Monday, May 31, 2021

ஆதித்த காிகாலனைப் பிராமணர்களே கொன்றனர்!

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 60 / 69  இன் தொடர்ச்சி)





தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

61 / 69

கவிதைத் திறவுகோல்

The Treasure–Trove of Time and the Verse–Key: An English Translation of Kalaignar Karunanidhi’s காலப் பேழையும் கவிதைச் சாவியும்(2009)

புது வரலாற்றியம்(New Historicism) என்பது கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக மேனாட்டாரால் கையாளப்பெறும் வரவேற்பிற்குரிய திறனாய்வு முறையாகும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறும் வகையில் ‘கலைஞரின் காலப்பேழையும் கவிதைச்சாவியும்’ என்னும் கவிதைத் தொகுதி உள்ளது என்கிறார்.  இந்நூலை ஆங்கிலத்தில் கவிதை விளக்கங்களுடனும் சிறப்புகளுடனும் திறனாய்வு நோக்கில் நமக்குப் பேரா.ப.ம.நா. தந்துள்ளார்.

கவிதைத் திறவுகோல் கொண்டு காலப் பேழையினைக் கவனமாகத் திறந்து தமிழக வரலாற்றை நோக்க வேண்டியதன் இன்றியமையாமையை ஆங்காங்கே கலைஞர் அழுத்தமாகச் சொல்வதாகப் பேரா.ப.மருதநாயகம் குறிப்பிடுகிறார். வரலாற்றை வாளும் கேடயமுமாகக் குறிப்பிட்டு வரலாறு தெரிந்தால்தான் பகைப்புலத்தைச் சந்திக்க இயலும் எனக் கலைஞர் கூறுகிறார். அவர் கூறும் வரலாற்று உண்மைகளில் குறிப்பிடத்தகுந்தது ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டதாகும். கொலைகாரர்கள் பழியிலிருந்து தப்பிப்பதற்காக அவரது குடும்பத்தினரே கொன்றதாகக் கதை கட்டி விட்டனர். அதனால் உண்மை மறைக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்குடிக் கல்வெட்டுச் செய்தி மூலம் பிராமணர்களே அவரைக் கொன்றனர் என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார். இத்தகைய வரலாறு கூறும் கவிதையை மூல நயம் சிதையாமல் மொழிபெயர்த்துள்ளார்.

 கலைஞர் கருணாநிதி – கலை நாயகன் (Kalaignar Karunanidhi : Hero as Artist (Seethai pathippagam, 2013) எனும் ஆங்கில நூல் கலைஞரின் படைப்புகளை ஆராய்கிறது. இந்நூலின் உட்தலைப்புகள் 1) கவிதைகள் : இனப் பெருமிதவுணர்வுபற்றியவை, 2) கவிதைகள் : மாந்த வாழ்வின் தன்மையும் நோக்கும்பற்றியவை, 3) பழந்தமிழ்ச் செவ்விலக்கியங்களின் மீட்டுருவாக்கங்கள், 4) வரலாற்றுப்புதினங்கள், 5) சிறுகதைகள், 6) நாடகங்களும் திரைப்படங்களும், 7) கட்டுரைகளும் சொற்பொழிவுகளும், 8) கடிதங்கள், 9) தன்வரலாறுகள் ஆகியன.

பேராசிரியர் நன்னன்  – ஆளுமை, புலமை, தொண்டு(2013)

பெரியாரியல் படைப்பாளர், தொலைக்காட்சி வாயிலாகத் தமிழைத்தவறின்றி எழுத வழிகாட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அவர்களின் தமிழ் ஆளுமை, தொண்டு முதலியவை இந்நூலில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

  1. நன்னன் என்னும் ஆளுமை, 2. புலவர் போற்றும் பேராசிரியர், 3.பகுத்தறிவுப் பாதையில் திருக்குறள், 4. அறிஞர் சுட்டும் தமிழ் நெஞ்சம், 5. பெரியாரைப் பேணி ஒழுகல், 6. எழுத்து அறிவித்த இறைவன் ஆகிய தலைப்புகளில் அறிஞர் நன்னனின் உரைநடைச்சிறப்பு, உரைச்சிறப்பு, தமிழில் கலந்து விட்ட மாசுகளை அகற்ற மேற்கொண்ட முயற்சி முதலியவற்றைத் திறம்படவிளக்கியுள்ளார். முடிவுரையில், இராபருட்டு பிரெளனிங்கு(Robert Browning) என்பார் எழுதிய இலக்கண வல்லுநர் ஒருவர் குறித்த பாடல் அறிஞர் நன்னனுக்கு அப்படியே பொருந்தவதைச் சுட்டிக் காட்டியிருப்பார். அப்பாடலின் தொடக்க வரிகளும் இறுதி வரிகளும் வருமாறு:

மரணம் அவர் கழுத்தை நெருக்கிப் பிடித்தபிடி

இறுகும்போதும் அவர் இலக்கணத்தை விடவில்லை.

.. ..  .. எம் கடன் என்றும்

மூச்சுள்ளவரை மொழிப்பணிசெய்துகிடப்பதே!

தமிழைத் தமிழாகவே வளர்க்கப்பாடுபட்ட அறிஞர் நன்னனின்  அருமை பெருமைகளை அருமையாக உரைக்கும் நூல் இது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 62/69)


Saturday, May 29, 2021

மேலைத்திறனாய்வு முறைகளுக்கு எடுத்துகாட்டாகும் தமிழ் இலக்கியங்கள் – ப. மருதநாயகம்

அகரமுதல 


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 59 / 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

60 / 69

மேலைத் திறனாய்வு அணுகுமுறைகள் : தமிழ்ச்சான்றுகள்

(சாரதா பதிப்பகம், சென்னை, 2019)

இந்நூல் இரு பகுதிகளாக உள்ளது. முதற் பகுதியில் பின் வரும் தலைப்புகளில் உள்ள பத்தொன்பது கட்டுரைகள் மேலைத்திறனாய்வு அணுகுமுறைகளை விளக்குகின்றன. 

1.இலக்கிய ஆய்வு நெறிகள் 2.) மேலைத் திறனாய்வுக் கோட்பாடுகளும் தமிழறிஞரின் ஆய்வுகளும் 3.)புதுமைத் திறனாய்வு 4.) சிகாகோ திறனாய்வாளர்கள் 5.) மார்க்குசியத் திறனாய்வு 6.) தொன்மமும் தொன்மத் திறனாய்வும் 7.) சிதைவாக்கம் அல்லது கட்டவிழ்ப்பு 8.) இலக்கியமும் உளவியலும் 9.) பெண்ணியத் திறனாய்வு 10.) பெண்ணியமும் உளப்பகுப்பாய்வும் 11.) பக்குதினின் உரையாடலியலும் இடைப் பனுவலியலும் 12.) புதிய வரலாற்றியம் 13.) ஒப்பிலக்கிய அணுகுமுறை : ஏற்பும் தாக்கமும் 14.) வாசிப்போன் அனுபவத் திறனாய்வு 15.) நடையியல் 16.) இடைப்பனுவல் தன்மை 17.) பண்பாட்டு மானிடவியல் கோட்பாடுகள் 18.) சுற்றுச்சூழலியல் திறனாய்வு 19.) எடுத்துரைப்பியல் (Narratology)

:           இரண்டாம் பகுதியிலுள்ள பதினேழு கட்டுரைகள் இவ்வணுகுமுறைகளுக்குக் கீழ்வரும் தமிழ்ச்சான்றுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன:-

1.) புறநானூறு 2.) குறுங்குடி மருதனார் பாடல் 3.) முல்லைப்பாட்டு 4.) பாரதிதாசனின் பாடல்கள் 5.) குறுந்தொகை 6.) கம்பராமாயணம் 7.) தொடித்தலை விழுத்தண்டினார் பாடல் 8.) கபிலரின் புறநானூற்றுப் பாடல்கள் 9.) பெருஞ்சித்திரனார் பாடல் 10.) இலெனின் தங்கப்பாவின் படைப்பிலக்கியங்கள் 11.) வள்ளலாரின் திருவருட்பா 12.)மலைபடுகடாம் 13.) பூமணியின் வெக்கை

ஓமரிலிருந்து அரவிந்தர் வரை – பல்வகைச் செவ்விலக்கிய ஆய்வுகள் (From Homer To Sri Aurabindo : Studies in Diverse Classics(2009)

இந்நூலில் 15 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. ஓமர், பிளேட்டோ, அரிட்டாடில், திருவள்ளுவர், வால்மீகி, காளிதாசன், உலுக்கிரிடியசு(Lucretius), திருமூலர், மாணிக்கவாசகர், சங்கரர், சேகுசுபிரியர், மிலுட்டன், பசவண்ணா, ஆனந்தரங்கம்(பிள்ளை), இரவீந்திரநாத்து தாகூர், இயேம்சு இயோய்சி(James Joyce), பாரதி, வல்லசு தீவென்சு(Wallace Stevens), இருவிங்கு இலேயிடன்(Irving Layton), சால் பெல்லோ(Saul Bellow), இலெசுலி பிடுலெர் (Leslie Fiedler), நார்த்துரோப்பு பிரை(Northrop Frye), அரவிந்தர், ஏ.கே.இராமானுசன் ஆகியோர் கவிதைகளின் மூலமாக மாறுபட்ட செவ்வியல் ஆய்வுகள் வழித் தமிழ் இலக்கியச் செழுமையை உணர்த்தியுள்ளார். 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 61/69 )

 



புதின ஆசிரியர்கள் சங்க இலக்கிய மரபுநெறியைப் பின்பற்ற வேண்டும்! – ப. மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 58/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

59/ 69

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் (2019)

மாக்கவி சுப்பிரமணிய பாரதியின் சின்ன சங்கரன் கதையில் தொடங்கி, செயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் வரையிலான முப்பத்தாறு புதினங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை, ‘மேலை நோக்கில் தமிழ் நாவல்கள்’ என்னும் தலைப்பில் இரு நூல்களாக அளித்துள்ளார். ஒவ்வொரு புதினத்திற்கும் அதன் சிறப்பை வெளிப்படுத்துவதற்குரிய அணுகுமுறையைப் பயன்படுத்தி உடன்பாட்டுத்திறனாய்வு முறையில் ஆராய்ந்துள்ளார்.

‘நாவல் இலக்கியம்’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள 47 பக்கக் கட்டுரை  இலக்கியப் படைப்பாளர்களுக்குத் தக்க வழிகாட்டியாய் அமைகின்றது.எத்தகைய பாத்திரங்கள் வாழும், எவை வீழும் எனவிளக்கி, வாழும் பாத்திரங்களைப் படைக்க வலியுறுத்துகிறார்.மேனாட்டாய்வாளர்கள் பலரின் மேற்கோள்களை எடுத்துக் கூறிப் புதின இலக்கியத்தைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறார். புதுமை என்ற பெயரில் மரபுச் சீரழிவில் ஈடுபடுவோருக்குத் தக்க நெறியுரையும் வழங்கியுள்ளார்.

“பொழுதுபோக்கிற்காக நடத்தப் பெறும் இதழ்களால் கிடைக்கும் எளிய விளம்பரத்திற்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு அவற்றுக்காக எழுதத் தொடங்கிப் பெரும்பாலான படைப்பாளிகள் தம் கலைவாழ்விற்குமுற்றுப்புள்ளி வைத்துக் கொள்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ்ப்படைப்பிலக்கியக்காரர்கள் புதுமை செய்ய முனையும்போது நம் மொழிமரபு, இலக்கிய மரபு, பண்பாட்டு மரபு ஆகியவற்றை நன்கு அறிந்து உள்வாங்கிக் கொண்டு பின்னரே புரட்சிக் கூறுகளின் தேவையை எடையிட்டுச் செயல்படுத்தல் வேண்டும். மரபு அறியாதவர்கள், மரபைப் புரிந்து கொள்ளாதவர்கள் எக்கலைத்துறையிலும் புரட்சி செய்ய முனைதல் வீண்வேலையாக முடியும் என்பதை உலகப்புதுக்கவிதையின் தந்தை என்று கருதப்படவேண்டிய எசுரா பவுண்டு வலியுறுத்தியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டில் ஓவியக் கலையில் பெரும்புரட்சி செய்த பிகாசோ(Picasso) தமது கியூபிச(Cubism) ஓவியங்களைத் தீட்டுமுன் செவ்வியல் ஓவிய(classical paintings) ஆய்வில் கரைகண்டவர் என்பதை எசுரா பவுண்டு இலக்கியக் கலைஞர்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாகக் காட்டுவார். இருபதாம்நூற்றாண்டுத் தமிழ் எழுத்தாளர் கவிஞரானாலும்  புதின ஆசிரியரானாலும் சங்க இலக்கிய மரபை அறிந்திருக்க வேண்டுமென்று பலமொழி இலக்கியங்கள் பயின்ற சியார்சு ஆர்த்து கூறுவது பின்பற்றவேண்டிய கருத்தாகும்.” 

இவ்வாறு இலக்கியப் படைப்பாளர்கள் சங்க இலக்கிய மரபு நெறியைப் பின்பற்ற வலியுறுத்துகிறார். தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் அறியாமல் படைப்பாக்கத்திலும் வரலாற்று நூல் எழுதுவதிலும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வலியுறுத்தும் வழியில் பேரா.ப.மருதநாயகம் கருத்தும் உள்ளமை உணரத்தக்கது.

சங்கஇலக்கிய ஆய்வு – தெ.பொ.மீ.யும் மேலை அறிஞரும்(2008):

சங்கப்பாடல்கள் குறித்த ஆய்வுகளைக் கட்டுரை மூலமாகவும் நூல்கள் மூலமாகவும் அறிஞர் தெ.பொ.மீ. வெளியிட்டுள்ளார்.தமிழ் வளர்ச்சியில் முதன்மைப்பங்குகள் அளித்த முச்சங்கங்கள், முச்சங்கங்கள்பற்றி நிலவும் தரவுகள், பழந்தமிழ் இலக்கியங்களின் சிறப்புக் கூறுகளான இறைச்சி முதலானவைபற்றிய  அவர் கருத்துகளையும் ஆய்வு முடிவுகளையும் மேனாட்டுத் திறனாய்வு அணுகுமுறைகள் வழி நோக்கிச் சிறப்பான சொற்பொழிவைப் பேரா.ப.மருதநாயகம் வழங்கியுள்ளார்.  அதன் எழுத்துவடிவமே இந்நூல்.   

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 60/69)

 

நோபல் பரிசிற்கான தகைமையாளர் பேரா.ப.மருதநாயகம்-இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 57 / 69  இன் தொடர்ச்சி)


தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

58 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

மேற்குறிப்பிட்டுள்ள மனு, பகவத்து கீதை முதலான பல நூல்களின் தரமற்ற நிலையையும் தமிழில் இருந்து கடன் வாங்கியுள்ள கருத்துகளையும் தமிழுக்கு மூலமாகக்காட்டப்பட்ட பொய்மையின் உண்மைத் தன்மையையும் தமிழின்தொன்மையையும்பற்றி விரிவாகவே தந்துள்ளார். எனினும் அவற்றைக் கோடிட்டுக்காட்டும் முகத்தான் சிலவே இங்கே குறிக்கப்பட்டுள்ளன. முழுமையாய் அறிய,இந்நூலைப் படித்து இன்பமும் அறிவும் அடைய வேண்டுகிறேன்.

இவ்வாறு ‘வடமொழி ஒரு செம்மொழியா?’ என்னும் பேராய்வு நூலைத் தந்துள்ளமைக்கே பேராசிரியர் இருமொழிப்புலவர் முனைவர் ப.மருதநாயகம் அவர்களுக்கு  நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்இவர் சமற்கிருதத்தின் போலிச்சிறப்பையும் பொய்யாக அதைப் போற்றியும் எழுதியிருந்தார் என்றால் அவருக்குப் பல கோடிச் செல்வமும் உயர் பதவிகளும் வழங்கப்பட்டிருக்கும். சமற்கிருத நூலாரின் ஏமாற்று வேலைகளையும் கபடச் செயல்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளமையால் இவரைப் புறக்கணிக்கவே செய்வர். இவர் எத்தகைய காழ்ப்புணர்ச்சியிலோ மொழி வெறியிலோ இந்நூலைப் படைக்கவில்லை. சமற்கிருத அறிஞர்களின் கருத்துகளைத் தெரிவித்து அவற்றின் அடிப்படையிலேயே சான்றாதாரங்கள் அளித்து வடமொழி செம்மொழி அல்ல என்பதை நிறுவியுள்ளார்.

ஒரு மொழியின் செம்மொழித் தன்மைக்கு அடிப்படையாக அமைவன  அம்மொழியின் இலக்கியங்களே. அந்த வகையில் சமற்கிருத நூல் ஒவ்வொன்றையும் அடிப்படையாகக் கொண்டு அதனதன் பொய்யான சிறப்புகளையும் தொன்மை, முதன்மை முதலான இட்டுக்கட்டப்பட்ட சிறப்புகளையும் விளக்கி, சமற்கிருத நூற்கருத்துகள் எந்தெந்த வகையில் தமிழ் இலக்கியங்களுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் கடன்பட்டுள்ளன எனத் தெளிவாக்கியும் சமற்கிருதத்தின் செவ்வியல் தன்மை இன்மையைச் செம்மையாக விளக்கியுள்ளார். இக் கருத்துகளை நாம் பல தளங்களிலும் பரப்ப வேண்டும். திருட்டு புரட்டு மொழிக்குச் செம்மொழி என்ற பெயரில் அளித்து வரும் நிதியுதவிகளை நிறுத்த வேண்டும். பிற மொழியினரின் வரிப்பணத்தில் அதற்கு வீண் செலவு செய்வதையும் நிறுத்த வேண்டும்சமற்கிருதம் செம்மொழி எனக்கூறும் பொய்யான பரப்புரைக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.

தமிழின் காலத்தைப் பின்னுக்குத்தள்ளி மொழிச்சிறப்பை மறைத்து இழித்தும் பழித்தும் எழுதுநருக்குத் தக்க மறுமொழிகளை நடுநிலையான பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகள் அடிப்படையில் விளக்கித் தமிழ் ஒன்றே உயர்தனிச்செம்மொழி என்பதை ஆய்ந்து நிறுவியுள்ளார். 

இந்நூல் ஒன்றே அவரின் நோபல் பரிசிற்கான தகைமையை எடுத்துரைக்கும். எனினும்,  பிற மொழி இலக்கியங்களில் உள்ள தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கு, ஒப்பிலக்கியக் கட்டுரைகள் மூலம் திருக்குறளின் சிறப்பும் தாக்குறவும், பிற மொழி இலக்கியங்களுக்கு வழிகாட்டியான சங்க இலக்கியங்கள், திறனாய்வுக் கட்டுரைகள், காலங்கள் தோறும் தமிழ்க்கவிதைகள் சிறப்பு. மொழிபெயர்ப்புப் பணிகள், தமிழ் மொழியின் தூய்மை, தாய்மை, தொன்மை, செம்மை முதலியவற்றை எடுத்துரைக்கும் பாங்கு  முதலியவற்றை நடுநிலையுடன் தரும் ஆய்வுப்படைப்புகளுக்காகவும் பேரா.ப.மருதநாயகத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். கவிதை இலக்கியத்தை மட்டும் இலக்கியமாகக்கொள்ளாமல் ஆராய்ச்சி இலக்கியத்தையும் இலக்கியமாகக் கருதி அவருக்கு நோபல்பரிசு வழங்க வேண்டும். இதற்குப்பரிந்துரைக்கும் தகுதியாளர்கள் இவர் பெயரைப் பதிந்து ஆவன செய்ய வேண்டும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 59/69)

 



Tuesday, May 25, 2021

தமிழிடம் கடன் வாங்கியுள்ள வேதமும் நாட்டிய சாத்திரமும்- ப. மருதநாயகம்

அகரமுதல

      26 May 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 56 / 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

57 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

நிறைநிலையாக இரு கட்டுரைகளையும் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளார். ஒன்று, ‘தமிழும் சமற்கிருதமும் : வேதநூல் வல்லுநரின் தீர்வு’.இரண்டாவது கட்டுரை ‘பரத முனிவரின் நாட்டிய சாத்திரம்’.

இருக்குவேத ஆய்வுகள் (Rig Vedic Studies) என்னும் நூலை வேத விற்பன்னர் சுர்தரராசு 7 தொகுதிகளாக எழுதியுள்ளார்.தம் ஆய்வு முடிவுகள் சிலவற்றை இணைப்பாக(Rig Vedic Studies: Addendum)அவர் தொகுத்துத் தந்துள்ளார். அச்சிறுநூல் நான்கு கட்டுரைகளை உள்ளடக்கியது. அன்னார் நிறுவும் ஆய்வு முடிவுகள் வருமாறு:

ஒள(ஓம்) என்பது தூய சமற்கிருதச்சொல் என்றும் தமிழ்ப்பண்பாட்டிற்குள் ஊடுருவி விட்டது என்றும் தவறாக நம்புகின்றனர்.  ‘ஒளம்ன்’ என்பதன் முதல் எழுத்தாகிய  ‘ஒள’தமிழிலேயே முதலில் தோற்றம் பெற்றது. கிறித்துக்குப் பின் சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட சமற்கிருதத்திற்கு எழுத்துகள் உருவாக்கப்படவில்லை.

தமிழ் எழுத்து வழக்கானது தொன்மையானது.

முதல் இரண்டு சங்கங்கள் இருந்திருக்க வேண்டுமென்பதை நம்புவதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

பிராமிக்கு மூலம் பழந்தமிழ் எழுத்தே.

கி.பி. ஒன்பது,பத்தாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு சமற்கிருத ஒலியனியலுக்கேற்றவாறு தமிழ் சிதைக்கப்பட்டு வட்டெழுத்து உருவாக்கப்பட்டது. ஆனால், இம்முயற்சி தோல்வியடைந்து வட்டெழுத்து மறைந்தது.

ஒள என்பது மூலத்தமிழ் எழுத்தே.

இவ்வாறு முதல் பிரிவில் விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டாம் பிரிவில் பின்வருவன சொல்லப்படுகின்றன.

இருக்கு வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்களின் பெயர்கள் திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பெறப்பட்டவை என்பதை வேர்ச்சொல்லாய்வு மூலம் அறியலாம்.

இருக்குவேதத் தொன்மங்களில் சில இன்று தமிழகத்தில் கொண்டாடப்படும் விழாக்கள், திராவிட மக்கள் பேணும் சடங்குகள் ஆகியவற்றின் மறைமுக வருணனைகளே.

விட்ணு, விருத்திரன், அதிதி, அசுவின், சுரோனா,கிரித்திகா, சதபிசக்கு, சியேசத, உரோகினி, மூலா, மது, திரியம்பிகா போன்ற பெயர்களுக்கெல்லாம் வேர்களைத் தமிழ் மொழியிலேயே காணமுடியும். இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் அவற்றைக் காணும் முயற்சி வீணானது.

தமிழகத்துக் கோட்பாடுகள் சிந்துவெளியின் மூலம் இருக்குவேதத்திற்குச் சென்றிருக்க வேண்டும்.

எனவே,சமற்கிருதத்திற்கும் தாயாகத் தமிழே உள்ளதைப்புரிந்து கொள்ளலாம்.

“கலைகள், சமயம்,மொழி, தத்துவம் ஆகிய எல்லாத் துறைகளிலும் சமற்கிருதத்தில் தோற்றம் பெறுவதற்குத் தமிழ்ப்பண்பாடே தூண்டுகோலாகவும் அடித்தளமாகவும் அமைந்தது. வேர்ச்சொற்களில் மட்டுமல்லாமல் கட்டமைப்பிலும் சமற்கிருதம் தமிழை ஒத்தே காணப்படுகிறது. எனவே, ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே மூலத்தமிழ்ப்பண்பாடு மிகவும் வளர்ச்சியுற்றதாக இருந்திருக்க வேண்டும். இதற்கு மாறாகச்,  சமற்கிருதத்திலிருந்து தமிழ் தோன்றி வளர்ந்ததென்னும் கூற்று ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியதாகும்.”

முப்பத்து மூன்று தமிழ் எழுத்துகள் இருக்கு வேதத்தில் முப்பத்து மூன்று தெய்வங்களாகின்றன.

தமிழில் சொல்லைத் தொடங்கக்கூடாத மெய்யெழுத்துகள் எட்டு. இதைப்போல வசுக்கள் எட்டு.

சொல்லைத் தொடங்கக்கூடிய 10 மெய்யெழுத்துகளுடன் ஆயுதத்தைச் சேர்த்தால் 11. இவை 11 உருத்திரர்களோடு பொருந்தும்.

சமற்கிருதத்தில் ஏழாவது எழுத்தான ‘க்ரு’ தமிழ்க் குற்றியலுகரத்திலிருந்து பெறப்பட்டது.

இவ்வாறு ஆரியத் தெய்வங்களை தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையோடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளார்.

நான்காவது பிரிவில் சமற்கிருதத்திற்கு மூலமாகத் தமிழ் இருப்பதை விளக்குகிறார்.தருமா, ஆரியா, தாசா, இருக்கு, அரி எனப்பலசொற்களும் தமிழில் இருந்து பிறந்தனவே என விளக்கியுரைக்கிறார்.

இருக்குவேத சமற்கிருதத்தைக்காட்டிலும் தமிழ்மொழி தொன்மையும் உயர்வும் உடையதென்பதும் அதற்கான மொழியியல் பண்பாட்டுக்கூறுகளைத் தமிழே தந்ததென்பதும் நாம் ஏற்றுக் கொள்ளற்குரியவை.

மொழியியல் தேவைக்கேற்றவாறு தமிழ் எழுத்து முறையும் இலக்கண விதிகளும் அமைந்துள்ளன. தமிழ்ச்சந்திவிதிகள் எளிமையானவை.

தமிழ்மொழியும் தமிழர் பண்பாடும் இருக்குவேதத்திற்கும் வேத சமற்கிருதத்திற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே பெருவளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; முன்னதிலிருந்து பின்னது பேரளவிற்குக்கடன் பெற்றிருக்க வேண்டும்.

தொல்காப்பியம் கூறும் இலக்கண விதிகள் பல இருக்கு வேதத்தில்  இடம் பெறுகின்றன.

வேதங்களும் இருக்குவேத சமற்கிருதமும் பெரும்பாலும் தமிழ்ப்பண்பாட்டாலேயே உருவாக்கம் பெற்றுள்ளன.

பேரா.பரோ இருக்குவேதத்தில் ஏறக்குறைய 20 திராவிடமொழிச் சொற்கள் காணப்படுகின்றன என்ற தவறான முடிவில் இருந்தார். பல இருக்குவேதச் சொற்களுக்குத் திராவிட வேர்களே பொருந்துவதையும் இந்தோ ஐரோப்பிய வேர்கள் சற்றும் பொருந்தாமையையும் காணலாம்.

ஊர் ஊராகச் சுற்றித்திரிந்த வலிவுடைய ஆரியர்கள் உயர்ந்த நிலையிலிருந்த திராவிட நாகரிகத்தின் முதல் தாக்கத்தினால் சமற்கிருத மொழியையும் சமற்கிருத இலக்கிய மரபுகளையும் உருவாக்கிக் கொண்டனர். எனவே, நாம் சமற்கிருதம் என்று அழைக்கின்ற கலப்பு மொழி உருவானது வெகுகாலத்திற்குப் பின்தான். அதன்பின்னே வேதங்கள் தோன்றின.

இவ்வாறு வேத விற்பன்னர் சுந்தரராசு ஆராய்ந்து சமற்கிருதத்திற்கு எழுத்திலும் சொல்லிலும்  மூலமாகத் தமிழ் உள்ளமையைத் தெரிவிப்பதை நமக்குத் தெரியச் செய்கிறார்.

பிற்சேர்க்கை இரண்டாவதாகப் பரதமுனிவரின் நாட்டிய சாத்திரம் பற்றிய கட்டுரை இடம் பெறுகிறது.

தொல்காப்பியத்தின் மூலம் நாட்டிய சாத்திரம் அன்று என்பதற்கு அது காலத்தால் பிந்தியது என்பது மட்டுமல்லாமல் வேறு காரணங்களும் உண்டு என என அவற்றைத் தொகுத்துத் தருகிறார்.

நாட்டிய சாத்திரத்தின் முதன்மையான முதலில் எழுதப்பெற்ற  6,7 போன்ற அத்தியாயங்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னால் எழுதப்பட்டிருக்க முடியாதென்றும் மற்ற இடைச்செருகல்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டாம் நூற்றாண்டுவரை சேர்க்கப்பட்டன வென்றும் கீத்து(Keith) போன்ற மேலை விற்பன்னர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நாட்டிய சாத்திரத்தின் தொடக்க அத்தியாயங்களின் முதல் தோற்றமே தொல்காப்பியத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த தென்பது தேற்றம்.

மெய்ப்பாட்டியலின் சிறப்பையும் நாட்டிய சாத்திரத்தின் கட்டுப்பாடற்ற அமைப்பையும் தெளிவற்ற விளக்கத்தையும் ஒப்பிட்டுத் தொல்காப்பியமே மூல முதல் நூல் என விளக்கியுள்ளார்

சமற்கிருதக் கல்வியியலைப்பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவர் கேரளபுரக் கிருட்டிணமூர்த்தி. இவர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மெய்ப்பாட்டியல் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பரத முனிவர் இரசக்கோட்பாட்டை அமைக்க முயன்றுள்ளமையையும் பின் வந்தவர்கள் தத்தம் விருப்பு வெறுப்பிற்கேற்பப் பல கருத்துகளைப் பொறுப்பில்லாமல் சேர்த்து நாட்டிய சாத்திரத்தை விரிவு படுத்தியுள்ளார்கள் என்றும் தெரிவிக்கிறார். எனவே, கடன் வாங்கிய பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தைத் தொல்காப்பியத்தின் மூலமாகக் காட்டும் வரலாற்றுப் பிழையை இனியும் செய்யக் கூடாது.

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 58/69)