Wednesday, October 26, 2016

மறக்க முடியுமா? – தமிழவேள் உமாமகேசுவரனார் : எழில்.இளங்கோவன்




தலைப்பு-மறக்கமுடியுமா, உமாமகேசுவரனார், எழில் இளங்கோவன் : thalaippu_marakkamudiymaa_umaamdakeswaranar_ezhilelangovan

மறக்க முடியுமா?

கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரனார்

 காலங்களில் முரண்பாடுகள், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா இல்லையா என்பதில் முரண்பாடுகள், அப்படியே இருந்தாலும் எத்தனைச் சங்கங்கள் அல்லது சங்கம் இருந்தது என்பதிலும் கருத்து மாறுபாடுகள் இருந்தன, -இருக்கின்றன அறிஞர்களிடையே
ஆனாலும், முதல்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் பாண்டியர்கள் என்பது வரலாறு.
நான்காவது ‘தமிழ்ச்சங்கத்தை’ மதுரையில் நிறுவினார் பாண்டித்துரையார்.
உ.வே.சாமிநாதரின் தமிழ் ஆய்வும், தமிழின் முதல் கலைக்களஞ்சியமான ஆ.சிங்காரவேலு அவர்களின் ‘அபிதான சிந்தாமணி’ அச்சாகி வெளிவரவும் காரணமாக இருந்தது மதுரைத் தமிழ்ச்சங்கம்.
தமிழுலகின் இறுதித் தமிழ்ச்சங்கமாகவும், ஐந்தாவது தமிழ்ச்சங்கமாகவும் உருவானதுதான் ‘கரந்தைத் தமிழ்ச்சங்கம்‘.
இச்சங்கம் உருவாகக் காரணமாக இருந்த முதன்மையான இருவருள் ஒருவர் வே.உமாமகேசுவரனார்; மற்றொருவர் துங்கன் இராதாகிருட்டிணன்.
உமாமகேசுவரனாரின் தாயார் காமாட்சி அம்மையார்,  தந்தை வேப்பம்பிள்ளை.
தஞ்சை மாவட்டம் கரந்தட்டான்குடி இவருடைய சொந்த ஊர்.  சித்திரை 26, 1914 / 1883 ஆம் ஆண்டு மேத் திங்கள் 7ஆம் நாள் இவர் பிறந்தார்.
வல்லம், கும்பகோணத்தில் இவரின் பள்ளிப்படிப்பு முடிந்து, இவர் தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின் சென்னை சட்டக்கல்லூரி பயின்று, தஞ்சை சீனி(ப்பிள்ளை)யிடம் வழக்கறிஞர் பயிற்சியைப் பெற்றார்.
  இவரின் வழக்காடும் திறமையால், இவர் அரசுக் கூடுதல் வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். ஆனாலும் இத்தொழிலில் இவர் நாட்டம் கொள்ளவில்லை. மாறாகத் தமிழ்ச் சிந்தனையே இவரிடம் மேலோங்கி நின்றது.
உமாமகேசுவரனார் துங்கன். இராதாகிருட்டிணன், கவிஞர் அரங்க.வேங்கடாசலம் ஆகியோருடன் இணைந்து வைகாசி 01, 1942 / 1911 மேத் திங்கள் 14ஆம் நாள், தஞ்சை வடவாறு, வடகரையில் உள்ள கரந்தையில் ‘கரந்தைத் தமிழ்ச் சங்க’த்தை நிறுவினார்.
“கரந்தை என்ற சொல்லுக்கு (ஆநிரை) மீட்டல் என்ற ஒரு பொருளுண்டு. தமிழ் மொழியின் இந்தப் பெருமைகளை மீட்கத் தோன்றிய அமைப்பு – கரந்தைத் தமிழ்ச்சங்கம்” என்கிறார் கரந்தை செயக்குமார்.
 இச்சங்கத்தின் முதல் செயலாளர் கவிஞர் வேங்கடாசலம். முதல் தலைவராக உமாமகேசுவரனார் பொறுப்பேற்றார்.
  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் புரட்டாசி 21, 1947 / 06.10.1916 ‘செந்தமிழ் கைத் தொழில் கல்லூரி’ ஒன்று தொடங்கப் பெற்றது. இக்கல்லூரியின் தலைமையாசிரியர் கவிஞர் வேங்கடாசலம்.
  1929 ஆம் ஆண்டு இச்சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவமனை தொடங்கப் பெற்றது.
தொடர்ந்து ‘தமிழ்ப் பொழில்’ என்று இதழும் தொடங்கப்பெற்று, அவ்விதழ் தொடர்ந்து வெளிவந்தது. இவற்றைச் செய்தவர் உமாமகேசுவரனார்.
நீராரும் கடலுடுத்த” என்ற மனோன்மணீயம் பாடல் வரிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்தார்.
வடமொழி மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த திருவையாறு கல்லூரியில் அதனை மாற்றித் தமிழைக் கற்பிக்கச் செய்தார்.
அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்தார்.
1919ஆம் ஆண்டு தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தீர்மானம் இயற்றச் செய்தார்.
1937-ஆம் ஆண்டு இந்தியைக் கட்டாயம் ஆக்கிய போது, அதைக் கண்டித்தும், போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றினார்.
 கரந்தைச் சங்கத்தின் மூலம் ‘யாழ்நூல்’, ‘நக்கீரர்’, ‘கபிலர்’, ‘தொல்காப்பியம்‘ போன்ற நூல்களைப் பதிப்பிக்கச் செய்தார்.
இவரின் முயற்சியால் 1938 ஆம் ஆண்டு கரந்தைப் புலவர் கல்லூரி தொடங்கப் பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் 1941 இல்தான் இதற்குச் சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பு வழங்கியது.
1920 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தேர்தலில் போட்டியிட்டுத் தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அப்போது தஞ்சையில் இருந்தது வெறும் 40 பள்ளிகளே. அவற்றின் எண்ணிக்கையை 170 ஆக உயர்த்திக் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தவர் உமாமகேசுவரனார்.
  இவரின் ஆற்றல் மிகு பயனுறு தமிழ்ப் பணியால், 1938 ஆம் ஆண்டு ஞானியாரடிகள் மணிவிழாவின் போது, நாவலர் சோமசுந்தர பாரதியாரின் முன்மொழிவின் பேரில், ஞானியாரடிகள் “தமிழவேள்” என்ற பட்டத்தை வழங்கினார்.
அன்று முதல் தமிழவேள் உமாமகேசுவரனார் என்று அழைக்கப்பட்டார்.
அதுமட்டுமன்று, 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு ‘இராவ்பகதூர்’ என்ற பட்டத்தையும் இவருக்கு வழங்கியது.
  அளப்பரிய பணிகளைத் தமிழலகுக்குச் செய்த தமிழவேள் உமாமகேசுவரனார், இரவீந்தரநாத்தின் சாந்தி நிகேதனைப் பார்வையிட கல்கத்தாவுக்குச் சென்று, அப்படியே காசி இந்து பல்கலைக் கழகத்தையும் பார்வையிட்டார்.
 அப்பொழுது நோய்வாய்ப்பட்ட தமிவேள் உமாமகேசுவரனார், அயோத்திக்கு அருகில் பைசாபாத்து என்ற ஊரில் இருந்த குறவி என்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
  சித்திரை 27, 1972 / 1941 மே 9 ஆம் நாள் அங்கு மரணமடைந்த தமிழ்வேள் உமாமகேசுவரனார் உடல்  தமிழகம் வரவே இல்லை. சரயு நதிக்கரையில் எரியூட்டப்பட்டுவிட்டது அவரின் உடல்.
  அப்பெருமகனாரின் உருவச்சிலையை பங்குனி 26, 2004 / 1973 ஏப்பிரல் 13-ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் திறந்து வைத்தார் கலைஞர்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொல்கிறார்:
வான வரிவைக் காணும்போ தெல்லாம் –  உமா
மகேசுரன் புகழே என் நினைவில்வரும்.

உமாமகேசுவரனார் மறைவுச் செய்தி கேள்வியுற்ற உரைவேந்தர் ,  தமிழறிஞர் ஔவை துரைசாமி இவ்வாறு தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் :

தாயாகி உண்பித்தான், தந்தையாய்
அறிவளித்தான், சான்றோனாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
அவ்வப்போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்
இனியாரை உறுவோம் அந்தோ!
தேயாத புகழான்தன் செயல்நினைந்து
உளம் தேய்ந்து சிதைகின்றே மால்.
 மறக்கமுடியுமா?
இவரை நாம்     
மறக்கமுடியுமா!
எழில்.இளங்கோவன்
கருஞ்சட்டைத் தமிழர்: அட்டோபர் 16-30, 2016
karunchattai-thamizhar01

Monday, October 24, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி : இலக்குவனார் திருவள்ளுவன்




முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி


 பெரும்புலவர் ந.மு.வேங்கடசாமி(நாட்டாரின்) இளவல் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர் அவர்கள் அடுத்த தலைமையாசிரியராய் மாறுதலில் வந்தார். இவர் அனைவரையும் சிவநெறிக்கண் திருப்பி ஒழுங்கையும் பண்பாட்டையும் நிலைநாட்டினார். தமிழாசிரியர் நாராயணசாமி(பிள்ளை) ஓய்வு பெற்ற பின் மாறி வந்த தமிழாசிரியர் சாமி. சிதம்பரனார் பேராசிரியர் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அனைவரிடமும் தூய தமிழ்ப்பற்றை வளர்த்த தன்மதிப்புஇயக்கப் பற்றாளரான அறிஞர் சாமி சிதம்பரனார் பேராசிரியர்பால் பேரன்பு கொண்டவர்;  ‘இலட்சுமணன்’ என்னும் பெயரை ‘இலக்குவன்’ என்று மாற்றியவரும் இவரே. பேராசிரியர், அரசர் மடத்து நடுநிலைக் கல்விக்கூடத்தில் மூன்றாம் படிவத்தில் வெற்றி பெற்றதும் உரத்தநாடு உயர்நிலைக்கல்விக்கூடத்தில் நான்காம் படிவத்தில் சேர்ந்தார்.
 நான்காம் படிவம் எனப்படும் ஒன்பதாம் வகுப்பில் பேராசிரியர் விருப்பப்பாடங்களாகத் தமிழையும் ஆங்கில நாட்டு வரலாற்றையும் தெரிவு செய்து படித்தார். பெரியவர் பொன்னண்ணாக் களத்தில் வென்றார் தமிழாசிரியராக மாறி வந்து மேலும் தமிழ் உரம் ஊட்டினார். அடுத்துத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற சாமிநாத(பிள்ளை) அவர்களும் தன்மான உணர்வினை ஊட்டினார். பொது அறிவியலைக் கற்பித்த ஆசிரியர் சாமி வேலாயுதம்(பிள்ளை) அவர்களும் சிறந்த தமிழறிஞர். பின்னாளில் ‘தமிழரசி’ என்னும் தமிழ்ப்பாடல் தொகுப்பு நூலையும் ‘திருக்குறள் சொல்லடைவு’ நூலையும் வெளியிட்டவர். அவர், இவரைப் ‘பெரும்புலவராகப் புகழ் பெறுவீர்’ என வாழ்த்தியதைப் பெரும் பேறாகக் கருதி மகிழ்ந்தவர் பேராசிரியர்.
 வரவேற்புப்பா, வழியனுப்புப் பாடல் என விழாக்களில் பாடல்கள் பாடியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவுகள் ஆற்றியும் பேராசிரியர், மாணவர்கள் உள்ளங்களில் மட்டுமல்லாமல் ஆசிரியர் உள்ளங்களிலும் இடம் பெற்றார்.
 இத்தகைய சூழலுக்குத் தன்மதிப்பியக்கத் தலைவர் பன்னீர்செல்வம் அவர்களும் பெரியாரின் தொண்டுமே காரணங்கள் என்பதைப் பின்வருமாறு தம் வாழ்க்கை வரலாற்று நூலில் நினைவுகூர்கிறார் பேராசிரியர்.
 “பன்னீர்செல்வம் அவர்கள் சிறந்த ஆசிரியர்களை நியமித்து உரத்தநாட்டு உயர்நிலைக் கல்விக்கூடத்தை ஓர் எடுத்துக்        காட்டுக் கல்விக்கூடமாக ஆக்க  வேண்டுமென்று விரும்பினார். எல்லா ஆசிரியர்களையும் பிராமணரல்லாதாராகவே நியமித்துப் பிராமணரல்லாதவர்களும் சிறந்த ஆசிரியர்களாக விளங்குவார்கள் என உலகுக்கு அறிவிக்க வேண்டுமென்பதும் அவர் கொள்கை. ஏனெனில், பிராமணர்கள்தாம் ஆசிரியர் தொழிலுக்குரியவர்கள் என்ற நம்பிக்கை  வேரூன்றியிருந்த காலம் அது. அன்றியும் படிப்பதற்குத் தகுதியானவர்களும் பிராமணச் சிறுவர்கள்தாம் என்று கூறிவந்த காலமும் அதுதான். ‘வயலிலும் வரப்பிலும்  வேலை செய்ய வேண்டிய நீங்கள், கல்விக்கூடத்தில் சேர்ந்து கொண்டு எங்களைத் தொல்லைப் படுத்துகின்றீர்களே. சுட்டுப் போட்டாலும் உங்கள் நாவில் கல்வி ஏறாது’ என்று பிராமணரல்லாத சிறுவர்களை  நோக்கிப் பிராமண ஆசிரியர்கள் கூறி வந்தனர். உழைப்பதற்கே பிறந்தவர்கள் ஓதுவதற்கன்று என்று மனுநீதியில் கூறப்பட்டுள்ளதை ஒட்டி,  “வேளாண்மாந்தர்க்கு, உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” எனப் பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்திலும் இடைச்  செருகலாக எழுதி வைத்துக் கொண்ட கொடுமை நிகழ்ந்த நாடு அன்றோ இத் தமிழ்நாடு. கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் உச்சிக்குடுமி வைத்த பிராமணர்களே ஆசிரியர்களாக இருந்து வந்துள்ளனர். மாணவர்களிலும் பெரும்பாலோர் பிராமண வகுப்பினரே.”
  தமிழர்க்குத் தன் மதிப்பை உணர்த்திய பெரியாரால் பள்ளிப் பருவத்திலேயே ஈர்க்கப்பட்டவர்; நீதிக்கட்சித் தலைவர்கள் ஆற்றிய தன்மதிப்பியக்கப் பணிகளால் தமிழர் நலனடைந்ததைக் கண்ணாரக் கண்டவர்; எனவேதான் பேராசிரியர் வாணாள் எல்லாம் தன்மானப் பாதையில் தடம் புரளாமல் வாழ்ந்தார்; பிறரையும் அவ்வாறு தன்மதிப்புடன் வாழ அறிவுறுத்தினார்.
  ஆரியத்தின் தீமைகளை உணர்த்தினாலும் பிராமண மாணவர்கள் கல்வி கற்பதற்கான உதவிகளைச் செய்யத் தவறியதில்லை. சாதி வேறுபாட்டைப் போக்குவதற்காகச் சாதியத்தை எதிர்த்தாரே தவிர, சாதி அடிப்படையில்  வேறுபாடு காட்டவில்லை. (பின்னாளில் புதுச்சேரிப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் மத்திய அரசின் திட்டக்குழுவில் உறுப்பினராகவும் திகழ்ந்த) முனைவர் வேங்கடசுப்பிரமணியன் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பேராசிரியரைப் போற்றியதன் காரணம் அதுதான்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Saturday, October 22, 2016

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்




முன் அட்டை -தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார், திரு ; mun-attai_poaraali_ilakkuvanar_ila-thiru

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

[ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை –     தொடர்ச்சி

  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள (இன்று ஒரத்தநாடு என்றும் சொல்லப்படுகின்ற) உரத்தநாட்டிலும் அரசர்மடம் (இராசாமடம்) என்னும் ஊரிலும் உண்டுறைப் பள்ளிகள்  உள்ளன. அரசர் மடத்தில் பேராசிரியரின் மாமா வீரபத்திரர் அவர்களின் இரு மக்கள் பயின்று வந்தனர். அங்குச் சென்று கல்வி கற்கும் தணியா ஆர்வத்தில் பேராசிரியர் இருந்தார். பேராசிரியரின் தொடக்கப்பள்ளி ஆசிரியரான தமையன் முறையினரான சதாசிவம்(பிள்ளை) அவர்கள் விண்ணப்பம் அனுப்ப வழி காட்டிச்சேர்க்கைக்கு வழி வகுத்தார்; மாமாவே அழைத்துச் சென்று அங்கேசேர்த்தார்; தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பில் ஆங்கிலப்பாடம் இருக்காது என்றும் தரம் குறைந்திருக்கும் என்றும் சொல்லி 5ஆம் வகுப்பில்தான் அவரைச் சேர்த்தனர்.
 அனைத்து மாணாக்கர்களினும் மேம்பட்ட நிலையில் அனைத்துப் பாடங்களிலும் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றமையால் ஆசிரியர்கள், பிற மாணாக்கர்கள் என அனைவரின் அன்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவராகப் பேராசிரியர் திகழ்ந்தார்; மாணவர் தலைவர் என்ற நிலைமை இல்லாத அக்காலத்திலேயே பேராசிரியரைத் தங்கள் தலைவராகப் பிற மாணவர்கள் போற்றினர்;  சொல்வன்மை பெற வேண்டிச் “சொல்லாடல் கழகம்” ஒன்றை அமைத்துப் பேராசிரியரையே அதற்கும் தலைவராக ஆக்கினர். விடுமுறை நாட்களில் அருகில் உள்ள பெரிய பனங்காட்டில் கூட்டங்கள் நடத்தியமையால் பெரியோர்களும் வந்து கேட்டு உற்சாகப்படுத்தினர்.
 கல்வி என்பது புத்தகங்கள் மூலம் அறிவது மட்டும் அல்ல. வாழும் சூழலும் ஒரு புத்தகம்தான். இப் புத்தகம் பேராசிரியரைப் பண்படுத்தியது; சாதி வேறுபாட்டிற்கு எதிரான எண்ணத்தை விதைத்தது; பகுத்தறிவை ஊட்டியது; மனித நேயத்தை வளர்த்தது; உழைத்து உயர வழி காட்டியது. பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்த சோமசுந்தரம்(பிள்ளை) அவர்கள், மாணாக்கர்கள் நலனுக்கும் சுவைக்கும் ஏற்ற சுவையான உணவினை அளிக்கச் செய்தார்; காய்கனி வாங்கும் பொறுப்பை மாணாக்கர்களிடமே ஒப்படைத்தார்;  உணவுச் செலவைக் கூட்டாமலேயே பத்து விழுக்காட்டு மாணக்கர்களைக் கூடுதலாகச் சேர்க்கச் செய்தார்; காய்கனிச் செலவில் மிஞ்சும் தொகையில் சிறப்பு உணவு வழங்கச் செய்தார்; தத்தம் வீட்டு நினைவு நாட்களில் பிராமணர்களுக்கு மட்டும் விருந்தும் காசும் அளித்து வந்த செல்வர்களை மாணாக்கர்களுக்கு விருந்தும் காசும் கொடுக்கச் செய்தார். அதே போல் நாட்டாண்மைக்கழகத் தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள், சாதிக்கொரு பந்தி என்பது போன்ற சாதிவேறுபாட்டு நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே பந்தி என்ற சமநிலையைச் கொணர்ந்தார். இவை யெல்லாம் பேராசிரியரிடம் நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாடு, தன்மான உணர்வு முதலியவை மலர்ந்து மணம் வீசக் காரணம் ஆயின எனலாம். இறையருள் நம்பிக்கையும் தன்மதிப்பு இயக்க ஈடுபாடும் உடைய சிலருள் ஒருவராகப் பேராசிரியர் மாறினார்.
 பெண்களைப்போல் ஆண்களும் தலைமுடியை வளர்க்கும் அக்கால வழக்கப்படி பேராசிரியரும் நீண்ட கூந்தலைப்போல் முடி வளர்த்திருந்தார். இதனால் பேன்கள் பெருகித் தலையில் சிரங்குகள் தோன்றிவிட்டன. மருந்து தடவினாலும் சிரங்குத் தொல்லை பொறுக்கமுடியாமல் இருந்துள்ளது. ஆனால், தலைமுடியோ, ஒரு முறை நோய்வந்தபொழுது அவரின் அன்னையார் வேண்டியதற்கு இணங்கத் திருப்பதி வேங்கட மலையானுக்கும் வைத்தீசுவரன் கோயில் அப்பனுக்கும் உரியதாய் இருந்தது. ஆகவே அவ்விடங்களில்தான் முடியிறக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. ஆனால், பேராசிரியர்  உடல்நலனுக்கு முதன்மை அளித்தார். இது பற்றி அவர் எழுதி உள்ளது வருமாறு:
 “தலைமயிரைப் போக்குவதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? உயிரைக் காத்த கடவுளுக்கு மயிரைக் கொடுப்பது என்பது மூட நம்பிக்கையால் எழுந்ததாகும். சிரங்கு காரணமாக மயிரை அகற்றுவது குற்றமாகாது. கடவுள் சீற்றம் கொள்ள மாட்டார் என்ற எண்ணம் தோன்றியது; சில மாணவர்களும் இக் கருத்தை ஏற்றனர். பின்னர் மயிர் வினைஞரிடம் சென்று தலைமயிரைப் போக்கிக் கொண்டேன். சிரங்கு தொலைந்தது. பின்னர்க் கூந்தலை வளர்க்க விரும்பவில்லை. குட்டையாகக் கத்தரித்துக் கொள்ள விரும்பி முன் பக்கம் பாதியை மழித்தும் பின்பக்கம் இக்கால முறைபோல்(crop) கத்தரித்தும் விட்டுக்கொண்டேன். இது பெரும் புரட்சியாகி விட்டது. என் வகுப்பில் – ஏன் பள்ளிக்கூடத்திலும் – இம்மாதிரி (‘கிராப்’ஆக) யாரும் தலைமயிரை வெட்டிக் கொள்ளவில்லை.. . . . .”
 சில திங்கள் கழித்து முழுமையாகக்  கத்தரித்து(‘கிராப்’) வைத்துக் கொண்டாராம். நடுநிலைப்பள்ளியில் படிக்கும் பொழுதே பகுத்தறிவுடன் சிந்தித்துச் செயலாற்றியது அக்காலத்தில் பெரும் புரட்சியாகக் கருதப்பட்டது. மன்பதையின் மூடப்பழக்க வழக்கங்களுக்குத் தன்னை இரையாக்கிக் கொள்ளாமல் பகுத்தறிந்து பாங்குடன் நடந்து கொண்ட இப்போக்கு அவரின் வாணாள் முழுவதும் நின்று நிலைத்து உள்ளது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்