திருக்குறள் தொண்டர்

பூவை.பிதயாபரனாரின் வாழ்வும் அறப்பணிகளும்

1/3

தமிழால் தமிழுக்காகவும் திருக்குறளால் திருக்குறளுக்காகவும் வாழ்ந்து அறப்பணிகள் ஆற்றிவரும் பெருமகனார்தான், திருச்சி மாவட்டம், திருத்தவத்துறை என்னும் இலால்குடியை அடுத்த பூவாளூர் என்னும் ஊரில் பிறந்து தற்போது புள்ளம்பாடியில் வாழ்ந்து வருகின்ற தயாபரனார் அவர்கள்.
ஆளாளுக்கு ஓர் ஆசை உண்டு. இவருக்கும் இவர்தம் குடும்பத்தார்க்கும் திருக்குறளைப் பரப்புவதில் மிகுந்த ஆசை. அத்தோடு அறப்பணிகள் செய்வதில் இவருக்கு மிகுந்த ஆசை.
இளமையிலேயே உள்ளத்தில் ஊறிய தமிழ்   
இவருடைய இளமைக் காலத்தில் பூவாளூரில் இவர் தந்தை முதலானவர்களால் முன்னெடுக்கப்பட்ட சைவ சித்தாந்த சங்கத்திற்கு வருகை தந்த ஏராளமான தமிழ்ச் சான்றோர்களுக்குத் தொண்டாற்றியுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரையைச் சேர்ந்த பெரும்புலவர் செகவீர பாண்டியனார், பெரும்புலவர் வச்சிரவேலு (முதலியார்), “சைவசித்தாந்த சரபம்” அருணை வடிவேல் (முதலியார்), பெரும்புலவர் நடேச (முதலியார்), தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளின் மகன் மறை.திருநாவுக்கரசு, தொல்காப்பியச் செம்மல் பேரா.கு.சுந்தரமூர்த்தி, தமிழ்ப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை. ப.சுந்தரேசனார் முதலான பற்பலருக்கு ஊழியம் செய்துள்ளார். அவர்களின் வாய்ச்சொற்களைச் செவிமடுத்துள்ளார். பெரியவர்களின் அணுக்கம், தமிழார்வத்தை இளமையிலேயே இவர் நெஞ்சில் ஊறச் செய்துள்ளது.
இந்தத் தமிழார்வம், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரின் ஆசிரியர் தியாகராச செட்டியாரின் பெயரில் தமிழ்ப்பேரவை ஒன்றை நிறுவ இவருக்கு உதவியது. பூவாளூரில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின்வழி 13 ஆண்டுகள் அறிஞர்களை அழைத்துவந்து சங்க இலக்கியங்கள் குறித்துச் சொற்பொழிவாற்றச் செய்துள்ளார். குமரிமுதல் புதுதில்லிவரை பூவாளூரின் பெயரைக் கொண்டுசேர்த்த பெருமை இவரைச் சாரும்.
இலவசமாய்த் தமிழ் வகுப்புகள்
பூவாளூரில் தமது 20ஆம் அகவையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் இலக்கண வகுப்புகளை இலவசமாய் நடத்தத் தொடங்கினார். பின்னர் திருக்குறளையும் ஏழிளந்தமிழ் எனப்படும் ஆத்திசூடி முதலான நீதி நூல்களையும் 48 ஆண்டுகளாகத் தொடர்ந்து கற்பித்து வருகிறார். இதற்காக ஏறக்குறைய 9500 மணி நேரத்தைச் செலவிட்டுள்ளார். கூடுதலாக 20 மணித்துளிகள் ஓகமும்(யோகாவும்) கற்றுத் தருகிறார்.
பெற்ற பிள்ளைகளைப் போல் மற்ற பிள்ளைகளும்
இவருடைய மகன் திருமூலநாதன் நான்கு அகவையிலேயே திருக்குறள் முழுமையும் கற்று உலகச்சாதனை படைத்தார்மேலும் 22 தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார். இந்தியாவிலும் கடல்கடந்து சென்றும் ஏராளமான மேடைகளில் பாடியும் பேசியும் கவனகங்களைச் செய்தும் பல பதக்கங்களையும் எண்ணற்ற பரிசுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு நான்கு அகவையிலேயே மதிப்புறு முனைவர் பட்டத்தைக் கலிபோர்னியாவிலுள்ள World Academy of Arts and Culture என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
இவருடைய மகள் காந்திமதி ஏழு அகவையில் திருக்குறள் முதலாகப் பல இலக்கியங்களிலிருந்து பல நூறு பாடல்களைத் தம்பியுடன் சேர்ந்து கூறும் ஆற்றல் பெற்றிருந்தார்.
தன்னுடைய பிள்ளைகளைப் போல அறிவார்ந்த பிற பிள்ளைகளும் இருக்கக்கூடுமே என்று நினைத்த இவர், தென்காசியை அடுத்த ஆய்குடியில், தன் மகன் பெயரில் ‘திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை’ என்ற ஓர் அறக்கட்டளையை 1997இல் தொடங்கி, 1330 குறள்களையும் கூறும் சிறுவர்களுக்கு உரூபா.1330-உம் திருக்குறள் செல்வன் / செல்வி விருதும் வழங்க ஏற்பாடு செய்தார். கடந்த 22 ஆண்டுகளில் தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பணமுடிப்பும் விருதும் பெற்றுள்ளனர்
கடந்த சில ஆண்டுகளாகப் பரிசுத்தொகை 2000 உரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் செலவுகளுக்காக இதுவரை யாரிடமும் எந்த நன்கொடையும் இவர் பெற்றதில்லை.
கலைவல்ல துணைவியார்
இவருடைய துணைவியார் திருமதி  நாகவல்லி அம்மையார் பன்மொழி அறிவுடையவர்1330 அருங்குறளும் மனப்பாடம் செய்தவர். இந்தியிலும் சமற்கிருதத்திலும் பட்டங்கள் பெற்றவர். முதல் 15 ஆண்டுகள் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். இவரிடம் 13ஆண்டுகள் இந்தி படித்த மாணவர்கள் அனைவரும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். பல சிறுகதைகளை இந்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.   
(தொடரும்)

-முனைவர் கி.சிவா,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
காந்திகிராம ஊரக நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் – 624 302, பேசி: 97517 79791