக்கு அருளினார். அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர் ஒருவர் மூலம் "பூலோக கைலாச கிரி சிதம்பரம்' என்ற சொல் வர, முதல் பாடலாக பவப்ரியா ராகத்தில் ஜம்பை தாளத்தில் கீர்த்தனை வடிவில் பாடினார். நிறைவாக, சிவபெருமான் பஞ்சாட்சரப் படியின் மேல் ஐந்து பொற்காசுகள் தோன்றச் செய்து தினமும் பாடி காசுகள் பெற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டு அருளினார். அவ்வாறு சிறப்புகளைப் பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தி, முத்துத்தாண்டவர் இயற்றிய பாடல்கள் 60 நமக்குக் கிடைத்துள்ளது. இதில் 25 பதங்களும் அடங்கும். இது அகப்பொருளை உணர்த்தும் காதலைப் பற்றி அமைந்துள்ளது. பரதநாட்டியத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆடிக்கொண்டார், சேவிக்க வேண்டுமய்யா, மாயவித்தையைச் செய்கிறானே போன்ற கீர்த்தனைகள் மிகவும் புகழ் பெற்றவையாகும். இவர் கீர்த்தனையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அருள்மிகு மாரிமுத்தாப்பிள்ளை (வாழ்ந்த காலம் சுமார் 1712- 1787): முத்துத்தாண்டவர் போலவே தில்லை நடராஜர் மேல் பல கீர்த்தனைகளையும், பதங்களையும் பாடியவராக விளங்கியவர் இயலிசைப் புலவர் மாரிமுத்தாப்பிள்ளை. இவர் தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் சிவகங்க நாதர் என்பவரிடம் தமிழ்க் கல்வி, சமயக் கல்வி பெற்று தக்க குருவிடம் சமய தீட்சை பெற்றார். இவருடைய மூத்த பிள்ளை உடல்நலக் குறைவால் வருந்திய போது, இறைவன் இவரது கனவில் தோன்றி "நம் மீது நீ பாட்டுப் பாடினால் உன் கவலை நீங்கும்' என்றார். பிறகு, அன்று முதல் இறைவன் மேல் பாடுவதே தொண்டாகக் கொண்டு இவர் புலியூர் வெண்பா, சிதம்பரேசர், விறலிவிடு தூது, தில்லைப் பள்ளு, வண்ணம் மற்றும் பல பதிகங்களை இயற்றினார். இவர் இயற்றிய புலியூர் வெண்பா சென்னை பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் பல காலம் தமிழ்ப் பாடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சிறந்த இசை நூல் ஆசிரியர் மட்டுமன்றி சிறந்த இலக்கியகர்த்தாவும் ஆவார். இவர் இயற்றியது தில்லைவிடங்கன் அய்யனார், நொண்டி நாடகம், விடங்கேசர் பதிகம், தனிப் பாடல்கள், அநீதி நாடகம். கிடைத்தது 25 கீர்த்தனங்கள். புலியூர் வெண்பா, தில்வைவிடங்கன் பற்றி இரு தனித் தோத்திரப் பாக்களும் உள்ளன. ஏனையவை பற்றித் தெரியவில்லை. அருள்மிகு அருணாசலக் கவிராயர் (வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 1711-1778): இவர் இசைத் தமிழில் விசித்திரமான அமைப்புகளை எல்லாம் நிரூபித்துக் காட்டியவர். தேவார மூவரில் திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழிப் பதியே அருணாசலக் கவிராயரையும் உலகிற்குக் காட்டியது. தமிழிசையில் சீர்காழி மூவரில் நடு நாயகமாய் விளங்கிய அருணாசலக் கவிராயர் ராமபிரானைப் பற்றி பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். மற்ற இருவரும் சிதம்பரம் நடராஜர் பற்றியே பாடியுள்ளனர். இவர் திருக்கடையூர் அருகிலுள்ள தில்லையாடி என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருக்கு 12 வயதான போது பெற்றோரை இழந்து, இவருடைய தமயனாரின் அரவணைப்பில் வளர்ந்து, தருமபுர ஆதீனத்திலும், அம்பலவாணக் கவிராயரிடமும் சமயக் கல்வியும் பிறவும் கற்றதோடு, வடமொழி ஆகமங்களையும் கற்றுத் தேறினார். இவர் 12 ஆண்டுகள் தில்லையாடியிலும், 25 ஆண்டுகள் சீர்காழியிலும் வாழ்ந்தார். தனது 60-வது வயதில் ராம நாடக கீர்த்தனைகளைப் பாடி முடித்தார். சீர்காழிப் பள்ளு, சீர்காழிப் புராணம், சீர்காழிபக் கோவை, சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகேசர் வண்ணம், சம்பந்தர் பிள்ளைத் தமிழ், அனுமார் பிள்ளைத் தமிழ் முதலிய நூல்கள் பலவற்றை இயற்றினார். இவற்றுள் சிலவே இன்று கிடைத்துள்ளன. பாமர மக்கள் பார்த்தும், கேட்டும் அனுபவிப்பதற்கு என்றே எழுதப்பட்ட நூல் ராம நாடக கீர்த்தனையாகும். இதில் இசைப் பகுதிகள் 258, தரு என்ற வகை கீர்த்தனை 197, திபதை 60 (திபதை என்பது 2 அடி கண்ணிகளால் ஆன இசைப் பாட்டு), தோடையம் 1 (தோடையம் என்பது 4 அடி கொண்ட ஒருவகை விருத்தப் பாட்டு). தோடையம் என்பது கடவுள் வணக்கமாகப் சொல்லப்படும் பாட்டு ஆகும். ஏன் பள்ளி கொண்டீர் அய்யா, காண வேண்டும் இலட்சம் கண்கள், யாரோ இவர் யாரோ போன்ற கீர்த்தனைகள் இன்றும் பிரபலமாகத் திகழ்கின்றன. 40 ராகங்களை தனது பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். இவர் துவஜாவந்தி, மங்கல கௌசிகம், சைந்தவி போன்ற அபூர்வ ராகங்களையும் பயன்படுத்தியுள்ளார். பல சிறப்புகளைப் பெற்ற சீர்காழி இசைத் தமிழ் மூவர்களுக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவைப் போலவே, கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் மிகவும் முக்கியமான இசை விழாவாக "சீர்காழி தமிழிசை மூவர் ஆராதனை விழா' நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மூன்று நாள்கள் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் இந்த ஆராதனை விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஜூலை 6,7,8 ஆகிய நாள்களில் சீர்காழி தமிழிசை மூவர் ஆராதனை விழா நடைபெறுகிறது. தமிழக அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம், சீர்காழி தமிழிசை மூவர் பேரவை, சீர்காழி பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இப் பெரு விழாவை நடத்துகின்றனர்.

கருத்து
சீர்காழித் தமிழிசைவாணர்கள் மூவரையும் தமிழிசையின் முன்னோடி என்று பலரும் தவறாகவே குறிப்பிடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் ' கீர்த்தனை' என்னும் இசை வடிவைச்சிறப்பித்தவர்கள் என உண்மையை உரைத்துள்ள திரு மணிகண்டனுக்குப் பாராட்டுகள்! ஆனால்,இவர் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு ஆதி மும்மூர்த்திகள் எனப் பலரும் குறிப்பிடுவது தொல்காப்பிய காலத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்திருந்த தமிழிசையை இழித்துக் கூறுவதாகும் என்பதை உணர வேண்டும். இவர்களுக்கும பிந்தைய கருநாடக இசை மூவரை இசை மும்மூர்த்திகள் என்றதால் ஒப்பீட்டு முறையில் அவர்களுக்கும் மூத்தவரகள் எனக் கூற வந்து தவறான சொல்லாட்சி இடம் பெற்று விட்டது. இன்றைய தெலுங்கு இசை வடிவங்களுக்கு முன்னோடியான தமிழிசை வடிவங்களைப் பரப்பிய மூவர் புகழ் ஓங்குக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 4:18:00 AM

உலகப் பெருந்தமிழர்








தமிழ் ஆய்வுகளை உலகளாவிய வகையில் நெறிப்படுத்தவும் உயர்த்தவும் இடையறாமல் முயற்சி செய்த மூத்த தமிழறிஞர், முதுமுனைவர் வ.அய். சுப்ரமணியத்தின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் தமிழ் வளர்ச்சிக்குச் சிறப்பாகத் தொண்டாற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சி நெறிமுறைகளில் முதிர்ச்சியும், சிந்தனையும் செயலும் தமிழுக்காகவே அமைத்துக்கொண்ட தகைமையும் நிறைந்தவர் வ.அய். சுப்ரமணியம். உலக அளவில் பல்வேறு மொழி ஆய்வுகளில் நிலவி வரும் புதிய போக்குகளையும் நெறிகளையும் உணர்ந்து அறிந்து நமது மொழியின் ஆய்வுகளில் புதிய வழி காண உதவியவர். ஈழத் தமிழறிஞரான முனைவர் தனிநாயகம் அடிகளோடு இணைந்து நின்று உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்து பல்வேறு நாடுகளில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவதற்கும் உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வந்த தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைப்பதற்கும் அவர் ஆற்றிய தொண்டு என்பது மகத்தானது. தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் நீண்ட காலக் கனவு நனவானபோது அதன் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்று தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு தொலைநோக்குடன் திட்டவட்டமான வடிவம் கொடுத்த பெருமை அவரையே சாரும். அவர் பதவி வகித்த 5 ஆண்டு காலத்திற்குரிய வேலைத் திட்டத்தை வகுத்து அதை அச்சிட்டு அனைவருக்கும் வழங்கி அதன்படி செயல்பட்டவர் அவர். மற்றவர்களையும் செயல்பட வைத்தவர். தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அமைந்திருக்கும் தமிழ்த்துறைகள் செய்து வரும் தமிழ் ஆய்வுகளை நெறிப்படுத்தவும் முறைப்படுத்தவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டன. அவர் துணை வேந்தராக இயங்கிய 5 ஆண்டு காலத்தில் அப் பல்கலைக்கழகத்திற்கு உலக அளவில் பெருமையைத் தேடிக் கொடுத்தார். அரசிடம் இருந்து ஆயிரம் ஏக்கருக்குக் குறையாத நிலத்தைப் பெற்று அதில் கட்டடங்களை அனைவரும் வியக்கும் வண்ணம் எழுப்பி அவர் ஆற்றிய சாதனை வேறு யாராலும் செய்யப்பட முடியாதது மட்டுமல்ல இன்றளவும்கூட அதை விஞ்சும் சாதனையை யாரும் செய்யவில்லை. திறமை உள்ளவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை இனம் கண்டறிந்து பல்கலைக்கழகத்திற்கு வரவேற்றுப் போற்றினார். திருவனந்தபுரத்தில் திராவிட மொழியியல் நிறுவனம், பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி, இந்திய மொழியியல் நிறுவனம், இந்திய நாட்டுப்புறவியல் நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளைத் தழைக்கச் செய்தவர் அவர். என்னுடன் படித்த மாணவ நண்பர்கள் அவரிடம் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டிருந்தபோது திருவனந்தபுரத்தில் முதன்முதலாக அவரைச் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே அவருடைய ஆளுமை என்னை முழுமையாக ஆட்கொண்டது. 1976-ம் ஆண்டில் அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். திராவிட மொழியியல் பள்ளிக்கு தென்னாட்டில் உள்ள அரசுகளின் நிதி உதவி மிக இன்றியமையாதது. அது கிடைக்க உதவும்படி வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க கர்நாடகத்தின் முதலமைச்சர் தேவராஜ் அர்ûஸயும், ஆந்திர முதலமைச்சராக இருந்த சென்னா ரெட்டியையும் சந்தித்து விவரத்தை எடுத்துக்கூறி அவர்களும் அந்தப் பள்ளி இயங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து நிதி உதவி அளிக்க முன்வந்தார்கள் என்பதே உண்மையாகும். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நான் இருந்த காரணத்தினால் காங்கிரஸ் முதலமைச்சர்களையும் உரிமையோடு வேண்டிக்கொள்ள முடிந்தது. நான் செய்த இந்தச் சிறு உதவியை மதித்துப் போற்றிய பேருள்ளம் அவருக்கு இருந்தது. எதுவாக இருந்தாலும் தொலைநோக்கு, செயல்திறன், செய் நேர்த்தி ஆகியவை அவரின் சிறந்த குணநலன்கள் ஆகும். ஒருமுறை தில்லி சென்றிருந்த நான் பழைய புத்தகக் கடை ஒன்றின் தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியர்கள் என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த ஆங்கில நூல் ஒன்றினை வாங்கினேன். இந்நாடுகளில் ஆங்கிலேய ஆட்சியினரால் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ரப்பர் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவற்றில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து 1950-களின் தொடக்கத்தில் தில்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். இக்கருத்தரங்கை முனைவர் கே.எஸ். சாந்து நடத்தியிருந்தார். நான் தஞ்சைக்குச் சென்று துணைவேந்தர் வ.அய். சுப்ரமணியத்தைச் சந்தித்து அவரிடம் இந்த நூலினைக் கொடுத்தேன். தென் கிழக்காசிய நாடுகளில் குடியேற்றப்பட்ட இந்திய மக்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு இந்த நூலில் இல்லை. எனவே இந்நாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து முழுமையான செய்திகள் தொகுக்கப்பட வேண்டும். இந்தப் பணியினை தங்கள் பல்கலைக்கழகமே செய்வதுதான் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று கூறினேன். அவரும் மிக்க மகிழ்ச்சியுடன் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். ஏற்றதோடு நிற்கவில்லை. தில்லியில் கருத்தரங்கினை நடத்திய கே.எஸ். சாந்துவைக் கண்டுபிடித்து தஞ்சைக்கு வரவழைத்து இந்தக் கருத்தரங்கில் கட்டுரைகள் வாசித்த அறிஞர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து மேற்கொண்டு ஆற்ற வேண்டியதை அவர் செய்தார். பல்வேறு நாடுகளுக்கும் பல்கலைக்கழகத்தின் சார்பில் பல பேராசிரியர்களை அனுப்பி தமிழர்கள் பற்றிய செய்திகளை எல்லாம் தொகுத்து நூல்களாக வெளியிட ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டிலுள்ள உள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோரை அவ்வப்போது கூட்டிக் கருத்தரங்குகள் நடத்தி ஒருமுகப்படுத்தினார். இதற்கு முன் யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை. அதுமட்டுமல்ல. இலங்கை தமிழ் அறிஞர்களின் உயிருக்கே அபாயம் ஏற்பட்ட காலகட்டத்தில் அவர்களில் பலரை வருகைப் பேராசிரியர்களாக அழைத்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணிகளைத் தொடர்வதற்கு உதவினார். அதைப்போல ஈழத்தமிழ் மாணவர்களுக்கும் இங்கு கல்வியைத் தொடர வழிவகை செய்தார். யாழ் நூலகம் சிங்கள வெறியர்களால் கொளுத்தப்பட்டு விலைமதிக்க முடியாத நூல்களெல்லாம் தீக்கிரையான செய்தி கேட்டு வேதனை அடைந்த அவர், உடனடியாக பல்கலைக்கழக நூலகத்திலுள்ள முக்கியமான நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் மைக்ரோ பிலிம் எடுத்து யாழ் நூலகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். ஈழத் தமிழர்களின் துயரம் துடைப்பதற்கு அவர் வரம்புக்குட்பட்ட எல்லாவற்றையுமே செய்தார். காவிரிப் பிரச்னை முற்றிய காலகட்டத்தில் கர்நாடக அரசு அப்பிரச்னை குறித்து தமிழில் தனது தரப்பு நியாயங்களை விளக்கி ஒரு நூலினை அச்சடித்து காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கியது. அப்போது தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சங்க இலக்கியத்திலும் மற்றும் பின்னர் எழுந்த இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் காவிரி குறித்து வெளியான செய்திகள் அத்தனையும் தொகுத்து நூல் ஒன்று வெளியிட இவர் ஏற்பாடு செய்தார். இதன் விளைவாக காவிரி நீர் மீது நமக்குள்ள நியாயமான உரிமை இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு மேற்பட்டது என்பது நிலைநாட்டப்பட்டது. தொடக்கப் பள்ளியில் கூட தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த அரசே தயங்கி வரும் சூழ்நிலையில் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளைத் தமிழிலேயே நடத்தத் துணிந்து திட்டமிட்டார். அறிஞர்கள் பலரைக் கூட்டிவைத்து அதற்கான நூல்களை உருவாக்கினார். ஆனால் தமிழக அரசின் அனுமதி கிடைக்காததால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ்ச் சுவடிகள், தமிழர்கள் குறித்த கல்வெட்டுகள் பட்டயங்கள் போன்றவற்றினை எல்லாம் சேகரிக்க பெரு முயற்சி செய்தார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற இந்திய அலுவலக நூலகத்தில் உள்ள ஆவணங்களை மைக்ரோ பிலிமில் பதிவு செய்து பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாப்பாக வைத்தார். இந்தியாவின் வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இந்த ஆவணங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் வாழ்ந்து மறைந்த புலவர்களின் வீடுகளுக்கு எல்லாம் ஆள் அனுப்பி ஓலைச்சுவடிகளைச் சேகரித்து பல்கலைக்கழகத்தில் பத்திரப்படுத்தினார். தமிழரின் பழமையும் பெருமையும் அகழ்வாராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படும் என்பது எவ்வளவு உண்மையானதோ அதைப்போல தமிழகத்தைச் சுற்றியுள்ள கடலில் அகழ்வாய்வு செய்து பல புதிய உண்மைகளைக் கொண்டு வருவதற்காக நீர் அகழ்வாய்வு நிறுவனத்தை ராமேசுவரத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் நிறுவினார். இதன் மூலம் மறைந்த பூம்புகார் பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவருடைய பணி நிறைவடைவதற்கு முன்பாகவே அவர் பதவி விலக நேரிட்டது ஒரு பேரிழப்பாகும். அதற்கான காரணங்களை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. அவர் அப்பதவியில் தொடர்ந்திருந்தால் பல்கலைக்கழகம் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக உருவெடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 1997-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக அவர் பணியாற்றினார். அப்போது திராவிட மொழிகளில் அகராதி ஒன்றினைத் தொகுக்கும் திட்டத்தை வகுத்துத் தக்க அறிஞர்களைக்கொண்டு நிறைவேற்றினார். அந்தத் திட்டத்திற்கு உதவ வேண்டுமென்று மத்திய அரசை வேண்டிக்கொள்வதற்காக தில்லி சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைச் சந்தித்தபோது அவருக்குத் திராவிட மொழிகள் அகராதியை அளித்தார். அதை உள்ளே கூட புரட்டிக் பார்க்காமல் தலைப்பை பார்த்த உடனேயே தனது வெறுப்பை அந்த அமைச்சர் வெளிக்காட்டினார். திராவிடம், திராவிட மொழிகள் என்று எதுவும் கிடையாது. எல்லாம் அன்னிய ஆட்சியினரின் சூழ்ச்சி என்று பேசினார். இத்திட்டத்திற்கு அவர் நிச்சயமாக உதவப் போவதில்லை என்று தெரிந்தபோது வ.அய். சுப்ரமணியம் எழுந்து ""அப்படியானால் இந்தியாவின் தேசிய கீதத்தில் திராவிட என்ற சொல்லையே எடுத்துவிடுங்கள்'' என்று கூறிவிட்டு வெளியேறினார். அமைச்சரோ திகைத்துப் போனார். யாருக்கும் அஞ்சாமல் தனது கருத்தினைத் துணிந்து சொல்லும் குணநலன் அவருக்கே உரியது. தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக்கொண்ட இந்த அறிஞரின் பெருமைகளை உணர்ந்து உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் உள்பட உயர்ந்த விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன. 2005-ம் ஆண்டில் உலகத் தமிழர் பேரமைப்பு நாகர்கோயிலில் நடத்திய மாநாட்டில் இவருக்கு உலகப் பெருந்தமிழர் எனும் விருதினை வழங்கிற்று. சென்ற ஆண்டு சென்னையில் உள்ள உலகத்தமிழர் பேரமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தார். நானும் மற்ற நிர்வாகிகளும் கூடி மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாட்டின் மலர்களைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார். ""நல்ல ஆய்வுக் கட்டுரைகளுடன் சிறப்பாக மலர் வெளிவந்திருக்கின்றன. எனக்கொரு யோசனை உள்ளது. அதை நிறைவேற்றும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் முன்பு பஹம்ண்ப் இன்ப்ற்ன்ழ்ங் என்ற பெயரில் ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்ட இருமொழி காலாண்டிதழை வெளியிட்டோம். உலகம் முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அவை அனுப்பப்பட்டு வந்தன. அதைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை. உலகத் தமிழர் பேரமைப்பு அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்'' என அவர் கூறியபோது ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் திகைப்பும் எங்களை ஆட்கொண்டன. ""உங்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவது எங்கள் கடமையாகும். ஆனால் அந்த இதழுக்கு பெருமைதரு ஆசிரியராக தாங்கள் இருந்தால் மட்டுமே அதை நாங்கள் செய்வதற்கு இயலும்'' என நான் கூறியபோது அதற்கு அவர் ஒப்புதலும் அளித்தார். அவரின் இந்த விருப்பத்தினை நாங்கள் நிறைவேற்றுவதற்குள் அவர் மறைந்தது தாங்கொணாத் துயரமாகும். எல்லா வகையிலும் அடக்கமாக தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய இந்த உலகப் பெருந்தமிழர் மறைவு நமக்கு சொல்லொண்ணாத இழப்பாகும். தஞ்சையில் அமைக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக உயர்ந்தோங்க வேண்டும் என்பதே அவரின் ஒரே நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும்.

Saturday, July 04, 2009

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை








ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும் அவர்கள் வகுத்துள்ளனர். இவர்களில் ""சி.வை.தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு'' என்றும் "தமிழ்தந்த தாமோதரம் பிள்ளை' என்ற கட்டுரையில் சி.கணபதிபிள்ளை குறிப்பிட்டுள்ளார். பதிப்புத்துறையில் தொண்டாற்றிய மேற்கண்ட மூன்று அறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஆறுமுக நாவலர் 1868-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைத் தான் ஆய்வுசெய்து தாமோதரம் பிள்ளையைக் கொண்டு பதிப்பிக்கச் செய்துள்ளார். ""ஆங்கில மோகம் அதிகரிக்க, தொல்காப்பியப் பிரதிகள் அருகி, தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதை தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்...தொல்காப்பியக் கடலில் இறங்கினார்'' என்று பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை குறிப்பிடுகிறார். தமது 33-ஆம் வயதில் உ.வே.சா., தாமோதரம் பிள்ளையைச் சந்தித்தார். அப்போது உ.வே.சா., சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் கொண்டு சுவடிகளை ஆய்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அப்போது அச்சுத்துறை மிகவும் புதியது. தாமோதரம் பிள்ளையின் சந்திப்புதான் உ.வே.சா.வுக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது. இதை உ.வே.சாவே, ""இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம்பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887-இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார். இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் கிராமத்தில் வைரவநாதபிள்ளை-பெருந்தேவி தம்பதியினர்க்கு மகனாக 1882-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பிறந்தார். தாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார். பிள்ளையவர்களின் ஆங்கிலக்கல்வி தெல்லிப்பிழை அமெரிக்க மிஷன் பள்ளியில் தொடங்கியது. மேலும் ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணம் பல்கலையில் கற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய்த் திகழ்ந்தார். ஆங்கில உயர்தரக்கல்வியை எட்டு ஆண்டுகள் பயின்றபின் தமது 20-ஆம் வயதில் கோப்பாயிலிருந்த பள்ளியில் பிள்ளை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே நீதிநெறிவிளக்க உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்த பார்சிவல் பாதிரியார் தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து "தினவர்த்தமானி' எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடத்தி அதில் தனியான ஒரு வசன நடையைக் கையாண்டார் பிள்ளை. மேலும் லஷ்சிஸ்டன்துரை போன்ற ஆங்கிலேயர்க்குத் தமிழும் கற்பித்து வந்தார். இதை அறிந்த அன்றைய அரசாங்கம், தாமோதரம் பிள்ளையை, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய "சென்னை இராசதானி' க்கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்து மகிழ்ந்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., தேறிய பிள்ளையை கள்ளிக்கோட்டை இராஜாங்க வித்தியாசாலை உதவியாசிரியராகப் பணியாற்ற அழைத்தது. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத்துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவு-செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் பதவியும் வந்து சேர்ந்தன. 1871-இல் தாமோதரம்பிள்ளை பி.எல்.தேர்வில் வெற்றி பெற்றார். எப்பணியை மேற்கொண்ட போதிலும் தமது ஓய்வு நேரங்களில் தாமோதரம்பிள்ளை பழைய நூல்களை ஓலைச் சுவடிகளில் பயின்றுவந்தார். அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும் சீரழிந்து இருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தமது தலையாய பணி என்று பிள்ளை கருதினார். ஏற்கெனவே தம் 20-ஆம் வயதிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதால், பிள்ளைக்கு இப்பணி சுமையாகத் தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலரவர்கள் பரிசோதித்தலே நன்று என்று கருதி அவருக்கே பிள்ளை உதவி செய்து வந்தார். இந்த நெருங்கிய தொடர்பினால் நாவலர் பரிசோதித்து அளித்த சொல்லதிகாரத்தைத் தம் பெயரினால் பிள்ளை முதன்முதல் 1868-இல் வெளியிட்டார். இந்நூல் வெளிவந்து பதினொரு ஆண்டுகள் கடந்தபின் 1879-இல் ஆறுமுகநாவலர் காலமானார். பிள்ளை மிகவும் மனம் வருந்தியதோடு நாவலரின் பணியைத் தாம் தொடர வேண்டுமென முடிவு செய்தார். நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். அதன் பயனாய் வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891), தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892) முதலியவை தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன. இது மட்டுமன்றி, கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்ட பெருமை பிள்ளைக்கே உரியதாகும். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பிள்ளை, 1887-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 4 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார். மேலும் சென்னை திராவிடக் கிரந்த பரிபாலன சபை, நியாயப் பரிபாலன சபை போன்ற அமைப்புகளில் உறுப்பினராயும் இருந்து சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவர் என்ற பெருமையையும் பெற்றார் தாமோதரம்பிள்ளை. அன்றைய சென்னை அரசு இவருக்கு 1875-இல் ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவ்வாறு சிறந்த பதிப்புச் செம்மலாக விளங்கியதோடு தமிழ் ஆசிரியராக, கணக்காயராக, நீதிபதியாக, தான் தோன்றிய துறையில் எல்லாம் புகழோடு தோன்றிய பிள்ளை, 1901-ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல்நாள், வைகுந்த ஏகாதசித் திருநாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார். பல பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்று மகிழும் நாம், பல பண்டைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதை அறிந்து பெருமைப்பட வேண்டியது தமிழர் கடமை..
கருத்துக்கள்

ஏட்டில் இருந்த இலக்கியங்களை அச்சில் ஏற்றிய அரும்பணியின் முன்னோடி அறிஞர் சி.வை.தாமோதரனார். இதனைத் தமிழ் நாட்டில வேண்டுமென்றே ஒரு சாரார் மறைத்து வருகையில் பதிப்புச் செம்மலைப்பற்றி அனைவரும் அறியச் செய்தமைக்குப் பாராட்டுகள். எனினும் வளவ. துரையன் அவர்கள் பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்றும் பழைய இலக்கணங்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்றும் யாருக்கு அஞ்சித் தவறான பாகுபாட்டைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இலக்கணங்களும் இலக்கியங்களில் அடக்கம்தானே! 'பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்ததில் முன்னோடி அறிஞர் சி.வை.தாமோதரனார்' எனக் குறிப்பதே உண்மையும் பொருத்தமும் ஆகும். அவர் வழியில் உ.வே.சா. சென்றார் எனக் குறிப்பதிலோ 'தாய் எட்டடி சென்றால் குட்டி பதினாறடி தாவும்' என்பது போல் முனைப்புடன் சிறப்பாகச் செயல்பட்டார் என்றோ கூறுவதில் தவறு இல்லை. அதற்காகப் பதிப்புச் செம்மல் பணியை அவரைப் பற்றிய கட்டுரையில் கூட மறைப்பது பெருந்தவறாகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 4:55:00 AM