Saturday, April 29, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 34

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 33 தொடர்ச்சி)

அத்தியாயம் 19: தருமவானும் உலோபியும்தொடர்ச்சி

அது வரையில் அவர் என்னைப் பிரிந்து இருந்ததேயில்லை. அப்போது எனக்குப் பிராயம் பன்னிரண்டுக்கு மேலிருக்கும். நான் அறிவு வந்த பிள்ளையாக மற்றவர்களுக்குத் தோற்றினும், என் அன்னையாருக்கு மட்டும் நான் இளங்குழந்தையாகவே இருந்தேன். தம் கையாலேயே எனக்கு எண்ணெய் தேய்த்து எனக்கு வேண்டிய உணவளித்து வளர்த்து வந்தார். தமது வாழ்க்கை முழுவதும் என்னைப் பாதுகாப்பதற்கும் என் அபிவிருத்தியைக் கண்டு மகிழ்வதற்குமே அமைந்ததாக அவர் எண்ணியிருந்தார். தாயின் அன்பு எவ்வளவு தூய்மையானது! தன்னலமென்பது அணுவளவுமின்றித் தன் குழந்தையின் நலத்தையே கருதி வாழும் தாயின் வாத்துசல்யத்தில் தெய்வத்தன்மை இருக்கிறது.

என் அன்னையார் என்னைத் தழுவிப் பிரிவாற்றாமையினால் உண்டான வருத்தத்தைப் புலப்படுத்தியபோது அங்கு நின்ற பெண்மணிகள் சிரித்தார்கள். நான் ஒன்றும் விளங்காமல் பிரமித்து நின்றேன். நான் வந்த சில தினங்களுக்குப் பிறகு என் தந்தையாரும் குன்னத்துக்கு வந்து சேர்ந்தார்.

வெண்மணிக்குச் சென்றது

குன்னத்தில் இருந்தபோது மத்தியில் அதன் கிழக்கேயுள்ள வெண்மணி யென்னும் ஊரில் இருந்த செல்வர்கள் எங்களை அங்கே அழைத்துச் சென்றனர். அவர்கள் விருப்பத்தின்படியே அங்கு அருணாசலகவி ராமாயணப் பிரசங்கம் நடந்தது. அது நிறைவேறிய காலத்தில் என் தகப்பனாருக்கு இருபது வராகன் சம்மானம் கிடைத்தது.

அமிர்த கவிராயர்

வெண்மணிக்கு அமிர்த கவிராய ரென்ற ஒருவர் ஒரு நாள் வந்தார். அப்போது அவருக்கு எழுபது பிராயமிருக்கும். அவர் அரியிலூர்ச் சடகோப ஐயங்காரிடத்தும் அவருடைய தந்தையாரிடத்தும் சில நூல்களைப் பாடம் கேட்டவர். பல நூல்களைப் படித்திராவிட்டாலும் படித்த நூல்களில் அழுத்தமான பயிற்சியும் தெளிவாகப் பொருள் சொல்லும் ஆற்றலும் அவர்பால் இருந்தன. சங்கீதப் பயிற்சியும் அவருக்கு உண்டு. அவர் இசையுடன் பாடல் சொல்வது நன்றாக இருக்கும். அவரை நான் அரியிலூரிலிருந்தபொழுதே பார்த்திருக்கிறேன். அவர் வெண்மணியில் ஊர் மணியகாரர் வீட்டில் தங்கியிருந்தார். அங்கே சிலர் முன்னிலையில் அவர் சில பாடல்களைச் சொல்லி உபந்நியாசம் செய்தார். அப்போது இடையிலே உதாரணமாக, “அக்கரவம்புனை” என்ற பாடலைக்கூறி அதற்குப் பொருளும் சொன்னார். அது திருவரங்கத்தந்தாதியில் உள்ள 28-ஆம் செய்யுள். அதற்கு முந்தி 27 செய்யுட்களில் பொருளையும் நான் கார்குடி சாமி ஐயங்காரிடம் கேட்டிருந்தேனல்லவா? “மேற்கொண்ட செய்யுட்களின் பொருளை யாரிடம் கேட்டுத் தெளியலாம்?” என்ற கவலையுடன் இருந்த நான் அமிர்த கவிராயர் 28-ஆம் செய்யுளுக்குப் பொருள் கூறியபோது மிகவும் கவனமாகக் கேட்டேன். “இவர் இந்நூல் முழுவதையும் யாரிடமேனும் பாடம் கேட்டிருக்கக்கூடும். நம் குறையை இவரிடம் தீர்த்துக்கொள்ளலாம். ஏதேனும் பொருளுதவி செய்தாவது இவரிடம் பொருள் தெரிந்து கொள்ளலாம்” என்று எண்ணினேன். உடனே தலைதெறிக்க எங்கள் வீட்டுக்கு ஓடிச் சென்று திருவரங்கத் தந்தாதியை எடுத்து வந்தேன். இருபத்தொன்பதாம் செய்யுளாகிய “ஆக்குவித்தார் குழலால்” என்பதைப் படித்துப் பொருள் சொல்லும்படி அவரைக் கேட்டேன். அதற்கும் விரிவாக அவர் பொருள் உரைத்தார். மிக்க கவனத்தோடு கேட்டு என் மனத்திற் பதித்துக்கொண்டேன். பிறகு முப்பதாவது செய்யுளைப் படித்தேன். அவர் சொல்லுவதாக இருந்தால் அந்த நூல் முழுவதையுமே ஒரே மூச்சிற் படித்துக் கேட்கச் சித்தனாக இருந்தேன். ஆனால் என் விருப்பம் அவ்வளவு சுலபத்தில் நிறைவேறுவதாக இல்லை.

“பல பாடல்களுக்கு இன்று பொருள் தெரிந்து கொள்ளலாம்” என்ற ஆவலோடு முப்பதாவது பாடலைப் படித்து நிறுத்தி அவர் பொருள் சொல்லுவார் என்று எதிர்பார்த்து வாயையே நோக்கியிருந்தேன்.

“திருவரங்கத் தந்தாதி யமகம் அமைந்தது. எல்லோருக்கும் இது சுலபமாக விளங்காது. மிகவும் கட்டப்பட்டுப் பாடங் கேட்டால்தான் தெரியும். மற்ற நூல்களில் நூறு பாடல்கள் கேட்பதும் சரி; இதில் ஒரு பாடல் கேட்பதும் சரி” என்று அவர் எதற்கோ பீடிகை போட ஆரம்பித்தார்.

ஒரு நூலைப் பாடம் சொல்லும்போது அந்நூலின் அமைப்பைப் பற்றியும் அந்நூலாசிரியர் முதலியோரைப் பற்றியும் கூறுவது போதகாசிரியர்கள் வழக்கம். அம்முறையில் அவர் சொல்லுவதாக நான் எண்ணினேன். திருவரங்கத் தந்தாதியைச் சுலபமாகத் தெரிந்துகொள்ள இயலாதென்பதை அவர் சொன்னபோது அதனை நான் அனுபவத்தில் அறிந்தவனாதலால், “உண்மைதான்; கார்குடி சாமி ஐயங்காரவர்களே இருபத்தேழு பாடல்களுக்கு மட்டுந்தான் பொருள் நன்றாகத் தெரியுமென்று சொன்னார்கள்” என்றேன்.

“பார்த்தீர்களா? அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். எவ்வளவோ தனிப்பாடல்களுக்கு அருத்தம் சொல்லிவிடலாம். நைடதம் முழுவதையும் பிரசங்கம் செய்யலாம். இந்த அந்தாதி அப்படி ஊகித்து அர்த்தம் சொல்ல வராது. அழுத்தமாகப் பாடம் கேட்டிருக்க வேண்டும். நான் எவ்வளவோ சிரமப்பட்டுக் கேட்டேன். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு புதையலுக்குச் சமானம்”.

“புதையலென்பதில் சந்தேகமில்லை” என்று நான் என் மனத்துள் சொல்லிக்கொண்டேன்.

“இவ்வளவு பிரயாசைப்பட்டுக் கற்றுக்கொண்டதை இந்தத் தள்ளாத காலத்தில் சுலபமாக உமக்குச் சொல்லிவிடலாமா? கட்டப்பட்டுத் தேடிய புதையலை வாரி வீசுவதற்கு மனம் வருமா? மேலும், எனக்குத் தொண்டை வலி எடுக்கிறது. நான் போய் வருகிறேன்” என்று சொல்லி உடனே எழும்பிப் போய்விட்டார். நான் பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். “கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே!” என்று வருத்தமுற்றேன்; “அக்கவிராயர் அவ்வளவு நேரம் பேசியதற்குப் பதிலாக இரண்டு செய்யுட்களுக்கேனும் பொருள் சொல்லியிருக்கலாமே!” என்று எண்ணினேன்.

உடனிருந்து எங்கள் சம்பாசணையைக் கவனித்தவர்கள் என் முகவாட்டத்தைக் கண்டு, “பாவம்! இந்தப் பிள்ளை எவ்வளவு பணிவாகவும் ஆசையாகவும் கேட்டார்? அந்தக் கிழவர் சொல்ல முடியாதென்று சிறிதேனும் இரக்கமில்லாமற் போய்விட்டாரே! திருவரங்கத்தந்தாதி புதையலென்று அவர் கூறியது உண்மையே; அதைக் காக்கும் பூதமாக வல்லவோ இருக்கிறார் அவர்?” என்று கூறி இரங்கினார்கள்.

கவிராயர் ஒரு வேளை திரும்பி வருவாரோ என்ற சபலம் எனக்கு இருந்தது. அவர் போனவர் போனவரே. நாங்கள் அந்த ஊரில் இருந்த வரையில் அவர் வரவேயில்லை.

கரும்பு தின்னைக் கூலி கொடுப்பதுபோல எனக்குப் பாடமும் சொல்லி எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய உதவியும் செய்த கத்தூரி ஐயங்கார் முதலியோரின் இயல்புக்கும் அமிர்த கவிராயர் இயல்புக்கும் உள்ள வேறுபாட்டை எண்ணி எண்ணி வியந்தேன். பொருட்செல்வம் படைத்தவர்களிலேதான் தருமவானும் உலோபியும் உண்டு என்று நினைத்திருந்தேன். கல்விச்செல்வமுள்ளவர்களுள்ளும் அந்த இரண்டு வகையினர் இருப்பதை அன்றுதான் நான் முதலில் அறிந்துகொண்டேன்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Monday, April 24, 2023

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

      25 April 2023      அகரமுதல



(சொல்லின்செல்வர் சேதுப்பிள்ளை 3/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5


ஆய்வு நூல்கள்

நெல்லையில் வழக்கறிஞராக இருந்தபோதே இவரது ஆய்வுப்பணி முகிழ்ந்துவிட்டது. முதன்முதலில் 1926ஆம் ஆண்டில் திருக்குறளை ஆராய்ந்து ‘திருவள்ளுவர் நூல் நயம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் மேன்மையினையும், ஆசிரியரின் ஆய்வுத் திறனின் மாண்பினையும் திரு. கா. சு. பிள்ளை அவர்கள்,

உலகமெலாம் உய்வான் பொதுமறை வகுத்த ஆசிரியர் திருவள்ளுவனாரது அளப்பரிய மாண் பினைப் பாவலரும் நாவலரும் கற்றோரும் மற்றோரும் இந்நாள்வரை பொதுவகையாற் பலபடப் பாராட்டிச் சீராட்டிப் போந்தனர். ஆசிரியரது நூலின் பிண்டப் பொருளை நுணுகி ஆய்ந்து, அதன் சொற்பொருள் நயங்களை யாவருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் தெள்ளென வகுத்தோதி ஊக்கமூட்டும் செவ்விய உரைநடை நூல் ஒன்று இல்லாத குறையை நிறைவுசெய்த பெரும் புலவர் இத் ‘திருவள்ளுவர் நூல் நயம்’ எழுதிய திருவாளர் சேதுப்பிள்ளையேயாவர்.

திருக்குறட் பெருநூலை நன்கு கற்றாராய்ந்து உணர விரும்பும் மாணவர் யாவருக்கும் அந்நூற் சொற்பொருள் வளப் பண்டகசாலைக்கு நயமிக்க தோர் திறவுகோலாக இவ்வுரைநடைச் செந்தமிழ்ச் சீரிய நூலை இயற்றிய தமிழ்வாணர்க்குத் தமிழுலகு என்றும் கடப்பாடுடையது”

என்று அந்நூலுக்குத் தாம் வழங்கிய முன்னுரையில் போற்றியுரைக்கின்றார்.

இதே ஆண்டில் வெளிவந்தது ‘சிலப்பதிகார நூல் நயம்’ என்ற மற்றொரு நூல். ஆசிரியர் பெருமை, அரச நீதியும் அரசியலும், ஆரிய அரசரும் தமிழரும், கண்ணகியின் கற்பின் திறம். வினைப்பயன், பண்டைத் தமிழ் மக்கள் நாகரிகம், சிலப்பதிகார நூல்நயம் என்னும் ஏழு தலைப்புகளில் இந்நூல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 1932ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வீரமாநகர்’ என்னும் நூல் கம்பராமாயணம் பற்றிச் செய்த அரியதோர் அருமையான ஆய்வு நூல், இந்நூலின் இனிமையை நூலுக்கு முன்னுரை வரைந்த வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள்,

பலர்க்கும் தெரிந்த பழங்கதைகளை, ஆசிரியர் தம் புலமைத் திறமையால் புதுமையானவையாக்கிப் படிப்பவர் மனத்தை மகிழ்விக்கிறார். கதைப் போக்கில் வரும் தக்க இடங்களில் தக்க அறிவுரைகள் இலக்கியச் சுவையோடு இனிது கலந்தூட்டி இன்பமும் பயனும் எய்தச் செய்தல் இந்நூலிற் பல இடங்களில் காணலாம். இதில் ஒவ்வொரு பக்கமும் இனிமையா யிருப்பதை வாசிப்போர் சில பக்கங்கள் வாசித்த அளவில் தெரிந்துகொள்வர் என்பது திண்ணம். இந்நூலின் இனிமை நுனியிலிருந்து நுகரப்படும் கரும்பின் இனிமை போன்றிருக்கின்றது.”

என்று எடுத்துரைக்கின்றார்.

அடுத்து 1945இல் வெளிவந்த ‘தமிழ் விருந்து’ தமிழர்தம் கலைத்திறன், தமிழரின் வாழ்க்கை மேன்மை, தமிழ் மொழி யின் செம்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை ஆகியவற்றை எடுத்தியம்புகிறது.

அடுத்த ஆண்டில் 1946இல் வெளிவந்த ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற நூல், இவர்தம் ஆய்வின் மணி முடியாகத் திகழ்வது. ஆயிரத்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் இந்நூலில் ஆய்விற்குட்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாட்டு நூலாகவும் வரலாற்று நூலாகவும் இந்நூல் துலங்குகின்றது. இந்நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின பரிசு பெற்ற பெருமை உடையது. திரு. வி. க. அவர்களின் மதிப்புரை இந்நூலின் தரத்திற்கும் ஆசிரியர்தம் ஆய்வுத் திறனுக்கும் உரை கல்லாக ஒளிாகின்றது.

“ஆசிரியர், நிலம்- மலை-காடு-வயல்-ஆறு-கடல்-நாடு-நகரம்-குடி-படை-குலம்-கோ-தேவு-தலம் முதலியவற்றை அடியாகக் கொண்டு இந்நூற்கண் நிகழ்த்தியுள்ள ஊர்பேர் ஆராய்ச்சியும், ஆங்காங்கே பொறித்துள்ள குறிப்புகளும் பிறவும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் சில ஊர்ப் பேர்கள் சிதைந்தும், திரிந்தும், மருவியும், மாறியும் தத்தம் முதல் நிலையை இழந்துள்ளன. அவை மீண்டும் பழைய நிலை எய்திப் பண்புறுதற்கு இந்நூல் பெருந்துணை செய்தல் ஒருதலை. இந்நூலுள் பொலிதரும் சில ஊர்ப் பேர்களின் வரவாறு, சாம்பியும் சோம்பியும், நலிந்தும் மெலிந்தும் கிடக்கும் நம் மக்கட்கு அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம் புரியும் பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் சவலையை நீக்கி, அதன் மாட்டு வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாகும்.”

1947இல் வெளிவந்த ‘தமிழர் வீரம்’ என்னும் பெயரிய நூல் தமிழர்தம் போர்த் திறத்தையும், படைத் திறத்தையும் விளக்குகிறது.

அடுத்த 1948இல் வெளியிடப் பெற்ற ‘தமிழின்பம்’ பாரதப் பேரரசின் சார்பில் இயங்கும் சாகித்திய அகாதெமி பரிசினைப் பெற்றது. இந்நூலுக்கென வழங்கப்பட்ட ஐயாயிரம் வெண்பொற் காசுகளுடன் பத்தாயிரம் வெண்பொற் காசுகளைச் சேர்த்துப் பல்கலைக்கழக நிதி வளர்ச்சிக்காக இவர் கொடுத்தார். இதனால் பலரும் இவரைப் பாராட்டினர்.

ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப்பின் வந்த ‘வழி வழி வள்ளுவர்’ வள்ளுவரைப் பிற புலவர்கள் எடுத்தாளும் திறனை விளக்கி நிற்கிறது.

இறுதியாக 1958இல் வெளிவந்த ‘தமிழகம் அலையும் கலையும்’ தமிழ்நாட்டின் கலைச்சிறப்பையும். கலை வளர்த்த நகரங்களின் நல்லியல்புகளையும் ஆய்கின்றது.

ஆய்வு நூல்களாக அன்றிக் கட்டுரைத் தொகுப்புக்களாக வந்தவை ‘கடற்கரையிலே’, ‘ஆற்றங்கரையினிலே,’ வேலும் வில்லும்’ என்பன. ‘வேலும் வில்லும்’ என்ற நூல் கம்பரும் கச்சியப்பரும், மூவர் தமிழும் முருகனும், திருச்செந்துார் முருகன் என்ற மூன்று கட்டுரைகளின் தொகுப்பாகும். கவிஞரும் கலைஞரும் உரையாடுவது போன்று அமைந்தது ‘கடற்கரையிலே’ என்ற நூல். விருதைத் தமிழ்க் கழகத்தின் சார்பில் வெளிவந்த தமிழ்த் தென்றல் என்ற இதழில் வெளி வந்த தொடர்கட்டுரைகள் இருபதின் தொகுப்பு நூல் இது. தமிழக ஆறுகளின் சிறப்பு, அவற்றின் கரைகளில் அமைந்த நகரங்களின் வரலாற்றுச் சிறப்பு, இலக்கியச் சிறப்பு இவற்றை எடுத்துக் கூறும் ‘ஆற்றங்கரையினிலே’ கல்கியில் வெளிவந்த தொடர் கட்டுரைகள் நாற்பத்தெட்டின் தொகுப்பு நூல் ஆகும். இது 1961 இல் வெளிவந்தது.

‘வேலின் வெற்றி’, ‘திருக்காவலூர்க் கலம்பகம்’ என்ற இரு நூல்களும் முறையே கந்த புராணத் திரட்டையும் திருக்காவலூர்க் கலம்பகத்தையும் தழுவி எழுதப்பட்ட உரை நூல்கள் ஆகும்.

Words and their Significance. Dravidian Comparative Vocabulary, Common Dravidian Proverbs என்பன இவர் ஆங்கிலததில் எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகும்,

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Saturday, April 22, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 33

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 32 தொடர்ச்சி)

அத்தியாயம் 19
தருமவானும் உலோபியும்

கார்குடி சென்றது

கார்குடிக்குப் போவதில் எனக்கிருந்த வேகத்தை அறிந்து என் தந்தையார் ஒரு நல்ல நாளில் என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு அவ்வூரை அடைந்தார். நாங்கள் வருவோ மென்பதை முன்னமே கத்தூரி ஐயங்கார் மூலம் அறிந்திருந்த அவ்வூர் சிரீவைணவர்கள் எங்களை உபசரித்து எங்கள் வாசத்துக்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர்.

அங்கே சிரீநிவாசையங்கார் என்ற ஒரு செல்வர் வீட்டில் நாங்கள் சாகை வைத்துக்கொண்டோம். அக்கிரகாரத்தாரிடமிருந்து உணவுப் பொருள்கள் மிகுதியாக வந்தன. அங்கிருந்த சிரீ வைணவர்கள் யாவரும் சுரோத்திரியதார்கள்.* மாதந்தோறும் எங்கள் தேவைக்குரிய நெல்லை அவர்கள். தம்முள் தொகுத்துக் கொடுத்து வந்தார்கள்.

கஸ்தூரி ஐயங்கார் பாடம் சொன்னது

கத்தூரி ஐயங்கார் நன்னூரில் நல்ல பயிற்சியுடையவர். தஞ்சாவூரில் இருந்த இலக்கணம் அண்ணாப் பிள்ளையென்ற வித்துவானும் அவரும் இலக்கண, இலக்கிய விசயமான செய்திகளை ஓலையில் எழுதி வினாவுவதையும் விடையளிப்பதையும் வழக்கமாகக்கொண்டிருந்தார்கள். அவ்வோலைகளை நானும் பார்த்திருக்கிறேன். இராமாயணம், பாரதம், பாகவதம் முதலிய நூல்களைத் தம் கையாலேயே கத்தூரி ஐயங்கார் ஏடுகளில் எழுதி வைத்திருந்தார். ஐயங்காரிடம் நான் பாடங் கேட்கத் தொடங்கினேன். குன்னத்திலிருந்தபோது தஞ்சையிலிருந்து வந்த சிரீநிவாசையங்கா ரென்பவரிடம் மகாலிங்கையர் இலக்கணத்தைப் பாடம் கேட்டேன். நன்னூல் முதலிய இலக்கணங்களைத் தொடர்ந்து கேட்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருந்து வந்தது. அதனால் முதல் முதல் அவரிடம் நன்னூல் பாடங் கேட்கலானேன். விசாகப் பெருமாளையர் இயற்றிய காண்டிகையுரையை ஒருவாறு பாடம் சொல்லி அதன் கருத்துரை, விசேட உரை முதலியவற்றை எனக்குப் பாடம் பண்ணி வைத்துவிட்டார். தினந்தோறும் நன்னூல் முழுவதையும் ஒருமுறை நான் பாராமற் சொல்லி வந்தேன். நிலவில் பொருள்கள் காணப்படுவதுபோல் நன்னூலிலுள்ள இலக்கணங்கள் எனக்குத் தோற்றின; அந்நூலைச் சிக்கறத் தெளிந்துகொள்ள வில்லை. படித்தவர் யாரேனும் வந்தால் கத்தூரி ஐயங்கார் எனக்குப் பாடம் சொல்லிய நன்னூல் சூத்திரங்களையும் உரையையும் என்னைச் சொல்லும்படி செய்வார். அவற்றை நான் ஒப்பிப்பேன். இப்பழக்கத்தால் அவை என் மனத்திற் பின்னும் நன்றாகப் பதிந்தன.

அக்காலத்தில் நன்னூலுக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஐயமற அதனை ஒருவன் தெரிந்துகொண்டால் அவனை நல்ல புலவனென்று யாரும் கூறுவர். சூத்திரங்களில் விசேட உரைகளிலுள்ள ஆட்சேப சமாதானங்களை நன்றாகத் தெரிந்துகொண்டு விளக்குபவர்கள் சிலரே இருந்தனர். இலக்கியப் பயிற்சியிலேயே பெரும்பாலோருக்குக் கவனம் சென்றதேயன்றி இலக்கணப் பயிற்சியிற் செல்லவில்லை. இந்த நிலையில் நான் நன்னூற் சூத்திரங்களையும் உரையையும் மனனம் பண்ணித் தமிழில் ‘இலக்கண வித்துவான்’ ஆகக் கூடுமென்ற எண்ணம் என்னைக் கண்டோருக்கு உண்டாக்கினேன். அத்துறையில் நான் பின்னும் எவ்வளவோ தெரிந்துகொள்ள வேண்டியதுண் டென்பதை நான் மறக்கவில்லை. கத்தூரி ஐயங்காரிடம் நவநீதப் பாட்டியல் முதலிய பொருத்த நூல்கள் சில இருந்தன. எனக்கு அவற்றிலும் சிறிது பழக்கம் உண்டாயிற்று. இடையிடையே வேங்கட வெண்பா முதலிய சில பிரபந்தங்களையும் அவர் கற்பித்து வந்தார்.

சாமி ஐயங்காரிடம் கேட்ட பாடம்

கத்தூரி ஐயங்காருடைய நண்பரான சாமி ஐயங்காரும் எங்களிடம் மிக்க அன்போடு இருந்து வந்தார். தாம் வாக்களித்தபடியே அவரும் எனக்குப் பாடம் சொல்லலானார். கம்பராமாயணத்தில் அவர் பழக்கமுள்ளவர். என் தந்தையாரும் நானும் இராமாயண கதாப்பிரசங்கத்தில் ஈடுபட்டவர்களாதலின் கம்பராமாயணத்தைப் பாடங் கேட்கவேண்டு மென்ற விருப்பம் எனக்கு இருந்தது. இராமாயணத்திற் பாலகாண்டத்திலிருந்து தொடங்காமல் சுந்தரகாண்டத்திலிருந்து ஆரம்பிப்பது ஒரு முறை. அதன்படியே சாமி ஐயங்காரிடம் நான் சுந்தர காண்டம் பாடம் கேட்க ஆரம்பித்தேன். அவர் இசையோடே பாடல் சொல்லுவார். அது மிகவும் நயமாக இருக்கும். திருவரங்கத்தந்தாதியில் முதல் இருபத்தேழு செய்யுட்களுக்கு அவரிடம் பொருள் கேட்டுத் தெரிந்துகொண்டேன். “இதற்கு மேல் நான் பாடம் கேட்டதில்லை; அரியிலூர்ச் சடகோபையங்கார் முழுவதும் பாடம் சொல்வார்; அவரைப் பார்க்கும்போது நீ மற்றப் பாடல்களைக் கேட்டுக்கொள்ளலாம்” என்று அவர் கூறியமையால் இருபத்தெட்டாம் செய்யுள் முதலியவற்றை நான் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் யாரிடமேனும் அந்நூல் முழுவதையும் கேட்டுவிட வேண்டுமென்ற குறை மட்டும் எனக்கு இருந்தது.

புதிய நூல்களையும் புதிய விசயங்களையும் நான் தெரிந்துகொண்டே னென்பது உண்மையே. ஆனால் அவற்றை ஐயந்திரிபின்றித் தெளிவாகவும் சாங்கோபாங்கமாகவும் தெரிந்துகொள்ள வில்லை. படித்து அறிவு பெறுவது ஒரு வகை. படித்தவற்றைப் பாடம் சொல்வது ஒரு வகை. பாடஞ்சொல்லும் திறமை சிலரிடமே சிறப்பாகக் காணப்படுகின்றது.

கார்குடியில் ஆறு மாதங்கள் இருந்தோம். கத்தூரி ஐயங்காரும் சாமி ஐயங்காரும் தங்கள் தங்களால் இயன்ற அளவு பாடம் சொல்லி வந்தார்கள். அவர்களுடைய மனைவிமார்களும் படித்தவர்கள். அவர்களும் என்னிடம் பிரியமாக இருந்தார்கள். எனக்குத் தெரிந்த பல கீர்த்தனங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துப் பாடிக் காட்டினேன்.

குன்னம் வந்தது

ஆறு மாதங்களுக்குப் பிறகு கத்தூரி ஐயங்கார் முதலியவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு நாங்கள் மீண்டும் குன்னத்திற்கே வந்து சேர்ந்தோம். தருமத்திற் சலிப்பில்லாத அவ்வூரார் எங்களை ஆதரிப்பதிலும் எங்கள்பால் அன்பு பாராட்டுவதிலும் சிறிதும் குறையவில்லை.

எனக்கு ‘மகாலிங்கையர் இலக்கணம்’ பாடஞ் சொன்ன தஞ்சை சிரீநிவாசையங்கா ரென்பவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம் என்னும் ஏழு நீதி நூல்களும் அடங்கிய புத்தகம் ஒன்று கொடுத்திருந்தார். அப்புத்தகம் மத சம்பந்தமான செய்யுட்களை மட்டும் நீக்கிப் புதுச்சேரியில் அச்சிடப்பட்டது; பதவுரை பொழிப்புரையோடு தெளிவாகப் பதிப்பிக்கப் பெற்றிருந்தது. அதிலுள்ள செய்யுட்களையும் உரைகளையும் படித்து ஆராய்ந்து மனனம் செய்துகொண்டேன். பொன்விளைந்தகளத்தூர் வேதகிரி முதலியார் அச்சிட்ட நைடத மூலமும் உரையுமுள்ள புத்தகமும் நாலடியார் உரையுள்ள புத்தகமும் கிடைத்தன. உரையின் உதவியால் இரண்டு நூல்களையும் ஒருவாறு பல முறை படித்துப் பொருள் தெரிந்துகொண்டேன். அவ்விரண்டு நூல்களும் எனக்கு மனப்பாடமாகி விட்டன. இடையிடையே சில சந்தேகங்கள் தோற்றின. கார்குடி சென்று கத்தூரி ஐயங்காரிடம் அவற்றைக் கேட்டுத் தெளிந்துகொள்ளலா மென்று எண்ணினேன்.

அன்னையாரின் அன்பு

என் கருத்தை அறிந்த தந்தையார் என்னை மாத்திரம் அழைத்துக்கொண்டு கார்குடிக்குச் சென்றார். அங்கே நான்கு தினங்கள் இருந்து கேட்கவேண்டியவற்றைக் கத்தூரி ஐயங்காரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஐந்தாம் நாட் காலையில் அவரிடம் விடைபெற்று நான் மட்டும் ஒரு துணையுடன் குன்னத்திற்கு வந்தேன். தந்தையார் சில தினங்கள் பொறுத்து வருவதாகச் சொல்லிக் கார்குடியில் இருந்தார்.

நான் குன்னத்திற்கு வந்து சேரும்போது என் தாயார் சில பெண்களுடன் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன் வேகமாக வந்து என்னைத் தழுவிக்கொண்டார். கண்ணீர் விட்டபடியே, “என்னப்பா, நீ ஊருக்குப் போனது முதல் நான் சாப்பிடவில்லை; தூங்கவில்லை. உன் ஞாபகமாகவே இருக்கிறேன்” என்று சொல்லித் தம்முடைய ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Monday, April 17, 2023

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 3/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 




(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 2/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 3/5


மேடைத் தமிழ் வளர்த்த மேன்மையாளர்

தம் ஆராய்ச்சித் திறத்தாலும், எழுத்தாற்றலாலும் தமிழ் ஆற்றலை வளர்த்ததைப் போன்றே மேடைப் பேச்சால் தமிழ் உணர்ச்சியையும் தமிழ் அறிவையும் பெருக்கிய பெருமை உடையவர் இரா.பி.சே. இவர் ஆற்றிய பொழிவுகள் இவரைத் தலைசிறந்த மேடைப் பேச்சாளராகக் காட்டுகின்றன.முனைவர்மு.வ. அவர்கள் ‘தமிழ் இலக்கிய அரங்கில் மாறுதல் செய்தவர் இரா.பி.சே.’ என்று போற்றுகின்றார்.
“தமிழ் இலக்கிய அரங்கிலே மாறுதல் செய்தார் சேதுப்பிள்ளை. சென்னையிலே இலக்கியக் கூட்டங்களானால் 50 பேர் வந்து கொண்டிருந்தனர். தம் முடைய சொற்பொழிவுகளின் மூலம் 50ஐ 50,000 ஆக்கித் தந்தவர் ஆவர்.”

– பூ. சா. கோ. கலைக்கல்லூரி மலர் 1958, பக். 58

இப்போற்றியுரை இரா. பி. சே. அவர்களின் பொழிவாற்றும் திறனை-உரனை விளக்கி நிற்கின்றது. நெல்லையில் வழக்கறிஞர் சேதுப்பிள்ளையாக இருந்தபோதும், அண்ணாமலையில் தமிழ்ப் பணியாற்றியபோதும் இவர் ஆற்றிய பொழிவுகள் பல. என்றாலும் சென்னையில் இவர் ஆற்றிய பொழிவுகளே மிகுதி. ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் வாரத்திற்கு ஒரு முறை எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கம்பராமாயணச் சொற் பொழிவாற்றினார். இதன் விளைவாகச் சென்னையில் ‘கம்பன் கழகம்’ ஒன்று தோற்றம் பெற்றது, அதன் தலைவராகச் சேதுப்பிள்ளையே விளங்கினார், கோகலே மன்றத்தில் ஞாயிறுதோறும் என மூன்று ஆண்டுகள் சிலப்பதிகாரப் பிழிவினைப் பொழிவாக்கினார். தங்கசாலைத் தமிழ்மன்றத்தில் வாரத்திற்கு ஒருநாள் என ஐந்து ஆண்டுகள் திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கந்தபுராணச் சொற்பொழிவு நிகழ்த்தி னார், கம்பரையும் கச்சியப்பரையும் இணைத்துப் பொழி வாக்கிய இவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இப்பொழி வினை நிகழ்த்தினார். இதன் பயனாகக் ‘கந்தபுராணத் திரட்டு’ என்னும் நூல் பதிப்பிக்கப்பெற்றது, ‘வேலின் வெற்றி’, ‘வேலும் வில்லும்’ போன்ற நூல்கள் உருவாக்கப் பெற்றன. மேலும் புறநானூற்று மாநாடு, திருக்குறள் மாநாடு தமிழாசிரியர் மாநாடு போன்ற இலக்கிய மாநாடுகளில் தலைமை உரையும் ஆற்றியுள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள் விழாவில் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமை யில் ‘குறளும் குறளாசிரியர்களும்’ என்ற தலைமையில் அரியதொரு சொற்பொழிவாற்றினார்.

நூலாசிரியர்

இரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் இயற்றிய நூல்கள் பல. இவை பதிப்பு நூல்கள், வரலாற்று நூல்கள். ஆராய்ச்சி நூல்கள் என்னும் முப்பெரும் பிரிவுக்குள் அடங்குகின்றன. ஆராய்ச்சி நூல்களுள் ஆய்வாக மலர்ந்தவை சில; கட்டுரை களின் தொகுப்புகளாக அமைந்தவை சில: பொழிவுகளின் தொகுப்புகளாக அமைந்தவை சில. இவையே அன்றி இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இன்னும் பல நூல்வடிவம் பெறாமலேயே இருக்கின்றன.

பதிப்பு நூல்கள்

இவர் பதிப்பித்த முதல் நூல் ‘கந்தபுராணத் திரட்டு’ என்பது 1944இல் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல் சென்னையில் கந்தகோட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் விளைவால் உருப்பெற்றது. கந்தபுராணத்தினின்றும் ஆயிரத்தைந்நூறு பாடல்கள் திரட்டிப் பொழிப்புரையுடன் எழுதப்பட்ட இந் நூல் மூன்று பகுதிகளாக வெளிவந்தது.

1957ஆம் ஆண்டில் பாரதியார் பாடல்களில் சிறந்தன என்று இவரால் கருதப்பட்ட பாடல்கள் சிலவற்றின் தொகுப்பே ‘பாரதியார் இன் கவித்திரட்டு’ என்பது. இது சாகிததிய அகாதெமியின் வெளியீடு ஆகும்.

இதே ஆண்டில் வெளிவந்த ‘செஞ்சொற் கவிக்கோவை’ சங்கக்காலம் முதல் பாரதியார் காலம் ஈறாக உள்ள இலக்கியங்களின் சுவைமிக்க பாக்களின் தொகுப்பு நூல். 1960இல் பதிப்பிக்கப் பெற்ற ‘தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ என்ற நூலும், ‘செஞ்சொற்  கவிக்கோவை’யைப் போன்றே சுவைமிகக தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு நூல் ஆகும். இவையே அன்றி, எல்லீசர் திருக்குறளுக்கு வரைந்த உரையையும் பதிப்பித்துள்ளார்.

வரலாற்று நூல்கள்

வாழ்க்கை வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படா நிலையில், அத்துறையிலும் நூல்கள் பல உருவாவதற்கு வழிகோலியவர் இரா.பி. சே. ஆவர். ‘தமிழ்நாட்டு நவமணிகள்,’ ‘கால்டுவெல் ஐயர் சரிதம்,’ ‘கிறித்துவத் தமிழ்த் தொண்டர்’ என்ற மூன்றும் இவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் ஆகும். இவற்றுள் முதன் முதலில் வெளிவந்த நூல் ‘தமிழ்நாட்டு நவமணிகள்’ என்பது 1926ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்ற இந்நூல் (உ)லோகோபகாரி என்ற இதழில் வெளிவந்த ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாகும் ஆதிரையார், விசாகையார், மருதியார், கோப்பெருந் தேவியார்,  மணிமேகலையார், கண்ணகியார், புனிதவதியார், மங்கையர்கரசியார், திலகவதியார் என்னும் தமிழ் நாட்டுப் பெண்மணிகள் ஒன்பதின்மரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நூல். கதைப்போக்கில் அமைந்தது இந்நூல். இந்நூலின் சிறப்பினை,

“பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சிறப்பை இக்காலத்துத் தமிழ்ச் சிறார்க்கு எடுத்தோதும் புத்தகங்களும், பண்டுதொட்டுச் சரித்திரவாயிலாகவும், பனுவல்கள் வாயிலாகவும் அறியக் கிடக்கும் நம் நாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தற்காலம் வெளிப்போந்துள்ள நூல்களும் காண அரியவாயினவே என்று நெடுநாளாகக் கருதியிருந்த ஒரு பெருங் குறையை இந்நூலாசிரியர் நிறைவு செய்துள்ளார்”

என்று இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய முன்னாள் அமைச்சர் தி. நெ. சிவஞானம் பிள்ளை பாராட்டி யுரைக்கின்றார்.

1936இல் வெளிவந்த ‘கால்டுவெல் ஐயர் சரிதம்’ கால்டுவெல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தியம்புவது.

1946இல் வெளியிடப்பெற்ற ‘கிறித்துவத் தமிழ்த் தொண்டர்’ என்னும் நூல் வீரமாமுனிவர், போப்பையர். கால்டுவெல், எல்லீசர். இக்னேசியசு ஐயர், வேதநாயகம் பிள்ளை, கிருட்டிணபிள்ளை போன்ற கிறித்துவர்கள் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டுகளின் விளக்கமாக அமைந்துள்ளது.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Saturday, April 15, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 32

 


(உ.வே.சா.வின் என் சரித்திரம் 31 தொடர்ச்சி)

த்தூரி ஐயங்கார் வருகை

நான் இவ்வாறு குன்னத்தில் இருக்கும்போது சிரீ வைணவர் ஒருவரது வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது. அதற்காக அவ்வூரின் வடக்கேயுள்ள கார்குடி என்னும் சிற்றூரிலிருந்து அந்த வீட்டினருக்குப் பந்துக்களாகிய சிலர் வந்தனர். அவர்களில் கத்தூரி ஐயங்காரென்பவர் ஒருவர். அவர் சிதம்பரம் பிள்ளைக்குப் பழக்கமானவர். சிதம்பரம் பிள்ளை என்னிடம் கத்தூரி ஐயங்காரைப் பற்றி “அவர் சிறந்த தமிழ் வித்துவான். இந்தப்  பக்கங்களில் அவரைப் போன்றவர் ஒருவரும் இல்லை.  கம்பராமாயணத்திலும் மற்ற நூல்களிலும் நல்ல பழக்கமுடையவர். நன்றாகப் பிரசங்கம் செய்வார். முருக்கங்குடியிலிருந்த ஒரு வீரசைவப் புலவரிடம் பாடங் கேட்டவர்” என்று கூறினார். அப்போது எனக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்றும் அவரிடமிருந்து அரிய விசயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் அவா உண்டாயிற்று. அதற்குரிய முயற்சி செய்யத் தொடங்கினேன்.

விவாகம் நடந்த மறுநாட் காலையில் கத்தூரி ஐயங்காரே நாங்கள் இருந்த வீட்டின் சொந்தக்காரராகிய இராமையங்காரைப் பார்க்க வந்தார். அவ்விருவரும் உறவினர். அவர் வந்தபோது அவருடன் வேறு பலரும் வந்தனர். எல்லாரும் ஓரிடத்தில் இருந்து  பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு பக்கமாக இருந்து அவர்களுடைய சம்பாசணையைக் கவனித்து வரலானேன். கத்தூரி ஐயங்கார் பேசுவது மிகவும் இரசமாக இருந்தது. அவர் இடையிடையே தமிழ்ப் பாடல்களைச் சொல்லிப் பொருளும் கூறினார். அவற்றைக் கேட்டு நான் மிக்க உற்சாகத்தை அடைந்தேன்.

அப்போது என் மனத்தில் ஓர் ஆவல் உண்டாயிற்று; “இவர் நம்மைப் பார்த்துப் பேச மாட்டாரா? ஏதேனும் நம்மைக் கேட்க மாட்டாரா?” என்று எண்ணினேன். என் கருத்தை ஊகித்தறிந்த ஒருவர் கத்தூரி ஐயங்காரை நோக்கி, “சுவாமீ, இந்தப் பையன் தமிழ் படித்து வருகிறான். உங்களை பார்க்க வேண்டும், பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தான். இப்போது உங்கள் பேச்சையே கேட்டுக்கொண்டிருக்கிறான்” என்றார்.

த்தூரி ஐயங்கார் பரீட்சித்தது

கேட்ட அவர், “அப்படியா? சந்தோசம்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “நீ யாரிடம் படித்து வருகிறாய்?” என்று கேட்டார்.

“இவ்வூர்க் கணக்குப்பிள்ளையவர்களிடம் படிக்கிறேன்.”

“என்ன படிக்கிறாய்?”

“திருவிளையாடற் புராணம்.”

“முன்பு வேறு யாரிடமேனும் படித்ததுண்டோ?”

“உண்டு. அரியிலூர்ச் சடகோபையங்காரவர்களிடமும் வேறு சிலரிடமும் படித்தேன்” என்று கூறி நான் படித்த நூல்கள் இன்னவை யென்றும் தெரிவித்தேன்.

கேட்டதும் அவர், “அப்படியா? சடகோபையங்காரவர்கள் நல்ல படிப்பாளி. அவர்களிடம் படித்தாய் என்பதைக் கேட்க எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. எங்கே, ஒரு பாடல் சொல் கேட்போம்” என்றார். உடனே நான் பைரவி ராகத்தில் திருவேங்கடத்தந்தாதியிலிருந்து ஒரு பாடல் சொன்னேன். பொருள் கூறும்படி அவர் கேட்டார். நான் சுருக்கமாகக் கூறினேன். “நன்றாக இருக்கிறது” என்று சொல்லி அவர் சந்தோசமடைந்தார். அவர் சொன்னது எனக்குக் கனகாபிசேகம் செய்ததுபோல் இருந்தது. அவ்வளவு பெரிய வித்துவான் என்னை ஒரு பொருட்படுத்தி என் பாட்டைக் கேட்டுப் பாராட்டுவதென்றால் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்!

“வேறு ஏதேனும் தெரிந்தால் சொல்லு” என்று கேட்டார் அவர்.

எனக்கு ஊக்கம் அதிகரித்தது. சதகங்களிலிருந்து சில பாடல்கள் சொன்னேன்.

திருவேங்கட மாலை படித்திருக்கிறாயா?” என்று அவர் கேட்டார்.

“இல்லை” என்றேன்.

“நான் இப்போது ஒரு பாடல் சொல்லுகிறேன். எழுதிக்கொள்” என்றார்.

“இன்று நாம் நரி முகத்திலேதான் விழித்திருக்கிறோம்” என்று எண்ணி நான் மிக்க குதூகலமடைந்தேன்.


தேனியலுங் கூந்தலார் செங்கரமு மாதவத்தோர்
மேனியுமை யம்பொழியும் வேங்கடமே – ஞானியர்கள்
ணெய்தாங் குறியெட் டக்கரத்தார் தாளுரன்மேல் –வைத்து
வெண்தாங் குறியெட் டக்கரத்தார் சார்பு


(திருவேங்கடமாலை, 57)


என்ற பாடலை அவர் மெல்லச் சொல்லி என்னை எழுதிக்கொள்ளச் செய்தார். பிறகு அதன் பொருளையும் சொன்னார். அப்பால், “எங்கே, அதை ஒரு முறை படித்து அருத்தம் சொல், பார்க்கலாம்” என்று உரைத்தார். “இவருடைய மனத்தில் நம்மைப்பற்றி நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்” என்று மனம் அவாவியது. மிகவும் நிதானமாகப் படித்துப் பயபக்தியுடன் நான் கேட்டபடியே பொருள் சொன்னேன்.

கத்தூரி ஐயங்காருக்கு என்பால் அன்பு அரும்பியது. “நல்ல கிரகிப்பு சக்தி இருக்கிறது. நன்றாய்ப் படித்துக் கொண்டு வா” என்றார் அவர்.


வாக்களித்தது

அங்கே இருந்தவர்களுள் ஒருவர், “தாங்களே இந்தப் பையனுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க முடியுமா?” என்று வினவினார். அவர், “நான் பாடம் சொல்வதற்கு ஒரு தடையுமில்லை. கார்குடிக்கு வந்தால் வேண்டிய சௌகரியம் செய்வித்து இவனைப் படிப்பிக்கிறேன். இந்தப்பிள்ளை விருத்திக்கு வருவானென்று தோற்றுகிறது” என்று விடை கூறினார்.


அந்தக் கூட்டத்தில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த என் தந்தையார், “தாங்கள் சொன்னபடியே கார்குடிக்கு வருகிறோம். இவனுக்குத் தாங்கள் பாடம் சொல்ல வேண்டும்; மற்றக் காரியங்களில் இவன் புத்தி செல்லவில்லை” என்று சொன்னார். அவர் இவ்வாறு கூறியபோது அவருடைய பேச்சில் உணர்ச்சி ததும்பியது. கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது போல இருந்தது கத்தூரி ஐயங்காருடைய வார்த்தை.


“அங்கே வந்து விடுங்கள். நானும் என் சொந்தக்காரர்களும் உங்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுக்கிறோம். இவனையும் படிப்பிக்கிறேன்” என்று கத் தூரி ஐயங்கார் சொன்னார்.


அப்போது சாமி ஐயங்காரென்ற ஒருவர் அங்கே வந்தார். அவரும் கார்குடியில் இருப்பவரே. கல்யாணத்தின் பொருட்டுக் குன்னம் வந்தவர்; கத்தூரி ஐயங்காருடைய நண்பர்; தமிழிலும் சங்கீதத்திலும் வல்லவர்; கவித்துவ சக்தியும் உள்ளவர். அவரைக் கண்டவுடன் கத்தூரி ஐயங்கார் அங்கே நிகழ்ந்தவற்றையெல்லாம் அவரிடம் தெரிவித்தார். அவர் அதைக் கேட்டதுதான் தாமதம்; உடனே எந்தையாரை நோக்கி, “அடடா, மிகவும் சந்தோ ச ம்! நீங்கள் அப்படி வந்தால் என்னால் ஆன அனுகூலத்தை நானும் செய்விக்கிறேன்; தமிழ்ப் பாடமும் இவனுக்குச் சொல்லுகிறேன்” என்று வாக்களித்தார்.

ஒருவரையொருவர் அன்பிலும் ஆதரவிலும் தரும சிந்தையிலும் மிஞ்சியிருப்பதை யறிந்தபோது, “இனி நமக்கு நல்ல காலந்தான்” என்று நான் நிச்சயஞ் செய்துகொண்டேன்.

“நல்ல நாள் பார்த்துக்கொண்டு வந்து விடுங்கள்” என்று என் தந்தையாரிடமும், “வருகிறாயா? வா” என்று என்னிடமும் கூறிவிட்டுக் கத்தூரி ஐயங்கார் புறப்பட்டார். மற்றவர்களும் சென்றனர்.

கத்தூரி ஐயங்கார் சென்ற திக்கையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தூரத்தில் மறைய மறைய என் மனத்துள் கார்குடியைப் போன்ற தோற்றம் ஒன்று உண்டாயிற்று. என் தமிழ்க் கல்வியின் பொருட்டு எந்த இடத்துக்குச் செல்வதற்கும் என் தந்தையார் சித்தமாக இருந்தார்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Monday, April 10, 2023

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 2/5 – – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 




(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 1/5 தொடர்ச்சி)

9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 2/5

வள்ளுவரிடம் ஈடுபட்ட இவர்தம் உள்ளம் கம்பனிடம் செல்லுமாறு திசைமாற்றியவர் சுப்பையா(முதலியார்) அவர்கள் ஆவர். கம்பனில் திளைத்தபின் இவருடைய ஆர்வம் கம்பன் கவி நலத்தை வெளிப்படுத்துவதில் முனைந்தது. தமிழுக்குக், கதியான கம்பரையும், வள்ளுவரையும் தெளிந்தவரின் உள்ளம் பாரதியாரின் பாநலத்திலும் ஈடுபட்டது. பாரதியின் கவிதையில் திளைத்ததன் பயனாகச் செந்தமிழ்நாடு, முப்பெருங்கவிஞர், கலையின் விளக்கம், பண்டாரப் பாட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து முதலிய கட்டுரைகள் முகிழ்த்தன. பாரதியார் கண்ட புலவர்களில் இளங்கோவடிகளும் ஒரு சிறந்த புலவர் ஆதலின், இளங்கோவடிகளும் இவரைக் கவர்ந்தார். இவ்வாறு நெவ்லையில் இவர் ஆற்றிய அரிய கலைப் பணியைக் கண்ட நெல்லை மாவட்ட ஆட்சியாளர், மாவட்டக் கல்விக்குழு உறுப்பினர்களுள் ஒருவராகத் தெரிந்தெடுத்தார். அக்குழு நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு இளைஞர்கள் நன்மைக்கான நோக்கங்களை இவர் எடுத்துரைத்தார்.

நகர் மன்றத் தொடர்

1924ஆம் ஆண்டில் நெல்லையில் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலின் பின் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் (1926,28) வாகை சூடியவர் இவரே. மூன்றாவது முறை இவர் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன். இவர் திறமையைக் கண்டு நகரமன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். துணைத்தலைவராக இருந்தபோது. நெல்லை நகரத் தெருப் பெயர்களின் வரலாற்றை அறிந்து, அவற்றின் உண்மைப் பெயரை நிலை நாட்டிய பெருமை சேதுவுக்கே உரியதாகும்!

பல்கலைக் கழகங்களில் தமிழ்ப்பணி

நெல்லை நகர்மன்றப் பணிபுரிந்த இரா. பி. சே. அவர்கள் 1930ஆம் ஆண்டு கா.சு. பிள்ளை அவர்களின் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றார். 1931 ஆம் ஆண்டில் தமிழ் ஆனர்சு வகுப்பு மாணவர்களுக்குக் கம்பராமாயணம்; மொழிநூல் ஆகிய பாடங்களை எடுத்தார். அந்நாளில் மொழி நூல் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்பட்டது. இவர்தம் மொழி நூல் புலமைக்கும் ஆங்கில அறிவிற்கும் உரை கல்லாகத் துலங்குவது ‘Words and their significance’ என்ற ஆங்கில நூல். அதே ஆண்டில் தமிழ் வித்துவான் பயிலும் மாணாக்கர்க்குத் திருக்குறள், சிலம்பு முதலிய பகுதிகளைக் கற்பித்தார். பல்கலைக் கழகத்தாரால் ஏற்படுத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிலப்பதிகாரம் பற்றிச் சொற் பொழிவாற்றினார். சொற்பொழிவினைச் செவிமடுத்த ஆங்கிலப் பேராசிரியர் சுந்தரம் அவர்கள்,

“அன்பர்.சேதுவே! தமிழ் என்றால் இனிமை இனிமை என்று இயம்புகின்றார்கள்; அது பற்றுக் காரணமாகக் கூறும் வெற்றுரை என்றே நான் இதுகாறும் எண்ணியிருந்தேன். இன்று தங்கள் தமிழ்ப் பேச்சைக் கேட்ட பிறகுதான் தமிழ் இனிமை என்பது முற்றிலும் உண்மையெனக் கண்டேன். இன்று முதல் நானும் நற்றமிழ் நூல்களைக் கற்று இன்புறுவேன்”
என்று பாராட்டினர். சொற்பொழிவின் தலைமை இடத்தை அணிசெய்த விபுலானந்த அடிகளார் :

“முன்பு சேரன் தம்பியாகிய இளங்கோ சிலப்பதிகார நூலைப் பாடினார். இன்று என் அருமைத் தம்பி யாகிய சேதுப்பிள்ளை சிலம்பின் ஒலி எல்லோருடைய சிந்தையிலும் செவியிலும் ஒலிக்குமாறு செய்தார்.”

என்று பாராட்டினர். ஆறாண்டுகள் அண்ணாமலையில் அரும்பணி ஆற்றிய சேதுப்பிள்ளை அவர்களுக்கு இறுதியாக அளிக்கப்பட்ட அண்ணாமலை நகர்த் தேநீர் விருந்தில் கலந்து கொண்ட சுநீதி குமார் சட்டர்சி அவர்கள், அவர் உரையைக் கேட்டு,“தமிழின் இனிமையே உருவெடுத்து வந்தது
போல் இருக்கிறது தங்கள். பேச்சு”

என்று பாராட்டினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியவுடன், அந்நாளில் இராமகிருட்டிண மடத்தில் சமயப் பணிபுரிந்த விபுலானந்த அடிகளாரின் முயற்சியால் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் பணியினை ஏற்றார். அடுத்த ஆண்டில் தமிழ் ஆய்வுத்துறைத் தலைவர் எசு. வையாபுரிப் பிள்ளை அவர்களின்கீழ் அத்துறைத் துணைத்தலைவர் ஆனார். அப்போது வையாபுரிப் பிள்ளை அவர்கள் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பேரகராதிப் பணியினை முடித்தலில் உற்ற துணையாயிருந்தார். வையாபுரிப்பிள்ளை அவர்களுக்குப்பின், அந்த இடத்தை சேதுப்பிள்ளை அணி செய்தார். இதன் பயனாகப் பல நூல்களை ஆழ்ந்து கானும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது,

நாளடைவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘இலாசரசு’என்பவரின் பெண் மக்கள் இருவர்.திம் கொடையால் உருவாக்கப்பட்ட ‘பேராசிரியர்’ இடத்தை முதன் முதலில் அணி செய்தார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முதல் பேராசிரியர் என்ற பெருமையைத் தேடிக் கொண்டவர் இவர். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரித் தமிழ் ஆனர்சு பயிலும் மாணவர்களுக்கும் முதுகலை மாணவர்களுக்கும் வகுப்பு எடுத்தார். எம்.லிட்,. பிஎச்.டி. பட்டங்கள் பெறுவவற்காக ஆய்வு செய்த மாணவர்கள் பலருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

மேலும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது மொழி, இலக்கிய நலம் கருதி நிபுணர் குழுக்கள் ஏழில் உறுப்பினராக இருந்தார். அவையாவன :

1. சென்னை அரசினர் நியமித்த கவி பாரதியார் நூல்கள் வெளியீட்டுக் குழு.

2. இந்திய அரசினர் அரசியலமைப்பை முக்கிய இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பொருட்டு அமைத்த அரசியலமைப்புச் சொற்கள் மொழியாக்க நிபுணர் குழு.

3. சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு, நிருவாகக் குழு. 4. தென்னிந்திய மொழிகள் புத்தக டிரசுட்டின் ஆலோசனைக் குழு.

5. சென்னை அரசினர் சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் தயாரித்த நிருவாகச் சொற்களை முடிவு செய்ய அமைத்த நிபுணர் குழு.

6. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயண ஆராய்ச்சிப் பதிப்புக் குழு.

7. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் அகராதியின் ஆலோசனைக் குழு.

இத்துடன் நில்லாமல், இந்திய மொழித்துறைகள் பலவற்றிற்கும் துணைவராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். 1937 முதல் 1955 வரை ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாடுகளில் கலந்துகொண்டு அரிய பொழிவுகள் பல ஆற்றிச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பெருமையை உலகறியச் செய்தார். இவர் காலத்தில் வெளிவந்த சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகள் 1. திராவிடப் பொதுச் சொற்கள் (Dravidian common Vocabulary) 2. திராவிடப் பொதுப் பழமொழிகள் (Common Dravidian Proverbs).

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்