Saturday, November 16, 2019

உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது




உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்

தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சில ஒன்று சேர்ந்து இன்று – நவம்பர் 17 – உலகத்தமிழ்நாள் கொண்டாடுகின்றன. பாராட்டிற்குரிய நிகழ்வாக இது உள்ளது. தாய்மொழி நாள் என ஒன்று யுனெசுகோ அறிவிப்பிற்கிணங்கக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த நாளில் இந்திய அரசு சமசுகிருத நாளைத்தான் கொண்டாடுகிறது. தமிழையும் பிற மொழிகளையும் புறக்கணிக்கிறது. ஆனால், உலகத்தமிழ் நாள் என்றால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட முடியும். தமிழ்நாட்டுச் சூழலை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் தமிழர்கள் வாழும் அந்தந்தப் பகுதிகளுக்குரிய சூழலை அடிப்படையாகக் கொண்டு, கதை, கவிதை, பிற படைப்புகள் வர இந்த நாள் உந்துதலாக இருக்க வேண்டும். தமிழையும் தமிழரையும் மேம்படுத்த இந்தநாளில் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்த வேண்டும்.
தமிழறிஞர்களையும்தமிழ்க்கலைஞர்களையும் போற்றும் நாளாக இந்த நாள் இருக்க வேண்டும். எனவே, உலகத்தமிழ்நாளை வாழ்த்துவோம்!
இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியராகவும் நக்கீரராகவும் போற்றப்படும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் பிறந்த நாளே நவம்பர் 17. தமிழ்ப்பேராசிரியராக மட்டுமல்லாமல் களப்போராளியாகவும் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார் மட்டுமே! எனவே, அவரது பிறந்த நாள் உலகத்தமிழ் நாளாகக் கொண்டாடப்படுவது பொருத்தத்திற்கும் சிறப்பிற்கும் உரியது.
தந்தை பெரியார் அவருக்குத் ‘தமிழர் தளபதி’ எனப்பட்டம் சூட்டி மகிழுந்தில் உட்கார வைத்து ஊர்வலம் நடத்தி மகிழ்ந்தார். தமிழக அரசின் காவல் துறை அவரை ‘இந்திஎதிர்ப்புப் போரின் படைத் தளபதி’ என்று குற்றம் சாட்டிச் சிறையில் தள்ளியது. இரண்டுமே அவரின் பணிக்கான அங்கீகாரமே! 1967 இல் ஆட்சியில் இறந்து இறங்கிய காங்கிரசு இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் 1965 ஆம் ஆண்டு மொழிப்போர். அந்த மொழிப்போரைத் தலைமை தாங்கி நடத்தியவர் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் என்னும் பொழுது 1967 முதல் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஆட்சியில் இருப்பதற்குக் காரணம் அவரின் மொழிப்போர் உழைப்பே எனலாம்.
இலக்குவனார், திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் மாணாக்கராக இருக்கும் பொழுதே தொல்காப்பியத்தை முழுமையாகக் கற்றார். அக்கல்லூரியில் மொழியியல் குறித்து ஆங்கில நூல்கள் மிகுதியாக இருந்தன. அனைத்தையும் நன்கு கற்றார். கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைப் பல முறை படித்து அதன் நிறைகுறைகளை அறிந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கல்லூரி முதல்வர் பி.சா.சு. தொல்காப்பியத்தை நடத்தும் பொழுது ஆரியத் தழுவலாகத் திரித்துக் கூறும் பொழுதெல்லாம் உடனுக்குடன் மறுத்துத் தொல்காப்பியம் மூலநூலே என்பதை மெய்ப்பித்தார். இதனால் உடன்படித்த மாணவர்களின் நாயகனாகத் திகழ்ந்தார். அப்பொழுது ஆங்கிலத்தில் தொல்காப்பியத்தை மொழி பெயர்த்து உலகெங்கும் பரப்ப வேண்டும் என முடிவெடுத்தார்.  அதற்கேற்பப் பின்னாளில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் திறனாய்வுரையும் எழுதி முனைவர் பட்டமும் பெற்றார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பைப் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்து வெளிநாடு சென்ற பொழுது சென்ற இடங்களில் எல்லாம் கொடுத்து வந்தார்.
படிக்கும் பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப் பாவியம் எழுதினார். அதற்குப் பின்னரும் இலக்குவனார் ‘துரத்தப்பட்டேன்’ முதலான பல்வேறு தனித்தமிழ்ப் பாடல்களை எழுதினார். இது குறித்துக் கவிஞர் சுரதா, “பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்காப்புப் போரில் களத்தில் நின்றமையால் தமிழுலகம் நோபள் பரிசுபெறும் தகுதியுடைய கவிஞரை இழந்து விட்டது” என்று கூறியுள்ளார். தமிழ்க்காப்புப்போரில் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்குவனார் செலவழித்தமையால் அவரது படைப்புப்பணி குறைந்தது. எனினும் அவர் முப்பதிற்கும் மேற்பட்ட  இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி, அமைச்சர் யார்?, திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் கண்ட இல்லறம், வள்ளுவர் வகுத்த அரசியல் முதலான தமிழ் நூல்களையும்   Origin and Growth of Tamil, The Making of Tamil Grammar, A Brief Study of Tamil Words-The Chronology of Tamil Grammarians, Semantemes and Morphemes in Tamil Langugage, Tamil Language. Tholkappiam in English with Critical Studies முதலான ஆங்கில நூல்களையும் எழுதித் தமிழின் சிறப்புகளை உலகறியச் செய்தார்.
அறியாமையாலும் வஞ்சகத்தாலும் ஆயிரக்கணக்கான தமிழ் இலக்கியங்களை ஆடிப்பெருக்கின் பொழுது ஆற்றிலே தொலைத்தனர் நம் முன்னோர். அவ்வாறு சங்க இலக்கியங்களும் அழிந்து போயிருக்கும். ஆனால் அதனைக் காத்துப் பரப்பிய பெருமைக்குரியவர் இலக்குவனார். திருநெல்வேலியில் ‘வட்டத் தொட்டி’ என்னும் குழுவினர் நடத்திய ஒரு கூட்டத்தில் “சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்” என்னும் முழக்கம் எழுப்பப்பட்டது. ஆற்றிலே தமிழ் இலக்கியங்களை அழித்த மூடர்கள் கடலிலும் அழிக்க முன் வந்தனர். சங்க இலக்கியம் என்றென்றும் வழிகாட்டும் மக்கள் இலக்கியம்  என்பதை உணர்த்தி அதனைத் தடுத்தவர் இலக்குவனார். மக்களிடம் இலக்கியங்களைக் கொண்டு செல்லாமையால்தான் இந்த அவலம் நேர்ந்துள்ளது எனக் குறிப்பிட்ட இலக்குவனார் ‘சங்க இலக்கியம்’ என்னும் வார இதழைத் தொடங்கினார். அதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்புகளை எளிய நடையில் மக்களிடையே பரப்பினார். “சங்கத்தமிழ் பாடித் தமிழர் புகழ் வளர்ப்போம்” என்று மக்களை முழங்கச் செய்தார். எனவே, சங்கத்தமிழைச் சுவைத்த தமிழ் மக்கள் அதனைக் காக்கவும் போற்றவும் தொடங்கினர். தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் சங்கத் தமிழ்ப்புலவர்களுக்கு விழா எடுத்தார். சங்க இலக்கியங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்கச் செய்து வளரும் தலைமுறையினர் அதன் சிறப்புகளை உணரச்செய்தார். தாம், சங்க இலக்கியம் தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியதுடன் நில்லாது, பிற அறிஞர்களையும் தொடர்பு கொண்டு அவ்வாறு எழுதத் தூண்டுதலாக அமைந்தார்.
சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு,Dravidian Federation, Kural Neri     முதலான தமிழ், ஆங்கில இதழ்கள் மூலம் பொது மக்களிடையேயும் தமிழ் நெறிகள் பரவக் காரணமாக இருந்த இதழியல் அறிஞர் இலக்குவனார்.
தந்தை பெரியார், தமிழ் இலக்கியங்களும் தமிழ்ப்புலவர்களும் மூட நம்பிக்கைகளைப் பரப்புவதாக எண்ணிக் கொண்டிருந்தார். அந்த எண்ணத்தைப் போக்கியவர்களில் இலக்குவனாரும் முதன்மை இடத்தில் உள்ளார். முதலில் சிலப்பதிகாரத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்த பெரியார், இலக்குவனாரின் சிலப்பதிகாரச் சிறப்புரைகளை வெளியிட்டார். இலக்குவனாரின் திருக்குறள் உரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டார். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் கழம் மூலம் வாரந்தோறும் திருக்கறள் சொற்பொழிவு ஆற்றி வந்தார் இலக்குவனார். இது குறித்துப் பெரியார்,  “தொடர்ச்சியாக ஞாயிறு தவறாமல் ஒலிபெருக்கியுடன் சொற்பொழிவுகள் ஆற்றியமை முற்றிலும் புதுமையாகும்இராமாயணம்பாரதம் போன்ற புராண நூல்களைத்தான் இதுவரை தொடர்ச்சியாகக் காலட்சேபம் செதுவந்துள்ளமை அறிவோம்ஒரு நீதிநூலைத் தொடர்ச்சியாகச் சொல்லுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்பதும் என்றால் எங்கும் காணாத புதுமை என்றுதான் கூறுதல் வேண்டும்”. (விடுதலை, 04.04.1952) எனக் குறிப்பிட்டார்.
அது மட்டுமல்ல திராவிடர் கழக மாநாடுகளுடன் திருக்குறள் மாநாடுகளும் நடத்தச் செய்தார். திருக்குறள் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருந்த பெரியாரையே திருக்குறள் மாநாடு நடத்தச் செய்த பெருமைக்குரியவர் இலக்குவனார்.
இலக்குவனாரை இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் எனக் கூறுவதன் காரணம் தமிழுக்கு எதிராக யார் கூறினாலும், அவர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவரா? உயர் செல்வரா? என்று பார்க்காமல் உடனே துணிந்து கண்டிப்பதுதான். எடுத்துக்காட்டு ஒன்று பார்ப்போம். 1952இல் தமிழக ஆளுநராக சிரீ பிரகாசா என்பவர் இருந்தார். அவர் கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். உடனே இலக்குவனார் வெகுண்டெழுந்து அவரைக் கண்டித்தார். மேலும்,
“இனிமேலாவது, விகடம் என்றெண்ணி அறிவற்ற இந்த வீண் மொழிகளைத் திரு சிரீபிரகாசா விளம்பாமலிருக்கட்டும். வயது முதிர்ச்சியின் காரணமாக அறிவு நிலை தடுமாறி அவர் இப்படி உளறினாலும் அதனைக் கேட்டுத் தம் தன்மானத்தையும் மறந்து, அங்குக் கூடியிருப்பவர்கள் இருக்க வேண்டா. அதற்கு மாறாக ஆரியப் பண்பாட்டிலே ஊறித்திளைத்து, அவர்கள் குண இயல்புகளைக் கூறும் திரு சிரீ பிரகாசாவுக்கு மற்ற பெண்களின் உயர்ந்த பண்பாடுகளை எடுத்தோதி அவரைத் திருத்துவதுதான் அவர்கள் கடமை. உங்கள் தீர்ப்பென்ன?” (திராவிடக் கூட்டரசு 31.10.52  மலர் 1 இதழ் 7) என உரைத்தார். தமிழ்ப்பண்பாட்டைப் பழித்துக் கூறியவர் ஆளுநராக இருந்தாலும் எதிர்ப்பைக்காட்டாத அஞ்சா நெஞ்சர் அவர்.
இன்றைய தமிழ் எழுச்சி ஊர்வலங்களுக்கு எல்லாம் வித்திட்டவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரே ஆவார். தாம் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் வீதிக்கு வந்து மக்களை ஒன்று திரட்டித் தமிழ்க்காப்பு ஊர்வலங்களை நடத்தி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தினார். அவற்றில் ஓர் ஊர்வலமான  25.8.63 இல் நடைபெற்ற தமிழ்க்காப்புக் கழக ஆண்டுவிழா ஊர்வலம் குறித்துப் புலவர்மணி இரா.இளங்குமரன் கூறியதைப் பார்ப்போம்(செந்தமிழ்க்காவர் சி.இலக்குவனார்: பக்கம் 48):
 “தமிழே உணர்வான ஊர்வலம்; தமிழே முழங்கிய ஊர்வலம்; தமிழுக்காகவும் ஒரு பெரும்படை உண்டு என்பதை மெய்ப்பித்த ஊர்வலம்! கட்சிகளின் ஊர்வலமே கண்ட பொதுமக்களுக்குப் புதுப்பொலிவான – எழுச்சிமிக்க இளையரும் முதியரும் நடையிட்டு வந்த ஊர்வலம்! தெருத்தோறும் கூடியும்,மாடி தோறும் ஏறியும் பொது மக்களும் முழக்கமிட நிகழ்ந்த ஊர்வலம்!”
இவ்வாறு அறிஞர்களிடையே இருந்த தமிழ் இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர். தமிழ் படித்தவர்களிடையே ஏற்பட்ட எழுச்சியை மக்களிடம் உண்டாக்கியவர். தமிழர்களின் தேசிய மொழி தமிழே என அறிவுறுத்தியவர். இந்தியத் துணைக்கண்டம், மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ வேண்டும் என வலியுறுத்தியவர். தமிழ் காக்க இரு முறை சிறை சென்ற பேராசிரியர். தனித்தமிழை வலியுறுத்தும் தமிழ்க்காப்பு உணர்வை மாணவர்களிடமும் மக்களிடமும் ஊட்டியவர். அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்குப் பல்வேறு பன்முகச் சிறப்புகள் கொண்ட தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த நாளை உலகத்தமிழ் நாளாகக் கொண்டாடுவது மிகப் பொருத்தமே!
உலகெங்கும் உலகத்தமிழ் நாள் கொண்டாடும் காலம் விரைவில் வரட்டும்! தமிழ்ப்போராளி இலக்குவனாரின் பின் வரும் முழக்கத்தை நடைமுறைப்படுத்த உலகத் தமிழ் நாள் உதவட்டும்!
தமிழகம் உலகத்தின் தாயகம்! – இதைத்
தரணியோர் மதித்திடச் செய்குவோம்
பூ.(இ)ரியாசு அகமது
நன்றி : தினச்செய்தி 17.11.2019 (விரிவு)

Tuesday, September 17, 2019

தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற 

அறிவுச்சுடர் சோமசுந்தரர்

   கடந்த இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த புலவர்கள் பலரும் பழமைக்குப் பாலமாகத் திகழ்ந்து அளப்பரும்  தமிழ்த்தொண்டாற்றி யுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்களவர், சைவச் சித்தாந்தப் பெரும்புலவர், வைதிக சைவச் சித்தாந்தச் சண்ட மாருதம், பரசமயக்கோளரி என்று பல  பட்டங்கள் பெற்ற சோமசுந்தர(நாயக)ர் ஆவார்.
  சோமசுந்தர(நாயக)ர், இராமலிங்க நாயகர் – அம்மணி அம்மையார் ஆகிய இல்லற இணையரின் மூத்தமகனாக ஆவணி 02, 1877 / ஆகத்து 16, 1846 அன்று சென்னையில் பிறந்தவர். இவரி்ன் தந்தை சைவ நெறியினராகவும் தாய் வைணவராகவும் விளங்கினர். தந்தையார் தம் மனைவியின் விருப்பத்திற்கிணங்க அனைவருக்கும் வைணவப் பெயர்களையே சூட்டியுள்ளார். தம்பியர் திருவேங்கடசாமி(நாயகர்), நாதமுனி(நாயகர்), வரதராச(நாயக)ர், தங்கை தாயாரம்மை ஆவர். அதன்படி இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்பதாகும் ஆனால், இவர் அச்சுதானந்த சுவாமிகளிடம் சேர்ந்து சைவநெறியாளராக மாறிய பொழுது சோமசுந்தரம் எனப் பெயர் சூட்டிக் கொண்டார். தமிழ்ப்பழங்குழுவினரே நாயகர் என அழைக்கப்பெற்றனர் என்று, இவரைத் தமிழ்க்குடியினர் என மறைமலையடிகள் விளக்கியுள்ளார்.
    சோமசுந்தர(நாயக)ர்  பள்ளியில் தெலுங்கும் ஆங்கிலமும்  கற்றார்; புலவர் முத்து வீரர் என்னும் ஆசிரியரிடம் தமிழும் சமற்கிருதமும் கற்றார்.
  சோமசுந்தர(நாயக)ர் சிவஞானம்  என்னும் பெண்ணின் நல்லாளை மணம் புரிந்து இல்லறம் நடத்தினார். இவர்களுக்கு, சகதாம்பாள், விசாலாட்சி, உலோகாம்பாள் என மூன்று பெண்மக்களும் சிவபாதம் என்னும் மகனும் பிறந்தனர்.
  சோமசுந்தர(நாயக)ர் பிள்ளைமைப் பருவத்தில் நன்னூல், யாப்பருங்கலக்காரிகை,   முதலான இலக்கண நூல்கள், திருக்குறள், நாலடியார், முதலான அறநூல்கள், பெரியுராணம், கந்தபுராணம்,  திருவிளையாடல் புராணம்,   கம்பராமாயணம்,  வில்லிபுத்தூரார் பாரதம், முதலான புராண நூல்கள், தேவாரம், திருவாசகம் முதலான 11 திருமுறைகள், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலான 14 சித்தாந்த நூல்கள், ஒழிவிலொடுக்கம், வள்ளலார் சாத்திரம், திருப்போரூர் சன்னதி / சந்நிதி முறை முதலான எண்ணற்ற நூல்களை நன்கு கற்றுப் புலமை பெற்றார்; இளமைக்காலத்தில்,  கைவல்யம், ஞானவாசிட்டம்,  பிரவோத சந்திரதோயம்,  பிரபுலிங்கலீலை முதலான மாயாவாத நூல்களையும் கற்றார்; அடுத்து நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தினையும் இதன்உரை நூல்களையும்  ஆராய்ந்து கற்றார்.
   சோமசுந்தர(நாயக)ர் தொடக்கக் காலத்தில் தோல் கிடங்கில் கணக்கராகப் பணியாற்றினார். ஆனால், உயிர்க்கொலை புரிந்து தோலை எடுத்து விற்பனைபுரியும் கொலைக்கூடத்தில் பணியாற்றவிருப்பமின்றி  வேலையை விட்டார்.  பின்னர் அவர், சென்னை நகராண்மைக்கழகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்து பணியாற்றினார். ஆனால், 1881 இல் திருவொற்றியூரில் நடைபெறும் மகிழடி விழாவிற்குச்செல்ல அரைநாள் விடுப்பு கேட்டதற்கு, அது புல்லிய காரணமென்றுகூறி விடுப்பு மறுக்கப்பட்டது. “பொய்யான காரணங்களுக்கு விடுப்பு தருவோர் மெய்யான காரணத்திற்கு அரைநாள் விடுப்பு மறுக்கிறார்கள்” எனக் கூறி வேலையைவிட்டு நீங்கி விட்டார். 
 பிற சமய நெறிகளில் ஆராய்ச்சியறிவு பெற்றுத் தாம் கொண்டிருந்த  சைவநெறிப் புலமையால், நாடெங்கும் சைவநெறிச் சொற்பொழிவுகள் ஆற்றி இறைநெறித் தொண்டராகத் திகழ்ந்துள்ளார்கள். இவரின் சமற்கிருதப் புலமையால், பிராமணர்களும் இவரைப் போற்றி மதித்தார்கள். தொன்மங்களில் சொல்லப்பட்ட இழிவான கட்டுக் கதைகளை மறுத்தும் அயலாரால் சிவமதத்தில் நுழைக்கப்பட்ட கொள்கைக் குழப்பங்களை அகற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றியமையால் முற்போக்காளர்களும் இவரது உரையை விரும்பிக் கேட்டனர். இவரது உரைச்சிறப்பை யறிந்த விவேகானந்தர் 1900 இல் சென்னை வந்திருந்தபொழுது இவரின் ‘சைவ சித்தாந்த’  உரையைக்கேட்டு மகிழ்ந்துள்ளார். பல்லாயிரம் செற்பொழிவுகள் நிகழ்த்திய பெரியார் இவருக்கு முன்னரும் பின்னரும் எவருமில்லை என்னும் சிறப்பிற்குரியவர் இப்பெருந்தகையார்.
 இவரது நூல்கள் பெரும்பாலும் சமற்கிருதக் கலப்பாகவே இருக்கும். ஆனால்சொற்பொழிவுகள் நல்ல தமிழில் அமைந்திருக்கும். நல்ல  தமிழில் சொற்பொழிவாற்றியவர் நல்ல தமிழில்  நூல்களை எழுதாமல் போனது தமிழுலகிற்கு இழப்பே ஆகும்.
“சோமசுந்தரத்தின் மாணவர் மறைமலையடிகள் பிற்காலத்தில் தனித் தமிழில் ஈடுபாடு கொண்டதால் சோமசுந்தரமும் தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார்” என்று பிறர் குறிப்பிடுவது தவறாகும்.  1916 இல் தனித்தமிழ்இயக்கம் அமையும் சூழல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கு முன்னர் இருந்தே மறைமலையடிகள்  தனித்தமிழ் ஈடுபாட்டில் கருத்து செலுத்திவந்தார். எனவே, பிற்காலத்தில்தான் தனித்தமிழ்  ஈடுபாடு மறைமலையடிகளுக்கு வந்தது என்பது தவறாகும். எனவே, அதனால் தனிததமிழில் பேசவும் எழுதவும் சோமசுந்தரர்  ஈடுபாடு கொண்டார் என்பதும் தவறாகும்.
  இது குறித்து மறைமலையடிகள் விளக்கும் பொழுது அக்காலத்தில்,  சமற்கிருதப் புலவர்கள் தமிழ்நெறிக்கு மாறாக எழுதி வந்தமையால், சமயநூல் படைப்பாளர்கள்,  அவற்றை மறுப்பதற்காக இத்தகைய நடையைத் தேர்ந்தெடுத்திருந்திருக்கிறார்கள் என்கிறார். எனினும்,
இங்ஙனமாக வடநூல் தமிழ்நூல்களில் அரிதின்  உணர்தற்பாலனவாய்க் கிடந்த சமய நுண்பொருள்களையெல்லாம் எண்ணிறந்த சொற்பொழிவுகளானும் பற்பல நூல்களானும் வெளிப்படுத்திஇத்தென்னாட்டின்கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடரென உலவித் தமிழ்மக்கள் உள்ளத்துப் பரவியஅறியாமை இருளைப் போக்கிஅவர்க்கு அறிவொளி காட்டிய சித்தாந்த ஆசிரியரான சோமசுந்தரநாயகரவர்கள் தாம்அரிது முயன்றெழுதிய பல நூல்களையுந் தனிச் செந்தமிழ் உரை நடையில் எழுதியிருந்தனர்களாயின் அது தமிழுக்கும் அவை தமிழ்மக்கட்கும் விலையிடுதற்கரிய முழுமணிகள் நிறைந்த கருவூலமாய்ச் சிறந்து திகழா நிற்கும்”  என்றும் மறைமலையடிகள்  கூறுகிறார்.
 அதே நேரம்,  “அவர்கள் இயற்றிய பல தமிழ்ச்செய்யுட்களானும் ஆசார்யப் பிரபாவம் என்னும் தமதரிய  நூலின் பல இடங்களில் அவர்கள்  செந்தமிழ்ச் சுவை பெருகவெழுதிய உரைப்பகுதிகளானும்   இவர் தனித்தமிழில் எழுதும் வல்லமை பெற்றவர் என்பது நன்கறியப்படும் என்கிறார் மறைமலையடிகள் .
 மேலும் இவரது 39 அகவைக்குப் பின்னரே தனித்தமிழ்ப் பேரிலக்கணமான தொல்காப்பியமும் தனித்தமிழ் இலக்கியங்களான பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலியனவும் வந்தமையால் அவற்றைப் படிக்கும் வாய்ப்பு பெறாமையும் தனித்தமிழ் நடை இல்லாமைக்குக் காரணம் என்கிறார் மறைமலையடிகள்.
“நாயகரவர்களின் அரிய பெரிய ஆராய்ச்சியுரைகள் தனிச்செந்தமிழ் உரைநடையில் எழுதப்பட்டிருக்குமாயின் அவை தமிழுக்குப் பெரியதோர் அறிவுக்களஞ்சியமாய் இருந்திருக்கும். ஆனால், அவை வடசொற்கலப்பு மிகுதியும் உடைய உரைநடையில் அமைந்தததே தமிழ்மொழிக்கு ஒரு பேரிழப்பாயிற்று.”
 என்றும் மறைமலையடிகள் தெளிவாகக்  கூறுவதால், சமயம் சார்ந்த நூல்களில் சமற்கிருதக் கலப்பு நடையே இவரின் நடையாக இருந்தது எனலாம்.
  செந்தமிழ்நடையில் பெரு விருப்பு கொண்டிருந்த  மறைமலையடிகள் தம் ஆசிரியர்போல் சமற்கிருதம் கலந்தும் சில நூல்கள் எழுதினார். தம் ஆசிரியரிடம் எவ்வாறு எழுத வேண்டும் என்று கேட்டதற்குச் சோமசுந்தர(நாயக)ர், “நீ என் நடையைப் பின்பற்ற  வேண்டா. உன் செந்தமிழ்நடை இனிமையாக உள்ளது. அதையே பின்பற்றுக” எனக் கூறி மறைமலையடிகளின் தமிழ்நடைக்கு ஊக்கமளித்துள்ளார்.
நூல்கள்:
 வேதசமாசம், பிரம்மசமாசம்  ஆகிய வழியில், உருவவழிபாடு கூடாதென்று வெளிவந்த நூலொன்ற‌ை மறுத்து 22 ஆம் அகவையில் எழுதிய  வேதபாஃக்யசமசகண்டநம  என்பதே இவரது முதல் நூலாகும்.
  சோமசுந்தர(நாயக)ருக்கும் மறைமலையடிகளுக்கும் இடையே ஆசிரியர் மாணவர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டுத் தந்தை-மகன் உறவுபோல் பிணைப்பு இருந்தது. சோமசுந்தர(நாயக)ர் மாசி 11, 1932 / பிப்.22, 1901 அன்று மறைந்தபோது மறைமலை யடிகள் சோமசுந்தரக் காஞ்சியைப் பாடினார். மேலும் சோமசுந்தரக் காஞ்சியாக்கம்,  ‘சோமசுந்தர நாயகர் வரலாறு‘ என்னும் நூல்களையும் மறைமலையடிகள் எழுதினார்.
வான்மதி மீனினநீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ
   மல்லலங் கற்பமரஞ் சிவம்வீசியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ
நான்முக னான்மறையுட் பொருள்கூற  நலத்தக வந்ததுவோ
  நல்லகல்லாலமர் நம்பர் கைகாட்டுரை நாட்டவெ ழுந்ததுவோ
மான்மக ணாமகடூ மகள்கூடி வளந்தர வந்ததுவோ
   மாதவவாழ் வொடுமில்வினை காட்டிட வள்ளுவர் வந்ததுவே
சூன்முதிர் வண்பயனூன் முறைதந்து சுரந்திமட வந்ததுவோ
   சோமசுந்தர னெனூநாம மொடிங்கு நீ தோன்றிய தெங்குருவே
நாயினிழிந் தவெம்புன்மை களைந்து நலந்தர வந்தனையோ
  நல்லது தீயது நன்றுபகுத்து நவின்றிடவந்தனையோ
தாயினுமென் னுயர்தந்தை யினும்முயர் தன்மையில் வந்தனையோ
  தண்டமிழிற் படுவண்டுறை நன்றுநீ தந்திட வந்தனையோ
காயினுமல் லதுவப்பினு  மன்பது காட்டிட வந்தனையோ
  கன்மனமி யாவுமொர்நன் மனமாயெமைக் காத்திட வந்தனையோ
என மறைமலையடிகள் சோமசுந்தரக் காஞ்சியில் தன் ஆசான் சோமசுந்தர(நாயக)ர் குறித்துக்  கூறியுள்ளமை சோமசுந்தரரின் சிறப்பையும் இருவர்கிடையேயிருந்த உறவையும் தெள்ளிதின் விளக்குகின்றது.
– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி18092019

Monday, September 02, 2019

தமிழ்க்காப்பு உணர்வின் வித்து – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

தமிழ்க்காப்பு உணர்வின் வித்து இலக்குவனார்

தமிழ்க்கடல் மறைமலை அடிகள் வழியில் தனித்தமிழ் உணர்வை ஊட்டிப் பரப்பிய அறிஞர்கள் பலர் உள்ளனர். ஆசிரியப் பணி மூலமும் இயக்கங்கள் மூலமும் பரப்புரை மூலமும் படைப்புகள் மூலமும் இதழ்கள் மூலமும்  விழாக்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் எனப் பலவகைகளில் தனித்தமிழ் பரப்பித் தூய தமிழ்க் காவலராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார்[தோற்றம்:  கார்த்திகை 01,  தி.பி.1940(17.11.1909); மறைவு: ஆவணி 18, தி.பி.2004 (03.09.1973)]  மட்டுமே!
அவருக்கு வழங்கிய பட்டங்களும் சிறப்பு அடைமொழிகளும் நூற்றுக்கு மேற்பட்டன.  அவற்றுள், இலக்கணச் செம்மல், சங்கத்தமிழ் வளர்த்த சான்றோர், செந்தமிழ்மாமணி, செந்தமிழ் நலம் பேணும் செல்வர், தமிழ் ஞாயிறு, தொல்காப்பியச்செல்வர், முத்தமிழ்க்காவலர், தமிழ் மொழியின் தனிச்செல்வர், தமிழ்க் கொண்டல், தமிழ்த்தாய் முதலிய பட்டங்கள் அவரின் பிறமொழிக் கலப்பில்லாத செந்தமிழ்ப்புலமையையும் அவற்றை மக்களிடையே கொண்டு சென்ற பரப்புரைகளையும் உணர்த்துவன.
தன்மானத்தமிழ் உணர்வு ஆசிரியர்களின்  மாணாக்கராகப் பள்ளியில் இவர் படித்தது இவரின் கிடைத்தற்கரிய பேறு என்று சொல்ல வேண்டும். இவர்களால் பள்ளி வாழ்க்கையிலேயே தூயதமிழ் உணர்வு இவரிடம் முளைவிட்டுப் பரவலாயிற்று. பள்ளியில் பாராட்டு விழா, வழியனுப்பு விழா முதலான விழாக்கள் நடைபெறும்பொழுது நல்ல தமிழில் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றார்.
புலவர் கல்லூரி மாணாக்கனாக இருந்த பொழுது உடன் படித்த நண்பர்களை இணைத்துக் கொண்டு விடுமுறைகளில் தூயதமிழ்ப் பரப்புரை மேற்கொண்டார். இளம்புலவர் வகுப்பில் படிக்கும்பொழுது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்க் குறும்பாவியத்தை எழுதினார். படிக்கும் பொழுதே தனித்தமிழ்ப்பாவலாகத் திகழ்ந்து தூயதமிழ் வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டார்.
வகுப்பில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பி.சா.சுப்பிரமணிய(சாத்திரியார்)தொல்காப்பியத்தின் தொன்மையைச் சமசுகிருத நூல்களுக்குப் பின்னராகக் கற்பித்தார். தமிழ்ச்சொற்களின் மூலமாகச் சமசுகிருதச் சொற்களைக் காட்டினார். தூயதமிழ்க்காப்பு என்பது பிற மொழிச்சொற்களை அகற்றி நல்ல நடையைப் பேணுவது மட்டுமல்ல. தமிழின் மீது திணிக்கப்பட்ட அயல்கருத்துக் கறைகளைப் போக்குவதும்தான் என்பதே இலக்குவனாரின் இலக்கு. எனவே, அவற்றை உடனுக்குடன் ஆதாரங்களுடன் மறுத்தார். இதன்மூலம் உடன் பயில்வோருக்கும் தமிழ்க்காப்பு உணர்வு வரலாயிற்று.
தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து முதல்வராகப் பணி நிறைவு பெற்றது வரை தூயதமிழை வளர்க்கும் பணிகளிலேயே ஈடுபட்டார். வருகையின் பொழுது “Yes Sir”, “Present Sir”  என்றெல்லாம் சொல்வதற்கு முற்றுப்புள்ளி இட்டார். “உள்ளேன் ஐயா” எனச் சொல்ல வைத்தார்.  பின்னர் “உள்ளேன் ஐயா” என்பது தமிழ்நாடு முழுவதும் பரவியது.  விளையாட்டிலும் அனைவரும் எண்களைத் தமிழில் சொல்லவும் ‘Love all’ என்று சொல்லாமல் அன்பே கடவுள்’ என்று சொல்லவும் வைத்தார்.  வகுப்பில் பிற சொற்கள் கலப்பில்லாமல் நல்ல தமிழிலேயே பேசவேண்டும் என்ற உணர்வை விதைத்தார். அப்படி யாரும் தவறுதலாகப் பிற மொழிச்சொல்லைப் பயன்படுத்தினால், “ஐயா, நம் வகுப்பில் மறந்தும் பிற சொல் பேசலாமா ஐயா. அதற்காகவா நான் இத்தனை பாடுபடுகிறேன் ஐயா” என வருந்தி உரைப்பார்.
பேராசிரியர் இலக்குவனார் “இனிய எளிய தமிழைப் பயன்படுத்த வேண்டும். அதுவே தமிழ் வளரும் வழி.” என்னும் நோக்கம் கொண்டவர். எனவேதான் சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு முதலான திங்களிதழ், திங்களிருமுறை இதழ்கள், நாளிதழ் எனப் பலவகைகளிலும் இதழ்கள் மூலம் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு சேர்த்து மக்களின் அறிஞராகத் திகழ்ந்து தூய தமிழைப் பரப்பினார். ‘Dravidian Federation’, ‘Kural Neri’ ஆகிய ஆங்கில இதழ்கள் நடத்தி அவற்றின் மூலம் தூய தமிழ்ப்பண்பாட்டையும் தூய தமிழ் நெறியையும் தமிழ் அறியாதவர்க்கு உணர்த்தினார்.
இவர் பாடங்கள் நடத்தும் பொழுது தொடர்புடைய வேர்ச்சொல் விளக்கங்கள், தமிழ்ச்சொற்களின் தொன்மை, தமிழ்ச்சொற்களில் இருந்து உருவான சமசுகிருதச் சொற்களை மூலச்சொற்களாகக் காட்டும் அறியாமை ஆகியவற்றை விளக்கினார். “தமிழைச் சிதைக்கும் அயற்சொற்களை அகற்றுவதும் இனி அயற்சொற்கள் நுழையாமல் தடுப்பதுமே தமிழாசிரியர் கடமை” என்ற அவர் தாமும் அவற்றைப் பின்பற்றினார். புலவர் விழாக்களையும் இலக்கிய விழாக்களையும் நடத்தித் தூயதமிழ் உணர்வுகளை மாணாக்கர்களிடையே பரப்பினார். தனிப்பட்ட வகுப்புகள் நடத்திப் பொதுமக்களும் தமிழ்ப்புலவராக வழி வகுத்தார். மக்களிடையேயும் தூய தமிழ் உணர்வைப் பரப்பினார். மக்கள் பெயர்களைத் தமிழில் சூட்டவும் கடைப்பெயர்களைத் தமிழில் இடவும் ஊர்வலங்கள் மூலம் எழுச்சி ஏற்படுத்தினார். தமிழுக்காக ஊர்வலம் நடத்துவதில் இவரே முன்னோடி! தனித்தமிழ்க்காப்புத் தலைவராகப் பன்முகச்சிறப்புடன் திகழ்ந்து  தூயதமிழ் பரப்பியவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்.
தூயதமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நாமும் மொழித்தூய்மை பேணுவோம்! தமிழின் புகழை நிலைக்கச் செய்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 03.09.2019

Sunday, August 25, 2019

செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம்! – பேராசிரியர் சி. இலக்குவனார்



செந்தமிழ்ப் பெரியார் திரு.வி..வைப் போற்றுவோம்!

  செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ் வித்தகராய், தமிழ் உரை நடைத் தந்தையாய், சொற்பொழிவுக் கொண்டலாய்,  செய்தி இதழ் ஆசிரியராய், தொழிலாளர்களின்  தோழராய், அரசியல் அறிஞராய், மார்க்சியம் போற்றுபவராய், பெண்மை போற்றும் பெருந்தகையாய், மாணவர் நண்பராய், சமரச சன்மார்க்க  அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் திங்களில் (17.9.53) செந்தமிழ் நாட்டைவிட்டு மறைந்து விட்டார்.
 தமிழை வளர்க்கும் தலையாய பணியில் ஈடுபட்டு அருந்தொண்டாற்றிய பெருமை அவர்க்கு நிறைய உண்டு. அவர்தம் தொண்டால் இன்று நாடு முழுவதும் அரசியல் மேடைகளில் தமிழ் மணம் வீசுகின்றது. எங்கும் தமிழ்ப் பேச்சுக் கேட்கின்றது. தமிழ்! தமிழ்! என்னும் முழக்கம் யாண்டும் வானைப் பிளந்து எழுகின்றது.
  திரு.வி.க.வினுடைய எழுத்துகளில் அழகு ததும்பும். இனிமை சொரியும். இசை நடனமிடும் அவர் எழுத்தோவியங்கள் உயர்தனிச் செம்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவன. அவர் இயற்றியுள்ள ஒவ்வொரு நூலும் ஒவ்வோர் இலக்கியமாகத் தோன்றும். ஒவ்வொரு குறிக்கோளை விளங்கி நிற்கும்.  அவர் யாத்த நூல்களுள் ‘பெண்ணின் பெருமை’, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்னும் பாரதி கருத்துக்கு ஏற்புடையது.  ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்னும் இராமலிங்க அடிகளாரின் அடியொற்றியது. ‘கடுவன் காட்சியும் தாயுமானாரும்’, அறிவே தெய்வம் என்று கூறிய தாயுமானாரின் பொன்மொழியை விளக்கும் பான்மையது. ‘கிருத்துவின் அருள்வேட்டல்’, அன்பே கடவுள் எனும் இயேசுநாதரின் கட்டளைக்குரியது. இங்ஙனம் பல உயர் குறிக்கோள்களை விளக்குவதற்கு எழுந்த நூல்கள் யாவும் இலக்கியம் என்னும் பெயருக்கேற்ப அமைந்தனவாம். இலக்கியம் என்றால் குறிக்கோளை இயம்புதல் என்று தானே பொருள்.
                 அவர் வழிநின்று நற்றமிழ்த் தொண்டாற்றுதல் நம்மனோர் கடனாகும். புலவரைப் போற்றும் நாடே பொன்னாடாகும். செந்தமிழ்ப் புலவராம் திரு.வி.க.வைப் போற்றுவோம். நம் செந்தமிழ் காப்போம் என உறுதி பூண்போம். வாழ்க திரு.வி.க.வின் புகழ்! வளர்கதமிழ்!
தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி. இலக்குவனார்
000

திரு.வி..வின் கருத்துத் துளிகள்

தாய்மை மலர்ந்தால் இறைமை கனியும்

   பெண்மணியின் வாழ்விலே மூன்று நிலைகள் முறை முறையே அரும்பி மலர்ந்து கனிதல் வேண்டும். அவை பெண்மைதாய்மைஇறைமை என்பன. இம்மூன்றினுள் மிகச் சிறந்தது தாய்மை. பெண்மை, தாய்மை மலர்ச்சிக்கென ஏற்பட்டது. தாய்மை மலர்ந்தால் இறைமை தானே கனியும். இறைமை கனிவுக்குத் தாய்மை இன்றியமையாதது. தாய்மை மலராவிடத்தில் இறைமை கனியாது. தாய்மை மலராத பெண்மையும் சிறப்புடையதன்று. ஆதலின் தாய்மை சிறந்ததென்க. தாய்மையாவது அன்பின் நிறைவு!  அன்பின் விளைவு!  அன்பின் வண்ணம்!
தமிழ்த்தென்றல் திரு.வி..:
திருக்குறள் விரிவுரைஅறத்துப்பால்பக்கம்.614
000

பிறர்க்காக வாழ்வதே வாழ்வாகும் 

 மனிதன் எத்தகைய வழக்க வொழுக்கமுடையனாயினும் ஆக; எத்தகையத் தொழின் முறையின் ஈடுபட்டவனாயினும் ஆக; அரசனாயிருப்பினும் இருக்க; ஆண்டியாயிருப்பினும் இருக்க; நீதிபதி தொழில் செய்யினுஞ் செய்க; வாயில்காப்பு வேலை புரியினும் புரிக; எவரெவர் எந்நிலையில் நிற்பினும் நிற்க; எக்கோலங் கொள்ளினுங் கொள்க. மெய்யறிவு என்னும் ஞானம்பெற எவருங் காட்டுக்குப்போக வேண்டியதில்லை. நடு நாட்டில் மனைவி மக்கள் உற்றார் பெற்றார் உறவினர் இவரோடு வாழ்ந்தும், பலவகைத் தொழில்களைச் செய்தும் ஞானியாகவே இருக்கலாம். வேண்டு ஒன்றே; அது, நாம் பிறர்க்காக வாழ்கிறோம்’ என்று எண்ணங் கொண்டு வாழ்வதேயாகும்.
தமிழ்த்தென்றல் திரு.வி.. :
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்பக்கம்.23
000

திருவள்ளுவர் நூல் முப்பால் உலகுக்குப் பொது 

திருவள்ளுவர் நூல் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற முப்பாலால் ஆக்கப்பட்டது. அறமும் பொருளும் காதலும் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியன அல்ல. அவை மன்பதைக்கு – உலகுக்குப் பொது.
திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும் போதே, உலகமும் உடன் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றுதற்குக் காரணமென்ன? திருவள்ளுவர் உலகையே குறளாக எழுதினார். உலகின் எழுத்தோவியம் திருக்குறள் என்று கூறலாம்.
திருவள்ளுவர் உலகுக்கு என்றே பயின்றார்; உலகுக்கு என்றே வாழ்ந்தார்; அதனால் அவர்தம் உள்ளத்தில் உலகம் நின்றது. அவர் உலகம் ஆயினார்.. உலகம் அவராயிற்று. இத்தகைய ஒருவரிடமிருந்து பரிணமித்த ஒரு நூல் எந் நினைவையூட்டும்? அ·து உலக நினைவை ஊட்டுதல் இயல்பே. ஆகவே திருவள்ளுவர் நினைவு தோன்றும் போது உலகமும் உடன் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை.
திருவள்ளுவர் அருளிய திருக்குறள் என்னும் தெய்வ மறையினிடத்தில் எனக்குத் தணியாக காதல் உண்டு. காரணம் பலப்பல. சில வருமாறு: திருவள்ளுவர் முப்பால் கூறி வீட்டுப்பால் விடுத்தது. அறப்பேற்றுக்கு இல்வாழ்க்கையைக் குறித்தது. பெண்ணை வெறுத்தல முதலிய போலித் துறவுகளைக் கடிந்தது. மனமாசு அகற்றலே துறவென்று இயற்கை நுட்பத்தை விளக்கியது. இயற்கைப் பொது நெறியை அறிவுறுத்தியது. இன்ன பிற.
தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்

000

திருக்குறளின்படி ஒழுகுங்கள்

 தமிழ்நாட்டுச் செல்வர்களே! நீங்கள் பிறந்த நாடு, திருவள்ளுவர் பிறந்தநாடு. அப்பெரியார் நூல் உங்கள் கையில் விளங்குகிறது. அதுவே உங்களுக்கு உரிமை கொடுக்குங் கருவி. அதை ஓதுங்கள்; அதன்படி ஒழுகுங்கள்; ஒத்துழையாமையின் பொருளை ஓருங்கள். ஐம்பெரும் பாவத்துடன் ஒத்துழையாமை என்பதே அதன் பொருள். விரிந்து பரந்த நாடுகளை ஆளும் முறையில் ஐந்து பாவங்கள் புத்திபூர்வமாகவோ அபுத்தி பூர்வமாகவோ நிகழ்ந்துவிடும். ஆதலால், அப்பாவங்கள் நிகழாதவாறு காத்துக்கொள்ளும் கிராம ஆட்சியை -பழைய கிராமப் பஞ்சாயத்தை – தொழிலாளர் ஆட்சியை பொருளில் பிறந்து, அறத்தில் அமர்ந்து, இன்பத்தை ஈந்து, வீடுபேற்றை அளிக்கவல்ல ஞான அரசியலைப் பெற முயலுங்கள். இதன் பொருட்டு உங்கள் உடல் பொருளை ஆவி மூன்றையும் தத்தஞ் செய்யவும் சித்தமாயிருங்கள். உங்கள் முயற்சியால் எல்லா நலனும் ஆண்டவனருளால் விளையும்.
 தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்
000

கீர்த்தனையால் விளைந்த நலன்சிறிதுதீங்கோ பெரிது!

தமிழ்நாடு விருந்தோம்புவதில் பெயர் பெற்றது. எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது. கீர்த்தனையால் நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது; தீங்கோ பெரிது.
            கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன. அந்நாளில் பெரும்பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத்தாண்டவர், கோபாலகிருட்டிண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர் பெருஞ்சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறியலாயின… இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர். அவை ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன. அவ்வணியைத் தாங்க அவற்றால் இயலவில்லை. கலையற்ற கீர்த்தனைகளின் ஒலி, காதின் தோலில் சிறிது நேரம் நின்று, அரங்கம் கலைந்ததும் சிதறி விடுகிறது. இதுவோ இசைப்பாட்டின் முடிவு?
தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்:
முல்லைபாரதிதாசனின் முதல் வெளியீடு,பக்கம் 05
தினச்செய்தி, 26.08.2019