Sunday, July 31, 2022

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. : 3/4

 அகரமுதல

 



(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 2/4 தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – 3/4

சேலம் இராமசாமி முதலியார் தூண்டுதலினால் சமண நூலாகிய சிந்தாமணி நூலை ஆராய்ந்தார். சைன சமய உண்மைகளைச் சமணப் புலவர்களிடம் உரையாடித் தெரிந்து கொண்டார். 1887ஆம் ஆண்டு சீவக-சிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். அந்தப் பதிப்பு இவருக்குத் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமதிப்பைத் தேடித் தந்தது. சிந்தாமணிக்குப் பின் பத்துப்பாட்டும், சிலப்பதிகாரமும், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களும் வெளிவந்தன. புறநானுாறு பழந்தமிழகத்தின் வரலாற்றுக் கருவூலமாக விளங்குவது. எனவே பழந்தமிழரின் கொடை வளத்தையும் வாழ்க்கை வளத்தையும் அறிந்து கொள்ளத் தலைப்பட்டார். இவர் தொண்டால் முதற் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் மக்களிடையே பரவத் தொடங்கியது. பெளத்த சமய நூலான மணிமேகலை தமிழரிடையே அறக்கருத்தைப் போதித்தது. பத்துப்பாட்டின் இலக்கியப் பெருந்தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்தது. ஐயர் அவர்களின் பெருமையும், அறிவும், பண்பாடும்: பதிப்புத் திறமையும், தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பாராட்டைப் பெற்றன. பின் ஐயர் அவர்கள் ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்னும் தொகை நூல்களை வெளியிட்டார். கொங்குவேள் என்னும் புலவர் இயற்றிய ‘பெருங்கதை’ என்னும் இடைக்கால இலக்கியம் அச்சுக்கு வந்தது.

இலக்கிய நூல்களைப் பதிப்பித்ததோடு அன்றி இலக்கண நூல்களையும் சாமிநாத ஐயர் நன்கு பதிப்பித்தார். புறப்பொருள் வெண்பா மாலை. நன்னூல் மயிலைநாதர் உரை, நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரை முதலான இலக்கண நூல்களைப் பதிப்பித்தார்.

அடுத்து, சமய இலக்கியங்களையும் இவர் திறமையாகப் பதிப்பித்தார். நம்பி திருவிளையாடல், திருக்காளத்திப் புராணம் முதலியன இவரால் வெளியிடப் பெற்றன. கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ். குறவஞ்சி முதலிய சிறுபிரபந்த நூல்கள் இவரால் உரையுடன் பதிப்பிக்கப் பெற்றன.

பதிப்பின் திறம்

ஏட்டிலிருந்த பாடத்தை இவர் அப்படியே பதிப்பிக்கவில்லை. ‘ஏடு எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. ஆதலால் ஒரு முறைக்குப் பலமுறை நன்கு ஆராய்ந்து செல்லரித்துப் போன இடத்தையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, தக்க பாடங்களை ஊகித்துத் தம்பாலுள்ள பயிற்சியாலும், இயற்கையான அறிவுத் திறமையாலும் பழஞ்சுவடிகளை ஆராய்ந்து செப்பம் செய்தார். திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து தாமே வழி அமைத்துக் கொண்டு புஞ்சைக் காட்டை நஞ்சைக் காடாக்கிய நல்ல அறிவு உழவர் இவர். இவருடைய பதிப்பின் திறம் இன்று பேராசிரியப் பெருமக்களால் ஒருமுகமாகப் பாராட்டப் பெறுகின்றது. இவர், தாம் பதிப்பித்த ஒவ்வொரு நூலுக்கும் எழுதியுள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும் நூலைப் பற்றிய குறிப்புகளும், பிற செய்திகளும், அறிவு உலகத்தால் என்றென்றும் பாராட்டப்படும் தகுதி வாய்ந்தன. இவர் எடுத்துக் கொண்ட உயர்வு மிக்க சிறப்பு, ஊக்கம் நிறைந்த உயர் உழைப்பாகும். எனவே மறைந்த இராசாசி அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது;

‘சாமிநாத ஐயர் முயற்சியுடன் எறும்பும் தேனீயும் போட்டி போடலாம்’ என்றும், ‘தமிழ்மொழியின் லாவகமும்’ எளிய நடையில் ஆழ்ந்த பொருள்களை அளிக்கும் அதன் ஆற்றலும் இவரால் நமக்குத் தெரிய வந்தன.’ என்றும், ‘தமிழ் வியாசர்’ என்றும் இவரைப் போற்றியுள்ளார். இவருடைய பதிப்பு நூல்களில் ஒவ்வொரு பக்கங்களின் அடியிலும் அடிக்குறிப்பில் பலவகையான நூல்களிலிருந்து எடுத்துக்காட்டப் பெற்ற ஒப்புமைப் பகுதிகளும் சொல்லாற்றல் வளமும் காணப்பெறும். நூலின் இறுதியில் நூல் களில் வந்துள்ள பொருள்களின் பெயர் அகராதி (Word–index) இருக்கும். ஆகையால் ஆசிரியரின் உதவியின்றியே பயிலும் வகையில் இவருடைய பதிப்புகள் சிறப்பாக அமைந்துள்ளன.

உரைநடைப் பணி

தாம் பதிப்பித்த நூல்களின் முன்னுரையில் அந்நூலைப் பற்றிய சிறந்த செய்திகளை-ஆராய்ச்சி நலன்களை அழகுச் செவ்விகளைப் புலப்படுத்த எளிய இனிய உரைநடையினைக் கையாண்ட சாமிநாத ஐயர், விரிந்த அளவில் மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் முதலிய உரைநடை நூல்களை எழுதினார். மேலும் இவர் கோபாலகிருட்டிண பாரதியார், வைத்தியனாதையர், கனம் கிருட்டிணய்யர் முதலிய பெரியோர் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். ‘நல்லுரைக் கோவை’ இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தாங்கி நான்கு பகுதிகளாக வெளிவந்துள்ளது. ‘நினைவு மஞ்சரி’ இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை கொண்ட இரு தொகுதிகளாகும். ‘புதியதும் பழையதும்’, ‘கண்டதும் கேட்டதும்’ முதலியன நல்ல தமிழ் நூல்களாகும்.

சென்னை மாற்றம்

1903ஆம் ஆண்டு வரை குடந்தை அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் 1903ஆம் ஆண்டிலிருந்து 1919ஆம் ஆண்டு வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கொலு வீற்றிருந்தார். கல்லூரியில் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதோடு அமையாமல் வீட்டிலும் தம்மிடம் பயில வந்த மாணவர்களுக்கு இவர் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். இவரிடம் பாடம் கேட்டவர்களில் வியாசபாரதத் தமிழ்மொழி பெயர்ப்பு ஆசிரியர் ஆகிய மகோ மகோபாத்தியாய இராமானுசதச்சாரியர், திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான், துள்ளும் நடையில் நெஞ்சையள்ளும் காவடிச் சிந்து பாடிய சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் முக்கியமானவர்கள் ஆவர். இவரிடம் பயின்று ஆராய்ச்சி முறையைக் கற்றுக்கொண்ட பின்னர் நற்றிணையைப் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆவர். மற்றொருவர் இ. வை. அனந்தராம ஐயர் ஆவர். இவர் கலித்தொகையைப் பதிப்பித்தார்.

அண்ணாமலைப் பணி

1924 முதல் 1927 வரையில் செட்டி நாட்டு அரசர் இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி, அவர்கள் சிதம்பரத்தில் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் தலைவராகப் பணியாற்றினார்.
(தொடரும்)

சான்றோர் தமிழ், சி. பாலசுப்பிரமணியன்

Wednesday, July 27, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை

 அகரமுதல




என் சரித்திரம்

சிவமயம்
முகவுரை



திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்
“திருவேயென் செல்வமே தேனே வானோர்
        செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீமிக்க
உருவேயென் னுறவேயென் னூனே ஊனி
        னுள்ளமே யுள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமேகண்ணே கண்ணிற்
        கருமணியே மணியாடுபாவாய் காவாய்
அருவாய வல்வினை நோயடையா வண்ணம்
        ஆவடுதண் டுறையுறையு மமரரேறே.”

திருச்சிற்றம்பலம்

சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு தமிழன்பர் பலர் பாராட்டி வரும்போது எந்தையாரவர்கள் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் திரு மீனாட்சிசுந்தரம் (பிள்ளை)யவர்களை அடிக்கடி நினைந்து, தம்மிடம் வருவோர்களிடம் (பிள்ளை)யவர்களுடைய கல்விப் பெருமை, போதனா சக்தி, செய்யுளியற்றுவதில் இருந்த ஒப்புயர்வற்ற திறமை முதலியவற்றைக் கூறித் தமக்கு ஏற்பட்டு வரும் பெருமைக்கெல்லாம் அவர்களிடம் முறையாகப் பல வருடம் பாடங்கேட்டு இடைவிடாது பழகியதே காரணம் என்று சொல்லுவார்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் தாம் தெரிந்துகொண்ட சில அரிய செய்திகளைச் சொல்லுவார். கேட்பவர்கள் திருப்தியுற்றுச் செல்லுவார்கள். இப்படி யிருக்கையில் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு வெளி வந்தால் தமிழ் நாட்டினர் அறிந்து இன்புறுவதற்கு அனுகூலமாயிருக்குமென்று தந்தையார் எண்ணினர். கும்பகோணத்தில் இரண்டு முறை பெரியசபை கூட்டி, கல்லூரி முதல்வராக இருந்த திரு சே.எம்.என்சுமான் (முதலி)யவர்கள் அக்கிராசனத்தின் கீழ்த் திரு. பிள்ளையவர்களைப் பற்றி அவர்கள் உபந்நியாசம் செய்தார்கள். கேட்ட அன்பர்கள் பலர் பிள்ளையவர்களுடைய பெருமையை வரவர அதிகமாகப் பாராட்டினார்கள்.

அதுமுதல் எந்தையாருக்குத் தம் ஆசிரியர் அவர்களுடைய சரித்திரத்தை விரிவாக எழுதி அச்சிட்டு வெளியிட வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று. குடந்தையிலிருந்து சென்னைக்கு வந்தபின்பு ஒழிந்த காலங்களில் தம் கருத்தை அவ்வேலையிலே செலுத்திப் பலவகையான குறிப்புக்களை எழுதிச் சேர்த்தார்கள். இதன்பயனாக ஆசிரியரவர்களது சரித்திரத்தை இரண்டு பாகங்களாக 1933-34-ஆம் ஆண்டுகளில் பதிப்பித்து வெளியிட்டார்கள். அக்காலத்தில் தமிழ் ஆசிரியர்களைப் பற்றிய வரலாறுகளே பெரும்பாலும் காணப்படாமையால் பிள்ளையவர்களுடைய சரித்திரத்திற்கு மிக்க மதிப்பு ஏற்பட்டது. பிள்ளையவர்கள் சரித்திரத்தால் பல அருமையான நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொண்ட தமிழ் அன்பர்கள் பலருடைய பாராட்டு என் தந்தையாருக்குக் கிடைத்தது. சரித்திரம் வெளிவந்த பின் பல பத்திரிகாசிரியர்களின் வேண்டுகோளின்படி சிறு கட்டுரைகள் எந்தையாரவர்களால் தமிழ் மாதப் பத்திரிகைகளிலும் விசேட மலர்களிலும் எழுதப்பெற்று வந்தன. அவற்றின் வசனநடைக்கு மதிப்பு வரவர அதிகமாயிற்று.

1935-ஆம் வருடம் மார்ச்சு மாதம் 6-ஆம் நாள் எந்தையாரவர்களின் சதாபிசேகம் (எண்பதாம் ஆண்டு பூர்த்தி விழா) நடைபெற்றது. அன்று இராவ்பகதூர் கே.வி.கிருட்டிணசாமி( ஐயரவர்கள்) முதலிய அன்பர்கள் சேர்ந்து செனட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் ஒரு வாழ்த்துக் கூட்டம் நடத்தினார்கள். பிள்ளையவர்கள் சரித்திரத்தைப் படித்துப் பார்த்து இன்புற்ற ஒரு தமிழன்பர் “பிள்ளையவர்கள் சரித்திரமே இவ்வளவு இரசமாயிருக்கிறதே. ஐயரவர்கள் சரித்திரம் வெளிவந்தால் தமிழ் நாட்டினர்க்கு மிக்க பயன்படுமே” என்று தம் கருத்தை மட்டும் தெரிவித்துப் பெயரை வெளியிடாமல் ஐயரவர்கள் சுய சரித்திரப் பதிப்புக்காக உரூ.501 அந்தச் சபையில் அளிக்கச் செய்தார்.

சதாபிசேகம் ஆனபிறகு சுயசரிதம் எழுதவேண்டுமென்ற கருத்து எந்தையாரவர்களுக்கு ஏற்பட்டும் சர்வகலாசாலையார் விரும்பியபடி குறுந்தொகையைப் பதிப்பிக்க வேண்டுமென்ற வேகம் உண்டாகவே இடைவிடாது அவ்வேலையைக் கவனித்து வந்தார்.

இரசிகமணி சிரீரீமான் டி.கே.சிதம்பரநாத(முதலியா)ரவர்கள், ஸ்ரீ இரா.கிருட்டிணமூர்த்தி (ஐயர்) அவர்கள் போன்ற அன்பர்கள் சந்தித்த காலங்களிலெல்லாம் சரித்திரம் எழுதவேண்டும் என்று தந்தையாருக்கு நினைவூட்டி வந்தனர். சரித்திரம் முழுவதையும் எழுதி முடித்து ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று நினைத்தாலும் அவ்வாறு செய்வதில் அதிக நாட்களாகலாம், அதைக் காட்டிலும் ஆரம்பத்திலிருந்து வரலாறுகளைப் பத்திரிகை மூலமாக வெளியிட்டு வந்தால் படிப்பவர்களுக்கு அனுகூலமாக இருக்குமென்ற கருத்து ஏற்பட்டது. அப்பொழுது “ஆனந்தவிகடன்” பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த திரு இரா, கிருட்டிணமூர்த்தி (ஐயரவர்கள்), திரு எசு.எசு. வாசன் அவர்களுடன் இரண்டொரு முறை வந்து எந்தையாரவர்களுடன் உரையாடி, சுயசரிதத்தை ஆனந்தவிகடனில் வாரந்தோறும் ஒவ்வோர் அத்தியாயமாக வெளியிடலாமென்று அதற்குரிய ஏற்பாட்டைச் செய்தனர். அவர்கள் விரும்பிய வண்ணமே, 1940-ஆம் ஆண்டு முதல் சரித்திரம் எழுதி வெளியிடுவதென்று நிச்சயமாயிற்று. அச்சமயம் புத்தகப் பதிப்பு வேலைகளில் உடனிருந்து கவனித்து வந்த திரு. கி.வா.சகந்நாதையர் பி.ஓ.எல். என் தந்தையாரவர்கள் அவ்வப்போது சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சிகளைக் கூற அவற்றை எழுதி வரலானார். முதல் அத்தியாயம் 6-1-1940இல் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. ஆறு அத்தியாயங்கள் முதலில் ஆனந்தவிகடன் காரியாலயத்தில் சேர்ப்பிக்கப் பெற்றன. சில அன்பர்கள் விரும்பியபடி சரித்திர சம்பந்தமான படங்கள் அங்கங்கே அமைக்கப் பெற்றன. பிறகு அவ்வப்பொழுது அவ்வப்பகுதிக்குரிய விசயங்கள் பத்திரிகாலயத்திற்கு எழுதி அனுப்பப் பெற்று வந்தன. அக்காலங்களில் உடனிருந்து திரு. சகந்நாதையர் எந்தையாரவர்கள் விருப்பப் படி சொல்லியவற்றை எழுதித் தவறாது பத்திரிகையில் வெளி வருவதற்கு மிக்க உதவி புரிந்தார். சரித்திரம் வெளிவரவேண்டுமென்ற ஊக்கத்துடனிருந்து அதற்குரிய வேலைகளையும் எந்தையாருடன் இருந்து கவனித்து உதவியது மிகவும் பாராட்டற்குரியதாகும். அவ்வுதவியை என்றும் மறவேன்.

சரித்திரத்தில் படங்கள் வெளிவருவதன் பொருட்டு வெளியூர் அன்பர்கள் புகைப்படங்கள் எடுத்து எங்கள் விருப்பத்தின்படி அனுப்பி உதவினார்கள். இப்பொழுது துறைசை ஆதீன கர்த்தர்களாக விளங்கும் சிரீலசிரீ அம்பலவாண தேசிகர் அவர்கள் திருவாவடுதுறை, மாயூரம், திருவிடைமருதூர், திருப்பெருந்துறை இவை சம்பந்தமான படங்களை அனுப்பச் செய்து உதவினார்கள்.

1940-ஆம் வருடம் முதல் வாரந்தோறும் ஓர் அத்தியாயமாக 1942 மே மாதம் வரையில் ‘சுயசரிதம்’ ஆனந்த விகடனில் வெளிவந்தது; என் தந்தையாரவர்கள் சரித்திரப் பகுதியை அவ்வப்பொழுதே எழுதிவரச் செய்யும் பழக்கத்தை மேற்கொண்டனராதலால் ஆனந்தவிகடனில் அவர்கள் காலஞ்சென்றபின்பு தொடர்ச்சியாகச் சரிதப்பகுதி வெளிவரவில்லை, சரித்திர சம்பந்தமான பலவகைக் குறிப்புக்களை அவர்கள் தொகுத்து வைத்துள்ளார்கள். 122
அத்தியாயங்கள் வரை சுயசரிதமாக வந்த பகுதியே இப்பதிப்பில் வெளியிடப் பெற்றுள்ளது. தமிழன்பர்கள் அடிக்கடி சரித்திரப் பதிப்பைப்பற்றி நேரிலும் கடிதம் மூலமாகவும் வினவி வந்தனர். காகிதக் கட்டுப்பாடு முதலிய காரணங்களால் புத்தக வடிவத்தில் பதிப்பு வெளிவரத் தாமதமாயிற்று.

இப்பொழுது சிரீ காசிமடத்து அதிபர்களாக விளங்கும் அருங்கலை வினோதர்களும் பேரறச் செயல்கள் புரிந்து வருபவர்களுமாகிய சிரீலசிரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் ஐயரவர்கள் சரித்திரம் வெளிவர வேண்டுமென்று அடிக்கடி என்னை நினைவுபடுத்தி வந்ததோடு நன்கொடையும் அளித்து உதவினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

சுயசரிதத்தை ஆனந்தவிகடனில் பதிப்பிக்கச் செய்தும், புத்தக வடிவில் வெளிவருவதற்கு உடன்பட்டுப் படங்கள் சம்பந்தமான ‘ப்ளாக்குகள்‘ முதலியவற்றை முன்னரே அனுப்பச் செய்தும் உதவிய “ஆனந்தவிகடன்” உரிமையாளராகிய சிரீமான் எசு.எசு.வாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியறிவைச் செலுத்துகின்றேன்.

வழக்கம்போல் ஊக்கத்துடன் இப்புத்தகத்தைத் திறம்பட அச்சிட்டுக் கொடுத்த கபீர் அச்சுக்கூடத்தார் பாராட்டுக்குரியர்.

இச்சுயசரிதப் பகுதியில் ஆசிரியர்கள், தமிழ்ப் புலவர்கள், ஊர்ப் பெயர்கள், முதலியன மிகுதியாக வந்துள்ளன. முக்கியமான நிகழ்ச்சிகளையும் சிறப்புப் பெயர்களையும் வரிசைப்படுத்தி அமைத்து அவை அகராதியாகச் சேர்க்கப் பெற்றுள்ளன.

ஐயரவர்கள் எழுதிய சுயசரிதம் மணிமேகலைப் பதிப்பு வெளி வந்த வரலாற்றோடு (1898) முடிவடைகிறது.

பின் நிகழ்ச்சிகள் சம்பந்தமான குறிப்புகள் ஒழுங்குபடுத்தி வைக்கப் பெற்றுள்ளன. திருவருள் துணை கொண்டும் அன்பர்கள் உதவிகொண்டும் “என் சரித்திரத்”தின் தொடர்ச்சியாக ஐயரவர்கள் வரலாற்றைப் பூர்த்தி செய்து வெளியிடலாமென்று கருதியுள்ளேன்.

“தியாகராச விலாசம்”, திருவேட்டீசுவரன்பேட்டை
4-4-1950
இங்ஙனம்
சா.கலியாண சுந்தர( ஐய)ர்

Tuesday, July 26, 2022

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 2/4

 அகரமுதல




சான்றோர் தமிழ்

1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.  2/4

‘நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனால் அப்படியே நின்றுவிடவில்லை; எல்லாருடைய வற்புறுத்தலுக்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது.’
(என் சரித்திரம் ; பக்கம் : 221-222)
என்று சாமிநாத( ஐய)ரே இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மாயூரம் சென்றதும் தம் அனுபவத்தை( ஐய)ரவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்.

தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு, எவ்வளவுக்-கெவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்கிறேனோ அவ்வளவுக்-கவ்வளவு எனக்கு உற்சாகம், நல்லது செய்தோமென்ற திருப்தி, இலாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும் சரி, இந்த நிலைமை மாறவே இல்லை.’
(என் சரித்திரம்; பக்கம்; 187)
என்று குறிப்பிட்டுள்ளார்,

மாயூரம் சென்ற சாமிநாத( ஐய)ர் ஆசிரியரால் சாமிநாத( ஐய)ர் என்று அழைக்கப் பெற்றார். வீட்டில் வேங்கடராமனாகவும், சாமாவாகவும் அழைக்கப் பெற்றவர் ஆசிரியர் அழைத்த காரணத்தால் அன்றிலிருந்து சாமிநாத( ஐய)ர் என்றே அழைக்கப் பெற்று வந்தார். பெற்றோர் வழங்கிய பெயர் நிலைக்காமல் ஆசிரியர் இட்ட பெயரே பின்னர் நிலைத்து விட்டது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் (பிள்ளை) அவர்கள் இயற்றி வந்த நூல்களை எழுதுவதும், அவரிடம் நூல்களைப் பாடங்கேற்பதும், திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக அந்நாளில் விளங்கிவந்த சுப்பிரமணிய தேசிகரோடும், அந்த மடத்துக்கு அடிக்கடி வந்து செல்லும் தமிழ்ப் புலவர்களுடனும், வடமொழி வாணரோடும். சங்கீத வித்துவானோடும் நெருங்கிப் பழகி உரையாடுவதும் சாமிநாத( ஐய)ர் அவர்களுடைய அந்நாளைய செயல்களாக விளங்கின.

ஆசிரியர் மறைவும் மாணவர் பரிவும்

1876ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்களில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்( பிள்ளை) அவர்கள் காலமானார்கள். ‘19ஆம் நூற்றாண்டின் கம்பன்’ என்று பாராட்டப் பெற்ற (பிள்ளை) அவர்கள், நாள் ஒன்றுக்கு 300 பாடல்கள் பாடினார் என்பர். இவர் 19 தலபுராணங்களும், 10 பிள்ளைத் தமிழ் நூல்களும், 4 மாலைகளும், 16 அந்தாதிகளும் பாடினார். இவருடைய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பலராலும் பாராட்டப் பெறுவது. இத்தகு கல்விப் புலமை நிறைந்த ஆசிரியர் காலமானதால் சாமிநாத( ஐய)ர் பெரிதும் வருந்தினார். ஆசிரியருடைய கல்விப் பரப்பு, பாடம் சொல்லும் திறம், பண்பு நலம், செய்யுள் இயற்றும் புலமை முதலியவற்றையெல்லாம் மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். எனவே, ஆசிரியர் மறைவுக்குச் பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனத் தலைவராகிய சுப்பிரமணிய தேசிகரிடம் இவர் பாடம் கேட்டுக் கொண்டே ஆதீனத்துக்கு வந்த மாணாக்கர்களுக்குத் தாம் பாடம் சொல்லிக் கொடுத்தும் வந்தார்.

திரு. தியாகராச(ச் செட்டியா)ர் தொடர்பு

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் புகழ் பெற்ற தமிழ் ஆசிரியர் ஒருவர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த திரு. தியாகராச(ச் செட்டியா)ர் ஆவார். தியாகராச(ச் செட்டியா)ர் அவர்கள் தம் மனத்தில் பட்டதை வெளிப்படையாகப் பேசுபவர். பரந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர். ஆங்கிலப் பேராசிரியர்கள் போலவே இவர் அந்தக் காலத்தில் பெருமதிப்புப் பெற்றிருந்தார். அவர் ஒரு நாள் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்து சுப்பிரமணிய தேசிகர் அவர்களின் அனுமதி பெற்றுச் சாமிநாத( ஐய)ர் அவர்களைக் கும்பகோணத்திற்கு அழைத்துக்கொண்டு போய்த் தாம் பார்த்துவந்த பதவியை அவருக்கு வாங்கிக் கொடுத்தார். 1880ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் முதல் சாமிநாத (ஐய)ர் குடந்தை அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கற்ற தமிழ்க் கல்வியும், அறிவாற்றலும், பாடம் சொல்லும் திறமையும், சாமிநாத( ஐய)ர் அவர்களைக் குறுகிய காலத்திலேயே மாணவரிடத்திலும் பேராசிரியப் பெருமக்களிடத்திலும் ஒருங்கே நற்புகழ் பெறத் துணை செய்தன.

பதிப்புப் பணி

இக்காலத்தில் கும்பகோணத்தில் மாவட்ட முனிசீபாக இருந்த சேலம் இராமசாமி (முதலியார்) தொடர்பு சாமிநாத ஐயருக்கு வாய்த்தது. முதலியார் அவர்கள் நிறைந்த தமிழ்ப் பற்றாளர்; புலமை நெஞ்சம் வாய்ந்தவர். எனவே சீவகசிந்தாமணியைச் சாமிநாத(ஐய)ரிடம் பாடம் கேட்கத் தொடங்கினார். பின் அந்நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்று வேண்டினார். அதுவரை சிந்தாமணி ஒரு சிலருக்கு மட்டுமே ஓலைச்சுவடி வடிவில் காட்சி வழங்கிக் கொண்டிருந்தது. பழம் பெருமை வாய்ந்த-தொன்மை வாய்ந்த-தமிழ் இலக்கியங்கள் பல கடல்கோளாலும், தமிழர் கவனக் குறைவாலும் அழிந்து ஒழிந்தன. இறையனார் களவியல் உரை குறிப்பிடும் பல இயற்றமிழ் நூல்களும், இசைத்தமிழ் நூல்களும், நாடகத் தமிழ் நூல்களும் பெயர் அளவில் தெரிய வருகின்றனவே அன்றி, அவை இன்று நமக்குக் கிடைக்கவில்லை. இளங்கோவடிகளும், சிலப்பதிகாரத்தில்,

‘வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’

என்று தமிழகத்தின் தென்பகுதி வெள்ளத்தால் அழிந்த செய்தியினைப் புலப்படுத்தி-யுள்ளார். சாமிநாத( ஐய)ரும் அவர் வாழ்ந்த காலத்தில் மூடபக்தி நிறைந்த பொதுமக்கள் சிவ ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கில் விட்ட அவல நிலையினைப் பின்வருமாறு சுட்டியுள்ளார்.

ஆடி மாதம் 18ஆம் தேதியில் பழஞ் சுவடிகளை எல்லாம் சேர்த்து ஒரு சப்பரத்தில் வைத்து மேள தாளத்துடன் இழுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ விடுவார்கள்.’
(என் சரித்திரம்; பக்கம்: 85)

என்று குறிப்பிட்டுள்ளார். எனவே ஓலைச்சுவடி விடுவோரிடமிருந்து பெற்றுப் பழம்பெரும் நூல்களை அச்சு வாகனம் ஏற்றிய பெருமைக்கு உரியவராகச் சாமிநாத ஐயர் விளங்குகிறார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Friday, July 22, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம், பதிப்புரை

 அகரமுதல


உ.சா.வின் என் சரித்திரம்

பதிப்புரை


ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை
        எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை
பாடு பட்ட பதத்தெளி வெத்தனை
        பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை
நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு
        நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை
கூட நோக்கினர்க் காற்றின வெத்தனை
        கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!
        – இரா.இராகவையங்கார்
தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது.

இந்நூலைக் கற்றால் ‘பெருக்கத்து வேண்டும் பணிதல்’ என்ற இலக்கணத்துக்கு இதுதான் சரியான இலக்கியம் என்ற உண்மை தெளிவாகும்.
பேதங்களுக்கு அப்பாற்பட்ட போதம்தான் தமிழ்ஞானம் என்பது இந்நூலின் தொகுமொத்தப் பொருள் என்றால் அது மிகையாகாது.
‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்ற தொடரை விளக்குவதற்காக இவர் மண்ணுலகில் பிறந்தார் என்று கொள்ள வேண்டி இருக்கிறது.
அறிஞர் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரமும் மகாத்மா காந்தி அவர்களின் சத்திய சோதனையும் ஒரே தரம் உடையவை. இவற்றின் ஒவ்வோரெழுத்தும் வாய்மை நிரம்பிய வைர எழுத்துகள்.
என் சரித்திரம் கற்றால் தமிழார்வம் வரும். வந்த தமிழார்வம் வளரும்.

பத்துப்பாட்டும், எட்டுத்தொகையுள் ஐந்தும், மூன்று பெரும் காப்பியங்களும், ஐம்பதிற்கும் மேற்பட்ட பிற இலக்கியங்களும், இலக்கண நூல்களும் நின்று நிலவுவதற்குக் காரணம், அறிஞர் உ.வே.சா. அவர்களின் அயரா உழைப்பே என்பதை, இந்த மன்பதை அறியும். அந்த நூல்களைக் கற்கும் முன், ‘என் சரித்திரம்’ என்னும் இந்த நூலைக் கற்க வேண்டும். இதனைக் கற்றால் தமிழ் நூல்களை அச்சுக்குக் கொண்டுவர அவர்பட்ட இன்னல்கள் புரியும். ‘என் சரித்திரம்’ அறிஞர் உ.வே.சா. அவர்களின் 150ஆவது ஆண்டில் ஆறாம் பதிப்பாக வெளிவரத் திருவருட் சக்தி அருள்பாலித்திருக்கிறது.

தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்களின் பதிப்புப் பணி அதே பாணியில் இந்நூல் நிலையம் வாயிலாக, அறிஞர் உ.வே.சா. அவர்களின் திருமகனார் திரு. சா. கல்யாண சுந்தரம் (ஐயர்) அவர்களாலும், அறிஞர் உ.வே.சா.அவர்களின் பெயரனார் திரு.க.சுப்பிரமணிய( ஐய)ர் அவர்களாலும் கொள்ளுப் பெயரனார் திரு.சு.வேங்கடகிருட்டிணன் அவர்களாலும் தொடர்வது மிக்க மகிழ்ச்சிக்குரியதாகும்.

அச்சில் வெளிவராத தமிழ்நூல்கள் இன்னமும் இருக்கின்றன. ஓலையில் இருக்கும் அவற்றை அச்சுத் தமிழ்ச் சோலையில் உலாவரச் செய்ய முயலும் தமிழ்த் தொண்டர்களை மேலும் உருவாக்க இந்நூல் உதவ வேண்டும் என எல்லாம் வல்ல திருவருட் சக்தியை இறைஞ்சுகிறேன்.

நிதி அறியோம் இவ்வுலகத்து ஒருகோடி
        இன்பவகை நிமித்தம் துய்க்கும்
கதி அறியோம் என்றுமனம் வருந்தற்க
        குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
        காலமெலாம் புலவோர் வாயில்
துதி அறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
        இறப்பின்றித் துலங்கு வாயே
        — மகாகவி பாரதி

அறிஞர் உ.வே.சா. நூல்நிலையம்
சென்னை -90
ம.வே.பசுபதி, காப்பாட்சியர்

Thursday, July 21, 2022

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 1/4 - சி.பா.

 

 அகரமுதல





சான்றோர் தமிழ்

1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 1/4


தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப் பெறுவது தஞ்சை மாவட்டம் ஆகும். ‘கலை மலிந்த தஞ்சை’ என்றும் தஞ்சை மாவட்டம் போற்றப் பெறும். ஆடல், பாடல்களும், அழகுக் கலைகளும் நிறைந்த மாவட்டமும் தமிழ் நாட்டில் அதுவேயாகும். ‘பெரிய கோயில்’ என்று சிறப்பாகப் பேசப்பெறும் முதலாம் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் அமைந்திருப்பதும் தஞ்சை மாவட்டத்திலேயேயாகும். வற்றாத வளம் கொழித்துக் காவிரிப் பேராறு பாய்ந்து வளம் சிறக்கும் நாடு தஞ்சை மண்ணேயாகும். இத்தகு பெருமை வாய்ந்த தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் உத்தமதானபுரம் என்னும் சிற்றுாரில் சாமிநாத(ஐய)ர் பிறந்தார். உத்தமதான புரத்தைப் பற்றிச் சாமிநாத ஐயர் கூறும் சொற்கள் வருமாறு:

‘என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்-கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல செளகரியமான அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை; வீதிகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகசுதர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும் அழகு இருந்தது; அமைதி இருந்தது. சனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் இலட்சுமி கரம் விளங்கியது.’ (என் சரித்திரம். பக்கம் : 4)
என்று கூறியுள்ளார்.

இளமையும் கல்வியும்

உத்தமதானபுரம் இரண்டே தெருக்களைக் கொண்ட சிற்றூராகும். அவ்வூரில் 19-2-1855ஆம் ஆண்டு சாமிநாத(ஐய)ர் அவர்கள் சங்கீத வித்துவானான வேங்கடசுப்ப (ஐய)ருக்கும் சரசுவதி அம்மையாருக்கும் முதல் மகனாகத் தோன்றினார். இளமையில் அவர் பெற்றோர் வறுமையில் பெரிதும் துன்புற்றிருந்தனர். ஏறத்தாழ ஆண்டுக்கு 50 உரூபாய் தான் அவர்களுக்கு வருமானமாக வந்தது. உடையார் பாளையம் அரண்மனையின் சமீன்தார் ஆதரவு ஓரளவு இக்குடும்ப வாழ்க்கையை நடத்திவரத் துணை செய்தது. சாமிநாதன் என்று குழந்தைக்குப் பெயரிட்டுச் செல்லமாக ‘சாமா’ என்று அழைத்து வந்தனர். வேங்கடராமன் என்ற பெயர் சாமிநாத ஐயருக்கு வழங்கி வந்தது காரணம் திருப்பதி வேங்கடாசலபதி அவர்களுடைய குலதெய்வம். தந்தையார் வேங்கடசுப்ப(ஐய)ர் சங்கீத வித்துவானான காரணத்தினால் ஆங்காங்கு சங்கீதத்தோடு கூடிய கதா காலட்சேபம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதன் காரணமாக ஊர்விட்டு ஊர் சென்று பிழைக்கும் வாழ்வே அவருக்கு அமைந்தது. வருங்காலத்தில் தம்முடைய மகனும் ஒரு சங்கீத வித்துவானாக வரவேண்டுமென்றே எண்ணினார். ஆனால் சாமிநாத(ஐய)ருக்குச் சங்கீதமும் சமசுகிருதமும் அவ்வளவாக வரவில்லை. தமிழே அவர் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து அவர் உள்ளத்தில் நிலையாகக் குடிகொண்டிருந்தது. சாமிநாத(ஐய)ர் முதன் முதலாக அரியலூர் சடகோப( ஐயங்கா)ர் என்பவரிடத்தில் தமிழ் பயின்றார். சாமிநாத ஐயரே,

‘தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும் வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பினேன். சடகோபையங்காரிடம் என்று நான் மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன். எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே.’
(என் சரித்திரம்; பக்கம் : 103)

என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செங்கணம் விருத்தாசல(ரெட்டியா)ர் என்பவரிடத்தில் தமிழ்க் கல்வி கற்றார். சாமிநாதருக்குத் தமிழில் இருந்த பேரார்வத்தை அறிந்து தமிழ்ப் புலவர்கள் உள்ள இடங்களுக்குச் சென்று தங்கி இவர் கல்வி கற்கும் வசதிகளை இவர் தந்தையார் விரும்பிச் செய்தார். இவ்வாறு கல்வி கற்றுவருங்கால், ஆசிரியருக்குச் சன்மானமாகத் தருவதற்குச் சாமிநாத( ஐயரி)டம் பணம் இல்லை என்பதோடு, ஆசிரியரோடு தங்கிப் படிக்கும்போது சாப்பிடுவதற்கு வசதியும் இல்லை. ஆதலால் தாம் எந்த ஆசிரியரிடத்தில் தங்கிக் கற்றாரோ அங்கேயே இலவசமாக உணவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டார். இவர் தமிழில் காட்டிய ஆர்வத்தையும் அறிவையும் பாராட்டி ஆசிரியர்கள் இவருக்குத் தாமாகவே விரும்பிக் கல்வி கற்பித்ததோடு, உணவுக்கு வேண்டிய வசதிக்கும் ஏற்பாடு தந்து செய்தார்கள். காலை 5 மணிக்கே ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கற்கின்ற மரபு இவரிடம் வளர்ந்திருந்தது. திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மட்டும் ஆசிரியருக்கு மாதம் நான்கு அணா சம்பளம் கொடுத்துப் படிக்கத் தொடங்கிய சாமிநாத( ஐய)ர் தம் வாழ்நாளின் இறுதிவரையில் அந்தப் படிப்பையே தொழிலாக நெஞ்சில் நிலையாக நிறுத்தியிருந்தார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு நூலையும் எளிய விலைகொடுத்தும் வாங்க முடியாத நிலையில் சாமிநாத (ஐய)ர் இருந்தார். புலவர்களை அண்டி அவர்களிடமிருந்து ஒரு சிறிய நூலையும் அன்பளிப்பாகப் பெற்றாலும் அதற்காக அருநிதி-புதையல் கிடைத்தவர்போல் பெரிதும் மனம் மகிழ்ந்தார். இவரே பிற்காலத்தில் எண்ணற்ற நூல்களைச் சுவடியிலிருந்து எடுத்து அருமையாகப் பதிப்பித்துத் தமிழ் உலகுக்குத் தந்து உதவியவர் என்பதையும் நாம் நினைவு கூர வேண்டும்

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்( பிள்ளை)யவர்களிடம் பயின்றது

1880ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் மாயூரம் சென்றார். அங்கே அப்போது திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானாக இருந்த தமிழ்நாட்டின் பல திசைகளிலிருந்தும் பாடம் சொல்லிக் கொள்ளவந்த மாணாக்கர் பலருக்கும், சில பல ஆதினங்களைச் சார்ந்த குட்டித் தம்பிரான்களுக்கும் பாடம் சொல்லித் தந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் (பிள்ளை) அவர்கள் இருந்தார்கள். அவர்களை அண்டிச் சாமிநாத( ஐய)ர் பல நூல்களைக் கற்றார். இதற்கு இடையே 1869ஆம் ஆண்டு சாமிநாத( ஐய)ர் அவர்களுக்குத் திருமணம் நிகழ்ந்ததனையும் குறிப்பிடவேண்டும். திருமணம் ஆனாலும் உடனடியாக இல்லற வாழ்க்கையில் சாமிநாத( ஐய)ர் பற்றுக் கொள்ளாமல் தமிழ் படிக்க வேண்டுமென்ற ஒரே ஆவலால் உந்தப்பட்டு மாயூரம் வந்து சேர்ந்தார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ், சி. பாலசுப்பிரமணியன்