Monday, June 28, 2021

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 9: கபிலர்

 அகரமுதல




(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 8 இன் தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 9

கபிலர்


புலவர் கருத்தறிய மலையமான் பெரிதும் விழைந்தான். அஃதறிந்து ஆராமகிழ்வு கொண்டு, அருந்தமிழ்ப் புலவரும் பெருமை சான்ற வேள் பாரியின் மகளிரை வதுவை புரிய உதவ வேண்டும் என்ற தம் விருப்பத்தைக் கூறி, அதுவே தாம் விழையும் பரிசில் எனவும் இயம்பினார். புலவரின் கருணையுள்ளத்தையும், கருவி வானம் போல வரையாது இரவலர்க்குச் சுரந்த வள்ளியோன் மக்கட்குத் தான் ஆற்ற வேண்டிய கடமையையும் எண்ணிப்பார்த்தான் காரி. அவன் உள்ளத்தில் ஒர் அழகோவியம் எழுந்தது. மாவண் பாரியின் மகளிரும் தன் மக்களும் வதுவைக் கோலத்தில் வீற்றிருக்கும் திருக்காட்சி அவன் உள்ளக் கிழியில் உயிரோவியமாய் உருப்பெற்றிருத்தல் கண்டான். தீந்தமிழின் இன்பம் போன்றதொரு பேரின்பம் அவன் உடலெல்லாம் பாய்வதை உணர்ந்தான்;

‘உள்ளத்து எழுந்த இவ்வெண்ணமே வாழ்வாக-நனவாக-மலராதோ!’என்று ஏங்கினான்; தன் அருமை மக்களின் மனம் அறிய முயன்றான்; தான் பெற்ற செல்வர்கள்-அறிவும் ஆண்மையும் அருளும் ஒருங்கே பெற்ற காளையர்-கருத்தும் எவ்வாறோ தம் மனம் போலவே இருக்கக்கண்டான். பருவ மழை கண்ட பயிர் போல அவன் உள்ளம் பூரித்தது. ‘நெடுமாப் பாரியின் மகளிர் என் மருகியர்!’ என்ற நினைவு அவன் சிந்தையெல்லாம் தேனாகச் செய்தது. அளவிலா மகிழ்வு கொண்டான் அத்தேர்வண் தோன்றல். ’பறம்பின் கோமான் செல்வியரை அடைய மலையமான் குடி செய்த மாதவம் என்னையோ!’ என இறும்பூது கொண்டு, இருந்தமிழ்ப் புலவர் கோனிடம் தன் கருத்தையும் இசைவையும் கூறி, உவகைக் கடலாடியிருந்தான். கபிலர் பெருமானர் கொண்ட மகிழ்விற்கும் ஒர் எல்லையுண்டோ! அவர் தமிழ் நெஞ்சம் இன்பவாரியாயிற்று. ‘பாரியே, பறம்பின் கோமானே, சேட்புலஞ்சென்ற செம்மலே, என் கடன் இனிது முடியலாயிற்று!’ என்று அவர் உள்ளம் இன்ப வெள்ளத்தில் துள்ளிக் குதித்தது; ஆடிப் பாடி ஆனந்தக் கண்ணீர் மல்கித் திளைத்தது. இந்நிலையில் மலையமான் மைந்தர் இருவரும் மாவண் பாரியின் மகளிர் இருவரையும் திருக்கரம் பற்றி, இருநில மக்கள் இதயம் இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்தனர்.

அருமைத் தலைவனது ஆவி குளிர நட்புக் கடனாற்றிய புலவர் கோமானார் நெஞ்சம் மகிழ்வுக் கடலில் நீந்தி விளையாடியது. அவர், எல்லையில்லா மகிழ்வால் எம்மான் காரியின் புகழெல்லாம் இன்பத் தமிழ்க் கவிதைகளால் பாடி, அவனி உள்ள வரை அவன் பெருமை அழியா வண்ணம் செய்தார். அவர் பாடிய அருந்தமிழ்க் கவிதைகள் அந்நாள் புலவர் நெஞ்சிலெல்லாம் இன்பத் தேன் பாய்ச்சிற்று.

‘பறையிசை அருவி முள்ளூர்ப் பொருந!
தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய
நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புலனழுக் கற்ற அந்த ணாளன்
இரந்துசென் மாக்கட்(கு) இனியிட னின்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்.’         (புறம். 126)

என நல்லிசைப் புலமை மெல்லியலாராகிய மாறோக்கத்து நப்பசலையார் போற்றிப் புகழ்ந்துள்ளார் என்றால், செஞ்சொற்கபிலரின் அருந்தமிழ்க் கவிதையின் ஆற்றலை எவரே அளந்துரைக்க இயலும்!

நெடுமாப் பாரிக்குத் தாம் செய்ய வேண்டிய ஒரே கடமையையும் செய்து முடித்த பின் இவ்வுலகத்தில் கபிலருக்குச் சுமை ஏது? ‘உள்ளம் கலந்து உயிர் கலந்து பழகிய பாரியில்லையே!’ என்ற ஏக்கமே புலவரின் இதயத்தைப் பிளந்தது.
‘கடமை முடிந்தது; பாரியில்லா நம் வாழ்வும் முடிக!’ என்று கருதினார் கபிலர் பெருமானார். அந்தோ! நானிலமெல்லாம் கண்ணீர் சிந்தி நடுங்கு துயர் அடைய, நற்றமிழ்க் கவிஞர் தாம் எண்ணியதை நிறைவேற்ற உறுதி கொண்டார்; பெண்ணையாற்றின் நடுவில் திண்ணிய சிந்தையராய் வடதிசை நோக்கி அமர்ந்தார்; உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்க உளங்கொண்டார். “அந்தோ! அருந்தமிழ்ப் புலவரேறே, பறம்பின் கோமான் ஆருயிர்த் தோழரே, செய்ந்நன்றி மறவாச் செம்மலே, மதியாரை மதியாத மாற்றுயர்ந்த பசும் பொன்னே, மறைந்த வள்ளலின் மாணிக்கங்களைக் காத்த கருணை முகிலே, மாமணியே, மங்காப் புகழ் ஒளியே, வண்டமிழ்ச் செல்வரே, சங்கத் தமிழ் வளர்த்த எங்கள் குலச் செல்வமே,” என்று நாத் தழுதழுக்கக் கூறிஉடல் நடுங்க-உள்ளங்குமுற-உயிர் சோர நற்றமிழ் மக்களெல்லாம் குவித்த கையராய்க் கூடி நின்று கண்ணீர் பெருக்கினார்கள்.

அந்நிலையில் இருந்தமிழ்ப்புலவர் கபிலர் பெருமானார் இதயம் பீரிட்டு எழுந்த கவிதையை என்னென்பது! “அண்ணலே, பாரியே, உளங்கலந்த உயிர் நட்பிற்கு ஒவ்வா வகையில் உன்னுடன் நானும் வருதலைத் தடை செய்து விட்டாயே! நினக்கு நான் ஏற்ற நட்பினன் அல்லேனெனினும், இம்மைபோல மறுமையிலும் இடையிலாக் காட்சியுடை நின்னோடு இயைந்து வாழ ஏங்கி கிற்கின்றன என் உள்ளமும் உயிரும்! ஊழ்-உயர்ந்த ஊழ்-இவ்வுள்ளத்தின்-உயிரின்-ஆரா வேட்கை தீர அருள் புரிவதாக!” என்னும் கருத்தமைய,

மலைகெழு நாட! மாவண் பாரி!
கலந்த கேண்மைக்(கு) ஒவ்வாய் நீஎற்
புலந்தனே யாகுவைபுரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லா(து)
ஒருங்குவரல் விடாஅ(து) ஒழிகெனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு, மற்றியான்
மேயினேன் அன்மை யானே யாயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னொ(டு)
உடனுறை வாக்குக உயர்ந்த பாலே.’         (புறம். 236)

என்ற அருந்தமிழ்ப் பாடலைக் கல்லும் புல்லும் கரைந்துருகப்பாடி, மாநில மக்களை எல்லாம் கண்ணீர் வெள்ளத்தில் வீழ்த்தி, ஊணின்றி வடக்கிருந்த கபிலர் பெருமானார் உயிர் துறந்தார்.

வீரப்போர் புரிந்து மாண்டான் வேள் பாரி; வடக்கிருந்து உயிர் துறந்தார் கபிலர். கலைக்காகவே வாழ்ந்த கொடைப்பெருஞ்சான்றோனும் மறைந்தான்; அவன் நட்பிற்காகவே வாழ்ந்த அருந்தமிழ்ச் சான்றோரும் மறைந்தார். வெங்கதிரையும் தண்ணிலவையும் இழந்த வானம் போலத் தமிழகம் ஆராத் துயர்க்கடலில் ஆழ்ந்தது. ஈராயிரம் ஆண்டுகள் சென்றுவிட்டன. கபிலர்-பாரி காலம், இலக்கியக் காலமாய்-பழந்தமிழ் நூற்றாண்டாய் மாறிவிட்டது. எனினும், இன்றும்-என்றும்-இவ்விரு பெருஞ் சங்ககாலச் சான்றோரையும் இன்பத் தமிழகம் தன் இதயக் கோயிலில் வைத்துப் போற்றி வழிபடுவது திண்ணம்.

(அடுத்துக் காண்பது ஒளவையாரை)

(தொடரும்)

முனைவர் சஞ்சீவி:

சங்கக்காலச் சான்றோர்கள்



Sunday, June 27, 2021

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 12

 

அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 11. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 5

பங்குனி மாதம் பிறந்தால் எங்கள் ஊர்க்கு ஒரு புத்துயிர் பிறக்கும். பங்குனித் திருவிழா கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதை ஒட்டித் தேரோடும் தெருக்கள் எல்லாம் மிகவும் அலங்காரம் செய்யப்படும். கடைத்தெரு மிகப் பொலிவாக விளங்கும். வழி எல்லாம் பந்தல்களும் தோரணங்களும் கட்டப்படும். திருவிழாத் தொடங்கியவுடன், வீடுதோறும் ஆட்கள் மூன்று மடங்கு நான்கு மடங்காகப் பெருகிவிடுவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியூரிலிருந்து உறவினர்களும் நண்பர்களும் திருவிழாவைப் பார்ப்பதற்காக வந்து தங்கியிருப்பார்கள். எங்கள் தெருவின் வீடுகளிலும் விருந்தினர் பலர் இருப்பார்கள். அல்லாமலும், எங்கள் தெருத்திண்ணைகள் தோறும் வெளியூரார் முன்பின் அறியாதவர் பலர் கேட்காமலே வந்து தங்கிப் படுத்துக்கொள்வார்கள். வேப்ப மரங்களைச்சுற்றி ஆண்களும் பெண்களும் கட்டுச்சோறு தின்றுகொண்டும் வெற்றிலைபாக்கு மென்று கொண்டும் இருப்பார்கள்.

திருவிழாக் காலத்தில், யார், ஏன் வந்தீர்கள் என்று வீட்டுக்காரர் வெளியாரைக் கேட்கமாட்டார்கள்; கேட்கவும் கூடாது. எல்லாரும் இறைவனுடைய மக்கள் என்ற மெய்யுணர்வு பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. ஆனாலும் வழி வழியாக வந்த நாகரிகமாக அதைக் கருதினார்கள். ஆகையால், திருவிழாக் காலத்தில் வீட்டின் உட்பகுதி மட்டுமே வீட்டுக்காரர்க்கும் அவர்களின் உறவினர்க்கும் உரிமையாக இருக்கும்; வீட்டின் வெளிப்பகுதி, திண்ணை முற்றம் முதலியன வெளியார் எல்லார்க்கும் உரிய பொது இடமாகக் கருதப்பட்டு வந்தன. இன்னும் சொல்லப்போனால், திண்ணை முற்றம் முதலியவைகளே அல்லாமல் அந்தந்த வீட்டுக் கிணறுகளும் எல்லார்க்கும் பொதுவுடைமையாக இருந்தன. சென்னை முதலான நகரங்களில் நாள்தோறும் திருவிழாப் போன்ற கூட்டம் இருந்தபோதிலும், இந்தப் பரம்பரை நாகரிகம் பொதுவுடைமை நாகரிகம் அவர்களுக்குத் தெரியாது. சட்டமும் சட்டத்தை மீறும் தந்திரமும் அவர்களுக்குத் தெரியுமே தவிர, இப்படிப்பட்ட பரம்பரை நாகரிகமும் அதன் பெருமையும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த ஆண்டில் பங்குனித் திருவிழாவின் போது எங்கள் வீட்டுக்கு வேலம், அம்மூர் முதலான கிராமங்களிலிருந்தும் சென்னையிலிருந்தும் உறவினரும் நண்பரும் வந்திருந்தார்கள். பாக்கிய அம்மையார் வீட்டுக்கும் யாரோ வந்திருந்தார்கள். சந்திரன் வீட்டிற்கு அவனுடைய தாயும் தங்கையும் வந்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு வந்த உறவினரில் முக்கியமானவர்கள் என் சொந்த அத்தையும் அத்தை கணவரும் அத்தை மகள் கயற்கண்ணியும் ஆவார்கள்.

சந்திரனுடைய தாயைப் பார்த்தபோதுதான், சந்திரன் அவ்வளவு அழகாக இருப்பதற்கு காரணம் தெரிந்து கொண்டேன். அந்த அம்மா கடைந்தெடுத்த பதுமை போல் இருந்தார். நல்ல ஒளியான நிறம், அளவான உயரம், மென்மையான உடல், ஓவியம் தீட்டினாற்போன்ற புருவமும் விழியும் நெற்றியும் உடையவர் அவர். சந்திரனுடைய தந்தைக்கும் உடம்பில் ஒரு குறையும் இல்லை. ஆனாலும் அவருடைய தோற்றம் மிக அழகானது என்று கூற முடியாது. சந்திரனுடைய தாய் அழகின் வடிவமாக விளங்கினார். அந்த அழகிற்கு ஏற்ற அமைதியும் அவரிடம் விளங்கியது. சந்திரனுடைய முகத்தில் தாயின் சாயல் நன்றாகப் புலப்பட்டது. அந்த உண்மை அவனுடைய தங்கையைப் பார்த்தபோது தெளிவாயிற்று. தாயின் அழகுக்கும் அண்ணனின் அழகுக்கும் ஒரு பாலம் போல் விளங்கினாள் அவள்.

அவள் பெயர் கற்பகம், பெருங்காஞ்சியிலேயே சந்திரன் படித்த பள்ளிக்கூடத்திலேயே அவள் படித்து வந்தாள். அவள் அப்போது ஏழாவது படித்துவந்தாள். ஏறக்குறைய அவள் வயதாக இருந்தாள் என் அத்தை மகள் கயற்கண்ணி. அவள் ஐந்தாவதுதான் படித்து வந்தாள். அந்த ஊரில் ஐந்தாவதுக்குமேல் படிக்க வகுப்பு இல்லாத காரணத்தால் “என் மகளுடைய படிப்பு இதோடு முடிந்துவிட்டது. நீ சீக்கிரம் படித்து முடித்து இவளைக் கல்யாணம் செய்துகொள்” என்று அத்தை என்னைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தார். “உன் மகள் படிப்பு முடிந்து போச்சு; அதனால் என் மகனுடைய படிப்பையும் சீக்கிரம் முடிக்கச் சொல்கிறாயா?” என்று அம்மா வேடிக்கையாகக் கேட்டார். அதைக் கேட்ட கயற்கண்ணி, “போதும் மாமி! சும்மா இருங்கள், உங்களுக்கு இதே பேச்சு!” என்பாள்.

கற்பகத்தைப் போலவே கயற்கண்ணி சுறுசுறுப்பாக இருந்தபோதிலும் அவ்வளவு அழகாக இல்லை. வளர்ந்த பிறகும் என் அத்தைபோல் தான் இருப்பாள் என்று எனக்குத் தோன்றியது. அது மட்டும் அல்ல; அவளுடைய வாயாடித் தன்மை எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. யாராவது ஒன்று சொன்னால், அவள் இரண்டு மூன்று சொல்வாள். யாரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று துடுக்காகக் கேட்டு விடுவாள். ஏதாவது அறிவுரை சொன்னாலும், “ஆமாம் உங்களுக்குத்தான் நிரம்பத் தெரியுமோ? போதும் நிறுத்துங்கள்” என்பாள். எனக்கு அந்தப் பேச்செல்லாம் பிடிக்காது. என் தங்கை மணிமேகலையிடமும் அவள் அடிக்கடி வம்பாகப் பேசுவாள். வலுச்சண்டை இழுப்பாள். அதைக் கண்ட நான் உடனுக்குடன் கடிந்து பேசுவேன். அம்மா அவ்வப்போது என்னைத் தடுத்து, “வேலு! சின்னப் பெண் அப்படித்தான் பேசுவாள். கிராமத்தில் பழகி வளர்ந்தவள். அங்கெல்லாம் அப்படித்தான் பேசுவார்கள். நீ கோபித்துக் கொள்ளக்கூடாது” என்று மெல்ல என்னிடம் சொல்வார். தொலைந்து போகட்டும் என்று நான் விட்டு விடுவேன்.

கயற்கண்ணியிடம் எனக்கு எவ்வளவு வெறுப்பு வளர்ந்ததோ, அவ்வளவும் கற்பகத்திடம் விருப்பமாக வளர்ந்தது. அடிக்கடி சந்திரன் வீட்டுக்குப் போய்க் கற்பகம் பேசுவதையும் செய்வதையும் கவனித்தேன். திருவிழாப் பார்க்க அவள், போனால் நானும் போவேன். கடைத்தெருவுக்கு நானும் சந்திரனும் போகும் போது, “கற்பகமும் வருவதாக இருந்தால் வரட்டுமே, வந்து பார்க்கட்டுமே” என்று அழைத்துக் கொண்டு போவேன்.

பொய்க்கால் குதிரை, மயில் நடனம், பொம்மலாட்டம், தெருக்கூத்து முதலியவற்றைப் பார்ப்பதற்குச் சந்திரனுடைய தாயும் கற்பகமும் என் அத்தையும் கயற்கண்ணியும் என் தங்கை மணிமேகலையும் சேர்ந்து போவார்கள். சந்திரன் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்று நின்றுவிடுவான். “அவன் போகிறானா, பார், படிப்பில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறான்! நீ மட்டும் போகலாமா? உள்ளே போய்ப் படி, சாமி ஊர்வலம் வரும் போது கூப்பிடுவேன். அப்போது வா” என்று அம்மா என்னைக் கடிந்து அனுப்பி விடுவார். அப்பா கடையிலிருந்து திரும்பிவரும் நேரம் என்று நானும் போகாமல் நின்றுவிடுவேன்.

திருவிழா முடியும் வரையில் எங்கள் தெரு நிறையக் கூட்டம் போனது போனபடி, வந்தது வந்தபடி இருந்தது. கிராமத்து ஏழைமக்களே பெரும்பாலோராக இருந்தார்கள். ஒருவகையில் ஊரைச் சுற்றி அசுத்தம் செய்யப்பட்ட போதிலும் தெருவெல்லாம் எச்சிலும் எச்சிலையுமாக இருந்தபோதிலும், எல்லோருடைய மனமும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. உழைத்த உழைப்பே உழைத்து, குடித்த கூழே குடித்து, உடுத்த கந்தலே உடுத்து, படுத்த தரையிலேயே படுத்து, ஆடுமாடுகளோடு சேர்ந்து குடிசைகளில் வாழும் ஏழைமக்களுக்கு இந்தத் திருவிழா ஒரு மாறுதல் தந்து நன்மை செய்வதை அவர்களின் மலர்ந்த முகங்களில் கண்டேன்.

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார்

அகல்விளக்கு

 


Saturday, June 26, 2021

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 8: கபிலர்

 அகரமுதல




(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 7 இன் தொடர்ச்சி)

 

சங்கக்காலச் சான்றோர்கள் – 8

கபிலர்

தாம் கண்ட காட்சியை கல் நெஞ்சையும் உருக்கும் கடுந்துயரக் காட்சியை-தாம் கேட்ட குரலை-குழலின் துன்ப இசை போன்ற அழுகுரலை யெல்லாம் வள்ளல் பேகனது அகவிழிகட்குக் கவிதையாலேயே காட்சிப்படுத்திக் காட்டினார். “கைவண்மை சான்ற பேக, நேற்று அருவழி கடந்து வருந்தி வந்த சுற்றத்தின் பசியைப் போக்க, உன் சீறூர் எய்தி உன் வாயிலில் வாழ்த்தி நின்றேன்; உன்னையும் உன் மலையையும் பாடினேன். அதனைக் கேட்ட அளவில் துயரம் மிகுந்து கண்ணீர் சொரிந்து அதனை நிறுத்தவும் ஆற்றாளாய் விம்மி விம்மி மிக அழுதாள் ஒருத்தி. அவள் அழுத குரலும் குழலின் துன்ப இசைபோல இருந்தது! அவள் யாரோ! இரங்கத்தக்கவளாய் இருந்தாள்!” என்றார் கபிலர்.

‘கைவண் ஈகைக் கடுமான் பேக!
யார்கொல் அளியள் தானே!
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளியிருஞ் சிலம்பிற் சீறுர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னுநின் மலையும் பாட இன்னா(து)
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைய விம்மிக்
குழலினை வதுபோல் அழுதனள் பெரிதே!’         (புறம். 148)

கண்ணகியின் இளமை-பேகனைப் பாடிய அளவில் அவன் நினைவு அவளை வாட்டிய துயர்-அத்துயர் தாங்காது அவள் விம்மி விம்மி அழுத அழுகை-கருணை சிறிதுமின்றி அவளைத் துறந்த பேகனது கொடுமை-ஆறறிவற்ற உயிர்க்கும் இன்ப அருள் புரியும் வள்ளல் தன் வாழ்க்கைத் துணைவிக்கு ஊறு செய்யும் அறமற்ற பண்பு-எத்தகையராயினும், யாரோ ஒருத்தியாயினும், அவளுக்கு இரங்கித் தீதில் நல்லருள் செய்ய வேண்டிய பெருங்கடமை-இவையெல்லாம் வயங்குபுகழ்ப் பேகன் நெஞ்சில் விளங்கி, அவன் உள்ளந்திருந்துமாறு செறுத்த செய்யுட்செய் செந்நாவினராகிய கபிலர் பெருமானார் பாடிய இப்பாடலைப் படிக்குந்தொறும் புலனழுக்கற்ற அப்புலவர் பெருந்தகையின் கருணை உள்ளமும் பொதுநல உணர்வும் நமக்குப் புலனாகின்றன அல்லவோ? இவ்வாறு எவ்வுயிரும் இன்புற்றிருக்கவே துடித்தது அச்சான்றோரின் தமிழ் நெஞ்சம். இஃதன்றித் தன்னலம் சிறிதும் காணா அத்தகைசால் உள்ளத்தின் பெற்றியினை எவரே அளந்து போற்ற வல்லார்!

பேகனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பின் பிரிந்த கண்ணகியின் நிலை குறித்தே இவ்வாறெல்லாம் கவன்ற அச்சான்றோரின் கருணை இதயம், தம் ஆருயிர்த் தோழனுடைய இரு கண்மணிகள் அனைய செல்வியரின் ஆதரவற்ற நிலை குறித்து எவ்வாறெல்லாம் கலங்கியதோ! தாம் நம்பிச் சென்று தம் செந்நாவால் பாடிய இருங்கோவேளும் விச்சிக்கோவும் தம் நெஞ்சு புண்ணாகச் செய்த நிலைமை மீண்டும் மீண்டும் அவர் நினைவிற்கு வந்து அவரை வாட்டியது. அப்போதெல்லாம் அவர், தோல்வி ‘துலையல்லார்கண்ணும் கொளலே சால்பிற்குக் கட்டளை போலும்!’ என நினைந்து, தம் மனத்தைத் தாமே ஆற்றிக்கொண்டார். எனினும், பாரி மகளிர் நினைவே அவரைப் பெரிதும் அலைத்தது. வள்ளல் பாரியே, எவ்வாறு என் பணி ஆற்றுவேன்? எவ்வாறு உன் ஆவி குளிரச்செய்வேன்?” என்று எண்ணி எண்ணி மனம் நைந்தார். ‘பாரியைக் காணவே இக்கண்கள்; அவன் புகழ் பாடவே இந்நா; அவன் குடிகொள்ளவே இவ்விதயம்; அவனுடன் பழகி இன்புறவே இவ்வாழ்வு,’ என்றெல்லாம் தம்மைப் பற்றியே எண்ணிலடங்கா இன்பக் கனவுகள் கண்டு இறுமாந்திருந்தவர் கபிலர்.

ஆனால் என் செய்வார்! தம் ஆருயிர்த் தோழனுக்கு ஆற்ற வேண்டிய நட்புக் கடனுக்காக மனந்தேறிச் சேரலர் கோவைச் செந்தமிழ்க் கவிகளால் அணி செய்ய மனங் கொண்டார். அவனுழைச் சென்ற அருந்தமிழ்ப் புலவர் கபிலர் பெருமானார், அங்கும் அண்ணல் பாரியின் அழியாப் புகழை ஆர்வத்துடன் பாராட்ட மறந்தாரில்லை. ‘சேரலர் பெருமானே, பசும்புண் பட்ட வாய்போல வெடித்திருக்கும் பலாவினின்றும் வார்ந்து ஒழுகும் மதுவினை அள்ளிச் செல்லும் வாடைக் காற்று ஓடி வழங்கும் பறம்பு காட்டின் பெருவிறல் தலைவன்-சித்திரச்செய்கை போன்ற வித்தகத் தொழில் புனைந்த நல்ல மனையின்கண் வாழும் பாவை நல்லாள் கணவன்-பொன் போலப் பூத்த சிறியிலைப் புன்கால் உன்னத்தின் பகைவன் – புலர்ந்த சாந்தும் புலராத ஈகையுமுடையோன்-மலர்ந்த மார்புடை மாவண் பாரி-எங்கள் தலைவன். அவன் பரிசிலர் முழவு மண் காய்ந்தொழிய, இரவலர் கண்ணிர் இழிந்தோட, மீளா உலகிற்குச் சென்றுவிட்டான். அதனால், நான் நின்னிடம் கையேந்தி இரக்க வந்தேனில்லை; நின் புகழைக் குறைத்தோ மிகுத்தோ கூறேன். கொடுத்தற்கு வருந்தா நெஞ்சும், ஒரு சிறிதும் முனைப்பற்ற உள்ளம் காரணமாக வாரி வழங்கும் போதும் களிவெறி கொள்ளாப் பண்பும், நீ கொடுக்குந்தோறும் மாவள்ளியன் என மன்பதை போற்றும் புகழ் ஒலியும் நின் பால் அமைந்திருத்தலின், உன்னிடம் வந்தேன்,’ எனப் புலாஅம் பாசறைத் தலைவனாகிய செல்வக் கடுங்கோவின் சிறப்பினை விதந்தோதி வாழ்த்தினார். [பதிற்றுப்பத்து, 61] ‘வயங்கு செந்நாவின’ராகிய கபிலர் பெருமான் திருவாயால் புகழ் பெற்ற செல்வக் கடுங்கோ வாழியாதன், சிந்தை குளிர்ந்து, செந்தமிழ்ச் சான்றோரைத் தலையுற வணங்கி, சிறப்பெலாம் செய்து ‘சிறுபுறம்” என்று கூறி, நூறாயிரம் காணம் கொடுத்து, நன்றாவென்னும் குன்றேறி நின்று, நற்றமிழ்ப் பெரியார்க்குத் தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் கொடுத்தான். என்னை கபிலரின் மாட்சி! என்னே அக்கோவேந்தன் குணச் சிறப்பு!

இவ்வாறு இரவலராய்ச் சென்ற கபிலர் பெருமானர் புரவலராய் மீண்டார். எனினும், அவர் இதயத்தில் அமைதியில்லை. அரிவையரின் கடிமணம் முடியும் நாளன்றோ அச்சான்றோர் உள்ளம் இன்பக் கடலில் திளைக்கும் திருநாள்? இரு குறுநில மன்னர்பால் முன்னம் சென்று மனமிடிந்து போன கபிலர், மீண்டும் எவர்பால் செல்வது என்று ஏக்கமுற்றிருந்தார். அந்நிலையில் அச் சான்றோர் நெஞ்சில் புலவர் பாடும் புகழ் படைத்து அந்நாளில் பெண்ணையாற்றங்கரையில் பீடுற்று விளங்கிய மலையமான் திருமுடிக்காரியின் நினைவு எழுந்தது. அவர் மகிழ்வு துள்ள, நம்பிக்கை ஒளி மின்ன, அவன் வைகும் திசை நோக்கி நடந்தார்; அவன் திருவோலக்கம் புகுந்து, கோவலூர்க்கோவின் புகழ் போற்றி வாழ்த்தினார். அந்நிலையில் மலையமான் மகிழ்வு மிகக் கொண்டு வழக்கம் போலப் பொன்னும், மணியும், புனைநல் தேரும் வழங்கினான். அது கண்ட புலவர் நெஞ்சம் துணுக்குற்றது. “என்னே! என் செந்தமிழ்க் கவிதையெல்லாம் இப்பொன்னிற்கும் புனை எழில் தேருக்குமோ எழுந்தன? வரையாது வழங்கிய கோமான் பாரியின் ஆருயிர் நண்பன் யான்; வெறும்பொருளுக்கு வருந்தும் இரவலனல்லேன். இவனும் ஆழ்ந்திருக்கும் என் கவிதையுளம் அறியானோ!” என்று இனைந்து, கழல் புனை காரியைப் பார்த்து, “மாவண் தோன்றலே, ஈதல் எளிது; வரிசை அறிதலோ அரிது. ஆகலான், புலவர்மாட்டுப் பொது நோக்கு ஒழிக!” எனும் கருத்து அமைய,

‘ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்!
அதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே’         (புறம். 121)

என்ற அருந்தமிழ்க் கவிதையை அவன் மனத்தில் தைக்கும் வண்ணம் அஞ்சாது கூறினார்.

(தொடரும்)

முனைவர் சஞ்சீவி:

சங்கக்காலச் சான்றோர்கள்

 



Thursday, June 24, 2021

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 7 : கபிலர்

 அகரமுதல




(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 6 இன் தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 7

கபிலர்

ஆனால், விச்சிக்கோவைப் போலவே இருங்கோவேளின் இதயமும் இரும்பாயிருந்தது. அவன் சொல்லோ, அதனினும் கொடிய கூர்வேலாயிருந்தது. அவன் பாரியின் அருமையும் அறியாது, அவன் ஆருயிர்த்தோழர் கபிலர் பெருமையையும் உணராது, அச்சான்றோரின் நெஞ்சைத் தகாதன கூறிப் புண்ணாக்கினான். இருங்கோவேளின் பொருந்தாச் சொற்கேட்ட புலவர் பெருமானார், ஆற்றொணாக் கோபங்கொண்டார். “இயல்தேர் அண்ணலே, ஒலியல் கண்ணிப் புலிகடி மாலே, வெட்சிக்காட்டில் வேட்டுவர் அலைப்பப் புகலிடம் காணாத கடமாவின் நல்லேறு சாரல் மணி கிளம்பவும், சிதறுபொன் மிளிரவும் விரைந்தோடும் நெடுவரைப் படப்பையில்-வென்றி நிலை இய விழுப்புகழ் இருபாற்பெயரிய உருகெழு மூதூரில்-கோடி பல அடுக்கிய பொருள் நிற்குதவிய நீடுநிலை அரையம் அழிந்த வரலாறு கேள்: நின் முயற்சியானன்றி நுந்தை தாயம் நிறைவுறப் பெற்றுள்ள புலிகடி மாலே, உன்னைப் போல அறிவுடையனாய் உன் குடியில் உனக்கு முன் பிறந்த ஒருவன் என்போல் புலவராகிய கழாத்தலையாரை இகழ்ந்ததால் கிடைத்த பயன் அது! இயல்தேர் அண்ணலே, இவ்வருமைச் செல்வியர் கைவண் பாரியின் மகளிர். ‘இவர் எவ்வியின் பழங்குடியிற் படுவாராக,’ என்று நான் கூறிய தெளியாத புன்சொல்லைப் பொறுப்பாயாக! பெருமானே, புலிகடி மாலே, கருங்கால் வேங்கை மலர் வீழ்ந்து கிடக்கும் துறுகல் கடும்புலி போலக் காட்சியளிக்கும் காட்டின் தலைவனே, நின் பால் விடை கொண்டேன் , போகின்றேன்; நின்வேல் வெல்வதாக!” [புறம்.202] என இருங்கோவேளின் சிறுமைப்பண்பை இகழ்ந்து கூறி அவன் நாட்டை விட்டு வெளியேறினார் புலவர் பெருமானார். இனி என் செய்வார்!

ஆர்வத்துடன் அணுகி வேண்டிய இரண்டிடங்களும் பயனற்றுப் போயின! பதடிகளால் மனமும் புண்ணாகியது. இந்நிலை எண்ணித் துடித்தழுத புலவர் உள்ளம் சிந்தனையில் தோயலாயிற்று. “அந்தோ! அருந்தமிழ் வள்ளல் பாரியின் அருமைச் செல்வியரினும் செல்வம் பெரிதுண்டோ! இதனை ஏற்கவும் காக்கவும் சிறுமதியாளர் சிந்தனை இசையவில்லையே! என்னே கொடுமை! என்ன காரணம் இதற்கு?” என்று எண்ணினார். ”ஆம்! காய்த்த மரத்திலன்றோ கல்லெறியும் இவ்வுலகம்? கோவேந்தன் குடியானாலும், பொன்னும் பொருளும் இன்றேல், மன்னரானார் மதிப்பரோ?” என்று எண்ணினார்;

“செய்க பொருளைச் செறுநர் செருக்கருக்கும்
எஃகதனின் கூரியது இல்”         (குறள். 597)

என்ற எண்ணம் கொண்டு திண்ணியரானார்; ஆனால், அவ்வெண்ணத்தில் வெற்றி காணும் வரை பாரியின் அருமை மகளிர்க்குப் பாதுகாவல் ஆவார் யாரெனக் கலங்கினார். இந்நிலையில் பாரி மகளிர் வாழ்க்கையில் ஒரு நாள் நடந்த நிகழ்ச்சியும் அது வழங்கிய காட்சியும் கபிலர் பெருமானார் நெஞ்சில் நெருப்பைக் கொட்டின.

அண்ணல் பாரியின் அருமைச் செல்வியர் தங்கி யிருந்த ஏழை மனை முள் மிடைந்த வேலியால் சூழ்ந்திருந்தது; சுரைக்கொடி படர்ந்திருந்தது; பீர்க்கு முளைத்திருந்தது; முன்னிடமெல்லாம் புல், முளைத்துக் கிடந்தது. இத்தகு மனையினருகே ஈத்திலைக் குப்பை மேடும் இருந்தது; பாரியின் செல்வ மகளிர் அக்குப்பை மேட்டின்மீது ஏறித் தங்கள் பிஞ்சிள விரல்களால் உமணர் செலுத்தும் உப்பு வண்டிகளை எண்ணியவாறு இதயத் துயரை ஒருவாறு மறந்திருந்தனர். இக்கடுந்துயரக் காட்சியைக் கண்டார் கபிலர் மனங் குமுறினார்; “அந்தோ! இதுவோ வாழ்க்கை! ஓங்குபுகழ்ப் பறம்பின் உச்சிமீது நின்று அன்புப் பாரியின் அருமை அறியாது அழுக்காறு கொண்ட மன்னர் மலையைச் சுற்றி அணி அணியாய் நிறுத்தி வைத்திருந்த கலிமாவை எண்ணி எண்ணி எள்ளி நகையாடிய அவ்வேந்திழை நல்லார், இன்று குப்பைக் குவியல்மீது நின்று அதே விரல்களால், உருளும் வண்டிகளை-உப்பு வண்டிகளை-எண்ணுவதோ! அதுவும்,அந்தோ நம்பால் அடைக்கலமாக இருக்கும் நாளில் என் கண் முன்பேயோ! அந்தோ! அருமை வள்ளலே அருட்கோமானே! அண்ணல் பாரியே! வீரத் திலகமே! புகழ்த் தெய்வமே! இதுவோ நான் பெற்ற பரிசில்! ஊழே, மிகக் கொடியை நீ!” என்று எண்ணி மனந்துடித்தார் கபிலர். துடித்துத் துயருற்ற புலவர் பெருமானார், எவ்வாறேனும் பொருள் காண்பேன்! இன்னகை மகளிரைப் பொன்னொளிர் வாழ்விற்கு உரியராக்குவேன்!’ என்று உறுதிகொண்டு, செந்தண்மை பூண்டொழுகும் அந்தணாளர்பால் பாரி மகளிரை அடைக்கலமாக்கிச் செல்வம் திரட்டி வரச் செல்வக்கடுங்கோ வாழி யாதனை அடைந்தார்.

பாரியைப் பாடிய வாயால் வேறு எவரையும் பாட எள்ளளவும் விரும்பாத நெஞ்சு படைத்தவர் கபிலர். அதுவும் தமக்குப் பொருளுக்காகப் பாடக் கனவிலும் விழையாத கலை நெஞ்சம் கபிலருடையது. இவ்வுண்மையை அவர் வாழ்வையும் வரலாற்றையும் ஊடுருவிக் காண்பார் உணர்வது திண்ணம். மாவண் பாரியன்றி வேறு யாரையேனும் அவர் போற்றினார்-பாடினார்-என்றால், அது தினையளவும் தந்நலங் கருதாது பிறர் நலம்- பொது நலம்-கருதியமையாலேயே ஆகும். சான்றாகக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாய் விளங்கி ஒருவாத் புகழ் பெற்றிருந்த பேகன் என்பானை நல்லிசைக் கபிலர் பாடிய செய்தியை இங்கு நாம் மறவாது நினைவு கூர்தல் பொருத்தமும் பயனும் உடையது ஆகும்.

தாயுமானவர் உள்ளமுருகிக்கூறியதுபோல, ‘கூர்த்த அறிவெல்லாம் கொள்ளை கொடுத்து’ ஆருயிர்கள்பால் அன்பு காட்டி அழியாப் புகழ் பெற்றோருள் ஒருவன் அல்லனோ செந்நாப் புலவர் பாடும் புகழ்படைத்த ‘கடாஅ யானைக் கலிமான் பேகன்’? மயில் ஆடி அகவியதைக் கேட்டுக் குளிரால் நடுங்கிக் கூவியதாக உணர்ந்து தன் போர்வையை அதற்கு ஈந்த அருள் வள்ளல் அல்லனோ பேகன்? இவ்வாறு கான மஞ்ஞைக்கும் கலிங்கம் நல்கிய அவ்வாவியர் பெருமகனது-பெருங்கல் நாடனது-கருணை வாழ்விற்கே களங்கமாக, அவன் வாழ்வில் எவ்வாறோ புகுந்துவிட்டது ஒரு குறை. தோகை விரித்து ஆடும் மயிலுக்கு அருள் செய்த அவன், தன் கற்பின் கொழுந்தாய் விளங்கிய வாழ்க்கைத் துணைவியை மனைக்கு விளக்காகிய வாணுதலை- கண்ணகியைக் கை விடத் துணிந்தான். கைவண்மை மிக்க பேகன் தன் மனைவியிடம் கொண்ட மாறுபாடு, நாளடைவில் புலவர் நெஞ்சையெல்லாம் புண்படுத்தி, கலைஞர் உள்ளத்தை யெல்லாம் கலக்கி, இரங்க வைக்கும் அளவிற்குப் பெரியதாய் விட்டது. இந்நிலையில் தமிழ்ச்சான்றோர் பலரும் அவன்பால் சென்று அறிவுரை கூற முற்பட்டனர். அச்சான்றோருள் ஒருவராய்க் கபிலரும் விளங்கினார். துன்பத்தின் சிறு நிழலும் மன்னுயிர்கள்மீது படிதல் ஆகாது என்ற அருள் நெஞ்சம் படைத்த சான்றோர் அல்லரோ கபிலர் பெருமானார்?

(தொடரும்)

முனைவர் சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்



Sunday, June 20, 2021

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 5 : கபிலர்

 அகரமுதல




(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 4 இன் தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் 5

கபிலர் – தொடர்ச்சி

மீகானற்ற மரக்கலமும்-பால் நிலவற்ற காரிருள் வானமும்-உயிரற்ற உடலும் ஆயிற்று வேள் பாரியின் விழுமிய நாடு. விண்ணும் மண்ணும் அழுதன. ஆரமும் வேங்கையும், அணிநெடுங்குன்றும், கறங்கு வெள்ளருவியும் அழுதன. மானும் மயிலும், ஆவும் கன்றும் கதறிக் கலங்கின. புள்ளும் மாவும், முல்லையும் முழுநிலவும் புலம் பித் தேம்பின. இந்நிலையில் வள்ளல் பாரியின் மக்களும் அவன் ஆருயிர்த் தோழர் கபிலரும் அழாமல் இருப்பரோ! பேச்சின்றி மூச்செறிந்து பொருமி அழுதன பிற உயிர்களெல்லாம். வாய் திறந்து, நெஞ்செரிந்து கதறி யாற்றினர் புலவர் கோவும் பொற்றொடி மங்கையரும். அஞ்சா நெஞ்சம் படைத்த புலவர் பெருமானும் அரிவை நல்லாரும் பச்சிளங்குழந்தைகள் போலப் பதைபதைத்து அழுதனர். ஒப்பற்ற தந்தையாரின் அருகா அன்பில் வாழ்நாள் முழுதும் ஆடித் திளேத்து மகிழ்ந்திருந்த அந்த இளநங்கையர் இப்போது இதயம் துடித்து விம்மி விம்மி அழுதனர்.

மூவேந்தரும்முற்றுகையிட்டிருந்த அற்றைத் திங்களில் அவ்வெள்ளிய நிலாவின் கண் எம்முடைத் தந்தையும் உடையேம்; எம் குன்றையும் பிறர் கொள்ள வில்லை. ஆனால், ஐயோ! இற்றைத் திங்களில் இவ்வெள்ளிய நிலவின்கண் வென்றறைந்த முரசினையுடைய வேந்தர் எம்மலையும் கொண்டார்; எம் தந்தையையும் இழந்தோம் !’ எனும் வேதனை மிக்க கருத்தமைந்த

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எத்தையும் உடையேமெங் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தரெம்

குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே!’

(புறம், 119) என்ற பாடலைக் கூறி மண்ணாண்ட வேள் பாரி முழுமதி யாகி வஞ்சகர் வாழாத விண்ணாளச் சென்றான் போலக் கார் வானத்து வெளிக்கிளம்பிய வெண்ணிலாவைக் கண்டதும் கண்பொத்திக் கதறியழுதனர் அக்கோமான் செல்வியர்.

கபிலர் பெருமானாரது நிலையைச் சொல்லவும் வேண்டுமோ! ஆடி விழும் அருவியிலும் அண்ணல் பாரியின் அழகுச் சாயலைப் பார்த்தவர் அவர்; மாவண் பாரிக்குத் தம் மனத்தையே அரண்மனையாக்கிக் கொடுத்தவர்; தாமுறையும் கோயிலாகப் பாரியின் நெஞ்சு இருப்பது கண்டு பெருமையும் பூரிப்பும் கொண்டவர். அண்ணல் பாரியின் புகழ் நினையாத நாளே அவர் வாழ்நாள் கண்டதில்லை. விண்ணும் மண்ணும், காடும் மலையும், அருவியும் சுனையும் எல்லாம் தம் ஆருயிர்த் தலைவன் பாரியின் புகழாகவே அவர் கண்கட்கு விளங்கின. அத்தகு காட்சியில் தோய்ந்திருந்த கபிலர் பெருமானார், உணர்வு வெள்ளம் நுரையிட்டுப் பாய, எத்தனை அருமையான கவிதைகளை அவன் புகழ் தெரித்துப் பாடினர்! ஆம் ! கால வெள்ளத்தில் கரைந்தோடியது போக, எஞ்சியுள்ள பாடல்களிலேயே ‘இருநிலம் பிளக்க வீழ்க்கும்’ வேரனைய அவர்களுடைய நட்பு எத்துணை அழகுடையதாய் இருந்தது என்பது புலனாகின்றதன்றோ! வையகம் உள்ளவரை பாரியின் புகழ் அழியா வண்ணம் கபிலர் பாடி யுள்ள பாடல்கள் எத்துணைச் சிறப்பின! கலையிலும் கருணையிலும் கொடையிலும் குணத்திலும் சிறந்தவனல்லனோ பாரி! அவன்பால் சென்ற பாணரும் விறலியரும் பெறாத பொன்னும் பொருளும் உண்டோ? வழியிற்கண்ட விறலியை,

சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி!

…    …     …   

பாரி வேள்பாற் பாடினை செலினே.’ (புறம். 105)

என்று செந்தமிழ்ப் புலவர் ஆற்றுப்படுத்தும் அளவிற்கு அவன் கொடை வளம் சிறந்திருந்தது. அத்தேர் வீசு இருக்கை நெடியோன், பரிசிலர் இரப்பின், ‘தாரேன்’ என்னாது, அவர்க்குத் தன்னையும் அளிக்கும் தகைமையனாய் விளங்கினான். அம்மட்டோ! அழுக்காறு படைத்த இகல் வேந்த ர்க்கு அவன் இன்னான் ஆயினும், இரவலர்க்கு எஞ்ஞான்றும் இனியனாய் விளங்கினான் எனவும், வீரத்தில் எவருக்கும் இளைக்காத அவ்வேளிர் குலத் தலைவன் உயிர் குடிக்கத் தேடிவரும் வேலுக்கு அரியன் ஆயினும், உயிர் உருகப் பாடி வரும் கிணை மகளின் கலை விழிகட்கு என்றும் எளியன் எனவும் அன்றோ கபிலர் ‘பெருமானார் போற்றிப் புகழ்கின்றார்? இரவலர்க்கு ‘இல்லை’ என்னாது ஈயும் அத்தகைய வள்ளியோன் இறந்துபடக் கபிலர் இதயம் பொறுக்குமோ? கைவண் பாரி, மாவண்பாரி, தேர்வண்பாரி, நெடுமாப்பாரி என்றெல்லாம் பொய்யா நாவினராகிய அவர் போற்றிப் புகழ்ந்த பறம்பின் கோமான் பொன்னுடலம் மூச்சின்றிப் பேச்சற்று வீழ்ந்து கிடக்க ஒருப்படுவரோ? ‘பாரியின் புகழ்க்கு உலகின் கண்ணேறு வருமோ!’ என அஞ்சியவர் போல, “பாரி பாரி  எனப்பல ஏத்தி, ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்; உலகீர், பாரி ஒருவனும் அல்லன் ; மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பது, எனக் கூறிக் கண்ணேறு கழித்த பெருமானார், இன்று அக்கருணை மாரி வறங்கூர்ந்து போக இசைவரோ?

(தொடரும்)

முனைவர் சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்