Friday, April 30, 2021

சமற்கிருத நூல்களின் மூலம் தமிழே! – ப. மருதநாயகம்

 அகரமுதல

     01 May 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 31/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

32/ 69

 

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி)

 சமற்கிருதத்தில் பயின்று வந்த சில குறிப்பிடத்தக்க இலக்கியக் கூறுகள் அம் மொழி மரபிற்குரியன அல்ல; சமற்கிருத இலக்கியங்களில் காணப்பெறும் பல ‘கவி சமயங்கள்’ சங்க இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டவை என ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்தியவர் மேலை அறிஞரான சீக்குஃபிரிட்டு இலியான்ஆருடு ஆவார். சமற்கிருத நூலான பாகவதத்தில் நமது முல்லைத் திணைப்பாடல்கள் அழுத்தமான தடம் பதித்துள்ளன என மேலைநாட்டறிஞர்கள் விளக்கியுள்ளதையும் நமக்கு இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.  பல கவிதை உத்திகளும் உவமைகளும் காட்சி உருக்களும் தமிழ் அகப்புறப்பாடல்களிலிருந்து காளிதாசனின் காவியங்களுக்கும் நாடகங்களுக்கும் சென்றிருக்கின்றன என்பனவற்றைச் சமற்கிருதப் பேராசிரியர் கே.கிருட்டிணமூர்த்தி முதலான அறிஞர்கள் பலரின் ஆய்வுரைகள் மூலம் நான்காம் கட்டுரையில் விளக்கியுள்ளார். திருமுருகாற்றுப்படை, நற்றிணை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு முதலான பல இலக்கிய அடிகளைக் குறிப்பிட்டுக் காளிதாசனின் படைப்புகளில் அவற்றின் செல்வாக்கு உள்ளதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இறைச்சி, உள்ளுறை ஆகிய தமிழ்க்கவிதை உத்திகளே பத்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொனி, வக்குரோத்திபோன்ற சமற்கிருத மொழிக் கோட்பாடுகளாக உருப்பெற்றன என்றும் காளிதாசனுடைய காப்பியங்களிலும் நாடகங்களிலும் சங்க இலக்கியம் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுகிறது என்றும் அமெரிக்க நாட்டுச் சமற்கிருதப் பேராசிரியர் சியார்சு ஆருடு(George Hart) தம்முடைய ஆய்வேடுகளில் ஐயத்திற்கிடமின்றிச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.பேரா.ப.ம.நா. அவர் கருத்துகளை எடுத்துச் சொல்வதுடன் மேற்சான்றுகளையும் அளிக்கிறார்.காளிதாசனின் குமாரசம்பவம் போன்ற காப்பியங்களிலும் சாகுந்தலம் போன்ற நாடகங்களிலும் சங்க இலக்கியங்களிலிருந்து காளிதாசன் எடுத்தாளும் கருத்துகள், வருணனைகள் உவமைகள் காட்சியுருக்கள் ஆகியவற்றையும் பட்டியலிட்டுத் தருகிறார்.

 “சங்க இலக்கியங்களை வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும்” என அறியாமையால் குரல் எழுந்த பொழுது கிளர்ந்து எழுந்து மக்கள் இலக்கியங்களாக அவற்றை உணர்த்திப் பரப்பியவர் தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார். அவர் மேற்கொண்ட நன்முயற்சிகள் பயனாக உலக அரங்கில் சங்க இலக்கியம் பரவலாயிற்று.

உலக இலக்கிய அரங்கில் சங்கப்புலவர்களின் செய்யுட்களுக்கு உரிய இடம் கிடைத்துள்ளது. இவற்றின் தனிச்சிறப்பை அறிந்த மேனாட்டுக் கல்வியாளர்கள்,  சமற்கிருத இலக்கியங்களுக்கு அடிப்படையாக உள்ள சங்க இலக்கியங்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர். காளிதாசனின் காவியங்களிலும் நாடகங்களிலும் உள்ள சங்க அகப்பாடல்களின் தாக்கம் பற்றித்தெரிவித்து வருகின்றனர். ஆனால், காளிதாசன் உத்திகளுக்கும் உவமைகளுக்கும் வருணனைகளுக்கும் மட்டுமல்லாமல், சங்கப்பாடல்களை ஆழ்ந்து படித்துத் துய்த்து அவற்றிலிருந்து இலக்கிய வகைகளையும் உருவாக்கியிருக்கிறான் என்பதைப் பேரா.ப.மருதநாயகம் பல சான்றுகளுடன் ஐந்தாவது கட்டுரையில் விளக்கியுள்ளார்.

மேலும், “சிலப்பதிகாரத்திலிருந்து பெற்றதைக் கொண்டு (இ)ருதுசம்காரம் எனும் ஆறு பருவ வருணனையைப்பற்றிய சிற்றிலக்கிய வகையையும் அகப்புறத் தூதுப்பாடல்களால் கவரப்பட்டு ‘மேகதூதம்’ எனும் முதல் தூது இலக்கியத்தையும் சிறுபாணாற்றுப்படை பொருநராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் உள்ள விறலி, பாடினி, சூரர மகளிர் ஆகியோர்பற்றிய அடி முதல் முடி வரையிலான தாக்கத்தால் பார்வதியின் ‘நக சிகாந்தக’ வருணனையைும் திருமுருகாற்றுப் படையும் பரிபாடல்களும் அளித்த உந்துதலால் முருகனின் பெருமை கூறும் ‘குமார சம்பவம்’ எனும் முதல் சமற்கிருதக் காப்பியத்தையும் காளிதாசன் தந்துள்ளான்” என்கிறார் பேரா.ப.மருதநாயகம்.

மேலும் இக்கட்டுரையில் அழுத்தமாக அவர், காளிதாசனின் காவியங்களில் சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு எந்த அளவிற்கு இடம் பெற்றிருக்கிறது என்பதைத் திறம்பட விளக்கியுள்ளார்.

ஆறுபருவ வருணனைக்கான பாடலின் கருவையும் உருவையும் இளங்கோவடிகளின் ஊர்காண்காதையில் இருந்து எடுத்துக்கொண்ட காளிதாசன் அதனைத் தனி இலக்கியவகையாகவும் மாற்றியுள்ளதைப் பேரா.ப.மருதநாயகம் விளக்குகிறார்.

சிலப்பதிகார வேனிற்காதையிலிருந்து சில அடிகளைக் காளிதாசன் முற்றிலுமாக எடுத்தாண்டிருப்பதையும் விளக்குகிறார். தமிழ் அகப்பாடல் மரபில் வந்த இளவேனில், குயில்,காதலர் உறவு முதலியவற்றால் கவரப்பட்ட காளிதாசன் அவற்றை (இ)ருது சம்காரத்திலும் குமார சம்பவத்திலும் இரகுவம்சத்திலும் மீண்டும் மீண்டும் சொல்லி மகிழ்வதை நமக்கு விளக்குகிறார்.சிலப்பதிகார அடிகளின் பொழிவு பலவும் காளிதாசனால் எடுத்தாளப்படுவதற்குப் பல சான்றுகள் தருகின்றார்.

மேகதூத வருணனைகள் சில, சங்கப்பாடல்களை மட்டுமல்லாமல், சிலப்பதிகாரத்தையும் நினைவூட்டுவதையும் காணலாம். சிலப்பதிகார கானல் வரிகளைக் காளிதாசன் வரிகள் நினைவூட்டுவதைச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். ஆற்றை அழகிய பெண்ணாக உருவகப்படுத்தி, பூக்களை ஆடையாகவும் மாலையாகவும் காட்டுகிறார் இளங்கோ அடிகள். இதைப்போல் நிருவிந்தியா என்னும் ஆற்றைக் காளிதாசன் உருவகப்படுத்துவதையும் பார்க்கிறோம்.  

வேனிற்காதையில் இடம் பெறும் மாதவி மடல் போன்று துசுயந்தனுக்குச் சகுந்தலை எழுதும் மடலும் அமைந்துள்ளது. இளங்கோவடிகளின் சிலப்பதிகார அடிகளில் காணப்பெறும் பொருட்சுவை, சொல்லழகு, காட்சி யமைப்பு, உவமைப்பாங்கு முதலியவற்றைக் காளிதாசன் கையாண்டுள்ளதைச் சிறப்பாக விளக்கியுள்ளார். எனவே, சிலம்பின் ஒலி காளிதாசன் பாடல்களில் ஒலிப்பதை நாம் உணரலாம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 33/ 69 )

 







Thursday, April 29, 2021

மருதநாயகம் பார்வையில் பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்

 அகரமுதல

     30 April 2021      No Comment

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 30/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

31/ 69

 

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014)
  1. விவிலிய இலக்கியத்தில் அக இலக்கிய மரபு, 2. ஒப்புரவறிதல்: வள்ளுவரும் செனகாவும், 3. பாசனின் நாடகங்களும் பழந்தமிழ்ப் பனுவல்களும், 4. சான்றோர் கவிதையும் காளிதாசனும், 5. காளிதாசனின் படைப்புகளில் சிலம்பின் ஒலி, 6. பொருளியல்: திருக்குறளும் கெளடலியமும், 7. அறவியல்: திருக்குறளும் சுக்கிர நீதியும், 8. பிராகிருதத்தில் தமிழ் அகமரபு: அகநானூறும் காதாசபுதாதியும், 9. ஆதிசங்கரரும் தமிழும் என்னும் ஒன்பது தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. எபிரேயம், இலத்தீன், சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழி இலக்கியங்களில் சங்க இலக்கியங்களும் திருக்குறளும் விளைவித்துள்ள ஆழ்ந்த தாக்கத்தை இக்கட்டுரைகள் ஏராளமான சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகின்றன.

முதல் இயலில் கைம் இராபின்(Chaim Rabin) படைப்புகளிலிருந்தும் சியார்சு ஆர்டு ஆக்கங்களிலிருந்தும் தமிழ்ச் சங்க அக மரபு விவிலியத்தில் உள்ளதை அழகுபட விளக்குகிறார். அகில், தோகை முதலான தமிழ்ச்சொற்கள் விவிலியத்தில் இடம் பெற்றுள்ளமை குறித்து மேனாட்டார் தெரிிவத்துள்ளமையையும் எடுத்துக்காட்டாகத் தருகிறார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில்(Old Testament of the Bible) இடம் பெற்றுள்ளது அரசன் சாலமனின் ‘பாடல்களுள் பாடல்’(King Solomon’s Song of Songs’) என்னும் கவிதையாகும். இக்கவிதை தமிழ் அகக்கவிதை மரபிற்குக் கடன்பட்டுள்ளது என்பதை எபிரேயப் பேராசிரியர் கைம் இராபின்(Chaim Robin) தெளிவாக விளக்குகிறார். இதனை அவர், தமது ‘பாடல்களுள் பாடலும் தமிழ்ச்செய்யுளும்’ (‘The Song of Songs and Tamil Poetry’) என்னும் கட்டுரையில் அளித்துள்ளதை நமக்குத் தருகிறார். இக்கட்டுரை ‘சமயஆய்வுகள்’(‘Studies in Religion (1973-74)’ என்னும் இதழில் வெளிவந்துள்ளதையும் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரை மூலம், சங்க அகஇலக்கிய மரபின் தாக்கம் இப்பாடலில் இருப்பதை மொழியியல்,இலக்கிய வரலாற்றுச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

இவற்றை மேம்போக்காக விளக்காமல் ஆழமாக உள்ளத்தில் பதியும் வண்ணம் விளக்குகிறார். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்பாடலில் எவ்வாறு சங்கச்சான்றோர் பாடல்களின் தாக்கம் இருக்க முடியும் என்ற வினாவை எழுப்பி அப்பேராசிரியரே அதற்கு விடையும் தருகிறார். பழந்தமிழகத்தில் முச்சங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்; இறையனார் களவியல் உரை கூறும் முச்சங்க வரலாறு உண்மையானது; தலைச்சங்கக்காலத்திலேயே தோற்றம் பெற்ற அக இலக்கிய மரபு வணிகர்கள் மூலம் எபிரேய மொழிக்குச் சென்றிருக்க வேண்டும்; இம்மரபு உலக மொழிகளில் வேறு எதிலும் இல்லை என்பதால் தலைச்சங்கத் தமிழ் இலக்கியங்களே எபிரேயப் பாடலுக்கு மூலமாதல் வேண்டும். தமிழ்ச்சங்கம் இருந்ததில்லை என்பாருக்கும் ஒரே ஒரு சங்கம்தான் இருந்திருக்க வேண்டும் என்பாருக்கும் இவரின் இவ்விளக்கமே விடையாகவும் அமைந்து விடுகிறது.

கைம் இராபினின் கருததுகளைத் தொகுத்துத் தருவதுடன் பேரா.ப.மருதநாயகம் அவற்றுக்கு அரண் சேர்க்கும் வகையில் தாமும் சான்றாதாரங்களை இதில் அளித்துள்ளார்.

கி.மு.நான்காம் நூற்றாண்டிலோ ஐந்தாம் நூற்றாண்டிலோ பிறந்திருக்கக்கூடிய உரோமானிய அறிஞர் செனகா(Seneca) திருக்குறளைக் கையாண்டுள்ளதை – திருக்குறள் சிறப்பினை எடுத்துரைத்ததை – அடுத்து விளக்குகிறார். எனவே, திருக்குறளை அறிந்திருந்த அறிஞர் செனகாவின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே திருவள்ளுவரின் திருக்குறள் தோன்றியிருக்க வேண்டும் என்கிறார்.

இரண்டாம் கட்டுரை ஒப்புரவறிதல் பற்றியது என்றாலும் இதில் வேறு பல அதிகாரங்களையும் குறள்களையும் செனகாவின் மேற்கோள் கருத்துகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.

“வடநூலார் பொருளற்ற விவாதங்களுக்கும் நிறுவமுடியாத ஊகங்களுக்கும் தேவையற்ற சொற்சிலம்பங்களுக்கும் இடமளித்து மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட பொழுது வள்ளுவர் மண்ணுலக வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் நுட்பமாக ஆராய்ந்து செம்மையான வாழ்விற்கு வழிகூறுதலைத் தலையாய நோக்கமாகக் கொண்டார்.” என்பதைப் பேரா.மருநதநாயகம் இக்கட்டுரையில் விளக்குகிறார்.

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு அறிஞர் பிரான்சுவா வாலெண்டின் (Francios Valentijin) ‘சிலோனின் வருணனை’(Description of Ceylon) என்னும் நூலில் 65 தமிழ் நூல்களின் பட்டியலை அளித்துள்ளதாகவும் அதில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளதாகவும் பேரா.ப.மருதநாயகம் குறிப்பிடுகிறார். அதில் அறிஞர் செனகா திருக்குறள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார் எனவும் பிரெஞ்சு அறிஞர் தெரிவித்துள்ளார்.

செனகா, அவுரேலியசு முதலானோருக்கு வள்ளுவரே வழிகாட்டியாக இருந்துள்ளார் என்றும் அதுவே உறுதிவாதியம்(stoicism) என்னும் தத்துவக் கோட்பாட்டில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்றும் பிரெஞ்சு அறிஞர் அளித்துள்ள குறிப்பு வலுவான ஆதாரமாக விளங்குவதையும் இஃது அறிவிக்கிறது.

எனவே, பிறநாட்டு நல்லறிஞர்கள் திருக்குறள் பெருமையை நன்கு அறிந்துள்ளார்கள் எனலாம். இவற்றை யெல்லாம் ஆய்ந்து அறிந்து தெரிவித்துள்ள பேரா.ப.மருதநாயகத்திற்குத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.

காளிதாசனுக்கு நூறு ஆண்டுகள் முன் வாழ்ந்த கி.பி.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாசகவி என்னும் சமற்கிருத அறிஞர் 13 நாடகங்களை எழுதியுள்ளார். இந்நாடகங்களில் முருகனின் வீரச்செயல்கள் போற்றப்படுகின்றன. …   ….    … சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் முருகன் வீரம், அழகு, இளமை ஆகியவற்றின் குறியீடாகவே போற்றப்படுவதையும் புறநானூற்றில் மன்னர்கள் முருகனோடு ஒப்பிட்டுப் பாடப்படுவதையும் காளிதாசன் இரகுவம்சத்தில் பேரரசர்களை யெல்லாம் கந்தனாக வருணிப்பதையும் நினைவு கூர்ந்தால் பாசகவியும் சங்க இலக்கியச் செல்வாக்கின் காரணமாகவே போர்க்கடவுளை இவ்வாறெல்லாம் தம் நாடகங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார் என்பதை உணரலாம். இவ்வாறு கூறும் பேரா.ப.மருதநாயகம் சங்க இலக்கியங்களில் முருகன், களிறு, கொடைச்சிறப்பு,போர்க்காட்சி, தலைவன் தலைவி சந்திப்பு, தோழி கூற்று, அரசனின் பொறுப்பு, உவமைகள் முதலிய பலவும் பாசனின் படைப்புகளில் உள்வாங்கப்பட்டுள்ளவற்றைச் சிறப்பாக விளக்குகிறார். காளிதாசனின் படைப்புகளில் சங்க இலக்கியம் தொட்ட இடங்களில் எல்லாம் தட்டுப்படுவதைக் கருநாடகச் சமற்கிரு அறிஞர் கிருட்டிணமூர்த்தி முதலான அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுபோல் அவருக்கு முற்பட்ட பாசகவியின் நாடகங்களில் சங்கஇலக்கியச் செல்வாக்கு இருப்பதை மேனாட்டு அறிஞர்கள் கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் மூன்றாம் கட்டுரையில் உள்ள சான்றுகள் அமைகின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பாசகவியின் நாடகங்களில் சங்க இலக்கியத் தாக்கம் இருப்பதை உருசிய அறிஞர் துபையான்சுகி(Dubiansky) ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டார் அதன் அடிப்படையில் ஆராய்ந்து இக்கட்டுரையைப் படைத்துள்ளதாகப் பேரா.ப.ம.நா. குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 32/ 69  இன் தொடர்ச்சி)



Wednesday, April 28, 2021

மருதநாயகத்தின் தொல்காப்பியப் பார்வை

 அகரமுதல


 (தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 29/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

30/ 69

        பேரா.ப.மருதநாயகம் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மட்டும் தனி நூலாக ஆய்வுக்குறிப்புகளுடன் வெளியிட்டுள்ளார். தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என்னும் நூலையும் படைத்துள்ளார். இவ்விரண்டு பற்றிய சுருக்கஅறிமுகமே இப்பகுதி.

தொல்காப்பியப் பொருளதிகாரம் (2019)

தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப்  பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை போன்ற அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக் கூறித் தொல்காப்பியம் சமற்கிருதத் தழுவலன்று எனத் தெரிவிக்கிறார்.

 தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் சுட்டும் கவிதை நெறி இன்று மேலைத் திறனாய்வாளரகளில் உயர்ந்தோர் ஏற்றுப் பாராட்டும் கவிதை நெறியோடு பெரும்பாலும் ஒத்திருக்கக் காணலாம். தமிழ்க்கவிதையியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அக்காலத்துக் கிரேக்கர்களும்  உரோமானியர்களும் கொண்டிருந்த கவிதைபற்றிய கருத்துகள் சில நகைப்பிற்குரியவை.  சமற்கிருத இலக்கியம்பற்றி மட்டும் அறிந்த மேனாட்டறிஞர்கள் கவிதையியல் சமற்கிருதத்திலிருந்துதான் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருக்க வேண்டும் என்ற தவறான கருதுதலில்   இருந்தனர். ஆனால் கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் சங்க இலக்கியங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டபின், தொல்காப்பியத்தின் தொன்மை வெளியான பிறகு மூலம் எது? கடன் கொண்டது யார்? கடன் கொடுத்தது யார்? என்பதில் உண்மை தெளிவாகி வருகிறது.

கவிதை தமிழர்களுக்கு ஒரு வெறும் பொழுதுபோக்குப் பொருளன்று ஒரு வாழ்க்கை முறையே என்று சொல்லுமளவிற்கு அவர்களது வாழ்க்கையோடு இரண்டறக்கலந்துவிட்டது. மேனாட்டுத் திறனாய்வாளர்கள் பலரின் கருத்துகள் அடிப்படையிலும் தம்  ஆய்வின் அடிப்படையிலும தமிழில் கவிதையியலின் சிறப்புகளையும் அதற்குப் பிந்தைய வரலாறு உடைய சமற்கிருதக் கவிதையியலின் குறைபாடுகள் குறித்தும் விளக்குகிறார்.

நூற்பாக்களுக்கு விளக்கம் தரும்பொழுதே தேவைப்படும் இடங்களில் எல்லாம் மேலைத்திறனாய்வாளர்கள், சமற்கிருதஅறிஞர்கள், தமிழறிஞர்கள் கருத்துகளின் அடிப்படையில் தமிழ்க்கவிதையியல் சிறப்பை உணர்த்துகிறார்.சங்கச் சான்றோர் பாடல்கள் உயர்ந்த நோக்குடைய அரிய கலைப்படைப்புகள் என்பதையும் சமற்கிருத இலக்கியங்களில் பெரும்பாலானவை கீழ்த்தர உணர்வுகளைக் கிளப்பும் தன்மையவை(obscene writings) என்பதையும்  இரண்டையும் கற்றோர் அறிவர்.

காமக்கூட்டம் காணும்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே

என வரும் நூற்பாவை இடைச்செருகல் என ஐயந்திரிபறக் கூறுகிறார்.

“உயிரினும் சிறந்தன்று நாணே” எனத் தொடங்கும் நூற்பாவை விளக்கும் பொழுது, தலைவி தன்னந்தனியளாகத் தலைவனைத் தேடிச் செல்வதாகப் பாடல் எழுதுவது தமிழ்மரபு அன்று. சமற்கிருதத்தில் திருமணமானவள் இரவில் கள்ளக்காதலனைத் தேடி அலைவதாகக் கூறும் பாடல்கள் பல உண்டு.

கற்பியல் குறித்து விளக்கும் பொழுது பி.சா.சுப்பிரமணிய சாத்திரிகள் அறியாமையாலோ குறும்புத்தனத்தாலோ ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நெறி ஆரியரிடமிருந்து தமிழர் பெற்றது என எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு அதனை வன்மையாக மறுக்கிறார்.

மெய்ப்பாடுகுறித்த கருத்துகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தெளிவான விளக்கம் பெற்றிருந்தன என்பதை நூற்பாவே தெரிவிக்கிறது. ஆனால், இவை பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்திலிருந்து பெறப்பட்டவை என்று தமிழின் உட்பகைவரகளும் புறப்பகைவர்களும் பொய்கூறிக்காலந் தள்ளுகின்றனர். எனக்குறிப்பிட்டு அறிஞர் பி.வி.கனே போன்றோர் கருத்துகளையும் துணைகொண்டு தமிழ்கூறும் மெய்ப்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துரைக்கிறார்.

இடைச்செருகல்களையும் சேர்த்து வெளியிட்டுப் பின்னர் அவற்றை இடைச்செருகல்கள் என்பதை விட அவை இல்லாமல் தொல்காப்பியத்தை வெளியிடுவதே சிறப்பு. எனவே, அவ்வாறு இந்நூலில் இடைச்செருகல்களை நீக்கிய பதிப்பாக இதனை வெளியிட்டுள்ளார்.

‘தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’(2019)

தொல்காப்பியத்தில்  இடைச்செருகல்கள் உள்ளமையை முதலில் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வெளியிட்டார். அதன்பின்னர் பிற தமிழ் அறிஞர்களும் இது குறித்து எழுதியுள்ளனர். எனினும் தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் இடம் பெற்று அவற்றின் குறிப்பாக மட்டுமே இடைச்செருகல் விவரம் தெரிவிக்கப்பட்டது. தொல்காப்பியத்தில் தெரிந்தே இடைச்செருகல்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமா என அறிஞர் ப.மருதநாயகம் வருந்தினார். எனவே, இடைச்செருகல்களை நீக்கிய முழு நூலாகத் ’தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என இடைச்செருகல்கள் நீக்கப்பெற்ற செம்பதிப்பை வெளியிட்டார்.

இந்நூலின் முதல் இயலாக ‘ஒப்பில் தொல்காப்பியம்’ என்னும் கட்டுரையை அளித்துள்ளார். தொல்காப்பியத்தின் சிறப்பு, சமற்கிருத நூல்களில் இதன் தாக்கம், இல்லாத கற்பைனச் சொற்களைச் சேர்த்துப் பாணிணி எழுதியுள்ளதை மேனாட்டு அறிஞர்களின் ஆய்வுரை அடிப்படையில் ஆராய்ச்சி உரை எனப் பலவகைகளில் சிறப்பாக இக்கட்டுரை உள்ளது.

அடுத்துத் தொல்காப்பிய நூலை(நூற்பாக்களை) இடைச்செருகல்கள் நீங்கிய செம்பதிப்பாக வெளியிட்டுள்ளார். நிறைவில் ‘தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள்’ எனும் ஆய்வுக் கட்டுரையை அளித்துள்ளார்.

சமற்கிருதச் சார்புடையார் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் இழைத்த கேடுகளைப்பற்றித் தேவநேயப் பாவாணர் விரித்துரைப்பதில் ஒரு பத்தியைத் தொடக்கத்தில் எடுத்துரைக்கிறார்.  அத்தகைய அழிகேட்டுப் பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பிய இடைச்செருகல். 1871இலேயே சாருலசு கோவர் (Charles E.Gover) என்பார், ‘தென்னிந்தியாவின் நாட்டு்ப்புறப்பாடல்கள்’ என்னும் நூலின் முன்னுரையில் தமிழ் இலக்கியங்கள் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டமையை உள்ளக்குமுறலோடு கூறியுள்ளதையும் நமக்குத் தருகிறார். பிராமணர்கள், தமிழ் நூல்களை அழிப்பது, இயலாவிட்டால் சிதைப்பது (The Brahmins corrupted what they could not destroy.)என ஈடுபட்டதைக் கோவர் கூறுகிறார். இவர்போன்ற அறிஞர்கள் கூற்றுகளின் மூலம் தொல்காப்பியத்திலும் இடைச்செருகல்கள் ஏற்பட்டமையைப் புரிய வைக்கிறார்.

தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப்பருவத்திலேயே தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்து எழுதியவர். அவர் தம் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு-திறனாய்வு நூலில் தொல்காப்பியத்தில் சதிகாரர்களால் நேர்ந்த இடைச்செருகல்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அவரது கருத்துகள் இரண்டையும் வெள்ளைவாரணனாரின் குறிப்பையும் நமக்குச் சுட்டுகிறார். இத்துடன் உரையாசிரியர்களின் உரைவிளக்கங்கள் அடிப்படையில் தம் ஆய்வுரைகளையும் இணைத்து இக்கட்டுரையைத் தெளிவாக நமக்குப் பேரா.ப.ம.நா.அளித்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 31/ 69  )



Tuesday, April 27, 2021

மருதநாயகம் பார்வையில் திறனாய்வாளர்களாக உரையாசிரியர்கள்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 28/ 69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

29/ 69

 ‘திறனாய்வாளராக உரையாசிரியர்கள்’(2020):

இலக்கிய இலக்கணப் புலவர்கள் மட்டுமல்லர். இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் முதலானவர்களும் தமிழ்மொழி, இலக்கண, இலக்கிய, பண்பாட்டு வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்கவர்கள் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார்.

            “அன்னார் இலக்கியக் கல்வி மட்டுமின்றிப் பிற பலதுறையறிவும் பெற்று, உலகச்செவ்விலக்கிய அரங்கில் இடம்பெறும் தகுதி உடைய பழந்தமிழ் நூல்களையெல்லாம் ஆழ்ந்து பயின்று, அவற்றை அகவயமுறையில் (intrinsic approach) அணுகி, மாணாக்கர்க்கும் ஆய்வறிஞர்களுக்கும் பயன்படும் முறையில் நுட்பமும் செறிவும் கொண்ட விளக்கம் அளித்த அரிய திறனாய்வாளர் ஆவார். … … … மேலைத்திறனாய்வுத் துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்ப்போமானால், நம்முடைய உரையாசிரியர்கள் செய்துள்ள திறனாய்வுப் பங்களிப்பின் உயர்வை உணரமுடியும். இதனையே இந்நூல் செய்ய முயல்கிறது.”  என பேரா.மருதநாயகமே குறிப்பிடுகிறார்.

இந்நூலில் பின் வரும் தலைப்புகளில் ஆய்வுரைகள் அளித்துள்ளார்.

  1. இடைக்கால உரையாசிரியர்கள், 2.) உரையியல் : மேலைமரபு(Hermeneutics), 3.) திறனாய்வின் வளர்புள்ளிகள், 4.) உரையியல் : தமிழ் மரபு, 5.) அகவய அணுகுமுறை, 6.) இளம்பூரணர் : தொல்காப்பியம், 7.) பெருந்தேவனார் : வீர சோழியம்,8.) அடியார்க்கு நல்லார் : சிலப்பதிகாரம், 9.) பரிமேலழகர் : வள்ளுவர் நெறி, 10.) பரிமேலழகர் : திருக்குறள், 11.) பேராசிரியர் : பொருளதிகாரம், 12.) பேராசிரியர் : சங்கப்பாடல்கள், 13.) நச்சினார்க்கினியர்: தொல்காப்பியம், 14.) நச்சினார்க்கினியர் : குறிஞ்சிப்பாட்டு, 15.) நச்சினார்க்கினியர் : முல்லைப்பாட்டு, 16.) நச்சினார்க்கினியர் :சீவகசிந்தாமணி, 17.) சேனாவரையர் : சொல்லதிகாரம்.

முதல் ஆய்வுரையில் தமிழிலுள்ள உரைகளை ஒரு தனி இலக்கிய வகையாகவே கருதலாம் எனப்பிரான்சுவா குரோ கூறியுள்ளதைத் தெரிவிக்கிறார். தமிழில் இலக்கிய இலக்கண நூல்களுக்குஉரையெழுதும் மரபு தொன்மையானது:  கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலும் நீடித்த வரலாற்றுச் சிறப்புடையது எனக்கூறும் பேரா.ப.ம.நா., இக்காலத்தில் எழுந்த உரைநூல்கள், உரையாசிரியர்கள் பட்டியலை அறிஞர் மு.அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் தந்துள்ளவாறு அளிக்கிறார்.

வில் எலம் தில்தி(Wilhelm Dilthey), ஐடெக்கர்(Heidegger), காடமர்(Gadamer). எமிலியோ பெட்டி (Emilio Betti), செனோபென்(Xenophane), ஃபிரீடெரிக்கு (Friedrich) முதலிய மேலை அறிஞர்களின் உரையியல் குறித்த கருத்துகைள இரண்டாம் ஆய்வுரையில் தெரிவிக்கிறார். இவற்றுள் குறிப்பிடத்தக்கது பகுத்தறிவு ஏற்காத தொன்மக் கதைப் பாத்திரங்களுக்குக் குறியீட்டுப் பொருள் தருவதாகும்.

திறனாய்வின் வளர்புள்ளிகள் என்னும் மூன்றாவது ஆய்வுரையில் காலந்தோறும் திறனாய்வு முறைகள் மாறியும் வளர்ந்தும் வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார். திறனாய்வாளன் மிகுந்த உழைப்பை மேற்கொள்ளக் கூடியவனாகவும் உண்மையைக் கடைப் பிடிப்பவனாகவும் காய்தல் உவத்தல் அகற்றி நீதி வழிப்படும் செந்நெறியாளனாகவும் அறிவு மேம்பட்டவனாகவும் விளக்கம் கூறல், மதிப்பிடல் ஆகிய இரண்டு பணிகைளச் செய்பவனாகவும் இருக்க வேண்டும் என்னும் அறிஞர் இயான்சன்(Johnson)  கருத்தையும் பிற அறிஞர் கருத்துகளையும் அளிக்கிறார். இதுபோல் அறிஞர்கள் தரும் உரையாசிரியர்களுக்கான இலக்கணங்களுக்குத் தமிழ் உரையாசிரியர்கள் முற்றிலும் பொருந்தி வருவது கண்கூடு. சூசன் சோண்தாகு(Susan Sontag) முதலான அறிஞர்கள் சிலர், திறனாய்வு தேவையில்லை எனக் குரல் எழுப்பியுள்ளனர். இவற்றைக் குறிப்பிடும் பேரா.ப.ம.நா., இத்தகைய வாதங்கள் தேவையற்றன என விளக்கியுள்ளார்.

உரையியல் குறித்த தமிழ் மரபை நான்காம் ஆய்வுரை சிறப்பாக விளக்குகிறது. பழந்தமிழ் நூல்களுக்கு உரைவரையும் மரபு தமிழகத்தில் மிகத் தொன்மையானதாகும். உரைக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்குத் தரும் மதிப்பை அளித்து அஃது எவ்வாறெல்லாம் அமையவேண்டும் என்பதைத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே சிந்தித்துள்ளனர் என்பது வியப்புக்குரியதாகும் எனத் தொடக்கத்திலேயே பேரா.ப.ம.நா. குறித்துவிடுகிறார். தொல்காப்பிய மரபியலில் உரை பற்றிய நூற்பாக்களை அவற்றின் பொருள்விளக்கத்துடன் இவ்வாய்வுரை விளக்குகிறது. தொல்காப்பியர், பாடலனார்,நன்னூலார் குறிப்பிடும் உத்திகளையும் வேறுசில உத்திகளையும் தமிழ்உரைகளில் காண்பதையும் எடுத்துரைக்கிறார்.

மேலைத்திறனாய்வுமுறையைப் பின்பற்றித் தமிழ் இலக்கியம் குறித்து மதிப்பிட்டவர்கள்,பழந்தமிழ் இலக்கியங்களிலும் உரைகளிலும் ஆழ்ந்த பயிற்சி பெறாதவர்கள். எனவே, மேலைத் திறனாய்வைப்போன்ற முயற்சி தமிழில் இல்லை என்ற தவறான கருத்திற்கு வந்து அதனையே பரப்பியும் விட்டனர். இதைத் தமிழறிஞர்களும் உண்மையாக இருக்கும் என நம்பி விட்டனர். இதற்கு அடுத்த நிலையில் கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.இரகுநாதன் போன்றவர்களின் தாக்கத்தால் மன்பதை அணுகுமுறை அல்லது மார்க்குசிய அணுகுமுறை மட்டுமே திறனாய்வு என்ற தவறான வாதமும் இடம் பெற்றுவிட்டது என்கிறார்.

தொல்காப்பிய சங்க இலக்கியக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு, சான்றோர் செய்த செய்யுட்களுக்கும் திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற அறநூலகளுக்கும் காப்பியங்களுக்கும் உரை எழுதிய நம் உரையாசிரியர்கள் இன்றைய மேலை அணுகுமுறைகள் குறிப்பிடும் உத்திகள் சிலவற்றை அன்றே பயன்படுத்தி யுள்ளனர் என்னும் விந்தைச் செய்தியை நமக்கு எடுத்துரைக்கிறார்.

சுவெலபில், சுல்மன், துபையான்சுகி போன்ற மேலைத் திறனாய்வாளர்கள், தமிழ்ச்சான்றோர் படைப்புகளை முருகியல் அணுகுமுறையில் பார்க்காமல் புறவய அணுகுமுறையில் பார்ப்பதாகப் பேரா.ப.ம.நா. கூறுகிறார். அவர்கள், சங்க இலக்கியங்களைப் பழம் உரைகள்வழியே அகவய அணுகுமுறையில் நோக்கினால் சங்க இலக்கியங்களின் புதிய படிநிலைகளை அடையாளம் காண்பதோடு உரையாசிரியர்களின் திறனாய்வுத் திறன்களையும் அறிந்து கொள்ள இயலும் என்கிறார்.

   ஆறாவதாக, இளம்பூரணரின் தொல்காப்பிய உரை குறித்து ஆய்வுரை வழங்கியுள்ளார். தொல்காப்பியத்திற்கு முழுமையான முதல் உரை வழங்கியவர் என்ற வகையில் இளம்பூரணரைப் பெரிதும் போற்றுகிறார். சிவஞான முனிவர். இளம்பூரணர் வடநூற் பயிற்சியற்றவர் என்னும் தவறான எண்ணத்தை விதைக்கிறார் என்கிறார். இளம்பூரணர் கையாளும் மேற்கோள்கள் அடிப்படையில் அவர் வடநூற்பயிற்சி மிக்கவர் என்றும் தமது வடநூல் அறிவைத் தேவையின்றிக் காட்டிக் கொள்ளவில்லை என்றும் தமிழ் மரபையே பெரிதும் போற்றினார் என்றும் பேரா.ப.ம.நா. விளக்கியுள்ளார்.

பிற உரையாசிரியர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நடை எளியது, இனியது, சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது, பிறர் உரைகளையும் ஏற்கத்தக்கதாகக் கூறுதல், முன்னையோர் உரைகளை வன்மையாகக் கண்டிக்காமை முதலியவற்றை இளம்பூரணரின் அரும்பண்புகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

“நும் நாடு எது என்றால் தமிழ்நாடு என்றல்” என்பதுபோன்ற எடுத்துக்காட்டுகளாலும், தமிழ் மரபிற்கேற்பவே உரை எழுதியமையாலும் இளம்பூரண அடிகளார் தமிழ் மொழி, இனம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தனிப்பற்றுடையவர்; பண்டைய இலக்கியங்களிலிருந்து தம் கால இலக்கியங்கள் வரை நன்கு ஆழ்ந்து கற்றவர் என நாம் அவர் உரை மூலம் உணரலாம்; இளம்பூரணர் உரையானது பின்வந்த உரையாசிரியர்களுக் கெல்லாம் முன்மாதிரியாக அமையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; மூலநூலை ஐயந்திரிபற விளக்கம் செய்தலே திறனாய்வாளனின் தலையாய கடமை என்ற எலியட்டின்(T.S.Eliot) கூற்றினை நிறைவு செய்வதன் மூலம் தொல்காப்பியத்தின் முதல் திறனாய்வு நூலாகவும் போற்றற்குரியது.

ஏழாவதாக, வீரசோழியம், அதற்கான பெருந்தேவனார் உரைபற்றியது. வீரசோழியப் பாயிரத்தின் மூன்றாவது பாடல் நூல் நோக்கத்தைக் கூறுகிறது. அதில் பின்பற்றப்போவதாகக் கூறுவது தொல்காப்பிய மரபேயன்றி வடமொழிப் பாணினீய மரபன்று; ‘வடநூல் மரபும் புகன்று கொண்டே’ என்று சொல்லும்போது, தமிழிலக்கணத்தை விளக்கும்போது ஆங்காங்கே வடமொழி இலக்கண மரபையும் சுட்டிக்காட்டுவதாகக்குறிப்பிடுகிறாரே தவிர, தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தைத் தழுவியது என்றோ தமிழ் இலக்கணக் கலைச்சொற்களைவிட வடமொழி இலக்கணக் கலைச்சொற்கள் சிறந்தன வென்றோ சொல்லவில்லை. நூலெங்கிலும் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை; என வீரசோழியத்தின் அடிப்படைநோக்கம்தொல்காப்பிய மரபுதான் என்பதைப் பேரா.ப.ம.நா. விளக்குகிறார்.

உரையாசிரியரும் நூற்பாக்கள் கூறும் இலக்கணதிற்குச் சான்றாகப் பழந்தமிழ்ப்பாடல்களைத்தான் தருகிறார். அவற்றையும் உதாரணக் கவிதைகள் என்றோ உதாரணம் என்றோ சொல்லாது வரலாறு என்றே சொல்கிறார்.எனினும் உரையாசிரியர் தமிழ்மொழியில் எவ்வாறு தாதுவைப்படைத்துக்கொள்வது என விளக்கும்’மன்னிய சீர் வடநூலின்’ எனத் தொடங்கும் நூற்பா விளக்கத்தில், ‘தமிழ்ச்சொல்லிற்கெல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின்’ அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்கும் பெறும் என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவ்வாறு மூலநூலில் இல்லை என்பதைப் பேரா.ப.ம.நா. குறிப்பிடுகிறார்.மேலும் சொல் என்பது சொல்லிலக்கணத்தைக் குறிப்பதாக அறிஞர் சி.வை.தாமோதரம்(பிள்ளை) கூறுவதையும் தெரிவிக்கிறார்.

உரையாசிரியர் தாதுப்படலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாறு எழுதியிருக்கலாம் ஆனால், இதைத் தவறாகப் புரிந்து கொண்ட மேலைக்கல்வியாளரான ஆன் மோனியசு(Anne E. Monius), எல்லாத் தமிழ்ச்சொற்களுக்கும் தாய் சமற்கிருதம் (Sanskrit is the mother of all Tamil words) என்னும் தலைப்பிலேயே கட்டுரை அளித்துள்ளார். பாணினீயம் தவறாகப் பெரிதும் கொண்டாடப்பட்ட காலத்தில் இவ்வெண்ணம் எழுந்திருக்கலாம். ஆனால், பேச்சுவழக்கொழிந்த வடமொழிக்கு இலக்கணம் செய்த பாணினி  வேர்ச்சொல்லாய்வு என்ற பெயரில் அறுபது விழுக்காட்டிற்கு மேலான சொற்களுக்கு முற்றும் கற்பனையான, முற்றிலும் முழுப்பொய்யான வேர்களைக் கூறியுள்ளார் என்றும் அவ்வாறான சொற்கள் வடமொழி இலக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை யென்றும் வடமொழி விற்பன்னர்களே கூறியுள்ளதையும் எடுத்துரைக்கிறார். ஆதலின் உரையாசிரியர் தவறான கருத்தையே சொல்லியுள்ளார் எனலாம்.

இருப்பினும் ஆன்மோனியசு ‘வீர சோழியம்’ என்னும் மற்றொரு கட்டுரையில் வீரசோழியம் தொல்காப்பியம் காட்டும் இலக்கிய மரபிற்குக் கடன்பட்டது என்பதைத் தெளிவுபட விளக்குகிறார்.”எல்லா உலகும் மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன் தன் நாவுஇயல் செந்தமிழ்” என்பதன் மூலம் இலக்கணத்திலும் கவிதையியலிலும் வடநூல்மரபைத் தழுவியிருப்பினும் வீரசோழியம் தமிழையே தலைசிறந்த மொழியாகக் கருதுகிறது என அம்மேலை அறிஞர் குறிப்பிடுகிறார்.

வீரசோழியம் வடமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத் தமிழ்மொழி இலக்கணம் கற்பிப்பதற்காக எழுதப்பெற்ற நூல் என்று சிலரால் சொல்லப்படுகிறது. இதனைப் பேரா.ப.ம.நா.பின்வரும் வகையில் மறுக்கிறார்.வடமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட யாரும் எக்காலத்தும் எவ்விடத்தும் இருந்ததில்லை என்பது மேலை மொழியியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ள வரலாற்று உண்மையாகும். ஓங்கு அடிகளார்(Rev. Walter J. Ong) என்பார் தமது ‘உலகின் இடைமுகங்கள்’(Interfaces of the World) என்னும் ஆய்வு நூலில் பழம் கிரேக்கம், இலத்தீன், பழம் சீனம், சமற்கிருதம் போன்ற செம்மொழிகளெல்லாம் எங்கும் என்றும் யாருக்கும் தாய்மொழிகளாக இருந்தவை அல்லவென்றும் பள்ளிகளில் ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்ட மொழிகளாகவே இருந்தவை யென்றும் அவை என்றும் பேச்சுவழக்கில் இருந்தவை அல்லவென்றும் சில துறைகளில் நூல்கள் எழுதப்பயன்பட்டவை என்றும் கூறியுள்ளதை எடுத்தாள்கிறார்.

இவ்வாய்வு மூலம், பொதுவாக வீரசோழியம் குறித்துத் தமிழன்பர்களிடையே இருந்த பிம்பத்தை உடைக்கும் வகையில் இதன் அடிப்படை முகத்தை நமக்குப் பேரா.ப.ம.நா. படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 30/ 69  )



Monday, April 26, 2021

உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள் – ப. மருதநாயகம்

 அகரமுதல,


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 27/ 69 இன் தொடர்ச்சி)





தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

28/ 69

 

உலக மொழிகளில் தூய்மை இயக்கங்கள்(2018)

தமிழ்த்தூய்மையைப் பேண வேண்டும் என்று தனித்தமிழ் இயக்கத்தினர் வலியுறுத்துகையில் அதற்கு எதிராகக் கூறித் தமிழைச் சிதைக்க விரும்புவோர் நம் நாட்டில் உள்ளனர். மொழிக்கலப்பே மொழி வளர்ச்சி எனக் கூறுவோர் பிற நாட்டு மொழி வரலாற்றை அறியாதவர்கள். மொழிக்கலப்பினால் தத்தம் தாய்மொழி கேடுறுவதைத் தடுப்பதற்காக மொழித்தூய்மை இயக்கங்களைப் பிற மொழியினரும் பேணுகின்றனர். ஆங்கிலம், இசுகாட்டு, பிரெஞ்சு முதலான பல மொழியினரும் மொழித்தூய்மை இயக்கங்களை நடத்திய நடத்தும் வரலாற்றை இதில் கூறியுள்ளார்.

 “மொழியிலும் நடையிலும் மரபைப் பேண வேண்டும் என்றும் பிற மொழிகளின் அத்துமீறிய நுழைவைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் இயக்கங்கள் பல பழம் மொழிகளிலும் எட்டாம் நூற்றாண்டு, பத்தாம் நூற்றாண்டு, பதினான்காம் நூற்றாண்டு போன்று பிற்காலங்களில் தோன்றிய மொழிகளிலும் அவ்வப்போது அறிஞர்களால் தோற்றுவிக்கப் பெற்றுப் போராட்டங்கள் நிகழ்த்தியுள்ளன. இவ்வாறான இயக்கங்களின் வரலாற்றைக் கூர்ந்து நோக்கும் போது சில வியப்புக்குரிய முடிவுகளுக்கு நாம் வரவேண்டியுள்ளது. தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் குற்றம் சாட்டுவதுபோல், தனித்தமிழ் இயக்கங்களின் கோட்பாடுகளும் செயல்களும் பொருளற்றவையென்றோ, தேவையற்றவை யென்றோ, அளவுகடந்தவை யென்றோ எண்ணுதல் பெருந்தவறு மட்டுமன்று, அறியாமையும் ஆகும்” – இவ்வாறு தொடக்கத்திலேயே பிற மொழித் தூய்மை இயக்கங்கள்போல் தமிழ்த்தூய்மை இயக்கமும் வேண்டற்பாலது எனவலியுறுத்துகிறார் பேரா.ப.ம.நா.

ஆங்கிலச் சொல்வளக் குறைபாடு, இலக்கணக் குறைபாடு குறித்து ஆங்கிலேய அறிஞர்கள் கூறுவதையும் எடுத்துரைக்கிறார். சேக்குசுபியர் தம் நாடகம் ஒன்றில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தமையால் ஒருவன் வேலைகிடைக்காமல் திரிவதான உரையாடல் வருவதையும் குறிப்பிடுகிறார்.

நமது மொழி துருப்பிடித்துப் போனது;

செல்லரித்தது; பூச்சியால் நோயுற்றது;

அறிவுத்திறன் அற்று மழுங்கிப் போனது;

அழகிய பாடலொன்று எழுத முயன்றால்

எண்ணங்களை வெளியிடத் தக்க சொற்களை

எங்கே தேடுவது? எனத் தெரியவில்லை

என ஆங்கிலேயரான இயான் கெலட்டன் (John Skelton) எழுதிய பாடலைக் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு ஒரு காலத்தில் ஆங்கிலம் குறைபாடுள்ள மொழியாக இருந்தாலும் இப்பொழுது உலகத் தலைமை பெற்றுள்ளது.

ஆங்கிலத்தில் கலந்து விட்ட இலத்தீன் சொற்களைக் களையமேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிடுகிறார்.1573 இல் இராலஃப் இலேவர்(Ralph Lever), காரணத்தின் கலை சரியாகச்சொல்வதாயின் கரணியக்கலை (The Art of Reason, Rightly Termed Witcraft) என்னும் நூலில் இலத்தீன் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை உருவாக்கினார். மிக உயர்ந்த ஆங்கில இலகக்கியங்களைத் தந்த மிலட்டன் இலத்தீன் சொற்களைக் கலந்து எழுதியுள்ளமையால் அவற்றுக்குப் பல எதிர்ப்புகள் வந்தன.  மிலட்டனின் மொழி உயிரற்றுக் கிடக்கின்றது என்றே பாவலர் கீட்சு குற்றம் சாட்டினார். எசுரா பவுண்டு(Ezra Pound) ஆங்கில மொழியை மிலட்டனின் இரும்புப் பிடியில் இருந்து மீட்க வேண்டுமென்று அறைகூவினார்.

மேலை ஐரோ்ப்பியமொழி அறிஞர்கள் தத்தம் மொழிகளில் உள்ள குறைகளைக் குறிப்பிட்டுள்ளனர். பேரா.ப.ம.நா.,அவ்விலக்கணக் குழப்பங்களுக்குக் காரணம் தொல்காப்பியம் முதலான மரபிலக்கண நூல் அம்மொழிகளில இல்லாமையே என்கிறார்.

பெருனாடு சா(Bernard Shaw)ஆங்கில மொழிச் சீர்திருத்தத்திற்கு மேற்கொண்ட முயற்சிகள், ஐரிசு மொழியினரின் மொழிக்காப்புப் போராட்டம், இசுகாட்டு மொழித் தூய்மைக்கான இயக்கம், பிரித்தானிய ஆங்கிலம் அமெரிக்க ஆங்கிலச் செல்வாக்கிலிருந்து விடுபடும் போராட்டம்,  அமெரிக்க ஆங்கிலம் பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து மீளும் போராட்டம், பிரெஞ்சு மொழித்தூய்மைப் போராட்டம், கெலட்டிமொழிக் காப்புப் போராட்டம், தூய வேல்சு மொழிப் போராட்டம், தனிச் செருமானியமொழிப் போராட்டம், இசுபானியமொழித் தூய்மை இயக்கம், ஆப்பிரிக்கான்சு மொழிப் போராட்டம் எனப் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த, நிகழும் மொழித்தூய்மைப்போராட்டங்களைக் குறிப்பிடுகிறார். நாமும் தனித்தமிழ்க் காப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதே சிறப்பானது என உணரலாம். 

தமிழ்நிலம் பதிப்பகம் 39 பக்கத் தனி நூலாக வெளியிட்டு்ளள இதன் மூலம் தமிழ்த்தூய்மை தேவை என்பதை உணர வைத்தப் பேராசிரியர் ப.ம.நா. மற்றோர் உண்மையையும் நமக்கு உணர்த்துகிறார். அது வருமாறு:-

“தமிழ் தோன்றிப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றித் தமிழிலுள்ள சொற்களில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் சொற்களைப் பெறாத இசுாட்சுமொழிக்கு எழுந்துள்ள அகரமுதலிகள் எண்ணிக்கை எண்ணற்றவை… .. .. பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே இலக்கண நூல்களையும் நிகண்டுகளையும் பலவாகப் பெற்றிருந்த தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் இப்பொழுது தமிழில் உட்பகைவர்கள் கொண்டு வந்துள்ள இரண்டு மூன்று அகரமுதலிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. “ என வருத்தப்பட்டு உரைப்பதன் உண்மையை உணர்ந்து நாம் தமிழ் அகராதிகளைப் பெருக்குவோம்!

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 29/ 69  )