Showing posts with label தன் வரலாறு. Show all posts
Showing posts with label தன் வரலாறு. Show all posts

Saturday, November 16, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 113: அத்தியாயம் – 75: இரண்டு புலவர்கள்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 112: அத்தியாயம் – 73: நானே உதாரணம்-தொடர்ச்சி)

இரண்டு புலவர்கள்

புலவர்கள் பலர் உள்ள புளியங்குடியென்னும் ஊரிலிருந்து இருவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க ஒரு நாள் செவந்திபுரத்திற்கு வந்தனர். அவர்களோடு வந்த கட்டைவண்டியில் பல ஓலைச் சுருணைகள் வந்திருந்தன. அவற்றையெல்லாம் திண்ணையில் இறக்கி வைத்தனர். அப்போது அத்திண்ணையிலிருந்து தேசிகர் எங்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். வந்தவர்களையும் அந்த ஏட்டுச் சுருணைகளையும் கண்டபோது, “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்” என்ற நினைவு எனக்கு உண்டாயிற்று.

அவர்கள் பாத காணிக்கை வைத்துத் தேசிகரை வந்தனம் செய்தார்கள்.

அவர்களுள் ஒருவர் செல்வம் மிகுந்த கனவான்; மற்றொருவர் தெய்வப் புலவர் என்பவர். தெய்வப் புலவரென்னும் பெயர் திருவள்ளுவருக்கு உண்டென்பதை நான் அறிந்திருந்தேன். வேறு யாருக்கும் அப்பெயர் அமைந்ததாகக் கேட்டதில்லை. தெய்வ நாயகப் புலவரென்ற பெயரை அவர் அப்படிக் குறைத்து வைத்துக் கொண்டார்.

வண்டியில் வந்த ஏட்டுச் சுருணைகள் தேசிகர் முன்னிலையில் கொணர்ந்து வைக்கப்பட்டன. “இவை என்ன?” என்று அவர் கேட்டார்.

“எல்லாம் தேவாரப் பதிகம்” என்று புலவர் சொன்னார்.

“அப்படியா! புதிதாகப் படி செய்தது போல் இருக்கிறதே.

தேவாரந்தான் அச்சில் வந்துவிட்டதே. சிரமப்பட்டு ஏட்டில் படி செய்ய வேண்டிய அவசியம் இல்லையே?”

“இந்தப் பதிகங்கள் வேறு” என்று தெய்வப் புலவர் கூறினார். பேசாமல் இருந்த கனவான் சிறிது நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“வேறு புதிய பதிகங்கள் எங்கே கிடைத்தன?” என்று ஆவலோடு தேசிகர் கேட்டார். நம்பியாண்டார் நம்பியின் உதவியால் அபயகுலசேகர மகாராசா தேவாரத்தை வெளிப்படுத்திய வரலாற்றை நாங்கள் ஞாபகப்படுத்திக் கொண்டோம். எவ்வளவோ தேவாரப் பதிகங்கள் செல்லால் அரிக்கப்பட்டுப் போயினவென்று அவ்வரலாற்றால் அறிந்திருந்தோம். அப்படி மறைந்த பதிகங்களின் படிகள் வேறு எங்கேனும் சேமிக்கப் பெற்றுக் கிடைத்திருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்குத் தோற்றியது. ஆனால் அடுத்த நிமிடம் எங்கள் ஆவல் முழுதும் சிதறியது.

“எல்லாம் பிள்ளையவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களே” என்று புலவர் அக்கனவானைச் சுட்டிக் காட்டிக் கம்பீரமாகச் சொன்னார். அந்தப் பிள்ளையவர்கள் வாயையே திறக்கவில்லை. தம்முடைய முகக் குறிப்பினால் உற்சாகத்தையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

புலவர் சொன்ன வார்த்தைகள் தேசிகரைத் திடுக்கிடச் செய்தன. அவர் சிறிது சிரித்தார். அந்தச் சிரிப்பிலே ஓரளவு கோபக் குறிப்பும் கலந்திருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக அவர் காட்டிக் கொள்ளவில்லை.அவ்விருவரும், தேசிகர் விம்மிதமடைந்து பரபரப்புடன் அந்த அரிய பதிகங்களைக் கேட்க முந்துவரென்று எண்ணியிருக்கலாம். தேசிகரிடம் அத்தகைய பரபரப்பு ஒன்றும் தோற்றவில்லை. அவர் அமைதியாக, “எங்கே, சில பாடல்களை கேட்கலாம்” என்று கட்டளையிட்டார்.

பதிகங்களின் ஆசிரியராகிய கனவான் அப்பொழுதும் வாய் திறக்கவில்லை. புலவர் தாமே பாடல்களைச் சொல்லத் தொடங்கினார்.

ஒவ்வொரு பதிகத்தையும் சொல்லி, “இன்ன பதிகத்தைப் போலச் செய்தது இது” என்று தேவாரப் பதிகத்தையும் குறிப்பித்து வந்தார். கசக்கோலை வைத்துஅளந்து பாட்டுக்குப் பாட்டு, வார்த்தைக்கு வார்த்தை மாற்றி வைத்தவை போல அவை தோற்றின. ஒன்றேனும் இரசமாக இல்லை.

நாங்கள் இடையிடையே சிறிது ஆட்சேபம் செய்வோம். அப்படிச் செய்யும்போது அந்தக் கனவானை நோக்கி அவற்றைக் கூறுவோம். அவர் தாம் விடை சொல்லாமல் புலவர் முகத்தைப் பார்த்து ஊங்காரம் செய்வார். புலவர் எதையாவது சமாதானமாகச் சொல்வார்.

தேசிகருக்கு மேலே கேட்பதில் விருப்பமில்லை. வெறுப்பே தோற்றியது. “மிகவும் சிரமமாக இருக்கும்; ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம்? போதும்” என்று சொல்லி நிறுத்தச் செய்தார். பின்னும் அவகாசம் அளித்திருந்தால் அப்புலவர் அவ்வளவு பாடல்களையும் சொல்லி எங்கள் காதைத் துளைத்திருப்பாரென்பது நிச்சயம். அந்தக் கனவானுக்குச் சரிகை வத்திரமும் பட்டும் அளித்து மறுநாளே தேசிகர் அனுப்பிவிட்டார். அவர் போன பிறகு எங்களைப் பார்த்து, “இந்த சம்மானம் எதற்காகக் கொடுத்தது, தெரியுமா?” என்று கேட்டார்.

அவர் கருத்து ஒரு வகையாகத் தெரிந்தாலும் நான் வேண்டுமென்று,

“அவர் பாடிய தேவாரப் பதிகங்களுக்காக” என்றேன்.

“சிவ சிவா! அவர் ஒரு கனவானாதலாலும் பாதகாணிக்கை வைத்தமையாலும் அவர் மனம் திருப்தியடைய வேண்டுமென்று எண்ணியே அந்தச் சம்மானம் வழங்க வேண்டியிருந்தது. தேவாரப் பதிகங்கள் எப்படி இருந்தன?” என்று கேட்டார் தேசிகர்.

“அக் கனவான் இயற்றியிருப்பரென்று தோற்றவில்லை.”புலவர் பாடிக்கொடுத்து அக்கனவானை ஆட்டி வைக்கிறார். இவரும் பொம்மை மாதிரி எல்லாவற்றையும் ஒப்புக் கொள்கிறார். இப்படியும் சிலர் உலகத்தில் இருக்கிறார்கள். இப்பாடல்களுக்கு வேறு ஏதேனும் ஒரு பெயரை வைக்கக் கூடாதோ? தேவாரப் பதிகங்களென்று கூசாமல் சொல்லுகிறாரே. இந்தக் காரியம் அநுசிதமென்று அவர்களுக்குத் தெரியவில்லையே! இனிமேல் திருவாசகம், திருக்கோவையார் இவைகளைப் பாட வேண்டியதுதான் பாக்கி!”

“ஏன்? பதினோராந் திருமுறையிலுள்ள சிவபெருமான் அருளிய திருமுகப்பாசுரங்கூட அவரே பாடி விடலாம்!” என்றேன். தேசிகர் சிரித்தார்; நாங்களும் சேர்ந்து சிரித்தோம்.

அப்பால் தேசிகர் சங்கர நயினார் கோயிலில் நடைபெறும் ஆடித் தவசு உற்சவத்தையும், திருச்செந்தூர் ஆவணி உற்சவத்தையும் தரிசித்து விட்டுத் திருப்பெருந்துறை செல்ல எண்ணிப் பரிவாரங்களுடன் புறப்பட்டார்.

வழக்கப்படியே இடையிலுள்ளவர்களால் சிறப்புகள் செய்விக்கப்பெற்றுக் குற்றாலம் சென்று தம்முடைய மடத்தில் சில நாள் தங்கி இருந்தார்.

நான் முதல் முதலாகத் திருக்குற்றாலத்தைக் கண்ட காலமாதலின் அங்குள்ள இயற்கையழகை நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றேன். அருவியின் தூய்மையும் அழகும் அங்கே வந்து கூடுவோர்களின் பக்தியும் ஆனந்தத்தை உண்டு பண்ணின. பல வருடங்களாகச் செழித்து ஓங்கி வளப்பம் குறையாமல் வளர்ந்து நின்ற மரங்களும் அவற்றிற்கு அழகையும் வளர்ச்சியையும் கொடுக்கும் சாரலும் அவ்விடத்தின் தனிச் சிறப்புகளாக இருந்தன.

திருநெல்வேலி சில்லாவுக்குப் பெருமை உண்டாக்கக் குற்றாலம் ஒன்றே போதும். அங்குள்ள காற்றும் அருவி நீரும் மனிதர் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே பரிசுத்தமாக்கும். பலவருட காலம் அங்கே வாழ்ந்திருந்தாலும் சலிப்பே ஏற்படாது.

வெள்ளைக்காரர்கள் பலர் தங்கள் குடும்பத்தோடு அருவியில் ஆடும் பொருட்டு அங்கே வந்து தங்கியிருந்தனர். திருநெல்வேலி சில்லா கலெக்டராக இருந்த பென்னிங்குடன் துரையென்பவரும் அங்கே வந்திருந்தார். அவருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் முன்பே பழக்கம் உண்டு. ஆதலால் தேசிகரது வரவை அறிந்த கலெக்டர் ஒருநாள் மடத்திற்கு வந்து அவரைக் கண்டார்.

கலெக்டருடன் ஒரு முனிசியும் வந்திருந்தார். தேசிகருடைய கட்டளையின்படி கலெக்டரைப் பாராட்டி நானும் பிறரும் சில பாடல்களை இயற்றிச் சொன்னோம். அவற்றின் பொருளை அந்த முனிசி கலெக்டருக்கு விளக்கினார். நான் இயற்றிய பாடல்களில் ஒன்றன் கடைசிப் பகுதி வருமாறு:

“,,,,,,,பென்னிங்டன் துரையே நின்னைக்

குற்றாலந் தனிற்கண்ட குதுகலமிங் கெவராலுங்

கூறொணாதே.”

ஒரு நாள் காலையில் நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் வேறு சிலரும் குற்றால மலைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வரப் போனோம். மலையின் வடபாலுள்ள சோலை வழியே செல்லும்போது எங்கிருந்தோ இனிய சங்கீத ஒலி வந்தது. நாங்கள் அது வந்த வழியே சென்றபோது ஒரு மாளிகையை அடைந்தோம். அதன் வாசலில் ஒரு சிறிய திண்ணையில் தனியாக உட்கார்ந்து ஒருவர் உரத்துப் பாடிக்கொண்டிருந்தார். தாமே பாடுபவராயின் அவ்வளவு பலமாகப் பாட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அவரை அணுகியவுடன் அவர் பாட்டை நிறுத்திவிட்டு, “நீங்கள் யார்?” என்று எங்களைக் கேட்டார். சுப்பிரமணிய தேசிகர் அங்கே வந்து தங்கியிருப்பதையும், நாங்கள் அவருடன் வந்திருப்பதையும் தெரிவித்தோம். அவர் வேம்பத்தூர்ப் பிச்சுவையருடைய தம்பி என்பதும் அவர் பெயர் சருக்கரை பாரதி என்பதும் தெரிந்தன.

நாங்கள் பேசும்போதே உள்ளே யிருந்து, “பலே! ஏன் பாட்டு நின்றுவிட்டது?” என்று அதிகாரத் தொனியோடு ஒரு கேள்வி வந்தது. “புத்தி” என்று சொல்லியபடியே ஒரு வேலைக்காரன் உள்ளேயிருந்து ஓடி வந்து பாரதியாரை விழித்துப் பார்த்தான். அவர் நடுங்கி மீண்டும் தாளம் போட்டுப் பாடத் தொடங்கினார்.

எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நீங்கள் இங்கே உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு வாருங்கள். அங்கே விரிவாகப் பேசலாம். சந்நிதானம் உங்களைக் கண்டால் சந்தோசமடையும்” என்று சொன்னோம்.

அவர் பாடிக்கொண்டே இருந்தமையால் “ஆகட்டும்” என்று சொல்ல இயலாமல் தலையை அசைத்தார். நாங்கள் விடைபெற்று வந்தோம். அன்று மாலை சருக்கரை பாரதியார் மடத்திற்கு வந்து தேசிகரைப் பார்த்தார். அவர் சொன்ன விசயங்களைக் கேட்டு நாங்கள்அவர் நிலையை அறிந்து இரங்கினோம். அவர் ஒரு சமீன்தாரோடு சில மாதம் இருந்தார். அந்த சமீன்தார் தம் மாளிகையினுள்ளே தமக்கு மிகவும் வேண்டிய ஒருவரோடு சீட்டாடிக் கொண்டிருந்தாராம். பாரதியார் அவர் காதில் படும்படி வெளியிலிருந்தபடியே பாடினாராம். உள்ளே சமீன்தாரோடு சீட்டாடினவர் ஒரு பெண் பாலாதலின் பாரதியார் உள்ளே போகக் கூடாதாம். பாட்டை நிறுத்தியது தெரிந்து சமீன்தார் அதட்டின குரலைத்தான் நாங்கள் கேட்டோம்.

இவ்விசயங்களைக் கேட்டு நாங்கள் வருந்தினோம். “வெறும் சோற்றுக்குத்தான் இப்படித் தாளம் போட வேண்டியிருக்கிறது” என்று அவர் சொன்னார். பிறகு அவர் சுப்பிரமணிய தேசிகருடன் பேசி இன்புற்றார். பல அரிய பாடல்களையும் கீர்த்தனங்களையும் பாடினார். இயலும் இசையும் அவரிடம் இசைந்திருந்தன. அவ்விரண்டிலும் விருப்பமுள்ள தேசிகர் கேட்டுப் பேருவகை அடைந்தார். அந்த வித்துவானுக்கு பதினைந்து ரூபாய் பெறுமான சரிகை வத்திர மொன்றை அளித்தார்.

பாரதியார் அவ்வளவு சம்மானத்தை எதிர்பார்க்கவே இல்லை. “இந்த மாதிரி தாதாக்களும் சம்மானமும் கிடைத்தால் என் ஆயுள் முழுவதும் அடிமையாக இருப்பேனே!” என்று அவர் கூறினார். “நீங்கள் எப்போது வந்தாலும் நமக்கு சந்தோசமே, திருவாவடுதுறைக்கும் வாருங்கள்” என்று தேசிகர் சொன்னார்.

“அருமை தெரியாத முரடர்களுடன் பழகும் எனக்கு அதிருட்டம் இருக்கவேண்டுமே! இருந்தால் அவசியம் வருவேன்” என்று கண் கலங்கியபடியே சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றார்.

(தொடரும்)

Saturday, November 09, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 112: அத்தியாயம் – 74: நான் பதிப்பித்த முதல் புத்தகம்



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 111: அத்தியாயம் – 73: நானே உதாரணம்-தொடர்ச்சி)

திருநெல்வேலியில் மேலை இரத வீதியில் திருவாவடுதுறைக்குரிய மடம்
ஒன்று உண்டு. அதனை ஈசான மடம் என்று சொல்லுவர். நானும் மகா
வைத்தியநாதையர் முதலியோரும் மதுரையிலிருந்து போன சமயம்
அவ்விடத்தில் மடாதிபதியாகச் சாமிநாத தம்பிரானென்பவர் இருந்து
எல்லாவற்வையும் கவனித்து வந்தார். நாங்கள் அவருடைய ஆதரவில் அங்கே
தங்கியிருந்து சுப்பிரமணிய தேசிகரது வரவை எதிர்பார்த்திருந்தோம்.

தேசிகர் பல சிவ தலங்களைத் தரிசித்த பிறகு திருநெல்வேலி வந்து
சேர்ந்தார். பாண்டி நாட்டிலுள்ள பிரபுக்கள் பலரும் வித்துவான்கள் பலரும்
காணிக்கையுடன் வந்து தேசிகரைக் கண்டு இன்புற்றனர். வித்துவான்கள்
தேசிகர்மீது தாமியற்றிய புதிய பாடல்களைக் கூறி சல்லாபம் செய்து
சென்றனர். சேற்றூரிலிருந்து இராமசாமி கவிராயர் முதலியவர்களும்,
இராசவல்லிபுரம் அழகிய சொக்கநாதபிள்ளை என்பவரும், ஆழ்வார்
திருநகரியிலிருந்து தேவராச பாரதி என்பவரும் வந்தனர். தேவராச பாரதி சில
செய்யுட்களைச் சொன்னார். அவற்றிலுள்ள சில விசயங்களை நான்
ஆட்சேபம் செய்து கேள்விகள் கேட்டேன். அவர் அவற்றிற்குத் தக்க
சமாதானம் சொன்னார். அதுகாறும் வேறு வித்துவான்களிடம் அவ்வளவு
தைரியமாக ஆட்சேபம் செய்யாத எனது செயலைக் கண்ட தேசிகர் பிறகு
தனியே என்னிடம், “நீர் செய்த ஆட்சேபம் உசிதமானதாக இருந்தது.
விசயங்களைத் தடைவிடைகளால் நிருணயம் செய்வது ஒரு சம்பிரதாயம்.
புலவர்களில் வாதியென்று ஒருவகையுண்டு. விதண்டாவாதம் செய்யாமல்
நியாயத்தை அனுசரித்துத் தருக்கஞ்செய்தால் கேட்பதற்கு இரசமாக இருப்பதோடு
இரு சாராருடைய அறிவின் திறமும் வெளிப்படும். சம்சுகிருதத்தில் இந்த
வழக்கம் மிகுதியாக உண்டு” என்று சொன்னார். ‘நாம் அவர் கூறியதை
மறுத்துப் பேசியது ஒருகால் தவறாக இருக்குமோ’ என்று நான் கொண்டிருந்த
சந்தேகம் அவர் கூறிய வார்த்தைகளால் நீங்கியது.

பிறகு சின்னப் பண்டாரசந்நிதியாகிய நமசிவாய தேசிகருடைய வேண்டு
கோளின்படி சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன்
கல்லிடைக் குறிச்சிக்குச் சென்றார். அவருடைய வரவை உத்தேசித்து
நூதனமான கொலு மண்டபம் ஒன்று கட்டப்பெற்றிருந்தது. திருவாவடுதுறையைப்
போலவே அழகிய சிவாலயமொன்று மடத்தைச் சார்ந்து விளங்கியது
சுவாமியின் திருநாமம் கண்வசங்கரனென்பது. ஓதுவார்கள், காரியத்தர்கள்
முதலிய பரிகரத்தாரும் திருவாவடுதுறையைப் போலவே மிகுதியாகவும், திறமை
சாலிகளாகவும் இருந்தனர். அவ்வூரில் உள்ள பெரிய அக்கிரகாரங்களில்
இருந்த அந்தணர்களிற் பெரும்பாலோர் பெருஞ்செல்வர்கள். அவர்கள்
யாவரும் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் அன்புடையவர்கள். எல்லாரும்
தேசிகருடைய வரவை அறிந்து பழ வகைகளுடன் வந்து பார்த்துச்
சென்றார்கள்.

எல்லாக் காட்சிகளையும் கண்டு நான் ஆச்சரியமடைந்து கொண்டே
இருந்தேன். அங்கே உள்ள இயற்கைக் காட்சிகளும், மனிதர்களுடைய
விசுவாசமும், வித்துவான்களுடைய பெருமையும் யாரையும் வசீகரிக்கத்
தக்கவை. தேசிகர் அடிக்கடி கல்லிடைக்குறிச்சியைப் பற்றிப் பாராட்டிப்
பேசுவதுண்டு. அவர் சின்னப்பட்டத்தை வகித்த காலத்திலே பல வருஷங்கள்
அங்கே வசித்து வந்தார். அவர் பாராட்டியது அபிமானத்தா
லெழுந்ததன்றென்பதும் அவ்விடம் அந்தப் பாராட்டுக்கு ஏற்றதேயென்பதும்
எனக்கு அப்போது தெளிவாக விளங்கின.

உடன் வந்திருந்த வேணுவனலிங்கத் தம்பிரான் செவந்திபுரம் மடத்தில்
சுப்பிரமணிய தேசிகர் எழுந்தருள்வதற்குரிய நல்ல நாள் ஒன்று பார்த்து
வைத்திருந்தார். “தேசிகர் தம் பழைய தானமாகிய கல்லிடைக்
குறிச்சியிலேயே நெடுநாள் தங்கி விடுவாரோ” என்ற கருத்து அவருக்கு
இருந்தமையால் விரைவில் செவந்திபுரத்திற்கு புறப்பட வேண்டும் என்று
வற்புத்திக் கொண்டே இருந்தார். கல்லிடைக் குறிச்சியிலே எவ்வளவு காலம்
இருந்தாலும் மிகவும் சௌக்கியமாக இருக்கலாமென்பது எனக்குத் தெரியும்.
ஆனாலும் புதிய புதிய காட்சிகளைப் பார்க்க வேண்டுமென்றே ஆசையால்
“தேசிகர் விரைவில் புறப்பட வேண்டும்” என்று நானும் எண்ணினேன்.

குறிப்பிட்ட நல்ல தினத்தில் தேசிகர் செவந்திபுரம் சென்று மடத்தில்
தங்கினார். பாண்டி நாட்டை ஆண்டு வந்த நாயக்க மன்னர்களின்
அதிகாரியாகிய செவந்தியப்ப நாயக்கரென்பவரால்
 மடத்திற்கு விடப்பட்ட
கிராமங்கள் எட்டுள் முக்கியமானது செவந்திபுரம். அதில் அவரால் நிருமிக்கப்பட்ட செவந்தீசுவரம் என்ற ஆலயம் ஒன்று உண்டு.

வேணுவனலிங்கத் தம்பிரான் அங்கே கட்டிய மடாலயத்திற்கு
‘சுப்பிரமணிய தேசிக விலாசம்’ என்று பெயர் வைத்ததோடு சிரீ சுப்பிரமணிய
தேசிகருடைய திருவுருவம் ஒன்று அமைத்துப் பிரதிட்டை செய்து பூசை
செய்யும்படி ஏற்பாடு செய்தார். தேசிகரே நேரில் எழுந்தருளிய தினத்தில்
அவருக்கு உண்டான இன்பத்துக்கு அளவில்லை. அன்றைத் தினம் ஒரு பெரிய
திருவிழாவாகவே கொண்டாடப் பெற்றது.

அந்த அழகிய மடாலயத்தைச் சிறப்பித்து வித்துவான்கள் பலர்
செய்யுட்களை இயற்றியிருந்தனர். அன்றிரவு பட்டணப் பிரவேசம் ஆனவுடன்
இரவு இரண்டு மணிக்கு மேல் எல்லாச் செய்யுட்களையும் தேசிகர்
முன்னிலையில் பல வித்துவான்களும், பிரபுக்களும் கூடியிருந்த சபையில் நான்
படித்தேன். சிலர் தாங்கள் இயற்றிய பாடல்களின் நயங்களைத் தாங்களே
எடுத்துக் காட்டினர். எல்லாம் படித்து முடிவதற்குள் பொழுது விடிந்து விட்டது.
மகா வைத்தியநாதையர் அவர் தமையனார் முதலிய பலர் பாடிய 86 பாடல்கள்
இருந்தன. நான் எட்டுச் செய்யுட்களை இயற்றினேன்.

அப்பாடல்களையெல்லாம் அச்சிட வேண்டுமென்று வேணுவனலிங்கத்
தம்பிரான் விரும்பினார். அப்படியே செய்ய ஏற்பாடு நடை பெற்றபோது
திருவாவடுதுறையில் உள்ள வேணுவனலிங்க விலாசத்தைச் சிறப்பித்த
செய்யுட்களையும் சேர்த்து வெளியிடலாமென்று பலர் கூறினர். அவ்வாறே
அவ்விரண்டு வகைப் பாடல்களும் வேறு சில பாடல்களும் சேர்த்துத்
திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக் கூடத்தில் ஒரு புத்தகமாகப்
பதிப்பிக்க பெற்றன. அந்தப் புத்தகத்தை ஒழுங்குபடுத்தி எழுதிக் கொடுத்தவன்
நானே. பிற்காலத்தில் எவ்வளவோ புத்தகங்களைப் பரிசோதித்து வெளியிடும்
வேலையில் ஈடுபட்ட நான் முதன் முதலாகப் பதிப்பித்தது அந்தப் பாடல்
திரட்டே.
 அக்காலத்தில் பதிப்பு முறை சிறிதும் எனக்குத் தெரியாது. ஆனாலும்
நான் பரிசோதித்து வெளியிட்ட முதல் புத்தகமென்ற நினைவினால்
அதனிடத்தில் எனக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வருகிறது. அதன் முகப்புப்
பக்கத்தில் இருந்தவை வருமாறு:

“ கணபதி துணை. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை
யாதீனத்தைச் சேர்ந்த செவந்திபுரத்தில் மேற்படி ஆதீனம் பெரிய காறுபாறு
வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றுவித்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு. மேற்படி திருவாவடுதுறையில் மேற்படி சுவாமிகளியற்றுவித்த கொலு மண்டபமென்னும் வேணுவனலிங்க விலாசச் சிறப்பு. இவை பல வித்துவான்களாற் பாடப்பட்டு மேற்படி ஆதீன அடியார் குழாங்களிலொருவராகிய ஆறுமுக சுவாமிகளாலும் மேற்படி திருவாவடுதுறை வேங்கட சுப்ப ஐயரவர்கள் புத்திரராகிய சாமிநாத ஐயரவர்களாலும் பார்வை யிடப்பட்டு, திருநெல்வேலி முத்தமிழாகர
அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. வெகு தான்யாண்டு ஆனிமீ.”

அப்புத்தகத்தில் வேணுவனலிங்கத் தம்பிரானுடைய சரித்திரச்
சுருக்கமும், திருவாவடுதுறை குமார சுவாமித் தம்பிரான் இயற்றிய தோத்திரச்
செய்யுட்களும், வேதநாயகம் பிள்ளை சுப்பிரமணிய தேசிகரைப் பாராட்டிப்
பாடிய பாடல்களும் சேர்க்கப்பெற்றன. பிழைத்திருத்தம் சேர்க்கவேண்டி
நேர்ந்தது. எல்லாம் சேர்ந்து 32 பக்கங்கள் ஆயின.

அந்தப் புத்தகம் அச்சிட்டு வந்த காலத்தில் நானும் பிறரும் அதை
வைத்து அழகு பார்த்துக் கொண்டேயிருந்தோம். சம்பிரதாயத்திற்காக
ஆறுமுகத் தம்பிரான் பெயரையும் சேர்த்துப் பதிப்பித்திருந்தாலும் அவர்
என்னிடமே ஒப்பித்து விட்டமையால் நான்தான் முற்றும் கவனித்துப்
பார்த்தவன். ஆதலின் எனக்கு அப்புத்தகத்தைப் பார்த்தபோதெல்லாம்
ஆனந்தம் பொங்கியது. “நான் பதிப்பித்த புத்தகம், என் பாடல்கள் உள்ள
புத்தகம்” என்ற பெருமையோடு மற்றொரு சிறப்பும் அதில் இருந்தது.
சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்புச் செய்யுட்களில் தியாகராச செட்டியார்
பாடல்கள் பதின்மூன்று இருந்தன. அதில் ஒரு செய்யுளில் என்னைப் பாராட்டி
யிருந்தார்.

துன்னுறுபே ரிலக்கணமு மிலக்கியமு
மீனாட்சி சுந்தரப் பேர்
மன்னுறுநா வலர்பெருமா னிடையுணர்ந்தெல்
லாநலமும் வாய்ந்தன் னோன்போற்
பன்னுகவி சொல்சாமி நாதமறை
யோனியற்சண் பகக்குற் றால
மென்னுமுயர் பெயர்புனைந்த கவிராசன்
முகற்பலரு மியம்பி யேத்த”

என்பது அச் செய்யுள்.

செவந்திபுரத்தில் சுப்பிரமணிய தேசிகர் நான்குமாத காலம்
தங்கியிருந்தார். தினந்தோறும் காலையில் அருகிலுள்ள பாபநாசம்சென்று தாமிரபர்ணியில் நீராடி சிரீ உலகம்மையையும் சிரீ கலியாண
சுந்தரேசுவரரையும் தரிசித்து வருவார். அவருடன் நாங்களும் செல்வோம்.
பொதிய மலை அடிவாரத்தில் அமைந்த அந்தத் தலத்தின் காட்சி
மனோரம்மியமாக இருக்கும். பாறைகளினிடையே தத்தித் தவழ்ந்து வரும்
அருவியின் அழகும் அதில் கொழுத்த பல நிறமுள்ள மீன்கள் பளிச்சுப்
பளிச்சென்று மின்னி விளையாடும் தோற்றமும் மெல்லென்ற காற்றும் நம்மை
மறக்கச் செய்யும். அங்கே யாரும் மீனைப் பிடிக்கக்கூடாது. அதனால்
அங்குள்ள மீன்கள் சிறிதும் அச்சமின்றி நீராடுவோர்கள் மீது மோதி
விளையாடும்.

பாபநாசம் கோயிலில் எண்ணெய்ச் சாதமென்ற ஒருவகைப் பிரசாதமும்
அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படும். எங்கள் காலை நேர இளம்
பசியைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அப்பிரசாதத்தை எங்களுக்கு
அளிக்கும்படி தேசிகர் ஏற்பாடு செய்திருந்தார். பொதிய மலையிலிருந்து
வேகமாய் இறங்கி ஓடி வரும் தாமிரபரணியின் தெளிந்த நீரில் மீனினங்கள்
எங்களைச் சுற்றிச் சுற்றி வர, அவைகளுண்ணும்படி அன்னத்தை இறைத்து
நாங்கள் அப்பிரசாதத்தை உண்ணும்போது உண்டான இன்பத்துக்கு இணையாக
எதைச் சொல்லலாமென்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

(தொடரும்)

Saturday, November 02, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 111: அத்தியாயம் – 73: நானே உதாரணம்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 110: அத்தியாயம் – 72: நான் பெற்ற சன்மானங்கள்-தொடர்ச்சி)

சுப்பிரமணிய தேசிகர் எழுபொற் கோட்டை வழியாகக் காளையார் கோயில் முதலிய தலங்களைத் தரிசனம் செய்து கொண்டு மதுரைக்கு அருகிலுள்ள திருப்பூவணத்தை அடைந்து அங்கே பரிவாரங்களுடன் தங்கினார். பிள்ளையவர்களிடம் பாடங் கேட்ட காலங்களிலும், தேவாரம், தலபுராணங்கள் முதலியவற்றைப் படித்த காலங்களிலும் பல சிவத்தலங்களுடைய வரலாறுகளை நான் அறிந்திருந்தேன். பிள்ளையவர்களுக்கும் அவரோடு பழகியவர்களுக்கும் சிவத்தல தரிசனத்தில் ஆவல் உண்டு. நான் அத்தகைய சமூகத்திற் பழகியவனாதலின் இடையிடையே சிவத்தல தரிசனம் கிடைக்கும் போதெல்லாம் அந்தத்தலங்களைப் பற்றிய செய்திகளை ஞாபகப்படுத்திக் கொள்வதோடு புதிய விசயங்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்வேன்.

சோழ நாட்டைக் கடந்து பாண்டிநாட்டெல்லையில் புகுந்தவுடன் சுப்பிரமணிய தேசிகர், “இது வரையில் சோழ நாட்டைத் தான் நீர் பார்த்திருக்கிறீர். இனிமேல் பாண்டி நாட்டின் வளத்தைக் காணலாம்” என்றார். அப்படிச் சொல்லும்போது அவர் குரலில் ஓர் உற்சாகம் இருந்தது. தம் சொந்த நாடாகிய பாண்டி நாட்டை அடையும்போது அவருக்கு உற்சாகம் இருப்பது இயல்பு தானே?

திருவிளையாடற் புராணத்தைப் பல முறை படித்தும் பிரசங்கம் செய்தும் ஈடுபட்ட நான் பாண்டி நாட்டின் பெருமையை நன்றாக அறிந்திருந்தேன். அந்நாட்டு எல்லையை அணுகிவிட்டோமென்பதைக் கேட்டவுடன் எனக்கும் அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று. திருப்பூவணத்திற்கு வந்தபோது அந்தத்தலத்தையும் வைகை நதியையும் கண்டு என் கண்கள் குளிர்ந்தன. பொன்னனையாளெனும் கணிகையினுடைய முத்தத்தை ஏற்றுக் கொண்டு கன்னத்தில் தழும்புற்ற பெருமானைத் தரிசித்தேன். மதுரைத் தலத்தைக் காண வேண்டுமென்ற விருப்பம் வர வர மிகுதியாயிற்று.

சுப்பிரமணிய தேசிகர் திருப்பூவணத்தில் தங்கியிருப்பதை அறிந்து மதுரையில் இருந்த கனவான்களும், மதுரை ஆலயத் திருப்பணிச் செட்டியார்களும் அங்கே வந்து தேசிகரைக் கண்டு வரவேற்று முகமன் கூறிவிட்டுச் சென்றார்கள்.

பிறகு தேசிகர் அங்கிருந்து புறப்பட்டு ஒருநாள் காலையில் மதுரையைச் சார்ந்த வண்டியூர்த் தெப்பக் குளத்தின் மேல் கரையிலுள்ள கோயிலில் பரிவாரங்களுடன் தங்கினார். அவ்விடத்தில் ஆதிமூலம்பிள்ளை என்பவர் பலவிதமான அலங்காரங்கள் செய்து மிக்க விமரிசையுடன் பூசை முதலியவற்றைச் செவ்வனே நடத்தி மகேசுவர பூசையும் செய்வித்து ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு இரண்டு வேளையும் அன்னமளித்தார். அவர் பெரிய கண்டிராக்டர்; தருமசிந்தை மிக்கவர்; குரு பக்தியும் சிவ பக்தியும் நிரம்பியவர்; மதுரை வாசிகளுக்கு அவரிடத்திற் பேரன்பு இருந்தமைக்கு அடையாளமாக, ‘ஆதிமூலம் பிள்ளைத் தெரு’ என்று ஒரு தெருவிற்குப் பெயர் வைத்திருக்கின்றனர்.

மதுரை நகரத்திலிருந்த கலெக்டர் ஆபீசு சிரசுதேதாராக இருந்தவரும் கௌரவம் மிக்கவருமாகிய வேங்கடசாமி நாயுடு என்பவரும், வேறு சில கனவான்களும் மறு நாட் காலையில் வந்து விமரிசையுடன் தேசிகரை அழைத்துச் சென்றனர். வையையின் தென்கரையில் தேசிகர் தங்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த ஒரு சத்திரத்தில் அவர் இறங்கினார். அதனைச் சுற்றி வெகு தூரம் வரையில் கொட்டகைகளும் பந்தல்களும் போட்டு அலங்கரிக்கப் பெற்றிருந்தன.

ஆயிரக்கணக்கான பேர்கள் உண்ணுவதற்குப் போதுமான அரிசி முதலிய பொருள்கள் திருவாவடுதுறையிலிருந்து வண்டி வண்டியாக வந்து குவிந்தன. வையையின் இரு கரைகளிலும் நெருக்கமாக உள்ள தென்னஞ்சோலைகளும் அந்நதியில் விசாலமான மணற்பரப்பும் நீரோட்டமும் கண்களைக் கவர்ந்தன.

அப்பொழுது அங்கே சிறு வழக்கு நீதிமன்ற நீதிபதியாக இருந்த சர். டி, முத்துசாமி ஐயர், நீதிபதி முத்துசாமி செட்டியார், துணை கலெக்டர் சூரிய மூர்த்தியா பிள்ளை, திருவனந்தபுரம் திவானாக இருந்த திருமங்கலம் முன்சீபு கிருட்டிணசாமிராவு முதலிய பிரபலங்கள் தேசிகரால் அழைக்கப்பட்டு வந்து அவரோடு சல்லாபம் செய்து சென்றார்கள். முத்துசாமி ஐயருடைய புகழ் அப்பொழுதே ஓரளவு பரவியிருந்தது. அவரை நான் கண்டபோது அவரது ஆடம்பரமில்லாத தோற்றமும், மெல்லென்ற வார்த்தைகளும் எனக்கு வியப்பை உண்டாக்கின.

கல்லிடைக் குறிச்சியிலிருந்து சின்னப் பண்டார சந்நிதியாகிய சிரீ நமசிவாய தேசிகர் வந்து சேர்ந்தார். திருவையாற்றிலிருந்து மகா வைத்தியநாதையரும் அவர் தமையனாரும் வந்து தேசிகரோடு தங்கியிருந்தனர். தேசிகர் என்னை அவர்களிடம் ஒப்பித்து, “இவரைக் கவனித்துக் கொள்ளுங்கள். யாத்திரை முழுவதும் நம்முடன் இருக்கவேண்டும்” என்றார். அவர்களுடைய வரவினால் நானும் பெரு மகிழ்ச்சியை அடைந்தேன்.

மகா கும்பாபிசேகத்திற்காக வந்திருந்த சனக்கூட்டம் கணக்கில் அடங்காது. காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள சமீன்தார்களும், மிட்டாதார்களும், தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் வந்து கூடியிருந்தனர். தமிழ்நாட்டின் பல பாகங்களில் உள்ள பிரபுக்களெல்லாம் அந்நகரத்தில் ஒருங்கே சேர்ந்திருந்தனர். அவர்களிற் பெரும்பாலோர் வந்து சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சென்றனர். அவர்கள் வரும்போதெல்லாம் உடனிருந்து பாடல் சொல்லும் வேலையில் நான் ஈடுபட்டிருந்தேன்.

கும்பாபிசேகம் உரிய காலத்தில் மிக்க சிறப்போடு நடை பெற்றது. சுப்பிரமணிய தேசிகர் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தார். நானும் சென்று தரிசித்தேன். அக்கூட்டத்தில் அவ்வாலயத்தின் உண்மை அழகைத் தெரிந்து மகிழச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அப்போது தான் முதன் முதலாக மணி ஐயரை நாங்கள் பார்த்தோம். தேசிகரும் அவரைச் சேர்ந்தவர்களும் சிரம மின்றிக் கும்பாபிசேக தரிசனம் செய்வதற்கு அவர் உடனிருந்து உதவி புரிந்தார். அவரைக் கண்ட அந்தச் சில நிமிடங்களில் அவருடைய சுறுசுறுப்பையும், உபகாரச் சிந்தையையும், சனங்களுக்கு அவர்பால் இருந்த மதிப்பையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

கும்பாபிசேக தரிசனத்திற்குப் பின் தேசிகர் தம் விடுதிக்குச் சென்றார். மணி ஐயரைக் கண்டது முதல் அவரோடு சில நேரம் பேசி இன்புற வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. ஆதலால் தக்க மனிதரிடம், “தங்களைப் பார்த்துப் பேசிப் பழக வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருக்கிறது. நாம் அங்கே வந்து பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் தங்களைக் காண வேண்டுமென்ற ஞாபகத்தோடேயே இருக்கிறோம்” என்று சொல்லியனுப்பினார். அதைக் கேட்டவுடன் மணி ஐயர், “நமக்கும் அவர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு ஒரு குறிப்பிட்ட வேளையில் வருவதாக முன்னமே தெரிவித்து அவ்வாறே தேசிகருடைய விடுதிக்கு வந்தார். அந்த மேதாவியைப் பார்க்க வேண்டுமென்றும், அவரது பேச்சைக் கேட்கவேண்டுமென்றும் எண்ணிப் பலர் கூடியிருந்தனர். தேசிகர் தக்க பிரதிநிதியை அனுப்பி அவரை எதிர்கொண்டழைக்கச் செய்து வரவேற்று உட்காரச் செய்து சம்பாசணை செய்யத் தொடங்கினர்.

மதிநலம் படைத்த மணி ஐயரும், சிறந்த இரசிகராகிய சுப்பிரமணிய தேசிகரும் பேசும்போது அப்பேச்சில் இனிமை பொங்கித் ததும்பியது. அங்கே கூடியிருந்தவர்கள் விழித்த கண் மூடாமல் காதை நெரித்துக்கொண்டு அவர்களைக் கண்டும், அவர்கள் பேச்சைக் கேட்டும் மகிழ்ந்தனர். மணி ஐயர் விசயங்களைத் துணிவாகவும். வெடுக்கு வெடுக்கென்றும் எடுத்துச் சொன்னபோது அவருடைய தைரியமும் சத்தியத்தில் அவருக்கிருந்த நம்பிக்கையும் புலனாயின. தேசிகர் மிகவும் நயமான மெல்லிய இனிய சொற்களால் அப்பெரியாரைப் பாராட்டினார். சமசுகிருத சுலோகங்களையும், தமிழ்ப் பாடல்களையும் சொல்லிச் சந்தோசமுறச் செய்தார். மணி ஐயர் இலக்கியச் சுவையை நுகரும் இயல்பினராதலால் அவற்றைக் கேட்டு அனுபவித்தார்.

அப்பெருங் கூட்டத்தில் மதுரை மாநகரத்திற்கு உயிராக விளங்கிய மணி ஐயருடைய முன்னிலையில் ஏதேனும் பாடல் சொல்லும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்போது அருகிலிருந்த வேணுவனலிங்கத் தம்பிரான் ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கினார். பேச்சுக்கிடையில், “மாயூரம் முன்சீபு வேதநாயகம் பிள்ளையவர்கள் மகா சந்நிதானத்தின் விசயமாகப் பல பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். மணி ஐயரும், “எங்கே, அந்தப் பாடல்களைக் கேட்கலாமே” என்று சொல்லவே, நான் என் உத்தியோகத்தைப் பார்க்கத் தொடங்கினேன். வேதநாயகம் பிள்ளை கூறிய பல பாடல்களைச் சொல்லி அவற்றிற்குரிய சந்தர்ப்பத்தையும் பொருளையும் எடுத்துரைத்தேன். “இந்த மாதிரியான மகாசபையை வேறு எங்கே பார்க்கப் போகிறோம்” என்ற நினைவினால் எனக்கு வர வர ஊக்கம் அதிகமாயிற்று.

தடையில் கொடைச்சுப் பிரமணி

     யையநிற் சார்ந்தவர்கொள்

கொடையை அவர்சொல வேண்டுங்

    கொலோவவர் குட்சிசொலும்

இடைசொலுங் கண்டமுங் காதுஞ்

    சொலுமிறு மாப்புடைய

நடைசொலுங் கையிற் குடைசொலும்

    வேறென்ன நான்சொல்வதே

என்னும் செய்யுளைக் கூறிவிட்டு விரிவாகப் பொருள் சொன்னேன். பிறகு, “இப்பாடலில் சந்நிதானத்தின் கொடை வகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பொருளைத் தனியே பெற்றவர்கள் பலர் உண்டு. எல்லாவற்றையும் ஒருங்கே பெற்றதற்கு உதாரணம் நானே. நான் மடத்து அன்னமே பல வருடங்களாக உண்டு வருகிறேன். இடையில் கட்டிக்கொண்டிருப்பதும் என் பெட்டியில் இருப்பதும் இவர்கள் அளித்த வத்திரங்களே கழுத்தில் உள்ள கௌரீசங்கரகண்டி இவர்கள் வழங்கியதே, காதில் அணிந்து கொண்டுள்ள கடுக்கனும், கையில் அணிந்திருக்கும் மோதிரமும் இவர்கள் கொடையே. ஆகவே என் குட்சியும் (வயிறும்) இடையும் கண்டமும் காதும் கையும் சந்நிதானத்தின் கொடையைச் சொல்லும், ஆனால் வேதநாயகம் பிள்ளையவர்கள் இந்தப் பாட்டில் சொல்லியிருக்கிற இறுமாப்புடைய நடையும் கைக்குடையும் என்னிடம் இல்லை; அவற்றை நான் விரும்பவும் இல்லை” என்று சொல்லி நிறுத்தினபோது சபையினர் யாவரும் சந்தோசத்தை ஆரவாரத்துடன் தெரிவித்தனர். “ஒரு கிறித்தவ கனவான் இவ்வளவு தூரம் பாராட்டியிருக்கிறாரே!” என்று பலர் வியப்புற்றனர். ஏதோ பெரிய காரியமொன்றைச் செய்து நிறைவேற்றியது போன்ற திருப்தியை நான் அடைந்தேன்.

நான் அந்தச் சபையில் அவ்வாறு பிரசங்கம் செய்ததைச் சுப்பிரமணிய தேசிகர் கேட்டுப் புன் சிரிப்பினால் தம்முடைய உவகையை வெளிப்படுத்தினர். அவர் புன்னகை அவரது சந்தோசத்தை மாத்திரம் வெளிப்படுத்தியதாக நான் அப்போது எண்ணினேன். அதில் வேறு குறிப்பு இருந்ததென்றும், ‘இறுமாப் புடைய நடையும் குடையும்’ இல்லை என்று நான் கூறியது அவர் உள்ளத்திற் பதிந்திருந்ததென்றும் அப்போது எனக்குத் தெரியவில்லை; பிறகு தெரிய வந்தது.

மணி ஐயர் விடை பெற்றுக்கொண்டு சென்றார். சுப்பிரமணிய தேசிகர் சில தினங்கள் அங்கே தங்கியிருந்தார். அப்பால் என்னையும் மகா வைத்தியநாதையர் முதலியவர்களையும் புகைவண்டி மார்க்கமாகத் திருநெல்வேலி சென்று இருக்கும்படியும், தாம் சாலை மார்க்கமாக வருவதாகவும் சொல்லி எங்களை அனுப்பினார். நாங்கள் அவ்வாறே திருநெல்வேலி போய்ச் சேர்ந்தோம்.

(தொடரும்)

Saturday, October 26, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 110: அத்தியாயம் – 72: நான் பெற்ற சன்மானங்கள்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 109 – அத்தியாயம்-71, சிறப்புப் பாடல்கள்-தொடர்ச்சி)

முன் குறிப்பிட்ட தட்சிணம் பெரிய காறுபாறு வேணுவன லிங்கத் தம்பிரான் அம்பா சமுத்திரத்துக்கு அருகில் உள்ள செவந்திபுரத்தில் அழகான பெரிய மடம் ஒன்றைக் கட்டுவித்து, அதற்கு, “சுப்பிரமணிய தேசிக விலாசம்” என்று பெயரிட்டார். அப்பால் அவர் ஒரு முறை திருவாவடுதுறைக்கு வந்து சுப்பிரமணிய தேசிகரிடம், “சந்நிதானம் திருக்கூட்டத்துடன் செவந்திபுரத்துக்கு எழுந்தருளிச் சில தினங்கள் இருந்து கிராமங்களையும் பார்வையிட்டு வரவேண்டும்” என்று விண்ணப்பம் செய்து கொண்டார். அதே சமயமாகிய ஈசுவர வருடம் தை மாதத்தில் மதுரை சிரீ மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்துக்கு அமராவதிபுதூர் வயிநாகரம் குடும்பத்தினர் மகா கும்பாபிசேகம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அக்கும்பாபிசேகத்துக்கு வந்து சிறப்பிக்க வேண்டுமென்று அவர்களும் சுப்பிரமணிய தேசிகரைக் கேட்டுக் கொண்டனர்.

தம்பிரானும், தன வைசியர்களும் செய்துகொண்ட வேண்டுகோளை ஏற்றுத் தேசிகர் மதுரைக் கும்பாபிசேகத்துக்குப் போய் அங்கிருந்து தட்சிணத்தில் யாத்திரை செய்து செவந்திபுரத்திற்கும் போகலாமென்று நிச்சயித்தனர். அதற்குத் தக்கபடி ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பெற்றன.

போகும் வழியில் ஆங்காங்குள்ள கனவான்களுக்குத் திருமுகங்கள் அனுப்பப்பட்டன. சிலர் திருவாவடுதுறைக்கே வந்து சுப்பிரமணிய தேசிகரது தட்சிண யாத்திரையில் கலந்து கொள்ள எண்ணினர். கல்லிடைக் குறிச்சியிலிருந்த சின்னப்பட்டம் சிரீ நமசிவாய தேசிகருக்கு, மதுரையில் வந்து சேர்ந்து கொள்ளும்படி சுப்பிரமணிய தேசிகர் திருமுகம் அனுப்பினார். யாத்திரைக் காலத்தில் வழியில் வேண்டிய சௌகரியங்களுக்குரிய பொருள்களும் உடன் வருவதற்குரிய பரிவாரங்களுக்கு வேண்டிய வசதிகளும் அமைக்கப்பெற்றன.

“நாம் தடசிண யாத்திரை செய்யப் போகிறோம். அங்கங்கே பல பிரபுக்களும் வித்துவான்களும் வந்து வந்து சல்லாபம் செய்வார்கள். நீரும் உடன் வரவேண்டும். மகா வைத்தியநாதையரும் அவர் சகோதரரும் மதுரைக்கு வந்து சேர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். நீர் நம்முடன் வருவதில் உம்முடன் தாயார் தகப்பனாருக்கு வருத்தம் இராதே? அவர்களை மிகவும் சாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளும்படி இங்கே உள்ளவர்களிடம் சொல்லிப் போவோம்” என்று தேசிகர் என்னை நோக்கிக் கூறினார். எனக்குப் புதிய ஊர்களையும் புதிய மனிதர்களையும் பார்ப்பதற்கு அளவற்ற ஆவல் இருந்தது. யாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடைபெறும் போது, “நம்மையும் உடனழைத்துச் செல்வார்களோ, மாட்டார்களோ” என்ற சந்தேகம் எனக்கு உண்டு. தேசிகர் சொன்ன வார்த்தைகளால் அந்தச் சந்தேகம் நீங்கியதுடன் சந்தோசமும் உண்டாயிற்று. “என் தந்தையாருக்கு யாதோர் ஆட்சேபமும் இராது” என்று நான் தேசிகரிடம் தெரிவித்தேன்.

ஆனால், இவ்விசயத்தை என் பிதாவிடம் சொன்னபோது அவர் சிறிது கலங்கினார். அப்போதுதான் புதியதாக மதுரைக்குப் புகை வண்டி செல்லத் தொடங்கியது. பிரயாணத்தின் போது நானும் என்னைப் போன்றவர்களும் புகை வண்டியில் பிரயாணம் செய்ய நேரும். என் தந்தையார் அதில் ஏறமாட்டார். அதனால் அவரையும் உடனழைத்துச் செல்வதென்பது இயலாத காரியம். இந்நிலையில் அவரைத் திருவாவடுதுறையிலே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியது அவசியமாயிற்று.

என்னைப் பிரிந்து இருப்பதற்கு அவருக்கு மனம் வரவில்லை. “உன்னிடம் உள்ள மரியாதை காரணமாகவே இங்குள்ளவர்கள் என்னிடமும் பிரியமாக இருக்கிறார்கள். நீ இங்கே இல்லாதபோது எனக்குத் தனி மதிப்பு என்ன இருக்கிறது?” என்று அவர் கூறினார். “அப்படியன்று. இங்கே மடத்தில் பூசை முதலியவற்றைக் கவனிப்பதற்காகத் தக்கவர்கள் இருப்பார்கள். அவர்கள் மனிதர்களுடைய தராதரம் தெரிந்தவர்கள். நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். காறுபாறு தம்பிரான் ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்” என்று சமாதானம் சொன்னேன். தேசிகரும் என் தந்தையாரை வருவித்துத் தைரிய வார்த்தைகளைக் கூறினார்.

தைப்பூசத்திற்கு முதல் நாள் தேசிகர் பரிவாரங்களுடன் யாத்திரையைத் தொடங்கினார். திருவிடைமருதூரில் அப்பொழுது பிரம்மோத்சவம் நடந்தது. அங்கே போய்த் தைப்பூசத்தன்று திருத்தேரை நிலைக்குக்கொண்டு வரச்செய்தார். என் பிராயணத்திற்கு வேண்டிய கித்தான்பை ஒன்றையும் பட்டுத் தலையணையோடு கூடிய சமக்காளம் ஒன்றையும் அவர் எனக்கு அங்கே உதவினார்.

பிறகு என்னைச் சமீபத்தில் வந்து உட்காரச் செய்து, “நாம் யாத்திரை செய்யும் இடங்களிலெல்லாம் உமக்குத் தொந்தரவு கொடுக்க நேரும். தமிழபிமானிகளாகிய கனவான்கள் பலர் வருவார்கள். அவர்களுக்குத் திருப்தி உண்டாகும்படி தமிழ்ப் பாடல்களைச் சொல்ல வேண்டியது உமது கடமை” என்று கூறினார். “அப்படிச் செய்வது என் பாக்கியம்” என்றேன் நான்.

அவர் கட்டளையின்படி உடனே ஒரு தம்பிரான் கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றைக் கொணர்ந்து என் கழுத்திலே போட்டு ஒரு சால்வையை என் மேல் போர்த்தினார். நான் அச்சமயத்தில் ஆனந்த மிகுதியால் தம்பித்துப் போனேன்; மயிர்க் கூச்செறிந்தது “இப்படியே திருவாவடுதுறைக்குப் போய்த் தந்தையாரிடம் விடை பெற்றுக் கொண்டு இங்கு வந்து விடும். நம்மோடு புறப்படலாம்” என்று தேசிகர் சொல்லி என்னைத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார்.

யாத்திரையில் எனக்குப் பலவகை நன்மைகள் உண்டாகுமென்பதற்கு அந்த சம்மானங்கள் அறிகுறியாக இருந்தன. என் தந்தையாரிடம் முன்பே பிரயாண விசயத்தைத் தெரிவித்திருந்தாலும் நான் பெற்ற சிறப்புகளை அவர் பார்த்து இன்புற வேண்டுமென்ற நினைவோடுதான் திருவாவடுதுறைக்குப் போய் வரும்படி தேசிகர் கூறினாரென்பதை நான் உணர்ந்தேன். திருவாவடுதுறை சென்று கண்டியையும் சால்வையையும் என்தாய் தந்தையருக்கு காட்டியபோது அவர்கள் அடைந்த சந்தோஷம் சாமான்யமானதன்று.

பிறகு விடை பெற்றுத் திருவிடைமருதூர் வந்து சேர்ந்தேன். தேசிகர் பரிவாரங்களுடன் புறப்பட்டார். எனக்கும் உடன் வந்த வேறு பிராமணர்களுக்கும் இரண்டு வண்டிகள் ஏற்படுத்திச் சமையலுக்கு இரண்டு பிராமணப் பிள்ளைகளைத் திட்டம் செய்து எங்களிடம் ஒப்பித்தனர். தேசிகருடைய பரிவாரங்களுடன் சேர்ந்து நாங்களும் பிரயாணமானோம்.

இடையில் ஆலங்குடியில் தங்கி அப்படியே முல்லைவாயில் என்னும் ஊருக்குச் சென்று இரவு அங்கே இருந்து மறுநாட் காலையில் மன்னார்குடியை அடைந்தோம். சுப்பிரமணிய தேசிகருடைய வரவை அறிந்து அங்கங்கே இருந்த செல்வர்கள் தக்கபடி உபசாரம் செய்து பாராட்டினார்கள். மன்னார்குடியில் தேசிகருக்காகவே நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த சத்திர மொன்றில் அவர் தங்கினார். துணை ஆட்சியராக(டிப்டி கலெக்டரா)யிருந்த இராயர் ஒருவர் அங்கே வந்து, “பிட்சை முதலியன சரியாக நடக்கின்றனவா?” என்று விசாரித்து விட்டுச் சென்றார். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி, மற்ற மதத்தினரும் அரசாங்க உத்தியோகத்தர்களும் தேசிகருடைய பெருமையை உணர்ந்து வந்து வந்து பார்த்துப் பேசி இன்புற்றார்கள்.

மன்னார்குடியில் முன்சீபாக இருந்தவரும் என் தந்தையாருடைய நண்பருமாகிய வேங்கடராவு என்பவர் தேசிகரைப் பார்க்க வந்தார். அவர் கும்பகோணத்திலிருந்த காலத்தில், தமிழ் படிப்பதனால் பிரயோசனம் ஒன்றும் இல்லையென்றும், இங்கிலீசு படித்தால்தான் நன்மை உண்டென்றும் என் தந்தையாரிடம் வற்புறுத்திக் கூறினவர். அவர் தேசிகருடனிருந்த என்னைக்கண்டு மிக்க மகிழ்ச்சியை அடைந்ததோடு, “இவரை எனக்கு நன்றாகத் தெரியும். இளமை தொடங்கியே தமிழ் படிக்க வேண்டுமென்ற ஆவல் பலமாக இவருக்கு உண்டு. இவரைப் பாதுகாக்க வேண்டும்” என்று தேசிகரிடமும் சொன்னார்.

தேசிகரை யாரேனும் கனவான்கள் பார்க்க வந்தால் பல விதமான விசயங்களைப் பற்றிப் பேசுவார்கள். இடையிடையே நான் தமிழ்ப் பாடல்களைச் சொல்லிப் பிரசங்கம் செய்வேன். சுப்பிரமணிய தேசிகர் விசயமாகப் பிள்ளையவர்களும் வேதநாயகம் பிள்ளையும் இயற்றிய செய்யுட்களைச் சொல்லாமல் இரேன்.

மன்னார்குடியில் தங்கிய போது தேசிகர் என் காதில் இருந்த பழைய கடுக்கனைக் கழற்றச் செய்து ஐம்பது உரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அரும்பு கட்டிய புதிய சிவப்புக்கல் (கெம்பு) கடுக்கனை அணிவிக்கும்படி கத்தூரி ஐயங்காரென்ற ஒருவரிடம் உத்தரவு செய்தார். பழைய கடுக்கனுக்கு ஏற்றபடி என் காதுகளில் சிறிய துவாரங்களே இருந்தன. அவற்றிற் பெரிய கடுக்கனைப் போட்டபோது எனக்கு மிகவும் நோவு உண்டாயிற்று. “பெண்கள் கைவளை, நகைகள் முதலியவற்றைச் சந்தோசத்தோடு போட்டுக் கொள்கிறார்களே; அவர்களுடைய பொறுமையைக் கண்டு ஆச்சரியப் படவேண்டும்!” என்று எண்ணினே். காதில் இரத்தம் வர வர அக்கடுக்கன்களை ஐயங்கார் போட்டு விட்டார். “பிறகு போட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லியும் அவர் விடவில்லை.

மன்னார்குடியிலிருந்து புறப்பட்டுச் செல்லுகையில் பட்டுக் கோட்டையில் தேசிகர் எனக்கு ஒரு மோதிரம் வழங்கிக் கையில் அணிந்து கொள்ளச் செய்தனர். அப்படியே திருப்பெருந்துறைக்குச் சென்று சில தினங்கள் தங்கினோம். திருப்பெருந்துறையில் அப்போது ஆலய விசாரணை செய்து வந்த சுப்பிரமணியத் தம்பிரான் தேசிகருடைய விசயத்துக்காக விசேடமான ஏற்பாடுகள் செய்து மிகவும் கவனித்துக் கொண்டார்.

அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுகையில் இடையே ஓரிடத்தில் சுப்பிரமணிய தேசிகரது பல்லக்குச் சற்று விரைந்து சென்றது. நாங்கள் பின்தங்கிச் செல்லலானோம். சிறிது தூரம் போனபோது தேசிகர் ஓர் ஓடையின் மணலில் பல மரங்கள் செறிந்த நிழற்பரப்பில் தங்கியிருப்பதைக் கண்டோம். அவரைச் சுற்றிலும் பல புதிய கனவான்கள் இருந்தார்கள். தாம்பாளங்களில் பல வகையான பழங்களும், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு முதலியனவும் அவரருகில் வைக்கப் பெற்றிருந்தன. ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் பணம் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

நாங்கள் அங்கே இறங்கித் தேசிகரை அடைந்தபோது அவர் அங்குள்ள சில கனவான்களைச் சுட்டிக் காட்டி, “இவர்கள், இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் மீது ஒரு துறைக்கோவை பாடி ஒவ்வொரு கவிக்கும் ஒவ்வொன்றாக நானூறு பொன் எலுமிச்சம்பழம் பரிசு பெற்ற அமுத கவிராயருடைய பரம்பரையினர். இந்த இடம் அந்தக் கோவைக்காக அமுத கவிராயருக்குச் சேதுபதி அரசரால் விடப்பட்ட ‘பொன்னங்கால்’ என்னும் கிராமம். இவர்கள் இப்போது திருமகள் விலாசம் பெற்றுச் சௌக்கியமாக இருக்கிறார்கள்” என்று கூறிப் பழக்கம் செய்வித்தனர்.

பிரயாண காலத்தில் எப்பொழுதும் சுப்பிரமணிய தேசிகரோடே இருந்தமையால் அவருடைய அருங்குணங்களை நன்றாக அறியும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அப்பொழுதப்பொழுது வேடிக்கையாகப் பேசி உத்சாக மூட்டுவார். அங்கங்கேயுள்ள தலங்களைப் பற்றிய வரலாறுகளையும், வேறு சரித்திர விசயங்களையும் எடுத்துச் சொல்லுவார். ஆகாரம் முதலிய சௌகரியங்களில் சிறிதும் குறைவு நேராத வண்ணம் அடிக்கடி விசாரித்து வருவார்.

இதனால் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாகப் பொழுது போயிற்று. புதிய புதிய இடங்களையும் புதிய புதிய மனிதர்களையும் பார்க்கும் போது மனம் குதூகலமடைந்தது. கண்டியும், சால்வையும், கடுக்கனும், மோதிரமுமாகிய சம்மானங்களும், தேசிகருடைய அன்பு கனிந்த வார்த்தைகளும், அங்கங்கே கண்ட இனிய காட்சிகளும் என்னை ஒரு புதிய மனிதனாகச் செய்தன. நான் சந்தோசத்தால் பூரித்தேன்.

(தொடரும்)