Saturday, May 27, 2023

என் சரித்திரம் 38: என் கல்யாணம்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 37: சிதம்பர உடையார் – தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 22
என் கல்யாணம்

கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் மாளாபுரத்தில் நிகழ்ந்தன. பந்து சனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடினர். இரெயில் வண்டியின் வேகம், வண்டியின் வேகம் முதலியவற்றைக் கண்டறியாத அந்நாட்களில் கல்யாண ஏற்பாடு விரைவில் நடைபெறாது; மெல்ல மெல்ல நடைபெறும். கல்யாணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வேண்டிய காரியங்கள் ஆரம்பமாகிவிடும். ஒரு மாதத்துக்கு மேல் குடும்பம் கல்யாண முயற்சியில் ஈடுபட்டிருக்கும்.

இன்றும் அன்றும்

இக்காலத்திலோ எல்லாம் வேகம், முதல்நாள் கல்யாணம் நிச்சயமாவதும் மறுநாள் கல்யாணம் நடைபெறுவதும் மூன்றாம் நாள் கல்யாணம் நடைபெற்ற அடையாளமே மறைவதும் இந்த நாட்காட்சிகள். முகூர்த்த பத்திரிகையில் சம்பிரதாயத்திற்குக்கூட நான்கு நாள் முன்னதாக வரவேண்டுமென்று எழுதுவதில்லை. கல்யாணமே ஒரு நாளில் நிறைவேறும்போது விருந்தினர்கள் நான்கு நாள் வந்து தங்கி என்ன செய்வது?

அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம் நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக இருக்கமாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வலிந்து செய்வார்கள். பந்தற்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது முதல் கல்யாணமான பிறகு பந்தல் பிரிக்கும் வரையில் நடக்கும் காரியங்களில் ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின் அகலத்திற்குத் தெருவையடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல், பரிமாறுதல், ஒருவரையொருவர் அலங்கரித்தல் முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத் தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும், “எனக்கு உபசாரம் செய்யவில்லை” என்று குறைகூற இடமிராது. ஆயினும் சம்பந்திகளுக்கிடையே மனத்தாபம் நேர்வது எங்கும் இருந்தது. கல்யாண மென்றால் சம்பந்திச் சண்டையும் ஒரு நிகழ்ச்சியாக ஏற்பட்டுவிட்டது.

கிராமத்தாருடைய ஒற்றுமையும் உபகார சிந்தையும் கல்யாணத்தைப் போன்ற விசேட காலங்களில் நன்றாக வெளிப்படும். பணச்செலவு இந்தக் காலத்திற்போல அவ்வளவு அதிகம் இராது. இக்காலத்திற் செலவுகளுக்குப் புதிய புதிய துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவுவகைகளில் இப்போது நடைபெறும் செலவைக்கொண்டு அக்காலத்திலும் கல்யாணங்கள் பலவற்றை நடத்திவிடலாம். கிராமங்களில் விளையும் காய்கறிகளும் பழவகைகளும் விருந்துக்கு அக்காலத்தில் உபயோகப்பட்டன. இப்போதோ, இங்கிலீசு பெயரால் வழங்கும் காய்கறிகளும் இந்துத்தானிப் பெயரால் வழங்கும் பட்சிய வகைகளும் மேல்நாட்டிலிருந்து தகரப்பெட்டிகளில் அடைத்துவரும் பழங்களும் கல்யாண விருந்துக்கு இன்றியமையாத பொருள்களாகி விட்டன. மற்ற விசயங்களில் பல தேச ஒற்றுமை தெரியாவிட்டாலும் பணம் செலவிட்டு வாங்கும் பொருள்களில் பல நாடுகளும் சம்பந்தப்படுகின்றன.

ஊர்வலம் நடத்துவதில் எத்தனை செலவு! மோட்டார் வாகனத்தையே புட்பவாகனமாக மாற்றிவிடுகின்றனர்! சில மணிநேரம் புறத்தோற்றத்தை மாத்திரம் தரும் அந்த வாகனத்திற்கு எவ்வளவு அலங்காரங்கள்! எவ்வளவு பேருடைய உழைப்பு! கோவில்களில் உத்சவ மூர்த்திகளுக்குச் செய்யும் புட்பாலங்காரம் கல்யாணத்திற் செய்யப்படுகின்றது! அதற்கு மேலும் செய்கிறார்கள்.

இவ்வளவு செலவு செய்து நடைபெறும் கல்யாணத்தில் விருந்தினர்கள் வருவதும் போவதும் வெறும் சம்பிரதாயமாகிவிட்டன. கல்யாணம் எல்லாம் நிறைவேறிய பிறகு கணக்குப் பார்க்கும்போது தான் வயிறு பகீரென்கிறது. சந்தோசத்தை மேலும் மேலும் உண்டாக்க வேண்டிய கல்யாணமானது சில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் பணச்செலவு காரணமாகக் கடனையும் அதனால் துன்பங்களையும் விளைவிக்கின்றது. கல்யாணத்தாற் கட்டத்தை விலைக்கு வாங்கிக்கொண்ட குடும்பங்கள் இத்தமிழ் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.

அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும் மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தட்சணை, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதட்சணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.

போசனக் கிரமம்


காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம்பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம், வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போசனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகற்போசனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்யவேண்டிய பூசை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லாரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச்செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவையே அக்காலத்துப் பட்சியங்கள்.

கல்யாணம் நடைபெறும் நான்கு நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் போசனத்திற்கு ஊரிலுள்ள எல்லாரையும் அழைப்பார்கள். யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்.

நலங்கு முதலியன

காலை, மாலை நடக்கும் ஊஞ்சலிலும் பிற்பகலில் நடைபெறும் நலங்கு முதலிய விளையாட்டுகளிலும் பெண்மணிகள் குதூகலத்துடன் ஈடுபடுவார்கள். முதிர்ந்த பிராயமுடையவர்கள் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்துக் களிப்பார்கள். பெண் கட்சியிற் பாடுபவர்களும் பிள்ளையின் கட்சியிற் பாடுபவர்களும் வழக்கமாகப் பாடிவரும் கிராமப் பாட்டுக்களைப் பாடுவார்கள். பெரும்பான்மையான பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பன்னாங்குப் பல்லக்கில் (வளைவுப் பல்லக்கில்) ஊர்வலம் நடைபெறும். கடைசிநாள் ஊர்வலத்தில் மத்தாப்பும் சீறுவாணமும் விடுவார்கள். சிறுபிள்ளைகளே அவற்றை விடுவார்கள். ஊர்வலத்தின்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தாம்பூலம் அளிப்பார்கள். ஒரு வீட்டிலுள்ள குடித்தனத்திற்கு ஏற்றபடி கொட்டைப் பாக்கைக் கணக்குப் பண்ணிப் போடுவார்கள். அதற்குத் திண்ணைப் பாக்கு என்று பெயர். அதனை வழங்காவிட்டால் வீட்டுக்காரருக்குக் கோபம் வந்துவிடும். முகூர்த்த காலத்தில் பழமும் வெற்றிலைபாக்கும் தருவார்கள். மரியாதைக்கு ஒரு மஞ்சள் பூசிய தேங்காயைத் தாம்பாளத்தில் வைத்திருப்பார்கள். தாம்பூலத்தைப் பஞ்சாதி சொல்லிக் கொடுப்பார்கள். கொடுக்கும்போது மஞ்சள் தேங்காயைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள். தேங்காயை எடுத்துக்கொள்ளும் வழக்கமில்லை. உபநயனத்தில்தான் ஒவ்வொருவருக்கும் தேங்காய் வழங்குவது பெரும்பான்மையான வழக்கம். சிறுபையன்கள் கொட்டைப்பாக்குகளை ஒருவரும் அறியாமல் திருடிக்கொண்டுபோய் மாம்பழக்காரியிடம் கொடுத்து மாம்பழம் வாங்கித் தின்பார்கள். இந்தக் கொட்டைப்பாக்கு வியாபாரத்தை எதிர்பார்த்தே சில மாம்பழக்கூடைக்காரிகள் கல்யாண வீட்டுக்கு அருகில் வந்து காத்திருப்பார்கள்.
நான்காம் நாள் இரவில் நடைபெறும் ஆசீர்வாதத்திற்குப் பந்துக்களிலும் ஊரினரிலும் அனைவரும் வரவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால் பெரிய மனத்தாபங்கள் நேரும். அதனால் சிலர் வரவை எதிர்பார்த்து ஆசீர்வாதத்தைத் தாமதப்படுத்துவார்கள்.

விநோத நிகழ்ச்சிதான்

எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது. கல்யாணப் பெண்ணின் பிராயம் எட்டு. கல்யாணப் பெண்ணைக் கல்யாணத்திற்கு முன்பு பிள்ளை பார்ப்பதென்ற வழக்கம் அக்காலத்தில் பெரும்பாலும் இல்லை. எல்லாம் பெரியவர்களே பார்த்துத் தீர்மானம் செய்வார்கள். நான் கல்யாணப்பெண்ணை அதற்குமுன் சாதாரணமாகப் பார்த்திருந்தேனேயன்றிப் பழகியதில்லை; பேசியதுமில்லை. எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஒரு விநோத நிகழ்ச்சியாகத்தான் தோன்றியது. எங்களுக்கு உண்டான சந்தோசத்தைவிட அதிகமான சந்தோசம் எங்களை ஆட்டிவைத்து வேடிக்கை பார்த்த விருந்தினர்களுக்கு உண்டாயிற்று.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Monday, May 22, 2023

சான்றோர் பெருந்தகை மு.வ. – 3/3 : – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 




(சான்றோர் பெருந்தகை மு.வ. – 2/3 – தொடர்ச்சி)

10. சான்றோர் பெருந்தகை மு.. 3/3



“பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவற்றுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை. பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வன்பும் துன்பும் செய்கின்றது. பேச்சு வள்ர்கின்றது. பிணக்கும் முற்று கின்றது; அன்பான வாழ்க்கையிலும் திடீரென்று அன்பு முறிகின்றது.”

“மக்களுக்குள் சாதி இரண்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சாதி. எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதி, இந்தச் சாதிகளுக்குள் கலப்பு மணம் கூடாது.”

வேப்பமரம் அத்தி ஆவதில்லை. மூங்கில் கரும்பு ஆவதில்லை. பனை தென்னை ஆவதில்லை; புலி பசு ஆவதில்லை. நாய் நரி ஆவதும் இல்லை. காரணம், அவற்றின் பண்பை மாற்றி அமைக்கும் மன வளர்ச்சி இல்லை; மனித மனம் வேம்பாக இருந்து கரும்பாக மாறலாம்; புலியாக இருந்து பசுவாக மாறலாம்; மனிதர்க்கு மன வளர்ச்சி உண்டு.”

“எண்ணம் திருந்தினால் எல்லாம் திருந்தும். அது தான் பெரிய அடிப்படை.”

“அறம் என்பது ஆற்றல் மிக்கது. அதை எதிர்த்து வாழ முடியாது.”

“உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம், மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம். உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்.!”

“குறை இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை. குறைகளுக்கு இடையே குணத்தைக் கண்டு வாழ வேண்டும். முள்ளுக்கு இடையே முரட்டு இலைகளுக்கு இடையே மெல்லிய மலரைக் கண்டு தேனைத் தேடுகிறது தேனி. அதுதான் வாழத் தெரிந்தவர்களின் வழி.”

“விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்.”

“இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்கவல்லவரைத் தேடு உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இப்படித் தான் தேட வேண்டும்.” (அல்லி)

“நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும் இருக்கவேண்டும் அல்லவா? நன்மை வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு.” (தம்பிக்கு)

“அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கி நட. உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே.” (தங்கைக்கு)

“‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் நாலடியாரின் பொன்மொழி இல்வாழ்க்கையின் மந்திரமாக விளங்க வேண்டும்.” (தங்கைக்கு)

புதினம் சிலவற்றின் முடிவு வரிகள்

அவர் எழுதிய புதினங்களின் முடிவு வரிகளில் சில படிப் போரைச் சிந்திக்க வைக்கும் திறத்தன என்பதனைக் கீழ்க் காணும் பகுதிகள் கொண்டு அறியலாம்.

“அந்தக் குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒரு முறை அழகாக ஒளிவீசியது.” (கள்ளோ? காவியமோ?)

“அந்தக் காட்டு வாகை மரத்தின் நிழலில் ஒவ்வொரு கரித்துண்டமாகப் பொறுக்கி ஆர்வத்துடன் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த அவளுடைய அன்பான கையை என் மனம் நினைத்தது.” (கரித்துண்டு)

“சாவித்திரியின் கண்கள் மலர்விழியின் கண்களை நோக்கியபடியே கண்ணிர் உதிர்த்துக் கொண்டிருந்தன.” (மலர்விழி)

“பரமேசுவரி என் தோளை இறுகப் பற்றிக்கொண்டு தழுதழுத்த குரலில் அல்லி! என்றாள்.” (அல்லி)

முனைவர் அவர்கள் மாணவர் மனப்புண்களுக்கு மருந்திட்டுக் கட்டும் மருத்துவராக விளங்கினார், படிக்க வரும் மாணவர்களுக்குத் தந்தையாய், வழிகாட்டியாய். உடல்நல மருத்துவராய். உளநல வித்தகராய் விளங்கினார். உடனாசிரியப் பெருமக்களுக்கு உற்ற துணையாய் விளங்கினார். சமுதாயத்திற்குச் சிறந்த சீர்திருத்த வழிகாட்டியாகத் துலங்கினார். மொழிக்கு அரணாகவும், இலக்கியத்திற்கு விளக்கமாகவும், நாட்டிற்கு நல்ல தொண்டராகவும் இவர்கள் நாளும் விளங்கி வந்தார்கள்.

பல்கலைக்கழகப் பணி

1961ஆம் ஆண்டு பச்சையப்பனின் தமிழ்ப் பணியினின்றும் விலகிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைமையினை ஏற்றார். ஆயினும் பச்சையப்பனின் நினைவு என்றும் இவர்கள் மனத்தில் பசுமையாக இருந்தது. இவர்களுடைய வளர்ச்சிக்குப் பச்சையப்பனும், பச்சையப்பன் வளர்ச்சிக்கு இவர்களும் பெரிதும் உதவியுள்ளனர். முனைவர் அவர்களின் சுருத்துகளை ஏற்றுப் பின்பற்றி நடக்கும் மாணவர் குடும்பம் ஒன்று உண்டு. அக்குடும்பத்திற்கு அறத்திலே பெருநம்பிக்கை; மனச்சான்றிலே மதிப்பு; கொள்கையிலே உறுதி; ஆரவாரத்திற்கு எதிரான அமைதியிலே பற்று,

தமிழ்ப் பெரியார் திரு. வி.க. அவர்கள் வழங்கிய தகுதிச் சான்று

“வரதராசனார் பேச்சிலும் எழுத்திலும் பருனாட்சாவின் கருத்துகள் ஆங்காங்கே பொருந்தும். அவர் பருனாட்சா நூல்களைப் படித்துப் படித்து ஒரு தமிழ் ‘பருனாட்சா’ ஆனார் என்று கூறுதல் மிகையாகாது. பருனாட்சாவைப் பார்க்கிலும் வரதராசனார் ஒரு துறையில் சிறந்து விளங்குகிறார் என்பது எனது ஊகம். பருனாட்சா பல பல நூல்களை எழுதி எழுதி முதுமை எய்தியவர், இம் முதுமையில் அவருக்கு வழங்கும் இக்கால அரக்கப் போர்க் காட்சி “வாழ்க்கைக்கு கிறித்து வேண்டும், பைபிள் வேண்டும்” என்னும் எண்ணத்தை அவரிடம் அரும்பச் செய்து வருகிறது. வரதராசனார்க்கோ அக்கருத்து இளமையிலேயே முகிழ்த்தது. “வாழ்க்கைக்குச் சமயம் தேவை, கடவுள் தேவை” என்று இளமை வரதராசனார் பேசினார், எழுதினார். கீழ்நாட்டு இளமை மேல்நாட்டு முதுமையை விஞ்சி நிற்கிறது.”

துணைவேந்தர் பணியும் இறுதியும்

பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பத்து ஆண்டுகள் பயனுறப் பணிகள் ஆற்றிய பெருந்தகை மு.வ. அவர்கள் 1971ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் முதல் நாளிலிருந்து மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியினை ஏற்றுச் சிறக்கச் செய்தார், கட்டடங்கள் பல அவர் காலத்தில் கட்டப் பெற்றன. அஞ்சல்வழிக் கல்வித்துறை பிறர் வியக்கும் அளவிற்கு வளர்ந்தது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவராலும் ஒருங்கே பெருமதிப்பைப் பெற்றார். ஓயாத நிருவாகப் பணிகளும் சிந்தனைப் போக்குகளும் எழுத்துத் தொழிலும் சான்றோர் மு.வ. அவர்கள் உடல் நலனுக்கு ஊறு செய்து வந்தன. 25-1-1974 அன்று மதுரையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாநாளன்று மு.வ. அவர்களுக்கு இருதய நோய் கண்டது. மதுரையிலிருந்து சென்னை வந்த அவர்கள் 10-10-1974 அன்று 5-30 மணிக்கு அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார்கள். தமிழர் நெஞ்சிருக்கும் வரை தமிழ்கூறு நல்லுலகிற்குத் தமிழ் நெஞ்சம் தந்த சான்றோர் பெருந்தகை மு.வ. அவர்களை நினைவிற் கொள்வர்.



சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

——————

சிபா. ( நூல் ஆசிரியர்)


தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1935) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண்டாச்சிபுரமும் திருவண்ணாமலையும் இந்த இலக்கியப் பொழில், கற்ற இடங்கள். பைந்தமிழ் வளர்க்கும் பச்சையப்பன் கல்லூரிப்பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் தமிழில் பி.ஏ. ஆனர்சு. அங்கு! முதல் வகுப்பில் தேறிய முதல்வர். ‘குறுந்தொகை’பற்றிய ஆய்வுரைக்கு 1968இல் எம்.லிட்., பட்டமும், ‘சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்கள்’ பற்றிய ஆய்வுரைக்கு 1970ல் முனைவர்(பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள். நல்ல நடை கொண்ட இந்த நாகரிகர் பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு காட்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத்தலைவராகச் சிறந்திருக்கிறார். முன்னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், இந்த முற்றிய புலமையாளர்!

பத்து நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், ‘தமிழ் இலக்கிய வரலாறு’ ஒன்றே சான்று அண்மையில் வந்துள்ள அணிகலன், ‘பெருந்தகை மு.வ. ‘ஆங்கிலத்தில் ஒரு நூல்’ சங்ககால மகளிர் நிலை’ பற்றிய ஆராய்ச்சி. ‘இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உரூபா முதல் பரிசைப் பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்த்ப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத் துள்ள புகழ் மகுடங்கள்: புலவரேறு (குன்றக்குடி ஆதீனம்) செஞ்சொற் புலவர் (தமிழ் நாட்டு கல்வழி நிலையம்), சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்).

பெருந்தகை மு. வ. வின் செல்லப்பிள்ளை சி. பா. அவர் புகழ்பாடும் அந்தமிழ்த் தும்பி அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி ! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி ! எழுத்தில் கல்ல இலக்கியப் பிறவி !

சி. பா.
இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடு படு! —மா. செ
.

Saturday, May 20, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 37 : சிதம்பர உடையார்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 36: களத்தூரின் அமைப்பு – தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 21
சிதம்பர உடையார்

என் தந்தையார் களத்தூரில் நந்தன் சரித்திரம் நடத்தியபொழுது வந்து கேட்டவர்களுள் சிதம்பர உடையா ரென்பவர் ஒருவர். அவர் அவ்வூருக்கு வடபாலுள்ள மறவனத்த மென்னும் ஊரிலிருந்த பெரிய தனவான். சிவபக்தி மிக்கவர். எப்போதும் விபூதி, உருத்திராட்ச தாரணத்தோடே இருப்பார். ஏழைகள்பால் அன்பும் இரக்கமுமுடையவர். பிறருடைய கண்ணைக் கவரும் சிவந்த நிறத்தினர்.

அவருக்கு நான்கு குமாரர்களும் நான்கு குமாரிகளும் இருந்தனர். நான்கு பிள்ளைகளுக்காக நான்கு வீடுகள் ஒரு சிறகிலும் நான்கு மாப்பிள்ளைகளுக்காக நான்கு வீடுகளை மற்றொரு சிறகிலும் கட்டிக்கொடுத்து அங்கே அவர்களைத் தனித்தனியே இருக்கச் செய்தனர். வரும்படிகளைப் பகிர்ந்துகொடுத்து இரண்டு சிறகுக்கும் கோடியில் தாம் தனியே ஒரு வீடு கட்டிக்கொண்டு தம் மனைவியுடனிருந்து கடவுள் வழிபாடு செய்துகொண்டும் சுகமாக வாழ்ந்து வந்தார். நான் பார்த்தபொழுது அவருக்கு எழுபது பிராயமிருக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை சிறிதும் குலையாமல் இருந்தது. பணக்காரர்கள் அவருடைய நிலையையும் ஒழுங்கையுங் கண்டு பாராட்டினார்கள். எவ்வளவு பிராயமானாலும் குடும்ப நிருவாகம் அனைத்தையும் தம் கையில் வைத்துக்கொண்டு வயசுவந்த பிள்ளைகளை அடக்கியாளும் தந்தையார் பலர் தாமும் சுகம்பெறாமல் தம் குடும்பத்தினருக்கும் சந்தோசத்தை உண்டாக்காமல் வாழ்வது உலக இயல்பு. குடும்பப் பொறுப்பு இத்தகையதென்பது அறியாத அப்பிள்ளைகள் தம் தந்தையார் காலத்திற்குப் பிறகு அடிபட்ட பழக்கமில்லாமையால் குடும்பத்தை நன்றாக நடத்திவரத் தெரியாமல் துன்புறுகிறார்கள். இத்தகைய கட்டங்களை நினைத்தே சிதம்பர உடையார் தம் பிள்ளைகளும் மாப்பிள்ளைகளும் குடும்ப நிருவாகத்தைத் தனித்தனியே நடத்திவரும்படி ஏற்பாடு செய்தார். அதனால் அவர்களும் உடையாரும் கவலையின்று வாழ்ந்து வந்தனர். சிவபக்திச் செல்வராதலின் நந்தனார் சரித்திரம் கேட்பதில் அவருக்கு அதிக ஆவல் இருந்தது. அச்சரித்திரம் தொடங்கிய நாள் முதல் தினந்தோறும் தவறாமல் வந்து கேட்டுச் செல்வார். அவருடைய நெஞ்சம் நந்தனார் சரித்திரத்தைக் கேட்டு உருகியது. முதல் நாளில் பிரசங்கம் முடிந்தவுடன் அவர் என் தந்தையாரிடம் வந்து பணிந்தார். “கிருபை வைக்கவேண்டும்; அடியேன் ஒவ்வொரு நாளும் வந்து கேட்டுப் போவேன்” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார். சிறந்த செல்வரும் செல்வாக்குடையவருமாகிய அவர் அவ்வளவு பணிவோடு இருந்தது எங்களுக்கும் பிறருக்கும் பெரிய ஆச்சரியத்தை விளைவித்தது. அவருக்கு ஒரு குதிரை உண்டு. எங்கும் அதன் மேல் ஏறி வருவார். ஒவ்வொரு நாளும் அவர் வந்து என் தந்தையாரை வணங்கிவிட்டுச் செல்வார். சரித்திரம் நடைபெறும்பொழுது அவர் கண்ணீர்வர மெய்சிலிர்க்கப் பரவசமாகிக் கேட்பார். சிதம்பரத்தின் பெருமையையும் அந்த தலத்திற்குச் செல்லவேண்டுமென்று ஏங்கி நின்ற நந்தனாரது பக்தித்திறத்தையும் கேட்கக்கேட்க அவரே நந்தனாராகத் தொடங்கினார்.


தில்லை தில்லை யென்றாற் பிறவி
இல்லை இல்லை என்று மறைமொழியும்”


என்ற கீர்த்தனத்தை அவர் சொல்லிக்கொண்டே இருப்பார்; கண்ணீர்விடுவார். யாரேனும் அவருடைய பெயரைக் கேட்டால் “என் பெயர் தில்லை” என்று சொல்வார். சிதம்பரமும் தில்லையும் ஒன்றாயினும் ‘தில்லை’ என்ற சொல்லைச் சொல்லும்போது அவர் ஒரு தனி இன்பத்தை அனுபவித்தார். நந்தனார் எப்பொழுதும் தில்லை தலத்தைப்பற்றிய ஞாபகத்திலே எவ்வாறு தம்மையே மறந்தாரோ அந்த நிலைமைக்குச் சிதம்பரவுடையாரும் வந்துகொண்டிருந்தார். அதற்கு முன் அவர் பல சிவத்தலங்களைத் தரிசித்தவரேயானாலும் நந்தனார் சரித்திரத்தைக் கேட்ட பின்பு அவருக்குச் சிதம்பரத்தில் மிகுதியான பற்று உண்டாயிற்று. சரித்திரம் நிறைவேறியவுடன் சிதம்பரம் சென்று அங்கே அறுபது உரூபாயில் சோமவாரக் கட்டளை நடத்தும்படி ஒரு தீட்சிதர் முகமாக ஏற்பாடு செய்து அந்த வட்டி வருவதற்குரிய முதலையும் கொடுத்துவிட்டு வந்தார்.

சிதம்பர உடையாருக்கு என் தந்தையாரிடம் பக்தி அதிகமாயிற்று. அடிக்கடி வந்து வணங்கி ஏதாவது சொல்லச் சொல்லிக் கேட்டுவிட்டுச் செல்வார். நந்தனார் சரித்திரம் நிறைவேறியபோது உடையார் நூறு உரூபாய் அளித்தார். அன்றியும் அயலூரிலிருந்த தம்முடைய பந்துக்களிடத்தும் நண்பர்களிடத்தும் அழைத்துச்சென்று உசிதமான வரும்படிகளைச் செய்வித்தனர். இயல்பாகவே அப்பக்கங்களிலுள்ளவர்கள் எந்தையாரிடம் அன்பு பூண்டு ஆதரித்தனர். சிதம்பர உடையாருடைய பழக்கம் அந்த ஆதரவைப் பின்னும் பெருகச் செய்தது.

சகந்நாத உடையார்


அக்காலத்தில் திரு ஆலந்துறை என்னும் தலத்தில் கோயில் தருமகர்த்தாவாக இருந்த சகந்நாத உடையார் என்பவர் எந்தையாரை அக்கோயிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்து என் விவாகச் செலவுக்கென்று ஐம்பது உரூபாய் அளித்தனர்.

களத்தூரில் இருந்தபோது என் தாயாருக்கு முடக்கு சுரம் வந்து சிலநாள் கட்டப்பட்டார். அப்பால் தாளம்மையால் சிலநாள் துன்புற்றார். அக்காலங்களில் நானே சமையல் செய்வேன்; என் தாயாருக்கு வேண்டிய பணிவிடைகளையும் செய்து வருவேன்.

கார்குடி சென்று வந்தது


களத்தூரிலிருந்து கார்குடியிலுள்ள அன்பர்களைப் பார்க்கும்பொருட்டு மீண்டும் அவ்வூருக்குச் சென்றோம். அங்கே சிலநாள் தங்கினோம். அவ்வூரினர் ஐம்பது உரூபாய் என் விவாகச் செலவுக்காக அளித்தார்கள். பின்பு களத்தூருக்கே வந்து சேர்ந்தோம்.

விவாக முயற்சி


என் தந்தையார் இடையிடையே பெண் பார்ப்பதற்காகப் பந்துக்களுள்ள வெளியூர்களுக்குச் சென்று விசாரித்துக்கொண்டு வருவார். நானும் என் தாயாரும் களத்தூரில் இருந்தோம். நான் வழக்கம்போலவே தமிழ்நூல்களைப் படித்துக்கொண்டு வந்தேன். ‘நமக்கு ஏற்ற ஆசிரியர் ஒருவரும் கிடைக்கவில்லையே!’ என்ற எண்ணம் எனக்குண்டாகி நாளாக நாளாக அதிகரித்தது. எனக்கு விவாகம் செய்விக்கும் முயற்சியில் என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் ஈடுபட்டிருந்தனரென்பதை அறிந்தபோது எனக்குச் சந்தோசமும் உண்டாகவில்லை; வருத்தமும் உண்டாகவில்லை. விவாகம்பண்ணிக்கொண்டு கிருகத்தன் என்று பெயர் வாங்கிக்கொள்வதில் அக்காலத்தில் ஒரு பெரிய கௌரவம் இருந்தது, பதினாறு வயசுடைய ஒருவன் விவாகமாகாமல் பிரமசாரியாக இருந்தால் ஏதோ பெரிய குறையுடையவனைப்போல அக்காலத்தவர் எண்ணினார்கள்.

காலப்போக்கோடு கலந்து வாழும் மனிதர்களுடைய கொள்கைகள் என்றும் ஒரே நிலையாக நிற்பதில்லை. அக்காலத்தில் எதைக் கௌரவமென்று நினைத்தார்களோ அதையே இக்காலத்தில் பைத்தியக்காரத்தனம் என்று நினைக்கிறோம். அகௌரவமான செயல் என்று எதை முன்பு நினைத்து விலக்கினார்களோ அதையே கௌரவமென்று இப்போது மேற்கொள்ளுகிறோம்.

என் தகப்பனார் பல மாதங்களாகப் பெண் தேடினார்; பல சாதகங்களைப் பார்த்தார். ஒன்றும் பொருத்தமாக இல்லை. ஒருவாறு விவாகச் செலவுக்கு வேண்டிய பொருளைச் சேகரித்து வைத்துக்கொண்ட அவருக்கு அப்போது ‘பெண் கிடைக்கவில்லையே’ என்ற சிந்தனை அதிகமாயிற்று. எனக்கு விரைவில் விவாகமாகாவிட்டால் ஏதோ பெரிய நட்டம் வந்துவிடும் என்பது போன்ற நினைவு அவருக்கு இருந்தது போலும்! நாங்கள் திரமாக ஓர் ஊரில் வாழவில்லை; நானோ மேற்கொண்டு தமிழைத் திருப்தியுண்டாகும்படி கற்றுக்கொள்ளவில்லை; எங்கள் வாழ்க்கையில் எந்த வகையான நிலையும் உண்டாகவில்லை. இவற்றுக்கிடையே பின்னும் சில வருடங்கள் கல்யாணம் செய்யாமலே இருந்தால் ஒரு குறையும் நேரப்போவதில்லை. இந்நிலையில் நான் பிரமசாரியாக இருப்பது ஒரு பெருங்குறையாக என் தந்தையாருக்குத் தோற்றியதற்குக் காரணம் அக்காலத்திலிருந்த வழக்கந்தான்.

விவாக நிச்சயம்


எங்கெங்கோ தேடிய பிறகு கடைசியில் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள மாளாபுரத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து சாதகம் பொருந்துவதை உணர்ந்து நிச்சயம்செய்து என் தந்தையார் எங்களுக்குத் தெரிவித்தார். மாளாபுரத்தில் எங்களுக்குப் பரம்பரைப் பந்துவாகிய கணபதி ஐயரென்பவருடைய குமாரி மதுராம்பிகை யென்ற பெண்ணை எனக்கு விவாகம் செய்துவைக்கத் தீர்மானித்தார்கள். கணபதி ஐயரும் அவருடைய தந்தையாராகிய ஐயாவையரென்பவரும் தமிழிற் பழக்கமுடையவர்கள். நான் தமிழ் படித்து வருகிறேனென்றறிந்து, “எப்படியாவது பையன் பிழைத்துக் கொள்வான்” என்று நம்பிப் பெண்ணைக் கொடுக்கச் சம்மதித்தார்கள். “அந்தப் பிள்ளை பார்க்க இலட்சணமாயிருக்கிறான்; தலைநிறையக் குடுமி இருக்கிறது; நன்றாகப் பாடுகிறான்” என்று அந்த வீட்டிலிருந்த முதிய பெண்பாலார் திருப்தியடைந்தனர். ஐயாவையர் தஞ்சாவூருக்குக் கிழக்கேயுள்ள திட்டையில் கருணமாக இருந்தார். அவருடைய மூத்த குமாரர் கணபதி ஐயர் அவர்கள் எங்களைக் காட்டிலும் நல்ல நிலைமையுடையவர்கள். பூசுதிதியும் உண்டு; அவர்கள் வீடு ஒன்றுதான் அவ்வூரில் அக்காலத்தில் மாடிவீடாகக் கட்டப்பட்டிருந்தது; அதற்கு ‘மாடியாம்’ (மாடியகம்) என்று பெயர். என் தந்தையாருடைய சிவபக்தியும் நல்லொழுக்கமும் புகழுமே அவர்களைக் கவர்ந்தன. அதனால் இந்த விவாகம் செய்வதில் அவர்கள் பூரணமான திருப்தி உடையவர்களாக இருந்தார்கள்.

சிதம்பர உடையார் செய்த உதவி


விவாகச் செலவுக்கு இருநூறு உரூபாயும், கூறைச் சிற்றாடை முதலியவற்றிற்காக முப்பத்தைந்து உரூபாயும், நகைக்காக உரூபாய் நூற்றைம்பதும் என் தந்தையார் கணபதி ஐயரிடம் அளிப்பதாக வாக்களித்தார். மேலும் கிருகப்பிரவேசம் முதலியவற்றிற்குரிய செலவுக்கு வேறு பணம் வேண்டியிருந்தது. தம் கையிலிருந்த பணத்தையும் ஆகவேண்டிய செலவையும் கணக்கிட்டுப் பார்த்தபோது பின்னும் நூற்றைம்பது ரூபாய் இருந்தால் கட்டமில்லாமல் இருக்குமென்று என் தந்தையாருக்குத் தோற்றியது. பின்பு மறவனத்தம் சென்று சிதம்பர உடையாரை அணுகி இவ்விசயத்தைக் கூறினார். என் விவாகம் நிச்சயமானது தெரிந்து அவர் மிக்க சந்தோசமடைந்ததோடு, “பணத்தைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நடராச மூர்த்தியின் திருவருளைப்பெற்ற தங்களுக்கு எதுதான் கிடைக்காது?” என்று சொல்லித் தந்தையாரைத் தம்முடைய எலுமிச்சந் தோட்டத்திற்கு அழைத்துச் சொன்றார். அவர் தம் மடியில் வைத்திருந்த தம் பாக்குப் பையை எடுத்தார். அதிலிருந்து நூறு உரூபாயை எடுத்துக் கொடுத்து, “இதை வைத்துக்கொள்ளுங்கள். முகூர்த்தத்தின்போது ஐம்பது உரூபாய் தருகிறேன். இன்னும் வேண்டியிருந்தாலும் கொடுக்கிறேன்” என்றார். அதைப் பெற்றுக்கொண்டு கல்யாணத்திற்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று எந்தையார் அவரிடம் கூறினார். “அவசியம் வந்து சேருகிறேன். என் தந்தையாருக்குத் திதி வருகிறது. அதை நடத்திவிட்டுப் புறப்பட்டு வருகிறேன். வரும்போது பணம்கொண்டு வருகிறேன். தாங்கள் கவலைப்படவேண்டாம். சந்தோசமாகப் போய் வாருங்கள்” என்று உடையார் விடையளித்தார்.

எந்தையார் என்னையும் தாயாரையும் களத்தூரிலிருந்து அழைத்துக்கொண்டு உத்தமதானபுரம் வந்து சேர்ந்தார்.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.

Monday, May 15, 2023

சான்றோர் பெருந்தகை மு.வ. – 2/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

 




(சான்றோர் பெருந்தகை மு.வ. – 1/3 – தொடர்ச்சி)

10. சான்றோர் பெருந்தகை மு.. 2/3


நூற்பணி : புதினங்கள்

எழுபது நூல்களுக்கு மேல் எழுதி இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பெற்றுள்ள முனைவர் அவர்கள் முதன் முதலில் ‘பாவை’, ‘செந்தாமரை’ முதலிய நூல்களை 1943-44ஆம் ஆண்டுகளில் எழுதினார். இவர்களுடைய ‘கள்ளோ? காவியமோ?’ என்னும் புதினம் பலர் வாழ நல்வழி காட்டியது. ‘அல்லி’ ஆணுலகிற்கு எச்சரிக்கை தருவது. ‘அகல் விளக்கு’ எனும் புதினமும் இத்தகையதேயாகும். இந்நூல் 1962ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி (Sahitya Akademi) யாரின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றது. ‘கரித்துண்டு’ ஓவியர் ஒருவரின் வாழ்வினை விளக்குவது. பெற்ற மனம் தமிழிலும் தெலுங்கிலும் திரைப்படமாக வெளிவந்த புதினமாகும். பாத்திரப் படைப்புச் சிறந்த புதினம் ‘மலர்விழி’, ‘கயமை’ சமுதாயத்தின் ஆணவங்களை அம்பலத்தில் கொண்டுவந்து நிறுத்துவதாகும். ‘வாடாமலர்’, ‘மண் குடிசை’, ‘நெஞ்சில் ஒரு முள்’ முதலிய புதினங்கள் வாழ்க்கைத் தெளிவினை வகையுற எடுத்து மொழிவனவாகும்.

சிறுகதை

‘விடுதலையா?’ என்ற தொகுப்பில் அமைந்துள்ள சிறு கதைகள், இவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சில நிகழ்ச்சிகளுக்குக் கற்பனைச் சிறகு கட்டிப் பறக்க வைத்ததன் விளைவாகும், ‘குறட்டை ஒலி’ சிறுகதை வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

இலக்கிய நூல்கள்

ஏறத்தாழ முப்பது நூல்கள் இலக்கியங்களின் பிழிவாகவும், இவர்தம் எண்ணங்களின் வடிப்பாகவும் எழுந்துள்ளன. இலக்கியத்தின் நுண்மையினை-செவ்வியினை உயர்நிலையினை இவர்கள் நன்கு உணர்ந்து கட்டுரைகள் எழுதுவார்கள்.

மொழி இயல் தொடர்பாக ஏழு நூல்களும், ஐந்து நாடக நூல்களும். நான்கு வரலாற்று நூல்களும் இவர்கள் எழுதியுள்ளார்கள். கடிதமாக இவர்கள் எழுதியுள்ள ‘தங்கைக்கு’, ‘தம்பிக்கு’, ‘அன்னைக்கு’, ‘நண்பர்க்கு’ என்னும் நான்கு நூல்களும் மிகவும் புகழ் வாய்ந்தவை, தங்கைக்கு ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் நாடோறும் படிக்கவேண்டிய நூல்.

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்’ என்னும் நூலில் திருவள்ளுவரின் தெளிந்த கருத்தினை வடித்துத் தருகின்றார்கள். இந்நூலிற்கு அழகியதோர் அணிந்துரை அருளிய தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் கூறுவன வருமாறு :

“இத்தகைய நூலை யாத்தவர் முனைவர் மு.வரதராசனார், எம்.ஓ.எல். ஆசிரியர் வரதராசரை யான் நீண்ட காலமாக அறிவேன். அவரை யான் முதன் முதல் பார்த்தபோது அவர்தம் மலர்ந்த விழியும். கூரிய மூக்கும், பரந்த நெற்றியும், நீண்ட முகமும், நிமிர்ந்த பிடரியும் என்னுள்ளத்தைக் கவர்ந்தன. இவை, அறிவுக்கு உறையுளாயுள்ள மூளையின் திறத்தை அறிவிக்கும் புறக்கருவிகள். அவர்பால் யான் அன்று கண்ட இளமை இன்றும் பொலிகிறது, அவர் என்றும் இளைஞராயிருத்தல் வேண்டுமென்பது எனது வேட்கை. கவலைக் காட்சியை அவர் முகம் வழங்குவதில்லை. நல்ல மூளையும், நிலைத்த இளமையும், கவலை காணா முகமும் ஒருவரைச் சிறந்த கலைஞராக்கும் நீர்மையன. ஆசிரியர் வரதராசனார் பெருங்கலைஞராய் நாட்டை நல்வழியில் ஒம்புந் தொனடராவர் என்று யான் நினைத்ததுண்டு. அந் நினைவு பழுதுபடவில்லை. அவர் இயற்றியுள்ள நூல்கள் நாட்டை நல்வழியில் ஓம்பி வருதல் கண்கூடு…தோழர் வரதராசனார் ஒரு கலைக்கழகம்; பொறுமைக்கு உறையுள்;

அமைதிக்கு நிலைக்களன்; புரட்சி அவர் நெஞ்சில் பொங்குகிறது. தோழர் புரட்சியை இந்நூலில் பரக்கக் காணலாம்…… ஆசிரியர் வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கி மூழ்கிப் பலதிற பணிகளைத் திரட்டிக் கொணர்ந்தனர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடி உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சினின்றும் அரும்பும் கருத்துச் சிந்தனைக்குரியதே.”

தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களோடு தாம் கொண்ட தொடர்பே தம்முடைய வாழ்வின் பெறற்கரிய பேறு என முனைவர் அவர்கள் பெருமிதத்தோடு கூறிக் கொள்வார்கள். அரசியலில் காந்தியண்ணலும் திரு.வி.க. அவர்களுமே அவர்கள் மதித்த தலைவர்கள் ஆவர்.

முனைவர் அவர்களுக்குப் பிடித்த நூல்கள் திருவாசகம், தாயுமானவர், வள்ளலார், விவேகானந்தர், இராம தீர்த்தரின் அறிவுரைகள் முதலியனவாகும். மேலை நாட்டுப் பெரும் புலவர்களான பெருனாருடுசா (Bernard shah) பெருட்டுரண்டு இரசல் (Bertrand Russel),சி.இ.எம்.சோடு (C.E.M.Joad),எச்.சி.வெல்சு (H.G. wells). ஆலுடசு அக்குசுலி(Aldous Huxley) சோமர் செட்டுமாம் (Somerset Maugham), பேருலசு பர்க்கு (Pearl S. Buck) முதலியோர் படைப்பினையும் விரும்பிப் படிப்பார்கள்.

இவர்கள் அன்றியும் சங்கப் புலவர்கள். திருவள்ளுவர், இளங்கோவடிகள், பாரதியார் முதலான தமிழ்ப் புலவர் பெருமக்கள் அனைவரும் முனைவர் அவர்கள் மதித்துப் போற்றிய பெருந்தகைகள் ஆவர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் அனைவரும் ஒவ்வொரு துறையில் மிகச் சிறந்தவர்கள் என்பது முனைவர் அவர்களின் கருத்தாகும். தாகூர் (Tagore). காண்டேகர் நூல்களை இவர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள்.

தம் காலில் விழுவதை விரும்பாத சுவாமிகளிடத்தில் இவருக்கு நிரம்ப மதிப்புண்டு, மெளன. சுவாமிகளிடம் இவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு மிகுதியாகும். அற்புதங்களை நம்பாத – இறைவன் படைப்பின் நோக்கத்தை உணர்ந்த – தொண்டின் வடிவமான- அறத்திற்கு- இறைவனின் அறச்சட்டத்திற்குப் புறம்போகாமல் மதித்து வாழ்கின்ற துறவிகள்-தொண்டர்கள் இவர்கள் வணங்கி வழிபடும் தெய்வங்களாவர்.

இயற்கையே தெய்வம்; இயற்கையே மருத்துவம்; இயற்கையே எளிமை; இயற்கையே குரு; இயற்கையே உபதேசம், இயற்கையே சமயம்; சமய நூலினும் இயற்கையே பெரிது என்ற கோட்பாட்டினைக் குறைவறக் கொண்டவர்கள் இவர்கள்.

தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டமைக்கு இவ் இயற்கைப் பற்றும் பெருங் காரணமாகும்.

இவர்கள் ஆத்திகர் நாத்திகர் என்று அவர்தம் போலி வேடம் கண்டு, இனங்காண்பதில்லை. அவரவர் தம் வாழ்வை வைத்தே ஆத்திகர் நாத்திகர் எனப் பிரிக்கலாம் என்பார்கள். இறைவனின் அறச்சட்டத்தை யார் உண்மையாக மதித்து நடக்கின்றார்களோ, அவர்களே உண்மையில் ஆத்திகர்கள் என்பது இவர்கள் கொண்டிருந்த கருத்தாகும்.

காந்தியடிகள் ‘கடவுள் உண்மை வடிவானவர்’ என்று கூறுவதைவிட ‘உண்மையே கடவுள்’ என்று கூறுவதைப் பெரிதும் விரும்பினாராம். அக்கருத்து – அக்காந்தியக் கருத்து – இவர்கட்குப் பெரிதும் உடன்பாடு.

சீரிய சிந்தனையாளர்

முனைவர் மு.வ. அவர்கள் நிறையப் படித்தவர்; ஆழ்ந்து சிந்தித்தவர்; எண்ணிய எண்ணங்களை எழிலுற மக்கள் மன்றத்திலே வைத்தவர். அரியவற்றையெல்லாம் எளிதாக விளக்கிய மு.வ. அவர்கள் தம் கதை, கட்டுரை. கடிதம், புதினம் முதலியவற்றின் வாயிலாகத் தமிழ்ச் சமுதாயம் சிந்தித்துத் தெளிவு பெற்றுச் செயலாற்றத் தக்க வகையில் பல சீரிய மணிமொழிகளைத் தந்துள்ளார். அவற்றுள் சிலவற்றை ஈண்டு நினைத்துப் பார்ப்பது நற்பயன் நல்குவதாகும்.

“தமிழர்களுக்கு இனப்பற்றும் இல்லை; மொழிப் பற்றும் இல்லை. அதனால்தான் அவர்கள் இருக்க இருக்கக் கீழே போகிறார்கள்; ஆனால் பேதம் இல்லாமல் வெளியாரோடு பழகுவதில் நல்லவர்கள்.”

“தேவைகளை எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு வாழ்க்கையில் சிக்கல் குறையும்; துன்பம் குறையும்.”

“நல்லவர்கள் பிறருடைய செயலால் அழிவார்கள்; கெட்டவர்கள் தங்கள் செயலாலேயே அழிவார்கள்.!”

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Saturday, May 13, 2023

உ.வே.சா.வின் என் சரித்திரம் 36: களத்தூரின் அமைப்பு

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 35 தொடர்ச்சி)

அத்தியாயம் 20 தொடர்ச்சி


களத்தூரின் அமைப்பு


களத்தூர் சீவநதியாகிய வடவெள்ளாற்றின் கரையிலுள்ளது. பலவகை சாதியினரும் நிரம்பப் பெற்றது. முகம்மதியர்கள் கொடிக்கால் வைத்துக்கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தனர். அவர்களிற் சிலர் தமிழ்நூற் பயிற்சியுடையவர்களாக இருந்தனர். அவ்வூரில் ஓர் அக்கிரகாரம் உண்டு. அதில் சிரீ வைணவர்கள், மாத்துவர்கள், தெலுங்கர்கள், மார்த்தர்கள் என்னும் வகையினர் வாழ்ந்து வந்தனர். சிவ விட்ணு ஆலயங்களில் விட்ணு ஆலயம் பிரபலமானது. துருக்கை முதலிய தெய்வங்களின் ஆலயங்களும் உண்டு. பல இடங்களில் நந்தவனங்களும் தோட்டங்களும் இருந்தன.

களத்தூரைச் சார்ந்து இரஞ்சனகடி துருக்கமென்ற மலையரணும் ஊரும் உண்டு. அங்கே ஒரு நவாபு இருந்து வந்ததாகச் சொல்லுவார்கள். அவருக்குச் சொந்தமான நிலங்களும் மிகப்பெரிதான தோட்டமும் களத்தூரில் இருந்தன. அத்தோட்டத்தில் பல பழ விருட்சங்களும் புட்பச்செடிகளும் நிரம்பியிருக்கும். களத்தூரும் அதனைச் சார்ந்த துருக்கமும் நல்ல காட்சிகளையுடையன. எனக்கு அவை அதுகாறும் அடையாத ஆனந்தத்தை உண்டாக்கின. இரஞ்சனகடி துருக்கத்திற்குச் சென்று அத்துருக்கத்தின் அமைப்பையும் களத்தூரிலுள்ள தோட்டத்தின் அழகையும் கண்டு மனமகிழ்வேன். அப்பக்கங்களிலுள்ள முகம்மதியர்களில் தமிழறிவு நன்கு வாய்ந்தவர்களைச் சந்தித்து அவர்களோடு சம்பாசித்து அவர்கள் கூறும் செய்யுட்களைக் கேட்டு இன்புறுவேன். அவர்கள் வேறு மதத்தினராக இருந்தாலும் தமிழின் நயத்தில் ஈடுபட்டுத் தமிழ்ச் செய்யுட்களைப் பாடம் பண்ணுவதும், அவற்றின் சுவையை அனுபவித்துப் பிறருக்கும் எடுத்துக் கூறி அவர்களையும் அனுபவிக்கச் செய்வதுமாகிய காரியங்களைச் செய்து வந்தனர்.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சஞ்சரித்த இடங்களாதலின் அப்பிரதேசங்களில் அவரைப் பற்றிய செய்திகள் மிகுதியாக வழங்கி வரலாயின. அவருடைய நூல்களிலே மதிப்பு வைத்து யாவரும் படித்து வந்தனர். அவர் வீர சைவராக இருப்பினும் முன்னே கூறிய முகம்மதியர்கள் அவருடைய வாக்குக்குரிய மதிப்பை அளித்தலில் தவறவில்லை. அவர்கள் மசுதான் சாகிபு பாடல், சீறாப்புராணம் என்பவற்றில் அன்பு வைத்துப் படித்து வந்தார்கள்; அவற்றைப் போலவே கம்பராமாயணம், திருவிளையாடல், பிரபுலிங்கலீலை முதலியவற்றிலும் மதிப்புடையவர்களாகிக் கற்று வந்தனர். ஆதலின் அவர்களிடத்தே எனக்கு ஈடுபாடுஉண்டாயிற்று.

இராமாயணப் பிரசங்கம்

நாங்கள் களத்தூரில் எல்லாவிதமான அனுகூலங்களையும் பெற்றோம். அங்கே சென்று சில தினங்கள் ஆனவுடன் இராமையங்கார் முதலியோருடைய விருப்பத்தின்படி ஒரு நல்ல நாளில் என் தந்தையார் இராமாயண கதாப்பிரசங்கத்தைத் தொடங்கினர். நாள்தோறும் இரவு எட்டு மணி யளவுக்கு ஆரம்பிக்கப் பெற்ற பிரசங்கம் பதினொரு மணி வரையில் நடைபெறும். பலர் வந்து உத்சாகத்துடன் கேட்டுச் செல்வர்.

இக்கதாப் பிரசங்கத்தில் தழும்பேறிய என் தந்தையார் தம் சங்கீதத் திறமையை மிக விரிவாகக் காட்டினார்: அதற்கு என் சிறிய தந்தையாரும் துணை செய்தனர். கீர்த்தனங்களை இராகத்தோடு பாடுவதிலே அதிக முயற்சியும் பொருள் சொல்வதில் சிறிதளவு கருத்தும் முதலில் இருந்தன. வரவரப் பொருள்கூறும் முறையும் விரிவடைந்தது. தமக்குள்ள தமிழறிவையும் சம்சுகிருத ஞானத்தையும் எந்த அளவிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமோ அந்த அளவிற்கு அவற்றைப் பயன்படுத்திப் பொருள்கூறத் தொடங்கினர். இராமாயணக் கீர்த்தனத்திற்குப் பொருள் சொல்லுகையில் மேற்கோளாக வேறு கீர்த்தனங்களைச் சொல்வார்; பல தமிழ்ப் பாடல்களையும் சம்சுகிருத சுலோகங்களையும் எடுத்துக் காட்டுவார். அத்தகைய சந்தர்ப்பங்களில் உதாரணமாகச் சொல்லவேண்டிய பாடல்களுக்கு அவர் முதலெடுத்துத் தருவார்; நான் அவர் குறிப்பை அறிந்து அவற்றைப் பாடிக் காட்டுவேன். என் சாரீரமும் நான் பாடல் சொல்லும் முறையும் சபையினருக்கு மிக்க திருப்தியை அளித்தன என்பதை அவ்வப்போது சில குறிப்பால் தெரிந்துகொள்வேன். எனக்கு அப்போது உண்டாகும் உத்சாகம் அடுத்த முறை நான் பாடல் சொல்லுகையில் வெளிப்படும். பணமாகவும் பிற பொருளாகவும் பெறும் இலாபத்தைக் காட்டிலும் அபிமானத்தினால் வெளியிடப் பெறும் பாராட்டையே பெரிய ஊதியமாகக் கருதும் இயல்பு மனிதர் யாவரிடத்தும் காணப்படுகின்றது. இளமைப் பருவத்தில் அக்கருத்து என்பால் மிகுதியாக இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

களத்தூரில் இராமாயண பட்டாபிசேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இராமையங்காரும் பிறரும் நூறு வராகன் (350) உரூபாய் தம்முட் சேர்த்துச் சம்மானம் செய்தார்கள். அதற்கு முன்பெல்லாம் இருபது வராகனே சம்மானமாகக் கிடைத்து வந்தது. அம்முறை என் தந்தையார், சிறிய தந்தையார், நான் ஆகிய மூவரும் சேர்ந்து வெளிப்படுத்திய சங்கீதத் திறமை முதலியவற்றாலும் என் விவாகப் பிரயத்தனத்தினாலும் அதிகமாகச் சம்மானம் கிடைத்தது. கிடைத்த 350 உரூபாயில் செலவுக்கு 150 உரூபாய் போக எஞ்சிய 200 உரூபாயை விவாக காலத்துப் பெற்றுக்கொள்வதாக இராமையங்காரிடமே தந்தையார் கொடுத்து வைத்திருந்தார்.

நந்தன் சரித்திரப் பிரசங்கம்


இராமாயணப் பிரசங்கம் நிறைவேறியவுடன் பலர் நந்தனார் சரித்திரம் சொல்லும்படி என் தந்தையாரைக் கேட்டுக்கொண்டனர். அக்காலத்தில் நந்தனார் சரித்திரம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. அதன் ஆசிரியராகிய கோபாலகிருட்டிண பாரதியார் என் தந்தையாருடைய நண்பராதலின் அச்சரித்திரத்தை என் தந்தையார் நன்றாகச் சொல்வாரென்பதை யாவரும் தெரிந்துகொண்டிருந்தனர். அதிலுள்ள கீர்த்தனங்களை அதன் ஆசிரியர் அமைத்த சங்கீத அமைப்புப்படியே எந்தையார் பாடுவார்.

பாரதியார் நந்தனார் சரித்திரத்தை இயற்றுதற்குக் காரணம் இன்னதென்பது, அதனை இயற்றிய காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் முதலியவற்றை அவர் அடிக்கடி எடுத்துரைப்பதும், இராமாயணப் பிரசங்கத்தின்போது அச்சரித்திரக் கீர்த்தனங்களைச் சொல்லிக்காட்டுவதும் உண்டு. பாரதியார் காரைக்காலுக்குச் சென்று அங்கிருந்த ஆட்சித்தலைவராகிய(கலெக்டராகிய) சிசே துரைக்கு முன் நந்தன் சரித்திரத்தை நடத்தினா ரென்றும், அது கேட்டு அத்துரை மயங்கி அவரைப் பாராட்டிக் கொண்டாடினாரென்றும், பின்பு அத்துரையின் முயற்சியால் அச்சரித்திரம் அச்சிற் பதிப்பிக்கப்பட்டதென்றும் சொல்லுவார்.

பாரதியார் என் தந்தையாருக்கு அச்சரித்திரத்தின் அச்சுப் பிரதி ஒன்றை அளித்திருந்தார். அதை அவர் மிகவும் சாக்கிரதையாக வைத்துப் பாதுகாத்து வந்தார். அப்பிரதி இன்னும் என்னிடத்தில் உள்ளது.

அன்பர்களது விருப்பப்படியே நந்தனார் சரித்திரம் ஆரம்பிக்கப் பெற்றது. என் தந்தையார் சிவபக்தியில் நன்கு ஊறினவராதலின் அச்சரித்திரத்திலே செறிந்து கிடக்கும் பக்திச் சுவையை நன்றாக வெளிப்படுத்தினார். இளம் பருவமுடையவர்களையும் உருக்கும் அமைப்பையுடையது அச்சரித்திரம். அதில் சனங்கள் அதிகமாக ஈடுபட்டனர். வர வரக் கூட்டம் மிகுதியாயிற்று. இப்பிரசங்கத்தைக் கேட்டவர்கள் நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களில் ஒன்றையேனும் பலவற்றையேனும் பாடம் பண்ணிக்கொண்டு பாடி உருகலாயினர். சங்கீதத்தின் வாசனையே அறியாதவர்களும் அவற்றை வாய்விட்டுச் சொல்வதில் ஓர் இன்பத்தை அடைந்தனர்.

நான் எங்கேயாவது போய்க்கொண்டிருப்பேன்; எங்கேயிருந்தோ, “பித்தந் தெளிய மருந்தொன்றிருக்குது” என்று ஒரு தொனி உண்டாகும். மற்றோரிடத்தில் அபசுவரத்தில் “சிவலோக நாதனைக் கண்டு” என்று ஒரு குரல் எழும்பும். கிழவர்களைக் காணும்போது சில இளைஞர்கள், “மீசை நரைத்துப் போச்சே கிழவா-ஆசை நரைக்கலாச்சோ” என்று பாடத் தொடங்கிவிடுவார்கள். சில இளம்பிள்ளைகள், “மார்கழி மாதந் திருவாதிரை நாள் வரப் போகுதையே” என்று சொல்லிக்கொண்டு ஆடுவார்கள். வேதாந்த சாத்திரப் பயிற்சியுள்ளவர்கள், “வாசியாலே மூலக் கனல் வீசியே சுழன்றுவர” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். இப்படி இளம்பிள்ளைகள், காளைப் பருவமுடையவர்கள், வயசு வந்தவர்கள், கிழவர்கள் ஆகிய எல்லாருடைய மனத்திலும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்கள் புகுந்து விளையாடின. ஒன்றும் அறியாத பெண் பிள்ளைகள், “நந்தன் சரித்திரம் நடக்குது” என்று சொல்லிக்கொண்டு வந்து கேட்பார்கள். களத்தூரைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பலர் தினந்தோறும் வந்து கேட்டுச் செல்வார்கள்.
(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.