உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்
தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சில ஒன்று சேர்ந்து இன்று – நவம்பர் 17 – உலகத்தமிழ்நாள் கொண்டாடுகின்றன. பாராட்டிற்குரிய நிகழ்வாக இது உள்ளது. தாய்மொழி நாள் என ஒன்று யுனெசுகோ அறிவிப்பிற்கிணங்கக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த நாளில் இந்திய அரசு சமசுகிருத நாளைத்தான் கொண்டாடுகிறது. தமிழையும் பிற மொழிகளையும் புறக்கணிக்கிறது. ஆனால், உலகத்தமிழ் நாள் என்றால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட முடியும். தமிழ்நாட்டுச் சூழலை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் தமிழர்கள் வாழும் அந்தந்தப் பகுதிகளுக்குரிய சூழலை அடிப்படையாகக் கொண்டு, கதை, கவிதை, பிற படைப்புகள் வர இந்த நாள் உந்துதலாக இருக்க வேண்டும். தமிழையும் தமிழரையும் மேம்படுத்த இந்தநாளில் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்த வேண்டும்.
தமிழறிஞர்களையும்தமிழ்க்கலைஞர்களையும் போற்றும் நாளாக இந்த நாள் இருக்க வேண்டும். எனவே, உலகத்தமிழ்நாளை வாழ்த்துவோம்!
இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியராகவும் நக்கீரராகவும் போற்றப்படும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் பிறந்த நாளே நவம்பர் 17. தமிழ்ப்பேராசிரியராக மட்டுமல்லாமல் களப்போராளியாகவும் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார் மட்டுமே! எனவே, அவரது பிறந்த நாள் உலகத்தமிழ் நாளாகக் கொண்டாடப்படுவது பொருத்தத்திற்கும் சிறப்பிற்கும் உரியது.
தந்தை பெரியார் அவருக்குத் ‘தமிழர் தளபதி’ எனப்பட்டம் சூட்டி மகிழுந்தில் உட்கார வைத்து ஊர்வலம் நடத்தி மகிழ்ந்தார். தமிழக அரசின் காவல் துறை அவரை ‘இந்திஎதிர்ப்புப் போரின் படைத் தளபதி’ என்று குற்றம் சாட்டிச் சிறையில் தள்ளியது. இரண்டுமே அவரின் பணிக்கான அங்கீகாரமே! 1967 இல் ஆட்சியில் இறந்து இறங்கிய காங்கிரசு இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் 1965 ஆம் ஆண்டு மொழிப்போர். அந்த மொழிப்போரைத் தலைமை தாங்கி நடத்தியவர் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் என்னும் பொழுது 1967 முதல் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஆட்சியில் இருப்பதற்குக் காரணம் அவரின் மொழிப்போர் உழைப்பே எனலாம்.
இலக்குவனார், திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் மாணாக்கராக இருக்கும் பொழுதே தொல்காப்பியத்தை முழுமையாகக் கற்றார். அக்கல்லூரியில் மொழியியல் குறித்து ஆங்கில நூல்கள் மிகுதியாக இருந்தன. அனைத்தையும் நன்கு கற்றார். கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைப் பல முறை படித்து அதன் நிறைகுறைகளை அறிந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கல்லூரி முதல்வர் பி.சா.சு. தொல்காப்பியத்தை நடத்தும் பொழுது ஆரியத் தழுவலாகத் திரித்துக் கூறும் பொழுதெல்லாம் உடனுக்குடன் மறுத்துத் தொல்காப்பியம் மூலநூலே என்பதை மெய்ப்பித்தார். இதனால் உடன்படித்த மாணவர்களின் நாயகனாகத் திகழ்ந்தார். அப்பொழுது ஆங்கிலத்தில் தொல்காப்பியத்தை மொழி பெயர்த்து உலகெங்கும் பரப்ப வேண்டும் என முடிவெடுத்தார். அதற்கேற்பப் பின்னாளில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் திறனாய்வுரையும் எழுதி முனைவர் பட்டமும் பெற்றார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பைப் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்து வெளிநாடு சென்ற பொழுது சென்ற இடங்களில் எல்லாம் கொடுத்து வந்தார்.
படிக்கும் பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப் பாவியம் எழுதினார். அதற்குப் பின்னரும் இலக்குவனார் ‘துரத்தப்பட்டேன்’ முதலான பல்வேறு தனித்தமிழ்ப் பாடல்களை எழுதினார். இது குறித்துக் கவிஞர் சுரதா, “பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்காப்புப் போரில் களத்தில் நின்றமையால் தமிழுலகம் நோபள் பரிசுபெறும் தகுதியுடைய கவிஞரை இழந்து விட்டது” என்று கூறியுள்ளார். தமிழ்க்காப்புப்போரில் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்குவனார் செலவழித்தமையால் அவரது படைப்புப்பணி குறைந்தது. எனினும் அவர் முப்பதிற்கும் மேற்பட்ட இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி, அமைச்சர் யார்?, திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் கண்ட இல்லறம், வள்ளுவர் வகுத்த அரசியல் முதலான தமிழ் நூல்களையும் Origin and Growth of Tamil, The Making of Tamil Grammar, A Brief Study of Tamil Words-The Chronology of Tamil Grammarians, Semantemes and Morphemes in Tamil Langugage, Tamil Language. Tholkappiam in English with Critical Studies முதலான ஆங்கில நூல்களையும் எழுதித் தமிழின் சிறப்புகளை உலகறியச் செய்தார்.
அறியாமையாலும் வஞ்சகத்தாலும் ஆயிரக்கணக்கான தமிழ் இலக்கியங்களை ஆடிப்பெருக்கின் பொழுது ஆற்றிலே தொலைத்தனர் நம் முன்னோர். அவ்வாறு சங்க இலக்கியங்களும் அழிந்து போயிருக்கும். ஆனால் அதனைக் காத்துப் பரப்பிய பெருமைக்குரியவர் இலக்குவனார். திருநெல்வேலியில் ‘வட்டத் தொட்டி’ என்னும் குழுவினர் நடத்திய ஒரு கூட்டத்தில் “சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்” என்னும் முழக்கம் எழுப்பப்பட்டது. ஆற்றிலே தமிழ் இலக்கியங்களை அழித்த மூடர்கள் கடலிலும் அழிக்க முன் வந்தனர். சங்க இலக்கியம் என்றென்றும் வழிகாட்டும் மக்கள் இலக்கியம் என்பதை உணர்த்தி அதனைத் தடுத்தவர் இலக்குவனார். மக்களிடம் இலக்கியங்களைக் கொண்டு செல்லாமையால்தான் இந்த அவலம் நேர்ந்துள்ளது எனக் குறிப்பிட்ட இலக்குவனார் ‘சங்க இலக்கியம்’ என்னும் வார இதழைத் தொடங்கினார். அதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்புகளை எளிய நடையில் மக்களிடையே பரப்பினார். “சங்கத்தமிழ் பாடித் தமிழர் புகழ் வளர்ப்போம்” என்று மக்களை முழங்கச் செய்தார். எனவே, சங்கத்தமிழைச் சுவைத்த தமிழ் மக்கள் அதனைக் காக்கவும் போற்றவும் தொடங்கினர். தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் சங்கத் தமிழ்ப்புலவர்களுக்கு விழா எடுத்தார். சங்க இலக்கியங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்கச் செய்து வளரும் தலைமுறையினர் அதன் சிறப்புகளை உணரச்செய்தார். தாம், சங்க இலக்கியம் தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியதுடன் நில்லாது, பிற அறிஞர்களையும் தொடர்பு கொண்டு அவ்வாறு எழுதத் தூண்டுதலாக அமைந்தார்.
சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு,Dravidian Federation, Kural Neri முதலான தமிழ், ஆங்கில இதழ்கள் மூலம் பொது மக்களிடையேயும் தமிழ் நெறிகள் பரவக் காரணமாக இருந்த இதழியல் அறிஞர் இலக்குவனார்.
தந்தை பெரியார், தமிழ் இலக்கியங்களும் தமிழ்ப்புலவர்களும் மூட நம்பிக்கைகளைப் பரப்புவதாக எண்ணிக் கொண்டிருந்தார். அந்த எண்ணத்தைப் போக்கியவர்களில் இலக்குவனாரும் முதன்மை இடத்தில் உள்ளார். முதலில் சிலப்பதிகாரத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்த பெரியார், இலக்குவனாரின் சிலப்பதிகாரச் சிறப்புரைகளை வெளியிட்டார். இலக்குவனாரின் திருக்குறள் உரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டார். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் கழம் மூலம் வாரந்தோறும் திருக்கறள் சொற்பொழிவு ஆற்றி வந்தார் இலக்குவனார். இது குறித்துப் பெரியார், “தொடர்ச்சியாக ஞாயிறு தவறாமல் ஒலிபெருக்கியுடன் சொற்பொழிவுகள் ஆற்றியமை முற்றிலும் புதுமையாகும். இராமாயணம். பாரதம் போன்ற புராண நூல்களைத்தான் இதுவரை தொடர்ச்சியாகக் காலட்சேபம் செதுவந்துள்ளமை அறிவோம். ஒரு நீதிநூலைத் தொடர்ச்சியாகச் சொல்லுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்பதும் என்றால் எங்கும் காணாத புதுமை என்றுதான் கூறுதல் வேண்டும்”. (விடுதலை, 04.04.1952) எனக் குறிப்பிட்டார்.
அது மட்டுமல்ல திராவிடர் கழக மாநாடுகளுடன் திருக்குறள் மாநாடுகளும் நடத்தச் செய்தார். திருக்குறள் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருந்த பெரியாரையே திருக்குறள் மாநாடு நடத்தச் செய்த பெருமைக்குரியவர் இலக்குவனார்.
இலக்குவனாரை இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் எனக் கூறுவதன் காரணம் தமிழுக்கு எதிராக யார் கூறினாலும், அவர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவரா? உயர் செல்வரா? என்று பார்க்காமல் உடனே துணிந்து கண்டிப்பதுதான். எடுத்துக்காட்டு ஒன்று பார்ப்போம். 1952இல் தமிழக ஆளுநராக சிரீ பிரகாசா என்பவர் இருந்தார். அவர் கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். உடனே இலக்குவனார் வெகுண்டெழுந்து அவரைக் கண்டித்தார். மேலும்,
“இனிமேலாவது, விகடம் என்றெண்ணி அறிவற்ற இந்த வீண் மொழிகளைத் திரு சிரீபிரகாசா விளம்பாமலிருக்கட்டும். வயது முதிர்ச்சியின் காரணமாக அறிவு நிலை தடுமாறி அவர் இப்படி உளறினாலும் அதனைக் கேட்டுத் தம் தன்மானத்தையும் மறந்து, அங்குக் கூடியிருப்பவர்கள் இருக்க வேண்டா. அதற்கு மாறாக ஆரியப் பண்பாட்டிலே ஊறித்திளைத்து, அவர்கள் குண இயல்புகளைக் கூறும் திரு சிரீ பிரகாசாவுக்கு மற்ற பெண்களின் உயர்ந்த பண்பாடுகளை எடுத்தோதி அவரைத் திருத்துவதுதான் அவர்கள் கடமை. உங்கள் தீர்ப்பென்ன?” (திராவிடக் கூட்டரசு 31.10.52 மலர் 1 இதழ் 7) என உரைத்தார். தமிழ்ப்பண்பாட்டைப் பழித்துக் கூறியவர் ஆளுநராக இருந்தாலும் எதிர்ப்பைக்காட்டாத அஞ்சா நெஞ்சர் அவர்.
இன்றைய தமிழ் எழுச்சி ஊர்வலங்களுக்கு எல்லாம் வித்திட்டவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரே ஆவார். தாம் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் வீதிக்கு வந்து மக்களை ஒன்று திரட்டித் தமிழ்க்காப்பு ஊர்வலங்களை நடத்தி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தினார். அவற்றில் ஓர் ஊர்வலமான 25.8.63 இல் நடைபெற்ற தமிழ்க்காப்புக் கழக ஆண்டுவிழா ஊர்வலம் குறித்துப் புலவர்மணி இரா.இளங்குமரன் கூறியதைப் பார்ப்போம்(செந்தமிழ்க்காவர் சி.இலக்குவனார்: பக்கம் 48):
“தமிழே உணர்வான ஊர்வலம்; தமிழே முழங்கிய ஊர்வலம்; தமிழுக்காகவும் ஒரு பெரும்படை உண்டு என்பதை மெய்ப்பித்த ஊர்வலம்! கட்சிகளின் ஊர்வலமே கண்ட பொதுமக்களுக்குப் புதுப்பொலிவான – எழுச்சிமிக்க இளையரும் முதியரும் நடையிட்டு வந்த ஊர்வலம்! தெருத்தோறும் கூடியும்,மாடி தோறும் ஏறியும் பொது மக்களும் முழக்கமிட நிகழ்ந்த ஊர்வலம்!”
இவ்வாறு அறிஞர்களிடையே இருந்த தமிழ் இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர். தமிழ் படித்தவர்களிடையே ஏற்பட்ட எழுச்சியை மக்களிடம் உண்டாக்கியவர். தமிழர்களின் தேசிய மொழி தமிழே என அறிவுறுத்தியவர். இந்தியத் துணைக்கண்டம், மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ வேண்டும் என வலியுறுத்தியவர். தமிழ் காக்க இரு முறை சிறை சென்ற பேராசிரியர். தனித்தமிழை வலியுறுத்தும் தமிழ்க்காப்பு உணர்வை மாணவர்களிடமும் மக்களிடமும் ஊட்டியவர். அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்குப் பல்வேறு பன்முகச் சிறப்புகள் கொண்ட தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த நாளை உலகத்தமிழ் நாளாகக் கொண்டாடுவது மிகப் பொருத்தமே!
உலகெங்கும் உலகத்தமிழ் நாள் கொண்டாடும் காலம் விரைவில் வரட்டும்! தமிழ்ப்போராளி இலக்குவனாரின் பின் வரும் முழக்கத்தை நடைமுறைப்படுத்த உலகத் தமிழ் நாள் உதவட்டும்!
தமிழகம் உலகத்தின் தாயகம்! – இதைத்
தரணியோர் மதித்திடச் செய்குவோம்
பூ.(இ)ரியாசு அகமது
நன்றி : தினச்செய்தி 17.11.2019 (விரிவு)
1 comment:
Do this hack to drop 2lb of fat in 8 hours
At least 160 000 women and men are trying a simple and SECRET "liquids hack" to drop 1-2lbs each night as they sleep.
It's simple and it works with anybody.
Here are the easy steps for this hack:
1) Go grab a drinking glass and fill it with water half glass
2) Then do this strange HACK
and you'll be 1-2lbs lighter in the morning!
Post a Comment