Sunday, October 29, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள் (1)

 








(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 20 : 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது-தொடர்ச்சி)

இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள்


1938-ஆம் வருசம் முதல் நாடகமாடுவதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டே வந்தேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் எனக்கு விருத்தாப்பியம் மேலிட்டதேயாம். ஆகவே இது முதல் நாடகக் கலைக்காக உழைத்ததைப் பற்றி எழுதுகிறேன்.

1939-ஆம் வருசம் உலக இரண்டாம் யுத்தம் ஆரம்பித்த பிறகு நாடகக்கலையே இத்தமிழ் நாட்டில் உறங்கிவிட்டது எனலாம் 1942-ஆம் வருசம் சென்னையிலிருந்து ஆயிரக் கணக்கான சனங்கள் வெளியூருக்குக் குடியேறின போது நானும் மைசூரில் போய் வசித்து வந்தேன். இக்காலத்தில் நாடகமேடை மறுபடியும் தலையெடுப்பது அசாத்தியம் என்று ஏங்கியிருந்தேன்.

இவ்வருசம் நான் மைசூரிலிருந்து திரும்பி வந்த போது கொஞ்சம் தைரியம் கொண்டேன். இவ்வாண்டில் ஆகத்து மாதம் மதுரையில் தமிழ் மகாநாடு கூடிய பொழுது என்னை மூன்றாவது தினமாகிய நாடகத் தமிழ் மகாநாட்டிற்குத் தலைவனாக இருக்க வேண்டுமென்று அழைத்தனர். அதற்கு நான் குதூகலத்துடன் உட்பட்டு மதுரைக்குப் போனேன். அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் நாடகத்தமிழைப் பற்றி ஒரு சிறு சொற்பொழிவு செய்தேன். இச்சயம் பல வருடங்களாகப் பாராதிருந்த என் மதுரை நண்பர்களைக் கண்டு சந்தோசித்தேன்.

மறு வருடமாகிய 1943-ஆம் ஆண்டில் ஈரோட்டில் நாடகத் தமிழ் மகாநாடு கூடியபோது அதற்கு நாடகத்தமிழ் கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அம் மகா நாட்டில் கனம் சண்முகம் செட்டியார் அவர்கள் அக்கிராசனம் வகித்தார். அன்றியும் இம் மகாநாட்டில் எனக்கு ‘நாடகப் பேராசிரியர்’ என்னும் பட்டம் அளிக்கப் பட்டது தெய்வத்தின் கருணையால், அன்றியும் ஈரோடு நகரசபையார் எனக்கு ஒரு வந்தனோபசாரப் பத்திரமும் அளித்தனர். இச்சபையில் பேச வேண்டி வந்த போது “எனக்கு அரசினர் அளித்த இரண்டு பட்டங்களை விட நாடக அபிமானிகள் எனக்களித்த பட்டத்தையே நான் மேலாகக் கருதுகிறேன்” என்று சொன்னேன். இச்சமயம் ஈரோட்டுக்கருகிலுள்ள பவானி என்னும் சேத்திரத்திற்கு என்னை என் புதிய நண்பர்கள் அழைத்துச் சென்றனர். அங்குள்ள நாடக சபையின் வருடாந்திரக் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்கச் செய்தனர். அச்சமயம் நாடகக் கலையின் உயர்வைப்பற்றிப் பேசினேன்.

1944-ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பள்ளிக் கூட நிதிக்காக ‘சபாபதி’ என்னும் நாடகத்தை ஆடினபோது நானும் அதில் ஒரு வேடம் தரிக்க வேண்டுமென்று எனது நண்பர்கள் கேட்க, அதற்கிசைந்து ஒரு காட்சியில் சபாபதி முதலியாராக நடித்தேன். அப் பொழுது எனக்கு வயது 71. இதைக் குறித்து அப்பள்ளியின் அறக்கட்டளையர்(டிரசுட்டிகள்) கூட்டத்தில் எனக்கும் எனது நண்பர் மருத்துவர் குருசாமி முதலியாருக்கும் நடந்த வேடிக்கையான சம்பாசணையை இங்கு எழுத விரும்புகிறேன். இயக்குநர்கள், நானும் இந்நாடகத்தில் நடித்தால் அதன் மூலமாக பொருள் அதிகமாகக் கிடைக்கும் என்று என்னை வற்புறுத்தியபோது “சபாபதி முதலியார் என்னும் நாடகப் பாத்திரம் சுமார் 17 வயது பிள்ளை யாச்சுதே, எனக்கு 71 வயதாகிறதே அதை நான் எப்படி நடிப்பது?” என்று ஆட்சேபிக்க, மருத்துவர் குருசாமி முதலியார் “அதில் தவறொன்றும். இல்லை, 71 என்னும் எண்ணை திருப்பினால் 17 ஆகிறது” என்று வேடிக்கையாய் பதில் உரைத்தார்! ஆயினும் அவ்வயதில் நான் சபாபதி முதலியாராக நடித்தது எனக்குத் திருப்தியாய் இல்லை. ஆயினும் நாடகத்திற்கு வசூல் மாத்திரம் 2000 உரூபாய்க்கு மேல் வந்தது. இது தான் சந்தோசம்.

1941-ஆம் வருசம் அண்ணாமலை சருவகலாசாலையார் என்னை நாடகக் கலையைப்பற்றி மூன்று சொற்பொழிவுகள் செய்யும்படிக் கேட்டனர் அதற்கிணங்கி இவ்வருசம் ஆகத்து மாதம் அண்ணாமலை நகருக்குப் போய் நாடகக் கலையைப்பற்றி சொற்பொழிவுகள் செய்தேன்.

1945-ஆம் வருசம் சென்னையில் தாபிக்கப்பட்ட இந்து மது விலக்கு சங்கத்தின் பொன் விழாவில் வினோத வேசப் போட்டியில் வேடம் தரித்து வெள்ளிப் பதக்கம் பரிசு பெற்றேன். அன்றியும் இவ்வருசம் மார்ச்சு மாதத்தில் 31-ஆந் தேதியிலும் ஏப்பிரல் 1-ஆந்தேதியிலும் தஞ்சை மா நகரில் நடந்த இரண்டாவது நாடகத் தமிழ் மகாநாட்டில் தலைமை வகித்து தலைவர் உரையாகத் தமிழ் நாடகத்தைப்பற்றிச் சொற்பொழிவு செய்தேன். இவ்வருசம் தென்இந்திய உடற்பயிற்சி ஆட்டக்காரர் சங்கத்தின் (சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன்) கொண்டாட்டத்தில் வினோத வேடம் போட்டியில் வேடம் தரித்துப் பரிசு பெற்றேன். இவ்வருடம் சுகுண விலாச சபையின் தசரா கொண்டாட்டத்தில் ‘மருமகன்’ என்னும் தமிழ் பிரஃகசனத்தில் மருமகனுடைய குமாசுத்தா வேடம் தரித்தேன். மேலும் இச்சமயம் நடந்த இந்தி நாடகத்தில் பெய்லிப் (Bailiff) ஆகவும் காவல் ஆய்வாளராகவும் வேடம் பூண்டேன். மேற்கண்ட பல சிறு வேடங்கள் தரித்து நான் நடித்தது, அவற்றில் பெயர் எடுக்கவேண்டுமென்றல்ல. நாடகக் கலையின் சம்பந்தத்தை முதிர் வயதிலும் விட்டுப் பிரிய மனமில்லாமையே ஆகும்,

இவ்வருடம் வானொலி நாடகங்களில் நான்கு முறை பாகம் எடுத்துக்கொண்டேன். அந்நான்கு நாடகங்களும் நான் எழுதிய “சங்கீதப் பயித்தியம், இரசபுத்திர வீரன், மாண்டவர் மீண்டது, இடைச்சுவர் இருபுறமும்” என்பவையாம். இவற்றில் நான் நடித்தது எனக்கு ஒரு கடினமும் தரவில்லை. வேசம் போடாமலே பேசவேண்டிவந்தமையால், ஆயினும் மற்ற நடிகர்களுக்கெல்லாம் ஒத்திகை செய்யவேண்டியவனாய் இருந்தேன். இவ்வருசத்திற்கு முன்பாக ஊர்வசியின் சாபம், லீலாவதி சுலோசனா, சபாபதி முதலிய வானொலி நாடகங்களில் நடித்தேன். இவ்வருசத்திலும் இதற்கு முன்பாகவும் நாடக விசயங்களைப்பற்றி பன்முறை வானொலி மூலமாகப் பேசி யிருக்கிறேன்.

இவ் வருசம் சென்னையிலுள்ள சுழற்சங்கத்தார்(ரோடெரி கிளப்பார்) இந்திய ‘நாடக மேடை’என்னும் விசயத்தைப்பற்றிப் பேசும் படிக் கேட்க, அதற்கிசைந்து அவர்கள் பெரும்பாலோர் ஆங்கிலமே தெரிந்திருந்தபடியால் ஆங்கிலத்தில் சொற்பொழிவு செய்யும்படி நேர்ந்தது. இவ்வருசம் திசம்பர் மாதம் நான் இரண்டு முறை திரைப்படத் தணிக்கைச் சங்கத்தில் ஒருவனாக அரசாரால் நியமிக்கப்பட்டேன்.

1946 –ஆம் வருசம் சனவரி பிப்பிரவரி மாதங்களில் “மனைவியால் மீண்டவன், சிக்ஃக நாதன்” எனும் நாடகங்களில் முறையே பாகம் எடுத்துக் கொண்டேன். இவ்வருசம் ஏப்பிரல் மாதம் சென்னையில் ஒற்றவாடை நாடகசாலையில் நடந்த தமிழ் எழுத்தாளர் மகா நாட்டில் தமிழ்ப் பத்திரிகைக் காட்சியைத் திறந்துவைத்தேன். அன்றியும் இவ்வருசம் சுகுண விலாச சபையார் தசரா கொண்டாட்டத்தில் கபிர்தாசு என்னும் நாடகத்தில் இராம்சிங்கு வேசம் தரித்தேன்.

1947-ஆம் வருசம் சவுத் இண்டியன் ஆத்லெடிக் அசோசியேசன் கொண்டாட்டத்தின் வேசப் போட்டியில் பரிசு பெற்றேன். இவ்வருசம் எனக்கு 75-ஆவது வருடப் பிறப்பு நாளை சுகுண விலாச சபையார் கொண்டாடி எனக்கு ஒரு வந்தனோபசார பத்திரிகை அளித்தனர். இதை எனது பால்ய நண்பராகிய வி, வி. சீனிவாச ஐயங்கார் அவர்கள் கரத்தினின்றும் பெரும் பாக்கியம் பெற்றேன் கடவுள் கிருபையால். அச்சமயம் சபையார் நடத்திய காலவரிசி என்னும் எனது நாடகத்தில் சுபத்திரையின் வேலையாளாக நடித்தேன்.

இவ்வருசம் வெலிங்குடன் திரையரங்கு சாலையில் வினோத வரியை (Entertainment tax) அரசினர் உயர்த்திய தற்காக ஆட்சேபனை செய்வதற்காக கூடிய கூட்டத்தில் தலைமை வகித்து முக்கியமாக நாடகங்களுக்கு வரியை போடலாகாது என்று பேசினேன். இவ்வருசம் ஏப்பிரல் மாதம் விக்குடோரியா பப்ளிக்கு ஃகாலில் ஆந்திரர்கள் காலஞ்சென்ற சீமான் இராகவாச்சார்லு அவர்களின் உருவப்படத்தைத்திறந்து வைத்தபோது என்னையும் அவரது நட்புத் திறமையைப்பற்றி பேசவேண்டுமென்று கேட்டபோது அவ்வாறே செய்து என் காலஞ்சென்ற நண்பருக்கு நான் செலுத்தவேண்டிய கடனைச் சிறிதளவு செய்தேன். ஏப்பிரல் மாதம் சுகுண விலாச சபையார் தெலுங்கில் நடத்திய துரௌபதி மான சம்ரட்சணம் எனும் நாடகத்தில் பிராதிகாரி என்னும் சிறு வேசம் பூண்டேன். இச்சபையின் இவ்வருசத்திய தசரா கொண்டாட்டத்தில் சகுந்தலை நாடகத்தில் கொத்தவாலாக நடித்தேன். தெலுங்கு பாசையில், இவ்வருடக் கடைசியில் எங்கள் சபையார் நடத்திய ‘நந்தனார்’ எனும் தமிழ் நாடகத்தில் என் பழைய வேடமாகிய கோமுட்டி செட்டியாராக நடித்தேன், இவ்வருசம் சவுத் இண்டியன் ஆத்லடிக் அசோசியேசன் நடத்திய வருடாந்திரக் கொண்டாட்டத்தில் சிரிப்புப் பாட்டுப் போட்டியில் ஒரு பரிசு பெற்றேன். இப்பாட்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்றும் கலந்ததாகும். இதே பாட்டைப் பாடி பல வருடங்களுக்குமுன் சுகுண விலாச சபையார் எற்படுத்திய வினோத வேசப் பார்ட்டியில் அமெரிக்காவிலிருந்து அதைக் காண வந்த லிவர் பிரதர்சு கொடுத்த இரண்டு பரிசுகளில் ஒன்றைப் பெற்றது எனக்கு ஞாபகமிருக்கிறது. 1949-ஆம் வருசம் பச்சையப்பன் கல்லூரியில் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் ஒரு நாள் நடத்திய சபாபதி நாடகத்தின் நான்காம் பாகத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்தேன்.

20-2—1949-இல் புரொக்ரெசிவ் யூனியன் பள்ளி மாணவர்கள் எனது மனோகரன் நாடகத்தை செயிண்மேரீசு அரங்கில் ஆடியபோது தலைமை வகித்து சிறுவர்கள் ஆடிய நாடகத்தைத் தக்கபடி புகழ்ந்துரைத்தேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 19 : 12 – நாடக சம்பந்தமான நூல்கள்

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 18 : 11. தமிழ் நாடகத்திற்காகத் தான் உழைத்தது-தொடர்ச்சி)

12. நாடக சம்பந்தமான நூல்கள்

கீத மஞ்சரி :— நான் எழுதிய நாடகங்களுக்கு நானும் எனது நண்பர்களும் ஆதியில் எழுதிய சில பாட்டுகள் அடங்கியது. இம் முதற் பதிப்பு முற்றிலும் செலவாய் விட்ட போதிலும் இதை இரண்டாவது முறை அச்சிடுவதில்லை என்று தீர்மானித்தேன். இதற்கு முக்கிய காரணம் எனது நாடகங்கள் ஆடும் நடிகர்கள் தாங்கள் ஆடும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மெட்டுகளையுடைய பாட்டுகளை பாட விரும்புவதேயாம்.

நாடகத்தமிழ் :— இது நான் மிகவும் சிரமப்பட்டு ஆராய்ச்சி செய்து வெளியிட்ட நூலாம். இதற்காகச் சென்னை சருவகலாசாலையார் எனக்கு உரூபாய் 2250 கொடுத்தார்கள். இதை 1933-ஆம் வருடம் அச்சிட்டேன்.

நாடக மேடை நினைவுகள்:– ஆறு பாகம் எழுதியது 1927-36 இவற்றை 1932, 1933, 1935, 1936, 1937 வருடங்களில் அச்சிட்டேன்.

நாடக மேடையில் தேர்ச்சி பெறுவதெப்படி:— நடிகர்களுக்கு உபயோகப்படும்படி. இதை 1936-ஆம் வருடம் அச்சிட்டேன்.
தமிழ் பேசும் படம்:– இதை 1937-ஆம் வருடம் அச்சிட் டேன்.

பேசும் பட அனுபவங்கள்:– இதை 1938-ஆம் வருடம் அச்சிட்டேன்.

கதைகள் வியாசங்கள் முதலியன:– (1) தீட்சிதர் கதைகள் (2) ஃகாசிய வியாசங்கள் (3) சிறு கதைகள் (4) ஃகாசியக் கதைகள் (5) கதம்பம் இக் கதைகள் எல்லாம் பெரும்பாலும் சுதேசமித்திரன், ஆனந்த விகடன் முதலிய பத்திரிகைக்களுக்காக எழுதியவைகளாம்.

————–

13. மத சம்பந்தமான நூல்கள்

சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும்:– சிறு வயது முதல் ‘சிவாலய பயித்தியம்’ எனக்குண்டு. ஏறக்குறைய 4000 சிவாலயங்களைப் பற்றி பல ஆண்டுகளாக தொடுத்து 1945-ஆம் வருடம் முதல் 4 பாகங்களை அச்சிட்டேன். 5 ஆம் பாகம் 1948-ஆம் வருடம் அச்சிடப்பட்டது.

சிவாலய சிற்பங்கள்:– இதை 1946-ஆம் வருடம் அச்சிட் டேன். இதை அச்சிடுவதில் தமிழ் மொழிக்காக எப்பொழுதும் உதவி செய்து வரும் சிரீலசிரீ காசி அருணா நந்தித் தம்பிரான் சுவாமிகள், திருப்பனன் தாள் ஆதினம் பண்டார சந்நிதி அவர்கள் உரூபாய் 500 பொருளுதவி செய்தார்கள். இந்நன்றியை நான் என்றும் மறக்க முடியாது.

சுப்பிரமணியர் ஆலயங்கள்:– இந்நூலைச் சிவாலயங்களி னின்றும் வேறாக அச்சிட்டதற்குக் காரணம் இந்நூல் முகவுரையில் எழுதியுள்ளேன். இம் மூன்றையும் படங்களுடன் அச்சிடாதது பெருங்குறையாம். இக்குறை என் ஆயுள் முடியு முன் இறைவன் அருள் நிறைவேற்றி வைக்குமாக.

————-

14. மேற்சொன்ன நூல்களன்றி நான் அச்சிட்ட நூல்கள்

1. காலக் குறிப்புகள்:— நான் சிறு எழுத்தாள்னாக வேண்டுமென்று தீர்மானித்த பிறகு எனக்கு உபயோகப்படும் படியான பல காலக் குறிப்புகளை குறித்து வந்தேன். அவை மற்ற நூலாசிரியர்களுக்கும் உபயோகப்படும் என்று நினைத்து 1947-ஆம் வருடம் அச்சிட்டேன்.
2. சாதாரண உணவுப் பொருளின் குணங்கள்:– மேற் கண்டபடியே என் சொந்த உபயோகத்திற்காகச் சிறு வயது முதல் உணவுப் பொருள்களின் குணங்களைக் குறித்து வந்தேன். தாயுமானவர் “வாடித்திரிந்து நான் கற்றதும் கேட்டது அவலமாய் போதல் நன்றோ” என்று கூறியபடி இவை மற்றவர்களுக்கு உபயோகப்படக் கூடும் என்று எண்ணி இதை 1948-ஆம் வருடம் அச்சிட்டேன்.

நான் ஒரு எழுத்தாளனாகி 1942-ஆம் வருடம் வரையில் என் புத்தகங்களை அச்சிடுவதில் ஒரு கட்டமுமில்லை என்றே கூறவேண்டும். அதற்கப்புறம் நான் பல கடினங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவை பெரும்பாலும் இரண்டாவது உலக யுத்தத்தினால் நேர்ந்தவையென்றே சொல்லலாம். அவற்றில் சிலவற்றை இங்குத் தெரிவிக்கிறேன். முதலாவது 1942-ஆம் வருடம் பட்டணத்தைவிட்டு மைசூருக்கு குடும்பத்துடன் ஓடிப்போக வேண்டிவந்தபடியால் அதுவரையில் வருடா வருடம் சில புத்தகங்களையாவது அச்சிடும் பழக்கம் தடைப்பட்டது. இரண்டாவது அதுவரையில் என் புத்தகங்களை அச்சிட்டுக்கொண்டிருந்த டௌடன் நிறுவனத்தை வாங்கின பியர்லெசு பிரசு என்னும் அச்சுக்கூடம் எடுபட்டுப்போக, பிறகு என் நூல்களைப் பல அச்சுக்கூடங்களுக்குப்போய், வேண்டி அச்சிடவேண்டியதாயிற்று. மூன்றாவது என் நூல்களை அச்சிட காகிதம் கிடைக்காமற் போனது. காகிதக் கட்டுப்பாட்டாளர் (கண்டிரோலர்) அவர்களுக்கு எனக்கு காகிதம் வேண்டுமென்று மனு கொடுத்தால் “நீ அச்சிடும் புத்தகங்கள் பெரும்பாலும் நாடகங்கள் தானே. அவற்றைக் காகித நெருக்கடி சமயத்தில் அச்சிடவேண்டிய நிமித்தமில்லை” என்று காகித ஒதுக்கீடு (கோட்டா) கொடுக்க மறுத்துவிட்டார். கறுப்புச் சந்தையில் அதிகவிலை கொடுத்து காகிதம் வாங்கவேண்டியதாயிற்று. நான்காவது தொழிலாளிகளின் வேலைநிறுத்தத்தால் இரண்டு மூன்று மாதங்களில் அச்சிடும் புத்தகங்கள் 6 மாதத்திற்கு மேல் காலம் பிடித்தது. அச்சிட்டு வெளி வர. ஐந்தாவது அச்சுக் கூலியும் அதிகப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் சராசரி ஒரு பாரத்திற்கு 4 உரூபாய் கொடுத்தது போக தற்காலம் ஏறக்குறைய அதற்கு 4 மடங்கு கொடுக்க வேண்டியவனாய் இருக்கிறேன். காகிதத்தின் விலையும் அதிகப் பட்டதென்று நான் எழுதவேண்டியதில்லை. இதன் பயனாக என் நூல்களின் விலையை அதிகப்படுத்த வேண்டியதாயிற்று.

மேற்கண்ட துன்பங்களையெல்லாம்விட நான் தற்காலம் அநுபவிக்கும் பெருந்துன்பமென்ன வென்றால் என் கண் பார்வை மட்டிட்டு வருவதேயாம். இது என் வயதின் கொடுமையாம் எனக்கு நாற்பதாம் வயதில் மனிதர்களுக்கு வரும் சாலேசுவரம் வரவேயில்லை. நான் அச்சிடும் புத்தகங்களின் (Proof) பிழை திருத்தங்களைச் சரியாகக் கவனிக்க அசத்தனாய் இருக்கிறேன். சென்ற சில வருடங்களாக வெளிவரும் என் நூல்களில் பல அச்சுப் பிழைகள் குடி கொண்டிருக்கின்றன என்பதற்கு சந்தேகமில்லை.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, October 28, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 59 : 35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 58 : புலமையும் வறுமையும்- தொடர்ச்சி)

என் சரித்திரம்

  1. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்

திருநெல்வேலி சில்லாவில் உள்ளவர்களுக்குத் தாமிரபரணி நதியும் திருக்குற்றால தலமும் பெரிய செல்வங்கள்; அவற்றைப் போலவே மேலகரம் திரிகூடராசப்பக்கவிராயர் இயற்றிய நூல்கள் இலக்கியச் செல்வமாக விளங்குகின்றன. மேலகரமென்பது தென்காசியிலிருந்து திருக்குற்றாலத்திற்குப் போகும் வழியில் உள்ளது. முன்பு திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து வெளியிடங்களுக்கு வரும் கனவான்களிற் பெரும்பாலோர் திருக்குற்றாலக் குறவஞ்சியிலிருந்து சில பாடல்களைச் சொல்லி ஆனந்தமடைவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள்; பலர் திருக்குற்றாலத் தல புராணத்திலிருந்தும் அரிய செய்யுட்களைச் சொல்லி மகிழ்வார்கள். தென்பாண்டி நாட்டார் பெருமதிப்பு வைத்துப் பாரட்டிய திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்களைப் பிள்ளையவர்கள் படித்ததில்லை. அவற்றை வருவித்துப் படிக்கவேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.

திருக்குற்றால யமக அந்தாதி

அக்காலத்தில் திருவாவடுதுறையில் ஆதீனகர்த்தராக விளங்கியவர் சிரீ சுப்பிரமணிய தேசிகர் என்பவர். அவர் திரிகூடராசப்பக் கவிராயர் பரம்பரையில் உதித்தவர். அவருடைய தம்பியாரும் மாணாக்கருமான சண்பகக்குற்றாலக் கவிராயர் என்பவர் மூலமாகப் பிள்ளையவர்கள் திருக்குற்றாலத் தலபுராணத்தையும் திருக்குற்றால யமக அந்தாதியையும் வருவித்துத் தாமே படித்து வரத் தொடங்கினார். யமக அந்தாதிக்கு ஒருவாறு பொருள் வரையறை செய்துகொண்டு எங்களுக்கும் பாடம் சொன்னார். குற்றாலத் தலபுராணத்தையும் இடையிடையே படிக்கச் செய்து கேட்டு இன்புற்று வந்தார். அந்நூலின் நடை நயத்தையும் பொருள் வளத்தையும் மிகவும் பாராட்டினார்.

எனக்குத் திருக்குற்றால யமக அந்தாதியில் சில செய்யுட்கள் பாடமாயின; அந்நூலைப் பாடம் சொல்லும்போது பிள்ளையவர்கள், “இதனை இயற்றிய கவிராயர் நல்ல வாக்குடையவர்; இப்போது திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கிற [1] மகா சந்நிதானம் அக்கவிராயர் பரம்பரையில் உதித்தவர்களாதலால் தமிழிற் சிறந்த புலமை உடையவர்கள். வடமொழியிலும் சங்கீதத்திலும் நல்ல ஞானம் உள்ளவர்கள். அவர்களை நீரும் சமீபத்தில் தரிசிக்கும்படி நேரும்” என்று கூறினார்.

‘குட்டிகளா!’

திருவாவடுதுறையிற் பதினைந்தாம் பட்டத்தில் இருந்த சிரீ அம்பலவாண தேசிகருடைய குருபூசை வந்தது. அதற்கு வரவேண்டுமென்று ஆதீனகர்த்தர் பிள்ளையவர்களுக்குத் திருமுகம் அனுப்பியிருந்தார். அதற்காக அவர் திருவாவடுதுறை சென்று அங்கே மூன்று தினங்கள் இருந்துவிட்டு வந்தார். வந்தவுடன் அங்கே நிகழ்ந்தவற்றையெல்லாம் ஒரு நண்பரிடம் சொன்னார். நானும் பிற மாணாக்கர்களும் உடனிருந்து கவனித்தோம்.

“மகாசந்நிதானம் மிகவும் அன்போடு விசாரித்துப் பாராட்டியது. திருவாவடுதுறைக்கே வந்து இருந்து மடத்திலுள்ளவர்களுக்குப் பாடஞ் சொல்லி வரவேண்டுமென்று கட்டளையிட்டது. அங்கேயுள்ள குட்டிகளும் என்னை மொய்த்துக்கொண்டு, ‘எப்படியாவது இங்கே வந்திருந்து பாடஞ் சொல்லித் தரவேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள். நான் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டு வந்தேன்” என்று ஆசிரியர் சொன்னார்.

நான் கவனித்து வரும்போது ‘குட்டிகள்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் திடுக்கிட்டேன். “மடத்தில் குட்டிகள் இருக்கிறார்களா?” என்று பிரமித்தேன். குட்டிகள் என்று இளம்பெண்களை யாவரும் கூறும் வழக்கத்தையே நான் அறிந்தவன். பக்கத்திலிருந்த சவேரிநாத பிள்ளையிடம், “குட்டிகள் மடத்தில் இருப்பதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர் முதலில் சிரித்துவிட்டு ‘சிறிய தம்பிரான்களை மடத்தில் குட்டித் தம்பிரான்கள் என்று சொல்வார்கள். அந்தப் பெயரையே சுருக்கிக் ‘குட்டிகள்’ என்று வழங்குவதுமுண்டு” என்று விளக்கமாகக் கூறினார். என் சந்தேகமும் நீங்கியது.

“திருவாவடுதுறையிலே போய் இருந்தால் இடைவிடாமற் பாடஞ் சொல்லலாம். அடிக்கடி வித்துவான்கள் பலர் வருவார்கள்; அவர்களுடைய பழக்கம் உண்டாகும். சந்நிதானத்தின் சல்லாபம் அடிக்கடி கிடைக்கும். அதைவிடப் பெரிய இலாபம் என்ன இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பிள்ளைகளுக்கு ஆகார வசதிகள் முதலியன கிடைக்கும்” என்று பிள்ளையவர்கள் சொன்னார்கள். அவர் மாணாக்கர்களுடைய சௌகரியத்தையே முதல் நோக்கமாக உடையவர் என்பது அவ்வார்த்தைகளால் புலப்பட்டது.

இந்நிகழ்ச்சி ஆனி மாதத்தில் நடந்தது. அது முதல் “இந்த மகாவித்துவானுடைய மதிப்புக்கும் பாராட்டுக்கும் உரிய அந்தச் ‘சந்நிதானம்’ சிறந்த இரசிகராகவே இருக்கவேண்டும்” என்று நான் நினைக்கலானேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் பெருமையையும் அதன் தலைவர்களாக உள்ள சிரீ சுப்பிரமணிய தேசிகரது மேன்மையையும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்த என் மனத்துள் “திருவாவடுதுறைக்கு எப்பொழுது போவோம்!” என்ற ஆவல் உண்டாயிற்று.

ஆறுமுகத்தா பிள்ளை

ஒரு நாள் பட்டீச்சுரத்திலிருந்து ஆறுமுகத்தா பிள்ளை என்ற சைவவேளாளப் பிரபு ஒருவர் வந்தார். அவர் பிள்ளையவர்களைத் தெய்வமாக எண்ணி உபசரிப்பவர். பிள்ளையவர்கள் அடிக்கடி பட்டீச்சுரம் சென்று சில தினங்கள் அவர் வீட்டில் தங்கியிருந்து வருவது வழக்கம்.

பிள்ளையவர்கள் செல்வாக்கை நன்கு உணர்ந்த ஆறுமுகத்தா பிள்ளை தம்முடைய குடும்பத்தில் உள்ள துன்பங்கள் சிலவற்றை அப்புலவர் பெருமானைக்கொண்டு நீக்கிக்கொள்ளலாம் என்றெண்ணி அவரை அழைத்துச் செல்வதற்கு வந்திருந்தார். என் ஆசிரியர் ஆறுமுகத்தா பிள்ளையிடம் விசேசமான அன்புகாட்டி வந்தார். அதனால் அவருடைய வேண்டுகோளைப் புறக்கணியாமல் பட்டீச்சுரம் புறப்பட நிச்சயித்தார்.

திருவாவடுதுறைப் பிரயாணம்

“திருவாவடுதுறைக்குப் போய்ச் சந்நிதானத்திடம் விடைபெற்று, அங்கிருந்து பட்டீச்சுரம் போகலாம்” என்று சொல்லி என்னையும் தவசிப் பிள்ளைகளில் ஒருவரான பஞ்சநதம் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு ஆறுமுகத்தா பிள்ளையுடன் ஆசிரியர் திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார்.

திருவாவடுதுறை மாயூரத்திலிருந்து சற்றேறக்குறையப் பத்து கல் தூரம் இருக்கும். ஆறுமுகத்தா பிள்ளை ஒரு வண்டி கொணர்ந்திருந்தார். நாங்கள் எல்லாரும் அவ்வண்டியில் ஏறிக்கொண்டு சென்றோம். சில நேரம் வழியில் நடந்து செல்வது உண்டு. பிராயாணத்திற் பிள்ளையவர்கள் திருவாவடுதுறையைப் பற்றிப் பல செய்திகளை என்னிடம் சொன்னார்.

“சந்நிதானம் உம்மைப் பார்த்துச் சில கேள்விகள் கேட்டாலும் கேட்கும்; சில செய்யுட்களைச் சொல்லும்படி கட்டளையிடலாம்; நீர் நன்றாக இசையுடன் செய்யுட்களைச் சொல்லும்; சந்நிதானத்திற்கு இசையில் விருப்பம் அதிகம். பொருள் கேட்டால் அச்சமின்றித் தெளிவாகச் சொல்லும். சந்நிதானம் உம்மிடத்தில் பிரியம் வைத்தால் உமக்கு எவ்வளவோ நன்மைகள் உண்டாகும்” என்று கூறினார்.

வழியில் எதிரே வருபவர்கள் பிள்ளையவர்களைக் கண்டு மரியாதையாக ஒதுங்கிச் சென்றார்கள். நாங்கள் திருவாவடுதுறையின் எல்லையை அணுகினோம். அங்கே சந்தித்தவர்கள் யாவரும் அவரைக் கண்டவுடன் முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள். சந்தோச மிகுதியால் அவரைச் சுற்றிக்கொண்டு சேமம் விசாரித்தார்கள். மடத்தைச் சேர்ந்த ஓதுவார்களிற் சிலர் பிள்ளையவர்கள் வரவை உடனே சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தனர். தேசிகர் அவரை அழைத்து வரும்படி சொல்லியனுப்பினார்.

சுப்பிரமணிய தேசிகர் தோற்றம்

நாங்கள் மடாலயத்துள் சென்றோம். மடத்தின் உட்புறத்தில் ஒடுக்கத்தின் வடபுறத்தே தென்முகம் நோக்கியபடி சிரீ சுப்பிரமணிய தேசிகர் அமர்ந்திருந்தார். மடத்தில் பண்டார சந்நிதிகள் இருக்குமிடத்திற்கு ‘ஒடுக்கம்’ என்று பெயர். சுப்பிரமணிய தேசிகருடைய தோற்றத்திலே ஒரு வசீகரம் இருந்தது. நான் அதுகாறும் அத்தகைய தோற்றத்தைக் கண்டதே இல்லை. துறவிகளிடம் உள்ள தூய்மையும் தவக்கோலமும் சுப்பிரமணிய தேசிகரிடம் நன்றாக விளங்கினர். கவலை என்பதையே அறியாத செல்வரது முகத்தில் உள்ள தெளிவு அவர் முகத்தில் பிரகாசித்தது. அவரது காவியுடை, (உ)ருத்திராட்ச மாலை, தலையில் வைத்துள்ள சபமாலை ஆகிய இவை அவரது சைவத்திருக்கோலத்தை விளக்கின.

காதில் அணிந்திருந்த [2] ஆறுகட்டி, சுந்தர வேடம், விரல்களில் உள்ள அங்குட்டம் பவித்திரம் என்பவை, தேகத்திலிருந்த ஒளி, அந்த மேனியிலிருந்த வளப்பம் எல்லாம் அவர் துறவிகளுள் அரசராக விளங்கியதைப் புலப்படுத்தின. அவருடைய தோற்றத்தில் தவப்பயனும் செல்வப் பயனும் ஒருங்கே விளங்கின. அவர் முகமலர்ச்சியிலே, அவருடைய பார்வையிலே, அவர் அமர்ந்திருந்த நிலையிலே, அவரது கம்பீரமான தோற்றத்திலே ஓர் அமைதியும், கண்டாரைக் கவரும் தன்மையும் இயல்பாகவே அமைந்திருக்கும் தலைமையும் ரஸிகத்துவமும் புலப்பட்டன.

அவரைச் சுற்றிப் பலர் உட்கார்ந்திருந்தனர். எல்லாருடைய முகத்திலும் அறிவின் தெளிவு மலர்ந்திருந்தது. எல்லாருடைய முகங்களும் சுப்பிரமணிய தேசிகரை நோக்கியபடியே இருந்தன. பிள்ளையவர்கள் புகுந்தவுடன் தேசிகர் கண்களிலே தோற்றிய பார்வையே அவரை வரவேற்றது. அங்கிருந்த யாவரும் என் ஆசிரியரைப் பார்த்தனர். அவர்களிடையே ஓர் உவகைக் கிளர்ச்சி உண்டாயிற்று.

ஆசிரிய வணக்கம்

பிள்ளையவர்கள் தேசிகரைச் சாசுட்டாங்கமாக வணங்கினர். அவருடைய சரீர அமைப்பு அப்படி வணங்குவதற்கு எளிதில் இடம் கொடாது. சிரமப்பட்டே வணங்க வேண்டும். ஆதலின் அவர் கீழ் விழுந்து நமசுகாரம் செய்த காட்சி எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. புலவர் சிகாமணியாகிய அவர் புலமைநிலை மிக உயர்ந்தது. பிறரை வணங்காத பெருமையை உடைய அவர் அவ்வாறு பணிந்து வணங்கியபோது அவரது அடக்கத்தையும் குருபக்தியையும் உணர்ந்து பின்னும் வியப்புற்றேன்.

வணங்கி எழுந்த ஆசிரியர், தேசிகரிடம் திருநீறு பெறுவதற்கு அணுகினார். அப்போது நான் அவர் பின்னே சென்றேன். தேசிகர் முன் பிள்ளையவர்கள் குனிந்தார். அவர் அன்புடன் பிள்ளையவர்களது நெற்றியில் திருநீறிட்டு, “உட்கார வேண்டும்” என்றார். வழக்கம்போல் இரண்டாவது முறை பிள்ளையவர்கள் வணங்கத் தொடங்கியபோது. “ஒருமுறை வணங்கியதே போதும். இனி இந்த வழக்கம் வேண்டாம்” என்று தேசிகர் சொல்லவே அவர் மீட்டும் வணங்காமல் அருகில் ஓரிடத்தில் அமர்ந்தார். அமர்ந்த பிறகு, “உங்களிடம் பாடங் கேட்டு வரும் சாமிநாதையரா இவர்?” என்று தேசிகர் என்னைச் சுட்டிக் கேட்டார். “சுவாமி” என்று பிள்ளையவர்கள் சொல்லவே, தேசிகர் என்னையும் உட்காரச் சொன்னார். பெரியோர்களிடத்தில் மற்றவர்கள் ஆம் என்னும் பொருளில் ‘சுவாமி’ என்னும் வார்த்தையை உபயோகிப்பது வழக்கம். நான் என் ஆசிரியருக்குப் பின்னால் இருந்தேன். “நம்மைப் பற்றி முன்னமே நம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்களே! இவர்களும் ஞாபகம் வைத்திருக்கிறார்களே” என்று எண்ணி உளம் பூரித்தேன்.

‘நீங்கள் இல்லாத குறை’

தேசிகர் பிள்ளையவர்களுடைய சேம சமாசாரங்களை முதலில் விசாரித்தார்; பின்பு. “மகாவைத்தியநாதையரவர்கள் இங்கே வந்திருந்தார்கள்; நேற்று மாலையில் சோமாசிமாற நாயனார் கதை பண்ணினார்கள். திருவிடைமருதூர், திருவாலங்காடு முதலிய இடங்களிலிருந்து சம்சுகிருத வித்துவான்களும் வேறு ஊர்களிலிருந்து கனவான்களும் வந்திருந்தார்கள்; நல்ல சதசு; நீங்கள் இல்லாதது தான் குறையாத இருந்தது; மகாவைத்தியநாதையரவர்கள் பல வடமொழி நூல்களிலிருந்து அருமையான மேற்கோள்களை எடுத்துக்காட்டினார்கள். பெரியபுராணம், தேவார, திருவாசகம் முதலிய நூல்களிலிருந்தும் உங்கள் வாக்காகிய சூதசங்கிதையிலிருந்தும் செய்யுட்களை எடுத்துச் சொல்லிப் பிரசங்கம் செய்தார்கள். உங்கள் வாக்கைச் சொல்வதற்கு முன் ‘பிள்ளையவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று பீடிகை போட்டுக்கொண்டு செய்யுளை இசையுடன் சொல்லி அருத்தம் கூறும்போது உங்கள் பெருமை எல்லாருக்கும் விளங்கியது. இப்படி அடிக்கடி உங்கள் வாக்கை எடுத்துக்காட்டினார்கள். அதுமுதல் உங்கள் ஞாபகமாகவே இருந்து வருகிறோம். இங்கேயுள்ள தம்பிரான்களும் பிறரும் உங்கள் வரவை வெகு ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்” என்று உரைத்தார். அப்போது, அவருடைய வார்த்தைகளில் அன்பும் இனிமையும் வெளிப்பட்டன. “உலகம் பெரிது; அதில் உள்ள பெரியோர்கள் அளவிறந்தவர்கள். மனத்தைக் கவரும் அரிய குணங்களும் அநந்தம்” என்று நான் நிமிஷத்துக்கு நிமிஷம் எண்ணமிடலானேன்.

பெருமையின் விரிவு

பிள்ளையவர்களின் பெருமையை நான் முன்பு கேள்வியால் உணர்ந்திருந்தேன். அவரிடம் வந்து சேர்ந்தபின், அவரது பெருமையை நன்கு உணர்ந்தேன்; முற்றும் உணர்ந்துவிட்டதாக ஓர் எண்ணம் இருந்தது. அது பிழை என்று அப்போது என் மனத்திற்பட்டது. திருவாவடுதுறையில் அந்தத் துறவரசாகிய சுப்பிரமணிய தேசிகர் அவ்வளவு வித்துவான்களுக்கிடையில் என் ஆசிரியர் இல்லாததை ஒரு பெருங்குறையாக எண்ணினார். மகாவைத்தியநாதையர் தேவார, திருவாசகங்களோடு என் ஆசிரியர் வாக்கையும் மேற்கோளாகக் காட்டிப் பொருள் கூறினார் என்ற இச்செய்திகளும் பிள்ளையவர்களிடத்தில் தேசிகர் அன்பு காட்டிய முறையும், “நான் பிள்ளையவர்கள் பெருமையை இன்னும் நன்றாக உணர்ந்துகொள்ளவில்லை” என்பதைப் புலப்படுத்தின.

வித்துவான்களுக்கிடையே கம்பீரமாக வீற்றிருந்து இன்மொழிகளால் என் ஆசிரியரைப் பாராட்டும் தேசிகருடைய தோற்றத்தில் நான் ஈடுபட்டேன். அவருடைய பாராட்டுக்கு உரிய என் ஆசிரியரது பெருமையைப் பின்னும் விரிவாக உணர்ந்து வியந்தேன்; அவ்விருவருடைய பழக்கமும் பெறும்படி வாய்த்த என் நல்வினையை நினைந்து உள்ளம் குளிர்ந்தேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

அடிக்குறிப்பு
1. ஆதீன கர்த்தரவர்களை ‘மகாசந்நிதான’ மென்றும் ‘சந்நிதான’ மென்றும்சொல்வது வழக்கம்.
2. ஆறுகட்டி என்பது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் ஆறையும் அடக்கியவர் என்பதைக் குறிக்கும் ஓர் ஆபரணம், சுந்தர வேடம் என்பது காதில் அணிந்து கொள்ளும் வட்டமான பொன் ஆபரணம், இது சுந்தரமூர்த்தி நாயனாரால் அணியப்பெற்றதாதலின் இப்பெயர் வந்ததென்பர். சைவாசாரியர் இதை அணிவது வழக்கம்

Sunday, October 22, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 20 : 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 19 : 12-14. நாடக சம்பந்தமான நூல்கள் தொடர்ச்சி)

15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது


  1. 1931-ஆம் வருடம்தான் என் முதிர் வயதில் பேசும் படங்களில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். நான் கல்கத்தாவுக்குப் போய் நான் எழுதிய ‘சதி சுலோசனா’ என்னும் நாடகத்தைப் பேசும் படமாகத் தயாரித்தது. பிறகு 1936-ஆம் வருடம் பம்பாய்க்குப்போய் என் ‘மனோகரா’ என்னும் பேசும் படத்தில் புருசோத்தமனாக நடித்தது. இதற்கிடையில் ஏழு வருடம் பேசும் படத்தின் தணிக்கைக் கழகத்தில்(சென்சார் போர்டில்) ஒரு அங்கத்தினனாக அரசால் ஏற்படுத்தப்பட்டு வேலை பார்த்தது முதலிய விசயங்களைப்பற்றி என்னுடைய ‘பேசும் பட அனுபவங்கள்’ என்னும் சிறிய புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். ஆகவே இங்கு, அவற்றைப் பற்றி எழுதுவது அவசியமில்லை என்று விடுத்தேன். அவ்விசயங்களைப்பற்றி அறிய விரும்பும் என் நண்பர்கள் அந்நூலைப் படித்து தெரிந்து கொள்வார்களாக. இதுவரையில் அடியிற் கண்ட எனது நாடகங்கள் திரைப்படங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. (1) காலவரிசி (2) இரத்தினாவளி (3) மனோகரா ( இரண்டு முறை) (4) (இ)லீலாவதி சுலோசனா (5) வேதாள உலகம் (5) சதிசுலோசனா (7) சந்திரஃகரி (8) சபாபதி (9) பொங்கல் பண்டிகை (10) இராமலிங்க சுவாமிகள் (இது அச்சிடப்படாத நாடகம்).

புத்தகங்களை எழுதி அச்சிட்டது போக நான் எழுத்தாளனாக செய்த சில காரியங்களை இனி எழுதுகிறேன். சென்ற சுமார் 20 வருடங்களாக இந்து (Hindu) பத்திரிகைக்கு ஆங்கிலத்திலும், சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் முதலிய தமிழ்ப் பத்திரிகைகளுக்குத் தமிழிலும் சிறுசிறு வியாசங்கள் எழுதியனுப்பியிருக்கிறேன். இதன்மூலமாக எனக்கு வருவாயும் உண்டு.

பேசும் படங்களுக்குச் சில நாடகங்களை எழுதியிருக்கிறேன். இவையன்றிப் பேசும் படங்களுக்கென்றே இதுவரையில் நான் எழுதிய நாடகங்கள் இரண்டாம். ஒன்று ‘இராமலிங்க சுவாமிகள்’ இதை எழுதிப் பேசும் படமாக்கக் கொடுத்ததில் நான் ஒரு பெருந்தவறிழைத்தேன். அத்தவற்றை மற்றவர் இழைக்காதபடி அதை இங்குத் தெரிவிக்கிறேன். அதை என்னிடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் அவசரமாக வேண்டுமென்று கேட்க விரைவில் எழுதி முடித்தேன். உடனே அவர்கள் வந்து என்னைக் கேட்க, நான் அதற்கு ஒரு படி வைத்துக்கொள்ளாமலே அவர்களிடம் கொடுத்து விட்டேன். பிறகு அது பேசும் படமாக ஆடப்பட்டபின் நான் எழுதியதைக் கேட்க, அதை அவர்கள் எங்கோ தொலைத்துவிட்டதாகக் கூறினர்! நான் என்ன செய்வது? நான் இதை மிகவும் சிரமப்பட்டு எழுதிய நாடகம். மறுபடியும் நான் அதை எழுதுவது எனக்கு இவ்வயதில் சாத்தியமில்லாமற்போயிற்று. ஒரு எழுத்தாளன் தான் எழுதிய கதை ஏதாவது ஒன்றை படி வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடம் கொடுத்துவிடுவது தவறென்பதை இதைப் படிக்கும் மற்றவர்களுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன்பின் ‘விசுவாமித்திரர்’ எனும் நாடகத்தை எழுதி எனது நண்பர் சகந்நாதம் என்பவருக்குக் கொடுத்திருக்கிறேன். அதற்காக நான் பெற்ற ஊதியம் உரூபாய் 3000-ஆம். இது பேசும் படமாக ஆடப்பட்டது.

சென்னையில் வானொலி வந்தபிறகு அதில் பன்முறை ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசியிருக்கிறேன். வானொலிக் கென்றே இரண்டொரு நாடகங்களை எழுதியிருக்கிறேன். அவை வானொலியில் ஆடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றாகிய பெண்புத்திக் கூர்மை என்பதை அச்சிட்டிருக் கிறேன்.

இதை வாசிக்கும் தாங்களும் எழுத்தாளர்களாக வேண்டு மென்று விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் ஏதாவது எழுதினால் அதை உபயோகிக்க யாராவது விரும்பினால், அதற்காக, எவ்வளவு சிறியதாயிருந்த போதிலும் ஏதாவது உரிமைத்தொகை, மதிப்பூதியம் (ராயல்டி, ஆனரேரியம்) பெறாது கொடுக்காதீர்கள். இதில் தவறில்லை. இது தான் சரியான வழி. மேனாட்டு எழுத்தாளர்கள் இக்கோட்பாட்டைத் தவறாது கைப்பற்றி நடக்கின்றனர் என்பது ஞாபகமிருக்கட்டும். நான் எனது நாடகங்களை ஒன்றையும் உரிமைத்தொகை கொடுக்காமல் ஆடுவதற்கு உத்தரவு கொடுப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்த விசயமே.

தினசரி பத்திரிகை, மாதாந்திர பத்திரிகை முதலியவற்றின் சொந்தக்காரர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் சிறு எழுத்தாளர்கள் எழுதி அனுப்புவதை அச்சிட்டால் அவர்களுக்கு ஏதாவது சிறிதாவது உரிமைத்தொகை(ராயல்டி) அல்லது மதிப்பூதியம்(ஆனரேரியம்) கொடுக்க மறந்து போகாதீர்கள். நமது மொழியை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கோரினால் இவ்வாறு செய்வது உங்கள் கடமையாகும்

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, October 21, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 58 : புலமையும் வறுமையும்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 57 : அன்பு மயம் – தொடர்ச்சி)

என் சரித்திரம்

  1. புலமையும் வறுமையும்

சூரியமூலையிலிருந்து என் பெற்றோர்களிடமும் மாதாமகரிடமும் அம்மான் முதலியவர்களிடமும் விடைபெற்று நான் மாயூரம் வந்து சேர்ந்தேன். வந்தபோது நான் பிரிந்திருந்த பத்து நாட்களில் ஒரு பெரிய இலாபத்தை நான் இழந்துவிட்டதாக அறிந்தேன். நான் ஊருக்குப் போயிருந்த காலத்தில் பிள்ளையவர்கள் சிலருக்குப் பெரியபுராணத்தை ஆரம்பித்துப் பாடஞ் சொல்லி வந்தார்.

பெரிய புராணப்பாடம்

தஞ்சை சில்லாவில் சில முக்கியமான தேவத்தானங்களின் விசாரணை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உண்டு. மாயூரத்தில் சிரீ மாயூரநாதர் கோயிலும் சிரீ ஐயாறப்பர் ஆலயமும் அவ்வாதீனத்துக்கு உட்பட்டவை. ஆதீனகர்த்தராகிய பண்டார சந்நிதிகளின் பிரதிநிதியாக இருந்து, அவர்கள் கட்டளைப்படி தேவத்தானங்களின் விசாரணையை நடத்தி வரும் தம்பிரான்களுக்குக் கட்டளைத் தம்பிரான்கள் என்றும் அத்தம்பிரான்கள் தம் தம் வேலைக்காரர்களுடன் வசிப்பதற்காக அமைத்திருக்கும் கட்டடங்களுக்குக் கட்டளை மடங்களென்றும் பெயர் வழங்கும். மாயூரத்தில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பிரதிநிதியாகப் பாலசுப்பிரமணியத் தம்பிரானென்பவர் மாயூரம் தெற்கு வீதியில் உள்ள கட்டளை மடத்தில் இருந்து கோயிற் காரியங்களை நன்றாகக் கவனித்து வந்தார். அவர் தமிழில் நல்ல பயிற்சி உள்ளவர். அவர் இருந்த கட்டளை மடம், பிள்ளையவர்கள் விடுதிக்கு அடுத்ததாதலால் அடிக்கடி அங்கே சென்று அவருடன் சல்லாபம் செய்து வருவார். அவருக்குப் பிள்ளையவர்களிடம் பெரியபுராணம் பாடம் கேட்க வேண்டுமென்ற விருப்பமிருந்தமையால் அவ்விதமே தொடங்கி முதலிலிருந்து பாடங் கேட்டு வந்தார். வேறு முதியவர் சிலரும் உடனிருந்து பாடங் கேட்டு வந்தனர். சவேரிநாத பிள்ளையும் கேட்டு வந்தனர்.

நான் சூரியமூலையிலிருந்து வந்த காலத்தில் எறிபத்த நாயனார் புராணத்துக்கு முந்திய புராணம் வரையில் நடைபெற்றிருந்தது. நான் வந்த தினத்தில் அப்புராணம் ஆரம்பமாயிற்று. பெரிய புராணத்தை நான் அதற்கு முன் பாடங் கேட்டதில்லை. நாயன்மார்களுடைய பெருமையை விரித்துரைக்கும் அந்நூலைப் பிள்ளையவர்கள் போன்ற சிவபக்திச் செல்வம் நிறைந்தவர்கள் சொல்லத் தொடங்கினால் இயல்பாகவே பக்தி ரசம் செறிந்துள்ள அப்புராணம் பின்னும் அதிக இனிமையை உண்டாக்கும் என்பதில் என்ன சந்தேகம்?

நான் பிரபந்தங்கள் பாடங்கேட்ட அளவில் நின்றிருந்தேன்; காவியங்களைப் பாடம் கேட்கும் நிலையை அதுவரையில் அடையவில்லை. ஆதலால் “நமக்கு இப்புராணத்தைப் பிள்ளையவர்கள் பாடம் சொல்வார்களோ” என்று ஐயமுற்றேன்! அன்றியும் அதைக் கேட்பவர்கள் தக்க மதிப்புடையவர்களாகவும் தமிழ்க் கல்வியிலும் பிராயத்திலும் என்னைக் காட்டிலும் முதிர்ச்சி பெற்றவர்களாகவும் உள்ளவர்கள். “இவர்களோடு ஒருவனாக இருந்து பாடம் கேட்பது முடியாது” என்ற எண்ணமே எனக்கு முன் நின்றது.

அந்நிலையில் என் அருமை ஆசிரியர் என்னை அழைத்து, “பெரியபுராணத்தை நீரும் இவர்களுடன் பாடங் கேட்கலாம்” என்று கூறினார்; அப்போது நான் மெய்ம்மறந்தேன். ஆனந்தவாரியில் மூழ்கினேன். சில நேரம் வரையில் ஒன்றும் தெரியாமல் மயங்கினேன்.

ஒரு பெரிய விருந்தில் குழந்தைகளை விலக்கிவிடுவார்களா? அவர்களையும் சேர்த்துக்கொண்டுதானே யாவரும் உண்ணுகிறார்கள்? அப்பெரியபுராண விருந்தில் தமிழ்க் குழந்தையாகிய எனக்கும் இடம் கிடைத்தது.

நாயன்மார்கள் வரலாறு கதையாக இருத்தலினாலும் சேக்கிழார் வாக்கு ஆற்றொழுக்காகச் செல்வதாலும் பெரியபுராணம் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது. என் ஆசிரியர் பாடம் சொல்லும் முறையினால் நான் அதை நன்றாக அனுபவித்துக் கற்று வந்தேன். பாடம் சொல்லி வரும்போது பிள்ளையவர்களிடமுள்ள சிவ பக்தித்திறம் நன்றாகப் புலப்பட்டது. அவர்களுடைய அந்தரங்கமான பக்தியைப் பெரியபுராணத்திலுள்ள செய்யுட்கள் வெளிப்படுத்தின. நான் அதைப் பாடங் கேட்ட காலத்தில் வெறுந்தமிழை மாத்திரம் கற்றுக்கொள்ளவில்லை; என்னுடைய மாதாமகர், தந்தையார் ஆகியவர்களது பழக்கத்தால் என் அகத்தே விதைக்கப்பட்டிருந்த சிவநேசமென்னும் விதை பிள்ளையவர்களுடைய பழக்கமாகிய நீரால் முளைத்து வரத் தொடங்கியது.

ஏட்டிற் கண்ட செய்யுட்கள்

பெரியபுராணப் பாடம் நடந்து வந்தது. ஒருநாள் திருவாவடுதுறையிலிருந்து கண்ணப்பத் தம்பிரானென்பவர் மாயூரத்துக்கு வந்தார். அவர் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் காறுபாறாக இருந்தவர். அவர் வந்த அன்று தற்செயலாகக் கண்ணப்ப நாயனார் புராணப் பாடம் கேட்டோம். கண்ணப்பத் தம்பிரானும் உடனிருந்து கேட்டு இன்புற்றார். கட்டளை மடத்திலே பாடம் நடைபெற்றது.

அன்றைக்கே அப்புராணத்தை முடித்துவிட வேண்டுமென்று சிலர் வற்புறுத்தினமையால் நாங்கள் வேகமாகப் படித்து வந்தோம். என் ஆசிரியரும் சலிப்பின்றிப் பாடஞ் சொல்லி வந்தார். நாங்கள் அக்காலத்திற் கிடைத்த அச்சுப் புத்தகத்தை வைத்துப் படித்து வந்தோம். கண்ணப்ப நாயனார் செயலைக் கண்டு சிவகோசரியார் வருத்தமுற்றதாகச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் மேலே படித்தோம். உடனே பிள்ளையவர்கள், “இங்கே சில செய்யுட்கள் இருக்க வேண்டும். சிவபெருமான் கண்ணப்ப நாயனாரது அன்பின் பெருமையைச் சிவகோசரியாருக்கு வெளியிடுவதாக அமைந்துள்ள பகுதியில் சில அருமையான செய்யுட்களைப் பதிப்பிக்காமல் விட்டுவிட்டார்கள்” என்று சொல்லித் தம் பெட்டியில் இருந்த பெரியபுராண ஏட்டுப் பிரதியை என்னை எடுத்து வரச்செய்து அதனைப் பிரித்துப் பார்த்தார். அவர் கூறியபடியே அங்கே ஐந்து செய்யுட்கள் காணப்பட்டன. அவற்றைப் படிக்கச் செய்து பொருள் கூறினார். நாங்கள் யாவரும் அந்த உயிருள்ள புத்தகசாலையின் ஞாபகசக்தியை அறிந்து வியந்தோம்.

நெய்யில்லா உண்டி

பிற்பகலில் தொடங்கிய கண்ணப்ப நாயனார் புராணம் இரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவேறியது.

அப்பால் மடத்திலேயே ஆகாரம் செய்துகொள்ளும்படி என் ஆசிரியரைத் தம்பிரன் வற்புறுத்திக் கூறினர். அவர் அவ்வாறே இசைந்து அங்கு உணவு உட்கொண்டார். நான் அதற்குள் என் சாப்பாட்டு விடுதிக்குச் சென்று போசனம் செய்துவிட்டு வந்தேன்.

ஆகாரமான பிறகு என் ஆசிரியர் தம்பிரான்களிடம் விடைபெற்றுக்கொண்டு தம் வீடு சென்றார். நானும் அவருடன் சென்றேன். அப்போது அவர், “மடத்தில் ஆகாரம் செய்தமையால் இன்று நெய் கிடைத்தது” என்றார். அந்த வார்த்தை என் உள்ளத்தை வருத்தியது. அவர் சில நாட்களாக நெய் இல்லாமல் உண்டு வந்தார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் கையில் இல்லை. குறிப்பறிந்து யாரேனும் உதவினாலன்றித் தாமாக ஒருவரிடம் இன்னது வேண்டுமென்று சொல்லிப் பெறும் வழக்கம் அவரிடம் பெரும்பாலும் இல்லை. இடைவிடாது பாடஞ் சொல்லி வந்த அவர் நெய் இல்லாமலே உண்டு வருவதை நான் அறிந்தவனாதலால் “இன்று நெய் கிடைத்தது” என்று அவர் கூறும்போது அவர் உள்ளம் எவ்வளவு வெம்பியிருந்ததென்பதை உணர்ந்தேன்.

வறுமையின் கொடுமை எனக்குப் புதிதன்று. அதனால் விளையும் துன்பத்தை அறிவு வந்தது முதலே நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். ஆயினும் பிள்ளையவர்களிடம் அதனை நான் எதிர்பார்க்கவில்லை. “பெரிய கவிஞர். தக்க பிரபுக்களால் நன்கு மதிக்கப்படுபவர். தமிழுலகமுழுதும் கொண்டாடும் புகழ் வாய்ந்தவர். ஒரு பெரிய சைவ ஆதீனத்துச் சார்பிலே இருந்து வருபவர். சில நாள் நெய் இல்லாமல் உண்டார். ஒருவேளை கட்டளை மடத்தில் உண்ட உணவு அவர் நெஞ்சப் புண்ணுக்கு மருந்தாயிற்று” என்ற விசயங்களை அவரோடு நெருங்கிப் பழகினவரன்றி மற்றவர்களால் அறிய முடியாது. அவரும் அந்நிலையை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

அவருடைய வாழ்க்கையே நிலையற்றதாகத்தான் இருந்தது. “இருந்தால் விருந்துணவு; இல்லாவிட்டால் பட்டினி” என்பதே அக்கவிஞர் பிரானுக்கு உலகம் அளித்திருந்த வாழ்க்கை நிலை. எனக்கு அதனை உணர உணர ஆச்சரியமும் வருத்தமும் உண்டாயின.

எண்ணெய் இல்லை’

ஒரு நாள் காலையில் அவர் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணி ஒரு பலகை போட்டுக்கொண்டு அதன் மேல் அமர்ந்தார். ஒரு வேலைக்காரன் அவருக்கு எண்ணெய் தேய்ப்பது வழக்கம். அவன் உள்ளே சென்று தவசிப் பிள்ளையை எண்ணெய் கேட்டான். எண்ணெய் இல்லை.

என் ஆசிரியர் எந்தச் சமயத்திலும் பாடஞ் சொல்லும் வழக்கமுடையவராதலின் எண்ணெய் தேய்த்துக்கொள்ள உட்கார்ந்தபடியே பாடஞ் சொல்லத் தொடங்கினார். நானும் பிறரும் புத்தகத்தோடு அருகில் இருந்தோம். எண்ணெய் வருமென்று அவர் எதிர்பார்த்திருந்தும் பாடஞ் சொல்லும் ஞாபகத்தில் அதை மறந்துவிட்டார்.

நான் அதைக் கவனித்தேன். எண்ணெய் இல்லையென்பதை அறிந்துகொண்டேன். உடனே மெல்ல ஏதோ காரியமாக எழுபவன் போல எழுந்து வேகமாகக் காவிரிக் கரையிலுள்ள கடைக்கு ஓடிப்போய் என்னிடமிருந்த உரூபாயிலிருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டு வந்து சமையற்காரனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் பாடஞ் கேட்பதற்கு வந்து அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்துக் காய்ச்சின எண்ணெய் வந்தது. அவர் தேய்த்துக்கொண்டார்.

இப்படி இடையிடையே நிகழும் சில நிகழ்ச்சிகளால் அவருடைய நிலையை அறிந்தபோது என் மனம் புண்ணாகிவிடும். “புலமையும் வறுமையும் சேர்ந்து இருப்பது இந்நாட்டிற்கு வாய்ந்த சாபம் போலும்!” என்று எண்ணினேன்.

அவர் வாழ்க்கை

பிள்ளையவர்கள் பெரும்பாலும் சஞ்சாரத்திலேயே இருந்தமையால் குடும்பத்தோடு ஒரே இடத்தில் நிலையாக இருக்க முடியவில்லை. அவர் தம் மனைவியையும் குமாரராகிய சிதம்பரம் பிள்ளையையும் திரிசிரபுரத்தில் தம் சொந்த வீட்டிலேயே இருக்கச் செய்திருந்தார். அவ்வப்போது வேண்டிய செலவுக்குப் பணம் அனுப்பி வருவார். மாயூரத்தில் இருந்தபோது அவருடன் இரண்டு தவசிப் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு மாதம் இரண்டு கலம் சம்பளம் திருவாவடுதுறை மடத்திலிருந்து அளிக்கப்பெற்று வந்தது. அவர்களது ஆகாரம் முதலிய மற்றச் செலவுகள் பிள்ளையவர்களைச் சார்ந்தன.

தவசிப் பிள்ளை

அந்த இருவர்களுள் பஞ்சநதம் பிள்ளை என்பவன் ஒருவன். தான் மடத்தினால் நியமிக்கப்பட்டவனென்ற எண்ணத்தினால் அவன் முடுக்காக இருப்பான். “இந்தப் பெரியாருக்குப் பணிவிடை செய்ய வாய்த்தது நம் பாக்கியம்” என்ற எண்ணம் அவனிடம் கடுகளவும் இல்லை. தமிழ் வாசனையை அவன் சிறிதும் அறியாதவன். “ஊரில் இருப்பவர்களையெல்லாம் சேர்த்துக் கூட்டம் போட்டுப் பயனில்லாமல் உழைத்துச் செலவு செய்து வாழ்கிறார்” என்பதுதான் பிள்ளையவர்களைப் பற்றி அவனது எண்ணம். பிள்ளையவர்கள்பால் பாடம் கேட்கும் மாணாக்கர்களிடம் அவனுக்கு வெறுப்பு அதிகம். பிள்ளையவர்கள் தம்மிடம் யாரேனும் மரியாதையாக நடந்து கொள்ளாவிட்டால் அதை அவர் பொருட்படுத்த மாட்டார்; அவனோ மாணாக்கர்களெல்லாம் தன்னிடம் மரியாதை காட்டவேண்டுமென்று விரும்புவான். அவனுக்குக் கோபம் உண்டாக்கிவிட்டால் அதிலிருந்து தப்புவது மிகவும் கடினமாக இருக்கும். அவனுடைய குணங்களை முன்பு நான் அறிந்திலேன்.

நான் படிக்க வந்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் அவனை, “பஞ்சநதம்” என்று அழைத்தேன். அவன் பதில் பேசாமலே போய்விட்டான். நான் அவ்வாறு அழைத்ததைக் கவனித்த என் ஆசிரியர் அவன் இல்லாத சமயம் பார்த்து என்னிடம், “அவனை இனிமேல் பஞ்சநதமென்று கூப்பிட வேண்டாம்; பஞ்சநதம்பிள்ளையென்று அழையும். நீ என்று ஒருமையாகவும் பேச வேண்டாம்; நீர் என்றே சொல்லும்; நீங்கள் என்றால் பின்னும் உத்தமம். அவன் முரடன்; நான் அவன் மனம் கோணாமல் நடந்து காலம் கழித்து வருகிறேன்” என்று கூறினார். மனித இயற்கைகள் எவ்வளவு விசித்திரமாக இருக்கின்றனவென்று அறிந்து அது முதல் நான் சாக்கிரதையாகவே நடந்து வரலானேன்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா
.