Tuesday, February 23, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18: ம. இராமச்சந்திரன்



அகரமுதல118, தை 17, 2047 / சனவரி 31, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18: ம. இராமச்சந்திரன்

 (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: தொடர்ச்சி) 

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu 

18

  தேர்தல் என்றால் தேடி ஓடுவர். அனைவரும் மயங்கும்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று சொல்வர். காலில் விழுந்து வணங்குவர். இரவு பகல் பாராது ஓயாமல் உழைப்பர். உள்ள பொருளை எல்லாம் இழப்பர். உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார். தம்முடைய பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என்பதற்காக வேண்டுவன எல்லாம் செய்வர். வசதியற்றுத் துன்புறும் ஏழை மாணவர்க்கு வேண்டும் உதவியைச் செய்ய விழையார்.
இதனை,
‘           தேர்தல் என்றால் தேடி வருவர்
            அனைவரும் மயங்க அள்ளி வீசுவர்
            இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று
            படிந்தும் பணிந்தும் பகலிரா வின்றி
           ஓயா துழைத்தே உளவெல்லாம் போக்குவர்
            உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார்
            விளம்பரம் பெற்றிட வேண்டுவ செய்வார்
            ஏழை மாணவர் இன்னல் போக்கிடார்’ 34
என்ற அடிகளின் மூலம் தேர்தலில் ஈடுபடும் செல்வர்களின் இயல்பைச் சித்தரிக்கிறார் கவிஞர்.
 பாரியும் ஓரியும் வாழ்ந்த நாட்டில் உற்றுழி உதவும் வள்ளல் பெருமக்கள் இல்லாமல் போகவில்லை. இருக்கின்றார் புதுக்கோட்டையில். மிக அண்மையிலேயே உள்ளது அவ்வூர். எனவே விரைந்து செல்வாய் புதுக்கோட்டை
 அண்ணன் வீடு எங்கே? என்று எவரைக் கேட்பினும் தங்கு தடையின்றி அன்புடன் அங்கு அழைத்துச் செல்வர். அங்கே கலைபயிலும் சிறுவர்கள் களிப்புடன் இருப்பர். செய்தித் தாள்களும் நன்னெறி பயிற்றும் செந்நெறி நூல்களும் பயில்வர். அண்ணனும பக்கம் இருந்து ஐயம் நீக்கி, தக்க அறிவுரை வழங்குவார். அங்கே கட்டுரை திருத்தும் காட்சியும் காணலாம். ஏழை மாணவர் எவர் வந்தாலும் இன்சொல் கூறி வேண்டுவன உதவுவார். தாழ்த்தப்பட்ட குடிமக்களுக்குக் கல்வி புகட்ட காந்திபுரத்தில் இரவுப் பள்ளியும் இலவசமாக நடத்துவார். சிறுவர்க்கு எழும் ஐயம் நீக்குவதற்கு ஆசிரியரை அமர்த்தி வகுப்பில் முதல்வனாக வரவும் செய்வார். பிறவியில் எவரும் பேதையர் அல்லர் என்பதை இன்மன்பதைக்கு உணர்த்தவும் செய்வார். வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெற்றால் எந்நிலையில் உள்ளவரும் பெரிய அறிஞராய் விளங்க முடியும் என்னும் உண்மையை உலக்குக்கு உணர்த்திட பரிசுகள் பல வழங்கிடும் பாங்கினையும் அறியலாம்.
  கடந்த கால்நூற்றாண்டாகக் கல்வித் தொண்டே கடவுட் தொண்டாகக் கருதிப் பணி செய்து வருகிறார். ஒழுக்கத்தாலும் புலமையாலும் உயர்ந்த பண்பாலும் மேம்பட்ட மாணவர்களை ஆண்டுதோறும் வெளிப்படுத்துகிறார். மாணவர் எவரேனும் துன்பம் காராணமாகத் துவண்டிடக் கண்டால், நேரம் அறிந்து குழந்தை க்குப் பாலூட்டும் தாயைவிட மிகவும் இரக்கத்துடன் மற்றவர் அறியாத வகையில் உதவி செய்வார். இக்கருத்தை,
‘           கால்நூற் றாண்டாய்க் கல்வித் தொண்டே
            கடவுள் தொண்டாய்க் கருத்துடன் ஆற்றி
            ஒழுக்கம் புலமை உயல்நலம் பண்பு
            மிக்கோர் தம்மை வெளிவரப் செய்துளர்
           மாணவர் எவரும் வருந்திடக் காணின்
            பால்நினைந் தூட்டும் தாயினும் பரிந்து
            பிறர் அறி யாத பெற்றியில் உதவுவர்’35
என்ற அடிகள் மூலம் புலப்படுத்துகின்றார்.
  இன்னும், தமக்கு என்று உள்ள உணவுப் பொருளையும் எனக்குப் பல நாட்கள் தந்துள்ளார். தேடும் பொருளை எல்லாம் பிறர்க்கு வழங்கி மகிழ்வார். நாளிதழும், நம்மை பயக்கும் நூல்களும் பல பெற்ற பரிவோடு கொடுப்பர். வீட்டு முற்றமும் கூடச்சில நேரங்களில் பள்ளியாகத் திகழும்.
           ‘நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
            வகையென்ப வாய்மைக் குடிக்கு’ 36
என்று வள்ளுவர் கூறும் இலக்கணத்தின் வடிவமாகத் திகழ்வார்.
  அவர் மனநிலை அறிந்த அன்புடன் செயல்படும் தம்பியையும் மக்களையும் சுற்றத்தினரையும் ஒருசேரப் பெற்றவர்.
         ‘ மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
            யான் கண்ட டனையரென் இளைஞரும் வேந்தனும்
            அல்லவை செய்யான் காக்கும்’ 37
என்ற பிசிராந்தையாரின் மொழிக்கேற்ப அவர் இல்லறம் அமைந்துள்ள பாங்கு அறிந்து இன்புறத்தக்க சிறப்புடையது.
தம்பி கோவிந்தசாமி அறநெறி போற்றும் அரிய வணிகராவர்.
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉங்   குறைகொடாது
 பல்பண்டம் பகர்ந்து வீசும்’ 38
என்று பட்டினப்பாலை கூறும் வணிகப் பண்பினைப் பெற்று விளங்குகிறார். அண்ணனுக்கேற் அருள்நலத் தம்பியாம் அவர். எப்பொழுதும் புன்னகை தவழும் பொலிவான முகத்தோடு தோற்றமளிப்பார். அவர்கள் உடலால் வேறுபட்டுக் காட்சியளிப்பினும், உள்ளத்தால் ஒன்றிய பண்பாளர்கள். அண்ணன் தம்பியாரின் உறுதியான பிணைப்பால் அவர்களைப் பிரிக்க முயன்றவர்கள் தோல்வியைத்தான் அடைந்தார்கள்.
  ஆதலால், குமணனின் வேறுபட்ட குணக்குன்றாம் அவனை நீ காண்பதற்குச் சிறிதும் அஞ்ச வேண்டாம. வீடாயினும் சரி அன்றி வெளியிடமாயினும் சரி மாணவர் கூட்டம் அவரை அன்புடன் தொடர, அறிவுரை கூறிக் கொண்டிருப்பார். கையிடத்துக் குடையும், காலில் செருப்பும் கொண்டு, உடம்பில் தூய வெண்மைச் சட்டையும் அணிந்து இருப்பர். எளிமையும் இனிமையும் ஏற்றமும் பண்பும் ஓர் உருவெடுத்தது போல் செம்மாந்த நடையுடன் செல்வதைக் காணலாம்.
  தம்பி நீ சென்று காண்பாயாக. வீட்டிலும் வெளியிலும் காண்பதன்றி அவர் விரும்பிச் செல்லும் இடத்தைச் சொல்லுவேன்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,அ-ள் 62-69
  1. சி. இலக்குவனார், மாணவர் ஆற்றுப் படை,அ-ள் 95-101
  1. திருவள்ளுவர், திருக்குறள், ‘குடிமை’ குறள் 953
  2. பிசிராந்தையார், புறநானூறு செய்யுள் 191, அ-ள் 3-5.
  3. கடியலூர் உருந்திரங்கண்ணார், பட்டினப்பாலை,அ-ள் 209-211
(தொடரும்) 
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19)

Saturday, February 20, 2016

மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர் – அப்துல் கையூம்


மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர் – அப்துல் கையூம்

கா.அப்துல்கபூர் , abdulkapuur


மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர் 

[ 1955/1924 – 2033/2002]

  இந்த மண்ணை விட்டுப் போகையில் சடலமாகப் போகின்றவர் பலர்.  வரலாற்றாய்ப்  போகின்றவர் வெகு சிலர். வரலாறு சமைப்பது கருவாடு சமைப்பது போலன்று.  வாழ்வாங்கு வாழ்ந்த பின்னும் வாடாத மலராய் நம் உள்ளத்தில் மணம் வீச வேண்டும்.  ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’. பிறந்த பயனை பிறரறியச் செய்ய வேண்டும். அதற்கு எடுத்துக்காடு நம் பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்.
தமிழ் எப்போது பிறந்தது  என எனக்குத் தெரியாது. தமிழ் எங்கு பிறந்தது அதுவும் எனக்குத் தெரியாது.  ஆனால் தமிழ் தவழ்ந்ததை நான் கண்டிருக்கிறேன்; என் தமிழாசான் “இறையருட் கவிமணியின் நாவில் எங்ஙனம் அது தவழ்ந்து விளையாடும்; எப்படியெல்லாம் புரண்டு விளையாடும் என்பதை நான் நன்கறிவேன். இந்த தமிழ்ப் பாவாணர் எனக்கு தமிழ்ப்பா ஆனவர்.
அந்த நாவுக்கரசரின் நறுமணம் கமழும் நற்றமிழ் மழையில் நாள்முழுதும் நனைவது நலம்பயக்கும் ஆனந்தம்;  நயம்பூக்கும் பேரின்பம்.
இந்த எழுதுகோல் ஓவியரிடம் இலக்கியம் பயில்வது எழும்பிவரும் கடலலையில் இரண்டு கால்களையும் நனைக்கையில் ஏற்படும் நயாகரா இன்பத் துய்ப்பு. இந்தப் பன்மொழிப் புலவரின் பன்னீர் தெளிக்கும் பைந்தமிழைப் பருகுவது  தெவிட்டாது.
இறையருட் கவிமணி!
இதயத்தின் ஒளிமணி!
சொல்லும் செயலும்
விரலும் ரேகையுமாய்
விளங்கிய வித்தகர்!
நாக்குத் திரியில்
மறைச் சுடரேந்தி
தீனெறி காட்டிய
மனித விளக்கு
என்று இவரைக் கவிபாடிக் களிப்புறுகிறார் கவிஞர் கஃபூர் தாசன்.
கடல் மடையின் திறப்பா அல்லது காட்டாற்று வெள்ளமா எனக் கருத்தியம்பக் குழம்பும் கன்னித்தமிழ்ப் பேச்சு அவர் பேச்சு. தென்குமரித் திருவிதாங்கோட்டின் தேன்சிந்தும் தெவிட்டாத் தமிழ் அவரது தமிழ்.
பைந்தமிழ் வளர்த்த இவரது பண்ணையில் நானும் மேய்ந்தேன் என்பது நான் அடைந்த பாக்கியம். அவரது கூரிய சொற்களும் சீரிய சொற்களும் வீரிய விதைகளாய் என்னுள் விதைந்தன. இளம்பிறை பள்ளியை வளர்பிறையாய் ஆக்கிய முத்தமிழ் முழுமதி அந்த அறிவுமதி.
1973-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மீலாது விழா கவியரங்கத்தில் நம் பேராசிரியர் தலைமையேற்றுப் பங்கேற்கிறார்.
ஒற்றை வரியில் தான் பணிபுரிந்த அனைத்துக் கல்லூரிகளையும் குறிப்பிட்டு ஒரு தன்னிலை விளக்கத்தைத் தருகிறார். அது அவரால் மட்டுமே முடியும்.
பாடியதில் நடுநகரில் பாளையத்தில் பட்டினத்தில்
பாடிவிட்டுப் பட்டிருக்கும் பறவையென அழைத்துவந்தே
பாட்டரங்கில் மாட்டிவிட்டீர் பாப்புனையத் தூண்டிவிட்டீர்”
[பாடி – வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி
நடுநகர் – திருச்சி சமால் முகம்மது கல்லூரி
பாளையம் – உத்தம்பாளையம்  ஃகாசி கருத்த இராவுத்தர் கல்லூரி
பட்டினம் – அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி]
தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாக் கதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார்
என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்
அருவிதாங் கேட்டாலும் அழகுயாழ் குழலென்னும்
கருவிதாங் கேட்டாலும் கானவானம் பாடிக்
குருவிதாங் கேட்டாலும் கூடிவந்து பாராட்டும்
திருவிதாங் கோட்டுச் செழும் புலவ!
1973-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த முதல் இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இறையருட் கவிமணியைப் புகழ்ந்து கவிக்கோ அப்துல் இரகுமான் பாடிய வரிகள் இவை
திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!
இது கவிஞர் மு.மேத்தாவின் புகாழாரம்
இருவரிகளைக் கொண்டு இலக்கியம் படைத்த திருவள்ளுவரைப் போல சின்னச் சின்னச் சொற்களைக் கோத்து பாமாலை கோர்க்கும் பூமாலை சூத்திரதாரி இவர்.
பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் தமிழறிவுக்கு இதோ ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
என்ற வள்ளுவரின் குறளுக்குப் பரிமேலழகர், மு.வரதராசனார், மணக்குடவர், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற அனைத்து அறிஞர்களும்  “குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்” என்ற பொருளில் தான் அருஞ்சொற்பொருள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
இதற்கு நேர்மறையான விளக்கத்தைக் கூறி எங்களையெல்லாம் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தவர் அவர். “பொய்மையும் வாய்மை இடத்த” என்பதற்குக் குற்றமிலா நன்மை ஏற்படின் பொய்யைக் கூட உண்மையின் இடத்திலும் பார்க்கலாம் என்றாலும் பொய்மையானது வாய்மையின் “இடத்த”…..அதாவது இடப்பக்கமே இடம்பிடிக்கமுடியுமே தவிர வலப்பக்கத்தில் ஒருபோதும் இடம் பிடிக்கவே முடியாது” என்று விரிவுரை தந்து வியப்பிலாழ்த்தியவர். ஆம். அபாரமான சிந்தனை கொண்ட அற்புத ஆசிரியப் பெருந்தகை அவர்.
தமிழகக் கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி முதல்வராகப் பணி ஏற்ற பெருமைக்குரியவர் கபூர் சாகிப்தான்.
உருது மொழியில் நடைபெறும் ‘முசாயிரா’ போன்று தமிழ்மொழியில் ‘கவியரங்கம்’ என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.
தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா.  அவரே, பேராசிரியர் அப்துல் கபூர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டித் தன் “திராவிட நாடு”  இதழில் வெளியிட்டுப் பாராட்டி மகிழ்ந்தார்.
இவர் போன்ற நாவன்மை மிக்க நற்றமிழ் வல்லார் நம் கழகத்திற்குக் கிடைப்பாரெனில் அதன் பொலிவும் வலுவும் மென்மேலும் சிறந்தோங்கும்” என்று அறிஞர் அண்ணா வியந்த பேரறிவாளர்.
வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் தமிழ் மன்றத்தின் சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நம் பேராசிரியரின் உரையைக் கேட்டுவிட்டுத் “தன் சிந்தனையோட்டத்தில் முகிழ்ந்தெழும் அரிய கருத்துகளை, தீந்தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோத்து, தனக்கே உரிய பாணியில் முழக்கம் செய்து வருபவர் நண்பர் கபூர் அவர்கள்” என்று அறிஞர் அண்ணா புகாழாரம் சூட்டினார்.
நாஞ்சில் நாடு முன்னர் ஓர் அதங்கோட்டாசானை நல்கியது போல், இன்றும் திருவிதாங்கோடு தந்த ‘அதங்கோட்டாசான்’ நமது பேராசிரியர்” என்று போற்றுகிறார் சாகித்திய அக்காடமி விருது பெற்ற ‘சிற்பி’ பால சுப்பிரமணியன்.
தமிழே என்னும் சொற்கொண்டு
தாயே ஊட்டிய கற்கண்டு
என்று பாடித் தமிழின் பெருமையை நமக்கு புரிய வைத்தவர் அவர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று  தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ்ப் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு.
ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள்.  கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிரையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.
பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மேன்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில்“மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்”என்று முடிவுறும் என் கவிதையைக் கவியரசும், பேராசிரியரும் வெகுவாகச்  சுவைத்துப் பாராட்டினார்கள்.
ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும்  கருவூலமாகப் பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாகத் தட்டச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:
ஈகைத் திருநாள்
இன்பம் தருக;
இறையருள் பொழிக !
அந்தக் காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல்  வாழ்த்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.
அன்னார் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் ஆகி விட்டன. அருந்தமிழ் ஆர்வலர்கள் இன்றளவும் அவரை நினைவு கூர்கின்றனர்.  இசுலாமிய சமுதாயம் அவரது இலக்கியப் பணியையும்,  இறைத்தொண்டினையும் நாளும் எண்ணிப் பார்க்கின்றனர். அவரது இழப்பு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடு இணையில்லாத பேரிழப்பு.

அப்துல் கையூம் -abdulkayum
– அப்துல் கையூம்

Friday, February 19, 2016

ஒடுக்கப்பட்டவர் விடுதலைக்காகப் பாடிய பறவை கரு.அழ.குணசேகரன் – சுகிர்தராணி




ஒடுக்கப்பட்டவர் விடுதலைக்காகப் பாடிய பறவை கரு.அழ.குணசேகரன் – சுகிர்தராணி

கரு.அழ.குசேகரன் - k.a.gunasekaran

வல்லிசையின் எளிய பறவை

  கடந்த தை 1 / 15.01.2016 வெள்ளியன்று புதுச்சேரியில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நான் பேசியபொழுது ‘எங்காண்டே என்னால காரியம் ஆகணும்னா சார் என்பார்’ என்னும் பாடலின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டபொழுது என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அன்று இரவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது பின்னிரவு வரை அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் பாண்டிச்சேரியிலிருந்து மாலதி மைத்திரியுடன் மகிழுந்தில் பயணிக்கும்பொழுது மீண்டும் அவரைப்பற்றிய பேச்சு. அன்று இரவு நண்பர்களுடன் உணவருந்தியபடி பின்னிரவு வரை நீண்ட எங்கள் பேச்சில் மீண்டும் அவரது அதே பாடலைப் பற்றியும் அவரது வாழ்க்கை பற்றியும்.
  விடிந்ததும் மாலதி மைத்திரி முகநூல் வழியாகச் செய்தி அறிந்து என்னிடம் சொன்னார், திகைப்போடும் அதிர்ச்சியோடும். உதட்டுக்குக் கொண்டுபோன தேநீர்க் கோப்பை மின்னல் தாக்குதலைப்போலத் தளும்பிச் சரிந்தது என் உடலின் மிகுதியான நடுக்கத்தால். இப்பொழுது வரை என்னால் அத்திகைப்பிலிருந்து மீள முடியவில்லை. தொடர்ந்து இரு நாட்களாக அவரது பாவும் வாழ்வும் நினைவுமாகவே கழிந்தன. மூன்றாம் நாள் அவர் இல்லை. பறந்து போன அப்பறவை பேராசிரியர்.கே.ஏ.குணசேகரன் என்னும் பெயர் கொண்டது. தன் இறுதிப் பறத்தலை எப்படி முன்னுணர்ந்து அன்பானவர்களின் உயிர் வழியாக உள்ளிறங்கித் தன் சிறகுகளை உதிர்த்துவிட்டுச் சென்றது என்னும் என் கேள்விக்கு இதுவரை பதிலில்லை. பகுத்தறிவும் மருத்துவமும் அறிவியலும் சற்றே இளகுவது இம்மாதிரி அரிதான தறுவாயில்தான்.
  காலத்தின் பெருமதிப்பில் உயர்ந்த தடங்கள் குமுகத்தின் (சமூகத்தின்) இன்மைகளை நிறைவாக்கவே எப்பொழுதும் முயற்சி செய்கின்றன. அவற்றின் முனைப்புகளும் அசைவுகளும் குமுக (சமூக) மாற்றத்தின் தேவை கருதியே நடக்கின்றன. வாழ்வின் பெரும் பாரங்களையும் தன் வெளிப்பாடாக மாற்றி அவற்றைக் குமுகத்தின் தேவைக்கானவையாக மாற்றிவிடுகின்ற வல்லமை அத்தகைய தடங்களுக்கு எப்பொழுதும் உண்டு. வரலாற்றின் பக்கங்களில் அவை அழிக்கவியலாத் தன்மையுடையவையாக நிலைத்துவிடுகின்றன. அத்தகைய நிலைப்புகள் அடுத்த முன்னெடுப்புகளிலும் நகர்வுகளிலும் தொடர்ந்த செயல்பாட்டினைக் கொண்டிருக்கும் என்பது நாம் அறிந்திருக்கும் உண்மையாக இருக்கிறது.
  அப்படிப்பட்ட ஆளுமையாகப் படிநிலை எய்தியவர்; சிவகங்கை அருகே உள்ள மாறந்தை ஊரில் எளிமைக் குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றலால் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவராக மாறி முதல் தலைமுறையிலேயே உயர்ந்த இடத்தை அடைவது சாதிய இறுக்கங்களும் ஒடுக்குமுறைகளும் மதிப்புக்குறைப்புகளும் நிறைந்த இந்தக் குமுக அமைப்பில் எளிமையானதன்று. அத்தகைய தடைகளைத் தகர்த்து அவரால் தன்னை வெளிப்படுத்த முடிந்திருக்கிறதென்றால் அவருக்குள் இருந்த வேட்கையும் விடுதலை உணர்வும்தான் காரணம்.
  ஒருமுறை பாண்டிச்சேரியில் அவருடனான சந்திப்பில் இளமையில் அவருக்கு நேர்ந்த சாதி சார்ந்த வன்தாக்குதல்கள் குறித்து விளக்கியபொழுது அவர் நிகழ்த்தும் எதிர்ப்பரசியலின் களமும் ‘எங்காண்ட…’ எனத் தொடங்கும்பாடலின் மூலமும் தெரிந்தன.
  நாட்டார் கலையின் மரபார்ந்த அறிவின் செறிவும் அவற்றின் வெளிப்பாட்டுப் பாங்கும் கே.ஏ.குணசேகரனின் வலிமைகளாக இருந்தன. ‘வாகான ஆலமரம்’ என அவர் தொடங்கும் பாடல் எல்லாப் பாட்டு முயற்சிகளையும் விட உயிரில் ஊறிவிடும் ஆற்றல் வாய்ந்தது. ‘ஏய் ஆக்காட்டி ஆக்காட்டி’ என ஒப்பாரியில் தொடங்கும் அந்தக் குரல் கேட்போரை அழ வைக்கும். கத்தும் குருவி கவலைப்படாமல் தன்மேல் இறுகியிருக்கும் வலையை அறுக்கும் ஆற்றலைப் பெற்றுவிடும். மக்கள் பாவலர் இன்குலாப்பின் ‘மனுசங்கடா’ என்ற பாடல் ஒடுக்கப்பட்டோரின் நாட்டுப் பண்ணாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு கே.ஏ.குணசேகரனின் பாட்டுத்திறமே காரணம். தவில், பறைபோன்ற தோல் கருவிகள் மேடை ஏற்றப்படுவதற்கு முதன்மைக் காரணமாக அவர் இருந்தார். பல்வேறு நாட்டுப்புறப் பாடல் கலைஞர்கள் உருவாவதற்கு மூலமாக இருந்திருக்கிறார். நாட்டார் பாடல் வடிவில் குமுகப் பாடல்களை உருவாக்கி அதன் மூலம் விடுதலைக் கருத்தியலை முழக்கும் மேடைகளில் அவர் இல்லாமலேயே அவர் பாடல்கள் இசைக்கப்படும் உயர்வெய்தினார்.
  நாடகத்துறையில் அவரின் ‘பலியாடுகள்’ நாடகம் மிகவும் ஆழமானது. ஒடுக்கப்பட்டோர் ஓர்மையின் அடையாளமாக அது வெளிப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறையில் அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியன. நடத்திய சொற்பொழிவுகள், பல அரங்குகளில் அவர் அளித்த ஆய்வுக்கட்டுரையில் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான இயலுமைகளை (சாத்தியங்களை) உண்டு பண்ணியவை.
  இவை அனைத்திற்கும் தேவையான தரவுகளை அவர், அவரின் வாழ்விலிருந்தே எடுத்துக் கொண்டார் என்பதுதான் அவரின் அனைத்துப் படிநிலைகளுக்கும் அடிகோலாக இருந்தது. ஒடுக்கப்பட்டோர் கலை, அரசியல் இவை கலந்த பண்பாட்டின் சுவடாக அவர் இருந்தார். அவரின் எழுத்துகள், பணி ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட்டோர் பண்பாட்டைப் பொதுப்பண்பாட்டின் கூறாக மாற்ற வேண்டும் என்னும் ஊக்கத்துடனே இருந்தன.
 மராத்திய ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் ஆகப் பெரும்பேறாக இருந்த தன்வரலாறு (சுயசரிதை) தமிழ் இலக்கிய வகைமையில் இல்லை என்ற குறையைத் தன் ‘வடு’ என்னும் தன்வரலாறு மூலம் தீர்த்து வைத்தார். வடுவில் பதியப்பட்ட அவரின் வாழ்க்கை, மையத்தை நோக்கி நகரும் ஒடுக்கப்பட்டோர் ஒருவரின் வாழ்வாக இருந்தது.
  இசை, நாடகம், எழுத்து, பணி என்னும் எல்லாத் தளங்களிலும் பண்பாடு சார்ந்து தன் பங்களிப்பைச் செய்ததன் மூலம் இலக்கிய வரலாற்றில் மட்டுமன்றி, மனித வரலாற்றிலும் தன் பெயரை நிலை நிறுத்தியவர். அதன் மூலம் ஒடுக்கப்பட்டோர் குமுகம் தன் அறிவார்ந்த முன்னோடிகளில் ஒருவராக அவரைப் பெரிதும் மதிக்கிறது.
  வரலாற்றின் வழி நெடுக இத்தகைய பண்பாட்டுப் போராளிகள் விடுதலைப் பெருவழிகளில் தொடர்கிறார்கள்; அவர்களில் தமிழ்ச்சூழலில் மிக முதன்மையானவராக கே.ஏ.குணசேகரன் மிளிர்கிறார்.
  இப்படி வலுவான இசையின் மூலமாகவும் மாற்று நாடகங்கள் மூலமாகவும் சாதிய நாற்றமெடுக்கும் நஞ்சான குமுகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மனித விடுதலைக்காக ஓயாமல் பாடிய ஒரு பறவை திரும்ப முடியாத இடத்திற்கு மூன்றாம் நாள் பறந்துவிட்டது. அந்த வல்லிசையின் எளிய பறவைக்குத் தெரியுமா தான் முதல் நாளே உயிர்த்தெழுந்தது பற்றி?
புலவர் சுகிர்தராணி - sukirtharani
– புலவர் சுகிர்தராணி
அட்டை-காலச்சுவடு, பிப்.2016 - attai_kalachuvadu_feb2016

தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - peyar_name_e.bhu.gnanaprakasan02