Sunday, June 25, 2023

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 4 – எழுத்தறிவு

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 3. தாய் தந்தையர் போற்றல்-தொடர்ச்சி)

எழுத்தறிவு

என் தாயாருடைய தகப்பனார் அடையாளம் பேடு அப்பாவு முதலியார் என்பவர். அடையாளம் பேடு என்பது சென்னைக்கு ஒன்பது கல் தூரத்திலிருக்கும் ஒரு சிறு ஊர். அவருக்கு அந்த ஊரிலும் அதற்கடுத்த ஊராகிய வானகரத்திலும் கொஞ்சம் நிலமுண்டு. அதை ஆட்களைக் கொண்டு பயிரிட்டு அவர் சீவித்து வந்தனராம். இங்கு அவரைப் பற்றி எனது மாமி அதாவது அப்பாவு முதலியாருடைய மருமகப் பெண் சொல்லிய ஒரு கதை எனக்கு ஞாபகம் வருகிறது. மூன்றாவது மைசூர் யுத்தத்தில் ஆங்கிலேயர் சிரீரங்கப் பட்டணத்தைப் பிடித்த சமயம் (1792 கி.பி.) அவர் ஆங்கிலேய சைனியத்துடன் சிப்பாய்களுக்கு உணவுப் பொருள்கள் சேகரித்துக் கொடுக்கும் வேலையில் போயிருந்தாராம். சிரீரங்கப் பட்டணம் முற்றுகையின் போது அகழியின் ஒரு மூலையில் பதுங்கியிருந்தாராம்; மேலே குண்டுகள் பாய்கிற சப்தத்தைக் கேட்டுத் தான் பிழைப்பது அரிது என்று நடுங்கிக் கொண்டிருந்தனராம். பிறகு சிரீரங்கப் பட்டணத்தில் சிப்பாய்கள் சூறையாடிய போது அவர்கள் கொண்டு வந்த பொருள்களை சரசமாக வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உரூபாயாக கொடுத்து வந்தனராம். இப்படி சேகரித்த பொருள்களை யெல்லாம் நாலைந்து பொதி மாடுகள் மீது போட்டுக் கொண்டு அடையாளம் பேட்டுக்குத் திரும்பி வந்தனராம். அவற்றை விற்று (உ)ரொக்கமாக்கி வானகரத்தில் ஒரு சத்திரம் கட்டி வைத்தனராம். அச்சத்திரம் இன்றும் இருக்கிறது.

என் தாயாரைப் பெற்ற பாட்டனரும். என் தகப்பனாரைப் பெற்ற பாட்டனாரும் நான் பிறக்கு முன்பே காலகதி அடைந்து விட்டனராம்.

என் தகப்பனார் எங்களை மிகவும் கண்டிப்பான முறையில் வளர்த்து வந்ததற்குச் சில உதாரணங்களைக் கூறுகிறேன். தினம் காலை மாலைகளில் இத்தனை மணி நேரம் படிக்க வேண்டுமென்று எங்களுக்குக் கட்டளை. அதன்படி, நாங்கள் படித்து விட்டோமானால் மற்ற வேளைகளெல்லாம் நாங்கள் விருப்பப்படி விளையாடலாம். விடுமுறை தினங்களில் கட்டாயமாய் விளையாட வேண்டும். அதற்காக எங்களுக்கெல்லாம் கோலி பம்பரம் முதலிய விளையாட்டுக் கருவிகளை, தானே வாங்கிக் கொடுப்பதுமன்றி தன் வயதையும் பாராமல் எங்களுடன் எங்கள் விளையாட்டுகளில் கலந்துக் கொள்வார்.

இன்னொரு உதாரணத்தை இங்கு எழுதுகிறேன். நான் பி. ஏ. படித்துக் கொண்டிருந்த போது என் பால்ய சிநேகிதரான வி. வி. சீனிவாச ஐயங்கார் (இவரைப் பற்றி பிறகு நான் அதிகமாக எழுத வேண்டி வரும்.) என்னை அடிக்கடி பார்க்க வருவார். அச்சமயங்களில் நான் மேல் மாடியில் படித்துக் கொண்டிருந்தால் அவரைக் கீழேயே நிறுத்தி “சம்பந்தம் படித்துக் கொண்டிருக்கிறான். 4-மணி வரையில் அவன் படிக்கவேண்டிய காலம்” என்று சொல்லி, அது வரையில் அவருடன் பேசிக் கொண்டிருந்து, நான்கு அடித்தவுடன் அவரை மெத்தைக்கு அழைத்து வந்து என்னிடம் விட்டு நாங்கள் பேசுவதற்கு தடையாயிருக்கலாகாதென்று கீழே போய் விடுவார்!

நாங்கள் வாலிபத்தை அடைந்த பிறகு தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்னும் மொழிப் படியே எங்களை பாவித்து வந்தார் என்றே நான் கூறவேண்டும்.

இனி என் சொந்தக் கதையை எழுத ஆரம்பிக்கிறேன். ஒவ்வொருவனும் தான் சிறு குழந்தையாய் இருந்த போது! முதல் முதல் என்ன சம்பவம் அவன் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பது ஒரு வேடிக்கையாய் இருக்கும். எனது மூன்றாவது வயதில் நேரிட்ட இரண்டு விசயங்கள் எனக்கு இப்போது ஞாபகமிருக்கின்றன.

ஒரு சிறிய கிருட்டிணன் விக்கிரகத்தை வைத்துக் கொண்டு எங்கள் வீட்டின் குறட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் “தெருவில் விளையாடக் கூடாது. வீட்டிற்குள் விளையாடு” என்று என்னை உள்ளே அழைத்துக் கொண்டு போனது; என் தமக்கை மீனாம்பாள் என்பவர்கள் மரித்த போது என் தாயார் அவர்கள் பக்கலில் படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டதும் அவர்களுடைய உடலை பல்லக்கில் எடுத்துக் கொண்டு போனதுமாம். மேற் குறித்த சம்பவங்களும் நடந்தது நான் இப்போது இருக்கும் எங்கள் பிதுரார்சித வீடாகிய ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் இலக்க வீட்டிலாகும்.

1876-ஆம் வருடம் எங்கள் தாயார் இந்த வீட்டிலிருந்தால் எந்நேரமும் தன் மடிந்த குமாரத்தியின் ஞாபகம் வருகிறதெனக் கூற என் தகப்பனார் தன் குடும்பத்துடன் இதே வீதியில் எங்கள் பங்காளியாகிய கட்டைக்கார ஆறுமுக முதலியாரின் சந்ததியாரின் வீடாகிய 54ஆவது கதவிலக்கமுள்ள பெரிய வீட்டில் குடி புகுந்தார். இந்த வீட்டில் நான் அது முதல் முதல் 1893 ஆம் வருடம் வரையில் வசித்து வந்தேன்.

எனது அட்சராப்பியாசம் 1877-ஆம் வருடம் இங்கிருக்கும்போது நடந்தது. என்னை முதல் முதல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியது நன்றாய் ஞாபகமிருக்கிறது. அன்று காலையில் என் தாயார் என்னைக் குளிப்பாட்டியது; என் தகப்பனார் மடியில் உட்கார்ந்து நான் தெலுங்கு அட்சரங்கள் பயின்றது, தெருப்பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் என்னைத் தன் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக்கொண்டுபோனது, எல்லாம் மிகவும் நன்றாய் நேற்று நடந்தது போல் என் மனத்தில் படிந்திருக்கிறது. அச்சமயம் எனக்கு அணிவித்த பட்டு சொக்காய், நிசார், கோணல் டொப்பி முதலியவற்றை, எனக்குப் படம் எழுதும் சக்தியிருக்குமானால் அப்படியே வரைந்து காட்டுவேன்; இதில் வேடிக்கையென்னவென்றால் நேற்று தினசரி பத்திரிகையில் நான் படித்த விசயங்களைப்பற்றிச் சொல்வ தென்றால் எனக்கு ஞாபகமறதியாய் இருக்கிறது! சுமார் 84 வருடங்களுக்கு முன் நடந்த மேற்கண்ட விசயங்களைப்போன்ற பல விசயங்கள் நன்றாய் ஞாபகமிருக்கின்றன.

எனக்கு ஞாபகமிருக்கும் வரையில் என்னுடைய ஐந்தாம் வயதின் ஆரம்பத்தில் எனக்கு மேற்கண்டபடி அட்சராப்பி யாசம் செய்வித்தார்கள். அது முதல் 1879-ஆம் வருசம் வரையில் மூன்று தெருப்பள்ளிக்கூடங்களில் நான் படித்தேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, June 24, 2023

உ .வே.சா.வின் என் சரித்திரம் 42 : காரிகைப் பாடம்

 




என் சரித்திரம் 41 : ஏக்கமும்நம்பிக்கையும் தொடர்ச்சி

அத்தியாயம் 24
காரிகைப் பாடம்

குன்னத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டினராகிய இராமையங்கார் எனது நிலையை அறிந்து மிகவும் இரங்கினார். அப்பால் ஒருநாள் என் தந்தையாரைப்பார்த்து, “இவனைச் செங்கணம் சின்னப் பண்ணை விருத்தாசல ரெட்டியாரிடம் கொண்டுபோய் விட்டால் அவர் பாடஞ் சொல்வாரே” என்றார். “விருத்தாசல ரெட்டியார் என்பவர் யார்?” என்று என் தந்தையார் கேட்டார். “அவர் செங்கணத்திலுள்ள பெரிய செல்வர், உபகாரி, தமிழ் வித்துவான், இலக்கண, இலக்கியங்களை நன்றாகப் பாடஞ்சொல்லும் சக்தி வாய்ந்தவர்.” “அவரிடம் போயிருந்தால் ஆகாரம் முதலியவற்றிற்கு என்ன செய்வது?” “நீங்கள் குடும்பத்துடன் சென்று அங்கே இருக்கலாம். அவரே உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களை யெல்லாம் செய்து கொடுப்பார். நான் உங்களை அழைத்துச் சென்று அவரிடம் விடுகிறேன். அவர் என் நண்பர்” என்று இராமையங்கார் சொன்னார். அவர் பின்னும் விருத்தாசல ரெட்டியாருடைய குணாதிசயங்களைச் சொன்னார். தமிழ்ச் சித்த வைத்திய நூல்களில் ஐயங்கார் நல்ல பயிற்சியுடையவர். அதனால் அவருக்கும் இரெட்டியாருக்கும் பழக்கம் உண்டாயிற்று. அந்தப் பக்கங்களில் இருந்த தமிழ் வித்துவான்கள் யாவருக்கும் இரெட்டியாருடைய பழக்கம் உண்டு.

செங்கணம் சென்றது

இராமையங்கார் விருத்தாசல ரெட்டியாரைப் பற்றிச் சொன்னபோது எனக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. காலத்தை வீணாகக் கழிக்காமல் இயன்றவரையில் பாடம் கேட்கலாமென்று எண்ணினேன். என் தந்தையார் செங்கணம் செல்ல உடன்பட்டார்.

கார்குடியிலிருந்த கத்தூரி ஐயங்கார், சாமி ஐயங்கார், களத்தூர் இராமையங்கார் என்பவர்களுக்கும் விருத்தாசல ரெட்டியார் நண்பர். குன்னம் இராமையங்கார் செங்கணத்திற்குப் புறப்பட ஒருநாளை நிச்சயித்துக் கூறியபின், மேற்கூறிய மூவருக்கும் அதனை அறிவிக்க, அவர்களும் அன்று செங்கணத்திற்கு வந்து என்னை இரெட்டியாரிடம் சேர்ப்பிக்க வருவதாகச் சொல்லியனுப்பினர்.

குறித்த தினத்தில் குன்னம் இராமையங்கார் என்னையும் என் தந்தையாரையும் அழைத்துக்கொண்டு செங்கணம் சென்றார். என் தாயார் குன்னத்தில் இருந்தார். அன்று எங்களுக்கு முன்பே கார்குடி கத்தூரி ஐயங்கார் முதலிய மூவரும் அங்கே வந்திருந்தனர். நால்வரும் என்னைச் செங்கணம் இரெட்டியாரிடம் ஒப்பித்து என் இயல்பைப் பற்றிக் கூறினர்: “இவனை நல்ல நூல்கள் படிக்கும்படிச் செய்யவேண்டும். இவன் அதே நாட்டமாக இருக்கிறான். வேறொன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. அன்றியும் படிக்கிற வரையில் இவன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர். இரெட்டியார் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டார். இயல்பாகவே உபகாரச் சிந்தையை உடைய அவர் இந்த நான்கு பேர்களும் சொல்லும்போது என்னை ஏற்றுக்கொள்வதற்கு என்ன தடை?

இரெட்டியார் என்னை நோக்கி, “என்ன என்ன நூல்களைப் படித்திருக்கிறீர்?” என்று கேட்டார். நான் இன்ன இன்ன நூலை இன்னார் இன்னாரிடத்தில் பாடம் கேட்டேனென்பதைச் சொல்லிவிட்டு, “நான் இந்த நூல்களைப் பாடங் கேட்டிருந்தாலும் ஒரு நூலிலாவது எனக்குத் தெளிவான ஞானம் உண்டாகவில்லை. எல்லாக் குறையும் தாங்கள் தீர்க்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். அவர் புன்னகையுடன், “அப்படியே ஆகட்டும்” என்றார்.

பிறகு “நீர் நன்னூல் காண்டிகை உரையைப் பாடம் கேட்டிருத்தலால் எழுத்துச் சொல் இலக்கணங்கள் ஒருவாறு தெரிந்திருக்கும். இந்த ஞானமே மேலே இலக்கியங்களைப் படித்தற்குப் போதுமானது. அடுத்தபடியாக யாப்பிலக்கணம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்; ஆதலால் முதலில் யாப்பருங்கலக் காரிகையைப் பாடஞ் சொல்லுகிறேன். அப்பால் சௌகரியம்போற் பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறி என் தந்தையாரைப் பார்த்து, “நீங்கள் குடும்பத்துடன் இங்கே வந்துவிடுங்கள்” என்றார். என் தந்தையாருக்கும் எனக்கும் மகிழ்ச்சியினால் உள்ளம் பூரித்தது. யாவரும் இரெட்டியாரிடம் விடைபெற்றுக்கொண்டு குன்னம் வந்தோம். என் தந்தையார் என் தாயாரையும் என்னையும் அழைத்துக்கொண்டு செங்கணத்துக்கு ஒரு நல்ல நாளில் வந்தார். இடையிலே நின்றிருந்த தமிழ்க் கேள்வித் துறையில் மீட்டும் நான் புகுந்தேன்.

இரெட்டியார் எங்களுக்காக ஒரு சாகை ஏற்படுத்தி அதில் இருக்கும்படி செய்து, உணவுப் பொருள்களையும் வேண்டிய அளவு முன்னதாக அனுப்பி, செலவுக்குப் பணமும் கொடுத்து ஆதரித்தார். ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் தவறின்றி இரண்டு கல நெல்லும் இரண்டு ரூபாயும் அனுப்பி விடுவார்

.ரெட்டியார் இயல்பு

செங்கணத்தில் நாட்டாண்மைக்காரரில் பெரிய பண்ணையார், சின்னப் பண்ணையார், பட்டத்துப் பண்ணையார் என்ற பகுப்பினர் இருந்தனர்! விருத்தாசல ரெட்டியார் சின்ன பண்ணையார் என்னும் பகுப்பினர். இம்மூவகையினரையும் நாட்டார் என்று வழங்குவர். அவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி இருந்தமையால் எங்களிடம் அன்புவைத்து அவ்வப்போது வேண்டிய உபகாரங்களைச் செய்து வந்தார்கள். அவர்களில் சிலர் சைவ சமயத்தையும் சிலர் வைணவ சமயத்தையும் தழுவியவர்கள். ஆயினும் அவர்களுக்குள் விவாக சம்பந்தம் முதலியன உண்டு.

விருத்தாசல ரெட்டியார் குட்டையான வடிவினர். கறுப்பு நிறத்தினர். தேகம் பளபளப்பாக இருக்கும். எப்பொழுதும் சுத்தமாக இருப்பார். காலை ஐந்து மணிக்கு எழுவார். ஊரைச் சுற்றிலும் காடுகளும் நீரூற்றமும் மணற் பரப்புமுள்ள ஓடைகளும் உண்டு. ஏதேனும் ஒரு பக்கம் சென்று தந்த சுத்தி முதலியவற்றை முடித்துக்கொண்டு ஏழு மணிக்கு வீட்டிற்கு வருவார். கால், கையைச் சுத்தம்பண்ணிக்கொள்வதற்கும் முகத்தைச் சுத்தம்பண்ணிக்கொள்வதற்கும் அரை மணிநேரம் பிடிக்கும். பிறகு திருநீற்றை உத்தூளனமாக இட்டுக்கொண்டு படிக்கத் தொடங்குவார். பதினொரு மணி வரையிற் படித்துக்கொண்டேயிருப்பார். படிக்கும் நூல்களிலுள்ள ஒவ்வொரு விசயத்தையும் ஆழ்ந்து படித்துச் சிந்தித்துச் செல்வார். மத்தியான உணவுக்குப்பின் இரண்டு மணி முதல் இராத்திரி எட்டு மணி வரையில் படித்துக்கொண்டே இருப்பார். படிப்பதில் அவருக்குச் சலிப்பே தோற்றாது. இரவில் போசனம் ஆன பிறகு தம்முடைய மூத்த குமாரராகிய நல்லப்ப ரெட்டியாருக்குக் கம்பராமாயணப் பாடம் சொல்வார். அவர் பேச்சு மிகவும் திருத்தமாக இருக்கும்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Saturday, June 17, 2023

என் சரித்திரம் 41 : தந்தையார் சிவ பூசை

 




(என் சரித்திரம் 40 : ஏக்கமும்நம்பிக்கையும் தொடர்ச்சி)

தந்தையார் சிவ பூசை


அப்பால் நாங்கள் சூரியமூலை சென்று சிலநாள் தங்கினோம். அங்கே என் பிதா என் மாதாமகரிடம் படிக லிங்க பூசையை எழுந்தருளச் செய்துகொண்டார். அந்தச் சிவலிங்கப் பெருமானுக்கு மீனாட்சிசுந்தரேசுவர ரென்பது திருநாமம். குடும்பத்துக்குரிய பூசையை அதுகாறும் செய்துவந்த எந்தையார் அக்கால முதல் சிவபூசையை விரிவாகச் செய்யத் தொடங்கினர். என் பாட்டனாரைப் போலவே அபிசேகத்துக்குப் பாலும் அருச்சனைக்கு வில்வமும் இல்லாமற் பூசை செய்வதில்லை என்ற நியமத்தை மேற்கொண்டார். சிவபூசையில் வரவர அதிகமாக அவர் ஈடுபடலானார். தம் பூசையில் நிவேதனமான அன்னத்தையன்றி வேறு அன்னத்தை உண்ணும் வழக்கத்தை நிறுத்திக்கொண்டார்.

இராமாயணப் பிரசங்கத்தில் அவர் தம் வாழ்க்கையில் பல வருடங்கள் ஈடுபட்டவர். இராமபிரானுடைய அரிய குணங்கள் அவர் நெஞ்சத்தை உருக்கின. ஆயினும் சிவபெருமானிடத்து அவருக்கு உண்டான தீவிரமான பக்தி இராமபிரானிடம் உண்டாகவில்லை. இராமபிரானை எல்லாக் குணங்களும் நிறைந்த மூர்த்தியாக எண்ணி வழிபடுவதில் அவர் குறைவதில்லை. ஆயினும் அவர் தம் இருதய அந்தரங்கத்தைச் சிவபிரானுக்கே உரிமையாக்கினர். அவருடைய வாழ்க்கையின் முற்பகுதியில் அவருடைய சங்கீதத் திறமை அவர் புகழுக்கும் மதிப்புக்கும் காரணமாக நின்றது. பிற்பகுதியில் அவருடைய சிவபூசையும் சிவபக்தியும் அவருடைய மதிப்புக்கு முக்கிய காரணமாயின. கோபம், உறவினர்களிடத்தில் ஒருவகையான வெறுப்பு முதலிய குறைகளும் விடாமுயற்சி, கட்டங்களைச் சகிக்கும்தன்மை, சங்கீதத் திறமை என்னும் குணங்களும் அவர்பால் இருந்தன. ஆனால் அவரைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்தக் குறைகளையும் நிறைகளையும் கடந்து நின்று முதலில் ஞாபகத்திற்கு வருவது அவரது சிறந்த சிவபக்திச் சிறப்பேயாகும்.

அரும்பாவூர் நாட்டார்

சில காலத்துக்குப் பிறகு சூரியமூலையிலிருந்து நேரே குன்னத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். என் தந்தையார் வழக்கம்போலவே காலட்சேபம் செய்துவந்தார். எனக்குப் பழைய உற்சாகம் சிறிது சிறிதாகக் குறைந்து வந்தது. படித்த பழம்புத்தகங்களைத் திருப்பித் திருப்பிப் படித்து வந்தேன். ஆனாலும் திருப்தி பிறக்கவில்லை. புதிய முயற்சி செய்வதற்கும் வழியில்லை. இப்படியிருக்கையில் ஒருநாள் பெரும்புலியூரைச் சார்ந்த அரும்பாவூரிலிருந்த நாட்டாராகிய பெருஞ்செல்வரொருவர் அரியிலூருக்குப் போகும் வழியில் குன்னத்தில் எங்கள் சாகையில் தங்கினர். அவர் சிரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய நண்பர். தமிழ்ப் பயிற்சி உடையவர்.

அவர் என்னோடு பேசிவருகையில் எனக்கிருந்த தமிழாசையை உணர்ந்தார். பிள்ளையவர்களுடைய பெருமையை அவர் பலபடியாக விரித்து உரைத்தார். என் தந்தையாரைப் பார்த்து, “தமிழில் இவ்வளவு ஆசையுள்ள உங்கள் குமாரரை வீணாக இச்சிறிய ஊரில் ஏன் வைத்திருக்கிறீர்கள்? பிள்ளையவர்களிடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டால் இவர் நன்றாகப் படித்து விருத்திக்கு வருவாரே இப்படியே இவர் இருந்தால் ஏங்கிப்போய் ஒன்றுக்கும் உதவாதவராகி விடுவாரே. இப்படி வைத்திருப்பது எனக்குத் திருப்தியாக இல்லை” என்றார்.

“அவரிடம் கொண்டுபோய் விட்டால் அவர் பாடம் சொல்லித் தருவாரென்பது என்ன நிச்சயம்?” என்று என் தந்தையார் கேட்டார்.

“என்ன அப்படிக் கேட்கிறீர்களே! அவர்களிடத்தில் எவ்வளவு பேர் கற்றுக்கொள்ளுகிறார்கள்! எவ்வளவு பேர் பாடங்கேட்டு நல்லநிலைக்கு வந்திருக்கிறார்கள்! பாடம் சொல்வதைப்போல அவர்களுக்கு விருப்பமான செயல் வேறொன்றும் இல்லை. இப்போது அவர்கள் நாகபட்டினத்தில் அந்த தலபுராணம் அரங்கேற்றி வருகிறார்கள். நான் போய் ஒரு மாதம் இருந்துவிட்டு வந்தேன் அவர்களிடம் எப்போதும் சில மாணாக்கர்கள் பாடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.”

“எல்லாம் சரி தான். ஆனாலும் இவனைத் தனியே அனுப்புவதற்கு என் மனம் துணியவில்லை. தவிர அவர்களிடம் சென்றிருந்தால் ஆகாரம் முதலிய சௌகரியங்களுக்குத் திரவியம் வேண்டுமே. இப்போதுதான் இவனுக்குக் கல்யாணம் நடந்தது. அதற்கு அதிகப்பணம் செலவாகிவிட்டது. இப்படி இருக்கையில் மேலும் எப்படி என்னால் பணம் செலவு செய்ய முடியும்?” என்றார் தந்தையார்.

“என்னவோ, எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். பிள்ளையவர்களைத் தவிர இவருக்குத் திருப்தி உண்டாகும்படி பாடம் சொல்வோர் வேறு யாரும் இல்லை. யோசித்துக்கொண்டு செய்யுங்கள்” என்று சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றார்.

இங்ஙனமே வேறு சிலரும் பிள்ளையவர்களுடைய நற்குணத்தையும் புலமைச் சிறப்பையும் எங்களிடம் கூறி வந்தனர். அதனால் எனக்கு அப்புலவர்பிரானைப் பற்றிய தியானமே பெரிதாகிவிட்டது. கடவுள் திருவருள் கைகூட்டுமோ என்று ஏங்கலானேன்.

நம்பிக்கை உதயம்

ஒருநாள் காலையில் திருவிளையாடற் புராணத்தைப் படிக்கலாமென்று எடுத்தேன். அப்போது மிகவும் நைந்து, அயர்ந்துபோன என் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோற்றியது. “இந்தப் புத்தகத்தில் கயிறுசார்த்திப் பார்ப்போம்” என்று நினைந்து அவ்வாறே செய்யலானேன். இராமாயணம், திருவிளையாடல் முதலிய நூல்களில் வேறு ஒருவரைக்கொண்டு கயிறுசார்த்திப் பிரித்து அப்பக்கத்தின் அடியிலுள்ள பாடலைப் பார்த்து அச்செய்யுட் பொருளின் போக்கைக்கொண்டு அது நல்ல பொருளுடையதாயின் தம் கருத்து நிறைவேறுமென்றும், அன்றாயின் நிறைவேறாதென்றும் கொள்ளுதல் ஒரு சம்பிரதாயம்.

நான் ஒரு சிறுவனைக்கொண்டு கயிறுசார்த்தச் செய்து, புத்தகத்தைப் பிரித்தேன். சென்ற துருமதி வருடம் பங்குனி மாதம் பதிப்பிக்கப்பெற்ற அப்பழம்புத்தகத்தில் 160-ஆம் பக்கம் கிடைத்தது. ‘வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படல’மாக இருந்தது அப்பகுதி. சில முனிவர்கள் வேதத்தின் பொருள் தெரியாது மயங்கி மதுரைக்கு வந்து அங்கே எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தியைப் பணிந்து தவம்புரிய, அவர் எழுந்தருளி வந்து வேதப்பொருளை விளக்கி அருளினாரென்பது அப்படல வரலாறு. நான் பிரித்துப் பார்த்த பக்கத்தில், தட்சிணாமூர்த்தி ஓர் அழகிய திருவுருவமெடுத்து வருவதை வருணிக்கும் பாடல்கள் இருந்தன. அந்தப் பக்கத்தின் அடியில் 23 என்னும் எண்ணுடைய செய்யுளை நான் பார்த்தேன். “என் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதோ” என்ற பயத்தோடு நான் மெல்லப் புத்தகத்தைப் பிரித்தேன். பிரிக்கும் போதே என் மனம் திக்குத்திக்கென்று அடித்துக்கொண்டது. நல்ல பாடலாக வரவேண்டுமே!’ என்ற கவலையோடு அப்பக்கத்தைப் பார்த்தேன்.


சீதமணி மூரல்திரு வாய்சிறி தரும்ப
மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான்
நாதமுடி வாயளவி னான்மறையி னந்தப்
போதவடி வாகிநிறை பூரணபு ராணன்”

என்ற பாட்டைக் கண்டேனோ இல்லையோ எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. என் கண்களில் நீர் துளித்தது. மிகவும் நல்ல நிமித்தம் உண்டாகிவிட்டது. ஒரு குருவை வேண்டி நின்ற எனக்கு, தட்சிணாமூர்த்தியாகிய குருமூர்த்தி வெளிப்பட்டதைத் தெரிவிக்கும் செய்யுள் கிடைத்ததென்றால், என்பால் பொங்கிவந்த உணர்ச்சிக்கு வரம்பு ஏது? “கடவுள் எப்படியும் கைவிடார்” என்ற நம்பிக்கை உதயமாயிற்று. “மதுரை மீனாட்சிசுந்தரக் கடவுள் முனிவர்களுக்கு அருள் செய்தார். எனக்கும் அந்தப் பெருமான் திருநாமத்தையுடைய தமிழாசிரியர் கிடைப்பார்” என்ற உறுதி உண்டாயிற்று.

என் தந்தையார் பூசையிலுள்ள மூர்த்தியும் சிரீ மீனாட்சிசுந்தரக் கடவுளே என்ற நினைவும் வந்து இன்புறுத்தியது. உவகையும் புதிய ஊக்கமும் பெற்றேன். இந்நிகழ்ச்சியை என் தந்தையாரிடம் கூறினேன். அவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

“எவ்வாறு அவர்களிடம் போய்ச் சேர்வது? செலவுக்கு என்ன செய்வது? தனியே போய் இருக்க முடியுமா?” என்ற கேள்விகள் எழுந்து பயமுறுத்தினாலும், திருவிளையாடற் பாட்டின் தோற்றம் அந்தப் பயத்தை மேலெழும்ப வொட்டாமல் அடக்கி நின்றது. அருணோதயத்தை எதிர்பார்க்கும் சேவலைப்போல நல்ல காலத்தை எதிர்பார்த்து நாட்களைக் கழித்து வந்தேன்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Monday, June 12, 2023

ப. சம்பந்த(முதலியா) ரின் ‘என் சுயசரிதை’ 2. ஏழைக் குடும்பம்

 




(ப. சம்பந்த(முதலியா)ரின் என் சுயசரிதை 1. தொடர்ச்சி)

3. ஏழைக் குடும்பம்

என் தகப்பனார் அந்தக் கல்லூரியில் அரைச் சம்பளத்தில் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் என்பவர் செல்வந்தரல்ல, ஒரு சாராயக்கடையில் குமாசுத்தாவாக சொல்பச் சம்பளம் பெற்று, குடும்பத்தைச் சம்ரட்சணம் செய்துவந்தனராம். ஆயினும் தன் பிள்ளைகள் இருவரும் நன்றாய்ப் படிக்கவேண்டுமென்று தீர்மானித்துக் கட்டப்பட்டு அரைச்சம்பளத்தில் அந்தக் கல்லூரியில் படிக்கச் செய்தராம். இந்த நிலையில்தான் என் தகப்பனார் கட்டப்பட்டுப் படித்ததற்கு உதாரணமாக அவர் எனக்குக் கூறிய கதை ஒன்றை இங்கு எழுதுகிறேன். அச்சமயம் மத்தியான சாப்பாட்டிற்காக ஒரு பாத்திரத்தில் கூழ் எடுத்துக்கொண்டுபோய், அதற்கு வியஞ்சனமாக வெங்காயப் புரையை வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தனராம்.

சென்னை சருவகலாசாலையின் நூறாம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் போது அச்சிட்ட ஒரு புத்தகத்தில் என் தகப்பனாரைப் பற்றி எழுதியிருப்பதை இங்கு மொழி பெயர்க்கிறேன். பி. விசயரங்க முதலியார் 1851 ஆம் வருடம் திறன் (Proficient) பரிட்சையில் இரண்டாவது வகுப்பில் தேறினார். அவ்வருடம் இராபர்ட்சன் என்பருடைய ‘அமெரிக்கா சரித்திரம்’ என்னும் நூலைத் தமிழில் எழுதியதற்காக ஒரு பரிசைப் பெற்றார். மேற்கண்ட திறன் பட்டம் தற்காலத்தில் பி.ஏ. பட்டத்திற்குச் சமானமாகும். அந்தப் பரிட்சையில் தேறுபவர்களுக்குக் கலாசாலையார் தங்கள் செலவில் ஒரு பொன் மோதிரம் அக் காலம் அளித்துவந்தனர். அப்படி என் தகப்பனாருக்கு கொடுக்கப்பட்ட பொன் மோதிரம் சற்றேறக்குறைய தன் அறுபதாம் ஆண்டு வரையில் அவர் விரலில் அணிந்திருந்தார். அவர் தமிழில் எழுதிய அமெரிக்க சரித்திரம் பிறகு அச்சிடப்பட்டது. அக்கலாசாலையில் படிக்கும்போது என் தகப்பனாரும் அவர் தம்பியாகிய சோமசுந்தர முதலியாரும் பெற்ற சில பரிசுப் புத்தகங்கள் அவர்கள் பெயருடன் என் வசம் இன்னும் இருக்கின்றன.

மேற்கண்ட பரிட்சையில் தேறின உடனே அவர் அக் கலாசாலையிலேயே சீக்கிரம் தமிழ் உபாத்தியாயராக நியமிக்கப்பட்டதாக என் தகப்பனார் எனக்குத் தெரிவித்திருக்கிறார். பிறகு அந்த தானத்திலிருந்து மதுரை சில்லாவில் பள்ளிக்கூடங்களுக்கு துணை ஆய்வாளராக (Deputy Inspector of Schools) ஆக கவர்மெண்டாரால் நியமிக்கப்பட்டார். அங்கேயிருந்து பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டார். அக்காலம் உரூபாய் 250 சம்பளம். பிற்பாடு பள்ளி உதவி ஆய்வாளர் (Assistant Inspector of Schools) ஆக உயர்த்தப்பட்டார். அதற்கு மாத சம்பளம் உரூபாய் 400. இவ் வேலையிலிருந்து தன் அறுபதாம் ஆண்டில் 1890ஆம் வருடம் உபகாரச் சம்பளம் (பென்சன்) வாங்கிக்கொண்டு விலகினார்.

என் தகப்பனார் தன் ஆயுள் பரியந்தம் பெரும் உழைப்பாளி யாயிருந்தார் என்றே நான் சொல்லவேண்டும். அவர் சிறு வயதிலேயே ‘உபயுக்த கிரந்தகரண சபை’ என்பதின் ஒரு முக்கிய அங்கத்தினராக உழைத்தார். அதற்காகப் பல புத்தகங்களைத் தமிழில் எழுதிப் பதிப்பித்தார். இதன் பிறகு பாடசாலைகளுக்கு வேண்டிய புத்தகங்களை அச்சிடுவதற்கும் திராவிட பாசையில் நூதனப் புத்தகங்கள் அச்சிடுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட பள்ளிப்புத்தகங்கள், நாட்டுமொழி இலக்கியச் சங்கம் (School books and Vernacular Literature Society) என்னும் சபையில் தன் ஆயுள் பரியந்தம் அங்கத்தினராக இருந்தார். இச்சமயத்திலும் சில தமிழ்ப் புத்தகங்களை அவர் வெளியிட்டார். அவற்றுள் பம்மல் விசயரங்க முதலியாருடைய மூன்றாவது வகுப்பு வாசக புத்தகம் என்னும் நூலை அவர் எழுதிப் பதிப்பித்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. சென்னையில் அக்காலம் பார்க்கு பேர் {Park Fair) வருடா வருடம் நடத்தப்பட்ட வேடிக்கையின் காரியதரிசியாக 1881-ஆம் வருடம் முதல் 1886-ஆம் வருடம் வரையில் அவர் இருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. சென்னையில் விசய நகரம் மகாராசா அவர்கள் அக்காலம் ஏற்படுத்திய ஐந்து பெண்கள் பாடசாலைகளுக்குக் காரியதரிசியாயிருந்தார். சென்னை யூனிவர்சிடி செனெட்டில் (University Senate) உறுப்பினராகத் தன் ஆயுள் பரியந்தம் இருந்தார். மேற்படி யூனிவர்சிடியாரால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் பரீட்சகர்களின் போர்ட்டுக்கு (Board of Examiners for Tamil) பல வருடங்களில் சில வருடங்கள் தலைவராகவும் இருந்தார். சுருக்கி சொல்லுமிடத்து அவர் அக்காலத்தில் சென்னையில் சேர்ந்திராத பொதுக் கூட்டமாவது கிளப் (Club) ஆவது இல்லையென்றே ஒருவாறு கூறலாம். பச்சையப்பன் கலாசாலையில் டிரசுட்டியாக (Trustee of the Patchiappan’s charities) தன் ஆயுட் பரியந்தம் இருந்தார்.

இதுவரையில் அவரது லெளகீக வியவகாரங்களைப்பற்றி எழுதினேன். இனி அவரது வைதீக வியவகாரங்களைப்பற்றி சிறிது எழுதுகிறேன்.

1872-ஆம் வருடம் மதுரை திருஞானசம்பந்தசுவாமிகள் மடத்தில் அவர் சிவதீட்சை பெற்றுக்கொண்டார் என்று நான் நினைக்கவேண்டியிருக்கிறது. அதன் பிறகு நான் உடனே பிறந்தபடியால் எனக்குத் திருஞானசம்பந்தம் என்று அந்த மடத்து பண்டார சந்நதி அவர்கள் பெயரையே வைத்ததாக என் தகப்பனர் எனக்குக் கூறியிருக்கிறார். அவர் எழுதி வைத்த சிறு புத்தகத்தில் என் பெயர் திருஞானசம்பந்தம் என்றே எழுதியிருக்கிறது. (என் சிறுவயதில் P. T. (ப. தி.) சம்பந்தம் என்றே என் பெயர் எழுதப்பட்டது. பிறகு நான் புத்தி அறிந்தவுடன் நமக்கு ஞானம் எங்கிருந்து வந்ததென்று அப்பெயரை சம்பந்தம் என்றே குறுக்கிக் கொண்டேன்.)

மேற் சொன்னபடி அவர் சிவதீட்சை பெற்ற பிறகு தன் மரணகாலம் சமீபித்தபோது படுக்கையாய்ப் படுத்த வரையில் அவர் தினம் சிவபூசையைச் செய்துவந்தார். வெளியூர்களுக்குப் பிரயாணம் போனதும் அச்சிவபூசைக்குரிய சாமான்களை தன்னுடன் எடுத்துச்செல்வார்.

அவர் மதுரையில் இருந்தபோது அங்குள்ள பிராம்மணர்களுக்கும், திருஞானசம்பந்த சுவாமிகள் மடத்து பண்டார சந்நதிக்கும். ஏதோ விவாதம் நடந்ததாகவும் என் தகப்பனுர் மடத்துகட்சிக்கு உதவி அதன் பொருட்டு கவர்மெண்டாருக்கு அனுப்பிய ஒரு பெட்டிசன் (Petition) என்னிடம் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அக்காலத்திலேயே பிராம்மணர்கள், பிராம்மணர்கள் அல்லாதார் என்கிற கட்சி உண்டாயிற்று போலும். (நான் எந்த கட்சியையும் சேர்வதில்லை என்பதை இங்கு சுருக்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்).

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, June 10, 2023

என் சரித்திரம் 40 : ஏக்கமும் நம்பிக்கையும்

 




(என் சரித்திரம் 39: என் கல்யாணம் தொடர்ச்சி)

அத்தியாயம் 23
ஏக்கமும் நம்பிக்கையும்

களத்தூரில் இருந்தபோது எங்களுக்கு வந்த தானியங்களில் கம்பு முதலியன அதிகமாகவும் நெல் குறைவாகவும் இருந்தன. கம்பு முதலியவற்றைக் கொடுத்துவிட்டு நெல்லாக மாற்றிக்கொள்வது வழக்கம்.

அன்னையார் கம்பஞ் சாதம் உண்டது

ஒருநாள் என் தாயார் உண்ணும்போது நான் கவனித்தேன். அவர் இலையில் இருந்த உணவு புதியதாகத் தோற்றியது; அவர் கம்பஞ்சாதத்தை உண்டுகொண்டிருந்தார். நெல்லின் அருமையை உணர்ந்த அவர் எனக்கும் என் தந்தையாருக்கும் நெல்லரிசியுணவை அளித்துத் தாம் மட்டும் கம்பஞ்சாதத்தைச் சில நாட்களாக உண்டு வந்தாரென்பது தெரிய வந்தது.

“ஏன் அம்மா இப்படிச் செய்கிறாய்?” என்று நான் கேட்டேன். “கம்பு உடம்புக்கு நல்லதுதானே? அதை நெல்லுக்காக மாற்றுவது ஏனென்றெண்ணி இப்படிச் செய்கிறேன்.” “அப்படியானால் எங்களுக்கு மாத்திரம் அரிசிச் சாதம் போடுகிறாயே?” என் அன்னையாருக்கு விடை கூற வழியில்லை. அப்பால் என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி அவரும் எங்களைப்போல அரிசிச் சாதம் உண்ண ஆரம்பித்தார்.

இராகவையரிடம் பாடம் கேட்டது
ஐப்பசி மாதம் தீபாவளி வந்தது. எனக்குத் தலைத் தீபாவளியாதலால் என் மாமனாருடைய அழைப்பின்மேல் நானும் என் தாய், தந்தையரும் உத்தமதானபுரம் சென்றோம். மாளாபுரத்தில் தீபாவளிப் பண்டிகை நடந்தது. அதனுடன் ஆறு மாதமும் நடந்தது. தீபாவளிக்காக ஏழு ரூபாய்க்கு சரிகை வாத்திரமும் ஆறாம் மாதத்திற்காகப் பதினான்கு ரூபாயும் கிடைத்தன. அதற்குமுன் நான் கையில் வெள்ளிக்காப்பை மட்டும் அணிந்திருந்தேன். என் தாயார் விருப்பத்தின்படி அந்தப் பதினான்கு ரூபாய்க்கும் வெள்ளிச்சங்கிலி செய்து எனக்கு அணிவித்தார்கள். தீபாவளியான பிறகு என் தந்தையாருக்கு சுரம் வந்தமையின் ஆறுமாத காலம் உத்தமதானபுரத்திலேயே தங்க நேர்ந்தது. அக்காலத்தில் பாபநாசத்தில் சிறுபள்ளிக்கூடம் ஒன்றின் உபாத்தியாயராக இராகவையர் என்பவர் இருந்தார். அவர் தமிழ் நூல்களைக் கற்றவர். கும்பகோணம் காலேசில் தமிழாசிரியராக இருந்த தியாகராச செட்டியாரிடத்திலும் மகாவித்துவான் சிரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடத்திலும் பாடங் கேட்டவர். அவரைப் பற்றிக் கேள்வியுற்ற நான் ஊரிலிருந்த காலத்தை வீணாக்காமல் அவரிடம் சென்று பாடங் கேட்கலாமென்று எண்ணினேன்.

அப்படியே ஒருநாள் பாபநாசம் சென்று அவரைப் பார்த்துப் பாடஞ்சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவர் சம்மதித்தார். நன்னூல் காண்டிகையுரையை அவர்பால் கேட்கத் தொடங்கினேன். தினந்தோறும் காலையில் உத்தமதானபுரத்திலிருந்து பாபநாசம் செல்வேன்; பகல் முழுவதும் அங்கே தங்கியிருந்து அவருக்குள்ள ஓய்வு நேரங்களில் பாடங் கேட்டு வருவேன்.

அக்காலத்தில் அவர் சிரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றியும் தியாகராச செட்டியாரைப் பற்றியும் அடிக்கடி பாராட்டிப் பேசுவார்; “நன்னூல் பாடம் கேட்க வேண்டுமென்றால் தியாகராச செட்டியாரிடம் கேட்கவேண்டும். நன்னூலின் வரையறையை அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறார். ‘நடவாமடிசீ’ என்ற சூத்திரத்தின் உரை விசேடத்தை அவரைப் போலச் சிக்கின்றிச் சொல்பவர் வேறு யாரும் இல்லை. அதனைப் பிள்ளையவர்களிடம் அவர் அறிந்துகொண்டார்” என்று அவர் சொல்லுவார். அவர் இவ்வாறு சொல்லச் சொல்ல எனக்கு நெடுங்காலமாக இருந்துவரும் ஆவல் பெருகி ஏக்கத்தை உண்டாக்கும். “கும்பகோணத்துக்குப் போய்ச் செட்டியாரிடம் பாடங் கேட்கலாமா? அது நமக்குக் கிடைக்குமா? கவர்ன்மெண்ட்டு காலேசில் வேலைபார்க்கும் அவர் நம்மை ஒரு பொருட்படுத்திப் பாடஞ் சொல்லுவாரா!” என்று பல பலவிதமாக நினைந்து நினைந்து மறுகினேன்.

இராகவையரிடம் தொடர்ச்சியாக ஒரு வாரம் பாடங்கேட்டு வந்தேன். அவரோடு பழகும் ஒருவர் ஒரு நாள் என்னைப் பார்த்து, “தினந்தோறும் இவரிடம் பாடங்கேட்கிறீரே. இவர் ஏழை. இவருக்கு ஏதாவது திரவிய சகாயம் செய்யவேண்டாமோ?” என்றார். அவர் கூறியது உண்மைதான். ஆனால் நான் பொருளுதவி செய்யும் நிலையில் இல்லையே! என் தந்தையாரிடம் இந்த விசயத்தைக் கூற அஞ்சினேன். நான் அவருக்குச் சிரமம் கொடுப்பது பிழைதான் என்பதை உணர்ந்து அன்று முதல் தினந்தோறும் அவரிடம் சென்று வருவதை நிறுத்திக்கொண்டேன். இடையிடையே சென்று சில விசயங்களை மட்டும் கேட்டு வந்தேன்.

பிற்காலத்தில் இராகவையர் மதுரைக் காலேசில் தமிழ்ப் பண்டிதராக இருந்து அப்பால் சந்நியாசம் பெற்று வாழ்ந்து வந்தார்.

‘இங்கிலீசு படிக்கச் சொல்லுங்கள்’

ஒருநாள் நானும் என் தந்தையாரும் கும்பகோணத்திற்கு ஒரு வேலையாகப் போயிருந்தோம். அங்கே வக்கீலாக இருந்த வேங்கட(இ) ராவு என்பவர் எந்தையாருக்கு நண்பராதலின் அவர் வீட்டிற்குச் சென்றோம். தந்தையார் அவரோடு பேசுகையில் என்னைப் பற்றி அவர் விசாரித்தார். “இவன் தமிழ் படிக்கிறான்; சங்கீத அப்பியாசமும் செய்து வருகிறான். யாரிடமாவது இருந்து தமிழ் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறான். இங்குள்ள தியாகராச செட்டியார் மிகச்சிறந்த வித்துவானென்று கேள்விப்படுகிறோம். அவரிடம் படிக்க வேண்டுமென்று இவன் விரும்புகிறான்” என்று தந்தையார் சொல்லிவிட்டு நான் இயற்றிய செய்யுட்கள் சிலவற்றைச் சொல்லிக்காட்டச் செய்தார்.

அவற்றைக் கேட்ட வேங்கடராவு, “நன்றாக இருக்கின்றன. ஆனால் இக்காலத்தில் இவற்றால் என்ன பிரயோசனம்? எதற்காக இவ்வளவு கட்டப்பட வேண்டும்? இதை விட்டுவிட்டு இங்கிலீசு படிக்கச் சொல்லுங்கள். நான் உதவி செய்கிறேன்; என் அன்பர்களையும் செய்யச் சொல்லுகிறேன். இன்னும் சில வருடங்களில் இவன் முன்னுக்கு வந்துவிடுவான்” என்றார்.

எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை; அவர் என்னிடமுள்ள அன்பினால் அவ்வாறு சொல்லுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க என் மனம் இடம் தரவில்லை. அவர்பால் எனக்குக் கோபந்தான் உண்டாயிற்று. “தியாகராச செட்டியாரிடம் படிக்க வழிகேட்டால் இவர் இங்கிலீசு படிக்கவல்லவா உபதேசம் செய்கிறார்? எனக்கு இங்கிலீசு ம் வேண்டா; அதனால் வரும் உத்தியோகமும் வேண்டா” என்று நான் சிந்தனை செய்தேன்.

என் தந்தையார், “இங்கிலீசு படிக்க முன்பே இவன் முயன்றதுண்டு; தெலுங்கும் படித்தான். ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. தமிழ்ப் படிப்பிலேதான் இவனுக்கு ஆசையும் தீவிரமும் இருக்கின்றன. வேறு வழியில் இவன் புத்தியை மாற்றுவது சாத்தியமாகத் தோற்றவில்லை” என்று கூறி விடைபெற்று என்னுடன் உத்தமதானபுரம் வந்துவிட்டார்.

‘உடம்பு வளைந்து வேலை செய்வது’

உத்தமதானபுரத்தில் எங்கள் நிலங்களை என் சிறிய தந்தையார் கவனித்து வந்தார். நான் அவ்வூரில் தங்கியிருந்த ஆறுமாத காலங்களில் அவருடன் வயற்காடுகளுக்குச் செல்வேன். புன்செய்களில் பயிரிட்டிருக்கும் செடி, கொடிகளைப் பாதுகாப்பதில் உதவி புரிவேன்; வேலி கட்டுவேன்; சலம் இறைப்பேன்; காய்களைப் பறிப்பேன். என் மாமனார் வீட்டினர் பார்க்கும்போது பின்னும் சுறுசுறுப்பாக அவற்றைச் செய்வேன்; ‘படித்துச் சோம்பேறியாகிவிட்டான்’ என்று எண்ணாமல், ‘கருத்துள்ள பிள்ளை; பிழைத்துக்கொள்வான்’ என்று அவர்கள் எண்ண வேண்டுமென்பது என் நினைவு. இத்தகைய சிறு வேலைகளை இளமை முதலே செய்துவருவது கிராமத்தாருக்கு இயல்பு. உடம்பு வளைந்து வேலை செய்வது அகௌரவம் என்ற எண்ணம் அக்காலத்தில் அதிகமாகப் பரவவில்லை.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Monday, June 05, 2023

ப. சம்பந்த(முதலியா)ர் எழுதிய”என் சுயசரிதை” (வாழ்க்கை வரலாறு) 1.

     06 June 2023      அகரமுதல



என் சுயசரிதை
1. 
என் இளம் பருவ சரித்திரம்

பம்மல் விசயரங்க முதலியார் இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன் திருஞான சம்பந்தம் 1873-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் 1-ஆந்தேதிக்குச் சரியான ஆங்கீரச வருடம் தை மாதம் 21ஆந்தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் சனனம் சென்னப்பட்டணத்தில்” என்று நான் தகப்பனார் விசயரங்க முதலியார் எழுதி வைத்துவிட்டுப்போன குடும்ப புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கிறது. நான் இப்போது இதை எழுதத் தொடங்கும்போது வசிக்கும் ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் எண் வீட்டில் முதற்கட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் நான் பிறந்ததாக என் தாயார் எனக்குச் சொன்னதாக ஞாபகமிருக்கிறது.

பூவுலகில் மனிதனாய்ப் பிறக்கும் ஒவ்வொருவனைப்பற்றியும் இரண்டு விசயங்கள் நிச்சயமாய்க் கூறலாம், அவன் ஒரு நாள் பிறந்திருக்கவேண்டும். அவன் ஒருநாள் இறக்க வேண்டுமென்பதாம், ஆயினும் இவ்விரண்டு விசயங்களைப்பற்றியும் அவன் நேராகக் கூறுவதற்கில்லை. பிறந்ததைப்பற்றி மற்றவர்கள் கூறுவதைத்தான் நாம் ஒப்புக்கொள் வேண்டும். இறந்ததைப் பற்றியும். மற்றவர்கள் பின் கூறவேண்டுமல்லவா?

————-
2. என் தாய் தந்தையர்

என் தகப்பனாரைப்பற்றி சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். மேற்குறித்த புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கும் சில குறிப்புகளை இங்கு எடுத்து எழுதுகிறேன். அவர் பிறந்தது. 1830-ஆம் வருடம் மார்ச்சு மாதம் 1-ஆந்தேதி உரோகிணி நட்சத்திரம். சிரீ கிருட்டிணன் பிறந்த உரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவரது அம்மானுக்கு ஏதாவது கெடுதி நேரிடுமென்று பயந்திருந்தார்களாம், ஆயினும் அப்படி ஒன்றும் கெடுதி நேரிட வில்லையென்று என் தகப்பனார் கூறியது எனக்கு ஞாபகமிருக்கிறது. (சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கவனிப்பார்களாக.)

1850ஆம் வருடம் அவருக்கு முதல் விவாகமானது. அதன் மூலமாக ஒரு புத்திரனும் இரண்டு புத்திரிகளும் பெற்றார். பிறகு அந்தத் தாரம் தப்பிப்போகவே 1860ஆம் வருடம் இரண்டாவது மனைவியாக மாணிக்கவேலு அம்மாள் என்னும் என் தாயாரை மணந்தார். இந்த விவாகத்தின் மூலமாக அவருக்கு நான்கு புத்திரர்களும் நான்கு புத்திரிகளும் பிறந்தார்கள். அந்த நான்கு புத்திரர்களில் கடைசிப் புத்திரன் நான். என் தகப்பனார் என் தாயாரை மணந்த சமயம் நேரிட்ட ஒரு சந்தர்ப்பம் சோதிடத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்குச் சிறிது பலன் தரக்கூடிய விசயமாயிருப்பதால் அதை இங்கு எடுத்தெழுதுகிறேன், இரண்டாம் தாரத்தைத் தேடியபொழுது எனது தகப்பனாருக்கு வயது முப்பதானபடியால் இரண்டாம் தாரம் சிறு பெண்ணாயில்லாமல் கொஞ்சம் வயதான பெண்ணா யிருக்கவேண்டுமென்று கோரினார். என் தாயாருக்கு அப்போது வயது இருபதாயிருந்தது. அன்றியும் கொஞ்சம் சிவப்பாயிருப்பார்கள். ஆகவே என் தாயாரையே மணக்க வேண்டுமென்று நிச்சயித்தனர். ஆனால் அக்கால வழக்கின்படி இருவருடைய சாதகத்தையும் எடுத்துக்கொண்டு பிரபல சோசியர்களுக்குக் காட்டிய பொழுது அவர்கள் எல்லாரும் பெண் சாதகத்தின்படி வயிற்றுப் பொருத்தமுமில்லை, கழுத்துப் பொருத்தமுமில்லை என்று கூறினார்களாம். அஃதாவது குழந்தைகள் பிறக்கமாட்டார்கள், அமங்கலியாய் போய்விடுவாள் என்று அருத்தம். அது எப்படியாயினும் ஆகுக. இந்தப் பெண்ணைத் தான் நான் மணம் புரிவேன் என்று என் தகப்பனார் ஒரே பிடிவாதமாய் என் தாயாரை மணம் புரிந்தார். சோசியர்கள் கூறியதற்கு நேர்விரோதமாக என் தாயாருக்கு நான்கு பிள்ளைகளும் நான்கு பெண்களும் பிறந்தார்கள், வயிற்றுப் பொருத்தம் இல்லாமையின் பலன் இதுபோலும். இனி கழுத்துப் பொருத்தத்தைப்பற்றி கவனிக்குங்கால் என் தாயார் அமங்கலியாக ஆகாது என் தகப்பனாருக்கு 1890ஆம் வருடம் சசுட்டி பூர்த்தியானபோது ஒரு மங்கலியத்திற்கு இரண்டு மங்கலியங்களாக பெற்றபிறகே சுமங்கலியாக இறந்தார்கள். யாராவது என் தகப்பனாரிடம் சாதகங்களைப்பற்றி பேச வந்தால் மேற்சொன்ன கதையை அவர் அவர்களுக்குப் பன்முறை கூறியதை நான் நேராகக் கேட்டிருக்கிறேன், (சோசியத்திலும் சாதகத்திலும் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை யில்லாதிருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.)

என் தகப்பனார் சிறு வயதில் மாபூசுகான்தேவடியிலிருந்த ஒரு தெருப் பள்ளிக்கூடத்தில் முதலில் படித்தனராம். அப்பொழுது நடந்த ஒரு வேடிக்கையான சந்தர்ப்பத்தை அவர் எனக்குக் கூறியுள்ளார். அதை இங்கு எழுதுகிறேன். நான் இருக்கும் வீதியின் ஒரு புறத்திற்கு மாபூசுகான்தேவடி என்று பெயர். அது அக்காலம் தோட்டமாய் இருந்ததாம், அத் தோட்டத்திலிருந்த வீட்டிற்கு அந்த மாபூசுகான் என்பவர் எப்பொழுதாவது வருவதுண்டாம். ஒருமுறை அவர் பல்லக்கு பள்ளிக்கூடத்தருகில் வந்தபோது பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் எல்லோரும் பெரும்கூச்சலிட மாபூசுகான் சாய்பு பல்லக்கை நிறுத்தி உபாத்தியாயரை அழைத்து பிள்ளைகள் ஏன் கூச்சலிடுகிறார்கள் என்று கேட்க, அவர் பயந்து “தாங்கள் வருவதைக் கேள்விப்பட்டு பிள்ளைகள் சந்தோசத்தினால் கூடச்சலிடுகிறார்கள்” என்று பதில் சொல்ல சாயபு ஆனால் பிள்ளைகளுக்கு இன்று விடுமுறை கொடுத்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனாராம். இவ்வாறு ஒருநாள் விடுமுறை கிடைக்கவே பிள்ளைகளெல்லாம் பிற்பாடு மாபூசுகான் சாயபு பல்லக்கு வரும்போதெல்லாம் பெரும் கூச்சலிட்டு விடுமுறை பெற்றார்களாம்.

பிறகு என் தகப்பனாரும் அவர் தம்பியும் (அவர் பெயர் சோமசுந்தர முதலியார்) ஆங்கிலம் கற்கவேண்டி அப்பொழுது தான் புதிதாய் ஏற்படுத்தப்பட்ட பச்சையப்பன் பாடசாலையில் சம்பளமில்லாமல் இலவசமாய் மாணவர்களாகப் போய்ச் சேர்ந்தனர். அங்கு ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தபோது அரசு உயர் தரக் கலாசாலை (Presidency high School) பேராசிரியராயிருந்த திரு பவல்துரை, தன் வழக்கம்போல் வருடத்திற்கு ஒருமுறை அங்கு வந்து பிள்ளைகளைப் பரிட்சை செய்து நன்றாய் தேறினவர்களை அங்கிருந்து தன் கலாசாலைக்கு மாணவர்களாக அழைத்துக்கொண்டு போகிற வழக்கப்படி, என் தந்தையாரையும் அவர் தம்பியையும் தன் உயர் தரப்பள்ளிக்கு அழைத்துச் சென்றனராம். அப்பாட சாலை அக்காலம் நுங்கம்பாக்கத்தில் தற்காலத்தில் ‘பழைய கல்லூரி’ (Old College) என்று சொல்லப்பட்ட இடத்தில் இருந்ததாம். பிறகு மாகாண கல்லூரியாக (Presidency College) மாற்றப்பட்டு திருவல்லிக்கேணியில் தற்காலமிருக்கும் பெரிய கட்டடத்தில் மாற்றப்பட்டது.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

Saturday, June 03, 2023

என் சரித்திரம் 39: என் கல்யாணம் தொடர்ச்சி

 





(என் சரித்திரம் 38: என் கல்யாணம் தொடர்ச்சி)

என் சரித்திரம்

என் கல்யாணம்


எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணத்திற்குமுன் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நிறைபணி நடைபெற்றது. விநாயக மூர்த்தியின் திருவுருவம் முழுவதையும் சந்தனத்தால் மறைத்துவிடுவார்கள். அதற்காக ஊரினர் யாவரும் வந்து சந்தனம் அரைப்பார்கள். ஊரில் பொதுவாக ஒரு பெரிய சந்தனக்கல் இதற்காகவே இருக்கும். அதைக்கொணர்ந்து வைத்து அருகில் இரண்டு கவுளி வெற்றிலையும் சீவலும் வைத்துவிடுவார்கள். பொடிமட்டையும் வைப்பதுண்டு. சந்தனம் அரைக்க வருபவர்கள் அவற்றை அடிக்கடி உபயோகப்படுத்திக்கொண்டு தங்கள் கைங்கரியத்தைச் செய்வார்கள்.

அபிசேக ஆராதனைகளுக்குப் பிறகு நிவேதனமான பழங்களும் சுண்டல், வடைப்பருப்பு, மோதகம் முதலியவைகளும் விநியோகம் செய்யப்படும். மோதகம் ஒரு மாம்பழ அளவு இருக்கும். ஒவ்வொரு பொருளையும் இன்னார் இன்னாரே விநியோகிக்க வேண்டுமென்ற வரையறை உண்டு. அவர்கள் ஊரிலிருக்கும் காலங்களில் அந்த விநியோகத்தைத் தவறாமற் செய்து வருவார்கள். இந்த நிறைபணியோடு எங்கள் வீட்டிலும் பெண் வீட்டிலும் குலதெய்வ சமாராதனைகளும் நடைபெற்றன. என் கல்யாணம் அக்காலத்திற்கேற்ப விமரிசையாகவே நடை பெற்றது. குளங்களிலும் வாய்க்கால்களிலும் நிறைய சலம் இருந்தது. ஆதலின் விருந்தினர்களது குளியல் முதலிய சௌகரியங்களுக்குக் குறைவு நேரவில்லை. நலங்கு நடைபெற்றபொழுது நானே பத்தியங்கள் சொன்னேன். அவற்றை என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எனக்குச் சொல்லித் தந்தார். எங்கள் குலகுருவாகிய ஐயா வாத்தியாரென்பவர் எல்லா வைதிக காரியங்களையும் முறைப்படி நடத்தி வைத்தார்.

சிதம்பர உடையார் வருகை


விபவ வருடம் ஆனி மாதம் 4-ஆம் தேதி (16-6-1868) என் விவாகம் நடந்தது. அன்று இரவு மறவனத்தம் சிதம்பர உடையார் குதிரை மீதேறி வந்து சேர்ந்தார். அவர் விவாகத்துக்கு முதல் நாளே வந்திருப்பார். அவர் தந்தையாருக்கு அன்று திதியாகையால் அதைச் செய்துவிட்டு விவாக தினமாகிய மறுநாட் காலையிலே புறப்பட்டு இரவு மாளாபுரம் வந்தார். வந்தவுடனே என் தந்தையாரைக்கண்டு தாம் முன்பே வாக்களித்திருந்தபடி ஐம்பது ரூபாய் அளித்தார். தக்க சமயத்தில் அவர் செய்த உபகாரத்தைப் பெற்று என் தந்தையார் மிக்க நன்றி பாராட்டினார்.

அவர் குதிரையின்மீது ஏறிவந்து இறங்கியபோது அவர் ஒரு பெரிய செல்வரென்பதைக் கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் அறிந்துகொண்டனர். அவர் கலகலவென்று பணத்தை எடுத்துக்கொடுத்தபோது எல்லாரும் ஆச்சரியமுற்றனர். என் தந்தையார் மிக்க செல்வாக்குடையவரென்ற எண்ணம் அவர்களுக்கு அப்போது உண்டாயிற்று. அரியிலூர் முதலிய இடங்களிலிருந்தும் சில வேளாளச் செல்வர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள். அவரவர்களுக்கு ஏற்றபடி உபசாரங்கள் நடைபெற்றன. எந்தையாரிடம் அவர்கள் காட்டிய மரியாதையைக் கண்ட என் மாமனாரும் அவரைச் சார்ந்தவர்களும், “நல்ல இடத்தில்தான் நாம் சம்பந்தம் செய்திருக்கிறோம். பெரிய மனுசர்களெல்லாம் இவருக்குப் பழக்கமாக இருக்கிறார்கள். நம் மாப்பிள்ளைக்குக் குறைவு ஒன்றும் இல்லை” என்ற தைரியத்தை அடைந்தார்கள்.

கிருகப் பிரவேசம் கல்யாணம் நான்கு நாள் நடைபெற்றது

ஐந்தாம்நாள் மாலையில் உத்தமதானபுரத்தில் எங்கள் வீட்டில் கிருகப்பிரவேசம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று புறப்படவேண்டிய சமயத்தில் இடியுடனும் மின்னலுடனும் பெரிய மழை வந்துவிட்டது. நாங்கள் மாளாபுரத்திலிருந்து புறப்பட்டு உத்தமதானபுரம் செல்ல வேண்டும். பெண் வீட்டுக்காரர்கள் மழையிற் புறப்பட்டுப் போகக்கூடாது என்றனர். மழை நின்ற பிறகும் செல்வதைத் தடுத்தனர். என் தகப்பனாரோ மிகவும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்; விசேடமான உணவு வகைகளைச் சித்தம் செய்வித்திருந்தார். அவ்வளவும் வீணாகிவிடுமேயென்று அவர் கவலைப்பட்டார்.

கல்யாணத்துக்கு வந்தவர்களுள் தியாகசமுத்திரம் விசுவநாத சாத்திரிகளென்பவர் ஒருவர். அவர் சிறந்த சம்சுகிருத வித்துவான். சில்லா நீதிபதியாக இருந்த பருனல் துரை என்னும் ஐரோப்பிய கனவானுக்கு சம்சுகிருத பாடம் கற்பித்து வந்தவர்; சோதிட சாத்திரத்திலும் அவருக்குப் பழக்கம் இருந்தது. அவர் என் தந்தையாருக்கு நண்பர். அவரிடம் என் தந்தையார் “மழை வந்து நின்றுவிட்டதே; இப்போது பிரயாணப்படக் கூடாதா?” என்று கேட்டார். அவர், “அதனால் ஒன்றும் கெடுதி இல்லை. நல்லதுதான்” என்று கூறினர். பெண் வீட்டுக்காரர்களிற் சிலர் அப்போது மறுத்துக் கூறினர். உடனே சாத்திரிகள் பல வடமொழிச் சுலோகங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துச் சொல்லி, “மழை வந்தது நல்ல சகுனமே; புறப்படுவது நன்மையே” என்று நிரூபித்தார். என் தந்தையாருக்கு அந்த மழையால் உண்டாகிய கலக்கம் சாத்திரிகளுடைய வார்த்தைகளால் நீங்கவே உள்ளம் குளிர்ந்தது. நாங்கள் உத்தமதானபுரத்திற்குப் புறப்பட்டு விட்டோம்.

கிருகப்பிரவேசம் சிறப்பாக நிகழ்ந்தது. கல்யாணச் சிறப்புக்குமேல் கிருகப்பிரவேசச் சிறப்பு அதிகமாக இருந்தது. “ஊரைவிட்டுப் போய்விட்டமையால் இவர்களுக்குச் சௌகரியம் அதிகமாயிற்றே ஒழியக் குறைவொன்றுமில்லை” என்ற கருத்து ஊராருக்கு உண்டாயிற்று.

வரகூர் கோபால பாகவதர்

கல்யாணம் நிறைவேறிய பிறகு சில நாட்கள் உத்தமதானபுரத்தில் தங்கியிருந்தோம். இடையே அருகில் ஓர் ஊரில் என் வேட்டகத்து அம்மான் வீட்டில் நடைபெற்ற விசேடத்திற்கு நானும் வேறு சிலரும் போயிருந்தோம். என் தந்தையார் மாத்திரம் ஊரில் இருந்தார். அப்போது உத்தமதானபுரத்தில் எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது. அக்கல்யாணத்துக்கு வரகூரிலிருந்து கோபால பாகவதர் என்னும் பெரியார் தம் பரிவாரத்துடன் வந்திருந்தார். அவர் அரிகதை செய்வதில் மிக்க புகழ் பெற்றவர். சிறந்த ஆசார அனுட்டானமுடையவர். அவர் அக்கல்யாணத்தில் அரிகதை நடத்தினார். அதனைக் கேட்ட என் தந்தையார் நான் அப்போது அங்கே இல்லாதது குறித்து வருந்தினார். நான் வந்தவுடன், “கோபால பாகவதர் கதை பண்ணினார். நீ கேட்டிருந்தால் பல விசயங்களைக் கிரகித்திருப்பாய்” என்றார். பாகவதர் அன்றும் இருந்தார். நான் சென்று அவரைத் தரிசித்து நமசுகாரம் செய்தேன். பளபளவென்ற அவர் திருமேனியும் விபூதி தாரணமும் துளசிமணி மாலையும் தூய உடையும் என் கண்களைக் குளிர்வித்தன. அவருடன் இருபது, முப்பது பாகவதர்கள் வந்திருந்தனர். எல்லாரும் தூய்மையும் பக்தியும் உருவெடுத்தாற்போல் தோன்றினார்கள்.

கோபால பாகவதர் என்னைச் சில கீர்த்தனங்கள் பாடச்சொல்லிக் கேட்டார். சில தமிழ்ச் செய்யுட்களையும் அவர் விருப்பப்படி சொல்லிக் காட்டினேன். அவர் மனமகிழ்ந்து என்னை ஆசீர்வாதம் செய்தார்.

மஞ்சள் வேஷ்டியுடன்

சில தினங்கள் உத்தமதானபுரத்தில் இருந்தபிறகு என் தந்தையாரும் தாயாரும் நானும் குன்னம் வழியாக மீட்டும் களத்தூருக்கே வந்து சேர்ந்தோம். நான் மஞ்சள் வேட்டியணிந்த கல்யாணக் கோலத்துடன் குன்னம், கார்குடி முதலிய இடங்களில் உள்ளவர்களின் விருப்பப்படி அங்கங்கே சென்று பெரியோர்களுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.

பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு கிருகத்தனாகிய அக்கோலத்தைக் கண்டு சந்தோசமடைந்தவர்களுள் முதல்வர் என் அன்னையார். என் தந்தையார் என் கல்யாண விசயத்திற்பட்ட சிரமத்திற்கு அளவில்லை. ஆதலின் “நல்ல காரியத்தை விரைவில் நன்றாக நிறைவேற்றினோம்” என்ற திருப்தியினால் அவர் உற்சாகம் பெற்றிருந்தார்.

ஒரே நாட்டம்

கல்யாணத்திற்குச் சிலநாள் முன்பிருந்து கல்யாணமான பிறகு சிலநாள் வரையிலும் எனக்கும் ஒரு புதிய உற்சாகம் இருந்தது. பார்க்க வேண்டியவர்களை யெல்லாம் பார்த்துவிட்டு ஒருவாறு அமைதிபெற்ற பின்பு அந்த உற்சாகம் என்னிடமிருந்து நழுவி விட்டது. நான் கிருகத்தனாகிவிட்டதனால் என்னிடம் புதிய அபிவிருத்தி ஏதும் உண்டானதாகத் தெரியவில்லை. கல்யாணத்திலும் பொருள் வருவாயிலும் ஊர்ப் பிரயாணத்திலும் எனக்கு இலாபம் இருந்ததாகத் தோற்றவில்லை. எனக்கு ஒன்றுதான் நாட்டம். தமிழ்தான் எனக்குச் செல்வம்; அதுதான் என் அறிவுப்பசிக்கு உணவு; எவ்வளவுக்கெவ்வளவு நான் அதன் தொடர்பை அதிகப்படுத்திக்கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு உற்சாகம், நல்லது செய்தோமென்ற திருப்தி, இலாபமடைந்தோமென்ற உணர்ச்சி உண்டாகின்றன. அன்றும் சரி, இன்றும்சரி, இந்த நிலைமை மாறவே இல்லை.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.