Friday, November 24, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29
பகைமை வளர்த்து நாட்டு வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளை நோக்கிப் பெருங்கவிக்கோ கடுமையாகக் கண்டனக்குரல் கொடுக்கிறார்.
பொய்கை போன்ற பொற்றிரு நாட்டில்
பொய்நீர்ச் சாக்கடை புகுந்திடச் செய்தீர்!
கால மெல்லாம் கட்சிகள் வளர்த்து
ஞாலம் இன்று ஏல மிடுகிறீர்!
மனச்சாட்சி கொன்று மறுபடி மறுபடி
தினச்சாட்சி பொய்மை திளைத்து மகிழ்கிறீர்!
தன்னலம் இன்றி இந்நாடு உயர
என்ன செய்தீர்? எல்லாம் சுயநல
வேட்டைக் காடாய் வேடிக்கை செய்தீர்!
ஆட்டுக்(கு) ஓநாய் காவலா? தீய
பேயை மணந்த பெரும்பிழை யாளரே,
நாயின் வால்நீர், நன்கு நிமிர்த்திட
யாரால் முடியும்?
என்று பாடுகிறார்.
  மக்களின் நிலைமையும் அவருக்கு மனக்கசப்பு அளிக்கிறது. விளக்கின் ஒளியை விரும்பிச் சுற்றும் விட்டில் பூச்சிகள் அவர்கள். அப்போதைக்கப்போது யார் சுவை தரினும் மயங்கிச் சுகிக்கும்  மூங்கை உயிர்கள்.
பெரும்பணி கொண்டலை பேதைகள், என்றும்
திருந்தா மல்வாழ் செயல்மறை கதவுகள்
வருந்தி உழையாதே வளங்கள் தேடிடும்
பொருந்தா வாழ்க்கைப் போலிகள் எவரும்
தடிஎடுத் திட்டால் சத்தமில் லாத
படிவாழத் தெரிந்த பதடிகள்!’ 
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு


     19 நவம்பர் 2017      கருத்திற்காக..

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’

தண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’
விளக்கம்
 தண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர் ‘கண்ணை இமை காப்பதுபோல அடிகள் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.அடிகள் தம் குடும்ப நகைகளை முதலியாரிடம் அடைக்கலமாக வைத்திருந்தார். முதலியாரின் குடும்பத்தாரும் அவரைப் போலவே அடிகள் குடும்பத்தாருக்குப் பேரன்புடன் உதவிகள் செய்த வண்ணமாயிருந்தனர். அடிகள் தம் நாட்குறிப்புகளில் முதலியார்தம் அன்பு, வன்மை, உதவி முதலியவற்றை அவ்வப்போது குறித்துள்ளனர். இம்முதலியாரின் பேரர்தாம், சென்னை மாநகராட்சித் தலைவராய் விளங்கிப் புகழுடன் திகழும் த.(டி.)செங்கல்வராயன் ஆவர்
  அப்பர் தேவாரப் பாட்டொன்றின் முதலடி என்பதற்குப் பஞ்சாட்சரத்தை வாயினாலும், நாவினாலும் கூறுகின்றோர் என்றேன். முதலியாரின் வினா ”‘வாயுள’ என்றாற்போதுமே! ‘நாவுள’ என்று கூற வேண்டியதேன்” என்பதாம்.
மறை. திருநாவுக்கரசு

Saturday, November 18, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28) – வல்லிக்கண்ணன்


[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27)   தொடர்ச்சி]

 

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28)

அறந்தவறாமல் வாழ்ந்தால்
அகத்தினிய வலிமை ஓங்கும்
திறந்தவறாமல் வாழ்ந்தால்
செம்மைசால் நலங்கள் தேங்கும்
சிறந்தபேர் பணிகள் செய்தால்
செய்தவக் கனிபழுக்கும்
உறவெனக் கவிதை கண்டால்
உளமூன்றும் வாழ்க்கை சூடும்!”
மனிதர்களுக்குள் காணப்படும் மாறுபாடுகள் புற்றியும், அவை நீங்குவதற்கான வழிகள் குறித்தும் பெருங்கவிக்கோ சிந்தனைகள் வளர்த்துள்ளார்.
மன்பதை அல்லலில் மனவேறு பாட்டினில்
மதி கெடத் துடித்தலும் ஏன்? ஏன்?
மனிதர்கள் மனிதர்க்குள் மாவேறு பாடுகள்
மல்கிடப் பிழிந்ததும் ஏன்? ஏன்?
துன்பமும் துயரமும் மாந்தர் சுயநலமும்
தோளினில் ஏறிய(து) ஏன்? ஏன்?
துரோகமும் வஞ்சமும் பஞ்சமும் வதைத்திடத்
துன்மார்க்கம் ஓங்கலும் ஏன்? ஏன்?
வன்மனம் தன்னலம் பல்கிடும் மதங்களை
வாய்மை யென்றே நம்பியே
மனிதர்கள் தமக்குள்ளே வேற்றுமை கற்பித்தே
வழக்காடும் தன்மை யன்றோ?
உன் மதம் என் மதம் என்று பேதங்கள் வளர்க்காமல் எல்லோரும் ஒன்றாகி, மனிதர்கள் அனைவரும் சமம். என்ற உணர்வோடு ஒரு மதம் சமரசமாகி, உள்ளொளி பெற்ற வள்ளலார் காட்டிய வழியில் சென்றால் ஒரே உலகமாய் ஒரு குடும்பம் போல், வாழலாமே என்று. கவிஞர் கருதுகிறார்.
பெருங்கவிக்கோவின் சீற்றத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாக இவற்றைக் குறிக்கலாம்
வீரம் எங்கடா விவேகம் எங்கடா மானமின்றிச்
சோரம் போகிறாய் தூ! தூ! தூ! நீயொரு சொரணையிலா
பேரம் பேசிடும் பேடித் தமிழனே! உன்னையும் ஓர்
சேர சோழநற் பாண்டிய மறத்தியா பெற்றிட்டாள்?
கட்சிப் பெயராலே வெட்டித்தனத் திமிர் வீம்பாலே
குட்டிச் சுவராகக் கெட்டுப் போவதில் பயனென்ன?
பெட்டிப் பாம்பு போல் முட்டிப்போட்டுநீ தில்லியிலே
மட்டியான பின் கிட்டே வந்து ஏன் கதைக்கிறாய்?
என்று சாடுகிறார்.
தமிழரின் தற்கால நிலை கவிஞரின் கோபத்தை அதிகப்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது.
விரிந்த சிந்தையும் வெற்றித் திருநோக்கும்
புரிந்த பேரறமும் புடம்போட்ட கொள்கைகளும்
ஞாலத்தில் ஓங்க நனிபெற்ற நம்மினத்தார்
ஏலத்துப் பொருளாகி எடுப்பார் கைப்பிள்ளையாகி
தமிழ்ப் பண் பாட்டுத் தலைமையைத் தான்மறந்து
இமிழ்கடல் சூழ்வையம் இறுமாப்பாய்ப்படை யெடுத்த
அவனவனுக்கேஆம் ஆள்தோதாய் ஆளாகி
புவனத்தில் கேவலப் பொழுதுபோக்குக் கடிமையாய்
மாற்றார் தமக்கு மருக்கொழுந்து வாடையாய்
கூற்றுவன் போல் கொடியர் கொடுமைக்குக் காவலாய்
வாயடங்கி வயிற்றை வளர்த்தால் போதுமெனும்
மாயத்தில் கட்டுண்டார் மதிமறந்தார்! விதி மறந்தார்!
இச்சைத் துரோகியர்க்குப் பாய்விரித்துப் பயந்து ஒடுங்கியிங்கே
பிச்சைக்காரர் போல் பேயடிமை ஆகிவிட்டார்
வந்தவனெல்லாம். தமிழன் வாகான பிடரியிலே
குந்தினான் அவனை குப்புறத் தள்ளுகின்ற
அறிவின்றி அமர்ந்தார் நம் அறம் மறந்தார் மறம்துறந்தார்!
நெறியதுவே என்று நெடிதுநாள் கழித்து விட்டார்.

வேறொரு இடத்தில், இன்றைய இழிநிலையை இவ்விதம் விவரிக்கிறார்
கிடைத்ததைச் சுருட்டித் தம்தம்
கிழமையே வளர்க்க எண்ணும்
உடைப்பெரும் சுயநலத்தார்
உயிர்த்தமிழ் நாட்டில் இன்றோ
நடைபோடப் பெருகி விட்டார்
நானிலப் பொதுந லத்தை
விடைகூறி அனுப்பி விட்டார்,
விடிவெள்ளி மறைத்தார் அம்மா!

புரிந்தவர் கூட இந்நாள்
புரியாமல் நடிக்கின் றார்கள்.
சரியான கொள்கை நெஞ்சம்
தானேற்கும் கொள்கை கூறத்
தெரியாமல் அல்ல!
சொன்னால் தினக்கூலி கிடைக்கா (து) என்றே
உரிமையை அடகு வைத்தார்
உயிர்ப்பெரும் அறிஞர் இந்நாள்’
  நாட்டைக் கெடுப்பவர்களில் அரசியல் வாதிகள் முதன்மையானவர்கள். மொத்தமாய் நாட்டின் மோசம் நீக்கிட அவர்கள் சித்தம் வைப்பதில்லை. அவரவர் கட்சிக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதிலேயே அவர்கள் கருத்தாக இருக்கிறார்கள். அதற்காக அவரவர் கொள்கைகளை ஒதுக்கிவிட்டு கூட்டு சேர்கிறார்கள்
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

Tuesday, November 14, 2017

மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – மறை. திருநாவுக்கரசு

      12 நவம்பர் 2017      கருத்திற்காக.


மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் 

சூரியநாராயண சாத்திரியாரிடம் நீண்ட நேரம் பேசினேன்.
  விளக்கம்: இவர்தாம் வி.கோ. சூரிய நாராயண சாத்திரியார், என்னும் மாபெரும் புலவர், இவர் கிறித்துவக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் ஆவர். அடிகள் தனித் தமிழியக்கம் காண்பதற்கு முன்பே தமது வடமொழிப் பெயரைத் தனித்தமிழிற் பரிதிமாற் கலைஞன்’ என்று மாற்றிக் கொண்டவர். ‘தம் கல்லூரியிற் பணிபுரியத் தேவைப்பட்ட தமிழாசிரியரைத் தேர்ந்து கொள்ள நடைபெற்ற புலமையாளர் தேர்வில் அடிகளைத் தேர்ந்து கொண்டவர். அப்பணியை அடிகளைப் பெறச் செய்தவர். அடிகள்பால் அளவில்லா நட்பு கொண்டவர். புலமைத் தமிழில் உயர்ந்த நடையில் நாடக நூல்கள் சிலவும் எழுதியவர். பேரழகர், முப்பத்து மூன்றாம் அகவையில் மண்ணுலக வாழ்வை நீத்தவர்.
  தமிழுணர்ச்சியில் வீறு கொண்ட இவர் தம் அருமை பெருமைகளையும், அடிகளுக்கும் இவர்க்கும் நிகழ்ந்த நட்பின் இனிமைகளையும் எனது நூலில் (மறைமலையடிகள் வரலாறு பக்கம் 20, 21, 22, 23) காணலாம்.
– மறை. திருநாவுக்கரசு

Friday, November 10, 2017

மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)

மறைமலையடிகள் 4/5 

 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார்பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள்.
 நான் அதுசமயம் பெரியாரோடு சேர்ந்து இருந்து, சீர்திருத்த இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததனால், அடிக்கடி ஈரோடு செல்ல நேரிடுவதுண்டு. அப்பொழுது இந்தப் பேச்சைப்பற்றியும், மறைமலையடிகளின் சொந்த வாழ்க்கையைப்பற்றியும் தாக்கி இரண்டு கட்டுரைகள் பெரியாரால் எழுதப்பெற்று அச்சும் கோர்த்துப் பிழை திருத்தத்திற்காக என்னிடம் வந்தன. செய்திகள் என் உள்ளத்தை வருத்தின. “அந்தக் கட்டுரைகளை இப் பொழுது வெளியிட வேண்டாம். அடுத்த வாரம் வெளியிடலாம். அதற்குள் நான் சென்னை போய் வந்துவிடுகிறேன்” என்று பெரியார் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
  நான் சென்னைக்குச் சென்றதும் திரு. வி. க. அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் என்னைக் கண்டதும் “இப்பொழுதுதான் உங்களைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு வயது நூறு, விடுதலை திராவிடர்கள் பத்திரிகையில் செய்திகளைப் பார்த்திர்களா? நீங்கள் மறைமலையடிகள் கட்சியா? பெரியார் கட்சியா? இருவரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் தலையிட்டுச் சமரசப்படுத்தப் போகிறீர்களா?” என்று கேட்டார். “உங்களைப் பல்லாவரத்திற்கு(அடிகளாரிடம்) அழைத்துப் போகவந்தேன்” என்றேன். இதைக் கேட்டதும், திரு.வி.க. அவர்கள், “இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரும் வேலை வேறு இல்லை’’ என்று புறப்பட்டார்கள். இருவரும் பல்லாவரத்திற்குச் சென்று மறைமலையடிகளைக் கண்டோம்.
  எங்களைக் கண்டதும் அடிகளார் ஏதோ துன்பத்திலிருந்து மீண்டவர்போலத் துள்ளி எழுந்து வந்து வரவேற்றார்கள். “அன்று பேசியது என்ன?” என்று வினவினேன். அவர் விளக்கிக் கூறி, “அதற்கு இப்படியொரு பொருளைக் கற்பித்து என்மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களே” என்று வருந்தினார்கள். உடனே திரு.வி.க. அதற்காகவே என்னை கி.ஆ.பெ இங்கு அழைத்து வந்திருக்கிறார்’’ என்றார். அடிகளார் “நான் என்ன செய்ய வேண்டு’’மென்றார் “இந்தப் பொருள்படும்படி நான் பேசவில்லை என்பதை ஒரு தாளில் எழுதுங்கள்” என்றேன். அடிகளார் என்னையே எழுதச் சொன்னார். நான் திரு.வி.க. அவர்களை எழுதச் சொன்னேன். அவர் அதை மறுத்து அடிகளாரையே எழுதச் சொன்னார்கள். “பெரியாரைக் கொலை செய்யத் தூண்டுவது என்ற பொருளில் நான் அன்று பேசவில்லை’ என்று எழுதினார்கள். அதை நான் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி வெளியேறினேன். திரு.வி.க. அப்பொழுதே, “நீங்கள் தமிழிற்கு நல்ல வேலை செய்தீர்கள்” எனப் பாராட்டினார்கள்.
 அக்கடிதத்தைச் ச.ச.(J.S.)கண்ணப்பரிடத்தும், எம். தண்டபாணி(ப் பிள்ளை)யிடத்தும் சென்னையிற் காண்பித்து இந்த வழக்கு இதோடு முடிவடைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுடன், விடுதலைப் பத்திரிகையின் அன்றைய தலையங்கத்தில் ‘மறைமலையடிகளாரின் மன்னிப்பு’ என்ற ஒரு துணைத் தலையங்கம் எழுதி, இச்செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். இதைக் கண்டதும் பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் குடியரசுப் பத்திரிகையின் வெளியிட அச்சுக் கோத்து வைத்திருந்த செய்திகளையெல்லாம் போடாமற் கலைத்துவிடச் செய்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல ச.ச.(J.S.) கண்ணப்பர் ‘மறைமலையடிகளாரின் மன்னிப்பு’ என்று விடுதலையில் தலையங்கமிட்டு எழுதியது தவறு என்றும், அவ்வாறு வெளியிட்டிருக்கக் கூடாது என்றும், அத் தவறுக்காக அடிகளாரிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் ஒரு செய்தியை எழுதி குடியரசுப் பத்திரிகையில் வெளியிட்டார்கள். பெரியார் அவர்களின் இந்தப் பெருந்தன்மையைப் பாராட்டி மறைமலையடிகளார் எழுதிய கடிதம் இன்னும் என்னிடத்தில் இருக்கிறது. இந்நிகழ்ச்சிகளையெல்லாங் கண்டு அதிகமாக மகிழ்ந்தவர் திரு.வி.க. அவர்களே.
(தொடரும்)
கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்

Monday, November 06, 2017

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27) – வல்லிக்கண்ணன்


 

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27)


தீமைகள் வளர்த்து, மோசத் தீமையே. முன்னேறும்படி செய்வோர்பற்றி வருத்தத்துடன் அவர் குறிப்பிடுகிறார்.
 வேசித் தனத்தை முதலாய் வைத்தார்-நாட்டில்
வீறு கொண்டே எழுந்து விட்டார்-நன்மை
பேசி வாயால் மழுப்புகின்றார்-அந்தோ
பேடிமைத் தீம்ை வளர்த்து விட்டார்-விந்தை
மோசத் தீமையே முன்னேறும்-என்ன
. . . . . . .*
இன்று இங்கு, நம் நாட்டில் உள்ள நிலைகள் பற்றி பெருங்கவிக்கோ நிறையவே கருத்துக்கள் சொல்லியிருக்கிறார் தன் கவிதைகளில்.
 ஊன் வளர்ப்பார் சிலபேர் உடல்வளர்ப்பார் – பலபேர்
நான், என தென்கின்ற நாசச் செருக்கினிலே
கூனாகிக் கிடக்கின்ற குருடரும் பலருண்டு
நீனா நானா வென்று நித்தமும் வீண்பேச்சு
தங்கள் பணிக்கூடம் தான்பேசிவம்பளந்து
திங்கள் ஆண்டுகளைத் தேய்ப்பவர் பலருண்டு
பொழுதெல்லாம் பிறர்பற்றி புறம்பேசி புறம் பேசிக்,
கழுதைகள் போலக் கண்டதை மேய்ந்துவிட்டு
ஊர்சுற்றும் கூட்டமும் உண்டு படித்தோரில் !
சீர்கொண்ட தன் புனியில் சிறப்புற் மாட்டாமல்,
அரசுப் பணிகளிலே அகம் தோய்ந்து உழைக்காமல்
தரமின்றிச் செல்லும்,தடியரும் பலருண்டு
உரிமைக்குக் குரல் கொடுத்து கடமைக்குச் சாவுமணி
விரித்தடிக்கும்.கூட்டமும் மேதினியில் இன்றுண்டு.
தானும் வாழாமல் தமிழ்நாடும் வாழாமல்
பேனுற்ற தலைபோலப் பிதற்றித் திரிவோரால்
யாருக்குப் பயனாம் நல்லோரே எண்ணுங்கள்
என்று சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகிறார் பெருங் கவிக்கோ.
 “நாடு முன்னேறவும் நாட்டு மக்கள் நல்முறவும் நாம் செய்ய வேண்டியது என்ன?” அதையும் கவிஞர் அங்கங்கே வேலியுறுத்தத் தவறவில்லை.
தொண்டுக்கு முதலிடம் தருவோம்-எந்தத்
துறையிலும் நன்மை கொணர்வோம்
பண்டு நம் பெருமைகள் அறிவோம்-அருமைப்
பாடுகொள் வினைகளைத் தெரிவோம்
மண்டைக் கர்வம் குறைப்போம்-கெட்ட
வஞ்சகர் வாசலை அடைப்போம்!
தண்டச் சோறின்றி உழைப்போம்-இதற்கே
சாதனைச் சிந்தனை ஒன்றே என்போம்.
நாடு கெட்டு இன்று நலமின்றிப் போனதில் நம் எல்லோருக்குமே பங்கு உண்டு என்றும் அவர் அறிவுறுத்துகிறார். மனத்தில் தைக்கும்படிச் சுட்டுகிறார்
நச்சினை விதைத்திட்டே நற்பழம் வேண்டினால்
நாடிக் கைவந்து சேருமோ?,
நன்றியைக் கொன்றிட்டே ஒன்றாக விரும்பினால்
நம்பியது கை கூடுமோ?
முச்சந்தி நின்று தான் முழங்கியே பேசிப்பின்
முன்னுக்குப் பின் முரணாய்
முறை கெட்டு நடப்பவர் கறைபட்ட வாழ்வினால்
முன்னேற்றம் இங்கு வருமோ?
பச்சோந்தியாகவே பல வண்ணம் காட்டாத
பாதைகள் புதுமை செய்வோம்
பாரத அன்னையின் ஒன்றான சிந்தனை பயனாக்கி
நாமும் வெல்வோம்
“ஊருக்கு உழைப்பதாய்க் கூறியே, நல்ல உத்தமர் வயிற்றில் அடிக்காதே. என்றும், பேருக்கும் புகழுக்கும் அலையாதே. வஞ்சப் பித்தலாட்டங்கள் நினையாதே என்றும், தமிழின் பெயர் சொல்லி வியாபாரம் தவறான முறையில் செய்யாதே-உமியாய் நல்லவரை எண்ணாதே, கெட்ட உலுத்தத் தனம் பண்ணாதே” என்றும் அவர் எச்சரிக்கிறார்.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்: 
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்

(* பின்குறிப்பு : நூலில் இவ்வரி அச்சுப்பிழையாய் உள்ளது.)

Friday, November 03, 2017

மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ.

(மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி)

மறைமலையடிகள் 3/5 

 குறித்த நாளில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக் கால் மண்டபத்தில் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழா தொடங்குகின்ற நேரம். எல்லோரும் வந்துவிட்டார்கள். 9.15 ஆகியும் தலைவர் வரவில்லை. கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு. எல்லோர் கையிலும் துண்டு அறிக்கைகள். அதில் ‘மறைமலையடிகள் ஒரு சைவரா?’ என்ற தலைப்பில் சில கேள்விகள் அச்சிடப் பெற்றிருந்தன. இது வந்திருந்தோர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தையும், தலைவர் உள்ளத்தில் ஒரு வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டது. தலைவர் வராமைக்குக் காரணம் அது தான் என அறிந்தேன். துண்டு அறிக்கையை வழங்கியவர் உறையூர் புலவர் பெரியசாமி(ப்பிள்ளை) எனத் தெரிய வந்தது. அவருக்கு உறந்தைப் பெருந்தேவனார் என்ற பெயரும் உண்டு. சைவ மடங்கள் பலவற்றில் அவருக்குச் செல்வாக்குண்டு. உடனே தலைவரிடஞ் சென்று கூட்டத்திற்கு வந்து தலைமை வகித்து விழாவை நடத்திக் கொடுக்க வேண்டுமென்று அழைத்தேன். அவர் உறந்தைப் பெருந் தேவனாரை உங்களுக்குத் தெரியுமா? அவர் இங்கு வந்து துண்டறிக்கையை வெளியிட்டுக் குழப்பத்தை விளைவிக். கிறாரே? இது நல்லதா?’ எனக் கேட்டார். கூட்டத்தில் எதுவும் நடவாது. நீங்கள் தாராளமாக வந்து பேசலாமென வாக்குறுதி அளித்தேன். அடிகளாரும் வநதார்கள். கூட்டம் தொடங்குமுன், ‘இந்த அறிக்கை என்னுடைய அனுமதியின்றி இங்கு வழங்கப் பெற்றிருக்கிறது. இதை வழங்கியவர் யாராயிருந்தாலும் மண்டபத்தை விட்டு வெளியேறி விட வேண்டும்’ எனக் கடுமையான கட்டளையிட்டேன். அவரும் தன் தவற்றை உணர்ந்து அமைதியாக இருந்துவிட்டார். இரண்டு நாட்களும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
  நான் சைவ சித்தாந்த சபையில் துணையமைச்சராய் இருக்குங் காலத்தில் சமயக் கூட்டம் நடத்தினால், என்னையும் தலைவரையும் தவிர ஏழெட்டுப்பேர் வந்திருப்பார்கள். நாட்டாரய்யா தலைமை வகிக்கும் கடட்டங்களில் இருபது பேருக்குள் வருவார்கள்; சுண்டல் கடலை வழங்கும் கூட்டமாய் இருந்தால்தான் முப்பது, முப்பத்தைந்து பேர் வருவார்கள். அப்படியிருக்க மறைமலையடிகள் தலைமை வகித்த இந்த ஆண்டு விழாவிற்கு நானூறுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடிகளார் தம் இனிய குரலில் தூய தமிழில் நிகழ்த்திய அந்தத் தலைமைச் சொற்பொழிவு அனைவர் உள்ளத்தையும் மகிழ்வித்தது. இத்தகைய சொற்பொழிவை எவரும் நிகழ்த்த முடியாது என்று அங்கு கூடியிருந்த சைவப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்ட நல்லறிஞர்கள் பலர் சொல்லியது என் காதில் விழுந்தது. மகிழ்ந்தேன்.
  அடிகளார் தம் முடிவுரையில் ” ‘நான் சைவ சமயியா?’ என்று சைவ சமயிகளே ஐயப்படுவது என் மனத்தைப் புண்படுத்துகிறது. பார்வதி குளிக்கச் செல்லும் பொழுது தன் அழுக்கைத் திரட்டி ஒரு பிள்ளையாரைப் பிடித்து வைத்து, யாரையும் உள்ளேவிட வேண்டாமென்று குளிக்கச் சென்றார். பரமசிவம் வந்தார். அவரை உள்ளே போகவேண்டாமென்று பிள்ளையார் தடுத்தார். அவர் மீறி அவர் தலையைக் கொய்துவிட்டு உள்ளே சென்றார். பார்வதி தேவி ‘நான் குளிக்கும் செய்தியைப் பிள்ளையார் சொல்லவில்லையா?’ என்று பரமசிவத்திடம் கேட்டார். பரமசிவம் நடந்ததைச் சொல்லி ‘நம்முடைய பிள்ளையா அது?’ என்று கேட்டார். பார்வதி கலங்கி அழுதார். பரமசிவம் வெளியே சென்று ஒர் இறந்துகிடந்த யானையின் தலையைக் கொண்டு வந்து பிள்ளையார் உடம்போடு இணைத்து உயிர்ப்பித்தார்’ என்று பிள்ளையார் பிறந்த வரலாறு சிவபுராணத்தில் ஒரு வகையாகவும், கந்தபுராணத்தில் ஒரு வகையாகவும், விநாயகர் புராணத்தில் ஒரு வகையாகவும் கூறப்பெற்றிருக்கிறது. இதுபற்றி நான் ஆராயத் தொடங்கினேன். பார்வதி அழுக்கைத் திரட்டிப் பிள்ளையார் பிடித்துவைத்த கதையை என்னால் நம்ப முடியவில்லை. ‘பார்வதியின் உடம்பில் அழுக்கு இருக்குமா? இருந்தாலும் ஒரு பிள்ளையார் பிடிக்கும்.அளவுக்கு இருக்குமா? இதைச் சிந்திக்க வேண்டாமா? இதை நம்பித்தான் ஆக வேண்டுமா? நம்பினால்தான் சைவனா?’ என வினாக்களை அடுக்கிக் கொண்டே வந்து, ‘என் தாய் அழுக்கற்றவள். என் தாய் அழுக்கற்றவள்’ ’’ என இருமுறை கூறினார். அப்பொழுதுதான் எனக்குத் துண்டறிக்கையில் வந்த கேள்விக்குப் பொருள் விளங்கிற்று. இதிலிருந்து அடிகளார் சைவ சமயத்திலும் ஒரு சீர்திருத்தக் கொள்கை உடையவர் என்பதையும். தன் உள்ளத்திற் பட்டதை ஒளிக்காது கூறுகிறவர் என்பதை யும் நன்கறியலாம்.
(தொடரும்)
கி.ஆ.பெ.விசுவநாதம்
எனது நண்பர்கள்