Sunday, February 25, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 76 : இரட்டிப்பு இலாபம்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 75 : அன்னபூரணி – தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம்-46

இரட்டிப்பு இலாபம்

திருவாவடுதுறைப் பிரயாணம் நான் எதிர்பார்த்தபடியே விரைவில்
ஏற்பட்டது. நான் மாயூரம் வந்து சேர்ந்த அடுத்த வாரமே பிள்ளையவர்கள்
திருவாவடுதுறையை நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் சவேரிநாத பிள்ளையும்
உடன் சென்றோம். சில ஏட்டுச் சுவடிகளும் எங்களுக்கு வேண்டிய
வத்திரங்களும் நாங்கள் எடுத்துக் கொண்டு போனவை.

மாயூரம் எல்லையைத் தாண்டி வண்டி போய்க் கொண்டிருந்தது.
அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனை
எடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக் கொள்ளும்” என்று அவர்
சொன்னார். நான், “முன்னமே முழுவதையும் வாசித்துக் காட்டித்
திருத்தங்களைப் பதிந்தோமே” என்று எண்ணினேன்.

கவிதை வெள்ளம்

ஏட்டைப் பிரித்து அம்பர்ப் புராணத்தில் எழுதப் பெற்றிருந்த இறுதிச்
செய்யுளை வாசிக்கச் சொன்னார். பிறகு சிறிது நேரம் ஏதோ யோசித்தார்.
அப்பால் புதிய பாடல்களைச் சொல்ல ஆரம்பித்தார். “பெரிய ஆச்சரியமாக
அல்லவா இருக்கிறது இது? வண்டியிலே பிரயாணம் செய்கிறோம். இப்போது
மனம் ஓடுமா? கற்பனை எழுமா?
 கவிகள் தோன்றுமா? அப்படித்
தோன்றினாலும் நாலைந்து பாடல்களுக்கு மேற் சொல்ல முடியுமா?” என்று
பலவாறு நான் எண்ணமிடலானேன்.

அவர் மனப் பாடம் பண்ணிய பாடல்களை ஒப்பிப்பது போலத்
தடையின்றி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லி வந்தார். வண்டிமெல்லச்
சென்றது. அவருடைய கவிதை வெள்ளமும் ஆறு போல வந்துகொண்டிருந்தது.
என் கையும் எழுத்தாணியை ஓட்டிச் சென்றது. வண்டியின் ஆட்டத்தில்
எழுத்துக்கள் மாறியும் வரிகள் கோணியும் அமைந்தன. அவர் சொன்ன
செய்யுட்களோ திருத்தமாகவும் பொருட் சிறப்புடையனவாகவும் இருந்தன.

வட தேசத்திலிருந்த நந்தனென்னும் அரசன் திருவம்பரில் வழிபட்டுப்
பேறு பெற்றானென்பது புராண வரலாறு
. அவன் அந்தத் தலத்துக்கு
வந்தானென்று சுருக்கமாகச் சொல்லி முடிக்காமல் இடைவழியில் உள்ள
தலங்களை எல்லாம் தரிசித்து வந்தானென்று அமைத்து அந்த அந்தத்
தலங்களின் பெருமைகளைச்சுருக்கமாகச் சொல்லுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொண்டார்
அக்கவிஞர். சிவ தல விசயமாகப் பல செய்திகளை அவர் அறிந்திருந்தார்.
சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவற்றை வற்புறுத்த வேண்டுமென்பது
அவரது அவா. ஆகையால் நந்தன் பல சிவ தலங்களைத் தரிசித்து
இன்புற்றானென்ற வரலாற்றை விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.

அப்பகுதிக்கு “நந்தன் வழிபடு படலம்” என்று பெயர். முன்பு 53
பாடல்கள் பாடப் பெற்றிருந்தன. அதற்கு மேல் நந்தன் பிரயாணத்தைப் பற்றிய
செய்திகளை உரைக்கும் செய்யுட்கள் எங்கள் பிரயாணத்தில் இயற்றப்பட்டன.

அவ்வப்போது ஒவ்வொரு செய்யுளை ஆசிரியர் புதியதாகச் சொல்ல
நான் எழுதியிருக்கிறேன். அக்காலங்களிலேயும் அவரது கவித்துவத்தைக்
குறித்து நான் வியந்ததுண்டு. ஆனால் இப்பிரயாணத்தில் எனக்கு உண்டான
ஆச்சரியமோ எல்லாவற்றையும் மீறி நின்றது. ஒரு வரலாற்றை அமைத்துத்
தொடர்ச்சியாகப் பேசுவது போலவே செய்யுட்கள் செய்வதென்பதைக்
கதையில்தான் கேட்டிருந்தேன். கம்பர் ஒரு நாளில் எழுநூறு செய்யுட்கள்
பாடினாரென்று சொல்லுவார்கள். “அவ்வளவு விரைவில் செய்யுள் இயற்ற
முடியுமா? அது கட்டுக் கதையாக இருக்க வேண்டும். அல்லது கம்பர் தெய்விக
சக்தியுடையவராக இருக்கவேண்டும்” என்று நான் நினைத்திருந்தேன்.
அன்றைத் தினம் ஆசிரியர் செய்யுட்களை இயற்றிய வேகத்தையும் அதற்குப்
பின் பல சமயங்களில் அவருடைய கவிதை வெள்ளம் பெருக்கெடுத்து
வருவதையும் நேரே அறிந்த
 எனக்கு அப்பழைய வரலாறு உண்மையாகவே
இருக்குமென்ற நம்பிக்கை உண்டாயிற்று.

வண்டியிலே போவதை நாங்கள் மறந்தோம். தம் கற்பனா உலகத்தில்
அவர் சஞ்சாரம் செய்தார். அங்கிருந்து ஒவ்வொரு செய்யுளாக உதிர்த்தார்.
அவற்றை நான் எழுதினேன். எனக்கு அவருடைய உருவமும் அவர் கூறிய
செய்யுட்களுமே தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை
. ஒரு பாட்டை அவர்
சொல்லி நிறுத்தியவுடன் சில சில சமயங்களில் அந்த அற்புத நிகழ்ச்சிக்குப்
புறம்பாக நின்று நான் சில நேரம் பிரமிப்பை அடைவேன். ஆனால் அடுத்த
கணமே மற்றொரு செய்யுள் அவர் வாயிலிருந்து புறப்பட்டு விடும். மீண்டும்
நான் அந்த நிகழ்ச்சியிலே கலந்து ஒன்றி விடுவேன்.

திருவாவடுதுறையை அடைந்தது

“திருவாவடுதுறை வந்துவிட்டோம்” என்று வண்டிக்காரன் சொன்னபோதுதான் நாங்கள் நந்தனையும் அவன் போன வழியையும் மறந்து விட்டு நிமிர்ந்து பார்த்தோம். “சரி, சுவடியைக் கட்டிவையும்; பின்பு பார்த்துக் கொள்ளலாம்” என்று ஆசிரியர் உத்தரவிட்டார். அவரை வாயாரப் பாராட்டிப் புகழும் நிலையும் அதற்கு வேண்டிய ஆற்றலும் இருக்குமாயின் அப்போது நான் ஒர் அத்தியாயம் சொல்லி என் ஆசிரியர்
புகழை விரித்து என் உள்ளத்தே இருந்த உணர்ச்சி அவ்வளவையும்
வெளிப்படுத்தியிருப்பேன். அந்த ஆற்றல் இல்லையே!

திருவாவடுதுறையில் தெற்கு வீதியில் உள்ள சின்னோதுவார் வீட்டிலே
போய் இறங்கினோம். அங்கே ஆசிரியர் அனுட்டானங்களை முடித்துக்
கொண்டு சிரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிப்பதற்காகப் புறப்பட்டார். நான்
நிழல் போலவே தொடர்ந்தேன். நாங்கள் திருவாவடுதுறையை அடைந்த செய்தி
அதற்குள் தம்பிரான்களுக்குத் தெரிந்து விட்டது. அவர்கள் மடத்து வாயிலிலே
பிள்ளையவர்களை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். அவரைக் கண்டவுடன்
அவரை அழைத்துக் கொண்டு உள்ளே ஆதீன கருத்தரிடம் சென்றார்கள்.

வரவேற்பு

சுப்பிரமணிய தேசிகருடைய சந்தோசம் அவர் முகத்திலே
வெளிப்பட்டது. ஆசிரியர் தேசிகரை வணங்கி விட்டு அருகில் அமர்ந்தார்.
நான் அவருக்குப் பின்னே இருந்தேன். தம்பிரான்களும் இருந்தனர். “இனிமேல்
தம்பிரான்களுக்கு உற்சாகம் உண்டாகும். நமக்கும் சந்தோசம்” என்று
சொல்லிய தேசிகர், “பாடம் எப்போது ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டார்.

“சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன். இன்றைக்கே
ஆரம்பிக்கலாம்” என்று பிள்ளையவர்கள் கூறினார்.

“இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். அதற்குள் சிரமம் தரக்கூடாது.
நாளைக் காலையிலிருந்தே தொடங்கலாம்” என்று சொல்லி வேறு பல
விசயங்களைப் பேசிவந்தார். அப்பால் விடை பெற்று நாங்கள் எங்கள்
விடுதிக்குச் சென்றோம்.

பாடத்தைப் பற்றிய யோசனை

மறு நாட் காலையில் மடத்துக்குச் சென்று சுப்பிரமணிய தேசிகர் முன்பு
அமர்ந்தோம். தம்பிரான்கள் பாடம் கேட்பதற்குச் சித்தமாக இருந்தார்கள்.
அவர்கள் கூட்டத்தில் குமாரசாமித் தம்பிரான் தலைவராக முன்னே
அமர்ந்திருந்தார். பிள்ளையவர்கள் பாடம் சொல்வதை அவர்கள் மிக்க
ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இவர்களுக்கும் தமிழ் படிக்க வேண்டுமென்று இவ்வளவு ஆவல் இருக்கிறதே. இவர்களுக்கு வேறு குறையொன்றும் இல்லை. தமிழ்க் கல்வியில் தமக்குள்ள ஆவலைப் பெரிதாகச் சொல்லுகிறார்களே!”
என்று நான் அவர்கள் முன்னிலையில் என் சிறுமையை நினைத்துப்
பார்த்தேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Saturday, February 17, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 75 : அன்னபூரணி

      18 February 2024      அகரமுதல



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 74 : புலமையும் அன்பும் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-45 தொடர்ச்சி

அன்னபூரணி

ஆசிரியரது அன்பைப் பற்றி நினைத்துக் கொண்டே இராமையருடன்
அவர் அழைத்துச் சென்ற வீட்டுக்குள் நுழைந்தேன். “அன்னபூரணி” என்று
இராமையர் தம் தமக்கையை அழைத்தார். பலசமயங்களில் சாதாரணமாகத் தோற்றும் சில நிகழ்ச்சிகள் முக்கியமான சில சமயங்களில் மனத்தில் நன்றாகப் பதிந்து விடுகின்றன. என் நிலையையும் என் பசியறிந்து உணவுக்கு ஏற்பாடு செய்யும் என் ஆசிரியர் அன்பையும் நினைத்தபடியே மற்ற விசயங்களை மறந்திருந்த எனக்கு “அன்னபூரணி” என்ற அப்பெயர் ஏதோ நல்ல சகுனமாகத் தோற்றியது. ஒரு விதமான
ஆனந்தமும் ஏற்பட்டது. எனக்கு ஆகாரம் உதவ அன்னபூரணியையே அவர்
அழைத்தால் என்ன சந்தோசம் விளையுமோ அத்தகைய சந்தோசம்
உண்டாயிற்று. காசியில் அன்ன பூரணி அம்பிகையின் திருக்கோயில் விசேடச்
சிறப்புடையதென்று கேள்வியுற்றிருந்தேன். முதல் நாள் இரவு காசிக்
கலம்பகத்தைப் படித்தபோது காசி நகரத்தை மனத்தால் அனுபவித்தேன்
;
மறுநாள் காலையிலே அன்ன பூரணி தேவியே எனக்கு அன்னம் படைத்ததாகப்
பாவித்துக்கொண்டேன். “நமக்குக் குறைவில்லை என்பதை இறைவன் இத்தகைய
நிமித்தங்களால் உணர்த்துகிறான்” என்று நினைத்து மகிழ்ந்தபடியே அன்ன
பூரணியம்மாள் இட்ட ஆகாரத்தை உண்டு மீட்டும் பிள்ளையவர்களை
அணுகினேன்.

பாடம்

“காசிக் கலம்பகத்தில் எஞ்சிய பாடங்களையும் படித்து விடலாமே”
என்று ஆசிரியர் சொன்னார். குமாரசாமித் தம்பிரான் முதலியவர்கள் பாடம்
கேட்பதற்காக வந்தார்கள். முதல் நாளைக் காட்டிலும் அதிக ஊக்கத்தோடு
நான் அன்று படித்தேன். முற்பகலில் அந்தப் பிரபந்தம் முடிந்தது. அப்பால்
குமாரசாமித் தம்பிரானும் வேறு சிலரும் பிள்ளையவர்களைப் பார்த்து, “இந்த
இரண்டு தினங்களில் ஒரு நல்ல நூலைக் கேட்டு முடித்தோம். ஐயா அவர்கள்
இங்கேயே இருந்து பாடம் சொன்னால் இன்னும் பல நூல்களை நாங்கள்
கேட்போம். எங்கள் பொழுதும் பயனுள்ளதாகப் போகும்” என்று கேட்டுக்
கொண்டனர்.

ஆசிரியர் மாயூரம் சென்று சில தினங்களில் வந்து அவர்கள்
விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். திருவாவடுதுறைக்
காட்சிகளையும் அங்கு உள்ளோரின் அன்பையும் கண்ட எனக்கும்
பிள்ளையவர்கள் திருவாவடுதுறைக்கே வந்திருந்தால் நன்றாக இருக்குமென்ற
எண்ணம் உண்டாயிற்று.

சோழ மண்டல சதகம்

அன்று பிற்பகலில் திருமலைராயன் பட்டணத்திலிருந்து ஆசிரியரைப்
பார்க்க வந்த கனவான் ஒருவர் தாம் கொண்டுவந்த சோழ மண்டல சதக ஏட்டுப் பிரதியைப் பிள்ளையவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய ஆசிரியர் என்னிடம் அளித்துப் பிரித்துப் படிக்கும்படி சொன்னார். புதிய நூல்களைப் படிப்பதில் எனக்கு அளவில்லாத சந்தோசம் உண்டு. ஆதலால் அதை ஊக்கத்தோடு படிக்க ஆரம்பித்தேன்.
அங்கங்கே அவர் விசயங்களை விளக்கிக்கொண்டே சென்றார்.

சோழ மண்டல சதகமென்ற பெயரைக் கேட்டவுடனே எனக்கு நான்
படித்த சதகங்களின் ஞாபகந்தான் வந்தது. நீதிகளை நூறு நூறு பாடல்களால்
எடுத்துக் கூறும் அந்தச் சதகங்களில் உள்ள செய்யுட்களைப் போன்ற
பாடல்களை இச்சதகத்திற் காணவில்லை. “சதகமென்றால் பெரிய பாட்டுக்களாக
இருக்குமே
” என்று ஐயுற்று நான் வினாவியபோது, நீதி சதகங்களுக்கும்
மண்டல சதகங்களுக்குமுள்ள வேற்றுமையை ஆசிரியர் விரிவாக எடுத்துச்
சொன்னார்.

ஒவ்வொரு நாட்டின் பெருமையையும் அந்நாட்டில் வாழ்ந்திருந்த
அரசர், புலவர், உபகாரிகள் முதலியோருடைய பெருமையையும் தனியே
தொகுத்துப் பாடுவது ஒரு சம்பிரதாயமென்றும், அப்படிப் பாடிய நூலே சோழ
மண்டல சதகமென்றும், அதனை இயற்றியவர் வேளூர் ஆத்மநாத
தேசிகரென்றும், படிக்காசுப் புலவர் தொண்டை மண்டலச் சிறப்பைப் பாராட்டிப்
பாடிய தொண்டை மண்டல சதகம் மிகவும் சிறந்ததென்றும்
 கூறினார்.

விடை பெற்றது

சில மணி நேரத்தில் சோழ மண்டல சதகம் முழுவதையும் நான் படித்து
முடித்தேன். அதிலே குறிப்பிட்டுள்ள சில பழைய வரலாறுகள் விளங்கவில்லை.

அப்பால் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “இப்படியே என்னுடன்
மாயூரம் வரலாமல்லவா?” என்று கேட்டார்.

“இல்லை. புத்தகங்கள், வத்திரங்கள் முதலியன ஊரில் இருக்கின்றன.
ஐயாவைப் பார்த்து எப்போது வரலாமென்று கேட்டுப் போகவே வந்தேன்.
போய் உடனே திரும்பிவிடுகிறேன்.”

“அவசரம் வேண்டா. ஊருக்குப் போய் இன்னும் சில தினங்கள்
இருந்து விட்டே வரலாம். அதற்குள் நான் மாயூரம் போய்விடுவேன். அங்கே
வந்து விடலாம்.” அன்றிரவு திருவாவடுதுறையில் தங்கியிருந்து மறுநாட்காலையில் நான் ஆசிரியரிடம் விடை பெற்றுச் சூரியமூலை போய்ச் சேர்ந்தேன். என்
தந்தையார் முதலியவர்களிடம் குரு பூசைச் சிறப்பையும் ஆசிரியருடைய
அன்புச் செயல்களையும் பற்றித் தெரிவித்தேன். 
கேட்டு அவர்கள் மிகவும்
மகிழ்ந்தனர்.

சூரிய மூலையில் பத்து நாட்கள் வரையில் இருந்து பழைய
பாடங்களைப் படித்து வந்தேன். அப்பால் ஒரு நாள் தந்தையாரை
அழைத்துக்கொண்டு மாயூரம் வந்தேன். பிள்ளையவர்கள் அங்கே
இருந்தார்கள். என் தந்தையார் மாயூரத்தில் ஒரு நாள் தங்கி மறுநாள்
விடைபெற்றுச் சூரிய மூலைக்குச் சென்று விட்டார்.

மாயூர நிகழ்ச்சிகள்

நான் மாயூரம் வந்தபோது பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளைக்கும்
வேறு சிலருக்கும் சிரீ சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தங்களைப் பாடம்
சொல்ல ஆரம்பித்திருந்தார். நால்வர் நான்மணி மாலை முதலிய சில
பிரபந்தங்கள் நிறைவேறியிருந்தன. நான் போன சமயத்தில் பிட்சாடன நவமணி
மாலை நடந்து வந்தது. அத் தமிழ்ப் பாடத்தில் நானும் கலந்து கொண்டேன்.
இடைவேளைகளில் முன்பு நடந்த பிரபந்தங்களையும் கேட்டு முடித்தேன்.
மத்தியில் ஆசிரியர் காரைக்காலில் இருந்த ஓர் அன்பர் விரும்பியபடி அவ்வூர்
சென்று அப்படியே திருவாரூர், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களுக்குப்
போனார். மாயூரத்தில் என்னுடன் சவேரிநாத பிள்ளை இருந்து வந்தார்.

மாயூரத்தில் நான் சாப்பிட்டு வந்த விடுதிக்குக் கொடுக்க வேண்டிய
பணம் கொடுக்க இயலாமையால் அங்கே ஆகாரம் செய்யப் போகவில்லை.
ஆதலால் அரிசி முதலியவற்றைப் பெற்று நானே சமையல் செய்து சாப்பிடத்
தொடங்கினேன். பிள்ளையவர்கள் வெளியூர்ப் பிரயாணத்தில் இருந்தாலும்
என்னை மறக்கவில்லையென்பதை அவரிடமிருந்து சவேரிநாத பிள்ளைக்கு
வந்த ஒரு கடிதம் வெளிப்படுத்தியது திருச்சிராப்பள்ளியிலிருந்து அதை
எழுதியிருந்தார். அதில் ஆசிரியர் என்னைச் சாக்கிரதையாகக் கவனித்துக்
கொள்ள வேண்டுமென்று சவேரிநாத பிள்ளைக்குத் தெரிவித்திருந்தார்.

சில தினங்களில் ஆசிரியர் மாயூரத்துக்குத் திரும்பி வந்தனர்.
வந்தவுடன், நானே சமையல் செய்து சாப்பிடுவதை அறிந்து அவர் மிகவும்
வருத்தமுற்று என்னிடம் மூன்று உரூபாயைக்கொடுத்து, “இதைக் கொண்டு போய் விடுதியிற் கொடுத்துச் சாப்பிட்டு வாரும்” என்று அனுப்பினார். அது முதல் பழையபடி முன் சொன்ன விடுதியிலேயே ஆகாரம் செய்துவந்தேன்.

அம்பர்ப்புராணம்

ஒரு நாள் ஆசிரியர் தம் புத்தகக் கட்டில் உள்ள ஒர் ஏட்டுச் சுவடியை
எடுத்து வரச் சொன்னார். அவர் முன்னமே பாடத் தொடங்கி ஓரளவு
எழுதப்பெற்று முற்றுப் பெறாதிருந்த அம்பர்ப் புராண ஏட்டுச் சுவடி அது;
‘திருவம்பர்’ என்னும் தேவாரம் பெற்ற சிவத்தல வரலாற்றைச் சொல்லுவது.
அதை முதலிலிருந்து என்னைப் படித்து வரும்படி சொன்னார். நான் மெல்லப்
படித்தேன். அவ்வப்போது சில திருத்தங்களை அவர் சொல்ல அவற்றை நான்
சுவடியிற் பதிந்தேன். இரண்டு மூன்று தினங்களில் அதில் உள்ள பாடல்கள்
முழுவதையும் படித்துத் திருத்தங்களும் செய்தேன். “இந்த நூலை ஆரம்பித்து
ஒரு வருடமாகிறது. அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. இதை முன்பு நான்
சொல்லச் சொல்ல ஒருவர் எழுதினார். அவர் திருத்தமாக எழுதக்
கூடியவரல்லர். நான் ஏதாவது சொன்னால் அதைக் காதில் வாங்கிக்
கொள்ளாமல் சில இடங்களில் வேறாக எழுதியிருக்கிறார். இப்படி இவர்
செய்திருப்பாரென்று சந்தேகப்பட்டுத்தான் மறுபடியும் படிக்கச் சொன்னேன்.
சொல்வதைச் சரியாக எழுதுவோர் கிடைப்பது அருமையாக இருக்கிறது” என்று
சொல்லிவிட்டு, “இனி இந்தப் புராணத்தை விரைவில் முடித்துவிடவேண்டும். நீர்
ஏட்டில் எழுதலாமல்லவா?” என்று என்னை ஆசிரியர் கேட்டார்.

“காத்திருக்கிறேன்” என்றேன் நான்.

“திருவாவடுதுறைக்கு வந்து இருப்பதாகச் சொல்லியிருக்கிறேன்.
தம்பிரான்களுக்குப் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாக
இருக்கிறது. இதை அங்கே போய் முடித்துவிடலாம்” என்று அவர் சொன்னார்.
அப்போது நான் திருவாவடுதுறைப் பிரயாணம் சமீபத்தில் இருப்பதை அறிந்து
சந்தோசமடைந்தேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Saturday, February 10, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 74 : புலமையும் அன்பும்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 73 : திருவாவடுதுறைக் காட்சிகள் 2- தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம்-45

புலமையும் அன்பும்

குருபூசைத் தினத்தன்று இரவு ஆகாரம் ஆனபிறகு அங்கே நடைபெறும் விசேடங்களைப் பார்க்கச் சென்றேன்.சிரீ சுப்பிரமணிய தேசிகர் ஓர் அழகிய சிவிகையில் அமர்ந்து பட்டணப் பிரவேசம் வந்தார். உடன் வந்த அடியார்களின் கூட்டமும் வாண வேடிக்கைகளும் வாத்திய முழக்கமும் அந்த ஊர்வலத்தைச் சிறப்பித்தன. பல சிறந்த நாதசுவரக்காரர்கள் தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். சிவிகையின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. பட்டணப் பிரவேச காலத்தில் சிசியர்கள் வீடுகளில் தீபாராதனை நடந்தது.

கொலுக் காட்சி

பட்டணப் பிரவேசம் ஆன பிறகு கொலு நடைபெற்றது. அப்போது கொலு மண்டபத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருக்க அவருக்குப் பூசை முதலியன நடைபெறும். பூக்களால் அலங்கரிக்கப் பெற்ற மண்டபத்தின் இடையே சுப்பிரமணிய தேசிகர் அசையாமல் அமர்ந்திருந்தார். அவருடைய மேனியின் அமைப்பும் ஒளியும் ஏதோ ஓர் அழகிய விக்கிரகத்தை அங்கேவைத்துத் தூப தீபங்களுடன் பூசை செய்வதாகவே தோற்றச் செய்தன. கொலு நடைபெறும் இடத்தில் பெருங் கூட்டமாக இருந்தது. தேவாரப்
பண்ணிசையும் வாத்திய கோசமும் இடைவிடாமல் ஒலித்தன.

எல்லாவற்றையும் கண்டுகளித்துப் பின்பு பிள்ளையவர்கள் தங்கியிருக்கும் சாகைக்கு வந்தேன். ஆசிரியர் உறங்காமல் தம் நண்பராகிய மகாலிங்கம் பிள்ளையென்பவருடன் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் பேச்சினால் அந்த மடத்துச் சம்பிரதாயங்களும் சுப்பிரமணிய தேசிகரது சிறப்பும் எனக்குத் தெரியவந்தன.

கொலு நடந்தபிறகு தேசிகர் சிரமப்பரிகாரம் செய்து கொள்ளாமல்
வந்தவர்களுக்கு விடைகொடுத்து அனுப்புவது வழக்கம். மறுநாள் காலையிலே
புறப்பட்டுப்போக வேண்டியவர்கள் குருபூசையன்று இரவே தேசிகரைத்
தரிசித்து உத்தரவு பெற்றுச் செல்வார்கள், குருபூசையன்று காலையில்
வேளாளப் பிரபுக்களும் பிறரும் தங்கள் தங்களால் இயன்ற பொருளைப்
பாதகாணிக்கையாக வைத்துத் தேசிகரை வணங்குவார்கள்
. அவர்களுக்கும்
மற்றவர்களுக்கும் அவரவர்கள் தகுதிக்கு ஏற்றபடி சம்மானம் செய்து அனுப்பும்
காரியத்தை ஆதீனகர்த்தர் குருபூசையன்று இரவு கவனிப்பார். சுப்பிரமணிய
தேசிகர் இவ்விடயத்தில் சிறிதேனும் தாமதம் செய்யாமல் வந்தவர்களுடைய
சௌகரியத்தை அனுசரித்து உடனுக்குடன் அனுப்பிவிடுவார். பிரபுக்களை
அனுப்புவதோடு வித்துவான்களையும் தக்க சம்மானம் செய்து அனுப்புவார்
.
பலர் மறுநாளும் இருந்து சல்லாபம் செய்து விடைபெற்றுச் செல்வதுண்டு.

செய்யுள் தானம்

இச்செய்திகளெல்லாம் பிள்ளையவர்களும் மகாலிங்கம் பிள்ளையும்
பேசிக்கொண்டிருந்த சம்பாசணையால் தெரியவந்தன. கொடையாளிகள்
கொடை பெறுவாருடைய சௌகரியத்துக்கு ஏற்றபடி நடந்து கொள்வதை நான்
அதற்கு முன் எங்கும் கேட்டதில்லை; கண்டதுமில்லை. சுப்பிரமணிய தேசிகர்
அத்தகையவரென்பதை அறிந்தபோது அவருக்கு ஏற்பட்டிருக்கும் புகழ் முற்றும்
தகுதியானதே என்று நினைத்தேன். நான் அக்காட்சியை நேரே சிறிது நேரம்
பார்த்துவிட்டும் வந்தேன்.

மகாலிங்கம் பிள்ளை பேசி விடைபெற்றுச் சென்ற பிறகு ஆசிரியர்
அவ்வீட்டின் இடைகழித் திண்ணையில் சயனித்துக் கொண்டார். ஒரு
நிமிடங்கூட இராது; அதற்குள் யாரோ ஒரு முதியவர் வந்தார். அவர் பெயர் பசுபதி பண்டாரமென்பது. அவர் பழைய கதையையெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். பிள்ளையவர்களை இளமையில் அவர் பரீட்சைஷை செய்தாராம். அவசரமாக ஊருக்குப் போக வேண்டுமாம். இன்னும் என்ன என்னவோ சுற்றி வளைத்துப் பேசினார்.
கடைசியில் தமக்கு ஒரு செய்யுள் இயற்றித்தந்தால் சுப்பிரமணிய தேசிகரிடம்
தாமே செய்ததாகச் சொல்லிச் சம்மானம் பெற அனுகூலமாகும் என்று
சொன்னார். அக்கவிஞர்பிரான் உடனே சருவசாதாரணமாக ஒரு பாடலை
எழுதச்செய்து அவரிடம் அளித்தார். அவர் அதை வாங்கிக்கொண்டு போனார்.
ஆசிரியர் மறுபடியும் கீழே படுத்தார். அடுத்த நிமிடமே மற்றொருவர்
வந்தனர். அவரும் ஒரு செய்யுள் செய்து தரும்படி யாசித்தார்.

இப்படியே ஒருவர் பின் ஒருவராக அன்று இரவு முழுவதும் பலர்
பிள்ளையவர்களிடம் பாடல் வாங்கிக் கொண்டு போய்ச் சுப்பிரமணிய
தேசிகரிடம் சம்மானம் பெற்றுச் சென்றார்கள். இந்த ஆச்சரியமான
நிகழ்ச்சிகளை நான் சில நாழிகை பார்த்தேன். பிறகு கண்ணயர்ந்தேன். விடியற்
காலையில் எழுந்தபோதுதான் ஆசிரியர் இரவு முழுவதும் தூங்கவேயில்லை
என்று தெரிந்தது.

புலவரும் புரவலரும்

பொழுது விடிந்தவுடன் அவர் அனுசுட்டானம் செய்து கொண்டு
சுப்பிரமணிய தேசிகரிடம் சென்றார். நானும் உடன் போனேன். அவர் இரவு
முழுவதும் கையோயாமல் கொடுத்தும் சலிப்பில்லாமல் காலையில் குளியல்
முதவியவற்றை முடித்துக் கொண்டு மறுபடியும் தம் திருக்கை வழக்கத்தைத்
தொடர்ந்து நடத்தி வந்தார். பிள்ளையவர்களைக் கண்டவுடனே அவருக்கு
முகமலர்ச்சியும் அதன் மேல் ஒரு சிரிப்பும் உண்டாயின. பிள்ளையவர்கள்
அவரை வந்தனம் செய்துவிட்டுத் திருநீறிடப்பெற்று ஓரிடத்தில் அமர்ந்தார்.

இராத்திரி பலபேர் தங்களுக்குச் சிரமம் கொடுத்து விட்டார்கள்போல
இருக்கிறதே!” என்று தேசிகர் கேட்டார்
. ஆசிரியர் புன்னகை பூத்தார்.

“ஒவ்வொருவரும் பாடல் சொல்லும்போது நமக்குப் பரமானந்தமாகி
விட்டது. என்ன பாட்டு! என்ன வாக்கு! எங்கிருந்துதான் விளைகிறதோ!”
என்றார் தேசிகர்.

“எல்லாம் மகாசந்நிதானத்தின் திருவருட் பலந்தான்” என்று
பணிவோடு கூறினார் ஆசிரியர். நாச்சலிக்காமல் பாடும் உங்கள் பெருமையை நேற்று இரவு நன்றாகத் தெரிந்து கொண்டோம்”

“கை சலிக்காமல் கொடுக்கும் சந்நிதானத்தின் கொடையினால் தான்
எல்லாம் பிரகாசப்படுகின்றன.”

புலவரும் புரவலரும் பேசிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு
அளவுண்டோ? அங்கே இருந்தவர்கள் யாவரும் விசயத்தைச் சுப்பிரமணிய
தேசிகரிடம் கேட்டு ஆச்சரியத்தால் தம்பித்துப் போனார்கள்.

தாயினும் அன்பு

பிறகு ஆசிரியர் விடைபெற்று வெளியே வந்து கொலு மண்டபத்தில்
நின்றிருந்த காரியத்தராகிய இராமையரென்பவரை அழைத்தார்; “சாமிநாதையர்
காலையில் ஆகாரம் செய்து கொள்வது வழக்கம்; அதற்கு ஏற்பாடு செய்ய
வேண்டும்” என்று அவரிடம் சொன்னார். அவர் என்னை அழைத்துக்கொண்டு
அக்கிரகாரத்துக்குச் சென்றார். தம்முடைய ஆகார விசயத்திலுள்ள
கவனத்தைக் காட்டிலும் என் ஆசிரியருக்கு என் உணவு விசயத்தில் இருந்த
சாக்கிரதை அதிகம்
. இதைப் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன். தன்
குழந்தை வயிறு வாடப் பாராத தாயின் அன்புக்கும் என் ஆசிரியர் காட்டிய
அன்புக்கும் வேற்றுமையே இல்லை.
 இதை நான் மனமார அறிந்தவன்.
கோட்டூரில் இருந்த காலத்தில் ஒரு முறை பிள்ளையவர்களைப் பற்றிப்
பேசும்போது, “பெற்ற தாயாரைவிட மிகவும் அன்பாக நடத்துகிறார்” என்று
சொன்னேன். அந்த வார்த்தைகள் என் தாயார் காதில் விழுந்தன. “என்ன
அப்பா அப்படிச் சொல்கிறாய்! தாயாரைக் காட்டிலும் ஒருவர் அதிக அன்பு
காட்ட முடியுமா?” என்று கேட்டார். என் வார்த்தைகளால் அவர் சிறிது
வருத்தத்தையே அடைந்தார். பெற்ற தாய்க்கு அன்பு இருக்கலாம்; ஆனால்
அதைச் செயலிற் காட்ட இயலாதபடி அவள் நிலை இருக்கும். என்
ஆசிரியருடைய அன்போ அவ்வப்போது செயல்களாகப் பரிணமித்தது.
அச்செயல்கள் மற்றவர்களுக்குச் சிறியனவாகத் தோற்றலாம். நான் அவற்றைப்
பெரியனவாகவே கருதுகிறேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Saturday, February 03, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 73 : திருவாவடுதுறைக் காட்சிகள் 2.

      04 February 2024      அகரமுதல



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 72 : திருவாவடுதுறைக் காட்சிகள் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம் 44 தொடர்ச்சி
திருவாவடுதுறைக் காட்சிகள் 2


அங்கே சுவாமி சந்நிதியிலுள்ள (இ)ரிசபம் மிகப் பெரியது. “படர்ந்த
அரசு வளர்ந்த (இ)ரிசபம்” 
என்று ஒரு பழமொழி அப்பக்கங்களில் வழங்குகிறது.
அவ்வாலயம் திருவாவடுதுறை மடத்தின் நிருவாகத்துக்கு உட்பட்டது.
இயல்பாகவே சிறப்புள்ள அவ்வாலயம் ஆதீன சம்பந்தத்தால் பின்னும்
சிறப்புடையதாக விளங்குகிறது.


உற்சவச் சிறப்பு
குரு பூசை நடைபெறும் காலத்தில் இவ்வாலயத்திலும் இரதோத்சவம்
நடைபெறும். உற்சவம் பத்துநாள் மிகவும் விமரிசையாக நிகழும். இரதசப்தமி
யன்று தீர்த்தம். பெரும்பாலும் இரதசப்தமியும் குருபூசையும் ஒன்றையொன்று
அடுத்தே வரும்; சில வருடங்களில் இரண்டும் ஒரே நாளில் வருவதும் உண்டு
ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் சிரீ கோமுத்தீசர் வீதியில்
திருவுலா வருவார். அப்பொழுது ஆதீனகர்த்தர் பரிவாரங்களுடன் வந்து
உற்சவம் ஒழுங்காக நடைபெறும்படி செய்விப்பார் தியாகராச மூர்த்தியின்
நடனமும் உண்டு. அதற்குப் பந்தர்க் காட்சியென்று பெயர்
. ஆலயத்தில்
உற்சவமும் மடத்தில் குருபூசையும் ஒருங்கே நடைபெறுவது ஒரு சிறப்பாகவே
இருக்கும். அயலூரிலிருந்து வருபவர்களுடைய கண்களையும் உள்ளத்தையும்
கவர்வதற்கு உரிய பல விசேடங்களுக்கும் அவ்விரண்டு நிகழ்ச்சிகளே
காரணமாக அமைந்தன. சிவபக்தியுள்ளவர்கள் ஆலய உற்சவத்திலே
ஈடுபட்டனர். ஞானாசிரிய பக்தி உடையவர்கள், குருபூசா விசேடங்களில்
ஈடுபட்டனர். இரண்டும் உடையவர்கள் “எல்லாவற்றையும் ஒருங்கே தரிசித்து
இன்புறுவதற்குப் பல தேகங்களும் பல கண்களும் இல்லையே!” என்று
வருந்தினார்கள்.


சாப்பாடு
நான் திருவாவடுதுறை வீதியில் நுழைந்தது முதல் அங்குள்ள
ஆரவாரமும் நான் கண்டகாட்சிகளும் என்னைப் பிரமிக்கச் செய்தன
.
ஒவ்வோரிடத்திலும் உள்ளவற்றை நின்று நின்று பார்த்தேன். அக்கூட்டத்தில்
பிள்ளையவர்கள் இருக்குமிடத்தை நான் எங்கே கண்டு பிடிப்பது? என்னுடன்
வந்தவரையும் அழைத்துக்கொண்டு தெருத் தெருவாக அலைந்தேன். எங்கள்
கண்களும் அலைந்தன. பன்னிரண்டு மணி வரையில் சுற்றிச் சுற்றிக் கால் வலி
கண்டது; வயிற்றிலும் பசி கிண்டியது. சாப்பிட்ட பிறகு பார்க்கலாமென்று
எண்ணிப் போசன சாலைக்குப் போனோம்.
அடேயப்பா! எத்தனைக் கூட்டம்! என்ன இரைச்சல்! என்ன சாப்பாடு!
எங்களுக்கு அக்கூட்டத்தில் இடம் கிடைக்குமோ என்ற சந்தேகம் வந்து
விட்டது. காலையில் ஒன்பது மணி முதல் அன்னதானம் நடந்து வருகிறது.
நாங்கள் போனபோதும் கூட்டத்திற்குக் குறைவில்லை. மெல்ல இடம் பிடித்துச்
சாப்பிடுவதற்குள் மிகவும் திண்டாடிப் போனோம். அவ்வுணவின் மிகுதியால்
சாப்பிட்ட பிறகும் சிறிது சிரமப்பட்டோம்.


மறுபடியும் ஆசிரியரைத் தேடும் வேலையைத் தொடங்கினோம்.
சாப்பிட்ட சிரமத்தால் காலையில் தேடியபோது இருந்த வேகம் எங்களுக்கு
அப்போது இல்லை. மெல்ல ஒவ்வொரு தெருவாகச் சுற்றினோம்.
இடையிடையே காண்போரை, ‘பிள்ளையவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள்?”
என்று கேட்போம். “அவர்கள் எங்கும் இருப்பார்கள்; பண்டார சந்நிதிகளோடு
சல்லாபம் செய்து கொண்டிருப்பார்கள்; வித்துவான்கள் கூட்டத்தில்
இருப்பார்கள், இல்லாவிட்டால் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி
வருவார்கள்” என்று விடை கூறுவர். “மாணாக்கர்களுக்குப் பாடம்
சொல்லுவார்கள்” என்பதைக் கேட்கும்போது எனக்கு ஒருவிதமாக வேதனை
உண்டாகும். “
அக்கூட்டத்தில் சேராமல் இப்படி நாம் தனியே திரிந்து
கொண்டிருக்கிறோமே!” என்ற நினைவு எழும். உடனே காலடியை வேகமாக
எடுத்துவைப்பேன்.


பிள்ளையவர்களைக் கண்டது
கடைசியில், தெற்கு வீதியில் மடத்துக் காரியத்தராகிய நமச்சிவாய
முதலியாரென்பவர் வீட்டுத் திண்ணையில் என் ஆசிரியர் அமர்ந்திருந்ததைக்
கண்டேன். அவர் பக்கத்திலே சில கனவான்களும் தம்பிரான்களும்
இருந்தார்கள். எல்லாரும் மிகவும் சந்தோசமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
பிள்ளையவர்கள் என்னைக் கண்டவுடன், “எப்பொழுது வந்தீர்? ஆகாரம் ஆயிற்றா? தேக சௌக்கியம் எப்படி இருக்கிறது?” என்று அன்பு ததும்ப விசாரித்தார்கள். நான் பதில் சொன்னவுடன், “உடம்பு இளைத்திருக்கிறது. இன்னும் ஏதாவது மருந்து சாப்பிடுகிறீரோ?” என்றார். “இல்லை” என்றேன்
பிறகு என் தாய் தந்தையரைப் பற்றி விசாரித்தனர்.
“குரு பூசையை இதுவரையில் நீர் பார்த்ததில்லையே?” என்று
கேட்டார்.
“இல்லை” என்றேன்.
“இந்த மாதிரி விசேடம் எங்கும் இராது. எல்லாம் சந்நிதானத்தின்
பெருமையினாலும் கொடையினாலுமே நடக்கின்றன.”
சந்நிதானமென்றது ஆதீனத் தலைவராகிய சிரீ சுப்பிரமணிய தேசிகரை.
“இனிமேல் பாடம் கேட்க வரலா மல்லவா?”
“நான் காத்திருக்கிறேன்.”
“குருபூசை யானவுடன் மாயூரத்திற்குப் போவேன். அங்கே போனவுடன்
பாடம் ஆரம்பிக்கலாம்” என்று ஆசிரியர் கூறியபோது என் உள்ளம்
குளிர்ந்தது. பாடம் கேட்பதில் எனக்கு இருக்கும் ஆவலைப் புலப்படுத்துவதற்கு
முன்பே பாடம் சொல்வதில் தமக்குள்ள சிரத்தையை அவர் புலப்படுத்தினார்
.
நான் பிள்ளையவர்களுடன் இருந்து அங்கே நிகழும் சம்பாசணைகளைக் கவனித்து வந்தேன். பல கனவான்கள் வந்து வந்து பேசி விட்டுச் சென்றார்கள். ஐந்து மணியளவுக்கு ஆசிரியர் மடத்திற்குச் சென்றார்.
நானும் அவர் பின் சென்றேன். எதிரே வந்தவர்கள் யாவரும் அவரைக்
கண்டவுடன் ஒதுங்கி நின்று முக மலர்ச்சியால் தம் அன்பை வெளிப்படுத்தினர்.
உட்கார்ந்திருந்த தம்பிரான்கள் அவரைக் கண்டதும் எழுந்து நின்று
வரவேற்றார்கள். அங்கே குமாரசாமித் தம்பிரானும், பரமசிவத்
தம்பிரானென்பவரும் இருந்தனர்
. அவர்கள் பிள்ளையவர்களோடு பேசிக்
கொண்டே மடத்தின் கிழக்கே இருந்த குளத்தின் கரையிலுள்ள (இப்போது
குளம் தூர்ந்து விட்டது) கீழைச் சவுக்கண்டிக்குச் சென்று அமர்ந்தனர்.
எல்லோரும் தமிழ் சம்பந்தமாகவும் மடத்தின் சம்பந்தமாகவும் பல
விஷயங்களைப் பேசியிருந்தனர்.

காசிக் கலம்பகம்
“இன்று நல்ல நாள். ஐயாவிடம் நல்ல தமிழ் நூல் ஒன்றைப் பாடம்
கேட்க வேண்டுமென்ற ஆசை உண்டாகிறது” என்று குமாரசாமித் தம்பிரான்
சொன்னார்.
“கேட்கலாமே” என்று சொல்லவே, அவரும் பரமசிவத் தம்பிரானும்
காசிக் கலம்பகம் கேட்க வேண்டுமென்றார்கள்.
“காசிச் சாமிக்கு முன் காசிக் கலம்பகம் நடப்பது பொருத்தமே” என்று
ஆசிரியர் கூறினார்.
எனக்கு முதலில் விசயம் விளங்காவிட்டாலும் பிறகு விசாரித்துத்
தெரிந்து கொண்டேன். பரமசிவத் தம்பிரான் சில வருடங்கள் காசியில்
இருந்தவர். அத்தகையவர்களைக் காசிச்சாமியென்று அழைப்பது மடத்துச்
சம்பிரதாயம்.
காசிக் கலம்பகத்தை நானே படித்தேன். அந்தப் பெரிய குருபூசை
விழாவில் வெளியில் அங்கங்கே வாத்திய கோசங்களும் கொண்டாட்டங்களும்
சந்தோச ஆரவாரங்களும் நிரம்பியிருக்க, நாங்கள் ஒரு குளத்தங் கரையில்
சிறிய சவுக்கண்டியில் காசி மாநகர்ச் சிறப்பையும் கங்கையின் பெருமையையும் சிரீ
விசுவநாதரது கருணா விசேடத்தையும் காசிக்கலம்பகத்தின் மூலம்
அனுபவித்து வந்தோம். சிரீ குமரகுருபர சுவாமிகள் வாக்காகிய அக்கலம்பகம்
சொற்சுவை பொருட்சுவை நிரம்பியது. சில காலமாகப் பிள்ளையவர்களையும்
தமிழ்ப் பாடத்தையும் விட்டுப் பிரிந்திருந்த எனக்கு அன்று
பிள்ளையவர்களைக் கண்ட இலாபத்தோடு பாடம் கேட்கும் இலாபமும் சேர்ந்து
கிடைத்தது.


இரவு எட்டு மணி வரையில் அப்பிரபந்தத்தைக் கேட்டோம். ஐம்பது
பாடல்கள் நடைபெற்றன. பிறகு அவரவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.
பிள்ளையவர்கள் தெற்கு வீதியில் தாம் தங்கியிருந்த விடுதியாகிய
சின்னோதுவார் வீட்டுக்குச் சென்றார்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.