Showing posts with label புதினம். Show all posts
Showing posts with label புதினம். Show all posts

Monday, July 18, 2022

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 8

 அகரமுதல




(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 7 இன் தொடர்ச்சி)

குமரிக் கோட்டம்

அத்தியாயம் 2 தொடர்ச்சி

ஏதுமறியாத குமரி, செட்டியார் ஏதோ கவலையாக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு வருந்தினாள்.

“என்னாங்க உடப்புக்கு? ஒரு மாதிரியா இருக்கறிங்க.”

“ஏன்! அதெல்லாம் ஒண்ணுமில்லையே! “ரொம்பக் களைச்சாப்போல இருக்கறிங்க”

“எனக்கென்ன களைப்பு ! நான் என்ன, உன் போல வெயிலிலே வேலை செய்கிறேனா?”

“உங்களுக்கு ஏனுங்க, தலை எழுத்தா என்ன, கூலி வேலை செய்ய? நீங்க மகாராசா.”

உனக்கு மட்டும் தலை எழுத்தா, இவ்வளவு இளம் பிராயத்திலே சேற்றிலேயும் மண்ணிலேயும் இருக்க. குமரி! உனக்கு ஒரு பணக்காரனாப் பார்த்துக் கலியாணம் செய்துவிட்டா. கூலி வேலை ஏன் செய்யப் போறே பிறகு.”

“வேடிக்கையாப் பேசறிங்க. அது அதுக்குன்னு ஆண்டவன் அளவு போடாமலா அனுப்புவாரு.”

இப்படி ஏதாவது பேசுவாள் குமரி. மாடிக்குச் செல்வதற்கு, ஒவ்வோர் படிக்கட்டாகக் கால் வைப்பது போலச் செட்டியாரும், ஒவ்வோர் தடவை பேசும் போதும், ஒவ்வொரு வாசகமாகத் தம் நிலையை உணர்த்துவிக்கக் கூறி வந்தார். குமரி, செட்டியாரிடம் இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்று துளியும் எதிர்பார்த்தவளல்ல. ஆகவே அவர் பேசின தன் உட்கருத்தை அவள் உணர்ந்து கொள்ளவே இல்லை .

ஒருமுறை செட்டியார், தம் சோகநிலைமையைக் கூறினார். அவருக்குப் பரிந்து பேச விரும்பிய குமரி, “ஆமாங்க, எனக்குக் கூடச் சொன்னாங்க, உங்க மகன் கதையை. யாரோ ஒரு துட்ட முண்டே, அவரைக் கெடுத்து விட்டாளாம்” என்றாள்.

“குமரி ! அந்தப் பெண்ணைத் திட்டாதே. பெண்கள் என்ன செய்வார்கள்? அவன் அவள் மீது ஆசை கொண்டால், அவள் என்ன செய்வாள் பாவம்” என்று செட்டியார், தம் மருமகள் சார்பிலே ஆசரானார்! மற்றோர் நாள் “உன் அழகுக்கும் குணத்துக்கும், நீ எங்க சாதியிலே பிறந்திருந்தா, உன் தலையிலே, மணல் கூடையா இருக்கும்!” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார். மற்றும் ஓர் நாள், மார்பு வலிக்குத் தைலம் தடவும் படி சொன்னார். கொஞ்சம் கூச்சம் இருந்தாலும் ‘கல்மிசம் அற்ற’ மனத்துடன் அவருடைய மார்புக்குத் தைலம் பூசினாள் குமரி. சதா சர்வகாலமும் அவள் நினைப்பு நெஞ்சிலே இருந்ததே தவிர, ஒருநாளும் அவள், அன்று அமர்ந்திருந்தது போலத் தம் அருகே உட்கார்ந்திருந்ததேயில்லை ; அவள் கை, செட்டியாரின் மார்பிலே பட்டபோது புள காங்கிதமானார். கண்களை மூடிக்கொண்டார்.

அவளுடைய ‘மூச்சு ” அவருக்குத் தென்றல் வீசுவது போலி ருந்தது. என்னென்னமோ எண்ணினார். உடலே பதறிற்று அவருக்கு. மார்பு வலி மட்டுமில்லை. செட்டியாருக்குக் குளிர் சுரம் என்று குமரி எண்ணிக் கொண்டாள், அவருடைய உடல் பதறுவதைப் பார்த்து. சுரம், ஆம் – ஆனால், அந்த நோயைக் கிளறியது அவளுடைய அழகு என்பதை அவள் அறிந்து கொள்ள வில்லை. ஆபத்து வேளை; ஆனால் தப்பித்துக்கொண்டார் செட்டியார், மீனா அங்கு வந்ததால். “மார்வலி, தைலம் தடவினேன், சுரம் வரும் போலிருக்கு” என்றாள் குமரி ”பார்த்தாலே தெரியுதே” பச்சைச் சிரிப்புடன் கூறிக்கொண்டே போய்விட்டாள் மீனா.

தைலம் பூசிக் கொண்ட பிறகு, செட்டியாரின் தாபம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. இனி இங்கிருந்தால், எந்தநேரத்தில் என்ன ஆபத்து நேரிடுமோ, வெறி மீறி என்ன விபரீதமான செயல் புரிந்துவிடும்படி நேரிட்டு விடுமோ என்ற திகில் அதிகரித்தது. இனி இங்கிருக்கக் கூடாது இரண்டோர் நாட்கள், வெளியூர் போய் வருவது நல்லது என்று எண்ணி, மறையூரை விட்டுக் கிளம்பினார். மனச்சாந்திக்காக இம்முறையைக் கையாண்டார். ஆனால் எந்த ஊர் சென்றாலும், அவள் பின் தொடர்ந்தாள். அதோ செட்டியார், அந்தியூர்க் கடை வீதியில் அருணாசலச் செட்டியார் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். புதிதாக வந்த பம்பாய் பட்டுச் சேலையின் நேர்த்தியை அருணாசலச் செட்டியார் வாடிக்கைக்காரருக்குக் கூறுகிறார். குழந்தைவேலச் செட்டியாரோ அந்தச் சேலையைக் கண்ட உடனே அதைக் குமரிக்குக் கட்டி அழகு பார்க்கிறார் ! அதாவது அந்தச் சேலையைக் கட்டிக்கொண்டு குமரி, தன் எதிரில் நின்று காட்சி தருவது போலத் தோன்றுகிறது செட்டியாருக்கு. எங்கே போனாலும், எதைக் கண்டாலும், விநாடிக்கு விநாடி அவள் வருகிறாள். ஒவ்வோர் தடவை யும் ஒவ்வோர் படி அதிகரிக்கிறது அவருடைய ஆசை. பித்தம் பிடித்தவர் போல மீண்டும் மறையூர் வந்து சேர்ந்தார்.

செட்டியாரின் நிலையை மீனா நன்றாக உணர்ந்து கொண்டாள். சமயமறிந்து செட்டியாரைத் தனியாகச் சந்தித்து. வெளிப்படையாகவே கேட்டு விட்டாள். அவர் முதலில் நடுநடுங்கிப் போனார். பிறகு இல்லை என்று கூறிப் பார்த்தார். கடைசியில் கண்களில் மிரட்சியுடன், “ஆமாம் எனக்கு, அந்தப் பெண்மீது அமோகமான ஆசைதான் ; ஆனால் …..” என்று பிச்சை கேட்பதுபோலப் பேசினார்.

“பயப்படாதிங்க செட்டியாரே ! அந்தப் பெண் ஒரு மாதிரி. இந்த மாதிரி காரியத்துக்குத் தலைபோனாலும் ஒப்பமாட்டாள்” என்றாள் மீனா.

“அது தெரிந்துதானே, நான் இப்படிப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டேன்” என்று செட்டியார் கூறினார்.

“அவள் சம்மதிக்கவே மாட்டாள் ; நாம்தான் சாமர்த்தியமாக நடந்துகொள்ள வேண்டும். நாளை இரவு, சொக்கனை ஏதாவது வேலையாக வெளியூருக்கு அனுப்பிவிடுங்கள். நான் முடித்துவிடுகிறேன்” என்றாள் மீனா. இட்டதேவதை பிரசன்னமாகி வரம் கொடுத்தால் எவ்வளவு சந்தோசம் வருமோ அவ்வளவு ஆனந்தம் செட்டியாருக்கு. சொக்கனை வெளியூர் அனுப்புவது சிரமமில்லை, அனுப்பினார். மீனா, ஏற்பாட்டின்படி செட்டியாரிடம் வந்தாள் ; கச்சக்காய் அளவுக்கும் குறைவு ஏதோ லேகியத்தைக் கொடுத்தாள் செட்டியாரிடம். “குமரியைக் கூப்பிட்டனுப்பி இந்த லேகியத்கைத் தின்று விடும்படி செய்யுங்கள். பிறகு அவள் உங்கள் பொருள், விடிஞ்ச பிறகுதானே சொக்கன் வருவான்!” என்று யுக்தியும் சொல்லித் தந்தாள். நடுங்கும் கரத்திலே லேகிய உருண்டையை வாங்கிக்கொண்டு செட்டியார், “இது என்ன மருந்து? ஆபத்துக் கிடையாதே’ என்று கேட்டார். “இது என்ன மருந்து என்று நீங்கள் நாளைக் காலையிலே என்னிடம் சொல்வீர் செட்டியாரே ! நான் போய் குமரியை அனுப்புகிறேன், லேகியம் செய்யும் வேடிக்கையைப் பார்த்துக் கொள்ளுங்கள் நீங்களே என்று மீனா கூறிவிட்டுப் போய்விட்டாள்.

(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்

Sunday, June 27, 2021

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 12

 

அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 11. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 5

பங்குனி மாதம் பிறந்தால் எங்கள் ஊர்க்கு ஒரு புத்துயிர் பிறக்கும். பங்குனித் திருவிழா கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதை ஒட்டித் தேரோடும் தெருக்கள் எல்லாம் மிகவும் அலங்காரம் செய்யப்படும். கடைத்தெரு மிகப் பொலிவாக விளங்கும். வழி எல்லாம் பந்தல்களும் தோரணங்களும் கட்டப்படும். திருவிழாத் தொடங்கியவுடன், வீடுதோறும் ஆட்கள் மூன்று மடங்கு நான்கு மடங்காகப் பெருகிவிடுவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியூரிலிருந்து உறவினர்களும் நண்பர்களும் திருவிழாவைப் பார்ப்பதற்காக வந்து தங்கியிருப்பார்கள். எங்கள் தெருவின் வீடுகளிலும் விருந்தினர் பலர் இருப்பார்கள். அல்லாமலும், எங்கள் தெருத்திண்ணைகள் தோறும் வெளியூரார் முன்பின் அறியாதவர் பலர் கேட்காமலே வந்து தங்கிப் படுத்துக்கொள்வார்கள். வேப்ப மரங்களைச்சுற்றி ஆண்களும் பெண்களும் கட்டுச்சோறு தின்றுகொண்டும் வெற்றிலைபாக்கு மென்று கொண்டும் இருப்பார்கள்.

திருவிழாக் காலத்தில், யார், ஏன் வந்தீர்கள் என்று வீட்டுக்காரர் வெளியாரைக் கேட்கமாட்டார்கள்; கேட்கவும் கூடாது. எல்லாரும் இறைவனுடைய மக்கள் என்ற மெய்யுணர்வு பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. ஆனாலும் வழி வழியாக வந்த நாகரிகமாக அதைக் கருதினார்கள். ஆகையால், திருவிழாக் காலத்தில் வீட்டின் உட்பகுதி மட்டுமே வீட்டுக்காரர்க்கும் அவர்களின் உறவினர்க்கும் உரிமையாக இருக்கும்; வீட்டின் வெளிப்பகுதி, திண்ணை முற்றம் முதலியன வெளியார் எல்லார்க்கும் உரிய பொது இடமாகக் கருதப்பட்டு வந்தன. இன்னும் சொல்லப்போனால், திண்ணை முற்றம் முதலியவைகளே அல்லாமல் அந்தந்த வீட்டுக் கிணறுகளும் எல்லார்க்கும் பொதுவுடைமையாக இருந்தன. சென்னை முதலான நகரங்களில் நாள்தோறும் திருவிழாப் போன்ற கூட்டம் இருந்தபோதிலும், இந்தப் பரம்பரை நாகரிகம் பொதுவுடைமை நாகரிகம் அவர்களுக்குத் தெரியாது. சட்டமும் சட்டத்தை மீறும் தந்திரமும் அவர்களுக்குத் தெரியுமே தவிர, இப்படிப்பட்ட பரம்பரை நாகரிகமும் அதன் பெருமையும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த ஆண்டில் பங்குனித் திருவிழாவின் போது எங்கள் வீட்டுக்கு வேலம், அம்மூர் முதலான கிராமங்களிலிருந்தும் சென்னையிலிருந்தும் உறவினரும் நண்பரும் வந்திருந்தார்கள். பாக்கிய அம்மையார் வீட்டுக்கும் யாரோ வந்திருந்தார்கள். சந்திரன் வீட்டிற்கு அவனுடைய தாயும் தங்கையும் வந்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு வந்த உறவினரில் முக்கியமானவர்கள் என் சொந்த அத்தையும் அத்தை கணவரும் அத்தை மகள் கயற்கண்ணியும் ஆவார்கள்.

சந்திரனுடைய தாயைப் பார்த்தபோதுதான், சந்திரன் அவ்வளவு அழகாக இருப்பதற்கு காரணம் தெரிந்து கொண்டேன். அந்த அம்மா கடைந்தெடுத்த பதுமை போல் இருந்தார். நல்ல ஒளியான நிறம், அளவான உயரம், மென்மையான உடல், ஓவியம் தீட்டினாற்போன்ற புருவமும் விழியும் நெற்றியும் உடையவர் அவர். சந்திரனுடைய தந்தைக்கும் உடம்பில் ஒரு குறையும் இல்லை. ஆனாலும் அவருடைய தோற்றம் மிக அழகானது என்று கூற முடியாது. சந்திரனுடைய தாய் அழகின் வடிவமாக விளங்கினார். அந்த அழகிற்கு ஏற்ற அமைதியும் அவரிடம் விளங்கியது. சந்திரனுடைய முகத்தில் தாயின் சாயல் நன்றாகப் புலப்பட்டது. அந்த உண்மை அவனுடைய தங்கையைப் பார்த்தபோது தெளிவாயிற்று. தாயின் அழகுக்கும் அண்ணனின் அழகுக்கும் ஒரு பாலம் போல் விளங்கினாள் அவள்.

அவள் பெயர் கற்பகம், பெருங்காஞ்சியிலேயே சந்திரன் படித்த பள்ளிக்கூடத்திலேயே அவள் படித்து வந்தாள். அவள் அப்போது ஏழாவது படித்துவந்தாள். ஏறக்குறைய அவள் வயதாக இருந்தாள் என் அத்தை மகள் கயற்கண்ணி. அவள் ஐந்தாவதுதான் படித்து வந்தாள். அந்த ஊரில் ஐந்தாவதுக்குமேல் படிக்க வகுப்பு இல்லாத காரணத்தால் “என் மகளுடைய படிப்பு இதோடு முடிந்துவிட்டது. நீ சீக்கிரம் படித்து முடித்து இவளைக் கல்யாணம் செய்துகொள்” என்று அத்தை என்னைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தார். “உன் மகள் படிப்பு முடிந்து போச்சு; அதனால் என் மகனுடைய படிப்பையும் சீக்கிரம் முடிக்கச் சொல்கிறாயா?” என்று அம்மா வேடிக்கையாகக் கேட்டார். அதைக் கேட்ட கயற்கண்ணி, “போதும் மாமி! சும்மா இருங்கள், உங்களுக்கு இதே பேச்சு!” என்பாள்.

கற்பகத்தைப் போலவே கயற்கண்ணி சுறுசுறுப்பாக இருந்தபோதிலும் அவ்வளவு அழகாக இல்லை. வளர்ந்த பிறகும் என் அத்தைபோல் தான் இருப்பாள் என்று எனக்குத் தோன்றியது. அது மட்டும் அல்ல; அவளுடைய வாயாடித் தன்மை எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. யாராவது ஒன்று சொன்னால், அவள் இரண்டு மூன்று சொல்வாள். யாரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று துடுக்காகக் கேட்டு விடுவாள். ஏதாவது அறிவுரை சொன்னாலும், “ஆமாம் உங்களுக்குத்தான் நிரம்பத் தெரியுமோ? போதும் நிறுத்துங்கள்” என்பாள். எனக்கு அந்தப் பேச்செல்லாம் பிடிக்காது. என் தங்கை மணிமேகலையிடமும் அவள் அடிக்கடி வம்பாகப் பேசுவாள். வலுச்சண்டை இழுப்பாள். அதைக் கண்ட நான் உடனுக்குடன் கடிந்து பேசுவேன். அம்மா அவ்வப்போது என்னைத் தடுத்து, “வேலு! சின்னப் பெண் அப்படித்தான் பேசுவாள். கிராமத்தில் பழகி வளர்ந்தவள். அங்கெல்லாம் அப்படித்தான் பேசுவார்கள். நீ கோபித்துக் கொள்ளக்கூடாது” என்று மெல்ல என்னிடம் சொல்வார். தொலைந்து போகட்டும் என்று நான் விட்டு விடுவேன்.

கயற்கண்ணியிடம் எனக்கு எவ்வளவு வெறுப்பு வளர்ந்ததோ, அவ்வளவும் கற்பகத்திடம் விருப்பமாக வளர்ந்தது. அடிக்கடி சந்திரன் வீட்டுக்குப் போய்க் கற்பகம் பேசுவதையும் செய்வதையும் கவனித்தேன். திருவிழாப் பார்க்க அவள், போனால் நானும் போவேன். கடைத்தெருவுக்கு நானும் சந்திரனும் போகும் போது, “கற்பகமும் வருவதாக இருந்தால் வரட்டுமே, வந்து பார்க்கட்டுமே” என்று அழைத்துக் கொண்டு போவேன்.

பொய்க்கால் குதிரை, மயில் நடனம், பொம்மலாட்டம், தெருக்கூத்து முதலியவற்றைப் பார்ப்பதற்குச் சந்திரனுடைய தாயும் கற்பகமும் என் அத்தையும் கயற்கண்ணியும் என் தங்கை மணிமேகலையும் சேர்ந்து போவார்கள். சந்திரன் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்று நின்றுவிடுவான். “அவன் போகிறானா, பார், படிப்பில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறான்! நீ மட்டும் போகலாமா? உள்ளே போய்ப் படி, சாமி ஊர்வலம் வரும் போது கூப்பிடுவேன். அப்போது வா” என்று அம்மா என்னைக் கடிந்து அனுப்பி விடுவார். அப்பா கடையிலிருந்து திரும்பிவரும் நேரம் என்று நானும் போகாமல் நின்றுவிடுவேன்.

திருவிழா முடியும் வரையில் எங்கள் தெரு நிறையக் கூட்டம் போனது போனபடி, வந்தது வந்தபடி இருந்தது. கிராமத்து ஏழைமக்களே பெரும்பாலோராக இருந்தார்கள். ஒருவகையில் ஊரைச் சுற்றி அசுத்தம் செய்யப்பட்ட போதிலும் தெருவெல்லாம் எச்சிலும் எச்சிலையுமாக இருந்தபோதிலும், எல்லோருடைய மனமும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. உழைத்த உழைப்பே உழைத்து, குடித்த கூழே குடித்து, உடுத்த கந்தலே உடுத்து, படுத்த தரையிலேயே படுத்து, ஆடுமாடுகளோடு சேர்ந்து குடிசைகளில் வாழும் ஏழைமக்களுக்கு இந்தத் திருவிழா ஒரு மாறுதல் தந்து நன்மை செய்வதை அவர்களின் மலர்ந்த முகங்களில் கண்டேன்.

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார்

அகல்விளக்கு