காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும்4/4 – முனைவர் சான் சாமுவேல்
(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ – முனைவர் சான் சாமுவேல் – தொடர்ச்சி)
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 4/4
மத்தியதரைக்கடற் பகுதியில் பேசப்பட்டுவந்த எலாமைட்டு மொழி தமிழோடு நெருங்கிய தொடர்புடையது என்பதைக் காலுடுவெல் சுட்டியுள்ளார். மறைந்துபோன எலாமைட்டு மொழி பேசிய மக்களை எலாமியர் என்று கிறித்தவத் திருமறை குறிப்படும். எலாமிய–தமிழ் ஆய்வு, உலகின் பல்வேறு அறிஞர்களையும் கவர்ந்துள்ளது. அரப்பா நாகரீக மக்கள் திராவிட–எலாமோ என்ற ஒரு கலவை மொழியினைப் பேசியதாக சான் மாஃக்பர்சன் என்னும் அறிஞர் ஆய்ந்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காலுடுவெல்லின் 19–ஆம் நூற்றாண்டைய மொழியியற் சிந்தனைகள் மொழியியல் ஆய்வின் பரப்பினை 20, 21 ஆகிய நூற்றாண்டுகளில் எவ்வளவு விரிவு படுத்தியுள்ளன என்பதையும் தமிழ் மொழியின் உலகளாவிய தாக்கத்தின் கூர்மை எத்தகையது என்பதையும் நாம் அறிந்து கொள்ள இச்சான்றுகள் துணைபுரிந்துள்ளன.
உரல்–அல்டாயிக்குஎனும் இரு மொழிக்குடும்பக் கூட்டுக் குடும்பத்தின் மொழிகளுள் அங்கேரிய மொழி மிகவும் குறிப்பிடத் தக்கது. அங்கேரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கு மிடையேயுள்ள உறவை முதலில் சுட்டிய பெருமை கால்டுவெல்லைச் சாரும். அங்கேரிய மொழியின் இலக்கணக் கட்டமைப்பு தமிழ் மொழியின் இலக்கண அமைப்போடு இணைந்து செல்வது குறித்து காலப்போக்கில் பல கட்டுரைகளும் நூல்களும் தோன்றின. அங்கேரிய–திராவிட உறவு பேராசிரியர் தாமசுபரோ அவர்களாலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சி.எசு பாலிண்ட்டு என்னும் அறிஞர் திராவிட அங்கேரிய உறவு குறித்த நீண்ட நூலினைப் பல காலங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார். தற்போது ஆசியவியல் நிறுவனத்தில் பல அங்கேரிய மாணவர்கள் இந்த நோக்கத்துடன் தமிழ்க்கல்வி பெறுவது சுட்டத்தக்கது.
சித்திய மொழியினக் குடும்பங்களுள் ஒன்றாகக் கருதப்பட்ட மங்கோலிய மொழி தமிழ்மொழியோடு கொண்டுள்ள உறவு பற்றிய காலுடுவெல்லின் கருத்துகள் காலப்போக்கில் மங்கோலிய – தமிழ் ஒப்பியல் ஆய்வுக்கு வழியமைத்துக் கொடுத்தன. இத்துறையில் பல ஆய்வுகள் தற்போது மலர்ந்துள்ளன. செக்குநாட்டுத் தமிழறிஞரான கமில் சுவலபிலின் மாணவர்களுள் ஒருவரான பேராசிரியர் வாசெக்கு அவர்கள் மங்கோலிய–தமிழ் உறவு தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள் மிகவும் குறிப்பிடத்தக்கன.
இலத்தீன், கிரேக்கம் ஆகிய உலகச் செம்மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையேயுள்ள ஒப்புமைக் கூறுகள் பற்றி காலுடுவெல் மிக விரிவாகவே விளக்கியுள்ளார். அவ்வாறே செமிட்டிக்கு இன மொழிகளான எபிரயம், அராமியம், அரபு போன்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையேயுள்ள உறவுகளும் காலுடுவெல்லால் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இத்துறைகளில் வெளிநாட்டினரும் நம் நாட்டினரும் பல ஆய்வுகளைக் கட்டியெழுப்பியுள்ளனர். காலுடுவெல் தந்த வெளிச்சத்தில் தமிழ் சொற் பிறப்பியல் ஆய்வில் தேவநேயப் பாவாணரும் ஞானப்பிரகாச அடிகளாரும் நிகழ்த்திய சாதனைகள் ஈடு இணையற்றவை. இந்த வெளிச்சத்தில் நின்று கொண்டு உலகின் தொன்மையான மொழி தமிழே என்றும் ஆதிமனிதன் பேசிய மொழி தமிழே என்றும் உணர்ச்சிமிகு சொற்களால் தம் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தினார் பாவாணர்.
ஒரு பக்கத்தில் நல்ல ஆய்வுகள், நடுவுநிலை சார்ந்த ஆய்வுகள் காலப்போக்கில் தோன்றுவதற்கு காலுடுவெல்லின் சிந்தனைகள் வழிவகுத்த போதிலும் போதுமான பிற மொழிக் கல்வியும், ஆய்வு நெறிமுறைகளில் போதிய பயிற்சியுமில்லாமல் நுனிப்புல் மேய்ந்து பன்னாட்டுத் தமிழாய்வு என்ற பெயரில் நமது நாட்டினர் சிலர் செய்து வரும் ஆய்வுக் குளறுபடிகளுக்கும் காலுடுவெல் மேற்கோளாகக் காட்டப்படும் அவலநிலையும் தற்போது மலிந்துள்ளது. நாற்பது மொழிகள் தெரிந்தவர், அறுபது மொழிகளில் வல்லவர் என்றெல்லாம் பேசும் பல போலி புற்றீசல் மொழிநூலார் முளைப்பதற்குரிய சூழல்களும் காலுடுவெல்லின் சிந்தனைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் தோன்றினவே என்று எண்ண நேரிடுகின்றது.
காலுடுவெல் கண்ட ஒப்பிலக்கண ஆய்வை அடித்தளமாகக் கொண்டு தாமசுபரோ, எமனோ எனும் இருபெரும் சமற்கிருத விற்பன்னர்கள் திராவிடவியல் அறிஞர்களாக உருப்பெற்று திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி (Dravidian Etymological Dictionary)யினைத் தோற்றுவித்து உலகெங்கும் உலவவிட்டபோது தமிழ் அன்னையின் திருவடிகள் வெள்ளிப் பனிமலையிலும், ஆப்புசு மலை உச்சியிலும், சீனச்சுவரிலும், உரல் மலைகளிலும், சப்பானிய, கொரிய சிகரங்களிலும் பெருமிதத்துடன் பீடுநடை பயின்றன. தமிழின் உலகளாவிய இத்திருக்கோலத்தினை உலக மக்கள் அனைவரும் உணரும் காலம் தொடங்கியுள்ளது. தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயுள்ள இன ஒப்புமைகள் நடுவுநிலையில் ஆராய்ந்து தெளிந்து நிறுவப்பட வேண்டும். இவற்றிற்குரிய முயற்சிகள் வலுவான அடித்தளத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டு வரை தமிழ்மொழி ஒரு பிரதேச மொழியாக மட்டுமே கருதப்பட்டு வந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதனை உலக மொழியாக நிறுவிக் காட்டினார் இந்த மேலைநாட்டுக் கிறித்தவத் தொண்டர். இவரது பார் தழுவிய தமிழ்குறித்த பரந்த சிந்தனை கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும், வடக்கிலும் தமிழ் பயின்று தமிழாய்வு செய்த நூற்றுக்கணக்கான அறிஞர்களை 20–ஆம் நூற்றாண்டில் உருவாக்கியது. இத்தகைய அறிஞர்களின் முயற்சிகளால் இந்தியவியல் என்றால் சமற்கிருதவியல் என்ற தவறான கண்மூடித்தனமான கருத்து மண்மூடிப்போனது. இந்த நிலையினை ஏற்படுத்திய மூலகாரணர் காலுடுவெல் என்பதில் ஐயமில்லை.
நூற்றுக்கணக்கான மேலைநாட்டு அருட்தொண்டர்கள் தமிழுக்கு அளப்பரிய பணிகள் பல புரிந்த போதிலும் காலுடுவெல் பெருமகனார் அன்னைத் தமிழுக்கு அமைத்துக் கொடுத்த பார் தழுவிய அரியணை எந்த ஒரு தனி ஆளாலும் எந்த ஒரு தனி மொழிக்கும் உலக வரலாற்றில் இன்றுவரை ஏற்படுத்தித் தரப்படவில்லை எனத் துணிந்து கூறலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழுக்கு வழங்கிய அரும்பெருங் கொடை காலுடுவெல் என்றால் 20-ஆம் நூற்றாண்டு தமிழுக்கு நல்கிய உயர்தனிக் கொடை பேராசிரியர் கமில் சுவலபில் எனலாம்.
பிரதேசத் தமிழை உலகளாவிய தமிழாக நிலைப்படுத்தினார் காலுடுவெல். தமிழ் இலக்கியமும், தமிழ்ப்பண்பாடும் இந்த உலகளாவிய நோக்கில் கிளை பரப்பி செழிப்பதற்குரிய சூழலை உருவாக்கித் தந்தார் செக்கு நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில். இவ்விருபெரும் அறிஞர்களும் தோன்றாதிருந்தால் தமிழ்மொழி இன்றும் ஒரு பிரதேச மொழியாக மட்டுமே இருந்திருக்க முடியும். தமிழினமும் எல்லா நிலைகளிலும் குறைந்தபட்சம் நூறு ஆண்டுகள் பின்தங்கியே தன் வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்க முடியும். இவ்விருவரும் இல்லையெனில் திராவிட இனம், திராவிட மொழி, திராவிட இலக்கியம், திராவிடப் பண்பாடு, திராவிடவியல், திராவிட அரசியல் எதுவுமே நமது காதுகளிலும் உலகோர் காதுகளிலும் இன்றும் ஒலித்திருக்காது என்பது உறுதி.
முனைவர் சான் சாமுவேல்
நிறுவன இயக்குநர்
ஆசியவியல் நிறுவனம்
சென்னை– 600 119
No comments:
Post a Comment