(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3 தொடர்ச்சி)

1. மொழிபெயர்ப்புப் பணி

சேம்சு ஆலன் என்னும் மேனாட்டுப் பெரியாரின் கருத்துகள் சிதம்பரனாரின் நெஞ்சைப் பிணித்தன.‘அகத்திலிருந்து புறம்’ (Out from the heart) என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கோயமுத்துார்ச் சிறைவாசத்தின் போது இந்நூல் மொழிபெயர்க்கப்பெற்று, அவர் விடுதலை அடைந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1-4-14 அன்று ‘அகமே புறம்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. நூலின் முன்னுரையில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு :

இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வொரு ஆடவரும் பெண்டிரும், சிறுவரும் சிறுமியரும் கற்க வேண்டு மென்பதும். இந்நூல் நமது நாட்டில் நிலவும் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்பதும், இந்நூல் எஞ்ஞான்றும் நின்று நமது நாட்டில் நிலவவேண்டுமென்பதும் எனது விருப்பம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலிற்குச் சுவாமி சகசானந்தர் என்பவர் அணிந்துரை வழங்கியுள்ளார். நூலின் முகப்பில் வ.உ.சி. குறித்துள்ள செய்யுளொன்று நம் சிந்தனையைக் கிளறுவதாயுளது.

“அறத்தைக் காணா அறிவே மரமாம்;
அறத்தைப் பிழைத்த அறிவே மிருகம்;
அறத்தைப் புரியும் அறிவே மனிதன்;
அறத்தைக் காக்கும் அறிவே கடவுள்.”

அடுத்து, மனத்தின் தன்மையும் வன்மையும் பற்றி அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது

“மனம் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமை யாகிய வத்திரத்தை நெய்துகொண்டிருக்கிறது; நினைப்பு நூல்; நல்ல செயல்களும் தீய செயல் களும் பாவும் ஊடும்; ஒழுக்கம் வாழ்வாகிய தறியில் நெய்யப்படும் வத்திரம். மனம் தான் நெய்த வத்திரத்தால் தன்னை உடுத்துக் கொள்கிறது.”

76 பக்கமே கொண்ட இந்நூலில் ஆலன் கருத்தை அரண் செய்யத் திருக்குறட்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளார், எட்டணா விலையில் இந் நூலின் இரண்டாம் பதிப்பு 1916ஆம் ஆண்டு சென்னை புரோகிரசிவு பிரசில் அச்சியற்றப்பட்டு வெளி வந்துள்ளது. இலக்கிய நூல்கள் ஆயிரம் படிகள் அச்சிட்டால் விற்பனையாக நான்கைந்து ஆண்டுகள் பிடிக்கும் என்று பதிப்பாளர்கள் பயப்படும் நிலைமை இந்நாளில் இன்றும் நிலவ, வ.உ.சி. அவர்கள் இரண்டாம் பதிப்பின் பாயிரத்தில்-முன்னுரையில்-குறிப்பிட்டுள்ளன வருமாறு :

“1914-ஆம் வருடத்தில் வெளிவந்த இந்நூலின் முதற் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் அச்சிடப் பெற்றன. இந் நூலைத் தமிழ் மக்கள் பலரும் விரும்பியதால் அவ்வாயிரம் பிரதிகளும் விரைவில் செலவாய் விட்டன. அதனால் இந் நூலை இரண்டாம் முறை அச்சிட்டு முடித்தேன்.”

மேலும் அவர்,

“இப்பதிப்பின் தமிழ் நடையைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி சுதேசபாசா அத்தி யட்சகர் சிரீமான் தி. செல்வக்கேசவராய முதலியார் (எம்.ஏ.) அவர்கள் அழகுபடுத்தித் தந்தார்கள்.”

என்றும் குறிப்பிட்டுள்ளது கொண்டு, திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களிடம் வ.உ.சி. கொண்ட மதிப்பும் நூல்களைத் திருத்தமுறப் பதிப்பிக்க வேண்டும் என்று அவர் கொண்ட ஆர்வமும் புலனாகக் காணலாம்.

அடுத்து இவர் சேம்சு ஆலனின் மற்ற நூல்களைச் ‘சாந்திக்கு மார்க்கம்’, ‘மனம்போல வாழ்வு’, ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற தலைப்புகளில் வெளியிட்டுள்ளார்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் தகவுடன் தர வ.உ.சி. கொண்டிருந்த வற்றாத ஆர்வத்தினை இந்நூல்கள் வழிக் காணலாம்.

2. படைப்பிலக்கியப் பணி

அறத்தின் வழிப்பிறழாத நெஞ்சினர் வ.உ.சி. திருக்குறளில் நெஞ்சம் தோய்ந்தவர்; குறள் வழியே தம் வாழ்வை நடத்தி நின்றவர். அறத்தான் வருவதே இன்பம் என்று நம்பியவர். எனவே. அறத்தின் ஆற்றலை அவனிக்கு உணர்த்த விரும்பி, ‘மெய் யுணர்வு’ என்னும் நூலினைக் கண்ணனூர்ச் சிறைவாசத்தின் போது எழுதினார். அறத்தின்பால் நெஞ்சம் நெகிழும் ஓர் ஆண்மகனை ஓர் ஆசிரியன் உருவாக்கும் வகையில் இந் நூல் அமைந்துள்ளது. நூறு வெண்பாக்கள் கொண்ட இந்நூலில் வ.உ.சி.யின் கவிதை நலமும் கருத்து வளமும் பின்னிப் பிணைந்திருக்கக் காணலாம். வைகறைப் போதில் ஒருவன் செய்யத்தக்க பணிகளாக இந்நூலில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு :

வைகறையிற் கண்விழித்து மாசொழித்து மெய்யறங்கள்
கைவருதற் கீசனருள் கண்ணிமைப்பின் மையல்
அறுத்தற்கா நூனன்காய்ந்து யானை உர மெய்யிற்
செறுத்தற்கா நற்சிலம்பம் செய்.”

வைகறையில் துயிலெழுந்து, காலைக் கடன்களை முடித்து, ஈசனருள் பேணி, நன்னூல்களை ஆராய்ந்து கற்று, உடல் வலிமை பெறச் சிலம்பம் பயிலவேண்டும் என்று குறிப்பிடும் இவ் அரிய நூலிற்கு, அட்டாவதானம் கலியாண சுந்தர யதீந்திரர் என்னும் பெரியார் சிறப்புப் பாயிரமாம் அணிந்துரையினை வழங்கியுள்ளார்.

இவர் இயற்றியுள்ள சுய சரிதை நூல் இவர் நுண்மாண் நுழைபுலத்தினை விளக்கும். மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் தேர்ச்சிபெற்ற வ.உ.சி. தம் முதல் மனைவி வள்ளியம்மை குறித்து எழுதுவன காண்க :

“என்னுடைய நேயர்களும் ஏழைபர தேசிகளும்
என்னுடைய வீடுவந்தால் ஏந்திழைதான்-தன்னுடைய
பெற்றோர்வந் தார்களெனப் பேணி உபசரிப்பாள்
கற்றோரும் உள்ளுவக்கக் கண்டு.”

சிறையிலிருந்துகொண்டு தம் அன்னை, ஆருயிர்த் துணைவி, நண்பர்கள் முதலியோருக்கு இவர் எழுதிய கவிதை மடல்கள் நெஞ்சையுருக்கும் நீர்மையன; செந்தமிழ் நலம் தோய்ந்த சீர்மையன.

‘மெய்யறம்’ என்னும் பெயரிய நூல் மாணவவியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெல்லியல் என்னும் ஐந்தியலும் நூற்றிருபத்தைந்து அதிகாரமுமாக முடிந்த நூலாகும். இந் நூலினைத் திருக்குறளின் வழிநூல் எனலாம். எண்வகை வனப்பில் ‘தோல்’ எனும் வனப்புக் கொண்டு, முதுமொழிக் காஞ்சி போன்று திட்ப நுட்பஞ் செறிந்திலங்குவதாகும்.

இந்நூலினைப் பற்றித் திரு. தி. செல்வக்கேசவராய முதலியார்,

“தமிழ்ப் புலவரேயன்றி இங்கிலீசு படித்த புலவரிற் பலரும் இந்நூலின் திறத்தை மெச்சுவர் என்பது துணிபு. ஒரு முறை கண்ணுறுவோர்க்கு இந்நூலின் அருமை தானே புலப்படுமாதலால், அதனை இங்கு விரிப்பது மிகையாம். இந்நூல் நின்று நிலவுக என்பது என் வேண்டுகோள்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பாடற்றிரட்டு’ என்னும் நூல் இரு பாகங்கள் கொண்டது; சிறை வாசத்திற்கு முன் பாடிய பாக்கள் முதற்பாகமாகவும். கோயமுத்துார் கண்ணனூர்ச் சிறைவாச காலத்தில் பாடிய பல தனிப்பாக்கள் இரண்டாம் பாகமாகவும் சேர்க்கப்பட்டுள்ளன. பாடல்கள் எல்லாம் நவின்றோர்க்கினிய நன்மொழிகளால் விழுமிய பொருள் பயக்குமாறு இனிய ஓசை கொள்ள யாக்கப்பட்டுள்ளன. நீதி போதனைச் செய்யுள்கள் பண்டைக்கால நீதி நூற்களோடொப்பத் திட்ப நுட்பங் கொண்டுள்ளன. தம் மனைவியார் வள்ளியம்மை குறித்து இவர்

குறிப்பிடும் பகுதி வருமாறு :

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்