Tuesday, November 29, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 17

 அகரமுதல

(உ.வே.சா.வின்என்சரித்திரம் 16 தொடர்ச்சி)

உ.வே.சா.வின் என் சரித்திரம் 17

அத்தியாயம் 10

இளமைக் கல்வி

முதலில் உத்தமதானபுரத்தில் எனக்கு உபாத்தியாயராக இருந்த நாராயணையர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து பிராயம் கொண்டவர்; நல்ல வடிவம் உடையவர். அவரைக் காணும்போது எனக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் பயம் உண்டாகும்; பிரம்பை அதிகமாக அவர் உபயோகிப்பார். அவரை நினைக்கும்போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.

அவரது பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள். அடிக்கிற விசயத்தில் அவர் யாரிடமும் பட்சபாதம்  

காட்டுவதில்லை. பிள்ளைகளுக்குள் பிச்சு என்று ஒருவன் இருந்தான். அவன் தகப்பனார் பணக்காரர். அதனால் அவனுக்குச் சிறிது கருவமும் தைரியமும் இருந்தன. உபாத்தியாயர் அடிக்கும்போது அவன் திருப்பி அடிக்க முயல்வான். முரட்டுத்தனத்தினால் குழந்தைகளை அடக்கியாள்வது கடினமென்பதை அந்த உபாத்தியாயர் தெரிந்து கொள்ளவில்லை. அவருக்கு அவருடைய கைப்பிரம்பே செங்கோலாக இருந்தது. எல்லாப் பிள்ளைகளும் தம்முடைய தண்டனையை ஏற்றுக் கொள்ளும்போது பிச்சு மாத்திரம் எதிர்த்தால் அவர் சும்மா இருப்பாரா? மேலும் மேலும் கடுமையான தண்டனைகளை விதித்தார். அவன் சிறிதும் அடங்கவில்லை. பிறகு அவனைப் பள்ளிக்கூடத்தை விட்டே நீக்கிவிட்டார். “அவன் பெற்ற விடுதலை நமக்கும் கிடைக்காதா?” என்று விரும்பிய பிள்ளைகளும் உண்டு.

பள்ளிக்கூடத் தொல்லையிலிருந்து நீங்கிய பிச்சு பிறகு படிப்பைப் பற்றி நினைப்பதே இல்லை. பிற்காலத்தில் கையெழுத்துப் போடுவதைத்தவிர வேறு ஒன்றும் எழுதவோ படிக்கவோ இயலாதவனாக இருந்தான். பணக்காரப் பிச்சுவையருக்குப் படிப்பிருந்தால் என்ன? இராவிட்டால் என்ன?

நாராயணையர் அரிச்சுவடி, எண்சுவடி முதலியவைகளைத்தான் கற்பிப்பார். அவரிடம் நான் கற்ற பின்பு சாமிநாதையரது பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். அங்கேதான் ஏட்டில் எழுதக் கற்றுக்கொண்டேன். அக்காலத்தில் காகிதம் பள்ளிக்கூடம் வரைக்கும் வரவில்லை. சிலேட்டும் இல்லை. முதலில் மாணாக்கன் மணலில் எழுதிப் பழக வேண்டும். பிறகு அவனே எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சாமிநாதையர் சங்கீதமும் சமசுகிருதமும் தெரிந்தவர். முன்பே அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். எனக்கு அவர் சம்சேப ராமாயணம், விட்ணு சகசுரநாமம், நீதி சாரம், அமரம் மூன்று காண்டங்கள் என்பவற்றைப் போதித்தார். அவ்வளவும் எனக்கு மனப்பாடமாக இருந்தன. தமிழும் கணக்கும் கற்பித்தார். அவர் நாராயணையரைப்போல் கடுமையானவர் அல்லர். ஆனாலும் அந்தக் காலத்துக் கிராம உபாத்தியாயர்களுக்குப் பிரம்பு ஆடாவிட்டால் மாணாக்கர்கள் படிக்க மாட்டார்களென்ற எண்ணம் பரம்பரையாக இருந்து வந்தது; அவருக்கும் அந்தக் கொள்கை உண்டு.


கிராமத்துப் பள்ளிக்கூடங்களைத் திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்றும் சொல்லுவார்கள். அந்தப் பள்ளிக்கூடங்களில் மாணாக்கர்கள் பயிலும் முறையே வேறு. இப்போது அதனை எங்கும் பார்க்க முடியாது.

பிள்ளைகள் யாவரும் விடியற்காலையில் ஐந்து மணிக்கே எழுந்து சுவடித்தூக்கோடு பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடவேண்டும். சுவடிகளை யெல்லாம் வைத்துத் தூக்கிச் செல்லும் கயிறுகள் சேர்ந்த பலகைக்குச் சுவடித்தூக்கென்று பெயர். அந்தத் தூக்கு ஒருவகை உறியைப் போல இருக்கும். தூக்கைப் பள்ளிக்கூடத்தில் ஓரிடத்தில் மாட்டிவிட்டுப் பிள்ளைகள் முறைப்படி இருந்து முதல் நாள் நடந்த பாடங்களைப் பாராமல் ஒப்பிக்க வேண்டும். அதற்கு முறை சொல்லுதல் என்று பெயர். அப்போது உபாத்தியாயர் வீட்டிற்குள் படுத்துக் கொண்டிருப்பார்; அல்லது வேறு ஏதேனும் செய்து வருவார். அவரை எதிர்பாராமல் பிள்ளைகள் பாடங்களை முறை சொல்ல வேண்டும். அதை அவர் உள்ளே இருந்தபடியே கவனிப்பார். பெரும்பாலும் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் உபாத்தியாயரது வீட்டுத் திண்ணையிலேயே இருக்கும்.


ஆறு மணிக்குமேல் பிள்ளைகளெல்லாம் வாய்க்கால் அல்லது குளம் முதலிய இடங்களுக்குப் போய்த் தந்த சுத்தி செய்து தங்கள் தங்கள் குலத்திற்கேற்ற சின்னங்களைத் தரித்துக்கொண்டு சந்தியா வந்தனமோ வேறு அனுசுட் டானமோ செய்வார்கள். பிறகு தங்கள் வசுதிரங்களில் மணலை எடுத்துக்கொண்டு மூசிகவாகனம், சரசுவதி தோத்திரம் முதலியவற்றைச் சொல்லிக்கொண்டே பள்ளிக்கூடத்திற்கு வருவார்கள். முன்பிருந்த பழைய மணலை அகற்றிவிட்டுப் புதிய மணலைப் பரப்புவார்கள். எழுதுவதற்குரியவர்கள் அதில் எழுதுவார்கள்; மற்றவர்கள் தங்கள் பாடங்களைப் படிப்பார்கள்.


ஒன்பது மணிக்குப் பிள்ளைகளைப் பழையது (பழைய அமுது) சாப்பிடவிடுவது வழக்கம். அப்பொழுது உபாத்தியாயர் ஒரு பக்கத்தில் வீற்றிருந்து ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் பிரம்பால் அடித்து அனுப்புவார். பழைய சோற்று ருசியில் பள்ளிக்கூட ஞாபகம் மறக்கக் கூடாதென்பதற்காக அங்ஙனம் செய்வார் போலும்!

பிள்ளைகளுக்குள்ளே கெட்டிக்காரனாகவும் பலசாலியாகவும் இருப்பவனை உபாத்தியாயர் சட்டாம் பிள்ளையாக நியமிப்பார். அவன் புத்திசாலியாக இராவிட்டாலும் பலசாலியாக இருக்க வேண்டியது அவசியம். உபாத்தியாயருக்குப் பிரதிநிதியாகப் பிள்ளைகளை அடக்கி யாள்வதும் பாடம் ஒப்பிக்கக் கேட்பதும் அவன் வேலைகள். அவனிடம் எல் லா ரும் அடங்கி நடக்க வேண்டும். சில பிள்ளைகள் அவனுக்கு வேண்டிய தின்பண்டங்களைக் கொடுத்துத் தம் வசப்படுத்தி உபாத்தியாயருடைய பிரியத்தையும் அவன் மூலமாகச் சம்பாதிப்பார்கள். சில சமயங்களில் உபாத்தியாயரது கடுமையைக் காட்டிலும் சட்டாம் பிள்ளையின் கடுமை அதிகமாக இருக்கும்.

மாணாக்கர்களுக்குள் பழையவர்கள் புதியவர்களுக்குக் கற்பிப்பதும் பள்ளிக்கூட வழக்கங்களில் ஒன்று.

பன்னிரண்டு மணிக்குமேல் மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிள்ளைகள் வீட்டுக்குச் செல்வார்கள். பிறகு மூன்று மணிக்கு மீண்டும் பாடம் தொடங்கப்படும். இரவு ஏழு மணி வரையிற்கூடப் பள்ளிக்கூடம் நடைபெறுவதுண்டு.

வ்வொரு நாளும் பாடங்கள் முடிந்தவுடன் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பும்போது அவர்களது ஞாபக சக்தியை விருத்தி செய்விப்பதற்காக ஒவ்வொருவருக்கும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொல்ல வேண்டும். ‘மறந்து போய்விடுவோமோ’ என்ற பயத்தால் சில பிள்ளைகள் வீடு சென்றவுடன் தமக்கு உபாத்தியாயர் சொன்ன பொருள்களின் பெயர்களைத் தம் தாய் தகப்பனாரிடம் சொல்லி விடுவார்கள். மறுநாள் விடியற்காலையில் அவர்களிடம் அவற்றைத் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சொல்வார்கள்.


பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால் துணைக்கு யாரையேனும் பிள்ளைகள் அழைத்து வருவார்கள்; பெரும்பாலும் முதிய பெண்களை அழைத்து வருவதே வழக்கம். நேரம் கழித்து வந்தால் பிரம்படி பலமாகக் கிடைக்குமே என்ற பயத்தால் ஒவ்வொருவனும் எல்லாருக்கும் முன்பே வந்துவிட முயல்வான். இவ்வாறு வருவதன் பிரயோசனம் பழையதுக்கு உபாத்தியாயர் வீட்டுக்கு விடும்போது தெரியும். வழக்கப்படி பிள்ளைகளைப் பிரம்பினால் அடித்து அனுப்பும்போது, முதலில் வந்தவன் கையில் பிரம்பினால் தடவி விடுவார்; இரண்டாம் பையனை மெல்ல அடிப்பார். வரவர அடி அதிகமாகும்; பலமாகவும் விழும். இதனால், முதல் நாள் பலமான அடி வாங்கினவன் அதற்குப் பயந்து மறுநாள் எல்லாருக்கும் முன்பே வந்து விடுவான். முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள். வேற்றான் என்னும் சொல்லே அவ்வாறு வந்தது. மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவனென்பது அதன் பொருள். உபாத்தியாயரது கைக்கோலின் அடியைப் பெறாமல் தடவுதலை மாத்திரம் பெறுவது ஒரு தனிப்பெருமை யல்லவா?


சில சமயங்களில், ‘நாமே இன்று முதலில் வந்து விட்டோம்’ என்ற பெருமிதத்தோடு ஒரு பிள்ளை தன் துணைக்கு வந்த பாட்டியோடு பள்ளிக்கூடத்தில் நுழைவான். ஆனால் இவனுக்கு முன்பே ஒருவன் அங்கே இருப்பான். இருட்டில் அவன் இருப்பது இவனுக்குத் தெரியாது. ஆனாலும் தான் முன் வந்ததாக எண்ணி இவன் சந்தோசப்படக் கூடாதென்னும் நினைவினால் அங்கிருப்பவன் இவன் புகுந்தவுடன் சிறிது கனைப்பான். அப்போது இவனுடைய மகிழ்ச்சி எங்கோ பறந்து போய்விடும்.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Sunday, November 27, 2022

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 1/6

 அகரமுதல
(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4 – சி.பா. தொடர்ச்சி)

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்- 1/6

1. வாழ்வு


‘இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர்’ என்று தமிழ் கூறு நல்லுலகு பெருமையுடன் பேசும் பேராசிரியர், முனைவர் நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் ஆவர். சான்றோருடைத்தான தொண்டை நாட்டில் சென்னை மாநகரின் மேற்பால் சூளை என்னும் ஊரில் வாணிக வாழ்க்கை நடத்தி வளமுடன் வாழ்ந்து வந்தவர். ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ எனப் பாராட்டப் பெற்ற சோம சுந்தர நாயகர் ஆவர். இவர்தம் அம்மான் அருணாசல நாயகரின் மைந்தர் சுப்பிரமணிய நாயகர், ‘தேனிருந்த சோலை சூழ் தென்விளசை நன்னகர்’ என்று செல்வ வளத்தாற் பாராட்டப் பெற்ற எட்டையபுரத்தினைக் கோநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த முத்துசாமி எட்டப்ப நாயகரின் நண்பராவர். எட்டையபுரத்துக் குறுநில மன்னர் சென்னைக்கு வரும்போதெல்லாம், சுப்பிரமணிய நாயகரைப் பார்த்து அளவளாவிப்போதல் உண்டு. அரசரின் அழைப்பிற் கிணங்கிச் சுப்பிரமணிய நாயகர் சென்னை விடுத்து எட்டையபுரம் சென்று, ‘எட்டப்ப பிள்ளை’ என்ற புதுப் பெயருடன் அரசரின் உட்படுகருமத் தலைவராய் விளங்கினார். இவர் மணம் செய்திருந்தும் மகப்பேறு கிட்டாத காரணத்தால், அரசர் தூண்டுதலின் பேரில் அரண்மனையில் வளர்ந்து வந்த முத்தம்மாள் என்னும் மங்கை நல்லாளைத் திருமணம் செய்து கொண்டார்.

பிறப்பு

இவ்விருவரின் மனமொத்த இல்வாழ்வின் பயனாய். கி.பி. 1879-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27ஆம் நாள் ஒர் ஆண் மகவு பிறந்தது. இம்மகவுக்குத் தம் உறவினரும், சைவ சித்தாந்தக் கடலாகவும் விளங்கிய சோமசுந்தர நாயகரின் பெயருடன் ‘சத்தியானந்த’ என்ற அடை மொழியையும் சேர்த்துச் ‘சத்தியானந்த சோமசுந்தரம்’ என்று பெயரிட்டனர்.

இளமை வாழ்வு


அரண்மனையில் அரசியாரின் ஆதரவில் இளமை தொட்டு இக்குழந்தை வளர்ந்தது. ஐந்தாம் அகவை நிகழும் பொழுது அரண்மனை ஆத்தான ஆசிரியர் சங்கர சாத்திரி யாரிடம் தமிழ். வடமொழி எனும் இரண்டு மொழிகளிலும் எழுத்தறிவிக்கப் பெற்றார். மேலும் அவ்வூர்ப் பெருமாள் கோவில் கூடத்தில் நடைபெற்று வந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தெய்வசிகாமணி ஐயங்கார் எனும் ஆசிரியரிடம் ஒரு சில நாள் கல்வி பயின்றார் சோமசுந்தரர். பள்ளி ஆசிரியர் தன் பக்கலில் அமர்ந்திருந்த மாணவனிடம் கடுமை யாக நடந்து கொண்டதனால், இவர் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்து, அரசியார் கொடுத்த செல்லத்தில் தம் பதின்மூன்றாவது வயது வரையிலும் விளையாடியே வீணே பொழுது போக்குவாராயினர். இவர்தம் வளர்ப்பு அன்னையார் மறைவிற்குப் பின்னர் இவர் பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் பள்ளிக்குச் சென்று எட்டையபுரத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்துப் பின்னர்த் திருநெல்வேலி சென்று ‘சர்ச் மிசன்’ உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பு வரை-அக்காலத்தில் F. A, (Fellow of Arts) என வழங்கப் பெற்ற ‘இண்டர்மீடியட்டு வகுப்பு வரை பயின்றார். ஆங்கிலமும் அருந்தமிழும் பாங்குறப் பயின்று இரண்டு பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றார். இதன் பின்னர், சென்னை சென்று கிறித்தவக் கல்லூரியில் புகழ் பெற்ற வில்லியம் மில்லர் என்னும் பெருமகனாரிடம் பயின்று பட்டம் பெற்றார். அது காலை அங்கு இவருக்குத் தமிழாசிரியராக வாய்த்தவர் இருவர். ஒருவர் தனித்தமிழ் இயக்கங்கண்ட மறைமலையடிகளார்; மற்றொருவர் பரிதிமாற் கலைஞர் எனத் தம் பெயரையே தமிழ்ப் படுத்திக் கொண்ட வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்.

இவ்விருவரின் தொடர்பு இயல்பிலேயே தமிழார்வமும் தமிழறிவும் மிக்கிருந்த சோமசுந்தரரை மேலும் உயர்வுடையோராக்கியது.

வழக்கறிஞர் வழக்கு


பி.ஏ. படிப்பு முடிவுற்றதும், சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து பி.எல். படிப்பைப் பல இடையூறுகளுக்கிடையில் 1905ஆம் ஆண்டில் முடித்தார். தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். பொதுவாகச் சட்டக்கல்லூரியிற் படிப்பை முடித்தவர்கள் ஏற்கெனவே சட்டம் முடித்துப் பெயர் பெற்ற வழக்கறிஞராக இருப்பவரிடம் சில காலம் பயிற்சி பெற்ற பின்னரே தனியாக வழக்காடுதல் வழக்கம். ஆயினும் நாவலர் எடுத்த எடுப்பில் தாமே தனியே வழக்குகளை நடத்தத் துணிந்தார். இவர் நாட்டுக்கோட்டை நகரத்தார் வழக்குகளை மேற்கொண்டு நடத்திய காரணத்தால், அதன் பொருட்டு அடிக்கடி தேவகோட்டைக்குச் சென்றுவர வேண்டி வந்தது. இதனாற் பெரும் பொருட் செலவும் காலக்கழிவும் ஏற்பட்டதனால் நகரத்தார் பெருமக்கள் செட்டிநாட்டுக்கு அண்மையிலுள்ள மதுரைக்கு வந்து தொழில் நடத்துமாறு இவரிடம் பலமுறை வற்புறுத்தவும், இவர் 1920ஆம் ஆண்டு தூத்துக்குடி மேலூரை விட்டு மதுரைக்கு வந்து தொழில் நடத்தத் தொடங்கினார் தொடக்க நாள் தொட்டு இவர் நேர்மையுடனும் நியாயத்துடனும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்ததால், பேரும் புகழும் பணமும் இவரைத் தேடிவந்தன. தம்மிடம் வரும் வழக்கு எத்தன்மை வாய்ந்ததாயிருப்பினும் நாளொன்றுக்கு ஒரு நூறு   உ ரூபாய்க்கும் குறைவாக ஊதியம் வாங்கமாட்டார். தம் வழக்கறிஞர் பணிக்கிடையேயும் தாமாகமே 1913ஆம் ஆண்டில் எம்.ஏ. தேர்வு எழுதி வெற்றியும் பெற்றிருந்தார்.

அரசியல் வாழ்வு


நாட்டு விடுதலையில் நாட்டமிக்கவராய் நம் நாவலர் வீறுடன் விளங்கினார். சுதேசிக் கப்பலோட்டிய வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்களுடன் நெருங்கிய நேயம் கொண்டி ருந்தார். திங்கள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேல் வருவாய் வந்து கொண்டிருந்த வழக்கறிஞர் பணியை விடுத்து. நூறு ரூபாய் திங்கள் ஊதியம் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனியின் ஆட்சிப் பொறுப்பினைத் திறம்பட நடத்தினார். இஃது இவரது கரைகடந்த நாட்டுப் பற்றினைக் காட்டும். இரண்டு கப்பல்களை உடைத்தாயிருந்த வ. உ. சி. மூன்று கப்பல்கள் தம்மிடம் உள்ளது என்று கூறுவர். மூன்றாவது கப்பல் எங்கே என்றால், “எசு. எசு. (Steam ship) பாரதி என்ற தமிழ்க் கப்பலை ஏன் மறந்து விட்டீர்கள்?” என்பார். அதுகாலை வ. உ. சி. யோடு தொடர்பு கொண்டிருந்த அனைவரையும் அன்னிய ஆங்கில அரசினர் குற்றக்கண் கொண்டு நோக்கினர். எனவே ஐயப்பட்டியலில் நாவலர் பெயரையும் சேர்த்தனர். 1905 முதல் 1919 வரையில் இவர் பெயர் ஐயப்பட்டியலில் இருந்தது. நண்பர்கள் பலர் வற்புறுத்தியும், அருமை வாய்ந்த அரசாங்கப் பணியினை வாங்கித் தருவதாக நயங்காட்டிப் பலர் அழைத்துங் கூட நாவலர் நாட்டு விடுதலை வேள்விக்கான தம் பணியி லிருந்து நீங்கினாரல்லர்.


(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்

Sunday, November 20, 2022

அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4

 அகரமுதல
(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 3/4 – சி.பா. தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4 – சி.பா.

சொற்பொழிவாளர் மு. இராகவையங்கார்

எழுத்தாளராக இருந்த மு. இராகவையங்கார் அவர்கள் சொற்பொழிவாளராகவும் துலங்கியிருக்கின்றார்.

1929ஆம் ஆண்டு பதிப்பு வேந்தர் அறிஞர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தலைமையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இலக்கியம், சாசனம் பற்றிய உண்மைகளை எடுத்துரைத்தார், இப்பொழிவே பின்னர் ‘சாசனத் தமிழ்க் கவி சரிதம்’ என்ற நூலாகத் தோற்றம் பெற்றது.

1966-இல் காரைக்குடி கம்பன் விழாவில் தலைமை வகித்து, தலைமை உரை ஆற்றினார், 1959ஆம் ஆண்டில் பல்கலைச் செல்வர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் அழைப்பின் காரணமாகத் ‘தெய்வப் புலமை’ என்னும் பொருள் பற்றிச் சென்னை மாநிலக் கல்லூரியில் ஓர் உரை நிகழ்த்தினார்.

திருவிதாங்கூர் பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராக இருந்தபோது சர்.சி.வி. இராமன் அவர்கள் தலைமையில் ‘காந்தளூர்ச்சாலை’ என்னும் பொருளில் முதல் நாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் பல சரித்திர ஆய்வாளர்களின் முரண்பட்ட கருத்துகளை எடுத்துக் காட்டித் தம் கருத்துகளைச் சான்றுகளுடன் நிறுவினார். தொடர்ந்து நிகழ்ந்த பொழிவுகளை அற்றை நாள் கல்வித் துறை வல்லுநரான கோபால மேனன் அவர்கள் தலைமையில் நிகழ்த்தினார். இச்சொற்பொழிவே பின்னாளில் soap , ‘Some Aspects of Kerala and Tamil Literature” என்ற பெயரில் இரண்டு பகுதிகளாக நூல் வடிவம் பெற்றது.


கவிஞர் மு. இராகவையங்கார்

இவர் கவிபாடும் ஆற்றல் மிக்கவராகவும் திகழ்ந் துள்ளார். இளமை முதல் முதுமை வரை இவர் பாடிய கவிதைகள் பலவும் செந்தமிழில் வெளியாகி உள்ளன.


பொதுச் செய்திகள்

இவர் தாமே பல நூல்கள் இயற்றித் தமிழ்த் தொண்டாற்றியதுடன் நில்லாமல், பல தமிழ் நூல்கள் வெளிவருவதற்கும் காரணமாக அமைந்தார். இதில் குறிப்பிடத்தக்கவை எசு. வையாபுரிபிள்ளை அவர்களின் பணவிடு தூதும், வி. இரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய மூன்றாம் குலோத்துங்க சோழனும் ஆகும். இராமச்சந்திர தீட்சிதரின் சிலப்பதிகார ஆங்கில மொழி பெயர்ப்பு முழுமையும் மு. இராகவையங்கார் அவர்களின் துணை கொண்டே உருவம் பெற்றது.

மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றிக் கூறும்போது எசு. வையாபுரிப் பிள்ளை அவர்கள்,

“பெரும்பாலும் ஆசிரியரது கருத்துகள் கொள்ளத் தக்கனவாகவே உள்ளன”

என்கிறார். (தமிழ்ச் சுடர் மணிகள்; ‘மு. இராகவையங்கார்.’ ப. 397). இவர் தம் நடையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘தெளிந்த நடை’ என்பர்

“பாண்டித்திய படாடோபமென்பது இவர்கள் நடையில் சிறிதும் இல்லை. இவர்கள் உரை நடையிலேயே ஓர் அபூர்வமான கனிவும் இனிமையும் வெளிப்படுகின்றன.”
(எசு. வையாபுரிப் பிள்ளை: தமிழ்ச்சுடர் மணிகள் : ப. 397,)

பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் நடையில் மட்டும் எளிமை உடையவர் அல்லர். வாழ்க்கையிலும் எளிமையைக் கடைப் பிடித்தவர். தம்முடன் பணியாற்றுப வர்களுடன் இனிமையாகப் பழகும் ஆற்றலும் மிக்கவர், இதனை அவருடன் பணியாற்றிய ஆர். வீரபத்திரன் அவர்கள் கூற்றால் தெளியலாம்.

‘சேரவேந்தர் செய்யுட் கோவை’யில் முதற்பகுதி அச்சாகி முடிந்த தறுவாயில் அந்நூல்பற்றிப் பேராசிரியரிடம் நான் கூறியிருந்த செய்தி ஒன்று நினைவிருக்கிறது. நூலில் ஆங்கில முன்னுரை, தமிழ் முன்னுரை, சேர வேந்தர் சரித்திரச் சுருக்கம் முதலிய பல செய்திகள் இடம் பெற்றிருக்க, வேறோர் முக்கியச் செய்தி காணப் பெறாதிருப்பது ஒரு குறையாக எனக்குத் தோன்றியது. திருவிதாங்கூர் மன்னர் பெருமானாரால் நிறுவப்பட்ட பல்கலைக் கழகத்தில், வள்ளல் அழகப்ப செட்டியார் அளித்த நன்கொடையால் உருவான தமிழ் ஆராய்ச்சித் துறையிலிருந்து முதன் முதலாக வெளிவரும் சேர வேந்தர்களைப் பற்றிய நூலில், அக்குலத்தில் தோன்றி அப்பொழுது மாமன்னராகத் திகழ்கிற சித்திரைத் திருநாளைப் பற்றியும், அழகப்ப வள்ளலைப் பற்றியும் வாழ்த்துரைகள் தக்க இடத்தில் அமைய வேண்டியதன் இன்றியமையாமையைப் பேராசிரியர்க்குப் பணிவோடு எடுத்துக் கூறினேன். அதைக் கேட்ட பேராசிரியர் ‘நீங்கள் கருதியது தக்கதே; மறந்திருந்த எனக்கு அதனை நினைப்பூட்டியது நன்று’ என அன்புரை கூறிப் பின்னர் மன்னர்க்கு ஒன்றும் வள்ளற்கு ஒன்றுமாக இரண்டு பாக்களை வாழ்த்தாகப் பாடி நூலில் இணைத்துக் கொண்டார்கள்.”

இப்பகுதி மு. இரகவையங்கார் அவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களாயினும் அவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கனவாக இருந்தால் அவற்றை ஒதுக்கிவிடாமல் மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் உயர் பண்பாளர் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

முகவுரை

இவ்வாறாக ஆராய்ச்சியாளராகவும், பதிப்பாசிரியராகவும், இதழா சிரியராகவும், உரையாசிரியராகவும், சொற் பொழிவாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்து மு. இராகவையங்கார் அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு அளவிடற் கரியது. அவர் சென்ற நெறி தமிழ்த்தாயின் தவப்புதல்வர்கள் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய நெறியாகும்!


(தொடரும்)

சான்றோர் தமிழ்

சிபாலசுப்பிரமணியன்

Tuesday, November 15, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 16

 அகரமுதல
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 15 தொடர்ச்சி)

உ.வே.சா.வின் என் சரித்திரம்

அத்தியாயம் 9 : குழந்தைப் பருவம்: தொடர்ச்சி

பாரதியாருடைய பழக்கம் ஏற்பட்ட பின்பு நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களிற் சிலவற்றையும் என் தந்தையார் தம் இராமாயணப் பிரசங்கத்தினிடையே பாடிக் காட்டலானார். அக்கீர்த்தனங்களின் எளிய நடையும் அவற்றில் அமைந்திருந்த பக்திச் சுவையும் கேட்போர் உள்ளங்களைக் கவர்ந்தன.

என் குழந்தைப் பிராயத்தில் எனக்கிருந்த பழக்கம் ஒன்றை என் தாயார் சொல்லியிருக்கிறார்; நான் காலையில் எழும்பொழுதே எனக்கு ஏதேனும் ஆகாரம் கொடுக்க வேண்டுமாம். ரொட்டி, பி சுகோத்து முதலிய உணவுப் பொருள்கள் அந்தக் காலத்தில் இல்லை. என் தாயார் எனக்காக ஒரு கரண்டியப்பம் ஊற்றி ஓர் இலையில் என் படுக்கையின் பக்கத்தில் வைத்து ஒரு பாத்திரத்தால் மூடி வைத்திருப்பாராம். நான் எழுந்தவுடன் அந்தப் பாத்திரத்தை ஒரு தட்டுத் தட்டிவிட்டு உள்ளே இருக்கும் கரண்டியப்பத்தை எடுத்துத் தின்பேனாம். காலையில் எந்தக் காரியத்தைச் செய்ய மறந்தாலும் எனக்காகக் கரண்டியப்பம் பண்ணி வைப்பதை மாத்திரம் என் தாயார் மறக்க மாட்டாராம். கரண்டியப்பம் சாப்பிட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு பழையமுதும் சாப்பிடுவதுண்டு.


நாங்கள் அரியிலூரில் இருந்து வருகையில் என் பாட்டனாருக்கும் பாட்டியாருக்கும் முதுமைப் பருவத் தளர்ச்சி மிகுதியாயிற்று. எந்தச் சமயத்தில் தமக்கு மரணம் சம்பவிக்குமோ என்று என் பாட்டனார் கலக்கமடைந்திருந்தார். பரம்பரையாக இருந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு வந்து இருப்பதில் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. வேறுவழி இல்லாமையால் அரியிலூரில் வந்து இருந்தார். ஆயினும், வந்த ஊரிலே இறப்பதை அவர் விரும்பவில்லை. “நம்முடைய ஊரில் நம் வீட்டில் பந்துக்கள் சூழ்ந்த இடத்தில் மரணமடைய வேண்டும்” என்றே அவர் விரும்பினார். நதி தீரத்தைச் சார்ந்துள்ள உத்தமதானபுரத்தை விட்டுக் காட்டு நாட்டில் உயிர் நீப்பதைப்பற்றி நினைக்கும் போதே அவருக்குத் துக்கம் பொங்கும்.

ஒரு நாள் என் தகப்பனாரிடம் தம்முடைய கருத்தை என் பாட்டனார் தெரிவித்தார். குடும்பப் பாரத்தினால் நைந்த மனமுடைய அவருக்கு மீண்டும் கவலை உண்டாயிற்று. “ஏதோ ஒருவிதமாக இங்கே வந்து நிலையாக வாழத் தொடங்கினோம். கடவுள் கிருபையால், கடன் வாங்காமல் தம்பிக்குக் கலியாணம் நடத்தினோம். ஊருக்குப் போனால் நாம் எவ்வாறு காலட்சேபம் செய்ய முடியும்?” என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

என் பாட்டனாரோ அடிக்கடி தம் கருத்தை வற்புறுத்தி வந்தார். முதுமைப் பருவத்தில் அவருக்கு இருக்கும் ஆசையை நிறைவேற்றாமல் இருப்பது பாவமென்ற நினைவும் என் பிதாவுக்கு உண்டாயிற்று. இருதலைக்கொள்ளி எறும்பு போலக் கலங்கினார். தம் பெற்றோரை உத்தமதானபுரத்திற்கு அனுப்பிவிடலாமா என்றும் எண்ணினார். இறுதிக் காலத்தில் தம் குமாரர் அருகில் இருக்கவேண்டுமென்று கருதியே என்பாட்டனார் உடையார்பாளையத்திற்கும் பின்பு அரியிலூருக்கும் வந்தார். ஆதலின் தம்மைப் பிரிந்து அவர் இருத்தல் அரிது என்பதை நினைத்துப் பார்த்த எந்தையார், “எவ்வாறானாலும் சரி; அவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதுதான் நம் கடமை” என்ற உறுதிபூண்டு அரியிலூர் ச மீன்தாரிடமும் மற்ற அன்பர்களிடமும் விடை பெற்றுக்கொண்டு தம் குடும்பத்துடன் உத்தமதானபுரம் வந்து சேர்ந்தார்.

உத்தமதானபுரம் வந்த பின்பும் சில வருடங்கள் என் பாட்டனாரும் பாட்டியாரும் சீவித்திருந்தனர். இடையிடையே என் தந்தையார் வெளியூர்களுக்குச் சென்று இராமாயணப் பிரசங்கம் செய்து பொருள் ஈட்டி வருவார். அப்படிச் சென்றிருக்கும் சில நாட்களில் என் பாட்டனாருக்கு மனக்கலக்கம் அதிகமாகிவிடும். எந்தையார் அரியிலூருக்கும் சென்று சமீன்தாரையும் தம் அன்பர்களையும் பார்த்து அவர்களால் கிடைக்கும் பொருளையும் தம் சருவ மானியத்திலிருந்து கிடைப்பதையும் பெற்று வருவார். பாபநாசத்தில் இருந்த வக்கீல்களாகிய கபித்தலம் கிருட்டிணசாமி ஐயங்கார், வேங்கடராவு என்பவர்களும், போலீசு இன்சுபெக்டர் முத்தியாலு நாயக்க ரென்பவரும் அக்காலத்தில் அவருக்குப் பொருளுதவி செய்து ஆதரித்து வந்தனர்.

எனது மூன்றாம் பிராயத்தில் எனக்கு ஒரு சகோதரி பிறந்தாள். அப்பெண்ணுக்குத் தையல்நாயகி என்ற பெயர் வைத்தார்கள். பெண்டிருக்குப் பெண் குழந்தைகளிடம் அதிக அன்பு இருப்பது உலக இயல்பு. என் அன்னையார் அக்குழந்தையிடம் மிக்க வாத்சல்யம் உடையவராக இருந்தார். அந்தக் குழந்தை சில வருடம் வாழ்ந்திருந்து இறந்து போயிற்று. அப்போது என் தாயார் துடிதுடித்துப் போனார். அந்தக் குழந்தை இறந்த துக்கம் அவருடைய நெஞ்சில் பல வருடங்கள் ஆறாமல் இருந்தது நான் இளம்பருவத்தில் விசமம் செய்தபோது சில சமயங்களில் என் தாயார் என்னை அடித்து வைவார். அவ்வாறு வையும் சில சமயங்களில் அவர் கூறும் வார்த்தைகள் இறந்துபோன அக்குழந்தையின்பால் அவருக்கு எவ்வளவு பற்று இருந்ததென்பதைப் புலப்படுத்தும். பெண் குழந்தையை இழந்த குறை என் தாயாருக்குத் தீரவே இல்லை; அந்தக் குழந்தைக்குப் பிறகு எனக்குத் தங்கையே பிறக்கவில்லை.

எனக்கு ஐந்தாம் பிராயம் நடைபெற்ற போது வித்தியாப் பியாசம் செய்வித்தார்கள். என் பாட்டனார் அரிச்சுவடி சொல்லித் தந்தார். முதலில் உத்தமதானபுரத்தில் தெற்கு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் நாராயண ஐய ரென்பவரிடம் சில மாதங்களும், பிறகு வடக்குத் தெருவில் இருந்த பள்ளிக்கூடத்தில் சாமிநாதைய ரென்பவரிடம் சில வருடங்களும் படித்தேன். தமிழில் கீழ்வாயிலக்கம். நெல் இலக்கம் முதலியவற்றையும், வடமொழியில் சில நூல்களும் படித்தேன். பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் என் பாட்டனார், தந்தையார், சிறிய தகப்பனார் ஆகியவர்களும் எனக்குக் கற்பித்து வந்தனர்.


அடிக்குறிப்பு: இவர் தஞ்சையில் வக்கீலாக இருந்தவரும் தமிழறிஞரும் என் அன்பருமாகிய இராவுபகதூர் சிரீ.கே.எசு.சீநிவாச பிள்ளையின் தந்தையார். இவற்றை நான் எழுதிப் பதிப்பித்துள்ள கோபால கிருட்டிண பாரதியார் சரித்திரத்திற் காணலாம்.


(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

Sunday, November 13, 2022

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் ¾

அகரமுதல


சான்றோர் தமிழ்

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவையங்கார் 3/4


இலக்கண ஆராய்ச்சி

பேராசிரியரின் இலக்கண ஆராய்ச்சி நூல்களுள் தலைமை இடம் பெறுவது ‘தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி’ என்ற நூலாகும். இந்நூல் 1912ஆம் ஆண்டு இலங்கைச் செல்வர் கு. பூரீகாந்தன் என்பவர் நடத்திய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சிப் போட்டியில் முதன்மைப் பரிசு பெற்றது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை எளிய முறையில் மாணவர்களுக்குப் பயன்படத்தக்க வகையில் இந் நூலை ஆசிரியர் இயற்றியுள்ளார். தொல்காப்பியத்துட் காணப்படும் அகப்புற ஒழுக்கங்களைத் தெள்ளிதின் விளக்குகிறது இந்நூல்.

1958ஆம் ஆண்டின் மு. இராகவையங்கார் அவர்களின் எண்பதாம் ஆண்டு நினைவாக வெளியிடப் பெற்றது ‘வினைத்திரிபு விளக்கம்’. இஃது ஒரு செய்யுள் இலக்கண நூல். வினை விகற்பங்களைப் பன்னிரண்டு வாய்பாடுகளில் காட்டி, அவ்வாய்பாடுகள் செயல்படும் ஆற்றினை ஐம்பது நூற்பாக்களில் விளக்குகின்றது இந்நூல். 3020 வினைப் பகுதிகள் அனைத்தும் காண்போர்க்கு எளிதில் புலப்படும் வண்ணம் தனியாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள திறம் போற்றுதற் குரியது.

சங்க, இடைக்காலத் தமிழ் ஒலிகள் பெயர் வினைகளை அடைந்த வடிவங்களைப்பற்றிய புதிய செய்திகளை மொழி வரலாற்று அடிப்படையில், 1. தொல்காப்பியத்துக் கண்ட பழைய வழக்குகள், 2. தொல்காப்பியனாரும் புள்ளி எழுத்துக்களும், 3. அருகி வழங்கிய சில வினை விகற்பங்கள், 4.ஆய்தவோசை-என்ற நான்கு கட்டுரைகளில் புலப்படுத்துகின்றார்.


அகராதி ஆராய்ச்சி

ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் அகராதிப்பணியில் ஈடுபட்ட மு. இராகவையங்கார் அவர்கள், ‘தமிழ்ப் பேரகராதி’ உருவாவதற்குக் காரணமாக இருந்ததோடு அமையாமல், நிகண்டகராதி, நூற்பொருட் குறிப்பகராதி இவை வெளிவருவதற்கும் காரணமாக இருந்தார். நிகண்டகராதி அச்சேறவில்லை.

திவாகரம், பிங்கலம் உரிச்சொல் நிகண்டு, சூடாமணி என்னும் நான்கு நிகண்டுகளிலும் இடம் பெற்ற சொற்களுக் குரிய பொருளைத் தந்து, அசுர நிரலில் அமைக்கப்பெற்ற நூல் நிகண்டகராதி என்பது. இது பின்னாளில் திவாகரப் பதிப்பிற்குப் பெரிதும் பயன்பட்டது.

நூற்பொருட் குறிப்பகராதி’ தேவாரம், திருக்கோவையார், நற்றிணை, குறுந்தொகை முதலிய இலக்கிய நூல்களிலும், இறையனார் களவியல் உரை, வீர சோழியம் முதலிய இலக்கண நூல்களிலும் கூறப்பட்டுள்ள பொருள்களை அகர நிரலில் அமைத்துக் கூறுவதாகும்.


பதிப்பாசிரியர் மு. இராகவையங்கார்

பதிப்பாசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் பதிப்பித்த நூல்கள் பன்னிரண்டு. இந்நூல்களில் பாட பேதங்களும் ஆராய்ச்சிக் குறிப்புகளும் அமைந்து காணப்படுவதால், ஏடுகளை ஒப்புநோக்கி இந்நூல்களைப் பதிப்பித்துள்ளார் என்பது போதரும். இவர் முதன்முதலில் பதிப்பித்த நூல் ‘திருக்குறள் பரிமேலழகர் உரையுடன்’ என்பது. 1910இல் பதிப்பிக்கப்பெற்ற இந்நூல் கையடக்கப் பதிப்பாக வெளியிடப்பெற்றது.

‘செந்தமிழ்ப் பத்திரிகை’யில் வெளிவந்து தனி நூல்களாகப் பதிப்பிக்கப் பெற்றவை; 1. நரிவிருத்தம் (அரும்பத உரையுடன்) 2. சிதம்பரப் பாட்டியல் உரையுடன், 3. திருக் கலம்பகம் உரையுடன், 4. விக்கிரம சோழனுலா, 5. சந்திராலோகம், 6. கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை என்பன.

சங்க நூற்றொகைகள் போலத் தனிப்பாடல்கள் பலவற்றினைப் ‘பெருந்தொகை‘ என்ற பெயரில் 1936இல் ஒரு நூலாகப் பதிப்பித்தார். 2200 பாடல்கள் கொண்ட இந் நூல், 1. கடவுள் வாழ்த்தியல், 2. அறிவியல், 3. பொருளியல் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது பின்னாளில் பல தமிழறிஞர்களும் எடுத்தாளத் தக்க வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.

1936ஆம் ஆண்டில் பெருந்தொகையைப் பதிப்பித்த அதே ஆண்டில் ‘திருவைகுந்தன் பிள்ளைத்தமிழ்’ என்ற நூல் பதிப்பிக்கப்பெற்றது.

1949ஆம் ஆண்டில் திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைப் பேராசிரியராக இருந்த ஞான்று ‘அரிச்சந்திர வெண்பா’ என்ற ஒரு நூலினைப் பதிப்பித். துள்ளார்.

1951ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராக இருந்து கம்பராமாயணப் பகுதிகளைப் பதிப்பித்துள்ளார் என்பது முன்னரே கூறப்பட்டது.

1953ஆம் ஆண்டில் சிராமலைக் கல்வெட்டில் கண்டெடுக்கப்பட்ட அந்தாதி ஒன்று ‘திரிசிராமலை அந்தாதி’ என்ற பெயரில் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது.

1958, 59ஆம் ஆண்டுகளில் கம்பராமாயண சுந்தர காண்டப் பகுதிகளை உரையுடன் பதிப்பித்துள்ளார். இது அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வெளி வந்துள்ளது.

மேலும் இவர் பாட அமைதிபற்றி ஆராய்ச்சி செய்தும், அவற்றின் பொருள் நயத்தை விளக்கியும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். காட்டாகக் ‘கலிங்கத்துப் பரணி’ ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் இவற்றைக் கூறலாம்.

உரையாசிரியர் மு. இராகவையங்கார்

நூல்கள் பலவற்றை ஆய்ந்தும் பதிப்பித்தும் ஆராய்ச்சி வேந்தராகவும், பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த மு. இராகவை யங்கார் அவர்கள் சில நூல்களுக்கு உரையும் கண்டுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கன கம்பராமாயண சுந்தரகாண்டப் பகுதிகள்; திருமங்கையாழ்வார் பாடிய பாசுரத்தின் விளக்க மாக அமைந்த ‘திருவிடவெந்தை எம்பெருமான்’ என்பன.

இதழாசிரியர் மு. இராகவையங்கார்

இவர் ‘தமிழர் நேசன்’, ‘கலைமகள்’, ‘செந்தமிழ்’ என்ற இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்தவர். ‘செந்தமிழ்’ இதழில் முதலில் இரா. இராகவையங்காருக்கு உதவியாசிரியராக அமர்ந்து. பின்னர் அவரது இடத்தை அணி செய்தவர். ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் இவர் இவ்விதழின் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார். கட்டுரைத் தொகுப்பு நூல்களாக அமைந்தவற்றில் உள்ள சில கட்டுரைகள் ‘செந்தமிழ்’ இதழில் வெளிவந்தவை. பெருந்தொகை நூலில் காணப்படும் பாடல்கள் பலவும் இவ்விதழில் வெளியானவையே. நூல் வடிவம் பெறாத சில கட்டுரைகளும் இவ்விதழில் வெளிவந்துள்ளன. ஆக இதழாசிரியராக அமர்ந்து தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய தொண்டு மிகப் பெரியது.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Tuesday, November 08, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 15

 அகரமுதல
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 14 தொடர்ச்சி)

உ.வே.சா.வின் என் சரித்திரம்

அத்தியாயம் 9
குழந்தைப் பருவம்

அரியிலூரில் என் தந்தையார் ஒருவாறு திருப்தியோடு காலங்கழித்து வந்தாராயினும், அவருடைய உள்ளத்துள்ளே ஒரு வருத்தம் இருந்தே வந்தது. தம் குடும்பக் கடனாகிய 500 உரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற எண்ணமே அதற்குக் காரணம். அதனால் அவருக்கு இடையிடையே ஊக்கக்குறைவு ஏற்பட்டது. ‘எவ்வாறேனும் 500 உரூபாய் சம்பாதித்துக் குடும்பக் கடனைத் தீர்த்து நிலங்களை மீட்க வேண்டும்’ என்ற கவலை அவருக்கு வரவர அதிகரித்து வந்தது.

இல்லறத் தருமத்தை மேற்கொண்ட பிறகு அவருக்குக் குடும்ப பாரம் அதிகமாயிற்று. ‘குடும்பத்தைப் பாதுகாப்பதற்கே பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கையில் பழங்கடனைத் தீர்ப்பதற்கு மார்க்கம் ஏது? என்று அவர் எண்ணி எண்ணிக் கலக்க முற்றார். சமசுதான சங்கீத வித்துவானாக இருந்ததில் அவருக்குப் பெருமையும் பல அன்பர்களுடைய பழக்கமும் உண்டாயின. சமசுதான நிலத்திலிருந்து கிடைத்த வருட வருவாய் உரூபாய் ஐம்பது; ஊரிலுள்ள மூன்று மா நிலத்திலிருந்து வந்த வரும்படி அதிகமன்று. இந்த நிலையில் நண்பர்களிடமிருந்து காரணமின்றிப் பொருளுதவி பெறுவதையும் அவர் விரும்பவில்லை. அதனால் இராமாயணக் கீர்த்தனங்களை இசையுடன் முறையாகச் சில நாட்கள் படித்துப் பொருள் சொல்லிப் பட்டாபிசேகம் செய்து முடிக்கும் ஒரு முயற்சியைத் தொடங்கினார். அம்முயற்சியினால் நல்ல பயன் உண்டாயிற்று. சில இடங்களில் ள்ளவர்கள் அவரைத் தங்கள் தங்கள் ஊருக்கு வருவித்து இராமாயணக் கீர்த்தனம் கேட்கத் தொடங்கினர்.

ஒவ்வொரு முறையும் இராமாயணம் நிறைவேறியவுடன் அன்பர்கள் ஒரு தொகை தொகுத்து அளிப்பார்கள். அந்தத் தொகை குடும்பத்துக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், இவ்வாறு தொடங்கிய இராமாயண முயற்சியே என்னுடைய தந்தையாரின் உள்ளக் கவலையைத் தீர்ப்பதற்கு உதவியாயிற்று.

அரியிலூருக்கு கிழக்கே மணலேரி என்னும் ஊரொன்று உண்டு. அங்கே மணிகட்டி உடையார் என்ற செல்வர் ஒருவர் இருந்தார். அவர் என் தந்தையாரிடம் அன்புடையவர்; அடிக்கடி தம் ஊருக்கு வருவித்து அவர் பாட்டைக் கேட்டு இராமாயணப் பிரசங்கமும் நடைபெறச் செய்து பொருளுதவி செய்து வந்தார். ஒரு சமயம் குடும்பக் கடனைத் தாமே தீர்த்து விடுவதாகவும் சொன்னார். அது கேட்ட என் தகப்பனாரது கவலை குறைந்தது. எவ்வாறேனும் கடன் சுமையைப் போக்கிவிடலாமென்ற நம்பிக்கை உதயமாயிற்று.

மணிகட்டி உடையாரைப் போன்ற பல வேளாளச் செல்வர்களுடைய ஆதரவு அக்காலத்தில் என் பிதாவுக்குக் கிடைத்தது. என் ஆண்டு நிறைவு அரியிலூரிலே மிகவும் சிறப்பாக நடந்தது. முற்கூறிய செல்வர்கள் செய்த உதவிகளே அச்சிறப்புக்குக் காரணம்.

அக்காலத்தில் என் தந்தையாரை ஆதரித்தவர்கள்[1] அல்லிநகரம் சோமசுந்தரம் பிள்ளை, சுந்தர சபாபதி பிள்ளை, கொத்தவாசல் குமர பிள்ளை, சிவசிதம்பரம் பிள்ளை, இராமகிருட்டிண பிள்ளை, இராமசாமி பிள்ளை, முத்துவேலாயுதம் பிள்ளை, பாலகிருட்டிண பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை முதலியோர். அரண்மனையில் இராயசமாக இருந்த இராம பத்திரைய ரென்பவரும், சமீன்தாரின் குருவாகிய தாத்தாசாரியா ரென்பவரும், கிராம முன்சீபாக இருந்த வேங்கட சுப்பைய ரென்பவரும் வக்கீல் இரங்காசாரியா ரென்பவரும் அவ்வப்போது தங்கள் தங்களால் இயன்ற உபகாரத்தைச் செய்து வந்தார்கள்.

நான் பிறந்தபோது எனக்குச் சாமிநாதன் என்னும் பெயர் இடப்பட்டது. சாமிமலை என்னும் தலத்திலுள்ள முருகக் கடவுளுக்குச் சாமிநாத னென்பது திருநாமம். எங்கள் ஊரினரும் பிறரும் அந்த தலத்துக்குச் சென்று வருவார்கள். எங்கள் குடும்பத்தினருக்கும் அதில் ஈடுபாடு அதிகம். அது பற்றியே எனக்கு அப்பெயர் இட்டார்கள். எல்லோரும் என்னை, ‘சாமா’ என்றே அழைப்பார்கள். சாமிநாதனென்பதே மருவி அவ்வாறு ஆயிற்று.

என் தந்தையார் இராமாயணப் பிரசங்கம் செய்யுங் காலங்களில் என் சிறிய தந்தையாரான சின்னசாமி ஐயர் உதவி புரிவார். அரியிலூர்ச் சடகோபையங்கார் வீணை வாசிப்பதிற் பழக்கமுள்ளவராதலின் அவரிடம் என் சிறிய தகப்பனார் வீணை பயின்றார்.

நாங்கள் அரியிலூரில் இருந்த காலத்தில் என் சிறிய தந்தையாருக்குக் கலியாணம் நடைபெற்றது. மாயூரத்தில் மகாதானத் தெருவில் இருந்த சேஷையரென்பவர் குமாரியாகிய லக்ஷ்மியை அவர் மணந்து கொண்டார். இராமாயணப் பிரசங்கத்தினாற் கிடைத்த பணமும் சில செல்வர்களுடைய உதவியாற் கிடைத்த பொருளும் அந்தக் கலியாணத்திற்கு உபயோகமாயின.

 அந்த மணத்தின் முன்பும் பின்பும் என் தந்தையார் சில முறை மாயூரம் செல்ல நேர்ந்தது. அக்காலத்தில் அங்கே கோபால கிருட்டிண பாரதியார் இருந்து வந்தார். அவருடைய பழக்கம் என் தந்தையாருக்கு உண்டாயிற்று. கோபால கிருட்டிண பாரதியார் சில காலம் கனம் கிருட்டிணையரிடம் பயின்றவராதலின் அந்த வித்துவானுடைய பந்துவும் மாணாக்கருமாகிய என் பிதாவிடம் அவருக்கு மிக்க அன்பு உண்டாயிற்று. என் தந்தையாரை அவர் காணும் போதெல்லாம் கனம் கிருட்டிணையருடைய கீர்த்தனங்களைச் சொல்லச் செய்து கேட்டு இன்புறுவார். அவருடன் பழகும்போது என் பிதாவுக்குத் தம் குருகுல வாசம் நினைவுக்கு வந்தது. இருவரும் சங்கீத சம்பந்தமான சம்பாசணையிற் பொழுது போக்குவார்கள். இரண்டு பேரும் சிவபக்தர்கள்; அத்துவைத சாத்திரப் பயிற்சியுடையவர்கள்.

அக்காலத்தில் [2] கோபாலகிருட்டிண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனத்தை இயற்றிப் புகழ் படைத்திருந்தார். பல இடங்களில் அந்தச் சரித்திரத்தைப் பிரசங்கம் செய்து வந்தார். தமிழ்நாடு முழுவதும் நந்தன் சரித்திரத்திற்கு ஒரு பிரசித்தி உண்டாகி இருந்தது. தாம் நந்தனார் சரித்திரத்தை இயற்றுவதற்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சிகளையும் தம் அநுபவங்களையும் என் தந்தையாரிடம் அவர் சொல்லி மகிழ்வார்; தம்முடைய கீர்த்தனங்களையும் பாடிக் காட்டுவார். என் தத்தையார் அவரிடமிருந்து பல கீர்த்தனங்களைத் தெரிந்துகொண்டார்; மாயூரத்திற்கு எந்தையார் எப்பொழுது சென்றாலும் பாரதியாரைப் பாராமல் வருவதில்லை.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.

குறிப்பு

1.
 இவர் தஞ்சையில் வக்கீலாக இருந்தவரும் தமிழறிஞரும் என் அன்பருமாகிய இராவுபகதூர் திரு கே. எசு. சீரீநிவாச பிள்ளையின் தந்தையார்.

2.  இவற்றை நான் எழுதிப் பதிப்பித்துள்ள கோபால கிருடட்டிண பாரதியார் சரித்திரத்திற் காணலாம்.