Tuesday, December 27, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 21

 அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 20  தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 12 தொடர்ச்சி

அரியிலூர் ஞாபகங்கள்


இங்குள்ள விட்ணு கோயில் பெரியது. பெருமாளுக்கு வேங்கடேசப் பெருமா ளென்பது திருநாமம். கோயிலின் மகா மண்டபத்தில் மகா விட்ணுவின் பத்து அவதாரங்களின் திருவுருவங்களும் தூண்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அம்மண்டபத்திற்குத் தசாவதார மண்டபமென்ற பெயர் வழங்குகின்றது. அங்கே மூர்த்திகளெல்லாம் மிக அழகாக அமைந்திருக்கின்றன.

இங்கே ஒரு சிவாலயமும் இருக்கிறது. சிவபெருமானுக்கு ஆலந்துறை ஈசரென்றும் அம்பிகைக்கு அருந்தவநாயகி யென்றும் திருநாமங்கள்  வழங்குகின்றன. சமீன்தார்கள் குலதெய்வமாகிய ஒப்பிலாதவளென்னும் துருக்கையின் கோயிலும், காமாட்சியம்மன் கோயில், விசுவநாதசுவாமி கோயில். சஞ்சீவிராயன் கோயில், காளிங்க நர்த்தனர் கோயில், அனுமார் கோயில், முதலிய வேறு கோயில்களும் இவ்வூரில் இருக்கின்றன. என் இளமையில் இவ்வளவு கோயில்களிலும் சனங்கள் ஈடுபட்டு வழிபட்டு வந்தனர்.

இந்த ஊரில் அந்தணர்களில் வைசுணவர்கள், சுமார்த்தர்கள், மாத்துவர்கள் என்னும் மூன்று மதத்தினரும் வாழ்ந்தனர். சுமார்த்தர்களில் எங்கள் உறவினர் பலர் உண்டு. வேறு சாதியினரும் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் வசித்தனர். கார்காத்த வேளாளச் செல்வர்கள் இவ்வூரில் அதிகமாக இருந்தனர். அவர்கள் தெய்வபக்தியும் பரோபகார சிந்தையும் மிகுதியாக உடையவர்கள். கோயில்களில் நித்திய நைமித்திகங்கள் அரண்மனையாருடைய ஆதரவில் முன்பு நடந்து வந்தன நாளடைவில் சமீன்தாரது செல்வநிலை குறையவே அவ்வேளாளச் செல்வர்கள் அக்கடமையை மேற்கொண்டனர்.

காலை நேரத்தில் குறிஞ்சான் குளத்துக்குப் போய்ப் பார்த்தால் கார்காத்த வேளாளச் செல்வர்களாகிய ஆடவரும் பெண்டிரும் நீராடிவிட்டுத் தூய்மையே உருவாக அமர்ந்து பூசை செய்வதையும் தியானம் செய்துகொண்டிருப்பதையும் காணலாம். அப் பக்கங்களில் அத்துவைத சாத்திரப் பயிற்சி அதிகமாகப் பரவியிருந்தது. பல துறவிகள் அங்கங்கே மடம் அமைத்து வேதாந்த சாத்திரங்களைப் பாடஞ் சொல்லியும் தியானம் செய்தும் அடக்கமாகக் காலங்கழித்து வந்தனர். அவர்களுடைய முகத்திலுள்ள தெளிவிலிருந்தே உள்ளத்திலுள்ள அமைதியை அறிந்து கொள்ளலாம்.

அரியிலூரில் சில நந்தவனங்களும் இருந்தன. அங்கங்கே சில சிறுகாடுகள் உண்டு. அந்தக் காட்சிகள் என் கண்களுக்கு விருந்தாக இருக்கும். காவிரி நீர் பாய்ந்து வளம் பெருக்கும் தஞ்சாவூர் சில்லாவிலுள்ள வயல்களையும் வரப்புகளையும் பார்க்கும் போதுகூட எனக்கு அந்தப் பழைய சந்தோசம் உண்டாவதில்லை. என் இளமைக் காலத்திற் கண்ட அக்காட்சிகளைத்தான் என் உள்ளத்துக்குள் உயர்வாகப் போற்றி வருகிறேன்.

கிருட்டிண வாத்தியார்

அரியிலூருக்குச் சென்ற பிறகு கிருட்டிண வாத்தியார் என்பவரிடம் முதலிற் படித்தேன். அவர் பெருமாள் கோவிலுக்கு வடக்கேயுள்ள வேளாளத் தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வந்தார். அவரிடம் நான் ஒரு வருடம் படித்தேன்.
 
கிருட்டிண வாத்தியார் கிழவர். அவரிடம் பல பிள்ளைகள் படித்தார்கள். அவர் தமிழ் இலக்கியங்களில் நல்ல பழக்கமுடையவர். ஆத்திசூடி, மூதுரை, மணவாள நாராயண சதகம் முதலிய சதகங்கள், இரத்தினசபாபதி மாலை, நாலடியார், குறள் முதலியவற்றையும் கணக்கையும் அவரிடம் கற்றேன். நாலடியார் குறளென்னும் நூல்கள் அவ்வளவு இளம்பிராயத்தில் நன்றாகப் பொருளறிந்து கற்பது சாத்தியமன்று. ஆயினும் அவற்றை மனப்பாடம் செய்யும்படி கிருட்டிண வாத்தியார் மாணாக்கர்களை வற்புறுத்துவார். எழுத்தாணியால் ஏடுகளில் எழுதியும் கறடா (மட்டி)க் காகிதத்தில் கொறுக்காந் தட்டைப் பேனாவால் எழுதியும் திருத்தமாக எழுதிக் கற்றுக்கொண்டோம். கையெழுத்து நன்றாக இராவிட்டால் குண்டெழுத்தாணியால் கட்டை விரலில் உபாத்தியாயர் அடிப்பார். அவரிடம் படித்தவர் யாவரும் எழுதுவதில் நல்ல பழக்கத்தைப் பெற்றனர்.

அவரிடம் படித்த நூல்களெல்லாம் எனக்கு மனப்பாடமாயின. வீட்டிலும் என் தந்தையார் தினந்தோறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார். நாளுக்கு ஐந்து செய்யுட்கள் பாடம் பண்ணி அவரிடம் ஒப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவரது தண்டனைக்கு உட்பட நேரும்.

ஏறாத தெலுங்கு

 எனது கல்வி விசயத்தில் என் தந்தையாருக்கு மனத்துக்குள் கவலை இருந்து வந்தது. என்னையும் சங்கீதத் துறையில் பழக்க வேண்டுமென்றே அவர் நினைத்திருந்தார். அக்காலத்தில் சங்கீத வித்துவான்கள் யாவருக்கும் தெலுங்கு மொழியிற் பழக்கம் இருந்தது. தமிழ், தெலுங்கு, சம்சுகிருதம் என்னும் மூன்று பாசைகளிலும் உள்ள கீர்த்தனங்களை அவர்கள் பாடுவார்கள்.

சங்கீதப் பயிற்சிக்குத் தெலுங்கு உதவியாக இருக்குமென்ற எண்ணத்தின்மேல் என் தந்தையார் கிருட்டிண வாத்தியார் பள்ளிக்கூடத்தைவிட்டு என்னை வேறொரு பள்ளிக்கூடத்திற் சேர்த்தார். பெருமாள் கோவிலுக்குத் தெற்கேயுள்ள காமாட்சியம்மன் கோவிலில் அந்தப் பள்ளிக்கூடம் இருந்தது. அதன் தலைவராகிய முத்து வேலாயுத பண்டாரமென்னும் வீரசைவர் தெலுங்கும் கற்பித்து வந்தார். அவரிடம் தெலுங்கு கற்கத் தொடங்கி, கணிதம் முதலியனவும் வேமன்ன சதகம், இராமதாச சதகமென்னும் சிறுநூல்களும் கற்றேன்.

சங்கீதத்திலும், தமிழிலும் என் புத்தி சென்றது போலத் தெலுங்கிற் செல்லவில்லை. என் நிலைமையை உணர்ந்த தந்தையார் சிறிது வருத்தத்தை அடைந்தார்; “நீ ஒரு காரியத்திற்கும் உபயோகம் இல்லாதவன்; பரிசாரக வேலைக்கு கூடப் பயன்பட மாட்டாய்” என்று என்னைக் கடிந்து கொண்டார். அன்று அவர் கூறின அவ்வார்த்தைகள் என் மனத்தைப் புண்படுத்தின. நான் என்ன செய்வேன்! எனக்குப் படிப்பில் விருப்பம் இருந்தது; தமிழும் சங்கீதமும் எனக்கு இன்பத்தை அளித்தன. தெலுங்கில் அந்த இன்பத்தை நான் காணவில்லை. எனக்கும் அதற்கும் வெகுதூரமென்ற எண்ணம் ஆரம்பத்திலேயே எனக்கு உண்டாயிற்று. நான் வேண்டுமென்று அதை வெறுக்கவில்லை.

தெலுங்கு கற்பதனால் வீண்சிரமம் உண்டாவதைத் தந்தையார் உணர்ந்தமையால் என்னைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் நிறுத்திக்கொண்டார். வீட்டில் தாமே சதகங்களையும் வேறு நூல்களையும் கற்பித்து வரலானார். சங்கீதத்திலும் சரளி, வரிசை, அலங்காரம் முதலியவற்றைக் கற்றுத் தந்தார். நான் சிறிதளவேனும் அயர்வாக இருந்தால் கடுமையாகக் கண்டிப்பார். அவர் செய்யும் தண்டனையினால் நான் துன்புறுவேன்; என் துன்பத்தைக் கண்ட என் தாயாரும் வருந்துவார்.

— அடிக்குறிப்பு 1. நான் எழுதி வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை முதற் பாகத்தில் மற்ற வரலாறுகளைக் காணலாம்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Monday, December 26, 2022

தமிழ்நாடும் மொழியும் 20: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

 அகரமுதல


     27 December 2022      No Comment



(தமிழ்நாடும் மொழியும் 19 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 20

6. பிற்காலச் சோழர் வரலாறு

சோழர் எழுச்சி

சங்கக்காலத்தில் சீரும் சிறப்பும் கொண்டு விளங்கிய சோழர்கள் பிற்காலத்தில் பல்லவர்க்குக் கீழ்க் குறுநில மன்னர்களாகவும் அதிகாரிகளாகவும் வாழ நேரிட்டது. பல்லவர் காலத்தில் இவ்வாறு அழிந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலே மறுபடியும் தம் பண்டைச் சிறப்பை நிலை நாட்டக் கிளர்ந்து எழலானார்கள். பிற்காலச் சோழப்பேரரசை நிறுவியவன் விசயாலயன் என்பவனாவான். பிற்காலச் சோழர்க்குத் தலைநகர் தஞ்சை மாநகராகும். விசயாலயன் காலம் கி. பி. 850-71 என்பதாகும். பல்லவர் வீழ்ச்சி, தலைதூக்கும் சோழர்க்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது. கி. பி. 860-இல் முத்தரையரிடமிருந்தோ , பல்லவரிடமிருந்தோ விசயாலயன் தஞ்சையைக் கவர்ந்தான். முத்தரையர் என்பவர் பாண்டியர்க்கு நண்பராவர். இந்நிலையில் பல்லவர்-பாண்டியர் போர் அடிக்கடி நிகழ்ந்து வந்தது. இதனால் சோழ மன்னனாகிய விசயாலயனுக்கு நன்மையே விளைந்தது. மேலும் சோழப் பேரரசை ஏற்படுத்தவும் இப்போர் பயன்பட்டது. ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே’. கி. பி. 880-இல் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் பல்லவ மன்னன் அபராசிதவர்மனுக்கும் பாண்டியன் வரகுணனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இப்போரில் பாண்டியன் தோற்றாலும், அதனால் நன்மை அடைந்தது பல்லவன் அல்ல; சோழனே. பாண்டியன் வீழ்ச்சி சோழர் வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடையை நீக்கியது.

முதலாம் ஆதித்தன் (871-907)

ஆதித்தன் என்பவன் விசயாலயன் மகன் ஆவான். எனவே ஆதித்தன் தன் தந்தைக்குப் பின் தரணி ஆளத் தொடங்கினான். திருப்புறம்பியப் போரில் இவன் பல்லவனுக்கே உதவி செய்தான். பின்னர் வெற்றியடைந்த பல்லவனிடமிருந்து சில நாடுகளைச் சோழன் பரிசாகப் பெற்றான். திருப்புறம்பியப் போரினால் பாண்டியர்கள் மட்டுமல்ல, பல்லவர்களும் தம் வலி குன்றலானார்கள். இக்காலம் கி. பி. 893 ஆம். பின்னர் தன் வலியை நன்கு பெருக்கிய ஆதித்தன் திடீரெனத் தனியரசு முரசு கொட்டினான். காஞ்சியும் தொண்டை மண்டலமும் சோழன் கரத்தில் தவழலாயின. கொங்கு நாடு சோழன் அடியில் வந்து கிடந்தது. கொங்கு நாட்டு மன்னர்கள் சோழனுக்கு வெற்றிச் சிந்து பாடினர். ஆதித்தனின் 27-ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு ஒன்று திருக்கழுக்குன்றத்தில் காணப்படுகிறது. அதிலிருந்து இவன் சைவன் எனத் தெரிகிறது. இவன் சேரன் தாணுரவியோடு நட்புக்கொண்டான். சேரன் பாண்டிய – சோழர் போரில் சோழருக்குப் பல உதவிகள் புரிந்தான்.

முதலாம் பராந்தகன்

பராந்தகன் என்பவன் ஆதித்த சோழனின் மகனாவான். எனவே பராந்தகன் ஆதித்தனுக்குப் பின்பு சோழ நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். நாட்டைப் பெருக்க இவன் தன் தந்தையின் தந்திரத்தையே மேற்கொண்டான். வடக்கே பல்லவர்களையும், பாணரையும், வைதும்பரையும் அடக்கித் தன்னடிப்படுத்தினான். மேற்கே சேரரோடு உறவு கொண்டான். தெற்கே இவன் காலத்தில் பாண்டிய மன்னனாக இருந்தவன் இரண்டாம் இராசசிம்மனாவான். பராந்தகன் கி. பி. 910-இல் மதுரையைக் கவர்ந்தான்; “மதுரை கொண்ட சோழன்” எனப் பெயர் கொண்டான். தோற்ற இராசசிம்மன் வாளா இருக்கவில்லை. ஈழ நாட்டுக்கு ஓடினான். ஈழமன்னனைக் கெஞ்சினான். ஈழநாட்டுப்படையோடு சோழனைத் தாக்கினான். போர் வெள்ளூரில் நடைபெற்றது. போரில் பாண்டியன் தோற்றோடினான். இது நடந்த காலம் கி. பி. 915. ஆண்டுகள் ஐந்தோடின. பராந்தகன் பாண்டியனை மதுரையை விட்டே விரட்டினான். அவன் ஈழ நாட்டில் அடைக்கலம் புகுந்தான். பாண்டியன் ஈழ மன்னனிடம் விட்டுச் சென்ற முடியையும் இந்திரன் ஆரத்தையும் பெறச் சோழன் எவ்வளவோ முயன்றும் இறுதியில் தோல்வியுற்றான். இச் செய்தியை மகாவமிசமும் இரண்டாம் பிருதிவி பதியின் செப்பேடுகளும் எடுத்தியம்புகின்றன. கங்க அரசனான பிருதிவிபதி என்பான் சோழனுக்கு அடிபணிந்தான். இராசேந்திரன் விடுத்த திருவாலங்காட்டுப் பட்டயங்கள் மூலம் பராந்தகன் தில்லைக் கூத்தன் கோவிற்குப் பொற்கூரை அமைத்தான் என்பதும், அதனால் ‘கோவில் பொன் வேய்ந்த தேவன்’ என்று அழைக்கப்பட்டான் என்பதும் தெரிய வருகின்றது. உத்தரமேரூர்க் கல்வெட்டு மூலம் சோழப் பேரரசு, பேரரசாகத் திகழ அடிகோலியவனும், சிறந்த ஆட்சிவன்மையுடையவனும் பராந்தகனே என அறியலாம். இவன் காலத்தில் சோழப்பேரரசு வடக்கே நெல்லூர் முதல் தெற்கே குமரிமுனை வரை பரவி இருந்தது. என்றாலும் பராந்தகன் தன் இறுதிநாளில் மகிழ்ச்சியோடும் மனநிம்மதியோடும் வாழ முடியவில்லை. இராட்டிரகூட மன்னனான மூன்றாம் கிருட்டிணன் தொண்டை மண்டலத்தின் மீது படை எடுத்தான். அக்காலத்தில் சோழப்பேரரசின் இளவரசனாக இருந்தவன் இராசாதித்தன் ஆவான். தக்கோலம் என்ற இடத்தில் இராசாதித்தனுக்கும் மூன்றாம் கிருட்டிணனுக்கும் இடையே போர் நடந்தது. இது நடந்த ஆண்டு கி. பி. 949. போரிலே சோழன் கொல்லப்பட்டான். ‘சங்கராம ராகவா’, ‘பண்டித வத்சலா’ என்பன பராந்தகனது விருதுப் பெயர்களாகும். இவன் திருவாவடுதுறை, செந்துறை முதலிய இடங்களில் கோவில்கள் அமைத்தான். மேலும் வீரநாராயண ஏரி, சதுர்வேதி மங்கல ஏரி, சோழ வாரிதி, சோழசிங்கபுரத்தேரி முதலிய பேரேரிகளை வெட்டு வித்தவனும் இவனே.

பராந்தக சோழ பரகேசரிக்கும் முதல் இராசராசனுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இருவருக்கும் இடையில் ஆண்ட சோழ மன்னர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐந்து சோழ மன்னர்கள் ஆண்டதாகத் தெரியவருகிறது. மூன்றாம் கிருட்டிணன் காஞ்சியைக் கைப்பற்றிப் பின் தஞ்சைக்கும் கண்ணி வைத்தான். மூன்றாம் கிருட்டிணனை, பராந்தகனின் இரண்டாம் மகனான கண்டராதித்த சோழன் எதிர்த்து விரட்டி அடித்தான். ஆனால் அச்சோழனால் நீண்ட நாள் ஆள முடியவில்லை. ஏன்? திடீரென அவன் இறந்துவிட்டான். கண்டராதித்த சோழனின் அருமை மனைவியான செம்பியன் மாதேவியார் தன் கணவனின் நினைவுக்காக கோனேரி ராசபுரம் என்ற இடத்திலே ஒரு கோவிலைக் கட்டினார். கண்டராதித்த சோழனின் மகனான உத்தமன் மிகவும் இளம் வயதினனாக இருந்தபடியால் பராந்தகனின் மூன்றாம் மகனான அரிஞ்சயன் மன்னனானான். ஆனால் அரிஞ்சயனும் நெடுநாள் நாட்டை ஆளவில்லை. அரிஞ்சயன் மகனும் இரண்டாவது பராந்தகனுமாகிய சுந்தரசோழன் கி பி. 956 இல் அரியணை ஏறி கி. பி. 973 வரை நாட்டை ஆண்டான். சுந்தர சோழன் இராட்டிரகூடர்களிடமிருந்து காஞ்சியை மீட்டினான். பின்னர் பாண்டிய மன்னனான வீரபாண்டியனோடு போரிட்டு வெற்றி பெற்றான். எனவே மதுராந்தகன் என்ற பட்டமும் சூட்டிக் கொண்டான். இப்போரில் சுந்தர சோழனின் மகனான ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையைப் பந்தாடினான். ஆதித்த கரிகாலன் தந்தைக்குப்பின் கி. பி. 973 இல் அரியணை ஏறி 980வரை ஆண்டான் என்பது சிலர் கருத்து. சிலர் உத்தம சோழனால் ஆதித்த கரிகாலன் கொலையுண்டான் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. ஆதித்த கரிகாலன் கொலையுண்டான். யாரால்? சோழ நாட்டு அரசியல் அதிகாரிகள் இருவர், பாண்டிய நாட்டு அரசியல் அதிகாரி ஒருவர் ஆகிய மூவரும் சேர்ந்து சதிசெய்து ஆதித்த கரிகாலனைக் கொன்றார்கள். இவர்கள் பிற்காலத்தில் இராசராசனால் தண்டிக்கப்பட்டனர். இச்செய்தியைச் சிதம்பரம் தாலுகாவிலுள்ள காட்டுமன்னார் கோவிலிலுள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்

Sunday, December 25, 2022

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 5/6

அகரமுதல





(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-4/6 – சி.பா. தொடர்ச்சி)

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 5/6

இந்நூற் கருத்துகளுடன், தாம் ஆராய்ந்த வேறு சில கருத்துகளையும் சேர்த்து ‘பண்டைச் சேரரைப் பற்றிய சில ஆராய்ச்சிகள்’ (Some Studies about the Cheras of yore) என்னும் தலைப்பிட்டு ஆங்கில நூல் ஒன்றும் எழுதி நாவலர் பாரதியார் வெளியிட்டார்.

சேரர் தாய முறை


சேரர் தலைநகரான வஞ்சி குறித்துத் தமிழறிஞர் பெரு மக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவன போன்றே, சேரர் தாய முறை குறித்தும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.
இன்றைய கேரள மாநிலமாம் அந்நாளைய சேர நாட்டில் ஆண் மக்கள் தம் தந்தையர்க்குப் புதல்வராக அமைந்தாலும், அவருக்கன்றி, அத் தந்தையாரின் உடன் பிறந்தாள் புதல்வர்க்கே அச்சொத்து உரிமையுடையதாகும். இதுவே ‘மருமக்கள் தாய முறை’ என இப்பொழுது வழங்கப்படுகிறது. இவ்வழக்கு இடைக்காலத்தது என்பர். ஆனால் நாவலர் பாரதியார் அவர்கள் இதனை நன்காராய்ந்து சேர நாட்டில் முற்காலத்தில் வழக்கிலிருந்தது மருமக்கள் தாய முறையே என்றும், பழந்தமிழக முழுவதும் அக்காலத்தே இததாய முறையே வழிவழி மரபிலிருந்தது என்றும் ஆராய்ந்து கண்டு ‘சேரர் தாய முறை’ என்னும் நூலை எழுதினார்.

System of Succession in the Chera Kingdom’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் நூலை யாத்தார்.

மாரி வாயில்

நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்க் கவிப் புலமைக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவது ‘மாரி வாயில்’ என்னும் கவிதை நூலாகும். வடமொழியில் காளிதாசர் இயற்றிய ‘மேக சந்தேசம்’ என்னும் நூலைப் போன்றது இந்நூல். பஞ்சபாண்டவருள் நடுப் பிறந்த பார்த்தனான அருச்சுனனுக்கு அவன் தமிழ் மனைவியான பாண்டியன் மகள் மாரியைத் தூது அனுப்பியதாகக் கற்பித்துக் கூறும் கவின் மிகு நூலாகும் இது. இந்நூல் கற்பனை வளம் மிக்கது: காதலறத்தை விளக்குவது; பழந்தமிழ் இலக்கணமாகிய நூலிற்கு இலக்கியமாகத் திகழ்வது; இருநூற்றிருபத்திரண்டு பாக்களைக் கொண்டு கழிபேரின்பம் பயப்பது; பெரும் புலவர் அருணாசலக் கவிராயரால் “சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் இயற்றப் பெற்ற தமிழ்ப் பிரபந்தங் களுள் இம் ‘மாரி வாயில்’ பொருள்வளம் சொல்லின்பங்களில் சிறந்து விளங்குவது” என்று பாராட்டப்பட்டுள்ளது.

மங்கலங் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி

இந்நூல் காதல், வீரம் ஆகிய இரு பெற்றியினையும் ஒருங்கே கூறுவதாகும். மங்கலங்குறிச்சி என்னும் சிற்றுார் பொதியமலை அடிவாரத்தில் உளது. தைத்திங்கள் தலை நாளில் நீராட வைகுறு விடியலில் ஆற்றுக்குச் சென்று தலைவி கால் தடுக்கிச் சுருட்டும் சுழியில் விழுந்தாள். வெள்ளம் இழுத்த அவளை அவ்வழியே வந்த தலைவன் காப்பாற்றிக் கரை சேர்த்தான். அன்று மாலையில் அவ்வூரில் நடந்த விலையர் போட்டியில் வெற்றி கண்டான் தலைவன். வேங்கைப் புலியை வீழ்த்திய கையோடு தலைவி கூந்தலிற் செருகி அழகு பார்க்க முல்லைக் கொத்தொன்றையும் வில்லாற் கொய்தான். இந்நிலையில் வீடு சென்ற தலைவியை மாமி பழித்தாள், மகளுக்காகப் பரிந்து வந்தாள் சித்தி. அதற்கிடையில் வெற்றி ஊர்வலம் வந்த தலைவனை அக்காட்சி பொறாத கெடுமதியாளன் ஒருவன் குத்தி விட்டான். குத்தியவனை இளைஞர் படை சிறைக்கூடம் சேர்த்தது. புண்பட்ட தலைவன் மருத்துவம் செய்யப் பெறும்போது தலைவியின் பெயரைத் தன்னை மறந்த நிலையில் உச்சரித்தான். செய்தியறிந்த தலைவி ஓடிச்சென்று தன் இனிய உரைகளால் உயிர்ப்பித்தாள்; அவனும் புண் தெளிந்து எழுந்தான். இருவரும் மணம் செய்து கொண்டு மனையறம் காத்தனர்.
(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்

Tuesday, December 20, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 20

 அகரமுதல




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 19 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 12


அரியிலூர் ஞாபகங்கள்

அரியிலூரில் முன்பு நாங்கள் இருந்த வீடு பாதுகாப்பின்மையால் சிதைந்து போயிற்று. அதனால் பெருமாள் கோயில் சந்நிதிக்கு நேர் வடக்கில் தெற்கு வடக்காக உள்ள தெருவில் கீழ் சிறகில் வைத்தியநாதையரென்பவருடைய வீட்டில் இருந்து வந்தோம்.

எங்கள் வரவைக் கேட்ட பழைய அன்பர்கள் மிக்க குதூகலம் அடைந்தனர். பலர் வந்து என் தந்தையாரைப் பார்த்து அன்போடு வார்த்தையாடிச் சென்றனர். அப்போது எனக்கு ஏழாம் பிராயம் நடந்து வந்தமையால் உலகத்துக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் நன்றாக மனத்திற் பதிந்தன. நான் அக்காலத்திற் கண்ட இடங்களும் பார்த்த மனிதர்களும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும் எனக்குப் புதிய சந்தோசத்தையும் ஊக்கத்தையும் அளித்தன. அரியிலூர்தான் எனக்குப் பெரிய நகரம். அந்த ஊர் சமீன்தார்தான் கதைகளில் கேட்ட இராசா. அங்கிருந்த அன்பர்களே பழைய வரலாறுகளில் வரும் உபகாரிகள்.

பழங் கணக்கு


அரியிலூ ரென்பது அரியிலென்றும் வழங்கும். அரிக்கு இல்லாக இருத்தலின் அப்பெயர் வந்தது. அரிய – திருமால்; இல்=இருப்பிடம். இந்த சமத்தானம் அக்காலத்தில் அவரோகண நிலைமையில் இருந்தது. புதிய பெருமை இல்லாதவர்கள் பழம்பெருமை அதிகமாகப் பாராட்டிக்கொள்வது உலக இயல்வு. ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பதுபோல்’ என்ற பழமொழி அதை விளக்கத்தான் எழுந்தது. ஆதலின் அக்காலத்தில் அரியிலூர் சமத்தானம் உயர்ந்த நிலையில் இராவிட்டாலும் அதன் பழைய வரலாறுகள் மிக்க பெருமையோடு யாவராலும் சொல்லப்பட்டு வந்தன. அச்சரித்திரங்கள் எனக்கு மிக்க சுவையுள்ளனவாகத் தோன்றும். நான் முதன்முதலாகத் தெரிந்துகொண்ட சரித்திரச் செய்திகளாதலால் அவற்றில் என் மனம் ஈடுபட்டது.

அரியிலூர் ஒரு சமத்தானத்தின் தலைநகரமாகையால் தமிழ்நாட்டு சமத்தானங்களைப் போலவே வீரர், புலவர், உபகாரிகள் ஆகியவர்களுடைய தொடர்புகொண்டது. ஒவ்வொரு சமத்தானத்திலும் சனங்கள் மனத்தைக் கவரும் இயல்புள்ள சரித்திர வரலாறுகள் உண்டு. அரியிலூர் சமத்தான சம்பந்தமாகவும் அத்தகைய வரலாறுகளுக்குக் குறைவில்லை. [1]  

அரியிலூர் உள்ள நாட்டுக்குக் குன்றவளநா டென்பது பழம்பெயர். அதைக் குன்றையென்றும் சொல்வார்கள். அரியிலூர் சமீன்தார்களுக்கு ‘ஒப்பில்லாதவள்’ என வழங்கும் தேவி குலதெய்வம். அத்தேவியின் அடியவர்களாதலின் அவர்களுக்கு ஒப்பிலாத மழவராயரென்பது குடிப்பெயராக அமைந்தது.

மழவராயரென்பதற்கு வீரர் தலைவர் என்பது பொருள். மழவர்கள் என்பார் தமிழ்நாட்டிற் பழங்காலத்தில் இருந்த சிறந்த வீரர்களில் ஒரு வகையினர்.

அந்தகக்கவி வீரராகவ முதலியார் இந்த ஊருக்கு வந்து பரிசு பெற்றுச் சென்றார். அக்காலத்தில் இங்கே சமீன்தாராக இருந்தவர் கிருட்டிணைய ஒப்பிலாத மழவராய ரென்பவர்.

படியளந்த சமீன்தார்

கிருட்டிணைய ஒப்பிலாத மழவராயர் ஏழைகளுக்கு இரங்கும் தன்மையினர். புலவர்களை ஆதரிக்கும் வள்ளல். தினந்தோறும் தம்மிடம் விருந்தினர்களாக வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய பொருளை வழங்குவதை முதற்கடமையாகக் கொண்டனர். அவரவர்களுக்கு வேண்டியவைகளை அளந்து தரச் செய்தனர்.

கவி வீரராகவ முதலியார் வந்த காலத்தில் சமீன்தார் படியளந்து கொண்டிருப்பதை அறிந்தார். பல பேர்களுக்கு வழங்க வேண்டியிருந்தமையின் நெடுநேரமாயிற்று, அதை உணர்ந்த கவிஞருக்குப் பெருவியப்பு உண்டாயிற்று. ‘ஏதேது! இன்றைக்கு இ லட்சம் பேருக்குப் படி அளந்திருப்பார்போல் இருக்கிறதே’ என்று நினைத்தார். கவிஞர் நினைப்பதற்கும் மற்றவர்கள் நினைப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அவர்  நினைப்பு ஒரு கவியாக மலர்ந்தது, ‘இந்த ஒப்பில்லாத மழவராயருக்கு மகாவிட்ணு ஒப்பாவரோ? திருமால் அளந்தது மூன்றுபடியே (படி-உலகம்) இவர் அளப்பது ஒரு நாளைக்கு இ லட்சம் இருக்குமே’ என்ற பொருளுடையது அந்தச் செய்யுள்:-

சேயசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத் தூயசெங் கண்ணன் இணையொப்ப னோதண் துழாயணிந்த மாயன் அளக்கும் படிமூன்று கிருட்டிணைய மாமழவ ராயன் அளக்கும் படியொரு நாளைக் கிலக்கமுண்டே.”

இத்தகைய வரலாறுகள் பல உண்டு.

அரியிலூரில் ஒரு கோட்டையும் அதற்குள் ஓர் அரண்மனையும் இருந்தன. அவை இடிந்து போயின. கோட்டைக்குப் பாதுகாப்பாக இருந்த கோட்டைமுனி என்ற தெய்வத்தின் கோயில் இன்றும் இருக்கிறது இந்த சமத்தானத்துக்குத் தனியே படைகள் இருந்தன. இப்போதும் இவ்வூரில் தளகர்த்த பிள்ளை வீடென்று ஒரு வீடுண்டு. அதில் முன்பு படைத்தலைவர் வசித்திருந்தார். அதனால்தான் அப்பெயர் வந்தது. தானாதிபதி குமாரசாமி பிள்ளை என்பவரது வீடொன்று உள்ளது. இவை இவ்வூரின் பழம்பெருமையைக் காட்டும் அடையாளங்கள்.

குளங்களும் கோயில்களும்

இவ்வூரில் செட்டிகுளம், குறிஞ்சான்குளம் என இரண்டு பெரிய குளங்கள் உள்ளன. குறிஞ்சான் குளக்கரையில் அரசு நட்ட பிள்ளையார் கோயில் என்ற ஆலயம் இருக்கிறது. அந்தப் பிள்ளையார் சம்பந்தமாகவும் ஒரு கதை உண்டு: ஒரு சமீன்தார் தம்முடைய பகையரசருக்குப் பயந்திருந்தாராம். அப்பால் ஒருவாறு தைரியமடைந்து பகைவர்களை எதிர்க்கச் சென்றார். செல்லும்போது அந்த விநாயகரை வேண்டிக்கொண்டு சென்றாராம். பகைவர்களுடன் நடத்திய போரில் அவர் வென்றார். விநாயகருடைய திருவருள்தான் தமக்குப் பலமாக இருந்ததென்று நம்பினார். அந்தப் பிள்ளையாருக்குக் கோயில் அமைத்துப் பூசை செய்வித்தார். அவரது அரசைப் பகைவர் கையில் சிக்காதபடி பாதுகாத்து நிலைநாட்டியமையால் விநாயகருக்கு அரசு நட்ட பிள்ளையார் என்ற திருநாமம் வழங்கலாயிற்று. அந்த சமீன்தார் பிறகு அரசு நட்டான் ஏரி என்பதையும் அருகில் வெட்டுவித்தார்.

குறிஞ்சான் குளத்துத் தென்கரையில் மீனாட்சி மண்டபமென்ற இடத்தில் விநாயகர் கோயிலும் சிவ விட்ணு ஆலயங்களும் உள்ளன. அம்மண்டபம் முதலியன இந்த சமத்தானத்தில் அதிகாரியாக விளங்கிய சிரீ மீனாட்சி தீட்சித ரென்பவராற் கட்டப்பட்டவை. அங்குள்ள மூர்த்திகளுக்கு உரிய பூசைகள் நன்றாக நடைபெற்று வந்தன.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Monday, December 19, 2022

தமிழ்நாடும் மொழியும் 19: பல்லவப் பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

 அகரமுதல




(தமிழ்நாடும் மொழியும் 18 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 19

பல்லவப் பேரரசு  தொடர்ச்சி

அடுத்து தெற்கே சென்றால் நாம் பார் புகழும் பஞ்ச பாண்டவர் இரதங்களைப் பார்க்கலாம். இவ்வைந்து விமானங்களும் ஒற்றைக்கல் கோவில்களாகும். இவற்றுள் பெரிதாக உள்ளது ‘தருமராச இரதம்’ என்று கூறப்படுகின்றது. இதன்கண் அழகிய வேலைப்பாடுகளைக் காணலாம். மாடப்புரைபோல் விளங்கும் இதன் கருப்பக் கிருகம் வெகு அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இதன்கண் சோமாசுகந்த விக்கிரகம் அழகாக விளங்குகின்றது. பீமசேன இரதம் முன்னும் பின்னும் மண்டபங்கள் உள்ளன. திரெளபதி இரதத்தையும், அர்ச்சுனன் இரதத்தையும் முன்மண்டபம் ஒன்று ஒன்றாய் இணைக்கின்றது. இவற்றிற்கு முன்னால் ஒரே கல்லில் வெட்டிய மதகரி, அரியேறு இவற்றின் சிலையுருவங்கள் விளங்குகின்றன. திரௌபதி இரதத்தின் மூலத்தானத்தில் துர்க்கையின் படிமத்தைக் காணலாம். இச்சிலையின் கீழ் பக்தனொருவன் தன் சிரத்தைத் தானே துணித்துக் கொள்ளும் பாவனையில் ஒரு சிற்பம் உள்ளது. இந்த இரதக்கோவில் சிறு கூரை வீடு போல் காட்சி தருகிறது. நகுல சகாதேவ இரதங்கள் எனக் கூறப்படுபவை முற்றுப் பெறாதவையாகும்; இவ்வொற்றைக் கற்கோவில்கள் இரத வடிவமாக அமைந்திருப்பதால் மக்கள் இவற்றை இரதங்கள் என அழைத்தனர் போலும். மேலும் பஞ்ச பாண்டவர் இரதங்கள் என்றே நெடுங் காலமாக இவற்றை மக்கள் அழைத்து வருகின்றனர்.

மகேந்திரன் காலத்து வாழ்ந்த சிற்பியர் தங்களுக்கு முன்னர் வாழ்ந்த மரத் தச்சர் காட்டிய சிற்பத் திறமைகளை எல்லாம் கல்லிலே காட்டினர். மகேந்திரன் காலத்துத் தூண்கள் மேலே பொதிகைகளுடன், கீழே சதுரமான பீடங்களுடன், நடுவில் பட்டை தீட்டிய மூலைகளுடன், புறத்திலே மன்னனது விருதுப் பெயர்களுடன் விளங்குகின்றன. போதிகைகளிலும், பீடத்திலும் தாமரைப்பூ செதுக்கப்பட்டுள்ளது. நரசிம்மன் காலத்தில் கட்டிய கோவில்களில் காணும் படிமங்களும், வரிசை வரிசையாக வண்ணமுடன் விளங்கும் அன்னங்களும், சிறு மணிக்கோவை நிரைகளும், பூ வேலைகளும் மிகச் சிறந்து விளங்குகின்றன. இவன் கட்டிய தூண்களின் போதிகைகள் பந்து வடிவாக உருண்டு காணப்படுகின்றன. இதன் மேற்பாகத்தில் வெட்டப்பட்டிருக்கும் பள்ளமான கழுத்து வளையத்தின் மேல் ஒரு சதுரப் பலகையும், அதன்மீது சதுரக் கல்லும், இக்கல்லின்மீது தலைப்பொதிகைப் பலகையும் அமைந்துள்ளன. சிங்கத்தின் முதுகிலே தூண்கள் நிற்கின்ற முறையில் தம்ப பீடங்கள் காணப்படுகின்றன.

அடுத்து வடகிழக்கில் முற்றுப் பெறாது காணும் குகைக் கோவிலின் தம்ப பீடங்கள் யானையுருவில் உள்ளன. இதைச் சார்ந்த மிகப் பெரிய பாறையில் சிற்பியர் தங்கள் கைவண்ணம் முழுவதையும் காட்டியுள்ளனர். இங்குதான் தவம் செய்யும் அர்ச்சுனனைக் காணலாம். இதனைப் ‘பகீரதன் தவம்’ என்றும் சொல்லுவர். பகீரதனைச் சுற்றிலும் பல மனித உருவங்களும், பல்வேறு விலங்குகளின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. குட்டியுடன் கூடிய யானையையும், குரங்குக் குடும்பத்தையும், தவஞ்செய்யும் பூனையையும் பார்ப்பவர் பரவசமுறாமலிருக்க முடியாது. இப்பாறைக்குச் சற்றுத்தள்ளி கண்ணனின் வெண்ணெய்த் திரள் என்று கூறப்படுகின்ற பாறையும், வராக சுவாமி கோவிலும் உள்ளன. இக்கோவிலில் மால் பூதேவியை அசுரரிடமிருந்து மீட்டு வந்த காட்சியை வெகு அழகாகச் சிற்பி படைத்துள்ளான்.

இறுதியில் நாம் காணவேண்டியது கரைக் கோவிலாகிய தலசயனக் கோவிலாகும். கடலலைகள் வந்து மோதும் வண்ணம் கட்டப்பட்டிருக்கும் இக்கோவில் காண்போர் கண்களுக்குச் சிறந்ததொரு விருந்தாகும்.

இரண்டாம் நரசிம்மனான இராசசிம்மன் அமைத்த கோவில்கள், மகேந்திரன், நரசிம்மன் ஆகியோரின் கோவில்களினின்றும் வேறுபட்டவை. இவன் காலத்தில் கற்றளி அமைக்கும் முறை ஏற்பட்டது. சுண்ணம் சேர்க்காமல் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோவில் கற்றளி ஆகும். காஞ்சியின்கண் உள்ள கைலாச நாதர் கோவில், வைகுந்தப்பெருமாள் கோவில், மாமல்லபுரக் கடற்கரைக் கோவில் ஆகியன இராசசிம்மனால் அமைக்கப்பட்டன. 1000 ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டப்பட்ட இக்கோவில்கள் இன்றும் நல்ல நிலையில் நம் நாட்டத்தை எல்லாம் கவரும் வகையில் உள்ளன. இராசசிம்மன் அமைத்த கோவிலினின்றும் கலை நுணுக்கத்தில் சிறிது வளர்ந்த அமைப்புடைய கோவிலை அபராசிதவர்மன் அமைத்தான். புதுக்கோட்டையின் அருகில் உள்ள சித்தன்ன வாசல் குகைக் கோவில் இன்றும் பல்லவரின் கலைப்பற்றை உலகுக்கு வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது.

பல்லவர் காலத்து வாழ்ந்த சிற்பிகள் மனிதரின் உருவங்களை உள்ளவாறே செதுக்குவதில் தலைசிறந்தோராவர். இவர்கள் செய்த உருவங்கள் மிகவும் பழைமை வாய்ந்தனவாகும். மாமல்லபுரம் வராகப்பெருமாள் கோவிலில் உள்ள சிம்மவிட்டுணுவும் அவனது மனைவியரும் ஆகிய மூவரது உருவச் சிலைகளும், தருமராச இரதத்திலுள்ள நரசிம்மவர்மனது உருவச் சிலையும், அர்ச்சுனன் இரதம் என்னும் கோவிலில் காணும் பல பல்லவ அரசர்களது உருவச்சிலைகளும் இன்றும் அவர்தம் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இதே போன்று கைலாசநாதர் கோவிலிலும், சித்தன்னவாசல் குகைக்கோவிலிலும் காணப்படும் ஓவியங்கள் ஒப்பற்றனவாகும். சித்தன்ன வாசல் குகைக் கோவில் ஓவியம் தமிழ்நாட்டு மிகப் பழைய ஓவியமாகும். சித்தன்னவாசல் என்னும் ஊர் திருச்சி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டைக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை, இரு நடன மங்கையரின் ஓவியங்களும், தாமரை பூத்து விளங்கும் காதிகா பூமி என்னும் அகழியின் ஓவியமும், மகேந்திரன், இவன் அரசி இவர்களது ஓவியங்களுமாம். கைலாசநாதர் கோவில் சுவர் ஓவியங்களில் பெரும்பாலானவை பெரிதும் சிதைந்தும் அழிந்தும் உள்ளன. பல காலம் மறைந்திருந்த பல்லவர் காலத்து ஓவியங்களை உலகிற்கு வெளிப்படுத்திய பெருமை பிரெஞ்சு அறிஞர் மூவோதூப்ராய் அவர்களுக்கே உரியது.

பல்லவர் காலத்தில் இசைக்கலையும் பெரிதும் போற்றப்பட்டது. பல்லவ மன்னன் மகேந்திரன் சிறந்த இசைக் கலைஞன் ஆவான். இவன் புத்தம் புதிய இசை ஒன்றினைக் கண்டுபிடித்த காரணத்தால் சங்கீர்ணசாதி என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். மகேந்திரனது குடுமியா மலைச் சாசனம் தமிழ் நாட்டு இசையினைப்பற்றி நன்கு விளக்குகின்றது. இச்சாசனம் வடமொழியில் உள்ளது; பல சுரங்களின் தன்மையை நன்கு எடுத்தியம்புகின்றது. மகேந்திரனது மாமண்டூர் குகைக்கோவில் சாசனம் இம்மன்னன் ‘தட்சண சித்திரம்’ என்னும் பழைய ஓவிய நூலுக்கு உரை எழுதினான் எனக் கூறுகின்றது.

இலக்கியம்

பல்லவர் காலத்திலே எல்லாக் கலைகளோடு இலக்கியக் கலையும் ஓரளவிற்கு வளர்க்கப்பட்டது. பல இலக்கியங்களும் இவர்கள் காலத்திலே தோன்றின. ஆனால் ஒரு கருத்து குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலத்திலே தமிழைவிட வடமொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் பல்லவ அரசர்களால் அளிக்கப்பட்டது. வடமொழிக் கல்லூரிகள் பல தோற்றுவிக்கப்பட்டன. மகேந்திர மன்னனே வடமொழியில் ‘மத்த விலாசப் பிரகசனம்’ என்று ஒரு நாடகம் எழுதியிருப்பது நாமறிந்த தொன்றே . தண்டின், பாரவி, திக் நாகர் என்பவர்கள் பல்லவர்களால் ஆதரிக்கப்பட்ட வடமொழிப் புலவர்கள் ஆவார்கள். பாரவி எழுதிய வடமொழி நூல் ‘கிராதார்ச்சுனீயம்’; தண்டின் எழுதிய வடமொழி நூல் ‘காவ்யாதர்சம்’. திக்நாகர் ‘ நியாயப் பிரவேசம்’ என்ற வடமொழி நூலை எழுதினார். இவ்வாறு வடமொழி பல்லவர் காலத்திலே நன்கு வளர்க்கப்பட்டபோதிலும் தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் ஊறு செய்தமைக்குக் குறிப்புகள் காணோம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் தேவாரப் பாக்களும், இலக்கியச்சுவை ஒழுகும் நந்திக் கலம்பகமும், பெருந்தேவனார் எழுதிய பாரதமும் பல்லவர் காலத்திலே எழுந்தன. மற்றும் சிவத்தளி வெண்பா, யாப்பு இலக்கண நூல்கள், அணி இலக்கண நூல்கள் சிலவும் பல்லவர் காலத்திலே எழுதப்பட்டன. எனவே இதுவரை கூறியவாற்றால் பல்லவர்காலத்திலே வடமொழி இலக்கியங்கள் பேரளவிலும், தமிழ் இலக்கியங்கள் ஓரளவிலும் வளர்ந்தன என்பது தெளிவாகும்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்

Sunday, December 18, 2022

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 4/6

 அகரமுதல




(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-3/6 – சி.பா. தொடர்ச்சி)

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 4/6

தமிழ்த் தொண்டு

1942இல் மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டு வரவேற்புக் குழுவின் துணைத் தலைவராயிருந்து அம் மா நாட்டைத் திறம்பட நடத்தினார். அடுத்து 1950இல் கோவையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 1954இல் அண்ணாமலை நகரில் தமிழாசிரியர் மாநாடடிற்குத் தலைமை தாங்கினார். 1956ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழாவில் ஐந்தாம் நாள் விழாவில் இயலரங்குத் தலைவராக இருந்து சீரிய கருத்துக்களைச் சிறக்க வெளியிட்டார். 1930, 1936, 1944 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஈழநாடு சென்று சொற்பொழிவுகள் ஆற்றி நாவலர்’ என்ற பட்டம் பெற்றார். மதுரைத் திருவள்ளுவர் சமுகத்தார் 11-1-1954இல் ‘கணக்காயர்’ பட்டம் வழங்கி இவரைச் சிறப்பித்தனர். 1955இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெள்ளி விழா கொண் டாடியபொழுது, இவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது. 1957இல் சென்னையில் தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவலரின் நற்றமிழ்த் தொண்டைப் பாராட்டிக் கேடயம் வழங்கியது.

இவ்வாறு பெருவாழ்வு வாழ்ந்த நாவலர் தம் எண்பதாம் ஆண்டு முடிவுற்ற சில திங்களில் 1959ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இரவு 7-40 மணிக்கு இயற்கை எய்தினார். தமிழ்நாடு தன் சீரிய தொண்டரை இழந்தது. தமிழன்னை தன் அரிய மைந்தனை இழந்தாள். தமிழினம் தன் தானைத் தலைவனை இழந்தது.


2. படைப்புத் திறன்

தயரதன் குறையும் கைகேயி நிறையும்

நாவலர் பெரிதும் ஈடுபாடு கொண்ட காப்பியம் கம்பராமாயணமாகும். தாம் பன்முறை ஆழ்ந்து ஆழ்ந்து அக் காப்பியத்தைப் பயின்றபோது தோன்றிய கருத்துகளை நண்பர்களிடம் எடுத்துரைத்தார். பின்னர் மேடைகளில் அக்கருத்துகளை குறிப்பிடத் தொடங்கினார். பின்னர் அக் கருத்துகளுக்கு நூல் வடிவு தந்தார். அந்த நூலே ‘தயரதன் குறையும் கைகேயி நிறையும்’ என்பதாகும்.

தயரதன் அறம் திறம்பா நெஞ்சினன் என்றும், கைகேயி மாகயத்தி என்றும் இராமாயணம் படிப்போர் இயல்பாகக் கருதி நிற்க, நாவலர், தயரதன் கன்யா சுல்கமாகப் பரதனுக்குத் தரவேண்டிய நாட்டை இராமனுக்களிக்க முன்வந்தது தவறென்றும், பரதனைக் கேகய நாட்டிற்கனுப்பி வைத்தது தவறென்றும், இராமன் முடிசூடுதலைக் கேகய நாட்டுறைந்த பரதனுக்குத் தெரிவிக்காமற் போனது தவறென்றும், எடுத்துக்காட்டி, கல்கச் சூளறம் பொய்த்துப் பழிவெள்ளத்து நீந்தாது தயரதனுக்கு அக் கல்கச் சூளறத்தை நினைவுறுத்தி அவனை அப் பெரும் பழியினின்றும் மீட்டது கைகேயியின் கற்பு மேம்பாட்டுடன் கூடிய நிறையென்றும் எடுத்துக் காட்டிய பெருமை நாவலரைச் சாரும்.

திருவள்ளுவர்

தமிழ்நாடு செய்தவப் பயனாய்த் தோன்றிய திருவள்ளுவர் குறித்து வழங்கும் கதைகள் பலப்பல, அவை அனைத்தும் ஒருவகையில் திருவள்ளுவர் புகழை மாசு படுத்துவதாகவே உள்ளன. பல்வேறு இலக்கியங்களை ஆராய்ந்து திருவள்ளுவர் பற்றிய திட்டவட்டமான கருத்தினை முதற்கண் வெளியிட்ட பெருமை நாவலரைச் சாரும். அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் வருமாறு:

“வள்ளுவர் கடைச்சங்கக் காலத்திற்கு மிகவும் முற் பட்டவர். திருக்குறளே தமிழின்கண் தோன்றிய தனிமுதல் அற நூல் திருவள்ளுவர் புலைச்சியின் புதல்வரல்லர். ஏலேல சிங்கனின் கொடையால் உயிர்த்த பிறவியல்லர். தமிழ் முடி மன்னரிடத்து உட்படு கருமத் தலைவராய்த் தம் ஆற்றலும் அறிவும் வாய்ந்தவர்.”

முதன் முதலாக இவ்வாராய்ச்சிச் சொற்பொழிவினை 25-1-1929ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம், கிறித்தவ இளைஞர் சங்கம் இவற்றின் ஆதரவில், மறைத்திரு. எச்சு.ஏ. பாப்லி துரை தலைமையில் நிகழ்த்தினார். பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் அறிஞர் பெருமக்கள் பலர் குழுமியிருந்த அவையில் வெளியிட்டார். அங்குக் கூடியிருந்த பெரு மக்களில் குறிக்கத்தக்கவர்முனைவர்உ. வே. சாமிநாதையர், மு. இராகவையங்கார், எசு. வையாபுரிப்பிள்ளை முதலியோராவர். இந்நூலைப் படித்துமுனைவர்உ. வே. சா. அவர்கள் கருதிய கருத்து, நாவலர் ஆழமான ஆராய்ச்சி அறிவு நுட்பம் வாய்ந்தவர் என்பதாகும்.

சேரர் பேரூர்

முடியுடை மூவேந்தரில் முதலாமவரான சேர மன்னரின் கோநகரமாம் வஞ்சி யாண்டுளது என்பது குறித்து ஆராய்ச்சிகள் பல எழுந்தன. சிலப்பதிகார உரையாசிரியராம் அடியார்க்கு நல்லாரும்,முனைவர்உ. வே. சாமிநாதையரும் மேற்கடற்கரையிலுள்ள பேராற்றின் கரைக்கண்ணது வஞ்சி என்பர். அறிஞர் வி கனகசபைப் பிள்ளை மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் பேரியாற்றங்கரையில் ஒரு பாமூருக் குத்திருக்கரூர் என்னும் பெயர் வழங்குவது கொண்டு அப்பா மூரையே வஞ்சி என்று கொண்டனர். ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற ஆராய்ச்சி நூலையளித்த பேராசிரியர் மு இராகவையங்கார், வஞ்சியென்பது திருச்சிக்கு மேற்கே ஆம்பிராவதி ஆற்றின் மேலதாக அமைந்திருக்கும் கருவூரானிலை அல்லது கருரே வஞ்சியென்பர். ‘தமிழ் வரலாறு’ எனும் அரிய ஆராய்ச்சி நூலைத் தந்த தஞ்சை அறிஞர் கே. சீனிவாசப் பிள்ளை, இச்சிக்கலைத் தீர்க்குமாறு நாவலரை வேண்டிக் கொள்ள, நாவலர் இப்பொருள் குறித்து விரிவாக ஆராய்ந்து ‘சேரர் பேரூர்’ என்னும் நூலைத் தமிழுலகிற்குத் தந்தார். “வஞ்சியெனப்படும் சேரர் கோநகரம், மலைநாட்டில் மேற்குக் கடற்கரையில் தோரியாற்றின் கழிமுகத்தில் அமைந்த பழம் பட்டினமேயன்றிப் பிறிது உள்நாட்டு ஊரேதுமாகாது” என்று அவர் ஆராய்ந்து முடிந்த முடிபாகக் கருத்து வெளியிட்டார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்