தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள்.
1. அச்சுக்கலைத் தந்த ஆந்திரிக்கசு அடிகளார்
முன்னுரை :
உலக மொழிகள் மூவாயிரத்துக்கு மேற்பட்டவை. உலகின் முதன் மொழியாக ஒளியுடன் மிளிர்வது தமிழ். இரண்டாயிரத்துப் பத்து மொழிகளில் இடம் பெற்றுள்ள விவிலியத் திருநூல், பாபேல் கோபுரம் கட்டப்பட்டபோது ஒரே மொழியாகத் தமிழ் திகழ்ந்ததைத் தெளிவுறுத்துகிறது. தொடக்கநூலில் (1:1-2)இரண்டு தொடர்கள் இச்செய்தியை எடுத்துரைக்கின்றன. உலகம் முழுவதும் ஒரே மொழியும் ஒரே வார்த்தையும் இருந்தன. பாபேல் கோபுரத்தை கட்டிய பெருமைக்குரியவர் தமிழர். கிழக்கே இருந்து சென்ற தமிழர் சிநேயார்ச்சு சமவெளியில் தங்கி அக்கோபுரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் இலக்கிய வரலாறு பன்னீராயிரம் ஆண்டுகளாக நிலவி வருவதை இறையனார் களவியல் உரை விளம்புகிறது. அச்சுக்கலை முதல் ஆராய்ச்சித்துறை வரை பல்வேறு நீலைகளில் அயல்நாட்டுத் தமிழறிஞர் வியத்தகு பணியாற்றியுள்ளனர்.
1. அச்சுக்கலைத் தந்த ஆந்திரிக்கசு அடிகளார் (1520-1600) :
போர்த்துக்கல் நாட்டு வில்லா விசோவாவில் தோன்றிய என்றி என்றிக்கசு, தமிழகத்தின் புனைனக்காயலில் திருமறைத் தொண்டு ஆற்ற வருகை தந்தார். சேசுசபைத் துறவியான இவர், கடற்கரைச் சிற்றூர்களில் செயலாற்றினார்; பனை ஓலைச் சுவடிகளில் எழுதிப் பழகிய மக்களுக்கு அச்சுப்பொறி வாயிலாக நூல்களை உருவாக்கி வழங்கிய பெருமை பொருந்தியவர், தமிழை முறையாகக் கற்று மொழிபெயர்ப்பாளராகவும் பதிப்பாசிரியராகவும் இலக்கண ஏந்தலாகவும் அகராதி அறிஞராகவும் வரலாற்று மேதையாகவும் மடல்கள் பல தீட்டிய சான்றோராகவும் விழுமிய சமயத் தீருத்தொண்டராகவும் விளங்கினார். தமிழில் ௮ச்சேறிய முதல் மூன்று நூல்களையும் போர்த்துக்கீசிய மொழியிலிருந்து தமிழாக்கம் செய்து வழங்கியுள்ளார். தம்பிரான் வணக்கம் என்னும் பதினாறு பக்க ஏடு கொல்லத்தில் 20.10.1576 அன்று அச்சிடப்பட்டது; அமரிக்க நாட்டு ஆர்வருடு பல்கலைக் கழகத்தில் உள்ளது. கிரிசித்தியானி வணக்கம் என்னும் நூற்று இருபத்திரண்டு பக்க நூல் 14.11.1579 அன்று கொச்சியில் அச்சாயிற்று; பாரீசு தேசிய நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. அருளாளர் கொன்சால்வசு அவர்கள் உறுதுணையோடு புன்னைக்காயலில் நிறுவப்பட்ட அச்சகத்தில், அறுநூற்று அறுபத்தெட்டுப் பக்கங்கள் கொண்ட அடியார் வரலாறு 1586ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. வத்திக்கான் நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. ஆந்தீரிக்கசு அடிகளார் நல்கிய கொம்பேசியோனாயிரு (1580) விரிவாக அமைந்துள்ளது. அடிகளார் போர்த்துக்கீசிய மொழியில் தமிழ் இலக்கணம், தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி ஆகியவற்றையும் அருளியுள்ளார். அயல் நாட்டவருக்குத் தமிழ் நாடு, தமிழ்மொழி பற்றி அறுபது கடிதங்களையும் எழுதியுள்ளார். இறைவனையே தம்பிரான் என்று குறிக்கும் அடிகளார், அவருக்குச் செலுத்தும் வழிபாட்டையே வணக்கம் ௭ன்று விளம்பியுள்ளார். பரதவர் பயன்படுத்திய படகுகளின் வகைகளையும் குறிப்பிட்டுள்ளார். உரு என்பது நீளமுகக் கப்பல் ; தோணி என்பது வட்டமுகக் கப்பல்; கட்டுமரம், கப்பல், சம்பான், பரிசல், மரக்கலம், வள்ளம் என்று பலவகைப் படகுகளையும் பட்டியலிட்டுள்ளார்; போர்த்துக்கீசிய – தமிழ் உறவுப் பாலத்தை உருவாக்கியவர் இவரே.
2. இத்தாலியத் தமிழ் ஏந்தல் வீரமாமுனிவர் (1680-1742) :
பதினெட்டாம் நூற்றாண்டில் இயேசுபெருமானின் திருத்தொண்டராகத் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வீரமாமுனிவர் 1711 முதல் 1747 வரை முப்பத்தாறு ஆண்டுகள் திருமறைக்கும் தீந்தமிழுக்கும் விழைந்து உழைத்துள்ளார். தம் வாழ்நாளில் முப்பத்தைந்து நூல்கள் நல்கிய பெருமிதம் பொருந்தியவர்.
அகராதி ஆக்கம், இலக்கணப் படைப்பு, எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம், உரைநடை மறுமலர்ச்சி, கடிதஇலக்கிய வளர்ச்சி, காப்பியப் புனைவு. சித்த மருத்துவ நூலாக்கம், சிறுகதைத் தோற்றம், சிற்றிலக்கியஎழுச்சி, தமிழ் – இலத்தீன் உறவுப் பாலம், மொழியில் முனைப்பு, வள்ளுவத்தை வையக நூலாக்கும் முயற்சி, சமய நல்லிணக்கச் சால்பு என்று பல்வேறு துறைகளில் முறையாகவும்நிறைவாகவும் தொண்டாற்றியுள்ளார். வீரமாமுனிவருக்குத் தமிழிலக்கியச் சோலையில் அழிவில்லா உருவச் சிலை ஒன்று அமைந்திருக்கிறது; கண் உள்ளவர்கள் கண்டு கொள்ளலாம் என்று பி.சிறீ ஆச்சார்யா “நான் அறிந்த தமிழ் மணிகள்” என்னும் நூலில் (289) கூறியுள்ளார்.
கோனான்குப்பத்தில் அன்னை மரியாளுக்குத் திருக்கோவில் எழுப்பி, அவளுக்குப் பெரிய நாயகி என்று பெயரிட்டு, அவ்வூரை ஆரியனூர் என்று போற்றியுள்ளார்; அங்கிருந்தே இயேசுவின் தந்தை யோசேப்புக்கு வாடாத மாலை என்று பொருள் தரும் தேம்பாவணிக் காப்பியத்தை இயற்றியுள்ளார்;
கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்த ஏலாக்குறிச்சியைத் திருக்காவலூர் என்று வழங்கச் செய்தார்; ௮ன்னை மரியாளை அடைக்கல நாயகி என்று பாடிப் பரவியுள்ளார். முப்பது வேதியர்க்குத் தமிழ் கற்பித்த வீரமாமுனிவர் ஒரே பெண்பாற் கலம்பகம் ஆகிய திருக்காவலூர்க் கலம்பகம் தந்துள்ளார். திருச்சிராப்பள்ளி அருகே அமைந்துள்ள ஆவூரில் பணியாற்றியபோது, தேம்பாவணிக் காப்பியத்துக்கு உரை வரந்துள்ளார் (1726-1729). ஐந்திலக்கண நூலாகத் தாம் இயற்றிய தொன்னூல் விளக்கம் எளிதாகவும்தெளிவாகவும் பயன்பட வேண்டும் என்று எண்ணித் தாமே அதற்கு உரையும் எழுதி, திருமறைச் செந்தமிழ்த் தேசிகர் என்று புகழ் பெற்றுள்ளார். மறைமொழி வாயினன், மலிதவத்து இறைவன், நிறை மொழிக் குரவன், நிகரில் கேள்வியன் என்று எல்லோரும் ஏற்றுப் போற்றும் வீரமாமுனிவரின் வித்தகத் தமி்ப் பணிகள் வியந்து பாராட்டத் தக்கவை.
1730 ஆம் ௮ண்டு வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் ஆக்கியுள்ளார்; நூற்று நாற்பது மொழிகளில் திருக்குறள் வெளிவரவும் ஒளிதரவும் வீரமாமுனிவர் முன்னோடியாக விளங்குகிறார்.
1732ஆம் ஆண்டு பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு நிலைகளில் அருஞ் சொற்களுக்குப் பொருள் காணும் வகையில் சதுரகராதி வழங்கியுள்ளார். பதினையாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு விளக்கம் நல்கும் சதுரகராதி மொழிக் களஞ்சியமாகத் திகழ்கிறது.
1743ஆம் ஆண்டு தமிழ்-இலத்தீன் பேச்சுமொழி அகராதியை ஒன்பதாயிரம் சொற்களுக்கு விஎக்கம் தரும் வகையில் ஈந்துள்ளார். 1744ஆம் ஆண்டு போர்த்துக்கீசு-தமிழ் இலத்தீன் அகராதியை இயற்றியுள்ளார்; நாலாயிரத்து முந்நூற்று ஐம்பத்து மூன்று போர்த்துக்கீசியச் சொற்களுக்குத் தமிழிலும் இலத்தீனிலும் பொருள் கூறப்பட்டுள்ளது. 1744ஆம் ஆண்டு வீரமாமுனிவர் பிரெஞ்சு – தமிழ் அகராதியை வழங்கியுள்ளார். வீரமாமுனிவரின் தமிழ்-ஆங்கில அகராதி பற்றி எலிசாகூல் வீரமாமுனிவரின் வேதியர் ஒழுக்கம் என்னும் நூலின் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.
வீரமாமுனிவர் கொடுந்தமிழ் என்னும் பேச்சு வழக்கு இலக்கணம், செந்தமிழ் என்னும் எழுத்து வழக்கு இலக்கணம், திறவுகோல் என்னும் பாட்டு எழுதும் இலக்கணம் ஆகிய மூன்று நூல்களை இலத்தீன் மொழியில் இயற்றியுள்ளார். தொன்னூல் விளக்கம் இலக்கிய வகைகள் முப்பத்தைந்தினை நூற்பாவாலும் ஐம்பத்தாறினை உரைநடையாலும் விளக்குகிறது. சவலை வெண்பா, மணிமாலை, எண் வகைப் புத்தணிகள் ஆகியவை வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கம் வாயிலாக வழங்கியுள்ள புதுக் கொடைகள் ஆகும். வீரமாமுனிவரே தமிழில் எகர ஏகாரங்களையும் ஒகர ஓகாரங்களையும் ஒற்றைக் கொம்பு – இரட்டைக் கொம்பு வேறுபாடுகளையும் தெளிவாக எழுத உதவியவர் ஆவார். தமிழ் வரிவடிவ மாற்றத்தைத் தாம் கொண்டு வந்த செய்தியைக் கொடுந்தமிழ் இலக்கண நூலில் பெருமிதத்தோடு பேசியுள்ளார்.
வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம், ஞானக்கண்ணாடி, பேதக மறுத்தல், உலுத்தேரினத்தியல்பு, வாமன் சரித்திரம், பரமார்த்த குருவின் கதை, ஞான விளக்கம், தீருச்சபைக் கணிதம் ஆகிய ஒன்பது உரைநடை நூல்களையும் வீரமாமுனிவர் வழங்கியுள்ளார். பதினெட்டு இயல்களுடன் நூற்று நாற்பது உட்பிரிவுகள் கொண்ட வேதவிளக்கம் தமிழில் பொருள் அட்டவணை தந்த முதல் நூலாகும்.
தூய பவுலடியாரைப் போன்று, வீரமாமுனிவர் இறை மக்களிடையே உறவையும் தொடர்பையும் பேணி வளர்க்கும் குறிக்கோளுடன் திருக்கடையூர் நாட்டுத் திருச்சபைக்கு எழுதின நிருபம், பொது நிருபம் என்று இரண்டு கடித இலக்கியங்களை நல்கியுள்ளார். வீரமாமுனிவரின் தேம்பாவணிக் காப்பியம் யோசேப்பின் அறுபது ஆண்டு வாழ்வியலை முப்பத்தாறு படலங்களாகவும் மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து பாடல்களாகவும் வழங்குகிறது. புண்ணியங்களால் வளர்ந்தவன் என்னும் பொருள்தரும் வளன் என்னும் காப்பியத் தலைவன், வையகத்தார் வானகத்தார் வணங்குகின்ற வரம் பெற்ற மதிவல்லோன் (8:3) என்று பாராட்டப் படுகிறான். கம்பர் இராமகாதையுள் பன்னீராயிரத்துப் பதினாறு பாக்களில் எண்பத்தேழு சந்த வேறுபாடுகளைப் பயன்படுத்தியுள்ளார்; வீரமாமுனிவர் தேம்பாவணியில் மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து பாக்களில் தொண்ணூறு சந்த வேறுபாடுகளை எந்த இடர் பாடும் இன்றி அமைத்துள்ளார் (செந்தமிழ் இலக்கணம், ப.110. இலத்தீன் தாக்கம் கொண்டதாகத் தேம்பாவணி திகழ்வதால், வீரமாமுனிவர் தமிழ் இலக்கியத்தின் தாந்தே (Dante della lingua Tamil)என்று போற்றப்படுகிறார் (தனிநாயகம் அடிகளார், தமிழ்த்தூது,ப. 23)
வீரமாமுனிவர் திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, அன்னை அழுங்கல் அந்தாதி, அடைக்கல மாலை, அடைக்கல நாயகி வெண் கலிப்பா, தேவாரம், வண்ணக்கலைகள் ஆகிய சிற்றிலக்கிய ஏடுகள் ஏழினை ஈந்துள்ளார். இறையின்பம் பெருக்கும் திருக்காவலூர்க் கலம்பகம் உலா என்னும் துறைக்கு மாற்றாக சமூக உல்லாசம் என்னும் துறையை நல்கியுள்ளது. மணிமேகலைக் காப்பியத்தை நினைவூட்டும் கித்தேரியம்மாள் அம்மானை திருமறையில் இறைமக்கள் பற்றுறுதியு டன் விளங்கத் தூண்டும் நாட்டுப் புறவியல் இலக்கியம் ஆகும். வீரமாமுனிவரின் பரமார்த்த குருவின் கதை எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பாகும். பேச்சுத் தமிழ் நடைக்குச் சான்றாகத் திகழும் இந்நூல் ஐம்பத்து நான்கு மொழிகளில் வெளிவந்து ஒளிதந்துள்ளது. வீரமாமுனிவர் சமய நல்லிணக்கச் சான்றோனாகவும் புகழுடன் திகழ்கிறார். அரியலூர்ப் பெருநிலக் கிழாரை அரங்கப்ப மழவராயரை இராசபிளவை என்னும் நோயிலிருந்து மீட்டுக் காத்தார்; மழவ ராயர் மகிழ்ந்து நூற்று எழுபத்தைந்து ஏக்கர் நிலத்தை 5.8.1735 அன்று வழங்கியுள்ளார். ஆர்க்காட்டு நவாபின் மருமகன் சந்தா சாகிபைச் சந்தித்து அளவளாவி, விழுமிய துறவி என்னும் பொருள் தரும் இசுமாத்து சந்நியாசி (தூய முனிவர்) என்று பாராட்டப்பட்டார். சந்தாசாகிபு தம் தாத்தா சததுல்லாகான் பயன்படுத்திய தந்தப்பல்லக்கை வீரமாமுனிவருக்கு வழங்கியுள்ளார். ஆண்டுதோறும் பன்னீராயிரம் வெள்ளி வருவாய் தரும் காவிரிக் கரை ஊர்களாகிய போகளம், மால்வாய், அரசூர், நல்லூர் ஆகியவற்றை மானியமாக நல்கியுள்ளார்.
வீரமாமுனிவர் மாசற்ற சேசுநாதர் காட்டிய நெறியைத் தமிழகம் எங்கும் பரப்பி வெற்றி கண்டவர்; பல்வேறு துறைகளில் நூல்கள் இயற்றித் தமிழ் மொழிக்குச் செயற்கரும் பணிசெய்து சிறப்புற்றவர் என்று பெரும்புலவர் பண்டாரம் நம்பியார் தமிழ் வளர்த்த தைரியநாதர் என்னும் நூலில் போற்றிப் புகழ்ந்துள்ளார் (157)
(தொடரும்)
பேராசிரியர் முதுமுனைவர் பால் வளன் அரசு,
தலைவர், உலகத் திருக்குறள் தகவல் மையம்
3, நெல்லை நயினார் தெரு,
பாளையங்கோட்டை.- 627002.
கைப்பேசி : 7598399967
No comments:
Post a Comment