Friday, September 07, 2018

இலக்குவனார் – மயிலாடன்

அகரமுதல

ஒற்றைப்பத்தி

இலக்குவனார்  


தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் உரை ஆரவாரமாக இருக்காது – ஆற்றொழுக்காக – அமைதி யாக – அதேநேரத்தில் ஆழமாக இருக்கும். அதில் தமிழ் மானமும், இனமானமும் போட்டிப் போட்டுக்கொண்டு துள்ளும்.
இரண்டாண்டு, மூன்றாண்டுக்குமேல் ஒரே இடத்தில் அவர் பணியாற்றியது கிடையாது – அதற்குக் காரணம் அவரது மொழி, இன, திராவிட இயக்கக் கொள்கைச் சித்தாந்தமும், அவற்றின் வெளிப்பாடுமே!
மரம் சும்மா இருந்தாலும், காற்று அதைச் சும்மா இருக்க விடாது அல்லவா! அதேபோல, நாட்டு நடப்புகளும், போக்குகளும் அந்தத் தமிழ் மறவரின் உணர்வைச் சீண்டி சவால் விட்டுக்கொண்டே இருக்கும்.
தான் உண்டு, தன்  குடும்பம் உண்டு என்ற சிறைச் சாலைக்குள் வாழ்வதில் இன்பம் காணும் ஒரு சமூகத்தில், தன் குடும்பம்பற்றி எண்ணாது சதா நாட்டு நலனைப்பற்றியே எண்ணிய எழுஞாயிறு அவர். சொல்லியபடியே சாதி மறுப்புத் திருமணமும் செய்து கொண்டவர்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிய போது, ‘தமிழ்க்காப்புக் கழகம்’ ஒன்றைத் தொடங்கினார். (6.8.1962). ஒரு பொங்கல் பொழுதில் (15.1.1964) குறள்நெறி’ இதழையும் தொடங்கினார். வள்ளுவர்நெறியில் வாழ்க’ என்பதுதுன் அதன் குறிக் கோள்.
‘தமிழ்க் காப்புக் கழகத்தின்’’ கேடயமாக அது விளங்கியது. தமிழ்க் காப்புக் கழகத்தின் தலைவராக இலக்குவனாரும், பொதுச்செயலாளராக இளங்குமரனாரும் பொறுப்பேற்றுப் பணியாற்றினர்.
1965 இந்தி எதிர்ப்பின்போது கைதுசெய்யப்பட்டார் (முதலமைச்சர் பக்தவச்சலம்). இலக்குவனார் மீது குற்றச்சாட்டு என்ன தெரியுமா?
‘அமைச்சர்களைக் கொல்லுவதற்கு முயற்சி’ என்பது உள்ளிட்ட பதினான்கு குற்றங்கள் ஆகும்.
வழக்கின்போது வழக்குரைஞர் வைத்த குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்கது. “இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர். உள்ளம் கவர்ந்தவர். இதழ் நடத்துபவர். அவர் வெளியே இருந்தால், அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு இராது” என்றார் அரசு தரப்பு வழக்குரைஞர் என்றால், இலக்குவனார் வன் முறையாளர் அல்லர் என்றாலும், அவரைப்பற்றிக் கூறிய குற்றச்சாட்டில், இலக்குவனாரின் வீரமும், விவேகமும், கொள்கைப் பாங்கும், வளமும் எத்த கையது என்பதை அறிந்து கொள்ள உதவும் அல்லவா!
அவரின் இயற்பெயர் இலட்சுமணன் எனும் வட மொழிப் பெயர். அவரின் ஆசிரியரான சாமி சிதம்பரனார் அதனை இலக்குவன்என்று மாற்றியமைத்தார். இலக்குவனாரின் இல்லப் பெயர் ‘கருமுத்தகம்’ என்பதாகும். அவரின் நினைவு நாள் இந்நாள் (3.9.2018).
வாழ்க இலக்குவனார்!
– மயிலாடன்
விடுதலை 03.09.2018

Saturday, September 01, 2018

தமிழ்ப்போராளி இலக்குவனார், கி.வீரமணி

அகரமுதல

தமிழ்ப்போராளி இலக்குவனார்

கி.வீரமணி, தலைவர்,  திராவிடர் கழகம்

நன்றி: தினத்தந்தி: 02.09.2018

தமிழ்ப் போராளி இலக்குவனார்

நாளை (செப்டம்பர் 3-ந்தேதி) இலக்குவனார் நினைவு நாள்.
பதிவு: செட்டம்பர் 02,  2018 10:20 மு.ப.
பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர்.
தான் படித்த படிப்பு, சம்பாத்தியம் குடும்ப வளமைக்கு மட்டுமே என்னும் கண்ணோட்டம் அவருக்கு இருந்திருந்தால் அவர் வாழ்க்கை என்பது இவ்வளவுத் தொடர் தொல்லைகளுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி இருக்காது.
இலக்குவனார், தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் சிற்றூரில் சிங்காரவேலர்-இரத்தினம் அம்மையார் ஆகியோரை பெற்றோராக கொண்டு எளிய குடும்பத்தில் 17-11-1910 அன்று பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல். மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றார்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத்தேர்ந்தவர். ‘தமிழர் தலைவர்’ நூலை எழுதிய சாமி.சிதம்பரனாரின் மாணவர் ஆவார். தொல்காப்பியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா, போப் ஆண்டவரை சந்தித்த போதும், யேல் பல்கலைக்கழகத்துக்கு சென்ற போதும், அந்நூலை நினைவுப் பரிசாக அளித்தார்.
எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்க்கைப்போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள், திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும் தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்கள் வாழும்வரை, அவற்றை படைத்த பேராசிரியர் இலக்குவனாரும் நாட்டு மக்களின் இதயங்களில் கோலோச்சுவார்.
சங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியராக இருந்ததோடு, திராவிடன் பெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார். இவற்றையெல்லாம் அவர் நடத்தினார் என்றாலும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், தன் கையைச் சுட்டுக் கொண்டார் என்றே கூற வேண்டும்.
ஆனாலும் இனம்மொழி மேம்பாட்டுக்கான மேட்டிமை அவரைஆட்கொண்டது. அவர் தமிழாசிரியராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, துறைத்தலைவராகப் பரிணமித்தவர். திருவாரூரில் தமிழாசிரியராக பணியாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் மு.கருணாநிதி (பிற்காலத்தில் முதல்-அமைச்சர் கலைஞர்).‘தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார்’ என்று ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூரிலிருந்து தொடங்கி குலசேகரன்பட்டினம், நெல்லை ம.தி.தா. இந்துக்கல்லூரி, விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி, ஈரோடு மகாஜனக் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி, நாகர்கோவில், சென்னை மாநிலக் கல்லூரி, ஆந்திராவின் உஸ்மானிய பல்கலைக்கழகம் வரை (1936-1968 இடைவெளியில்) பந்தாடப்பட்டவர்.
அந்த வகையில் தமிழ்நாட்டின் மண்ணை அளந்த மணவாளர் அவர்! என்ன காரணம்? பணியில் தொய்வா? திறமைக் குறைவா? அல்ல அல்ல. சென்ற இடங்களில் எல்லாம் அவர் வகித்த துறையில் முத்திரை பதித்தவர். தமிழ் உணர்வோடு மாணவர்களை வார்த்தெடுத்தவர். அவருடைய மாணவர்களுள் ஒருவர்தான் ஆர்.நல்லக்கண்ணு; பின் ஏனிந்தப் பந்தாட்டம்?
அவர் தமிழ் உணர்வாளர்இன உணர்வாளர்பெரியார் வழிசுயமரியாதைக்காரர். இவைதான் இவர் மீது ஏவப்பட்ட அம்புகள்.
ஒரு கல்லூரியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் தெரியுமா?
பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிலும், இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும் பங்கு கொண்டார். இலக்குவனார் கருஞ்சட்டை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார் என்று பொதுக்கல்வி இயக்குநர், ஆட்சிக்குழுவுக்கு தாக்கல் செய்தது. ஆட்சி மன்றக்குழுவின் கருத்து இதற்கு எதிராக இருந்தாலும் வேறு வழியின்றி இலக்குவனாரை வெளியேற்ற நேர்ந்தது.
அந்த கல்லூரியில் அவருக்கு இழைத்த அநீதி கண்டு ‘துரத்தப்பட்டேன்’ என்று கவிதை வரிகளில் குமுறினார்!
கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகாடமிக்கவுன்சில் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர் குழு செயலாளராகவும் பொறுப்பேற்று செயப்பேரிகை கொட்டியவர்.
இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெரு நடைப் பயணத்தாலும் சிறைவாசமும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தனிமைச் சிறையும்பதவி இழப்பும் தான் அவர் பெற்ற பரிசுகள்.
தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக்கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.
பணியில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தி.மு.க. பிரிந்தபோது பெரியார் மேற்கொண்ட நீண்ட சுற்றுப்பயணம் முழுவதிலும் திராவிடர் கழக கூட்டங்களில் இலக்குவனாரும் அவருடன் பயணித்து உரையாற்றினார்
புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் (9-4-1950) புலவர் இலக்குவனார் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். “ஆரியத்தை முதலாவது எதிர்த்த புரட்சிப் புலவர் திருவள்ளுவர். மக்களின் வாழ்வுக்கேற்ற அறம், பொருள், இல்லறம் பற்றித்தான் வள்ளுவர் எழுதினாரே ஒழிய, ஆரியக் கருத்துப்படி இருக்கும் வீட்டைப்பற்றி (மோட்சம்) பற்றி எழுதவில்லை” என்று பேசினார்.
இலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேடு உயர்நிலைப் பள்ளிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது. தன்மானப் புலவர் பேராசிரியர் இலக்குவனாருக்கு 6 மகன்களும், 5 மகள்களும் உண்டு. ‘தமிழகத்தின் உரிமை உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது உறு கடனாம் என்று உறுதி கொள்ளச்செய்தது; “தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இதுவேயாகும்” என்பது இலக்குவனார் இலக்கு.
அந்தத் தமிழ்ச்சிங்கம் 3-9-1973 அன்று கண் மூடிற்று. என்றாலும் வரலாற்றில் வாழுகிறது!
– கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
மூலம்: தினத்தந்தி. பகிர்வு;  விடுதலை