Sunday, September 25, 2022

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5

 அகரமுதல




(தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 3/3 – சி. பா. தொடர்ச்சி)

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5


மனிதன் வாழ்க்கையில் பெறும் பேறுகள் பல நல்ல மனைவி வாய்ப்பதும், பண்பு சான்ற குழந்தைகள் வாய்ப்பதும் ஒருவனுக்கு வாய்க்கும் பேறுகளுள் சிறப்பானவைகளாகும். பெறும் பேறுகளுள் சிறந்த பேறு நல்ல மக்கள் வாய்ப்பதேயாகும் என்பதனைத் திருவள்ளுவர்,

“பெறுமவற்றுள் யாமவறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற” 
(குறள். 70)

என்று குறிப்பிட்டுள்ளார். பொருட்செல்வம், செவிச் செல்வம், கல்விச்செல்வம் முதலான செல்வங்களிலும் குழந்தைச் செல்வமே சிறப்பு வாய்ந்ததாகும். இதனையே திருவள்ளுவர்,

தம் பொருள் என்ப தம்மக்கள்” (குறள். 63)

என்று குறிப்பிட்டுள்ளார், ‘செல்வமற்ற ஏழைகளின் செல்வம் குழந்தைகளே’ (Children are poor Men’s riches)என்றும் ‘துறக்க உலகத்தின் திறவுகோல் குழந்தைகளே, (Children are the key of paradise) என்றும் குழந்தைச் செல்வத்தின் மேன்மை குறிக்கப் பெறுகின்றன. நல்ல குழந்தைகளைப் பெற்றவர்கள் இவ்வுலகில் அன்றியும் மறு உலகிலும் புகழினைப் பெறுவர் என்று அகநானூறும், தவழ்ந்து விளையாடும் குழந்தைச் செல்வத்தினைக் குறைவறப் பெறாதவர்கள் படைப்பு பல படைத்திருப்பினும், பலரோடு உண்ணும் செல்வ வளம் சிறக்கப் பெற்றிருப்பினும் பயன் இல்லை என்று புறநானூறும் [1] குறிப்பிடுகின்றன.

குழந்தை இலக்கியத்தின் தொன்மை

தொல்காப்பியம் ‘பிசி’ என்ற இலக்கிய வகையினைக் குறிப்பிடுகின்றது.

“ஒப்போடு புணர்ந்த வுவமத் தானும்
தோன்றுவது கிளந்த துணிவி னாலும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”
(தொல். பொருள்: 488)


தன்கண் உள்ள ஒப்புமைக் குணத்தோடு பொருந்தி வருவதும், உவமப்பொருள் ஒன்று சொல்ல ஒன்று தோன்றும் துணிவினதாகவும் பிசி இருவகைப்படும் என்று சொல்கிறது தொல்காப்பியம். இக் குறிப்புக்கொண்டு பிசி என்பது விடுகதையினைக் குறித்து நிற்கின்றது என அறியலாம். பிசி, செவிலியர்க்கு உரியது என்று பேராசிரியர் தம் உரையில் குறித்துள்ளார். குழந்தைகளை வளர்க்கும் தாய் சங்கக் காலத்தில் செவிலி என வழங்கப் பெற்றாள். செவிலியர் குழந்தைகளை நன்கு வளர்த்து, அவர்களை மகிழ்விக்க விடுகதைகளையும், வேடிக்கைக் கதைகளையும் கூறினர். பேராசிரியர் ‘பிசி’ என்பதற்குத் தந்துள்ள உதாரணங்களில் ஒன்று கீழ்வரும் பாட்டாகும்.

நீராடான் பார்ப்பான் நிறஞ்செய்யான் நீராடில்
ஊராடு நீரில்காக் கை
” [2]

குளிக்காத பார்ப்பனன்; அவன் நிறமோ சிவப்பு, அவன் நீரில் குளித்தெழுந்தால் காக்கையின் கரிய நிறம் கொண்டு விடுவானாம் என்ற குறிப்பு இப் பாட்டில் அமைந்துள்ளது. இப்பாட்டு பிசி; நெருப்பைக் குறிக்கின்றது. மேலும் அகநானுாற்றில் மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் பாடிய பாடல் ஒன்றில் வானத்தில் பவனிவரும் கோல நிலவைக் காட்டித் தன் கைக்குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய் ஒருத்தியைக் காட்டுகின்றார். “நிலவு எரிக்கும் முதிராத இளந் திங்களே! பொன்னாலான ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என் மகனோடு நீ இங்கு விளையாட வந்தால் உனக்கும் பால் தருவேன்” என்று குழந்தைக்கு நிலவை வேடிக்கை காட்டிச் சோறு ஊட்டு கின்றாள்.

முகிழ்கிலாத் திகழ் தரும் மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பால் என
விலங் கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி
” [3]

என்பது அப் பாடற்பகுதி. இது பிற்காலத்திலே பல நிலாப் பாடல்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது என்று நம்பலாம்.

குழந்தைக் கவிஞர் கவிமணி

தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்; அரிய செல்வம்; தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதுமே தமிழ் மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூஞ்செண்டு’ என்று கவிமணியின் பாடலைப் புகழ்ந்து பேசுகிறார் இரசிகமணி டி.கே சி. இக்காலக் கவிஞர் ஒருவர்,

பகைவரென ஒருவருமே இல்லாப் பண்பு
பாலித்த கவிமணியார், நமது பிள்ளை
முகைகளெல்லாம் நலம்பெருகி மலரப் பாட்டு
மொழிந்திருந்தது இக்காலம் நமது, காலம்
!”

என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகத்தில் அரும்பெரும் நூல்கள் பல உண்டு; கன்னித் தமிழ் ஆட்சிமொழியாய் மாட்சியுற்றிருந்த காலத்தே எழுந்த இலக்கியங்களில் பல இற்றைச் சிறுவர்க்கு எளிதில் விளங்குவதேயில்லை. ஆத்திசூடியும். கொன்றைவேந்தனும் அன்றையக் குழந்தைகட்கு எளிய இனிய நூல்கள். வேற்று மொழியின் ஆதிக்கத்தால் அத்தகைய தமிழறிவைப் பலர் இழந்துவிட்டனர். இந்நிலையில் குழந்தை இலக்கியம் இன்றியமையாததாயிற்று. அக்குறையை நீக்கிக் குழந்தைகள் உளங் குளிர்ந்து பாடுவதற்கு ஏற்ற எளிய கவிதைகள் பலவற்றைத் தந்தவர் கவிமணி [4] என்று சொல்லின் செல்வர் இரா.பி. சேதுபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவரும் கவிமணியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் ‘கவிமணியின் பாடல்களிற் சில சிறு குழந்தைகளின் சிவப்பூறிய மலர் வாயினின்றும் தேனினும் இனியவாய் மறித்துச் சுரக்கின்றன’ என்று கூறியுள்ளார். [5]

குழந்தை உள்ளம்

கவிமணி அவர்கள் குழந்தைகளிடம் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். தம் வீட்டுச் சுவர்களில் குழந்தைகள் பலவற்றின் படங்களைத் தொங்கவிட்டிருப்பார். அவர் வாழ்வில் அவருக்குக் குழந்தைச் செல்வம் வாய்க்கவில்லை. ஊரில் உள்ள குழந்தைகளையெல்லாம் தம் குழந்தையாக எண்ணினார். குழந்தைகள் நெஞ்சம் உருகி நைந்தால் இவரும் உள்ளம் உருகிக் கரைவார். குழந்தைகள் அழுவதைக் காண மனம் பொறுக்க மாட்டார். எனவே குழந்தைகளின் இன்ப துன்பங்களில் பெரும்பங்கு கொண்டார். ‘மலரும் மாலையும்’ என்னும் தம் கவிதைத் தொகுதியை,

செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்
கிந்தநூ லுரியதாய் என்றும் வாழ்கவே

என்று தம்முடைய கவிதை நூலையே தமிழ்நாட்டுச் சிறுவர் சிறுமியர்களுக்கு உரிமையாக்கினர்.

(தொடரும்)

சான்றோர் தமிழ், சி. பாலசுப்பிரமணியன்

குறிப்புகள்:

[1]. அகநானூறு, 66, 1-4.[2]; புறநானூறு, 188
[3]. அகநானூறு, 54: 17-20 [4]; சுடர், கவிமணி மலர், பக்கம் 35.
[5]. தமிழ்ச்சுடர் மணிகள், பக்கம் 423.

Friday, September 23, 2022

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 – சி.பா.

 அகரமுதல




(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5  தொடர்ச்சி)


4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5

கால நதியின் கதியதினில்
கடவுள் ஆணை காண்பீரேல்
ஞால மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!

என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார்.

‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார்.

கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும்

கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின் புன்னகைடோல் பூத்திடுவோம்’ என்றும், ‘கம்பன் பாமணக்கும் தமிழினைப்போல் பரிமளிப்போம்’ என்றும் பாடும் பாடல்களில் உவமையின் எளிமையைக் காணலாம்.

‘தீபாவளிப் பண்டிகை’ என்ற பாட்டில்,

இட்டிலி வீரர்தென் னிந்தியராம்என்பது
இன்று காம் காட்டி விடுவோம்அடா!
சட்டினி நண்பன் துணை யிருக்கஅதில்
சந்தேகம் உண்டோநீ சொல்வாய்அடா!

என்ற பாடலில், நகைச்சுவை கொப்பளித்து வருவதனைக் காணலாம்.

உழைப்பும் உடல் நலமும்


உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்பர் பெரியர். கவிமணியும், ‘ஆக்கம் வேண்டுமெனில், ன்மை அடைய வேண்டுமெனில், ஊக்கம் வேண்டுமப்பா, ஓயாது உழைக்க வேண்டுமப்பா எள்று கூறுகிறார்.

கூழைக் குடித்தாலும் குளித்தபிறகு குடிக்க வேண்டு மென்றும், ஏழையே ஆனாலும் இரவில் நன்றாய் உறங்க வேண்டுமென்றும் அறிவுறுத்துகின்றார். நூறு ஆண்டுகள் வாழ்வதன் இரகசியத்தைப் பின் வருமாறு கூறுகின்றார்:

தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஒட்டி விடும், அப்பா!
நூறு வயதும் தரும், அப்பா!

அடுத்து,

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!

என்று கூறுகிறார். இங்குக் கவிமணியின் சொல்லு முறை (the technique of expression) நயம்பட அமைந்துள்ளது.

கவிமணி உணர்த்தும் தேசியம்

பாரதியாரின் கவிதை வெறியையோ தேசிய ஆவேசத்தையோ கவிமணியிடம் காண்பதற்கு இல்லை. எனினும், கவிமணியின் கவிதைத் திறன் போல் தேசிய உணர்ச்சியும் நம் பாராட்டுக்கு உரியதே.

கைத்திறன் பாட்டிலே ‘நாடிய சீர் நாடடைய’ என்று தொடங்கும் பாடலை அனுபவித்த குமரன் வாசகர்களில் சிலர், தேசிக விநாயகம் பிள்ளையைத் தேசிய விநாயகம் பிள்ளை என்றும் வாய் குளிரக் குறிப்பிடலாயினர்.

பாரதியையும் கவிமணியையும் ஒப்பு நோக்கிய இராசாசி பின்வருமாறு கூறியுள்ளார். ‘பாரதி காட்டுப் புளியமரம் போன்றவர்; காடு முரடு, உயிர் இருக்கும்; புளிப்பு உரம் இருக்கும். கவிமணியின் கவிதையில் நகாசு வேலை மிகுந்திருக்கும். பிறகு அன்பு மிளிரும். அத்தகைய கவி தேசிக விநாயகம் பிள்ளை;”[11] இஃது ஓரளவு உண்மைதான்.

மேற்காட்டிய பகுதிகள் கவிமணியின் தேசியப் பற்றை உணர்த்தும். ‘தாயிற் சிறந்ததப்பா பிறந்த தாய் நாடு’ என்று தாய்நாட்டுப் பற்றை ஊட்டி, “பேணி நம் சந்தத் தமிழ் வளர்ப்போம், தாய் நாட்டுக்கே உழைப்போம்” என்று. தமிழ்ப் பற்றையும் நாட்டுப் பற்றையும் விளக்கி, ‘காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய்வோம்’ என்று சொல்லி, பாரில் உயர்ந்த இமயமலையையும், அதன் சிகரத்தில் பறக்கும் தேசக் கொடியையும் காட்டி,

மானம் உருவாக வந்தகொடி – இதை
மாசுறச் செய்வது பாவம், பாவம்!
ஊனில் உயிருள்ள கால மெல்லாம்-மிக
ஊக்கமாய் கின்று.நாம் காத்திடுவோம்

என்று நாட்டுப் பற்றுணர்வோடு நவில்கின்றார். ‘உத்தமனாம் அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய் நெஞ்சே தினம்’ என்று காந்தியடிகளைப் போற்றுகின்றார். இறுதியில், உலகமெல்லாம் ஒரு குடும்ப மாக வாழ வேண்டும் என்பதனை,

உலக மக்களெலாம்அன்போடு
ஒரு தாய் மக்களைப் போல்
கலகமின்றி வாழும்காலம்
காண வேண்டுமப்பா!

என்ற பாடலில் கவிமணி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். கவிமணியின் கதர்ப்பற்றும் காந்தியப்பற்றும் நாடு அறிந்தவை.

முடிவுரை

கவிமணி குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்,குழந்தைகளின் பேச்சில் மகிழ்பவர், அவர்களோடு உரையாட விரும்புவர்.

“அவர்(கவிமணி) குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்; குழந்தைகளோடு இனிமையாகப் பேசுவதில் ஆசை உடையவர்; குழந்தைகளுடைய பேச்சையும் அவற்றின் இடையிடயே தோன்றும் பளிச்சென்று தோன்றும் உவமைகளையும் எண்ணி மகிழ்பவர்.”[12] இவ்வாறு திரு.பெ.நாஅப்புசாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

கவிமணி’ என்னும் பட்டம் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க அன்பர்களால் சென்னை பச்சையப்பன் கல்லுரியில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களால் 1940 ஆம் ஆண்டு திசம்பர் 24 ஆம் நாள் தரப்பட்டது. கவிமணி என்ற தம் பெயருக்கு ஏற்ப நல்ல கவித்துவத்தோடு மணியான கவிதைகளைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்காக வழங்கிய பெருமை தேசிக விநாயகம் பிள்ளையைச் சாரும். பாரதியார் முப்பெரும் பாடல்வழி எப்போதும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுவது போல, கவிமணி அவர்களும் தாம் இயற்றிய குழந்தைப் பாடல்களால் தமிழ்கூறு நல்லுலகத்தால் என்றென்றும் நினைவுகூரப் பெறுவர் என்பது உறுதி.

குறிப்புகள்:

[11]. பி. சிரீ. நானறிந்த தமிழ் மணிகள், ப. 52.
[12] . சுடர்: கவிமணி மலர். 1965, தில்லித் தமிழ்ச் சங்கம்-ப.49

(தொடரும்)

சான்றோர் தமிழ்

முனைவர் சி. பாலசுப்பிரமணியன்

Tuesday, September 20, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 8

 அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம், 7 இன் தொடர்ச்சி)

அத்தியாயம் 5

கனம் கிருட்டிணையர்

சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து புகழ் பெற்ற சங்கீத வித்துவான்களுள் இவர் ஒருவர். என்னுடைய பாட்டியாருக்கு இவர் அம்மான். இவருடைய இயற்பெயர் [1]கிருட்டிணைய ரென்பது. சங்கீத மார்க்கங்களாகிய கனம், நயம், தேசிகம் என்னும் மூன்றனுள் ஒன்றாகிய கனமார்க்கத்தை மிக்க ஊக்கத்துடன் அப்பியாசம் செய்து அதிற் சிறந்த திறமையைப் பெற்றார்.

இவர் உடையார்பாளையம் தாலூகாவில் உள்ளதாகிய திருக்குன்றம் என்ற ஊரிலே பிறந்தவர். இவருடைய பரம்பரையினர் சங்கீத வித்துவான்கள். இவருக்கு நான்கு தமையன்மார்கள் இருந்தனர். அவர்களும் சங்கீதத்தில் பயிற்சியுள்ளவர்களே. ஆயினும் சகோதரர் ஐவரிலும் மூத்தவராகிய சுப்பராமைய ரென்பவரும், யாவரினும் இளையவராகிய கிருட்டிணையரும் சங்கீத சாகித்தியங்களிற் பெருமை பெற்றனர்.

இவர் இளமையில் தம் தந்தையாராகிய இராமசாமி ஐயரிடத்தும் அப்பால் தஞ்சாவூர் சமசுத்தான சங்கீத வித்துவானாக இருந்த பச்சைமிரியன் ஆதிப்பையரிடத்தும் சங்கீத சிட்சை பெற்றார். பிறகு சில காலம் தஞ்சாவூர் சமசுதானத்துச் சங்கீத வித்துவான்களுள் ஒருவர் ஆனார்.

அக்காலத்தில் பொப்பிலி சமசுதானத்தைச் சேர்ந்த கேசவையா என்னும் பிரபல சங்கீத வித்துவான் ஒருவர் தஞ்சைக்கு வந்தார். அவர் கனமார்க்கத்தில் மிகச் சிறந்த வன்மை பெற்றவர். தஞ்சை அரசருடைய சபையில் அவர் பாடினார். கனமார்க்கத்தின் தன்மையை அரசரும் பிறரும் அறிந்து பாராட்டினர். தமிழ்நாட்டில் அக்காலத்தில் கனமார்க்கம் வழக்கத்தில் இல்லை. அதனால், ‘இந்த வித்துவானுடைய உதவியால் யாரேனும் கனமார்க்கத்தை அப்பியாசம் செய்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நமது சமசுதானத்திற்கும் கௌரவமாக இருக்குமே!’ என்று அரசர் எண்ணினார். சமசுத்தான வித்துவான்கள் கூடியிருந்த சபையில் அவ்விருப்பத்தை அவர் வெளியிட்டபோது ஒருவரேனும் அங்ஙனம் செய்ய முன்வர வில்லை. கனமார்க்க சங்கீதத்திற்கு நல்ல தேகபலமும் இடைவிடாத முயற்சியும் வேண்டும். அதனால் வித்துவான்கள் அதனைப் புதிதாகப் பயில்வதற்கு முன்வர வில்லை.

அப்போது இளைஞராக இருந்த கிருட்டிணையர் தாம் அப்பியாசம் செய்வதாகத் தைரியத்துடன் கூறினார். பொப்பிலி கேசவையாவிடம் அந்த மார்க்கத்தின் இயல்புகளையும் அதனைச் சார்ந்த சக்கரதானத்தைப் பாடும் முறையையும் தெரிந்துகொண்டு கபித்தல மென்னும் ஊருக்குச் சென்று இராமபத்திர மூப்பனாரென்னும் செல்வருடைய ஆதரவில் அப்பியாசம் செய்யத் தொடங்கினார். அந்த அப்பியாசம் வரவர முதிர்ச்சி அடைந்தது. கடைசியில் தஞ்சை அரசர் முன்னிலையில் பொப்பிலி கேசவையாவே வியந்து பாராட்டும்படி பாடிக் காட்டினார். அது முதல் இவர் கனம் கிருட்டிணையரென்றே வழங்கப் பெற்றார்.

கனம் கிருட்டிணையர் சில காலம் திருவிடைமருதூரில் மகாராட்டிர மன்னர் வமிசத்தைச் சேர்ந்த அமர சிம்மரது சமூக வித்துவானாக இருந்தார். நந்தன் சரித்திரக் கீர்த்தனையின் ஆசிரியராகிய சிரீ கோபால கிருட்டிண பாரதியார் அங்கே வந்து அரண்மனை வித்துவானாகிய இராமதாசரென்னும் பெரியாரிடத்தில் சங்கீத அப்பியாசம் செய்து வந்தார். இடையிடையே கனம் கிருட்டிணையருடன் பழகி இவரிடமும் சில கீர்த்தனைகளைக் கற்றுக்கொண்டார்.

பிறகு கனம் கிருட்டிணையர் உடையார்பாளையம் சமசுத்தானாதிபதியாக அப்போதிருந்த கச்சிரங்கப்ப உடையாரால் அழைக்கப் பெற்றுத் தம் வாழ்வு முழுவதும் அந்த சமசுத்தானத்துக்கு வித்துவானாகவே விளங்கி வந்தார். இவர் தமிழில் கீர்த்தனங்களை இயற்றும் சக்தியும் பெற்றிருந்தார்.

திருவையாற்றுக்கு இவர் ஒரு முறை சென்ற காலத்தில் சிரீ தியாகையரைச் சந்தித்து அவருடைய விருப்பத்தின்படி அடாணா ராகத்தில், “சும்மா சும்மா வருகுமா சுகம்” என்னும் கீர்த்தனம் ஒன்றை இயற்றியிருக்கிறார்.

இவருடைய பெருமையினால் சிலருடைய பொறாமைத் தீ மூண்டு எரியத் தொடங்கியது. யாரோ சிலர் உடையார்பாளையம் சமீன்தாரிடம் இவரைப்பற்றிக் குறைகூறி அவரது மனம் சிறிது சலிக்கும்படி செய்து விட்டார். அந்த சமீன்தார் கச்சிரங்கப்பருடைய குமாரராகிய கச்சிக் கல்யாணரங்க உடையா ரென்பவர்.

ஒரு நாள் கனம் கிருட்டிணையர் வழக்கம்போல் சமீன்தாரைப் பார்க்கப் போனபோது அவர் முகம் கொடுத்துப் பேசவில்லை. ஏதோ வேலையாக இருப்பவரைப்போல் இருந்தார். அறிவாளியாகிய இந்தச் சங்கீத வித்துவானுக்கு, ‘இது யாரோ செய்த விசமத்தின் விளைவு’ என்று தெரிந்து விட்டது. இவர் மனம் வருந்தியது. ஆனாலும் அதைத் தாம் தெரிந்துகொண்டதாக அறிவித்துவிட வேண்டுமென்று விரும்பினார்.

தம்முடைய மனவருத்தத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பது இவருக்கு உசிதமாகப்பட வில்லை. குறிப்பாகத் தெரிவிக்க எண்ணினார். சங்கீதமும் சாகித்தியமும் இவருக்கு எந்தச் சமயத்திலும் ஏவல் புரியக் காத்திருந்தன. ஒரு நாயகி பாடுவதாகப் புதிய கீர்த்தனம் ஒன்றைப் பாட ஆரம்பித்தார்.

“பத்துப்பை முத்துப்பை வச்சிரப் பதக்கமும் பைபையாப் பணத்தைக் கொடுத்தவர் போலப் பாடின பாட்டுக்கும் ஆட்டுக்கும் நீரென்னைப் பசப்பின தேபோதும் பலனறி வேன்காணும்”

என்று சுருட்டி இராகத்தில் ஒரு பல்லவியை எடுத்தார்.

சமீன்தார் திடுக்கிட்டுப் போனார். இந்தச் சுருட்டி ராகம் அவர் உள்ளத்தைச் சுருட்டிப் பிடித்தது. கனம் கிருட்டிணையர் நினைத்திருந்தால் பெரிய சமசுத்தானங்களில் இருந்து இராசபோகத்தில் வாழலாமென்பதை அவர் அறிந்தவர். தம்முடைய சம்மானத்தை எதிர்பாராமல் அன்பை மாத்திரம் விரும்பி உடையார்பாளையத்தில் இருப்பதும் சமீன்தாருக்கு நன்றாகத் தெரியும். இந்த எண்ணங்களைப் பொறாமைக்காரருடைய போதனைகள் மறையச் செய்தன. கிருட்டிணையருடைய பல்லவி அந்த சமீன்தாருடைய காதில் விழுந்ததோ இல்லையோ உடனே அவரது பழைய இயல்பு மேலெழுந்து நின்றது. ‘என்ன பைத்தியக்காரத்தனம் பண்ணிவிட்டோம்! நாம் இவருக்கு முத்துப் பையா தந்திருக்கிறோம்! வச்சிரப் பதக்கமா கொடுத்தோம்! இவரால் நமக்கு எவ்வளவு பெருமை! நடுக்காட்டிலுள்ள இந்த ஊருக்கு வேறு சமசுத்தானத்திலிருந்து வித்துவான்களெல்லாம் வந்து போவது யாராலே? இவராலே அல்லவா? இதை நாம் மறந்து விட்டோமே’ என்று நினைந்து இரங்கினார்.

“சுவாமீ! சமிக்க வேண்டும். நான் தெரியாமல் பராமுகமாக இருந்துவிட்டேன்” என்று சமீன்தார் வேண்டிக் கொண்டார்.

நினைத்த காரியத்தைச் சாதித்துக்கொண்ட கிருட்டிணையர் பழைய பல்லவியை சமீன்தாரைப் புகழும் முறையில் மாற்றிப் பாடத் தொடங்கினார்:

“பத்துப்பை முத்துப்பை வச்சிரப் பதக்கமும் பரிந்து கொடுத்து மிகச்சுகந் தந்துபின் பஞ்சணை மீதினிற் கொஞ்சி விளையாடி ரஞ்சிதமும் அறிந்த மகராசனே”

என்று இவர் அதை மாற்றிப் பாடவே சமீன்தார் முகம் மலர்ந்தது.

“சங்கீதமும் சாகித்தியமும் உங்களுடைய அதிகாரத்தின் கீழ் உங்கள் இசுட்டப்படி ஏவல் செய்கின்றனவே!” என்றார் அவர்.

நான் என்ன சமீன்தாரா? ஏவல் செய்ய எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? என்னுடைய அதிகாரத்துக்கு யார் வணங்குவார்கள்?” என்று சிரித்துக்கொண்டே கிருட்டிணையர் கூறினார்.

“இதோ, நான் இருக்கிறேன்; உங்கள் சங்கீத அதிகாரத்துக்குத் தலைவணங்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள்” என்று சமீன்தார் சொல்லியபோது அவ்விருவருடைய அன்புள்ளங்களும் மீட்டும் பொருந்தி நின்றன.

இவ்வாறு கனம் கிருட்டிணையருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல உண்டு. அந்த அந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி இவர் பாடிய கீர்த்தனங்களும் பல. இவருடைய சந்தோசமும், கோபதாபங்களும், வெறுப்பும், பக்தியும் கீர்த்தனங்களாக வெளிப்பட்டுள்ளன.

இவரிடம் என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் சங்கீத அப்பியாசம் செய்தனர். அவ்விருவருக்கும் இவருடைய கீர்த்தனங்கள் பல பாடம் உண்டு. 

– அடிக்குறிப்பு : 1. கனம் கிருட்டிணையருடைய சரித்திரத்தை 1936-ஆம் வருடத்தில் தனியே விரிவாக எழுதிக் கீர்த்தனங்களுடன் வெளியிட்டிருக்கிறேன்.-உ.வே.சா.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Sunday, September 18, 2022

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 3/3

 அகரமுதல





(தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 2/3 – சி. பா. தொடர்ச்சி)

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 3/3


தமிழ்க் குடும்பம்

அடிகளாரின் குடும்பம் பெரியது. அடிகள் துறவு நிலையைடைந்தாலும் மனைவி மக்களை விட்டுப் பிரியவில்லை. அடிகள் மேற்கொண்டது. சமுதாயத்தில் கடமைகளைச் செய்து கொண்டே அதன் பலனில் பற்று வைக்காத உயர்ந்த இல்லறத் துறவு நிலையாகும். அடிகளாரின் இல்லத் துணைவியார் சவுந்தரவல்லி அம்மையார் மனைத் தக்க மாண்புடையவர். இவ் இருவருக்கும் முறையே 1894இல் சிந்தாமணி என்ற பெண் மகவும், 1903இல் நீலாம்பிகை என்ற பெண் மகவும், 1904இல் திருஞான சம்பந்தன், 1906இல் மாணிக்கவாசகன், 1907இல் திருநாவுக்கரசு. 1909இல் சுந்தரமூர்த்தி என்னும் ஆண் மக்களும், 1911இல் திரிபுரசுந்தரி என்ற பெண்மகவும் பிறந்தனர்.

இலங்கைப் பயணம்

அடிகளாரின் சொற்பொழிவுத் திறன் இலங்கையிலும் ஒலிக்கத் தொடங்கியது. 1914 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன் முறையாகக் கொழும்பிற்குச் சென்றார் அடிகள். அவர்தம் சொற்பொழிவு இலங்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடிகளுக்குப் பெரும் பொருளும் கிடைத்தது. இலங்கைப் பயணத்தினால் அடிகளுக்குக் கிடைத்த மிகப் பெருஞ் செல்வம் திருவரங்கனாரின் நட்பாகும். பின்னாளில் அடிகளாரின் மகளார் நீலாம்பிகையாரை மனந்தவரும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவிய பெருமைக்குரியவரும் இத் திருவரங்கனாரே யாவர். இரண்டாம் முறையாக 1917 ஆம் ஆண்டு மேத்திங்கள் கொழும்புக்குச் சென்றார். மூன்றாம் முறையாக 16-12-1921 இல் கொழும்பு சென்று பல்வேறு இடங்களில் சொற்பொழி-வாற்றிவிட்டு 20-1-1922இல் பல்லாவரம் திரும்பினார்.

இலங்கை சென்று, சொற்பொழிவின் மூலம் திரட்டி வந்த பெரும் பொருளும், தமிழ் நாட்டில் சொற்பொழிவின் மூலம் கிடைத்த பொருளும் சேர்ந்து பொது நிலைக் கழக மாளிகையாக உருவாயிற்று. பொதுநிலைக் கழகத்தின் இருபதாண்டு நிறைவு விழா 1931 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் இரண்டாம் நாள் கொண்டாடப்பெற்றது. பொது நிலைக் கழக விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. அவ் விழாப் பேரவையில் முடிவு செய்த பல சீர்த்திருத்தங்கள், அடிகளாரின் சீர்திருத்த மனப்பான்மையைக் காட்டும். அடிகளாரின் சமய மறுமலர்ச்சிச் சிந்தனைகள் பின் வருமாறு :

1. மடத்தலைவர்கள் எல்லாக் குலததவர்க்கும வேற்றுமையின்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும்.

2. கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியன பெறவும் நிற்கவும் கோயில் தலைவர்கள் இடஞ்செய்தல் வேண்டும்.

3. பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதார்) எல்லாரையும் தூய்மையாகத் திருகோயில்களிற் சென்று வழி பாடாற்றப் பொதுமக்களும், கோயில் தலைவர்களும் இடந்தரல் வேண்டும்.

4. கோயில்களிற் பொதுமாதர் திருப்பணி செய்தல் கூடாது.

5. வேண்டப்படாதனவும், பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும், அறிவுக்குப் பொருத்த மற்றனவும் ஆகிய திருவிழாக்களையும். சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது; தூயதும் வேண்டப்படுவதுமான சடங்குத் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல் வேண்டும்.

6. சாரதா சட்டத்தை உடனே செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.

7. கைம்பெண்களைத் தாலியறுத்தல், மொட்டை யடித்தல், வெண்புடவை யுடுத்தல், பட்டினி போடல் முதலியவை நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத்தக்க இச்செயல்களை நீக்குதல் வேண்டும். கைம்பெண் மணம் முற்காலத்திலும் இருந்திருப்பதாலும், நூல்களில் ஒப்புக் கொண்டிருப்பதாலும் அதனைச் செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.

8. சாதிக் கலப்புமணம் வரவேற்கத்தக்கது.

9. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.

10. தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஆனர்சு வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும்.

நூல்கள்

அடிகளாரின் எழுத்துப்பணி, தமிழ் இலக்கியத்தில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியது. சமயம், தமிழாராய்ச்சி, நாடகம், நாவல் போன்ற பல்வேறு துறைகளிலும் தம் ஆளுமையைச் செலுத்தியவர் அடிகள். “திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை.” “சைவசித்தாந்த ஞான போதம்.” அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மை,” “சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை” என்பன சமய நூல்களாகும். “மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்,” “பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்,” “கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா,” “சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்,” “தமிழர் மதம்,” “சோம சுந்தரக் காஞ்சியாக்கம்,” “சாகுந்தல நாடக ஆராய்ச்சி,” “முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை,” “பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை,” “வேளாளர் நாகரிகம்,” “இந்தி பொது மொழியா,” “சிந்தனைக் கட்டுரைகள்” முதலியன அவர்தம் ஆராய்ச்சி நூல்களாகும்.

“கோகிலாம்பாள் கடிதங்கள்,” “குமுதவல்லி அல்லது நாக நாட்டரசி,” “சாகுந்தலம்” ஆகிய படைப்பிலக்கியங்களும், “தொலைவில் உணர்தல்,” “பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்” ஆகிய அறிவியல் நூல்களும் தமிழுக்கு வளம் சேர்த்தவையாகும்.

இறுதி வாழ்க்கை

அடிகள் இறுதிக் காலத்தில் பொதுநிலைக் கழக ஆசிரியராகவும். மற்றும் பல்வேறு நூல்களின் ஆசிரியராகவும், கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும் சிறப்புற வாழ்ந்தனர். இவற்றிலிருந்து கிடைத்த வருவாயே அடிகளின் குடும்பச் செலவிற்குப் பயன்பட்டது.

எழுத்தாலும், பேச்சாலும் சைவத்தையும் தமிழையும் வளர்த்த அடிகளின் வாழ்வு 15-9-1950 ஆம் நாள் மாலை 3-30 மணிக்கு முடிவுற்றது. அடிகளின் தனித் தமிழ்ச் சிந்தனையும், அகன்ற ஆராய்ச்சிப் புலமையும், அழகு நடையும் இன்றும் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் நின்று ஒளிவீசி வருதலைக் காண்கிறோம்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்