Tuesday, September 17, 2013

செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம் Thiru.vi.ka. by Dr.S.Ilakkuvanar



 

செந்தமிழ்ப் பெரியார்
 திரு.வி.க.வைப் போற்றுவோம்

- தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்


  செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ் வித்தகராய், தமிழ் உரை நடைத்தந்தையாய், சொற்பொழிவுக் கொண்டலாய்,  செய்தி இதழ் ஆசிரியராய், தொழிலாளர்களின்  தோழராய், அரசியல் அறிஞராய், மார்க்சியம் போற்றுபவராய், பெண்மை போற்றும் பெருந்தகையாய், மாணவர் நண்பராய், சமரச சன்மார்க்க  அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் திங்களில் (17.9.53) செந்தமிழ் நாட்டைவிட்டு மறைந்து விட்டார்.

 தமிழை வளர்க்கும் தலையாய பணியில் ஈடுபட்டு அருந்தொண்டாற்றிய பெருமை அவர்க்கு நிறைய உண்டு. அவர்தம் தொண்டால் இன்று நாடு முழுவதும் அரசியல் மேடைகளில் தமிழ் மணம் வீசுகின்றது. எங்கும் தமிழ்ப் பேச்சுக் கேட்கின்றது. தமிழ்! தமிழ்! என்னும் முழக்கம் யாண்டும் வானைப் பிளந்து எழுகின்றது.

  திரு.வி.க. வினுடைய எழுத்துக்களில் அழகு ததும்பும். இனிமை சொரியும். இசை நடனமிடும் அவர் எழுத்தோவியங்கள் உயர்தனிச் செம்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இலங்குவன. அவர் இயற்றியுள்ள ஒவ்வொரு நூலும் ஒவ்வோர் இலக்கியமாகத் தோன்றும். ஒவ்வொரு குறிக்கோளை விளங்கி நிற்கும்.  அவர் யாத்த நூல்களுள் பெண்ணின் பெருமை, மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்னும் பாரதி கருத்துக்கு ஏற்புடையது.  சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்னும் இராமலிங்க அடிகளாரின் அடியொற்றியது. கடுவன் காட்சியும் தாயுமானாரும், அறிவே தெய்வம் என்று கூறிய தாயுமானாரின் பொன்மொழியை விளக்கும் பான்மையது. கிருத்துவின் அருள்வேட்டல், அன்பே கடவுள் எனும் இயேசுநாதரின் கட்டளைக்குரியது. இங்ஙனம் பல உயர் குறிக்கோள்களை விளக்குவதற்கு எழுந்த நூல்கள் யாவும் இலக்கியம் என்னும் பெயருக்கேற்ப அமைந்தனவாம். இலக்கியம் என்றால் குறிக்கோளை இயம்புதல் என்று தானே பொருள்.

  அவர் வழிநின்று நற்றமிழ்த் தொண்டாற்றுதல் நம்மனோர் கடனாகும். புலவரைப் போற்றும் நாடே பொன்னாடாகும். செந்தமிழ்ப் புலவராம் திரு.வி.க.வைப் போற்றுவோம். நம் செந்தமிழ் காப்போம் என உறுதி பூண்போம். வாழ்க திரு.வி.க.வின் புகழ்! வளர்கதமிழ்!

- குறள்நெறி(மலர்1 இதழ்18): 01.10.1964

1 comment:

Unknown said...

ஐயா, இந்த கட்டுரையின் முதற்பத்தியில்மட்டும் புணர்ச்சிப்பிழைகள் எத்தனையிடங்களிலுள்ளனவென்பதை எண்ணிட்டுக்காட்டியுள்ளேன். கூடுமானவரை எளியபுணர்ச்சிகளையாவது பிழையின்றியெழுதலாமே?


செந்தமிழ்ப் 1பெரியார் திரு.வி.க. முத்தமிழ்2 வித்தகராய், தமிழ் 3உரை 4நடைத்தந்தையாய், சொற்பொழிவுக் 5கொண்டலாய், செய்தி 6இதழ் 7ஆசிரியராய், தொழிலாளர்களின் தோழராய், அரசியல் 8அறிஞராய், மார்க்சியம் 9போற்றுபவராய், பெண்மை 10போற்றும் பெருந்தகையாய், மாணவர் 11நண்பராய்,
சமரச12 சன்மார்க்க13 அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் 14நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் 15நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் 16திங்களில் (17.9.53) செந்தமிழ் 17நாட்டைவிட்டு மறைந்து18 விட்டார்.