Friday, July 30, 2021

ஒளவையார்:2 : ந. சஞ்சீவி

 

அகரமுதல




(ஒளவையார்:1: ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 11

2. ஒளவையார் (தொடர்ச்சி)


அதிகமான், அருளும் ஆண்மையும் ஒருங்கே வடிவெடுத்தாற்போன்று விளங்கிய கடையெழுவள்ளல்களுள் ஒருவனாய்த் திகழும் பெருமை பெற்றவன். தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த அதிகமான் நாடு, புனல் வளமும் பூவார் காவின் அழகு வளமும் ஒரு சேரப்பெற்றுப் புலவர் பாடும் புகழ் படைத்திருந்தது. அதிகமான் நாடு பெற்றிருந்த இயற்கைத் திறத்தினும் அவன் நாட்டு மக்கள் பெற்றிருந்த ஆண்மைத் திறனும் அவர்கள் தலைவனான அதிகமான் கொடைத் திறனுமே பல்லாயிர மடங்கு பெரியனவாய் விளங்கின. அதிகமான் வீர வாழ்க்கையின் சிகரமாய் விளங்கினான். அவன் கீழிருந்த மழவர் படை போரையே உணவாகக் கருதி வாழ்ந்தது. கலைஞர்க்கும் புலவர்க்கும் கண்ணினும் இனிய தலைவனாய் விளங்கிய அதிகமான், மாற்றார் வாழ்விற்குக் காலனாகவே இருந்தான். இவ்வாறு ஆடும் விறலியர்க்கும் பாடும் பாணருக்கும் அமிழ்தினும் இனியோனாய் விளங்கிய அவனது நல்லிசைச் சிறப்பினை யெல்லாம் அவன் அரசவைப் புலவராய்த் திகழ்ந்த ஒளவையார் எண்ணற்ற பாடல்களால் இயற்றமிழின் சுவை கனி சொட்டச் சொட்டப் பாடியுள்ளார். அதிகமானது குடி தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. அதிகமான் உலகம் தோன்றிய நாள் தொட்டு உளதாகக் கருதப்படும் முடியுடை மூவேந்தர் குடியுள் ஒன்றாகிய சேரர் குடியைச் சேர்ந்தவன் எனவும், ‘இரும்பனம்புடையலை’ விரும்பிச் சூடுபவன் எனவும் இலக்கியம் போற்றும் பெருமை படைத்தவன். அவன் மரபின் முன்னோர் ‘அரும்பெறல் அமிழ்தம் அன்ன’ கரும்பைத் தேவர் உலகினின்றும் தென்தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்தனர் எனப் போற்றப்படுகின்றனர்.

‘அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபிற் கரும்பிவண் தந்தும்
நீரக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல’
        (புறநானூறு.99)

என அதிகமானையும்

‘அந்தரத்(து)
அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்(பு)இவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.’
        (புறநானூறும். 392)

என அவன் மகன் பொகுட்டெழினியையும் ஒளவையார் பாராட்டுகின்றார், அதிகமான் முன்னோர், விறல் மிக்க வீரத்திருவினர்; கடல் கடந்து அயல் நாடுகளுக்குப் படை யெடுத்துச் சென்றனர்; பல நாடுகளை வென்றனர். அவ்வாறு வெற்றி கொண்ட நாடுகளுள் ஒன்றிலிருந்து தாங்கள் அடைந்த வெற்றிக்கு அறிகுறியாகத் தீஞ்சுவைக் கரும்பினைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். அதற்கு முன் தமிழகத்தில் கரும்பு இல்லை. அதன் பிறகே கரும்பு இங்கும் பரவியது. இவ்வாறு வெற்றி கொண்ட மன்னன் தான் வென்ற நாட்டினின்றும் அரும் பெறல் பொருள் ஒன்றைக் கொண்டு வரலும், தோற்ற வேந்தனும் தன் தோல்விக்கு அடையாளமாகத் தன் நாட்டின் சிறந்த பொருள் ஒன்றைக் காணிக்கையாகத் தரலும் பழம்பெரும் புகழல்லவோ? அதை ஒட்டி நடந்த நிகழ்ச்சியையே ஒளவையார் ‘அந்தரத்துக்’ கரும்பு இவண் தந்ததாகப் பாடுகின்றார் எனக் கோடலே ஏற்புடைத்தாகும்.

இத்தகு தொன்மை சால் புகழ் படைத்த அதிகமானது பெருஞ்சிறப்பைப் பல்காலும் செவிமடுத்து விருப்புற்றிருந்த ஒளவையார், அவன் திருவோலக்கத்தைச் சேர்ந்தார்; தமிழிசையால் அவன் புகழ் பரவினார். ஒளவையார் தம் அரும்பெருஞ் சிறப்புகளை-யெல்லாம் முன்னமே கேட்டிருந்த அதிகனும், “பழுமரம் தேடிச் செல்லும் பறவை போல்பவர்கள் இப்புலவர் பெருமக்கள்; பரிசில் ஏதும் தந்திடின் ஒளவையார் விரைவில் விடை பெற்று வேறிடம் ஏகிடுவாரே! அவர் பிரிவை நாம் பொறுத்தல் ஒல்லுமோ!” எனப் பலப்பல எண்ணியவனாய்ப் பரிசில் ஏதும் தாராது நீட்டித்தான். மிக நுண்ணிய கலையுள்ளம் படைத்தவரல்லரோ ஒளவையார்? அதிகமானது இச்செயல் கண்டு அவர் வெகுண்டெழுந்தார்; தம் மூட்டை முடிச்சுக்களைச் சுருட்டிக்கொண்டு வெளிக்கிளம்புவார், வாயில் காப்பானைக் கண்டு பின் வருமாறு அஞ்சாது கூறினார்:

“வாயில் காப்போய், வாயில் காப்போய், வண்மை மிக்கோர் செவியாகிய புலத்தில் விளங்கிய சொற்களாகிய நல்விதைகளை வித்தித் தாம் கருதிய பரிசிலை விளைவாகப் பெறும் மன வலி மிகப் படைத்தோர் பரிசிலர். இங்ஙனம் மேம்பாட்டிற்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையினையுடைய இப்பரிசிலர்க்கு அடையாத வாயிலைக் காப்போய், விரைந்து செல்லும் குதிரைப் படையுடைய தோன்றலாகிய நெடுமான் அஞ்சி தன் தரம் அறியானோ? அன்றி, என் தரம் அறியானோ? அறிவும் புகழும் உடையோர் அனைவரும் மாண்டு ஒழிந்து இவ்வுலகம் இன்னும் வறியதாகிவிடவில்லையே! ஆகலான், யாழ் முதலிய இசைக் கருவிகளையும் அவை வைக்கும் பை முதலியனவற்றையும் மூட்டையாகக் கட்டினேம். மரத்தைத் துணிக்கும் கை வன்மைமிக்க தச்சனுடைய மக்கள் மழுவேந்திக் கானகத்தின் உட்புகுந்தால், அக்காட்டகம் அவர்கட்குப் பயன் படுமாறு போன்றே யாம் எத்திசைச் செல்லினும் அத் திசையெல்லாம் சோறு கிடைக்கும்.”

வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றில் நெடுமான்-அஞ்சி
தன்னறி யலன்கொல்? என்னறியலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே! அதனால்
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்(து) அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’.         (புறம். 206)

இவ்வாறு புலமைக்கே உரிய பெருமிதம் புலப்பட வாயிற்காவலனிடம் கூறிவிட்டு விரைந்து வெளிப்போந்தார் ஒளவையார். இதை அறிந்தான் அதிகமான். வாளாவிருப்பானோ? விரைந்து சென்று ஒளவைப்பிராட்டியாரைத் தடுத்து நிறுத்தித் தலையார வணங்கித் தன் உள்ளத்தின் உண்மையைக் கரவின்றிக் கூறினான். நெஞ்சம் திறந்தோர் நிற்காண்குவரே!’ எனக் கூறி நின்ற மன்னனது மனமறிந்த ஒளவையாரும், “ஆ! ஆழ்கடல் முத்துப் போலன்றோ இவன் உள்ளத்தில் நம்பால் கொண்ட அன்பு மிளிர்கிறது!” எனக் கருதி வியந்து போற்றினார்; உவகையோடு அவன் நாளோலக்கத்துக்கு மீண்டும் வந்து, அவன் மனம் மகிழத் தங்கினார்; தம் புலமை நலம் கனிந்து ஒழுகும் பாடல்களால் அவன் கொடை வளத்தைச் சிறப்பித்தார். “யாம் ஒரு நாள் செல்லலம்; இரண்டுநாள் செல்லலம். பல நாளும் பயின்று பலர் எம்முடன் வரச் செல்லினும், முதல் நாள் போன்ற விருப்புடையவன் அவன். அணிகலம் அணிந்த யானையையும், இயன்ற தேரையும் உடைய அதிகமான் பரிசில் பெறும் காலம் நீட்டிப்பினும் நீட்டியாது ஒழியினும், யானை தன் கொம்பிடை வைத்த கவளம்போல அப்பரிசில் நம் கையகத்தது. அது தப்பாது. எனவே, உண்ணற்கு நசையுற்ற நெஞ்சே, நீ பரிசிற்கு வருந்தற்க! அதிகமான் தாள் வாழ்க!” என்னும் கருத்தமைய,

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ:
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா(து) ஆயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது.அது பொய்யா காதே;
அருந்(த) ஏமாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்கஅவன் தாளே!’         (புறம். 191)

என இவ்வாறு மழவர் பெருமான் வள்ளன்மையை வாயாரப் புகழ்ந்தார் ஒளவையார்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்





Wednesday, July 28, 2021

ஔவையார் : 2 : – இரா.இராகவையங்கார்

 அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– 11

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 10. தொடர்ச்சி)
3. ஔவையார் தொடர்ச்சி)

   அதிகமான் தகடூரில் வதிந்தனர். வள்ளுவர், மயிலையிலும் கூடலிலும் வதிந்தனர். ஔவையார் பெண்ணையாற்றங்கரைக்கணுள்ள புல்வேளூரிலும் அதியமானூரிலும் திருக்கோவலூரிலும் வதிந்தனர். மேற்காட்டிய ‘கபில ரதிகமான்’ என்னும் வெண்பாவானே உப்பை யிருந்தது ஊற்றுக்காடென்பதும் உணரப்படும். இவ்வாறு குடியானும் இடத்தானும் வேற்றுமை பெரிதுடைய இவர்கள் ஓருடற் பிறப்பினரென்பது என்னையெனின், இவர்களைப் பெற்ற தந்தையுந் தாயுந் தேச சஞ்சாரிகளாய் ஓரோரிடத்து ஒவ்வோர் காலத்து இவரைப் பெற்றுவிட்டனராக, இவர்களை எடுத்துவளர்த்தார் வேறு வேறிடத்து வேறு வேறு குடியினரென்பதுபற்றி, இவர்கள் ஆங்காங்கு வளர்ந்த குடிப்பெயர்களான் வழங்கப்பட்டனர் என்பவாகலான் அமையுமென்பது. உலகவழக்கி னன்றிச் சிறந்ததோர் நூல்வழக்கினும் இவ்வெழுவரது ஓருடற்பிறப்புக் காணப்பட்டவாற்றானே அவ்வரலாறு உண்மையெனக் கொள்ளத்தகும். பல்வேறிடத்தில் வேறு வேறு குடியில் வளர்ந்த இவர்களது ஓருடற்பிறப்புப் பின்பு உணரப்பட்டவாறு இங்ஙனமென்பதும் இவ்வெழுவரும் தம் ஓருடற்பிறப்பினை உணர்ந்தனராவர் என்பதும் இப்போது தெற்றெனப் புலப்படவில்லை.

எத்துணையோ நூற்றாண்டுகட்கு முன்பு நிகழ்ந்த இவ்வரிய செய்தியி னுண்மையை இப்போதுள்ள சுருங்கிய கருவிகளைக்கொண்டு தெளிதல் அரிது. ஆயினும் எத்துணையோ நல்லிசைப்புலவரும் வள்ளல்களும் உளராகவும் அவர்கள்பாலெல்லாங் காணாமல் இவ்வெழுவர்பாலே இக்கதை சிறப்பாகத் தொன்றுதொட்டு வழங்கப்படுதலால் இதன்கண் ஓருண்மை யுளதாவதில் ஐயமில்லை. ஒரு குடிப்பிறந்து ஒரு குடிக்கண் வளர்ந்து அவ்வளர்ந்த குடிக்கேற்ற பெயரும் ஒழுக்கமும் பூண்டு விளங்கினார், வடவாரிய ருள்ளும் பண்டைக்காலத்தே பலராதல்போல இத்தென்றமிழர்க்குங் கொள்ளத்தகும்.

இடங் குடி முதலியவற்றான் இக்கபிலர் முதலாயோர் வேற்றுமை பெரிதுடையரேனும், நுணுகிநோக்கின் இவர்கள் ஒருகாலத்தவர்களாதல் தெளிவாம். அதிகமானை ஔவையார் பாடிய பாடல்கள் அவ்விருவரும் ஒருகாலத்தவரென்பது தெரிவிக்கும். அவன் தகடூர்ப் பொருது வீழ்ந்தபோது அவன் பிரிவாற்றாது பாடிய அரிசில்கிழார், பேகனாற்றுறக்கப்பட்ட கண்ணகி என்பாளை அவன்பாற் சேர்த்தல்வேண்டி அப்பேகனைப் பாடினரென்பது 146 ஆம் புறப்பாட்டான் அறியப்படுவது. அக்கண்ணகி காரணமாகவே அப் பேகனையே கபிலர் பரணர் பெருங்குன்றூர்கிழார் என்னும் இவர்களும் பாடியுள்ளாராதலின் (புறம் 143, 144, 145, 147), அதியமான் ஔவையார் அரிசில்கிழார் கபிலர் பரணர் பெருங்குன்றூர்கிழார் இவர்களனைவரும் ஒருகாலத்தவராதல் நன்கு தெளியலாகும். வள்ளுவர் திருக்குறள் அரங்கேற்றியபோது அதனைக் கபிலருங்கேட்டுச் சிறப்பித்துப் பாடியிருத்தலின்(திருவள்ளுவமாலை) இக் கபிலர் முதலிய நால்வரும் ஒரு காலத்தவரென்பது தெள்ளியது.

[*] பாரி பறித்த [+] கலனும் பழையனூர்க் காரியன் றீந்த களைக்கோலுஞ் சேரமான்
[++] வாராயோ வென்றழைத்த வார்த்தையு மிம்மூன்றும் நீலச்சிற் றாடைக்கு நேர். (தமிழ்நாவலர் சரிதை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      [+] ‘பறியும்’ [++] ‘வாரா யெனவழைத்த வாய்மொழியும்’ எனவும் பாடம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

* இஃது ஔவையார் திருக்கோவலூரில் அங்கவை சங்கவை என்பார், மழையால் நனைந்த தமக்கு ஒரு நீலச்சிற்றாடை நல்கினபோது பாடியது: ஔவையார் பாரிபாற் பரிசில்பெறச் சென்றபோது இவரது பேரறிவுடைமையை வியந்து இவருடன் அளவளாவுதலே பேரின்பமாகக் கருதி இவரைப் பிரிதற்கு உடன்படாமையாற் பரிசில் நல்காது நீட்டித்தனனாக, இவர் அவனைப் பரிசீலீந்து விடுப்பவேண்ட, இவர் வேண்டுதலை மறுத்தற்கியலானாய்ச் சிறந்த கலன்பல நல்கிவிடுத்தும் இவரைப் பிரிந்துறைய லாற்றாப் பேரன்பால் இவர் தன்பாற்றிரும்பவும் எய்தற்கு இதுவே தக்கதோர் சூழ்ச்சியாகுமென்று தன்னுளத்துக்கருதிப் பிறர் சிலரை இவர் செல்நெறிவிடுத்து இவருடைய அருங்கலவெறுக்கை முழுதை யும்பறித்துக் கொடுவரச்செய்ய, இவர் அவனெண்ணியவாறே அவன்பால் மீண்டு நிகழ்ந்ததறிவிக்க, அவன் முகத்தானொந்து இவர் மீண்டெய்தியமைபற்றி அகத்தானுவந்து நெடுங்காலம் இவருடனளவளாவிப் பெருமகிழ்வெய்தி இவர்க்கு முன்னரினுஞ் சிறப்ப அரும்பொருள் பலவும் நல்கினன் எனவும், பழையனூரிற் காரிபால் இவர் பரிசில் பெற்றுத் தாம்வேற்றூர் புகுதற்கு விடைபெறவேண்டித் தன் கொல்லைப் புறத்துக் களையெடுப்புழி நின்ற அவன்பாற் சென்றாராக, இவரது உள்ளக்குறிப்பை இவர் கூறாமலே யுணர்ந்த அவன், இவரைப் பிரிதற்காற்றானாய், இவரை இன்னும் பலகாலந் தன்பால் வைத்துச் சிறப்பிக்க மனங்கொண்டு, இவர் இப்போது செல்லாமைக்கு இதுவே தக்கதாகுமென்று கருதி, அக் களையெடுத்த இடத்தை யளத்தற்குரிய அளவுள்ள களைக்கோலொன்றை இவர்பால் நல்கி, ‘இதனையளந்திடுக’ என்று கூறி, அவன் வேறு தொழில்மேலிட்டுச் செல்ல, இவரும் அங்ஙனமே யளந்து, அன்று விடைபெறக் கூடாமையாற் பின்னும் அவன்பாற் சிலகாலந் தங்கினாரெனவும், சேரன் அரண்மனையில் ஓருழிப் பலருடன் இவரும் உண்டற்கிருந்தபோது, ஆங்கு வேற்றுவிருந்தினனொருவன் எய்தினனாக, சேரன் அவனுக்கு இடமொழிக்க நினைந்து ஆண்டுள்ள பலரும் பிறராதலின் ஒன்றுஞ் சொல்லானாய்த் தன் அன்பிற்குரிய பெருந்தமர் இவ்வௌவையாரே யாதலால் இவரை நோக்கி, ‘ஔவையே வாராய்’ என ஆண்டுநின்று வருமாறு அழைக்க, இவர் அப் பிறனுக்குத் தம்மிடத்தை நல்கிப் பின் அச்சேரனுடன் உண்டனர் எனவும் கூறுப.

இம்மூன்றும் எவ்வாறு பேரன்பேயடியாகப் பிறந்தனவோ அவ்வாறே நீலச்சிற்றாடை கொடுத்ததும் ஆதலின் இவை தம்முள் ஒக்குமென்றவாறு.

** என்னும் ஔவையார் பாட்டானும் ஔவையாரும், பாரியும் பெருநண்பினரென்பது தெளியப்படுதலால், அப் பாரிக்கு உயிர்த்துணைவராகிய கபிலரும் ஔவையாரும் ஒருகாலத்தவராதல் நண்குணரலாகும்.

ஒருகாலத்தவரெனத் தேர்ந்த இந்நால்வருள் ஒருவன் மகாவீரனும் பெருவள்ளலுமாய்ச் சிறந்தான். மற்றைமூவர் அறிவுவீற்றிருந்த செறிவுடை மனத்து வான்றோய் நல்லிசைச் சான்றோரெனச் சிறந்தார். இம்மூவரது நல்லிசைப் புலமையே இச்செந்தமிழுலகாற் பண்டும் இன்றும் மிகவும் உயர்த்துப் புகழப்படுவதென்பது ஒருதலை. இம்மூவரும் பல்வகை மக்கட்கும் இன்றியமையாப் பொதுவாய ஒழுக்கங்கள் சில பலவற்றைத் தொகுத்தோதியவாற்றானே ஒருபடிப்பட்ட தன்மையினரென்பது உணரத்தகும். கபிலர் இன்னாநாற்பதும், வள்ளூவர் திருக்குறளும், ஔவையார் மூதுரை முதலியனவும் ஓதியவாறு பற்றியுணர்க. [*] நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் செய்யுளியலுரையில் (72) ‘அட்டாலும் பால்சுவையிற் குன்றாது’ என்னும் வெண்பாவினை எடுத்தோதி, ‘இது மூதுரை’ என்று கூறியவாற்றானும், நீலகேசித்தெருட்டுரைகாரர் (கடவுள் வாழ்த்துரை) ‘விதியால் வருவ தல்லால்’ என்னும் பாடலை எடுத்து மேற்கோள் காட்டுதலானும், இம்மூதுரையின் பழமை உணரத்தக்கது. 

 ++++
[* பேராசிரியர் நூற்பெயர் கூறினாரில்லை.]

++++

(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
 இரா.இராகவையங்கார்

(இதழாசிரியர் குறிப்பு : மூல நூலில் சில பத்திகள் இடம் மாறியுள்ளன. படித்துணர்ந்து புரிந்து கொள்க.)

Monday, July 26, 2021

ஒளவையார்:1: ந. சஞ்சீவி



சங்கக்காலச் சான்றோர்கள் – 10

2. ஒளவையார்

 

-ஒண்டமிழே!
பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்
புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய்.’ [1]


எனப் புனல் மதுரைச் சொக்கர் அழகில் சொக்கி மயங்கிய தலைவி, தான் அவர்பால் மாலை வாங்கி வரத் தூதாக அனுப்பும் தீந்தமிழிடம் கூறுகிறாள். என்னே அத்தலைவியின் பேருள்ளம்! பேருள்ளம் படைத்த அத் தலைவியின் வாயினின்றும் பிறந்த அச்சொற்களில் எவ்வளவு ஆழ்ந்த உண்மை அடங்கியுள்ளது!

———–
[1]. தமிழ்விடுதூது
———-


உலக மொழிகளுள்ளேயே-இலக்கியங்களுள்ளேயே-தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனிச் சிறப்புண்டு. அத்தகைய சிறப்பினை நம் அருந்தமிழ் மொழி பெறுதற்குரிய காரணங்கள் பலப்பல. அவற்றுளெல்லாம் தலை சிறந்தது ஆடவரோடு மகளிரும் சரிநிகர் சமானமாய் விளங்கி இலக்கியத்தையும் மொழியையும் பேணி வளர்த்தமையேயாகும். இது வேறு எம்மொழியினும் நம் செந்தமிழ் மொழிக்கு உரிய தனிச் சிறப்பாகும். தமிழினத்தின் பொற்காலமாய்த் திகழ்ந்த சங்கக் காலத்தில் மட்டும் முப்பது பெண்பாற்புலவர் தமிழகத்தில் விளங்கி, அருந்தமிழ் மொழியைத் தம் ஆருயிர் எனக் கருதிப் போற்றி வளர்த்தனர் என்றால், தமிழினத்தின் பெருமையினையும், தமிழிலக்கியத்தின் வளத்தினையும் நிறுவிக்காட்ட வேறு சான்றும் வேண்டுங்கொல்? சங்க காலத்திற்குப் பின்னும் செந்தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் போற்றிப் புரந்த நல்லிசைப் புலமை மெல்லியலார் பலராவர். அவருள் தலை சிறந்தவராகக் குறிப்பிடத்தகுந்தவர்
அற்புதத்திருவந்தாதி’ பாடி அருளிய காரைக்கால் அம்மையாரும், ஆத்தி சூடி’ முதலான அற நூல்களைப் பாடி அருளிய ஒளவைப்பிராட்டியாரும், அருள் சுரக்கும் திருப்பாவை’ செய்தருளிய ஆண்டாளும் ஆவர். இவ்வாறு ஒரு நாட்டின் உண்மையான மேம்பாட்டை அளந்தறிய இன்றியமையாத அளவுகோலாய் விளங்கும் தாய்க்குலத்தின் மேதையில் தலை சிறந்து ஒளிரும் பேரும் பெருமையும் பெற்றிருந்தது தமிழகம். அத்தகைய தமிழகத்தில் அனைத்துலகும் கண்டு வியந்து போற்றும் பெருமிதம் மிக்க பொற்காலமாய்த் திகழ்ந்த சங்கக்காலத்தில்-தமிழினம் ஈன்றெடுத்த நல்லிசைப் புலமை மெல்லியலார்க்கெல்லாம் தலை மணியாய் விளங்கிய பெருமை ஒளவையார் என்னும் தமிழ் அன்னையாரையே சாரும்.

தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ச்சிக்கண் கொண்டு நுணுகிப் பார்க்கும்போது ஒளவையார் பலராய் விளங்கல் ஒருதலை. கடைச்சங்க நாளில்-அதிகமான் காலத்தில்-வாழ்ந்த ஒளவையார் ஒருவர்; சமய காலத்தில்-சுந்தரரின் சமகாலத்தவராய் விளங்கிய ஒளவையார் ஒருவர்; காவியக் காலத்தில்-கம்பர் நாளில்-வாழ்ந்த ஔவையார் ஒருவர். இம் மூவரும் ஒருவராயிருத்தல் ஒல்லாது அன்றோ? கி.பி. முதல் நூற்றாண்டிலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர் ஒருவர் ஆதல் எங்ஙனம் இயலும்? எனவே, ஒளவையார் ஒருவர் அல்லர் என்பது வெள்ளிடை மலை. இவ்வாறு ஒளவையார் பலராய் விளங்கக் காரணம், சங்கச் சான்றோருள் ஒருவராய் விளங்கும் பேறு பெற்ற அவ்வன்னையாரின் திருப் பெயரைத் தாமும் சூடிக்கொள்வதால் ஆகும் சிறப்பினைப் பிற்காலத்தவர். பெரிதும் போற்றினமையேயாகும், இவ்வாறு ஊழி உள்ள வரை தம் தாய் நாட்டில் வாழும் மக்கள் உள்ளத்து உறையும் பெரும்புலமையும் மிகு புகழும் படைத்த மூதாட்டியாராய் விளங்கினார் முதல்வராய ஒளவையார்.

ஒளவையாரின் பிறப்பு வளர்ப்புப்பற்றி நாம் ஏதும் அறிந்திலோம். எனினும், சங்க இலக்கியப் பாடல்களின் துணைக்கொண்டு அவர் பாணர் குடியில் பிறந்தவர் என்பதும், இளமை முதற்கொண்டே இன்கலை பல பயின்று நூலோடு மதி நுட்பமும் நிரம்பப் பெற்றவராய் விளங்கினார் என்பதும் தெளியலாம். முத்தமிழும் கற்றுத் துறை போய வித்தகச் செல்வியராய் விளங்கிய ஒளவைப்பிராட்டியார் அரசியற் பெரும்பணிகளை ஆற்றுவதிலும் நிகரற்றவராய் விளங்கிய தன்மை தமிழகத்திற்கு உலக அரங்கில் மன்பதை உள்ள வரை மங்காப் புகழைத் தேடித்தருவதாகும். ஈராயிரம் ஆண்டுகட்குமுன் இலக்கியப் புலமையும், அரசியல் திறமையும் ஒருங்கே கைவரப்பெற்ற ஒளவையாரனைய அரிவை நல்லார் எவரும் உலகின் எத்திக்கிலும் வாழ்ந்து விளங்கியதில்லை என்பதைத் துணிந்து கூறலாம். அத்தகு தனிப் பெரும்புகழினைத் தமிழகத்திற்குத் தம் வாழ்வால் வழங்கிய ஒளவைப்பிராட்டியார் அதிகன் ஆண்ட தகடூரிலேயே தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்திருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது.

‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலர்’ பெருமானுக்கு ஆருயிர்த் தலைவனாய்ப் பாரிவேள் விளங்கியது போன்றே ஒளவையார்க்கு அதிகமான் விளங்கினான்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்

 



Saturday, July 24, 2021

ஔவையார் – 1 : இரா.இராகவையங்கார்

 

அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் : 10

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 9. தொடர்ச்சி)

3. ஔவையார்



இந் நல்லிசைப் புலமை மெல்லியலாரின் அருமைத் திருப்பெயர் இத் தமிழ்நாட்டின்கண் அறிவுக்கே பரியாயநாமம்போலச் சிறந்து தொன்றுதொட்டே ஆண் பெண் இளையர் முதியர் என எல்லாரானும் வழங்கப்படுவதொன்று. ஒரோ ரினிய முதுமொழியை எடுத்தோதி, அதனை ‘ஔவை வாக்கு’ என்றும் ‘ஔவைவாக்குத் தெய்வவாக்கு’ என்றும், ‘ஆயிரம் பிள்ளை பெற்ற ஔவையார்’ என்றும் பலவாறாக வழங்குதல் இன்றைக்குங் காணலாம். ஈண்டு ஆயிரம் பிள்ளை யென்றது இவர் பாடியருளிய பலவாய பாடல்களையே குறிப்பதாகும். ‘செல்வப் புதல்வனே யீர்ங்கவியா’ என்றார் பிறரும். ஆயிரம் – உபலக்கணம். இனிய எளிய தொடரில் அரிய பெரிய உறுதிகளை அமைத்து யாவர்க்கும் புலங்கொள உரைப்பது இவர்க்கியல்பு என்பது, ‘அறஞ்செய விரும்பு’, ‘அன்னையும் பிதாவு முன்னறி தெய்வம்’ என்பன முதலாக இவரருளிச்செய்த அறவுரைகளாற் றெற்றென விளங்கும். இத்தகைக் கல்விவண்மையானன்றே இவரைக் கற்றோரே யன்றி மற்றோரும் எளிதினறிந்து பாராட்டுவாராயினர். இவ்வாறு யாவரும் பரவும் மேவருஞ் சிறப்பினையுடைய ஔவையா ரென்னும் அருந்தமிழ்ச் செல்வரின் பெரிய வரலாற்றைப் பண்டைத் தண்டமிழ் நூல்களையே பெருந் துணையாக்கொண்டு யான் றெரிந்த அளவால் ஈண்டெடுத்தோதலுற்றேன்.

இவரது பிறப்பு வரலாற்றைப்பற்றி ஆராயுமிடத்துப் பழைய கதையொன்று காணப்படுவது. அஃதாவது, ‘யாளிதத்தன் என்னும் பார்ப்பானொருவன், தன்னாலே பார்ப்பனி யெனக் கருதிக்கொள்ளப்பட்ட புலைச்சி யொருத்தியை மணந்து, கபிலர் முதலாக எழுவர் மக்களை இவ்வுலகிற்றந்தனன்; அவருள் இவ்வெளவையாரும் ஒருவர் என்பது. இஃது இற்றைக்கு நானூறு வருடங்கட்கு முற்பட்டதென்று தெரியப்படுகின்ற ஞானாமிர்த நூலுள் ‘அறப்பயன் றீரின்’ என்னும் அகவலுள்,

‘யாளி, கூவற் றூண்டு மாதப் புலைச்சி
காதற் சரணி யாகி மேதினி
யின்னிசை யெழுவர்ப் பயந்தோ ளீண்டே’

என்பதனானும், இதனுரையுள், ‘யாளிதத்தன் தனக்கு விகிர்தமாய்த் தன்னானே வெட்டுண்டு கிணற்றில் வீழ்த்தப்பட்ட அறிவில்லாத சண்டாளப்பெண்ணை ஒரு பிராமணன் எடுத்துக்கொண்டுபோய் உத்தரபூமியில் வளர்த்து, இவனுக்கே பின்னர்க்கொடுக்க, இவனுக்கு அவள் காதலித்த பார்ப்பனியாய் இந்நிலவுலகின் கண்ணே இனிய கீர்த்தி பெற்ற கபிலர் முதலிய பிள்ளைகள் எழுவரை ஈங்குப் பெற்றாள்’ எனக் கூறுதலானும் அறியப்பட்டது. இக் கபிலர் முதலாகிய எழுவர் இவரென்பது,

கபில ரதிகமான் காற்குறவர் பாவை
முகிலனைய கூந்தன் முறுவை–நிகரிலா
வள்ளுவ ரவ்வை வயலூற்றுக் காட்டிலுப்பை
[*] யெண்ணி லெழுவ ரிவர்.

[* ‘எள்ளி லெழுவர்’ எனப் பாடங்கொள்ளினும் இழுக்காது.]

என்னும் ஒரு பழைய வெண்பாவினால் நன்று தெளியப்படுவது. இவ்வெழுவருட் கபிலர் அதிகமான் வள்ளுவர் மூவரும் ஆண்மக்க ளெனவும், குறவர்பாவை முறுவை ஒளவை உப்பை நால்வரும் பெண்மக்க ளெனவும் கூறுப. இவ்வெழுவர்மக்களுட் கபிலர் அதிகமான் வள்ளுவர் ஒளவை என்னும் நால்வர்வரலாறுகளே பண்டைத்தமிழ் நூல்களான் ஒருவாறு உணரப்படுவன. இவர்கள் பெயர் பொறித்துள்ள பழைய பாடல்கள் சிலவற்றாலும் பிறவற்றாலும் இந்நால்வரும் வேறு வேறு குடியினர் இடத்தினர் என்பது செவ்வனதந் தெளியப்படுவது.

‘யானே, பரிசிலன் மன்னு மந்தணன்’ (புறம்.200)
‘அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே’ (புறம்.201)
‘புலனழுக் கற்ற வந்த ணாளன்’ (புறம்.126)

என்பனவற்றால் கபிலர் அந்தணராவர். ‘மழவர் பெருமகன்’ (புறம்.86), ‘அதியர் கோமான்’ (புறம் 91) என்பனவற்றால் அதிகமான் மழவரெனப் பெயரிய ஒருவகை வீரர்பாற்பட்ட அதியர் குடியின னாவன். வள்ளுவரென்னும் ‘பெயரானும், ‘மறந்தேயும் வள்ளுவ னென்பானோர் பேதை’ (திருவள்ளுவமாலை) என்பதனானும் வள்ளுவர் முரசறைந்து அரசாணை சாற்றும் முதுக்குடியினராவர். செய்தி சாற்றுதல் வள்ளுவர் குடித்தொழிலென்பது செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் (குறுந்தொகை-228) என்னும் பெயரானுந் தெளியப்படும். இக் ‘கபிலரதிகமான்’ என்னும் வெண்பாவானே இவ்வெழுவருள் ஒருவர் குறவர்குடியினர் என்பதும் அறியலாகும்.

‘மடவர லுண்கண் வாணுதல் விறலி
பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென
வினவ லானாப் பொருபடை வேந்தே
யெறிகோ லஞ்சா வரவி னன்ன
சிறுவன் மள்ளரு முளரே யதா அன்று
பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பி
னதுபோ ரென்னும் என்னையு முளனே.’ (புறநானூறு.89)

 

[மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி!

பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என,

வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!

எறி கோல் அஞ்சா அரவின் அன்ன  

சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று,

பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை

வளி பொரு தெண் கண் கேட்பின்,

‘அது போர்’ என்னும் என்னையும் உளனே]

இஃது அதிகமா னெடுமா னஞ்சியை ஔவையார் சிறப்பித்துப் பாடியது. இப்புறப்பாட்டினை ஔவையார் தம் பெயர் கூறாமலே தம்மை வினாவிய வேந்தற்கு விடையாகக் கூறியதெனக் கொள்ளலே ஏற்புடைத்தாகும். அங்ஙனம் கொள்ளின், ஔவையார், பாணர் விறலியர் என்னும் பகுதியினராவர். விறலியர் – விறல்பட ஆடலும் பாடலும் வல்லவர். இவர்க்குப் பாடலுஞ் சிறந்ததென்பது,

‘சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
பாரி வேள்பாற் பாடினை செலினே’ (புறம். 105)

என்னும் கபிலர் பாட்டானும் உணர்க. இவர் விறலியென்பதற்கேற்ப ‘வாயிலோயே வாயிலோயே’ என்னும் புறப்பாட்டினுள் (206), ‘காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை ‘ எனத் தஞ்செய்தி கூறியவாற்றான், இவர் யாழ் முதலிய இசைக்கருவியுடையராதலையும், அதிகமான் தூதுவிடத் தொண்டைமானுழைத் தூது சென்றமையினையும் (புறம்.95) ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. முற்காலத்துப் பாணர் கூத்தர் விறலியர் முதிலியோரெல்லாம் கல்விகேள்விகள் நிரம்பினவராய்ச் சுவை பெரிது பயப்பச் செய்யுள் செய்தலினும் வல்லவராயிருந்தனர். பாண்டிய னொருவன் கழைக்கூத்துப் பார்க்குமிடத்துப் பராமுகமாக, கூத்தாடினவள் கோபித்துக் கொண்டு விழுங்காற் பாடிய

மாகுன் றனையபொற் றோளான்
வழுதிமன் வான்கரும்பின்
பாகொன்று சொல்லியைப் பார்த்தென்னைப்
பார்த்திலன் பையப்பையப்
போகின்ற பள்ளினங் காள்புழற்
கோட்டம் புகுவதுண்டேற்
சாகின் றனளென்று சொல்லீ
ரயன்றைச் சடையனுக்கே.

[*இதனைப் ‘பாகொன்று சொல்லி’ என்னுந்தொண்டைமண்டல சதகச் செய்யுளானு முணர்க.]

என்னும் தமிழ்நாவலர்சரிதைப்பாட்டும் இக்கருத்தை வலியுறுத்தும்.

இனிக் கபிலர் வாதவூரிற்[+] பிறந்துவளர்ந்து பெரும்பாலும் பாரியுடைய பறம்பின்கண் வதிந்தனர்.

+++
    [+] ப்ரும்மஸ்ரீ உ.வே.சாமிநாதையரவர்கள் ஐங்குறுநூற்று முகவுரை, பக்கம் – 12]

+++

(தொடரும்)