(உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்-தொடர்ச்சி)
என் சரித்திரம்
நான் பிள்ளையவர்களிடம் போக எண்ணி இருப்பதை அக்கூட்டத்தினருக்குத் தெரிவிக்க வேண்டுமென்பது என் கருத்து. பிரசங்கம் செய்யும்போதே பிள்ளையவர்களைப் பற்றிச் சொல்லுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள எண்ணினேன். இப்பாட்டு அச்சந்தர்ப்பத்தை அளித்தது. இப்பாடலுக்குப் பொருள் சொல்லிவிட்டு விசேட உரை சொல்லத் தொடங்கினேன். “வசிட்டாதி முனிவர்கள் என்று சொன்ன மாத்திரத்தில் எல்லா முனிவர்களும் அடங்கிவிடுவார்கள். அப்படி இருக்க, குறுமுனியை என்று அகத்திய முனிவரைத் தனியே ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். வசிட்டருக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ அவ்வளவு சிறப்பு அகத்தியருக்கும் உண்டு. அகத்தியர் பரம சிவபக்தர். சிவபெருமானுக்குச் சமமானவர். இவ்வளவு பெருமையையும்விடத் தமிழை வடமொழியோடு ஒத்த சிறப்புடையதாக்கிய பெருமை அவருக்கு இருக்கிறது. தமிழ் நூல் செய்த பரஞ்சோதி முனிவர் அவரைத் தனியே சொல்லாவிட்டால் அபசாரமென்று நினைத்து அவ்வாறு சொன்னார். தமிழ் ஆசிரியராகிய அகத்தியரைத் தமிழ்க் கவிஞர் இவ்வாறே பாராட்டுவார்கள். தமிழாசிரியர்களுக்கு உள்ள பெருமை அளவு கடந்தது. இப்போது பிரத்தியட்ச அகத்தியராக விளங்குபவரும் என்னுடைய ஆசிரியருமாகிய பிள்ளையவர்களை எல்லாரும் தெய்வம்போலக் கொண்டாடி வருகிறார்கள். இவர்களுக்கே இவ்வளவு பெருமை இருக்கும்போது அகத்தியருக்கு எவ்வளவு பெருமை இருக்க வேண்டும்! பரஞ்சோதி முனிவரைப் போல நாமும் தமிழாசிரியர்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அகத்தியரைப் போன்ற சிவபக்தியும் தமிழ்த் தலைமையும் உடைய பிள்ளையவர்களிடத்தில் நான் மீண்டும் செல்வதாக எண்ணியிருக்கிறேன். எல்லோரும் விடைதர வேண்டும்” என்று சொல்லி முடித்தேன்.
பிரிவில் வருத்தம்
முனிவர்கள் கூறிய தோத்திர இன்பத்தில் ஆழ்ந்திருந்த யாவரும் திடீரென்று வருத்தத்தை அடைந்தனர். நான் காரையைவிட்டுப் புறப்பட்டுப் போவேனென்பது பல பேருக்குத் தெரியும். ஆனாலும் நானே அச்செய்தியை நேரே சொன்னபோது அவர்களுக்கு அடக்க முடியாத துயரம் பொங்கியது. சிலர் கண்ணீர் விட்டார்கள் அந்த அன்பை இன்று நினைத்தாலும் என் உள்ளம் உருகுகிறது.
பிரசங்கம் வாழ்த்தோடு நிறைவேறியது. பிறகு சம்மானங்கள் பலவாறாக வந்தன. ஆடைகள், பணம் எல்லாம் கிடைத்தன. இருநூறுரூபாய் வரையில் பணம் கிடைத்தது. செலவுக்காக வாங்கியிருந்த சிறு கடன்களுக்குக் கொடுத்ததுபோக நூற்றைம்பது உரூபாய் மிஞ்சியது. அதைக்கொண்டு கல்யாணத்துக்கு வாங்கிய கடனில் எஞ்சியிருந்ததைத் தீர்த்துவிட்டோம்.
எல்லாரிடமும் விடைபெற்றுக்கொண்டேன். முக்கியமானவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியே வந்து, “ஐயா எங்களை மறக்க வேண்டா. உங்கள் குறையைத் தீர்த்துக்கொண்டு இங்கேயே வந்திருந்து எங்கள் குறையையும் தீர்க்க வேண்டும்” என்று வேண்டினார்கள். அவர்கள் பேச்சிலேதான் எத்தனை அன்பு! எத்தனை மென்மை! எத்தனை உருக்கம்! கடவுள், அன்பு என்ற ஒரு குணத்தை மக்களுடைய மனக்குகையில் வைத்திருக்கிறார். அப்பெருந்தனம் இல்லாவிட்டால் உலகம் நரகத்துக்குச் சமானமாகிவிடும்.
செங்கணத்தில் நிகழ்ந்தவை
கிருட்டிணசாமி ரெட்டியார் தாமாக விடை அளிக்கவில்லை. நாங்கள் வலிந்து அவரிடம் விடைபெற்றோம். விடைபெறும்போது அவர், “நீங்கள் பாகவதத்தைப் பரிசோதித்து அச்சிட்டால் சகாயம் செய்கிறேன்” என்று என்னிடம் சொன்னார். “பார்க்கலாம்” என்று சொல்லி என் தாய் தந்தையருடன் புறப்பட்டுச் செங்கணத்துக்கு வந்து சேர்ந்தேன்.
அங்கே விருத்தாசல ரெட்டியாரும் அவர் குமாரராகிய நல்லப்ப ரெட்டியாரும் காரையில் நிகழ்ந்தவற்றைக் கேட்டு மகிழ்ந்தார்கள். நான் பிள்ளையவர்களிடம் செல்வதில் வேகமுள்ளவனாக இருத்தலை உணர்ந்த நல்லப்ப ரெட்டியார், “நீங்கள் மட்டும் போய் வாருங்கள். தங்கள் ஐயாவும் அம்மாவும் இங்கேயே இருக்கட்டும்” என்று கூறவே நான் அங்ஙனமே செய்ய உடன்பட்டேன். என் தாயாருக்கு என்னைப் பிரிவதில் சிறிதும் விருப்பமில்லை. அன்றியும் அக்காலத்தில் கும்பகோணத்திலும் அதைச் சார்ந்த இடங்களிலும் விசபேதி நோய் பரவியிருந்தது. அச்செய்தி எங்கள் காதுக்கு எட்டியது. இயல்பாகவே என்னை அனுப்புவதற்கு மனம் இல்லாத என் பெற்றோர்களுக்கு இச் சமாசாரம் துணைசெய்தது. “நீ இப்போது போக வேண்டா. இங்கேயே தங்கி அந்த நோய் அடங்கியவுடன் போகலாம்” என்று தடுத்தார்கள். எனக்கு மாத்திரம் எவ்வாறு இருந்தாலும் அப்பால் ஒருநாளாவது அங்கே தாமதிக்கக் கூடாது என்ற உறுதி ஏற்பட்டது.
என்ன சொல்லியும் கேளாமல், “இவ்வளவு காலம் திருவிளையாடல் படித்தேன். சிரீ மீனாட்சி சுந்தரேசர் திருவருள் என்னைக் காப்பாற்றும் என்ற தைரியம் இருக்கிறது” என்று சொல்லிப் புறப்பட்டேன். சிரீ மீனாட்சி சுந்தரேசர் திருவருள் என்று வெளிப்படச் சொன்னாலும், அந்த அருளோடு அம்மூர்த்தியின் திருநாமத்தைக்கொண்ட என் ஆசிரியரது உண்மையன்பு என்னைப் பாதுகாக்குமென்ற தைரியமும் என் அந்தரங்கத்தில் இருந்தது.
திருவாவடுதுறையை அடைதல்
செங்கணத்திலிருந்து புறப்பட்டபோது என் அன்னையார் ஒரு கல் தூரம் உடன்வந்து பிரிவதற்கு மனம் இல்லாமல் கண்ணீர் வழிய, “தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லி விடையளித்தார். நான் நேரே திருவாவடுதுறைக்கு வந்துசேர்ந்தேன். ஆசிரியர் அம்பரில் புராணம் அரங்கேற்றிய பின் திருவாவடுதுறைக்கு வந்து விட்டார். நான் அவரைக் கண்டவுடன், “மறுபடியும் போவதாக உத்தேசம் இல்லையே? இங்கேயே இருக்கலாமல்லவா?” என்று கேட்டார்.
நான், “இங்கிருந்து பாடம் கேட்பதையன்றி எனக்கு வேறு வேலை இல்லை” என்று சொன்னேன். தாய்தந்தையர் சேமம் முதலியவற்றை அவர் விசாரித்தார்.
சுப்பிரமணிய தேசிகருடைய மொழிகள்
அப்பால், “சந்நிதானத்தைப் போய்ப் பார்த்து வாரும். பல மாதங்களாக நீர் பார்க்கவில்லையே” என்று ஆசிரியர் கூறவே நான் மடத்திற்குச் சென்று சிரீ சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்தேன்.
“பல மாதங்களாக உம்மைக் காணவில்லையே! பிள்ளையவர்கள் அடிக்கடி உம்மைப் பற்றிக கூறினார்கள். சௌக்கியந்தானே?” என்று தேசிகர் கேட்டார்.
நான் உசிதமாக விடை கூறினேன். பிறகு, “பிள்ளையவர்களுக்கு உம்மைப்போல ஒருவர் எப்போதும் அருகில் இருக்க வேண்டும். அவர்களுக்கு முன்புபோலத் தேகசௌக்கியம் இல்லை. பாடஞ் சொல்லும் விசயத்தில் அவர்களுக்கு அதிகச் சிரமம் கொடுக்கக் கூடாது. அவர்களிடம் கேட்க வேண்டிய பாடங்களை நீரும் பிறரும் கேட்டு வாருங்கள். நூதனமாக வந்தவர்களுக்கு உம்மைப் போன்ற பழைய மாணாக்கர்கள் பாடம் சொல்லலாம். பிள்ளையவர்களுக்கும் சிரமபரிகாரமாக இருக்கும். மடத்தில் மாணாக்கர்களுடைய கூட்டம் அதிகமாக இருப்பதைக் காண்பது நமக்கு எவ்வளவோ சந்தோசமாக இருக்கிறது” என்று தேசிகர் அன்போடு மொழிந்தார்.
கம்ப ராமாயணப் பாடம்
நான் பணிவாக விடைபெற்றுப் பிள்ளையவர்களைச் சார்ந்தேன். கம்பராமாயணம் பாடம் கேட்க வேண்டுமென்று எனக்கிருந்த விருப்பத்தை ஆசிரியரிடம் புலப்படுத்தினேன். குமாரசாமித் தம்பிரானும் சவேரிநாத பிள்ளையும் வேறு சிலரும் என்னோடு சேர்ந்து கேட்டுக்கொண்டனர். ஆசிரியர் எங்கள் விருப்பத்திற்கு இணங்கி அப்பெரிய காவியத்தை முதலிலிருந்தே பாடம் சொல்லத் தொடங்கினார்.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா
No comments:
Post a Comment