(உ.வே.சா.வின் என் சரித்திரம் 48 : மாயூரப் பிரயாணம் 2/2 தொடர்ச்சி)

அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2

மாயூரத்திற்கு நாங்கள் காலையில் வந்தசேர்ந்தோம். உடனே என் தந்தையார் குளியல் முதலியன செய்துவிட்டுப் பூசை செய்யத் தொடங்கினார். என் தாயார் இல்லாத காலங்களில் அவரது பூசைக்கு வேண்டிய பணிவிடைகளை நானே செய்வது வழக்கம். அவ்வாறே அன்றும் செய்தேன். அன்று புரிந்த பூசையில் என் நல்வாழ்வைக் குறித்து அவர் கடவுளைப் பிரார்த்தித்து உருகியிருக்க வேண்டுமென்று தெரிந்தது.

பூசைக்குப் பின் போசனம் செய்தோம். அப்பால் தந்தையார் சிரமபரிகாரம் பண்ணிக்கொண்டார். பிறகு பிற்பகல் மூன்று மணியளவில் நானும் அவரும் பிள்ளையவர்களைப் பார்க்கப் புறப்பட்டோம். போகும் வழியில் சிரீ மாயூரநாதர் ஆலயம் இருந்தமையின் உள்ளே சென்று சுவாமி சந்நிதானத்தில் நமசுக்காரம் செய்துவிட்டுச் சென்றோம்.

அக்காலத்தில் பிள்ளையவர்கள் மாயூரத்தில் திருவாவடுதுறை யாதீனத்துக்குரிய கட்டளை மடத்தை அடுத்து மேல்பாலுள்ள வீட்டில் இருந்து வந்தனர். நாங்கள் அவ்வீட்டிற்குச் சென்றோம்.

இருவர்

அங்கே முன்கட்டில் இருவர் இருந்தனர். அவருள் ஒருவர் விபூதி உருத்திராட்சம் தரித்துக்கொண்டு விளங்கினார். என் தந்தையாரும் நானும் அவரையே பிள்ளையவர்களென்று எண்ணினோம். மற்றொருவரிடம் மெல்ல என் தந்தையார், “பிள்ளையவர்கள் இவர்களா?” என்று கேட்டார். அவர் என் தந்தையாரது தோற்றத்தில் ஈடுபட்டு இனிய முகத்தினராகி, “இவர் திருவாவடுதுறை மகாலிங்கம் பிள்ளை” என்று கூறினார்.

உடனே தந்தையார், “மகாவித்துவான் பிள்ளையவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டனர்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் இடையே மிகவும் சிறிதளவு காலமே சென்றிருக்கும். அதற்குள் என் மனத்தில் பயமும் சந்தேகமும் இன்பமும் மாறிமாறிப் பொருதன. அங்கே பிள்ளையவர்கள் இல்லையென்பதை அறிந்தவுடன், “அவர்கள் எங்கேயாவது வெளியே சென்றிருக்கலாம்” என்ற எண்ணம் எனக்கு முதலில் தோற்றவில்லை. “அவர்கள் ஊரில் இல்லையோ? வெளியூருக்குச் சென்றிருக்கிறார்களோ! நாம் வந்த காரியம் இப்போது கைகூடாதோ? நாம் திரும்பி ஊருக்குப்போக நேர்ந்துவிடுமோ?” என்று பலவாறு எண்ணினேன்.

“இந்த வீட்டின் பின்புறத்துள்ள தோட்டத்தில் வேலை நடப்பதால் பிள்ளையவர்கள் அதைக் கவனித்துக் கொண்டு அங்கே இருக்கிறார்கள்” என்று அக்கனவான் கூறினார். அப்போதுதான் எனக்குத் தைரியம் உண்டாயிற்று.

என் தந்தையாரிடம் பேசிக்கொண்டிருந்தவர் மாயூரத்துக்கு அருகிலுள்ள குற்றாலம் என்னும் ஊரினராகிய தியாகராசமுதலியாரென்னும் செங்குந்தச் செல்வர். பிள்ளையவர்களைக்கொண்டு அந்தத் தலத்தின் புராணத்தைத் தமிழில் இயற்றுவித்தவர். அப்புராணம் திருத்துருத்திப் புராணம் என வழங்கும்.

என் தந்தையார் அங்கிருந்த மற்றொருவராகிய மகாலிங்கம் பிள்ளையைப் பார்த்து, “திருவாவடுதுறைக் கந்சாமிக் கவிராயரை உங்களுக்குத் தெரியுமா? அவர் சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார்.

“அவர் சில காலத்திற்கு முன்பு சிவபதம் அடைந்தார்” என்று அவர் விடை கூறினார்.

தந்தையார் அச்செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தார். கந்தசாமிக் கவிராயர் என் பிதாவுக்குப் பழக்கமானவர். திருவாவடுதுறை யாதீன வித்துவானாக இருந்தவர், அரியிலூர்ச் சடகோபையங்காரின் ஆசிரியர். என்னை அவரிடம் படிக்கச் செய்யலாமென்று எந்தையார் நினைத்ததுண்டு. அவருக்கும் தமக்கும் பழக்கம் உண்டென்றும் மிக்க அடக்கம் உள்ளவரென்றும் கூறி அவருடைய குணவிசேடங்களைப் பற்றித் தந்தையார் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கே பிள்ளையவர்களுடைய தவசிப்பிள்ளை(பூசைப்பணியாள்) ஒருவர் வந்தார். அவரிடம் என் தகப்பனார் பிள்ளையவர்களை நாங்கள் பார்க்க வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர் அங்ஙனமே போய்ச் சொல்ல, பிள்ளையவர்கள் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தனர்.

முதற் காட்சி

அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சியடைந்த தோற்றமும் இளந்தொந்தியும் முழங்கால் வரையில் நீண்ட கைகளும் பரந்த நெற்றியும் பின்புறத்துள்ள சிறிய குடுமியும் இடையில் உடுத்திருந்த தூயவெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோற்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பதுபோன்ற அமைதியே தோற்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப்பார்க்கும் பார்வை இல்லை; அலட்சியமான பார்வை இல்லை; தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்லமெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வைதான் இருந்தது.

அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உத்சாகம் இல்லை; சோம்பலும் இல்லை. படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே உருத்திராட்ச கண்டி விளங்கியது.

பல காலமாகத் தவம்புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப்போல நான் இருந்தேன்; அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உத்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக்கண்ணீர் துளித்தது அத்துளி இடையிடையே அப்புலவர்பிரானுடைய தோற்றத்தை மறைத்தது. சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் விலக்கிவிட்டு அவரது திருமேனியில் உலவிய என் கண்கள் அவர் முகத்திலே பதிந்துவிட்டன.

வந்த காரியம் என்ன?

அவர் வந்தவுடன் நின்றுகொண்டிருந்த எங்களை உட்காரும்படிச் சொன்னார். அந்தத் தொனியிலும் அமைதியைத்தான் நான் உணர்ந்தேன். எல்லாம் சாந்தமயமாக இருந்தன. அவரும் அமர்ந்தார்; என் தகப்பனாரைப் பார்த்து, “நீங்கள் யார்? வந்த காரியம் என்ன?” என்று விசாரித்தனர்; அவ்வார்த்தைகள் அன்புடன் கலந்து வெளிவந்தன.

“நாங்கள் பாபநாசத்துக்குப் பக்கத்திலுள்ள உத்தமதானபுரத்திலிருந்து வருகிறோம். தங்களைப் பார்க்கத்தான் வந்தோம். இவன் என் குமாரன். தமிழ் படித்து வருகிறான். சிலபேரிடம் பாடம் கேட்டிருக்கிறான். சங்கீதமும் அப்பியாசம் செய்திருக்கிறான். தங்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்று மிகுந்த ஆவல்கொண்டிருக்கிறான். தமிழைத் தவிர வேறு ஒன்றிலும் இவன் புத்தி செல்லவில்லை. எப்போதும் தங்கள் ஸ்மரணையாகவே இருக்கிறான். ஆகையால் தங்களிடம் இவனை அடைக்கலமாக ஒப்பித்துவிட்டுப் போக வந்தேன்.”

“உங்கள் பெயர் என்ன?”

“என் பெயர் வேங்கடசுப்பன் என்பர். இவன் பெயர் வேங்கடராமன்” என்றார் என் தந்தையார்.

“வேங்கடசுப்பனென்பது நல்ல பெயர். வேங்கட சுப்பிரமணியனென்பதன் மரூஉ அது. திருவேங்கட மலையில் முருகக் கடவுள் கோயில்கொண்டிருக்கிறாரென்பதற்கு இந்த வழக்கு ஓர் ஆதாரம்.”

அவர் பேச்சிலே ஒரு தனி இனிமையை நான் உணர்ந்தேன். “சாதாரணமாகப் பேசும்போதே அருமையான விசயம் வெளிவருகின்றதே!” என்று நான் ஆச்சரியம் அடைந்தேன். பிறகு பிள்ளையவர்கள் என்னைப் பார்த்து, “நீர் யார் யாரிடம் என்ன என்ன நூல்களைப் பாடங் கேட்டிருக்கிறீர்?” என்று வினவினர். நான் மெல்ல என் வரலாற்றைச் சொன்னேன்; சடகோபையங்காரிடம் படித்தது முதல் செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் காரிகைப் பாடம் கேட்டது வரையில் விரிவாக எடுத்துரைத்தேன்.

“இவருக்கு இசையில் எந்த மட்டும் பயிற்சி உண்டு?” என்று என் தந்தையாரை நோக்கி அவர் கேட்டார். சங்கீதத்தை இசையென்று அவர் சொல்லியதை நான் கவனித்தேன். தாம் எனக்குச் சங்கீதத்தை முறையாகக் கற்பித்து வந்ததை என் தந்தையார் தெரிவித்தார். அப்பால் தாம் கனம் கிருட்டிணையரிடம் குருகுலவாசம் செய்து சங்கீதம் கற்றதையும் சொன்னார்.

“இந்த ஊரிலுள்ள கோபாலகிருட்டிண பாரதியாரைத் தெரியுமோ?” என்று பிள்ளையவர்கள் கேட்டனர்.

“நன்றாகத் தெரியும். அவரும் கனம் கிருட்டிணையரிடம் சிலகாலம் அப்பியாசம் செய்ததுண்டு.”

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா.