Sunday, November 26, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 25 : தினசரி பட்டி

 








(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 24 : கிழ வயது-தொடர்ச்சி)

என் சுயசரிதை

22. தினசரி பட்டி

1928-ஆவது வருடம் நான் நீதிபதி வேலையினின்றும். விலகின பிறகு அநேக நண்பர்கள் “உங்கள் நாட்களை எப்படி கழிக்கிறீர்கள்” என்று கேட்டிருக்கின்றனர். இஃது ஒரு முக்கியமான கேள்வியாம். அநேக உத்யோகத்தர்கள் ஓய்வூதியம் (Pension) வாங்கிக்கொண்ட பிறகு தங்கள் காலத்தை எப்படிக் கழிப்பது என்று திகைத்திருக்கின்றனர். காலத்தைச் சரியாகக் கழிக்கத் தெரியாமல் வீட்டிலேயே மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்தால் அது ஒருவன் உடல் நலத்திற்குக் கெடுதியைத்தான் தரும். ஆகவே 1928-ஆம் வருடம் முதல் இதுவரையில் என் காலத்தை எப்படி கழிக்கிறேன் என்பதைப் பற்றி விவரமாய் எழுதுதல் இதை வாசிக்கும் எனது சில நண்பர்களுக்காவது பிரயோசனப்படும் என்றெண்ணி இதைப்பற்றி கொஞ்சம் விவரமாய் எழுதுகிறேன். காலையில் ஆறுக்கு எழுந்திருப்பேன் (நான் பரிட்சைகளுக்குப் போயிருந்த காலத்தில்கூட முன்பாக எழுந்ததில்லை) விழித்தவுடன் நான் வணங்கும் தெய்வங்களை தொழுதுவிட்டு அரை மணி நேரம் உலாவுவதிலும் வியாயாமம்(உடற்பயிற்சி) எடுத்துக் கொள்வதிலும் காலம் கழியும், நான் எடுத்துக்கொள்ளும் வியாயாமத்தைப்பற்றி அறிய விரும்பும் நண்பர்கள் எனது ‘நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்’ என்னும் நூலில் நான் இதைப்பற்றி எழுதியதை படித்துக்கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன். அவற்றைப் பற்றி இங்கு எழுதுதல் என்றால் இச்சிறு நூல் மிகவும் பெரிதாகி விடும். அதில் எது தவறினாலும் ஒன்று மாத்திரம் தவறமாட்டேன். அதாவது ஐந்து நிமிடம் எடுத்துக் கொள்ளும் பிராணாயாமமாம். இது மிகவும் முக்கியம் என்று நான் வற்புறுத்துகிறேன். இது முடிந்தவுடன் என் காலைக் கடன்களை எல்லாம் தீர்த்துக் கொண்டு என் காலை பிரார்த்தனையை முடிப்பேன். இதெல்லாம் முடிவதற்குச் சுமார் 2 மணி நேரமாகும். பிறகு என் காலை சிற்றுண்டியை அருந்துவேன். ஏதாவது கொஞ்சம் பட்சணமும் ஒரு பழமும் நான் அருந்தும் சுக்கு காப்பியுமாம். சுக்கு காப்பி என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றினால் ஆனதாம், நான் காப்பி சாப்பிடுவதை விட்டு 50 வருடங்களுக்கு மேலாயது. இதன் பேரில் 9 மணி முதல் 11 மணி வரை நான் ஏதாவது எழுத வேண்டிய நாடகத்தையோ கதையையோ கட்டுரையையோ எழுதுவதில் காலங் கழிப்பேன். பிறகு என் நித்ய பூசையை முடித்துக்கொண்டு உணவு கொள்வேன். இது எல்லாம் முடிவதற்கு ஏறக்குறைய ஒரு மணியாகும். ஒரு மணி முதல் இரண்டு மணி வரையில் மெத்தையின் பேரில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முழு ஓய்வு எடுத்துக் கொள்வேன். பிறகு இரண்டு மணி முதல் 4 மணி வரையில் மறுபடியும் ஏதாவது எழுதுவதிலோ அதற்கு ஏதாவது படிக்க வேண்டியதிலோ என் காலத்தைப் போக்குவேன். நான்கு மணிக்கு மேல் ஏதாவது ஒரு சிறு பழமும் (முக்கியமாக பேரிச்சம் பழமும்) பாலும் அருந்துவேன் பிற்பாடு சுகுண விலாச சபைக்கோ, S.I.A.A-வுக்கோ, மது விலக்கு சங்கத்துக்கோ போய் அங்கு ஏழரை மணி வரையில் சீட்டாடுவதிலோ நண்பர்களுடன் பேசுவதிலோ காலங்கழிப்பேன் 8 மணிக்குள் வீடு திரும்பி விடுவேன். இரவு பூசையை முடித்துக் கொண்டு 9 மணிக்குள் சாப்பிட்டு விட்டு உறங்கப் போவேன்.

மேற்சொன்ன தினசரி நடவடிக்கைகள் என் கண் பார்வை சுமாராய் இருந்த போது; பிறகு என் கண் பார்வை முற்றிலும் குறைந்த போது அந்த நடவடிக்கைகளில் சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. (1) காலையில் 9 மணி முதல் 11 மணி வரையில் என் பேரன் ஒருவனை ஆங்கிலத்தில் படிக்கச் சொல்லி கேட்டு வருவேன் அல்லது அவனுக்கு ஆங்கில பாடம் கற்பிப்பேன். (2) 2 மணி முதல் 4 மணி வரையில் நான் காலையில் யோசித்திருந்த நாடகத்தையோ, கதையையோ, கட்டுரையையோ என் பேத்தி ஒருத்திக்குச் சொல்ல, அவளை எழுதிக் கொள்ளச் சொல்வேன். (3) சாயங்காலம் வெளியில் போகாதவனாய் வீட்டிலேயே 6 மணி வரையில் உலாவி வியாயாமம் எடுத்துக் கொள்வேன். (4) 6 மணி முதல் 7 மணி வரை என் சிறிய பேரனை படிக்கச் சொல்லித் தமிழ்ப் பாடம் கற்பிப்பேன். புதன் கிழமைகளில் மாத்திரம் மது விலக்கு சங்கத்திற்கு ஒரு இழுவை வண்டியில்(சிக்சாவில்) மற்றவர்கள் உதவியினால் ஏறிக்கொண்டு போய் வருவேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, November 25, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 63 : நான் கொடுத்த வரம் 2

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 62 : நான் கொடுத்த வரம் 1 -தொடர்ச்சி)

38. நான் கொடுத்த வரம்…. தொடர்ச்சி

“ஒவ்வொன்றிலும் கொஞ்சங் கொஞ்சம் சாப்பிடுங்கள்” என்று காரியத்தர் சொன்னார்.

“என்ன என்ன பிரசாதங்கள் வந்திருக்கின்றன?” என்று கேட்டேன்.

“சருக்கரைப் பொங்கல் இருக்கிறது; புளியோரை இருக்கிறது; சம்பா வெண்பொங்கல், எள்ளோரை, உளுத்தஞ் சாதம் எல்லாம் இருக்கின்றன. பாயசம் இருக்கிறது; பிட்டு இருக்கிறது; தேங்குழல், அதிரசம், வடை, சுகியன் முதலிய உருப்படிகளும் இருக்கின்றன” என்று அவர் அடுக்கிக்கொண்டே போனார். இயல்பாகவே பிரசாதங்களில் எனக்கு விருப்பம் அதிகம்; பசியும் சேர்ந்ததால் அவர் சொல்லச் சொல்ல உடனே சாப்பிட வேண்டுமென்ற வேகம் எனக்கு உண்டாயிற்று.

தெய்வப் பிரசாதம்

மடைப்பள்ளியில் இலைபோட்டு உண்பதும் எச்சில்செய்வதும் அனாசாரம்; ஆகையால் கையில் கொடுத்தால் எச்சில் பண்ணாமலே உண்பேனென்று நான் சொல்லிவிட்டு முதலில் புளியோரையைக் கொடுக்கும்படி கேட்டேன். உடனே காரியத்தர் என் கையில் சிறிது புளியோரையை எடுத்து வைத்தார். மிக்க ஆவலோடு கொஞ்சம் எடுத்து வாயிலே போட்டுக்கொண்டேன். வெறும் புளிப்பு மாத்திரம் சிறிது இருந்தது; உப்பு இல்லை; காரமோ, எண்ணெயின் மணமோ தெரியவில்லை.

“என்ன இது?” என்றுகேட்டேன்.

“இதுவா? இதுதான் புளியோரை” என்றார் அவர்.

நான் வாயில்போட்ட பிரசாதத்தில் கல் இருந்தது; உமியும் இருந்தது. அவற்றை வெளியே துப்புவதற்கு வழியில்லை. மடைப்பள்ளியில் துப்பலாமா? உடனே எழுந்திருந்து வெளியே வந்து துப்புவதும் சுலபமன்று. பல இடங்களைத் தாண்டிக்கொண்டு ஆலயத்துக்கு வெளியே வரவேண்டும்.

புளியோரையென்று அவர் சொன்ன பிரசாதத்தை ஒருவாறு கடித்துமென்று விழுங்கினேன். அடுத்தபடியாக அவர் சருக்கரைப் பொங்கலை அளித்தார். அதில் தீசல் நாற்றமும் சிறிது வெல்லப் பசையும் இருந்தன. வாயில் இடுவதற்கு முன் வெளியே வந்துவிடும்போல் தோற்றியது. பிறகு வெண்பொங்கல் கிடைத்தது. அதில் இருந்த உமியையும் கல்லையும் மென்று விழுங்குவதற்கே அரை மணிநேரம் ஆகிவிட்டது. என் பசி இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டது. கண்ணையும் காதையும் கவர்ந்த அப்பிரசாதங்கள் சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்கு மாத்திரம் ஏற்றவையாக இருந்தன. சனங்கள் வீண் சபலப்பட்டு அவற்றை உண்ணப் புகுவது சரியன்றென்பதை வற்புறுத்தின. தேங்குழலும் அதிரசமும் வடையும் ஒருவிதமாகத் தங்கள் பெயர்களைக் காப்பாற்றிக்கொண்டிருந்தன. மற்றப் பிரசாதங்களை நோக்க அவை சிலாக்கியமாகப்பட்டன. அவற்றில் சிலவற்றை வயிற்றுக்குள் செலுத்திவிட்டுக் கையைச் சுத்தம் செய்துகொண்டு எழுந்தேன்.

ஒரு வரம் கொடுங்கள்’

இருட்டில் தட்டுத்தடுமாறி வந்தபோது என் காலில் சில்லென்று ஏதோ ஒரு வசுது தட்டுப்பட்டது. கயிறோ, பாம்போ அல்லது வேறு பிராணியோ என்று திடுக்கிட்டுப் பயந்து காலை உதறினேன். “இங்கே வெளிச்சம் கொண்டு வாருங்கள்” என்று கத்தினேன். ஒருவர் விளக்கை எடுத்து வந்தார். காலின் கீழ் நோக்கினேன்; ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டேன்.

என்னை அழைத்து வந்த காரியத்தர் என் காலைப் பிடித்துக்கொண்டு நமசுகாரம் பண்ணியபடியே கிடந்தார். ஈரமுள்ள அவர் கை எதிர்பாராதபடி என் காலிற்பட்டதுதான் என் பயத்துக்குக் காரணம்.

காரியத்தருக்கு அறுபது பிராயத்துக்கு மேலிருக்கும். அவர் என்னை வணங்கியதற்குக் காரணம் இன்னதென்று விளங்கவில்லை. “இதுவும் ஒரு சம்பிரதாயமோ?” என்று நான் சந்தேகப்பட்டேன்.

“ஏன் ஐயா இப்படிப் பண்ணுகிறீர்?” என்று படபடப்புடன் கேட்டேன்.

“தங்களை ஒரு வரம் கேட்கிறேன். அதைத் தாங்கள் கொடுத்தாக வேண்டும்; இல்லாவிட்டால் என் தலை போய்விடும்! நான் காலை விடமாட்டேன். கேட்ட வரத்தைக் கொடுப்பதாக வாக்குத் தத்தம் செய்தால் எழுந்திருப்பேன்.

எனக்கு விசயம் புரியவேயில்லை; ஒரே மயக்கமாக இருந்தது; “இவர் இன்றைக்கு நம்மைத் தெய்வமாகவே எண்ணிவிட்டாரா என்ன? இவர் கொடுத்த பிரசாதம் தெய்வர்களுக்கே ஏற்றவை. இப்போது நம்மை இவர் நமசுகரிக்கிறார்; வரம் கேட்கிறார். இவையெல்லாம் நாடகம் மாதிரி இருக்கின்றனவே!” என்று எண்ணி, “எழுந்திரும் ஐயா, எழுந்திரும்! வரமாவது கொடுக்கவாவது!” என்று கூறினேன். அவர் விட்டபாடில்லை.

“நீங்கள் வாக்களித்தாலொழிய விடமாட்டேன்.”
“சரி, நீர் சொல்லுகிறபடியே செய்கிறேன்” என்று நான் சொன்னவுடன் அவர் மெல்ல எழுந்திருந்தார்; கை கட்டி, வாய் புதைத்து அழாக்குறையாகச் சொல்லத் தொடங்கினார்.

“இன்று பிரசாதமொன்றும் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்று தெரிகிறது. கிரமமாக வரவேண்டிய சமையற்காரன் இன்று வரவில்லை. அதனால் ஒன்றும் நேராகச் செய்ய முடியவில்லை. இந்த விசயம் சாமிக்கு (கட்டளைத் தம்பிரானுக்கு)த் தெரிந்தால் என் தலை போய்விடும். சாமிக்கு இவ்விசயத்தைத் தாங்கள் தெரிவிக்கக் கூடாது. தெரிவித்தால் என் குடும்பமே கெட்டுப்போய்விடும். நான் பிள்ளைகுட்டிக்காரன் மகாலிங்கத்தின் பேரைச் சொல்லிப் பிழைத்து வருகிறேன். என் வாயில் மண்ணைப் போட்டுவிடாதீர்கள்” என்று என் வாயில் உமியையும் கல்லையும் பிரசாதமாகப் போட்ட அந்த மனுசுயர் வேண்டிக்கொண்டார்.

“சரி, அப்படியே செய்கிறேன்; நீர் ஒன்றும் கவலைப்பட வேண்டா” என்று நான் அவர் கேட்ட வரத்தைக் கொடுத்தேன்.

‘இந்த மாதிரி எங்கும் இல்லை’

சாக்கிரதையாக அம்மடைப்பள்ளியிலிருந்து விடுபட்டுக் கொட்டாரத்துக்கு வந்து தம்பிரானைப் பார்த்தேன்.

“என்ன? வெகுநேரமாகிவிட்டதே; காரியத்தர் அதிக நாழிகை காக்க வைத்துவிட்டாரோ?” என்று அவர் கேட்டார்.

“இல்லை; பிரசாதங்கள் பலவகையான இருந்தன; ஒவ்வொன்றையும் சுவை பார்ப்பதற்கே நேரமாகிவிட்டது.”

உமியையும் கல்லையும் மெல்லுவதற்கு அந்த இரவு முழுவதும் வேண்டியிருக்குமென்பது எனக்கல்லவா தெரியும்?

“எப்படி இருந்தன?”

“இந்த மாதிரி எங்கும் கண்டதில்லை.”

“எல்லாரும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். இதற்கு முன் ஒழுங்கீனமாக இருந்தது. நாம் வந்த பிறகு திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தோம். எல்லாம் கவனிப்பவர் கவனித்தால் நன்றாகத்தானிருக்கும், நிருவாகமென்றால் இலேசானதா?”

தம்பிரான் தம்மைப் புகழ்ந்துகொண்டபோது, “இன்னும் இவர் தம் பிரதாபத்தை விவரிக்கத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது!” என்ற பயமும் மெல்ல முடியாமல் வாயில் அடக்கி வைத்துக்கொண்டிருந்த கற்களை ஆலயத்துக்கு வெளியே துப்ப வேண்டுமென்ற வேகமும் என்னை உந்தின.

“பிள்ளையவர்கள் நான் வரவில்லையென்று காத்திருப்பார்கள். போய் வருகிறேன். விடை தரவேண்டும்” என்று நான் சொல்ல, “சரி, பிள்ளையவர்களிடம் போய் எல்லாவற்றையும் சொல்லும். அவர்களுக்கும் ஒரு நாள் பிரசாதங்களை அனுப்புவதாக எண்ணியிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

“இந்தத் தண்டனை அவர்களுக்கு வேண்டாமே” என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டு நான் வந்துவிட்டேன். தம்பிரானிடம் நான் பேசியதைக் கவனித்த காரியத்தர் மீண்டும் உயிர் பெற்றவர் போலவே மகிழ்ச்சியுற்றார்.

பிள்ளையவர்களிடம் வந்தவுடன் “சாப்பிட்டீரா? இங்கெல்லாம் உமக்கு ஆகாரம் நிறைவாக இராது” என்று அவர் சொன்னார். நான் நிகழ்ந்ததைச் சொல்லாமல், “போதுமானது கிடைத்தது” என்று சொல்லிவிட்டுப் பாடம் கேட்கத் தொடங்கினேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Sunday, November 19, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 24 : கிழ வயது

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 23 : மது விலக்குப் பரப்புரை – தொடர்ச்சி)

என் சுயசரிதை

21. கிழ வயது

இந்துக்களாகிய நம்முள் ஒருவனுக்கு சட்டிபூர்த்தி ஆனவுடன் அதாவது 60 ஆண்டு முடிந்தவுடன் கிழவன் என எண்ணப்படுகிறான். பைபிள் என்னும் கிறித்தவ சிறந்த மத நூலில் ஒருவனுக்குக் கிழ வயது. 70 ஆண்டில் ஆரம்பிக்கிறது என்று குறிக்கப்பட்டிருக்கிறது.

என் வரைக்கும் என்னுடைய 75-வது ஆண்டில்தான் நான் கிழவனாக என்னை மதிக்கலானேன். அதற்கு முக்கிய காரணம் அதுவரையில் என் கண்பார்வை நன்றாய் இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக குறையலானதுதான். முதலில் இதை நான் அதிகமாக கவனிக்கவில்லை. ஒருநாள் திரைப்படத் தணிக்கையாளராக நான் ஒரு படத்தைப் பரர்க்கவேண்டி வந்தபோது கொஞ்சம் இடர்ப்பட்டேன். உடனே நான் ஒரு கண் வைத்தியரிடம் காட்டியபோது அவர் “இதொன்றுமில்லை, திரைப் படங்களை நீ பல வருடங்களாகத் தணிக்கையாளராக வேலை பார்த்ததினால் உனது கண் அதிர்ச்சி அடைந்து பலவீனப்பட்டிருக்கின்றது” என்று சொல்லி ஒரு மூக்குக் கண்ணாடியை உபயோகிக்கும்படி சொன்னார். சாதாரணமாக 40-ஆம் ஆண்டில் கண்கள் பலவீனப்பட்டு ‘சாலேசுவரம்’ என்னும் கண் நோய் வருவது வழக்கம். சாலேசுவரம் என்னும் பதமே ‘சாலீசு’ என்னும் இந்துத்தானி பதத்திலிருந்து வந்ததாம். சாலீசு என்றால் 40 என்று அர்த்தம். எனக்கு இந்த சாலேசுவரம் வரவே இல்லை. அப்படியிருக்க எனது 75-ஆவது வயதில் இத்துன்பம் ஆரம்பித்தபோது பல வைத்தியர்களுக்குக் காண்பித்து வினவினேன். அவர்களுள் சில ஆங்கில வைத்தியர்கள் (Allopathic) உன் கண் பார்வை மட்டமாகி வருவதற்குக் காரணம் சிறுவயது முதல் சிறு எழுத்துகளில் அச்சிடப்பட்ட புத்தகங்களை எந்நேரமும் படித்துக் கொண்டிருந்தபடியால்தான் என்று கூறினர். மற்றும் சிலர் ‘நீ திரைப்படத் தணிக்கையாளராக இருந்து படங்களை அடிக்கடிப் பார்க்க வேண்டியபடியால் இந் நோய் வந்திருக்கவேண்டும்’ என்றார்கள். ஒரு ஆயுற்வேத வைத்தியருக்கு என் கண்களைக் காட்டி வினவியபோது அவர் என்னை “நீ வாரத்திற்கு இருமுறை அப்யங்கான சுநானம் (எண்ணெய் தேய்த்து குளித்தல்) செய்து வருகிறாயா”? என்று கேட்டார். அவருக்கு உரைத்த உண்மையை இங்கு எழுதுகிறேன் “1926-ஆம் ஆண்டில் என் மனைவி தேக வியோகமானாள். உடனே வந்த தீபாவளிமுதல் நான் அப்யங்க சுநானத்தை விட்டுவிட்டேன்” என்று கூற, அவர் “அதனால் தான் மூளை சூட்டினால் உன் கண் கெட்டு போயிருக்கிறது என்று கூறினார்” அதன் பிறகு கண் வைத்தியர்களிடம் பன்முறை காட்டிய போது “இது கேடராக்ட் (Cataract) என்னும் வியாதி இது முற்றினால் ஒழிய ஆபரேஷன் (Operation) செய்யக்கூடாது” என்று கூறிக்கொண்டு வந்தனர். கடைசியாக கண் மருத்துவமனையில் மிகப் பிரபல வைத்தியரிடம் காட்டி கேட்டபோது அவர் கூறிய பதிலை அப்படியே எழுதுகிறேன். “ திரு. சம்பந்தம், உன் கண் பார்வை முற்றிலும் போய் நீ அந்தனாக போகமாட்டாய். கவலைப் படவேண்டா” என்று சொன்னாரேயொழிய அறுவை மருத்துவம் செய்யக்கூடும் என்று சொல்லவேயில்லை. உனக்கோ வயதாகி விட்டது இனி அறுவை மருத்துவம் செய்வதில் பிரயோசனமில்லை என்று சொல்வதற்குப் பதிலாக மேற்கண்டபடி சொன்னார் என்று தான் அர்த்தம் செய்துகொண்டேன். இதைக் கேட்டவுடன் நான் தமிழுக்கும் தமிழ் நாடகங்களுக்கும் எப்படி பணி செய்வது என்று மிகவும் வருத்தப்பட்டேன் என்றே கூறவேண்டும்.

இச்சமயம் ஏதோ என் மனத்தில் விரக்தி தோன்றினவனாய் சந்நியாசம் மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அதற்காக என் உயிர் நண்பரும் குருவுமான. வி. வி. சிரீனிவாச ஐயங்காருடன் கலந்து பேச அவர் “அப்படியே செய்யலாம், உண்மையில் சந்நியாசம் என்பது பெண்ணாசை, பொன் ஆசை, மண் ஆசை மூன்றையும் விட்டு வாழ்வதாகும் மேல் வேசங்களில் ஒன்றுமில்லை” என்று சொல்லி முதற்படியாக ‘குடசர சந்நியாசம்’ என்பதை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். அதற்குரிய நிபந்தனைகளையும் எனக்குப் போதித்தார். அவர் கட்டளைப்படி என் சொத்துகளை எல்லாம் என் குமாரனான வரதராசனிடம் ஒப்புவித்துவிட்டு வீட்டின் மேல்மாடி அறையில் வசிக்க ஆரம்பித்தேன். இது நடந்தது 1950-ஆம் வருடம் பிப்பிரவரி முதல் தேதியாகும். மேற்சொன்ன மூன்று பற்றுகளையும் நான் வழித்தபோதிலும் தமிழ் மொழியிலுள்ள அதிலும் தமிழ் நாடகத்திலுள்ள பற்றை மாத்திரம் விட என்னால் முடியவில்லை. இதைப்பற்றி யோசித்து இது உலகப் பற்றைச் சார்ந்ததல்ல. தமிழ் மொழிக்குத் தமிழனாய்ப் பிறந்த நான் செய்யவேண்டிய கடமையாகும் என்று என் மனதைத் தேற்றிக்கொண்டேன். திருநாவுக்கரசு சுவாமிகள் “என் கடன் பணி செய்து கிடப்ப தாகும்” என்று கூறியிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே தமிழில் நான் எழுதுவதை நிறுத்தலாகாது என்று தீர்மானித்தேன். ஆயினும் கண் பார்வையில்லாத நான் இதை எப்படிச் செய்வது? என்று முன் சொன்னபடி பெருங் கலக்கமுற்றேன். தினம் நான் இரவில் தூங்கப் போகுமுன் நான் வணங்கும் தெய்வங்களைத் துதித்துவிட்டு தூங்குவது என்வழக்கம். அப்படி செய்யும் போது “இதற்கு நீங்கள் தான் ஒருவழிகாட்ட வேண்டும்” என்று கேட்டுவந்தேன். சிலதாள் கழித்து ஒரு நாள் காலை நான் விழித்தவுடன் என் புத்தியில் ஃகோமர் (Homer) என்றும் கிரேக்க ஆசிரியர் பிறவிக் குருடர் எப்படி பெருங் காவியங்களை எழுதினார் ? மில்டன் (Milton) என்னும் பெயர் பெற்ற ஆங்கில நூலாசிரியர் தன் கண் பார்வை முற்றிலும் இழந்தபின் ‘Paradise lost’ என்னும் கிரந்தத்தை எப்படி எழுதினார்? அந்தகக் கவி வீரராகவ முதலியார் இராமாயணக் கீர்த்தனையை எப்படி எழுதினார்? அவர்கள் செய்தபடி நாம் என் செய்யலாகாது? என்னும் எண்ணம் உதிக்க, உடனே எனக்கு வழிகாட்டிய தெய்வங்களைத் துதித்துவிட்டு அவர்கள் செய்தவாறே நாமும் செய்வோம் என்று தீர்மானித்தேன். அன்றைத் தினம் போசனத்திற்கு மேல் என் பேத்திகளுள் ஒருத்தியை அழைத்து நான் எழுதவேண்டுமென்று உத்தேசித்திருந்த ஒரு சிறு கட்டுரையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லி அவளை எழுதிவரச் சொன்னேன். இப்படி செய்வது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் துன்பமாய்த்தான் இருந்தது. ஆயினும் பத்துப் பதினைந்து நாட்கள் கழித்தவுடன் சகசமாய்போய்ச் சுலபமாகிவிட்டது. அதுமுதல் இதுவரைக்கும் நான் எழுதி அச்சிட்டு வந்த நாடகங்கள், கதைகள் முதலியனவெல்லாம். இவ்வாறு தான் வெளியிடப்பட்டன. அச்சிட வேண்டிய புத்தகங்களின் திருத்தப்படிகள் (Proof) வந்தால் அவளைப் படிக்கச் சொல்லித் திருத்திக்கொண்டு வந்தேன். ஆயினும் இப்படிச் செய்வதில் பல எழுத்துப் பிழைகள் திருத்தப்படாமல் புத்தகங்களில் இருக்கின்றன என்பதற்கு ஐயமில்லை. என் கண் பார்வை மிகவும் குறைந்துபோய் என் பேரன் பேத்திகளுக்குச் சொல்லி அச்சிட்ட புத்தகங்கள்:- இல்லறமும் துறவறமும் (1952) சபாபதி முதலியாரும் பேசும் படமும் (1954) நான் குற்றவாளி (1954) நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும் (1955) தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை 2 பாகங்கள் (1957) பலவகைப் பூங்கொத்து {1958).
(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, November 18, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 62 : நான் கொடுத்த வரம் 1

 








(உ.வே.சா.வின் என் சரித்திரம் 61 : எனக்குக் கிடைத்த பரிசு -தொடர்ச்சி)

38. நான் கொடுத்த வரம்

திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்ட நாங்கள் திருவிடைமருதூருக்கு மாலை ஆறு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே ஆறுமுகத்தா பிள்ளையின் மைத்துனராகிய சுப்பையா பண்டாரமென்பவருடைய வீட்டில் தங்கினோம். இரவில் அங்கே தங்கிவிட்டு மறுநாட் காலையில் பட்டீச்சுரத்துக்குப் புறப்படலாமென்று என் ஆசிரியர் எண்ணினார்.

சிவக்கொழுந்து தேசிகர் பெருமை

பிள்ளையவர்கள் தளர்ந்த தேகமுடையவர். ஆதலின் சாகை சேர்ந்தவுடன் படுத்தபடியே சில நூற் செய்யுட்களை எனக்குச் சொல்லி எழுதிக்கொள்ளச் செய்து பொருளும் விளக்கினார். திருவிடைமருதூர் சிறந்த தலமென்பதையும், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகரென்னும் வித்துவான் அதற்கு ஒரு புராணம் இயற்றியுள்ளாரென்பதையும் கூறினார். சிவக்கொழுந்து தேசிகரைப் பற்றிய பேச்சு வரவே அவர் இயற்றிய செய்யுட்களைப் பற்றியும் நூல்களைப் பற்றியும் மிகவும் பாராட்டிக் கூறினார்.

சுப்பையா பண்டாரத்தின் வீட்டில் ஆறுமுகத்தா பிள்ளைக்கும் என் ஆசிரியருக்கும் விருந்து நடந்தது. ஆசிரியர், சுப்பையா பண்டாரத்தைப் பார்த்து, “சாமிநாதையருக்கு ஆகாரம் செய்விக்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்று சொன்னார். அவர், “மகாலிங்க சுவாமி ஆலயத்தில் நல்ல பிரசாதங்கள் கிடைக்கு” மென்று கூறி என்னை அங்கே அழைத்துச் சென்றார்.

திருவிடைமருதூர் ஆலயம் திருவாவடுதுறை ஆதீன விசாரணைக்கு உட்பட்டது. அவ்வாலய நிருவாகத்தைக் கவனிப்பதற்கு ஒரு தம்பிரான் உண்டு. திருவிடைமருதூரில் திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்த கட்டளை மடமும் இருக்கிறது. அவ்வூர் திருவாவடுதுறைக்கு ஆறு கல் தூரத்தில் இருப்பதால் சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் ஆதீனகர்த்தர் திருவிடைமருதூர்க் கட்டளை மடத்தில் வந்து தங்கி இருப்பது வழக்கம்.

கட்டளைத் தம்பிரான்

திருவிடைமருதூரில் கட்டளை விசாரணையில் முன்பு சுப்பிரமணியத் தம்பிரா னென்பவர் இருந்தார்; அவர் ஆலய நிருவாகத்தை மிகவும் ஒழுங்காக நடத்தி வந்ததோடு பல திருத்தங்களைச் செய்து நல்ல பெயர் பெற்றார். திருவாவடுதுறை யாதீனத்தின் விசாரணைக்கு உட்பட்டுப் பல ஆலயங்கள் இருப்பதால் ஓர் ஆலயத்தில் இருந்து நிருவாகம் செய்த தம்பிரானை வேறோர் ஆலயத்துக்கு மாற்றுவதும் சிலரை மடத்தின் அதிகாரிகளாக்கி அவர்கள் தானத்திற் புதிய தம்பிரான்களை நியமிப்பதும் ஆதீனத்து வழக்கம். திருவிடைமருதூரில் கட்டளைத் தம்பிரானாக இருந்த முற்கூறிய சுப்பிரமணியத் தம்பிரானை சிரீ சுப்பிரமணிய தேசிகர் ஆதீனத்தைச் சேர்ந்த ஆளுடையார் கோயிலின் நிருவாக அதிகாரியாக மாற்றினார். அவர் அங்கே சென்றபின் இடையே சில காலம் ஒரு தம்பிரான் இருந்து திருவிடைமருதூர் ஆலய விசாரணையைக் கவனித்து வந்தார். திருவாவடுதுறை மடத்தில் பூசை, போசனம் செய்துகொண்டும் படித்துக்கொண்டும் இருந்துவரும் சில தம்பிரான்களுக்கு மடத்தில் ஏதேனும் உத்தியோகம் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாகும். அதனை அறிந்து ஆதீனத் தலைவர் இடையிடையே சமயம் நேரும்போது சில மாதங்கள் அவர்களைக் கட்டளை முதலிய வேலைகளில் நியமிப்பது வழக்கம். நாங்கள் போனபோது திருவிடைமருதூரில் இருந்த தம்பிரான் அத்தகையவர்களில் ஒருவர்.

சுப்பையா பண்டாரம் என்னை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார். கோயிலில் கொட்டாரத்தின் முகப்புத் திண்ணையில் கட்டளைத் தம்பிரான் ஒரு திண்டின் மேல் சாய்ந்தபடி வீற்றிருந்தார். கொட்டாரமென்து நெல் முதலிய தானியங்கள் சேர்த்து வைக்குமிடம். அவருக்கு ஒரு புறத்தில் உத்தியோகத்தர்கள் நின்றிருந்தனர். கணக்கெழுதும் ஏடுகளுடன் சில காரியத்தர்கள் பணிவோடு நின்றனர்.

தம்பிரானுடைய விபூதி உருத்திராட்ச தாரணமும் காவி உடையும் தோற்றப் பொலியும் அவர்பால் ஒரு மதிப்பை உண்டாக்கின. அவர் சடை மிகவும் பெரிதாக இருந்தது. கட்டளை, காறுபாறு முதலிய உத்தியோகங்களைப் பார்க்க விரும்பிச் சில தம்பிரான்கள் மிக்க நிருவாகத் திறமையுடையவர்கள்போலக் காட்டிக்கொள்வது வழக்கம். அந்த வருக்கத்தைச் சேர்ந்த அத்தம்பிரான் அடிக்கடி தமது மார்பைப் பார்த்துக்கொண்டும் நிமிர்ந்த முகத்திலும் உரத்த குரலிலும் அதிகார முடுக்கைக் காட்டிக்கொண்டும் இருந்தனர்.

சுப்பையா பண்டாரம் என்னை அழைத்துச் சென்று தம்பிரான் முன்னேவிட்டு அஞ்சலி செய்தார். தம்பிரான், “எங்கே வந்தீர்? இவர் யார்?” என்று கேட்டபோது, “பிள்ளையவர்கள் வந்திருக்கிறார்கள். என் சாகையில் இருக்கிறார்கள். அவர்களிடம் இவர் படித்து வருகிறார். இவருக்கு இங்கே மடைப்பள்ளியில் ஏதேனும் பிரசாதம் கொடுக்கும்படி சாமியிடம் சொல்ல வேண்டுமென்று என்னை அனுப்பினார்கள்” என்று விடை அளித்தார்.

தம்பிரான் எங்களை நிமிர்ந்து பார்த்தார். “பிள்ளையவர்களா வந்திருக்கிறார்கள்? அவர்கள் கட்டளை மடத்துக்கு வரக் கூடாதா?” என்று கேட்டார்.

“அவர்கள் தளர்ச்சியாக இருக்கிறார்கள். என் சாகையில் இருந்தால் படுத்துக்கொண்டே இருக்கலாம். யாரேனும் கால் பிடிப்பார்கள். மடத்துக்கு வந்தால் சாமிக்கு முன் படுத்துக்கொள்வதும் கால், கை பிடிக்கச் சொல்வதும் உசிதமாக இருக்குமா? அதனால்தான் என் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்” என்று சுப்பையா பண்டாரம் விடையளித்தார்.

“சரிதான். மடத்திலே பழகினவர்களுக்குந்தான் மரியாதை தெரியும். அவர்கள் நம்மிடம் எவ்வளவு விசுவாசம் வைத்திருக்கிறார்களென்பது நமக்குத் தெரியாதா?” என்று தம்பிரான் சொன்னார்.

பிறகு அங்கே நின்ற மடைப்பள்ளிக் காரியத்தரைப் பார்த்தார்; ‘சாமி” என்று வாயைப் பொத்திக்கொண்டே அந்தப் பிராமணர் முன்னே வந்தார்.

“என்ன?” என்று தம்பிரான் கேட்டார்.

“இவர் வந்திருக்கிறார்; இவருக்கு உபசாரத்துடன் பிரசாதம் கொடுக்க வேண்டும்” என்ற அருத்தம் அந்தக் கேள்வியின் தொனியிலேயே அடங்கியிருந்தது.

“சாமி” என்று காரியத்தர் மறுபடியும் சொன்னார். “சரியாகக் கவனித்துக் கொள்ளுகிறேன்” என்ற அருத்தத்தை அவர் குரல் உள்ளடக்கியிருந்தது.

“சாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்; தெரியுமா?” என்று தம்பிரான் விளக்கமாக உத்தரவிட்டார்.

காரியத்தர் அதனை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக மீட்டும், “சாமி” என்று சொல்லிவிட்டு என்னை அழைத்துச் சென்றார்.

அருத்தசாம பூசை நடப்பதற்குச் சிறிது முன்பு நான் போனேன். ஆதலால், ஆலயத்தினுள்ளே சென்று சுவாமிக்கு முன் நமசுகாரம் செய்தேன். காரியத்தர் அவசரப்படுத்தினார். தரிசனத்தை நான் சுருக்கமாகச் செய்துகொண்டு மடைப்பள்ளிக்குள் அவருடன் புகுந்தேன்.

பசியும் ஆவலும்

இரவு பத்துமணி ஆகிவிட்டமையாலும் திருவாவடுதுறையிலிருந்து வந்த சிரமத்தாலும் எனக்குப் பசி அதிகமாகத்தான் இருந்தது. கோவில் பிரசாதங்கள் மிகவும் சுவையாகவும் பரிசுத்தமாகவும் இருக்குமென்ற எண்ணத்தால் என் நாக்கில் சலம் ஊறியது. காரியத்தர் மிக்க விநயத்தோடு என்னை அழைத்துச் செல்லும்போதே, நம்முடைய பசிக்கும் ருசிக்கும் ஏற்ற உணவு கிடைக்கும் என்ற ஆவலோடு சென்றேன்.

மடைப்பள்ளியில் வழிதெரியாதபடி இருட்டாக இருந்தது. தட்டுத்தடுமாறி உள்ளே போனவுடன், காரியத்தர் என்னை ஓரிடத்தில் உட்காரச் சொல்லி அருகில் ஒரு கைவிளக்கைக் கொணர்ந்து வைத்தார். அவர் உத்தரவுப்படி ஒருவர் ஒரு பெரிய தட்டில் பலவகையான பிரசாதங்களை எடுத்து வந்து என் முன்னே வைத்தார்.

அந்தத் தட்டைப் பார்த்து மலைத்துப் போனேன். “இவ்வளவு எதற்கு?” என்று கேட்டேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Sunday, November 12, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 23 : மது விலக்குப் பரப்புரை

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 22 :நாடகக் கலை … சிறுதொண்டுகள் (2) தொடர்ச்சி)

என் சுயசரிதை

17. மது விலக்குப் பிரசாரம் செய்தது

எனது நாடக மேடை நினைவுகள் என்னும் புத்தகத்தில் 1895-ஆம் வருடம் நான் பெங்களுருக்குப் போயிருந்தபோது ஒருமுறை அரை அவுன்சு பிராந்தி சாப்பிட்டு அதனால் பெருந்துன்பம் அநுபவித்த விசயத்தை எழுதியிருக்கிறேன். பட்ட ணம் திரும்பி வந்தவுடன் மதுவிலக்குச் சங்கம் ஒன்றைச் சேர வேண்டுமென்று தீர்மானித்தேன். ஆயினும் நானாகக் காசு சம்பாதித்தாலொழிய எந்தச் சங்கத்தையும் சேரக்கூடாதெனத் தீர்மானித்தவனாய் 1898-ஆம் வருடம் நான் வக்கீலாகி பணம் சம்பாதித்த பிறகுதான் சென்னையில் தாபிக்கப்பட்ட H.G.T.L. என்னும் மது விலக்கு சங்கத்தில் ஓர் அங்கத்தினனாகச் சேர்ந்தேன். இச்சங்கத்தின் இரண்டு முக்கிய கோட்பாடுகள் ஒன்று ஆயுள் பரியந்தம் எந்தவிதமான மதுவையும் தீண்டலாகாதென்பது. இரண்டு அங்கத்தினர் எல்லாம் சகோதரர் மனப்பான்மையோடு வாழவேண்டும் என்பவையாம். அதுமுதல் இந்த 64 வருடங்களாக அச்சங்கத்திற்கு முக்கியமாக புதன்கிழமைகளில்போய் உழைத்து வருகிறேன். இச்சங்கத்தின் சார்பாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள ஏதாவது ஓர் ஊருக்குப்போய் மதுபானம் செய்வதினால் உண்டான தீமையைப்பற்றி பிரசாரம் செய்து வருகிறோம். சில வருடங்களுக்கு முன் ஆங்கில அரசாங்கத்தார் சென்னை இராசதானி முழுவதும் மதுவிலக்குப் பிரசாரம் செய்யவேண்டுமென்று ஒரு குழுவை ஏற்படுத்தியபோது என்னை அக்குழுத் தலைவனாக ஏற்படுத்தினார்கள். இதன் மூலமாக பழைய சென்னை இராசதானியில் பல சில்லாக்களுக்குப்போய் நான் மதுவிலக்கு பிரசாரத்தின் வேலை சரியாக நடக்கிறதா என்று பார்த்து வந்தேன்.

18. S. I. A. A.

சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன் என்னும் அச்சபையானது சென்னையில் கிரிக்கெட்டு (Cricket), டென்னிசு (Tennis) கால் பந்து (Foot ball) முதலிய விளையாட்டுகளை அபிவிருத்தி செய்வதற்காகவும் வருடந்தோறும் திசம்பர் மாதம் பீபில்ஸ் பார்க்கு (People’s Park) வேடிக்கை விநோதங்களை நடத்தவும் இரேக்குளா முதலிய பந்தயங்களை நடத்தவும் 1903-ஆம் வருடம் சென்னை வாசிகள் சிலரால் எற்படுத்தப்பட்டது. அதில் நான் ஒருவனாய் இருந்தேன். அதுமுதல் பல வருடங்கள் குழு அங்கத்தினனாகவும் சில வருடங்கள் உபதலைவனாகவும் இருந்து அதன் காரியங்களைப் பார்த்துவந்தேன். தேகப் பயிற்சிக்கும் வியாயாமத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட இச்சபையின் தொடர்பை விடலாகாதென்றும், இப்போது என் முதிர் வயதிலும் அங்கத்தினனாக இருக்கிறேன்.
  1. கல்வித் துறைக்காக உழைத்தது
    சென்னை பல்கலை கழகத்தில் (University) நான் தமிழ் மொழியின் சார்பாக ஒரு செனெட் அங்கத்தினனாக பிரிட்டிசு இராசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டுச் சில வருடங்கள் உழைத்து வந்தேன். அன்றியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஓர் அங்கத்தினனாக காலஞ்சென்ற இராசா சர். அண்ணாமலை செட்டியாரால் நியமிக்கப்பட்டுச் சில வருடங்கள் அதன் வேலையில் கலந்து கொண்டேன். அண்ணாமலை நகரில் பன்முறை நாடகங்களைப்பற்றி சொற்பொழிவு செய்தேன்.
மேலும் ‘சென்னை இசுகூல் புக் லிட்ரெச்சர் சொசைட்டி’ என்னும் சங்கத்தில் ஒரு குழு அங்கத்தினாகப் பல் வருடங்களாகத் தமிழ் அபிவிருத்திக்காக உழைத்து வருகிறேன். இச் சபையானது நான் பிறப்பதற்கு முன்பாக என் தகப்பனார் முதலிய பல சென்னை வாசிகளால் ஏற்படுத்தப்பட்டதாம்.
  1. சென்னபுரி அன்னதான சமாசத்தில் பங்கெடுத்துக் கொண்டது
இந்த தரரும சமாசத்தில் பல வருடங்களாகக் குழு அங்கத்தினனாக உழைத்துவந்தேன். இந்த சமாசத்துக்கு உரூபாய் 1000 கொடுத்து என் தகப்பனார் தாயார் திதிகளில் ஏழைகளுக்கு உணவு கொடுக்கும்படியாக ஏற்பாடு செய்தேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, November 11, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 61 : எனக்குக் கிடைத்த பரிசு

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 60 : எல்லாம் புதுமை – தொடர்ச்சி)

என் சரித்திரம்


37. எனக்குக் கிடைத்த பரிசு

பல வித்துவான்கள் நிறைந்த கூட்டத்தில் இருந்து பழகாத எனக்குத் திருவாவடுதுறைச் சத்திரத்தில் வித்துவான்கள் கூடிப் பேசி வந்த வார்த்தைகளும் இடையிடையே பல நூல்களிலிருந்து சுலோகங்களைச் சொல்லிச் செய்த வியாக்கியானமும் ஆனந்தத்தை விளைவித்தன. சங்கீத வித்துவான்கள் என்னைப் பாராட்டியபொழுது, “சங்கீத அப்பியாசத்தை நாம் விட்டது பிழை” என்று கூட எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் நெடுநேரம் நிற்கவில்லை.

இவ்வாறு பேசிக்கொண்டும் வித்துவான்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டுமிருந்தபோது மடத்திலிருந்து ஒருவர் வந்து என்னை மடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒடுக்கத்தின் மேல் மெத்தையில் ஓரிடத்தில் சுப்பிரமணிய தேசிகர் வீற்றிருந்தார். அவர் அருகே பிள்ளையவர்களும் சில தம்பிரான்களும் அமர்ந்திருந்தனர். நான் அங்கே சென்றவுடன் சுப்பிரமணிய தேசிகர், “போசனம் செய்தீரா?” என்று அன்புடன் வினவி உட்காரச் சொன்னார். நான் பிள்ளையவர்களுக்குப் பின்னே உட்கார்ந்தேன். அப்போது அங்கிருந்த தம்பிரான்கள் தங்கள் கைகளில் புத்தகங்களை வைத்திருந்தனர். அதைக் கவனித்த நான், “பிள்ளையவர்கள் பாடஞ் சொல்ல ஆரம்பித்து விட்டார்களோ?” என்று எண்ணி, “நாம் முன்பே வந்து கவனிக்கவில்லையே” என்று வருந்தினேன்.

சந்தேகம் தெளிதல்

அங்கிருந்த தம்பிரான்கள் எழுத்திலக்கணம் முதலியவற்றைச் சுப்பிரமணிய தேசிகரவர்களிடம் பாடங் கேட்டு முடித்தவர்கள். அந்நூல்களில் இடையிடையேயுள்ள உதாரணச் செய்யுட்களுள் சிலவற்றின் பொருள் தம்பிரான்களுக்கு விளங்கவில்லை. தேசிகர் பாடஞ் சொல்லும்பொழுது அத்தகைய இடங்கள் வந்தால், “பிள்ளையவர்கள் வரும்பொழுது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்; ஞாபகப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லுவது வழக்கமாம். அச்சமயத்தில் தேசிகருடைய கட்டளையின்படியே தம்பிரான்கள், பிள்ளையவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு வந்தனர். பிள்ளையவர்கள் தட்டின்றி ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாக விடையளித்தனர். தம்பிரான்கள் மிகவும் ஆவலாகச் சந்தேகங்களைக் கேட்டனர். பிள்ளையவர்கள் பொருள்களை விளக்கும்பொழுது தம்பிரான்களைக் காட்டிலும் அதிக ஆவலாகச் சுப்பிரமணிய தேசிகர் கவனித்து வந்தார். சில சமயங்களில் தேசிகரே சந்தேகங்களுள்ள இடங்களைத் தம்பிரான்களுக்கு ஞாபக மூட்டினர்.

அந்த நிகழ்ச்சியை நான் கவனித்தபொழுது எனக்குப் பல புதிய செய்திகள் தெரிய வந்தன. பிள்ளையவர்கள் விளக்கிக் கூறும் செய்திகள் மட்டுமல்ல; ஆதீனத்துச் சம்பிரதாயங்களையும் அறிந்துகொண்டேன். தம்பிரான்கள் கேட்ட சந்தேகங்கள் சுப்பிரமணிய தேசிகருக்கும் விளங்காதனவே. ஆயினும் ஞானாசிரியராகிய அவர் நேரே பிள்ளையவர்களிடம் ஒரு மாணாக்கரைப் போலச் சந்தேகம் கேட்கவில்லை. தம்பிரான்களைக் கேட்கச் சொல்லித் தாம் அறிந்துகொண்டார்; அவர்களையும் அறிந்துகொள்ளச் செய்தார். அச்சந்தேகங்களைத் தெளிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் தேசிகருக்குத் தீவிரமாக இருந்ததையும் நான் அறிந்தேன். இல்லையென்றால் பிள்ளையவர்களிடம் தம்பிரான்களை அனுப்பிச் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கலாமல்லவா? பிள்ளையவர்கள் அவற்றை விளக்கும்போது தாமே நேரிலிருந்து கேட்க வேண்டுமென்பது அவரது ஆசை. அவர் ஞானாசிரியராகவும் பிள்ளையவர்கள் அவருடைய சீடராகவும் இருந்தனரென்பதில் ஐயமில்லை. ஆயினும் அச்சமயத்தில் தம் ஞானாசிரிய நிலையையும் ஆதீனத் தலைமையையும் பிற சிறப்புகளையும் மறந்து தேசிகர் என் ஆசிரியர் கூறியவற்றைக் கவனித்து வந்தார். அன்று காலையில் என் ஆசிரியர் தேசிகரைப் பணிந்த காட்சி தவத்தின் தலைமையை நினைவுறுத்தியது; பிற்பகலில் அப்புலவர் கோமான் தேசிகருக்கு முன் சந்தேகங்களை விளக்கிய காட்சி புலமையின் தலைமையைப் புலப்படுத்தியது.

தம்பிரான்கள் ஒவ்வொரு சந்தேகமாகக் கேட்டு வந்தார்கள். சில சந்தேகங்கள் மிகவும் கடினமானவை. அப்பகுதிகளைப் பிள்ளையவர்கள் தெளிவிக்கும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் கூர்ந்து கவனிப்பார். அவருக்கு விடயம் விளங்கினவுடன், “நன்றாயிருக்கிறது; மிகவும் பொருத்தமாயிருக்கிறது” என்று பாராட்டுவார். அவருடைய சந்தோசம் உச்ச நிலையை அடையும்பொழுது, “நல்லதையா!” என்ற வார்த்தைகள் வெளிவரும். பிள்ளையவர்கள் சாதாரணமாகச் சிறிதும் சிரமமின்றி அச்சிக்கல்களை விடுவித்துக்கொண்டே சென்றார்; பணிவோடு மெல்ல விளக்கி வந்தார்; லவலேசமாவது கர்வத்தின் சாயை அவரிடம் தோன்றவில்லை.

அட்ட நாகபந்தம்

தம்பிரான்கள் சில புத்தகங்களிலுள்ள சந்தேகங்களைக் கேட்ட பிறகு தண்டியலங்காரத்திலுள்ள ஐயங்களை வினவத் தொடங்கினார்கள். அதில் வரும் அட்ட நாகபந்தச் செய்யுளை நாகங்களைப் போட்டு அடக்கிக்காட்டும்வண்ணம் கேட்டார்கள். அட்ட நாகபந்தமென்பது சித்திர கவிகளுள் ஒன்று. எட்டு நாகங்கள் இணைந்திருப்பதாக அமைந்த சித்திரமொன்றில் செய்யுட்கள் அடங்கியிருக்கும். பிள்ளையவர்கள் காகிதமும் எழுதுகோலும் வருவித்துப் போடத் தொடங்கினர்.

என் அவசரம்

அவர் தொடங்கு முன் நான் ஒரு காகிதத்தில் அந்தச் சித்திரத்தை எழுதி அதற்குள் செய்யுட்களையும் அடக்கிக் காட்டினேன். நான் அவ்வாறு துணிந்து செய்தது தவறென்று இப்போது தெரிகிறது. ஆனாலும் தம்முடைய ஆற்றலைச் சமயங்களில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ஆசையிருப்பது மனிதர்களுக்கு இயல்புதானே! அந்த ஆசையால் தூண்டப்பெற்று நான் அட்ட நாக பந்தத்தை அமைத்தேன்.

அதை நான் போட்டு முடித்ததைப் பார்த்த ஆசிரியர், “நன்றாக இருக்கிறதே! இதை நீர் எங்கே கற்றுக்கொண்டீர்?” என்று கேட்டார். “செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் தெரிந்துகொண்டேன். இன்னும் இரதபந்தம் முதலிய சித்திரகவிகளையும் போடுவேன்” என்றேன்.

எல்லாம் கிடைக்கும்

நான் போட்ட அட்ட நாகபந்தத்தைத் தம்பிரான்கள் பார்த்தனர்; சுப்பிரமணிய தேசிகரும் பார்த்தார். “இவர் சுறுசுறுப்பாக இருக்கிறாரே. பல சங்கதிகளைத் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறாரே” என்று சுப்பிரமணிய தேசிகர் சந்தோசத்தோடு சொன்னார். என்னைப் பார்த்து, “பிள்ளையவர்களிடமிருந்து நன்றாகப் படித்துக்கொள்ளும். இளம்பிராயமாக இருக்கிறது. இவர்களிடம் எவ்வளவோ தெரிந்துகொள்ளலாம். இவர்கள் இங்கே வரும்பொழுது உடன் வாரும். உமக்கு வேண்டிய சௌகரியங்கள் கிடைக்கும். கல்யாணங்கூடச் செய்துவைப்போம்” என்று புன்னகையோடு சொன்னார். நான் சிறிது சிரித்தேன்.

“என்ன சிரிக்கிறீர்! கல்யாணம் என்றால் சந்தோசமாகத்தான் இருக்கும்” என்றார்.

பிள்ளையவர்கள் அப்போது, “இவருக்கு விவாகம் ஆகிவிட்டது” என்றார்.

“அப்படியா, அதுதான் சிரிக்கிறாரோ! ஆனாலென்ன? மற்றக் காரியங்களெல்லாம் நடக்க வேண்டாமா? எல்லாச் சௌகரியங்களையும் பண்ணிவைப்போம்” என்று தேசிகர் சொல்லிவிட்டு, “உமக்குப் படிப்பதற்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம்” என்றார்.

“சந்நிதானத்தின் கருணை இருந்தால் எல்லாம் கிடைக்கின்றன” என்று ஆசிரியர் கூறினார்.

புத்தகப் பரிசு

தேசிகர் உடனே எழுந்திருந்து பக்கத்திலிருந்த நெடும்பேழை(பீரோ) ஒன்றைத் திறக்கச் செய்தார். அதில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. அதிலிருந்து பல புத்தகங்களை எடுத்து வந்து, “கம்பரந்தாதி படித்திருக்கிறீரா? இந்தாரும் படியும். அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் இவற்றையெல்லாம் இவர்களிடம் கேட்டுக்கொள்ளும். சிவஞான சுவாமிகள் வாக்கு அற்புதமாக இருக்கும்” என்று சொல்லிச் சில பிரபந்தங்களில் ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு பிரதிகளைக் கொடுத்தார். கொடுத்துவிட்டு, “இவற்றில் ஒவ்வொன்றை நீர் எடுத்துக்கொள்ளும்; மற்றவற்றை உடன்படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடும்” என்று சொன்னார். நான் மிக்க ஆவலோடு ஒவ்வொரு புத்தகத்தையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். கை நிறையப் பணம் தந்தால் கூட எனக்கு அவ்வளவு ஆனந்தம் உண்டாயிராது.

“இந்தப் பிரபந்தங்களை எல்லாம் படியும். பின்பு பெரிய புத்தகங்கள் தருகிறோம்” என்று சுப்பிரமணிய தேசிகர் அன்போடு உரைத்தார். பிறகு, “எங்கே, தெரிந்த பாடல்களில் எவற்றையேனும் இசையுடன் சொல்லும்; கேட்போம்” என்றார். காலையில் நான் பைரவி இராகத்திற் பாடல்களைச் சொன்னேன். அப்பொழுது வேறு இராகங்களிலே சில செய்யுட்களைச் சொன்னேன். கேட்டு மகிழ்ந்த தேசிகர் ஆசிரியரை நோக்கி, “இவரைச் சங்கீத அப்பியாசமும் பண்ணிக்கொண்டு வரும்படி சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

இவ்வாறு சுப்பிரமணிய தேசிகர் என்னிடம் அன்புவைத்துப் பேசியதையும் புத்தகங்களைக் கொடுத்ததையும் கண்ட என் ஆசிரியருக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. அதனை அவர் முகம் நன்கு புலப்படுத்தியது.

‘இங்கே வந்து விடவேண்டும்’

அப்பால் தேசிகர் பிள்ளையவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கி, “இன்று நீங்கள் வந்தமையால் காலை முதல் தமிழ் சம்பந்தமான சம்பாசணையிலேயே பொழுதுபோயிற்று. நமக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. தம்பிரான்களுக்கும் அளவற்ற சந்தோசம். அவர்களெல்லோரும் தொடர்ந்து தமிழ் நூல்களைப் பாடங் கேட்க வேண்டுமென்ற ஆவலுடையவர்களாக இருக்கிறார்கள். வேறு சிலரும் பாடங் கேட்கச் சித்தமாக இருக்கின்றனர் ஏதோ நமக்குத் தெரிந்ததை நாம் சொல்லி வருகிறோம். அதுவும் எப்போதும் செய்ய முடிவதில்லை. ஆதீன காரியங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. பிரபுக்களும் வித்துவான்களும் அடிக்கடி வருகிறார்கள்; அவர்களோடு சம்பாசணை செய்து வேண்டியவற்றை விசாரித்து அனுப்புவதற்கே பொழுது சரியாகப் போய்விடுகிறது. ஆதலால் இவர்களுடைய தாகத்தைத் தணிப்பதற்கு நம்மால் முடிவதில்லை. நீங்கள் இங்கே வந்திருந்து பாடஞ் சொல்ல ஆரம்பித்தால் எல்லோருக்கும் திருப்தியாக இருக்கும். உங்களுடைய சல்லாபத்தால் நமக்கும் சந்தோசமுண்டாகும். தவிர இவ்விடம் வருவோர்களிற் பலர். ‘பிள்ளையவர்கள் எங்கே யிருக்கிறார்கள்?” என்று விசாரிக்கிறார்கள். நீங்கள் மாயூரத்தில் இருப்பதாகச் சொல்லுவதற்கு நமக்கு வாய் வருவதில்லை. இந்த ஆதீனத்துக்கே சிறப்பாக இருக்கும் உங்களை இங்கே இருந்து பாடஞ் சொல்லும்படி செய்வது நமது கடமையாக இருக்க, மாயூரத்திலிருக்கிறார்களென்று சொல்வது உசிதமாகத் தோற்றவில்லை. வருகிறவர்களில் மாயூரம் வரக்கூடியவர்கள் வந்து உங்களைப் பார்த்துச் செல்லுகிறார்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்கவில்லையே என்ற குறையுடன் சென்றுவிடுகிறார்கள். ஆகையால் நீங்கள் இனிமேல் உங்கள் மாணாக்கர்களுடன் இங்கேயே வந்துவிட வேண்டியதுதான்” என்றார்.

பிள்ளையவர்கள், “சந்நிதானத்தின் திருவுளப்பாங்கின்படியே நடப்பதுதான் அடியேனுடைய கடமை” என்று கூறினார்.

ஆறுமுகத்தா பிள்ளையின் அச்சம்

அப்போது பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்து வந்த ஆறுமுகத்தா பிள்ளை திடீரென்று எழுந்தார்; பண்டார சந்நிதிகளை நமசுகாரஞ்செய்து எழுந்து நின்று வாய்புதைத்துக்கொண்டே, “ஐயா அவர்களைப் பட்டீச்சுரத்திற்கு அழைத்துக்கொண்டு சென்று சிலகாலம் வைத்திருந்து அனுப்பும்படி சந்நிதானத்தில் உத்தரவாக வேண்டும். அவர்களால் எனக்கு ஆகவேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. அதனால்தான் அடியேன் மாயூரம் சென்று ஐயா அவர்களை அழைத்து வந்தேன்” என்றார். சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களிடம் பேசியவற்றைக் கேட்ட அவருக்கு, “நம் காரியம் கெட்டுப் போய்விட்டால் என்ன பண்ணுவது! பிள்ளையவர்கள் இங்கேயே தங்கிவிடப் போகிறார்களே!” என்ற பயம் பிடித்துக்கொண்டது.

சுப்பிரமணிய தேசிகர் அவர் கருத்தை உணர்ந்துகொண்டார். குறுநகையுடன், “அப்படியே செய்யலாம்; அதற்கென்ன தடை? பிள்ளையவர்கள் எல்லாருக்கும் சொந்தமல்லவோ?” என்று சொன்னார். அப்போதுதான் ஆறுமுகத்தா பிள்ளைக்கு ஆறுதல் உண்டாயிற்று.

விடையளித்தல்

“சரி. பட்டீச்சுரம் போய்ச் சில காலம் இருந்துவிட்டு இங்கே வந்துவிடலாம்” என்று சுப்பிரமணிய தேசிகர், பிள்ளையவர்களுக்கு விடைகொடுக்கவே என் ஆசிரியர் எழுந்து பணிந்து விபூதிப் பிரசாதம் பெற்று மடத்திற்கு வெளியே வந்தார்.

தம்பிரான்களும் வேறு சிலரும் அவருடன் வந்தார்கள். சிலர் ஆறுமுகத்தா பிள்ளையை நோக்கி, “இதுதான் சாக்கு என்று ஐயா அவர்களை நீண்டகாலம் பட்டீச்சுரத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டாம்” என்றனர். அப்பால் பேசிக்கொண்டே சிறிது தூரம் யாவரும் வந்தனர். சிலர் என்னிடம் வந்து, “உம்முடைய ஊர் எது? என்ன என்ன புத்தகம் பாடம் கேட்டிருக்கின்றீர்?” என்று கேட்டனர். நான் தக்கவாறு பதில் உரைத்தேன். சிலர் நான் படித்த நூல்களில் சில சந்தேகங்கள் கேட்டனர். அன்று காலையிலிருந்து சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் என்னிடம் காட்டிய அன்பு எல்லாருடைய உள்ளத்திலும் என்பால் ஒரு மதிப்பை உண்டாக்கிவிட்டது. இல்லாவிடின் சிறு பையனாகிய என்னிடத்தில் தம்பிரான்கள் வந்து சந்தேகம் கேட்பார்களா! “நாம் படித்தது எவ்வளவு கொஞ்சம்? அதற்கு ஏற்படும் பெருமை எவ்வளவு அதிகம்? எல்லாம் இந்த மகானை அடுத்ததனால் வந்த கௌரவமல்லவா?” என்று எண்ணினேன். “நாம் இவர்களிடம் வந்து சில மாதங்களே ஆயின. தமிழ்க் கடலின் ஒரு மூலையைக்கூட இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. இவர்களிடமிருந்து பாடங் கேட்டு நல்ல அறிவை அடைந்தால் நமக்கு எவ்வளவோ நன்மை உண்டாகும்” என்ற நினைவினால் “என்ன இன்னல் வந்தாலும் இவர்களை விட்டுப் பிரிவதில்லை” என்ற உறுதியை மேற்கொண்டேன்.

பஞ்சநதம் பிள்ளையின் செயல்

உடன் வந்தவர்கள் சிறிது தூரம் வந்து பிள்ளையவர்களிடம் விடைபெற்றுச் சென்றார்கள். எங்களுக்காக ஆறுமுகத்தா பிள்ளையவர்கள் கொணர்ந்திருந்த வண்டியில் அவரும் பிள்ளையவர்களும் ஏறிக்கொண்டனர். நான் ஏறப் போகும்பொழுது அங்கே நின்ற தவசிப் பிள்ளையாகிய பஞ்சநதம்பிள்ளை வெகுவேகமாக என்னிடம் வந்தார். என் கையிலிருந்த புதிய புத்தகங்களையெல்லாம் வெடுக்கென்று பிடுங்கினார். ‘எனக்கு வேண்டுமே’யென்று நான் சொன்னபொழுது, “இவ்வளவும் உமக்கு எதற்கு? ஒவ்வொன்று இருந்தால் போதாதோ?” என்று சொல்லி ஒவ்வொரு பிரதியை என்னிடம் கொடுத்துவிட்டு மற்றவற்றை அவர் வைத்துக்கொண்டார். சுப்பிரமணிய தேசிகரிடம் நான் முதன்முதலாகப் பெற்ற பரிசல்லவா அவை? பஞ்சநாதம் பிள்ளை அவற்றைப் பறித்தபோது அவர் கன்னத்தில் இரண்டு அறை அறைய வேண்டுமென்ற ஆத்திரம் எனக்கு முதலில் உண்டாயிற்று. அவரிடம் சாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டுமென்று பிள்ளையவர்கள் எனக்கு எச்சரிக்கை செய்ததை நான் மறக்கவில்லை. ஆதலால் ஒன்றும் பேசாமல் கோபத்தை அடக்கிக்கொண்டு வண்டியில் ஏறினேன்.

காலை முதல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் தமிழறிவின்பால் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் முதல் தம்பிரான்கள் காரியத்தர்கள் வரையில் யாவரும் வைத்திருக்கும் மதிப்பையும் மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தையும் அறிந்து வியந்த நான், அவ்வளவு பேர்களுக்கு இடையில் சிறிதேனும் மரியாதை தெரியாமலும் தமிழருமையை அறியாமலும் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பஞ்சநதம் பிள்ளையினது இயற்கையைக் கண்டபோது, “ஆயிரம் வருடங்கள் நல்லவர்களோடு பழகினாலும் தம் இயல்பை விடாதவர்களும் உலகில் இருந்துதான் வருகிறார்கள்” என்று சமாதானம் செய்துகொண்டேன்.

இரட்டைமாடு பூட்டிய அந்த வண்டி சாலையில் வேகமாகப் போகத் தொடங்கியது.

(தொடரும்)
என் சரித்திரம்

உ.வே.சா.