Saturday, December 30, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு – தொடர்ச்சி)

என் சரித்திரம் :  அத்தியாயம்-41

‘ஆறுமுக பூபாலர்’

ஆறுமுகத்தா பிள்ளையைப் பார்த்தாலே எனக்கு மிகவும் பயமாக

இருக்கும். பிறருக்கு ஆக வேண்டியவற்றைக் கவனித்தாலும் என்ன

காரணத்தாலோ எல்லோரிடத்தும் அவர் கடுகடுத்த முகத்தோடு பெரும்பாலும்

இருப்பார்; நான் மிகவும் சாக்கிரதையாக நடந்து வந்தும் அவருக்கு என்னிடம்

அன்பு உண்டாகவில்லை. பிள்ளையவர்களிடத்தில் அவர் மிக்க மரியாதையும்

அன்பும் உடையவராக இருந்தார். அக்கவிஞர் பெருமான் என்னிடம்

அதிகமான அன்பு காட்டுவதையும் அவர் அறிவார், அப்படி இருந்தும் அவர்

என்னிடம் இன்முகத்தோடு பேசுவதில்லை. பிள்ளையவர்கள் என்பால்

அன்புடையவராக இருப்பதைக் கூட அவர் அந்தரங்கத்தில் ஒருவேளை

வெறுத்திருக்கலாமோ என்று நான் எண்ணியதுண்டு.

பிள்ளையவர்கள் வைத்திருந்த பேரன்புதான் எல்லாவிதமான

இடையூறுகளையும் பொறுத்துவரும் தைரியத்தை எனக்கு அளித்தது.

நள்ளிரவில் விருந்து

ஆறுமுகத்தா பிள்ளை அனுசரிக்கும் முறைகள் சில மிகவும்

விசித்திரமானவை. மாலையில் அவர் அனுசுட்டானம் செய்த பிறகு கந்த

புராணத்தைப் பாராயணம் செய்வார். பிள்ளையவர்களுக்கு முன் இருந்து

அதைப் படிப்பார். அவர் கேட்டால், பிள்ளையவர்கள் இடையிடையே

கடினமான பதங்களுக்குப் பொருள் சொல்லுவார். அப்படி அவர் படித்ததை

முறைப்படி பாராயணம் செய்ததாகவோ, ஒழுங்காகப் பாடம் கேட்டதாகவோ

எண்ண இடமில்லை. ஆனாலும் அவர் பாராயணம் செய்துவிட்டதாகவும்

பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டு விட்டதாகவும் பலரிடம் சொல்லி

மகிழ்வார். இப்பாராயணம் இராத்திரி ஒன்பது மணி வரையில் நடைபெறும்.

நான் பாடம் கேட்கும்போது அவர் பாராயணம் செய்ய வந்தால் தம்மை

நான் அலட்சியம் செய்வதாக ஒருவேளை எண்ணி விடுவாரோ என்று பயந்து

என் பாடத்தை உடனே நிறுத்திப் புத்தகத்தை மூடி வைப்பேன். அவர்

படிக்கும்போது நானும் கவனித்து வருவேன்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் எல்லாரும் படுத்துக்கொள்வார்கள்;

சாப்பிடாமலே படுத்து உறங்குவார்கள். பன்னிரண்டு மணி அல்லது ஒரு

மணிக்கு ஆறுமுகத்தா பிள்ளை எழுந்து இலை போடச் சொல்லுவார்.

தூங்கினவர்களை எழுப்பி உண்ணச் செய்வார். அயலூர்களிலிருந்து யாரேனும்

வந்து திண்ணையில் தங்கி இருப்பார்கள். அவர்களையும் அழைத்து உணவு

கொள்ளச் சொல்லுவார்.

இந்த அர்த்தராத்திரி விருந்து நடைபெறும் பொழுது நான்

பிள்ளையவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பாடம் கேட்க வேண்டும்.

ஆறுமுகத்தா பிள்ளை இட்ட கட்டளை இது.

ஒன்பது மணிக்கு மேல் எல்லாரும் படுத்துக் கொண்ட பிறகு நான்

சிறிது நேரம் படித்துவிட்டுத் தூங்கிவிடுவேன். அத்தமித்தவுடன்

பிள்ளையவர்கள் அனுசுட்டானம் செய்து மீளும்பொழுதே அக்கிரகாரத்தில் என்

ஆகாரத்தை முடித்துக் கொள்பவன் நான். பாதிராத்திரியில் விழித்துக் கொண்டு

பிள்ளையவர்கள் சாப்பிடும் போது பாடம் கேட்பதால் என்ன பயன்

விளையப்போகிறது? எனக்குத் தூக்கக் கலக்கமாக இருக்கும். என் ஆசிரியர்

உண்ணும் போதே எப்படித் தடை இல்லாமல் பாடம் சொல்ல முடியும்?

ஆதலின் அப்போது நான் கேட்கும் பாடம் என் நன்மையை உத்தேசித்ததாக

இராது. ஆறுமுகத்தா பிள்ளையின் திருப்தியை எண்ணியே நான்

அர்த்தராத்திரியில் பாடம் கேட்டு வந்தேன்.

ஆறுமுகத்தா பிள்ளையின் கோபம்

ஆனாலும் சில தினங்களில் நான் விழித்துக் கொள்ளாமல் தூங்கிப்

போய்விடுவேன். அதனால் பாடம் கேளாமற் போக நேரும். அத்தகைய

சமயங்களில் ஆறுமுகத்தா பிள்ளை சாப்பிட்டவுடன் வந்து என்னை எழுப்பிக்

கண்டிப்பார்; உடனே எழுப்பாவிடினும் மறு நாளாவது கண்டிக்கத்

தவறமாட்டார். “உமக்கு எங்கே படிப்பு வரப் போகிறது? சாப்பிடுவதும்

தூங்குவதுமே உமக்குப் பிரியமான தொழில்கள்; நீர் பெரிய சோம்பேறி.

இராத்திரி எழுந்து பாடம் கேட்பதை விட உமக்கு வேறு வேலை என்ன?”

என்று கோபித்துக் கொள்வார். பிறருடைய கசுட்ட சுகங்களை அறிந்துகொள்ள

முயலாத மனிதர்களிடம் பழகுவதைவிட அவர்களுடைய சம்பந்தமே இராமல்

வாழ்வது நலம். நான் ஆறுமுகத்தா பிள்ளையின் கோபத்தை ஆற்றுவதற்கு

உரிய சக்தியில்லாதவன்; “தெய்வமே!” என்று அவருடைய கோபச் சொற்களைக்

கேட்டு வாய் பேசாமல் நிற்பேன்.

புத்தகம் மறைந்த மாயம்

ஒருநாள் நள்ளிரவில் வழக்கப்படி நான் பாடம் கேட்கத் தவறி

விட்டேன்; எல்லாரும் உண்பதற்கு எழுந்தபோது நான் எழவில்லை.

விடியற்காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு வழக்கம் போல்

பாடம் கேட்க எண்ணி முதல் நாள் இரவு புத்தகம் வைத்த இடத்திலே

போய்ப் பார்த்தேன். அங்கே அது காணப்படவில்லை. நான் மாயூரப்

புராணத்தைக் கேட்டு வந்த காலம் அது. வேறு சில இடங்களில்

அப்புத்தகத்தைப் பார்த்தேன்; காணவில்லை. வேறு எதையாவது

படிக்கலாமென்று எண்ணி என் புத்தகக் கட்டு இருந்த இடத்திற்குச் சென்று

பார்த்தேன்; அந்தக் கட்டும் அங்கே இல்லை. “ஆறுமுகத்தா பிள்ளை செய்த

வேலை இது; அவருடைய கோபம் இன்னும் என்ன என்ன துன்பங்களை

விளைவிக்குமோ!” என்று எண்ணும்போது என் உடல் நடுங்கியது. “இந்த

இடத்தில் வந்து மாட்டிக் கொண்டோமே!” என்று வருந்தினேன்.

வாடிய முகத்துடன் ஆசிரியரிடம் சென்று, “புத்தகங்களைக்

காணவில்லை” என்று சொன்னேன். அவர் அங்கிருந்த வேலைக்காரர்களிடம்

சொல்லித் தேடச் செய்தனர். அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. “இந்த

விடயத்தைத் தம்பியிடம் சொல்லலாமே” என்றார்.

ஆறுமுகத்தா பிள்ளை அப்பொழுது தூக்கத்தினின்றும் எழவில்லை.

அவர் எப்பொழுதும் எட்டு மணி வரையில் தூங்குவார். எட்டு மணியளவில்

கண்ணை மூடியபடியே எழுந்து படுக்கையில் உட்கார்ந்திருப்பார்; “துரைசாமி”

என்று தம் பிள்ளையைக் கூப்பிடுவார். அச்சிறுவன் அவர்முன் வந்து நின்று

“ஏன்?” என்பான். அவர் அவன் முகத்தில் விழிப்பார். பிறகுதான் எழுந்து

வெளியே வருவார், தம் குமாரன் முகத்தில் விழிப்பதால் நாள் முழுவதும்

சந்தோசமாகச் செல்லும் என்பது அவர் எண்ணம். மனிதனுடைய வாழ் நாளில்

சந்தோசம் இவ்வளவு சுலபமாகக் கிடைப்பதாக இருந்தால் உலகத்தில்

எல்லோரும் இம்மார்க்கத்தைக் கைக்கொள்ளலாமே!

ஆறுமுகத்தா பிள்ளை தினந்தவறாமல் காலையில் துரைசாமியின்

முகத்தில் தான் விழித்து வந்தார். ஆனால், அவர் வாழ்வில் அதிக இன்பம்

ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Saturday, December 23, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 66 : பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் – தொடர்ச்சி)

என் சரித்திரம்
ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு

ஆறுமுகத்தாபிள்ளை நல்ல உபகாரி; தம் செல்வத்தை இன்ன வழியில் பயன்படுத்த வேண்டுமென்ற வரையறையில்லாதவர். அந்த ஊரில் தம்மை ஒரு சிற்றரசராக எண்ணி அதிகாரம் செலுத்தி வந்தார். யார் வந்தாலும் உணவளிப்பதில் சலிக்கமாட்டார். பிள்ளையவர்கள் அவர் வீட்டில் தங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேட தினமாகவே இருக்கும். கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் சிலர் வந்தவண்ணம் இருப்பார்கள். வெளியூர்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக இருப்பவர்கள் சனி, ஞாயிறுகளில் வந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டு செல்வார்கள். இவ்வாறு வருபவர்கள் யாவரும் ஆறுமுகத்தாபிள்ளை வீட்டிலேயே உணவுகொள்வார்கள். தம்முடைய பெருமையை யாவரும் உணர வேண்டுமென்பதற்காகவே விசேடமான விருந்துணவை அளிப்பார். திருவாவடுதுறை மடத்தில் நன்கு பழகினவராதலின் உணவு வகைகளிலும் விருந்தினரை உபசரிப்பதிலும் அங்கேயுள்ள சில அமைப்புக்களைத் தம் வீட்டிலும் அமைத்துக்காட்ட வேண்டுமென்பது அவரது விருப்பம்.

பிள்ளையவர்களிடத்திலேதான் ஆறுமுகத்தா பிள்ளை பணிவாக நடந்துகொள்வார். மற்றவர்களை அவர் மதிக்க மாட்டார். யாவரும் அவருடைய விருப்பத்தின்படியே நடக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு மிக்க கோபம் வந்துவிடும்; அந்தக்கோபத்தால் அவர் சில ஏழை சனங்களைக் கடுமையாகவும் தண்டிப்பார்.

நாகைப் புராணம்

நான் கையில் கொண்டுபோயிருந்த பிரபந்தங்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சில தினங்களில் பாடங் கேட்டு முடித்தேன். மேலே பாடம் கேட்பதற்கு என்னிடம் வேறு புத்தகம் ஒன்றும் இல்லை. இந்த விசயத்தை ஆசிரியரிடம் தெரிவித்தேன்.

“தம்பியிடம் புத்தகங்கள் இருக்கின்றன. ஏதாவது வாங்கிப் படிக்கலாம். முதலில் திருநாகைக் காரோணப் புராணம் படியும்” என்று அவர் கூறி அந்நூலை ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து வாங்கி அளித்தார். அதுகாறும் பிள்ளையவர்கள் இயற்றிய புராணம் ஒன்றையும் நான் பாடங் கேளாதவனாதலால் அப்புராணத்தைக் கேட்பதில் எனக்கும் ஆவல் இருந்தது. அரியிலூரில் சடகோபையங்கார் வீட்டில் அந்தப் புத்தகத்தைப் பார்த்து வியந்ததும் பிள்ளையவர்களிடம் வந்தபோது அந்நூலிற் சில பாடல்களுக்கு அவர் உரை கூறியதும் என் மனத்தில் இருந்தன. சில வாரங்கள் தொடர்ந்து கேட்டு வரலாம் என்ற நினைவும் அந்த நூலினிடத்தில் எனக்கு விருப்பம் உண்டானதற்கு ஒரு காரணம்.

அப்புராணம் பாடம் கேட்கத் தொடங்கினேன். விடியற்காலையிலேயே பாடம் ஆரம்பமாகிவிடும். எட்டு மணிவரையில் பாடம் கேட்பேன். பிறகு அக்கிரகாரம் சென்று பழையது சாப்பிட்டு வருவேன். வந்து மீட்டும் பாடங் கேட்கத் தொடங்குவேன். பத்து அல்லது பதினொரு மணிவரையில் பாடம் நடைபெறும். மத்தியான்னம் போசனத்திற்குப் பின் பிள்ளையவர்கள் சிரமபரிகாரம் செய்துகொள்வார். அவர் எழுந்தவுடன் மறுபடியும் பாடங் கேட்பேன். அநேகமாகப் பிற்பகல் நேரங்களில் வெளியூரிலிருந்து வருபவர்கள் அவரோடு பேசிக்கொண்டு இருப்பார்கள். மாலையில் திருமலைராயனாற்றிற்குச் சென்று திரும்பிவரும்போது அக்கிரகாரத்தின் வழியே வருவோம். நான் ஆகாரம் செய்துகொள்ளும் வீட்டுக்குள் சென்று உணவு கொள்வேன். நான் வரும் வரையில் அவ்வீட்டுத் திண்ணையிலே ஆசிரியர் இருப்பார்; அங்கே இருட்டில் அவர் தனியே உட்கார்ந்திருப்பார். வீட்டுக்காரர் சில சமயம் விளக்கைக்கொணர்ந்து அங்கே வைப்பார். நான் விரைவில் ஆகாரத்தை முடித்துக்கொண்டு வருவேன். ஆசிரியர் என்னை அழைத்துக்கொண்டு ஆறுமுகத்தா பிள்ளை வீட்டுக்குச் செல்வார். உடனே பாடம் நடைபெறும்.

இவ்வாறு இடைவிடாமல் பாடங் கேட்டு வந்தமையால் பட்டீச்சுரத்தில் இருந்தபோது நான் கேட்ட செய்யுட்கள் பல. நாகைப் புராணத்தில் முதலில் தினந்தோறும் ஐம்பது செய்யுட்கள் கேட்பேன்; இரண்டு வாரங்களுக்குப்பின் நூறுபாடல்கள் முதல் இருநூறு பாடல்கள் வரையில் கேட்கலானேன். பாடங் கேட்பதில் எனக்கு ஆவல்; பாடஞ் சொல்லுவதில் அவருக்கு நிறைவு. ஆதலின் தடையில்லாமலே பாடம் வேகமாக நடைபெற்றது. இந்த வேகத்தில் பல செய்யுட்களின் பொருள் என் மனத்தில் நன்றாகப் பதியவில்லை. இதனை ஆசிரியர் அறிந்து, “இவ்வளவு வேகமாகப் படிக்கவேண்டா. இனிமேல் ஒவ்வொரு செய்யுளுக்கும் சுருக்கம் சொல்லும்” என்றார். நான் அங்ஙனமே சொல்லலானேன். அப்பழக்கம் பலவித அனுகூலங்களை எனக்கு உண்டாக்கியது. செய்யுட் பொருளைத் தெளிவாக நான் அறிந்துகொண்டதோடு ஒரு கருத்தைப் பிழையின்றித் தக்கசொற்களை அமைத்துச் சொல்லும் பழக்கத்தையும் அடைந்தேன்.

அங்கங்கே அவர் பல தமிழிலக்கண, இலக்கியச் செய்திகளைச் சொல்லுவார்; காப்பியச் செய்திகளையும் எடுத்துக்காட்டுவார்.

அப்புராணம் முற்றுப் பெற்றது; எனக்குப் பூரணமான நிறைவு உண்டாகாமையால் இரண்டாவது முறையும் கேட்க விரும்பினேன். ஆசிரியர் அவ்வாறே மறுமுறையும் அதைப் பாடஞ் சொன்னார். முதன்முறை அறிந்துகொள்ளாத பல விசயங்கள் அப்போது எனக்கு விளங்கின.

மாயூரப் புராணம் ஆரம்பம்

நாகைப் புராணம் முடிந்தவுடன் அவர் மாயூரப் புராணத்தைப் பாடங் கேட்கலாமென்று சொன்னார். அதுவும் அவர் இயற்றியதே அப்புராணத்தில் 1894 செய்யுட்கள் இருக்கின்றன. திருநாகைக் காரோணப் புராணமும் மாயூரத்தல புராணமும் பிள்ளையவர்களாலேயே சென்னையிலிருந்த அவர் மாணாக்கராகிய சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார் என்பவரின் உதவியால் அச்சிடப்பெற்றவை. நாகைப் புராணம் அக்காலத்தில் பிரசித்தமாக இருந்தது. பலர் அப்புராணத்தை அடிக்கடி பாராட்டுவார்கள். பிள்ளையவர்கள் இயற்றிய புராணங்களுள் சிறந்தது நாகைப் புராணமென்று அவருடைய மாணாக்கர்களும் பிறரும் சொல்லுவார்கள். அத்தகைய புராணத்தை நான் இரண்டு முறை பாடங் கேட்டதில் எனக்கு மிக்க நிறைவு உண்டாயிற்று. தமிழ் நூற் பரப்பை நன்கு உணராமல் இருந்த நான் அப்புராணத்திற் காணப்பட்ட விசயங்களை அறியுந்தோறும் அளவற்ற இன்பத்தை அடைந்தேன்.

பிள்ளையவர்கள் புராணங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையிடமிருந்து மாயூரப் புராணப்பிரதி ஒன்றை வாங்கி என்னிடம் கொடுத்து அதைப் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். அப்போது எனக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. “பட்டீச்சுரத்திற்கு நல்ல வேளையில் வந்தோம். வேகமாகப் பாடம் கேட்கிறோம். நல்ல காவியங்களைக் கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது” என்று எண்ணி மன மகிழ்ந்தேன். “இந்த சந்தோசம் நிரந்தரமானதன்று; பட்டீச்சுரத்திற்கு வந்தவேளை பொல்லாதவேளையென்று கருதும் சமயமும் வரலாம்” என்பதை நான் அப்போது நினைக்கவில்லை.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Saturday, December 16, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 66 : பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 65 : நல்லுரை – தொடர்ச்சி)

என் சரித்திரம்
40 பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்

ஒரு புலவருடைய பெருமையை ஆயிரக்கணக்கான பாடல்களால் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உண்மைக் கவித்துவம் என்பது ஒரு பாட்டிலும் பிரகாசிக்கும்; ஓர் அடியிலும் புலப்படும். பதினாயிரக்கணக்காக இரசமில்லாத பாடல்களை இயற்றிக் குவிப்பதைவிடச் சில பாடல் செய்தாலும் பிழையில்லாமல் சுவை நிரம்பியனவாகச் செய்வதே மேலானது.

“சத்திமுற்றப் புலவர் என்பவரைப் பற்றித் தமிழ் படித்தவர்களிற் பெரும்பாலோர் அறிவார்கள். அப்புலவர் இயற்றிய அகவல் ஒன்று அவரது புகழுக்கு முக்கியமான காரணம். ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்று தொடங்கும் பாட்டு ஒன்றே அவரிடத்தில் இயல்பாக உள்ள கவித்துவத்தைத் தெளிவாக வெளியிடுகிறது. பனங்கிழங்கு பிளந்தாற் போன்ற கூரிய வாயையுடைய நாரையே என்று நாரையை அவர் அழைக்கிறார். இந்த உவமை பாண்டிய மன்னனது உள்ளத்தைக் கவர்ந்ததாம். ஆடையின்றி வாடையினால் மெலிந்து கையினால் உடம்பைப் பொத்திக்கொண்டு கிடக்கும் தம் நிலையை அந்த வித்துவான் எவ்வளவு அழகாக வருணித்திருக்கிறார். தாம் படுகின்ற தன்பம் அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தம் மனைவி தமது வீட்டிற்படும் துன்பங்களை நினைந்து வாடுகிறார். அந்த அருமையான பாடலை இயற்றினவர் இந்த ஊரிலேதான் வாழ்ந்து வந்தார்” என்று என் ஆசிரியர் பட்டீச்சுரத்தை அடைந்தவுடன் கூறினார்.

சத்திமுற்றம்

“இது பட்டீச்சுரமல்லவோ?” என்று நான் கேட்டேன்.

“ஆம்; அதோ தெரிகிறதே அதுதான் சத்திமுற்றம் கோயில்; பட்டீச்சுரமும் சத்திமுற்றமும் நெருங்கியிருக்கின்றன. பட்டீச்சுரத்தின் வடக்கு வீதியே சத்திமுற்றத்தின் தெற்கு வீதியாக இருக்கிறது.”

“அந்தப் புலவருடைய பரம்பரையினர் இப்போது இருக்கிறார்களா?”

“இருக்கிறார்கள். ஒருவர் தமிழறிவுள்ளவராக இருக்கிறார். அவரை நீரும் பார்க்கலாம்.”

பிள்ளையவர்கள் எந்த இடத்திற்குப் போனாலும் அந்த இடத்தைப்பற்றிய சரித்திரச் செய்திகளையும் தலமானால் அதன் சம்பந்தமான புராண வரலாறுகளையும் உடனிருப்பவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். தல வரலாறுகளைத் தெரிந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது தாம் இயற்றும் நூல்களில் அமைத்துக்கொள்ளும் இயல்புடைய அவர் தமிழ்நாட்டு தலங்களைப் பற்றிய பல விசயங்களைத் தெரிந்திருந்தார்.

அரண்மனைச் சுவர்

பட்டீச்சுரத்தில் நாங்கள் புகுவதற்கு முன், ஓரிடத்தில் மிகவும் உயரமாக இடிந்த கட்டிடம் ஒன்றைக் கண்டோம்; இரண்டு சுவர்கள் கூடிய மூலையாக அது தோற்றியது; அதன் உயரம் ஒரு பனைமரத்தின் அளவுக்குமேல் இருந்தது. பின்பு கவனித்ததில் பல படைகளையுடைய மதிலின் சிதைந்த பகுதியாக இருக்கலாமென்று எண்ணினோம்.

“இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கட்டடம் இருத்தற்குக் காரணம் என்ன?” என்று அதைப்பற்றி என் ஆசிரியரைக் கேட்டேன்.

“பட்டீச்சுரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஒன்றாகிய சோழன் மாளிகை என்பது இது. இந்த இடத்திலே சோழ அரசர்களுக்குரிய அரண்மனை முன்பு இருந்தது என்றும், இந்த இடிந்த கட்டடம் அரண்மனைச் சுவர் என்றும் இங்குள்ளவர்கள் சொல்வதுண்டு.”

பழையாறை

பட்டீச்சுரத்தைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் பழைய சரித்திரத்தை விளக்கும் சின்னங்கள் நிரம்பியிருக்கின்றன. நான் பட்டீச்சுரத்தில் தங்கியிருந்த காலங்களில் தெரிந்துகொண்ட செய்திகளையன்றி அப்பால் இலக்கியங்களாலும் கேள்வியாலும் சிலாசாசனங்களாலும் தெரிந்துகொண்ட விசயங்கள் பல. சோழ அரசர்கள் தமக்குரிய இராசதானியாகக்கொண்டிருந்த பழையாறை என்னும் நகரத்தின் பல பகுதிகளே இப்போது தனித்தனி ஊர்களாக உள்ளன. அந்தப் பழைய நகரத்தைச் சேக்கிழார் தம் பெரியபுராணத்தில், “பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை” என்று பாராட்டுகிறார். இப்போது பட்டீச்சுரத்திற்கு அருகிலே கீழைப்பழையாறை என்னும் ஓர் ஊர்தான் அப்பழம் பெயரைக் காப்பாற்றி வருகிறது. சரித்திர விசேசங்களால் பெருமைபெற்ற அவ்விடங்கள் பிறகு தல விசேசங்களால் சனங்களுடைய அன்புக்கு உரியனவாக இருந்தன. இப்போது அந்த மதிப்பும் குறைந்துவிட்டது.

நாங்கள் பட்டீச்சுரத்தில் ஆறுமுகத்தா பிள்ளையின் வீட்டில் தங்கினோம். அவர் அந்த ஊரில் ஒரு சமீன்தாரைப்போலவே வாழ்ந்து வந்தார். பிள்ளையவர்களை அவர் மிக்க அன்போடு உபசாரம் செய்து பாதுகாத்துவந்தார். அக்கிரகாரத்தில் அப்பாத்துரை ஐயர் என்பவர் வீட்டில் நான் ஆகாரம் செய்துகொள்ளும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

விலகிய நந்தி

பட்டீச்சுரம் சென்ற முதல்நாள் மாலையில் பிள்ளையவர்கள் வெளியே உலாத்திவரப் புறப்பட்டார். நான் உடன் சென்றேன். அவ்வூருக்கு அருகிலுள்ள திருமலைராயனாற்றிற்கு அழைத்துச் சென்றார். போகும்போது பட்டீச்சுர ஆலயத்தின் வழியே சென்றோம். அவ்வாலயத்தில் நந்திதேவர் சந்நிதியைவிட்டு மிக விலகியிருப்பதைக் கண்டேன். நந்தனார் சரித்திரத்தைப் படித்து ஊறிய எனக்கு அவர் சிவபெருமானைத் தரிசிக்கும் பொருட்டுத் திருப்புன்கூரில் நந்தி விலகினாரென்ற செய்தி நினைவுக்கு வந்தது. “இங்கே எந்த அன்பருக்காக விலகினாரோ!” என்று எண்ணியபோது என் சந்தேகத்தை என் முகக் குறிப்பினால் உணர்ந்த ஆசிரியர்’ “திருச்சத்திமுற்றத்திலிருந்து திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவபெருமான் அருளிய முத்துப்பந்தரின் கீழே இவ்வழியாகத் தரிசனத்துக்கு எழுந்தருளினார். அவர் முத்துப்பந்தரின் கீழேவரும் கோலத்தைத் தாம் பார்த்து மகிழ்வதற்காக இக்கோயிலில் எழுந்தருளியுள்ள தேனுபுரீசுவரர் நந்தியை விலகும்படி கட்டளையிட்டனராம். அதனால்தான் விலகியிருக்கிறார்” என்றார்.

மேலைப் பழையாறை

அப்பால் திருமலைராயனாற்றிற்கு நாங்கள் சென்று அனுட்டானங்களை முடித்துக்கொண்டு மீண்டோம். அந்த ஆற்றிற்குத் தெற்கே மேலைப்பழையாறை என்னும் ஊர் இருக்கிறது. அதன் பெரும் பகுதி ஆறுமுகத்தா பிள்ளைக்குச் சொந்தமாக இருந்தது. இயற்கை வளங்கள் நிறைந்த அவ்வூரில் தென்னை, மா, பலா, கமுகு முதலிய மரங்கள் அடர்ந்த ஒரு தோட்டத்தின் நடுவில் ஆறுமுகத்தா பிள்ளை அழகிய கட்டடம் ஒன்றைக் கட்டியிருந்தார். வெயில் வேளைகளில் அங்கே சென்று தங்கினால் வெயிலின் வெம்மை சிறிதேனும் தெரியாது. பிள்ளையவர்கள் அடிக்கடி அவ்விடத்திற்சென்று தங்கிப் பாடஞ் சொல்லுவதனால் பிற்பகலில் ஆறுமுகத்தாபிள்ளை நல்ல பழங்களையும் நீரையும் கொணர்ந்து அளிப்பார். அங்கே மிகவும் இனிமையாகப் பொழுதுபோகும்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Monday, December 11, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 65 : நல்லுரை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை – தொடர்ச்சி)

நல்லுரை

சில மாதங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியிலிருந்து சதாசிவம் பிள்ளை வந்தான். இந்தத் துறைசையந்தாதியை அவன் எடுத்துவந்து பாடஞ் சொல்லும்படி தொந்தரவு செய்தான். நான் படித்துப் பார்த்தேன்; ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஐயா அவர்களிடத்திலேயே போய்க் கேட்டுக்கொள்’ என்று அனுப்பிவிட்டேன். அங்கே தங்களிடம் வந்திருப்பானே?”

“வரவில்லை”

“அவனைப்போல இன்னும் யாராவது வந்து அருத்தம் சொல்லவேண்டுமென்று உபத்திரவம்பண்ணினால் இவரிடம் தள்ளிவிடலாமே என்ற எண்ணத்தினாலேதான் இந்தக் கேள்வி கேட்டேன்.”

‘ஆற்றிலே போட்டுவிடுங்கள்’

அப்போது ஆறுமுகத்தா பிள்ளை செட்டியாரை நோக்கி, “நீங்கள், ஐயா முன்பு செய்த நூல்களெல்லாம் கேட்டிருக்கிறீர்களோ? ஐயா, இளமைக்காலத்தில் பட்டீச்சுரத்திற்கு ஒரு பதிற்றுப் பத்தந்தாதி செய்திருக்கிறார்கள். அதைப் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“என்ன? பட்டீச்சுரத்துக்கு அந்தாதியா? நான் படித்ததில்லையே! எங்கே உங்களுக்கு ஞாபகம் இருந்தால் ஒரு பாடல் சொல்லுங்கள், பார்ப்போம்” என்றார் செட்டியார்.

ஆறுமுகத்தாபிள்ளை உடனே அந்நூலிலிருந்து ஒரு செய்யுளைச் சொன்னார் அதைச் செட்டியார் கேட்டார்; கேட்டபின் ஆறுமுகத்தா பிள்ளையையும் ஆசிரியரையும் ஏற இறங்கப் பார்த்தார்; “இந்தப் பாட்டு பிள்ளையவர்கள் செய்ததென்று எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

“ஏன் தெரியாது? எங்கள் ஊர்ப் பிரபந்தத்தைப் பற்றி எனக்குத் தெரியாதா? எங்கள் தகப்பனார் காலத்தில் ஐயா இயற்றியது இது.”

“இப்புத்தகம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் யாருக்கும் சொல்லாமல் கிழித்து ஆற்றிலே போட்டுவிடுங்கள். நீங்களும் அப்பாடல்களை மறந்து விடுங்கள்; ஐயா இப்படி ஒரு நூல் இயற்றியதாக யாரிடத்திலும் இனிமேற் பிரத்தாபம் செய்யவேண்டா”

“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?”

“ஏனா? இப்போது ஐயா செய்கிற பாடல்களைக் கேட்டவர்களிடம் இப்பாடல்களைப் பற்றிச் சொன்னால் நம்பவே மாட்டார்கள். உங்களுக்குப் பைத்தியக்காரப் பட்டம் கட்டிவிடுவார்கள். இப்போதெல்லாம் ஐயா செய்யும் பாடல்கள் எவ்வளவு ‘தங்கந் தங்கமாக’ இருக்கின்றன! பூசை வேளையிற் கரடியைவிட்டு ஓட்டினாற்போல நல்ல நல்ல பாடல்களைப்பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் இப்பாட்டைச் சொல்ல வந்துவிட்டீர்களே!”

ஆறுமுகத்தா பிள்ளை சொன்ன செய்யுள் நன்றாகவே இருந்தது.

வரைமா திருக்கு மொருகூறும்
மழுமா னணிந்த திருக்கரமும்
அரைசேர் வேங்கை யதளுடையும்
அரவா பரணத் தகன்மார்பும்
விரைசேர் கொன்றை முடியுமறை
மேவு மடியும் வெளித்தோற்றி
நரைசேர் விடையான் றிருப்பழைசை
நகரி லருளப் பெற்றேனே”

என்பதே அச்செய்யுள். அதில் யமகம் இல்லை; திரிபு இல்லை; அரிய சைவ சித்தாந்த சாத்திரக் கருத்தும் இல்லை. ஆனாலும் எளிய நடையும் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் பொருளும் உள்ளன. செட்டியார் அதைக் குறைகூறியது எனக்கு அப்பொழுது பொருத்தமாகத் தோற்றவில்லை. அதோடு அவர் முன்னுக்குப்பின் முரண்பாடாகவே பேசுபவரென்றுகூட நினைத்தேன். துறைசை யமக அந்தாதி முதலியவற்றிற்கு எளிதில் பொருள் விளங்கவில்லை என்று அவர் முதலில் கூறினார். எளிதில் பொருள் விளங்கும் இந்தப் பாடலில் அழகில்லை என்றார்.

ஆறுமுகத்தா பிள்ளைக்குப் பாடல்களின் உயர்வு தாழ்வைப் பற்றிய கவலை உண்டாகவில்லை. தங்கள் ஊர் விசயமாகப் பிள்ளையவர்கள் செய்த நூலை, அவர் அருமையாகப் பாராட்டுபவர். அதைச் செட்டியார் குறைகூறியபொழுது அவருக்குச் சிறிது வருத்தமுண்டாயிற்று.

“ஐயாவையே கேட்டுப் பாருங்கள். இந்த அந்தாதி அவர்கள் பாடியதுதான் என்று தெரியவரும். ஐயா அவர்கள் வாக்கை நீங்கள் தூசிப்பது நன்றாக இல்லை” என்று ஆறுமுகத்தா பிள்ளை செட்டியாரிடம் சொன்னார்.

“ஐயாவைத்தான் கேட்கலாமே” என்று சொல்லிக்கொண்டே செட்டியார் ஆசிரியரைப் பார்த்து, “இவர் ஏதோ சொல்கிறாரே; இது நிசந்தானா? இந்த மாதியும் நீங்கள் ஒரு நூல் இயற்றியதுண்டா? இவருக்காகச் சொல்லவேண்டா. ஞாபகப்படுத்திக்கொண்டு சொல்லுங்கள். இத்தகைய நூலை நீங்கள் எதற்காகச் செய்தீர்கள்?” என்பன போன்ற கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.

எல்லாவற்றையும் மிக்க பொறுமையுடனே கேட்டுக்கொண்டிருந்த பிள்ளையவர்கள், “என்னப்பா தியாகராசு, மேலே மேலே ஓடுகிறாயே; இந்த மாதிரியான பிரபந்தத்தை நான் செய்திருக்கக் கூடாதா? இதிலே ஏதாவது பிழை இருக்கிறதா? எளிய நடையில் பாடல் செய்வது தவறா? சாதாரண சனங்களும் படித்துப் பொருளறியும்படி இருந்தால் நல்லதுதானே? கடினமாக இருந்தால் கடினமல்லவா?” என்று கூறினர்.

கேட்ட செட்டியார், “அப்பாடியானல் சரி; உங்களுக்கு இதனால் அகௌரவம் வரக்கூடாதென்பதுதான் என் விருப்பம். சரி; நேரமாகிவிட்டது; புறப்படலாமே” என்றார்.

செட்டியார் இவ்வளவு சகசமாகப் பிள்ளையவர்களிடம் பேசுவாரென்று நான் நினைக்கவில்லை. அவர் தம் அன்பினாலும் பணிவினாலும் மாணாக்கராகப் புலப்படுத்திக்கொண்டார். பேச்சிலோ மனமொத்துப் பழகும் நண்பரைப் போலவே பேசினார். தம் மனத்திலுள்ள அபிப்பிராயங்களை ஒளிவுமறைவின்றி மரியாதைக்குப் பயந்து மனத்துக்குள்ளே வைத்துக்கொண்டு பொருமாமல் வெளியிட்டார். இவ்வளவு வெளிப்படையாகத் தம் அபிப்பிராயங்களை அவர் சொல்லுவதை முதல் முதலாகக் கேட்பவர்கள், ‘அவர் மரியாதை தெரியாதவர், முரடர், அகங்காரி’ என்றே எண்ணக்கூடும். அவருடைய அந்தரங்க இயல்பை அறிந்துகொண்டவர்களுக்கு அவர் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுபவரல்லரென்பதும் தமக்குத் தோற்றிய அபிப்பிராயங்களைத் தோற்றியபடியே தெளிவான வார்த்தைகளிலே சொல்லிவிடுபவரென்பதும் தெரியவரும்.

நல்லுரை

செட்டியார் எழுந்தார். நாங்களும் எழுந்தோம். “ஐயாவிடம் நீர் நன்றாகப் பாடங் கேட்டுக்கொள்ளும். இவர்களுடன் இருப்பதையே ஒரு கௌரவமாக எண்ணிக்கொண்டு சோம்பேறியாக இருந்துவிட வேண்டா. கொஞ்சகாலம் இருந்துவிட்டு எல்லாம் தெரிந்துவிட்டதாக எண்ணி ஓடிப்போய்விடவும் கூடாது. இம்மாதிரி பாடஞ் சொல்பவர்கள் வேறு எங்கும் பார்க்க முடியாது. உம்முடைய நன்மையை உத்தேசித்துச் சொல்லுகிறேன்” என்று செட்டியார் என்னைப் பார்த்துச் சொன்னார். அவ்வார்த்தைகள் எனக்குச் சிறந்த ‘நல்லுரை’களாக இருந்தன. மற்றவர்களெல்லாம் பிள்ளையவர்கள் பெருமையையும் என் பாக்கியத்தையும் பாராட்டிப் பேசுவதையே கேட்டிருந்தேன். செட்டியாரோ நான் இன்னவாறு இருக்க வேண்டுமென்பதைச் சொன்னார். அவர் என்னைப் பாராட்டவில்லை; அதனால் என்ன? என் வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளும் வழியைச் சொன்னார். அவர் கூறிய அனுபவ சாரமான வார்த்தைகள் எனக்கு அமிர்தம்போல இருந்தன.

செட்டியாரும் அவருடன் வந்தவர்களும் விடைபெற்றுச் சென்றனர். நாங்கள் வண்டியில் ஏறிவந்து பட்டீச்சுரத்தை அடைந்தோம்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.

Saturday, December 02, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 63 : நான் கொடுத்த வரம் 2 -தொடர்ச்சி)

யான் பெற்ற நல்லுரை 39

மறுநாள் காலையில் நாங்கள் திருவிடைமருதூரைவிட்டுப் புறப்பட்டோம். பட்டீச்சுரத்திற்குக் கும்பகோணத்தின் வழியாகவே போகவேண்டும். கும்பகோணத்தில் வித்துவான் தியாகராச செட்டியாரைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டுமென்பது பிள்ளையவர்களின் கருத்து.

தியாகராச செட்டியார்

தியாகராச செட்டியாருடைய பெருமையை நான் பல நாட்களுக்கு முன்பிருந்தே கேள்வியுற்றவன். கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த அவர் சிறந்த படிப்பாளி என்றும் அவரிடம் படித்த மாணாக்கர்கள் எல்லாரும் சிறந்த தமிழறிவுடையவர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். கல்லூரியில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு எவ்வளவு கௌரவம் இருந்ததோ அவ்வளவு கௌரவம் அவருக்கு உண்டு. பிள்ளையவர்களிடம் படிக்க வந்த பிறகு செட்டியாரைப் பற்றிய பேச்சு இடையிடையே நிகழும். அவர்களோடு பழகுபவர்களும் செட்டியாரது அறிவுவன்மையைப் பாராட்டிப் பேசுவதை நான் பலமுறை கேட்டிருப்பதுண்டு. ஆதலால், செட்டியாரைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று என் ஆசிரியர் எண்ணியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. இடைவழியில், நான் அவரிடம் படிக்கச் செல்வதாக முன்பு எண்ணியிருந்தேனென்பதையும் அவரைப் பார்க்கும் விருப்பம் எனக்கு அதிகமாக உண்டு என்பதையும் பிள்ளையவர்களிடம் தெரிவித்தேன்.

கும்பகோணம் வந்ததும் நேரே செட்டியார் வீட்டிற்கு வண்டி சென்றது. செட்டியார் சக்கரபாணிப் பெருமாள் கோயிலின் தெற்கு வீதியிலுள்ள ஒரு வீட்டில் குடியிருந்தார். நாங்கள் போனபோது அவர் வீட்டில் இல்லை. ஆதலின் அவ்வீட்டுத் திண்ணையில் நாங்கள் இருந்தோம்.

எங்கள் வரவை அறிந்த செட்டியாருடைய மாணாக்கர் ஒருவர், விரைவில், வெளியே சென்று அவரை அழைத்து வந்தார். அவர், “ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்? உள்ளேபோய் இருக்கக் கூடாதா? சாமான்களை எல்லாம் இறக்கி உள்ளே வைக்கச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார். வந்தவுடன் பிள்ளையவர்களை அவர் சாசுடாங்கமாக நமசுகாரம் செய்தார்.

அவர் தோற்றம்

அவரைப் பார்த்தேன். பளபளவென்றிருந்தது அவர் தேகம். நல்ல சிவப்பு; அதிக உயரமும் இல்லை; குட்டையும் இல்லை. நல்ல பலம்பொருந்திய தேகக்கட்டு. அவர் நடையில் கம்பீரமும் பார்வையில் தைரியமும் பேச்சில் துணிவும் புலப்பட்டன. அவர் இடையில் தோய்த்துலர்ந்த ஒரு துண்டை உடுத்திருந்தார். யாரையும் அவர் இலட்சியம்செய்ய மாட்டாரென்றும் மிக்க கண்டவாதியென்றும் முன்பு நான் கேள்வியுற்றிருந்தேன்; அதற்கு ஏற்றபடியே அவர் நடையும் பேச்சும் இருந்தன. அவர் பிள்ளையவர்கள் முன் பணிந்து எழுந்தபோது, அவ்வளவு தைரியத்திலும் அலட்சியத்திலும் இடையே அப்பணிவு நன்றாக வெளிப்பட்டது. செட்டியார் எங்களுடன் வந்திருந்த பஞ்சநதம் பிள்ளையைப் பார்த்து, “சீக்கிரம் சமையலுக்கு ஏற்பாடு செய்யும்” என்று சொன்னார். அப்போது பிள்ளையவர்கள் இடைமறித்து, “நாங்கள் ஆகாரத்திற்குப் பட்டீச்சுரம் போவதாக எண்ணியிருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு என்னைச் சுட்டிக்காட்டி, “இவர் காலையில் ஏதேனும் சாப்பிடுவது வழக்கம். இவருக்கு எங்கேனும் ஆகாரம்பண்ணுவித்தாற் போதும்” என்றார். செட்டியார் உடனே என்னைத் தமக்குத் தெரிந்த இராகவாசாரியார் என்பவர் வீட்டிற்கு அனுப்பி ஆகாரம் செய்யச் சொன்னார். நான் ஆகாரம் செய்து வந்தவுடன் செட்டியார், “இவர் யார்?” என்று பிள்ளையவர்களைக் கேட்டார். தம்மிடம் நான் சில காலமாகப் பாடம் கேட்டு வருவதை அவர் சொன்னார்.

அன்று அமாவாசையாதலால் விரைவில் பட்டீச்சுரம் போய்ப் பூசை முதலியன செய்ய எண்ணிய என் ஆசிரியர் உடனே புறப்படத் தொடங்கினார். அப்போது செட்டியார் பெரிய தாம்பாளமொன்றில் இரண்டு சீப்பு வாழைப்பழத்தையும் சீனாக் கற்கண்டுப் பொட்டலத்தையும் எடுத்து வந்து ஆசிரியர் முன்பு வைத்தார். ஆசிரியர் பழங்கள் சிலவற்றையும் சிறிதளவு கற்கண்டையும் எடுத்துக்கொண்டார். உடனிருந்த நாங்களும் எடுத்துக்கொண்டோம். எங்களோடு செட்டியாரும் வேறு சிலரும் கொஞ்சதூரம் வந்தனர்.

செட்டியார் என்னிடம் பேசியது

நாங்கள் செல்லும்போதே செட்டியார் என்னைப் பார்த்து, ”என்ன என்ன நூல்கள் பாடம் கேட்டீர்?” என்று கேட்டார். விவரமாக நான் சொன்னேன். “சரி; இப்போது என்ன கேட்டு வருகிறீர்?” என்றார். அதற்கும் விடை கூறினேன்.

செட்டியார் என்னை விசாரிப்பதை அறிந்த பிள்ளையவர்களுக்கு மேலே கால் ஓடவில்லை. நான் பாடல் சொல்வதையும் பொருள் சொல்வதையும் அவர் கேட்கவேண்டுமென்று என் ஆசிரியர் எண்ணினார். ஆதலின், “எங்கேயாவது ஓரிடத்தில் உட்கார்ந்துகொள்ளலாமே; நடந்துகொண்டே கேட்பதைவிட ஓரிடத்தில் இருந்தால் அவரும் பாடல்கள் சொல்லிக்காட்ட அனுகூலமாயிருக்கும்” என்று செட்டியாரைப் பார்த்துச் சொன்னார்.

நாங்கள் கும்பேசுவரர் கோயிலுக்கு அருகில் அப்போது நடந்து வந்தோம். ஆதலின் அக்கோயிலின் மேற்கு வாசல் வழியே உள்ளே சென்று புறத்தே சிரீ சுப்பிரமணியமூர்த்தி ஆலயத்தின் முன்மண்டபத்தில் என் ஆசிரியர் அமர்ந்தார்; நாங்களும் உட்கார்ந்தோம்.

செட்டியார், “ஏதாவது பாடல் சொல்லி அர்த்தமும் சொல்லும்” என்றார். இத்தகைய சந்தர்ப்பங்களில் பாடல் சொல்வதும் பொருள் சொல்வதும் எனக்கு வழக்கமாயிருந்தன. நான் துறைசையந்தாதியிலிருந்து, “அண்ணா மலையத்தனை” என்று தொடங்கும் பாடலை இராகத்தோடு சொல்லி அருத்தமும் சொன்னேன். நான் இசையோடு சொன்னதை அவர் அவ்வளவாகக் கவனிக்கவில்லை.

செட்டியார் கேட்கக் கேட்க மேலும் மேலும் வேறு பிரபந்தங்களிலிருந்து செய்யுட்களைச் சொல்லி வந்தேன். செட்டியார் கேட்டு நிறைவடைந்தாரென்றே எண்ணினேன். நிறைவை அவர் வெளிப்படையாகக்காட்டவில்லை.

’பாடம் சொல்லுவீரா?’

“துறைசையந்தாதிப் பாட்டுச் சொன்னீரே; அந்நூல் முழுவதும் நன்றாகத் தெரியுமா?”

“ஏதோ ஒருவாறு தெரியும்.”
“அதைப் பாடம் சொல்லுவீரா?”

அக்கேள்வி என்னைப் பிரமிக்கச் செய்தது. துறைசையந்தாதி யமகமாதலால் கடினமானது. ஆதலின் அதை முற்றுமறிந்து தாரணம் செய்துகொள்வது அருமை. அவ்விசயத்தைச் செட்டியார் உணர்ந்தவர். ஆயினும் அவரது கருத்து எனக்குச் சரியாக விளங்கவில்லை.

“பாடம் யாருக்குச் சொல்வது? இவருக்கா? பாடஞ் சொல்லுவேன் என்று சொன்னால் கருவமுள்ளவனென்று எண்ணிக் கொள்வாரோ என்னவோ!” என்று நான் யோசிக்கலானேன். அதனால் நான் ஒன்றும் பதிலே சொல்லவில்லை.

என் ஆசிரியர் அப்போது செட்டியாரை நோக்கி, “என்ன அப்படிக் கேட்கிறாய்? நீ அந்த அந்தாதியைப் பாடங் கேட்டதில்லையா?” என்று வினவினார்.

“நான் கேட்டதில்லை. நீங்கள் திருவாவடுதுறைக்குப் போன பிறகு இயற்றியதல்லவா அது? நான் கும்பகோணம் வந்த பிறகு நீங்கள் இயற்றிய நூல்களைப் பாடங் கேட்டதில்லை. ஆனாலும் அவற்றைப் படித்துப் பார்த்து இன்புற்றுப் பாடமும் சொல்லி வருகிறேன். நீங்கள் திருவாவடுதுறைக்குப் போன பிறகு செய்த நூல்களுக்கும் அதற்கு முன்பு செய்தவற்றிற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. முன்பு பாடின பாடல்களில் சாத்திரக் கருத்துகள் அதிகமாக இல்லை. இப்போது பாடியுள்ள பாடல்களில் எவ்வளவோ அரிய கருத்துகளும் சாத்திர விசயங்களும் அமைந்துள்ளன. அவற்றைப் படித்துப் பார்க்கும்போது சிலவற்றிற்குப் பொருள் விளங்குவதே இல்லை. எவனாவது ஒரு புத்தகத்தை எடுத்துவந்து பாடஞ் சொல்ல வேண்டும் என்றால் விழிக்க வேண்டியிருக்கிறது. இந்த அந்தாதியிலுள்ள யமகத்துக்கு இலேசில் அர்த்தம் புரியுமா? உங்களிடம் வந்து கேட்டால்தான் விளங்கும்.”

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.