Friday, March 25, 2016

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21: ம. இராமச்சந்திரன்

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21: ம. இராமச்சந்திரன்

  (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20 தொடர்ச்சி) 
தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

21

   குற்றமற்ற அறநெறியாம் மக்களாட்சி நெறி முறையைப் பின்பற்றிக் மிகப்பெரிய இயக்கமாகத் திராவிட முனனேற்ற கழகத்தை அமைத்து மக்களைக் கவர்ந்தார். மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் 6.3.1967 ஆம் நாளன்று தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணையில் அமர்ந்தார். பேச்சுத் திறன் கொண்டு மக்கள் உள்ளம் கவர்ந்து தலைவரானார். இத் தரணியில் இவர் போல் வேறு எவரேனும் உண்டோ? சொல்வீர்.  இதனை,
சொல்லுந்திறன் கொண்டே தோமில் நெறியில்
மக்களைக் கவர்ந்த மாபே ரியக்கம்
அமைத்து முதல்வராய் அரியணை ஏறிய
தலைவர் இவர்போல் தரணியில் உண்டோ? 49
என்று இலக்குவனார் கூறுகிறார்.
  தம்முடைய பகைவரையும் நண்பராய்க்கருதும் இயல்புடையவர் அண்ணா. பிறர் செய்யும் குற்றத்தை மறந்து குணமாகக் கொள்வார். தமக்குச் சுற்றமாக ஆக்கிக் கொள்வார். அன்பு செலுத்துவதில் பெரியவர். அணைத்துக் கொள்வதில் இவர் அண்ணன். ஆகவே இவரை (அண்ணாவை) வயதில் முதிர்ந்தவர்களும் வாய் மணக்க நெஞ்சம் இனிக்க அனைவரும் மகிழும் வண்ணம் ‘எம் அண்ணா’ என்றே அழைப்பர். அனைவர் உள்ளங்களிலும் இனிதாய்க் குடி கொண்டவர். ஆதலின் அன்புத் தலைவராய் ஆட்சி செய்யும் காவரலாக விளங்குகிறார்.
தமிழகத்தின் இலெனின்
  மாறுபட்ட கொள்கை உடையவரும் மகிழும்படி செய்வார் அண்ணா. கொள்கையை விட்டு மாற்றாருடன் தழுவுவார் போல ஒரு சிலவற்றை விட்டுக் கொடுத்துத் தமக்கு வேண்டியவற்றை முடித்துக் கொள்வார். அரசியல் சாணக்கியத்தை அணிகலனாகப் பெற்றவர். பொதுவுடமை நெறியை (காரல் மார்க்சு நெறி) இவ்வுலகம் ஏற்கும்படி திட்டம் தீட்டி செயல்முறைப் படுத்திய உருசிய நாட்டின் உயர்புகழ் படைத்த பெரியார் இலெனின் அவர்களைப்போல வள்ளுவர் நெறியை இவ்வையகம் ஏற்க நாள்தோறும் உழைப்பவர். எண்ணி எண்ணி உழைத்திடும் திறமை கொண்டவர் அண்ணா.
பசிப்பிணி மருத்துவர்
  அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் காட்சிக்கு எளியவராய் விளங்கினார். கடுஞ்சொல் அற்றவராய் உரையாடினார்.50 பழமை போற்றும் பண்பு மிகுந்தவராய்க் காட்சியளித்தார். ஏழை மக்களின் பசியாகிய நோயைத் தீர்க்கும் மருத்துவராய் விளங்கினார். எந்த நாட்டிலும் எந்த ஒரு முதலமைச்சரும் கொண்டுவராத ஒரு (உ)ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்னும் சிறந்த திட்டத்தை தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார். அதனால் மக்களின் பசியும் நீங்கிற்று. உணவு கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்னும் உயர்புகழ் பெற்றார். இதனைச், சீத்தலைச் சாத்தனார்.
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’51
என்று மணிமேகலையில் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது.
தமிழ்க் காவலர்
உயிரினும் சிறந்த தமிழ் மொழியைக் காப்பதற்கு, இந்தி என்னும் பாம்பு இனிய தமிழ்த் தெய்வத்தைப் பற்றிடா வண்ணம் கல்விச் சோலையைக் காத்திடும் வேலி போன்று இருமொழித் திட்டம் (தமிழ், ஆங்கிலம்) என்னும் சட்டம் இயற்றினார். சொந்த நாட்டில் புதுமை துலங்கிடும் அறிவு மொழியாம் ஆங்கிலமும் ஒவ்வொருவரும் அறிந்தால் போதும். இக்கொள்கை அனைவருக்கும் பொருத்தமுடையது. இந்தியத் துணைக்கண்டத்து மக்கள் அனைவரும் இணைந்து வாழ்வதற்குச் சிறந்த வாய்ப்பினைத் தருவது இருமொழிக் கொள்கையே. பிறர்மீது வலிந்து இந்தி மொழியைத் திணிப்பின் அது துன்பத்தையே கொடுக்கும். அரும்பு போன்ற இளம் சிறுவர்களின் தலையில் விரும்பா மொழியாம் இந்தியைத் திணித்தால் அதனால் பெறுவது சொல்ல முடியாத துயரமே. நாட்டு ஒற்றுமையை நாடிச் செய்யும் காரியம் இறுதியில் மக்களிடையே வேற்றுமை உணர்ச்சியைத் தோற்றுவித்து விடும் என்று கருதி இந்தி மொழிக்கு வேலியிட்டார் அண்ணா. இதனை,
‘           ஒற்றுமை நாடி வேற்றுமை விதைக்கும்
            இன்னாச் செயலுக் கிறுதி கண்டார்’ 52
என்ற அடிகளில் குறிப்பிடுகிறார்.
  தமிழக மக்கள் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் தமிழே முதன்மை பெற வேண்டும். கல்விமொழி தமிழாக வேண்டும். அரசு செய்யும் மொழி தமிழாக வேண்டும். இறையை வழிபடும் மொழி இன்றமிழாக வேண்டும். எவருடனும் உரையாடும் மொழி இன்பத் தமிழாக வேண்டும். வீட்டில் தமிழ், வெளியில் தமிழ், ஆட்சியில் தமிழ். தெருவெல்லாம் தமிழ் முழக்கம். தேயமெல்லாம் தமிழ் முழக்கம். உலகமெல்லாம் தமிழ் வளர்ச்சி உண்டாக வேண்டும். கவிஞர் இக்கருத்தைக் கீழ்க்கண்ட அடிகளில் புலப்படுத்துகிறார்.
எங்கும் தமிழே, எதிலும் தமிழே,
எல்லாம் தமிழிலே எனும் நிலை ஆக்கினார். 53
தமிழ்மொழி உலக அரங்கத்தில் உயர்ந்த இடம் பெற்று விளங்கிட இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். மாநாட்டைச் சிறப்புற நடத்தி இறவாப் புகழைச் சேர்த்துக் கொண்டார்.
குறிப்புகள்:
  1. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள். 15-18.
  2. திருவள்ளுவர், இறை மாட்சி செ.எ. 386.
  3. கலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை, அ-ள் 195-196.
  4. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 55-59.
  5. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 60-61.
(தொடரும்)
ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22)

Monday, March 21, 2016

சி.இலக்குவனார் – சில நினைவுகள் : தீக்கதிர்





சி.இலக்குவனார் – சில நினைவுகள் : தீக்கதிர்

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், தீக்கதிர் : ilakkuvanar,theekkathir

சி.இலக்குவனார் – சில நினைவுகள்

“ஆறடி வளர்ந்த நல்ல ஆண்மையர் தோற்றம் விஞ்சம்
மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர்கோனோ
வீறுடன் நீண்டமேலாடை வீசுகை முழந்தாள்தோய
ஏறுபோல் நிமிர்ந்து செல்லும் இலக்குவனார்…”
என்னும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நயமிகு பாடலடிகள் இலக்குவனாரை உள்ளத்திரையில் பதியவைக்கும். இலட்சுமணன் எனத் தமது பெற்றோரால் பெயரிடப்பட்டிருந்தவர், பள்ளிப்பருவத்தில், தமது தமிழாசான் சாமி. சிதம்பரனார் வழங்கிய அறிவுரையால், இலக்குவன் எனத் தமிழ்மணம் கமழும் பெயராக மாற்றிக் கொண்டார். “இராமனை ஏற்றுக்கொள்ளாத கருஞ்சட்டைக்காரனாகிய நீ இலட்சுமணன் எனப் பெயர் வைத்துக்கொள்வதேன்?” எனத் தமதுபள்ளித்தோழர்கள் வினவியகாலை, ‘நான்இராமாயணப் பெயரைச் சூட்டிக் கொள்ளவில்லை. என் வாழ்வு தமிழ்நலன் காக்கும் குறிக்கோள் வாழ்வு; இலக்கு உடைய வாழ்வை விரும்புவதால் தான் இலக்குவன் எனப் பெயரிட்டுக்கொண்டேன்’ என அழுத்தம் திருத்தமாக விடையளித்துள்ளார்.
  1936 ஆம் ஆண்டு நாட்டாண்மைக் கழகம் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியேற்ற இலக்குவனார் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய ஊர்களில் அமைந்த பள்ளிகளில் பணி ஆற்றினார். தமிழாசிரியர் பணியேற்ற நாள் முதல் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகளில் தொல்காப்பியர் திருநாள், திருவள்ளுவர் திருநாள், இளங்கோ அடிகள் திருநாள், ஒளவையார் திருநாள், மறுமலர்ச்சி நாள் என்று ஐந்து விழாக்கள் நடத்துவதை தமதுகடமையாகக் கொண்டார். தமிழ்ப் புலவர்களின் சிறப்புகளை மாணவர்கள் மட்டுமின்றி அவர்தம் பெற்றோரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பையும், பெற்றோரும் ஆசிரியரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பையும் இத்தகைய விழாக்கள் நல்கியதாக இலக்குவனார் தமது தன்வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்புலவர்களின் விழாக்களைத் தமிழ்நாட்டிலேயே முதலில் நடத்தியவர் என்னும் சிறப்பும்இலக்குவனாருக்கே உரியது. நாட்டாண்மைக்கழகப் பள்ளிகளில் ஆறாண்டுக்காலம் பணியாற்றியபின்னர் திருவையாறு அரசர்கல்லூரியில் விரிவுரையாளர் பணி ஏற்றார். அதன் பின்னர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணி ஆற்றினார். பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், முதல்வர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட ஆற்றினார். நாற்பதுகளின் தொடக்கத்தில் தமிழ் வகுப்புகளில் கூட ஆங்கில முழக்கம் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆசிரியர்களும் ஆங்கில மேற்கோள்களைக் கூறுதலைப் பெருமையாகக் கருதிவந்தனர். இலக்குவனார் இந்நிலை மாறக் காரணமாக விளங்கினார். வருகைப் பதிவில் ஆங்கிலச் சொல் தொலைந்தது.
  இலக்குவனார் “உள்ளேன் ஐயா” எனும்தொடரை அறிமுகப்படுத்தினார். நெல்லையிலே புறப்பட்ட தமிழ்தென்றல் மதுரை வழியாக சென்னை வரை வலம்வந்து நிலைபெற்றுவிட்டது. பல்கலைக்கழக இடைநிலை வகுப்பில் பொதுத்தமிழ் பயின்ற நினைவில் வாழும் கல்வியாளர் கி.வேங்கடசுப் பிரமணியாரும், பிஓஎல் இரண்டாண்டுகள் வரை பயின்று பின் கல்வியைத் தொடராத தோழர் இரா. நல்லகண்ணு அவர்களும் இச்செய்தியை வழங்கினர். உயர்நிலைப் பள்ளியில் பயின்ற நாளிலிருந்தே கவிதைகளைப் படைக்கும் ஆர்வம் இலக்குவனாருக்கு மேலோங்கியிருந்தது. இதன் விளைவாகத் தமது கல்லூரிப் பருவத்திலேயே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ எனும் குறுங்காப்பியத்தைப் படைத்து நூலாகவும் வெளியிட்டார். இந்நூலைக் கவிஞர் சுரதா பெரிதும் பாராட்டியுள்ளார். “பாரதிதாசன் ஒரு குறுங்காப்பியத்தை வெளியிடுவதற்கு முன்னமேயே 1933 ஆம்ஆண்டில் இலக்குவனார் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. தூய தமிழில் இனிமையான நடையில் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதமுடியும் என்பதை இலக்குவனார் இப்படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து பல கவிதைப் படைப்புகளை இயற்றி அவர் வெளிக்கொணர்ந்திருந்தால் தமிழுக்கு இன்னொரு பாரதிதாசன்கிடைத்திருப்பார்” என்பது சுரதாவின்கருத்து. எழிலரசி என்னும் இக்குறுங்காப்பியத்தின் தலைவி ஆளுமைத்திறனும் முற்போக்குச் சிந்தனையும் பெற்றவளாக இலக்குவனாரால் படைக்கப்பெற்றிருந்தாள்.
  இதன் விளைவாக கண்ணகி, மாதவி, மணிமேகலை என்னும் தமிழ்ப்பெருங்காப்பியத் தலைவிகளுடன் ஒப்பவைத்து நோக்கத்தக்கவளாக விளங்குகிறாள். பெண்ணுரிமை, பெண்கல்வி, பெண்ணின் தலைமை ஆகியமுற்போக்கு சிந்தனைகளை இக்குறுங்காப்பியம் முப்பதுகளின் தொடக்கத்திலேயே முழங்கியமை குறிப்பிடத்தக்கது. முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை மிக்க மகிழ்வோடு இலக்குவனார் போற்றினார்.
“குடியரசு ஓச்ச குடிமக் கட்கு
உரிமை உண்டென உரைக்கப் பட்டது
“எவர்க்கும் விடுதலை எங்கும் விடுதலை”
என்ற முழக்கம் எங்கும் ஒலித்தது;
“மக்களுக் காக மக்கள் ஆட்சி 
மக்களே நீங்கள் மன்னர் ஆயினீர்
ஆட்சி மன்றம் அமைக்க வருக 
இதனை இதனால் இவன் முடிக் குமென்று
அதனை அவன் கண் அளிக்க” என்றார்.
வெள்ளையர் ஆட்சி அகன்று தன்னுரிமைபெற்றபின் வாக்குரிமை பெற்ற செய்தியை மிகமகிழ்ச்சியுடன் இலக்குவனார் இயம்புகிறார். அதேவேளையில் சாதி வேறுபாடுகள் தகர்ந்தொழிந்தாலே நாம் முழு உரிமை பெற்றமகிழ்வைக் கொண்டாட முடியுமென்பதையும் அவர் சுட்டிக் காட்டத்தவறவில்லை.“மக்களைப் பிரித்து வன்முறை செழிக்க அறநெறி கோடி அல்லது புரியும்சாதிமுறைகள் சாகுநாள் என்றோ?”எனத் துயருடனும் சீற்றத்துடனும் வினவும் இலக்குவனாரின் வினாவுக்கு இன்னும் ஆறுதலளிக்கும் விடை கிட்டவில்லை. கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவதுடன் தமது பணி நிறைவுற்றுவிட்டதாக இலக்குவனார் கருதிவிடவில்லை. தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றைப் பரப்பவும் தமிழ் இலக்கண இலக்கிய நலன்களை மக்களுக்கு எடுத்துரைக்கவும் சொற்பொழிவு, எழுத்து என்னும் இரண்டையும் கருவிகளாகக் கொண்டார். ‘எழுதுதற்கு ஏடும் பேசுதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ்பரப்ப’ என்பது இலக்குவனாரின் முழக்கங்களில் ஒன்றாகும்.
  அவர் திருநெல்வேலியில் பணியாற்றியபோது ஒரு கூட்டத்தில் யாரோ ‘ சங்க இலக்கியத்தை வங்கக்கடலில் எறிவோம்” எனக் கூறியதாகக் கேள்வியுற்று உளம் பதைத்துப் போனார். சங்க இலக்கியப் பெருமையைத் தமிழ் படிக்காதவர்களும் தெரிந்திருந்தால் இத்தகைய வீண்பேச்சு வந்திருக்காதே எனக் கவலை கொண்டார். உடனே செயலில் இறங்கியவர் இலக்குவனார். ‘சங்க இலக்கியம்’ என்னும் பெயரில் வாரஇதழ் நடத்தமுனைந்தார். அன்றிருந்த நாணயமுறையில் அதன் விலை ஓரணா. 1944 முதல் 1947 வரை நடந்த இந்த இதழ் வாரந்தோறும் சங்க இலக்கியத்தை ஓரளவு தமிழ் கற்றோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய விளக்கங்களோடு சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடக வடிவிலும் வழங்கியது. இதற்கு நல்லவரவேற்பு இருந்தது. அதுவரை புலவர்களுக்கே உரியதாகக் கருதப்பட்ட சங்க இலக்கியம் மக்கள் இலக்கியமாகக் கருதப்படும் நிலைமலர்ந்தது. இந்த இதழ் செலுத்திய தாக்கத்தால் சங்க இலக்கியங்களைப் பற்றிய இலக்கிய விளக்க நூல்கள் வெளிவரத் தொடங்கின. நாடக மேடைகளிலும் திரைப்படங்களிலும் சங்க இலக்கிய காட்சிகளைக் காணும் வாய்ப்பை மக்கள் பெற்றனர். உயர்கல்வி கற்ற ஒரு சிலர்க்கே உரியதாகக் கருதப்பட்ட சங்க இலக்கியத்தை மக்கள்சொத்து என நிலைநாட்டியவர் பேராசிரியர் இலக்குவனார் எனலாம். இதேபோன்று விருதுநகரில் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது ‘இலக்கியம்’ எனும் திங்களிருமுறை இதழை நடத்தினார். அந்த இதழில் நடத்தப்பட்ட குறுக்கெழுத்துப் போட்டி இலக்கிய ஆர்வலர்களால் மிகவும் விரும்பப்பட்டது. ஓர் இலக்கியஇதழ் இலக்கியங்களைப் பற்றிய செய்திகளைப் பற்றி குறுக்கெழுத்து போட்டி நடத்திப்பரிசு வழங்கியது என்னும் பெருமையை இந்தஇதழ் பெற்றது.
  இதுபோன்றே ‘குறள்நெறி’ என்னும் இதழைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வள்ளுவர் வாய்மொழி போற்றும் முனைப்புடன் நடத்தினார். தாம் பணியிழந்த வேளையில் குறள்நெறியை நாளிதழாகவும் நடத்தினார். நம் நாட்டில் ஒரு மொழிப்பேராசிரியர் அந்த மொழியைத் திருத்தமாக மக்கள் பயன்படுத்தத் துணைபுரியும் நோக்கில் ஒரு நாளிதழை நடத்தினார் என்னும் பெருமை இலக்குவனார்க்கே உரியது. இத்தகைய வரலாற்றுச் சாதனைகளை ஆற்றும் துணிவும் உழைப்பும் இலக்குவனாரின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளாகும்.
(முனைவர் மறைமலை இலக்குவனார் உரையிலிருந்து சில பகுதிகள்)
இலக்கியச்சோலை, தீக்கதிர்
தலைப்பு-முத்திரை-இலக்கியச்சோலை,தீக்கதிர்: muthrai_ilakkiyachoalai,theekathir முத்திரை,தீக்கதிர்: muthirai_theekathir

Sunday, March 13, 2016

2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன்




முத்திரை-தமிழ் இலக்கியத் தோட்டம் : muthirai_thamizhilakkiyathoattam முத்திரை - தமிழ் விக்கிபீடியா4000 : muthirai_wicky_Four_thousand_barnstar இ.மயூரநாதன் : mayruanathan

2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன்

           
  இவ்வருடத்திற்கான இயல் விருது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இயல் அமைப்பின் செய்தி:
  கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் வழங்கும் வாழ்நாள் அருவினையாளர்(சாதனையாளர்) விருது (இயல் விருது) இம்முறை ‘தமிழ் விக்கிப்பீடியா’ என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சியக் கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17 ஆவது இயல் விருது ஆகும்.
  அறிவு என்பதே உலகளாவிய ஒற்றைப்பேரியக்கம் என்ற அளவில் இணையத்தால் இன்று ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. விக்கிப்பீடியா அதில் ஆற்றும் பங்கு மிகப்பெரியது. தமிழில் அதன் பங்களிப்பை முன்னெடுக்கும் மயூரநாதன் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.
  இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன், கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-இல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். 2001ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ஆம் ஆண்டிலேயே தொடங்கினார்.. முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கித் திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.
  தமிழ் விக்கிப்பீடியாவே முதன்முதலாக அனைத்துலகப் பங்களிப்பாளர்கள் கூட்டாக இயங்கி ‘வலை 2.0 / Web 2.0’ என்னும் முறையில் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்பு ஆகும். இதில் ஓரளவிற்குக் கணிசமாகப் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ 100 பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் மிகுதியானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 விழுக்காடு கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.
  இந்தத் திட்டத்தை இவ்வளவு நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றதிலும், கூட்டுழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதிலும் இவருடைய இடையறாத உழைப்பும் நல்லறிவும் உதவியிருக்கிறது என்பது உண்மை. இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 பேராயிரம்(மில்லியன்) பார்வையாளர்களை எட்டும் புகழ்மிகு தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது (சிச்சு ஆலெக்ச/Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு ). இப்படிப்பட்ட தமிழ் விக்கிப்பீடியாவைத் தனியொருவராகத் தொடங்கி வளர்த்தெடுத்த மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது.
  மனிதக் குலத்தின் அறிவு உருவாக்கத்தில் விக்கிப்பீடியாவின் தோற்றம் ஒரு பாய்ச்சல் எனலாம். தமிழ் மொழியைப் புத்தாக்க அறிவுத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு மொழியாக வளர்த்தெடுப்பதிலும், தமிழ் மூலமான அறிவு உருவாக்கம் பரவல் தொடர்பிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் முதன்மைத்துவம் பல மட்டங்களிலும் உணரப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில், தமிழ்மொழி வளர்ச்சி தொடர்பான மாநாடுகளிலும், தமிழ் இணையத் தொழில்நுட்பக் கருத்தரங்குகளிலும், அரசு சார்ந்த சில நிறுவனங்களின் தமிழ் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளிலும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு முதன்மை அளிக்கப்படுகிறது.
  இன்று, தமிழ் விக்கிப்பீடியா மூலமான பங்களிப்புகள் மரபுவழியான பிற இலக்கிய முயற்சிகளுக்கு ஈடான   முதன்மை கொண்டவையாக வளர்ந்துள்ளன. அத்துடன் இஃது எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கான நம்பிக்கையாகவும் விளங்குகிறது. அதன் வளர்ச்சியில் முனைப்புடன் ஈடுபட்ட குழுமத்தைப் பாராட்டுவதுடன் விக்கிப்பீடியா நிறுவுநரான திரு இ.மயூரநாதனுக்கு வாழ்நாள் அருவினையாளர்(சாதனயாளர்) விருதை வழங்கிச் சிறப்பிப்பதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2016 சூன் மாதம் நடைபெறவிருக்கிறது. அப்போது இயல் விருதுக்கேடயமும் பரிசுத்தொகைப் பணம் 2500 தாலர்களும் வழங்கப்படும்.

இயல்விருதாளர்கள்:


[திரு மயூரநாதன் அவர்கள் 17-ஆவது அருவினையாளராக இயல்விருது பெறுபவர். இது 15-ஆம் இயல்விருது.]
  1. முதல் இயல்விருது திரு. சுந்தர இராமசாமி  அவர்களுக்கு- இது 2001 இல் வழங்கப்பட்டது
  2. மணிக்கொடி பரம்பரையில் வந்த மூத்த எழுத்தாளர் திரு. கே. கணேசு அவர்களுக்கு 2002 இல்.
  3. திரு. வெங்கட்டு சாமிநாதன் – இலக்கியத் திறானாய்வாளர் -2003 இல்
  4. திரு பதுபநாப(ஐயர்) அவர்களுக்கு 2004 இல் விருது. இவர் இலக்கியப் படைப்பாளி அல்லர் ஆனால் அரும்பெரும் தமிழ்த்தொண்டர்.
  5. பேராசிரியர் சியார்ச்சு ஆர்ட்டு, கலிபோரினியா பல்கலைக்கழகம், பெர்க்கிலி 2005
  6. திரு ஏ.சீ. தாசீசியசு (http://tamilliterarygarden.com/awards/tarcisius) – 2006
  7. திருவாட்டி இலட்சுமி ஓம்சிற்றோம் (‘திருமதி லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்”) -20 ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப்பணி செய்தமைக்காக 2007
  8. ”அம்பை”  – 2008 (http://tamilliterarygarden.com/awards/ambai)
  9. திரு. கோவை ஞானி அவர்களுக்கும் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும் – 2009
  10. திரு. எசு. பொன்னுதுரை – 2010
  11. திரு. எசு. இராமகிருட்டிணன் – புதின எழுத்தாளர் – 2011
  12. திரு. நாஞ்சில் நாடன் – 2012
  13. திரு. தியோடர் பாசுக்கரன் அவர்களுக்கும் திரு. தொமினிக்கு சீவா (”டொமினிக் ஜீவா”) அவர்களுக்கும் – 2013
  14. திரு. செயமோகன் – 2014
  15. திரு. மயூரநாதன் – 2015
விருது பெறுவதற்கு வாழ்த்திய, பாராட்டிய அனைவருக்கும் விருதாளர் மயூரநாதன், “பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். தமிழ் மொழி மூலமான அறிவுத் தொகுப்பிலும், அதன் பரவலிலும் தமிழ் விக்கிப்பீடியா ஒரு முக்கியமான இடத்தைப் பெறும் அளவுக்கு வளர்ந்துள்ளது. பல பக்கங்களிலுமிருந்து இதற்கு இன்று அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இதைச் சாத்தியமாக்கியது பல நூற்றுக்கணக்கான பங்களிப்பாளர்களின் கூட்டு உழைப்பு. எனக்கு இந்த விருது கிடைத்ததில் இவர்கள் அனைவருக்கும் பங்குண்டு. எல்லோருக்கும் எனது நன்றிகள்.” என நன்றி தெரிவித்துள்ளார்.
தகவல் : செயமோகன் &  செல்வா