Showing posts with label இலக்குவனார். Show all posts
Showing posts with label இலக்குவனார். Show all posts

Saturday, July 16, 2022

இலக்குவனார் பரப்பிய உள்ளேன் ஐயா. . .! – கே.பி.அம்பிகாபதி, தினமணி கதிர்

 அகரமுதல


பள்ளிகள், கல்லூரிகளில் “எஸ் சார்’ என்று மாணவர்கள் வருகைப் பதிவைத் தெரிவித்த நிலையை மாற்றிய புகழுக்குச் சொந்தக்காரர் சி.இலக்குவனார். இவர் தமிழாசிரியர்,  பேராசிரியர்,  தமிழ் ஆய்வாளர்,   மொழிப் போர் தியாகி என்று பல்வேறு பன்முகங்களைக் கொண்டவர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தில் 1909-ஆம் ஆண்டு நவ. 17-இல் பிறந்த இவர்,  1973-ஆம் ஆண்டு செப். 3-இல் மறைவுற்றார்.

 முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆசிரியர்.  கவிஞர் இன்குலாப்,  முனைவர் கே. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்குத் தமிழ் பயிற்றுவித்த சிறப்புக்குரியவர்.

கிராமத்துத் திண்ணைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கித், தடைகள் பல கடந்து கற்றவர் இலக்குவனார். இவரது 4-ஆவது வயதில் தந்தை இறந்ததையடுத்துக், குடும்பத்தை நடத்த அண்ணனுக்கு உதவியாக மாடு மேய்த்தும், வயல்களில் வேலை செய்தும் வந்தார்.

இராசாமடம் நடுநிலைப் பள்ளியில் இலவச உணவோடு கல்வியைத் தொடர்ந்தவர்.  ஒரத்தநாட்டில் உயர் கல்வி,  திருவையாறு அரசுக் கல்லூரியில் புலவர் பட்டம், ஆராய்ச்சி எனத் தனது படிப்பின் எல்லையை விரிவுபடுத்தியவர். திருவாரூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குத் தமிழ் உணர்வுடன், சுயமரியாதை உணர்வையும் ஊட்டியவர் இலக்குவனார்.

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பணியாற்றியபோது, பொதுவுடமை இயக்கத் தலைவரான இரா. நல்லகண்ணுவுக்கு ஆசிரியராக இருந்தவர்.

வகுப்புகளில் “எஸ் சார்’ என ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த  நிலையை மாற்றி,  “உள்ளேன் ஐயா’ எனக் கூறவைத்துப், பின்னாளில் மற்ற இடங்களிலும் மாற்றத்துக்கு அடித்தளம் இட்டவர்.

தொல்காப்பியத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதோடு, அதற்கு ஆங்கிலத்தில் விரிவுரை எழுதிச் சிறப்பு சேர்த்தவர் இலக்குவனார்.  இவர், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்த நூலை, போப்பாண்டவரை சந்தித்தபோதும், “யேல்’ பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோதும் அண்ணா நினைவுப் பரிசாக வழங்கினார்.

மாணவர்களிடம் தமிழ் உணர்வை ஊட்டி புரட்சியைத் தூண்டிய குற்றச்சாட்டுகளால் அடிக்கடி கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1965-இல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது,  கைது செய்யப்பட்டார்.

2 ஆங்கில இதழ்கள், சங்க இலக்கியம், திராவிடக் கூட்டரசு, குறள்நெறி முதலிய பத்திரிகைகளை நடத்தியவர். எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்க்கைப் போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள், திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம், தமிழன்னை காவியம், மாணவர் ஆற்றுப்படை, தமிழர் வாழ்வியல், துரத்தப்பட்டேன், தமிழிசைப் பாடல்கள் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும் தொல்காப்பியம் உள்ளிட்ட 9 ஆங்கில நூல்களை எழுதியவர்.

“தமிழ் மொழி வாழ்ந்தால், தமிழகம் வாழும்’  என்னும் நோக்கத்தை முன்வைத்துத் தமிழ்க் காப்புக் கழகத்தை இலக்குவனார் தொடங்கினார். இதன்மூலம், தமிழில் பேசு,  தமிழில் எழுதுக, தமிழில் பெயரிடுக, தமிழில் பயில்க என்னும் 4 செயல் திட்டங்களை முன்வைத்துச் செயலாற்றியவர்.

இவ்வளவு சிறப்புகளால் தமிழ் உலகம் அறிந்த சி. இலக்குவனார் பிறந்த ஊரான வாய்மேட்டில், அவரது பெயரில், அவரின் உறவினரும், ஆசிரியருமான கு. வெற்றியழகனார் நிறுவிய “இலக்குவனார் பொருளுதவி நடுநிலைப் பள்ளி’ அடையாளமாகத் திகழ்கிறது.

கே.பி.அம்பிகாபதி, தினமணி கதிர் நாள் 17.07.2022

Saturday, November 16, 2019

உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது




உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்

தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சில ஒன்று சேர்ந்து இன்று – நவம்பர் 17 – உலகத்தமிழ்நாள் கொண்டாடுகின்றன. பாராட்டிற்குரிய நிகழ்வாக இது உள்ளது. தாய்மொழி நாள் என ஒன்று யுனெசுகோ அறிவிப்பிற்கிணங்கக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த நாளில் இந்திய அரசு சமசுகிருத நாளைத்தான் கொண்டாடுகிறது. தமிழையும் பிற மொழிகளையும் புறக்கணிக்கிறது. ஆனால், உலகத்தமிழ் நாள் என்றால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட முடியும். தமிழ்நாட்டுச் சூழலை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் தமிழர்கள் வாழும் அந்தந்தப் பகுதிகளுக்குரிய சூழலை அடிப்படையாகக் கொண்டு, கதை, கவிதை, பிற படைப்புகள் வர இந்த நாள் உந்துதலாக இருக்க வேண்டும். தமிழையும் தமிழரையும் மேம்படுத்த இந்தநாளில் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்த வேண்டும்.
தமிழறிஞர்களையும்தமிழ்க்கலைஞர்களையும் போற்றும் நாளாக இந்த நாள் இருக்க வேண்டும். எனவே, உலகத்தமிழ்நாளை வாழ்த்துவோம்!
இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியராகவும் நக்கீரராகவும் போற்றப்படும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் பிறந்த நாளே நவம்பர் 17. தமிழ்ப்பேராசிரியராக மட்டுமல்லாமல் களப்போராளியாகவும் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார் மட்டுமே! எனவே, அவரது பிறந்த நாள் உலகத்தமிழ் நாளாகக் கொண்டாடப்படுவது பொருத்தத்திற்கும் சிறப்பிற்கும் உரியது.
தந்தை பெரியார் அவருக்குத் ‘தமிழர் தளபதி’ எனப்பட்டம் சூட்டி மகிழுந்தில் உட்கார வைத்து ஊர்வலம் நடத்தி மகிழ்ந்தார். தமிழக அரசின் காவல் துறை அவரை ‘இந்திஎதிர்ப்புப் போரின் படைத் தளபதி’ என்று குற்றம் சாட்டிச் சிறையில் தள்ளியது. இரண்டுமே அவரின் பணிக்கான அங்கீகாரமே! 1967 இல் ஆட்சியில் இறந்து இறங்கிய காங்கிரசு இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் 1965 ஆம் ஆண்டு மொழிப்போர். அந்த மொழிப்போரைத் தலைமை தாங்கி நடத்தியவர் தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் என்னும் பொழுது 1967 முதல் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஆட்சியில் இருப்பதற்குக் காரணம் அவரின் மொழிப்போர் உழைப்பே எனலாம்.
இலக்குவனார், திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் மாணாக்கராக இருக்கும் பொழுதே தொல்காப்பியத்தை முழுமையாகக் கற்றார். அக்கல்லூரியில் மொழியியல் குறித்து ஆங்கில நூல்கள் மிகுதியாக இருந்தன. அனைத்தையும் நன்கு கற்றார். கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைப் பல முறை படித்து அதன் நிறைகுறைகளை அறிந்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கல்லூரி முதல்வர் பி.சா.சு. தொல்காப்பியத்தை நடத்தும் பொழுது ஆரியத் தழுவலாகத் திரித்துக் கூறும் பொழுதெல்லாம் உடனுக்குடன் மறுத்துத் தொல்காப்பியம் மூலநூலே என்பதை மெய்ப்பித்தார். இதனால் உடன்படித்த மாணவர்களின் நாயகனாகத் திகழ்ந்தார். அப்பொழுது ஆங்கிலத்தில் தொல்காப்பியத்தை மொழி பெயர்த்து உலகெங்கும் பரப்ப வேண்டும் என முடிவெடுத்தார்.  அதற்கேற்பப் பின்னாளில் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் திறனாய்வுரையும் எழுதி முனைவர் பட்டமும் பெற்றார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பைப் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்து வெளிநாடு சென்ற பொழுது சென்ற இடங்களில் எல்லாம் கொடுத்து வந்தார்.
படிக்கும் பொழுதே ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப் பாவியம் எழுதினார். அதற்குப் பின்னரும் இலக்குவனார் ‘துரத்தப்பட்டேன்’ முதலான பல்வேறு தனித்தமிழ்ப் பாடல்களை எழுதினார். இது குறித்துக் கவிஞர் சுரதா, “பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்காப்புப் போரில் களத்தில் நின்றமையால் தமிழுலகம் நோபள் பரிசுபெறும் தகுதியுடைய கவிஞரை இழந்து விட்டது” என்று கூறியுள்ளார். தமிழ்க்காப்புப்போரில் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்குவனார் செலவழித்தமையால் அவரது படைப்புப்பணி குறைந்தது. எனினும் அவர் முப்பதிற்கும் மேற்பட்ட  இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி, அமைச்சர் யார்?, திருக்குறள் எளிய பொழிப்புரை, வள்ளுவர் கண்ட இல்லறம், வள்ளுவர் வகுத்த அரசியல் முதலான தமிழ் நூல்களையும்   Origin and Growth of Tamil, The Making of Tamil Grammar, A Brief Study of Tamil Words-The Chronology of Tamil Grammarians, Semantemes and Morphemes in Tamil Langugage, Tamil Language. Tholkappiam in English with Critical Studies முதலான ஆங்கில நூல்களையும் எழுதித் தமிழின் சிறப்புகளை உலகறியச் செய்தார்.
அறியாமையாலும் வஞ்சகத்தாலும் ஆயிரக்கணக்கான தமிழ் இலக்கியங்களை ஆடிப்பெருக்கின் பொழுது ஆற்றிலே தொலைத்தனர் நம் முன்னோர். அவ்வாறு சங்க இலக்கியங்களும் அழிந்து போயிருக்கும். ஆனால் அதனைக் காத்துப் பரப்பிய பெருமைக்குரியவர் இலக்குவனார். திருநெல்வேலியில் ‘வட்டத் தொட்டி’ என்னும் குழுவினர் நடத்திய ஒரு கூட்டத்தில் “சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்” என்னும் முழக்கம் எழுப்பப்பட்டது. ஆற்றிலே தமிழ் இலக்கியங்களை அழித்த மூடர்கள் கடலிலும் அழிக்க முன் வந்தனர். சங்க இலக்கியம் என்றென்றும் வழிகாட்டும் மக்கள் இலக்கியம்  என்பதை உணர்த்தி அதனைத் தடுத்தவர் இலக்குவனார். மக்களிடம் இலக்கியங்களைக் கொண்டு செல்லாமையால்தான் இந்த அவலம் நேர்ந்துள்ளது எனக் குறிப்பிட்ட இலக்குவனார் ‘சங்க இலக்கியம்’ என்னும் வார இதழைத் தொடங்கினார். அதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்புகளை எளிய நடையில் மக்களிடையே பரப்பினார். “சங்கத்தமிழ் பாடித் தமிழர் புகழ் வளர்ப்போம்” என்று மக்களை முழங்கச் செய்தார். எனவே, சங்கத்தமிழைச் சுவைத்த தமிழ் மக்கள் அதனைக் காக்கவும் போற்றவும் தொடங்கினர். தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் சங்கத் தமிழ்ப்புலவர்களுக்கு விழா எடுத்தார். சங்க இலக்கியங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்கச் செய்து வளரும் தலைமுறையினர் அதன் சிறப்புகளை உணரச்செய்தார். தாம், சங்க இலக்கியம் தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியதுடன் நில்லாது, பிற அறிஞர்களையும் தொடர்பு கொண்டு அவ்வாறு எழுதத் தூண்டுதலாக அமைந்தார்.
சங்க இலக்கியம், இலக்கியம், குறள்நெறி, திராவிடக் கூட்டரசு,Dravidian Federation, Kural Neri     முதலான தமிழ், ஆங்கில இதழ்கள் மூலம் பொது மக்களிடையேயும் தமிழ் நெறிகள் பரவக் காரணமாக இருந்த இதழியல் அறிஞர் இலக்குவனார்.
தந்தை பெரியார், தமிழ் இலக்கியங்களும் தமிழ்ப்புலவர்களும் மூட நம்பிக்கைகளைப் பரப்புவதாக எண்ணிக் கொண்டிருந்தார். அந்த எண்ணத்தைப் போக்கியவர்களில் இலக்குவனாரும் முதன்மை இடத்தில் உள்ளார். முதலில் சிலப்பதிகாரத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்த பெரியார், இலக்குவனாரின் சிலப்பதிகாரச் சிறப்புரைகளை வெளியிட்டார். இலக்குவனாரின் திருக்குறள் உரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டார். புதுக்கோட்டையில் திருவள்ளுவர் கழம் மூலம் வாரந்தோறும் திருக்கறள் சொற்பொழிவு ஆற்றி வந்தார் இலக்குவனார். இது குறித்துப் பெரியார்,  “தொடர்ச்சியாக ஞாயிறு தவறாமல் ஒலிபெருக்கியுடன் சொற்பொழிவுகள் ஆற்றியமை முற்றிலும் புதுமையாகும்இராமாயணம்பாரதம் போன்ற புராண நூல்களைத்தான் இதுவரை தொடர்ச்சியாகக் காலட்சேபம் செதுவந்துள்ளமை அறிவோம்ஒரு நீதிநூலைத் தொடர்ச்சியாகச் சொல்லுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்பதும் என்றால் எங்கும் காணாத புதுமை என்றுதான் கூறுதல் வேண்டும்”. (விடுதலை, 04.04.1952) எனக் குறிப்பிட்டார்.
அது மட்டுமல்ல திராவிடர் கழக மாநாடுகளுடன் திருக்குறள் மாநாடுகளும் நடத்தச் செய்தார். திருக்குறள் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருந்த பெரியாரையே திருக்குறள் மாநாடு நடத்தச் செய்த பெருமைக்குரியவர் இலக்குவனார்.
இலக்குவனாரை இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் எனக் கூறுவதன் காரணம் தமிழுக்கு எதிராக யார் கூறினாலும், அவர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவரா? உயர் செல்வரா? என்று பார்க்காமல் உடனே துணிந்து கண்டிப்பதுதான். எடுத்துக்காட்டு ஒன்று பார்ப்போம். 1952இல் தமிழக ஆளுநராக சிரீ பிரகாசா என்பவர் இருந்தார். அவர் கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். உடனே இலக்குவனார் வெகுண்டெழுந்து அவரைக் கண்டித்தார். மேலும்,
“இனிமேலாவது, விகடம் என்றெண்ணி அறிவற்ற இந்த வீண் மொழிகளைத் திரு சிரீபிரகாசா விளம்பாமலிருக்கட்டும். வயது முதிர்ச்சியின் காரணமாக அறிவு நிலை தடுமாறி அவர் இப்படி உளறினாலும் அதனைக் கேட்டுத் தம் தன்மானத்தையும் மறந்து, அங்குக் கூடியிருப்பவர்கள் இருக்க வேண்டா. அதற்கு மாறாக ஆரியப் பண்பாட்டிலே ஊறித்திளைத்து, அவர்கள் குண இயல்புகளைக் கூறும் திரு சிரீ பிரகாசாவுக்கு மற்ற பெண்களின் உயர்ந்த பண்பாடுகளை எடுத்தோதி அவரைத் திருத்துவதுதான் அவர்கள் கடமை. உங்கள் தீர்ப்பென்ன?” (திராவிடக் கூட்டரசு 31.10.52  மலர் 1 இதழ் 7) என உரைத்தார். தமிழ்ப்பண்பாட்டைப் பழித்துக் கூறியவர் ஆளுநராக இருந்தாலும் எதிர்ப்பைக்காட்டாத அஞ்சா நெஞ்சர் அவர்.
இன்றைய தமிழ் எழுச்சி ஊர்வலங்களுக்கு எல்லாம் வித்திட்டவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரே ஆவார். தாம் பணியாற்றிய ஊர்களில் எல்லாம் வீதிக்கு வந்து மக்களை ஒன்று திரட்டித் தமிழ்க்காப்பு ஊர்வலங்களை நடத்தி மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தினார். அவற்றில் ஓர் ஊர்வலமான  25.8.63 இல் நடைபெற்ற தமிழ்க்காப்புக் கழக ஆண்டுவிழா ஊர்வலம் குறித்துப் புலவர்மணி இரா.இளங்குமரன் கூறியதைப் பார்ப்போம்(செந்தமிழ்க்காவர் சி.இலக்குவனார்: பக்கம் 48):
 “தமிழே உணர்வான ஊர்வலம்; தமிழே முழங்கிய ஊர்வலம்; தமிழுக்காகவும் ஒரு பெரும்படை உண்டு என்பதை மெய்ப்பித்த ஊர்வலம்! கட்சிகளின் ஊர்வலமே கண்ட பொதுமக்களுக்குப் புதுப்பொலிவான – எழுச்சிமிக்க இளையரும் முதியரும் நடையிட்டு வந்த ஊர்வலம்! தெருத்தோறும் கூடியும்,மாடி தோறும் ஏறியும் பொது மக்களும் முழக்கமிட நிகழ்ந்த ஊர்வலம்!”
இவ்வாறு அறிஞர்களிடையே இருந்த தமிழ் இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர். தமிழ் படித்தவர்களிடையே ஏற்பட்ட எழுச்சியை மக்களிடம் உண்டாக்கியவர். தமிழர்களின் தேசிய மொழி தமிழே என அறிவுறுத்தியவர். இந்தியத் துணைக்கண்டம், மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசாகத் திகழ வேண்டும் என வலியுறுத்தியவர். தமிழ் காக்க இரு முறை சிறை சென்ற பேராசிரியர். தனித்தமிழை வலியுறுத்தும் தமிழ்க்காப்பு உணர்வை மாணவர்களிடமும் மக்களிடமும் ஊட்டியவர். அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்குப் பல்வேறு பன்முகச் சிறப்புகள் கொண்ட தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த நாளை உலகத்தமிழ் நாளாகக் கொண்டாடுவது மிகப் பொருத்தமே!
உலகெங்கும் உலகத்தமிழ் நாள் கொண்டாடும் காலம் விரைவில் வரட்டும்! தமிழ்ப்போராளி இலக்குவனாரின் பின் வரும் முழக்கத்தை நடைமுறைப்படுத்த உலகத் தமிழ் நாள் உதவட்டும்!
தமிழகம் உலகத்தின் தாயகம்! – இதைத்
தரணியோர் மதித்திடச் செய்குவோம்
பூ.(இ)ரியாசு அகமது
நன்றி : தினச்செய்தி 17.11.2019 (விரிவு)

Friday, September 07, 2018

இலக்குவனார் – மயிலாடன்

அகரமுதல

ஒற்றைப்பத்தி

இலக்குவனார்  


தமிழ்ப் போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரின் உரை ஆரவாரமாக இருக்காது – ஆற்றொழுக்காக – அமைதி யாக – அதேநேரத்தில் ஆழமாக இருக்கும். அதில் தமிழ் மானமும், இனமானமும் போட்டிப் போட்டுக்கொண்டு துள்ளும்.
இரண்டாண்டு, மூன்றாண்டுக்குமேல் ஒரே இடத்தில் அவர் பணியாற்றியது கிடையாது – அதற்குக் காரணம் அவரது மொழி, இன, திராவிட இயக்கக் கொள்கைச் சித்தாந்தமும், அவற்றின் வெளிப்பாடுமே!
மரம் சும்மா இருந்தாலும், காற்று அதைச் சும்மா இருக்க விடாது அல்லவா! அதேபோல, நாட்டு நடப்புகளும், போக்குகளும் அந்தத் தமிழ் மறவரின் உணர்வைச் சீண்டி சவால் விட்டுக்கொண்டே இருக்கும்.
தான் உண்டு, தன்  குடும்பம் உண்டு என்ற சிறைச் சாலைக்குள் வாழ்வதில் இன்பம் காணும் ஒரு சமூகத்தில், தன் குடும்பம்பற்றி எண்ணாது சதா நாட்டு நலனைப்பற்றியே எண்ணிய எழுஞாயிறு அவர். சொல்லியபடியே சாதி மறுப்புத் திருமணமும் செய்து கொண்டவர்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிய போது, ‘தமிழ்க்காப்புக் கழகம்’ ஒன்றைத் தொடங்கினார். (6.8.1962). ஒரு பொங்கல் பொழுதில் (15.1.1964) குறள்நெறி’ இதழையும் தொடங்கினார். வள்ளுவர்நெறியில் வாழ்க’ என்பதுதுன் அதன் குறிக் கோள்.
‘தமிழ்க் காப்புக் கழகத்தின்’’ கேடயமாக அது விளங்கியது. தமிழ்க் காப்புக் கழகத்தின் தலைவராக இலக்குவனாரும், பொதுச்செயலாளராக இளங்குமரனாரும் பொறுப்பேற்றுப் பணியாற்றினர்.
1965 இந்தி எதிர்ப்பின்போது கைதுசெய்யப்பட்டார் (முதலமைச்சர் பக்தவச்சலம்). இலக்குவனார் மீது குற்றச்சாட்டு என்ன தெரியுமா?
‘அமைச்சர்களைக் கொல்லுவதற்கு முயற்சி’ என்பது உள்ளிட்ட பதினான்கு குற்றங்கள் ஆகும்.
வழக்கின்போது வழக்குரைஞர் வைத்த குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்கது. “இலக்குவனார் தமிழ்ப் பற்றாளர். உள்ளம் கவர்ந்தவர். இதழ் நடத்துபவர். அவர் வெளியே இருந்தால், அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு இராது” என்றார் அரசு தரப்பு வழக்குரைஞர் என்றால், இலக்குவனார் வன் முறையாளர் அல்லர் என்றாலும், அவரைப்பற்றிக் கூறிய குற்றச்சாட்டில், இலக்குவனாரின் வீரமும், விவேகமும், கொள்கைப் பாங்கும், வளமும் எத்த கையது என்பதை அறிந்து கொள்ள உதவும் அல்லவா!
அவரின் இயற்பெயர் இலட்சுமணன் எனும் வட மொழிப் பெயர். அவரின் ஆசிரியரான சாமி சிதம்பரனார் அதனை இலக்குவன்என்று மாற்றியமைத்தார். இலக்குவனாரின் இல்லப் பெயர் ‘கருமுத்தகம்’ என்பதாகும். அவரின் நினைவு நாள் இந்நாள் (3.9.2018).
வாழ்க இலக்குவனார்!
– மயிலாடன்
விடுதலை 03.09.2018

Saturday, September 01, 2018

தமிழ்ப்போராளி இலக்குவனார், கி.வீரமணி

அகரமுதல

தமிழ்ப்போராளி இலக்குவனார்

கி.வீரமணி, தலைவர்,  திராவிடர் கழகம்

நன்றி: தினத்தந்தி: 02.09.2018

தமிழ்ப் போராளி இலக்குவனார்

நாளை (செப்டம்பர் 3-ந்தேதி) இலக்குவனார் நினைவு நாள்.
பதிவு: செட்டம்பர் 02,  2018 10:20 மு.ப.
பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர்.
தான் படித்த படிப்பு, சம்பாத்தியம் குடும்ப வளமைக்கு மட்டுமே என்னும் கண்ணோட்டம் அவருக்கு இருந்திருந்தால் அவர் வாழ்க்கை என்பது இவ்வளவுத் தொடர் தொல்லைகளுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகி இருக்காது.
இலக்குவனார், தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் சிற்றூரில் சிங்காரவேலர்-இரத்தினம் அம்மையார் ஆகியோரை பெற்றோராக கொண்டு எளிய குடும்பத்தில் 17-11-1910 அன்று பிறந்தார். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்த அவர் பி.ஓ.எல். மற்றும் முதுகலை பட்டங்களையும் பெற்றார்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கற்றுத்தேர்ந்தவர். ‘தமிழர் தலைவர்’ நூலை எழுதிய சாமி.சிதம்பரனாரின் மாணவர் ஆவார். தொல்காப்பியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா, போப் ஆண்டவரை சந்தித்த போதும், யேல் பல்கலைக்கழகத்துக்கு சென்ற போதும், அந்நூலை நினைவுப் பரிசாக அளித்தார்.
எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்க்கைப்போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள், திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும் தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்கள் வாழும்வரை, அவற்றை படைத்த பேராசிரியர் இலக்குவனாரும் நாட்டு மக்களின் இதயங்களில் கோலோச்சுவார்.
சங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளின் ஆசிரியராக இருந்ததோடு, திராவிடன் பெடரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார். இவற்றையெல்லாம் அவர் நடத்தினார் என்றாலும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், தன் கையைச் சுட்டுக் கொண்டார் என்றே கூற வேண்டும்.
ஆனாலும் இனம்மொழி மேம்பாட்டுக்கான மேட்டிமை அவரைஆட்கொண்டது. அவர் தமிழாசிரியராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, துறைத்தலைவராகப் பரிணமித்தவர். திருவாரூரில் தமிழாசிரியராக பணியாற்றிய போது அவரின் மாணவராக இருந்தவர்தான் மு.கருணாநிதி (பிற்காலத்தில் முதல்-அமைச்சர் கலைஞர்).‘தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார்’ என்று ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூரிலிருந்து தொடங்கி குலசேகரன்பட்டினம், நெல்லை ம.தி.தா. இந்துக்கல்லூரி, விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி, ஈரோடு மகாஜனக் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி, நாகர்கோவில், சென்னை மாநிலக் கல்லூரி, ஆந்திராவின் உஸ்மானிய பல்கலைக்கழகம் வரை (1936-1968 இடைவெளியில்) பந்தாடப்பட்டவர்.
அந்த வகையில் தமிழ்நாட்டின் மண்ணை அளந்த மணவாளர் அவர்! என்ன காரணம்? பணியில் தொய்வா? திறமைக் குறைவா? அல்ல அல்ல. சென்ற இடங்களில் எல்லாம் அவர் வகித்த துறையில் முத்திரை பதித்தவர். தமிழ் உணர்வோடு மாணவர்களை வார்த்தெடுத்தவர். அவருடைய மாணவர்களுள் ஒருவர்தான் ஆர்.நல்லக்கண்ணு; பின் ஏனிந்தப் பந்தாட்டம்?
அவர் தமிழ் உணர்வாளர்இன உணர்வாளர்பெரியார் வழிசுயமரியாதைக்காரர். இவைதான் இவர் மீது ஏவப்பட்ட அம்புகள்.
ஒரு கல்லூரியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் தெரியுமா?
பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிலும், இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும் பங்கு கொண்டார். இலக்குவனார் கருஞ்சட்டை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார் என்று பொதுக்கல்வி இயக்குநர், ஆட்சிக்குழுவுக்கு தாக்கல் செய்தது. ஆட்சி மன்றக்குழுவின் கருத்து இதற்கு எதிராக இருந்தாலும் வேறு வழியின்றி இலக்குவனாரை வெளியேற்ற நேர்ந்தது.
அந்த கல்லூரியில் அவருக்கு இழைத்த அநீதி கண்டு ‘துரத்தப்பட்டேன்’ என்று கவிதை வரிகளில் குமுறினார்!
கல்லூரிப் பேராசிரியர்கள் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகாடமிக்கவுன்சில் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலைவராகவும், தமிழகப் புலவர் குழு செயலாளராகவும் பொறுப்பேற்று செயப்பேரிகை கொட்டியவர்.
இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெரு நடைப் பயணத்தாலும் சிறைவாசமும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தனிமைச் சிறையும்பதவி இழப்பும் தான் அவர் பெற்ற பரிசுகள்.
தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண்டும். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர்வில் திருக்குறளுக்கென்றே தனித்தேர்வுத்தாள் இருக்க வேண்டும் என்பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை.
பணியில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தி.மு.க. பிரிந்தபோது பெரியார் மேற்கொண்ட நீண்ட சுற்றுப்பயணம் முழுவதிலும் திராவிடர் கழக கூட்டங்களில் இலக்குவனாரும் அவருடன் பயணித்து உரையாற்றினார்
புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் (9-4-1950) புலவர் இலக்குவனார் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். “ஆரியத்தை முதலாவது எதிர்த்த புரட்சிப் புலவர் திருவள்ளுவர். மக்களின் வாழ்வுக்கேற்ற அறம், பொருள், இல்லறம் பற்றித்தான் வள்ளுவர் எழுதினாரே ஒழிய, ஆரியக் கருத்துப்படி இருக்கும் வீட்டைப்பற்றி (மோட்சம்) பற்றி எழுதவில்லை” என்று பேசினார்.
இலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேடு உயர்நிலைப் பள்ளிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது. தன்மானப் புலவர் பேராசிரியர் இலக்குவனாருக்கு 6 மகன்களும், 5 மகள்களும் உண்டு. ‘தமிழகத்தின் உரிமை உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது உறு கடனாம் என்று உறுதி கொள்ளச்செய்தது; “தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டேன். புலவர் படிப்பால் பெற்ற பயன் இதுவேயாகும்” என்பது இலக்குவனார் இலக்கு.
அந்தத் தமிழ்ச்சிங்கம் 3-9-1973 அன்று கண் மூடிற்று. என்றாலும் வரலாற்றில் வாழுகிறது!
– கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
மூலம்: தினத்தந்தி. பகிர்வு;  விடுதலை

Wednesday, November 16, 2016

புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் – இரவி இந்திரன்




தலைப்பு-புரட்சி எண்ணம்கொண்ட இலக்குவனார், இரவி இந்திரன் : thalaippu_purathciennam_ilakkuvanar_raviindiran

புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார்

அஞ்சா நெஞ்சும் அதிஉயர் கல்விச் செறிவும் வரலாற்றுத் தெளிவும் ஒருங்கே உருவான அறிஞரின் கதை. (17.11.1909 – 03.09.1973)
  1965, இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம். உளவுத்துறைக்கு ஒரு செய்தி வருகிறது. தமிழகமெங்கும் போராட்டத் தீ பரவிக்கொண்டிருக்கிறது. மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் எரிக்கப் போகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.
  உடனே விழிப்படைந்த உளவுத்துறையினர் அறிஞர் அண்ணாவிடம் வருகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளும்படி அறிக்கை விடும்படி கேட்கிறார்கள். மாணவர்களின் போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் அதை நிறுத்தும்படி கேட்பது பொருத்தமாக இருக்காது என அண்ணா மறுக்கிறார்.
  அத்துடன் மதுரையில் இருக்கும் மாணவர்கள் நான் சொல்வதைக்கூட கேட்பார்களோ தெரியாது. அவர்களின் பேராசிரியர் சொன்னால் தான் கேட்பார்கள் என சொல்கிறார்.
  யார் அந்தப் பேராசிரியர் எனக் காவல் துறை வினவுகிறது. உடனே மதுரைக்குச் சென்று அந்தப் பேராசிரியரைச் சந்திக்கிறது. அண்ணாவிடம் கேட்டதையே அவரிடமும் கேட்கிறது.
  நியாயமான காரணத்துக்காகப் போராடுகிறவர்களை போராட்டத்தை நிறுத்தும்படி கேட்டால் நான் நல்ல ஆசிரியனாக இருக்க முடியாது என் பேச்சைக் கேட்டு ஒரு வேளை அவர்கள் நிறுத்தினால் அவர்கள் நல்ல மாணவர்களாகவும் இருக்கமுடியாது என உறுதியாகக் கூறுகிறார் அந்தப் பேராசிரியர்.
  தொடர்ந்து மாணவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை எரிக்கிறார்கள். (அன்றைய போராட்டத்தில் இன்றைய எழுத்தாளர்கள் சூரியதீபன், கவிஞர்கள் மேத்தா இன்குலாப் போன்றவர்களும் பங்கெடுத்திருந்தார்கள்.) மாணவர்கள் கா.காளிமுத்து (முன்னாள் அமைச்சர்) நா.காமராசன் (கவிஞர்) கைது செய்யப்படுகிறார்கள்.
  ஆனாலும் பாதுகாப்புத் துறையினரின் கோபம் அந்தப் பேராசிரியர் மீதே அதிகம் இருக்கிறது. அவரோ ஓய்ந்தபாடில்லை. தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என வலியுறுத்தி “தமிழ் மொழி உரிமைப் பயணம்” எனும் நடைபயணம் மேற்கொள்ள ஆயத்தமாகிறார்.
  அவரைப் பழிதீர்க்க காத்திருந்த காவல்துறை இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்ய ஆயத்தமாகிறது.
‘’உங்களைக் கைதுசெய்யப் போகிறார்கள் தலைமறைவாகுங்கள்’’ என அவருக்குச் செய்தி அனுப்பப்படுகிறது. “தமிழுக்காகச் சிறை செல்கிற தமிழ் அறிஞனாக இருப்பதில் பெருமையடைவேனே தவிர ஒருநாளும் தலைமறைவாக மாட்டேன்” எனச் சீறுகிறார் அந்தப் பேராசான்.
   இந்தியப் பாதுகாப்புச்சட்டம் அவர் மீது பாய்கிறது. இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்ட முதல் தமிழ் அறிஞர் என்று வரலாற்றில் இடம்பிடிக்கிறார் ஒரு பேராசிரியர். அவர்தான் பேராசிரியர் சி.இலக்குவனார். நவம்பர் 17   அவரின் பிறந்த நாள்
  1909 நவம்பர் 17 தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தில் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம்) சிங்காரவேலர்-இரத்தினத்தாச்சி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
  தமது நான்கு வயதிலேயே தந்தையை இழந்தார்.
  வாய்மேட்டில் சுப்பையா ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் கண்ணுசாமி ஆசிரியர் நடத்திய திண்ணைப்பள்ளியிலும் பயின்றார். பின்னர் வாய்மேட்டில் அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்த இலக்குவனாரின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டது.
  தமது அண்ணன் நல்லபெருமாளுக்கு உதவியாக வயல்வேலைகளைக் கவனிப்பதும் மாடுகளை மேய்ப்பதுமே அவரது வேலையாயிற்று.
  பின்னர் தஞ்சாவூர் சரபோசி மன்னரின் அறக்கட்டளை சார்பில் இராசாமடம் என்னுமிடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.
  இங்கு இவர் எட்டாம் வகுப்புப் படித்தபொழுது இலட்சுமணன் என இவரது பெற்றோர் இட்ட பெயரை இவர்தம் தமிழாசிரியர் சாமி சிதம்பரனார், “இலக்குவன்” என மாற்றச் செய்தார்.
  அப்பொழுது முதலே தனித்தமிழ் மீது நாட்டமும் தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கும் முனைப்பும் இலக்குவனார்க்கு ஏற்பட்டது.
 பின்னர் 1924ஆம் ஆண்டில் சரபோசி மன்னரின் அறக்கட்டளை சார்பில் ஒரத்தநாட்டில் இருந்த உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்றார்.
  பின்னர் திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936ஆம் ஆண்டில் புலவர் பட்டம் பெற்றார். அங்கு பயிலும்பொழுது அக்கல்லூரியின் திருவள்ளுவர் மாணவர் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கீழைமொழிகளில் இளவர் (B.O.L) பட்டம் வழங்கப்பட்டது. இப்பட்டம் கலைமுதுவர் பட்டத்திற்கு இணையாகக் கருதப்பட்டது.
  இலக்குவனார் ஆசிரியப்பணி ஆற்றிக்கொண்டே ஆங்கிலத் தேர்வுகளில் வெற்றிபெற்று கலைமுதுவர் ஆனார்.
  பின்னர் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் (Origin and Growth of Tamil Language) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து கீழைமொழிகளில் முதுவர் (M.O.L) பட்டமும் பெற்றார்.
 1963 இல் முனைவர் பட்டப்பேற்றிற்காக Tholkappiyam in English with critical studies என்னும் ஆய்வேட்டை அளித்து 1963 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்.
இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார்.
பின்னர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபோது இந்நூலைப் போப்பு ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூகலகங்களுக்கும் தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக வழங்கினார்.
இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம் தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனத்தில் தமிழ் எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார்.
 1944 முதல் 1947 வரை இவர் நடத்திய “சங்க இலக்கியம்” வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது.
 இலக்கியம் (மாதமிருமுறை), திராவிடக்கூட்டரசு, குறள்நெறி, Kurnlneri, Dravidan Ferderation, எனப் பல்வேறு இதழ்களை நடத்தினார்.
  1965-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இருமுறை கைது செய்யப்பட்டுச் சிறைவாழ்வும் பணிநீக்கமும் பெற்ற இலக்குவனார், 1965 மே முதல் திசம்பர் வரை ஏழு மாதங்கள் தமது ஏட்டை நாளிதழாகவும் நடத்தினார்.
  எழிலரசி அல்லது காதலின் வெற்றி, மாணவர் ஆற்றுப்படை, துரத்தப்பட்டேன், தமிழிசைப் பாடல்கள், என் வாழ்க்கைப் போர், அமைச்சர் யார்?, அம்மூவனார், எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1, எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2, திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், மாமூலனார் காதற் காட்சிகள், வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் கருமவீரர் காமராசர், அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து, பழந்தமிழ், தமிழ் கற்பிக்கும் முறை, தொல்காப்பிய ஆராய்ச்சி, சங்க இலக்கியச் சொல்லோவியங்கள், Tholkappiyam in English with Critical Studies, Tamil Language, The Making of Tamil Grammar> Brief Study of Tamil words முதலிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.
  25.01.1965 இல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது ‘அமைச்சர்களைக் கொல்ல முயற்சி செய்தார்’ என்பது முதலான பதினான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1.2.1965 இல் கைது செய்யப்பட்டார்.
  அவரது வீடும் அச்சகமும் சோதனைக்கு உள்ளாயின. ஒரு மாதமும் ஒரு வாரமும் சிறை வாழ்க்கைக்குப் பின்னர் திருநகரைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்னும் கட்டளையோடும் ‘எப்பொழுதும் சிறைப்படுத்தப்படலாம்’ என்னும் ஆணையோடும் விடுவிக்கப்பட்டார்.
  உயர்நிலைப் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தமிழைப் பயிற்று மொழி ஆக்கியதைப் போல கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழைப் பயிற்றுமொழி ஆக்க வேண்டும் என்னும் கோரிக்கையோடு 5.5.1965 இல் கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழ் உரிமைப் பெருநடை செல்ல திட்டமிட்டார்.
  1.5.1965 இல் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலக்குவானார் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மூன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டார்.
  இதனால் மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் ஆற்றிவந்த தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
 2.10.71 முதல் 25.12.1971 முடிய சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளில் சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார்.
6.8. 1962 ஆம் நாள் ‘தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்’ என்னும் நோக்கத்தை முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தைச் சி. இலக்குவனார் தொடங்கினார்.
  இக்கழகம் தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க! என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்துப் பணியாற்றியது.
  பல்வேறு கல்விநிலையப் பணிகளுக்கும் பணியின்மைக்கும் பின்னர் இலக்குவார்,  நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து 1970 திசம்பரில் ஓய்வு பெற்றார்.
  மீண்டும் ‘குறள்நெறி’ இதழைத் தொடங்கி நடத்தியும் நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றியும் தமது தமிழ்ப்பணியைத் தொடர்ந்த இலக்குவனார் நீரிழிவு நோய் காரணமாக 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் காலமானார்.
  மு. கருணாநிதி, முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், நல்லகண்ணு, முனைவர் க. காளிமுத்து, நா. காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும்பெருமாள்,  சேடபட்டி முத்தையா போன்றோர்  இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள்.
  முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ் காத்த தானைத் தலைவர், இலக்கணச் செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத் தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ் மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப் படையின் மானச் செம்மல் பல பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழி அழியும்‘ எனச் சொன்னவர்.
 “தொல்காப்பியமே தமிழர்வாழ்வின் பல்துறைபற்றி அறிய துணைபுரிகிறது. இது இலக்கண நூல் ஆயினும் ஏனைய மொழி இலக்கண நூல்களில் இருந்து வேறுபடுகிறது. பண்பாட்டுக் கலைகளாம் உயிரியல் உளவியல் வாழ்வியல் முதலிய அனைத்தையும் கி.மு 7ம் நூற்றாண்டிலேயே தன்னகத்தே கொண்ட தனிச்சிறப்பு மிக்கது” எனச் சொன்னார்.
 இவரின் ஆராய்ச்சிக்கு முன்னர் தொல்காப்பியம் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்குரியது என நம்பப்பட்டு வந்தது. Thol Kappiam In English With Critical Studies எனும் அவரின் நூல் தமிழின் பெருமையை உலகறிய உதவுவது.
 “உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகம் என்றும் அவர்கள் உரையாடிய மொழி தமிழ் மொழி என்பதும் உண்மையாயினும் இன்றுவரை எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை” எனத் தனது பழந்தமிழ் என்கின்ற நூலில் குறிப்பிடுகிறார்.
 தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை ஆய்ந்தாய்ந்து அகன்ற அறிவுசான்ற சான்றோராக ஒருபுறமும் அவற்றைப் பாரெங்கும் பரப்பும் அருந்தமிழ்த் தொண்டராக மறுபுறமும் பேராசிரியர் சி.இலக்குவனார் திகழ்ந்தார்.
  கடமையில் இருந்து வழுவாக் கல்வி ஆசானாகவும் தமிழ்நெறியைப் போற்றும் புலமையாளராகவும் உயர்தமிழுக்கு வரும் கேட்டினை உடைத்தெறியும் உரையாளராகவும் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு செல்லும் இதழாளராகவும் எங்கும் தமிழை ஏற்றம் பெறச் செய்யும் போராளியாகவும் பன்முகப்பாங்குடன் திகழ்ந்த பேராசிரியரிடம் இருந்து எளிமை, நுண்மை, பகுத்தறிவுப்பார்வை, தமிழ் நெறிப் பின்புலம், பெண்ணுரிமை பேணல், உரையாளர் தவறுகளை நயம்பட மறுத்தல், ஒப்புமைக் கருத்துக்களைச் சுட்டுதல், எக்காலத்திற்கும் ஏற்ற உரை, தனியர் தாக்குதல் இன்மை, கருத்தில் வன்மை, நடையில் மென்மை, வகுத்தும் தொகுத்தும் விவரித்தல், சொல் விளக்கமும் இலக்கணக் குறிப்பும், அறிவியல் பார்வை, புரட்சி எண்ணம் என என அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றது.
இரவி இந்திரன்