Sunday, August 27, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 1/2

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 11 : நடுப் பருவம் – தொடர்ச்சி)

என் சுயசரிதை  : அத்தியாயம் 6. வழக்குரைஞராக வேலை பார்த்தது 1/2

என் தமையனார் ஐயாசாமி முதலியார் இதற்கு முன்பாகவே உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தார். ஆகவே அவரது அறையிலேயே நான் வழக்குரைஞராக அமர்ந்தேன். எழுத்தர், வேலையாள் முதலிய சௌகர்யங்களுக்கெல்லாம் நான் கட்டப் படாதபடி ஆயிற்று.

நான் பதிவு (enrol) ஆன தினமே அவருக்கு பதிலாக ஒரு வழக்கை நடத்தினேன். சென்னையில் சிறுவழக்கு நீதிமன்றத்தில் நான் முதல்முதல் ஒரு வழக்கில் கட்டணம் பெற்றது, அந் நீதிமன்றத்தில் பதிவாளர் முன்பாக. சேம்சு சார்ட்டுசுக்காக ஒரு சிறு வழக்கை நடத்தி வெற்றி பெற்றேன்.

அதுமுதல் சின்ன நீதிமன்றத்திலேயே பெரும்பாலும் வழக்குரைஞர் வேலை பார்த்து வந்தேன். சில சமயங்களில் நகர உரிமைமன்றத்திற்கும் (City Civil Court) போவேன். சீக்கிரம் காவல்துறை நீதிமன்றத்துக்கும் போக ஆரம்பித்தேன். உயர்நீதிமன்றத்தி்ல் கார்த்திகை பிறைபோல் தோன்றுவேன்! இதைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். முதல் இரண்டு வருசம் என் வழக்குரைஞர் வரும்படி சராசரியாக மாதத்திற்கு 50 உரூபாய் முதல் 10 உரூபாய் வரை இருந்தது. பிறகு உயர்ந்து கொண்டு போய் சுமார் 1000 உரூபாய் சம்பாதித்தேன். இருந்தபோதிலும் நான் வழக்குரைஞாகப் பெரும் பதவியையாவது ஊதியத்தையாவது பெறவில்லை என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இதற்கு முக்கிய காரணம் வழக்குரைஞர் உத்தியோகத்தில் என் மனம் பலமாக ஈடுபாடாததேயாம். பெரிய வழக்குரைஞர் என்று பெயர் எடுத்து ஏராளமாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நான் விரும்ப வில்லை. வெளிப்படையாகக் கூறுமிடத்து என் மன உற்சாக மெல்லாம் தமிழ் நாடகங்களில் நடித்தும், தமிழ் நாடகங்களை எழுதியும் பெரிய பெயர் எடுக்கவேண்டுமென்றே இருந்தது! இதன் பொருட்டு என் ஓய்வுக் காலத்தையெல்லாம் சட்டப்புத்தகங்களையும் சட்ட அறிக்கைகளையும் படிப்பதில் செலவிடாது சுகுண விலாச சபைக்காக உழைப்பதிலேயே செலவழித்தேன். இதற்காக நான் எப்பொழுதும் வருத்தப்பட்டவனன்று. இப் பொழுதும் வருத்தப்படவில்லை; சந்தோசமே படுகிறேன். நான் கொஞ்சம் பிரபல நடிகனும் நாடக ஆசிரியனுமான பிறகு ஒரு நாள் ஆந்திர நாடகப் பிதா மகனான பல்லாரி வி.. கிருட்டிணமாச்சார்லு அவர்கள் தன்னுடைய அனுபவத்தை எனக்குத் தெரிவித்து “நீ சிறந்த வழக்குரைஞராக வேண்டுமென்றால் நாடகத்தைத் தூரத்தில் விட்டுவிட வேண்டும்” என்று போதித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அவரது போதனையை நான் ஒப்புக்கொள்ள வில்லை என்று எழுதவேண்டியது அநாவசியம்’

நான் வழக்குரைஞராகப் பணம் சம்பாதிக்கும் போது, என் இல் வாழ்க்கை சுகமாய் நடத்தவும், என் நாடகங்களை அச்சிட வேண்டியதற்கும் போதுமான பொருள் கிடைத்தால் போதும் என்று உழைத்துவந்தேன். மேற்சொன்ன காரணங்கள் பற்றியே கூடுமான வரையில் எனது வழக்குரைஞர் வேலையையெல்லாம் சுகமாய்க் காலம் கழிக்கக் கூடிய சிறுவழக்கு நீதிமன்றத்தில் பெரும்பாலும் நகர் உரிமையியல் மன்றத்தில் சில பாகமும் காவல்துறை நீதிமன்றத்தல் சில பாகமும் வைத்துக்கொண்டேன். எப்பொழுதாவது கடினப்பட்டு உழைக்கவேண்டிய பெரிய வழக்குகள் வந்தால் அவற்றை மெல்ல, எனக்கு அவகாசமில்லை’ என்று தட்டிவிடுவேன்.

இக்காரணம் பற்றியே கட்சிக்காரர்கள் என்னிடம் வருவதென்றால் காலை 9½ மணிக்குள் வரவேண்டும் என்றும் சாயங் காலங்களில் 5 மணிக்குமேல் ஒருவரும் வரக்கூடாது என்றும் ஒரு நிபந்தனை செய்து கொண்டேன்.
இந்த நிபந்தனையினின்றும் சுமார் 25 வருடங்கள் நான் வழக்குரைஞராக வேலை பார்த்த காலமெல்லாம் மாறவில்லை. இராத்திரியில் யாராவது என் வீட்டிற்கு வந்து ‘அவசர வழக்கு’ என்று என்னைத் தொந்தரவு செய்பவர்களுக்கெல்லாம் ஒரு பதில், ஏற்பாடு செய்து கொண்டேன். அதாவது “உங்கள் வழக்கு இன்றிரவு ஏதாவது நடக்கப் போகிறதா? இல்லையே! நாளைக் காலை 11 மணிக்குத்தானே. வழக்கு (case). ஆகவே தயவுசெய்து நாளை காலை வீட்டிற்கு வந்துவிடுங்கள்” என்று பதில் சொல்லி அனுப்பிவிடுவேன். இந்த வழக்கத்தை அறிந்த என் வழக்கமாக வரும் கட்சிக்காரர்கள் என்னைச் சாயங்காலங்களில் தொந்தரவு செய்வதில்லை. மற்றவர்களிடமும் “இந்த வழக்குரைஞர் சாயங்காலத்திற்குமேல் நீதிமன்ற வழக்குகளைப் பார்க்கமாட்டார். கட்டணம் (Fees) கொடுத்த போதிலும் நாளை காலை கொண்டு வா என்று அனுப்பிவிடுவார். ஆகையால் அவரை 5 மணிக்குமேல் போய்ப் பார்ப்பதில் பிரயோகன மில்லை”, என்று தடுத்துவிடுவார்கள்.

இந்தக் கோட்பாட்டினால் எனக்கு ஒரு பெரிய நன்மை கிடைத்தது. சாதாரணமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாற்பது ஐம்பது வயதாவதற்குள் நீர் வியாதி, குன்ம நோய் முதலிய ஏதாவது வியாதிக்கு உள்ளாகின்றனர் என்பது எல்லோரும் அறிந்த விசயமே. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் காலக்கிரமப்படி போசனம் கொள்ளாததும், தக்கபடி சாயங் காலங்களில் உடற்பயிற்சி(வியாயாமம்/exercise) எடுத்துக் கொள்ளாததுமாம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கின்றார். எத்தனை சிறந்த வழக்குரைஞர்கள் சுமார் 50 வயதிற்குள் வியாதிக்கு ஆளாகி மடிந்திருக்கின்றனர்! தேகத்தில் சிறு வயது முதல் தக்க பலமில்லாத நான் இப்ப ஏதாவது வியாதிக்கு ஆளாகாமல், தடுத்தது காலக்கிரமப்படி போசனங் கொண்டதும் சாயங் காலங்களில் ஏதாவது உடற்பயிற்சியும் எடுத்துக்கொண்டு தக்கபடி ஓய்வையும் எடுத்துக்கொண்டு ஓய்வுக் காலங்களில் மனத்திற்கு உற்சாகத்தையும் சந்தோசத்தையும் அளிக்கத்தக்க மனதிற்கினிய தொழில் (Hobby), ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு நடந்துவந்ததே, இதுவரையில் ஈசுவரன் கிருபையில் என் தேக நலத்தைக் காப்பாற்றிக்கொண்டு வரச் செய்தது என்று உறுதியாக நம்புகிறேன்.

நான் வழக்குரைஞனாக நடவடிக்கை நடத்திய காலத்தில் எனக்கே மற்றொரு நிபந்தனை ஏற்படுத்திக் கொண்டேன். அதாவது கட்சிக்காரர்கள் என்னிடம் வந்தால் அவர்கள் வழக்கு பொய்யானது, தப்பானது; நியாயமல்ல என்று என் புத்திக்குப் பட்டால் அவர்கள் வழக்கை எடுத்துக்கொள்ளக் கூடாதென்பதாம். இதனால், என்னிடம் வந்த பல வழக்குகளை ஒதுக்கியிருக்கிறேன். இருந்தும் இதனால் நான் ஒரு நன்மை பெறாமல் போகவில்லை. அதாவது “சம்பந்தம் சாதாரணமாக தப்பான வழக்குகளை எடுத்துக்கொள்ளமாட்டான்” என்னும் பெயர் பெற்றேன் என்று நினைக்கிறேன். என்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கெல்லாம் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்வேன். “ஐயா, வைத்தியனிடம் போய் உங்களுக்கு ஒரு வியாதி இருக்க அதை மறைத்து வேறொன்றைக் கூறினால் அந்த வைத்தியன் உங்கள் உண்மையான வியாதியைக் குணப்படுத்த முடியுமா? அதுபோல வழக்குரைஞனாகிய என்னிடம் உண்மையைக் கூறுங்கள். பிறகு உங்கள் வழக்கிற்குப் பரிகாரம் தேடுகிறேன்” என்று சொல்வேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, August 26, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2

 


(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2)



பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2

பரீட்சை

இவ்வாறு எங்கள் வரலாற்றை அறிந்துகொண்ட பின்பு அக்கவிஞர் பெருமான் என்னைப் பார்த்து, “நைடதத்தில் ஏதாவது ஒரு பாடலைச் சொல்லும்” என்றார். அந்த மகாவித்துவானுக்கு முன், காட்டுப்பிராந்தியங்களிலே தமிழறிவைச் சேகரித்துக்கொண்ட நான் எவ்வளவு சிறியவன்! எனக்குப் பாடல் சொல்லத் தைரியம் உண்டாகவில்லை. மனம் நடுங்கியது. உடல் பதறியது; வேர்வை உண்டாயிற்று. நாக்கு உள்ளே இழுத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் இவ்வாறு நான் தடுமாறினேன். அப்பால் ஒருவாறு நைடதத்திலுள்ள, “தழைவிரி கடுக்கை மாலை” என்னும் காப்புச் செய்யுளைக் கல்யாணி இராகத்தில் மெல்லச் சொன்னேன்; முதலடியை, “தழைவிரி கடுக்கை மாலைத் தனிமுதற் சடையிற் சூடும்” என்று நான் சொன்னேன். பிள்ளையவர்கள் இடைமறித்து, “தனி முதல் சடையிற்சூடும்” என்று சொல்லித் திருத்தினார். பலகாலமாகப் பிழைபட்ட பாடத்தை உருவேற்றி இருந்த எனக்கு அந்தப் பாடமே முன்வந்தது. என் நடுக்கம் அதிகமாயிற்று. ஆனாலும் பாடல் முழுவதையும் சொல்லி முடித்தேன். நான் அதைச் சொல்லும்போதே அவர் முகத்தையும் கவனித்தேன். “நான் சொல்வதில் அவருக்கு வெறுப்பு உண்டாகுமோ” என்று பயந்தேன். நல்லவேளையாக அவர் முகத்தில் அத்தகைய குறிப்பு ஒன்றும் தோற்றவில்லை. எனக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று.

“இன்னும் ஒரு பாடல் சொல்லும்” என்றார் அவர். நான் நைடதத்தின் சிறப்புப் பாயிரமாகிய, “நிலவு பொழி தனிக்கவிகை” என்னும் பாடலைச் சாவேரி இராகத்தில் சொன்னேன். அந்த இரண்டு செய்யுட்களையும் மீட்டும் சொல்லிப் பொருள் கூறும்படி கூறினார். நான் பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறத் தொடங்குகையில் நாக்குத் தழுதழுத்தது.

“தைரியமாகச் சொல்லும்” என்று அக்கவிஞர்பிரான் கூறினார். நான் இரண்டு செய்யுட்களுக்கும் பொருள் கூறி முடித்தேன்.

நிகண்டு பாடம் உண்டோ?” என்று அவர் கேட்டார். நான் “பன்னிரண்டு தொகுதியும் பாடம் உண்டு” என்று கூறவே சில சில பாடங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டுவிட்டு, “நிகண்டை மனனம் செய்வது நல்லதே. இக்காலத்தில் அதை நெட்டுருப் பண்ணும் வழக்கமே போய்விட்டது. சொன்னால் யாரும் கேட்பதில்லை” என்றார்.

சந்தேகப் பேச்சு

அப்போது என் தந்தையார், “இவனைத் தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார்.

அப்புலவர் பெருமான் சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். அவர் எதையோ யோசிக்கிறார் என்று எண்ணினேன்; “ஒரு கால் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ?” என்று அஞ்சினேன். அவர் மெல்லப் பேசத் தொடங்கினார்.

“இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்தவண்ணமாக இருக்கிறார்கள். வரும்போது பணிவாக நடந்துகொள்ளுகிறார்கள். சில காலம் படித்தும் வருகிறார்கள். படித்துத் தமிழில் நல்ல உணர்ச்சி உண்டாகும் சமயத்திலே போய்விடுகிறார்கள். சிலர் சொல்லாமலே பிரிந்துவிடுகிறார்கள். சிலர் ‘ஊர் போய்ச் சில தினங்களில் வருகிறோம்’ என்று சொல்லிப் போய்த் திரும்புவதே இல்லை. சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறையாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை; நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை. இத்தகையவர்கள் இயல்பைக் கண்டு கண்டு மனம் சலித்துவிட்டது. யாராவது பாடம் கேட்பதாக வந்தால் யோசனை செய்துதான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.”

அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர் கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது. அவர் தம்மிடம் வந்து சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும் சொன்னார். “இந்த விசயங்களை யெல்லாம் சொல்வதன் கருத்து என்ன? நம்மை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ? அப்படியிருந்தால் இவ்வளவு பிரியமாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.

தவம் பலித்தது

என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம் இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான் உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம் சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டுவந்து சேர்க்கும்படி வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான் தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்துவிட்டேன். இனிமேல் இவன் விசயத்தில் எனக்கு யாதோர் உரிமையும் இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது சொன்னேன்; வேண்டிக்கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது; முகம் ஒளியிழந்தது.

அங்கிருந்தவர்கள் என் தந்தையார் வேண்டுகோளையும் எனது பரிவையும் உணர்ந்து இரங்கி, “இந்தப் பிள்ளை இருந்து நன்றாகப் படிப்பாரென்றே தெரிகிறது. தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.

அக்கவிஞர் பிரானது முகம் மலர்ந்தது. ஒருவிதமான உறுதிக்கு அவர் வந்துவிட்டாரென்பதையும், அத்தீர்மானம் எனக்கு அனுகூலமாகத்தான் இருக்குமென்பதையும் அந்த முகமலர்ச்சி விளக்கியது.

“இவ்வூரில் பந்துக்கள் யாரேனும் இருக்கிறார்களோ? இவருடைய ஆகாரத்துக்காக ஏற்பாடு ஏதேனும் செய்திருக்கிறீர்களா?” என்று பிள்ளையவர்கள் கேட்டனர்.

“இவ்வூரில் நண்பர்களும் பந்துக்களும் இருந்தாலும் அவர்கள் செல்வமுள்ளவர்களல்லர். அவர்களுக்குச் சிரமம் கொடுப்பது உசிதமாக இராது. தாங்களே ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டும்” என்றார் என் தந்தையார். பிள்ளையவர்கள் பல மாணாக்கர்களை வைத்துப் போசித்துப் பாடஞ்சொல்லி வருகிறார் என்ற செய்தியைப் பலர் கூறக் கேட்டிருந்தமையின் இவ்வாறு எந்தையார் சொன்னார்.

பிள்ளையவர்கள்: “திருவாவடுதுறையிலும் பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய ஆகார விசயத்தில் ஒரு குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம். சைவராக இருந்தால் ஒரு கவலையும் இராது; என் வீட்டிலே சாப்பிடலாம். இந்த ஊரில் இவர் ஆகார விசயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்; அது பற்றி வருந்துகிறேன்.”

எந்தையார்: “அப்படியானால் இவ்வூரில் இருக்கும் வரையில் இவன் ஆகாரச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று அனுப்பிவிடுகிறேன். இவனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

பிள்ளையவர்கள்: “சரி. ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடங்கேட்க ஆரம்பிக்கலாம்.”

என் தவம் பலித்ததென்று நான் குதூகலித்தேன். அசுத்தமன சமயமாகிவிட்டமையால் நாங்கள் மறுநாட் காலையில் வருவதாக விடைபெற்றுக்கொண்டு எங்கள் விடுதிக்கு மீண்டோம்.

நாங்கள் போகும்போது எங்கள் மனத்தை அமிழ்த்திக்கொண்டிருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது போல இருந்தது. என் தந்தையார் அடிக்கடி, “சாக்கிரதையாக இருப்பாயா? தேக சௌக்கியத்தைக் கவனித்துக்கொள்வாயா? கடிதம் எழுதுவாயா? வருத்தப்படாமல் இருப்பாயா?” என்று பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். என்னைத் தனியே விட்டுச்செல்வதற்கு அவர் உள்ளம் ஏவ்வளவு தத்தளித்ததென்பதை அவை விளக்கின.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Sunday, August 20, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 11 : நடுப் பருவம்

      21 August 2023      அகரமுதல



(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம் – தொடர்ச்சி)

என் சுயசரிதை : அத்தியாயம் 5. நடுப் பருவம்

பி.ஏ. தேறினவுடன், நான் வழக்குரைஞராக வேண்டுமென்று தீர்மானித்து சட்ட வகுப்பில் சேர்ந்தேன். சட்டக்கல்லூரியில் படித்தபோது பெரும்பாலும் எங்கள் தகப்பனார் புதிதாய் கட்டிய எங்கள் எழும்பூர் பங்களாவிலிருந்து கல்லூரிக்கு மிதிவண்டியில் போய்க்கொண்டிருந்தேன். இந்தச் சட்டக்கல்லூரியில் நான் சேர்ந்தவுடன் நான்கைந்து வருடங்களாக என்னை விட்டுப்பிரிந்த என் உயிர் நண்பராகிய வி. வி. சீனிவாச ஐயங்கார் தானும் பி.ஏ. பரிட்சையில் தேறினவராய் என்னுடன் சேர்ந்தார். அவர் அப்படி சேர்ந்தவுடன் எங்கள் பழைய ஏற்பாட்டின்படி எப்பொழுதும் வகுப்பில் நாங்களிருவரும் ஒன்றாய் உட்கார்ந்து பேசிக் கொண்டு காலங்கழிப்போம். இதற்கு ஒத்தாசையாக நான் முன்பு கூறிய வாமன்பாய், சீனிவாச பாட்(டு) என்னும் இரண்டு மங்களூர் நண்பர்களும் கே. ஆர். சீதாராம ஐயரும் சேர்ந்தார்கள். எந்த வகுப்பிலும் நாங்கள் பஞ்சபாண்டவர் களைப்போல் எந்நேரமும் உட்கார்ந்து பேசிகொண்டிருப்போம், வாசுதவமாய் சொல்லுமிடத்து.

நான் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது 1895-ஆம் வருடம் என் ஆயுளில் மற்றொரு துக்ககரமான சம்பவம் நேர்ந்தது. அதாவது அவ்வருடம் மே மாதம் 26-ந் தேதி என் தந்தை சிவலோகப்பிராப்தி ஆனார். உண்மையைக் கூறுமிடத்து அவரது மரணம் என் தாயாரின் மரணத்தைப் போல் அவ்வளவு துக்க சாகரத்தில் ஆழ்த்தவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் மரணத்திற்கு 6 மாதம் முன்பாகவே ஓர் கொடிய வியாதியால் அவர் துன்பப்பட்டபோது இனி இதனின்றும் அவர் பிழைப்பது அரிது என்று வைத்தியர்கள் எங்களுக்கு தெரிவித்ததேயாம். அக்காலம் முதல் கொஞ்சம் கொஞ்சம் இனி வரப்போகிற துக்ககரமான சம்பவத்திற்கு நமது மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முயன்று வந்தேன். ஆயினும் சிலகாலம் பொறுத்தே என் மனத்தைத் தேற்றிக்கொள்ள சக்தி பெற்றேன். அவற்றையெல்லாம் பற்றி இதைப் படிக்கும் எனது நண்பர்களுக்கு எழுதுவானேன்? இச் சந்தர்ப்பத்தில் ஓர் ஆங்கில கவி எழுதிய இரண்டு அடிகள் ஞாபகம் வருகிறது. அதன் மொழி பெயர்ப்பை எழுதுகிறேன். “சிரித்தையேல் உலகெல்லாம் சிரித்திடும் உன்னுடன், அழுதையேல் நீதான் தனியாக அழவேண்டும்” அன்று முதல் ஒரு தீர்மானம் செய்து கொண்டேன். அது என் சந்தோசத்தை உலகுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். என்னுள்ளே என் துயரத்தை அடக்கிக்கொள்ள வேண்டும் என்பதாம்.

என் தந்தையின் தேக அசௌக்கியத்தின் காரணத்தினாலோ அப்பொழுது சுகுணவிலாச சபைக்காக தமிழ் நாடகங்களை எழுதி அவற்றில் நடித்த காரணத்தினாலோ நான் சட்டப் புத்தகங்களைச் சரியாகப் படிக்கவில்லை. இவ்வருசம் முதல் சட்டப் பரிட்சைக்கு (First Examination in Law) போனபோது நான் தேறுவேனோ என்னவோ என்று சந்தேகப் பட்டேன். ஆயினும் தெய்வாதீனத்தால் அதில் தேறினேன்.

1896-ஆம் வருசம் கடைசியில் திசம்பர் மாதம் பரிட்சையில் நாலும் சீனிவாச ஐயங்காரும் தேறினோம். அந்த பரிட்சைக்காக நாங்களிருவரும் ஒன்றாய்ப் படித்தோம் எங்கள் சடடப் புத்தகங்களை.

1897-ஆம் வருசம் சட்டப் பரிட்சையில் தேறி நாங்களிருவரும் உயர்நீதிமன்றத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தோம். சீனிவாச ஐயங்கார் சேம்சு சார்ட்டுசு (James Sharts) என்பவரிடம் பயிற்சியாளராகச் சேர்ந்தார். நான் சிறுவழக்கு நீதிபதியாயிருந்து பெயர் பெற்ற இரங்கநாத சாத்திரியாரின் குமாரரான சுந்தரம் சாத்திரியாரிடம் பயிற்சியாளனாகச் சேர்ந்தேன். என் தமையனாராகிய, அச்சமயம் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக நடவடிக்கை நடத்திக்கொண்டிருந்த ஐயாசாமி முதலியாரின் அபிப்ராயப்படி என் துர் அதிர்ட்டத்தினால் சுந்தரம் சாத்திரியார் 4 மாதத்திற்குள்ளாக தேகவியோகமாக அவரது குமாரர் பிறகு உயர்நீதிமன்ற நீதிபதியாகிய குமாரசாமி சாத்திரியாரிடம் பயிற்சியாளனாக அமர்ந்தேன். 1897-ஆம் வருசம் முழுவதும் ஏறக்குறைய சீனிவாச ஐயங்காரும் நானும் வெவ்வேறு உபாத்தியாயர்களிடம் நீதிமன்றத்தில் நிருவகிக்கவேண்டிய விசயங்களைக் கற்க வேண்டியவர்களாய் இருந்தபோதிலும் இருவரும் ஒன்றாய் சேர்ந்து நீதிமன்றங்களைச் சுற்றி, பேசிக் கொண்டு வேடிக்கையாய் காலங்கழிப்போம். ஒவ்வொரு நாட்களில் ஏதாவது பிரிய வேண்டி யிருந்தபோதிலும் மத்தியானம் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக ஒருங்கு சேர்வோம். சாயங்காலங்களில் இருவரும் சுகுணவிலாச சபைக்கு ஓடிப் போவோம்!

வெளிப்படையாகக் கூறுமிடத்தில் முதல் வருசமெல்லாம் நீதிமன்றங்களைச் சுற்றி வேடிக்கைப் பார்ப்பதிலேயே கழித்தேன். 1898-ஆம் வருசம் ஆரம்பத்தில் ‘நாம் வழக்குரைஞனாக நீதிமன்ற ஆவணங்களில் பதிப்பிக்கபட்டு பதிவு(enrol) ஆகி வழக்குரைஞர் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமே’ என்று பயந்தவனாய் 6 மாதம் சேம்சு சார்ட்டுசு அலுவலகத்தில் வி. வி. சீனிவாச ஐயங்காருடன் ஒத்துழைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்தும் விதங்களையெல்லாம் சற்றேறக்குறைய முழுவதும் கற்றுக் கொண்டேன். குமாரசாமி சாத்திரியார் அவர்களிடம் வித்தியார்த்தியாய் இருந்தபோதிலும் அவாது அலுவலகத்தில் நான் அதிகமாக ஒன்றும் கற்றவனன்று. இது அவர் தப்பிதம் அல்ல. என் தப்பிதம் தான் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். 1898-ஆம் வருசம் சூலை மாதம் நான் உயர்நீதிமன்ற வழக்குரைஞனாகப் பதிவு(enrol} செய்யப்பட்டேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, August 19, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 48 : மாயூரப் பிரயாணம் 2/2 தொடர்ச்சி)

அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2

மாயூரத்திற்கு நாங்கள் காலையில் வந்தசேர்ந்தோம். உடனே என் தந்தையார் குளியல் முதலியன செய்துவிட்டுப் பூசை செய்யத் தொடங்கினார். என் தாயார் இல்லாத காலங்களில் அவரது பூசைக்கு வேண்டிய பணிவிடைகளை நானே செய்வது வழக்கம். அவ்வாறே அன்றும் செய்தேன். அன்று புரிந்த பூசையில் என் நல்வாழ்வைக் குறித்து அவர் கடவுளைப் பிரார்த்தித்து உருகியிருக்க வேண்டுமென்று தெரிந்தது.

பூசைக்குப் பின் போசனம் செய்தோம். அப்பால் தந்தையார் சிரமபரிகாரம் பண்ணிக்கொண்டார். பிறகு பிற்பகல் மூன்று மணியளவில் நானும் அவரும் பிள்ளையவர்களைப் பார்க்கப் புறப்பட்டோம். போகும் வழியில் சிரீ மாயூரநாதர் ஆலயம் இருந்தமையின் உள்ளே சென்று சுவாமி சந்நிதானத்தில் நமசுக்காரம் செய்துவிட்டுச் சென்றோம்.

அக்காலத்தில் பிள்ளையவர்கள் மாயூரத்தில் திருவாவடுதுறை யாதீனத்துக்குரிய கட்டளை மடத்தை அடுத்து மேல்பாலுள்ள வீட்டில் இருந்து வந்தனர். நாங்கள் அவ்வீட்டிற்குச் சென்றோம்.

இருவர்

அங்கே முன்கட்டில் இருவர் இருந்தனர். அவருள் ஒருவர் விபூதி உருத்திராட்சம் தரித்துக்கொண்டு விளங்கினார். என் தந்தையாரும் நானும் அவரையே பிள்ளையவர்களென்று எண்ணினோம். மற்றொருவரிடம் மெல்ல என் தந்தையார், “பிள்ளையவர்கள் இவர்களா?” என்று கேட்டார். அவர் என் தந்தையாரது தோற்றத்தில் ஈடுபட்டு இனிய முகத்தினராகி, “இவர் திருவாவடுதுறை மகாலிங்கம் பிள்ளை” என்று கூறினார்.

உடனே தந்தையார், “மகாவித்துவான் பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டனர்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் இடையே மிகவும் சிறிதளவு காலமே சென்றிருக்கும். அதற்குள் என் மனத்தில் பயமும் சந்தேகமும் இன்பமும் மாறிமாறிப் பொருதன. அங்கே பிள்ளையவர்கள் இல்லையென்பதை அறிந்தவுடன், “அவர்கள் எங்கேயாவது வெளியே சென்றிருக்கலாம்” என்ற எண்ணம் எனக்கு முதலில் தோற்றவில்லை. “அவர்கள் ஊரில் இல்லையோ? வெளியூருக்குச் சென்றிருக்கிறார்களோ! நாம் வந்த காரியம் இப்போது கைகூடாதோ? நாம் திரும்பி ஊருக்குப்போக நேர்ந்துவிடுமோ?” என்று பலவாறு எண்ணினேன்.

“இந்த வீட்டின் பின்புறத்துள்ள தோட்டத்தில் வேலை நடப்பதால் பிள்ளையவர்கள் அதைக் கவனித்துக் கொண்டு அங்கே இருக்கிறார்கள்” என்று அக்கனவான் கூறினார். அப்போதுதான் எனக்குத் தைரியம் உண்டாயிற்று.

என் தந்தையாரிடம் பேசிக்கொண்டிருந்தவர் மாயூரத்துக்கு அருகிலுள்ள குற்றாலம் என்னும் ஊரினராகிய தியாகராசமுதலியாரென்னும் செங்குந்தச் செல்வர். பிள்ளையவர்களைக்கொண்டு அந்தத் தலத்தின் புராணத்தைத் தமிழில் இயற்றுவித்தவர். அப்புராணம் திருத்துருத்திப் புராணம் என வழங்கும்.

என் தந்தையார் அங்கிருந்த மற்றொருவராகிய மகாலிங்கம் பிள்ளையைப் பார்த்து, “திருவாவடுதுறைக் கந்சாமிக் கவிராயரை உங்களுக்குத் தெரியுமா? அவர் சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார்.

“அவர் சில காலத்திற்கு முன்பு சிவபதம் அடைந்தார்” என்று அவர் விடை கூறினார்.

தந்தையார் அச்செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தார். கந்தசாமிக் கவிராயர் என் பிதாவுக்குப் பழக்கமானவர். திருவாவடுதுறை யாதீன வித்துவானாக இருந்தவர், அரியிலூர்ச் சடகோபையங்காரின் ஆசிரியர். என்னை அவரிடம் படிக்கச் செய்யலாமென்று எந்தையார் நினைத்ததுண்டு. அவருக்கும் தமக்கும் பழக்கம் உண்டென்றும் மிக்க அடக்கம் உள்ளவரென்றும் கூறி அவருடைய குணவிசேடங்களைப் பற்றித் தந்தையார் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கே பிள்ளையவர்களுடைய தவசிப்பிள்ளை(பூசைப்பணியாள்) ஒருவர் வந்தார். அவரிடம் என் தகப்பனார் பிள்ளையவர்களை நாங்கள் பார்க்க வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர் அங்ஙனமே போய்ச் சொல்ல, பிள்ளையவர்கள் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தனர்.

முதற் காட்சி

அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சியடைந்த தோற்றமும் இளந்தொந்தியும் முழங்கால் வரையில் நீண்ட கைகளும் பரந்த நெற்றியும் பின்புறத்துள்ள சிறிய குடுமியும் இடையில் உடுத்திருந்த தூயவெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பதுபோன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப்பார்க்கும் பார்வை இல்லை; அலட்சியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.

அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்சாகம் இல்லை; சோம்பலும் இல்லை. படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே உருத்திராட்ச கண்டி விளங்கியது.

பல காலமாகத் தவம்புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உத்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக்கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர்பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கிவிட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்துவிட்டன.

வந்த காரியம் என்ன?

அவர் வந்தவுடன் நின்றுகொண்டிருந்த எங்களை உட்காரும்படிச் சொன்னார். அந்தத் தொனியிலும் அமைதியைத்தான் நான் உணர்ந்தேன். எல்லாம் சாந்தமயமாக இருந்தன. அவரும் அமர்ந்தார்; என் தகப்பனாரைப் பார்த்து, “நீங்கள் யார்? வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தனர்; அவ்வார்த்தைகள் அன்புடன் கலந்து வெளிவந்தன.

“நாங்கள் பாபநாசத்துக்குப் பக்கத்திலுள்ள உத்தமதானபுரத்திலிருந்து வருகிறோம். தங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இவன் என் குமாரன். தமிழ் படித்து வருகிறான். சிலபேரிடம் பாடம் கேட்டிருக்கிறான். சங்கீதமும் அப்பியாசம் செய்திருக்கிறான். தங்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்று மிகுந்த ஆவல்கொண்டிருக்கிறான். தமிழைத் தவிர வேறு ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. எப்போதும் தங்கள் ஸ்மரணையாகவே இருக்கிறான். ஆகையால் தங்களிடம் இவனை அடைக்கலமாக ஒப்பித்துவிட்டுப் போக வந்தேன்.”

“உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் வேங்கடசுப்பன் என்பர். இவன் பெயர் வேங்கடராமன்” என்றார் என் தந்தையார்.

“வேங்கடசுப்பனென்பது நல்ல பெயர். வேங்கட சுப்பிரமணியனென்பதன் மரூஉ அது. திருவேங்கட மலையில் முருகக் கடவுள் கோயில்கொண்டிருக்கிறாரென்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.”

அவர் பேச்சிலே ஒரு தனி இனிமையை நான் உணர்ந்தேன். “சாதாரணமாகப் பேசும்போதே அருமையான விசயம் வெளிவருகின்றதே!” என்று நான் ஆச்சரியம் அடைந்தேன். பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன என்ன நூல்களைப் பாடங் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். நான் மெல்ல என் வரலாற்றைச் சொன்னேன்; சடகோபையங்காரிடம் படித்தது முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் காரிகைப் பாடம் கேட்டது வரையில் விரிவாக எடுத்துரைத்தேன்.

“இவருக்கு இசையில் எந்த மட்டும் பயிற்சி உண்டு?” என்று என் தந்தையாரை நோக்கி அவர் கேட்டார். சங்கீதத்தை இசையென்று அவர் சொல்லியதை நான் கவனித்தேன். தாம் எனக்குச் சங்கீதத்தை முறையாகக் கற்பித்து வந்ததை என் தந்தையார் தெரிவித்தார். அப்பால் தாம் கனம் கிருட்டிணையரிடம் குருகுலவாசம் செய்து சங்கீதம் கற்றதையும் சொன்னார்.

“இந்த ஊரிலுள்ள கோபாலகிருட்டிண பாரதியாரைத் தெரியுமோ?” என்று பிள்ளையவர்கள் கேட்டனர்.

“நன்றாகத் தெரியும். அவரும் கனம் கிருட்டிணையரிடம் சிலகாலம் அப்பியாசம் செய்ததுண்டு.”

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Sunday, August 13, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம்

      14 August 2023      No Comment



(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 9 தொடர்ச்சி)

‘என் சுயசரிதை’ 10 : தாய் மரணம்


முதலில் துக்ககரமானதைப்பற்றி எழுதுகிறேன். இவ் வருசம் செப்டம்பர் மாதம் 10-ஆந்தேதி என் தெய்வத்தின் ஒரு கூறான என் தாயார் திடீரென்று வாந்திபேதி கண்டு சிவலோகப் பிராப்தி அடைந்தார்கள். இது பகற்காலத்தில் வானம் களங்கமில்லாமலிருக்கும்போது இடி விழுந்தது போல் என்னை மகத்தான துயரத்தில் ஆழ்த்தியது. இனி நமக்கு இவ்வுலகில் சந்தோசமே கிடையாதென்று நினைத்தேன். ஆயினும் சற்றேறக்குறைய மூன்று மாதத்திற்குள் அவர்கள் இறந்ததே நலம் என்று சந்தோசப்பட்டேன். இதற்குக் காரணம் அந்த மூன்று மாதத்தின் பிறகு என் கடைசித் தங்கை தனது 16-வது வயதிற்குள் தன் புருசனை இழந்து விதவையானதேயாம். இது நேர்ந்தபோது அக்கோர சம்பவத்தைக் காணாது என் தாயார் இறந்ததே நலமென்று உறுதியாய் நம்பினேன். என் தாயார் உலகில் ஒரு பெண்மணி அனுபவிக்கவேண்டிய சுகங்களையெல்லாம் அனுபவித்தே இறந்தார்கள் என்று நான் கூறவேண்டும். தனது எட்டு குழந்தைகளுக்கும் விவாகமாகி (எனக்கு 1890-ம் வருசம் விவாகமானது) பேரன் பேத்திகளெடுத்து தன் கணவனுக்கு சசுட்டிபூர்த்தியாகி சுமங்கலியாய் ஒரு மாங்கல்யத்திற்கு இரண்டு மாங்கல்யங்களாகப்பெற்று சிவ சாயுக்தமடைந்தது வருந்தத்தக்க விசயமல்ல என்று என் மனதைத் தேற்றிக் கொண்டேன். அவர்களுடைய உடல் அவர்கள் கோரிக்கையின்படியே சமாதியில் வைக்கப்பட்டது.

இரண்டாவது சம்பவம் என் ஆயுளுள் நேரிட்டவைகளுள் மிகவும் சந்தோசகரமானது. இவ் வருசம் கோடைக்கால விடுமுறையில் காலஞ்சென்ற ஆந்திர நாடகப் பிதா மகன் என்று கௌரவப் பெயர் பெற்ற வெ. கிருட்டிணமாச்சார்லு என்பவர் பல்லாரியிலிருந்து சென்னைக்கு வந்து தான் ஏற்படுத்திய சரச வினோத சபை அங்கத்தினருடன் தெலுங்கு நாடகமாட அதற்கு ஓர் இரவு நான் என் தகப்பனாருடன் போய்ப் பார்க்கும்படி நேரிட்டதேயாம். இதுதான் பிற்காலம் நான் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும், தமிழ் நாடகங்களில் நடிப்பதற்கும் அங்குரார்ப்பணமாயிருந்த சம்பவம். இதைப்பற்றி விவரமெல்லாம் அறிய விரும்புவோர் எனது “நாடக மேடை நினைவுகள்” என்னும் புத்தகத்தில் கண்டு கொள்ளும்படி வேண்டுகிறேன், பி.ஏ. சரித்திர பரிட்சையில் நேரிட்ட இன்னெரு விசயத்தை இங்கு எழுதுகிறேன். நான் மாநிலக் கல்லூரியிலிருந்தும், வி. வி. சீனிவாச ஐயங்கார் பச்சையப்பன் கல்லூரியிலிருந்தும் போனோம். இப்பரிட்சைக்கு. இருவரும் பேரவை இல்லத்தில்(செனெட் அவுசில்) பரிட்சைக்காக, தினம் சந்தித்து மத்தியான போசன காலத்தில் ஒன்றாய் உட்கார்ந்து பேசுவது வழக்கம். பரிட்சையில் ஒருநாள் மத்தியானம் பேசிக் கொண் டிருந்தபோது எனது நண்பர் “சம்பந்தம், நான் சரித்திரத்தில் சிறப்புப் பாடப் புத்தகத்தை நன்கு படிக்கவில்லை. சாயங்காலப் பரிட்சைத்தாளில் என்ன கேட்கப் போகிறார்கள் சொல் பார்ப்போம்” என்று சொன்னார். நான் யோசித்து “இந்த யுத்தத்தைப் பற்றி கேள்வி வரலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி அதன் விவரங்களைச் சொல்லி வைத்தேன். உடனே பரிட்சை மணி அடிக்க இருவரும் தேர்வுக்கூடத்துக்குப் போய் உட்கார்ந்தோம். இருவர்களுடைய பெயர்களும் S எனும் ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகிறபடியால் எங்கள் நாற்காலிகள் சற்று அருகாமையிலிருந்தன. பரிட்சைக்காகிதம் (Examination paper) எங்களுக்குக் கொடுக்கப் பட்டவுடன் அதில் நான் ‘சோசியம்’ சொன்ன கேள்வியே கேட்டிருந்தது! இதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். வி.வி. சீனிவாச ஐயங்காரும் ஆச்சரியப்பட்டு புன்முறுவலுடன் என்னைப் பார்த்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.


1892-ஆம் வருசம் மாநிலக் கல்லூரியில் இன்னொரு வருசம் படித்தேன். ஆங்கிலம் தமிழ் பரிட்சைகளில் முதல் வகுப்பில் தேறினதுபோல் சரித்திரம் (History) பிரிவிலும் முதல் வகுப்பில் தேற வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதே இதற்குக் காரணம் தெய்வத்தின் கருணையினால் என் கோரிக்கையின்படியே முதல் வகுப்பில் தேறினேன். அன்றியும் இப் பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினவன் நான் ஒருவன்தான் மாகாண முழுவதிலும். இதைப்பற்றி சில விவரங்கள் எழுத இச்சைப்படுகிறேன். நான் மாநிலக் கல்லூரியில் படித்த போது சரித்திரத்தில் முதலாவதாகத் தேறினதற்காக, கார்டன் பரிசும், தமிழில் முதலாவதாக தேறியதற்காக, போர்டீலியன் பரிசும் பெற்றேன். அன்றியும் தமிழ் வியாசப் பரிட்சையில் முதலாவதாக இருந்ததற்காக நார்டன் தங்கப் பதக்கம் (Norton gold medal) பெற்றேன். பிறகு பவர் வர்னாகுலர் பரிசும் பெற்றேன். இப்பரிசு ஆமர்டன் என்னும் அமெரிக்க ஆசிரியர் எழுதிய ஒரு புத்தகத்தில் சில பாகங்களை மொழி பெயர்த்ததற்காகக் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட மூன்று பரிசுகளின் மொத்த தொகை எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் சுமார் உரூபாய் 144 ஆயிற்று. இதற்காக கொடுக்கப்பட்ட காசோலையை என் தகப்பனாரிடம் கொடுத்து சந்தோசப்பட்டேன். அவரும் சந்தோசப்பட்டார்.


1893-ஆம் வருசம் நான் பி.ஏ. பட்டம் பெற்றபோது சென்னை சர்வ கலாசாலையாரால் சரித்திரத்தில் முதலாவதாக தேறினதற்காக நார்த்விக் (Northwick) பரிசு கொடுக்கப்பட்டது.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, August 12, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 48 : மாயூரப் பிரயாணம் 2/2

 


(உ.வே.சா.வின் என் சரித்திரம் 47 : மாயூரப் பிரயாணம் 1/2 தொடர்ச்சி)

என் சரித்திரம் – பாகம் 2

மாயூரப் பிரயாணம் 2/2

“என்ன செய்வது! நம்முடைய கால வித்தியாசம் இப்படி இருக்கிறது. இதுவரையிலும் அவன் படிப்பையே முக்கியமாக எண்ணி எங்கெங்கே போனால் அவன் படிப்பும் நம் காலட்சேபமும் நடைபெறுமோ அங்கங்கெல்லாம் போய் இருந்தோம். இப்போதோ மாயூரத்தில் நாம் போய் இருப்பது சாத்தியமன்றே! கிராமங்களில் உள்ள சனங்களைப் போல நகரவாசிகள் நம்மை ஆதரிக்க மாட்டார்களே! தவிர, அரியிலூரைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள் என்னிடம் அபிமானமுள்ளவர்கள். மாயூரத்தில் அப்படி யார் இருக்கிறார்கள்? இவனுக்கே ஆகாரம் முதலிய சௌகரியங்கள் கிடைக்குமோவென்று சந்தேகப்படுகிறேன். அவற்றிற்கு வேண்டிய ஏற்பாடு செய்யப் பணம் வேண்டும். பணத்திற்கு என்ன செய்வது!” என்று என் தந்தையார் வருந்தினார்.

மந்திரோபதேசம்

“ஈசுவர சகாயம் இருந்தால் எல்லாம் கை கூடும” என்ற கொள்கையையுடைவர் என் தந்தையார். சிவபூசை, மந்திர சபம் முதலியவற்றில் அவருக்கு நம்பிக்கை அதிகம். எனக்குச் சில மந்திரங்களைத் தக்கவர்களைக்கொண்டு உபதேசம் செய்விக்கவேண்டுமென்று அவர் கருதினார்.

உத்தமதானபுரத்திற்கு வடக்கிலுள்ள தியாகசமுத்திரமென்னும் ஊரில் நீலகண்டைய ரென்பவர் கிராமக் கணக்கு வேலைபார்த்து வந்தார். அவருக்கும் என் தந்தையாருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. அவர் சங்கீதப் பயிற்சி உடையவர். கனம் கிருட்டிணையருடைய கீர்த்தனங்கள் பல அவருக்குத் தெரியும். மந்திர சாத்திரத்திலும் அவர் வல்லவர். பல தெய்வங்களை உபாசித்து வந்தார். பலவகையான மந்திர சபங்களையும் யந்திர பூசையையும் அவர் செய்து வந்தார். சர்ப்ப விசத்தைப் போக்குவதில் நிபுணர். நல்லபாம்பு கடித்து மயக்கமுற்ற ஒருவனை ஞாபகமே இல்லாத நிலையில் அவரிடம் எடுத்து வந்தால் பத்து நிமிசத்தில் மந்திரித்து அவன் தானே எழுந்து நடந்து செல்லும்படி செய்வார்.

என் தந்தையார் அவரிடத்தில் என்னை அழைத்துச் சென்று சிரீ வல்லபகணபதி மந்திரம், சிரீ நீலகண்ட மந்திரம், சிரீ சுப்பிரமணிய சடாட்சரம் என்பவற்றை உபதேசம் செய்யச் சொன்னார். அவர் அவற்றை உபதேசித்து, “உனக்கு மேலும் மேலும் சௌக்கியம் உண்டாகும்” என்று ஆசீர்வாதம் செய்தார். சில தினம் அவரோடு இருந்து பழகிய பின் அவரிடம் விடைபெற்று உத்தமதானபுரம் வந்து சேர்ந்தோம்.

பிரயாண ஏற்பாடு

மாயூரப் பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினோம். என் தந்தையார் கையிலோ பணம் இல்லை. அதனை அறிந்து அவர் நண்பரும் உத்தமதானபுரத்துக்கு மிகவும் சமீபமான உத்தமதானி என்னும் ஊரில் இருந்தவருமான சாமு மூப்பனர் என்பவர் செலவுக்காக உரூபாய் இருபத்தைந்து கடனாகக் கொடுத்தார். அந்தத்தொகை அப்பொழுது மிகப்பெரிய சம்பத்தைப்போல உதவியது; என் படிப்புக்கு மூலாதாரமாக இருந்தது. உத்தமதானபுரத்திலும் பக்கத்திலுமுள்ள பந்துக்களிடம் நான் மாயூரம் போவதாக விடைபெற்றுக்கொண்டேன்.

என் தாயார் அப்போது கருவுற்றிருந்தமையால் என் தந்தையார் அவரையும் என்னையும் அழைத்துக்கொண்டு சூரியமூலைக்குச் சென்றார். அங்கே நாங்கள் சில தினம் இருந்தோம். என் மாதாமகர் (தாயின் தகப்பனார்)நான் பிள்ளையவர்களிடம் படிக்கச் செல்வதை அறிந்து மகிழ்ந்து என்னை ஆசீர்வதித்தார்.

மாயூரம் சென்றது

அப்பால் என் தாயாரை அங்கே விட்டுவிட்டு நானும் என் தந்தையாரும் மாயூரம் வந்து சேர்ந்தோம். அவ்வூரில் மகாதானபுரத் தெருவில் என் சிறிய தந்தையார் வேட்டகத்தில் (மனைவி பிறந்த வீட்டில்) தங்கினோம். அப்பொழுது அங்கே என் சிறிய தாயாரும் வந்திருந்தார். எனக்கு நிமிடத்திற்கு நிமிடம் சந்தோசத்தினால் உண்டாகும் படபடப்பு அதிகமாயிற்று. என் தந்தையாருக்கோ வரவரக் கவலையின் அறிகுறி முகத்தில் தோற்றத் தொடங்கியது. பல நாட்களாக நினைந்து நினைந்து எதிர்பார்த்து ஏங்கியிருந்த நான் ஒரு பெரிய பாக்கியம் கிடைக்கப் போகிறதென்ற எண்ணத்தால் எல்லாவற்றையும் மறந்தேன். அக்காலத்தில் கோபாலகிருட்டிண பாரதியார் மாயூரத்தில் இருந்தார். அச்செய்தியை நான் அறிவேன். வேறு சந்தர்ப்பமாக இருந்தால் நான் மாயூரத்தில் அடிவைத்தேனோ இல்லையோ உடனே அவரைப் போய்ப் பார்த்திருப்பேன்; மாயூரத்திலுள்ள அழகிய சிவாலயத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்திருப்பேன்; அந்நகரிலும் அதற்கருகிலும் உள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்ந்திருப்பேன். அப்போதோ என் கண்ணும் கருத்தும் வேறு ஒரு பொருளிலும் செல்லவில்லை.

ஒரு நல்ல காரியத்திற்கு எத்தனை தடைகள் உண்டாகின்றன! நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனாலும் அப்படியே நின்றுவிடவில்லை. பந்துக்களில் பலர் நான் சம்சுகிருதம் படிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இராமாயண, பாரத, பாகவத காலட்சேபம்செய்து சம்சுகிருத வித்துவானாக விளங்க வேண்டுமென்பது அவர்கள் கருத்து. வேறு சில கனவான்களோ நான் இங்கிலீசு படித்து விருத்திக்கு வரவேண்டுமென்று எண்ணினார்கள். உதவி செய்வதாகவும் முன்வந்தனர். நான் உத்தியோகம் பார்த்துப் பொருளீட்ட வேண்டுமென்பது அவர்கள் நினைவு. என் தந்தையாரோ சங்கீதத்தில் நான் வல்லவனாக வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பம் முற்றும் நிறைவேறவில்லை; எல்லாருடைய விருப்பத்திற்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்துவிட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெறவேண்டுமென்று அவாவி நின்றது. சம்சுகிருதம், தெலுங்கு, இங்கிலீசு இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவரவில்லை. சில சமயங்களில் அவற்றில் வெறுப்பைக்கூட அடைந்தேன். சங்கீதம் பரம்பரையோடு சம்பந்தமுடையதாகவும் என் தந்தையாரது புகழுக்கும் சீவனத்துக்கும் காரணமாகவும் இருந்தமையால் அதன்பால் எனக்கு அன்பு இருந்தது. ஆனால் அந்த அன்பு நிலையாக இல்லை. என் உள்ளத்தின் சிகரத்தைத் தமிழே பற்றிக்கொண்டது; அதன் ஒரு மூலையில் சங்கீதம் இருந்தது. எந்தச் சமயத்திலும் அந்தச் சிறிய இடத்தையும் அதனிடமிருந்து கவர்ந்துகொள்ளத் தமிழ் காத்திருந்தது.

மற்ற யாவரும் வேறு வேறு துறையில் என்னைச் செலுத்த எண்ணியபோது என் எண்ணம் நிறைவேறுவது எவ்வளவு கட்டமானது! திருவருளின் துணையால் அது நிறைவேறும் நிலைமையில் இருந்தது. “தமிழ்நாட்டிலே இணையற்று விளங்கும் ஒரு தமிழாசிரியரிடம் நான் அடைக்கலம் புகுந்து தமிழமுதத்தை வாரி நுகர்ந்து செம்மாந்து நிற்பேன்” என்ற நினைவில் முன் பட்டபாட்டையும் மேலே என்ன செய்வது என்ற யோசனையையும் மறந்தேன். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகத் தோற்றியது. பிள்ளையவர்கள் முன்னே சென்று அவரைக் கண்ணாரக் கண்டு அவர் பேசுவதைக் கேட்டு அவர் மாணாக்கர் கூட்டத்தில் ஒருவனாகச் சேரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நின்றேன்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.