தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேராசிரியர் சி.இலக்குவனார்
தமிழையும், தன்மான இயக்கத்தையும் தனது மூச்சாகக் கொண்டவர் செந்தமிழ் மாமணி பேராசிரியர் இலக்குவனார்.
பிறப்பு: அப்போதைய தஞ்சை மாவட்டம் (இன்று நாகை
மாவட்டம்) வேதாரண்யம் வட்டம்(திருகத்துறைப்பூண்டி வட்டம்) வாய்மைமேடு
என்னும் ஊரின் பகுதியான கீழக்காடு என்னும் ஊரில் திருமிகு. மு.
சிங்காரவேலர் - திருவாட்டி அ. இரத்தினம் அம்மையார் ஆகியோருக்கு
திருவள்ளுவர் ஆண்டு 1940, கார்த்திகை 1 (17.11.1909) இரண்டாவது மகனாகப்
பிறந்தார்.
பதிவேடுகளில் 1910 என இருப்பினும், பேராசிரியர் அவர்கள் அறிஞர் அண்ணா
பிறந்த அதே சௌமிய ஆண்டில்தான் நானும் பிறந்தேன் எனப் பெருமகிழ்வுடன் தன்
வாழ்க்கைப் போரில் குறிப்பிட்டுள்ளமையால் 1909 என்பதே சரியானதாகும்.
பெயர் மாற்றம்: இவரது இயற்பெயர் இலட்சுமணன். இப்பெயரை
அரசர் இராசா மடத்தில் நடுநிலைப்பள்ளியில் பயின்ற பொழுது அங்குத்
தமிழாசிரியராகத் திகழ்ந்த அறிஞர் சாமி, சிதம்பரனார் "இலக்குவன்" என
மாற்றினார். இலட்சுமணன் என்பது வடமொழி அதன் தமிழ்ப் பெயரை இலக்குவன்
என்பதாகும். அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது நாட்டமும் தமிழில்
பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.
கல்வி: திண்ணைப் பள்ளியில் தன் கல்வியைத் தொடங்கிய
இலக்குவனார். தஞ்சை சரபோஜி மன்னர் அறக்கட்டளைப்பள்ளி, ஒரத்தநாடு
உயர்நிலைப்பள்ளியில் பயின்று தமது ஆசிரியர்களின் நன்மதிப்பையும்
பாராட்டையும் பெற்றார்.
திருவையாறு அரசர் கல்லூரியில் மேல்நிலைக் கல்வியைத் தொடர்ந்து 1936-ல்
வித்துவான் பட்டமும் அதனைத் தொடர்ந்து 1942-ல் கீழ்த்திசை மொழியியல்
இளங்கலை (B.O.L.) பட்டமும், 1946-ல் கீழ்த்திசை மொழியியல் முதுகலை (M.O.L.)
பட்டம் பெற்றார்.
மெய்யியல் முனைவர் (Ph.D.) பட்டம்: காலப்போக்கில்
பி.ஓ.எல்.எம்.ஏ. ஆகிய பட்டங்களைத் தனித்தேர்வராகப் பயின்று பெற்ற
இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது,
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, விரிவாக ஆய்வும் நிகழ்த்தி
தமது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டை அளித்தார்.
தமது பல்வேறு பணிகளின் காரணமாகவும், பணியிழப்புகளின் காரணமாகவும் காலந்தாழ்த்து அகவை 53-ல் (1963-இல்) முனைவர் பட்டம் பெற்றார்.
காலம் கடந்து பெற்றாலும் தமிழ்நெஞ்சங்கள் மகிழ்ந்து தமிழகமெங்கும்
பாராட்டு விழாக்கள் நடந்தின. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம்
பெற்றமைக்காகத் தமிழகெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு
முன்புமில்லை, பின்புமில்லை.
பணி: வித்துவான் பட்டம் பெற்று, தஞ்சை மாவட்டம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
அதன்பிறகு தான் பயின்ற திருவையாறு அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
அதன்பிறகு அன்றைய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவராகிய
செ.தெ.நாயகம், குலசேகரன்பட்டினத்தில் தொடங்கிய தமிழ்க்கல்லூரியில்
முதல்வராகப் பணியமர்த்தப் பட்டார்.
பின்னர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.
1947-இல் விருதுநகரில் தொடங்கப்பெற்ற வி.இ.செந்திற்குமார நாடார் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகவும் பணிபுரிந்தார்.
ஈரோடு காசனக்கல்லூரி, நாகர்கோயில் தெ.தி. இந்துக்கல்லூரி, மதுரை
தியாகராசர் கலைக்கல்லூரி என இவர் பணியாற்றிய கல்லூரிகளின் பட்டியல் பெரிதாக
நீண்டு கொண்டே செல்கிறது.
அதாவது இவரது அஞ்சாநெஞ்சமும், தன்மான உணர்வும் எவ்விடத்தும் இவர்
தொடர்ந்து பணிபுரிய இடமளிக்கவில்லை. மாணவரிடையே தமிழுணர்வை இவர்
ஊட்டியதால், இவர் மாணவர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதாகக் கல்லூரியின்
பொறுப்பாளர்களைக் கருதச் செய்தது.
1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் அறிஞர் அண்ணா அவர்களால், மீண்டும் இலக்குவனார் பணிபுரியும் வாய்ப்பைப்பெற்றார்.
சென்னை மாநிலக்கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பேராசிரியராகப் பணியேற்ற இவரால் ஓராண்டுக்கு மேல் அப்பணியிலும் நீடிக்கமுடியவில்லை.
அன்றைய கல்வியமைச்சரிடம் தமிழைப் பயிற்சிமொழியாக்குமாறும்
ஆங்கிலத்துக்குச் சார்பாக நடக்க வேண்டாம் என்றும் இவர் கூறியமையே இவரது
வேலைக்கு உலைவைத்தது என்பதை தமிழ்நாடு அறிந்த ஒன்றே.
அதன்பின்னர் ஐதராபாது உசுமானியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக
இரண்டாண்டுகள் பணியாற்றியபின்னர் தமது நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க
நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 டிசம்பரில்
ஓய்வு பெற்றார்.
மற்றவர்களின் மனதில்...
பேராசிரியரின் தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அணிந்துரை வழங்கிப்
பாராட்டிய அறிஞர் அண்ணா அவர்கள், பின்னர் தமிழக முதல்வராகப்
பொறுப்பேற்றபோது, தமது அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில், இந்நூலைப் போப்
ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூகலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில்
அன்பளிப்பாக அண்ணா வழங்கினார்.
கலைஞர் மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது
அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப்
பண்பையும் ஊட்டியவர்' என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய
'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து
கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக்
கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சாநெஞ்சத்தையும்
தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். அன்றைய தமிழ் வகுப்புகளில்
வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி உளேன் ஐயா
எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும்
காரணமாக இருந்தவர் இலக்குவனாரே என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.
இந்தி எதிர்ப்பு: தியாகராசர் கல்லூரியில்
தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது அறிஞர் அண்ணா "தத்துவப்போர்" என்னும்
தலைப்பில் பேசினார். அப்போது இலக்குவனார் இந்தி எதிர்ப்பை முழக்க
வேண்டும், நம்மொழி காக்க வேண்டும் என்ன அறிஞர் அண்ணாவிடம் கோரிக்கை
வைத்தார். அதன்பிறகு மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத் தலைவராய்ப்
பணியாற்றி மொழிக் காவலர் என்னும் பட்டத்திற்கு உரியவரானார்.
1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது
செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், 1965 மே முதல்
திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார்.
விற்பனையாளர்கள் உரியமுறையில் பணம் கொடுக்காத ஒரே காரணத்தாலேயே இவ்விதழ்
நிறுத்தப்பட்டது.
தமிழ் பணிகள்: செய்யதது எல்லாம் தமிழ் பணிதான் என்றாலும் பின்வரும் சந்ததியினருக்காக பதினான்கு தமிழ் நூல்களையும், ஐந்து ஆங்கில நூல்களையும் எழுதி வெளியிட்யுள்ளார் என்று கூறலாம். அவைகள்:
01. எழிலரசி
02. மாணவர் ஆற்றுப்படை
03. துரத்தப்ப்டேன்
04. அண்ணாவிற்கு பாவியல் வாழ்த்து
05. வள்ளுவர் வகுத்த அரசியல்
06. வள்ளுவர் கண்ட இல்லறம்
07. தொல்காப்பிய ஆராய்ச்சி
08. பழந்தமிழ்
09. தமிழ் கற்பிக்கும் முறை
10. இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்
11. கரும வீரர் காமராசர்
12. என் வாழ்க்கைப் போர்
13. திருக்குறள் எளிய வழிப்புரை
14. தொல்காப்பிய விளக்கம் ஆகியவை
இதழ்கள் வெளியிடல்:
இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை
நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும்
ஏற்பட அரும் பாடுபட்டார்.
1944 முதல் 1947 வரை இவர் நடத்திய "சங்க இலக்கியம்" வார இதழ் புலவருக்கு
மட்டுமே உரியதாகக் கருதப்பட்டு வந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ
வழிவகுத்தது.
சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த
இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின்
முயற்சிகளுக்கு முன்னோடி என்பதுதான் வரலாறு.
விருதுநகரில் இருந்தபோது இலக்கியம் (மாதமிருமுறை), தஞ்சாவூரில்
இருந்தபோது திராவிடக்கூட்டரசு மதுரையிலிருந்த போது குறள்நெறி எனப் பல்வேறு
இதழ்களை நடத்தினார்.
1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது
செய்யப்பட்டு சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், 1965 மே முதல்
திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார்.
விற்பனையாளர்கள் உரியமுறையில் பணம் கொடுக்காத ஒரே காரணத்தாலேயே இவ்விதழ்
நிறுத்தப்பட்டது.
தமிழ்க் காப்புக்கழகம்:மொழிக்காவலர் என்ற
பெருமைக்குரியவர் தமிழைக் காப்பதற்கும் பல துறைகளில் வளர்ப்பதற்கும்
மதுரையில் பணிபுரிந்தபோது தமிழ்க் காப்புக் கழகத்தை உருவாக்கி பணிக
நிறுவனங்கள், விற்பனையகங்கள், கடைகள் ஆகியவற்றின் பெயர் பலகைகளில் உள்ள
பெயர்களைத் தமிழில் எழுதும்படி கோரினார். புரட்சிக்கவிஞரின் தமிழியக்கம்
கூறும் கருத்துக்களையே இவரது கழக்ததின் கொள்கைகளாக மாற்றினார். தமிழ்
இயக்கத்தின் வேர் என்னும் சிறப்புக்குரியவர்.
பெற்ற பட்டங்கள்: முத்தமிழ்க் காவலர், செந்தமிழ்
மாமணி, பயிற்சி மொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ்காத்த தானைத் தலைவர்,
இலக்கணச் செம்மல், தமிழ்க் காப்புத் தலைவர்.
அடைமொழிகள்: தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, இருபதாம்
நூற்றாண்டுத் தொல்காப்பியர், இருபதாம் நூற்றாண்டுத் செந்நாப் போதார்,
இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்,
இரண்டாம் நக்கீரர், இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள், பெரும்
பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி,
செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல், குறள் நெறிக் காவலர், சங்கத்தமிழ்
காத்த சான்றோர், மொழிப்போர் மூலவர், முதுபெரும் புலவர், முத்தமிழ்ப்
போர்வாள்.
மறைவு: 1970-ல் மீண்டும் குறள்நெறி இதழைத் தொடங்கி
நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத்
தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3
ஆம் நாள் இயற்கை எய்தினார்.
நன்றி : தினமணி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொடர்ந்து தமிழறிஞர்களைப் பற்றிய குறிப்புகளை
இக்காலத் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் திரு வெங்கடேசனுக்கும்
தினமணிக்கும் பாராட்டுகள்.
தமிழ்ப்போராளி இலக்குவனார் பற்றிய இப் படைப்பில்,
< 1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் > எனத் தொடங்கும் பத்தியில் இருந்து 4 பத்திகள், <1965->எனத்தொடங்கும் பத்திக்குப் பின்னர் அமைந்திருந்தால் கோவையாக இருந்திருக்கும்.
இலக்குவனார் இலக்கிய இணயைம் சார்பிலும் தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும் மீண்டும் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்1965->
தமிழ்ப்போராளி இலக்குவனார் பற்றிய இப் படைப்பில்,
< 1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் > எனத் தொடங்கும் பத்தியில் இருந்து 4 பத்திகள், <1965->எனத்தொடங்கும் பத்திக்குப் பின்னர் அமைந்திருந்தால் கோவையாக இருந்திருக்கும்.
இலக்குவனார் இலக்கிய இணயைம் சார்பிலும் தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும் மீண்டும் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்1965->
No comments:
Post a Comment