Monday, September 03, 2012

இலக்குவனார் -மயிலாடன், விடுதலை

  விடுதலை : திங்கள், 03 செப்டம்பர் 2012 15:52
தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் வாய்மேடு எனும் கிராமத்தில் சிங்காரவேலருக்கும் இரத் தினம் அம்மையாருக்கும் பிறந்த (17.11.1910) இலட்சு மணன் தான் பிற்காலத்தில் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் என்ற ஏற்றம் பெற்ற பெருமகன்.
தந்தை பெரியார் அவர் களின் படை வரிசையில் ஆற்றல் மிகுந்த தளபதி. அவர்தம் நினைவு நாள் இந்நாள் (3.9.1973).
திருவையாறு தமிழ்க் கல்லூரியில் படித்த இவர் தொல்காப்பியத்தையே ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கும் அளவுக்கு ஆங்கிலப் புலமை  மிக்கவர். முனைவர் பட்டமும் பெற்றவர்! (அதனுடைய எச்சம்தான்  அவரின் மகன் பேராசிரியர் மறைமலை இலக்குவன் போலும்!)
இலக்குவனார் அவர் களால் ஆங்கில மொழி யாக்கம் செய்யப்பட்ட தொல்காப்பியத்தைத் தான் முதல் அமைச்சர் அண்ணா மேற்கொண்ட தம் வெளி நாட்டுப் பயணத்தின்போது யேல் பல்கலைக் கழகத்திற் கும் அளித்தார். வாடிகன் போப்புக்கும் கொடுத்தார்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது தான் தமிழ்க் காப்புக் கழகத்தினைத் தொடங்கி னார் (6.8.1962) தமிழ்க் காப்புக் கழகத்தின் கொள்கை என்ன தெரியுமா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தமிழியக்கம் கூறும் குறிக்கோள்களே.
இது ஒன்று போதாதா இலக்குவனாரின் வீரஞ் செறிந்த இனமானம், மொழி மானம் மேம்பட்ட பகுத்தறிவு உள்ளத்திற்கு?
சமயமெனும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது! -என்ற அடிநாதம் தானே தமிழியக்கம்.?
முதல் அமைச்சர் பக்தவத்சலம் ஆட்சியில் இலக்கு வனார் மீது தொடுத்த வழக் குகள் ஒன்றா - இரண்டா? 14 வழக்குகள். அனைத்தை யும் நெஞ்சு நிமிர்வோடு சந்தித்தார்.
இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர், உள்ளம் கவர்ந்த வர். இதழ் நடத்துபவர், அவர் வெளியே இருந்தால் அரசுக்கும்  அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு இராது என்றார் அரசு வழக்குரைஞர்.
எந்த அடிப்படையில் இம்முடிவு என்று எதிர் வினா தொடுக்கப்பட்டது அரசு வழக்கறிஞர் எனக்குள்ள தெளிவால் கூறுகிறேன் என்றார். இதற்கு இலக்குவனார் தரப்பில் பதிலடி என்ன தெரியுமா?
அப்படியானால் என் தெளிவால் கூறுகிறேன். இம்மாநிலத்திற்குக் கேடு முதல்வர் பக்தவத்சலனாரால் ஏற்படுகிறது. அவரை வெளியே விடாமல் சிறைப்படுத்தினால் கேடெல்லாம் ஒழிந்துவிடும் என்கிறேன்.
ஒப்புக் கொள்வீர்களா? நீதி மன்றம் ஒப்பிச் சிறைப்படுத்த ஆணை தருமா? என்பது தான் அந்தப் பதிலடி.
இந்தத் துணிவு எத்தனைப் பேருக்கு வரும்?
இனமானம், மொழிமானம் இரண்டையும் இரு விழி எனக் கொண்ட அந்த வீரத் திருமகனை நினைவு கூர்வ தோடு அந்த   உரத்தையும் பெறட்டும் தமிழினம்!
- மயிலாடன்




No comments: