Monday, July 06, 2009

உலகப் பெருந்தமிழர்








தமிழ் ஆய்வுகளை உலகளாவிய வகையில் நெறிப்படுத்தவும் உயர்த்தவும் இடையறாமல் முயற்சி செய்த மூத்த தமிழறிஞர், முதுமுனைவர் வ.அய். சுப்ரமணியத்தின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் தமிழ் வளர்ச்சிக்குச் சிறப்பாகத் தொண்டாற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சி நெறிமுறைகளில் முதிர்ச்சியும், சிந்தனையும் செயலும் தமிழுக்காகவே அமைத்துக்கொண்ட தகைமையும் நிறைந்தவர் வ.அய். சுப்ரமணியம். உலக அளவில் பல்வேறு மொழி ஆய்வுகளில் நிலவி வரும் புதிய போக்குகளையும் நெறிகளையும் உணர்ந்து அறிந்து நமது மொழியின் ஆய்வுகளில் புதிய வழி காண உதவியவர். ஈழத் தமிழறிஞரான முனைவர் தனிநாயகம் அடிகளோடு இணைந்து நின்று உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்து பல்வேறு நாடுகளில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெறுவதற்கும் உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வந்த தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைப்பதற்கும் அவர் ஆற்றிய தொண்டு என்பது மகத்தானது. தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் நீண்ட காலக் கனவு நனவானபோது அதன் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்று தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு தொலைநோக்குடன் திட்டவட்டமான வடிவம் கொடுத்த பெருமை அவரையே சாரும். அவர் பதவி வகித்த 5 ஆண்டு காலத்திற்குரிய வேலைத் திட்டத்தை வகுத்து அதை அச்சிட்டு அனைவருக்கும் வழங்கி அதன்படி செயல்பட்டவர் அவர். மற்றவர்களையும் செயல்பட வைத்தவர். தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அமைந்திருக்கும் தமிழ்த்துறைகள் செய்து வரும் தமிழ் ஆய்வுகளை நெறிப்படுத்தவும் முறைப்படுத்தவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டன. அவர் துணை வேந்தராக இயங்கிய 5 ஆண்டு காலத்தில் அப் பல்கலைக்கழகத்திற்கு உலக அளவில் பெருமையைத் தேடிக் கொடுத்தார். அரசிடம் இருந்து ஆயிரம் ஏக்கருக்குக் குறையாத நிலத்தைப் பெற்று அதில் கட்டடங்களை அனைவரும் வியக்கும் வண்ணம் எழுப்பி அவர் ஆற்றிய சாதனை வேறு யாராலும் செய்யப்பட முடியாதது மட்டுமல்ல இன்றளவும்கூட அதை விஞ்சும் சாதனையை யாரும் செய்யவில்லை. திறமை உள்ளவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை இனம் கண்டறிந்து பல்கலைக்கழகத்திற்கு வரவேற்றுப் போற்றினார். திருவனந்தபுரத்தில் திராவிட மொழியியல் நிறுவனம், பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி, இந்திய மொழியியல் நிறுவனம், இந்திய நாட்டுப்புறவியல் நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளைத் தழைக்கச் செய்தவர் அவர். என்னுடன் படித்த மாணவ நண்பர்கள் அவரிடம் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டிருந்தபோது திருவனந்தபுரத்தில் முதன்முதலாக அவரைச் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே அவருடைய ஆளுமை என்னை முழுமையாக ஆட்கொண்டது. 1976-ம் ஆண்டில் அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். திராவிட மொழியியல் பள்ளிக்கு தென்னாட்டில் உள்ள அரசுகளின் நிதி உதவி மிக இன்றியமையாதது. அது கிடைக்க உதவும்படி வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க கர்நாடகத்தின் முதலமைச்சர் தேவராஜ் அர்ûஸயும், ஆந்திர முதலமைச்சராக இருந்த சென்னா ரெட்டியையும் சந்தித்து விவரத்தை எடுத்துக்கூறி அவர்களும் அந்தப் பள்ளி இயங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து நிதி உதவி அளிக்க முன்வந்தார்கள் என்பதே உண்மையாகும். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நான் இருந்த காரணத்தினால் காங்கிரஸ் முதலமைச்சர்களையும் உரிமையோடு வேண்டிக்கொள்ள முடிந்தது. நான் செய்த இந்தச் சிறு உதவியை மதித்துப் போற்றிய பேருள்ளம் அவருக்கு இருந்தது. எதுவாக இருந்தாலும் தொலைநோக்கு, செயல்திறன், செய் நேர்த்தி ஆகியவை அவரின் சிறந்த குணநலன்கள் ஆகும். ஒருமுறை தில்லி சென்றிருந்த நான் பழைய புத்தகக் கடை ஒன்றின் தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியர்கள் என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த ஆங்கில நூல் ஒன்றினை வாங்கினேன். இந்நாடுகளில் ஆங்கிலேய ஆட்சியினரால் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ரப்பர் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவற்றில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்து 1950-களின் தொடக்கத்தில் தில்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். இக்கருத்தரங்கை முனைவர் கே.எஸ். சாந்து நடத்தியிருந்தார். நான் தஞ்சைக்குச் சென்று துணைவேந்தர் வ.அய். சுப்ரமணியத்தைச் சந்தித்து அவரிடம் இந்த நூலினைக் கொடுத்தேன். தென் கிழக்காசிய நாடுகளில் குடியேற்றப்பட்ட இந்திய மக்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு இந்த நூலில் இல்லை. எனவே இந்நாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து முழுமையான செய்திகள் தொகுக்கப்பட வேண்டும். இந்தப் பணியினை தங்கள் பல்கலைக்கழகமே செய்வதுதான் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று கூறினேன். அவரும் மிக்க மகிழ்ச்சியுடன் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். ஏற்றதோடு நிற்கவில்லை. தில்லியில் கருத்தரங்கினை நடத்திய கே.எஸ். சாந்துவைக் கண்டுபிடித்து தஞ்சைக்கு வரவழைத்து இந்தக் கருத்தரங்கில் கட்டுரைகள் வாசித்த அறிஞர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து மேற்கொண்டு ஆற்ற வேண்டியதை அவர் செய்தார். பல்வேறு நாடுகளுக்கும் பல்கலைக்கழகத்தின் சார்பில் பல பேராசிரியர்களை அனுப்பி தமிழர்கள் பற்றிய செய்திகளை எல்லாம் தொகுத்து நூல்களாக வெளியிட ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டிலுள்ள உள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோரை அவ்வப்போது கூட்டிக் கருத்தரங்குகள் நடத்தி ஒருமுகப்படுத்தினார். இதற்கு முன் யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை. அதுமட்டுமல்ல. இலங்கை தமிழ் அறிஞர்களின் உயிருக்கே அபாயம் ஏற்பட்ட காலகட்டத்தில் அவர்களில் பலரை வருகைப் பேராசிரியர்களாக அழைத்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணிகளைத் தொடர்வதற்கு உதவினார். அதைப்போல ஈழத்தமிழ் மாணவர்களுக்கும் இங்கு கல்வியைத் தொடர வழிவகை செய்தார். யாழ் நூலகம் சிங்கள வெறியர்களால் கொளுத்தப்பட்டு விலைமதிக்க முடியாத நூல்களெல்லாம் தீக்கிரையான செய்தி கேட்டு வேதனை அடைந்த அவர், உடனடியாக பல்கலைக்கழக நூலகத்திலுள்ள முக்கியமான நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் மைக்ரோ பிலிம் எடுத்து யாழ் நூலகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். ஈழத் தமிழர்களின் துயரம் துடைப்பதற்கு அவர் வரம்புக்குட்பட்ட எல்லாவற்றையுமே செய்தார். காவிரிப் பிரச்னை முற்றிய காலகட்டத்தில் கர்நாடக அரசு அப்பிரச்னை குறித்து தமிழில் தனது தரப்பு நியாயங்களை விளக்கி ஒரு நூலினை அச்சடித்து காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கியது. அப்போது தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சங்க இலக்கியத்திலும் மற்றும் பின்னர் எழுந்த இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் காவிரி குறித்து வெளியான செய்திகள் அத்தனையும் தொகுத்து நூல் ஒன்று வெளியிட இவர் ஏற்பாடு செய்தார். இதன் விளைவாக காவிரி நீர் மீது நமக்குள்ள நியாயமான உரிமை இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு மேற்பட்டது என்பது நிலைநாட்டப்பட்டது. தொடக்கப் பள்ளியில் கூட தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த அரசே தயங்கி வரும் சூழ்நிலையில் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளைத் தமிழிலேயே நடத்தத் துணிந்து திட்டமிட்டார். அறிஞர்கள் பலரைக் கூட்டிவைத்து அதற்கான நூல்களை உருவாக்கினார். ஆனால் தமிழக அரசின் அனுமதி கிடைக்காததால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ்ச் சுவடிகள், தமிழர்கள் குறித்த கல்வெட்டுகள் பட்டயங்கள் போன்றவற்றினை எல்லாம் சேகரிக்க பெரு முயற்சி செய்தார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற இந்திய அலுவலக நூலகத்தில் உள்ள ஆவணங்களை மைக்ரோ பிலிமில் பதிவு செய்து பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாப்பாக வைத்தார். இந்தியாவின் வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இந்த ஆவணங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் வாழ்ந்து மறைந்த புலவர்களின் வீடுகளுக்கு எல்லாம் ஆள் அனுப்பி ஓலைச்சுவடிகளைச் சேகரித்து பல்கலைக்கழகத்தில் பத்திரப்படுத்தினார். தமிழரின் பழமையும் பெருமையும் அகழ்வாராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு நிலைநிறுத்தப்படும் என்பது எவ்வளவு உண்மையானதோ அதைப்போல தமிழகத்தைச் சுற்றியுள்ள கடலில் அகழ்வாய்வு செய்து பல புதிய உண்மைகளைக் கொண்டு வருவதற்காக நீர் அகழ்வாய்வு நிறுவனத்தை ராமேசுவரத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் நிறுவினார். இதன் மூலம் மறைந்த பூம்புகார் பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவருடைய பணி நிறைவடைவதற்கு முன்பாகவே அவர் பதவி விலக நேரிட்டது ஒரு பேரிழப்பாகும். அதற்கான காரணங்களை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. அவர் அப்பதவியில் தொடர்ந்திருந்தால் பல்கலைக்கழகம் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக உருவெடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 1997-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக அவர் பணியாற்றினார். அப்போது திராவிட மொழிகளில் அகராதி ஒன்றினைத் தொகுக்கும் திட்டத்தை வகுத்துத் தக்க அறிஞர்களைக்கொண்டு நிறைவேற்றினார். அந்தத் திட்டத்திற்கு உதவ வேண்டுமென்று மத்திய அரசை வேண்டிக்கொள்வதற்காக தில்லி சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைச் சந்தித்தபோது அவருக்குத் திராவிட மொழிகள் அகராதியை அளித்தார். அதை உள்ளே கூட புரட்டிக் பார்க்காமல் தலைப்பை பார்த்த உடனேயே தனது வெறுப்பை அந்த அமைச்சர் வெளிக்காட்டினார். திராவிடம், திராவிட மொழிகள் என்று எதுவும் கிடையாது. எல்லாம் அன்னிய ஆட்சியினரின் சூழ்ச்சி என்று பேசினார். இத்திட்டத்திற்கு அவர் நிச்சயமாக உதவப் போவதில்லை என்று தெரிந்தபோது வ.அய். சுப்ரமணியம் எழுந்து ""அப்படியானால் இந்தியாவின் தேசிய கீதத்தில் திராவிட என்ற சொல்லையே எடுத்துவிடுங்கள்'' என்று கூறிவிட்டு வெளியேறினார். அமைச்சரோ திகைத்துப் போனார். யாருக்கும் அஞ்சாமல் தனது கருத்தினைத் துணிந்து சொல்லும் குணநலன் அவருக்கே உரியது. தமிழுக்குத் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக்கொண்ட இந்த அறிஞரின் பெருமைகளை உணர்ந்து உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இவருக்கு முனைவர் பட்டம் உள்பட உயர்ந்த விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன. 2005-ம் ஆண்டில் உலகத் தமிழர் பேரமைப்பு நாகர்கோயிலில் நடத்திய மாநாட்டில் இவருக்கு உலகப் பெருந்தமிழர் எனும் விருதினை வழங்கிற்று. சென்ற ஆண்டு சென்னையில் உள்ள உலகத்தமிழர் பேரமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தார். நானும் மற்ற நிர்வாகிகளும் கூடி மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாட்டின் மலர்களைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார். ""நல்ல ஆய்வுக் கட்டுரைகளுடன் சிறப்பாக மலர் வெளிவந்திருக்கின்றன. எனக்கொரு யோசனை உள்ளது. அதை நிறைவேற்றும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் முன்பு பஹம்ண்ப் இன்ப்ற்ன்ழ்ங் என்ற பெயரில் ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்ட இருமொழி காலாண்டிதழை வெளியிட்டோம். உலகம் முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அவை அனுப்பப்பட்டு வந்தன. அதைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை. உலகத் தமிழர் பேரமைப்பு அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்'' என அவர் கூறியபோது ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் திகைப்பும் எங்களை ஆட்கொண்டன. ""உங்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவது எங்கள் கடமையாகும். ஆனால் அந்த இதழுக்கு பெருமைதரு ஆசிரியராக தாங்கள் இருந்தால் மட்டுமே அதை நாங்கள் செய்வதற்கு இயலும்'' என நான் கூறியபோது அதற்கு அவர் ஒப்புதலும் அளித்தார். அவரின் இந்த விருப்பத்தினை நாங்கள் நிறைவேற்றுவதற்குள் அவர் மறைந்தது தாங்கொணாத் துயரமாகும். எல்லா வகையிலும் அடக்கமாக தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய இந்த உலகப் பெருந்தமிழர் மறைவு நமக்கு சொல்லொண்ணாத இழப்பாகும். தஞ்சையில் அமைக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக உயர்ந்தோங்க வேண்டும் என்பதே அவரின் ஒரே நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும்.

Saturday, July 04, 2009

பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை








ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும் அவர்கள் வகுத்துள்ளனர். இவர்களில் ""சி.வை.தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு'' என்றும் "தமிழ்தந்த தாமோதரம் பிள்ளை' என்ற கட்டுரையில் சி.கணபதிபிள்ளை குறிப்பிட்டுள்ளார். பதிப்புத்துறையில் தொண்டாற்றிய மேற்கண்ட மூன்று அறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. ஆறுமுக நாவலர் 1868-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம் உரையைத் தான் ஆய்வுசெய்து தாமோதரம் பிள்ளையைக் கொண்டு பதிப்பிக்கச் செய்துள்ளார். ""ஆங்கில மோகம் அதிகரிக்க, தொல்காப்பியப் பிரதிகள் அருகி, தமிழ்நாடு முழுவதிலும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதை தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்...தொல்காப்பியக் கடலில் இறங்கினார்'' என்று பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை குறிப்பிடுகிறார். தமது 33-ஆம் வயதில் உ.வே.சா., தாமோதரம் பிள்ளையைச் சந்தித்தார். அப்போது உ.வே.சா., சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் கொண்டு சுவடிகளை ஆய்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அப்போது அச்சுத்துறை மிகவும் புதியது. தாமோதரம் பிள்ளையின் சந்திப்புதான் உ.வே.சா.வுக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது. இதை உ.வே.சாவே, ""இந்த நூலையும் (சீவகசிந்தாமணி) உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்புடையனேனும், இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனஞ் செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.சி.வை.தாமோதரம்பிள்ளயவர்கள் பலமுறை தூண்டினமையால் விரைந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்'' என்று 1887-இல் சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியிருக்கிறார். இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் கிராமத்தில் வைரவநாதபிள்ளை-பெருந்தேவி தம்பதியினர்க்கு மகனாக 1882-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பிறந்தார். தாமோதரம் பிள்ளை, சிறுவயது முதல் தமது தந்தையாரிடத்திலே வாக்குண்டாம், நன்னெறி, திவாகரம் போன்ற நூல்களைக் கற்றுணர்ந்தார். தொடர்ந்து சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர் என்பவரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியங்களையும் மேலும் சில இலக்கண நூல்களையும் பயின்றார். பிள்ளையவர்களின் ஆங்கிலக்கல்வி தெல்லிப்பிழை அமெரிக்க மிஷன் பள்ளியில் தொடங்கியது. மேலும் ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணம் பல்கலையில் கற்றார். அங்கு கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய்த் திகழ்ந்தார். ஆங்கில உயர்தரக்கல்வியை எட்டு ஆண்டுகள் பயின்றபின் தமது 20-ஆம் வயதில் கோப்பாயிலிருந்த பள்ளியில் பிள்ளை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே நீதிநெறிவிளக்க உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்த பார்சிவல் பாதிரியார் தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து "தினவர்த்தமானி' எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடத்தி அதில் தனியான ஒரு வசன நடையைக் கையாண்டார் பிள்ளை. மேலும் லஷ்சிஸ்டன்துரை போன்ற ஆங்கிலேயர்க்குத் தமிழும் கற்பித்து வந்தார். இதை அறிந்த அன்றைய அரசாங்கம், தாமோதரம் பிள்ளையை, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய "சென்னை இராசதானி' க்கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்து மகிழ்ந்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., தேறிய பிள்ளையை கள்ளிக்கோட்டை இராஜாங்க வித்தியாசாலை உதவியாசிரியராகப் பணியாற்ற அழைத்தது. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத்துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவு-செலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் பதவியும் வந்து சேர்ந்தன. 1871-இல் தாமோதரம்பிள்ளை பி.எல்.தேர்வில் வெற்றி பெற்றார். எப்பணியை மேற்கொண்ட போதிலும் தமது ஓய்வு நேரங்களில் தாமோதரம்பிள்ளை பழைய நூல்களை ஓலைச் சுவடிகளில் பயின்றுவந்தார். அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும் சீரழிந்து இருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தமது தலையாய பணி என்று பிள்ளை கருதினார். ஏற்கெனவே தம் 20-ஆம் வயதிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதால், பிள்ளைக்கு இப்பணி சுமையாகத் தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலரவர்கள் பரிசோதித்தலே நன்று என்று கருதி அவருக்கே பிள்ளை உதவி செய்து வந்தார். இந்த நெருங்கிய தொடர்பினால் நாவலர் பரிசோதித்து அளித்த சொல்லதிகாரத்தைத் தம் பெயரினால் பிள்ளை முதன்முதல் 1868-இல் வெளியிட்டார். இந்நூல் வெளிவந்து பதினொரு ஆண்டுகள் கடந்தபின் 1879-இல் ஆறுமுகநாவலர் காலமானார். பிள்ளை மிகவும் மனம் வருந்தியதோடு நாவலரின் பணியைத் தாம் தொடர வேண்டுமென முடிவு செய்தார். நாவலரின் மறைவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளை அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரத்தையும் தமிழ்ப்பணிக்கே செலவிடத் துணிந்தார். அதன் பயனாய் வீரசோழியம் (1881), தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள் (1883), தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885), கலித்தொகை (1887), இலக்கண விளக்கம், சூளாமணி (1889), தொல்காப்பிய எழுத்ததிகாரம் (1891), தொல்காப்பிய சொல்லதிகாரம் (1892) முதலியவை தாமோதரம்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன. இது மட்டுமன்றி, கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திரமாலை முதலிய நூல்களைத் தாமே எழுதி வெளியிட்ட பெருமை பிள்ளைக்கே உரியதாகும். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் பிள்ளை, 1887-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 4 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றினார். மேலும் சென்னை திராவிடக் கிரந்த பரிபாலன சபை, நியாயப் பரிபாலன சபை போன்ற அமைப்புகளில் உறுப்பினராயும் இருந்து சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவர் என்ற பெருமையையும் பெற்றார் தாமோதரம்பிள்ளை. அன்றைய சென்னை அரசு இவருக்கு 1875-இல் ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவ்வாறு சிறந்த பதிப்புச் செம்மலாக விளங்கியதோடு தமிழ் ஆசிரியராக, கணக்காயராக, நீதிபதியாக, தான் தோன்றிய துறையில் எல்லாம் புகழோடு தோன்றிய பிள்ளை, 1901-ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல்நாள், வைகுந்த ஏகாதசித் திருநாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார். பல பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்று மகிழும் நாம், பல பண்டைய இலக்கண நூல்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதை அறிந்து பெருமைப்பட வேண்டியது தமிழர் கடமை..
கருத்துக்கள்

ஏட்டில் இருந்த இலக்கியங்களை அச்சில் ஏற்றிய அரும்பணியின் முன்னோடி அறிஞர் சி.வை.தாமோதரனார். இதனைத் தமிழ் நாட்டில வேண்டுமென்றே ஒரு சாரார் மறைத்து வருகையில் பதிப்புச் செம்மலைப்பற்றி அனைவரும் அறியச் செய்தமைக்குப் பாராட்டுகள். எனினும் வளவ. துரையன் அவர்கள் பழைய இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. என்றும் பழைய இலக்கணங்களைப் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்றும் யாருக்கு அஞ்சித் தவறான பாகுபாட்டைக் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இலக்கணங்களும் இலக்கியங்களில் அடக்கம்தானே! 'பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்ததில் முன்னோடி அறிஞர் சி.வை.தாமோதரனார்' எனக் குறிப்பதே உண்மையும் பொருத்தமும் ஆகும். அவர் வழியில் உ.வே.சா. சென்றார் எனக் குறிப்பதிலோ 'தாய் எட்டடி சென்றால் குட்டி பதினாறடி தாவும்' என்பது போல் முனைப்புடன் சிறப்பாகச் செயல்பட்டார் என்றோ கூறுவதில் தவறு இல்லை. அதற்காகப் பதிப்புச் செம்மல் பணியை அவரைப் பற்றிய கட்டுரையில் கூட மறைப்பது பெருந்தவறாகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 4:55:00 AM

Saturday, June 27, 2009

திறனாய்வுச் செம்மல் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை

First Published : 14 Jun 2009 01:32:00 AM IST


தமிழ் மொழியின் தொன்மையையும் உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர் பூரணலிங்கம் பிள்ளை. இவர் நம் மண்ணின் மரபுகளையும் மக்களின் அறிவியல் சிந்தனைகளையும், இயற்கையோடு இணைந்த வழிபாட்டு நெறிமுறைகளையும் உயர்த்திப் பிடித்தார். பிற்காலத்தில் திராவிட இயக்கம் கையிலெடுத்த பல கொள்கைகளுக்கு இவர்தான் முன்னோடியாகத் திகழ்ந்தார் எனலாம்.திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வளமான நன்செய் வயல்கள் சூழ்ந்த முந்நீர்ப்பள்ளம் என்னும் கிராமத்தில் 1866-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி பிறந்தார். இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய பூரணலிங்கம் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த சைவர்கள் பூரணம் என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு.பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1902-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பாடத்தை நீக்க முயன்றபோது பூரணலிங்கம் பிள்ளை அதனைக் கடுமையாக எதிர்த்துத் தடுத்தார்.1885-ஆம் ஆண்டு பூரணலிங்கனார் பரிதிமாற்கலைஞரையும் அழைத்துக் கொண்டு ஹர்சன் பிரபுவைச் சந்தித்து செம்மொழியாகும் தகுதி தமிழுக்கே முழுமையாக உள்ளது என வாதிட்டார். தமிழ்மொழியின் தொன்மையையும், உலக மனித இனத்தை ஒன்றென அன்பு கொள்ளும் நாகரிகத்தையும், இயற்கையோடு இணைந்து சிந்திக்கும் வாழ்வியல் பண்பாட்டுச் சிந்தனைகளையும், பல்வேறு மொழிகளுக்குத் தாயாகிய போதும் தன் தனித்தன்மை குன்றாத இலக்கிய, இலக்கண வளங்களைக் கொண்டு விளங்குவதையும் தொகுத்து அரசுக்கு அவர் மனு அளித்தார். தமிழைச் செம்மொழியாக்க வேண்டிய தேவையை ஊர் ஊராகச் சென்று அவர் முழங்கினார். பூரணலிங்கம் பிள்ளை எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். கருணாமிர்தசாகரம் போன்ற அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களைக் கூட முழு மூச்சில் வாசித்து முடிப்பார். இவர் எழுதுவதிலும் வல்லவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது "ஞான போதினி' என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் "நீதி' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார்.தமிழ் நாட்டில் தமிழரின் பண்பாட்டையும், அறிவியல் சிந்தனைகளையும், தொழில் நுட்பங்களையும், மரபுகளையும், பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கும் வகையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வலியுறுத்தி எழுதியும், பேசியும் வந்தார். இவற்றின் பயனாக பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு ராமநாதபுரம் மன்னர் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். அம்முயற்சியின் விளைவே இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.பூரணலிங்கனாரின் படைப்புகளில் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழி மாற்றம், சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது. இளமையில் கற்ற தமிழ்க் கல்வியும், தமிழறிஞர்களின் நட்பும்தான், இவரைத் தமிழ்ப் பற்றாளராக மாற்றின. மேலப்பாளையம் பள்ளியில் பயிலும்போது சுந்தரம் பிள்ளையிடம் இலக்கணமும், முத்துசாமிப் பிள்ளையிடம் திருக்குறளும் பயின்றார். பிற்காலத்தில் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், கோவை சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தமிழ் இந்தியா என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார்.திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக "தமிழ் இலக்கிய வரலாறு' என்ற ஆங்கில நூலை எழுதினார். "பத்துத் தமிழ் முனிவர்கள்' என்ற நூலில் மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தடிகள் வரை உள்ள சமயச் சான்றோர் பதின்மர் வரலாற்றையும், அவர்களுடைய தத்துவங்களையும் விளக்கியுள்ளார். இவர் எழுதிய "இராவணப் பெரியோன்' "சூரபதுமன் வரலாறு' ஆகியன இலக்கியத் திறனாய்வு நூல்களுள் புதிய நோக்கில் அமைந்தவை. பூரணலிங்கம் பிள்ளை தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.ஒரு நூலின் அணிந்துரை எத்தகைய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.ஆசிரியர் பணியிலிருந்து 1926-இல் ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளத்திற்குத் திரும்பி வந்த பின் பல்வேறு கட்டங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கி (1940) வழி நடத்தினார். உயர் ஜாதி அல்லாத மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர் உழைத்ததை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் எழுதிய கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.மனித குலத்தார் அனைவருக்கும் தன்னலத்திற்கு அப்பால் சமூக நீதிக்கான ஒரு லட்சிய வாழ்க்கை இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டியவர் பேராசிரியர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளை. அவ்வாறு வாழ்ந்த பூரணலிங்கம் பிள்ளை, தமது 81-வது வயதில், 1947-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அவருடைய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவரது தமிழ்ப் பணிக்கும் தமிழ் உணர்வுக்கும் அளிக்கப்பட்ட உயரிய மரியாதையாகும்.
திறனாய்வுத் துறையும் "கலாநிதி' க. கைலாசபதியும்



தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைத்தவர்; ஒப்பியல் நோக்கையும், சமூகவியல் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர்; "கலை கலைக்காக' என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர்; இலக்கியத்துக்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர்; சமூகப் பொருளாதார ஏற்றதாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்; தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்று நெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர்; ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கியவர்; யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர்; இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்; இத்தனை பெருமைக்கும் உரியவர் "ஈழம் தந்த கொடை' கலாநிதி க.கைலாசபதி.மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் இளைய தம்பி கனகசபாபதி-தில்லைநாயகி நாகமுத்து தம்பதிக்கு 1933-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்தார். தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார். தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்ததால், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு ராயல் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.பல்கலைக்கழகக் கல்வி முடிந்தபின், தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். "தமிழில் வீரயுகப் பாடல்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து "கலாநிதி' (முனைவர்) பட்டம் பெற்றார். கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார். சங்க இலக்கியத்தைக் கிரேக்க, ஐரிஷ் முதலிய இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார். வீரயுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்."தமிழில் வீரயுகப் பாடல்கள்' என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது. கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறிமரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல், தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் யாழ்-வளாகத் தலைவராக இருந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மூன்று ஆண்டுகள் செயல்பட்டார்.அமெரிக்காவிலுள்ள "அயோவோ பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார். அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் "புதியதைப் படைக்கும் எழுத்துகளுக்குரியர்' என இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு, இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு, இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக்கழகம், இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, நாட்டியக் குழு முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.""இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது; இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்; அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்'' என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.""கலை, இலக்கியம் முதலியற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; சமூகவியலை பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டும்; ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும்'' என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார். ""உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்'' என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.""உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன; இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை'' என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும், இலக்கியமும் திறனாய்வும், கவிதை நயம், சமூகவியலும் இலக்கியமும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், திறனாய்வுப் பிரச்சினைகள், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், இலக்கியச் சிந்தனைகள், பாரதி ஆய்வுகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள், இரு மகாகவிகள், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் முதலிய நூல்களைத் திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.இலங்கையில் இருந்து வெளிவந்த, தொழிலாளி, தேசாபிமானி, செம்பதாகை, ரெட்பானர் முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில் கட்டுரைகள் வடித்துள்ளார். பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் இளங்கதிர் இதழிலும், இலக்கிய இதழான மல்லிகையிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. தமிழ்நாட்டு இதழ்களான தாமரை, சாந்தி, சரஸ்வதி, செம்மலர், தீக்கதிர், ஜனசக்தி, ஆராய்ச்சி முதலியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான, தத்துவார்த்த நூல், கைலாசபதியின் "தமிழ்நாவல் இலக்கியம்'. தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகிறது.கல்வித்துறை நிபுணர், இதழாளர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர், விமர்சகர், பேச்சாளர் எனப் பன்முகத் தன்மையுடன் விளங்கினார் கைலாசபதி.முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி கைலாசபதி 49 வயதில் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இயற்கை எய்தினார்.தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழ நாட்டிலிருந்து எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலாநிதி கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றென்றும் விளங்குவார்!

Saturday, June 20, 2009

வேதம் தமிழ் செய்த நாதன்



இந்தியத் திருநாட்டின் தொன்மைக்கும் பெருமைக்கும் உறுதுணையானவற்றுள் வேதங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. நான்மறை என்று சொல்லப்படும் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள் வடமொழியில் அமைந்தவை. வேத ஆராய்ச்சியிலும் வேத மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்ட அறிஞர்கள் பற்பலராவர். அவர்களுள் செங்காவிச் சிங்கமாகிய சுவாமி விவேகானந்தர் வேதம் குறித்துப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார்.""முழுமை நிறைந்த பண்பட்ட இலக்கியம் தொன்மைமிக்க வேதங்களாகும்'' என்பது அவர்தம் கருத்து. "கலைமகளுக்கு வேதம் திருவிழி', "இந்தியத் தாயோ அதனைத் தம் நாவினில் தாங்கியுள்ளாள்' என்று பாரதியார் கருதுகிறார். அதனால்தான், ""வேதத்திருவிழியாள்'' என்று கலைமகளையும், ""நாவினில் வேதமுடையவள்'' என்று இந்தியத் தாயையும் பாடிப்பரவுகிறது அவரது கவியுள்ளம்.உலகியல் வெளிப்பாடுகளை ஆன்மிகத் தேட்டத்தோடு கவித்துவமாகச் சொல்லிச்செல்லும் வேத இலக்கியத்தின் நுட்பமறிந்த பாரதியார், அவற்றுள் சிலவற்றைத் தேர்ந்து "வேதரிஷிகளின் கவிதைகள்' என்று தமிழில் தந்திருக்கிறார் என்பது பலரும் அறிந்த செய்தி. அதேசமயம் கிட்டத்தட்ட, அதே காலகட்டத்தில், நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அறிஞர், மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவராவார் என்பது நாம் பலரும் அறிய வேண்டிய செய்தி.திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள மணக்கால் என்னும் ஊரில் மணக்கால் இராமசுவாமி அவதானிகள்-இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு 1896-ஆம் ஆண்டு ஆகஸ்டு 23-ஆம் தேதி பிறந்தார்.வட இந்தியாவில், மும்பையில் வசித்துவந்த ஜம்புநாதன், தயானந்த சுவாமிகள் மும்பையில் நிறுவிய ஆரிய சமாஜத்தால் ஈர்க்கப்பட்டார். ஜாதி கடந்த சமுதாயத்தைக் காணவும், வேதத்தை விரிவான நோக்கில் விளங்கிக் கொண்டு, உலகினர்க்குச் சிறப்பாக, தமிழர்களுக்கு விளக்கவும் விரும்பிய ஜம்புநாதனுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் சுவாமி தயானந்தர்.அந்த ஈர்ப்பில்தான் சுவாமிகள் இந்தியில் எழுதிய ஆர்ய சமாஜம் தொடர்பான விளக்கங்கள் நல்கும் "சத்யார்த்த பிரகாசம்' என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். இவ்வாறு தமிழ், ஆங்கிலம், வடமொழி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த ஜம்புநாதன் தம் தாய்மொழியான தமிழைப் பெரிதும் நேசித்தார். அதன் அடையாளங்களுள் ஒன்றுதான் அவர் மும்பையில் வாழும் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக முதல் முனிசிபல் தமிழ் தொடக்கப்பள்ளியை நிறுவியது.இந்தியநாட்டு ஆன்மிகச் செல்வங்களான வேதங்கள் சாதி பேதமின்றி எல்லாத் தமிழர்களையும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நான்கு வேதங்களையும் தமிழில் தந்திருக்கிறார். அவற்றுள் ரிக் வேத மொழிபெயர்ப்புக்காக மட்டும் முப்பது ஆண்டுகள் உழைத்திருக்கிறார். ரிக் வேதத்தின் முதல் பாகம் அவரது மறைவுக்குப் பின் மனைவி சாந்தி ஜம்புநாதனால் வெளியிட்டப்பட்டிருக்கிறது. வேதத்தைத் தமிழ் செய்ததோடு உபநிஷதக் கதைகளையும் தமிழாக்கியிருக்கிறார்.""அவர் மொழிபெயர்ப்புக்கு உரைநடையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் சமூக அடித்தளத்தில் உள்ளவர்களான தாழ்த்தப்பட்டோர் வேதங்களை அறிய வேண்டும் என்பதுதான். மற்றொன்றையும் நினைவு கூர்வது அவசியமாகும். அவர், மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் மூலத்தை சிதைக்காது எக்கருத்தையும் தம் விருப்பம் போல் சேர்க்காது, குறைக்காது வேதம் கூறுவதை அப்படியே தருகின்றார்'' என்று வேத ஆய்வாளர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.வேதங்களோடு கடோபநிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். சென்னையில் "ஜம்புநாத புஸ்தக சாலை' என்னும் பதிப்பகம் அமைத்து அதன்வழி தமது மொழியாக்கங்களை வெளியிட்டிருக்கிறார். வேதம் அனைவருக்கும் பொதுவானது என்று கருதும் சான்றோர்கள் அதனை அனைவரும் அறியும்படி தம்மாலான பணிகளைச் சிறப்புறச் செய்துவந்த அக்காலத்தில், அது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்று சேரவேண்டும் என்று கருதியவர் ஜம்புநாதன். தமது "சதபதபிராமணம்' என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூலை, ஹரிஜனப் பெருமக்களின் பாதகமலங்களில் அர்ப்பணம் செய்திருக்கிறார் ஜம்புநாதன். மிகுந்த உணர்வோட்டத்தோடு அவர் எழுதிய கீழ்க்காணும் அர்ப்பண உரை காத்திரமானது; முற்போக்கானது.""ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயஸ்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து இவ்வேத நூலை உங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள்தான் இவ்வேதங்களைப் படித்து பாரதநாடு மாத்திரமில்லை, பூலோகமுழுவதும் பிரச்சாரம் செய்து மறுபடியும் தர்மஸ்தாபனம் செய்ய வேண்டும்......... இந்நாடு, பூலோகமுழுவதும் புனிதவேதம் விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''1974-ஆம் ஆண்டுவரை வாழ்ந்த ஜம்புநாதன், தமிழில் 16 நூல்களையும், ஆங்கிலத்தில் மூன்று நூல்களையும் படைத்தளித்திருக்கிறார். எனினும் இவர் பாரதியார்தம் வேத மொழிபெயர்ப்பான "வேதரிஷிகளின் கவிதைகள்' பற்றி அறிந்தவராகத் தெரியவில்லை என்று குறிப்பிடும் பாரதி ஆய்வாளர் பெ.சு.மணி, இந்த வரலாற்றைச் சிறப்பாகவும் செறிவாகவும் தமது "பாரதி இலக்கியத்தில் வேத இலக்கியத்தின் தாக்கம்' என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.சுமார் எழுபத்தி எட்டு ஆண்டுகள் வேதம் தமிழ் செய்யும் வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஜம்புநாதன் 1974-ஆம் ஆண்டு உலக வாழ்வை நீத்தார். அவரது தமிழ்த்தொண்டு வரலாற்றுச் சிறப்புக்குரியது. மும்பையில் இருந்துகொண்டு தம் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டும், தீண்டாமையை எதிர்த்து ஜாதிக்கும் அப்பால் வேதங்களைக் கொண்டுசெல்ல அவர் மேற்கொண்ட முயற்சியும் சாதாரண விஷயமா என்ன?""ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய பணியைத் தனியொருவராகச் செய்து சாதனையைப் புரிந்துள்ளார் ஜம்புநாதன் என்பது உளந்திறந்து பாராட்டுதலுக்குரியது. அவர் முதன் முயற்சியைத் தொடர்ந்து, வேறு எந்த வேத நெறி பரப்பும் நிறுவனமோ, தனிநபரோ வேத மொழிபெயர்ப்புக்குத் துணியவில்லை என்பதும் ஜம்புநாதனின் அரிய பணிக்குச் சான்றாகும்'' என்று குறிப்பிடும் அறிஞர் பெ.சு.மணியின் பாராட்டுரை முற்றிலும் மெய். வெறும் புகழ்ச்சி இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.
கருத்துக்கள்

பாரதியார் ஆரிய நாடு என்றும் வேதம் பற்றியும் கூறியவை தவறான கருத்துகள் என்றும் சிறு பருவத்தில் தம் தந்தையைத் தேடி வந்த சிறு கூட்டத்தார் இவை பற்றியே பேசியதால் தாமும் அறியாமையில் சிக்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். வேதங்களுக்கு மாறான கருத்துகளை உண்மைத் துறவி விவேகானந்தரும் பல்வேறு இடங்களில் பதிந்துள்ளார். எனவே, தொடக்கத்தில் கூறிய கருத்துகளின் அடிப்படையில் மதிப்பிடக் கூடாது. எனினும் சம்புநாதன அவர்கள் செய்துள்ள படைப்புப் பணிகளும் மொழி பெயர்ப்புப் பணிகளும் மக்களில் ஒரு பிரிவினரைத் தாழ்த்தியே வைத்துள்ளமைக்காக வருந்திய உள்ளமும் பாராட்டிற்குரியவை. அயல் மாநிலத்தில் வாழ்ந்து மறைந்த தமிழரின் சிறப்பை வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ள முனைவர் சேதுபதிக்கும் தினமணிக்கும் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/21/2009 4:14:00 AM