Sunday, July 30, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 8

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 7 தொடர்ச்சி)


இங்கு என் பாக்கிய வசத்தால் எனக்கு கிடைத்த சிநேகிதர்களுள் இராமராய நிம்கார், பார்த்தசாரதி இராயநிம்கார் என்னும் இரண்டு சகோதரர்கள். இருவரும் தெலுங்கு பாசையில் மிகுந்த நிபுணர்கள். இவர்கள் காளஅசுத்தி சமசுதானத்தைச் சேர்ந்தவர்கள், பிற்காலத்தில் மூத்தவராகிய இராமராய நிம்கார் பானகல் இராச பட்டம் பெற்றார். இவர் என்னை விட சுமார் 10 வருடம் மூத்தவர். இவர் காலமாகி விட்டார். பார்த்தசாரதி இராய நிம்கார் தற்காலம் பானகல் இராசாவாகி சீவிய திசையில் இருக்கிறார்.

மற்றெருவர் வே. பா. இராமேசம். இவர் பிற்காலம் உயர்நீதிமன்ற நீதிபதியாகி சர் பட்டம் பெற்றார். இவர் 1958 ஆவது வருடம் மரணமடைந்தார். இவர் அபாரமான ஞாபக சத்தி உடையவர். நாங்கள் பரிட்சைக்குப் போனபோது இன்ன மதிப்பெண்கள் (marks) வாங்கினோம் என்று மறவாது சொல்வார்.

என் புதிய சிநேகிதர்களுள் மற்றெருவர் சிங்காரவேலு முதலியார். இவர் கணிதத்தில் மிகுந்த கெட்டிக்காரர். பிற் காலத்தில் சில காலம் பச்சையப்பன் கல்லூரியில் பிரதம உபாத்தியாயராக இருந்தார். இவர் நடுவயதிலேயே இறந்து போனார் என்று நான் சொல்ல வேண்டும்.

மற்ற சிநேகிதர்களுள் செகதீச ஐயர், மண்டயம் திரு நாராயணாச்சாரி, திரு. பிண்டோ முதலியவர்களை குறிக்க வேண்டும். இவர்களுள் கடைசியாகக் குறித்த பிண்டோ என்பவர் மாத்திரம் மங்களூரில் உயிர் வாழ்ந்து வருகிறார்.

மாநிலக்கல்லூரியில் நான் சேர்ந்ததினால் அடைத்த முக்கியமான இலாபம் என்னவென்றால் அதுவரையில் இல்லாதபடி புதிதாய் பல சாதி வகுப்பினர்களுடன் கலந்து அவர்களின் நட்பைப் பெற்று என் புத்தி விசாலமானதெனக் கூற வேண்டும்.
இங்கு சற்று நிதானித்து அக்காலத்து எப். ஏ. பரிட்சையில் நாங்கள் படிக்க வேண்டுய பாடங்களைப்பற்றி சற்று எழுத விரும்புகிறேன். முதலில் தற்காலத்து எசு. எசு. எல். சி. [S. S. L. C.) பரிட்சைதான் பழைய மெட்ரிகுலேசன் எனலாம். இரண்டாவது இடைநிலை(இண்டர் மீடியட்டு) பழைய எப். ஏ. பரிட்சையாகும். அக்காலத்தில் எப். ஏ. பரிட்சைக்கு போகும் ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயமாய்த் தேற வேண்டிய பிரிவுகள் ஆங்கிலம், தமிழ், தருக்கம், உடற்கூறு சாத்திரம், சரித்திரம், கணித சாத்திரம், இவை ஒவ்வொன்றிலும் பிரத்தியேகமாக வாங்க வேண்டிய மதிப்பெண்கள் வாங்காவிட்டால் தேற முடியாது. இந்த வகுப்பில் முக்கோணவியல்(trigonometry) என்னும் கணித நூல் வந்து சேர்ந்தது. வாசுத்தவமாய் இது என் மூளையில் ஏறவேயில்லை. இன்றைக்கும் சைன் தீடா, கோசைன் தீடா என்றால் என்ன என்று யாராவது என்னைக் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. இப்படி இருக்கும்போது எப். ஏ. வகுப்பில் பள்ளிக் கூடத்து வருடாந்திர பரிட்சையில் நான் கணக்கில் கடைசி பிள்ளையாக நின்றது ஆச்சரியமில்லை. இந்தப் பரிட்சையில் கணக்கில் எங்கள் வகுப்புப் பிள்ளைகள் மதிப்பெண்களை யெல்லாம் சக்கரவர்த்தி ஐயங்கார் என்னும் கணிதப் பேராசிரியர், பேராசிரியராகிய பூண்டி இரங்க நாத முதலியாரிடம் கொண்டு போய்க் கொடுத்து விட்டார். அவர் தன் வகுப்பில் நாங்கள் எல்லாரும் சேர்ந்த பொழுது ஒரு தினம் பிள்ளைகளுடைய மதிப்பெண்களை யெல்லாம் படித்துக் கொண்டு வந்தார். நன்றாக மதிப்பெண் வாங்கின சகதீசன், திருநாராயணாச்சாரி, சிங்காரவேலு முதலிய பிள்ளைகளுடைய மதிப்பெண்களைப் படித்தபோது மிகவும் நல்லது (Very good) என்று சொல்லிக் கொண்டு வந்தார். எனக்கு அப்போதே தெரியும் எனக்கு என்ன வரப்போகிறதென்று! அவர் படித்த பட்டியில் கடைசி பெயர் என்னுடையது. நூற்றிற்கு 23 மதிப்பெண்ணோ என்னவோ வாங்கினேன். (இதுவும் யூக் லிட் பேபர் போலும்), “சம்பந்தம் 23 மதிப்பெண்” என்று படித்து விட்டு “சம்பந்தம்! உன் சிறு வயதில் நன்றாய் படித்துக் கொண்டிருந்தாயே” என்று தான் சொன்னார். உடனே வகுப்பில் என்னையுமறியாதபடி கண்ணீர் விட்டு அழுது விட்டேன்.

அன்று சாயங்காலம் வீட்டிற்குப் போனவுடன் இது உதவாது இப்படியிருந்தால் நான் எப். எ. (F.A) பரிட்சையில் தேறவே முடியாது. இதற்கென்ன செய்வது என்று யோசித்த முக்கோணவியல் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்த புக்வர்க் (Book work) என்னும் பாகத்தையெல்லாம் ‘ஈயடித்தான் ரைடர்’ மாதிரி காபி பண்ண ஆரம்பித்தேன் தினம் இப்படியே செய்து எனக்கு ஞாபகமிருக்கிறபடி வருடத்தின் பரிட்சைக்கு போகுமுன் பதினோறு முறை காபி செய்தேன்! இதன் பயனாக நான் எழுதி வந்ததொன்றுக்கும் அர்த்தம் தெரியாவிட்டாலும் அப்புத்தகத்தில் எந்த புக்வர்க் கேட்ட போதிலும் குருட்டுப் பாடமாக தப்பில்லாமல் ஒப்பித்து விடுவேன். ஆல்சீப்ராவிலும் புக்வர்க் எதையும் ஒப்பித்துவிடும் சக்தி பெற்றேன். திசம்பர் மாதம் சர்வகாலசாலை எப். ஏ. பரிட்சைக்கு நான் போன போது இப்பரிட்சையில் புக்வர்க் எல்லாம் எழுதிவிட்டு என் பதில் பேப்பரை சீக்கிரம் கொடுத்து விட்டு எழுந்திருந்து வந்து விட்டேன். தெய்வாதீனத்தால் பரிட்சைக்கு வேண்டிய மதிப்பெண் கிடைத்தது. பி. ஏ. வகுப்பிற்கு போனபிறகு தான் ஒவ்வொரு பிள்ளையும் தனக்கு விருப்பமான பாடம் (optional subject) எடுத்துக் கொள்ளலாம். இது அக்காலத்திலிருந்த பெருங்குறையாகும், வைத்தியனாகவோ வக்கீலாகவோ ஆகவேண்டுமென்று விரும்பும் ஒரு பிள்ளை எதற்காக எப். ஏ. வகுப்பில் சியாமெட்ரி, ஆல் சீப்ரா, டிக்னாமெட்ரி முதலிய கணித புத்தகங்களை படிக்க வேண்டும். நான் கல்லூரிக்கு வந்தவுடன் வழக்குரைஞர் பரிட்சைக்குப் போய் தேறி வழக்குரைஞராக வேண்டுமென்று ஏறக் குறைய தீர்மானித்தேன். அப்படியிருக்க மேற்கண்ட கணித புத்தகங்களை யெல்லாம் படித்ததின் பயன் எனக்கென்ன? என் மூளைக்குச் சிரமம் கொடுத்ததேயொழிய அவற்றால் ஒரு பயனுமடையவில்லை என்றே நான் கூறவேண்டும். தற்காலத்துப் பிள்ளைகள் எங்களைவிட மிகவும் பேறுபெற்றவர்கள் என்று சொல்லவேண்டும்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, July 29, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 46 : பெரும்புலியூர்




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 45 – (அத்தியாயம் 25) : விருத்தாசல (ரெட்டியா)ர் தொடர்ச்சி)

பெரும்புலியூர்

பெரும்புலியூருக்கு இருவரும் சென்றோம். அந்த (இ)ராயரைப் பார்த்தோம். அவர் எங்களைக் கண்டு மிகவும் சந்தோசமடைந்தார். (இ)ரெட்டியாரைப் பற்றி அவர் முன்பே கேள்வியுற்றிருந்தவராதலால் அவர் தம் வீட்டுக்கு வலிய வந்ததை ஒரு பெரிய பாக்கியமாக எண்ணி உபசரித்தார். தமிழானது எங்கள் மூவரிடையுமுள்ள வேறுபாடுகளை மறக்கச் செய்து ஒன்றுபடுத்தியது. நெடுநேரம் தமிழ் சம்பந்தமான விசயங்களையே பேசிக் கொண்டிருந்தோம். “நீங்கள் நல்ல காரியம் செய்கிறீர்கள். இந்தப் பிள்ளைக்குப் பாடம் சொல்லி வருவது எனக்குப் பேரானந்தத்தை உண்டாக்குகின்றது. இது பெரிய புண்ணியம். தமக்குப் பாடம் சொல்பவர் ஒருவரும் இல்லையே என்று குன்னத்தில் இவர் தவித்துக் கொண்டிருந்தார். இவருக்கு உங்களுடைய பழக்கம் கிடைத்தது அதிர்ட்டமே” என்று (இ)ராயர் பாராட்டிப் பேசினார். முன்பு வாக்களித்திருந்தபடி தம்மிடமிருந்த திருக்குறட் பிரதியை எனக்கு ஆசீர்வாதத்துடன் கொடுத்தார். அப்பால் நாங்கள் இருவரும் விடைபெற்றுச் செங்கணம் வந்து சேர்ந்தோம்.


வரும்வழியில் (இ)ரெட்டியார் என்னை அயலிலுள்ள ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு பனைமரத்தைக் காட்டினார். அதில் நான்கு பக்கங்களிலும் பல கிளைகள் இருந்தன. நான் பார்த்து வியந்தேன். அந்த அதிசயத்தைப் பார்ப்பதற்குப் பலர் வருவதுண்டென்றும் சொன்னார். செங்கணம் வந்தது முதல் பின்னும் ஊக்கத்துடன் குறளைப் படித்து இன்புறலானேன். அப்புத்தகத்தில் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதப்பெற்ற பதவுரை, கருத்துரை, விசேடவுரைகள் இருந்தன. அது நளவருடம் ஆனி மாதம் (1856) காஞ்சீபுரம் சபாபதி முதலியாராற் பார்வையிடப் பெற்றுப் பதிப்பிக்கப்பட்டது.


பிள்ளையவர்கள் பிரஸ்தாபம்


(இ)ரெட்டியார் பாடஞ்சொல்லும் காலத்தில் இடையிடையே தமக்குத் தெரிந்த வித்துவான்களைப் பற்றியும் சொல்லுவார். நான் அரியிலூர்ச் சடகோபையங்காரிடம் பாடம் கேட்டதை அறிந்த அவர் அவ்வையங்காருக்கும் தமக்கும் பழக்கம் உண்டென்று சொன்னார். கும்பகோணம் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தியாகராச செட்டியாரைப் பார்த்திருப்பதாகவும் அவர் சிறந்த இலக்கண வித்துவானென்றும் கூறினார். சிரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றியும் அவர் அடிக்கடி சொல்வார்; திருக்குறள் முதலிய நூற்பதிப்புகளில் உள்ள அவருடைய சிறப்புப்பாயிரங்களின் நயங்களை எடுத்துக்காட்டிப் பாராட்டுவார். “அந்த மகானை நான் பார்த்ததில்லை; ஆனால் அவர் பெருமையை நான் கேள்வியுற்றிருக்கிறேன். அவர் காவேரிப் பிரவாகம்போலக் கவி பாடுவாராம். எப்பொழுதும் மாணாக்கர்கள் கூட்டத்தின் நடுவேயிருந்து விளங்குவாராம். அவருக்குத் தெரியாத தமிழ்ப் புத்தகமே இல்லையாம். எனக்குச் சில நூல்களிலும் உரைகளிலும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை அவரிடம் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று தனியே குறித்து வைத்திருக்கிறேன். எப்பொழுது சந்தர்ப்பம் நேர்கிறதோ தெரியவில்லை” என்று சொல்லிவிட்டுத் தாம் சந்தேகங்களைக் குறித்து வைத்திருந்த ஓலைச்சுவடியை என்னிடம் காட்டினார். செய்யுட்களாயுள்ள பகுதிகளின் எண்ணும், உரைப் பகுதிகளும் அதில் எழுதப்பட்டிருந்தன. மேலும் மேலும் படிக்கும் நூல்களில் சந்தேகம் எழுந்தால் அந்தச் சுவடியில் அவர் எழுதி வைத்துக்கொள்ளுவார்.


‘அவரிடம் போங்கள்’

இவ்வாறு பிள்ளையவர்களைப் பற்றிய பேச்சு வரும் சமயங்களில் நான் ஆவலாகக் கேட்பேன். மேலும் விசயங்களை விசாரிப்பேன். நான் அவர்களிடம் படிக்க வேண்டுமென்று எண்ணியதையும் திருவிளையாடற் புராணத்திற் கயிறுசார்த்திப் பார்த்ததையும் சொல்லியிருந்தேன். இரண்டு பேரும் பிள்ளையவர்களைப் பற்றிய பேச்சிலே நெடுநேரம் கழிப்போம். (இ)ரெட்டியாரும், “ஆம், அவரிடம் போனால்தான் இன்னும் பல நூல்களை நீர் பாடங் கேட்கலாம்; உமக்கு நிறைவு உண்டாகும்படி பாடம் சொல்லக் கூடிய பெரியார் அவர் ஒருவரே. நாங்களெல்லாம் மேட்டு நிலத்தில் மழையினால் ஊறுகின்ற கிணறுகள். என்றும் பொய்யாமல் ஓடுகின்ற காவிரி போன்றவர் அவர். அவரிடம் போய்ப் படிப்பதுதான் சிறந்தது” என்று சொல்லிவரத் தொடங்கினார். பலரிடம் இக்கருத்தையுடைய வார்த்தைகளையே கேட்டுக் கேட்டு ஏங்கிய எனக்கு (இ)ரெட்டியாருடைய வார்த்தைகள் பின்னும் உறுதியை உண்டாக்கின.


(இ)ரெட்டியார் என்னிடம் சொல்வதோடு நில்லாமல் என் தந்தையாரிடமும் இக்கருத்தை வெளியிட்டார்: “என்னால் இயன்றதைச் சொல்லிக் கொடுத்தேன். இன்னும் நன்றாகப் படித்துப் பயன் அடைய வேண்டுமானால் பிள்ளையவர்களிடம் இவரை விட்டுப் படிப்பிப்பதுதான் நலம். உங்களை ஆதரிக்க வழியில்லாமல் இவ்வாறு சொல்லுகிறேனென்று நீங்கள் சிறிதும் எண்ண வேண்டா. நீங்கள் எவ்வளவு வருடம் இருந்தாலும் எனக்குச் சிரமம் இல்லை. கடவுள் கொடுத்திருப்பதைக்கொண்டு என்னால் இயன்ற அளவு ஆதரித்து வருவேன். இவரால் எனக்குச் சிரமம் உண்டென்று நான் நினைப்பதாகவும் எண்ணாதீர்கள். இவருக்குப் பாடம் சொல்வதும், இவரோடு தமிழ் நூல் சம்பந்தமாகப் பொழுதுபோக்குவதும் உண்மையில் எனக்கு அளவற்ற மனநிறைவைத் தருகின்றன. எப்பொழுதும் இப்படியே இருக்கலாம். ஆனால் எனக்கு இனிமேல் வாழ்க்கையில் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை; இவர் இனிமேல்தான் முன்னுக்கு வந்து பிரகாசிக்க வேண்டும். தக்க இடத்தில் இருந்து பாடங் கேட்டால் இவர் அபிவிருத்தி அடைவாரென்பதில் தடையில்லை. இவரை அனுப்புவதற்கு எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. என் வருத்தத்தை மாத்திரம் உத்தேசித்து, இவருடைய அபிவிருத்திக்குத் தடை உண்டாக்குவது பாவமல்லவா?” என்று அவர் கூறிப் பின்னும் பலமுறை வற்புறுத்தினார். என் தந்தையார் அவர் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு, “எங்கே போனாலும் எல்லோரும் இந்தத் தீர்மானத்துக்குத்தான் வருகிறார்கள். ஈசுவர ஆக்ஞை இதுதான் என்று தோன்றுகிறது. இனிமேல் நாம் பராமுகமமாக இருக்கக் கூடாது. எவ்வாறேனும் இவனைப் பிள்ளையவர்களிடத்திற்கொண்டு போய்ச் சேர்ப்பது அவசியம்” என்று நிச்சயம் செய்தார். (இ)ரெட்டியாரிடம் தம்முடைய தீர்மானத்தைத் தெரிவித்துச் செங்கணத்தைவிட்டுப் புறப்படச் சித்தமாயினர்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Sunday, July 23, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 7

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 6 தொடர்ச்சி)

நீதிமன்றப் பணி

இப்படி இருந்தும் நீதிமன்றத்தில் ஒன்றாய் வேலை கற்றுவந்தோம். மத்தியான சிற்றுண்டியும் ஒன்றாய்ப் புசிப்போம்! இரண்டு பெயரும் 1898-ஆம் வருடம் வழக்குரைஞர்களாக பதிவு செய்யப்பட்டோம். 1891-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுகுண விலாச சபைக்கு இரண்டு பெயரும் சாயங்காலங்களில் போய்க் காலங்கழிப்போம். பிறகு 1924 இல் நான் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அதே வருடம் எனது நண்பர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1928-ஆம் வருடம் நான் 55 ஆவது வயதில் விலக வேண்டி வந்தது. அதே வருடம் அவரும் உயர்நீதிமன்ற நீதிபதிப் பதவியிலிருந்து விலகினார்! மேற்கூறியபடி நாங்களிருவரும் ஏறக்குறைய சமமாக உயிர் வாழ்ந்ததைப் பரம் பொருள் எங்களுக்கு : அளித்த பேரருளாகக் கொள்கிறேன். பிறகு 1954-ஆம் வருடம் எனது தீயூழால் என்னை விட்டு வைகுண்டம் அடைந்தார்.

இனி 1882-ஆம் வருடத்தின் என் பழைய கதைத் தொடர்ச்சியை எடுத்துக் கொள்கிறேன். கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் படித்தபோது நடந்த செய்திகளில் தற்காலம் எனக்கு முக்கியமாக ஞாபகமிருப்பது அங்குள்ள உபாத்தியாயர்களுக்கெல்லாம் பிள்ளைகள் பட்டப்பெயர் / நிந்தைப் பெயர் வைத்ததேயாம். தமிழ் வாத்தியாருக்கு மாங்காய் வாத்தியார் என்று பெயர். மற்றொருவருக்குப் பழஞ்சால்வை என்று பெயர். தலைமை ஆசிரியருக்கு (Head master) நெட்டைக் கால் என்று பெயர். மற்றவர்களுக்கு மிப்படியே. இதில் வேடிக்கை யென்னவென்றால் அவர்களின் உண்மையான பெயர் எனக்குத் தெரியவே தெரியாது! மூன்றாவது வகுப்பில் படித்த போது முதலாவதாக இருந்ததற்காக எனக்குப் பரிசு கிடைத்தது. அன்றியும் பாராயணம் (Recitation) ஒப்பு வித்த தற்காக அரசாட்சியர் (Viceroy) பரிசு கிடைத்தது. இது முதல் ஒவ்வொரு வருடமும் பதின்நிலை(மெட்ரிக்குலேசன்) வகுப்பு வரையில் வருடா வருடம் பரிசு கிடைத்தது.



பிறகு 1883, 84 வருடங்களில் பி. டி செங்கல்வராய நாயக்கர் பள்ளியில் நான்காவது கீழ் வகுப்பு, நான்காவது மேல் வகுப்பு (lower fourth, upper fourth) வகுப்புகளில் படித்தேன். நான்காவது கீழ் வகுப்பில் படித்தபோது நடந்த ஒரு விந்தையான சம்பவத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அக்காலம் இவ்வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மேல் இடைநிலை (அப்பர் செகண்டரி) பரிட்சை என்று ஒரு பரிட்சை இருந்தது. அப்பரிட்சை நெருங்கியபோது தினம் நான் காலையில் பள்ளிக்குப் போகுமுன் பிள்ளையாரண்டை பூசை செய்யும் போது இப்பரிட்சையில் முதல் வகுப்பில் நான் மூன்றாவதாகத் தேற வேண்டுமென்று பிரார்த்தித்து வந்தேன். அரசிதழில் (கெசட்டில்) தேறினவர்களின் பெயர் அச்சிட்டபோது அப்படியே. முதல் வகுப்பில் மூன்றாவதாக என் பெயர் இருந்தது! இதை நான் ஏதோ பெருமையாகவோ டம்பமாகவோ எழுதவில்லை, எழுதியதற்குக் காரணம் கூறுகிறேன். நான் வகுப்புகளில் நன்றாய் படித்து வருகிறேன் என்று நினைத்து பரிட்சையில் எல்லோரையும் விட முதலாவதாக இருக்க வேண்டுமென்று கோருவது சகசமாயிருக்கலாம், மூன்றாவதாக இருக்கவேண்டுமென்று ஏன் கோர வேண்டும்? இதற்குக் காரணம் இன்றளவும் எனக்குத் தெரியாது! ஆயினும் நான் அப்படி கோரிப் பிரார்த்தித்தது என்னவோ வாசுதவம். என் பிரார்த்தனை நிறைவேறியதும் வாசுதவம். இது ஒரு அற்ப விசயமானாலும், இதனால் தெய்வத்தைப் பிரார்த்திப்பது பயனானது என்று உறுதியாய் எனது மனதில் உதித்தது. இச்சந்தர்ப்பத்தில் டெனிசன் மகாகவி ஆங்கிலத்தில் எழுதிய ஒரு வரி ஞாபகம் வருகிறது. அதாவது :– “உலகம் கனவு காண்கிறதை விடப் பிரார்த்தனையினால் உலகில் பல விசயங்கள் (சரியாக) நடந்து வருகின்றன” என்பதாம். 1885-ஆம் வருடம் இப்பள்ளியின் வருடாந்திர விழாவில் அலெக்குசாண்டரும் கள்வனும் என்னும் ஆங்கில சிறு நாடகத்தில் கள்வனாக பாராயணம் ஒப்புவித்த பரிசு பெற்றேன்.


1886-ஆம் வருடம் பச்சையப்பன் கல்லூரிக்கு மாற்றப் பட்டேன். இங்கு இரண்டு வருடங்கள் படித்து மெட்ரிகுலேசன் பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினேன். எங்கள் பள்ளிக் கூடத்திலிருந்து பரிட்சைக்குப் போன பிள்ளைகளுள் முதலாவதாக இருந்தபடியால் (நான் சிறு வயதில் கோரியபடி) எனக்கு செயராமச் செட்டியார் பொற்பதக்கம் (Jayarama chetty’s Gold medal) கிடைத்தது. அன்றியும் ஆங்கிலத்திலும் தமிழிலும் முதலாவதாக இருந்தபடியால் இரண்டு பரிசுகளும் பெற்றேன். அன்றியும் (,)லவரி (Lovery) பரிசும் கிடைத்தது. இப்பரிட்சையில் தேறினவுடன் பச்சைப்பன் கல்லூரியை விட்டு மாநிலக்கல்லூரி(Presidency college) என்னும் அரசு கல்லூரியைப் போய்ச் சேர்ந்தேன். இப்படி நான் கல்லூரியைவிட்டு வேறொரு கல்லூரிக்குச் சென்றதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. என் தகப்பனார் இக்கல்லூரியிலிருந்து தான் திறனர் (Proficient) பரிட்சையில் தேறினார். எனது மூத்த சகோதர்களும் இக்கல்லூரியில் படித்தவர்கள். எனது சிறு வயது முதல் எப்போது நாமும் இந்த கல்லூரியைப் போய் சேர்வோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் பழைய நண்பராகிய வி. வி சீரீனிவாச ஐயங்காரை விட்டுப் பிரிந்து இக்கல்லூரியைச் சேர்ந்தேன். இப்படி நான் என் பழைய பள்ளியை விட்டுப் பிரிந்ததற்காக எனது நண்பர் என்னை ‘பச்சையப்பன் கலாசாலைக்கு துரோகி’ என்று எப்போதும் அழைப்பார். இக்கலாசாலையில் 1888-1889 வருடங்களில் எப். ஏ. (F. A.) வகுப்பில் படித்து பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினேன். இப்பள்ளியைச் சேர்ந்தது என்னுடைய நல்லூழ்களில் ஒரு முக்கியமான அம்சம் என்று கூற வேண்டும். முதலில் இங்கு சேர்ந்தபடியால் எனக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். அவர்களைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். இவ்வாறு புதிதாய் கிடைத்த நண்பர்களுள் முதலாவதாக அ. சீனிவாச பாய் என்பவரைச் சொல்ல வேண்டும். இவர் எனக்குக் கிடைத்த ஆப்தர்களுள் ஒருவர் என்று நான் கூற வேண்டும். இவரும் நானும் சுமார் 8 வருடம் இக்கல்லூரியிலும் சட்டக்கல்லூரியிலும் (law college) ஒன்றாய்ப் படித்தோம். பிறகு இவர் வழக்குரைஞராகி மங்களுருக்குப் போனார். இவர் எனது ீயூழ் வசத்தால் தனது 76-ஆவது வயதில் பரலோகம் சென்றார். இவருடைய மூத்த மகன் பிரதம மந்திரி பண்டித நேரு அவர்களின் அந்தரங்கக் காரியதரிசியாக (Private Secretary) இருக்கிறார் என்று சந்தோசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கிடைத்த எனது இரண்டாவது நண்பர் மேற்சொன்ன சீனிவாச பாயின் அண்ணன் அ. வாமன் பாய் என்பவர். இவர் 1888-ஆம் வருசம் எங்கள் வகுப்பிற்கு மேல் வகுப்பில் படித்திருந்தார். ஆயினும் சீனிவாச பாாயின் மூலமாக எனக்குச் சிநேகிதமானார். மிகுந்த புத்திசாலி. மனிதர்களுடைய குணங்களை அறிவதிலும் புத்தகங்களின் சாரங்களை கிரகிப்பதிலும் வெகு நிபுணர். இவர் பல வருடங்களுக்கு முன் காலமானார்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, July 22, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 45 – (அத்தியாயம் 25) : விருத்தாசல (ரெட்டியா)ர்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் – அத்தியாயம் 25 செங்கணத்தில் வாசம் தொடர்ச்சி)

விருத்தாசல (ரெட்டியா)ர்

நான் விருத்த இலக்கணம் படித்த காலத்தில் சீர்கள் ‘அளவொத்து’ இருக்க வேண்டுமென்று தெரிந்துகொண்டேன். ஓரடியில் ஆறு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஆறு சீர்களே இருக்க வேண்டுமென்றும், ஏழு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஏழு சீர்களே இருக்க வேண்டுமென்றும், இவ்வாறே சீர்களின் எண்ணிக்கை நான்கடிகளிலும் சமமாக இருக்க வேண்டுமென்றும் நினைத்தேன். ‘அளவொத்தல்’ என்பதற்கு இதற்கு மேலும் ஓர் அர்த்தம் உண்டென்பதை அதற்கு முன் நான் அறிந்துகொள்ளவில்லை. அதைப் பெருமாளையர் பின்வருமாறு விளக்கினார்: “முதல் அடியில் முதற்சீர் மாச்சீராக இருந்தால் மற்ற அடிகளிலும் முதற்சீர் மாச்சீராகவே இருக்கும். இதோ இப்பாட்டைப் பாரும்:


“பூவாய் நெடுங்கோட் டுறுபசுந்தேன்
      கைகான் முடங்கு பொறியிலிதன்
நாவா யொழுகிற் றெனவுலக
      மளந்த மாலு நான்முகனும்
காவா யெனநின் றேத்தெடுப்பத்
      தானே வந்தெங் கரதலத்து
மேவா நின்ற மாமணியைத்
      தொழுது வினைக்கு விடைகொடுப்பாம்”


என்பதில் ஒவ்வோரடியிலும் ஆறு சீர்கள் இருக்கின்றன. முதல் இரண்டு சீரும் நான்கு ஐந்தாம் சீர்களும் மாச்சீர்கள்; மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச் சீர்கள். இந்த அமைப்பு ஒவ்வோரடியிலும் மாறாமல் நிற்கும்; மாறினால் ஓசை கெடும். இவ்வண்ணம் சீர்கள் அமைவதனால்தான் ஒவ்வொரு வகை விருத்தத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன.”

அவர் விரிவாக எடுத்துச் சொன்னபோதுதான் எனக்கு விசயம் விளங்கிற்று. “புத்தகத்தைப் படித்துப் பார்ப்பதனால் மட்டும் ஒருவனுக்குப் பூரண அறிவு ஏற்படாது; அறிந்தவர்களிடம் பாடம் கேட்கவேண்டும்” என்று பெரியோர்கள் வற்புறுத்துவதன் உண்மையையும் உணர்ந்தேன். இத்தகைய அரிய விசயங்களைத் தக்கவர்களிடம் தெரிந்துகொள்ளாமல் வெண்பா என்றும், கட்டளைக்கலித்துறை என்றும், விருத்தமென்றும் தாமே எண்ணிக்கொண்டு மனம் போனபடி பாடல்களைப் பிழையான ஓசையோடு பாடுபவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். இக்காலத்திலும் காண்கிறேன். அத்தகைய பாடல்களையும் அவற்றைப் பாடுவோரையும் பாராட்டி மகிழும் கனவான்கள் பலர் இருக்கின்றனர். அவர்களை நினைந்து நான் மிகவும் இரங்குகிறேன்.

ஒரு முதியவரது ஞாபகம்


ஒருநாள் வழக்கம்போல (இ)ரெட்டியாருடைய மூத்த குமாரராகிய நல்லப்ப (இ)ரெட்டியார் கம்பராமாயணம் படித்துத் தம் தந்தையாரிடம் பொருள் கேட்டு வந்தார். அன்று படித்தது கும்பகருணப் படலம். அவர் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை பதிப்பித்திருந்த அச்சுப் புத்தகத்தை வைத்துக் கேட்டு வந்தார். நானும் அவ்வூர்ப் பட்டத்துப் பண்ணையாராகிய முதியவர் ஒருவரும் உடனிருந்தோம். அம்முதியவருக்கு எழுபது பிராயம் இருக்கும். படித்து வரும்போது இடையிலே ஓரிடத்தில் அம்முதியவர் மறித்து, “இந்த இடத்தில் சில பக்கங்களை அவசரத்தில் தள்ளிவிட்டீரோ?” என்று நல்லப்ப ரெட்டியாரைக் கேட்டார். “இல்லையே; தொடர்ச்சியாகத்தானே படித்து வருகிறேன்” என்று அவர் பதில் கூறினார். “இவ்விடத்தில் சில பாடல்கள் இருக்க வேண்டும். அவற்றை நான் படித்திருக்கிறேன். அவை இப்புத்தகத்தில் விட்டுப்போயின. என் பிரதியில் அப்பாடல்கள் உள்ளன” என்று சொல்லிப் பாடம் முடிந்தவுடன் என்னையும் நல்லப்ப (இ)ரெட்டியாரையும் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று தம் வீட்டுக் கம்பராமாயணப் பிரதியை எடுத்துக் கும்ப கருணப் படலம் உள்ள இடத்தைப் பிரித்துக் காட்டினார். அவர் கூறியபடியே அவ்விடத்தில் அச்சுப் பிரதியிலே காணப்படாத சில பாடல்கள் இருந்தன. அவற்றைப் படித்துப் பார்த்தோம். அம்முதியவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த அன்பையும் அதை நன்றாகப் படித்து இன்புற்று ஞாபகம் வைத்திருந்த அருமையையும் உணர்ந்து வியந்தோம். பரம்பரையாகக் காப்பாற்றப்பட்டு வரும் ஏட்டுப் பிரதிகளின் பெருமையையும் தெளிந்தோம்.


திருக்குறள்

விருத்தாசல (இ)ரெட்டியார் எப்போதும் தமிழ் நூல்களைப் படிப்பதிலே தம் பொழுதைப் போக்கி வருபவர்; மற்ற வேலைகளில் கவலையில்லாதவர். அவருக்கு ஏற்றபடி வேறு கவனமேயில்லாமல் தமிழ் ஒன்றிலேயே நாட்டமுடையவனாக நான் கிடைத்தேன். எனக்குப் பாடம் சொல்வதும் நான் படிக்கும் நூல்களிலுள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதும் அவருக்குப் புதிய வேலைகள். அவை அவர் உள்ளத்துக்கு உவப்பான காரியங்கள். என்னிடம் அவர் மிக்க அன்பு வைத்திருந்தார். எனக்கும் அவருக்கும் பிராயத்திலும் அறிவிலும் செல்வத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. எனினும், தமிழனுபவத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நின்றோம். நாள் முழுவதும் தமிழைப்பற்றி அவரிடம் கேட்டுக்கொண்டிருப்பவர் என்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை.

அவ்வப்போது படித்து வந்த நூல்களில் திருக்குறளும் ஒன்று. திருக்குறளை எப்போதும் கையில் வைத்துப் படிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. (இ)ரெட்டியாரிடம் இருந்த புத்தகத்தைப் படித்து வந்தேன். எனக்குச் சொந்தமாக ஒரு புத்தகமிருந்தால் எங்கே போனாலும் வைத்துக்கொண்டு படிக்கலாம் என்று நினைத்தேன். அச்சுப் புத்தகத்தைத் தேடிச் சென்று பணம் கொடுத்து வாங்க இயலாதவனாக இருந்தேன். பெரும்புலியூர்ப் பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயராக இருந்த (இ)ராயரொருவர் திருக்குறள் உரைப் புத்தகம் தம்மிடம் இருப்பதாகவும் பெரும்புலியூர் வந்தால் எனக்கே தருவதாகவும் குன்னத்தில் வாக்களித்தது அப்போது ஞாபகத்திற்கு வந்தது. “இந்தச் சந்தர்ப்பத்தை விடக்கூடாது” என்ற கருத்தால் பெரும்புலியூர் சென்று அதை அவரிடம் வாங்கி வர நிச்சயித்து எனது எண்ணத்தை (இ)ரெட்டியாரிடம் தெரிவித்தேன். அவர், “நானும் வருகிறேன். பேசிக்கொண்டே போய் வரலாம்” என்றார். அவர் என்னோடு பெரும்புலியூருக்கு நடந்து வருவதாகக் கூறியதைக் கேட்டபோது எனக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று.


(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Monday, July 10, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 6

 

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 6



(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தொடர்ச்சி)

1882-ஆம் வருட முடிவில் என்னை என் தகப்பனார் பச்சையப்பன் கல்லூரியின் கிளைப் பள்ளிக்கூடமாகிய அப்பள்ளிக்கூடத்தின் கீழ்ப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த கோவிந்த நாயுடு பிரைமெரி (Primary) பள்ளிக்கூடத்தில் சேர்ப்பித்தார். என்னை அழைத்துக்கொண்டுபோய் அதன் பிரதம உபாத்தியாயர் ஏ. நரசிம்மாச்சாரியிடம் விட்டு, “இவன் இரண்டாம் வகுப்பில் போன வருடம் படித்தான். வகுப்பில் முதலாவதாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். இவனை விசாரித்து எந்த வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியுமோ அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். நரசிம்மாச்சாரியார் ஒன்றாவது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு சிறு பாடத்தைப் படிக்கச் சொல்லி அதற்கு அருத்தமும் சொல்லச் சொன்னார். அதன்படியே செய்தேன். பிறகு கணக்கில் பரிட்சிக்க ஒரு கணக்கு கொடுத்தார். அதைப்போடத் தெரியாது விழித்தேன் அதன் பேரில் என் தகப்பனாருக்கு ஒரு நிரூபம் எழுதினார். அதில் ‘பிள்ளையாண்டான் சரியாக இங்கிலீசு படிக்கிறான். ஆனால் கணக்கில் சரியாக இல்லை. ஆகவே என் விருப்பப்படி செய்வதனால் இவனை இந்த வருடம் இரண்டாவது வகுப்பிலேயே படிக்கச் செய்வேன். இல்லை இவனை மூன்றாவது வகுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று உங்கள் விருப்பமானால் அப்படியே செய்கிறேன்’ என்று எழுதியிருந்தரராம், இக்கடிதத்தை மத்தியானம் நான் வீட்டிற்குப் போய் என் தகப்பனாரிடம் கொடுத்தபோது, இதை எனக்கு அவர் தெரிவித்து இரண்டாம் வகுப்பிலேயே என்னைச் சேரும்படி கட்டளையிட்டார். என் மனத்தில் அப்போது ஒரு துக்கமுமில்லாமல் அப்படியே சேர்ந்தேன். பிறகு சில தினங்கள் பொறுத்து ஒரு நாள் என் பழைய் உபாத்தியாயர் முனுசாமி நாயுடு எங்கள் வகுப்புக்கு வந்து என்னைப்பார்த்து “என்னடா சம்பந்தம் உன்னுடன் படித்தவர்களெல்லாம் மூன்றாவது வகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். நீ மாத்திரம் என்ன இரண்டாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறாய்” என்றார். இதைக் கேட்டதும் எனக்கு வருத்தம் உண்டாகி அழுதுவிட்டேன், இதை இவ்வளவு விவரமாக எழுதுவதற்குக் காரணத்தை என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன், இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்து நான் அப்போது மிடில் இசுகூல் (Middle School) பரிட்சை யெனும் கவர்ன்மெண்டு பரிட்சைக்குப் போனபோது என் பழைய நண்பர்கள் எல்லாம் பெயில் (Fail) ஆனார்கள், நான் தேறினேன். இதை டம்பமாக எடுத்துக்கூறவில்லை. இரண்டாம் வகுப்பில் இரண்டு வருடம் படித்ததின் பயனாக என் படிப்பின் அத்திவாரம் நன்றாய் உறுதியாய் நான் மேலே படிப்பதற்கு அனுகூலமாய் இருந்தது. இல்லாவிட்டால் என் மூளையின் வளர்ச்சிக்குத் தக்கபடி படிக்காது. அதை தாங்க சக்தியில்லாதபடி வருடா வருடம் படிக்க நேரிட்டு பரிட்சையில் தேறியிருக்கமாட்டேன் என்று உறுதியாக நம்புகிறேன். தற்காலம் யாராவது சிறுவர்கள் தங்களுக்கு வகுப்பில் பிரமோச ஆகவில்லை யென்று என்னிடம் வந்து முறையிட்டுக்கொண்டால் எனக்கு நேரிட்ட சம்பவத்தைக் கூறி அவர்களுக்கு உண்மையில் ஆறுதல் கூறி அனுப்புகிறேன் இப்பொழுதும்!

நான் இப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கல்வியின் மீது எனக்கு உற்சாகம் உண்டாகச்செய்த இரண்டு சந்தர்ப்பங்களைக் குறிக்கிறேன். முதலாவது என் வகுப்பில் உபாத்தியாயராக இருந்த சுப்பிரமணிய ஐயர் எங்கன் வீட்டிற்கு வந்து என் தகப்பனாருடன் பேசிக்கொண்டிருந்த போது “சம்பந்தம் எம்.ஏ.இரங்கநாத முதலியாரைப்போல் படித்து முன்னுக்கு வருவான்” என்று அவர் என் தந்தையிடம் சொன்னார். இதைக் கேட்ட போது எனக்குக் கருவம் பிறக்க வில்லை. வாத்தவமாய்ப் பயம் பிறந்தது. அக்காலத்தில் எம்.ஏ.இரங்கநாத முதலியார் என்பவர் தமிழர்களுள் மிகவும் நன்றாய்ப் படித்தவர் என்று பெயர் பெற்றவர். அவரைப்போல் நாம் எங்கு படிக்கப் போகிறோமென்கிற பயம். ஆகவே எப்படியாவது கசுட்டப்பட்டு நன்றாய்ப் படிக்கவேண்டுமென்று ஊக்கம் பிறந்தது. இரண்டாவது இக்கலாசாலையின் வருடாந்திரக் கொண்டாட்டத்தில் பச்சையப்ப முதலியார் ஃகாலில் மெட்ரிக்குலேசன் பரிட்சையில் முதலாவதாக தேறிய ஒரு பிள்ளையான்டான் பொற்பதக்கம் (Gold medal) பெற்றதைப் பார்த்தேன். அச்சமயம் நாமும் இப்பொற்பதக்கம் பெறவேண்டுமென்னும் ஆசை பிறந்தது எனக்கு. (தெய்வத்தின் கருணையினால் 1889ஆம் வருசம் அந்த ஆசை நிறைவேறிப் பொற்பதக்கம் பெற்றேன்.)


இப்பள்ளியைச் சேர்ந்ததினால் பெற்ற பெரும் பலன் என்னவென்றால் நான் இப்பள்ளியைச் சேர்ந்தவுடன் தானும் இங்கு படிக்கச் சேர்ந்த சிரீமான் வி. வி. சீனிவாச ஐயங்காருடைய நட்பே.! இவர் என்னைவிடக் கொஞ்சம் மூத்தவர். ஆயினும் இங்கு இரண்டாம் வகுப்பிலும் மூன்றாம் வகுப்பிலும் என்னுடன் படித்தவர். அவர் ஓர் இடத்தில் எழுதியபடி நாங்கள் இருவரும் முதன்முறை சந்தித்தபோதே நண்பர்களானோம். (தெய்வகடாட்சத்தினால்) அன்று பிறந்த நட்பு செழித்தோங்கி இருவரும் உயிர் சினேகிதர்களானோம், இச்சம்பவம் நேரிட்டு 72 வருடங்கள் சிநேகிதர்களாய் இருந்தோம்.

1884-ஆம் வருடம் நாங்களிருவரும் இப் பள்ளிக்கூடத்திலிருந்து நான்காம் வகுப்பையுடைய செங்கல்வராய நாயக்கர் பள்ளிக்கு அனுப்பப்பட்டோம். அதிலிருந்து 1885-ஆம் வருடம் இரண்டு பெயரும் அக்காலத்து மிடில்இசுகூல் பரிட்சையில் தேறி 1886-ஆம் வருடம் பச்சையப்பன் கல்லூரியைப் போய்ச் சேர்ந்தோம். பிறகு 1887-ஆம் ஆண்டு இரண்டு பெயரும் அக்காலத்து மெட்ரிக்குலேசன் பரிட்சையில் தேறினோம். இதன் பேரில் நான் கவர்ன்மெண்டு காலேசாகிய பிரசிடென்சி காலேசைப் போய்ச் சேர்ந்தேன். எனது நண்பர் பச்சையப்பன் காலேசிலேயே படித்து வந்தார். இப்படி நான்கு வருடங்கள் நாங்கள் பிரிக்கப்பட்ட போதிலும் எங்கள் சிநேகிதம் மாறவில்லை. இரண்டு பெயரும் ஒரே வருசம் பி.ஏ. பரிட்சையில் தேறி மறுபடியும் லா (Law) காலேசில் ஒன்றாய்ப் படிக்க ஆரம்பித்தோம், பி எல். பரிட்சையில் இருவரும் ஒரே வருசம் தேறினோம். அதன் பேரில் எனது நண்பர் “சேம்சு சார்ட்டு” என்பவரிடம் அப்ரென்டிசாக (Apprentice) அமர்ந்தார், நான் சிரீமான் சுந்தரம் சாத்தியாரிடம் முதலிலும் அவர் அகாலமடைந்த போது அவர் குமாரராகிய குமாரசாமி சாத்திரியிடமும் வித்யார்த்தி (Apprentice) ஆனேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது

 

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது



(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 4. தொடர்ச்சி)

4. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது

முதல் பள்ளிக்கூடம் இப்போது நானிருக்கும் வீட்டிற்கு 100 அடி தூரத்திற்குள் ஒரு வீட்டில் நடை திண்ணையி லிருந்தது. அதில் என்னுடன் பத்து பதினைந்து பிள்ளைகள் தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன். அதன் ஒரே உபாத்தியாயர் மிகவும் வயது சென்றவர். அவர் நரைத்த முகம் எனக்கு வெறுப்பைத் தந்தது. அவரிடம் தான் என் அண்ணன்மார்களெல்லாம் அட்சராப்பியாசம் ஆரம்பித்தார்களாம். எனது அண்ணனாகிய ஏகாம்பர முதலியாரைப்பற்றி அவர் விசயமாக ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் படித்தபோது சமுத்திரமானது புரண்டு பட்டணத்தையெல்லாம் அழிக்கப் போகிறது என்று ஒரு பெரிய வதந்தி பிறந்ததாம். அதைக் கேட்ட என் தமையனார் என் தாயாரிடம் ஓடிப்போய் “சமுத்திரம் பொங்கிவந்தால் எங்கள் உபாத்தியாயரைக்கூட அடித்துக் கொண்டு போகுமா?” என்று கேட்டாராம். இக்கதையை என் தாயார் பன்முறை வேடிக்கையாகக் கூறக்கேட்டிருக்கிறேன். இத்தெரு பள்ளிக்கூடம் சில மாதங்களுள் எடுபட்டது. அதன் பேரில் எங்கள் தகப்பனார் எங்கள் தெருவாகிய ஆச்சாரப்பன் தெருவிலேயே உடையவர் கோவிலுக்கு எதிரிலிருக்கும் மற்றொரு தெருப் பள்ளிக்கூடத்திற்கு என்னை அனுப்பினார். இப் பள்ளிக்கூடத்திற்கு சாத்தாணி வாத்தியார் பள்ளிக்கூடம் என்று பெயர். உபாத்தியாயர் சாத்தாணி சாதியார். அவரிடம் நான் தெலுங்கு பாசை கற்றேன். இந்த வாத்தியார் சுமுகம் உடையவர். அவரிடம் பயமில்லை எனக்கு. நான் டெபடி, இன்சுபெக்டர் ஆப் இசுகூல்சு (Deputy Inspector of Schools) பிள்ளையாதல்பற்றி எனக்கு உபாத்தியாயர் பென்சுக்குப் பக்கக்தில் ஒரு சிறிய பென்சு கொடுக்கப்பட்டது. மற்ற பிள்ளைகளெல்லாம் தரையில் உட்காருவார்கள். இந்த சிறிய பென்சில் உட்கார்ந்து சில சமயங்களில் தூக்கம் மேலிட, உபாத்தியாயர் துடை மீது படுத்து அப்படியே தூங்கிவிடுவேன் உபாத்தியாயர் கோபியாது நான் விழித்தவுடன் என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். சுமார் 6-மாதங்கள் இங்கு படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பிறகு என் தகப்பனார் நான் தமிழ் படிக்க வேண்டுமென்று கருதி வேறொரு பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினார். நான் மூன்றாவதாக சேர்ந்த தெருப் பள்ளிக்கூடத்திற்கு நரசிம்மலு வாத்தியாயர் பள்ளிக் கூடம் என்று பெயர். இந்தப் பள்ளிக்கூடம் ஆச்சாரப்பன் வீதியிலிருக்கும் ஒரு சந்தாகிய பாலகிருட்டிணன் சந்தில் இருந்தது. இந்த வாத்தியார் கண்டிப்பான மனுசர். ஆயினும் நல்ல சுபாவமுடையவர், இங்கு நான் 1879-ஆம் வருடம் படித்தேன் இங்குதான் நான் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தது.

1880-ஆம் வருடம் என்னை, சென்னை பிராட்வே (Broadway) யிலிருந்த இந்து புரொபரைடரி (Hindu Proprietary School) என்னும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார் எங்கள் தந்தையார். இது தெருப் பள்ளிக்கூடமல்ல, பணக்காரப் பிள்ளைகள் அக்காலம் படித்த பள்ளிக்கூடம், அதற்கேற்ப இங்கு பள்ளிக்கூடத்துச் சம்பளம் மற்ற பள்ளிக்கூடங்களிலிருப்பதைவிட அதிகம்! அச்சமயம் எனக்கு 7 வயது. இங்கு நடந்த பல விசயங்கள் நன்றாய் ஞாபகமிருக்கின்றன.

இங்கு இருந்த ஏழு வகுப்புகளின் உபாத்தியாயர்கள் பெயர்கள் இன்னும் ஞாபகமிருக்கின்றன. இப்பள்ளிக்கூடத்தில் படித்தபோது என்னுடன் படித்த இரண்டு நண்பர்கள் ஞாபகமிருக்கிறது. ஒருவர் மணலி சரவண முதலியார், பிறகு இவருக்கு இராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டது; இவர் சில வருடங்களுக்குமுன் காலமானார். மற்றொருவர் பாலசுந்தரம் செட்டியார். இவர் ஒரு பாங்கில் பொக்கிசதாராகி 1940-ஆம் வருடம் காலமானார். இங்கு சம்பவித்த மற்றொரு விசயம் என் மனத்தில் நன்றாய் படிந்திருக்கிறது. ஒருமுறை இரண்டு வெள்ளைக்காரர்கள் சிறுவர்களாகிய எங்களுக்கு பஞ்ச் அண்டு சூடி (Punch and Judy) பொம்மலாட்டம் காட்டுவதாக இசைந்தனர். நாங்கள் எல்லோரும் டிக்கட்டுகள் வாங்கிக் கொண்டு ஆவலுடன் அதைப்பார்க்கக் காத்திருந்தோம், அது ஆரம்பமானவுடன் இந்த இரண்டு வெள்ளைக்காரர்களும் குடித்துவிட்டு சண்டையிட்டு வெளிவந்தனர். பிறகு ஒருவன் அக்குடி வெறியில் மெத்தைக்குப் போகும் வழியில் முட்டிக் கொண்டு சுத்தம் பெருக மூர்ச்சையானான். அதைப் பார்க்கவும் சிறுவர்களாகிய நாங்கள் பயந்தோம். குடி வெறியினால் இது நேர்ந்தது என்று ஒரு பெரியவர் சொல்ல குடியைப் பற்றி திகிலடைந்தேன். இது நான் பிறகு மதுவிலக்கு சங்கத்தைச் சேர ஒரு காரணமாயிருந்ததெனலாம்.

மூன்றாவது ஞாபகமிருக்கும் சமாச்சாரமும் ஒரு முக்கியமானதே. இப்பள்ளியின் வருடாந்திரக் கொண்டாட்டத்திற்கு எங்களையெல்லாம் பச்சையப்பன் சபா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அச்சமயம் என் மூத்த அண்ணன் ஏகாம்பர முதலியாருடைய சிநேகிதரான டபுள்யூ. இராமசுவாமையா என்பவர் (Recitation) ஒப்புவித்தார். சனங்கள் அதை கரகோசத்துடன் ஏற்றனர். அது சேக்குசுபியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய சூலியர்சு சீசர் என்னும் நாடகத்தில் ஆன்டொனி (Antony) என்பவரின் சொற் பொழிவு என்று பிறகு கண்டுணர்ந்தேன். அம்மாதிரி நானும் சொற்பொழிவு செய்யவேண்டுமென்று எனக்கு ஆசை பிறந்தது. பிறகு நான் படித்துக்கொண்டிருந்த ஆங்கில புத்தகத்திலிருந்த இரண்டு மூன்று சிறு செய்யுட்களை குருட்டுப் பாடம் செய்து உரக்க ஒப்பித்துக்கொண்டிருந்தேன். இதைக் கேட்ட என் தமையனார் ஏகாம்பா முதலியார் “இது என்னடா’ என்று வினவ என் விருப்பத்தைத் தெரிவித்தேன், அதன்பேரில் ‘ரெசிடேசன்’ என்றால் உரக்க ஒப்புவித்தல் மாத்திரமல்ல. சரியான பாவத்துடன் அதை ஒப்பிக்கவேண்டும் என்று கற்பித்தார். இதுதான் பிறகு தான் ‘ரெசிடேஷன்’ செய்ய நன்றாய்க் கற்று முடிவில் நடிக்கக் கற்றுக்கொண்டதற்கு அடிபீடமாகும்.

1881ஆம் வருசம் முடிவில் இப்பள்ளிக்கூடம் எடுபட்டுப் போயது. இதனால் என் வகுப்பில் நான் முதலாவதாக இருந்ததற்காக எனக்குச் சேரவேண்டிய பரிசு கிடைக்காமற் போயது.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

உ .வே.சா.வின் என் சரித்திரம் 43 : காரிகைப் பாடம் தொடர்ச்சி

 



(உ .வே.சா.வின் என் சரித்திரம் 42 : காரிகைப் பாடம் தொடர்ச்சி)

அத்தியாயம் 24 தொடர்ச்சி
காரிகைப் பாடம் தொடர்ச்சி


கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்றிருந்தமையின் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அடிக்கடி யாரேனும் அயலூரிலிருந்து வந்து இரண்டொரு நாள் தங்கி அவரிடம் சம்பாஷித்துச் செல்வார்கள்

.
அவர் கன்னையரென்னும் வீரசைவரிடம் பாடங் கேட்டவர். வீரசைவர்களுக்கும் இரெட்டியார்களுக்கும் ஒற்றுமையும் நட்பும் அதிகமாக இருந்தன. வீரசைவ வித்துவ சிகாமணியாகிய துறைமங்கலம் சிவப்பிரகாசரை அண்ணாமலை இரெட்டியார் என்னும் செல்வர் ஆதரித்துப் பாதுகாத்த வரலாற்றை அவ்விருவகையினரும் அடிக்கடி பாராட்டிச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சிவப்பிரகாச சுவாமிகள் பழகிய இடங்களையும், அவர் நீராடும்பொருட்டு அமைக்கப்பெற்ற நடை வாவிகளையும் நான் பார்த்திருக்கிறேன்.

பல தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் அச்சுப் புத்தகங்களையும் விருத்தாசல இரெட்டியார் தொகுத்து வைத்திருந்தார். எழுத அநேக ஏட்டுச் சுவடிகளைச் சித்தமாக வைத்திருப்பார். தம்மிடம் இல்லாத அரிய தமிழ் நூல்கள் கிடைத்தால் அவற்றில் எழுதிக்கொள்வார். ஏட்டுச் சுவடியில் விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார். எனக்காகச் சில தமிழ் நூல்களை ஏட்டுச் சுவடியில் எழுதித் தந்திருக்கிறார். சில சமயங்களில் நானும் அவரும் ஒரே சமயத்தில் ஒரு நூலைப் பிரித்துக்கொண்டு தனித்தனியே பிரதி பண்ணுவோம்.


படித்தலும் பாடம் சொல்லுதலும் வந்தவர்களிடம் சம்பாசணை செய்தலுமின்றி வேறு ஒரு காரியத்திலும் அவர் புத்தியைச் செலுத்துவதில்லை. மிகுதியான பூத்திதி உள்ளவர் அவர். அவற்றை அவருடைய பிள்ளைகளும் காரியத்தருமே கவனித்து வந்தனர். இவ்வாறு அவர் இருத்தலில் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் மிக்க வருத்தம் இருந்தது. அதனை இரெட்டியார் உணர்ந்தும் சிறிதும் கவலைகொள்ளவில்லை.

நல்லப்ப ரெட்டியார்

நான் விருத்தாசல ரெட்டியாரிடம் பாடங்கேட்ட காலத்தில் அவருக்குச் சற்றேறக் குறைய ஐம்பத்தைந்து பிராயத்திற்கு மேல் இருக்கும். அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர். மூத்தவராகிய நல்லப்ப இரெட்டியாருக்கு சீதன வருவாய் மிகுதியாக இருந்தது. பெண்மணிகளுக்கு அதிக சீதனம் வழங்குவது அந்தச்சாதியினருடைய வழக்கம். அதனால் பெண்மணிகள் சுதந்திரமும் விவேகமும் கணவர்களிடத்தில் மரியாதையும் உடையவர்களாக இருப்பார்கள்.

நல்லப்ப இரெட்டியார் நல்ல தியாகி. தமிழிலும் பயிற்சியுள்ளவர். உத்தமமான குணமுடையவர். என் தந்தையாரிடம் பேரன்பு பூண்டிருந்தார். அவர் தனியே எங்களுக்குச் செய்துவந்த உதவிகள் பல.

யாப்பருங்கலக் காரிகையைப் பாடங்கேட்டது

நல்லவேளையில் நான் காரிகை படிக்கத் தொடங்கினேன். யாப்பிலக்கணத்தைப் பற்றிச் சிறிதும் அறியாதநிலையில் இருந்தேன் நான். எனக்கு அதைக் கற்பிப்பது சிரமமான காரியந்தான். ஆனாலும் இரெட்டியார் தெளிவாக எனக்குக் கற்பித்தார். அவருடைய ஞானமும் என்னுடைய ஆவலும் சேர்ந்து அந்தத் தெளிவுக்குக் காரணமாயின.

நான் பாடங்கேட்கத் தொடங்கியது சுக்கில வருடம் மார்கழி (1869) மாதத்திலாகும். விடியற்காலையில் நான்கு மணிக்கே அவர் என்னை எழுப்பிவிடுவார். திருவாசகத்தில் திருவெம்பாவையைப் படிக்கச் செய்வார். முதல்நாள் நடந்த பாடத்தை மறுபடியும் சொல்லிக் கேள்விகள் கேட்டு என் மனத்தில் பதியச் செய்வார். அக்கேள்விகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. பாடம் கேட்பவர் எவ்வளவு தூரம் கிரகித்துக்கொண்டார் என்பது தெரியாமலே தொடர்ச்சியாகப் பாடம் சொல்வதில் பயன் ஒன்றுமில்லை என்பதை அவர் அறிவார். கேட்ட பாடத்தைச் சிந்திக்கச் செய்து அடிக்கடி கேள்வி கேட்பதனால் கற்பித்த பாடம் உறுதிப்படும்.

யாப்பருங்கலக் காரிகையும் உரையும் மேற்கோட் செய்யுட்களும் என் உள்ளத்தே பதிந்தன. மேற்கோட் செய்யுளின் அருத்தத்தையும் எந்த இலக்கணத்திற்கு உதாரணமாக அது காட்டப்படுகிறதோ அந்த இலக்கணம் அமைந்திருப்பதையும் இரெட்டியார் எடுத்துரைப்பார். அந்த இலக்கணத்தை அமைத்துப் புதிய செய்யுட்கள் எழுதும்படி சொல்லுவார். நான் எழுதியதைப் பார்த்து இன்ன இன்ன பிழைகள் இருக்கின்றன என்று விளக்குவார். ஒருவகைச் செய்யுளுக்குரிய இலக்கணத்தை அவ்வகைச் செய்யுளாலேயே உரைக்கும் இலக்கண நூல் தெலுங்கிலும் வட மொழியிலும் உள்ளனவாம். இரெட்டியாருக்குத் தெலுங்கு தாய்மொழி. அதிலும் அவருக்குப் பயிற்சி உண்டு. தெலுங்கு நூலைப் பற்றி என்னிடம் சொல்லி “அவ்வாறே நீரும் செய்து பழகும்” என்று உரைத்து அவ்வழியையும் கற்பித்தார். அப்படியே நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை நேரிசை வெண்பாவிலேயே அமைத்தேன்; ஆசிரியப்பாவின் இலக்கணத்தை ஆசிரியப்பாவாலேயே கூறினேன். மிகவும் சிரமப்பட்டு இவ்வாறு பாடிக் காட்டுவேன். அச்செய்யுட்களில் உள்ள குணத்தைக் கண்டு முதலில் எனக்கு உத்சாகம் ஊட்டுவார்; பிறகு பிழை இருந்தால் அதனையும் எடுத்துக்காட்டுவார்.

காரிகையின் முதற்செய்யுளின் உரையில் உரையாசிரியராகிய குணசாகரர் வேறு மொழிகளிலுள்ள நூல்களை உவமையாக எடுத்துச் சொல்லுகிறார். அந்நூல்களைப் பற்றிய வரலாறுகள் மாத்திரம் ரெட்டியாரால் சொல்ல இயலவில்லை. ஆதலின் அவ்விசயத்தில் சந்தேகம் இருந்தது. இடையிடையே வரும் மேற்கோள்களில் சைன சமயத் தொடர்புடைய பாடல்கள் பல. அவற்றில் அச்சமய சம்பந்தமான சில செய்திகளை அவர் விளக்கவில்லை. இவற்றைத் தவிர மற்ற எல்லாம் தெளிவாகவும் அழுத்தமாகவும் என் அறிவில் பதிந்தன. அந்த அஸ்திவார பலம் இன்னும் இருந்து வருகிறது. இலக்கணமென்றால் கடினமானதென்ற நினைவே இல்லாமல் சுலபமாகவும் மனத்துக்கு உத்ஸாகமுண்டாகும்வண்ணமும் ரெட்டியார் பாடஞ்சொன்ன முறையை நான் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அவரிடம் நான்கு மாதங்கள் நான் பாடங்கேட்டேன். ஆயினும் என் வாழ்வு முழுவதும் அப்பாடம் பயன்பட்டு இன்பம் தருவதாயிற்று.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.