Sunday, December 08, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 115: அத்தியாயம் 77- சமயோசிதப் பாடல்கள்





(உ.வே.சா.வின் என் சரித்திரம் 114: அத்தியாயம் – 76: தல தரிசனம்- தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 77 சமயோசிதப் பாடல்கள்


திருவாவடுதுறையில் குமாரசாமித் தம்பிரான் சின்னக் காறுபாறாக இருந்து வந்தார். சுப்பிரமணிய தேசிகருடைய யாத்திரைக்காலத்தில் அவர் திருவாவடுதுறையில் சில சில சீர் திருத்தங்களைச் செய்தார். கோயில், மடம், நந்தவனங்கள் முதலியவற்றை மிகவும் நன்றாக விளங்கும்படி கவனித்து வந்தார்.
திருநெல்வேலியிலிருந்து நான் திருவாவடுதுறைக்கு வந்து சில வாரங்கள் தங்கியிருந்தேன். அக்காலத்தில் குமாரசாமித் தம்பிரானோடு தமிழ் விசயமாகப் பேசி இன்புற்றேன். யாத்திரைக் காலத்திற் சந்தித்த புலவர்களைப்பற்றியும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் அவரிடம் சொன்னேன்.
திருச்செந்தூரில் செய்து கொண்ட சங்கற்பத்தின்படியே தினந்தோறும் சிரீ கோமுத்தீசுவரர் விசயமாக ஒவ்வொரு செய்யுள் இயற்றி வந்தேன். அவற்றைக் குமாரசாமித் தம்பிரான் கேட்டு மகிழ்வார். மற்றத் தம்பிரான்களும் கேட்டு மகிழ்வார்கள். சனி ஞாயிறுகளில் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வருவார். அவர் தங்கியிருக்கும் இரண்டு தினங்களும் தமிழைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.


வினாச்செய்யுள்
குமாரசாமித் தம்பிரான் தெற்கு வீதியிலுள்ள குளக்கரையில் ஒரு கட்டடம் கட்டுவிக்க எண்ணி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். ஆழ்ந்த அத்திவாரம் போட்டு வேலைக்காரர்கள் வேலை செய்தார்கள். அதனைக் கவனிக்கும் பொருட்டு அங்கே தம்பிரான் சென்றபோது நானும் உடன் சென்றேன். அவ்விடத்தில் ஒரு கிழவன் நடைபெறும் வேலைகளை மேற்பார்வை யிட்டுக் கொண்டு நின்றான். அவன் எலும்புந்தோலுமாய், நிற்பதற்கே சக்தியில்லாமல் இருந்தான். அவனைப் பார்த்தால் அவன் உடம்பில் உயிர் உள்ளதோ இல்லையோ என்ற சந்தேகம் எழும். அவன் எப்படி அங்கே வேலை வாங்குவானென்று ஆச்சரியமடைந்தேன். திடீரென்று ஓர் அதட்டல் குரல் கேட்டது. அந்த உடம்பிலிருந்து அத்தொனி எழுந்ததென்பதை உணர்ந்தபோது எனக்குப் பிரமிப்பு உண்டாகி விட்டது. “இவனா அதட்டினான்!” என்ற சந்தேகத்தோடு மீட்டும் அவனைக் கவனித்தேன். முன் கேட்டதைவிட மிகவும் பலமான அதட்டல் தொனி அவனிடமிருந்து எழுந்தது. தம்பிரானைப் பார்த்தேன். ஆச்சரியக் குறிப்போடு, “இவ்வுடலினின்று மொலி இங்கெழுவதென்னே!” என்று சொன்னேன். என் உள்ளம் செய்யுள் இயற்றுவதில் ஈடுபட்டிருந்தமையால் அந்தக் கேள்வியை ஒரு செய்யுளடியைப் போலவே அமைத்துக் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே “உருவுகண் டெள்ளாமை வேண்டும்” என்று பதில் சொன்னார். பிறகு, “உங்கள் கேள்வியை நான்காவது அடியாக வைத்து முன்னே மூன்றடிகளை அமைத்து ஒரு செய்யுளாகப் பூர்த்தி செய்து விடுங்கள்” என்றார். அப்படியே இயற்றிச் சொல்ல அவர் கேட்டு மகிழ்ந்தார்.


நின்றால் நடக்கும்
அப்போது மணி பதினொன்று ஆகிவிட்டது. நானும் அவரும் காவிரி சுநானத்திற்குப் புறப்பட்டோம். போகும்பொழுது, “குளத்திலேயே சுநானம் செய்திருக்கலாம். காவிரிக்குப் போனால் நேரமாகும். நான் நின்றுவிட்டால் வேலை நின்றுவிடுமே” என்று சொன்னார். “நீங்கள் நடந்தால் அது நின்றுவிடும்; அங்கே நின்றால் நடக்கும் போலிருக்கிறது” என்று சொல்லி, உடனே
“கன்றால்முன்விளவெறிந்தகண்ணன்மிகவஞ்சவரும்கடுவயின்று
மன்றாட லுவந்ததிருக் கோமுத்தி வாணர்பணி வழுவா தாற்றும்
குன்றாத புகழ்க்குமர சாமிமுனி வரன்மாடம் குயிற்ற வன்னான்
நின்றாலவ் வேலைநடந் திடுமனையா னடப்பினது நிற்குந் தானே”
என்ற செய்யுளையும் சொன்னேன். “இன்று என்ன கவி ஆவேசம் வந்து விட்டது போலிருக்கிறதே” என்று சொல்லித் தம்பிரான் அச் செய்யுளை மீட்டும் மீட்டும் சொல்லக் கேட்டு இன்புற்றார்.


ஊற்றுப் பாட்டு
அப்பால் காவிரிப் படித்துறையை அடைந்தோம். அங்கே தென்கரையில் மிக உயரமாக வளர்ந்து ஆற்றின் பக்கமாகச் சாய்ந்து நிழல் அளிக்கும் ஒரு மருத மரம் இருந்தது. அம்மரத்தடியில் மணற்பரப்பிலே அமர்ந்தோம் மத்தியான்ன வெயிலில் அம்மரத்து நிழல் இனிமையாக இருந்தது.

காவேரியில் நீரோட்டம் இல்லாமையால் சுநானம் செய்யும் பொருட்டுத் தனித் தனியே ஊற்றுகள் போடப்பட்டிருந்தன. ஆதீனத் தலைவர் அமிழ்ந்து சுநானம் செய்வதற்கு ஏற்றபடி ஓர் ஓடுகால் வெட்டப்பட்டு நாற்புறமும் வேலிகட்டி யிருந்தது. அதன் மேல்பால் தம்பிரான்களெல்லாம் சுநானம் செய்வதற்காக விசாலமான ஊற்றொன்று வெட்டி அதற்கும் வேலி கட்டப்பட்டிருந்தது. அதற்குக் கிழக்கே தவசிப் பிள்ளைகளும் சைவர்களும் பிறரும் நீராடுவதற்குப் பெரிய ஊற்று ஒன்று இருந்தது. அந்த ஊற்றுகளைப் பாதுகாத்து வரும் பொருட்டு ஒருவன் நியமிக்கப்பட்டிருந்தான். பொன்னுப்பிள்ளை யென்பது அவன் பெயர்.
ஊற்றுகளை நன்றாக இறைத்துச் சுத்தமாக வைத்திருப்பதும், யார் யார் எந்த எந்த ஊற்றில் சுநானம் செய்யலாமோ அவர்களையன்றி மற்றவர்கள் அவற்றை உபயோகிக்காமல் காவல் புரிவதும் ஆகிய வேலைகளை அவன் பார்த்து வந்தான். அவனுக்கு உதவியாகச் சிலர் இருந்தனர்.
நாங்கள் மருத மரத்து நிழலில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அவன் வந்து குமாரசாமித் தம்பிரானை வந்தனம் செய்து நின்றான். “எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று தம்பிரான் விசாரித்தார். “சரியாக இருக்கிறது ஊற்றில் சலம் நிறைய ஊறியிருக்கிறது. சுநானம் செய்ய எழுந்தருளலாம்” என்று அவன் சொன்னான்.
அந்தக் காவலாளன் மிகவும் கடுமையானவன். உரியவர்களல்லாத வேறு யாரேனும் ஊற்றுக்கருகில் வந்தால் அவர் காலில் அடிப்பான். பித்தளைப் பாத்திரங்களைக் கொண்டு வந்து ஊற்றை அணுகினால் அவற்றைப் பிடுங்கித் தூர எறிவான். மண் பாத்திரங்களாயிருந்தால் உடைத்தெறிவான். பெண்களுக்கு அவனிடம் அதிக பயம். அவன் முகம் எப்போதும் கோபக் குறிப்போடே இருக்கும். வார்த்தையும் கடுமையானது. அப்படியிருந்தால்தான் தன் வேலை ஒழுங்காக நடைபெறும் என்பது அவனது திடமான அபிப்பிராயம். நிழலும் ஊற்றும் இனிய காட்சிகளை அளித்த அந்த இடத்தில் அவனுடைய முகம் வெயிலின் கடுமைக்குத் துணையாக விளங்கியது.
தம்பிரான் என்னைப் பார்த்து, “இவனைத் தெரியுமா?” என்று கேட்டார். “நன்றாகத் தெரியுமே” என்று நான் சொன்னேன். அவன் தன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். “இவன் எப்பொழுதும் கடுமையாகவே இருக்கிறானே. இவன் முகத்தில் சந்தோச அறிகுறியை ஒருநாளேனும் பார்த்ததில்லை. இவனைச் சிரிக்கும்படி செய்யமுடியுமோ?” என்று தம்பிரான் என்னைக் கேட்டார். “பார்க்கலாம்” என்று சொல்லி நான் அந்தப் பேர் வழியின் விசயமாக ஒரு பாடல் செய்ய யோசித்தேன். அவனது கடுமையான தோற்றத்தின் சார்பினாலோ, எதனாலோ, என் செய்யுளிலும் சிறித கடுமை புகுந்து கொண்டது. நான் இயற்றிய செய்யுள் திரிபாக அமைந்தது. நான் அதை முடித்துத் தம்பிரானிடம் சொல்லிக் காட்டினேன்.
மருத மரத்து நிழலூடு வெள்ளை மணலிருப்பும்
பொருத மரப்பொன்னுப் பிள்ளைவெங் காவல் புரிந்துஞற்றும்
விருதம ரற்புத வூற்று டலும்நிதம் மேவப்பெற்றால்
கருத மரக்க னரமாத ரோடிருக் கையினையே.”

மருதமரத்தின் நிழலுக்கிடையில் உள்ள வெள்ளை மணலாகிய இடமும் யாருடனும் போராடி முழங்கும் முழக்கத்தையுடைய பொன்னுப் பிள்ளை வலியக் காவல் புரிந்து அமைக்கும் சிறப்புப் பொருந்திய அற்புதமான ஊற்றில் நீராடுதலும் தினந்தோறும் பெறுவதாயிருந்தால் அரம் போன்ற கண்ணையுடைய தேவ மகளிரோடு வாழ்வதையும் பெரிதாக நினைக்க மாட்டோம்.
[பொரு தமரம் – போர் செய்யும் முழக்கம். விருது – சிறப்பு. கருதம் – கருதோம். அரமாதர் – தேவ மகளிர்.]


“பாட்டுடைத் தலைவனது இயல்பில் கொஞ்சம் பாட்டுக்கும் வந்துவிட்டது போலும்!” என்று சொல்லிக் கொண்டே தம்பிரான் சிரித்தார். பிறகு, பொன்னுப் பிள்ளையை அழைத்து, “உன்னுடைய வேலையையும் உன்னையும் புகழ்ந்து இவர்கள் பாடியிருக்கிறார்களே? கேட்டாயா?” என்றார். நான் அந்தப் பாட்டைச் சொன்னேன். ‘பொன்னுப் பிள்ளை’ என்பதை மாத்திரம் அழுத்தமாகச் சொன்னேன். அவனுக்கு அந்தப் பாட்டில் வேறு என்ன தெரியப் போகிறது? அந்தப் பெயர் காதில் விழுந்த போது அவனை அறியாமலே ஒரு புன்னகை அவன் முகத்தில் உண்டாயிற்று. “பேஃசு; அருமையாக இருக்கிறது” என்று தம்பிரான் சொல்லிச் சிரித்தார். “என் பாட்டு அருமையா? அவன் சிரிப்பு அருமையா?” என்ற விசயத்தில் எனக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை.
“ஐயா அந்த ஊற்றில் சுநானம் செய்யலாம்; சுத்தமாக இருக்கிறது” என்று என்னைச்சுட்டி அந்தக் காவற்காரன் சொன்னான்.
“பாட்டுடைத் தலைவன் அளிக்கும் பரிசு அது தான்” என்றார் தம்பிரான்.

ரெயில் பாட்டு
குமாரசாமித் தம்பிரான் தெற்குக் குளப்புரையின் நாற்புறத்துமுள்ள பூந்தோட்டத்தில் பலவகையான பூச் செடிகள் வைத்துப் பாத்திகட்டி மரு, மருக்கொழுந்து முதலியவற்றை மிகுதியாகப் பயிர்செய்து அருகிலுள்ள தலங்களுக்கும் அனுப்புவார்; என் தந்தையாரது பூசைக்கும் நாள்தோறும் அனுப்புவார்.
சிதம்பரம் சிரீ நடராசமூர்த்திக்கு அவற்றை எடுத்துச் சென்று சாத்தச் செய்ய வேண்டுமென்று தம்பிரான் எண்ணினார். ஒரு நாள் பெரிய குடலை கட்டி மருவையும் மருக்கொழுந்தையும் எடுக்கச் செய்து அதில் வைத்துச் சில தம்பிரான்களையும் என்னையும் உடனழைத்துக் கொண்டு சிதம்பரத்தை நோக்கிப் புறப்பட்டார். பகல் பன்னிரண்டு மணிக்கு இரெயில் வண்டியிலேறிச் சென்றோம். இரெயில் வண்டி புதிதாக வந்த காலமாதலின் அதில் ஏறிச்செல்வது விநோதமாக இருந்தது. அதிகக் கூட்டமே இராது. வண்டிக்கு இரண்டு பேர்களுக்குமேல் இருப்பது அருமை. நாங்கள் சிறிதுநேரம் எங்கள் விருப்பம்போல் தனித்தனி வண்டிகளில் ஏறிச் சிரமபரிகாரம் செய்து கொண்டோம். பிறகு ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். யாவரும் ஒன்றாகப் படித்தவர்களாதலால் வேடிக்கையாகப் பல விசயங்களைப் பற்றிப் பேசினோம். இரெயில் வண்டியில் பிரயாணம் செய்வதைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் செய்ய வேண்டுமென்று செய்யத் தொடங்கினோம். எல்லாரும் செய்யுள் இயற்றத் தெரிந்தவர்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை வைத்துப் பாடல் இயற்றிச் சொன்னார்கள் ஒரே பொருளைப் பற்றிய பல வகையான கருத்துகளமைந்த பாடல்களாதலின் அவை சுவையாக இருந்தன. நான் இரண்டு மூன்று செய்யுட்களை இயற்றிச் சொன்னேன். அவற்றில் ஒரு வெண்பாவின் முற்பகுதி மாத்திரம் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது.
“உண்ணலாம் தூசும் உடுக்கலாம் நித்திரையும்
பண்ணலாம் நூல்கள் படிக்கலாம்…

ஒரு கற்பனை
பிற்பகலில் சிதம்பரத்தை அடைந்து மாலைக் காலத்தில் ஆலயத்துக்குச் சென்று சிரீ நடராச மூர்த்தியைத் தரிசித்தோம். குமார சாமித் தம்பிரான் தாம் கொண்டு வந்திருந்த மருவையும், மருக் கொழுந்தையும் ஒரு தீட்சிதரிடம் அளித்து அலங்காரம் செய்யச் சொன்னார். அவர் நடராசமூர்த்தியின் திருமேனி முழுவதும் அவற்றைக் கொண்டு அலங்கரித்துத் தீபாராதனை செய்தார். “இறைவன் திருமேனி முழுவதும் உமா தேவியார் கொண்டதுபோல் பச்சையாக இருக்கிறது” என்று சொல்லிக் குமாரசாமித் தம்பிரான் மகிழ்ந்தார். நான் அது சம்பந்தமாக ஒரு செய்யுளை இயற்றிக் கூறினேன். அலங்காரம் செய்த பத்திரத்தின் பெயராகிய மருவென்பதற்கு வாசனை என்றும் ஒரு பொருள் உண்டு. அந்தச் சொல்லுக்குரிய இரு பொருளை வைத்து ஒரு கற்பனை செய்தேன். “சிதம்பரத் தலத்தில் எழுந்தருளிய இறைவன் ஆகாசமே திருமேனியாகவுடையவன். ஆகாசத்திற்கு ஒலி உரியதே ஒழிய மரு (மணம்) இல்லையென்று ஆன்றோர் கூறுவர். அவர்கள் நாணமுற சிரீ குமார சாமித் தம்பிரான் ஆகாச வடிவினராகிய சிவபெருமானுக்கு மருவை அளித்தார்” என்ற கருத்தை உடைய அச்செய்யுள் வருமாறு:
திருவென்றும் நின்றொளிரும் துறைசையிற்சுப்
பிரமணிய தேவற் கன்பிற்
பொருவென்று மின்றியொளி ருங்குமர
சாமிமுனி புங்க வன்றான்
மருவென்றும் வெளிக்கிலையென் பார்நாணத்
தில்லைவெளி மன்றில் மேனி
அருவென்று முருவென்றுஞ் சொலநடிப்பார்க்
கின்றுமரு அளித்தான் மன்னோ”

[ பொரு – ஒப்பு. மரு – மணம். வெளிக்கு – ஆகாசத்திற்கு. இலை என்பார் – இல்லை என்கிற பூமியானது.]
இச்செய்யுளைக் கேட்ட தம்பிரான்களும் பிறரும், “கற்பனை நன்றாயிருக்கிறது” என்று சொன்னார்கள்.
“நீங்கள் நினையாமலே வேறு நயம் ஒன்று இந்தப் பாட்டில் அமைந்திருக்கிறது” என்று குமாரசாமித் தம்பிரான் சொல்லவே, “என்ன அது?” என்றேன்.
“மரு என்றும் வெளிக்கிலை என்பார் நாண என்பதற்கு, வாசனை எப்பொழுதும் ஆகாசத்துக்கு இல்லை என்று சொல்லுபவர்கள் நாணும்படி என்பதுதானே நீங்கள் நினைத்து அமைத்த பொருள்?”
“ஆம்.”
“வாசனை ஆகாயத்திற்கு இல்லை, எனக்கே உண்டு என்று சொல்லிச் செருக்கடையும் பூமி நாணும்படி என்று வேறு பொருள் ஒன்றும் கொள்ளும்படி உங்கள் வாக்கு அமைந்திருக்கிறது. பிருதிவியின் குணம் கந்தமென்பது சாத்திரக் கருத்தல்லவா?” என்றார் அவர். அவர் கூறியதைக் கேட்டு யாவரும் மகிழ்ந்தோம்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.


Saturday, December 07, 2024

தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்

 

     08 December 2024      No Comment



இலக்கியம் எனின்மக்கள் வாழ்க்கை இலக்கணம் என்றால்வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும்இலக்கணமும்லட்சியம்லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர்.  தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர். ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை,  வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர்.  ஆரியர் தமிழ்நாட்டிற்குள் வந்த பின்னர், தமது மொழிச் சொற்களைத் தமிழில் சேர்க்கவும், தமிழ்ச்சொற்களை வடமொழிச் சொற்களாக்கவும் தமிழ் தழுவிய கிரந்த எழுத்துகளை ஆக்கினர். அவற்றுள் குறிப்பிடத்தக்க  எழுத்துகள் க்ஷ என்பன.

வருஷம், விஷயம், புஷ்டி, ரோஜா என்னும் சொற்கள் தமிழிலிருந்து ஆக்கப்பட்டவை. இந்த எழுத்துகளைத் தமிழுடன் கலந்து எழுதியமையால்தாம் தமிழில் மணிப்பவளநடை தோன்றியது. பல தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்தன. இன்றும் பார்ப்பனர் நடத்தும் செய்தித்தாள்கள் தமிழ் அழிப்புப் பணிகளைச் செய்கின்றன.

வானொலி நிலையங்களும்   இவ்வகையில்   விலக்கல்ல.    பார்ப்பன ஏடுகளும்பார்ப்பனர்களும்பார்ப்பனர் சார்பாக வாழும் தமிழர்களும்தமிழ்மொழி வளர வேண்டுமாயின்பிற மொழிச்சொற்களைத் தமிழில் சேர்க்க வேண்டும் என்கின்றனர்.  இவர்கள்தமிழ்மொழியை அறியாதவர்கள்.  மக்கள் மொழி இயக்கம் என ஒன்று அமைத்துச் சில்லோர்தமிழ் ஒழிப்புப் பணி செய்கின்றனர்.  எழுத்துச் சீர்திருத்தம், மொழிச் சீர்திருத்தம் என்கிற பெயரில் தமிழ் மொழியை அழிக்கத் திட்டம் தீட்டுகின்றனர்.

தட்டச்சுகணிப்பொறிகளுக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகளை மாற்றியமைக்க வேண்டுமென்று பாடுபடுகின்றனர் பலர்.  இவர்கள் யாவரும் தமிழ் வளர்க்கவே பாடுபடுவதாகப் பசப்புகின்றனர்.  ஆனால்அஃது உண்மைக்கு மாறானது.  தமிழில் பல சொற்கள் மக்கள் மொழியில் பிழைபடப் பொருளற்ற வகையில் பலுக்கப்படுகின்றன.  காட்டாகசில பேச்சு வழக்குச்சொற்களான பொண்ணுபுள்ளைபொண்டாட்டிவந்திச்சிபோனிச்சிகுடுத்தேன்நவந்துக்கசென்னேன்வயக்கம்பயக்கம்வளக்கம் முதலியன காண்க.  இக்கொச்சைச் சொற்கள் தமிழ் மொழியை வளர்க்கா. 

இத்தகைய கொச்சைச் சொற்களையும்நாற்றம்எண்ணைதண்ணி போன்ற வழுச்சொற்களையும் தமிழ் மக்கள் இலக்கியத்தில் தவிர்க்க வேண்டும்.  எவரேனும்கொச்சைச் சொற்களையும்வழுச்சொற்களையும் எடுத்தாண்டிருப்பின்திருத்தி வெளியிடுவதே தமிழை வளர்க்கும்.  ஒரு தமிழ்மகள் பாடிய நாட்டுப்புறப்பாடலின் ஈரடிகளை ஈண்டு தருகிறோம்.  தன் கணவன் இறுதி மூச்சை விட்டபின் புலம்பியது அது.

            சில்லென்று பூத்த சிறு நெரிஞ்சில் காட்டூடே

            நில்லென்று சொல்லி நிறுத்திவழி போனீரே!!

இக்காலம் தமிழ்நாட்டில் தமிழின் நிலை சீர்குலைந்து நிற்கின்றது. தமிழ்மக்கள் பேச்சு வழக்கில் தமிழ்ச்சொற்களைக் காண்பதரிது.  தமிழ்மக்கள் பெயர் தமிழில் இல்லை;  தமிழர் கடைகளின் பெயர்கள் தமிழாக இல்லை.  தமிழ் எப்படி வாழும்வளரும்?

                  (நன்றி : தமிழ் மக்கள் இலக்கியம்)

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்

தொகுப்பு : முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை


Tuesday, November 26, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 114: அத்தியாயம் – 76: தல தரிசனம்



x

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 113: அத்தியாயம் – 75: இரண்டு புலவர்கள்-தொடர்ச்சி)

திருக்குற்றாலத்தில் சில தினங்கள் தங்கிப் பிறகு ஆதீனத்திற்குரிய
கிராமங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே சுப்பிரமணிய தேசிகர் யாத்திரை செய்யலானார். வேணுவன லிங்கத் தம்பிரான் ஆட்சியின் கீழிருந்த அந்தக் கிராமங்கள் திருவாவடுதுறை மடத்தின் சீவாதாரமாக உள்ளவை. அவற்றில் கம்பனேரி புதுக்குடி என்பது ஒரு கிராமம். அதை விலைக்கு வாங்கிய சுப்பிரமணிய தேசிகர் தம்குருவின் ஞாபகார்த்தமாக அம்பலவாண தேசிகபுரமென்ற புதிய பெயரை வைத்தார். அங்கே தேசிகர் ஒரு நாள் தங்கினார்.

அக்காலத்தில் திருப்பனந்தாட் காசிமடத்தில் தலைவராக விளங்கிய சிரீ இராமலிங்கத் தம்பிரானென்பவர் சுப்பிரமணிய தேசிகரிடம் பேரன்பு பூண்டவர். தேசிகர் யாத்திரை செய்வதை அறிந்து தாமும் அவரோடு சேர்ந்து சில நாட்கள் பிரயாணம் செய்ய விரும்பித் தனிப் புகைவண்டி யொன்றை ஏற்பாடு செய்து கொண்டு திருநெல்வேலி மார்க்கமாகச் செவந்திபுரம் வந்து தேசிகரைத் தரிசித்து உடனிருப்பாராயினர். அத்தம்பிரான் கம்பனேரி புதுக்குடியைக் கண்டு மிகவும் மெச்சினார். அந்தக்கிராமம் மிகவும் விசாலமாக இருந்தது. சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன் தங்கினமையால் அப்போது அது ஒரு பெரிய நகரம்போல விளங்கிற்று.

மகாவைத்தியநாதையரும் அவர் தமையனாராகிய இராமசாமி ஐயரும் அணிந்திருந்த உருத்திராட்ச கண்டிகளை வாங்கி அவற்றிற்குத் தேசிகர் தங்க வில்லை போடச்செய்து அளித்தனர். எனக்கு திருவிடைமருதூரில் அளித்த கண்டியில் தங்க முலாம் பூசிய வெள்ளி வில்லைகளே இருந்தன. அந்தக் கண்டிக்கும் தங்க வில்லைகளை அமைக்கச் செய்து எனக்கு அளித்தார். அப்போது இராமசாமி ஐயர் சிலேடையாக, “வெள்ளி வில்லை தங்க வில்லை” என்றார். யாவரும் கேட்டு மகிழ்ந்தனர்.

சங்கர நயினார் கோயில்

தேசிகர் முன்னரே செய்திருந்த ஏற்பாட்டின்படி சங்கர நயினார் கோயிலில் நடைபெறும் ஆடித் தவசு உற்சவத்திற்குச் சென்றனர். சோழ நாட்டில் வைத்தீசுவரன் கோயிலுக்கு எவ்வளவு சிறப்புண்டோ அவ்வளவு சிறப்பு சங்கர நயினார் கோயிலுக்கும் உண்டு. சிவபெருமானும் திருமாலும் பேதமின்றி இயைந்து நிற்கும் சங்கர நாராயண மூர்த்தியைத் தரிசித்து ஆனந்தமடைந்தேன். அவ்வாலயத்திலுள்ள புற்று மண்ணை மருந்தாக உண்டு நோய்கள் தீர்ந்த பக்தர்கள் பலரைப் பார்த்தேன். அங்கே எழுந்தருளியிருக்கும் சிரீ கோமதியம்மையைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தேன். இறைவனைக் குறித்து அத்தேவி தவஞ்செய்த சிறப்பை நினைவுறுத்த ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறும். அத்திருவிழாவைத்தான் ‘ஆடித் தவசு’உற்சவமென்று வழங்குகிறார்கள்.

கரிவலம் வந்த நல்லூர்

சங்கரநயினார் கோயிலில் ஒரு வாரம் இருந்து விட்டுத் திருச்செந்தூர் ஆவணி உற்சவ தரிசனத்துக்காகப் புறப்பட்டோம். இடையே ஒரு நாள் கரிவலம் வந்த நல்லூரில் தங்கினோம். தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கும் மாணாக்கர்களுக்கு அந்தத் தலத்தைப் பற்றித் தெரியாமலிராது. வரதுங்கராம பாண்டியர் இயற்றிய கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவைக் கலித்துறை யந்தாதி, வெண்பா அந்தாதி என்ற மூன்று பிரபந்தங்களும் அத்தலத்தைப் பற்றியனவே யாகும். கரிவலம் வந்த நல்லூர் என்பதன் மரூஉவே கருவை என்பது.

அந்தத் தலத்தை அணுகியவுடன் நான் முன்னே கேட்டிருந்த அந்தாதிச் செய்யுட்க ளெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. என் ஆசிரியரிடம் அவ்வந்தாதி நூல்களைப் படித்த காலத்தில் அவர் கூறிய அருத்தத்தைக் காதாற் கேட்டிருந்தேன். தல சம்பந்தமாக அவர் சொன்ன விசயங்களைக் கொண்டு அப்போது நான் மனத்திலே ஒரு கோயிலைக் கற்பனை செய்திருந்தேன். கண் முன்னே பின்பு அவ்வாலயத்தைக் கண்டபோது அதுவரையில் விளங்காத விசயங்கள் விளங்கின. பாடல்களின் அருத்தத்தைக் காதாற் கேட்டபோது அப்பொருள் குறைவாகவே இருந்தது; பால்வண்ண நாதரைக் கண்ணால் தரிசித்த போதுதான் அப்பொருள் நிறைவெய்தியது. சுவாமிக்கு நிழல் அளித்து நிற்கும் பழைய களாச் செடியையும் பார்த்து விம்மித மடைந்தேன்.

சிறந்த தமிழ்ப் புலவரும் அரசரும் அடியாருமாகிய வரதுங்க ராம பாண்டியர் வாழ்ந்த நகரமாதலின் அதனைச் சுற்றிப் பார்க்கலாமென்று சில நண்பர்களுடன் புறப்பட்டேன். அவ்வரசர் வசித்த இடத்தைப் பார்த்து இன்புற்றேன். இப்படி ஊரைப் பார்த்துக் கொண்டு சென்ற போது நடு வீதியில் என் எதிரே ஒருவர் வந்தார். அவருடன் சில குட்டித் தம்பிரான்களும் வந்தார்கள். வந்தவர் என்னைக் கண்டு அஞ்சலி செய்தார். எனக்கு அவர் இன்னாரென்று அடையாளம் தெரியவில்லை.

அவர் தலையில் ஓர் அழகிய உருமாலை கட்டியிருந்தார். காதிற் கடுக்கனும் கையில் மோதிரமும் அணிந்திருந்தார். இடுப்பில் சரிகை வத்திரம் உடுத்திருந்தார். இவற்றையெல்லாம் பார்த்து, “இந்தப் பிரபுவை நாம் பார்த்ததாகக் தெரியவில்லையே” என்று யோசிக்கலானேன். பிறகு, “தங்களைத் தெரியவில்லையே” என்று கேட்டேன். அவர், “அடியேன் அவ்விடத்துச் சிசுயன்தான்” என்றார்.
அப்பொழுதும் எனக்கு விளங்கவில்லை. “பெயர் என்ன” என்று கேட்டேன். “நான்தான் சொக்கலிங்கம்; திருவாவடுதுறையில் தங்களிடம் பாடம் கேட்கவில்லையா?” என்றார்.
“சொக்கலிங்கத் தம்பிரானா? அடையாளமே தெரியவில்லையே!” என்ற
ஆச்சரியமடைந்து நின்றேன். “இப்போது வேடம் மாறி விட்டது; நான் சொக்கலிங்கம் பிள்ளையாகி விட்டேன்.” சௌக்கியமாக இருக்கிறீரா? உமக்கு இரண்டு சாண் நீளம் சடையிருந்ததே! ஏன் இப்படி மாற வேண்டும்?” என்று கேட்டேன்.

“நான் திருவாவடுதுறையில் இருந்த போது துறவிகளின் சகவாசம் இருந்தது. படிப்பில் ஆசை தீவிரமாக இருந்தது. தாங்களும் பாடம் சொல்லித் தந்தீர்கள். சந்நிதானம் கருணையுடன் பாதுகாத்து வந்தது. என்னவோ நினைத்து இங்கே வந்தேன். பழைய பாசம் சுற்றிக் கொண்டது. உறவினர்கள் கிருகத்தாசிரமத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். எனக்கும் அந்த இச்சை உண்டாயிற்று. நான் மனிதன்தானே? காவி உடை தரித்த மாத்திரத்தில் பெரிய ஞானியாகி விடுவேனா? கலியாணம் செய்து கொண்டேன். இங்கே பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வருகிறேன். ஊரிலுள்ளவர்கள் குறைவில்லாமல் ஆதரித்து வருகிறார்கள். எல்லாம் அவ்விடத்து அனுக்கிரகம்” என்றார்.

பிறகு அவர் விடை பெற்றுச் சென்றார். நாங்கள் தேசிகரிடம் சென்று
சொக்கலிங்கம் பிள்ளையைப் பற்றிச் சொன்னோம். அவர், “துறவுக் கோலம் பூண்டு அந்நிலைக்குத் தகாத காரியங்களைச் செய்வதை விட இம்மாதிரி செய்வது எவ்வளவோ உத்தமம்” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார்.

கரிவலம் வந்த நல்லூரிலிருந்து புறப்பட்டு ஆழ்வார் திருநகரி முதலிய ஊர்களின் வழியாகத் திருச்செந்தூரை அடைந்தோம். செந்திலாண்டவனுக்குத் திருவாவடுதுறை யாதீனத்தின் மூலம் நடைபெறும் பணிகள் பல உண்டு. அவற்றிற்குரிய மடங்களும் பல உள்ளன. அங்கே ஆவணி மாதத்தில் நடைபெறும் உற்சவ தரிசனம் ஆயிற்று. தேசிகர், பிராமண போசனம், மகேசுவர பூசையாகியவற்றை நடப்பித்தார்.
சமுத்திரக் கரையில் அமைந்துள்ள செந்திற்பெருமான் திருக்கோயில்
கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆண்டவனுக்குப் பிரார்த்தனை
செலுத்துவோர்களுடைய கூட்டம் மிக அதிகம். உலகத்தில் தெய்வபக்தியென்னும் சுடரை அவியாமலே காப்பாற்றி வரும் தலங்களுள் திருச்செந்தூர் ஒன்று. கலியுக வரதனாகிய முருகக் கடவுளின் திருவருளைப் பலவிதமான அதிசயச் செயல்களால் காணுவதற்கு இடமாயிருப்பது அந்தத் திவ்ய ஸ்தலம்.

கந்தர் கலிவெண்பா

எங்களுடன் வந்திருந்த இராமலிங்கத் தம்பிரானுடைய ஆட்சியிலுள்ள
திருப்பனந்தாள் மடத்தில் ஆதி புருசராக வணங்கப்படுபவர் குமரகுருபர சுவாமிகள். அப்பெரியார் இளமையில் ஐந்து வருடம் வரையில் ஊமையாக இருந்து பிறகு செந்திற் பெருமான் திருவருளால் வாக்குப் பெற்றனர். அப்போது அவர் முதல் முதலில் செந்திலாண்டவன் விசயமாக, ‘கந்தர்கலி வெண்பா’என்ற பிரபந்தத்தைப் பாடினார். திருவருளால் அமைந்த வாக்கென்ற கருத்தினால் தமிழ் நாட்டில் அந்நூலைப் பயபக்தியோடு பலர் பாராயணம் செய்து வருவார்கள். நான் அதை அடிக்கடி படித்து மகிழ்வதுண்டு. திருச்செந்தூரில் தங்கிய காலத்தில் அதனைப் பல முறை பாராயணம் செய்தேன். இராமலிங்கத் தம்பிரான் தம் ஆதீன முதல்வரால் இயற்றப் பெற்ற தென்ற பெருமையுள்ளத்தோடு படித்தும் கேட்டும் வந்தார். கந்தர் கலிவெண்பாவின் இறுதியில் குமர குருபரர் தமக்கு ஆசு முதல் நாற்கவியும் பாடும் வன்மை வேண்டுமென்று பிரார்த்திக்கின்றார். நான் அந்தப் பகுதியை மீட்டும் மீட்டும் படித்துச் செந்திலாண்டவனைத் துதித்தேன். எனக்கும் நல்ல கவித்துவம் வேண்டுமென்ற ஆசை உள்ளிருந்து தூண்டியது.

எனது தீர்மானம்

திருச்செந்தூரில் இருந்தபோது சுப்பிரமணிய தேசிகர் என்னையும்
மகாவைத்திய நாதையரையும் அழைத்து, ஊருக்குப் போய்ச் சில தினங்கள் இருந்து விட்டுத் திருப்பெருந்துறைக்கு வந்து விடும் படியும், அதற்குள் தாமும் திருப்பெருந்துறைக்கு வந்துவிடக் கூடுமென்றும் கட்டளையிட்டனுப்பினார்.நாங்கள் புறப்பட்டோம். இராமலிங்கத் தம்பிரானும் விடை பெற்றுத்திருப்பனந்தாளுக்குச் சென்றார். செந்திலாண்டவன் திருவருளால் இனிச் செய்யுட்களை மிகுதியாக இயற்றிப் பழக வேண்டுமென்ற தீர்மானத்துடன் நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தேன்.

(தொடரும்)

  

சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை முன்னுரையும்

 


(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை-தொடர்ச்சி)


மறைமலையார் பாவாணர் அடிச்சுவட்டில்

மாண்பார்ந்த தனித்தமிழ்க்குப் பெருமை சேர்த்த

நிறைபுலமை யாளர்நம் பழனிவேலர்

நினைவெல்லாம் மொழிமானம் தாங்கி நிற்கும்

குறையில்லாப் பெருங்கொள்கை யாளர்! அந்நாள்

கோதறுசீர் ‘மாணாக்கன்’ இதழின் மூலம்

முறையான தமிழ்த்தொண்டு புரிந்த நல்லார்!

மூப்பினிலும் தமிழ்யாப்பின் மரபில் வல்லார்!

உரமுடையார்! திறமுடையார்! தமிழைக் காக்கும்

உணர்வுடையார்! போர்க்குணமும் உடையார்! நெஞ்சில்

கரவறியார்! செந்தமிழைக் காப்ப தற்குக்

களம்புகுவார்! தன்னலத்தைச் சிறிதும் எண்ணார்!

வரவறியார்! பொருள்சேர்க்கும் வாழ்வைக் காணார்!

வாழ்வுவளம் எல்லாமுமு் தமிழே என்பார்!

வரலாறு படைத்துள்ள பழனி வேலர்

வளர்தமிழாய் வாழ்வாங்கு வாழ்க! வாழ்க!

– முனைவர் கடவூர் மணிமாறன்

000

     திருத்துறைக்கிழார் என்ற புனைபெயருடன் வாழ்ந்த என் அப்பாவும், தனித்தமிழரிமா, தமிழிசைச் செம்மல், செந்தமிழ்க் காவலர் எனப்போற்றப் பெற்றவருமான புலவர் விழல்குடி. பொதியப்பன். பழனிவேலனார் அவர்களுடைய கட்டுரைகளின்   முதல் தொகுதி, அவர் இயற்கை எய்திய 19- ஆம் ஆண்டில் வெளிவருகின்றது. பல கட்டுரைகள் முன்னரே இலக்கிய இதழ்களில் இடம்பெற்றவை. இலக்கிய இதழ்களை எல்லாம் அப்பா பத்திரப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருந்தார். நான் தட்டச்சு செய்ய முனைகையில் பல உளுத்துப் போயிருந்தன. சில கட்டுரைகளைப் படிக்கவே இயலவில்லை. எப்படியோ முழுதாகக் கிடைத்தவற்றை விடாமல் தட்டச்சு செய்தேன். இக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்ய எண்ணினேன். எண்ணிக்கையில் அதிகம் இருந்ததால் 2 தொகுதிகளாக வெளியிட முடிவு செய்தேன்.

          இத்தொகுதியைத் தமிழ் – தமிழர் – தமிழ்நாடு எனப் பாகுபாடு செய்தேன். 42 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது. அடுத்த தொகுதிக்கான கட்டுரைகளும், தனித்தமிழ்ப்பாக்களும், ஆங்கிலக்கட்டுரைகளும் உள்ளன. அவற்றையும் தனியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

          அப்பா, தான் வாழ்ந்த காலம் வரையிலும் தமிழையும், பெரியாரியத்தையும் தன் இரு கண்களாகப் பேணினார். எவருக்கும், எதற்கும் தலைவணங்காமல் வாழ்ந்தார். அவர் போல வாழ்வியல் இடர்பட்டவராயின், இப்படியெல்லாம் சிந்தித்து வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.  பல்வேறு இயக்கங்களுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொண்டு, உண்மையாகப் பணியாற்றிய தமிழ்மறவர் அவர். 

         தன்னலமற்ற, பொய்ம்மையற்ற, தமிழ்ப்பற்றாளர்; பொரியாரியத் தொண்டர்.  தமிழையும், பெரியாரியத்தையும் தம் வாழ்வியலாகக் கொண்டு மிகவும் இடர்ப்பட்டவர்.  என்னிரு கரம் பற்றி, என்னைத் தமிழின்வழியும், தன்மானத்தின் வழியும் வாழ வைத்தவர். என் தமிழ் அவர் தந்தது. அவர் இருக்கும் போதே செய்திருக்க வேண்டியதை, இப்போதுதான் செய்ய இயன்றது. இந்தக் குற்ற உணர்வுடன் அவர்தம் மலரடிகளில் இந்நூலை காணிக்கையாக்குகின்றேன்.

உடுமலைப்பேட்டை                                                                                                          பெருமகிழ்வுடன்


Saturday, November 16, 2024

உ.வே.சா.வின் என் சரித்திரம் 113: அத்தியாயம் – 75: இரண்டு புலவர்கள்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம் 112: அத்தியாயம் – 73: நானே உதாரணம்-தொடர்ச்சி)

இரண்டு புலவர்கள்

புலவர்கள் பலர் உள்ள புளியங்குடியென்னும் ஊரிலிருந்து இருவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க ஒரு நாள் செவந்திபுரத்திற்கு வந்தனர். அவர்களோடு வந்த கட்டைவண்டியில் பல ஓலைச் சுருணைகள் வந்திருந்தன. அவற்றையெல்லாம் திண்ணையில் இறக்கி வைத்தனர். அப்போது அத்திண்ணையிலிருந்து தேசிகர் எங்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். வந்தவர்களையும் அந்த ஏட்டுச் சுருணைகளையும் கண்டபோது, “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்” என்ற நினைவு எனக்கு உண்டாயிற்று.

அவர்கள் பாத காணிக்கை வைத்துத் தேசிகரை வந்தனம் செய்தார்கள்.

அவர்களுள் ஒருவர் செல்வம் மிகுந்த கனவான்; மற்றொருவர் தெய்வப் புலவர் என்பவர். தெய்வப் புலவரென்னும் பெயர் திருவள்ளுவருக்கு உண்டென்பதை நான் அறிந்திருந்தேன். வேறு யாருக்கும் அப்பெயர் அமைந்ததாகக் கேட்டதில்லை. தெய்வ நாயகப் புலவரென்ற பெயரை அவர் அப்படிக் குறைத்து வைத்துக் கொண்டார்.

வண்டியில் வந்த ஏட்டுச் சுருணைகள் தேசிகர் முன்னிலையில் கொணர்ந்து வைக்கப்பட்டன. “இவை என்ன?” என்று அவர் கேட்டார்.

“எல்லாம் தேவாரப் பதிகம்” என்று புலவர் சொன்னார்.

“அப்படியா! புதிதாகப் படி செய்தது போல் இருக்கிறதே.

தேவாரந்தான் அச்சில் வந்துவிட்டதே. சிரமப்பட்டு ஏட்டில் படி செய்ய வேண்டிய அவசியம் இல்லையே?”

“இந்தப் பதிகங்கள் வேறு” என்று தெய்வப் புலவர் கூறினார். பேசாமல் இருந்த கனவான் சிறிது நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“வேறு புதிய பதிகங்கள் எங்கே கிடைத்தன?” என்று ஆவலோடு தேசிகர் கேட்டார். நம்பியாண்டார் நம்பியின் உதவியால் அபயகுலசேகர மகாராசா தேவாரத்தை வெளிப்படுத்திய வரலாற்றை நாங்கள் ஞாபகப்படுத்திக் கொண்டோம். எவ்வளவோ தேவாரப் பதிகங்கள் செல்லால் அரிக்கப்பட்டுப் போயினவென்று அவ்வரலாற்றால் அறிந்திருந்தோம். அப்படி மறைந்த பதிகங்களின் படிகள் வேறு எங்கேனும் சேமிக்கப் பெற்றுக் கிடைத்திருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்குத் தோற்றியது. ஆனால் அடுத்த நிமிடம் எங்கள் ஆவல் முழுதும் சிதறியது.

“எல்லாம் பிள்ளையவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களே” என்று புலவர் அக்கனவானைச் சுட்டிக் காட்டிக் கம்பீரமாகச் சொன்னார். அந்தப் பிள்ளையவர்கள் வாயையே திறக்கவில்லை. தம்முடைய முகக் குறிப்பினால் உற்சாகத்தையும் சந்தோசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

புலவர் சொன்ன வார்த்தைகள் தேசிகரைத் திடுக்கிடச் செய்தன. அவர் சிறிது சிரித்தார். அந்தச் சிரிப்பிலே ஓரளவு கோபக் குறிப்பும் கலந்திருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக அவர் காட்டிக் கொள்ளவில்லை.அவ்விருவரும், தேசிகர் விம்மிதமடைந்து பரபரப்புடன் அந்த அரிய பதிகங்களைக் கேட்க முந்துவரென்று எண்ணியிருக்கலாம். தேசிகரிடம் அத்தகைய பரபரப்பு ஒன்றும் தோற்றவில்லை. அவர் அமைதியாக, “எங்கே, சில பாடல்களை கேட்கலாம்” என்று கட்டளையிட்டார்.

பதிகங்களின் ஆசிரியராகிய கனவான் அப்பொழுதும் வாய் திறக்கவில்லை. புலவர் தாமே பாடல்களைச் சொல்லத் தொடங்கினார்.

ஒவ்வொரு பதிகத்தையும் சொல்லி, “இன்ன பதிகத்தைப் போலச் செய்தது இது” என்று தேவாரப் பதிகத்தையும் குறிப்பித்து வந்தார். கசக்கோலை வைத்துஅளந்து பாட்டுக்குப் பாட்டு, வார்த்தைக்கு வார்த்தை மாற்றி வைத்தவை போல அவை தோற்றின. ஒன்றேனும் இரசமாக இல்லை.

நாங்கள் இடையிடையே சிறிது ஆட்சேபம் செய்வோம். அப்படிச் செய்யும்போது அந்தக் கனவானை நோக்கி அவற்றைக் கூறுவோம். அவர் தாம் விடை சொல்லாமல் புலவர் முகத்தைப் பார்த்து ஊங்காரம் செய்வார். புலவர் எதையாவது சமாதானமாகச் சொல்வார்.

தேசிகருக்கு மேலே கேட்பதில் விருப்பமில்லை. வெறுப்பே தோற்றியது. “மிகவும் சிரமமாக இருக்கும்; ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம்? போதும்” என்று சொல்லி நிறுத்தச் செய்தார். பின்னும் அவகாசம் அளித்திருந்தால் அப்புலவர் அவ்வளவு பாடல்களையும் சொல்லி எங்கள் காதைத் துளைத்திருப்பாரென்பது நிச்சயம். அந்தக் கனவானுக்குச் சரிகை வத்திரமும் பட்டும் அளித்து மறுநாளே தேசிகர் அனுப்பிவிட்டார். அவர் போன பிறகு எங்களைப் பார்த்து, “இந்த சம்மானம் எதற்காகக் கொடுத்தது, தெரியுமா?” என்று கேட்டார்.

அவர் கருத்து ஒரு வகையாகத் தெரிந்தாலும் நான் வேண்டுமென்று,

“அவர் பாடிய தேவாரப் பதிகங்களுக்காக” என்றேன்.

“சிவ சிவா! அவர் ஒரு கனவானாதலாலும் பாதகாணிக்கை வைத்தமையாலும் அவர் மனம் திருப்தியடைய வேண்டுமென்று எண்ணியே அந்தச் சம்மானம் வழங்க வேண்டியிருந்தது. தேவாரப் பதிகங்கள் எப்படி இருந்தன?” என்று கேட்டார் தேசிகர்.

“அக் கனவான் இயற்றியிருப்பரென்று தோற்றவில்லை.”புலவர் பாடிக்கொடுத்து அக்கனவானை ஆட்டி வைக்கிறார். இவரும் பொம்மை மாதிரி எல்லாவற்றையும் ஒப்புக் கொள்கிறார். இப்படியும் சிலர் உலகத்தில் இருக்கிறார்கள். இப்பாடல்களுக்கு வேறு ஏதேனும் ஒரு பெயரை வைக்கக் கூடாதோ? தேவாரப் பதிகங்களென்று கூசாமல் சொல்லுகிறாரே. இந்தக் காரியம் அநுசிதமென்று அவர்களுக்குத் தெரியவில்லையே! இனிமேல் திருவாசகம், திருக்கோவையார் இவைகளைப் பாட வேண்டியதுதான் பாக்கி!”

“ஏன்? பதினோராந் திருமுறையிலுள்ள சிவபெருமான் அருளிய திருமுகப்பாசுரங்கூட அவரே பாடி விடலாம்!” என்றேன். தேசிகர் சிரித்தார்; நாங்களும் சேர்ந்து சிரித்தோம்.

அப்பால் தேசிகர் சங்கர நயினார் கோயிலில் நடைபெறும் ஆடித் தவசு உற்சவத்தையும், திருச்செந்தூர் ஆவணி உற்சவத்தையும் தரிசித்து விட்டுத் திருப்பெருந்துறை செல்ல எண்ணிப் பரிவாரங்களுடன் புறப்பட்டார்.

வழக்கப்படியே இடையிலுள்ளவர்களால் சிறப்புகள் செய்விக்கப்பெற்றுக் குற்றாலம் சென்று தம்முடைய மடத்தில் சில நாள் தங்கி இருந்தார்.

நான் முதல் முதலாகத் திருக்குற்றாலத்தைக் கண்ட காலமாதலின் அங்குள்ள இயற்கையழகை நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றேன். அருவியின் தூய்மையும் அழகும் அங்கே வந்து கூடுவோர்களின் பக்தியும் ஆனந்தத்தை உண்டு பண்ணின. பல வருடங்களாகச் செழித்து ஓங்கி வளப்பம் குறையாமல் வளர்ந்து நின்ற மரங்களும் அவற்றிற்கு அழகையும் வளர்ச்சியையும் கொடுக்கும் சாரலும் அவ்விடத்தின் தனிச் சிறப்புகளாக இருந்தன.

திருநெல்வேலி சில்லாவுக்குப் பெருமை உண்டாக்கக் குற்றாலம் ஒன்றே போதும். அங்குள்ள காற்றும் அருவி நீரும் மனிதர் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே பரிசுத்தமாக்கும். பலவருட காலம் அங்கே வாழ்ந்திருந்தாலும் சலிப்பே ஏற்படாது.

வெள்ளைக்காரர்கள் பலர் தங்கள் குடும்பத்தோடு அருவியில் ஆடும் பொருட்டு அங்கே வந்து தங்கியிருந்தனர். திருநெல்வேலி சில்லா கலெக்டராக இருந்த பென்னிங்குடன் துரையென்பவரும் அங்கே வந்திருந்தார். அவருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் முன்பே பழக்கம் உண்டு. ஆதலால் தேசிகரது வரவை அறிந்த கலெக்டர் ஒருநாள் மடத்திற்கு வந்து அவரைக் கண்டார்.

கலெக்டருடன் ஒரு முனிசியும் வந்திருந்தார். தேசிகருடைய கட்டளையின்படி கலெக்டரைப் பாராட்டி நானும் பிறரும் சில பாடல்களை இயற்றிச் சொன்னோம். அவற்றின் பொருளை அந்த முனிசி கலெக்டருக்கு விளக்கினார். நான் இயற்றிய பாடல்களில் ஒன்றன் கடைசிப் பகுதி வருமாறு:

“,,,,,,,பென்னிங்டன் துரையே நின்னைக்

குற்றாலந் தனிற்கண்ட குதுகலமிங் கெவராலுங்

கூறொணாதே.”

ஒரு நாள் காலையில் நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் வேறு சிலரும் குற்றால மலைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வரப் போனோம். மலையின் வடபாலுள்ள சோலை வழியே செல்லும்போது எங்கிருந்தோ இனிய சங்கீத ஒலி வந்தது. நாங்கள் அது வந்த வழியே சென்றபோது ஒரு மாளிகையை அடைந்தோம். அதன் வாசலில் ஒரு சிறிய திண்ணையில் தனியாக உட்கார்ந்து ஒருவர் உரத்துப் பாடிக்கொண்டிருந்தார். தாமே பாடுபவராயின் அவ்வளவு பலமாகப் பாட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அவரை அணுகியவுடன் அவர் பாட்டை நிறுத்திவிட்டு, “நீங்கள் யார்?” என்று எங்களைக் கேட்டார். சுப்பிரமணிய தேசிகர் அங்கே வந்து தங்கியிருப்பதையும், நாங்கள் அவருடன் வந்திருப்பதையும் தெரிவித்தோம். அவர் வேம்பத்தூர்ப் பிச்சுவையருடைய தம்பி என்பதும் அவர் பெயர் சருக்கரை பாரதி என்பதும் தெரிந்தன.

நாங்கள் பேசும்போதே உள்ளே யிருந்து, “பலே! ஏன் பாட்டு நின்றுவிட்டது?” என்று அதிகாரத் தொனியோடு ஒரு கேள்வி வந்தது. “புத்தி” என்று சொல்லியபடியே ஒரு வேலைக்காரன் உள்ளேயிருந்து ஓடி வந்து பாரதியாரை விழித்துப் பார்த்தான். அவர் நடுங்கி மீண்டும் தாளம் போட்டுப் பாடத் தொடங்கினார்.

எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நீங்கள் இங்கே உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு வாருங்கள். அங்கே விரிவாகப் பேசலாம். சந்நிதானம் உங்களைக் கண்டால் சந்தோசமடையும்” என்று சொன்னோம்.

அவர் பாடிக்கொண்டே இருந்தமையால் “ஆகட்டும்” என்று சொல்ல இயலாமல் தலையை அசைத்தார். நாங்கள் விடைபெற்று வந்தோம். அன்று மாலை சருக்கரை பாரதியார் மடத்திற்கு வந்து தேசிகரைப் பார்த்தார். அவர் சொன்ன விசயங்களைக் கேட்டு நாங்கள்அவர் நிலையை அறிந்து இரங்கினோம். அவர் ஒரு சமீன்தாரோடு சில மாதம் இருந்தார். அந்த சமீன்தார் தம் மாளிகையினுள்ளே தமக்கு மிகவும் வேண்டிய ஒருவரோடு சீட்டாடிக் கொண்டிருந்தாராம். பாரதியார் அவர் காதில் படும்படி வெளியிலிருந்தபடியே பாடினாராம். உள்ளே சமீன்தாரோடு சீட்டாடினவர் ஒரு பெண் பாலாதலின் பாரதியார் உள்ளே போகக் கூடாதாம். பாட்டை நிறுத்தியது தெரிந்து சமீன்தார் அதட்டின குரலைத்தான் நாங்கள் கேட்டோம்.

இவ்விசயங்களைக் கேட்டு நாங்கள் வருந்தினோம். “வெறும் சோற்றுக்குத்தான் இப்படித் தாளம் போட வேண்டியிருக்கிறது” என்று அவர் சொன்னார். பிறகு அவர் சுப்பிரமணிய தேசிகருடன் பேசி இன்புற்றார். பல அரிய பாடல்களையும் கீர்த்தனங்களையும் பாடினார். இயலும் இசையும் அவரிடம் இசைந்திருந்தன. அவ்விரண்டிலும் விருப்பமுள்ள தேசிகர் கேட்டுப் பேருவகை அடைந்தார். அந்த வித்துவானுக்கு பதினைந்து ரூபாய் பெறுமான சரிகை வத்திர மொன்றை அளித்தார்.

பாரதியார் அவ்வளவு சம்மானத்தை எதிர்பார்க்கவே இல்லை. “இந்த மாதிரி தாதாக்களும் சம்மானமும் கிடைத்தால் என் ஆயுள் முழுவதும் அடிமையாக இருப்பேனே!” என்று அவர் கூறினார். “நீங்கள் எப்போது வந்தாலும் நமக்கு சந்தோசமே, திருவாவடுதுறைக்கும் வாருங்கள்” என்று தேசிகர் சொன்னார்.

“அருமை தெரியாத முரடர்களுடன் பழகும் எனக்கு அதிருட்டம் இருக்கவேண்டுமே! இருந்தால் அவசியம் வருவேன்” என்று கண் கலங்கியபடியே சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றார்.

(தொடரும்)