Wednesday, August 31, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 5

 அகரமுதல



(உ.வே.சா.வின் என் சரித்திரம், 4 இன் தொடர்ச்சி)

அத்தியாயம்-3
என் பாட்டனார்

என் பாட்டனாராகிய வேங்கடாசலையரென்பவர் வேங்கட நாராயணையருடைய மூத்த குமாரர். அவருக்கு ஐயாக்குட்டி ஐயரென்ற ஒரு தம்பி இருந்தார். வேங்கடாசலையருடைய மனைவி பெயர் செல்லத்தம்மாளென்பது. அந்த அம்மாளே என்னுடைய பாட்டியார்; அவருடைய தகப்பனாராகிய [1]ஓதனவனேசுவரரென்பவர் தமிழ்வித்துவான்; தாயார் கனம் கிருட்டிணைய ரென்னும் சங்கீத வித்துவானுடைய சகோதரி.

இங்ஙனம் சங்கீதமும் தமிழும் கலந்த குடும்பத்திலே பிறந்த என் பாட்டியார் நன்றாகப் பாடுவார். அவருக்குப் பல கீர்த்தனங்கள் பாடம் உண்டு. என் பாட்டனார் கடுமையாக நடத்தினாலும் பொறுமையுடன் அடங்கி நடப்பார். அவர் சாதம் பிசைந்து கையில் போட நான் சிறு பிராயத்தில் சாப்பிட்டிருக்கிறேன்.

என் பாட்டனார் காலத்தில் எங்கள் குடும்பத்தில் கடன் ஏற்பட்டமையால் அவர் தம்முடைய நிலத்தைப் போக்கியம் வைத்துப் பணம் வாங்கிப் பழைய கடனை அடைத்தார். நிலத்தை வைத்துக்கொண்டு பாதுகாத்து அதில் வரும் வருவாயினால் சுகமாக வாழ்ந்து வரும் நிலையிலிருந்த அவருக்கு அந்நிலத்தைப் போக்கியம் வைப்பதால் சீவனத்துக்குக் கசுட்டமுண்டாகுமென்று தெரியும். ஆனாலும் கடனை வைத்துக்கொண்டு உண்ணும் உணவு அவர் உடம்பில் ஒட்டவில்லை. ‘கடனில்லாச் சோறு கால் வயிறு போதும்‘ என்பது பழமொழி. ‘ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கலாம்; கடன் நிருப்பந்தம் மட்டும் கூடாது’ என்று எண்ணித் துணிந்து போக்கியத்துக்கு வைத்து விட்டார்.

அவருக்குத் தமிழிலும் சமசுகிருதத்திலும், கணக்கிலும் நல்ல பழக்கம் இருந்து வந்தது. ஆகையால், ‘சீவனத்துக்கு என்ன செய்வோம்!’ என்று ஏங்காமல் ஒரு பள்ளிக்கூடம் வைத்துப் பல பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அவரிடம் பலர் படித்தார்கள். அந்தப் பிள்ளைகளின் மூலமாகக் கிடைக்கும் வரும்படியைக் கொண்டு அவர் செட்டாகக் குடித்தனம் செய்து வந்தார். அவருக்கு அம்மணியம்மாளென்ற ஒரு பெண்ணும், வேங்கட சுப்பையர், சிரீ நிவாஸையர் என்ற இரண்டு பிள்ளைகளும் முறையே பிறந்தனர். வேங்கட சுப்பையரே என்னுடைய தந்தையார்.

என் பாட்டனாரை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. எனக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தவர் அவரே. எவ்வளவோ தெய்வத் தோத்திரங்களை வாய்ப் பாடமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவை இப்போது மறந்து போய்விட்டன. ஆனால் அவர் கொடுத்த பலமான அடிகளை மாத்திரம் நான் மறக்க வில்லை.

அவர் உபாத்தியாயராக இருந்த நிலை எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை. அவரைத் தாத்தாவாக முதிய நிலையில் பார்த்த ஞாபகந்தான் இருக்கிறது. அவர் சீவந்தராக இருக்கும்போதே என் பாட்டியார் காலஞ் சென்றுவிட்டார். அதன் பிறகு எங்கள் பாட்டனாருக்கு வேண்டிய உபசாரங்களை என்னுடைய தாயார் செய்து வந்தார்.

அவருக்கு என் தந்தையாரிடம் மிகுந்த அன்பு இருந்தது. தம்முடைய மரணகாலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டுமென்று விரும்பி அங்ஙனமே இருக்கச் செய்தார். இடையே சில மாதங்கள் என் தந்தையார் சிறிய தந்தையாருடன் வெளியூருக்குச் சென்றிருந்த போது என் பாட்டனார் மிகவும் கலக்க மடைந்திருந்தார். ஒவ்வொரு நாளும் என் தகப்பனாரது வரவை எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தார். ஒரு நாள் அவர் ஊரிலிருந்து வந்துவிட்டாரென்றும், தெருக்கோடியில் வருகிறாரென்றும் தெரிந்தபோது மனத்தினுள் இருந்த உணர்ச்சி பொங்கி வந்தது; என்னைக் கூப்பிட்டு, “சாமா, உங்கப்பா வந்துட்டாண்டா!” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தார். தாயைப் பிரிந்திருந்த குழந்தை மீட்டும் தாயைக் காணும்பொழுது அழுவதுபோல இருந்தது அது. அன்பு எந்த உருவத்தில் இருந்தால்தான் என்ன? பிரிவினால் பெரிய துக்கத்தை உண்டாக்குவதில் எல்லாம் ஒன்றுதான்.

முதிய பருவத்தில் தம்முடைய மனைவியை இழந்த வருத்தத்தாலும் பிள்ளையை அடிக்கடி பிரிவதனால் உண்டாகும் துயரினாலும் அவருக்கு மனக்கலக்கம் இருந்தே வந்தது. தம்மை ஒருவரும் சரியாகக் கவனிக்கவில்லை என்ற எண்ணமும் இருந்தது. அவருக்கு இன்ன இன்ன வேண்டுமென்பதை என் தாயாருக்கு அறிவிக்கும் தூதனாக நான் இருந்தேன். என் பாட்டனாருக்குத் தூது செல்லும் உத்தியோகத்தினால் எனக்கு, ‘கத்தாரிக்காய்த் தொகையல்’ என்று இளமையில் ஒரு பெயர் கிடைத்தது. அதற்குத் தாத்தாவே காரணம்.

தாத்தா காலையில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டுத் திண்ணையில் வெயில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பார். தகப்பனார் ஊரில் இல்லாத காலம் அது. என் தாயார் என்ன சமையல் செய்வதென்று தாத்தாவைக் கேட்டு வரும்படி என்னை அனுப்புவார். அக்காலத்தில் எனக்கு ஆறு பிராயம் இருக்கும்.

நான் போய், “இன்றைக்கு என்ன சமையல் செய்கிறது?” என்று கேட்பேன்.

அவர், “சமையலா. . . . ..” என்று நீட்டுவார். அவருக்கு எல்லாம் வெறுப்பாகத் தோற்றும். “சமையல் தானே? மண்ணாங்கட்டி, தெருப் புழுதி, சாம்பல் கொழுக்கட்டை” என்பார். அவருக்கு இந்த உலகத்திலே உள்ள வெறுப்பின் அடையாளம் அந்த வார்த்தைகளென்று எனக்கு அப்போது தெரியாது.

குடுகுடுவென்று ஓடிப் போய்த் தாயாரிடம் தாத்தா சொன்னதை அப்படியே ஒப்பிப்பேன். “போடா பைத்தியம்! என்ன சமையல் பண்ணுவதென்று போய்க் கேட்டு வா” என்று மீண்டும் அன்னையார் அனுப்புவார். நான் மறுபடியும் போய்த் தாத்தாவைக் கேட்பேன்.

அவர் ஆர அமர யோசித்துவிட்டு, “கத்தாரிக்காய் இருக்கா?” என்று கேட்பார். அதற்கு ஒரு தடவை ஓடிப் போய்க் கேட்டு வந்து பதில் சொல்வேன்.

“பிஞ்சா இருக்கா?” என்று அடுத்த கேள்வி போடுவார். அதற்கும் ஒருமுறை ஓடிப் போய் வருவேன்.

“அந்தக் கத்தாரிக்காயைச் சுட்டுட்டு. . .” சிறிது நிறுத்துவார்.

“தெரியறதா? அதை நன்னாச் சுட்டுத் தாளிச்சுக் கொட்டி. . .”

அவர் சொல்லும் வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஊங்காரம் செய்துகொண்டே இருப்பேன். இல்லாவிட்டால் அவர் பேச்சு மேலே போகாது.

“தாளிச்சுக் கொட்டறப்போ உளுத்தம் பருப்பைப் போட்டுடுவா; அதைப் போடச் சொல்லாதே. எண்ணெயை அதிகமா விடச் சொல்லாதே”

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Wednesday, August 24, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 4

 

அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 3 இன் தொடர்ச்சி)

அத்தியாயம்-2
என் முன்னோர்கள்

‘பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராசா உதவி செய்ய வேண்டும்’ என்று ஒருவர் ஓர் அரசரை வேண்டிக் கொண்டாராம். அந்த அரசர் அதற்காக நிறையப் பொருளுதவி செய்தார். அந்தத் தொகையைப் பெற்று அவர் தம் வீட்டில் இரண்டே அந்தணர்களை அழைத்து அவர்கள் திருப்தி யடையும்படி போசனம் செய்வித்து மிகுதியான தட்சிணையும் கொடுத்து அனுப்பினார்.

அயல் வீட்டிலுள்ள ஒருவர் அவருடைய விசயங்களை நன்கு அறிந்து கொண்டவராதலின் அவரை, “பதினாயிரம் பேருக்கு அன்னம் இடுவதாக இராசாவை ஏமாற்றி விசேடமான பொருளை வாங்கி வந்தீரே; இரண்டு பேருக்குத்தானே சாப்பாடு போட்டீர்?” என்று கேட்ட போது அவர், “நான் பதினாயிரத்துக்கு மேல் ஆயிரம் சேர்த்துப் பதினோராயிரம் பேர்களுக்குப் போசனம் செய்வித்தேனே!” என்றார்.

கேள்வி கேட்டவர், “இது பெரும் புரட்டாக அல்லவோ இருக்கிறது? இரண்டு பேருக்குப் போட்டுவிட்டுப் பதினோராயிரம் பேருக்குப் போட்டதாகவும் சொல்லுகிறீரே!” என்று மீண்டும் கேட்டார். அந்தச் சாமர்த்தியசாலி, “நான் போசனம் செய்வித்தவர்களில் ஒருவர் எண்ணாயிரத்தார்; மற்றொருவர் மூவாயிரத்தார் இருவரும் சேர்ந்து பதினோராயிரம் பேர் ஆகவில்லையா?” என்று சமத்காரமாகப் பதிலளித்தார். குறை கூறியவருக்கு விசயம் விளங்கியது.

அசுட்ட சகசுரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீட்சிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம்.

இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்ததுண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றியபடி அருத்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அட்டசகசுர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள்.

அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும்பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அட்டசகசுரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. சுமார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.

+++++

குறிப்பு : அயல் பிராமணர் எனக் குறிப்பிட்டதற்குத் தமிழ் ஆர்வலராக இருப்பினும் சாதிப்பற்று மேலோங்கியமையால் அன்பிற்குரிய இருவர் கொதித்தனர். இங்கே வட நாட்டில் இருந்து எண்ணாயிரம் பிராமணைர வரவழைத்ததை அறிஞர் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார். நம் நாட்டில் ஏழைகளே இல்லையா? பிறகு ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்.

+++++

இந்த வகுப்பிலும் மூன்று பிரிவுகள் உண்டு. அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்னும் ஊர்களின் பெயரால் அப்பிரிவுகள் வழங்கப்பெறும். நந்திவாடி யென்பது இன்னவூரென்று இப்போது தெரியவில்லை. அவ்வூரிலிருந்த பிரிவினர் இக்காலத்தில் தேப்பெருமாள் நல்லூர், திருவையாறு முதலிய இடங்களில் இருக்கின்றார். அருவாட்பாடி என்பது மாயூரத்திற்கு வடகிழக்கே மூன்று கல் தூரத்தில் திருக்குறுக்கை யென்னும் தலத்துக்குப் போகும் மார்க்கத்திலும், திருநீடூரென்னும் தலத்துக்கு அருகிலும் உள்ளது; அருவாப்பாடி என்று இப்போது வழங்கி வருகிறது. அருவாளர் என்ற ஒரு கூட்டத்தினருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காணப்படுகின்றது. அருவாப்பாடி அவர்கள் இருந்த இடமாக இருத்தல் கூடுமென்று எண்ணுகிறேன். அங்கிருந்த அட்ட சகசுரத்தினர் கிடைத்த தொழில்களைப் பெற்று சீவித்து வந்தார்கள்.

அத்தியூரென்பது தென்னார்க்காடு சில்லாவில் உள்ளது. அதில் உள்ளவர்கள் சாத்திர ஞானமும் வைதிக ஒழுக்கமும் தெய்வ பக்தியும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வூரில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரைப்பற்றி எங்கள் பிரிவினருக்குள் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.

அத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்பசங்கைக்குப் போனார்.

அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, “நீ எந்த ஊர்?” என்று கேட்டான்.

அவர், “இந்த ஊர்தான்” என்று கூறினார்.

காவற்காரன் அதை நம்பவில்லை; “நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய மாட்டாய்” என்றான்.

அந்தப் பிராமணர், “நான் என்ன காரியம் செய்துவிட்டேன்?” என்றார்.

“இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே! இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே!” என்றான் அவன்.

இரவில் வடக்கு திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான் இந்த வரலாறு அவ்வூராரினது ஆசார சீலத்தை விளக்குகிறதல்லவா?

அத்தியூர்ப் பிரிவினராகிய அட்ட சகசுரத்தார் தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் குடியேறித் தங்களுக்கு ஏற்ற தொழில்களைப் பெற்று வாழ்ந்து வரலாயினர். இவர்களில் ஒருவர் உத்தமதானபுரமென்று பின்பு வழங்கிய பழையகரத்தில் வந்து குடியேறினர். அவர் திருப்பதி சிரீ வேங்கடேசப் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உடையவர்; அப்பெருமாளையே குலதெய்வமாகக் கொண்டவர். அப்பெருமாளைப் பிரார்த்தித்து, தமக்குப் பிறந்த பிள்ளைக்கு வடமலையப்பன் என்னும் பெயரை வைத்தார்; வடமலை யென்பது திருவேங்கடம்; அப்பனென்பது வேங்கடாசலபதியின் திருநாமம். அந்தத்தமிழ்ப் பெயரே வடமலை யாஞ்ஞானென்றும் வழங்கும். ஆஞ்ஞானென்பதும் அப்பனென்பதும் ஒரே பொருளுடையன. வடமலையப்பருக்கும் திருப்பதி வேங்கடாசலபதியினிடம் அளவற்ற பக்தியிருந்தது.

அவர் காலந் தொடங்கி இந்த வமிசத்திற் பிறக்கும் பிள்ளைகளுக்கு வீட்டில் அழைக்கும் பெயர் வேறாக இருந்தாலும், உபநயனம் ஆகும் பொழுது வைக்கப்படும் சரும நாமம் வேங்கடாசலம், வேங்கடநாராயணன், வேங்கடராமன், வேங்கட சுப்பிரமணியன், சீநிவாஸன் முதலாகத் திருப்பதிப் பெருமாளின் பெயர்களுள் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். பிராமணர்களை இருபிறப்பாள ரென்று வழங்குவர்; உபநயன காலத்துக்கு முன் ஒரு பிறப்பென்றும் அதற்குப் பின் ஒரு பிறப்பென்றும் சொல்லுவர். வடமலை யாஞ்ஞானது பரம்பரையினரோ, இரு பிறப்பாளராக இருந்ததோடு பெரும்பாலும் இரு பெயராளராகவும் இருந்து வருகின்றனர்.

இந்தக் குடும்பத்திலுள்ள ஆண், பெண் அனைவரும் புரட்டாசி மாதத்துச் சனிக்கிழமைகளில் காலையில் சுநானம் செய்து ஈரவசுத்திரத்துடன் சில வீடுகளுக்குச் சென்று அரிசிப் பிட்சை எடுப்பார்கள். அவ்வாறு எடுத்த அரிசியை வீட்டிற்குக், கொணர்ந்து ஆராதன மூர்த்தியின் முன்னே வைத்து நமசுகாரஞ் செய்து அதையே சமைத்துச் சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு உண்பதும், இரவில் பலகாரம் செய்வதும் வழக்கம். இந்த வழக்கத்தை நாளடைவில் இவ்வூரில் மற்றக் குடும்பத்தினரும் பின்பற்றத் தொடங்கினர். இன்னும் உத்தமதானபுரத்தில் இது நடைபெற்று வருகின்றது.

வடமலையப்பருடைய குடும்பம் நல்ல பூசுதிதியுடையதாக இருந்தது. அவருக்குப் பின் வந்தவர்களுள் சிரீநிவாசையரென்பவர் ஒருவர். அவருக்கு வேங்கட சுப்பையரென்றும் வேங்கட நாராயணையரென்றும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள் இவ்விருவருள் வேங்கட சுப்பையரென்பவர் தம்முடைய மாமனார் ஊராகிய சுரைக்காவூருக்குச் சென்று தம் மனைவிக்கு ஃசுதிரீதனமாகக் கிடைத்த நிலங்களை வைத்துக் கொண்டு அவ்விடத்திலே நிலையாக வாழ்ந்து வரலாயினர். வேங்கட நாராயணையரென்பவர் உத்தமதானபுரத்திலேயே தம்முடைய நிலங்களைக் கவனித்துக் கொண்டு சௌக்கியமாக வசித்து வந்தார்.

இவ்வூரிலிருந்த எல்லாரும் தேகபலம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய உடலுழைப்பும் சுத்தமான வாழ்க்கையும் அவர்களுக்குப் பின்னும் பலத்தைத் தந்தன. மேற்கூறிய வேங்கட நாராயணையர் மாத்திரம் மெலிந்தவராக இருந்தமையின் அவரது மெலிவு விளக்கமாகத் தெரிந்தது. அவரது மெலிவான தேகமே அவருக்குச் சிறந்த அடையாளமாயிற்று. அதனால் “சோனன்” என்று அவருக்கு ஒரு பட்டம் கிடைத்தது. சோனி யென்றும் சோனனென்றும் மெலிந்தவனை அழைப்பது இந்நாட்டு வழக்கமென்பது பலருக்கும் தெரிந்த செய்திதானே? அவர் இருந்த வீட்டைச் ‘சோனன் ஆம்’ (சோனன் அகம்) என்று பிற்காலத்தாரும் வழங்கி வருவதுண்டு. அந்த வீடுதான் எங்கள் வீடு. அவரே என்னுடைய கொள்பாட்டனார்; என்னுடைய பாட்டனாருக்குத் தந்தையார்.

வீரர்கள் இறந்தால் கல் நாட்டி வழிபடுவது பழைய வழக்கம். அந்தக்கல்லை வீரக்கல் என்று சொல்வார்கள். இப்படியே பதிவிரதைகள் இறந்த இடத்தையோ அவர்கள் ஞாபகத்தையோ குறிக்கும் கல்லை மாசதிக்கல் என்று கூறுவர். இறந்த பிறகு அவர்களை இந்தக் கல்லெல்லாம் ஞாபகப்படுத்துகின்றன. எங்கள் கொள் பாட்டனார் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே அவருடைய ஞாபகத்திற்கு அடையாளமாக ஒரு கல் ஏற்பட்டுவிட்டது. அந்தக் கல் இன்றும் உள்ளது. அது மற்ற அடையாளக் கற்களைப்போல உபயோகப்படாமல் இல்லை. எல்லாருக்கும் உபயோகப்பட்டு வருகிறது.

எங்கள் ஊர் குளத்துப் படித்துறையில் “சோனப் பாட்டா கல்” என்ற ஒரு கல் இருக்கிறது. குளத்தில் நீராடிவிட்டு வழு வழுப்பாயிருந்த அந்தக் கல்லிலேயே வேங்கடநாராயணஐயர் வேட்டி துவைப்பாராம். அதனால் அந்தக் கல்லுக்கு அப்பெயர் நிலைத்து விட்டது. எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ கற்களில் துவைத்திருப்பார்கள். ஆனால் எல்லாக் கல்லுக்கும் பெருமை உண்டாகிறதா? இன்றும் அந்தக் குளத்தங்கரைக் கல்லைக் காணும்பொழுது, ‘சாசனமில்லாத இந்த வெறும் கல் நம் கொள்பாட்டனாரின் பெயரை நினைப்பூட்டுகின்றது; இதில் அவருடைய கைபட்டிருக்கிறது’ என்ற எண்ணத்தினால் என்னுடைய கைகள் தாமே குவியும்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Monday, August 22, 2022

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3

 அகரமுதல

     22 August 2022      No Comment

(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3 தொடர்ச்சி)

1. மொழிபெயர்ப்புப் பணி

சேம்சு ஆலன் என்னும் மேனாட்டுப் பெரியாரின் கருத்துகள் சிதம்பரனாரின் நெஞ்சைப் பிணித்தன.‘அகத்திலிருந்து புறம்’ (Out from the heart) என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கோயமுத்துார்ச் சிறைவாசத்தின் போது இந்நூல் மொழிபெயர்க்கப்பெற்று, அவர் விடுதலை அடைந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1-4-14 அன்று ‘அகமே புறம்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. நூலின் முன்னுரையில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு :

இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வொரு ஆடவரும் பெண்டிரும், சிறுவரும் சிறுமியரும் கற்க வேண்டு மென்பதும். இந்நூல் நமது நாட்டில் நிலவும் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்பதும், இந்நூல் எஞ்ஞான்றும் நின்று நமது நாட்டில் நிலவவேண்டுமென்பதும் எனது விருப்பம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலிற்குச் சுவாமி சகசானந்தர் என்பவர் அணிந்துரை வழங்கியுள்ளார். நூலின் முகப்பில் வ.உ.சி. குறித்துள்ள செய்யுளொன்று நம் சிந்தனையைக் கிளறுவதாயுளது.

“அறத்தைக் காணா அறிவே மரமாம்;
அறத்தைப் பிழைத்த அறிவே மிருகம்;
அறத்தைப் புரியும் அறிவே மனிதன்;
அறத்தைக் காக்கும் அறிவே கடவுள்.”

அடுத்து, மனத்தின் தன்மையும் வன்மையும் பற்றி அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது

“மனம் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமை யாகிய வத்திரத்தை நெய்துகொண்டிருக்கிறது; நினைப்பு நூல்; நல்ல செயல்களும் தீய செயல் களும் பாவும் ஊடும்; ஒழுக்கம் வாழ்வாகிய தறியில் நெய்யப்படும் வத்திரம். மனம் தான் நெய்த வத்திரத்தால் தன்னை உடுத்துக் கொள்கிறது.”

76 பக்கமே கொண்ட இந்நூலில் ஆலன் கருத்தை அரண் செய்யத் திருக்குறட்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளார், எட்டணா விலையில் இந் நூலின் இரண்டாம் பதிப்பு 1916ஆம் ஆண்டு சென்னை புரோகிரசிவு பிரசில் அச்சியற்றப்பட்டு வெளி வந்துள்ளது. இலக்கிய நூல்கள் ஆயிரம் படிகள் அச்சிட்டால் விற்பனையாக நான்கைந்து ஆண்டுகள் பிடிக்கும் என்று பதிப்பாளர்கள் பயப்படும் நிலைமை இந்நாளில் இன்றும் நிலவ, வ.உ.சி. அவர்கள் இரண்டாம் பதிப்பின் பாயிரத்தில்-முன்னுரையில்-குறிப்பிட்டுள்ளன வருமாறு :

“1914-ஆம் வருடத்தில் வெளிவந்த இந்நூலின் முதற் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் அச்சிடப் பெற்றன. இந் நூலைத் தமிழ் மக்கள் பலரும் விரும்பியதால் அவ்வாயிரம் பிரதிகளும் விரைவில் செலவாய் விட்டன. அதனால் இந் நூலை இரண்டாம் முறை அச்சிட்டு முடித்தேன்.”

மேலும் அவர்,

“இப்பதிப்பின் தமிழ் நடையைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி சுதேசபாசா அத்தி யட்சகர் சிரீமான் தி. செல்வக்கேசவராய முதலியார் (எம்.ஏ.) அவர்கள் அழகுபடுத்தித் தந்தார்கள்.”

என்றும் குறிப்பிட்டுள்ளது கொண்டு, திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களிடம் வ.உ.சி. கொண்ட மதிப்பும் நூல்களைத் திருத்தமுறப் பதிப்பிக்க வேண்டும் என்று அவர் கொண்ட ஆர்வமும் புலனாகக் காணலாம்.

அடுத்து இவர் சேம்சு ஆலனின் மற்ற நூல்களைச் ‘சாந்திக்கு மார்க்கம்’, ‘மனம்போல வாழ்வு’, ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற தலைப்புகளில் வெளியிட்டுள்ளார்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் தகவுடன் தர வ.உ.சி. கொண்டிருந்த வற்றாத ஆர்வத்தினை இந்நூல்கள் வழிக் காணலாம்.

2. படைப்பிலக்கியப் பணி

அறத்தின் வழிப்பிறழாத நெஞ்சினர் வ.உ.சி. திருக்குறளில் நெஞ்சம் தோய்ந்தவர்; குறள் வழியே தம் வாழ்வை நடத்தி நின்றவர். அறத்தான் வருவதே இன்பம் என்று நம்பியவர். எனவே. அறத்தின் ஆற்றலை அவனிக்கு உணர்த்த விரும்பி, ‘மெய் யுணர்வு’ என்னும் நூலினைக் கண்ணனூர்ச் சிறைவாசத்தின் போது எழுதினார். அறத்தின்பால் நெஞ்சம் நெகிழும் ஓர் ஆண்மகனை ஓர் ஆசிரியன் உருவாக்கும் வகையில் இந் நூல் அமைந்துள்ளது. நூறு வெண்பாக்கள் கொண்ட இந்நூலில் வ.உ.சி.யின் கவிதை நலமும் கருத்து வளமும் பின்னிப் பிணைந்திருக்கக் காணலாம். வைகறைப் போதில் ஒருவன் செய்யத்தக்க பணிகளாக இந்நூலில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு :

வைகறையிற் கண்விழித்து மாசொழித்து மெய்யறங்கள்
கைவருதற் கீசனருள் கண்ணிமைப்பின் மையல்
அறுத்தற்கா நூனன்காய்ந்து யானை உர மெய்யிற்
செறுத்தற்கா நற்சிலம்பம் செய்.”

வைகறையில் துயிலெழுந்து, காலைக் கடன்களை முடித்து, ஈசனருள் பேணி, நன்னூல்களை ஆராய்ந்து கற்று, உடல் வலிமை பெறச் சிலம்பம் பயிலவேண்டும் என்று குறிப்பிடும் இவ் அரிய நூலிற்கு, அட்டாவதானம் கலியாண சுந்தர யதீந்திரர் என்னும் பெரியார் சிறப்புப் பாயிரமாம் அணிந்துரையினை வழங்கியுள்ளார்.

இவர் இயற்றியுள்ள சுய சரிதை நூல் இவர் நுண்மாண் நுழைபுலத்தினை விளக்கும். மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் தேர்ச்சிபெற்ற வ.உ.சி. தம் முதல் மனைவி வள்ளியம்மை குறித்து எழுதுவன காண்க :

“என்னுடைய நேயர்களும் ஏழைபர தேசிகளும்
என்னுடைய வீடுவந்தால் ஏந்திழைதான்-தன்னுடைய
பெற்றோர்வந் தார்களெனப் பேணி உபசரிப்பாள்
கற்றோரும் உள்ளுவக்கக் கண்டு.”

சிறையிலிருந்துகொண்டு தம் அன்னை, ஆருயிர்த் துணைவி, நண்பர்கள் முதலியோருக்கு இவர் எழுதிய கவிதை மடல்கள் நெஞ்சையுருக்கும் நீர்மையன; செந்தமிழ் நலம் தோய்ந்த சீர்மையன.

‘மெய்யறம்’ என்னும் பெயரிய நூல் மாணவவியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெல்லியல் என்னும் ஐந்தியலும் நூற்றிருபத்தைந்து அதிகாரமுமாக முடிந்த நூலாகும். இந் நூலினைத் திருக்குறளின் வழிநூல் எனலாம். எண்வகை வனப்பில் ‘தோல்’ எனும் வனப்புக் கொண்டு, முதுமொழிக் காஞ்சி போன்று திட்ப நுட்பஞ் செறிந்திலங்குவதாகும்.

இந்நூலினைப் பற்றித் திரு. தி. செல்வக்கேசவராய முதலியார்,

“தமிழ்ப் புலவரேயன்றி இங்கிலீசு படித்த புலவரிற் பலரும் இந்நூலின் திறத்தை மெச்சுவர் என்பது துணிபு. ஒரு முறை கண்ணுறுவோர்க்கு இந்நூலின் அருமை தானே புலப்படுமாதலால், அதனை இங்கு விரிப்பது மிகையாம். இந்நூல் நின்று நிலவுக என்பது என் வேண்டுகோள்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பாடற்றிரட்டு’ என்னும் நூல் இரு பாகங்கள் கொண்டது; சிறை வாசத்திற்கு முன் பாடிய பாக்கள் முதற்பாகமாகவும். கோயமுத்துார் கண்ணனூர்ச் சிறைவாச காலத்தில் பாடிய பல தனிப்பாக்கள் இரண்டாம் பாகமாகவும் சேர்க்கப்பட்டுள்ளன. பாடல்கள் எல்லாம் நவின்றோர்க்கினிய நன்மொழிகளால் விழுமிய பொருள் பயக்குமாறு இனிய ஓசை கொள்ள யாக்கப்பட்டுள்ளன. நீதி போதனைச் செய்யுள்கள் பண்டைக்கால நீதி நூற்களோடொப்பத் திட்ப நுட்பங் கொண்டுள்ளன. தம் மனைவியார் வள்ளியம்மை குறித்து இவர்

குறிப்பிடும் பகுதி வருமாறு :

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Tuesday, August 16, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 3

 அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 2/4 தொடர்ச்சி)

உ.வே.சா.வின் என் சரித்திரம் 3

அத்தியாயம் 1 – எங்கள் ஊர்

கலெக்டர் துரையினுடைய பார்வை அண்ணா சோசியர் மேல் விழுந்தது. அவருடைய அங்க அமைப்பையும் (இ)ரிசபம் போன்ற நடையையும் முகத்தில் இருந்த ஒளியையும் கண்டபோது கலெக்டர் துரைக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று. திடீரென்று அவரை அழைக்கச் செய்து சிரசுதேதார் மூலமாக அவரைச் சில விசயங்கள் கேட்கலானார்.

கலெக்டர் :-உமக்குப் படிக்கத் தெரியுமா?
சோசியர் :-தெரியும்.
கலெக்டர் :-கணக்குப் பார்க்கத் தெரியுமா?
சோசியர் :-அதுவும் தெரியும். நான் சோசியத்தில் நல்ல பழக்கமுடையவன்; அதனால் கணக்கு நன்றாகப் போடுவேன். கலெக்டர் :- கிராமக் கணக்கு வேலை பார்ப்பீரா?
சோசியர் :-கொடுத்தால் நன்றாகப் பார்ப்பேன்.

அவர் கம்பீரமாக விடையளிப்பதைக் கேட்ட துரைக்கு சந்தோசம் உண்டாகி விட்டது. சோசியர் நன்றாக அதிகாரம் செய்யக்கூடியவரென்றும், சனங்கள் அவருக்கு அடங்குமென்றும் அவர் நம்பினார். உக்கடை (உட்கிடை) யென்னும் வட்டத்தின் கருணம் தம் வேலையைச் சரியாகப் பாராமையால் கலெக்டர் அவரைத் தள்ளிவிட்டு வேறொருவரை நியமனம் செய்வதற்காக யோசித்துக் கொண்டிருந்த சமயம் அது. அந்த வேலையில் *அண்ணா சோசியரை அவர் நியமித்து விட்டார். அக்காலத்தில் வேலைக்குப் போட்டி இராது. ஆளைப் பார்த்து, வாட்ட சாட்டமாக இருந்தால் உத்தியோகங்களைக் கொடுத்து விடுவது வழக்கம்.

கலெக்டருடைய கண்ணைக் கவர்ந்த தேகக் கட்டு அண்ணா சோசியர் ஒருவருக்குத்தான் அமைந்திருந்ததென்று எண்ண வேண்டா. ஒவ்வொருவரும் அவரைப் போலவே தேக வன்மை பொருந்தியவராக இருந்தனர். இரண்டு வேளைகளே உண்டாலும் அவர்கள் உண்ணும் உணவின் ஒவ்வோர் அணுவும் உடம்புக்குப் பலத்தைத் தந்தது.

உத்தமதானபுரத்தில் தச்சர், கொல்லர், தட்டார், வலைஞர், நாவிதர், வண்ணார் என்பவர்களுக்கும் மான்யங்களுண்டு. அவர்கள் அவற்றை அனுபவித்துக்கொண்டு தத்தம் வேலைகளை ஒழுங்காகப் பார்த்து வந்தார்கள். நாவிதர்களில் வைத்தியத்திற் சிறந்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் அன்புடன் நோயாளிகளுக்கு மூலிகைகளாலும் வேறு சரக்குகளாலும் செய்த மருந்துகளைக் கொடுத்து நோயைப் போக்குவார்கள். இதற்காக அவர்கள் வாங்கும் ‘பீசு’ நாலணாவே. ஒருவர் (இ)ரண சிகிச்சையிலும் பழக்கமுடையவராக இருந்தார், அவரிடம் வைத்திய நூல்கள் பல இருந்தன. பல வியாதிகளின் சிகிச்சைகள் புத்தகங்களில் இருந்தனவே யொழிய அந்த மருத்துவர் அனுபவத்தில் கண்டு உணரும்படி அவ்வியாதிகள் மனிதர்களைப் பீடிப்பதில்லை.

மூப்பச் சாதியார் முதலிய குடியானவர்களிற் பலர் அந்தணர்களுடைய நிலங்களைக் கவனித்துக் கொண்டு அவர்களுடைய மனைக் கட்டுகளில் குடியிருந்து வந்தனர். அவர்கள் அந்த நிலங்களைக் கண்ணுங் கருத்துமாகப் பாதுகாத்து வந்தார்கள். தம் யசமானர் வீடுகளில் அவசியமான வேலைகளையும் குறைவின்றிச் செய்து வந்தனர். இவற்றிற்காக அவர்களுக்கு அந்தணர்கள் எல்லா வசதிகளையும் கொடுத்து ஒரு கவலையும் ஏற்படாமல் பார்த்து வந்தார்கள். அதனால் அவர்கள் அடைந்த திருப்தி பெரிதாக இருந்தது. அவர்கள் வஞ்சகமின்றிப் பாடு பட்டனர். நிலத்தின் சொந்தக்காரரைவிட அவர்களுக்கே பூமியில் சிரத்தை அதிகமாக இருந்தது. இருசாராரும் மனவொற்றுமையும் அன்பும் உடையவர்களாகி ஒருவருக்கொருவர் இன்றியமையாத நிலைமையில் வாழ்ந்து வந்தனர்.
——-
அவர் பரம்பரையினர் இப்போது உத்தமதானபுரத்தில் கிராம முனிசீபாக இருக்கிறார்.
—–

வேறு சில குடியானவர்கள் தம்முடைய சொந்த நிலத்தைச் சாகுபடி செய்துகொண்டு வாழ்ந்தார்கள். இவர்களால் வணங்கப் பெறும் கிராம தேவதைகளின் கோயில்கள் சில உண்டு. எல்லாக் கோயில்களிலும் ஊராருடைய ஒற்றுமையினால் உற்சவங்கள் நன்றாக நடைபெற்றன.

இவ்வூரைச் சூழ மிகவும் சமீபமாக நான்கு அக்கிரகாரங்கள் உண்டு. தென் கிழக்கு மூலையில் கோட்டைச்சேரி யென்பதும், தென்மேற்கில் மாளாபுரமென்பதும், அதற்கு மேற்கே கோபு ராசபுர மென்பதும், வடமேற்கே அன்னிகுடி யென்பதும் உள்ளன. கோட்டைச் சேரியில் வேத சாத்திரங்களிற் பரிச்சயமுள்ள வடகலை சிரீவைசுணவர்கள் வாழ்ந்து வந்தனர். மாளாபுரத்தில் வித்துவான்களாகிய சிரீவைசுணவர்களும், அட்டசகசுரம் வடம ரென்னும் இருவகை சுமார்த்தர்களும் இருந்தனர். கோபுராச புரத்தில் தஞ்சாவூர் அரச குருவின் உறவினரான மகாராட்டிரப் பிராமணர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களைப் பண்டிதர்களென்று வழங்குவர். அவர்கள் செல்வர்களாதலின் அன்னதானம் செய்து வந்தார்கள், அன்னிகுடியில் தெலுங்குப் பிராமணர்கள் வசித்தனர். அவர்களிற் பலர் சங்கீதத்திலும் பரத சாத்திரத்திலும் மந்திர சாத்திரத்திலும் மிகுந்த திறமையுடையவர்களாக விளங்கினார்கள். சங்கச் செய்யுட்களில் அன்னியென்னும் பெயருடைய ஓர் உபகாரி கூறப் பெறுகிறான். இவ்வூர் அவன் பெயரால் அமைக்கப் பெற்றதென்று கூறுவர்.

உத்தமதானபுரத்துக்குக் கிழக்கே நல்லூரென்ற தேவாரம் பெற்ற சிவதலம் இருக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய அமர்நீதி நாயனார் அவதரித்த தலம் அது அங்கே கோயில் ஒரு கட்டு மலையின் மேல் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து பார்த்தால் அந்தக் கோயில் நன்றாகத் தெரியும். வடமேற்கில் திருப்பாலைத்துறை என்ற தேவாரம் பெற்ற தலம் உள்ளது. அங்கே பேசுவாக்களென வழங்கும் மகாராட்டிரப் பிராமணச் செல்வர்கள் இருந்தார்கள்.


இந்தக் கிராமங்களினிடையே, சோம்பலை அறியாத சனங்களை உடையதாய், நவீன நாகரிகத்தின் வாசனை சிறிதளவும் வீசாமல், நிலமகள் தரும் வளத்தை யாவரும் பங்கிட்டு உண்ணுவதற்கும் அமைதியான வாழ்க்கையை நடத்துவதற்கும் இடமாக விளங்கியது எங்கள் ஊர்.

உத்தமதானபுரம் ஒரு சிறிய கிராமந்தான்; ஆனாலும் அந்த ஊர் எங்கள் ஊர்; என் இளமைக் காலத்தின் இனிய நினைவுகளையும், விரிந்த உலகத்தை அறியாத என் இளங் கண்களுக்குக் கவர்ச்சியை அளித்த தோற்றத்தையும் கொண்ட என்னுடைய ஊர். வேறு எந்த ஊரும் நகரமும் என் உள்ளத்தில் அதன் தானத்தைப் பெறுவதென்பது சாத்தியமா?

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Sunday, August 14, 2022

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3

 அகரமுதல




(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 தொடர்ச்சி)

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் 1/3


இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பங்கு அளவிடற்கரியதாகும். அன்னிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததோடல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியப் பணியினையும் ஆற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழார்வத்தில் தலைப்பட்டு நின்ற அவர் கடலில் கலம் செலுத்த நினைத்ததோடு நிலையான தமிழ்த் தொண்டினையும் ஆற்ற முனைந்தார். அந்நல்லுள்ளத்தின் பயனாகச் சில நற்பேறுகள் தமிழிற்கு வாய்த்தன எனலாம்.

வாழ்வு

பாண்டிநாட்டுச் சீமையில் ‘திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் என்றோர் அமைதியான சிற்றூரில் வாழ்ந்தவர் கவிஞர் சிதம்பரம் (பிள்ளை) ஆவர். அவர் தம் பேரனாரே நம் பாராட்டிற் குரிய சிதம்பரனார் ஆவர். சிதம்பரனாரின் பெற்றோர் உலகநாத பிள்ளையும் பரமாயி அம்மையாரும் ஆவர். இவர் பிறந்தது 5-9-1872இல் ஆகும். இவருக்குத் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியராக வீரப்பெருமாள் அண்ணாவியாரும், பள்ளியாசிரியராக அறம் வளர்த்த நாத பிள்ளையும் அமைந்தனர். தூத்துக்குடி புனிதசவேரியார் உயர் பள்ளியிலும் காலுடுவெல் கல்லூரியிலும் கல்வி கற்று 1891ஆம் ஆண்டு ‘மெட்ரிகுலேசன்’ தேர்வில் வெற்றி பெற்று. ஒட்டப்பிடாரம் தாலுக்கா அலுவலக எழுத்தர் பணியினைச் சில திங்கட் காலம் வரை பார்த்தார்.

1894ஆம் ஆண்டில் இவருக்குத் திருமணம் நடை பெற்றது. மனைவியார் பெயர் வள்ளியம்மை என்பதாகும். அதற்கு அடுத்த ஆண்டில் திருச்சியில் கணபதி (ஐயர்), அரிகர (ஐயர்) ஆகிய இருவரிடமும் சட்டக்கல்வி பயின்று, அத்துறையில் தேர்ச்சி பெற்று, தம் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில் வழக்குரைஞர் தொழில் செய்தார். பின்னர் 1900ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அப்பணியைத் தொடர்ந்து ஆற்றினார்.

சிதம்பரம் (பிள்ளை) அரசியல் துறைக்குத் தம் வாழ்வை நேரடியாகத் தீவிரமாகப் பயன்படுத்திய ஆண்டுகள் ஏறத்தாழ இரண்டே ஆண்டுகள் எனலாம். 1906ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத் தொடங்கினார். வ.உ.சி. 1907ஆம் ஆண்டில் சூரத்து நகரில் கூடிய காங்கிரசில் இவர் கலந்து கொண்டார். (உ)லோகமானிய திலகர் வ.உ.சி யின் அரசியல் குரு ஆவர். இவர் ஒரு தீவிரவாதி. எனவே, 1908ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் ‘தேசாபிமான சங்கம்’ வ.உ.சி.யின் முயற்சியால் நிறுவப்பெற்றது. சுப்பிரமணிய சிவா என்னும் பிறிதொரு தேசபக்தரோடு சேர்ந்து கொண்டு தம் சீரிய வீரப்பேச்சால் நாட்டுப் பற்றினை மக்கள் மனத்தில் கிளர்ந்தெழச் செய்த வ.உ.சி. 1908ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 12ஆம் நாள் திருநெல்வேலி கலெக்டர் விஞ்சு துரையால் சிறைப்படுத்தப்பட்டார். அந்த ஆண்டு சூலைத் திங்கள் 7ஆம் நாள் நீதிபதி பின்ஃகே வ. உ. சி.யின் பேரில் அரசநிந்தனைக் குற்றத்திற்காக இருபது ஆண்டு ஆயுள் தண்டனையும், சுப்பிரமணிய சிவாவிற்கு உடந்தையாக இருந்ததற்காக இருபது ஆண்டு ஆயுள் தண்டனையும் விதித்து, இரண்டு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நாற்பது ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமெனக் கூறினார். சென்னை உயர்நீதி மன்றத்தில் இத்தண்டனை ஆறாண்டுக் காலமாகக் குறைக்கப்பட்டது. பிரிவி கவுன்சிலுக்கு அவர் நண்பர்கள் விண்ணப்பித்தபோது அந்தமான் சிறைவாசத் தண்டனை ஆறு ஆண்டுக் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பின்ஃகே அளித்த தீர்ப்பில், “பிள்ளை பெரிய இராசத் துரோகி; அவரது எலும்புக்கூடு கூட இராச விசுவாசத்திற்கு விரோதமானது” என்ற குறிப்புக் காணப்படுகின்றது. மேலும் அவர், “பிள்ளையின் பேச்சையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர்த்தெழும்; அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்; புரட்சி ஓங்கியெழும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளையர் என்றால் விதிர் விதிர்த்துப் பயந்து நடுங்கிய காலத்தில் வ.உ. சி. நாட்டுப் பற்றில் தலை சிறந்த தலைமகனாய்த் தம் வாழ்வையே பணயம் வைத்துச் செக்கிழுத்துச் சிந்தை நொந்து வாடிய ஆண்டுகள்-கோயமுத்தூர்ச் சிறையிலும் கண்ணனுார்ச் சிறையிலுமாகச் சேர்ந்து துன்பப் பட்ட ஆண்டுகள்-நான்கரை ஆண்டுகள்தாம். எனினும் கூட, அவர் ‘கப்பலோட்டிய தமிழர்’ என்றும், ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும் தமிழ் மக்களால் போற்றப்படுகின்றார். சிறையிலே தொடங்கிய அவர் தாய்மொழிப் பணி அவர் இறக்குந்தருவாயிலும் அதாவது 1936ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து நடை பெற்றது.

வ. உ. சி. யின் அரசியல் தொண்டுகள் நாட்டு மக்களால் நினைவு கூரப்படுகின்ற அளவிற்கு அவர்தம் செந்தமிழ்ப் பணிகள் மக்களால் அறியப்பட முடியாமல் உள்ளது. காரணம். அவர்தம் செந்தமிழ்ப் பணியினையும் மீறி அவர்தம் நாட்டுப் பணி ஒளிமிகுந்ததாய் உளது எனலாம். மேலும் பாரதியார்,

“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் கோவதுவுங் காண்கிலையோ”

என்றும் பாடியுள்ளமை கொண்டு, வ. உ. சி.யைப் பற்றி எண்ணும்பொழுது பாரதியாருக்கு முதலில் நினைவிற்கு வருவது அவர்தம் அரசியல் தொண்டே எனலாம். இதனையே அவர் பிறிதோர் இடத்தில்,

‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னென மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!’

(பாரதியார் கவிதைகள் வ.உ. சிக்கு வாழ்த்து: பக். 82)

என்றும் பாடியுள்ளார்.

ஆயினுங்கூட அவராற்றிய செந்தமிழ்ப் பணிகள் நம் சிந்தை குடிகொள்ளத்தக்க சீரிய பணிகளேயாம் என்பது பின்வரும் சான்றுகளால் விளங்கும். வ.உ.சி. பிறந்த திருநெல்வேலிச் சீமை, இயல்பாகவே நாட்டுப் பற்றிற்கும் மொழிப்பற்றிற்கும் பிறப்பிடமாக என்றென்றும் விளங்கி வருவதோரிடமாகும். எனவே, தமிழ் மொழியினை விருப்போடும் ஆழமாகவும் இளமை தொட்டே பயின்ற செம்மல் சிதம்பரனார், ஆரவார அரசியல் வாழ்க்கையில் அவர் பெற்ற சிறைவாசத்தின்போது, செந்தமிழ்ப் பணியில் தலைப்படலானார்.

அவர்தம் செந்தமிழ்ப் பணிகளை நான்கு வகைப்படுத்திக் காணலாம். 1. மொழிபெயர்ப்புப் பணி; 2, படைப்பிலக்கியப்பணி; 3. உரையாசிரியப் பணி; 4. பதிப்பாசிரியப் பணி.

முதலாவது மொழி பெயர்ப்புப் பணியினைக் காண்போம்:

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Tuesday, August 09, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4

 அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 1/4 தொடர்ச்சி)

என் சரித்திரம்

மகாமகோபாத்தியாய முனைவர்

உ. வே. சாமிநாதர்

அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4

இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதான புரத்துக்கும் ‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகசுதர்கள் இல்லை; ரெயிலின் சத்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது; சனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் இலட்சுமீகரம் விளங்கியது.

இவ்வளவு ரூபா யென்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து உத்தமதானபுர வாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்து விடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் சாந்தி இருந்தது.
இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதே யொழியக் குறையவில்லை.

எங்கள் ஊரைச் சுற்றிப் பல வாய்க்கால்கள் உண்டு. குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் பெரிய வாய்க்கால் ஒன்று முக்கியமானது. பெரியவர்கள், விடியற் காலையில் எழுந்து குடமுருட்டி யாற்றுக்குப்போய் நீராடி வருவார்கள். அங்கே போக முடியாதவர்கள் வாய்க்காலிலாவது குளத்திலாவது ஸ்நானம் செய்வார்கள். அந்நதி ஊருக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. அதற்கு ஒற்றையடிப் பாதையிற் போகவேண்டும்; வயல்களின் வரப்புக்களில் ஏறி இறங்கவேண்டும். சூரியோதய காலத்தில், நீர்க் காவியேறிய வஸ்திரத்தை உடுத்து நெற்றி நிறைய விபூதி தரித்துக்கொண்டு வீடுதோறும் ஜபம் செய்துகொண்டிருக்கும் அந்தணர்களைப் பார்த்தால் நம்மை அறியாமலே அவர்களிடம் ஒரு விதமான பக்தி தோற்றும். காயத்திரி ஜபமும் வேறு ஜபங்களும் முடிந்த பிறகு அவர்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள்.

அது வரையில் தவக்கோலத்தில் இருக்கும் அவர்கள் பிறகு வயற் காட்டை நோக்கிக் கிளம்பி விடுவார்கள். சிலர் மண் வெட்டியையும். சிலர் அதனோடு அரிவாளையும் எடுத்துக்கொண்டு புறப்படுவார்கள். தேக பலத்திற் சிறிதும் குறைவில்லாத அவ்வந்தணர்கள் நடுப் பகல் வரையில் வயற் காடுகளில் வேலை வாங்கித் தாமே வேலை செய்தும் பொழுது போக்குவார்கள். பிறகு வீட்டிற்கு வந்து பூஜைசெய்து உணவை உட்கொண்ட பின் இராமாயண பாரத புராண கதைகளைப் படிப்பார்கள். தமிழ் ஸம்ஸ்கிருதம் என்ற இரண்டு பாஷைகளிலும் உள்ள நூல்களைப் படித்தும் படிக்கச் செய்தும் இன்புறுவார்கள்.

பிற்பகலில் மீண்டும் வயற் காட்டுக்குச் சென்று கவனிக்க வேண்டியவற்றைக் கவனித்து விட்டு ஆறு மணியளவுக்கு வீட்டுக்கு வருவார்கள். அப்பால் லக்ஷ்மீ தீர்த்தத்தில் ஸந்தியாவந்தனம் செய்துகொண்டு ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்வார்கள். பிறகு வீட்டுக்கு வந்து ஆகாரம் செய்து தரிசனம் செய்வார்கள். பிறகு வீட்டுக்கு வந்து ஆகாரம் செய்து விட்டு ஒன்பது மணி வரையில் புராண சிரவணம் செய்வார்கள். வாரத்தில் சில நாட்கள் பஜனை செய்வதும் உண்டு.

காய்கறித் தோட்டங்கள் போட்டு அவற்றை நன்றாகப் பாதுகாத்து விருத்தி செய்வதிலும், பசுக்களையும் எருமைகளையும் வளர்த்துப் பாதுகாப்பதிலும் அவர்களுக்கு ஊக்கம் அதிகம்.
இளமை தொடங்கியே உழைக்கும் பழக்கம் அவர்களிடம் காணப் பட்டது. இவ்வாறு உழைப்பதிலும், நல்ல விஷயங்களைக் கேட்பதிலும் அவர்கள் பொழுது போக்கிக்கொண்டு இருந்ததனால் வேறு விதமான காரியங்களைக் கவனிக்க நேரமோ மனமோ இருப்பதில்லை.

எங்கள் ஊரில் அந்தணர்களுள் மாத்தியமர், வடமர், அஷ்ட ஸகஸ்ரத்தினர் என்னும் வகையினர் இருந்தார்கள். விஷ்ணுவாலய பூஜை செய்துவந்த நம்பியார் குடும்பம் ஒன்றும், சிவாலய பூஜகராகிய ஆதி சைவர் குடும்பம் ஒன்றும் உண்டு. அஷ்ட ஸ்கஸ்ரத்தினரில் ஏழெட்டுக் குடும்பத்தினர் வைதிகர்கள். அயலூரிலுள்ள அக்கிரகாரங்களுக்கு இவர்களே உபாத்தியாயர்கள்; அங்கங்கே சென்று வைதிக காரியங்களைச் செய்வித்துச் சுக ஜீவிகளாக வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் கவலையின்றியிருந்தமையால் தேக பலம் மிக்கவர்களாக விளங்கினார்கள். வியாதி இவர்கள் இருந்த திக்கிலே கூட வராது.

உத்தமதானபுரத்தில் அண்ணா ஜோஸ்யரென்ற ஓர் அந்தணர் இருந்தார். அவர் ஜோஸ்யத்தினாலும் வைதிக வாழ்க்கையினாலும் வேண்டியவற்றைப் பெற்றுக் கவலையின்றி ஜீவனம் செய்து வந்தார். நல்ல கட்டுள்ள தேகம் வாய்ந்த அவர் ஒரு நாள் எங்கோ ஒரு கிராமத்தில் பிராமணார்த்தம் (சிராத்த உணவு) சாப்பிட்டு விட்டு மார்பு நிறையச் சந்தனமும், வாய் நிறையத் தாம்பூலமும், குடுமியிற் பூவும் மணக்க உல்லாசமாக ஊருக்கு வந்து கொண்டிருந்தார். நடுவழியே பாபநாசத்தில் தஞ்சாவூர் கலெக்டர் ‘முகாம்’ செய் திருந்தார். அவ்வழியே வரும்போது கலெக்டரும் சிரஸ்தேதாரும் வெளியே நின்றுகொண்டிருந்தனர். கலெக்டர் வெள்ளைக்காரர்; சிரேஸ்தேதார் இந்தியர்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Sunday, August 07, 2022

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 : ஓய்வுக் காலப் பணி

 அகரமுதல




(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 3/4 தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 4/4

பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் ஏறத்தாழ 25 ஆண்டுகள் தமிழ் நூற்பதிப்பிலேயே தம் காலத்தை ஐயரவர்கள் கழித்து வந்தார். தம் வாழ்நாள் அனுபவங்களை விரிவான உரை நடையில் எழுதத் தொடங்கினார். பல பத்திரிகைகளின் மலருக்குக் கட்டுரைகள் வழங்கினார். கலைமகளில் மாதந் தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தார். அவர் கட்டுரைகளில் தமிழ் மக்களின் பழம் பெருமையையும் புலவர் பெருமக்களின் வரலாறுகளையும் பண்புகளையும் விளக்கி எழுதினார். தம் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தை இரண்டு பாகங்களில் விரிவாக எழுதி 1933, 1934 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொற்பொழிவுப் பணி

1927 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவில், சங்கக்காலம் பற்றிப் பத்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அச்சொற்பொழிவு சங்கக் காலத் தமிழும் பிற்காலத் தமிழும் என்ற பெயரோடு புத்தக வடிவில் வந்திருக்கிறது. இவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வேண்டு கோளுக்கிணங்க இவர் குறுந்தொகைப் பதிப்பினை வெளியிட்டார். பதிப்பு நூல்களில் குறுந்தொகை நூலை முடிமணியாகக் கொள்ளலாம். அந்த அளவிற்கு அந்நூலில் உழைப்பின் உண்மையும், ஆராய்ச்சியின் உயர்வும் ஒருங்கே விளங்கக் காணலாம்.

பட்டமும் பாராட்டும்

அரசாங்கத்தார் இவருடைய தமிழ்த் தொண்டைப் பாராட்டி 1906ஆம் ஆண்டில் ‘மகாமகோபத்தியாய’ என்ற பட்டத்தை வழங்கினர். 1917ஆம் ஆண்டு ‘பாரத தர்ம மண்டலத்தார்’ ‘திராவிட வித்யா பூசணம்’ என்ற பட்டத்தையும், 1925ஆம் ஆண்டில் சரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஆகிய சிரீசங்கராச்சாரியார், தகதினாத்திய கலாநிதி என்ற பட்டத்தையும் வழங்கினர். சென்னைப் பல்கலைக் கழகம் ‘டாக்டர்’(டி.லிட்.) என்ற கெளரவப்பட்டத்தை 1932ஆம் ஆண்டில் வழங்கியது. பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடநூற் குழுவிலும் தேர்வுக் குழுவிலும் இவர் பணியாற்றினார்.

இறுதிக் காலம்

1936 ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இவருக்கு 80 ஆண்டுகள் நிறைவு அடைந்ததும், தமிழுலகம் இவருடைய ‘சதாபிடேக’ விழாவைக் கொண்டாடியது. அவருடைய 80ஆம் வயதில் குறுந்தொகைப் பதிப்பும் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், குமரகுருபரர் திரட்டு ஆகிய நூல்களும் வெளிவந்தன. ஐயரவர்கள் தம் வரலாற்றை இரசிகமணி டி.கே சி., கல்கி கிருட்டிணமூர்த்தி, ஆனந்தவிகடன் வாசன் முதலியோர் வேண்டுகோளின்படி ‘என் சரித்திரம்’ என்ற தலைப்பில் 1940 ஜனவரி முதல் எழுதத் தொடங்கித் தொடர்ந்து 122 அத்தியாயங்கள் எழுதி முடித்தார். 1942ஆம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயரவர்கள் தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று தங்கினார். அங்கே ஏப்பிரல் மாதம் 28ஆம் தேதி (1942) உலக வாழ்வை நீத்தார். இவர் இறக்கும்போது இவருக்கு வயது 86. 1948ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் இவர் முழு உருவச் சிலை ஒன்று நிறுவப்பட்டது.

பண்பு நலன்

ஐயரவர்கள் சிறந்த பண்புள்ளவர். தம்மிடம் பேசுபவர்களுடைய இயல்பு அறிந்து பேசும் இயல்பும், தம்மிடம் தமிழ் படிக்க வரும் மாணாக்கரிடம் நிறைந்த பேரார்வமும் கொண்டவர், மாணவர்களின் தகுதியறிந்து பாடம் சொல்லும் திறமை பெற்றவர். பல அவைகளுக்கு இவர் தலைமை தாங்கியிருக்கிறார்; சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். இவரோடு உரையாடும்போது பழஞ்செய்திகளையும் இலக்கியச் சுவை மலிந்த நூற்பகுதிகளையும் கேட்டு மகிழலாம். இவர் பேச்சில் நகைச்சுவை மிகுதியாக இருக்கும். தெளிவான நடை இவருக்குக் கைவந்த கலை. இவர் கவிதைகள் சிலவற்றையும் இயற்றியுள்ளார். தேசியகவி சுப்பிர மணிய பாரதியார் இவரிடம் பெருமதிப்புக் கொண்டு மூன்று பாடல்களை இவர் குறித்துப் பாடியுள்ளார். அவற்றில் நம் நெஞ்சை மகிழ வைக்கும் பாடற்பகுதி வருமாறு :

‘நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தங் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க;

குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.
’ .இவருக்கு ஒரே ஒரு மகன் பிறந்தார். அவர் பெயர் கலியாணசுந்தர(ஐய)ர். ஐயர் அவர்கள் சேமித்து வைத்திருந்த சுவடிகளையெல்லாம் அவர் அடையாறு கலாச்சேத்திராவிற்கு வழங்கினார். அடையாறு கலாச்சேத்திராவில் டாக்டர் சாமிநாத ஐயர் நூல் நிலையம் ஒன்று இப்பொழுது நடை பெற்று வருகிறது.

1955 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் இவருடைய நூற்றாண்டு விழா தமிழ்நாடு எங்கும் கொண்டாடப் பெற்றது.

இவர்தம் சிறப்பாகக் குறிக்கத்தக்க – நாம் விரும்பிப் போற்றத்தக்க பண்பு – இவருடைய நன்றிமறவா நல்லுள்ளம் ஆகும். தமக்கு வேலை வாங்கித் தந்த தியாகராசச் செட்டியார் நினைவாக இவருடைய வீட்டின் பெயர் இன்றும் ‘தியாகராச விலாசம்’ என்றே வழங்கப் பெறுகின்றது. திருவல்லிக்கேணி திருவேட்டீசுவரன் பேட்டை, பிள்ளையார் கோயில் தெரு, 53ஆம் எண் வீடாக உள்ளது.

முடிவுரை

தமிழ்த் தாத்தா என்று சாமிநாத ஐயரவர்களைத் தமிழ் உலகம் கொண்டாடுகிறது. இவருடைய முயற்சியும், உழைப்பும் தமிழுக்கு அழியாத செல்வங்களைத் தந்தன. செல்லரித்துச் சிதைந்துபோன – கரையான் அரித்துத் திருத்தம் இழந்த நம் பழம்பெரும் இலக்கியங்களையெல்லாம் பேருழைப்பு மேற்கொண்டு திருத்தமாகப் பதிப்பித்து. தமிழர் கைகளில் தவழவைத்த தனிப்பெருமை இவர்களையே சாரும். இவர் தொண்டு என்றும் நிலைத்திருக்கும். இவர்தம் ஊக்கமும், முயற்சியும், தொண்டும் வாழ்வும், நன்றிமறவா நல்லுள்ளமும் என்றும் போற்றற் பாலனவாகும்.

முதல் அத்தியாயம் நிறைவு,

(தொடரும்)

சான்றோர் தமிழ், சி. பாலசுப்பிரமணியன்