பள்ளிகள், கல்லூரிகளில் “எஸ் சார்’ என்று மாணவர்கள் வருகைப் பதிவைத் தெரிவித்த நிலையை மாற்றிய புகழுக்குச் சொந்தக்காரர் சி.இலக்குவனார். இவர் தமிழாசிரியர், பேராசிரியர், தமிழ் ஆய்வாளர், மொழிப் போர் தியாகி என்று பல்வேறு பன்முகங்களைக் கொண்டவர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தில் 1909-ஆம் ஆண்டு நவ. 17-இல் பிறந்த இவர், 1973-ஆம் ஆண்டு செப். 3-இல் மறைவுற்றார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆசிரியர். கவிஞர் இன்குலாப், முனைவர் கே. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்குத் தமிழ் பயிற்றுவித்த சிறப்புக்குரியவர்.
கிராமத்துத் திண்ணைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கித், தடைகள் பல கடந்து கற்றவர் இலக்குவனார். இவரது 4-ஆவது வயதில் தந்தை இறந்ததையடுத்துக், குடும்பத்தை நடத்த அண்ணனுக்கு உதவியாக மாடு மேய்த்தும், வயல்களில் வேலை செய்தும் வந்தார்.
இராசாமடம் நடுநிலைப் பள்ளியில் இலவச உணவோடு கல்வியைத் தொடர்ந்தவர். ஒரத்தநாட்டில் உயர் கல்வி, திருவையாறு அரசுக் கல்லூரியில் புலவர் பட்டம், ஆராய்ச்சி எனத் தனது படிப்பின் எல்லையை விரிவுபடுத்தியவர். திருவாரூர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குத் தமிழ் உணர்வுடன், சுயமரியாதை உணர்வையும் ஊட்டியவர் இலக்குவனார்.
திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பணியாற்றியபோது, பொதுவுடமை இயக்கத் தலைவரான இரா. நல்லகண்ணுவுக்கு ஆசிரியராக இருந்தவர்.
வகுப்புகளில் “எஸ் சார்’ என ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி, “உள்ளேன் ஐயா’ எனக் கூறவைத்துப், பின்னாளில் மற்ற இடங்களிலும் மாற்றத்துக்கு அடித்தளம் இட்டவர்.
தொல்காப்பியத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதோடு, அதற்கு ஆங்கிலத்தில் விரிவுரை எழுதிச் சிறப்பு சேர்த்தவர் இலக்குவனார். இவர், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்த நூலை, போப்பாண்டவரை சந்தித்தபோதும், “யேல்’ பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோதும் அண்ணா நினைவுப் பரிசாக வழங்கினார்.
மாணவர்களிடம் தமிழ் உணர்வை ஊட்டி புரட்சியைத் தூண்டிய குற்றச்சாட்டுகளால் அடிக்கடி கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1965-இல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, கைது செய்யப்பட்டார்.
2 ஆங்கில இதழ்கள், சங்க இலக்கியம், திராவிடக் கூட்டரசு, குறள்நெறி முதலிய பத்திரிகைகளை நடத்தியவர். எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்க் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்க்கைப் போர், கருமவீரர் காமராசர் எனும் வரலாற்று நூல்கள், திருக்குறள் எளிய பொழிப்புரை, தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம், தமிழன்னை காவியம், மாணவர் ஆற்றுப்படை, தமிழர் வாழ்வியல், துரத்தப்பட்டேன், தமிழிசைப் பாடல்கள் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும் தொல்காப்பியம் உள்ளிட்ட 9 ஆங்கில நூல்களை எழுதியவர்.
“தமிழ் மொழி வாழ்ந்தால், தமிழகம் வாழும்’ என்னும் நோக்கத்தை முன்வைத்துத் தமிழ்க் காப்புக் கழகத்தை இலக்குவனார் தொடங்கினார். இதன்மூலம், தமிழில் பேசு, தமிழில் எழுதுக, தமிழில் பெயரிடுக, தமிழில் பயில்க என்னும் 4 செயல் திட்டங்களை முன்வைத்துச் செயலாற்றியவர்.
இவ்வளவு சிறப்புகளால் தமிழ் உலகம் அறிந்த சி. இலக்குவனார் பிறந்த ஊரான வாய்மேட்டில், அவரது பெயரில், அவரின் உறவினரும், ஆசிரியருமான கு. வெற்றியழகனார் நிறுவிய “இலக்குவனார் பொருளுதவி நடுநிலைப் பள்ளி’ அடையாளமாகத் திகழ்கிறது.
கே.பி.அம்பிகாபதி, தினமணி கதிர் நாள் 17.07.2022
No comments:
Post a Comment