Friday, August 13, 2021

ஔவையார் 6 – இரா.இராகவையங்கார்

 அகரமுதல




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார் : 15

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 14. தொடர்ச்சி)

3. ஔவையார் (தொடர்ச்சி)

 

ஔவையார் இத் திருக்கோவலூர்ப் பெருமணத்திற்குப்பின் யாண்டுச் சென்றன ரென்பது நன்கு உணரப்படவில்லை. சோணாட்டுத் திருத்தருப்பூண்டிச் சேகரத்து திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் இவற்றுப்புறத்து வளவனாற்றின் கீழ்கரை-[*] யில் துளசியார் பட்டினம் என்ற ஊரில் இவ்வௌவையார் திருப்பெயரான் ஒரு சிறிய பழைய கோயி லிருப்பது கேட்கப்படுதலால் [*] இவர் ஆண்டுப்போய் விண்ணுலகெய்தினரோ என ஊகிக்கப்படுகிறார்.

இனி, இவர் ஓரூர்க்குச் செல்லும்போது இடைவழியில் வெயிலால் வியர்த்து வாடித் துவரப்பசித்து உணவின்றி வருந்தினராக, ஆங்குச் சென்ற ஆட்டிடையன் ஒருவன் அசதி என்பான், தானுண்டற்குக் கருதிக் கொணர்ந்துள்ள தெண்ணீரடுபுற்கையை இவர்க்கு உதவினான்; அந்நன்றி பாராட்டி அவன்மேற் கோவைநூ லொன்றுபாடிச் சென்றன ரென்ப. இவர் அசதிமேற் கோவை பாடினர் என்பது,

[* ஒளவையார் கோவில், வளவனாற்றின் கீழ்கரையில் துளசியார் பட்டினம் என்ற ஊரி லுள்ளது. அவ்வூர் திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் என்ற வூருக்குக் கீழ்த்திசையில் ஒரு கல் தூரத்தி லுள்ளது; தஞ்சை சில்லாத் திருத்தருப் பூண்டித் தாலுகாவைச் சார்ந்தது. ] அக்கோவிலில் ஒளவையார் விக்கிரக மானது விருத்தாப்பியவடிவாய் முகந்திரைந்து விளங்குகிறது. அதனுடன் இளம்பெண்ணுருவமான விக்கிரகமும் ஒன்றிருக்கிறது. அதை உப்பை என்கிறார்கள். இக்கோவிலுக்கு அவ்வையார் மானியம் என்று சில நிலங்களும் பாத்தியங்களும் உள. கோவிலில், பிற்காலத்தில் விசுவலிங்கப் பிரதிட்டை நிகழ்ந்துள்ளது. அவ்விலிங்கம் ஒளவையார் விக்கிரக மிருந்த இடத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. அது தெற்குப்பார்த்த சந்நிதி; ஆதிசைவரால் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. ஔவையார் விக்கிரகம், பெயர்த்து மற்றொரு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு வடமேற்கில் அரைமைல் துரத்தில் கொல்லன்திடல் என்று ஒரு மேடு இருக்கிறது. அதன்-

‘பன்னு மசதியன்பு பாராட்டிக் கோவைநூல்
சொன்னாளே யௌவைமுன்பு சோமேசா’

என்னும் முதுமொழி வெண்பாவினால் அறியப்படும்.

அசதிக்கோவை

‘அற்றாரைத் தாங்கிய வைவே லசதி யணிவரைமேன்
முற்றா இளநகை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ்நூல்
கற்றார் பிரிவுங்கல் லாதா ரிணக்கமுங் கைப்பொருளொன்
றற்றா ரிளமையும் [*] போலே கொதிக்கும் அருஞ்சுரமே.’

[*] கண் ஓராலமரமும் ஒரு மேடையும் உள்ளன. அங்கு ஒளவையாரைப் பிரார்த்தித்து இட்டசித்திகளைப் பெறுபவர்களாற் பச்சை பரப்புதல் மிகுதியாக நடைபெறுகிறது. அம்மேட்டிற் கொல்லன் ஒருவன் வீடுகட்டியிருந்தனனாகவும், அவ்வழியாக ஔவையார் மழையால் நனைந்து பசித்துவந்தாராக அவ்வூரார் ஒருவரும் இவரை ஆதரியாமற்போக, அக்கொல்லன் தன் உலைக்களத்து நெருப்பால் அவர் புடவையினை உலர்த்தி அவரையும் குளிர்காயச்செய்து அவர்க்கு உணவளித்தனனென்றுங் கூறுவர். அக்காலத்து வெள்ளம் மேலிட்டு ஊரெல்லாம் பரவியது. அப்போது இவனிடத்துண்டாய அன்பின் மிகுதியால் ஒளவையார், ‘வள்ளையுங் கொள்ளையாகி வளவனும் பேராறாகிக், கொல்லன் றிடலொழியக் கொள்ளாய் பெருங்கடலே’ என்று பாடி, அக்கொல்லன்றிடல் மட்டில் வெள்ளங் கொள்ளாமற் காத்தனர் என்பர். இதற்குச் சான்றாக இப்போதுஞ் சதுரமைல் நாலுக்கு எங்கும் வெள்ளமாகவே இருப்பது பார்க்கலாம். கடல் இக்கோவிலிருக்குமிடத்திற்குப் பத்துமைல் தூரத்துள்ளது. இவை மன்னார்குடிக் கல்லூரித் தமிழ்பண்டிதர் மகா-ள-ள-சிரீ சருக்கரை இராமசாமிப் புலவர் வாயிலாற் றெரிந்தன.

இவ்வாறு எளியரும் வலியரும் இவர்க்குதவி, இவராற் பெற்ற இனிய பாடல்கள் மிகப்பலவாம். இவரது செவ்விய நா ஒருவரைச் செய்யா கூறிப் புகழ்தலை ஒருபோதும் அறியாதாகும். அறிவும் புகழுமுடைய மூன்று பெருங்கோக்களும் அன்பும் அருமையும் உடைய பெருவள்ளல்களும், நல்லுபகாரிகளுமே இவரது திருப்பாடல் புனைந்தவராவார். இவரை ஒருகாற் சில புல்லறிவோர், தம்மைப் பாடுக என்றபோது, இவர்,

‘மூவர் கோவையு மூவிளங் கோவையும்
பாடின வென்றன் பனுவலா னெம்மையும்
பாடுக வென்றனிர்
நும்மையிங் கெங்ஙனம் பாடுகென் யானே.
களிறுபடு செங்களம் கண்ணிற் காணீர்
வெளிறுபடு நல்யாழ் விரும்பிக் கேளீர்
புலவர் வாய்ச்சொற் புலம்பலுக் கிரங்கீ
ரிலவு வாய்ச்சிய ரிளமுலை புல்லீ
ரவிச்சுவை யல்லது தமிழ்ச்சுவை தெருளீர்
உடீஇ ருண்ணீர் கொடீஇர் கொள்ளீ
ரொவ்வாக் கானத் துயர்மரம் பழுத்த
துவ்வாக் கனியெனத் தோன்றிய நீரே.’

எனப் பாடியதனானே, இவரது அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்துத் திட்பமும் ஒட்பமும் நன்கறியத்தகும். ‘செம்பொருளாயின் வசையெனப்படுபடுமே’ என்னுஞ் செய்யுளியற் சூத்திரவுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக்காட்டிய ‘எம்மிகழ் வோரவர் தம்மிகழ் வோரே’ என்னும் பாட்டு, ‘ஒளவையார் ஒருவனைப் பாடி, அவன் இகழ்ச்சிசொல்ல, அப்போதுபாடிய அங்கத அகவல்’ என்னுந் தலைப்பின்கீழ்த் தமிழ்நாவலர் சரிதையிற் காணப்படுவது.

இதனானும் இவரது மனவலியும் சொல்வலியும் ஆராயப்படும். இவர் பாடியருளிய,

‘எரு மிரண்டுளதா யில்லத்தே வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுமா–யூருக்குச்
சென்று வாவணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டா
லென்று முழவே யினுது.’ (தமிழ் நாவலர் சரிதை)

‘* ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங்
காத லிருவர் கருத்தொத்துற்–றாதரவு
பட்டதே யின்பம் பானைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.’ (தமிழ் நாவலர் சரிதை)

‘ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றான்றன் வீரமே வீரமா–மென்றானுஞ்
சாவாமற் கற்பதே கல்வி தனைப்பிற
ரேவாம லுண்பதே யூண்.’ (தமிழ் நாவலர் சரிதை)

‘அரியது கேட்குந் தனிநெடு வேலோய்
மக்கள் யாக்கையிற் பிறத்தலு மரிதே
மக்கள் யாக்கையிற் பிறந்த காலையு
மூங்கையுஞ் செவிடுங் கூனுங் குருடும்
பேடு நீக்கிப் பிறத்தலு மரிதே
பேடு நீக்கிப் பிறந்த காலை
ஞானமுங் கல்வியும் நற்குற லரிதே
ஞானமுங் கல்வியு நற்குறு மாயினுந்
தானமுந் தவமுந் தரித்தலு மரிதே
தானமுந் தவமுந் தரித்தார்க் கல்லது
வானவ னாடு வழிதிற வாதே.’ (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடல்களான் இவரது அரிய பெரிய மனநிலை நன்குணரப்படும்.

இவர், சேரமண்டலஞ் சோழமண்டலம் பாண்டிய மண்டலம் தொண்டைமண்டலம் இந் நான்கிலும் அவற்றின்
றலைநகர்களிலும் நெடுங்காலஞ் சரித்தனரென்பதும், இவர்காலத்துத் தொண்டைநாட்டிற் சான்றோர் பல ரிருந்தனர் என்பதும் இவர் பாடியருளிய,

‘வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து–பூழியர்கோன்
றென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து.’

‘வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்ற
னான்மாடக் கூடலிற் கல்வலிது
சோழ னுறந்தைக் கரும்பினிது தொண்டைமான்
கச்சியுட் காக்கை கரிது.”

என்னும் பாடல்களான் அறியப்படுவன. இவை ஒளவையார் பாடியன என்பது,

‘அஞ்சொன் முதுதமிழ் நால்வேந்தர் வைகு மவையிலெளவை
செஞ்சொற் புனைகின்ற வேளாளர் வைகுஞ் சிறப்புடைத்தால்
விஞ்சிய வேழ முடைத்தென்னும் பாடல் விளம்பிப்பின்னும்
வஞ்சி வெளிய வெனும்பா மொழிதொண்டை மண்டலமே.’

என வருந் தொண்டைமண்டல சதகச் செய்யுளானும் தெளியப்படும். நச்சினார்க்கினியர், ‘வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும்’ என்னுஞ் சூத்திரவுரையில், ‘வஞ்சி வெளிய குருகெல்லாம்…காக்கை கரிது’ இவை ஔஒளவையுங், காரைக்காலம்மையுங் கூறியன’ எனக்கூறியதனானும் இதனை யுணர்க.

(தொடரும்)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

 இரா.இராகவையங்கார்

Wednesday, August 11, 2021

ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி

அகரமுதல

      12 August 2021      No Comment





(ஒளவையார்:4: ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 14

2. ஒளவையார் (தொடர்ச்சி)


ஒளவையார் யாதும் அறியாதவராய் அக்கனியை உண்டு ஆராமகிழ்வு கொண்டு, “மன்னா, அமிழ்தினு மினிய சுவை மிக்க இக்கனியை எங்குப் பெற்றாய்?” என்று உள்ளமும் உடலும் அன்பாலுருகிக் கேட்டார். மன்னன் தலை வணங்கித் தமிழ்ப் பெருமாட்டியாரிடம் உண்மையை உரைத்து நின்றான். மன்னன் மொழிகள் கேட்டதும் ஒளவையாரின் உடல் புளகமெய்திற்று; “மன்னா, யாது செய்தனை! உலகு புரக்கும் வேந்தன் நீ, அருஞ்சுவைக் கனியை உண்டிருக்க வேண்டியவனும் நீயே. அதனை உண்டு நெடுங்காலம் அவனியைக் காக்க வேண்டியவன் நீ அல்லையோ? அந்நீண்ட வாழ்வில் நீ அருந்தமிழைப் புரக்கலாமன்றோ? அவ்வாறன்றி, ‘ஆதல் நின் அகத்து அடக்கி’, அதை எனக்குச் சாதல் நீங்க அளித்தனையே! என்னே உன் கருணை!” என்று பலவும் கூறிக் கண்களில் இன்பக் கண்ணீர் மல்க, உணர்ச்சி வெள்ளம் ஓங்குதிரைக் கடலாய்ப் பொங்கி எழ, பின் வரும் அருந் தமிழ்க்கவிதையைக் கூறினார்:

‘போரடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்(று) ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே; தொல்நிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா(து)
ஆதல் நின்னகத்(து) அடக்கிச்
சாதல் நீங்க எமக்(கு)ஈத் தனயே!’         (புறநானூறு, 91)

இவ்வாறு ‘கறைமிடறு அணிந்த கருணைக் கடவுளே போல்வான் அதிகன்’ எனத் தன்னைப் போற்றிப் புகழ்ந்த புலவர் பெருமாட்டியாரின் புகழுரை கேட்ட அதிகமானது முகம் நாணத்தால் சிவந்தது. “அன்னையீர், மண்ணின் காவலன் நான். ஆனால், தண்டமிழ்ச் சான்றேராகிய நீவிர் மக்கள் மனத்தின் காவலர் அல்லிரோ! அம்பின் வாழ்விற்கும் வெற்றிக்கும் எல்லை உண்டு. ஆனால், உமது அமுதத் தமிழின் வாழ்விற்கும் வெற்றிக்கும் எல்லையுமுண்டோ? எல்லையில்லா வாழ்வுடை இன்பத் தமிழிற்கு ஏற்றமளிக்கும் அன்னையீர், என் வாழ்வினும் நும் வாழ்வு உலகின் நலனுக்கும் இமிழ் கடல் சூழ்ந்த தமிழகத்தின் பொன்றாப் புகழிற்கும் பெரிதும் வேண்டுவதன்றோ?” எனப் பலவும் கூறி ஒளவைப் பெருமாட்டியாருக்குத் தான் மாறாக் கடப்பாடு பெரிதும் உடையவன் என்பதை ஆரா அன்புடன் புலப்படுத்தினான். அதிகன் கூறிய அன்புடை மொழிகளைக் கேட்ட ஒளவையாரின் உள்ளம் நன்றி உணர்வால் முழுமதி கண்ட முந்நீர் போலப் பொங்கியது. ‘மன்னா, அமுதொழுகும் மக்களின் கனிவாயினின்றும் வரும் முற்றா மழலைச் சொற்கள் யாழோசை போன்று கேட்பவருக்கும் இன்பம் செய்யா; காலத்தோடும் கூடியிரா; பொருளோடும் பொருந்தியிரா. எனினும், அப்பிள்ளைக் கனி அமுதைப் பெற்றோர்க்கோ, அவை குழலினும் யாழினும் இனியவையாய் இருப்பனவல்லவோ? அரண் பல கடந்த அஞ்சியே, உன் அருளால் என் சொற்களும் அது போன்றே உனக்கு உயர்வுடையனவாய் விளங்குகின்றன,’ என்னும் கருத்தமைய,

‘யாழொடுங் கொள்ள பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்(கு)
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! அருளன் மாறே.’         (புறநானூறு, 98)

என்ற அமிழ்தனைய தமிழ்ப்பாடலைக் கூறி, அவன் மெய்யும் மனமும் மகிழ்வு வெள்ளத்தில் மிதக்கச்செய்தார்; அதிகமானது விந்தைச் செயலில் சிந்தையைப் பறி கொடுத்து அவன் திருவோலக்கத்தைப் பிரிய மனமில்லாதவராய் அங்கேயே தங்கியிருந்தார்; அவ்வாறு அதிகமான் அரசவையில் தங்கியிருந்த நாளிலெல்லாம் அவன் வாழ்வையும் செயலையும் நுணுகி ஆராய்ந்த வண்ணம் இருந்தார். அவ்வாறு ஆராய்ந்திருந்த அவர் தம் எண்ணக் கடலில் ஆழ்ந்தெடுத்த முத்துக்களை எல்லாம் அருந்தமிழ்க் கவிதைகளாக்கி உலகு உள்ளவரை தம் ஐயன் அதிகமான் புகழ் சுடர் விட்டு ஒளிருமாறு செய்தார்.

அதிகமான் தன் வாழ்வில் அருளையும் ஆண்மையையும் இரு கண்களெனவே போற்றுவதைக் கண்ட அருந்தமிழ்ப் பிராட்டியார் அளவிலா மகிழ்வு கொண்டார். எல்லாவற்றினும் மேலாக, இகல் வேந்தர் கண்டு நடுங்கும் மாறுபாடு மிக உடையவனாகக் கலைஞர்களுக்கு எளிவந்த அவனது நிலையை எண்ணி, ‘ஊரின்கண் உள்ள சிறுவர் தன் வெள்ளிய மருப்புக்களைக் கழுவி மகிழுங்கால் நீர்த் துறையின்கண் படியும் பெருங்களிறு அவர்க்கு எத்துணை எளியதாய்-இன்பம் தருவதாய் – உள்ளது! அது போன்று அதிகமான் எமக்கு உள்ளான். ஆனால், அப் பெருங்களிற்றின் நெருங்குதற்கரிய மதம்பட்ட நிலைபோல அவன் தன் ஒன்னார்க்கு உள்ளான்,’ என்று மனமாரப் போற்றினார். மேலும், அவன் சான்றோர் நடுவண் குழந்தை போல விளங்குவதையும், பகைவர் நடுவண் பைந்நாகம் போலச் சீறிச் செல்வதையும் எண்ணி, ‘எம் அதிகமான், வீட்டின் இறைப்பில் செருகிய தீக்கடை கோல்போலத் தன் வலி தோற்றாது அடங்கியும் இருப்பன்; அடையார் முன்போ, அத்தீக்கடைகோல் கக்கும் காட்டுத் தீப்போலத் தோன்றவும் செய்வன்!’ எனக்கூறி இறும்பூது கொண்டார்.

இவ்வாறு ஆர்கலி நறவின் அதியர் கோமானது, அரும்பெறற்பண்புகளை எல்லாம் உளமாரப் பாராட்டிய ஒளவையார், இல்லோர் ஒக்கல் தலைவனாய்-புலரா ஈகைப் பெரியோனாய்- அவன் திகழும் பெருமிதக் காட்சியையும் போற்றல் ஆயினார்.

“ஆர்வலர் அணுகின் அல்லது கூர் வேல் காவலர் கனவிலும் அணுக முடியாத காப்புடைப் பெருநகர் அவனுடையது. அந்நகரில் மஞ்சு தோய் மலைகளென நிறைந்து விளங்கும் வான் தோய் மாடங்கள் சிலம்பப்பாடி நின்ற பாணர்க்கும் புலவர்க்கும் எஞ்ஞான்றும் அடையா நெடுங்கதவினன் அதிகமான்; தன் தலை வாயில் வந்த புலவரை எல்லாம் தன் தமரெனக்கருதி அருகழைத்து அவர்மேல் கிடந்த ஊருண் கேணிப்பாசி போன்ற மாசு மலிந்த ஆடைகளையெல்லாம் களைந்து, திருமலரன்ன புத்தாடைகளைத் தருவான்; மகிழ்வு தரும் தேட்கடுப்பன்ன நாட்படு தேறலேயன்றி, அமிழ்தனைய கொழுந்துவையொடு குய்யுடை ஊன் சோறும் வெள்ளி வெண்கலத்தில் நிரப்பி, அருகிருந்து உண்ணச் செய்வான். இவ்வாறு பன்னாள் அவர்களைப் போற்றிய பின் அவர்கள் வேற்றிடம் செல்லக்கருதின், பிரியா விடை தருவான். அவ்வாறு அவர்கட்கு விடையளிக்கும் போது களிறும் தேரும் விரிமலர் வேங்கை ஒத்த பகடுதரு செந்நெற்போரொடு கொடுத்து அனுப்புவான்.”[1]- இத்தகைய வள்ளியோனாய் அவன் விளங்கியமையால், ‘அதிகமான் இரவலர் புரவலன்.’ ‘ கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’ எனக் கலங்கி நிற்கும் விறலியே, விரைந்து செல்வாயாக அதியனிடம்; அவன் சேய்மைக்கண்ணனும் அல்லன்; பரிசிலும் நீட்டியான்; எஞ்ஞான்றும் மாற்றார் முனை சுட எழுந்த புகை மலை சூழ்ந் தாற்போல மழகளிறு சூழ ஒன்னார் தேயத்தே ஓயாது இருப்பான்; ஆகலின், அவன் திறை கொண்ட பொருள் கடலினும் பெரிது; நீயும் வேண்டிய வேண்டியாங்கெய் துவை. ஓயாது உண்ணுதலாலும் தின்னுதலாலும் எப்போதும் ஈரம் புலராத மண்டை மெழுகான் இயன்ற மெல்லடை போலும் கொழுத்த நிணம் மிக உலகமெல்லாம் வறுமையுறினும் உன்னைப் பாதுகாத்தல் வல்லன; அவன் தாள் வாழ்க!” [2] என்று அவன்பால் பெருவளம் பெற்றார், அது பெறாது வாடியிரங்கும்
——————
[1]. புறம். 390; [2]. புறநானூறு, 108.
————-
வளைக்கை விறலியரையும் பாணரையும் அவன்பால் ஆற்றுப்படுத்தும் அளவிற்குப் பசிப்பிணி மருத்துவனாய் விளங்கினான்.

(தொடரும்)

முனைவர் ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள்

 

Monday, August 09, 2021

ஔவையார் 5 – இரா.இராகவையங்கார்




நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 14

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 13. தொடர்ச்சி)

3 . ஔவையார் (தொடர்ச்சி)

இதனான் இவர் பாண்டி நாடு புகுதற்கு முன்னே வேற்றுநாட்டு ஊர்கள் பலவற்றிற்குச் சென்றிருந்தனர் எனவும் ஆண்டெல்லாமில்லாத நல்ல தமிழைப் பாண்டியநாட்டேதான் கண்டன ரெனவும், அக்காலத்து அம்பர்நகரத்து வளமையும் வண்மையு மிக்க குடிகள் பல இருந்தன எனவும், திருவாவினன் குடியில் முத்தீயோம்பும் நான்மறை யந்தணர் நிறைந்திருந்தனர் எனவும் அறியப்படும். நல்லிசைப் புலவர் பல்லோர் ஒருங்கு குழீஇத் தமிழாயுநன்னா டாதலின், “நின்னாட்டுடைத்து நல்லதமிழ்” என்றார். இவர் அப்பாண்டியன்பால் இனிதுறையுங்காலத்து ஒருநாள் அப்பாண்டியன் தன் வாயிலில் ஐந்து பொற்கிழி கட்டி வைத்து, மூன்று கிழி சங்கிலி யிறப்பாடுக எனவும் ஒருகிழிக்கு நிறை நில்லாத கவிபாடுக எனவும் மற்றொன்றுக்கு நாலுகோடி கவிபாடுக எனவும், சொன்னபோது இவர்,

‘தண்டாம லீவது தாளாண்மை தண்டி
படுத்தக்கா லீவது வண்மை யடுத்தடுத்துப்
பின்சென்றா லீவது காற்கூலி பின்சென்றும்
பொய்த்தா னிவனென்று போமெ லவன்குடி
யெச்ச மிறுமே லிறு.’ (தமிழ் நாவலர் சரிதை)

‘வழக்குடையார் நிற்ப வரும்பொருள்கை வாங்கி
வழக்கை வழக்கழிவு சொல்லின் — வழக்குடையார்
சுற்றமுந் தாமுந் துடைத்தெழுகண் ணீராலேழ்
சுற்ற மிறுமே லிறு.’ (தமிழ் நாவலர் சரிதை)

‘சென்றுழு துண்பதற்குச் செய்வ தரிதென்று
மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை — முன்றலிற்
றுச்சி லிருந்து துடைத்தெழுகண் ணீராலே
ழெச்ச மிறுமே லிறு.’ (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடல்களைப்பாடி முதன் மூன்று கிழிகளையும் இற்று வீழச் செய்து,

‘வையக மெல்லாம் வயலாய் வானோர்
தெய்வமா முகடு சேரி யாகக்
காணமு முத்து மணியுங் கலந்தொரு
கோடானு கோடி கொடுப்பினு மொருநா
ளொருபொழு தொருவனூ ணொழிதல் பார்க்கு
நேர்நிறை நில்லா தென்னு மனனே.’ (தமிழ் நாவலர் சரிதை)

என ஒரு நிறை நில்லாத அகவலும்,

‘மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி யுறும்.
உண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையி
லுண்ணாமை கோடி யுறும்.

கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும்.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி யுறும். (தமிழ் நாவலர் சரிதை)

என நாலு கோடி கவியும் பாடித் தஞ் சொல்லின்மாட்சி யெல்லார்க்குந் தெரித்து, வேத்தவையேத்த விளங்கி வதிந்தனர்.

இதற்கிடையில் தமிழ்மூவேந்தரும் தம்மினுமேம்பட்ட வண்புகழுடையனாதலால் அழுக்காறுகொண்டு, பாரி என்னும் வள்ளற்றலைவனோடு பகைத்து, அவனது பறம்பாகிய மலையரணை நெடுங்கால முற்றியும் பாரியின் போர்வலியாலும் அவனுக்குயிர்த்துணைவராய்ச் சிறந்த கபிலரின் சூழ்ச்சியாலும் அவர்க்கு வெல்லற் கரிதாகவும் அவனை வஞ்சித்துக்கொல்ல, அக்காலத்து ஆண்டிருந்த கபிலர் அப் பாரிபால் வைத்த பேரன்பினால் துணையின்றிக் கழிந்த அவனது அருமை மகளிரை அப்பறம்பினின்று கூட்டிக்கொண்டு, அக்காலத்து வேளிருட் சிறந்த இருங்கோவேள் முதலியோர்பாற் போய் இவர்களை மணஞ் செய்துகொள்ள வேண்டியும், மூவேந்தர்க்கும் பாரிக்கும் நிகழ்ந்த பகைமைபற்றி அவர்கள் உடம்படாமையால் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில்வைத்து அப்பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர்.

இது தெரிந்த ஔவையார் மேனிகழ்ந்தவற்றிற்கு மனநொந்து அப் பாரிமகளிரிருந்த திருக்கோவலூர்க்கட்புக்கு அம்மகளிரைக் கண்டு அவர்கட்கு நேர்ந்த பெருந்துயர்க்கு மிகவும்வருந்தி, அவர்கள் அன்றிரவு தமக்கு இலைக்கறியிட அதனை யுண்டு மகிழ்ந்து,

‘வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுந் தின்பதாய்
நெய்தா னளாவி நிறையிட்டுப் — பொய்யே
யடகென்று சொல்லி யமுதத்தை யிட்டாள்
கடகஞ் செறியாதோ கைக்கு.’ (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைப்பாடி, அவர்கள் ஒரு நீலச்சிற்றாடை கொடுக்க அப்போது, ‘பாரி பறித்த கலனும்’ என்னும் வெண்பாவினைப்பாடி, அவர்களை நன்னிலையினிறுத்துங் கவலையேபெரிதுடையராய், ஆண்டிருந்த தெய்வீகனென்னும் அரசனொருவனை இவர்களை மணம் புரியும்படி வேண்டி உடம்படுவித்தனர். இவ்வரியபெரிய மணத்திற்கும் தாம் பெற்ற தெய்வத்தன்மையால் வேண்டுவன அனைத்தும் உளவாக்கி, மூவேந்தர்க்கும் பாரிகுடிக்குமுள்ள பகைமையும் போக்கி, அம்மூன்றரசரையும் தம்மறிவின் வலியாற் கோவலூர்க்கண் வரவழைத்து, அப்பாரிமகளிரது திருமணத்தைச் சிறப்பவியற்றினர். 

இவ் வௌவையாரால் இப்பாரிமகளிர் மணம் சிறப்ப நிகழ்த்தப் பெற்றமையறியப்படுதலான், ‘கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர்’ என்பது, அவர் அம்மகளிரைப் பார்ப்பாரது பாதுகாப்பின் வைத்தமையே குறிக்கும். இப் பெருமணத்து ஔவையார் பனந்துண்டம் பழந்தரவும், பெண்ணையாறு நெய்பால் தலைப்பெய்து வரவும், வானம் பொன்மாரி பொழியவும் பாடித் தமது தெய்வவாக்கின் வலிமை யுணர்த்தின ரென்ப. பெண்ணையாறு இவர் பாடலுக்கு நெய்பால் தலைப்பெய்து வந்த கதை வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவாரானும்,

ஔவைபா டலுக்கு நறுநெய்பால் பெருகி
யருந்தமி ழறிவினாற் சிறந்து
தெய்வமா நதிநீர் பரக்குநா டந்தத்
திருமுனைப் பாடிநன் னாடு.

என்பதனான் எடுத்தாளப் பட்டுள்ளமை தேறுக. இவற்றை யெல்லாம், தமிழ் நாவலர் சரிதையில் ஒளவையார் அங்கவை, சங்கவையைத் தெய்வீகனுக்குக் கல்யாணம் பண்ணுவிக்கிறபோது ஓலையெழுத விநாயகனை அழைத்த வெண்பா:

‘ஒருகை யிருமருப்பு மும்மதத்து நால்வாய்க்
கரியுருவக் கங்காளன் செம்மல் — கரிமுகவன்
கண்ணால வோலை கடிதெழுத வாரானேற்
றன்னாண்மை தீர்ப்பேன் சபித்து.’

சேர சோழ பாண்டியர்க்கு
விநாயகன் எழுதப் பாடிய வெண்பாக்கள்.

‘சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ
லூரளவுந் தான்வருக வுட்காதே — பாரிமக
ளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான்
சங்கியா தேவருக தான்.”

‘புகார்மன்னன் பொன்னித் திருநாடன் சோழன்
றகாதென்று தானங் கிருந்து — நகாதே
கடுக வருக கடிக்கோவ லூர்க்கு
விடியப் பதினெட்டா நாள்.

‘வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே — தையற்கு
வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாநா
ளீண்டு வருக வியைந்து.

மூவரும் வந்தபோது பனந்துண்டத்தைப் பாடியது.

திங்கட் குடையுடைச் சேரனுஞ் சோழனும் பாண்டியனு
மங்கைக் [*] கறுகிட வந்துநின் றார்மணப் பந்தரிலே
      [* அறுகிடுதல் – ஒரு மணவினை]

சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி யடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே.”

அந்தக் கல்யாணத்திற் பெண்ணையாற்றைப் பாடியது.

‘முத்தெறியும் பெண்ணை முதுநீ ரதுதவிர்ந்து
தத்திவரு நெய்யா றலைப்பெய்து — குத்திச்
செருமலைத்தெய் வீகன் றிருக்கோவ லூர்க்கு
வருமளவிற் கொண்டோ டி வா.’

அப்போது வருணனைப் பாடியது.

‘கருணையா லிந்தக் கடலுலகங் காக்கும்
வருணனே மாமலையன் கோவற் — பெருமணத்து
நன்மாரி தாழ்க்கொண்ட நன்னீ ரதுதவிர்த்துப்
பொன்மாரி யாகப் பொழி.’

என வருவனவற்றான் உணர்க. இவற்றால், அங்கவை சங்கவை யென்பார் பாரிமகளிர் என்பதும், அம்மகளிர் திருக்கோவலூரில் தெய்விகன் என்னும் அரசனுக்கு மணஞ் செய்யப்பட்டனரென்பதும், இம்மணம் ஒளவையாரது அறிவின்மாட்சியாலும் தெய்வத்தன்மையாலும் சிறப்ப நிகழ்த்தப்பட்ட தென்பதும், ஒளஔவையார் மூவேந்தரையும் இம்மணத்திற்கு ‘உட்காது’, ‘நகாது’, ‘செய்யத்தகாதென்று தேம்பாது’ வருக என்றழைத்தமையாற் பாரிகுடிக்கும் அவ்வேந்தர்க்கும் உளதாகிய பழைய செற்றம் போக்கிவருக என்றனரென்பதும், செயற்கரியன பலசெய்தனர் என்பதும், பிறவும் ஆராய்ந்தறிக.

(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
 இரா.இராகவையங்கார்