Showing posts with label உ.வே.சா.. Show all posts
Showing posts with label உ.வே.சா.. Show all posts

Sunday, April 27, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் : 128- அத்தியாயம்-87: கவலையற்ற வாழ்க்கை

      28 April 2025      கரமுதல



(உ.வே.சா.வின் என் சரித்திரம் : 127 – சிலப்பதிகார ஆராய்ச்சி – தொடர்ச்சி)

நான் வேலையை ஒப்புக்கொண்டபோது கும்பகோணம் கல்லூரியில் உயர்நிலைப்பள்ளி வகுப்புக்களும் இருந்தன. அவ் வகுப்புக்களுக்கு திரு தி.கோ.நாராயணசாமி பிள்ளை என்பவர் தமிழ்ப் பாடம் சொல்லி வந்தார்.

கல்லூரி வேலை தானாக என்னைத் தேடி வந்தாலும் அதனைப் பெறுவதற்குப் பலர் முயற்சி செய்தார்களென்ற செய்தியை நான் அறிந்த போதுதான் அவ்வேலையின் அருமை எனக்குப் புலப்பட்டது. பங்களூர்க் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளையும், இராமாயண வெண்பாவும் பல புராணங்களும் பாடிய தஞ்சைச் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரும், சேலம் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் சரவணப் பிள்ளையும் அவ்விதம் முயன்றவர்களிற் சிலர். அவர்கள் கல்வியிலாகாத் தலைவருக்கு நேரே விண்ணப்பம் செய்து கொள்ள, அவற்றை அவர் கோபாலராவுக்கு அனுப்பி விட்டனர். “தக்கவர் கிடைத்து விட்டமையால் இந்த விண்ணப்பங்களைக் கவனிக்கக்கூட வில்லை” என்று இராயர் பதில் அனுப்பி விட்டதாகத் தெரிந்தது.

நான் விடுமுறையில் திருவாவடுதுறைக்குச் சென்றிருந்தபோது திரிசிரபுரம் வித்துவானும் வித்தவச்சன சேகரருமாகிய கோவிந்தபிள்ளை கும்பகோணத்திற்கு வந்தார். தியாகராச செட்டியார் வேலையினின்று விலகியதை மட்டும் அறிந்த அவர் கோபாலராவிடம் சென்று தம் குமாரருக்குக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் வேலையைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். முதல்வர், “வேறொருவரை நியமித்து விட்டோம்” என்று சொல்லவே, கோவிந்த பிள்ளை வேகமாக, “யார் அவர்?” என்று கேட்டார். நான் வேலைக்கு வந்திருப்பதாக அவர் சொல்லவே பிள்ளை, “அப்படியா மிகவும் சந்தோசம். அவரை எனக்குத் தெரியும். நன்றாகப் படித்தவர்” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார்.

தியாகராச செட்டியார் வேலையை விட்டு நீங்கினாலும் ஓய்வூதிம் விசயமாகச் சில சிக்கல்கள் இருந்தமையால் அவற்றைக் கவனிப்பதற்காக ஆறு மாத காலம் வரையில் அவர் கும்பகோணத்திலேயே தங்கியிருந்தார். அப்பால் அவர் தம் ஊருக்குப் போக ஏற்பாடு செய்தார். பல வருசங்கள் கும்பகோணத்திலிருந்து புகழ்பெற்ற அவருக்கு நகரத்தில் நண்பர்கள் பலர் இருந்தனர். கல்லூரி ஆசிரியர்களும் வேறு கமலசாலை ஆசிரியர்களும் அவரிடம் மிக்க மதிப்பு வைத்திருந்தனர். செட்டியார் கும்பகோணத்தை விட்டுப் புறப்படப் போகிறாரென்ற செய்தியை அறிந்து யாவரும் வருத்தமுற்றனர். அவருக்குத் தக்க உபசாரம் செய்து அனுப்ப வேண்டுமென்றும் ஞாபகார்த்தமாக நல்ல பொருள்களை வழங்க வேண்டுமென்றும் எண்ணினர். முடிவில் ஏறுமுக உருத்திராட்ச கண்டியொன்றையும், நல்ல சால்வை ஒன்றையும் கொடுப்பதாக அபிமானிகள் நிச்சயித்தனர். செட்டியார் புறப்படுவதற்கு முதல் நாள் மாலையில் கலியாணராமையர் தெருவில் உள்ள வக்கீல் டி.சுந்தரமையர் பங்களாவில் கோபாலராவு தலைமையில் செட்டியாருக்கு உபசாரம் நடைபெற்றது. அநேகர் செட்டியாருடைய திறமைகளைப் பற்றிப் பேசினர். நான் அவர் விசயமாகப் பத்துப் பாடல்கள் இயற்றிப் படித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். அப்பாடல்களில் ஒன்று வருமாறு:-

”வருந்தியருந் தமிழ்நமக்கு யார்புகல்வா ரென்றேங்கும்
மனத்தி னோர்கள்
திருந்தியசெந் தமிழ்ச்செல்வன் தியாகரா சப்புலவர்
திலகன் றன்பாற்
பொருந்தியவன் விளங்கவெடுத் துரைத்திடுநல் லுரைகளைத்தம்
புந்தி வைப்பின்
மருந்தியலைந் தியலுணர்வார் கலிபுகல்வார் பிரசங்கம்
வகுப்பார் மன்னோ.”

[புந்தி – அறிவில், ஐந்தியல்-ஐந்திலக்கணங்கள்.]

எல்லாம் நிறைவேறிய பிறகு செட்டியார் கோபாலராவை நோக்கி, “நாளைக் காலையில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன். விடையளிக்க வேண்டும். நான் சிபார்சு செய்தவர் திருப்தி உண்டாகும்படி நடந்து கொள்ளுகிறரா?” என்றார்.

இராயர் உடனே, “தாங்கள் சொல்லியபடி அவர் எல்லாவகையிலும் திருப்தியாகவே நடந்து கொள்ளுகிறார். பிள்ளைகளுக்கும் அவரிடம் மிக்க திருப்தி இருக்கிறது. இந்தச் சபையிலும் தம் திறமையை வெளிப்படுத்தி விட்டாரே” என்று சந்தோசமாகச் சொன்னார். இந்த விசயத்தைச் செட்டியார் அடிக்கடி விசாரித்துப் பலவாறாகத் தெரிந்து கொண்டிருந்தாலும் தாம் விடை பெறும் போது இராயருடைய வாயாலேயே ஒருமுறை கேட்டுவிட வேண்டுமென்று எண்ணியிருந்தார். இராயருடைய வார்த்தைகளைக் கேட்டவுடன் செட்டியார் முக மலர்ச்சியோடு என்னைப் பார்த்தார் நாணத்தால் நான் முகங் கவிழ்ந்தேன்.

கூட்டங் கலைந்த பின் செட்டியாரோடு அவர் வீடு சென்றேன். அவர் மறுநாள் ஊருக்குப் புறப்படுவாரென்பதை நினைத்தபோது எனக்கு ஏதோ ஒரு விதமான துயரம் உண்டாயிற்று. அவரோடு எப்போதும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. வீட்டில் தம்மிடம் பாடங் கேட்டு வந்த மாணாக்கர்களை எனக்குக் காட்டி ஒவ்வொருவரைப் பற்றியும் தனித் தனியே எடுத்துக் கூறி, “இவர்கள் என்னிடம் சில சில நூல்களைப் பாடம் கேட்டு வருபவர்கள். இனிமேல் இவர்களுக்கு நான் பாடம் சொல்ல இயலாது. ஆதலால் இவர்களை உங்களிடம் ஒப்பிக்கிறேன். நான் சொல்லி வந்த பாடங்களைத் தொடர்ந்து சொல்லி வரவேண்டும்” என்றார்.

“தங்கள் உத்தியோகத்தை ஏற்றுக்கொண்ட எனக்கு இது முக்கியமான கடமை தானே?” என்று கூறினேன். அவ்வாறு என்னிடம் பாடம் கேட்கத் தொடங்கியவர்கள் சதாசிவ செட்டியார், குமாரசாமி ஐயர் (வீர சைவர்), இராமலிங்க பண்டாரம், சாமி பண்டாரம், கிருட்டிணசாமி உடையார் என்பவர்கள்.

கல்லூரியில் பாடம் சொல்லுவது எனக்குச் சிரமமாகத் தோற்றவில்லை. ஒவ்வொரு நூலையும் முதலிலிருந்து இறுதி வரையில் விரிவாகப் பாடம் சொல்லப் பழகிய எனக்குக் கல்லூரி வகுப்புக்களுக்குப் பாடமாக வந்துள்ள சில நூற்பகுதிகளைச் சொல்லுவது ஒரு பெரிய காரியமன்று. தனியே யாருக்கேனும் மடத்திற் சொல்லியபடி பிரபந்தங்களையும் வேறு இலக்கண இலக்கியங்களையும் சொல்ல வேண்டுமென்று விரும்பினேன். என் கல்வியறிவு மழுங்காமல் இருப்பதற்கு அதுதான் வழியென்பதை அறிந்தவன் நான். இந்த நிலையில் தியாகராச செட்டியார் தம் மாணாக்கர்களை என்னிடம் ஒப்பித்தது எனக்கு மிக்க திருப்தியைத் தந்தது. அவர்களுக்கு உசிதமான பாடங்களைச் சொல்லத் தொடங்கினேன். கல்லூரிப் பிள்ளைகளிற் சிலர் தனியே என் வீட்டிற்கு வந்து சில நூல்களைப் பாடம் கேட்கலாயினர். கும்பகோணத்திலுள்ள வேறு சிலரும் தமக்கு வேண்டிய நூற்களை என்னிடம் பாடம் கேட்டனர்.

உபசாரம் நடந்த மறுநாள் செட்டியார் கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டுத் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த திருவானைக்காவை அடைந்து அங்கே வசித்து வரலானார். அவ்விடம் சேர்ந்தபின் கும்பகோணத்திலுள்ள நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். எனக்கனுப்பிய கடிதத்தில் விடுமுறைக் காலங்களில் வந்து தம்முடன் இருக்கவேண்டுமென்று வற்புறுத்தி எழுதினார். பின்னும் அடிக்கடி கடிதங்கள் எழுதினார். நானும் அவ்வப்போது பதில் எழுதினேன்.

முதலில் நான் செட்டியாருக்கு வசன நடையிலேயே கடிதங்கள் எழுதினேன். ஒரு பதிற் கடிதத்தில் அவர், “இப்படி எழுதினால் உங்களுக்குச் செய்யுள் செய்யும் பழக்கம் நின்றுவிடும். ஐயா அவர்கள் எழுதும் வழக்கப்படியே முதலில் ஒரு செய்யுளெழுதி அப்பாற் செய்திகளைத் தெரிவிக்கவேண்டுமென்பது என் கருத்தன்று. உங்களுக்குச் செய்யுட் பழக்கம் விடாமலிருக்க வேண்டு மென்பதே என் எண்ணம்” என்று குறிப்பித்திருந்தார். அப்பால் நான் அவ்வாறு செய்யுட்களெழுதி வரலானேன். சில சமயங்களில் கடிதம் முழுவதையும் செய்யுளாகவே எழுதியதுண்டு. அவரும் தம் கடிதங்களின் தலைப்பில் என்னைப் பாராட்டிச் செய்யுட்களை எழுதுவார். என் செய்யுட்களையும் பாராட்டுவார்.

செட்டியார் வற்புறுத்தியது முதல், தோத்திரங்களும் சமயோசிதப் பாடல்களும் செய்து வந்தேன். சிரீ கும்பேசுவரர் விசயமாகத் தனித் தோத்திரங்களும் சிரீ நாகேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பெரியநாயகி விசயமாக ஓர் இரட்டை மணிமாலையும் சுவாமிமலை முருகக் கடவுள் மீது பல செய்யுட்களும் இயற்றினேன்.

ஆடிக் காற்றும் வெள்ளமும் மிகுந்து அவ்வருசம் மரங்களெல்லாம் மிக்க சேதமடைந்தன. அந்த விசயத்தை வைத்துச் சில செய்யுட்கள் இயற்றி நண்பர்களுக்குப் படித்துக் காட்டினேன் அவற்றுள் இரண்டு செய்யுட்கள் வருமாறு:

கழுத்துயர முறுமுடலொட் டகமாதி பன்மிருகம்
கவலப் பல்வீக்
குழுத்துயரக் கமுகுபனை தெங்காதி மரங்கள்குலை
குலைய வேரோ
டிழுத்துயர வெறிந்துயிர்கள் விழுத்துயர மருவமருத்
தியற்றும் நோயாம்
முழுத்துயர மாயவிதைக் காற்றுயர மெனவெவரும்
மொழிவா ரென்னே”

[கழுத்து உயரம் உறும் – உடலையுடைய ஒட்டகம். கவல-கவலையை அடைய, பல்வீ குழு துயர-பல பறவைக் கூட்டங்கள் துயரத்தை அடைய. வேரோடு இழுத்து-உயர எறிந்து. விழுத் துயரம்-மிக்க துன்பத்தை. கால் துயரம்-காற்றினால் உண்டான துயரம்; காற்பங்காகிய துயரம்.)

உரம்பயிலும் பலமரமு மரம்பையுமிக் காற்றினால்
ஒடிந்து சாய்ந்த
வரம்பையறு காலுதையா லெவ்வுயிருந் தலைசாய்தல்
மரபா மன்றோ
சிரம்பயிலும் பந்தருறும் பலகாலிவ் வொருகாலிற்
சிதைந்து வீழ்ந்த
தரம்பயிலீ ததிசயங்கொ லொன்றுபல வற்றைவெலல்
சகச மன்றோ.”

(அரம்பை-வாழை. கால் உதையால்-காற்று அடித்தலினால், காலால் உதைத்தலால். பந்தருறும் பலகால்-பந்தலிலேயுள்ளபலகால்கள். ஒரு காலில்-ஒரு காற்றால்; ஒற்றைக் காலால்.)

“இப்படியே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு பாடல் இயற்றுவது மேல் நாட்டார் வழக்கம்” என்று அவர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். அந்தப் பாடல்களில் கருத்தைக் காட்டிலும் பதங்களின் சமற்காரம் அதிகமாக இருக்கும். அத்தகைய பாடல்களைப் படித்தும் கேட்டும் அக்காலத்தினர் மிக்க இன்புற்றார்கள்.

திருப்பனந்தாளில் காசி மடத்துத் தலைவராக இருந்த இராமலிங்கத் தம்பிரானை ஒரு சமயம் கண்டு எனக்கு வேலையானதைத் தெரிவித்து வரவேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் சொல்லவே நான் ஒரு சனி ஞாயிறு விடுமுறையில் சென்று அவரோடு சல்லாபம் செய்து இருந்து வந்தேன். அவர், “உங்கள் தந்தையார் செய்த பூசா பலன். பிள்ளையவர்கள் உங்கள்பால் வைத்த அன்பு வீண்போகவில்லை. தியாகராசசெட்டியார் மூலமாக அது பயனளித்தது” என்று பாராட்டினார்.

சில மாதங்களுக்குப் பிறகு இராமலிங்கத் தம்பிரான் தமக்கு இளவரசாக என் நண்பரும் திருவாவடுதுறையாதீன வித்துவானாக இருந்தவருமான குமாரசாமித் தம்பிரானை நியமித்தார்.அந்தச் செய்தி தெரிந்தபோது எனக்கு உண்டான சந்தோசம் அளவு கடந்து நின்றது. உடனே திருப்பனந்தாள் சென்று அவரைப்பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் இருந்தேன். சந்தர்ப்பம் கிடைத்தவுடன் போய்ப் பார்த்து என் சந்தோசத்தைத் தெரிவித்து வந்தேன்.
அவர், “எல்லாம் சந்நிதானத்தின் பரிபூர்ண கிருபையால் உண்டானவை. உங்களுக்கு ஒரு பதவி கிடைத்தது. உங்கள் நண்பனான எனக்கு இந்தப் பதவி கிடைத்தது” என்று நன்றியறிவோடு சொல்லிச் சுப்பிரமணிய தேசிகருடைய குணாதிசயங்களை மிகவும் பாராட்டினார்.

எனக்குக் கல்லூரியில் வேலையான சில மாதங்களுக்குப் பிறகு இறைவன் திருவருளால் நான் குடியிருந்த வீட்டில் எனக்கு ஒரு குமாரன் பிறந்தான். இந்தச் சந்தோசச் செய்தியைத் தெரிவிக்க என் பிதா திருவாவடுதுறைக்குச் சென்றார். கற்கண்டு சருக்கரையுடன் சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துச் சொன்னபோது அவர் பரம சந்தோச மடைந்தார். உடனே வீசைக் கணக்காகக் கற்கண்டு கொண்டு வரச் செய்து மடத்திலுள்ள யாவருக்கும் அளித்து, “நம்முடைய சாமிநாதையருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது” என்று தாமே சொல்லிச் சொல்லி இன்புற்றார். அவருடைய மாசு மறுவற்ற அன்பைக் கண்டு என் தந்தையார் விம்மிதமுற்றார். குழந்தையின் சாதகத்தைக் கவனித்தவர்கள், “இக்குடும்பத்திற்கு இனி மேன்மேலும் நன்மை உண்டாகும்” என்று சொன்னார்கள். என் தந்தையார் அந்தச் செய்தியைக் கேட்டு ஆறுதலுற்றார். உத்தமதானபுரத்திற்கு அருகிலிருக்கும் சிறந்த சிவத்தலமாகிய திருநல்லூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சிரீ கலியாண சுந்தரேசுவரருக்குச் செய்து கொண்ட பிரார்த்தனையின் மேல் பிறந்தமையால் குழந்தைக்கு ‘கலியாண சுந்தரம்’ என்று நாமகரணம் செய்தார்கள். மதுரைப் பெருமானுக்கும் உரிய திருநாமமாகிய அது ஒரு வகையில் என் ஆசிரியருடைய ஞாபகத்தையும் உண்டாக்கியது.

நான் ஒரு குழந்தைக்குத் தந்தை யென்னும் நிலையை அடைந்தும் குடும்பப் பாதுகாப்பில் நான் குழந்தையாகவே இருந்தேன். நான் உண்டு, என் வேலை உண்டு, என் புத்தகங்கள் உண்டு. – இவ்வளவோடு நான் நின்றேன். குடும்பப் பாதுகாப்பைப் பற்றியோ, வரவு செலவைப் பற்றியோ, விசேசங்களைப் பற்றியோ நான் கவலை கொள்ளுவதில்லை. அவற்றைக் கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் என் தந்தையாரே மேற்கொண்டார். சம்பளம் வந்தவுடன் அதை அவர் கையில் கொடுத்து விடுவேன். ஒரு பைசா வேண்டுமானாலும் அவரிடமிருந்து பெற்றே செலவிடுவேன். இந்நிலையில் எவ்வளவோ சௌகரியம் இருப்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன். உப்பில்லை, புளியில்லை யென்ற குறை காதில் விழாதிருப்பதைப்போன்ற சுகம் வேறு இல்லை. குடும்பப் பாதுகாப்பு விசயத்தில் அவசியமான செலவை முன்பே யோசித்துச் செட்டாகச் செய்யும் கடமையை என் தந்தையார் ஏற்றுக் கொண்டார். இல்லையேல், ஒரு நாளில் பாதி நேரம் அதிலேயே எனக்குச்” சென்றிருக்கும். என்தந்தையார் எனக்கு இளமை முதல் உதவி புரிந்தாலும் குடும்பச் சுமையை என் தலையில் வைக்காமல் யான் கவலையின்றி வாழும்படி செய்த உபகாரத்தை யான் என்றும் மறக்க இயலாதுதமிழுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு வர வரப் பெருகி வளர்வதற்கு அந்த உதவியே காரணமாயிற்று.

(தொடரும்)

Sunday, April 20, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் : 127 – சிலப்பதிகார ஆராய்ச்சி

 




நான் வேலையை ஏற்றுக் கொண்ட வருடத்தில் சிலப்பதிகாரத்தில்

கானல்வரி முதல் நான்கு காதைகள் பாடமாக வந்திருந்தன. அதைக் கோடை

விடுமுறை முடிந்தவுடன் பாடம் சொல்ல வேண்டியவனாக இருந்தேன். “இவர்

சிலப்பதிகாரத்தை எப்படிப் பாடம் சொல்லப் போகிறார்?” என்று சிலர்

சொல்லிக் கொண்டிருந்ததாக என் காதில் பட்டது. ஆகவே அதைக் கூடிய

வரையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நிச்சயம் செய்து

கொண்டேன். இருந்த அச்சுப் பிரதியின் உதவி கொண்டு விசயத்தைத்

தெரிந்துகொள்ளுவது கடினமாகவே இருந்தது. இந்த விசயங்களை நான்

சுப்பிரமணிய தேசிகரிடம் சொன்னபோது அவர், “மடத்தில் ஏட்டுப்

பிரதியிருக்கிறது. சின்னப் பண்டாரத்தினிடம் படித்துத் தெரிந்து கொள்ளலாம்”

என்றார். பிள்ளையவர்களுக்கே சந்தேகமான புத்தகத்தில் நமசிவாய தேசிகர்

தேர்ச்சியடைய நியாயம் இல்லை. ஆனாலும் சிறந்த அறிவாளியாகிய

அவருடன் சேர்ந்து ஆராய்ந்து வரையறை செய்து கொள்வதில் பல இலாபம்

உண்டு. அதனால் நான் சிலப்பதிகார ஏட்டுச் சுவடியை எடுத்துக் கொண்டு

நமசிவாய தேசிகரிடம் சென்று படித்தேன். இருவரும் கவனித்து ஆராய்ந்தோம்.

ஒரு விதமாகப் படித்து முடித்தோம்; பொருள் வரையறையும் செய்து

கொண்டோம்.

இப்படிச் சில நாட்கள் சென்றன. வேறு நூல்களைப் படிப்பதும், பாடஞ்

சொல்வதுமாக மற்ற நாட்கள் போய்க் கொண்டிருந்தன.

விடுமுறை முடிந்தவுடன் கும்பகோணத்தில் நிரந்தரமாகக் குடித்தனம்

வைத்து விடலாமென்று என் தந்தையார் சொன்னார். அதன் பொருட்டு அங்கே

ஒரு வீடு பார்ப்பதற்காக அவர் கும்பகோணத்திற்கு புறப்பட்டார்.

புறப்படும்போது என் தாயார், “காவேரிக்குப் பக்கமாக இருந்தால் நல்லது”

என்றார். “கல்லூரிக்கும் பக்கமாக இருந்தால் சௌகரியமாக இருக்கும்”

என்றேன் நான். அவர் கும்பகோணத்திற்கு நடந்தே சென்றார். இரெயில்

வண்டியில் ஏறும் வழக்கம் அவருக்கு இல்லை. கும்பகோணத்தில் சில தெருக்களைப் பார்த்து விட்டுப் பக்தபுரி அக்கிரகாரத்துக்குள் செல்லும்போது, “மங்களாம்பா இருக்கிறாள்; பயமில்லை” என்று யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் பட்டது.

கும்பகோணம் கும்பேசுவரராலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின்

திருநாமம் அது. அந்த வார்த்தைகள் நல்ல சகுனமாகத் தோன்றவே அவர்

அந்தத் தெருவின் மத்தியில் கீழ்ச் சிறகில் ஒரு வீட்டைப் பார்த்துத் திட்டம்

செய்தார். மாதம் மூன்றரை உரூபாய் வாடகை பேசினார். பதினைந்தடி அகலமும்

நாற்பதடி நீளமும் உள்ளது அது. வீட்டிற்குப் பின் நீண்ட தோட்டமும்

இருந்தது.

வீடு எல்லாரும் இருப்பதற்குப் போதுமானதாக இராவிட்டாலும்

சகுனத்தின் விசே்த்தால் என் தந்தையாருக்கு அதுவே பெரிய மாளிகையாகத்

தோற்றியது. வாழ்க்கையில் பல வகையான துன்பங்களையும், வறுமையின்

சங்கடங்களையும் அனுபவித்துத் தேர்ந்த அவருக்குப் பணம் கிடைத்தால்

எவ்வளவு செட்டாக வாழமுடியுமோ அவ்வளவு செட்டாக வாழ வேண்டுமென்ற

சங்கற்பம் இருந்தது. அதனால் அவருடைய நோக்கத்துக்கு அந்த வீடு

ஏற்றதாகவே அமைந்தது.

வீட்டைப் பார்த்துத் திட்டம் செய்துவிட்டு நடந்தே திருவாவடுதுறை

வந்து சேர்ந்தார். “காவிரிக்கும் கல்லூரிக்கும் பக்கமாக இருக்கிறது; இரண்டாம்

வேளை ஆகாரத்துக்கு வீட்டுக்கு வந்து போகலாம். நல்ல சகுனமாயிற்று”

என்று சொல்லி எங்களுக்குச் சந்தோசத்தை உண்டாக்கினார்.

விடுமுறை முடிந்தது. என் தகப்பனாருக்குத் திருவாவடுதுறையை விட்டுப்பிரிய மனம் வரவில்லை. ஆனாலும் ஒரு வகையாகச் சமாதானம் செய்து கொண்டார். யாவரும் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் மற்ற அன்பர்களிடத்திலும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டுக் கும்பகோணம் வந்து புது வீட்டில் புகுந்தோம். அதுவரையில் திருவாவடுதுறை வாசியாக இருந்த நான் அன்று முதல் கும்பகோண நகர வாசியாக என் வாழ்க்கையைத் தொடங்கினேன்

(தொடரும்)

Sunday, March 30, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 124 : எனக்கு உண்டான ஊக்கம்

 




(உ.வே.சா.வின் என் சரித்திரம்  123 : இரண்டாவது பாடம்-தொடர்ச்சி)

      இரண்டாம் நாள் (17-2-1880) நான் வழக்கப்படி கல்லூரிக்குச் சென்று பாடங்களை நடத்தினேன். தியாகராச செட்டியார் அன்று மூன்று மணிக்கு மேல் வந்து நான் பாடம் சொல்லுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு மேல், சீநிவாசையர் செட்டியாரிடம் வந்து, “இன்று நான்கு மணிக்கு மேல் தமிழ்ப் பாடம் எந்த வகுப்பிற்கு என்று இராயர் கேட்டார். அந்த வகுப்பிற்கு அவர் ஒரு வேளை வரலாம். சாக்கிரதையாகப் பாடம் சொல்லச் சொல்லுங்கள்” என்று கூறிச் சென்றார். வகுப்பு விட்டவுடன் செட்டியார் என்னிடம் இதைச் சென்னதன்றி “இராயரைக் கண்டு பயந்து ஏதாவது உளறி விடாமல் சாக்கிரதையாகச் சொல்லுங்கள். நாங்களெல்லாம் திருப்தி அடைவது முக்கியமன்று. அவருடைய திருப்திதான் முக்கியம். அவருக்கு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்தார்.

கோபாலராவு வரவு

பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குள் நான் சென்றேன். செட்டியாரும் உடன் வந்தார். அங்கே நன்னூல் பாடம் நடத்தத் தொடங்கினேன்.

பெயரியலில், “ஒன்றே யிருதிணைத் தன்பாலேற்கும்” என்னும் சூத்திரத்தைச் சொல்லி வந்தேன். அப்பொழுது ஒரு சேவகன் நாற்காலி ஒன்றை எடுத்து வந்து என் பக்கத்தில் போட்டான். அடுத்த நிமிடம் கோபாலராவு வந்தார். உடனே எழுந்து அஞ்சலி செய்தேன். “நீங்கள் சும்மா இருந்து பாடத்தை நடத்துங்கள்” என்று சொல்லி விட்டு அவர் அந்த நாற்காலியில் அமர்ந்தார்.

நான் சூத்திரத்திற்கு உரையும் உதாரணங்களும் சொல்லி விட்டுக் கேள்விகள் கேட்டேன். இராயர் ஒரு மாணாக்கரிடமிருந்து ஒரு நன்னூல் புத்தகத்தை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு கவனித்து வந்தார்.

அவர் அங்கே இருந்ததில் எனக்குச் சிறிதும் அதைரியம் ஏற்படவில்லை. ஊக்கத்துடனே சொல்லி வந்தேன். அவர் நன்னூலை நன்றாகக் கற்றவரென்பதைத் தியாகராச செட்டியார் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார்.அதனால் எனக்குப் பின்னும் தைரியமே பிறந்தது. நன்னூலை இளமைதொடங்கியே நான் படித்துப் பல வகையாக ஆராய்ந்து சிந்தித்து ஒழுங்கு படுத்தி ஞாபகத்தில் வைத்திருந்ததால் அதனைப் பாடம் சொல்லுவது எனக்கு மிகவும் சாதாரணமாக இருந்தது. நான் முன்னும் பின்னுமுள்ள செய்திகளோடு இயைத்து விடயங்களை விளக்கினேன். நூல் முற்றும் படித்த இராயர் அவற்றிலிருந்து என் பயிற்சியை உணர்ந்து திருப்தியடையக் கூடும் என்ற நம்பிக்கையோடு நான் பாடம் சொன்னேன்.

மற்றச் சமயங்களில் இடையே ஏதாவது சொல்லியும் கேள்வி கேட்டும் வந்த செட்டியார் அப்பொழுது ஒன்றும் பேசாமல் எல்லாவற்றையும் கவனித்து வந்தார். இராயர் முகத்தில் ஏற்படும் விருப்பு வெறுப்புக் குறிப்புக்களினால் அவரது அபிப்பிராயத்தை அறிய முயன்றார். ஆனால், கோபாலராவு முகத்தில் புதிய குறிப்பு ஒன்றையும் அவர் காணவில்லை. எப்பொழுதும் உள்ளது போன்ற மலர்ச்சி இருந்தது. தம்முடைய விருப்பு வெறுப்புக்களை அவ்வப்போது வெளிப்படுத்தும் இயல்புடையர் அல்லர் அவர். கம்பீரமான தன்மையினர். அவருடைய அபிப்பிராயத்தை எளிதில் யாவரும் அறிந்து கொள்ள முடியாது. செட்டியார் ஒரு குறிப்பும் அறியாத வராகிச் சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தார்.

செட்டியாரின் ஆவல்

மணி ஐந்து அடித்தது. கோபாலராவு, தம் கையில் உள்ள புத்தகத்தை உரிய மாணாக்கரிடம் கொடுத்து விட்டு எழுந்தார். நானும் செட்டியாரும் எழுந்து நின்றோம். கோபாலராவு உள்ளத்தில் எவ்வகையான கருத்து உண்டாயிற்றென்பதை அறிய எனக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது. அதை எவ்வாறு தெரிந்துகொள்வது?

அவ் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கிருட்டிணையரென்னும் மாணாக்கர் அப்போது திடீரென்று எழுந்து இராயரை நோக்கி, “ஒரு விஞ்ஞாபனம்; மாணாக்கர்களாகிய நாங்களெல்லாரும் ‘செட்டியாரவர்கள் வேலையை விட்டு விலகிக் கொள்கிறார்களே; இனி என்ன செய்வோம்?’ என்ற கவலையில் நேற்று வரையில் மூழ்கியிருந்தோம். இப்போது அந்தக் கவலை நீங்கி விட்டது. செட்டியாரவர்கள் தாம் இருந்த தானத்துக்குத் தக்கவர்களையே அழைத்து வந்து அளித்து எங்கள் பயத்தைப் போக்கி விட்டார்கள்” என்று சொன்னார்.

அவர் அவ்வளவு தைரியமாகப் பேசியது குறித்து வியந்து அவரைப் பார்த்தேன். செட்டியார் கண்களும் அன்புடன் அவரை நோக்கின. இராயரோ அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்முறுவல் செய்து புறப்பட்டார். நாங்களும் புறப்பட்டோம்.

இராயவர்களுக்கு நான் பாடம் சொன்ன விடயத்தில் என்ன அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கலாமென்ற கேள்வியைக் கல்லூரி ஆசிரியர்கள் எல்லாரிடமும் செட்டியார் கேட்டார்.

“நல்ல அபிப்பிராயமாகத்தான் இருக்க வேண்டும்” என்று சிலர் சொன்னார். இராயரோடு நெருங்கிப் பழகும் சேசையர் முதலியோர் “பிள்ளைகளுக்கு விளங்கும்படி சொல்கிறார் என்பதே அவர் அபிப்பிராயம் என்று தெரிகிறது” என்றார்கள். செட்டியார் என்னைப் பார்த்து, “இராயர் இப்படியே அடிக்கடி வந்து கவனிக்கக்கூடும். எப்பொழுது வந்து கவனித்தாலும் அதை என்னிடம் சொல்ல வேண்டும் என்றார்.

மடத்து நிகழ்ச்சிகள்

அந்த வாரம் முழுவதும் உற்சாகத்தோடு என் கடமையைச் செய்து வந்தேன். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் செட்டியார் வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி வருவேன். அன்றன்று நடந்தவற்றை அவரிடம் தெரிவிப்பேன்.

திருவாவடுதுறையிலிருந்து ஒவ்வொரு நாளும் யாரேனும் வந்து என்னைக் கண்டு நிகழ்ந்தவற்றைத் தெரிந்து கொண்டு செல்வார். அங்கே மடத்தில் என்னிடத்தில் படித்தவராகிய தெய்வசிகாமணி ஐயரென்பவர் சில நாட்கள் வந்து செய்திகள் தெரிந்து சென்றார். அவர் மூலமாகச் சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பற்றி அங்கே வருபவர்களிடம் சந்தோசத்தோடு பேசி வருவதாக அறிந்தேன்.

கும்பகோணத்திலிருந்து யார் போனாலும் தேசிகர் என்னைப்பற்றி விசாரிப்பார். கல்லூரியில் படித்து வந்த பிள்ளைகளின் தந்தையாரோ உறவினர்களோ மடத்துக்குப் போவார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்லூரியில் படிப்பதாகவும் என்னைப் பற்றித் திருப்தியாகச் சொல்லுவதாகவும் தெரிவிப்பார்கள். கேட்ட தேசிகர் மகிழ்ச்சியடைவார். தமிழில் அன்பும், என்பால் அபிமானமும் உள்ள பலர் கல்லூரியில் பாடம் நடக்கும்போது புறத்தே நின்று நான் பாடம் சொல்லுவதைக் கேட்டிருந்து நான் வெளியே வந்தவுடன் தங்கள் திருப்தியைத் தெரிவிப்பார்கள். இவ்வளவும் சேர்ந்து, ‘நாம் ஒரு புதிய வேலையை மேற்கொண்டிருக்கிறோமே; எப்படி நிர்வகிக்கப் போகிறோம்!’ என்ற கவலை எனக்கு இம்மியளவும் இல்லாதபடி செய்து விட்டன.

திருவாவடுதுறை மடத்தில் நான் சந்தோசமாகப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அங்கே நான் அடைந்த இன்பம் ஒரு வகை, கும்பகோணம் கல்லூரியில் நான் அடைந்த இன்பம் வேறு வகை. இரண்டிடங்களிலும் கட்டுப்பாட்டுக்கடங்கி நடக்கும் நிலை இருப்பினும், மடத்தில் பல விடயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தமையால், சம்பிரதாயம், மடத்து நிர்வாகம் முதலியவற்றினிடையே தமிழ்க் கல்வியின் தொடர்பு மாத்திரம் உடையவனாக நான் இருந்தேன். சுப்பிரமணிய தேசிகரும் பல துறைகளில் தம் கவனத்தைச் செலுத்த வேண்டியவராக இருந்தார். கல்லூரியிலோ கல்வியையன்றி வேறு விடயங்களுக்கு இடமில்லை. எவ்வளவு பெரியவிடயமாக இருந்தாலும் கல்விக்கு இடையூறு என்பதை அங்கே காண முடியாது. ஆகவே மடத்தில் மற்றக்காரியங்களில் ஈடுபட்டவர்களோடு கல்வி ஒன்றையே எண்ணி வாழ்ந்த எனக்கு எல்லாம் கல்வி மயமாக உள்ள கல்லூரியில் வரையறையான காலம், வரையறையான வேலை, வரையறையான பாடம் இவற்றின் துணையுடன் பாடம் சொல்வது விளையாட்டாகவே இருந்தது.விளையாட்டில் அதிக இன்பம் உண்டாவது இயல்புதானே?

திருவாவடுதுறைக்குச் சென்றது

இந்த இன்ப வாழ்வைப்பற்றி என் தாய் தந்தையருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் சொல்ல வேண்டுமென்று நான் துடித்துக் கொண்டிருந்தேன். அந்த வாரம் வெள்ளிக்கிழமை கல்லூரி விட்டவுடனே போயிருப்பேன். அந்த வேளையில் புகை வண்டியில்லை. அதனால் மறுநாள் சனிக்கிழமை பகல் வண்டியில் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்து நேரே வீட்டிற்குச் சென்றேன். என்னுடைய வரவை எல்லாரும் எதிர்பார்த்திருந்தார்கள். வீட்டு வாசலில் என் தாயார் ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் நீரை வைத்துக்கொண்டு காத்திருந்தார். என்னைக் கண்டவுடன் ஆரத்தி சுற்றி, “உள்ளே வா, அப்பா” என்று அன்புடன் அழைத்தார்.

என் தாய் தந்தையார் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டனர். நான் பதில் சொன்னவாறே குளிலையும் உணவையும் முடித்துக் கொண்டேன். வேலையைப்பற்றி அவர்களுக்கு ஒருவாறு சொல்லிவிட்டு மடத்திற்கு விரைந்து சென்றேன். அப்பொழுது மிகுந்த முகமலர்ச்சியோடு சில அன்பர்களுடன் ஒடுக்கத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருந்தார். நான் போய்க் கண்டேன். இருவருக்கும் உண்டான ஆனந்தம் இப்படியென்று எடுத்துச் சொல்வது அரிது.

தேசிகரது திருப்தி

“உம்மைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படியும் நீர் ஒரு தடையுமின்றி வேலையைப் பெற்றுக்கொள்வீரென்றும், உபாத்தியாயர்களும் பிள்ளைகளும் நீர் பாடம் சொல்வதில் சந்தோசப்படுவார்களென்றும் நாம் எதிர்பார்த்ததுண்டு. அந்தப் படியே செயமடைந்து நல்ல பெயர் வாங்கி வந்ததைப்பற்றி மிக்க சந்தோசம்” என்று அவர் சொல்லிய வார்த்தைகள் என் காதில் அமுதம்போல் விழுந்தன. ஒரு வார காலமாக அவரது இன்மொழிகளைக் கேளாமல் பசித்திருந்த என் செவிகள் திருப்தி யடைந்தன.அந்த வார்த்தைகளினூடே ததும்பிய அன்பை மாந்தி நிறைந்த உள்ளத்தோடு இருந்த எனக்கு உடனே விடை சொல்ல இயலவில்லை. சில நிமிடங்கள் கழித்து, “எல்லாம் ஸந்நிதானத்தின் பேரன்பே” என்று சொல்லிவிட்டு நான் இயற்றி வைத்திருந்த பின்வரும் செய்யுளைச் சொன்னேன்:-

அற்றார்க்குத் தாயனைய துறைசையிற்சுப் பிரமணிய

அமலன் றன்பால்

கற்றார்க்குக் குறையுளதோ மற்றவன்றன் திருமுகத்தைக்

கண்ணிற் காணப்

பெற்றார்க்குத் துயருளதோ வுரைப்பமிக வினிக்குமவன்

பெயரை வாயால்

சொற்றார்க்குத் துயருளதோ யிரும்புவியி னாவலர்காள்

சொல்லுவீரே”

[சொற்றார்க்கு-சொல்லுபவர்களுக்கு.]

இச்செய்யுள் என் உள்ள மகிழ்ச்சியிலிருந்து எழுந்ததென்பதைத் தேசிகர் உணர்ந்து கொண்டார். பிறகு ஒவ்வொரு விடயமாக விசாரித்து வந்தார். நான் சொல்லச் சொல்ல அவர் புதுமைகளைக் கேட்பவர்போல மகிழ்ச்சியடைந்தார்.

அன்பர்களது வியப்பு

சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அங்கே தங்கித் தேசிகருடைய சல்லாபத்தில் ஒன்றியிருந்தேன். சின்னப் பண்டார சந்நிதியாகிய நமசிவாய தேசிகரிடமும் விடயங்களைத் தெரிவித்தேன். மடத்தில் உள்ள அன்பர்கள் யாவரும் என்னைச் சுற்றிச் சூழ்ந்து ஆவலுடன் கல்லூரி விடயங்களை விசாரித்தார்கள். காலேஜின் பெருமையையும், புறத் தோற்றத்தையும் அறிந்த அவர்கள் கோபாலராவின் பெருந்தன்மை, ஆசிரியர்களின் தகுதி, மாணாக்கர்களின் இயல்பு, வகுப்புகளின் ஒழுங்கு, அங்குள்ள சௌகரியமான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏதோ ஒரு புதிய தேசத்துக்குப் போய் வந்தவனிடம் புதுமைகளைத் தெரிந்து கொள்ளுவதில் சனங்கள் எவ்வளவு வேகமாக இருப்பார்களோ அப்படியே இருந்தார்கள் அவர்கள். இரண்டு தினங்கள் போனதே தெரியவில்லை. திங்கட்கிழமை விடிந்தவுடன் முதல் வண்டியில் ஏறிக் கும்பகோணம் போய்ச் சேர்ந்தேன்.

(தொடரும்)

Sunday, March 09, 2025

உ.வே.சா.வின் என் சரித்திரம் 123 : இரண்டாவது பாடம்

 

உ.வே.சா.வின் என் சரித்திரம்  123 : 

இரண்டாவது பாடம்



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 122: கல்லூரி நுழைவு – தொடர்ச்சி)

அடுத்த மணியில் பி. ஏ. முதல் வகுப்புக்குப் பாடம் சொல்லப் போனேன். செட்டியாரும் வேறு சில ஆசிரியர்களும் உடன் வந்தார்கள். சேசையர் விருப்பத்தின்படி சமற்கிருதப் பண்டிதராகிய பெருகவாழ்ந்தான் இரங்காசாரியரும் வந்தார். அங்கே இராமாயணத்தில் அகலிகைப் படலம் பாடம் சொல்லத் தொடங்கினேன். முதற் பாட்டைச் சகானா இராகத்தில் படித்துவிட்டுப் பொருள் சொல்லலானேன்.

நான் பாடம் சொல்லும் போதெல்லாம் பிள்ளைகள் என்னையே பார்த்துக் கவனித்து வந்தார்கள். செட்டியாரோ அவர்களில் ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்து வந்தார். எல்லோருடைய முகத்திலும் திருப்தியின் அடையாளம் இருந்ததை அவர் உணர்ந்து தாமும் திருப்தியுற்றார். இவ்வாறு இருந்த சமயத்தில் நான் சொன்ன ஒரு விசயத்தை இரங்காசாரியார் எழுந்து ஆட்சேபித்தார். நான் சமாதானம் சொல்லத் தொடங்குகையில் செட்டியார் எழுந்து மிக விரைந்து அவரிடம் சென்று அஞ்சலி செய்து, “சுவாமிகள் இந்த சமயம் ஒன்றும் திருவாய் மலர்ந்தருளக் கூடாது. இவர் பிள்ளைகளுக்குப் பொருள் விளங்கச் சொல்லுகிறாரா என்பதை மட்டும் கவனித்தாற் போதும். ஆட்சேபம் பண்ணக்கூடிய சமயம் அல்ல இது.இவரோ சிறு பிள்ளை. நீங்களோ பிராயம் முதிர்ந்தவர்கள். சமற்கிருதப் பாரங்கதர். ஏதேனும் தவறிவிட்டால் என்னுடைய விருப்பம் பூர்த்தியாகாது. சமித்தருளவேண்டும்” என்று சொல்லி மீண்டும் தம் இடத்தில் போய் அமர்ந்தார். மற்ற இடங்களில் செட்டியார் தைரியமாகப் பேசிப் பிறரை அடக்குவதைக் கண்டிருந்த நான் அப்போது கல்லூரியிலும் அப்படிச் செய்வதில்அவர் பின் வாங்கார் என்பதை உணர்ந்தேன்.

மேலே பாடம் நடந்தது. “வைகுந்தத்திற்குச் சென்ற வித்தியாதரப் பெண்மணி ஒருத்தி திருமகளைத் தோத்திரம் செய்து பாட அத்தேவி மகிழ்ந்து ஒரு மாலையைக் கொடுக்க அதனை வாங்கி அந்தப் பெண்மணி தன் யாழிற்குச் சூட்டினாள்” என்ற செய்தி அகலிகைப் படலத்தில் வருகிறது. “அன்ன மாலையை யாழிடைப் பிணித்து” என்று ஒரு பாடல் தொடங்குகிறது. அதற்கு நான் பொருள் சொல்லும்போது இடையே செட்டியார், “இந்தக் காலத்துப் பிள்ளைகளானால் பக்கத்திலுள்ள தங்கள் நாயின் கழுத்தில் அதை மாட்டுவார்கள்” என்றார். யாவரும் கொல்லென்று சிரித்தனர்.

பிற்பகல் நிகழ்ச்சிகள்

அந்த மணி முடிந்தது. இடை நேரத்திலே ஆகாரம் செய்து விட்டு வந்தேன். பிற்பகலில், எப். ஏ. முதல் வகுப்புக்குச் சென்றோம். அங்கே 80 பிள்ளைகளுக்கு மேல் இருந்தார்கள். நன்னூல் எழுத்தியல் ஆரம்பமாயிற்று. முதல் சூத்திரத்தை நான் சொல்லிவிட்டு, “மேலே சில சூத்திரங்களை நீங்களே சொல்லி அந்த முறையை எனக்குக் கற்பிக்க வேண்டும்” என்று செட்டியாரை வேண்டிக் கொண்டேன். அவர் அப்படியே சொல்லிக் கேள்விகளும் கேட்டார். எனக்குப் பல விசயங்கள் அப்போது தெரிந்தன. பிறகு, பி..ஏ. இரண்டாவது வகுப்புக்குச் சென்றோம். அந்த வகுப்பில் இருந்தவர்கள் செட்டியாரிடம் மூன்று வருசங்கள் பாடம் கேட்டவர்கள். அந்த வருசம் பரீட்சைக்குப் போக வேண்டியவர்கள். புதுக்கோட்டையில் முதல்வராக இருந்த எசு.இராதா கிருட்டிணையர். கோயம்புத்தூரில் சிறந்த வழக்குரைஞராக விளங்கிய பால கிருட்டிணையர், திருநெல்வேலி இந்து கல்லூரியில் ஆசிரியராக இருந்த சீதாராமையர் முதலிய பன்னிரண்டு பேர்கள் அவ்வகுப்பில் இருந்தார்கள்.

      கம்ப இராமாயணத்தில் நாட்டுப் படலம் பாடமாக இருந்தது. “வாங்கரும்

பாத நான்கும் வகுத்தவான் மீகியென்பான்” என்ற பாடலைச் சொல்லிப்

பொருள் கூறிவிட்டு இலக்கணக் கேள்விகள் கேட்கலானேன்.

      ஒரு மாணாக்கரை, “வாங்கரும் பாதமென்பதிலுள்ள அரும்பாதம் என்பது என்ன சந்தி?” என்று கேட்டேன். அவர், “பெயரெச்சம்” என்றார். பண்புத் தொகையாகிய அதைப் பெயரெச்சமென்று பிழையாகச் சொல்லவே, அங்கிருந்த செட்டியார் உடனே தலையில் அடித்துக்கொண்டு, “என்ன சொல்லிக் கொடுத்தாலும் சில பேருக்கு வருகிறதில்லை. மூன்று வருசம் என்னிடம் பாடம் கேட்டவன் இப்படிச்சொன்னால் எனக்கல்லவா அவமானம்?” என்று அந்த மாணாக்கரை நோக்கிச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து,“தள்ளாத வயசில் நான் எவ்வளவு சொல்ல வேண்டுமோ அவ்வளவு சொல்லாமல் இருந்திருப்பேன். அதனால் தான் வேலையை விட்டு நீங்குகிறேன். நீங்கள் நன்றாகச் சொல்லிக் கொடுங்கள்” என்றார்.

      மேலே நான் பாடம் சொன்னேன். மணி அடித்தது. உடனே நாங்கள் கல்லூரியை விட்டுப் புறப்பட்டோம்.

      முதல் நாளாகிய அன்றே எனக்கு, ‘நம் வேலையை நன்றாகச் செய்யலாம்’ என்ற தைரியம் பிறந்தது. பிள்ளைகளுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும், எல்லாருக்கும் மேலாகத் தியாகராச செட்டியாருக்கும் நான் அந்தப் பதவிக்கு ஏற்றவனென்ற திருப்தி உண்டாயிற்று.

(தொடரும்)