Sunday, October 30, 2022

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்- ப. மருதநாயகம்

 

அகரமுதல




(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

பின்னிணைப்பு

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

4/5

  • 10. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

பத்தாம் கட்டுரை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் குறித்தது.

“தேவநேயப் பாவாணர், தமிழ்மொழியே முதல் மாந்தன் பேசிய மொழியென்றும் தமிழினமே முதலில் தோன்றிய மாந்த இனமென்றும் குமரிக் கண்டமே மாந்தர் முதலில் வாழ்ந்த நிலப்பரப்பென்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டிற்கு வடமொழி இலக்கணம் பண்பாடு ஆகியவை பெரிதும் கடன்பட்டிருக்கின்றனவென்றும் தக்க சான்றுகளுடன் நாளும் முழங்கி வந்தவர். … மொழியியல் துறைக்கும் தமிழ்மொழி ஆய்விற்கும் அவரது பங்களிப்பு பெருமைக்கு உரியது  எனக் கூறுகிறார் ஆசிரியர். உலக முதன்மொழி ஆய்வாளர் இலெவிட்டு (Stephen Hillyer Levitt) தேவநேயன் ஒரு மொழியியல் விற்பன்னர்  … உலகெங்குமுள்ள விற்பன்னர்களால் மதிக்கப்பட வேண்டியவராகிறார். “தமிழ்மொழியின் பெருமையை வேர்ச்சொல் ஆய்வின் மூலம் எடுத்துரைத்த பாவாணர் தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியற்றின் உயர்வைத் தமதுதமிழ்இலக்கிய வரலாற்றின் மூலம் உலகிற்கு உணர்த்தினார்” என்கிறார் ஆசிரியர்.

  • 11. பேராசிரியர் கைம் இராபின்

பதினோராம் கட்டுரை பேராசிரியர் கைம் இராபின் குறித்தது.

இசுரேல் பல்கலைக்கழகத்தில் பணி செய்த யூதப் பேராசிரியராகிய கைம்ராபின் ஓர் அரிய ஆங்கிலக் கட்டுரையின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளிலேயே தமிழ் செம்மொழித் தகுதியுடையது என்பதை ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ளார். …. நீண்ட காலமாக வழக்கொழிந்திருந்த எபிரேய மொழிக்குப் புத்துயிர் தந்த பின் அது கல்லூரிகளிலும் பாடமொழியாகிறதென்றால், சொல் வளம் மிக்கதும் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து உயிர்த்துடிப்புடன் செயல்படுவதுமான தமிழ் ஏன் பயிற்றுமொழியாக இருத்தல் கூடாது என்று வினா எழுப்பியதை ஆசிரியர் நமக்கு எடுத்துரைக்கிறார்.

தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் தமிழகத்து முச்சங்கங்கள் சைவர்கள் கட்டிவிட்ட கற்பனைக் கதையென்றும் கடைச்சங்க இலக்கியங்களெல்லாம் கி.பி. ஆறு, ஏழாம் நூற்றாண்டிற்குப் பின் எழுதப்பட்டவை யென்றும் வெற்றியோடு பரப்புரை செய்துகொண்டிருந்த காலத்தில் தமிழ் அக இலக்கிய மரபு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நிறுவும் கட்டுரையைக் கைம் இராபின் எழுதியது அவர்களுக்கு விடுக்கும் அறைகூவலாகும். அதற்கு எதிர்வினை ஏதும் செய்யாது அவ்வறிஞர்கள் வாயடைத்துப் போயினர் என்பதைச் சொல்லத் தேவையில்லை என்று கட்டுரையை முடிக்கிறார் ஆசிரியர்.

  • 12. அ. கி. இராமானுசன்

பன்னிரண்டாம் கட்டுரை அறிஞர் ஏ.கே.இராமானுசன் குறித்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளையும் கற்றறிந்த அறிஞர் அ.கி.இராமானுசன், ஒப்புமைக் கருத்துகள் மூலமும் ஆய்வுக் கருத்துகள் மூலமும் ஆய்வறிஞர்கள் கருத்துகள் மூலமும் மொழிபெயர்ப்புகள் மூலமும் உயர்தனிச்செம்மொழிக்குக் குரல் கொடுத்துள்ளார்.

குப்புதர்களின் காலத்தில் சமற்கிருதமும் பிராகிருதமும் பேச்சுவழக்கில் இல்லை, கி.பி.ஐந்தாம் நூற்றாண்டின் காளிதாசன், அரசவையில் சமற்கிருதத்தையும் குடும்பம், அன்றாட நடவடிக்கை ஆகியற்றில் உஞ்செயின் கிளைமொழி ஒன்றையும் பயன் படுத்தியிருப்பார், இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் பத்தாம் நூற்றாண்டு வரை எந்த விதமான இலக்கிய வடிவமும் இல்லை  எனச் சமற்கிருதத்தோடு ஒப்பிட்டுத் தமிழின் சிறப்பை விளக்கியுள்ளார்.

அறிஞர் தானியல் இங்கால்(Daniel H.H.Ingalls) சமற்கிருதம் ஒரு குடும்ப மொழியாக இருந்ததில்லை என்றும் தொடர்பாகவும் கூறிய கருத்துகளையும் சமற்கிருதத்தின் “அகில இந்தியத் தன்மை”பற்றிய பேச்சிற்கு வரலாற்று உண்மை அறிந்த அறிஞர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதையும் மொழியியல் பேராசிரியர்கள் ஏ.எல்.பெக்கர் (A.L.Becker), கீத்து தெயிலர் (Keith Tailor) ஆகியோருடனான கலந்துரையாடலில் உலக மொழி இலக்கண நூல்களிலெல்லாம் தொல்காப்பியத்தை ஒத்தது வேறில்லை என்று உரைத்ததையும் அறிஞர் இராமானுசன் விளக்குவதை ஆசிரியர் நமக்கு எடுத்துத் தருகிறார்.

மொழிபெயர்ப்புகள் மூலமாகச் சங்க இலக்கியங்களை உலக அறிஞர் அரங்கிற்குக் கொண்டு சென்றவர்களில் பெரும்பங்களிப்பு செய்தவர் அ.கி.இராமானுசன் என ஆசிரியர் பாராட்டுகிறார். சங்கக் கவிதையானது பிற இந்தியமொழிக் கவிதைகளினின்றும் முற்றிலும் வேறுபட்டதென்பதையும் உலகிற்கு உணர்த்தியவர் அ.கி.இராமானுசன் என்கிறார் ஆசிரியர். தமிழ்,கன்னட இலக்கிய மொழிபெயர்ப்புகளுடன் இராமானுசனின் ஆங்கிலக் கவிதைகளும் இலக்கிய உலகில் சிறப்பு பெற்றவை என்கிறார் ஆசிரியர். அவற்றின் சுவையறிவதற்காகச் சில மொழிபெயர்ப்புப் பாடல்களையும் நமக்கு அளித்துள்ளார் ஆசிரியர்.

மொழிபெயர்ப்பிற்குக் கடினமான நம்மாழ்வாரின் 83 பாடல்களைப் பிறர் பாராட்டும் வண்ணம் மொழிபெயர்த்துள்ளார். இராமானுசன் பல பாடல்களை ஆங்கிலத்தில் தரும்போது வெற்றி பெறுகின்றாராயினும் அவருடைய இந்து சமய வெறுப்பும் சிகாகோ பின்புலமும் சிற்சில இடங்களில் மூலத்திற்கு ஊறுசெய்யும் வகையிலும் மூலத்தைத் தவறாகப் புரிந்து கொள்ள நேரும் முறையிலும் அமைந்துள்ளன என நடுநிலையுடனும் ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழி பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பிய-சங்கக்கவிதையியல் பற்றியும் அரிய ஆய்வுமுடிவுகள், புத்தொளிகள் நிறைந்த கட்டுரைகள் மூலமாகவும் தேர்ந்தெடுத்த சங்க இலக்கியப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள் மூலமாகவும் உலக இலக்கிய அரங்கில் தமிழுக்கு உரிய இடத்தைப் பெற்றுத்தந்தவர் என்ற பெரமைக்குரியவர் என்னும் முத்தாய்ப்புடன் ஆசிரியர் இராமானுசன் குறித்த கட்டுரையை முடிக்கிறார்.

  • 13. அறிஞர் பிரான்சுவா குரோ

பதின்மூன்றாம் கட்டுரை பிரான்சு நாட்டு அறிஞர் பிரான்சுவா குரோ குறித்தது.

தமிழ் மொழி, இலக்கணம், இலக்கியம், பண்பாடு, நாகரிகம்பற்றிப் பொதுவாகவும் பரிபாடல், திருக்குறள், உரையாசிரியர்கள், பெரியபுராணம்பற்றிக் குறிப்பாகவும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ள குரோ, தமிழின் செவ்வியல் தகுதியை உரிய முறையில் எடுத்துச்சொன்ன விரல்விட்டு எண்ணக்கூடிய மேலை அறிஞர்களுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை என்கிறார் ஆசிரியர்.

  • 14. சியார்சு ஆர்த்து

பதினான்காம் கட்டுரை பேராசிரியர் சியார்சு ஆர்த்து (George L.Hart)குறித்தது.

செம்மொழிக்குரிய தகுதிகளையெல்லாம் பட்டியலிட்டு அவையெல்லாம் தமிழுக்கிருப்பதால் அதனைச் செம்மொழியென்று இந்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியவர் சியார்சு ஆர்த்து. செம்மொழித்தமிழ் பற்றியும் தமிழில் உள்ள செவ்விலக்கியங்கள் பற்றியும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ், சமற்கிருதஇலக்கியங்களின் தரம் பற்றியும் அவற்றிற்கிடையே நிகழ்ந்த கொள்ளல் கொடுத்தல் பற்றியும் சமற்கிருதப் பேராசிரியரும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், தமிழ், சமற்கிருதம் ஆகிய ஐந்து செவ்வியல் மொழி இலக்கியங்களையும் முறையாகப் பயின்றவருமாகிய சியார்சு ஆர்த்து கூறும் கருத்துகள் செம்மொழித் தமிழின் உண்மையான சிறப்பை ஒப்பிட்டு முறையில் உலகிற்கு உணர்த்துபவை என்கிறார் ஆசிரியர்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

.மருதநாயகம்

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம்சென்னை 600 100

விலை உரூபாய் 500/-



5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் ¼ – சி.பா

 அகரமுதல





(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 தொடர்ச்சி)

சான்றோர் தமிழ்

5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 1/4


பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அருந்தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர் சிலருள் குறிப்பிடத் தக்கவர் மு. இராகவை யங்கார் அவர்கள். தமிழ் மொழிப் புலமையும் வடமொழிப் புலமையும், ஆங்கில அறிவும். மிக்கவர். சேதுபதிகளின் ஆதரவாலும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தொடர்பாலும், தம் விடா முயற்சியாலும் இவர் கற்றுத் துறைபோய தமிழ்த் துறைகள் பல. இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர். இத்தகு சீர்மையாளர் தம் வாழ்க்கை வரலாற்றையும், தமிழ்த் தாய்க்கு அவர் ஆற்றிய தொண்டுகளையும் குறித்து இவண் காண்போம்.


வாழ்க்கை வரலாறு


பிறப்பும் வளர்ப்பும்


1878ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் சமத்தான வித்துவானாக விளங்கிய சதாவ தானம் முத்துசுவாமி ஐயங்கார் அவர்களுக்கு ஒரு மகனாகப் பிறந்தவர். வைணவ குலத்தைச் சார்ந்தவர். இளவயதிலேயே முத்துசுவாமி ஐயங்கார் இறந்து விட்டதால், அவர்தம் மாணவர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் இவரை வளர்த்து வந்தார்.


தொழில்

மு. இராகவையங்கார் அவர்கள் தம் பதினெட்டாம் அகவையிலேயே தம் வளர்ப்புத் தந்தை பாண்டித்துரைத் தேவர் அவர்களின் அவைக்களப் புலவர் ஆனார். 1901ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் தமிழாசிரியப் பணி புரிந்தார். 1904ஆம் ஆண்டில், பாண்டித்துரைத் தேவர் அவர்களால் 1901ஆம் ஆண்டில் செந்தமிழ்க் கல்லூரி, பாண்டியன் புத்தகசாலை இரண்டையும் உடன் அமைத்துத் தொடங்கப் பெற்ற செந்தமிழ் என்ற இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து எட்டாண்டுகள் செந்தமிழ் இதழ் ஆசிரியராகப் பணி புரிந்தார். இக்காலத்தே இவர் தமிழ் ஆராய்ச்சி உலகிற்கு அளித்த கொடை அளவிடற்கரியது. 1913 முதல் 1939 வரை ஏறத்தாழ இருபத்தாறு ஆண்டுகள் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் ஒருவராக, தலைமைத் தமிழ்ப் பண்டிதராக அமைந்து, தமிழ்ப் பேரகராதி ஒன்று உருப் பெறுவதற்குக் காரணமாகத் திகழ்ந்தார். இதன் காரண மாக அரசாங்கத்தார். இவருக்கு ‘இராவ் சாகிப்’ என்னும் விருதினை வழங்கிப் பெருமைப்படுத்தினர். 1944ஆம் ஆண்டு இலயோலாக் கல்லூரியில் பி.ஓ.எல். வகுப்புகள் தொடங்கப் பெற்றபோது, இக்கல்லூரியில் பேராசிரியர் பொறுப்பு ஏற்றார். 1945ஆம் ஆண்டில் திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில் அழகப்ப வள்ளல் அவர்கள் நன்கொடையால் தோற்றம் பெற்ற தமிழ் ஆராய்ச்சித் துறையின் பேராசிரியர் பதவியை முதன் முதலில் அணி செய்த பெருமை இவரையே சாரும். திருவனந்தபுரத்தில் கோட்டைக்குள் பத்பநாப சுவாமி கோவிலின் அருகில் உள்ள ஒரு வீட்டில் தம் மனையாளுடன் தங்கி இருந்தார். இறை வழிபாட்டில் ஈடுபாடுடைய இவர் திருவிதாங்கூர் மன்னரின் அன்பைப் பெற்றவர். திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது இவருக்கு உதவியாளராக இருந்தவர் திரு. கிருட்டிண ஐயங்கார் அவர்கள் ஆவர். 1951ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராக இருந்து அக்காப்பியத்திற்கு உரை விளக்கமும், பாடபேத ஆராய்ச்சியும் எழுதித் தமிழ்த் தொண்டாற்றினார். பதினெட்டு அகவையில் தமிழ்த் தொண்டாற்றத் தொடங்கிய . இவர் தம் வாழ்நாள் முழுமையும் தமிழுக்காக உழைத்துத் தமிழுக்காக வாழ்ந்து தம் எண்பத்திரண்டாம் அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

தமிழ்த் தொண்டு

மு. இராகவையங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நோக்கும்போது, அவர் வாழ்நாள் முழுமையும் தமிழ்த்தாயை அணி செய்வதிலேயே கழிந்தமை வெள்ளிடை மலையாகிறது. ஏறத்தாழ அறுபத்து நான்கு ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ப் பெரியார் மு. இராகவையங்கார் அவர்களின் அருஞ்செயல்களை இனிக் காண்போம்.


ஆராய்ச்சி வேந்தர் மு. இராகவையங்கார்

மு. இராகவையங்கார் அவர்களை ஆராய்ச்சி உலக முன்னோடி என்று அறிஞர்கள் ஏத்துவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இவருடைய கைவண்ணத்தால் உருப் பெற்றன. அவற்றுள் பதினான்கு நூல்கள் ஆராய்ச்சி நூல்கள். இவற்றுள் கால/வரலாற்று ஆராய்ச்சி பற்றியன சில; இலக்கிய ஆராய்ச்சி தொடர்பானவை பல; இலக்கண ஆராய்ச்சி பற்றியன சில.


கால வரலாற்று ஆராய்ச்சி பற்றியன

மு. இராகவையங்கார் அவர்களின் முயற்சியில் வெளி வந்த முதல் நான்கு நூல்களுமே கால / வரலாற்று ஆராய்ச்சிகளாகவே மலர்ந்துள்ளன. அவை 1. வேளிர் வரலாறு, 2. சேரன் செங்குட்டுவன், 3. ஆழ்வார்கள் காலநிலை, 4. சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்பன.

மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி நூல் நிரலில் முதல் இடம் பெறுவது ‘வேளிர் வரலாறு’ என்பது. இந்நூல் 1905ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய உரையின் வடிவம் இந்நூல். இந்நூல் ‘செந்தமிழ்’ இதழிலும் வெளி வந்துள்ளது, வேளிர் என்ற சொல் வேளாளர் என்ற தனிப்பட்ட ஓர் இனத்தவரைக் குறிக்கிறது என்று சுட்டி, அவ் வினத்தவரின் வரலாறாக நச்சினார்க்கினியர் கூறிய செய்திகளைப் பிற இலக்கிய சாசனச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தி, இவ்வினத்தவர் தமிழகத்தில் குடியேறிய காலம் கி. பி. பத்தாம் நூற்றாண்டு என்று வரையறை செய்கின்றது.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்

Wednesday, October 26, 2022

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் – ப. மருதநாயகம்

 அகரமுதல




(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 2/5 தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

பின்னிணைப்பு

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

3/5

  • 5. விபுலானந்த அடிகளார்

ஐந்தாம் கட்டுரை விபுலானந்த அடிகளார் குறித்தது. “யாழ்நூல் கண்ட விபுலானந்தர் தமிழிசைக்கு மட்டுமின்றி, தமிழியலின் பல்வேறு துறைகளுக்கும் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். “படைப்பிலக்கியக்காரராக, திறனாய்வாளராக, மொழியியல் வல்லுநராக, கலைவரலாற்று ஆசிரியராக, கவிஞராக, தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தவராக, தமிழினப் பாதுகாவலராக, இதழியலாளராக, அறிவியல், சமயம், தத்துவம், வரலாறு ஆகிய துறைகளில் புததொளி தந்தவராக, அவர் செய்துள்ள பணி அரியது. வேறு இந்திய அறிஞர் யாரும் இவ்வளவு துறைகளில் தடம் பதித்ததாகத் தெரியவில்லை. இஃது உயர்வு நவிற்சி அன்றென்பதை அவருடைய தமிழ், ஆங்கில நூல்களைப் படிப்பார் உணரமுடியும்.” என ஆசிரியர் குறித்துள்ளார்.

  • 6. தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்

ஆறாம் கட்டுரை தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் குறித்தது.

“இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு நூல்கள் மூலமாகவும் சொற்பொழிவுகள் மூலமாகவும் அரிய பங்களிப்பைச் செய்தவர் திரு.வி.க. எப்பொருள் பற்றிய கட்டுரையாயினும் அதனைப் படைப்பிலக்கியத் தரத்திற்கு உயர்த்தியவர். அவரது வாழ்க்கைக் குறிப்புகள் தன்வரலாறுகளில் தலையாய ஒன்றாகும். முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, தமிழ்க்கலை, தமிழ்நாடும் நம்மாழ்வாரும், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் போன்ற நூல்களில் எல்லாம் தமிழ்மொழியின் சொல்வளத்தைத் தம் உரைநடையால் யாவரும் அறிய எடுத்துக் காட்டிய பெருமை அவருக்கு உண்டு. தமிழ்ச் செவ்விலக்கியங்களை வியந்து வியந்து பாராட்டிய திரு.வி.க., தமிழுக்கும் இயற்கைக்கும் உள்ள நெடுங்கால, நெருக்கமான உறவைமீண்டும் மீண்டும் புலப்படுத்துவது அவரது வாழ்க்கை நோக்கின் சிறப்புக் கூறாகும்.” என்கிறார் ஆசிரியர்.

  • 7. அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம்

ஏழாவதாக அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் குறித்து அளித்துள்ளார்.

“மேலைநாட்டார் இலக்கியத் திறனாய்வு என்று கருதுகின்ற துறை தமிழில் தெ.பொ.மீ.யின் தோற்றத்திற்கு முன் அரைகுறையான வளர்ச்சிகூட அடைந்திருந்ததாகச் சொல்ல முடியாது. அவர் தம்முடைய நூல்கள், கட்டுரைகள் மூலமாக இவ்விலக்கிய வகையின் சீரான வளர்ச்சிக்கு உரமிட்டார். தெ. பொ.மீ.யின் கூர்த்த மதியும் இலக்கியம், வரலாறு, மொழியியல், தத்துவம், சமயம் ஆகிய பலதுறையறிவும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன், சமற்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பன்மொழிப் புலமையும் இதற்குப் பெரிதும் துணை செய்தன. தொல்காப்பியத்திலிருந்து தற்காலத் தமிழ்ப் புதினம் வரை குறிப்பிடத்தக்க எல்லா நூல்கள் பற்றியும் இலக்கியச் சிக்கல்கள் குறித்தும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் தன் கருத்துகளைத் தெளிவாக்கினார். தமிழ்மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய இரு நூல்களும் தமிழ் இலக்கியச் செல்வாக்கைத் தமிழர்க்கும் வெளிநாட்டார்க்கும் தெளிவாகப் புலப்படுத்துபவை.”

  • 8. போர் மறவர் சி.இலக்குவனார்

எட்டாவதாகப் பேராசிரியர் சி.இலக்குவனார் குறித்துக் கட்டுரை அளித்துள்ளார்.

“இலக்குவனார் பேராசிரியராகவும் திறனாய்வாளராகவும் போர் மறவராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் கவிஞராகவும் சொற்பொழிவாளராகவும் இதழியலாளராகவும் மொழியியல் வல்லுநராகவும் நிறுவன அமைப்பாளராகவும் தமிழ்வளர்ச்சிக்குச் செய்துள்ள பங்களிப்பு அரியது. அவர் காலத்துப் பிற தமிழறிஞர்களைப் போலல்லாமல், நூல்களை யெழுதுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கித் தமிழுக்காகப் போராடி, இருமுறை சிறை செல்லவும் துணிந்தவர் அவர். கொண்ட கொள்கைக்காகப் பதவியிழந்தபோதும் வறுமையில் வாடிய போதும் தன்னலம் கருதாது தமிழ்ப்பயிர்க்கு நாளும் தண்ணீர் ஊற்றியதோடு அவ்வப்போது தமிழின் உட்பகைவர்களாலும் புறப்பகைவர்களாலும் விளைந்த களைகளை யெடுக்கவும் அவர் தயங்கவில்லை. “துறைதோறும் துறைதோறும் தமிழுக்குத் துடித்தெழுந்தே தொண்டு செய்த”தோடு, “கெடலெங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி”யும் செய்தவர். என்கிறார் ஆசிரியர்.

இலக்குவனாரின் பன்முக ஆளுமையைப் பாராட்டி அறிஞர்கள் நூற்றுவருக்கு மேல்  உரைத்துள்ளனர். அவற்றுள் திரு.வி.க., அண்ணா, சுத்தானந்த பாரதியார் முதலான பதின்மரின் பாராட்டுரைகள ஆசிரியர் தந்துள்ளார். தமிழினம் இன்று அடைந்துள்ள நிலைக்கு வருந்தியும் உண்மையான தமிழர்களை அடையானம் காட்டிப் போற்றியும் இலக்குவனார் எழுதியுள்ள கவிதைகளை ஆசிரியர் நமக்குத் தந்துள்ளார். தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகவும் தொல்காப்பிய ஆராய்ச்சி நூல் வாயிலாகவும் பல்வேறு கட்டுரைகள் மூலமாகவும் இலக்குவனார் தொல்காப்பியத்தின் நுட்பங்களையும் உண்மைகளையும் எடுத்தோதுவதை ஆசிரியர் நமக்கு அளித்துள்ளார்.

“பழந்தமிழ் நூலில் வடசொற்கள் பல உள்ளன என்பது உள்நோக்குடன் செய்யப்பட்ட பரப்புரை ஆகும். அவற்றைக் காலுடுவல் கூறியுள்ள மொழியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆராய்வோமானால் அவையெல்லாம் தமிழ்ச்சொல்லே என்பது புலப்படும்.”

“தொல்காப்பியம் மிகப் பழங்காலத்தே இயற்றப்பட்டதாயினும் அதன் அணுகுமுறையும் பொருண்மையும்  இக்காலத்திற்கும் பொருந்துபவை.”

“தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றை விளக்கும்போது வடநூல்களை நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவது வருந்துவதற்குரியதாகும்.”

“அரிசுட்டாடில் கவிதையியல்(Poetics) என்ற நூலை எழுதுவதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தமிழ்ப்புலவர்கள் கவிதைபற்றி உலக மொழிகளுக்கெல்லாம் பொருந்தும் கோட்பாடுகளைத் தெளிவாக வகுத்திந்தனர்.”

“தொல்காப்பியர் ‘என்ப’, ‘என்மனார்’ என்று சுட்டும் இலக்கண வல்லுநர்களெல்லாம் அவர் காலத்திற்கு முன் வாழ்ந்த தமிழர்களே”

என்பன போன்ற இலக்குவனாரின் ஆய்வு முடிவுகளை ஆசிரியர் நமக்கு எடுத்துரைக்கின்றார்.

‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் – சங்கக்காலம்’ நூல் மூலம் சங்க இலக்கிய வாழ்வியல் சிறப்புகளை இலக்குவனார் நமக்கு உணர்த்தியுள்ளார். ‘சங்க இலக்கியம்’ என்னும் வார  இதழ் மூலம், சங்கப்பாடல்கள் பலவற்றிற்கும் எளிய விளக்கங்கள் தந்துள்ளார். இவற்றுள் சொல்லாராய்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. சங்கப்பாடல்களில் ‘தமிழ்’ என்னும் சொல் இடம் பெறுவதால், அஃது அழகிய தமிழ்ச்சொல்லே என்றும் ‘திராவிட’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது என்பது தவறான கருத்து என்றும் ‘திராவிட’ என்னும் சொல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே முதலில் தோன்றியதென்றும் இலக்குவனார் தெளிவுறுத்துவதையும் ஆசிரியர் குறிக்கின்றார்.

“திருக்குறள் பற்றி அமைச்சர் யார், எல்லாரும் இந்நாட்டு மன்னர், வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், திருக்குறள் எளிய பொழிப்புரை போன்ற நூல்களை எழுதியதோடு குறள்நெறி என்ற இதழையும் நடத்திக் குறளின் பெருமையைத் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்றார். திருக்குறள் பற்றி அவர் வாழ்நாள் முழுவதும் நிகழ்த்திய உரைகளும் பலவாகும்” என ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

தொன்மங்களை வள்ளுவர் சுட்டுவதால், அவற்றை நம்பினார் என்று முடிவெடுத்தல் கூடாதென்றும் தொன்மங்களுக்குரிய சமயத்துடன் இணைத்துப் பேசுவது தவறு என்றும் இலக்குவனார் விளக்கங்களுடன்  தெரிவிப்பன சரியே என்றும் ஆசிரியர் கூறுகிறார்.

தமிழ் மரபிலக்கணத்தில் ஆழங்கால் பட்டவராதலாலும் மேலை மொழியியல் பயின்றவராதலாலும் இலக்குவனார் ‘பழந்தமிழ்’ என்ற நூலில் தமிழ்மொழியின் சிறப்புக் கூறுகளையெல்லாம் சிறப்பாக அடையாளம் காட்டுவதாக ஆசிரியர் கூறுகின்றார்.

வடமொழி தமிழிலிருந்து எச்சொற்களையும் பெறவில்லை யென்ற பழைய குருட்டு நம்பிக்கையப் புறக்கணித்து இலக்குவனார் பல தமிழ்ச்சொற்கள் வடமொழிக்குச் சென்றுள்ளதைப் பட்டியலிட்டுத் தருவதை நமக்கு ஆசிரியர் உணர்த்துகிறார்.

தூய ஆங்கிலமொழி இயக்கத்தை எடுத்துக்காட்டாகக் கூறி இலக்குவனார் தனித்தமிழ் இயக்கத்தை எதிர்ப்போருக்குத் தக்க விடையிறுத்துள்ளதாக ஆசிரியர் சுட்டுகிறார்.

இலக்குவனார் தமிழின் எதிர்காலம் குறித்து மனம் நொந்து கூறுவது தமிழ் ஆர்வலர் யாவரும் கருத்தில் கொள்ள வேண்டிய எண்ணமாகும் எனப் பின்வரும் மேற்கோளுடன் கட்டுரையை முடிக்கிறார் ஆசிரியர். “வடமொழியை வழிபாட்டு மொழியாகவும் தெலுங்கை இசைமொழியாகவும் இந்தியை நாட்டு மொழியாகவும் ஆங்கிலத்தைப் பன்னாட்டு மொழியாகவும் ஏற்றுக் கொண்டு, தமிழுக்கு வீட்டுமொழியாகக்கூட இடம்தரத் தமிழர் விரும்பாராயின் தமிழின் தலைவிதி என்னாகுமோ” என்று இலக்குவனார் கேட்கும் கேள்வி, “விதியே விதியே தமிழச்சாதியை என் செய நினைத்தாய் “எனும் பாரதியின் அச்சத்தை நினைவூட்டும்.

  • 9. அறிஞர் தனிநாயக அடிகள்

ஒன்பதாவது கட்டுரை அறிஞர் தனிநாயக அடிகள் குறித்தது.

“தனிநாயக அடிகள் உலகின் மூத்த தமிழ்க்குடிமகனாக, தமிழ்ப்பண்பாட்டுத் தூதராக, கல்விச் சிந்தனையாளராக, ஆய்விதழ்களின் ஆசிரியராக, தரமான தமிழியல் கட்டுரைகளின் தொகுப்பாளராக, கல்விச் சிந்தனையாளராக, அருந்தமிழ் நூல்களின் பதிப்பாசிரியராக, தென்கிழக்காசியப் பண்பாட்டுக் காப்பாளராக, புலம் பெயர்ந்த தமிழர்களின் உயிர்த்தோழனாக, தமிழினப்போராளியாக, தமிழிலக்கிய வரலாற்றில் நடந்த மோசடிகளை அம்பலப்படுத்தியவராக, தமிழாய்வு மன்றங்களின் நிறுவனராக, தனித்தமிழ் ஆர்வலராகப் பார்க்கும் வகையில் அவரது பன்முக ஆளுமை அமைந்துள்ளது” என்கிறார் ஆசிரியர்.

 இலக்குவனார் திருவள்ளுவன்

உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

ப.மருதநாயகம்

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100

விலை உரூபாய் 500/-



Tuesday, October 25, 2022

உ.வே.சா.வின் என் சரித்திரம் 13

 அகரமுதல





(உ.வே.சா.வின் என் சரித்திரம் 12 இன் தொடர்ச்சி)

அத்தியாயம் 7
கிருட்டிண சாசுதிரிகள்
 (தொடர்ச்சி)

கங்கைகொண்ட சோழபுரத்தில் அவர் இருந்த காலத்தில் மூன்று பெண்கள் பிறந்தனர் அவர்களுக்கு முறையே இலட்சுமி பாகீரதி, சரசுவதி என்னும் பெயர்களை வைத்தனர். தேவ கோட்டத்திலுள்ள பிம்பங்களும் சிங்கக் கிணற்றின் கங்கையுமே அப்பெயர்களை வைப்பதற்குக் காரணமாயின.

மூன்றாம் பெண்ணாகிய சரசுவதியே என் தாயார், என் தாயாரது முகத்தின் முகவாய்க்கட்டையில் ஒரு தழும்பு உண்டு. என் மாதாமகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்ததற்கு அடையாளம் அது. என் அன்னையார் சிறு குழந்தையாக இருக்கையில் திண்ணையில் விளையாடும்பொழுது அங்கே சுவரிற் சார்ந்திருந்த காசாங் கட்டையின் நுனி கிழித்து விட்டதாம். அதனால் காயம் உண்டாகிச் சில காலம் இருந்ததாம் அந்தத் தழும்பே அது.


சில வருடங்கள் கிருட்டிண சாசுதிரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து வருகையில் ஒரு நாள் அங்கிருந்த பிராமணர் ஒருவர் இறந்தார். அவரை சமசு னத்துக்குக் கொண்டு போவதற்குப் பிராமணர் நால்வர் வேண்டுமல்லவா? கிருட்டிண சாசுதிரிகள் அந்தக் கைங்கரியத்தைச் செய்வதாக முன் வந்தார். மற்றொருவரும் உடன்பட்டார். பின்னும் இருவர் வேண்டுமே; அகப்படவில்லை. வேறு வழியின்மையால், வேறு சாதியினராகிய இருவரைப் பிடிக்கச் செய்து நால்வராகக் காரியத்தை நிறைவேற்றினர்.

வைதிக சிரத்தைமிக்க கிருட்டிண சாசுதிரிகளுக்கு அந்த நிகழ்ச்சி ஒரு பெரிய கவலையை உண்டாக்கியது “நமக்கும் இவ்வாறு நேர்ந்தால் என்ன செய்வது?” என்று அவர் யோசித்தார். “இத்தகைய இடத்தில் இருப்பது தவறு” என்று நினைத்துக் கோயிலதிகாரியிடம் விடைபெற்று அவ்வூரைவிட்டுப் புறப்பட்டார்.


அப்பால் அவர் தம்முடைய மைத்துனி குமாரர்களாகிய இருவர் உள்ள கோட்டூருக்கு வந்து சேர்ந்தார். அக்கினீச்சுவர ஐயர், குருசாமி ஐயர் என்னும் பெயருடைய அவ்விருவரும் நிரம்பிய செல்வர்கள். மிகுதியான பூசுதிதியை(நிலச்சொத்தை)யுடையவர்கள்; வைதிக சிரத்தையும் தெய்வ பக்தியும் பொருந்தியவர்கள். யார் வந்தாலும் அன்னமளித்து உபசரிப்பார்கள். எந்த சா தியினரானாலும் உபகாரம் செய்வார்சள். அவர்கள் பலருக்கு விவாகங்களும் உபநயனங்களும் செய்து வைத்தார்கள். உத்தியோகசுதர்களும் வித்துவான்களும் மிராசுதார்களும் அவர்களிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தார்கள்.

கிருட்டிண சாசுதிரிகளைக் கண்டவுடன் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. “எங்கள் தகப்பனாருடைய தானத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். பல இடங்களில் நீங்கள் ஏன் அலைய வேண்டும்? இங்கேயே இருந்து உங்கள் பூசை முதலியவற்றைக் கவலையில்லாமல் செய்துகொண்டு எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றார்கள். அவர்கள் விருப்பப்படியே அவர் சிலகாலம் அங்கே தங்கியிருந்தார். ஆயினும், அவருடைய மனம் தனியே இருத்தலை நாடியது. கவலையற்றுத் தனியே வாழவேண்டுமென்று விரும்பினார். தம் கருத்தை அச்சகோதரர்களிடம் தெரிவிக்கவே, அவர்கள் முன்பே தம்மிடம் கிருட்டிண சாசுதிரிகள் அனுப்பியிருந்த தொகையோடு தாமும் சிறிது பொருள் சேர்த்துச் சூரியமூலையில் நன்செய் புன்செய்கள் அடங்கிய முப்பதுமா நிலம் வாங்கி அளித்துத் தமக்குரிய வீடொன்றையும் உதவி அங்கே சுகமாக வசித்து வரும்படி கேட்டுக்கொண்டனர்.

“பரமேசுவரனது கிருபை இந்த இடத்தில் சாந்தியோடு வாழ வைத்தது” என்ற எண்ணத்தோடு கிருட்டிண சாசுதிரிகள் சூரிய மூலையில் தனியே வாழ்ந்து வரலானார். நிலங்களைக் குத்தகைக்கு விட்டுச் சிவ பூசையிலும் மந்திர சபங்களிலும் ஆனந்தமாகப் பொழுதைப் போக்கிச் சிவ கிருபையை துணையாகக்கொண்டு திருப்தியோடு இருந்து வந்தார்.

நிலங்களைக் குத்தகை எடுத்த குடியானவர்கள் அவருக்குக் கவலை வைக்காமல் அவற்றைப் பாதுகாத்தும் அவருக்கு வேண்டியவற்றைக் கவனித்து அளித்தும் வந்தனர்.

சூரியமூலை இப்போது சூரியமலை யென்று வழங்குகிறது. கஞ்சனூருக்கு ஈசானிய மூலையில் அவ்வூர் இருக்கின்றது. ஈசானிய மூலைக்குச் சூரியமூலை யென்பது ஒரு பெயர். அதனால் இப்பெயர் வந்தது. இதனைச் சூரியகோடி யென்று வடமொழியில் வழங்குவர். அவ்வூர்ச் சிவாலயத்திலுள்ள சிவபெருமானுக்குச் சூரியகோடீசுவர ரென்பது திருநாமம். சூரியமூலை பெரிய ஊரன்று; பெரிய தலமுமன்று. ஆனால் அடக்கமாக வாழ விரும்பிய கிருட்டிண சாசுதிரிகளுக்கு அந்த மூலை ஊரே சிறந்ததாகத் தோன்றியது. “இந்தச் சின்ன ஊரிலே நீங்கள் இருக்கிறீர்களே” என்று யாராவது கேட்டால், “அனாசாரத்திற்கு இடமில்லாதது இந்த ஊர். திரண காசு ட்ட சல சமர்த்தியுள்ளது. வேறு என்ன வேண்டும்?” என்று விடையளிப்பார். (திரணம்-புல்; காட்டம்-விறகு.) பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், சுநானத்திற்குத் தீர்த்தமும் நிரம்பின இடம் வசிப்பதற்குக் தகுதியுள்ள தென்பது அவர் கருத்து.

சூரியமூலைக்கு வடபால் பழவாறு என்ற நதி ஓடுகிறது. காவிரியிலிருந்து வயல்களுக்குப் பாய்ந்த கழிவு நீரோடை அது. அது முதலில் ஓட்டை வாய்க்காலென்னும் பெயரோடு வருகிறது. அதுவே பழவாறாகிப் பிறகு விநாயகநதி யென்ற பெயரைப் பெறுகிறது. திருவெண்காட்டுக்கருகில் மணிகர்ணிகை என்னும் தீர்த்தமாகிப் புராணத்தாற் பாராட்டப்படும் பெருமையை உடையதாக விளங்குகின்றது.

கிருட்டிண சாசுதிரிகள் அந்தப் பழவாற்று சுநானத்தையே கங்கா சுநானத்திலும் பெரியதாக நினைத்தார். தம்முடைய வீட்டின் பின்புறத்திலும் மேல் பக்கத்திலும் உள்ள விசாலமான இடங்களில் பலவகையான புட்ப மரங்களும் செடிகளும் கொடிகளும் பஞ்ச பில்வங்களும் வைத்துப் பயிர் செய்தார். அவற்றிலிருந்து நாள்தோறும் மிகுதியான புட்பங்களையும் பத்திரங்களையும் பறித்துப் பூசை செய்வார். அபிசேகத்திற்குப் பசுவின் பாலும் அருச்சனைக்கு வில்வமும் இல்லாமல் பூசை செய்யமாட்டார். அருச்சனைக்கு மலர் தரும் பூஞ்செடிகளை வைத்துப் பாதுகாத்தது போலவே அபிசேகத்துக்குப் பால் தரும் பசுக்களையும் அவர் அன்போடு வளர்த்து வந்தார். மாலை வேளையில் தாமே புல் பறித்து எடுத்து வந்து பசுக்களுக்குப் போடுவார். அவர் நினைத்திருந்தால் தம் நிலங்களில் பயிர்செய்து பொழுதுபோக்கலாம். அவர் கருத்து அதில் ஊன்றவில்லை. தம்முடைய பூசைக்கு வேண்டிய மலர்களை உதவும் மலர் வனத்தைப் பயிர் செய்வதில்தான் அவருடைய விருப்பம் சென்றது. மகா கைலாச அஷ்டோத்தரம் சொல்லி அம்மலர்களால் அருச்சனை புரிவதே அவருக்கு இன்பத்தைத் தந்தது.

விடியற்காலையில் எழுந்திருப்பதும் பழவாற்றில் சு நானம் செய்வதும் அனுசுட்டானங்கள் செய்வதும் விரிவாகப் பூசை செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறப் பிற்பகல் இரண்டு மணி வரையில் ஆகும். அப்பால் போசனம் செய்வார். பிறகு சிவநாமம் செய்துகொண்டே இருப்பார். மாலையில் சென்று பசுவுக்குப் புல் எடுத்து வருவார். சந்தியா காலத்தில் சந்தியா வந்தனம் செய்துவிட்டுத் தம்முடைய ஆத்மார்த்த மூர்த்தியாகிய சிதம்பரேசருக்கு அர்ச்சனையும் நிவேதனமும் கற்பூர ஆரத்தியும் செய்வார். பிறகு உண்பார். எப்போதும் சிவநாமசுமரணையை மறவார்.

சூரியமூலைக்கு வந்த பிறகு அவருக்குச் சுப்பலட்சுமி யென்னும் பெண்ணும் சிவராமையர் என்னும் குமாரரும் மீனாட்சி யென்னும் குமாரியும் பிறந்தார்கள்.

என் தந்தையாருக்கு விவாகம் செய்விக்க ஏற்ற பெண்ணைத் தேடிக்கொண்டிருந்த என் பாட்டனாரும் பாட்டியாரும் கிருட்டிண சாசுதிரிகளின் இயல்பை உண்ர்ந்து அவருடைய மூன்றாம் குமாரியாகிய சரசுவதியைத் தம் குமாரனுக்கு மணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்தனர். விவாகம் நிச்சயமானது தெரிந்து உடையார்பாளையம் சமீன்தார் பொருளுதவி செய்ய, என் தந்தையாருடைய விவாகம் இனிது நிறைவேறியது.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

Sunday, October 23, 2022

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5 – சி.பா.

 அகரமுதல



(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5  தொடர்ச்சி)


4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 5/5

கால நதியின் கதியதினில்
கடவுள் ஆணை காண்பீரேல்
ஞால மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!

என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார்.

‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார்.

கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும்

கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின் புன்னகைடோல் பூத்திடுவோம்’ என்றும், ‘கம்பன் பாமணக்கும் தமிழினைப்போல் பரிமளிப்போம்’ என்றும் பாடும் பாடல்களில் உவமையின் எளிமையைக் காணலாம்.

‘தீபாவளிப் பண்டிகை’ என்ற பாட்டில்,

இட்டிலி வீரர்தென் னிந்தியராம்என்பது
இன்று காம் காட்டி விடுவோம்அடா!
சட்டினி நண்பன் துணை யிருக்கஅதில்
சந்தேகம் உண்டோநீ சொல்வாய்அடா!

என்ற பாடலில், நகைச்சுவை கொப்பளித்து வருவதனைக் காணலாம்.

உழைப்பும் உடல் நலமும்


உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்பர் பெரியர். கவிமணியும், ‘ஆக்கம் வேண்டுமெனில், ன்மை அடைய வேண்டுமெனில், ஊக்கம் வேண்டுமப்பா, ஓயாது உழைக்க வேண்டுமப்பா எள்று கூறுகிறார்.

கூழைக் குடித்தாலும் குளித்தபிறகு குடிக்க வேண்டு மென்றும், ஏழையே ஆனாலும் இரவில் நன்றாய் உறங்க வேண்டுமென்றும் அறிவுறுத்துகின்றார். நூறு ஆண்டுகள் வாழ்வதன் இரகசியத்தைப் பின் வருமாறு கூறுகின்றார்:

தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஒட்டி விடும், அப்பா!
நூறு வயதும் தரும், அப்பா!

அடுத்து,

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!

என்று கூறுகிறார். இங்குக் கவிமணியின் சொல்லு முறை (the technique of expression) நயம்பட அமைந்துள்ளது.

கவிமணி உணர்த்தும் தேசியம்

பாரதியாரின் கவிதை வெறியையோ தேசிய ஆவேசத்தையோ கவிமணியிடம் காண்பதற்கு இல்லை. எனினும், கவிமணியின் கவிதைத் திறன் போல் தேசிய உணர்ச்சியும் நம் பாராட்டுக்கு உரியதே.

கைத்திறன் பாட்டிலே ‘நாடிய சீர் நாடடைய’ என்று தொடங்கும் பாடலை அனுபவித்த குமரன் வாசகர்களில் சிலர், தேசிக விநாயகம் பிள்ளையைத் தேசிய விநாயகம் பிள்ளை என்றும் வாய் குளிரக் குறிப்பிடலாயினர்.

பாரதியையும் கவிமணியையும் ஒப்பு நோக்கிய இராசாசி பின்வருமாறு கூறியுள்ளார். ‘பாரதி காட்டுப் புளியமரம் போன்றவர்; காடு முரடு, உயிர் இருக்கும்; புளிப்பு உரம் இருக்கும். கவிமணியின் கவிதையில் நகாசு வேலை மிகுந்திருக்கும். பிறகு அன்பு மிளிரும். அத்தகைய கவி தேசிக விநாயகம் பிள்ளை;”[11] இஃது ஓரளவு உண்மைதான்.

மேற்காட்டிய பகுதிகள் கவிமணியின் தேசியப் பற்றை உணர்த்தும். ‘தாயிற் சிறந்ததப்பா பிறந்த தாய் நாடு’ என்று தாய்நாட்டுப் பற்றை ஊட்டி, “பேணி நம் சந்தத் தமிழ் வளர்ப்போம், தாய் நாட்டுக்கே உழைப்போம்” என்று. தமிழ்ப் பற்றையும் நாட்டுப் பற்றையும் விளக்கி, ‘காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய்வோம்’ என்று சொல்லி, பாரில் உயர்ந்த இமயமலையையும், அதன் சிகரத்தில் பறக்கும் தேசக் கொடியையும் காட்டி,

மானம் உருவாக வந்தகொடி – இதை
மாசுறச் செய்வது பாவம், பாவம்!
ஊனில் உயிருள்ள கால மெல்லாம்-மிக
ஊக்கமாய் கின்று.நாம் காத்திடுவோம்

என்று நாட்டுப் பற்றுணர்வோடு நவில்கின்றார். ‘உத்தமனாம் அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய் நெஞ்சே தினம்’ என்று காந்தியடிகளைப் போற்றுகின்றார். இறுதியில், உலகமெல்லாம் ஒரு குடும்ப மாக வாழ வேண்டும் என்பதனை,

உலக மக்களெலாம்அன்போடு
ஒரு தாய் மக்களைப் போல்
கலகமின்றி வாழும்காலம்
காண வேண்டுமப்பா!

என்ற பாடலில் கவிமணி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். கவிமணியின் கதர்ப்பற்றும் காந்தியப்பற்றும் நாடு அறிந்தவை.

முடிவுரை

கவிமணி குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்,குழந்தைகளின் பேச்சில் மகிழ்பவர், அவர்களோடு உரையாட விரும்புவர்.

“அவர்(கவிமணி) குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்; குழந்தைகளோடு இனிமையாகப் பேசுவதில் ஆசை உடையவர்; குழந்தைகளுடைய பேச்சையும் அவற்றின் இடையிடயே தோன்றும் பளிச்சென்று தோன்றும் உவமைகளையும் எண்ணி மகிழ்பவர்.”[12] இவ்வாறு திரு.பெ.நாஅப்புசாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

கவிமணி’ என்னும் பட்டம் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க அன்பர்களால் சென்னை பச்சையப்பன் கல்லுரியில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களால் 1940 ஆம் ஆண்டு திசம்பர் 24 ஆம் நாள் தரப்பட்டது. கவிமணி என்ற தம் பெயருக்கு ஏற்ப நல்ல கவித்துவத்தோடு மணியான கவிதைகளைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்காக வழங்கிய பெருமை தேசிக விநாயகம் பிள்ளையைச் சாரும். பாரதியார் முப்பெரும் பாடல்வழி எப்போதும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுவது போல, கவிமணி அவர்களும் தாம் இயற்றிய குழந்தைப் பாடல்களால் தமிழ்கூறு நல்லுலகத்தால் என்றென்றும் நினைவுகூரப் பெறுவர் என்பது உறுதி.

குறிப்புகள்:

[11]. பி. சிரீ. நானறிந்த தமிழ் மணிகள், ப. 52.
[12] . சுடர்: கவிமணி மலர். 1965, தில்லித் தமிழ்ச் சங்கம்-ப.49

(தொடரும்)

சான்றோர் தமிழ்

முனைவர் சி. பாலசுப்பிரமணியன்