Sunday, December 27, 2015

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13: ம. இராமச்சந்திரன்


(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12:   தொடர்ச்சி)

 தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

13

  இந்நிலையறிந்த ஆசிரியர் பெருங்குழுவும் இலக்குவனாரை அகற்றும் கொடுஞ் செயலைத் தடுக்கக்கூடிற்று. ஆங்கில மொழியில் ஓங்கிய சிறப்புப் பெற்ற வரும் நல்லுள்ளம் கொண்டவருமான சீதரமேனேன், ‘தன் கடமையைத் தவறாது செய்யும் இப்பேராசிரியர் (இலக்குவனார்) அகற்றப்படுவது குறித்து யாம் அஞ்சுகிறோம். நாளை நமக்கும் இந்நிலை ஏற்படாது இருக்குமா? ஆகவே இவரை அகற்றும் எண்ணத்தை நீக்கி, மனத்தில் அமைதியை நிலைத்திடச் செய்க’11 என்று மொழிந்தனர்.
  ‘இலக்குவனாரைக் கல்லூரியிலிருந்து அகற்றும் செய்தியை அறிந்து மாணவர்கள் மனக்கொதிப்படைந்து ஒன்று திரண்டு வீதிகள் தோறும் ஊர்வலம் சென்றனர். இலக்குவனாரை விலக்க வேண்டா. விலக்கின் விடமாட்டோம்’12 என்று முடிவு எடுத்தனர்.
மாணவர்க் கருத்தை மாற்ற நினைத்து சாதிப்
பகைமையைத் தூண்டி விட்டது நிருவாகம்.
  தமிழ்நாடு தமிழ் மக்களும் முன்னேற வேண்டும் என்ற கருத்துடைய கழகங்கள் இலக்குவனாரை விலக்கல் வேண்டா என்று வேண்டுகோள் விடுத்தன.
திராவிட நாடு சிறப்புற்றோங்கவும் மூடக் கொள்கை மற்றும் நீங்கவும் உழைத்த, உண்மைத் தொண்டர் ‘குத்தூசி’ குருசாமி ‘விடுதலை’ ஏட்டில், இலக்குவனாரை நீக்கும் செயலை இடித்துரைத்து எழுதினர். காரைக்குடியிலிருந்து வெளிவந்த ‘வாரச் செய்தி’ என்னும் கிழமையோடும் இலக்குவனார்க்குப் பரிந்து எழுதியது. எழுத்துவன்மை பெற்ற ஆசைத் தம்பி என்னும் அன்பர் தன்னுடைய, ‘தனியரசு’ என்னும் நாளேட்டில், ‘இலக்குவனாரை விலக்கும் செயலை விடுமின்’ என்று உரிமையோடு உரைத்து எழுதினார்.
  ஆட்சிக் குழுவின் செயலளர் வே.வ. இராமசாமி மக்கள் கருத்தையும் மாணவர் விருப்பத்தையும் மதிக்கவில்லை. மனச்சான்றையும் மதிக்கவில்லை. மாறாகக் குற்றம் சுமத்தி விளக்கம் கேட்டுப் பின் வேலையை விட்டும் நீக்கினர். இதனை,
                ‘உரிமை’ என்பதும் ஓர் குலம் என்பதும்
                வெற்றுரை என்பதை விளக்கி விட்டனர்
                சாதிகள் வேண்டா என்றே சாற்றி
                சாதிகள் நலனே தன்நலன் ஆகக்
                கடமைகள் ஆற்றும் கயமை ஈங்கு
                என்று நீங்குமோ இருநிலம் உய்யவே’ 13
என்ற அடிகளில் சாதிப்பற்றுக் கொண்டு சதி செய்யும் வீணர்களைச் சாடுகிறார்.
  வேலையை விட்டு நீக்கியதால் இலக்குவனார் அடைந்த இன்னல்கள் பல. பதினாறு ஆண்டுகள் ஆசிரியராக மாசில்லாத வகையில் தொண்டு செய்து அடைந்த பெருமையை இனி எளிதாக அடைய முடியுமா? வயதும் நாற்பத்திரண்டை அடைந்துவிட்டது. இந்த வயதில் பணி தேடிச் செல்லல், பணிவாய் வேண்டுதல். சமநிலையை உரிமையாய்ப் பெறுதல் எவர்க்கும் எளிதல்லவே. இனிதல்லவே.
  ஆசிரியர் பணிக்கு மாசு ஏற்படும் வகையில் இலக்குவனார் குற்றம் எதுவும் செய்யவில்லை. கொடுமை இழைக்கவில்லை. கூறிய குற்றமும் ஆராய்ந்தால் குற்றமேயன்று. குற்றம் எனக் கருதி கல்லூரி நிருவாகம் இடித்துரை இயம்பி விட்டிருக்கலாம். சாதியால் ஒருவர்க்கு கல்லூரியின் உதவித் தலைமை வழங்கிட, இலக்குவனாரை நீக்கும் முடிவை காலம் பார்த்துச் செய்துவிட்டனர். சாதிப் பற்றால் தகுமுறை அழித்தனர்.14
  வேலை நீக்கம் செய்யப்பட்ட இலக்குவனார் அறங்கூறும் அவை சென்று முறையிட்டார்.
  கருமைச் சட்டைக் கட்சியைச் சேர்ந்தவன் என்றும் புரட்சிக் கருத்தின் புகலிடமாக விளங்குபவன் என்றும் அரசை வெறுக்கும் அறவுரையாளன் என்றும் பற்பல இன்னாச் சொற்களைக் கூறி மன்றில் எதிர் வழக்காட வந்தனர் கல்லூரி நிருவாகத்தினர்.
 ‘கருஞ்சட்டைக் கட்சியினன் என்று குற்றஞ்சாட்டிக் கொடுமை புரிவர். எனினும் அவர்கள், கருஞ்சட்டைக் கட்சித் தலைவர் கடைக்கண் பார்வைக்கு அலைவார்கள். புரட்சிக்கருத்தினை உடையவன், பொல்லாங்கு செய்பவன் என்று இலக்குவனாரை நீக்கிவிட்டுச் சீர்திருத்தத்தில சிறந்தவர் போல வேடமிடுவர். அரசுப் பகைவன் அகற்றத் தக்கோன் என இலக்குவனாரை நீக்கி விடடு மறுபுறம் அரசினை வெறுத்துப் பேசும் ஆண்தகைபோல எதிர்க்கட்சிக்கு இனிய நண்பராக விளங்க முயல்வர்.’15 இவையெல்லாம் நடிப்பே (நாடகமே) என்பது நாட்டு மக்களுக்குத் தெரியாதததில் வியப்பில்லை.
  ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அறமன்றம் வழக்கை முடிப்பதற்கு முயலவில்லை. செல்வம், பதவியைத் துணையாகக் கொண்டு மெய்யாவும், மெய்யைப் பொய்யாகவும் நாட்டிட முயலும் வழக்கறிஞர் உரை வழியே நடுநிலை மன்றம் நாட்களைக் கடத்தியது. ஒழுக்கமும் உயர் நூல் விளக்கமும் உடைய வழக்கறிஞர் கந்தசாமி அறிவுரைப்படி இலக்குவனார் மீது கூறிய குற்றத்தை நிருவாகம் திரும்பப் பெற்றுக் கொள்ளவும், இலக்குவனாரும் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். வழக்கு மன்றம் சென்றதால் எந்தப் பயனும் இலக்குவனார் அடைந்தாரில்லை, கூறிய குற்றத்தை நீக்கிவிட்டால் மீண்டும் பணியிலன்றோ நியமிக்க வேண்டும். மாறாகப் பணியை விட்டிட வேண்டும் என்று பரிவுடன் வேண்டினர். வேறு வழியின்றிப் பணியை விட்டு விட்டனர் இலக்குவனார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 240-251
  2. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 259-265
  3. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 358-363
  4. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 454-471
  5. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன். அ-ள் 492-503
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14)
 

Friday, December 25, 2015

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12: ம. இராமச்சந்திரன்

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

12

  1952 இல் இந்தியப் பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடை பெற்றது. புதியன செய்யும் பொறியில் வல்லுநர் கோ.து.நாயுடு திராவிடர் கழகச் சார்பில் திருவில்லிப்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார். கோ.து.நாயுடு  உழைப்பால் உயர்ந்த அறிஞர்; உலகம் சுற்றியவர்; பலகலைகள் கற்றவர்; பேருந்து வண்டிகள் நடத்தும் பெருஞ் செல்வர்; கோவை நகரைச் சார்ந்தவர். இவரை எதிர்த்து கருமவீரர் காமராசர் போட்டியிட்டார். காமராசர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராய் விளங்கியவர். தமிழ்நாட்டு அமைச்சரவையை ஆக்கவும் நீக்கவும் ஆற்றல் பெற்றவர். ஆங்கில ஆட்சியை அகற்ற நினைத்து, அடக்கு முறைக்குப் பயப்படாமல் உரிமைப் போராட்டத்தில் உறுதியுடன் தொண்டு செய்தவர். அதனால் எதிர்ப்பு இல்லாத தலைவராய்க் காமராசர் விளங்கினார்.
  விருதுநகர் சட்ட மன்றத்திற்கு வே.வ. இராமசாமி நின்றார். இலக்குவனார், பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட கோ.து.நாயுடுவையும், சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட வே.வ. இராமசாமியையும் ஆதரித்து உரிமை முறைப்படி பணி செய்தார். கல்லூரி ஆட்சிக்குழு செயலாளர் வே.வ. இராமசாமியும் கோ.து. நாயுடுவை ஆதரித்துத் தேர்தல் பணி ஆற்றினார். கல்லூரிப் பணியாளர்களில் தேர்தலில் முழுப்பங்கு கொண்டு முழுநேரமும் உழைத்தனர்.
  தேர்தல் முடிவு வந்தது. திருவில்லிப்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினராக காமராசரும், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக வே.வ. இராமசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  தேர்தலில் வென்ற வே.வ. இராமசாமி சில திங்கள் கழித்து இலக்குவனாரிடம் சொன்னார். ‘இலக்குவனார் இருக்கும்வரை கல்லூரிக்கு உதவ மாட்டோம்’ என்று கூறுகின்றனர் சிலர் என்றார். கட்சி வெறியால் காங்கிரசு நாடார் இலக்குவனாரைத் துரத்தத் திட்டமிட்டனர். நற்றமிழ் வளரவும், தமிழ் மக்கள் உரிமை பெற்றுச் சிறக்கவும் இலக்குவனார் செய்த பணிகளையும் மறந்தனர். ‘இலக்குவனார் இருக்கும் வரை இக்கல்லூரி கருஞ்சட்டையாய்க் காட்சியளிக்கும்’6 என்று நவின்றார்.
  நாடார் தலைவர் காமராசருக்கு எதிராகத் தேர்தல் வேலை செய்த இலக்குவனாரை இங்கிருக்க விடோம் என்று கூறினர். கல்லூரியின் ஆட்சிக் குழுவை அழைத்து ஆராய்ந்தனர். ஆட்சிக்குழு உறுப்பினர் ஞானமுத்து அவர்கள் திருநெல்வேலி இந்துக் கல்லூரியின் முதல்வர். அவர், “கல்லூரியில் கடமையைச் சிறப்புறச் செய்யும் இவரை (இலக்குவனாரை) எந்த வகையில் போகச் செய்வது? கல்லூரிக்கு வெளியே கட்டுப்படுத்தும் உரிமை நமக்கில்லை. ஒரு தீமையும் செய்திலர். வீண்பழி சுமத்திட வேண்டாம்”7 என்று கூறினார்.
  மேலும், “தேர்தலில் பங்கு கொள்வதில் தவறில்லை. நானே தேர்தலில் போட்டியிட்டதை நாடே அறியும். ஆசிரியர்க்குரிய உரிமையுமாகும். அதனால் அவர்மீது சினம் கொள்ள வேண்டாம்.”8 என்னும் நல்லுரை கூறினார்.
  சில நாள்கள் சென்ற பின்னர் இலக்குவனாரிடம் வே.வ. இராமசாமி ஒருநாள், “எங்களூர்ச் சாதி இயல்பு ஒருவிதம். உங்களால் அறிந்து கொள்ள முடியாது. ஒருவர் சொல்லுக்கு மதிப்பளிப்போம். கல்லூரியில் நீங்கள் இருந்தால் பெரிய நிதி அளிக்க மாட்டார்கள். எனவே நீங்கள் கல்லூரியை விட்டு நீங்கிட வேண்டும். இப்படி நான் கூறுவது மனச் சான்றுப்படி பார்த்தால் மாபெரும் குற்றந்தான். எனினும் கல்லூரி நன்மைக்காகக் கூறுகின்றேன்” என்றார்.
  அது கேட்ட இலக்குவனார், ‘அறமோ’ என்றார். அறன் அன்று எனினும் சாதி முறைக்குக் கட்டுப்படுவது என் கடனாகும். விரைவில் நீர் விலகிவிடுவது நல்லது. இல்லையேல் குறைகள் கூறி குற்றம் சாட்டி விலக்குவோம். வேறிடத்தில் வேலை பெறுவதற்கும் தடையாகிவிடும்” என்று வே.வ. இராமசாமி கூறினார்.
  உடனே இலக்குவனார்,  “நீங்கள் கூறுவது நல்லதல்ல. அறம் என்னைக் கைவிடாது. கொடுமைச் செயலுக்குப் பயப்பட மாட்டேன். நீதி மன்றம் ஏறி முறையிடப் பின்வாங்க மாட்டேன். எனவே நல்ல செய்ய எண்ணுங்கள்”  என்றார். மேலும், “தங்கள் கல்லூரி நாடார் கூட்டுறவால் நடத்தப்பட்டாலும் தமிழ் நாட்டரசின் உதவித் தொகை பெற்றே நடத்தப்படுகிறது. எனவே எல்லார்க்கும் இக்கல்லூரியில் உரிமை உண்டு. தெருவில் செல்வோர் கருத்தை மதித்துப் பொருத்தமின்றிக் குற்றம் சுமத்தி அகற்றத் துணிந்தால் நல்ல நெறி எவ்வாறு நிலைக்கும்? ஆசிரியருக்குத் தான் அமைதி வாழ்வு ஏது? விலக்குவீராயின் வீணேவீட மாட்டேன். ஆகையால் இவ்வெண்ணத்தை அறவே விட்டு விடுங்கள்”9 என்றார் இலக்குவனார்.
 “நீதி மன்றம் சென்றால் உமக்கு நான் உதவ மாட்டேன். சாதியினர் பக்கமே இருப்பேன்” என்றார்,  வே.வ. இராமசாமி.
 “அறத்தின் துணை எனக்குண்டு. எதற்கும் அஞ்சமாட்டேன்” என்றார் இலக்குவனார்.
  சில நாள் சென்றவுடன் செய்தித் தாள்களில் விளம்பரம் வெளிவந்தது, ‘விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரிக்குத் தமிழ்ப்பேராசிரியர் தேவை’ என்று. இலக்குவனாரை எவ்வாறாயினும் நீக்கிட முடிவு செய்து முனைந்து விட்டனர்.
             “நல்ல நாயைக் கொல்ல நினைப்பின்
                பித்துற் றதென்று பிறர்க்கறி வுறுத்தி
                சுடுமாப் போல சுமத்தினர் பழியும்” 10
நல்ல ஒரு நாயைக் கொல்ல நினைப்பவர் எத்தகைய செயலில் ஈடுபடுவாரோ அதைப் போன்று கல்லூரி வளர்ச்சியில் கருத்துக் கொண்ட இலக்குவனார் மீது குற்றம் கூறி விளக்கவினாக் கொடுத்தார்.  கல்லூரிச் செயலாளர் வே.வ. இராமசாமி கூறிய குற்றச் சாட்டுகள் மூன்று.
  1. உரிமை வேட்கை உணர்வை ஊட்டிய ஈ.வே.இரா. பெரியாரின் வகுப்புவாத மாநாட்டில் பேசியது.
  2. 1952இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறிஞர் கோ.து. நாயுடுவை ஆதரித்து, மக்களிடம் வாக்குகள் அளிக்க வேண்டிக் கேட்டமை.
  3. கவிச் சக்கரவர்த்தி கம்பன், தேசியப் புலவர் சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர்க்கு விழா நடத்தாமை.
மேலே குறிப்பிட்ட குற்றச் சாட்டுகளுக்கு இலக்குவனார் தகுந்த விளக்க  விடையளித்தார். அவை,
  1. பிறப்பால் வேற்றுமை பேசுதல் கொடியது என்று கூறிய துணிவுடைய பெரியார் நடத்திய உரிமை மாநாட்டில் தமிழ்நாட்டின் நலன் கருதியே அரசியல் விதிக்குக் கட்டுப்பட்டுக், கடமை உணர்ந்து கருத்து கூறினேன். இந்திய அரசுக்கு எதிராக பேசினேன் எனின் அரசே என் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும்.
  2. மக்களாட்சி முறையில் தேர்தலில் நிற்கவும், விரும்பும் அறிஞரைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை அனைவர்க்கும் உண்டு. திருச்சியில் திருநெல்வேலியில் ஆளும் கட்சியினரை எதிர்த்து நின்றார். அங்கெல்லாம் அவர்களை நீக்கவில்லை.
  3. தமிழ் மொழியின் சிறப்புக்கும், தமிழரின் பெருமைக்கும் இலக்கணங் கூறிய ஒல்காப்புகழ் தொல்காப்பியல் நாள் கொண்டாடச் செய்தேன்.
நல்லிசைப் புலமை பெற்ற தண்டமிழ்ச் செல்வியும், அரசியல் தூது ஆற்றிய பெருமையும் உடைய ஒளவை நன்னாள் கொண்டாடச் செய்தேன்.
அரசியல் பிழைத்தோர் அழிவர் என்பதை சிலம்பின் பேரால் உரைத்த சேர இளவல் இளங்கோவடிகளுக்கு இனிய நன்னாள் நடத்தினேன்.
  தனது நாட்டில் தாழ்வுற்றிழியும் மக்களின் இழிநிலை போக்கவும், தமிழக ஆட்சி தமிழ் மொழியில் நடக்கவும், முத்தமிழ் வளர்ந்து சிறக்கவும். புலவர் நாளும் மறுமலர்ச்சி நாளும் கொண்டாடியுள்ளேன்
என்று விளக்க விடை அளித்தார்.

குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 129-121
  2. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 127-131
  3. ச. இலக்குவனாh, துரத்தப்பட்டேன், அ-ள் 132-136
  4. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 170-179
  5. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 194-196
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 13)

அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015 



Tuesday, December 22, 2015

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்


தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

11

  தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை.
  பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது விலக்காக உள்ளது. ஒரே அரசு மரபினரை(சேர மனனர்களை)ப் பாடிய பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. எனவே தமிழக வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமாயின் தமிழ்ப் புலவர்களின் வரலாறு செம்மையாக எழுதப் பெறல் வேண்டும். அப்பொழுது தான் புலவர்களின் பாடிய செய்யுட்கள் தோன்றிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.
  தமிழ் இலக்கிய வரலாற்றில் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் தான், முதன் முதலாக தன் வரலாற்றில் ஒரு நிகழ்வை வெளிப்படத் தம் நூலில் பாடியுள்ளார்.
யானும் சென்றேன் என்னெதி ரெழுந்து
                தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி
                வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
                நுந்தை தானிழல் இருந்தோய் நின்னை’ 3
என்று தம் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தம் வாயினால் கூறுவதை அறிந்து மகிழ்கிறோம்.
  இளங்கோவடிகளுக்குப் பின் இடைக்காலச் சோழப் பேரரசில் மாமன்னராகத் திகழ்ந்த முதலாம் இராசராசன் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தம் வெற்றிச் செய்திகளைப் பட்டயங்களில் பொறித்தான். மெய்க்கீர்த்தி என்னும் பெயரில் வெளியிடப்பட்ட அப்பட்டயங்கள் சோழ மன்னர்கள் வரிசையை அறிந்து கொள்ள உதவுகிறது.
  முனைவர் உ.வே. சமாமிநாதய்யர் அவர்கள் ‘என் சரித்திரம்’ என்னும் தலைப்பில் தன் வராற்று நூல் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
  முனைவர் இலக்குவனார் ‘என் வாழ்க்கைப் போர்’ என்னும் நூலில் தம் வாழ்வின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறியுள்ளார். அந்த நூல் உரைநடையில் எழுதப்பட்டுள்ளது.
  ‘துரத்தப்பட்டேன்’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இந்நூல் ஒரு கவிதை நூலாகும். கவிதை வடிவில் தன் உள்ளக் குமுறலை எடுத்துக் காட்டியுள்ளார். யாப்பு இலக்கணங்களைப் புறம்பே நிறுத்திவிட்டுச், சொற்களைப் பிரித்து மக்கள் எல்லார்க்கும் எளிதில் விளங்கும் வண்ணம் இக்கவிதையைப் பாடியுள்ளார் கவிஞர்.
இக்கவிதை நூல் தோன்றக் காரணம்
  இலக்குவனார் 1947 ஆம் ஆண்டு ஆகத்து முதல் 1952 வரை விருதுநகர் செந்திற் குமார நாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணி செய்தார். முறையாக கல்லூரி முதல்வராகும் உரிமையும் கிடைத்தது. ஆனால் இலக்குவனார் நாடார் குலத்தில் பிறக்கவில்லை. ஆதலால் நாடார் அல்லாதவருக்கு நாடார் கல்லூரியில் பதவி கொடுத்தல் கூடாது என்று கல்லூரி நிருவாகம் முடிவு செய்தது. கல்லூரிப் பணியினின்றும் அவரைத் துரத்தியது. துரத்தப்பட்டதால் அவர் அடைந்துள்ள துன்பங்கள் அளவற்றன. தம் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினால்தான் மனம் அமைதி பெறும் என்று எண்ணினார். மக்கள் மன்றத்தில் முறையிட அவர் உள்ளொளி உரைத்தது. அதன் விளைவாக இந்நூல் தோன்றியது.
கவிதை கூறும் பொருள்
  இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின் வயது வந்தோர் அனைவர்க்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. மக்களுக்காக மக்களில் ஒருவர் மக்களை ஆட்சி செய்யும் முறைக்கு மக்களாட்சி என்று பெயர். மக்களாட்சியின் முதல் அங்கமாகப் பொதுத் தேர்தல் 1952-இல் வந்தது. இந்தியப் பாராளுமன்றத்திற்கும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் உறுப்பினைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வந்தது.
  சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக்க வழி வகுத்துள்ளது இந்திய அரசியல் சட்டம். ஆனால் தேர்தல் என்று வரும் போது சாதிகள் பேரால் போட்டியிட முனைகின்றார் சிலர். இதனை,
வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை
                அன்னியர் வாக்கு வன்னியர் கில்லை
                நாடார் வாக்கைப் போடார் பிறர்க்கு
                செட்டியார் வாக்கு கிட்டிடா பிறர்க்கு
                தேவர் வாக்கு வேறெவர்க்கு மில்லை
                முதலியார் வாக்கு முதலியார் தமக்கே’ 4
என்று தேர்தல் காலத்தில் நிலவிடும் அரசியல் சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் கவிஞர். தேர்தலில் கட்சி வெறி நெருப்புப் பொறியாகி விடுவதுண்டு.
  கற்றறிந்தோர், ஆளுந்திறமையுடையோர் தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி விடுகின்றனர். மாறாகக், கட்டையை நிறுத்தினாலும் கழுதையைக் காட்டினாலும் அதற்கே வாக்கை அளித்திட வேண்டும் என்று கூறிச், சிலர் தம் கட்சி, பெரும்பான்மை பெற்றிட வேண்டியாங்கு உழைக்கின்றனர். மக்கள் “இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? நமக்கேன் கவலை?” என்று நாளைப் போக்குகிறார்கள். எல்லாம் விதிப்பயன் என்றும் எண்ணியும், வறுமையும் அடைந்திருப்பதை இயல்பெனக் கொண்டும் செயலற்றிருக்கிறார்கள். எழுத்தறிவு பெற்றிருப்போர் நூற்றுக்கு இருபது பேரே. எனவே, தேர்ந்தெடுக்கும் மக்கள் திறம் அற்றவராக உள்ளனர்.
  தேர்தலில் போட்டியிடுவோர், தம் திறனைக் கூறி வாக்குகள் பெற்றிட வழி வகுப்பதில்லை. கல்லாத மக்களின் வாக்குகளைக் குறிகள்(சின்னங்கள்) காட்டிப் பெற்றவிட முந்தும் அவலநிலையே உள்ளது. கூர்ந்த அறிவை வளர்க்காது வாயற்ற ஊமையராய் அழகிய பாவையாய் இருந்து, கட்சி உறுப்பினர் எண்ணிக்கையைக் கைகள் தூக்கிக் காட்டிடும் பொல்லா நிலையே நாட்டில் உள்ளது.
‘               இந்திய மக்களுள் எம்தமிழ் மக்கள்
                அறிஞரும் செல்வரும் அவரவர் அளவில்
                தந்நலம் இன்றிப் பிறர்நலம் பேணும்
                அன்பினர் அரியர்; ஆதலின் ஈங்கே
                நாட்டுப் போரில் நாட்டம் இன்றி
                வீட்டுப் பணியில் விருப்பம் கொண்டு
                உழைப்போர் பலரென உலகோர் அறைவர்’ 5

குறிப்புகள்:
3. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வரந்தரு காதைஅ-ள் 171-185
4. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 34-40
5. சி. இலக்குவனார், துரத்தப்பட்டேன், அ-ள் 8-86
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12)

அகரமுதல - மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015