Showing posts with label பேரா.ப.மருதநாயகம். Show all posts
Showing posts with label பேரா.ப.மருதநாயகம். Show all posts

Monday, June 07, 2021

போராளி அறிஞர் இலக்குவனார் – பேரா.ப.மருதநாயகம்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 67/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

68/69

  1. Ilakkuvanar: Scholar as Warrior

(அறிஞர் இலக்குவனார்: போராளியாக)

பேராசிரியர் சி.இலக்குவனார் குறித்துத் தமிழில் சில வரலாற்று நூல்கள் வந்துள்ளன. சாகித்திய அகாதெமியும் வெளியிட்டுள்ளது. அவர் ஆய்வு குறித்து ஆய்வேடுகளும் வந்துள்ளன. எனினும்  தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பால்  அயல் மொழியாளராலும் அறியப்பட்ட அவர் குறித்த ஆங்கில நூல் எதுவும் வரவில்லை. இலக்குவனாரின் கவிதைகளைத் தொகுத்து ஆய்வு நூல் வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ள பேரா.ப.மருதநாயகம் அதற்கு முன்னதாக அறிஞர் இலக்குவனார்: போராளியாக(Ilakkuvanar: Scholar as Warrior) என்னும் ஆங்கில நூலை வெளிக் கொணருகிறார்.

தகைசால் பேராசிரியராக, அறிஞராக, இலக்கியத் திறனாய்வாளராக, இலக்கணப் புலவராக, மொழியியல் ஆய்வாளராக, இதழாளராக, மொழிபெயர்ப்பு வல்லுநராக, யாவற்றினும் மேலாகப் பதவி இழப்புகளுக்கும் சிறைத் தண்டனைகளுக்கும் அஞ்சா நெஞ்சினராகப் போற்றப்படும் பேரா.சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமையை இதில் விளக்கியுள்ளார். தமிழினம், மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்பைத் தம்முடைய எழுத்துகளின் மூலம் புலப்படுத்தியதோடு, அவற்றைக் காக்கக் களத்தில் இறங்கிப் போராடிய பெருமையும் இவருக்கு உண்டு.

முதல் கட்டுரை இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பின் சிறப்பை விளக்குகிறது. பேரறிஞர் அண்ணா மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தின்போது போப்பாண்டவரிடம் அளித்த இரண்டு நூல்களில் இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வும் ஒன்றாகும். அதனை அவர், “Tolkaappiyam is a capsule of Tamil Culture” என்று அறிமுகப்படுத்தினார். இக்கருத்தை இலக்குவனாரின் நூல்களிலிருந்தே அண்ணா பெற்றிருக்க வேண்டும்.  தொல்காப்பியரின் கால வரையறை, தொல்காப்பிய இடைச் செருகல்கள், தொல்காப்பியர் குறிப்பிடும் அந்தணர் மறை சமற்கிருத வேதத்தைக் குறிக்கவில்லை, தொல்காப்பியம் மூல நூலே, அயல்மொழிச் சொற்களைத் தமிழ்மைப்படுத்தியே எழுத வேண்டும், ‘நிருத்த’ என்னும் நூலை இயற்றிய யசுகர், சில இடங்களில் தொல்காப்பியரைப் பின்பற்றியுள்ளார், தொல்காப்பியர் குறிப்பிடும் என்ப, என்மனார் ஆகிய சொற்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழ்ப்புலவர்களையே குறிப்பிடுகிறது, ‘உம்’ என்பது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் குறிக்கும், அரிசுடாட்டிலுக்கு முன்னரே தமிழ்ப்புலவர்கள் செழுமை வாய்ந்த இலக்கியங்களைப் படைத்திருந்தனர் முதலான இலக்குவனாரின் பல்வேறு முடிபுகளை இதில் உரைக்கிறார்.

இரண்டாம் கட்டுரை ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்:சங்கக்காலம்’ என்னும் நூல் குறித்தது. சங்க இலக்கியக் கருவூலத்தினை நாடும் நகரங்களும், மக்கள், அரசு, கல்வி, இல்லறம், கடவுட் கொள்கை, மெய்யுணர்வுக் கொள்கை, பண்பாடு, நாகரிகம், பொழுதுபோக்கு, பழக்க வழக்கங்கள், வணிகம், போர்கள், புலவர்கள் ஆகிய தலைப்புகளில் பேரா.இலக்குவனார் அளித்துள்ளதைக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம் முதலான நூல்களின்  கால வரிசைக்கிணங்கத் தமிழ் இலக்கியக் காலங்களைப் பகுத்துள்ளதையும் எடுத்துரைக்கிறார்.

துணைக்கண்டமாக இருக்கும் பகுதியில் அக்காலத்தில் குமரி முதல் இமயம் வரை தமிழே வழங்கி வந்தது; பல பெயர்களால் குறிக்கப்பெறும் ஒரு கடவுட் கொள்கையே அக்காலத் தமிழர்கள் அறிந்தது; தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பெளத்தரோ சமணரோ அல்லர்; கிரேக்கம், உரோம், அரபு நாடுகளுடன் தமிழர்கள் கடல் வழி வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்; கற்றறிந்த சிலரே அறிந்திருந்த சங்க இலக்கியத்தை மக்களிடையே பரப்புவதற்காகச் ‘சங்க இலக்கியம்’ என்னும் வார இதழை நடத்தினார்; சங்க இலக்கியங்களில் தமிழ் என்னும் சொல் காணப்படுவதால் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் காணப்பெறும் திராவிட என்னும் சொல்லில் இருந்து தமிழ் என்னும் சொல் உருவானது எனக் கூறுவது முற்றிலும் தவறாகும்;  என்பன போன்ற பேரா.சி.இலக்குவனாரின் முடிவுகளை நமக்கு விளக்குகிறார்.

சங்க இலக்கியங்களை மக்களிடம் எடுத்துச் சென்ற முதல் நூலாக வும் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் துணை செய்யும் கருத்துக் கருவூலமாகவும் இலக்குவனாரின் இந்நூல் விளங்குகிறது.

மூன்றாவது கட்டுரையாக இலக்குவனாரின் திருக்குறள் தொடர்பான நூல்கள் குறித்து விளக்குகிறார். அமைச்சர் யார்? எல்லாரும் இந்நாட்டு அரசர்,வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், திருக்குறள்-எளிய பொழிப்புரை ஆகிய நூல்களே அவை. மேலும் பொதுமக்களிடையே திருக்குறளைப் பரப்புவதற்காக இலக்குவனார், குறள்நெறி(தனிச்சுற்று இதழ்), குறள்நெறி திங்களிருமுறை இதழ், குறள்நெறி நாளிதழ், குறள்நெறி ஆங்கிலத் திங்கள் இருமுறை இதழ் ஆகிய இதழ்களையும் நடத்தியுள்ளார்.

திருக்குறளின் கட்டமைப்பை ஆழமான ஆய்வுக்குட்படுத்தி,ஒவ்வொரு பாலிலும் அதிகார வைப்பு முறையையும் ஒவ்வோர் அதிகாரத்திலும் பாடல் வைப்பு முறையையும் உரையாசிரியர்களிலிருந்து வேறுபட்ட வகையில் எடுத்துக்காட்டி, அதன் செம்மையை(integrity of the text) இலக்குவனார் புலப்படுத்துகிறார்.

திருக்குறளுக்குப் பரிமேலழகர் முதலானோர் ஆரியச் சார்புடன் தவறான விளக்கம் அளித்தமைக்கான மறுப்புகளை நடுநிலையுடன் ஆய்ந்து அளித்துள்ளார்; திருக்குறளுக்கு அறிவியல் நோக்கில் விளக்கங்கள் அளித்துள்ளார்;   மாணாக்கர்களிடையேயும் மக்களிடையேயும் ஆய்வாளர் களிடையேயும் திருக்குறளை ஆழப் பதித்துள்ளார் என்கிறார் பேரா.ப.ம.நா.

     நான்காவதாகப், பேரா.இலக்குவனாரின் பாவியங்களை நமக்கு அறிமுகப்படுத்தி விளக்குகிறார். இலக்குவனார் புலவர் மாணாக்கராக இருந்த பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’(1933) என்னும் தனித்தமிழ்ப்பாவியத்தை எழுதியுள்ளார். ஒப்பற்ற ஆங்கிலப் புனைவியல் கவிஞராகிய கீட்சின்  ‘இசபெல்லா’ என்னும் ஆங்கில இலக்கியத்தைத் தழுவி எழுதியது என்ற வகையில் மொழிபெயர்ப்பு ஆக்கத்திலும் சிறப்பாக ஈடுபட்டுள்ளார். மூலநூலின் படியாக(நகலாக) இல்லாமல், இலக்குவனாரின் காவியம் மூலநூலின் சிறப்பை வெளிப்படுத்தும் தனித்தமிழ்ப் பனுவலாகச் சிறக்கக் காணலாம். பேச்சிலும் எழுத்திலும் சமற்கிருதம் கலக்கவேண்டிய தேவை இல்லை என்பதை எடுத்துக்காட்டும் வண்ணம் இனிய எளிய தமிழில் பாவியம் படைத்துள்ளார்; அவர் கையாண்ட உவமைகளைப் பின்னர் பெருஞ்சித்திரனார், இலெனின் தங்கப்பா முதலானோர் பின்பற்றியுள்ளனர்; இவ்வாறு எழிலரசி பாவியத்தின் சிறப்புகளையும் அதன் கதைச்சுருக்கத்தையும் நயமான பாடல்வரிகளுள் சிலவற்றையும் நமக்குப் பேரா.ப.ம.நா.அளிக்கிறார்.

தம் தமிழ்க்காப்புப் போராடடங்களினாலும் நேர்மையாலும் பேரா.இலக்குவனார் தாம் பணியாற்றிய  கல்வி நிறுவனங்களின் தலைவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானார், பணி நீக்கம் செய்யப்பட்டார்.அத்தைகய நேரங்களில் தம் சிந்தையைப் படைப்புலகின் பக்கம் திருப்பினார்.

அவ்வாறு உருவானதுதான் ‘துரத்தப்பட்டேன்’ என்னும் சிறு பாவியம். இந்நூல் இவரின் தன்வரலாற்று நூலாக அமைந்துள்ளது. விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியில் பணியாற்றிய பொழுது அரசியல் காரணங்களால் பணி நீக்கம் செய்யப்பெற்றார். இவருக்கு ஆதரவாக மாணவர்களும் பொதுமக்களும் கிளர்ந்தெழுந்தனர். அப்பொழுது திருக்குறள் முதலான இலக்கிய நூற்கருத்துகளைப் பெய்து எளிய நடையில் ஆசிரியப்பா வகையில் இந்நூலை அளித்துள்ளார். இந்நூல் பெரும்பெயர் பெற்ற தமிழறிஞர்கள் எழுதியுள்ள தன் வரலாற்று நூல்களுக்கு முன்னோடி என்பதோடு அவற்றிற்கான முன்மாதிரியும் ஆகும்.

வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை

அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை

நாடார் வாக்கைப் போடார் பிறர்க்கு

செட்டியார் வாக்குக் கிட்டிடா பிறர்க்கு

தேவர் வாக்கு வேறெவர்க்கும் இல்லை

முதலியார் வாக்கு முதலியார் தமக்கே

என அன்றைய அரசியல் சூழலைப்படம் பிடித்துக்காட்டியுள்ளமை இன்றைக்கும் பொருந்துகிற தல்லவா?

சாதிமுறைகள் சாகுநாள் என்றோ

என அவர் கேட்பது இன்றைக்கும் கேள்வியாக இருக்கும் அவலம்தானே உள்ளது!

புதுக்கோட்டையில் வாழ்ந்த கல்விப்புரவலர் அண்ணல் சுப்பரிமணியனாரிடம் ஆற்றுப்படுத்தும் மற்றொரு பாவியம் மாணவர் ஆற்றுப்படை. தமிழ்ச்சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான ஆற்றுப்படையை இக்காலப் பாடுபொருள்களுக்கும் பயன்படுத்த இயலும் என்பதற்குத் தலையாய சான்றாகத் திகழ்வது இந்நூல்.

பிறவியில் எவரும் பேதையர் அல்லர்

வாய்ப்பும் வசதியும் வாய்க்கப் பெற்றால்

எவரும் பெரியராய் இனிதே உயரலாம்

என மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

ஆற்றுப்படை என்னும் பண்டைத்தமிழரின் இலக்கிய வகையைப் பயன்படுத்தி இக்காலச் சூழலுக்கேற்ப இவர் படைத்துள்ள இலக்கியப்பணியைப் பேரா.ப.ம.நா. பெரிதும் பாராட்டுகிறார்.

பெரியார், அண்ணா, நேரு, திரு.வி.க. பாரதி, பாரதிதாசன் முதலான ஆன்றோர்களைப்பற்றிய சொல்லோவியப் பாடல்களைப் பேராசி.இலக்குவனார் படைத்துள்ளார்.  புறநானூற்றுத்  துறையான இயல்நிலை வாழ்த்துபோல் இவற்றைத் திறம்படவும் அழகுபடவும் அளித்துள்ளார்.   

‘பழந்தமிழ்’, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ முதலான இவரின் பிற நூல்களில் வெளிப்படும்  பேரா.இலக்குவனாரின் மொழியியல் ஆய்வுத்திறனையும் பழந்தமிழ்ச்சிறப்புகளை எடுத்தோதும் பெருமிதப் பாங்குகளையும் பேரா.ப.ம.நா.விளக்குகிறார்.

தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பால் பிறநாட்டு அறிஞர்  உலகால் அறியப்பட்ட இலக்குவனாரின் பணிச்சிறப்புகளையும் அறியும் வண்ணம் வாழ்க்கை ஓவியமாக இந்த ஆங்கில நூலைப் பேரா.ப.ம.நா. படைத்துள்ளார். அடுத்து இலக்குவனாரின் கவிதைச் சிறப்புகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்னும் இவர் நோக்கமும் சிறப்பாக நிறைவேறும் எனலாம்.

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 69/69)



Sunday, June 06, 2021

அச்சில் உள்ள பேரா.மருதநாயகத்தின் தமிழ், ஆங்கில நூல்கள்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் மருதநாயகம் 66/69  இன் தொடர்ச்சி)



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

67/69

  அச்சில் உள்ள தமிழ் நூல்கள்

மேற்குறித்த நூல்கள்தவிர, மேலும் சில நூல்களையும் எழுதியுள்ளார். அவை அச்சில் உள்ளன. அவற்றில் தமிழ் நூல்கள் வருமாறு:

  1. தமிழ் அழகியல் – உலகளாவிய ஒப்பு நோக்கு

தமிழரின் அழகுணர்வு நீண்ட நெடுங்காலமாகவே மொழி, இலக்கியம், கவிதையியல், இசை, நடனம், சிற்பம், ஓவியம் ஆகிய துறைகளிலெல்லாம் வெளிப்படுத்தப் பெற்றுள்ளது. இதன் தொன்மையையும் சிறப்பையும் எபிரேய, கிரேக்க, உரோமானிய, ஆரிய இனத்தாரின் மொழிகளிலும் கலைகளிலும் இலக்கியங்களிலும் காணப்பெறும் அழகுணர்வோடு ஒப்பிட்டுப் பார்க்கு்ம் பொழுது நன்கு உணர முடியும். இத் தொகுதியிலுள்ள பதினெட்டுக் கட்டுரைகளும் காய்தல், உவத்தல் இன்றி இத்துறைகளில் ஆய்வை மேற்கொண்டுள்ளன. இக்கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள எல்லா முடிவுகளும் செய்திகளும் தக்க ஆதாரங்களுடன் அவ்வத்துறைகளில் ஆழ்ந்த பயிற்சியுடைய மேலைநாட்டு விற்பன்னர்களின் கருத்துகளுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழின் உட்பகைவர்களும் புறப்பகைவர்களும் மறைக்கும் மறுக்கும் பல உண்மைகளை நம்மவர் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே இந்நூலின் தலையாய நோக்கமாகும்.

 சிறந்த ஒப்பிலக்கிய அறிஞரான பேரா.ப.ம.நா. தமிழ் அழகியலை உலகளாவிய ஒப்பு நோக்கில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் எனலாம்.

2. ஒப்பில் தொல்காப்பியம்

மொழியியல் அறிஞரான பேரா.ப.ம.நா. தொல்காப்பியத்தை இடைச்செருகல்கள் இன்றிப்பதிப்பித்தும் தொல்காப்பிய ஆய்வுக் கட்டுரைகளைப்படைத்தும் தம் தொல்காப்பியப் புலமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரங்களில் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடுபற்றிக் கூறும் கருத்துகளையும் அவர் வரையறை செய்யும் தமிழ்க்கவிதை இயலையும் பிளேட்டோ, அரிசுடாட்டில், இலாஞ்சைனசு, ஓரசு, ஆனந்த வர்த்தனர், அபிநவகுப்புதர், குந்தகர், இராசசேகரர்,தண்டின் போன்றோரும் இன்றைய மேலைத்திறனாய்வாளர்களும் கவிதையின் பிறப்பு, தன்மை, பயன்பற்றிக் கூறும் ஆய்வுமுடிவுகளோடு ஒப்பிட்டுக் காட்டித் தொல்காப்பியரே இத்துறையில் தலைமையிடம் பெறத்தக்கவர் என்பதை நிறுவும் இருபதுக்கு மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். சமற்கிருத இலக்கண, இலக்கிய நூல்கள் பலவும் தொல்காப்பியத்திற்குக் கடன்பட்டிருப்பதையும் தொல்காப்பியத்திற்குப் பின் வந்த தமிழ் இலக்கண நூல்களும் கன்னட மலையாள மொழிகளில் எழுதப்பெற்ற கவிசரா மார்க்கம், (இ)லீலா திலகம், போன்றவையும் தொல்காப்பியத்தின் வழி நூல்களே யென்பதையும் இக்கட்டுரைகள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. பிற மொழி நூல்களுக்கும் தொல்காப்பியம் மூல முதல் நூலாக இருக்கும் சிறப்பை இந்நூல்போல் வேறு நூல் உணர்த்தவில்லை.

3. ஒப்பில் கம்பன்

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்னும் பழமொழி கம்பனின் கவிச்சிறப்பை உணர்த்தும். ‘ஒப்பில் வள்ளுவம்’, ‘ஒப்பில் தொல்காப்பியம்’ என நூல்களை அளித்துள்ள ஒப்பிலக்கிய அறிஞர் பேரா.ப.ம.நா. ‘ஒப்பில் கம்பனையும்’ நமக்கு அளித்துள்ளார்.

கிரேக்க மொழியிலுள்ள இலியத்து, ஒதிசி எனும் ஓமரின் வாய்மொழிப்பாடல்கள், இலத்தீன் மொழியிலுள்ள ஈனியித்து என்னும் வரைமொழிக் காப்பியம் இத்தாலிய மொழியிலுள்ள தாந்தேயின் தெய்விக இன்பியல் நாடகம் எனும் செவ்விலக்கியம் சமற்கிருதத்திலுள்ள வியாசபாரதம், வால்மீகி இராமாயணம், ஆங்கிலத்திலுள்ள விண்ணுலக இழப்பு என்னும் மிலட்டனின் அரிய நூல் ஆகியவை உலகப் பன்மொழி அறிஞர்கள் அறிந்தவை. இவற்றை யெல்லாம் படைப்பிலக்கியங்கள் என்று மதிப்பீடு செய்யும்போது கம்பனின் இராமகாதை பிற எல்லாவற்றையும் விடப் பல கூறுகளில் உயரந்திருப்பதைப் பன்மொழியறிவும் நேர்மையுணர்வும் இலக்கியத் திறனாய்வுத்திறனும் உடைய மேனாட்டறிஞர் சிலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். விபுலானந்தர் அடிகளார் தமது செகசிற்பியர்பற்றிய ‘மதங்க சூளாமணி’ என்ற நூலின் முன்னுரையில், “கம்ப நாட்டாழ்வார் அகலக் கவிகளுள் முதன்மை பெற்று விளங்குவதுபோல் செகசிற்பியார் நாடகக் கவிகளுள் முதன்மை பெற்று விளங்குகிறார்” என்று கூறுவார்.

ஐந்நூறு பக்கங்கள் கொண்டபேரா.ப.மருதநாயகத்தின் நூல் உலகக்காப்பியங்களோடெல்லாம் ஒப்பிட்டுக் கம்பனின் காப்பிய உயர்வை நிறுவுகிறது.

அச்சில் உள்ள ஆங்கில நூல்கள் வருமாறு:

  1. Tirukkural as the Book of the World

(உலக நூலாகத் திருக்குறள்)

திருவள்ளுவரின் திருக்குறளை உலகப்பொதுநூலாக ஏற்க வேண்டுமென்று தமிழன்பர்கள் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளனர். அதற்கிணங்கத் திருக்குறளைக் கிரேக்க, உரோமானிய, ஆரிய, மேலை ஐரோப்பிய இனத்தவர்களின் அறநூல்களோடெல்லாம் ஒப்பிட்டு அஃதே உலக நூலென்னும் தகுதிக்கு உரியதென்று உலகப் பன்மொழி அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்நூல் வேண்டுகிறது. பிளேட்டோ, அரிசுடாட்டில், கேட்டோ, மார்க்கசு அவுரேலியசு, மனு, கெளடிலியர், பத்துருகரி,மாக்கியவல்லி, இசுப்பினோசோ,மோந்தேயின், பேகன் போன்றோர் விட்டுச்சென்றுள்ள படைப்புகளெல்லாம் கடடமைப்பிலும் கருத்துச் செறிவிலும் இலக்கியத்தரத்திலும் வள்ளுவரின் நூலைச் சற்றும் நெருங்க முடியாதவை என்னும் கருத்தை இந்நூலிலுள்ள கட்டுரைகள் ஐயத்திற்டமின்றி நிறுவுகின்றன.

  1. On translating Tamil Classics

(தமிழ்ச்செவ்விலக்கியங்களை மொழிபெயர்ப்பதுபற்றி)

பழந்தமிழ் இலக்கிய நூல்களை முழுமையாகவும் தேவைக்கேற்ப சிற்சில பாடல்களையும் மொழி பெயரத்துள்ளனர். இவ்வாறு, சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றையும் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, பெரிய புராணம் போன்ற காப்பியங்களையும் ஆங்கிலத்திலும் பிற மேலை மொழிகளிலும் மொழி பெயர்க்கும்போது ஏற்படும் இடையூறுகளையும் சிக்கல்களையும் மொழிபெயர்ப்பு வல்லுநர்கள் அறிவர். சங்க இலக்கியஙக்ளில் சிலவற்றை ஏ.கே.இராமானுசன், சியார்சு ஆர்த்து, மார், அ.வெ.சுப்பிரமணியன்போன்றோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். திருக்குறளைப் போப்பு அடிகளாரும் எல்லீசரும் தமிழ் அறிஞர்கள் பலரும் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துள்ளனர். சிலப்பதிகாரத்தை அலெயின் தேனியலு, ஆர்.பார்த்தசாரதி போன்றோரும் மணிமேகலையைப் பிரேமா நந்தகுமார் முதலியோரும் ஆங்கிலத்தில் தந்துள்ளனர்.

இம்மொழிபெயர்ப்புகளின் நிறைகளையும் குறைகளையும் இந்நூல் சுட்டிக் காட்டுகின்றது. இதன் மூலம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.

  1.  Tamil Poetry Since Bharati

(தமிழ்க்கவிதை: பாரதிக்குப் பின்)

பாரதியைத் தொடர்ந்து தமிழ்க்கவிதைக்கு வளம் சேர்த்த பன்னிருவர் பற்றிய நூல் இது. இந்நூலில் பாரதி, பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம்,இலெனின் தங்கப்பா, பெருஞ்சித்திரனார், கலைஞர் மு.கருணாநிதி, அபுதுல் இரகுமான், குலோத்துங்கன், சிற்பி, வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோருடைய கவிதைகள் மேலை நோக்கில் ஆராயப்படுகின்றன. இறுதிக் கட்டுரையில் இன்று வாழும் கவிஞர்கள் பலரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன. இவையெல்லாம் இக்காலத் தமிழ்க்கவிதைகளைத் தமிழறியாதார்க்கு ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வதோடு, தமிழ் இன்னும் உயிர்த்துடிப்புள்ள கவிதை ஊடகமாகச் செயல்பட்டு வருகிறது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. மொழி பெயர்ப்பு வல்லுநரான பேரா.ப.ம.நா. எளிய முறையில் சிறப்பாக இப்பணியை முடித்துக் கவிஞர்களைச் சிறப்பித்துள்ளார்.

  1. Twelve Custodians of Tamil Culture

(தமிழ்ப்பண்பாட்டுப் பாதுகாவலர்கள் பன்னிருவர்)

தமிழின் அகப்பகைவர்களும் புறப்பகைவர்களும் இணைந்து காலந்தோறும் , தமிழினம், மொழி,இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மீது பன்முகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. இத்தாக்குதல்களிலிருந்து தமிழ்மொழி, தமிழினம் முதலியவற்றைக் காக்கும் வகையில், பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்ப்பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு முன்னிலை வகித்த பன்னிருவர்பற்றிய கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். எல்லீசர் எனும் ஆங்கிலேயரும் விபுலானந்த அடிகள், தனிநாயக அடிகள் ஆகிய ஈழத்தமிழறிஞர் இருவரும் மறைமைலயடிகள் என்னும் தனித்தமிழ் இயக்க முன்னோடியும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி அரிய நூல்களும் கட்டுரைகளும் எழுதியதோடு, தமிழுக்காகக் களத்தில் இறங்கிப் போராடிச் சிறை செல்லத் துணிந்தவரும் ஆகிய இலக்குவனாரும், ஆட்சியிலிருந்தபோதும் இல்லாதபோதும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் சொற்பொழிவுகள் மூலமாகத் தமிழ்ப்பணியாற்றிய அறிஞர் அண்ணாவும் புலவராகவும புரவலராகவும் திகழ்ந்து தமிழுக்குப் பலவழிகளில் தொண்டு செய்த சிற்பி பாலசுப்பிரமணியமும் அறிவியல் அறிஞராகத் இருந்தும் ‘மானுடயாத்திரை’ எனும் அரிய காப்பியம் யாத்த வா.செ.குழந்தைசாமியும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கவிப்பேரரசு வைரமுத்துவும் பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ.யும் இந்நூலில் இடம் பெறுகின்றனர்.

  1. Overshadowed Classics in Tamil

(புகழ் மங்கிய தமிழ்ச்செவ்விலக்கியங்கள்)

சங்க இலக்கியங்கள் உலக அறிஞர்களால் போற்றப்பட்டு வருகின்றன. எனினும் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களாகிய குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், கலித்தொகை ஆகியவையும் பத்துப்பாட்டு நூல்களாகிய திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு ஆகியவையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகிய திருக்குறள், நாலடியார் ஆகிய இரண்டும் பின்வந்த காப்பியங்களில் சிலம்பு, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவையும் மட்டுமே உலக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இவற்றிற்குக் கிடைத்த வரவேற்பு ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, மலைபடுகடாம், ஐந்திணை நூல்கள், பழமொழி நானூறு,மணிமேகலை, பெரியபுராணம், தேம்பாவணி போன்ற தகுதியுடைய செவ்வியலக்கியங்களுக்குக் கிடைக்கவில்லை. எனேவ, இந்நூல்களின் மேல் உலக அறிஞர்களின் பார்வைபடவேண்டும் என்பதற்காக இவற்றின்மீது ஒளிவீச்சைப் பாய்ச்சியுள்ளார் பேரா.ப.ம.நா. இவற்றின் சிறப்புகளைத் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கும் கட்டுரைகளை இந்நூலில் அளித்துள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 68/69)

Thursday, June 03, 2021

திறனாய்வுச்செம்மல் பேரா.ப.மருதநாயகம்

 அகரமுதல



(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 63/69  இன் தொடர்ச்சி)


தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

64/69

 (போற்றுதல்களும் தூற்றுதல்களும் : திறனாய்வுக் கட்டுரைகள்) Celebrations and Detractions : Essays in Criticism (Reliance Publishing House, New Delhi, 1993)

இந்நூலில் பின்வரும் பதினைந்து ஆங்கிலத் திறனாய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன:

1.) இலக்கியமும் தத்துவமும், 2)ஆதாரன் (Hawthorne) என்னும் அமெரிக்கரின் புதினம் (The Scarlet Letter), 3) The House of the Seven Gables என்னும் புதினத்தில் சேக்குசுபியரின் செல்வாக்கு, 4) புனைவியலும் வரலாறும், 5) மேத்தியூ அருனாலுடும் புனைவியல் கவிதையும், 6) உரைகல் அணுகுமுறை எனும் இலக்கியத் திறனாய்வு, 7) புனைவியல் காலத்தில் சேக்குசுபியர் நாடகங்கள்பற்றிய திறனாய்வு, 8) உரைகல் திறனாய்வும் மேத்தியூ அருனாலுடும், 9)எசுரா பவுண்டின் கவிதைகளில் வட்டிக்குக் கடன் தரல் எனும் பாடுபொருள், 10) எசுரா பவுண்டின் காட்சியுருக் கோட்பாடுகள், 11)ஏட்சு(W.B.Yeats)பற்றிய ஆங்கிலக் கவிதைகள்,12), டி.எசு.எலியட்டு எழுதிய The Cocktail Party எனும் நாடகம், 13) டி.எசு.எலியட்டின் கவிதையும் நாடகங்களும், 14)இலெசிலி ஃபீல்டரின் இலக்கியக்கோட்பாடு, 15)சவகர்லால் நேருவி்ன் மாந்தநேயம்.

பழந்தமிழ்க்கவிதையும் கவிதையியலும்: புதிய பார்வைகள் (Ancient Tamil Poetry and Poetics: New Perspectives (CICT 2010)

21 தலைப்புகளில்  பிறமொழி இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பழந்தமிழ்ச்சிறப்புகளை உணர்த்தியுள்ளார். அத் தலைப்புகள் பின்வரும் பொருண்மைகள் கொண்டனவாகும்:-

1.கிரேக்கம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் பேசப்படும் கவிதையியல்.

2.மறைமுகக் கவிதை : தமிழ் மரபு

3.கவிதை வடிவங்கள், பாடுபொருள்கள், உத்திகள் ஆகியவற்றின் சேமிப்புப் பேழையாகப் புறநானூறு

  1. புறநானூறு ஒரு வீரயுக இலக்கியமா?
  2. பரணரின் பாடல் :புது வரலாற்றிய நோக்கில்

6.குறுந்தொகையின் முதற்பாடல்: சிதைவாக்கத் திறனாய்வு அணுகுமுறையில்

7.கலையும் காமநூலும் : அகநானூற்றுப் பாடலின் படுக்கையறைக் காட்சி

8.முல்லைப்பாட்டு : முல்லையா? நெய்தலா?

9.குறிஞ்சிப்பாட்டு : களவு மணமும் கந்தர்வ விவாகமும்

10.இந்தியக் காப்பியத்தின் தோற்றம் : குமாரசம்பவமும் சங்கச் சான்றோர் பாடல்களும்

11.பரிபாடலின் காலம்

12.விலங்குகளின் மாந்த உணர்வுகள்: தொல்காப்பியத்திலும் சங்கப்பாடல்களிலும்

13.வாழ்க்கையின் நோக்கமும் பயனும்:திருவள்ளுவரும் பிளேட்டோவும்

14.நட்பைப்பற்றி வள்ளுவரும் அரிசுட்டாட்டிலும்

15.பழமொழி நானூறு: வாழ்க்கைக்கு வழிகாட்டியாகப் பழமொழிகள்

16.சிலப்பதிகாரத்திலும் ஆந்திகொனியிலும் ஊழ்

17.சிலப்பதிகாரம்: பத்தின் என்ற உருசிய திறனாய்வாளரின் அணுகுமுறையில்

18.மணிமேகலையில் புத்த சமயம்

19.ஏ.கே.இராமானுசனின் ஆங்கிலக் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு

20.புறநானூற்றை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்கள்

21.திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் : எல்லீசர் முதல் சுந்தரம் வரை.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 65/69)



Saturday, May 29, 2021

நோபல் பரிசிற்கான தகைமையாளர் பேரா.ப.மருதநாயகம்-இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 57 / 69  இன் தொடர்ச்சி)


தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

58 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

மேற்குறிப்பிட்டுள்ள மனு, பகவத்து கீதை முதலான பல நூல்களின் தரமற்ற நிலையையும் தமிழில் இருந்து கடன் வாங்கியுள்ள கருத்துகளையும் தமிழுக்கு மூலமாகக்காட்டப்பட்ட பொய்மையின் உண்மைத் தன்மையையும் தமிழின்தொன்மையையும்பற்றி விரிவாகவே தந்துள்ளார். எனினும் அவற்றைக் கோடிட்டுக்காட்டும் முகத்தான் சிலவே இங்கே குறிக்கப்பட்டுள்ளன. முழுமையாய் அறிய,இந்நூலைப் படித்து இன்பமும் அறிவும் அடைய வேண்டுகிறேன்.

இவ்வாறு ‘வடமொழி ஒரு செம்மொழியா?’ என்னும் பேராய்வு நூலைத் தந்துள்ளமைக்கே பேராசிரியர் இருமொழிப்புலவர் முனைவர் ப.மருதநாயகம் அவர்களுக்கு  நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்இவர் சமற்கிருதத்தின் போலிச்சிறப்பையும் பொய்யாக அதைப் போற்றியும் எழுதியிருந்தார் என்றால் அவருக்குப் பல கோடிச் செல்வமும் உயர் பதவிகளும் வழங்கப்பட்டிருக்கும். சமற்கிருத நூலாரின் ஏமாற்று வேலைகளையும் கபடச் செயல்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளமையால் இவரைப் புறக்கணிக்கவே செய்வர். இவர் எத்தகைய காழ்ப்புணர்ச்சியிலோ மொழி வெறியிலோ இந்நூலைப் படைக்கவில்லை. சமற்கிருத அறிஞர்களின் கருத்துகளைத் தெரிவித்து அவற்றின் அடிப்படையிலேயே சான்றாதாரங்கள் அளித்து வடமொழி செம்மொழி அல்ல என்பதை நிறுவியுள்ளார்.

ஒரு மொழியின் செம்மொழித் தன்மைக்கு அடிப்படையாக அமைவன  அம்மொழியின் இலக்கியங்களே. அந்த வகையில் சமற்கிருத நூல் ஒவ்வொன்றையும் அடிப்படையாகக் கொண்டு அதனதன் பொய்யான சிறப்புகளையும் தொன்மை, முதன்மை முதலான இட்டுக்கட்டப்பட்ட சிறப்புகளையும் விளக்கி, சமற்கிருத நூற்கருத்துகள் எந்தெந்த வகையில் தமிழ் இலக்கியங்களுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் கடன்பட்டுள்ளன எனத் தெளிவாக்கியும் சமற்கிருதத்தின் செவ்வியல் தன்மை இன்மையைச் செம்மையாக விளக்கியுள்ளார். இக் கருத்துகளை நாம் பல தளங்களிலும் பரப்ப வேண்டும். திருட்டு புரட்டு மொழிக்குச் செம்மொழி என்ற பெயரில் அளித்து வரும் நிதியுதவிகளை நிறுத்த வேண்டும். பிற மொழியினரின் வரிப்பணத்தில் அதற்கு வீண் செலவு செய்வதையும் நிறுத்த வேண்டும்சமற்கிருதம் செம்மொழி எனக்கூறும் பொய்யான பரப்புரைக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.

தமிழின் காலத்தைப் பின்னுக்குத்தள்ளி மொழிச்சிறப்பை மறைத்து இழித்தும் பழித்தும் எழுதுநருக்குத் தக்க மறுமொழிகளை நடுநிலையான பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகள் அடிப்படையில் விளக்கித் தமிழ் ஒன்றே உயர்தனிச்செம்மொழி என்பதை ஆய்ந்து நிறுவியுள்ளார். 

இந்நூல் ஒன்றே அவரின் நோபல் பரிசிற்கான தகைமையை எடுத்துரைக்கும். எனினும்,  பிற மொழி இலக்கியங்களில் உள்ள தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கு, ஒப்பிலக்கியக் கட்டுரைகள் மூலம் திருக்குறளின் சிறப்பும் தாக்குறவும், பிற மொழி இலக்கியங்களுக்கு வழிகாட்டியான சங்க இலக்கியங்கள், திறனாய்வுக் கட்டுரைகள், காலங்கள் தோறும் தமிழ்க்கவிதைகள் சிறப்பு. மொழிபெயர்ப்புப் பணிகள், தமிழ் மொழியின் தூய்மை, தாய்மை, தொன்மை, செம்மை முதலியவற்றை எடுத்துரைக்கும் பாங்கு  முதலியவற்றை நடுநிலையுடன் தரும் ஆய்வுப்படைப்புகளுக்காகவும் பேரா.ப.மருதநாயகத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். கவிதை இலக்கியத்தை மட்டும் இலக்கியமாகக்கொள்ளாமல் ஆராய்ச்சி இலக்கியத்தையும் இலக்கியமாகக் கருதி அவருக்கு நோபல்பரிசு வழங்க வேண்டும். இதற்குப்பரிந்துரைக்கும் தகுதியாளர்கள் இவர் பெயரைப் பதிந்து ஆவன செய்ய வேண்டும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 59/69)