(தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 1/3 – சி. பா. தொடர்ச்சி)

3. தனித்தமிழ் இயக்கங் கண்ட அடிகளார் 2/3

27-6-1898இல் அடிகளாருக்குக் கொடிய நோய் ஒன்று, கண்டது. அதனைத் தீர்க்குமாறு திருவொற்றியூர் முருகனை அடிகள் வேண்டிக் கொண்டார். நோய் நீங்கியபின் முருகனை நினைத்து “திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை” என்னும் அருள்நூலைப் பாடினார். சங்கப் பனுவல்களின் கருத்தும், நடையும் பொலிந்து விளங்கும் சிறந்த நூல் இது. தமக்குச் சைவ சித்தாந்த நூல்களை விளக்கிப் பாடம் சொன்ன சோமசுந்தர நாயகர் (22-2-1901) இயற்கை யெய்திய பொழுது. அவர் பிரிவு பொறாது “சோம சுந்தரக் காஞ்சியாக்கம்” என்னும் நூலை எழுதினார். அந் நூலில் தாமும் சைவவுலகும் அடைந்த துன்பத்தினைக் ‘கையறுநிலை’ ‘மன்னைக் காஞ்சி’யென்னும் பிரிவுகளாகவும், நாயகரின் வாழ்க்கைத் துணைவியார் பேதுற்ற நிலையினைத் ‘தாபத நிலையாகவும்’ அமைத்துள்ளார்.

சொற்பொழிவாளர்

கவின்மிகு கட்டுரையாற்றல் கைவரப்பெற்ற அடிகள், சுந்தரத் தமிழில் சொற்பெருக்-காற்றும் வல்லமையும் பெற்றிருந்தார். அடிகளாரின் பேச்சு அனைவரையும் காந்தம் போல் ஈர்க்கும் சக்தி உடையது. பெரும் பொருள் செலவுசெய்தும் அடிகளாரின் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் கூடினர். பேசுவதில் சில நெறிகளைப் பின்பற்றியவர் அடிகள். தாம் பேச எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாகவும், ஆழமாகவும். அழுத்தமாகவும் எடுத்துச் சொல்லும் வல்லமை அடிகளுக்கு உண்டு. அடிகள் பேசுவதற்குச் சென்ற இடங்களிலெல்லாம், உணவு, இருக்கை முதலியவை பற்றி ஓர் ஒழுங்கைக் கடைபிடித்து வந்தார். இவர் பேச்சில் சைவப் பற்றும், தமிழ்ப்பற்றும் மிகுந்து இருக்கும். சைவத்தையும்,தமிழையும் தம் இரு கண்ணெனப் போற்றி வளர்த்தவர் அடிகள்.

இதழாசிரியர்

சொற்பொழிவிலும், கட்டுரை எழுதுவதிலும் ஈடுபட்டிருந்த அடிகள் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்க எண்ணினார். 1902இல் ‘அறிவுக் கடல்’ என்னும் திங்கள் இதழ் தொடங்கப் பெற்றது. அறிவுக் கடல் தொடக்க நாளில் கொண்ட பெயர் ‘ஞானசாகரம்’ என்பதாகும். அந் நாளில் அடிகளாருக்குத் தனித் தமிழூக்கம் உண்டாகவில்லை. பின்னர் அனைத்தும் தனித்தமிழாயின; அவர் பெயர் முதற் கொண்டு அனைத்தும் தமிழாயின. அவர் எழுதிய கட்டுரைகளிலும், பேசிய பேச்சுக்களிலும் தனித்தமிழ்ச் சொற்களே இடம் பெறலாயின. அறிவுக்கடலின் உறுப்பினர்களில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரும் ஒருவர் என்ற செய்தி ஈண்டுக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

அடிகளாரை ஆசிரியராகக் கொண்டு ‘அறிவுக் கடல்’ ஆற்றிய தமிழ்ப்பணி அளப்பரியது. அறிவுக் கடல் ஆற்றிய அளப்பரிய தமிழ்ப்பணிக்கு அதன் முதல் இதழின் பொருளடக்கமே சான்று. அப்பொருளடக்கம் வருமாறு –

“சகளோபாசனை – தமிழ் வடமொழியினின்றும் பிறந்ததா? தமிழ்ச் சொல்லுற்பத்தி – சைவம் – சைவ நிலை – காப்பியம் – தொல்காப்பியப் பரிசீலனம் – உள்ளது போகாது இல்லது வாராது – தொல்காப்பிய முழு முதன்மை-கேநோபநிடத மொழிபெயர்ப்பு—சமயப்பெருமை-இலக்கண ஆராய்ச்சி-நெஞ்சறிவுறுத்தல்-தமிழ் மிகப் பழைய மொழி-இறைய னாரகப் பொருளுரை வரலாறு – ஆநந்தக் குற்றம்—மாணிக்கவாசகர் கால நிருணயம்-மெய்ந்நல விளக்கம்-தமிழ் வேத பாராயணத்தடை மறுப்பு-நாலடியார் நூல் வரலாறு-முனிமொழிப் பிரகாசிகை-பரிமேலழகர் ஆராய்ச்சி முதலியன.”

சைவ சித்தாந்த மகா சமாசம்

சைவ சமய உண்மைகளை நாட்டிலே பரப்பச் ‘சைவ சித்தாந்த மகா சமாசம்’ என்னும் கழகத்தை 7-7-1905இல் தொடங்கினார் அடிகள். அறிஞர் பலர் இம் மகா சமாசத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். அடிகள் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுச் சிறக்கப் பணிபுரிந்தனர். முதலாண்டு நிறைவு விழா 1906ஆம் ஆண்டு சிதம்பரத்தில் கொழும்பு ஆனரபிள் இராமநாதன் துரை அவர்கள் தலைமையிலும், இரண்டாம் ஆண்டு விழா சிதம்பரத்திலே, மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டித்துரைத் தேவர் தலைமையிலும், மூன்றாம் ஆண்டு விழா நாகையில் சே.எம். நல்லசாமிப் பிள்ளை அவர்களின் தலைமையிலும், நான்காம் ஆண்டு விழா திரிசிரபுரத்தில் யாழ்ப்பாணம் ஆனரபிள் கனக சபையவர்கள் தலைமையிலும் அடிகளின் பெருமுயற்சியால் சிறப்புற நடை பெற்றன.

‘அறிவுக் கடல்’ இதழைத் தமிழில் நடத்திய அடிகள் ஆங்கிலத்திலும் ஓர் இதழைத் தொடங்க எண்ணினார். அடிகளின் எண்ணப்படி கீழ் நாட்டு மக்கள் வசியம் எனப்
பொருள்படும் ‘ஓரியண்டல் மிசுடிக் மைனா’ (The Oriental Mystic Myna) என்னும் ஆங்கில இதழை 1898இல் தொடங்கினார். ஆனால் இவ் ஆங்கில வெளியீடு பன்னிரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது.

சாதி, மத, பேதமகற்றி அன்பின் அடிப்படையில் வள்ளலார் வழியில் இறைவனைக் காணுதல் வேண்டும்—கண்டு வாழுதல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் 22-4-1911 ஆம் நாள் சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தார் அடிகள். இச்சங்கமே பின்னாளில் ‘பொது நிலைக்கழகம்’ எனப் பெயர் பெறுவதாயிற்று.

துறவு

சென்னைக் கிறித்துவக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து 30-4-1911இல் விலகிய அடிகள் 1-5-1911 முதல் பல்லாவரத்தில் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். சுய சிந்தனையும் நாட்டுக்கு உழைக்கும் நல்லுள்ளமும் சைவ சமயப் பணிக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்ட தகவுங் கொண்ட அடிகள், அரசியலில் ஈடுபடாமல் தமிழராக இருந்து நாட்டுக்கும் சமயத்திற்கும் தொண்டு புரிய வேண்டும் என்னும் தன்னலமற்ற தொண்டுள்ளம் கொண்டார். 27-8-1911, முதல் துறவு வாழ்வை மேற்கொண்டார் அடிகள். அன்று முதல் “மறைமலையடிகள்” எனவும் “சுவாமி வேதாசலம்” எனவும், ‘சமரச சன்மார்க்க நிலைய குரு’ எனவும் அழைக்கப் பெற்றார்.

(தொடரும்)

சான்றோர் தமிழ்

சி. பாலசுப்பிரமணியன்